கார்த்திகைச் சீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 12,150 
 
 

ஆடி வெள்ளிக்கிழமை – கடைசி வெள்ளிக்கிழமை. லட்சுமி தன் படுக்கை அறையிலிருக்கும் லட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு, ஆடையும் ஆபரணங்களும் அதியற்புதமாய்த் தைத்து, கை வேலைப்பாட்டுடன் சோபிக்கும் படங்களுக்கு புஷ்ப ஹாரங்களையும் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் முகம் நிஷ்களங்கமாய்ப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது. புக்ககம் வந்து இரண்டு மாதகாலமாகிறது. ஆடிக்கு அழைத்துச் சென்று அன்று காலைதான் அழைத்து வந்து விட்டான் அவள் சகோதரன். கணவன் ஆபீசிலிருந்து வருவதற்கு முன் தன் வேலைகளை எல்லாம் செய்துவிட்டுத் தயாராய் இருக்க எண்ணிச் சுறுசுறுப்பாய்த் தன் வேலைகளை முடித்துக் கொண்டாள். சகோதரன் வாங்கிக் கொடுத்த புஷ்பச் செண்டுகளைப் படங்களுக்கு அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அவளையும் அறியாமல் உற்சாகத்துடன்,

”மங்கள மும்பெறுவார் – உலகினிலே

மங்கைய ரெல்லாம் உன்பெயர் சொன்னால்…”

என்று பரிபூரண ஆனந்தத்துடன் அற்புதமாய்ப் பாடிக்கொண்டு படங்களை அழகு பார்த்தாள். லஷ்மி படத்திற்கு முன் லஷ்மி கரங்குவித்து நின்றாள். காலை அவள் வீட்டிற்கு வரும் முன்பே அவள் கணவன ஆபீசுக்குச் சென்றுவிட்டான். மாலையை மாண்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மலைச் சிகரங்களில் தாவி மறையும் ரவியைக் கண்டதும் உற்சாகம் பிறந்தது. உற்சாக வேகத்தில் அவள் வாய் திறந்ததும் மதுரகீரம் மகிழ்வுடன் வெளிவந்தது.

அச்சமயம், ”ஜானகீ! குட்டிச்சுவருக்கு ஆனாப் போலே வயசாச்சு. எப்படி நடந்துக்கணும்னு இன்னும் தெரியலே. வெள்ளிக்கிழமையும் அதுவுமா முகத்தில் கையை வச்சுக் கொண்டு என்ன உக்காரல்? எழுந்து மொறமொறக்க மூஞ்சியலம்பி நெத்திக்கிட்டுண்டு அம்பாள் படத்துக்குக் கொஞ்சம் புஷ்பம் சாத்தினால் என்ன? பாவமா வரும்? அந்த மாமியாருக்கும் ஆம்படையானுக்கும் நல்ல புத்தி வந்து நம்மை அழைச்சிண்டு போகணுமேன்னு நமஸ்காரம் செய்யப்படாதா? நன்னா இருக்கு போ! பண்ணின பாவம் எங்கே போனாலும் தொலையாது” என்று ஐம்பது வயசு மதிக்கத்தக்க ஒர் அம்மாள் இரைந்து கூச்சலிட்டாள்.

”ஆமாம் அம்பாளுக்கு விளக்கேத்திப் புஷ்பம் சாத்தி நமஸ்காரம் பண்ணிவிட்டால் என் மாமியார் அழைச்சிண்டு போயிடுவா இல்லே! அவா கேக்கும் அந்தக் கார்த்திகைச் சீரை செய்ய அப்பாவுக்கு மனசு வரல்லே. உனக்கும் அதுக்கு மேலே இருக்கு. மன்னியைப் பார்த்து அப்படியே மகிழ்ந்து போறே. என் வாழ்வும் இப்படியாச்சே! இதுக்கு ஒருவழி பண்ண இந்த வீட்டிலே ஒருத்தரும் இல்லை. எனக்கெங்கே வெடியப் போறது? ‘வாழாப் பெண் தாயோடே’ என்பதைப் போல் இருந்து விட வேண்டியதுதான்” என்று கண்ணீர் வடியச் சொன்னாள் ஜானகி.

வெகு கனிவாய்ப் பாடிக்கொண்டிருந்த லஷ்மி அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டதும் அப்படியே அயர்ந்து நின்றாள். அவள் உள்ளம் துடித்தது. அவளை அறியாமல் அவள் கண்களில் நீர் வடிந்தது. தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டு மெல்லத் தன் படுக்கை அறையை விட்டு வெளிவந்தாள். ஜானகி இருக்குமிடம் சென்று அவள் கூந்தலிலே அழகாய்ப் புஷ்பத்தை வைத்து அவளை ஆதரவுடன் தடவிக் கொடுத்தாள். அவளைவிடச் சிறியவளாய் இருந்தும் அவள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளப் பார்த்தாள்.

மாலை லஷ்மியின் கணவன் கோபாலன், வெகு அவசரமாய் ஆபிசிலிருந்து வந்தான். உடைகளைக் கழற்றி விட்டுச் சயன அறையில் வெகு ஒய்யாரமாய் அமர்ந்து லஷ்மியின் வரவை எதிர்பார்த்துக்கெண்டிருந்தான். லஷ்மியின் காதுகளிலோ, ‘என் வாழ்வும் இப்படியாச்சே! இதற்கொரு வழி பண்ண இந்த வீட்டிலே ஒருத்தரும் இல்லை’ என்ற ஜானகியின் வேதனைச் சொற்கள் வெண்கல மணியைப் போல் சதா ஒலித்துக் கொண்டே இருந்தன. தன்னைத் தான் சமாளித்துக் கொண்டு காபியை எடுத்துக்கொண்டு கணவனிடம் சென்றாள். சற்று முன் இருந்த பரிபூரண ஆனந்தம் இல்லை. மெல்லிய வேதனைத் திரை பளிங்கு போன்ற முகத்தில் படர்ந்து பிரகாசத்தை மறைத்தது. ஆசையுடன் மனைவியின் முகத்தை நோக்கினான் கோபாலன். மங்கிய முகம் பிரயாணத்தினால் ஏற்பட்ட சோர்வு என்று நினைத்தான். அவன் உள்ளத்துள் நடக்கும் போராட்டம் எத்தகையதென்பதை அவன் அறிந்தால் அல்லவோ தெரியும்?

நாட்கள் செல்லச் செல்ல ஜானகி புக்ககம் செல்லாமல் இருக்கும் காரணம் தெரியவந்தது. அவள் கணவனுடன் போய் வசிக்கக் குறுக்காய் நிற்பவை சில நூறு ரூபாய்கள் என்றறிந்தாள். ஜானகிக்கு ஒரு வேலையும் கொடாமல் மாமியாருக்குச் சகாயமாய் எல்லா வேலைகளையும் செய்வாள். தன்னாலான மட்டில் அவளை உற்சாகமூட்டிக் கொண்டிருப்பாள். தன் பிறந்த வீட்டிலிருந்து எது வந்தாலும் ஜானகி விரும்பினால் சந்தோஷமாய் அவளுக்குக் கொடுப்பாள். லஷ்மியின் குணங்கள் அவள் மாமனார் மாமியாரை வசீகரித்தன.

2

Image

அன்று கார்த்திகை. எல்லோர் வீட்டிலும் வெல்லப் பாகு வாசனை மணக்கிறது. பொரி வறுப்பவர்களும், விளக்குகளுக்கு எண்ணெய் நெய்விட்டுத் திரி போடுபவர்களுமாய் ஊர் முழுவதும் மங்களமாய்த் தீபாலங்காரங்களில் ஈடுபட்டு, யுவதிகள் கார்த்திகை மதியைக் காணும் ஆனந்தத்தில் மூழ்கியிருக்கிறார்கள். விண்ணில் விண்மீன்களில் கண் சிமிட்டல். மண்ணில் மங்கையர்கள் கைகளினால் ஏற்றப்பட்ட மண் விளக்குகளின் நடனம் சிறுவர்களின் ஆனந்தத் தாண்டவம். சந்நிதி வீதியில் மாலை மங்கள ஹாரத்தியின் மத்தியில் மங்கள ஒலி கம்பீரத்துடன் ஒலிக்கிறது.

மங்களம்மாள் கையில் பூச்செண்டுடன் கூடத்திற்கு வந்து அங்கிருக்கும் படங்களில் கொஞ்சம் கொஞ்சம் கிள்ளி வைத்துவிட்டு, ”லஷ்மி! ஜானகி!” என்று கூப்பிட்டுக்கொண்டே புஷ்பத்தைக் கையில் சுருட்டிக்கொண்டு இருந்தாள். லஷ்மி சிரித்த முகத்துடன் எதிரில் வந்து நின்றாள். ”திரும்பு. அவள் எங்கே? ஜானகி! நீ மாத்திரம் கூப்பிட்டதும் வர்ற வழக்கந்தான் கிடையாதே” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே லஷ்மியைவிட நான்கைந்து வயசு பெரியவளாகிய ஜானகி அவ்விடம் வந்தாள். லஷ்மியின் தலையில் புஷ்பத்தை வைத்துவிட்டு மங்களம்மாள் ஜானகிக்குப் பூவை வைக்க அவளைப் பார்த்தாள். அவள் இன்னும் முகத்தைத் துடைத்துப் பொட்டிட்டுக் கொள்ளாமல் இருப்பதைப் பார்த்துக் கோபமாய், ”ஏண்டி? உனக்கு ஏதாவது புத்திகித்தி இருக்கா இல்லையா? விளக்கேத்த வேண்டிய நாழியாயிடுத்து, என்ன செய்து கொண்டிருந்தாய்? எப்போ விளக்கேத்தி நாலு வீட்டுக்குப் பொரியும் அப்பமும் கொடுத்துவிட்டு வர்றது? ரொம்ப அழகு போ! அந்தச் சிறுபெண் என்ன செய்வாள்! அதுவும் தேமேன்னு எல்லா வேலைகளையும் செய்துவிட்டுச் சிரித்தபடி வளைந்து வருகிறது. ஒரு வேலையும் செய்யாவிட்டாலும் உன் மூஞ்சியை அலம்பி, நெத்திக்கிட்டுண்டு அழகா ஒரு புடவையை எடுத்துக் கட்டிக்கக் கூடாதா?” என்று சொல்லிவிட்டுப் புஷ்பத்தைச் சூட்டினாள்.

ஜானகி பொங்கிவரும் துக்கத்தை அடக்கிக்கொண்டு, ”அம்மா! நான் யாராத்துக்கும் போகமாட்டேன். நீ வேணும்னா உன் நாட்டுப்பெண்ணை அழைத்துக் கொண்டு போயிட்டு வா” என்று மடமடவென்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டகன்றாள். மங்களம்மாள் பெருமூச்சுடன் கண்களில் வரும் நீரை, பல்லைக் கடித்துக்கொண்டு அடக்கப் பிரயத்தனப்பட்டாள். அதே சமயம் வீட்டு வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது. அதிலிருந்து லஷ்மியின் சகோதரன், ‘கார்த்திகைச் சீர்’ எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். பூஜை அறையில் வைக்கக் கூடிய குத்துவிளக்குகள் இரண்டு, அப்பத்துடன் வெள்ளி பக்கெட், பொரி பணியாரத்துடன் வெள்ளித்தட்டு, டவரா எல்லாம் வைத்து, மஞ்சள் குங்குமம், பழங்கள் முதலியவற்றை நிறைய வைத்தான். லஷ்மிக்கு ஏற்றாற்போல் நீலநிறப் பட்டில் நட்சித்திரங்களைப் போல் ஜ்வலிக்கும் தங்கச் சரிகையால் மல்லிகை மொக்குகள் போட்ட அழகிய புடவையும் மேகக்கூட்டம் ஓடி விளையாடுவதைப் போல் ஜாக்கெட்டும் ஒரு தட்டில் வைத்தான்.

லஷ்மிக்குத் தந்தையில்லை. இரண்டுபேர் சகோதரர்கள்; மூத்தவன் பலராமன், இளையன் கிருஷ்ணமூர்த்தி. அவ்விரு சகோதரர்களுக்கு லஷ்மி என்றால் அன்பு மிக அதிகம். லஷ்மிக்கு மணமாகி இரண்டு வருஷமாயின. முதல் வருஷக் கார்த்திகை (தலைக் கார்த்திகை) அவள் பாட்டி இறந்ததால் நடக்கவில்லை. இரண்டாம் வருஷக் கார்த்திகைக்குள் மாமியார் வீட்டிற்கு வந்துவிட்டாள். கிருஷ்ணமூர்த்தி விசால மனப்போக்கு உள்ளவன். ஆசையுடையவன். அவர்கள் தந்தை பெரிய உத்தியோகத்திலிருந்து வேண்டிய பணம் சேர்த்து வைத்திருந்தார். பிள்ளைகளும் தந்தையில்லாக் குறையை வெளிப்படுத்தாமல் ஒவ்வொன்றையும் விமரிசையாய்ச் செய்துவந்தார்கள்.

லஷ்மியின் கணவன் கோபாலன் நல்ல அழகுடையவன். எம்.ஏ.பட்டதாரி. செக்ரிடேரியேட்டில் வேலையில் இருக்கிறான். மாதம் நூறு ரூபாய் சம்பளம். தந்தை கலெக்டரேட்டிலிருந்து பென்ஷன் பெற்றவர். ஐந்து பெண்கள், கோபாலன் ஒரு பிள்ளை. அவர் பொருள் ஒன்றும் சேர்க்கவில்லை. தம் சக்திக்கு மேற்பட்டுப் பெண்களுக்குச் செய்து ஓட்டாண்டியானார். சொற்பக் கடனும் உண்டு. அவர் நாற்பது ரூபாய் பென்ஷனும், கோபாலன் நூறு ரூபாயும் கடனுக்குச் செலுத்தியது போக மீதி வீட்டிற்குப் போதும் போதாததுமாய் இருந்தது.

Image

லஷ்மியின் பிறந்த வீட்டவர்கள் இதை எல்லாம் அறிந்திருந்தும், கோபாலனின் அழகு, கல்வி, நற்குணம் இவற்றை உத்தேசித்து லஷ்மியை அவ்வீட்டில் கொடுத்தார்கள். லஷ்மியும் கோபாலனும் அன்னியோன்னிய தம்பதிகள். மங்களம்மாள் தனக்கு நல்ல பணம் படைத்தவர் வீட்டுச் செல்லப் பெண் நாட்டுப் பெண்ணாய் வந்ததற்குப் பெருமை கொண்டாள். அதற்கு மேல் அவள் குணமும் எல்லோரையும் வசீகரித்தது.

அந்த அம்மாளின் கடைசிப் பெண்ணான ஜானகியை அவர்கள் அவ்வூரிலேயே தங்களுக்குத் தூர பந்துவின் வீட்டில் கொடுத்திருந்தார்கள். ஜானகியின் மாமியார் அதிக ஆசைக்காரி. வருஷந்தோறும் சீரும் செல்லமும் சரியாய் ஒவ்வொரு பண்டிகைக்கும் வரவேண்டும். இல்லாவிடில் உக்கிர சண்டியாகிவிடுவாள். ஜானகிக்கு விவாகமாகி ஐந்தாண்டுகள் வரை அவள் மாமியார் கேட்டதை எல்லாம் தங்கள் சக்திக்கு மீறி மங்களம்மாள் செய்துகொண்டு வந்தாள். ஆனால் கோபாலனுக்கு ரூ.5,000 ஜாமீனுடன் லஷ்மி வரவே, ஜானகியின் மாமியார் அவ்வருஷம் கார்த்திகைச் சீருக்கு ஒரு ஜோடி வெள்ளிக்குத்து விளக்கு, தன்பிள்ளைக்கு மூன்று வைரம் பதித்த மோதிரம், அப்பம் பொரி முதலியவற்றுக்கானத் தன் நாட்டுப் பெண்ணிற்கு நான்கு பவுனில் ‘ஸ்வஸ்திக்’ வளையல் என்று திட்டம் போட்டுச் சம்பந்திக்கு அனுப்பிவிட்டாள்.

கோபாலனின் தந்தை கஷ்டத்தில் நன்றாய்ப் பக்குவப் பட்டவராதலால் தம் நிலையையறிந்து கோபாலனின் ஜாமீன் தொகை இருந்தால் கடனுக்காக கட்டவேண்டிவரும் என்று நினைத்து, அத்தொகைக்கு அழகிய சிறு வீடொன்றைக் கட்டி அதை லஷ்மியின் பேரிலேயே ரிஜிஸ்டர் செய்துவிட்டார். அது லஷ்மியின் பிறந்த வீட்டு ஸ்ரீதனம் என்று பெருமையாய்ச் சொல்லிக்கொள்வார். ஜானகி மாமியாரின் துர் எண்ணத்தைக் கண்டதும் அவருக்குக் கோபம் வந்துவிட்டது. தம் சம்பாத்தியத்தில் கால் பங்கிற்குமேல் ஜானகிக்குச் செய்திருந்தும் தம்பிள்ளைக்கு வந்ததையும் பிடுங்கிக்கொள்ளப் பார்க்கும் சம்பந்தியின் கொடூர எண்ணத்தை அறிந்ததும், இனித் தம்மால் செப்பாலடித்த காசுகூடச் செய்ய இயலாதென்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டார். அதன் பலன், ஜானகி சுமார் இரண்டு வருஷ காலமாய்ப் பிறந்த வீடே கதி என்றிருக்கும்படியாகி விட்டது.

லஷ்மி தன் நாத்தனாரின் வாழ்க்கையை எப்படிச் சீர்திருத்துவதென்று யோசித்தாள். மாமியாரின் முன் சொல்லப் பயம். கணவனிடம் கேட்கவோ வெட்கம். ஆனால் தன்னைப்போல் சிறுபெண் கணவன் ஆலிங்கனத்தில் அன்பாய் இருக்கவேண்டிய காலத்தில் அவள் யௌவனம் காட்டில் காய்ந்த நிலவைப் போல் ஆவதைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பாள். லஷ்மி ஐந்தாவது பாரம் வரையில் படித்தவள். நன்றாய் ஆங்கிலம் படிப்பாள். ஜானகியின் வருத்தத்தைப் போக்க அவளுடன் மத்தியானங்களில் ஏதாவது ஆட்டம் போடுவாள். வீட்டு வேலைகளில் மங்களம்மாளுக்குச் சகாயமாய் எல்லாவற்றையும் செய்வாள்.

ஜானகியோவெனின் ஒவ்வொரு சமயம் தன் தந்தையின் வறுமை நிலைக்கும் மாமியாரின் துராசைக்கும் வருந்துவாள். சகோதரனும் அவன் மனைவியும் அன்னியோன்னியமாய் இருப்பதைப் பார்த்துப் பொறாமையுறுவாள். லஷ்மி வந்த பின் தாய் தந்தையருக்குத் தன்மேல் அன்பு குறைந்துவிட்டதென்று நினைப்பாள். அப்படி அன்பிருந்தால் கையில் பணம் இல்லாதபோது கடன் வாங்கிக் கஷ்டப்பட்டுச் செய்த தந்தை, இன்று ஐயாயிரம் ரூபாய் இருந்தும் தன் மாமியார் கேட்ட சுமார் ரூ.500 க்குப் பின்வாங்கினாரே என்று கடுகடுப்பாள். நாள் பொழுதென்றால் கண்களைக் கசக்கிக் கொண்டு உட்கார்ந்து விடுவாள். லஷ்மி அவள் துக்கத்தில் எவ்வளவு பகிர்ந்து கொள்ளக்கூடுமோ அவ்வளவு பகிர்ந்து கொள்வாள். ஆனால் ஜானகி அதை வெறும் பாசாங்காய் நினைத்தாள்.

3

Image

கிருஷ்ணமூர்த்தி கார்த்திகைச் சீர் வைத்துவிட்டுத் தங்கை புதுப் புடவை உடுத்துக் கொண்டு வரும் அழகைப் பார்க்க கோபாலனின் தந்தையுடன் பேசிக்கொண்டு வீற்றிருந்தான். அச்சமயம் கோபாலனும் ஆபீஸிலிருந்து புன்சிரிப்புச் சிரித்தவாறே மைத்துனனைத் தலையசைப்பால் வரவேற்று மாடிக்குச் சென்றான். அவ்விடம் லஷ்மி நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தீர்க்கமாய் யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் முன் மேஜைமேல் நாக ஒத்தும், வங்கியும் இருந்தன. கோபாலன் ஓசைப்படாமல் உடைகளைக் கழற்றிவிட்டு ‘இவள் இப்படி இருப்பதற்குக் காரணம், சில நாட்களாய் இவளிடம் ஏற்பட்ட மாறுதலா, அல்லது…’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ”ஆம் அப்படித்தான் செய்யவேண்டும். அவள் பாவம் எப்படிச் சிரிப்பாள்? ஒரு நாளா, இரண்டு நாளா? இரண்டாண்டுகள்” என்று அவள் வாய் முணுமுணுத்தது. அதே சமயம் கீழே மங்களம்மாள், ”ஜானகி! உன்னால் எனக்கு எப்பொழுதும் கஷ்டந்தான். நீ அவளுக்கேற்ற நாட்டுப் பெண்தான்! அகங்காரம் பிடிச்சவள். எழுந்து போய்ப் புடவையை உடுத்திண்டு வந்து அவளுக்குச் சகாயமாய் விளக்கேத்தி நாலு சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து விட்டு வா; கோயிலுக்குப் போய் வரலாம். அவளும் சிறிசு. காத்தாலே இருந்து எனக்குச் சரியாய்ப் பம்பரமாய் வேலை செய்தாள். மசக்கைக்காரி; கொஞ்ச நேரம் காத்தாட இருந்துவிட்டு வரட்டும். அதுக்குள் நீ பூஜைக்கு எடுத்து வைச்சு விளக்கேத்தப் பிரயத்தனம் செய். ஏன்தானோ இப்படி இருக்கே! உன்னைவிடச் சிறிசுதானே! எத்தனை சமர்த்தாய் இருக்கா பார்!” என்று கூச்சலிட்டுச் சொல்வதைக் கேட்டதும் நாற்காலியை விட்டெழுந்து ஜன்னலருகில் ஓடி மாலைச் சூரியன் மறைந்து விட்டானா என்று மேற்கே பார்த்தாள் லஷ்மி. தன் பொலிவு மங்கி மறையும் தறுவாயிலிருக்கும் கதிரோனைப் பார்த்ததும் தடதடவென்று கீழிறங்கி ஓடினாள். ”ஏன் அவ்வளவு அவசரம்?” என்று கோபாலன் பின்புறமிருந்து அவள் இரண்டு தோள்களையும் பிடித்து நிறுத்தினான். திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். அதில் உற்சாகமோ, பெருமையோ ஒன்றும் இல்லை. மண்பாண்டம் போல் மங்கிப் பிரகாசமற்று இருந்தது.

‘‘உனக்கென்ன? ஏன் இப்படி இருக்கிறாய்? கீழே கிருஷ்ணமூர்த்தி காத்திருக்கிறான். இன்னும் அரைமணி நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். நீ ஏன் இன்னும் பூர்த்தியாய் அலங்கரித்துக் கொள்ளவில்லை?”

‘‘நானா… நா…ன் அலங்கரித்துக் கொண்டிருக்கேனே! பாருங்கள்” என்று பலவந்தமாய்ச் சிரிப்பை வருவித்துக்கொண்டு, அவனை உற்றுப்பார்த்தாள். அவள் நெற்றியில் குங்குமம் ஜிகினாப் பொடியுடன் பளபளப்பாய் மின்னிற்று. அவள் கம்பீர வாக்கும் நிஷ்களங்கமான பார்வையும் அவனைத் தலைகவிழச் செய்தன. மின்னலைப்போல் அவன் கையைவிட்டாள். பரபரவென்று கீழிறங்கிச் சமையலறைக்குச் சென்று ”அம்மா, உங்க பிள்ளை வந்துவிட்டார்” என்றாள். மங்களம்மாள் அவள் குரலைக் கேட்டு அவளிடம் ஒரு டம்ளர் காப்பியைக் கொடுத்து, ”நீயும் புதுப்புடவை உடுத்திக்கலையா? இத்தனை நேரம் என்ன செய்தாய் லஷ்மி!” என்றாள்.

”இதோ ஒரு நிமிஷத்தில்” என்று சிரித்தபடியே சொல்லிக்கொண்டு மாடி ஏறினாள். அவள் முன் வீற்றிருந்த நாற்காலியில் கோபாலன் உட்கார்ந்து அன்று அவள் அப்படி இருப்பதற்குக் காரணம் என்னவென்று அறியப் பிரயத்தனம் செய்துகொண்டிந்தான். லஷ்மி காப்பியை மேஜைமேல் வைத்துவிட்டு, இடது கரத்தை மேஜையின் மேல் ஊன்றிக்கொண்டு, சற்று ஒரு புறம் சாய்ந்தவாறு நின்று வலக்கரத்தால் அவன் நெற்றியில் கலைந்து படிந்திருக்கும் கிராப்பைக் கோதினாள்.

அவள் அழகிய ரூபத்தில் மயங்கினான் கோபாலன். அவள் ஒய்யாரம் ஒரு சித்திரக்காரனை அப்படியே மயங்கச் செய்திருக்கும். அவன் சிரித்தவாறே, ”எதற்காக இந்த ஒற்றைக்கால் தபஸ்? எவ்வளவு அஜாக்கிரதை? இப்படி நகைகளை எடுத்து மேஜை மேல் போட்டிருக்கிறாயே! அதிக நகைகள் இருந்தால் இப்படித்தான். அம்மாவைப் பாரு. எதையாகிலும் எடுத்து இப்படிப் போடுவாளா? போடுவதற்குத்தான் அதிகமாய் என்ன இருக்கிறது?” என்று கண் சிமிட்டியபடி அமுத்தலாய்ச் சொன்னான்.

”ஆம்” என்று சொல்லிக்கொண்டு எழுந்து நாற்காலியின் கைப்பிடியில் உட்கார்ந்து அவன் முகத்தை உற்றுப் பார்த்து, ”எனக்கு ஒன்றுவேண்டும். வாங்கித் தருகிறீர்களா?” என்று கொஞ்சியவாறு செஞ்சிய பார்வையுடன் கேட்டாள். அவள் இதுவரையில் அவனை ஒன்றும் கேட்டதில்லை. அவனுக்கே வியப்பாகி விட்டது. ஆச்சர்யப் பார்வையுடன் அவளை நிமிர்ந்து நோக்கினான். அவள் காபியை அவன் வாயருகில் கொண்டுபோய்ப் பருகச்செய்து, ”இந்த நகைகள் எனக்கு இப்பொழுது அவசியமில்லை. பெட்டியில் வெட்டிக்குத் தூங்குகின்றன. இவற்றைக் கொண்டுபோய் முதலில் எவ்வளவிற்குப் போகுமோ விற்றுக்கொண்டு வாருங்கள். எனக்குக் கொஞ்சம் பணம் வேண்டும்” என்றாள்.

”லஷ்மீ! என்ன சொன்னே! பண்டிகையும் அதுவுமாய் வீட்டிலிருக்கும், அதிலும் உன் நகைகளை, உன் வீட்டவர்கள் செய்தவற்றை விற்கவா சொல்கிறாய்? ரொம்ப அழகு! நீ சமத்து என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அசட்டுப் பட்டம் கட்டி விட்டாயே! நல்லவேலை! எதற்கு உனக்கு இப்பொழுது அவ்வளவு பணம் வேண்டும்?” என்று கடிந்தபடி முகம் சிவக்க தன் உணர்ச்சியை அடக்கக் கூடாமல் கேட்டான்.

”எதற்கென்று கேட்காதீர்கள். எல்லாம் நல்லதுக்குத்தான். இதைத் தயவு செய்து உங்கள் அப்பா அம்மாவிடம் சொல்லாமல் செய்யுங்கள். அப்புறம் சொல்கிறேன். தயவு செய்து இந்தச் சகாயம் செய்யமாட்டீர்களா? நான் வேறு யாரைப் போய் இதைச் செய்யும்படி சொல்லுவேன்? எங்கள் அண்ணாவிடம் சொன்னால் நன்றாக இராதே” என்றாள். அவள் கண்களில் நீர் நிரம்பிக் கொண்டிருந்தது. ‘இதென்ன அவஸ்தை? இவள் காரணமில்லாமல் பெரும் தொகைக்காக ரகளை செய்கிறாளே!’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ‘லஷ்மி! போதாயிடுத்தம்மா! வா சீக்கிரம்” என்று மாமியார் அழைக்கும் குரல் கேட்கவே, அவசர அவசரமாய்க் கீழிறங்கிச் சென்று கொண்டே, ”போதாயிடுத்து; சீக்கிரம் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்று சொல்லிச் சென்றாள்.

பூஜை அறையில் வைத்திருக்கும் கார்த்திகைச் சீரை பார்த்தாள். கண்களில் நீர் மல்கியது. விளக்குகள் ஏற்றி வரிசையாய் வைத்தாயிற்று. ஒவ்வொருவருக்கும் நமஸ்காரம் செய்துகொண்டு வந்தாள். ஆனால் அவள் முகத்தில் உற்சாகம் இல்லை. மாடியில் கோபாலனும் கிருஷ்ணமூர்த்தியும் ஆனந்தமாய்ப் பேசிக்கொண்டு இருந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி கோபாலனிடம் ரூ.500 கொடுத்து, ”நீங்கள் விரும்பிய மோட்டார் பைக்கை வாங்கிக்கொள்ளுங்கள். இன்னும் அதிகமானால் கொடுக்கிறேன்’ என்று சொன்னான். கோபாலன் வியப்புடன் இவ்வளவு சீக்கிரம் தன் அபிப்ராயத்தைத் தெரியப்படுத்தியது லஷ்மியின் வேலைதான் என்று நிச்சயித்து, சிரித்தவாறே சங்கோசத்துடன், ”இப்பொழுது வேண்டியதில்லை; வேண்டும்போது நானே கேட்கிறேன்” என்றான். கிருஷ்ணமூர்த்தி அதற்கு இடங்கொடாமல் அவன் பையில் அப்பணத்தைத் திணித்து விட்டு வேறு பேச்சுப் பேசலுற்றான்.

லஷ்மி கணவனும் சகோதரனும் பேசும் இடத்திற்குக் கால்கள் தளர வந்தாள். சகோதரனை நமஸ்கரித்தாள். கணவனருகில் போனாள். அவள் கண்கள் நீரினால் மறைக்கப்பட்டிருந்தன. அவள் முகத்தைப் பார்த்தான் கோபாலன். ”லஷ்மி, இங்கே வா; இந்தப் புடவை உனக்கு எவ்வளவு அழகாயிருக்கும் தெரியுமா? வங்கி நாகொத்து எல்லாம் போட்டுக்கோ. இன்னும் அழகா இருக்கும்” என்றான் கிருஷ்ணமூர்த்தி.

”நீ வாங்குவதற்கு அப்பழுக்கு உண்டா அண்ணா? இப்போ எனக்கு இவை பிடிப்பாய் இருக்கு. போட முடியவில்லை; இத்தனை நேரம் போட்டுப் பாத்துட்டுத்தான் அப்படியே வெச்சூட்டுக் கீழே போனேன்” என்றாள். ”சரி, அப்படியானால் நான் சற்று வெளியில் சென்று விட்டு வருகிறேன்” என்று சொல்லி எழுந்து சென்றான்.

”எங்கே எவ்வளவு பெருத்திருக்கிறாய் பார்க்கலாம்?” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து அந்நகைகளை அவளுக்கு அணிவித்தான் கோபாலன். ஆனால் அவை தளர்ந்து கீழே விழத் தொடங்கின. லஷ்மி அவ்வளவு இளைத்தா போய்விட்டாள் என்று நினைத்து அவள் கண்களில் தேங்கும் நீரைத் துடைத்து, ”இந்தா! உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ எடுத்துக்கொள்” என்று தன் மைத்துனன் கொடுத்த ரூபாயைக் கண்டதும் மலர்ந்தது. கண்கள் பிரகாசத்துடன் ஜ்வலித்தன. ரூபாயை எண்ணினாள். ”இவ்வளவுதான் வேண்டும்” என்று சொல்லிச் சிரித்தவாறே அவனை ஒரு பார்வை பார்த்தாள். மனைவியின் பார்வைக்கு மயங்காதவர்கள் யார்? ”அடி கள்ளி!” என்று கன்னத்தில் அன்புடன் ஒரு தட்டுத் தட்டினான். அவன் காதில் ஏதோ ரகசியம் பேசினாள். அவன் முகம் ஆச்சரியத்துடன் திகழ்ந்தது.

4

Image

அவள் கீழே சென்று தட்டில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு வண்டிக்காக எதிர்பார்த்தாள். ஜானகி தாயின் கோபத்திற்குப் பயந்தும், தன் தலை விதியை நினைத்து நொந்தும், மன்னியின் ஆனந்த வாழ்க்கைக்கு வியந்தும், அவள் சகோதரன் செய்த சீரைக் கண்டு பொறாமை கொண்டும், தந்தையின் கடின சித்தத்தைக் கடிந்துகொண்டும் தன் தாயுடன் விளக்குகளைச் சரிவரத் தூண்டி விட்டுக்கொண்டிருந்தாள். காற்றில் விளக்குகளின் துடிதுடிப்பு; அவள் உள்ளத்தில் வாழ்க்கையின் கொந்தளிப்பு.

கோபாலன் வண்டியுடன் வந்தான். லஷ்மி மாமியாரை அணுகி, ”அம்மா, நீங்களும் எங்களுடன் வாருங்கள்; எனக்கு ஒருவரையும் தெரியாது” என்று வற்புறுத்தினாள். தன் பெண் ஒரு மாதிரி சுபாவம் படைத்தவளாதலால் மங்களம்மாள் நாட்டுப் பெண்ணுடன் புறப்பட்டாள். கிழவர், ”குழந்தைகளுக்கு மேல உனக்குத்தான் பால்யம் திரும்பி விட்டதென்று தோன்றுகிறது” என்று ஏசினார். லஷ்மி தன் சகோதரன் கொண்டுவந்தவற்றை அப்படியே வண்டியில் எடுத்து வைத்தாள். குத்துவிளக்குகள் மாத்திரம் சுவாமியருகில் எரிகின்றன. ஜானகியையும் வண்டியில் ஏறச் சொன்னாள். அவள் முணுமுணுத்தவாறே ஏறினாள். எல்லாரும் ஏறினதும் லஷ்மி கோபாலனை ஒரு பார்வை பார்த்தாள். அதற்கு அக்கண்களே விடையளித்தன.

அரை மணி நேரத்தில் எழுத்து மறையும் வெளிச்சத்தில் வண்டி ஒரு சிறிய வீட்டு வாயிலில் வந்து நின்றது. அவ்வீட்டு வாயிலில் ஒரு பாட்டியம்மாள் நின்றுகொண்டு ஒரு சிறிய பெண்ணின் கையால் விளக்குகளை ஏற்றுவித்துக் கொண்டு இருந்தாள். முதலில் கோபாலனும் லஷ்மியும் இறங்கினார்கள். அவர்களைக் கண்டதும் அந்த அம்மாள் உள்ளே சென்று விட்டாள்.

”இது யார் வீடுடா, கோபாலா?” என்றாள் தாய்.

வண்டியிலிருந்தவற்றை ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர். கூடத்தில் லஷ்மி படம் ஒன்று மாட்டப்பட்டு அதனருகில் அதற்கு முன் வெண்கல யானை விளக்கு ஒன்று சுடர்விட்டு எரிந்து கொண்டு இருந்தது. எல்லாவற்றையும் அதன் முன் வைத்தார்கள். வெற்றிலைத் தட்டின் மேல் ஒரு கவர் வைக்கப்பட்டு இருந்தது.

கோபாலன் உள்ளே சென்று, ”மாமி, இதோ நீங்கள் கேட்ட கார்த்திகை சீர்” என்று சொல்லி அழைத்தான். அவன் சொன்னதைக் கேட்ட மங்களம்மாளும் ஜானகியும் திகைத்தனர். ஜானகியின் மாமியார், தட்டுத் தட்டாய் வைத்திருக்கும் சீரையும் வெள்ளிப் பாத்திரங்களையும் பார்த்து மகிழ்ந்தவளாய் எல்லோரையும் அன்புடன் வரவேற்றாள். லஷ்மியும் ஜானகியும் அந்த அம்மாளை நமஸ்கரித்தனர்.

சற்று நேரத்தில் தாயுடனும் மனைவியுடனும் வீட்டிற்கு வந்தான் கோபாலன். மங்களம்மாள் திக்பிரமை பிடித்தவள்போல் இருந்தாள். தன் நாட்டுப் பெண்ணின் சீரை எல்லாம் கோபாலன் ஜானகிக்குக் கொடுத்து விட்டானே என்று கணவனிடம் நடந்ததைச் சொன்னாள். அவர் தம் பிள்ளையையும் நாட்டுப் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தார். மாலையில் கோபாலன் தான் ஆபீசிலிருந்து வந்தது முதல் நடந்தவற்றைச் சொன்னான். மங்களம்மாள் மௌனமாக இருந்தாள். ”லஷ்மி, நீ எங்கள் வீட்டை உத்தரிக்கவந்த லஷ்மிதான்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் கிழவர். ”அதில் சந்தேகம் என்ன?” என்று சொல்லிக்கொண்டே கிருஷ்ணமூர்த்தி உள் நுழைந்தான்.

எல்லோரும் அவரவர்கள் படுக்கையறையை அணுகினர். மாடியில் வெட்ட வெளியில் லஷ்மியும், கோபாலனும் கார்த்திகை மதியையும், அதைக் கவர வரும் மேகக் கூட்டங்களையும் கண்டு உல்லாசமாய்ப் பேசிக் கொண்டிருந்தனர். ”லஷ்மி, நீ இன்று செய்த காரியம் மிகவும் வருந்தக்கூடியது. உனக்கென்று ஆசையாய் உன் சகோதரன் பண்ணிக்கொண்டுவந்த பாத்திரங்களையும், பட்சணங்களையும் அந்த ஆசை பிடித்த கிழத்திற்கு அர்ப்பித்ததன்றி, ரூபாய் ஐந்நூறையும் கொடுத்தாயே” என்றான்.

”வருந்தக்கூடியதென்று சொல்லாதீர்கள். ஆனந்திக்க வேண்டியது. என்னைப்போல் சிறிய வயசினள், ஆனந்தமாய் இருக்க வேண்டியவள், எப்பொழுதும் அழுது வடிந்துகொண்டு, உங்கள் தாய் தந்தையராலும் அருவெறுக்கப்பட்டு வந்தால் அவள் மனம் எவ்வளவு துடிக்கும்? அவள் துடிதுடித்து விடும் மூச்சு நமக்கு இன்பமூட்டுமா? இன்றுதான் என் மனம் பரிசுத்த ஆனந்தத்துடன் இருக்கிறது. ஜானகியும் அவள் கணவனுடன் ஆனந்தமாய் இருப்பாளன்றோ? எல்லோர் வீட்டிலும் இருளைப் போக்கிப் பிரகாசத்தை உண்டு பண்ணிய இக்கார்த்திகை உங்கள் தங்கையின் மன இருட்டைப் போக்கி ஆனந்த விளக்கை ஏற்றட்டும்!” என்றாள்.

மனைவியுடன் மாமியார் வீட்டவர்களை நமஸ்கரிக்க வந்த ஜானகியும் அவள் கணவனும் இவர்கள் பேசுவதை மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டு நின்றனர். ஜானகி லஷ்மியைக் கட்டிக்கொண்டு, ”என் வாழ்க்கை விளக்கை ஏற்றிய லஷ்மீ” என்று நாத் தழுதழுக்கச் சொன்னாள். லஷ்மியின் முகத்தில் என்றுமில்லா ஆனந்தம். அவள் கண்களில் கருணை நீர் ஊற்று. உதடுகளில் இன்பப் புன்னகை. இவ்வளவும் சோபிக்க, ”ஜானகி, உன் வாழ்க்கை விளக்கை ஏற்றியது நான் அல்ல; கார்த்திகைச் சீர்” என்றாள்.

***

எம்.எஸ்.கமலா

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் ரவிப்பிரியா லஷ்மிகுமாரி, மைத்ரேயா போன்ற புனைப் பெயர்களில் சிறுகதை எழுதியுள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்புகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை.

சிறுகதை நூல்கள்:

கன்னித் தெய்வம்
காதற்கோயில்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *