கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 13,241 
 
 

ஊரே மந்தையில் திரண்டிருந்தது. அந்த ஊரின் கோயில்மாடு காரி காலமாகி கண்மூடி பட்டியக்கல்லில் கிடந்தது. ஊரில் இண்டு இடுக்கு விடாமல் அத்தனை இடங்களிலும் துக்கம் அப்பிக் கிடந்தது. வயதான ஆண்கள் அழுகையை வாயில் துண்டை வைத்து அடக்கிக் கொண்டிருந்தனர். கிழவிகளும், பெண்களும் ஒப்பாரி வைத்து மாரடித்துக் கொண்டிருந்தனர். இளவட்டங்களோ தங்கள் நண்பனை இழந்தைப் போல துடிதுடித்து நின்றனர். இப்படி ஊரே உயிரற்றுப் போனது போலப் பரிதவித்துக் கிடந்தது.

காரி

ஊரில் அன்று யாரும் வேலைவெட்டிக்குப் போகவில்லை. காரி இறந்த சேதி கேட்டு சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்து ஆட்கள் வரத்தொடங்கினர். கோயில்மாட்டை இழந்து கருப்புசாமியே ஆலமரத்தடியில் தனித்து நின்று கொண்டிருப்பது போல தோன்றியது. வந்த சனங்கள் அழுத அழுகையில் அந்த ஊர் கண்மாயே நிரம்பிவிடும் போலிருந்தது. வானில் கருமேகங்கள் கூடி காரி போலத் தெரிந்தது. மார்கழியில் சாவு அத்தனை பேருக்கும் வாய்ப்பதில்லை. பெருமாளே தனக்கு காளை வாகனமில்லையென்று வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசலைத் திறந்து காரியை அழைத்துக் கொண்டார்போல.

தப்பும், தவிலும் மந்தையில் அதிர சிறுவர்கள் காரியை வைத்து ஏதோ திருவிழா போல என்றெண்ணி இழப்பின் வலி தெரியாமல் தப்பிசைக்கு ஆடிக்கொண்டிருந்தனர். படுத்துக்கிடந்த காரியை பட்டியக்கல்லில் உட்கார்ந்திருப்பதைப் போல தூக்கி கட்டினார்கள். சந்தனத்தை மாடு மேலெல்லாம் தெளித்து அலங்காரம் செய்தனர். கொண்டுவந்த மாலையைப் போட்டு ஒவ்வொருவரும் மாட்டைத் தொட்டுக் கும்பிட்டு போனார்கள். ஊரெங்கும் காரி கண்ணீர் அஞ்சலி படத்தில் நிறைந்திருந்தது. பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவர் நினைவினூடாகவும் காரி உயிர்த்தெழத் தொடங்கியது.

jallikattu

காரி ஊருக்கு வந்த புதுசில் முதன்முதலாக சல்லிக்கட்டுக்கு கூட்டிப் போன போது வழியிலேயே அத்துகிட்டு ஓடியது. அலங்காநல்லூர் வயிற்றுமலை, பாலமேடு மஞ்சமலை, அழகர்மலைப் பக்கமெல்லாம் மாட்டைத் தேடி ஆட்கள் அலைந்து திரிந்தனர். காரியோ அழகர்மலையடிவாரத்தில் பதினெட்டாம்படிக்கருப்பன் சன்னதிக்கருகில் மரத்தடியில் படுத்துக்கிடந்தது. அழகர்கோயிலுக்கு வந்தவர்கள் மாட்டைக் கண்டுபிடித்து பதினெட்டாம் படிக்கருப்பனிடம் உத்தரவு வாங்கி மாட்டை அழைத்துச் சென்றனர்.

வருடந்தோறும் தைப்பொங்கலுக்கு மறுநாள் காரியை குளிப்பாட்டி வர்ணம்பூசி அழகாக அலங்கரித்து பதினெட்டாம்படியானிடம் அழைத்து வந்தபின்பே சல்லிக்கட்டுகளுக்கு அழைத்துச் செல்வது அந்த ஊர் வழக்கமானது. அந்த ஊரிலும் பதினெட்டாம்படிக்கருப்பாகவே காரியை வழிபடத் தொடங்கினர்.

காரி சல்லிக்கட்டில் விளையாடுவதைப் பார்க்கவே ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். வாடிவாசலிலிருந்து காரி மற்ற மாடுகளைப் போல ஓடி வராது. மெல்ல நடந்து வரும். அதன் நடை இராஜநடை. வாடியின் வெளியே வந்து இருபுறமும் காரி பார்க்கும் போது உள்ளுக்குள் நிற்பவர்களுக்கு அடிவயிறு கலங்கும். காரியை சல்லிக்கட்டில் அடக்க நினைத்தவர்கள் அடக்கமாகிப் போனார்கள். காரி இதுவரை யாரையும் வீணாக குத்தியதில்லை.

kari

திருவிழா என்றால் காரிக்கு கொண்டாட்டந்தான். பிடிமண் கொடுப்பதில் தொடங்கி செவ்வாய் சாட்டி குதிரை எடுப்பு வரை காரிக்குத்தான் முதல் மரியாதை. கழுத்திலும், காலிலும் சலங்கை கட்டி கழுத்து நிறைய பூமாலை சூடி சல்சல்லென்று நிலம் அதிர அதிர காரி நடந்து வருவதைப் பார்த்து தொழாத கைகளும் தொழும். கருப்புசாமியே காரியுருக்கொண்டு வருவதைப் போல ஆவேசமாய் விரைந்து வரும். ஒயிலாட்டமும், சிலம்பாட்டமும் காரிமுன் ஆடிவர பெண்கள் குலவையிட காரி கொண்டாட்டமாய் வருவதைக் காண வழியெங்கும் ஆட்கள் திரண்டு நிற்பர். அந்த ஊரில் காரியில்லாமல் காரியம் இல்லை.

வெள்ளாமையில் காரி இறங்கி நின்றால் மகசூல் அதிகம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அறுவடைக் காலங்களில் காரியை முதலில் வயலில் இறக்கி மேய விட்டு பின்னர்தான் கதிரறுக்கத் தொடங்குவர். காரி சல்லிக்கட்டில் சூரன். ஆனால், மற்ற நாட்களில் பரமசாது. தெருவிற்குள் சின்னப்பிள்ளைகள் காரியோடு சேர்ந்து திரிவார்கள். தங்கள் வீட்டுக்குளுதாடிக்கு கூட்டிப்போய் தண்ணி காட்டுவார்கள். அந்த அளவிற்கு பச்சப்பிள்ளைகளோடு கூடத்திரியும்.

பெண்களை வேற்றாள் யாராவது சீண்டினால் ‘’பெரிய ஆம்பிளையா இருந்தா எங்கூர் காரிய புடிச்சுப்பாரு, அப்படிப்புடிச்சுட்டா எங்கூர்காரிக பூராம் ஒன்னைவே கட்டிக்கிறோம்’’ என சவால் விடும் அளவிற்கு காரி மீது நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.

பக்கத்து ஊரிலிருந்து வந்தவர் காரியின் பெருமையை அங்கிருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘’காரி வெறுங்கோயில்மாடு மட்டுமல்ல. என்னோட குடும்பத்த காக்க வந்த தெய்வம்ய்யா. பத்து வருசத்துக்கு முந்தி எம் மக கல்யாணத்துக்கு வாங்கி வச்சுருந்த நகையைத் திருடிட்டு இந்த ஊர் கம்மா வழி திருட்டுப்பயக ஓடிவர கரையில நின்ன காரி அவன்ய்ங்கள குத்திப் போட்டுருச்சு. நாங்க நகையத் தேடி வர்றோம். அவன்ய்ங்க கரையில காரி காலடில கிடந்தான்ய்ங்க. காரி கால்ல விழுந்து நகையை மீட்டுட்டு போனோம். எம்மகபிள்ள பேரனுக்கு காரிக்கண்ணன்னுதான் பேரு வச்சுருக்கோம்’’ என்று அவர் சொல்ல சுத்திநின்ன சனங்களெல்லாம் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தனர்.

‘இந்தூரு பொம்பளைக காடு கரையப் பக்கம் ஒத்தசத்தையில தைரியமா நடந்துபோறோம்ன்னா காரியிருக்கிற தெம்புதான் காரணம். இராத்திரி வாசல் திண்ணையில கதவத் தெறந்து போட்டுட்டு படுத்து தூங்குறமே ஒரு திருட்டு போயிருக்குமா நம்ம ஊர்ல? கருப்பசாமி கணக்கா ஊர இராத்திரிபூராம் சுத்தி வந்து நம்மள நிம்மதியா தூங்க வைச்ச சாமிய்யா காரி’’ என அங்கிருந்த பெண்ணொருத்தி மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டு மாரடித்து அழுது கொண்டிருந்த கிழவியொன்று ஒப்பாரியாக காரியின் பெருமையைப் பாட்டாகப் பாடத் தொடங்கியது.

நீ போகாத சல்லிக்கட்டு இல்ல!

நீ வாங்காத பதக்கம் இல்ல!

எமனோட கொட்டத்த அடக்க

எமலோகம் போயிருக்கியோ?

அய்யா எங்களயும் கூட்டிப் போயிறு

ஒன்னவிட்டு ஒத்தயில

நாங்க இங்கிருக்க மாட்டோம்!

அந்த ஊருக்க வர்ற பஸ்ஸூ கண்டக்டர், டிரைவரும் மாலையோடு வந்து காரிக்கு போட்டு வணங்கினர். கண்டக்டர் சொன்னார் ‘இந்த ஊருக்கு மொதநாளு பஸ்ஸ கொண்டுவந்து மந்தையில நிறுத்துறோம். எல்லோரும் வேடிக்கைப் பார்க்க சுத்திவர காரி வந்து காலு ரெண்டையும் தூக்கிப் படியில வச்சுச்சு. இன்னிக்கு வரைக்கும் இந்த பஸ்ஸூ ஒரு ஆக்ஸிடென்டு ஆனதில்ல. பெரிய ரிப்பேருன்னு நின்னதில்ல. எல்லாங் காரியோட இராசி’’.

காரி இறந்த சேதி கேட்டு அந்த ஊர் பள்ளித் தலைமையாசிரியர் துடிதுடித்து ஓடிவந்தார். பெரியமாலையும், சீப்புச்சீப்பாக நாட்டுவாழைப்பழமும் கொண்டு வந்து வைத்து வணங்கினார். காரி உயிரோடிருக்கையில் பள்ளிக்கூடம் முன்புள்ள மரத்தடியில்தான் படுத்திருக்கும். பள்ளிக்கூடம் தொடங்கி முதல்மணி அடித்ததும் தலைமையாசிரியர் அறைமுன்பு காரி போய் நிற்கும். அவரும் அதற்காக வாங்கி வைத்திருக்கும் நாட்டு வாழைப்பழங்களை அதற்கு கொடுத்து கழுத்தை வருடிக் கொடுத்துக் கொண்டிருப்பார். இது தினசரி வழக்கம். அவர் எல்லோரிடமும் காரி என் மூத்த மகன் மாதிரி என்று சொல்லிக் கொண்டிருப்பார். இன்று காரி மரித்துக் கிடப்பதைப் பார்த்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்த தலைமையாசிரியரைக் கண்டு பள்ளிக்கூட பிள்ளைகளே வாய்பிளந்து ஆச்சர்யமாய் பார்த்தனர். அன்று பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

ஊரிலிருந்த கண்மாய்கரை ஆலமரத்தடியில் காரியை புதைத்து வழிபட முடிவானது. பெரிய மாட்டுவண்டி கட்டி காரியைத் தூக்கி வைத்து வீதிவீதியாக வலம் வரக் கிளம்பியதும் அதுவரை பொறுத்திருந்த வானும் அழத் தொடங்கியது. மார்கழிமாத பெருமழை அன்று பொழிந்தது. கொட்டும் மழையிலும் மாலையும் கண்ணீருமாய் ஊரே ஊர்வலமாய் போனது. ஊரிலிருந்த ஆண்கள் எல்லோரும் சாதிபேதமில்லாமல் மொட்டையடித்து கண்கள் ஊற்றெடுக்க கண்மாயில் குளித்து வீடு திரும்பினர். வந்த சனமெல்லாம் காரி சல்லிக்கட்டு விளையாடுற விதம், காரியின் சாகசங்களை பத்திபேசிக்கிட்டே சென்றனர்.

அன்று மாலை அந்த ஊரில் சினையாயிருந்த பசுமாடொன்று காளஞ்கன்று ஈன்றது. கருப்பாயிருந்த அந்த இளஞ்கன்றை அந்த ஊர்க்காரர்கள் காரியின் மறுபிறப்பென்றே நம்பினர். இளங்காரி இன்னும் கொஞ்ச நாட்களில் ஊரைக் காக்க கிளம்பப் போகிறது. கருப்பசாமியின் வீதிவலம் தொடங்கப் போகிறது.

– ஜனவரி 2014

கதிர் பொங்கல் மலருக்காக (திருமங்கலத்திலிருந்து பொங்கல் சிறப்பிதழாக வந்த வருட இதழ்) காரி என்ற சிறுகதையை எழுதினேன். காரி சிறுகதை சஞ்சிகை என்ற சிற்றிதழிலும் பிப்ரவரி மாதம் வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *