கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 13,395 
 
 

காலையில் எழுந்ததிலிருந்து, நண்பனின் திருமணத்திற்காக தயாராகி கொண்டிருந்தான் கமல். “அம்மா…. ம்மா….. என்னம்மா பன்றிங்க! சீக்கிரம் வாங்க. கல்யாணத்துக்கு நேரமாச்சு”” மகனின் குரல் கேட்க, வேகமாக புறப்பிட்டாள் பருவதம்.

திருமண மண்டபத்தில் புது மாப்பிள்ளை தோரணையில் சுழன்று கொண்டிருந்தான் கமலின் உயிர் தோழன் ராஜா. அவன் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன், திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. தான் காதலித்த ராஜாவையே மணமுடிக்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் ரேணு. இவள் படித்த பட்டதாரி பெண். கமலும், ரேணுவும் கடந்த’ இரண்டு வருடங்களாக காதலித்து, தற்போது திருமண பந்தத்தில் இணைய இருந்தனர்.

அன்று மண்டபம் முழுக்க உறவினர்கள் வருகை, சாங்கியம், சம்பிரதாயம், கல்யாண கொண்டாட்டம் என கலை கட்டி கொண்டிருந்த வேளையில், கமல் அவனின் தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்திறங்கினான். புன்னகையுடன் வரவேற்றான் ராஜா.

“மச்சி…. கடைசியில லவ் பண்ண பொண்ணையே…. கல்யாணம் பண்ண போற…..வாழ்த்துக்கள் டா….” என்று கமல் கட்டியணைத்து தன் வாழ்த்தை கூறினான்.

சில மணி துளிகள் கடந்தது. முகூர்த்ததிற்கு மணமக்கள் கூடும் வேளையில், ராஜாவின் பெற்றோர் அவனை அழைத்து தனியாக பேசினர்.

“இந்த கல்யாணத்தில் எனக்கு இஷ்டமில்லை. இவங்க நம்ம ஜாதி இல்லன்னு ஏன்டா சொல்லல” என ராஜாவின் தந்தை குமரினார்.

“ப்பா….நான் இந்த பொண்ண லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணுறேன். தெரிஞ்சிதான் நீங்களும் சம்மதிச்சிங்க..அப்புறம் ஏன் இப்போ ஜாதின்னு காரணம் காட்டி வேண்டாங்கிறிங்க”

“நீ காதலிச்சன்னு எனக்கு தெரியும். ஆனா அவங்க நம்ம ஆளுங்க இல்லன்னு ஏன் நீ சொல்லல. எனக்கு இப்போ தான் தெரியும்”

“காதல்.. இதெல்லாம் பார்த்தாப்பா வரும். கடைசி நேரத்தில் ஏன் இப்படி முரண்டு பிடிக்குரிங்க” என ராஜா கூற, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, மண்டபமே களேபரமானது.

முடிவில் “நாங்களும், என் சொத்தும் வேணும்னா!!! நீ என் கூடவே மண்டபத்தை விட்டு வெளியவா… இல்லேன்னா அவகூடவே போ…” என ராஜாவின் தந்தை வெளியேறினார்.

ராஜாவால் தன் பெற்றோரை சமாதானம் செய்ய முடியவில்லை. அவனும் மண்டபத்தை விட்டு வெளியேறினான். இதை சற்றும் எதிர்பார்க்காத ரேணு கலங்கினாள். அங்கு கூடியிருந்த உறவினர்கள் வார்த்தையால் பெண் வீட்டாரை மேலும் வசை பாடினர். இதை கேட்டு மனமுடைந்த ரேணுவின் தந்தை, ஒரு அறையில் சென்று தாழிட்டு கொண்டார். அதை கண்டவர்கள் கூச்சலிட்டனர். கமலும் மற்றவர்களும் சேர்ந்து, கதவை உடைத்து, அவரை தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினர்.

கண் கலங்கி நின்ற ரேணுவின் பெற்றோரிடம் கமல் சென்று “உங்களுக்கும், உங்க பொண்ணுக்கும் சம்மதமுன்னா, நானே உங்க பொண்ண கல்யாணம் பன்னிக்கிறேன். உண்மையான உறவுகளுக்கிடையே ஜாதி மதமெல்லாம் ஒன்னுமில்லை. ஒரு மனிதனின் உணர்வை புரிந்து கொல்லாத யாரும் மனுஷனே இல்லை. நான் முதல்ல மனுஷனா இருக்கா விரும்புறேன்” இதை கேட்ட ரேணு, கமலை திருமணம் செய்ய, தன் பெற்றோரிடம் சம்மதம் தெரிவித்தாள். அதே மண மேடையில் கமலுக்கும் ரேணுக்கும் திருமணம் நடந்தது. பருவதமும், ரேணுவின் பெற்றோரும் மனமார வாழ்த்தினர்.

பல சாங்கியங்களுக்கு பின்னர், அன்று இரவு அலங்கரிக்காத கட்டலில் கமல் அமர்ந்திருந்தான். மெல்ல கதவை திறந்து உள்ளே வந்த ரேணு, கட்டலின் அருகில் வந்து நின்றாள்.

“வா….. ரேணு… உட்காரு….. நான் உன் அளவுக்கு படிக்கல! அந்த நேரத்தில உன்ன பெத்தவங்க நிலையை நினைச்சி தான், உன்னை கல்யாணம் பண்ணினேன். உன் நிலைமை எனக்கு புரியுது! உன்ன நானும், என் அம்மாவும் எப்போவும் எதற்குக்காகவும் வற்புறுத்த மாட்டோம், கொஞ்சம் கொஞ்சமா நடந்தத மறந்துட்டு, இந்த புது வாழ்க்கைக்குள் வர முயற்சி பண்ணுங்க, அதைப்போல நானும் உங்களை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுறேன். இந்த உலகத்தில யாரும், யாருக்கும் பொருத்தமான ஜோடி இல்ல. நாம தான் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து புரிஞ்சி நடந்துக்கணும்” என்றான் கமல்.

ரேணு கண் கலங்கி “நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். சரியான நேரத்தில எனக்கு வாழ்க்கை கொடுத்து, என் குடும்ப மானத்தை காப்பாத்தினிங்க, இத்தன வர்ஷம் என்ன காதலிச்சவன், ஒரு நொடியில தூக்கி வீசிட்டு போயிட்டான், நான் யாரு? என்னன்னு தெரியாமலேயே, என்னை உங்க மனைவியா ஏத்துகிட்டிங்க. உங்க நல்ல மனச கண்டிப்பா புரிஞ்சிப்பேன். ஆனால் அதுக்கு கொஞ்சம் நாள் ஆகும். அதுவரை இன்னும் சில நாட்களுக்கு மட்டும் கட்டிலில் நீங்க படுங்க. நான் கீழ படுத்துக்கிறேன்” என்ற ரேணுவின் பதிலை புரிந்து கொண்ட கமல், முதலில் அவளின் மனதில் இடம் பிடிப்போம் என தனக்குள்ளே கூறிக்கொண்டு, அவளுக்கு தலையணையும், விரிப்பும் கொடுத்தான்.

மறுநாள் காலை ராஜா தன் தோழன் கமலை பார்க்க, அவனின் வீட்டிற்கு வந்தான். இதற்கு முன் அவன் தோழன் மட்டும் தான். இன்று தன் காதலியை திருமணம் செய்த அவளின் கணவன் என்பதால், தயக்கத்துடன் வாசலில் நின்றான். அதை கண்ட கமல்

“வாடா நண்பா… உள்ள வா…என்ன புதுசாக வெளியவே நிற்கிற… நடந்த விஷயமெல்லாம் உனக்கு தெரியுமுன்னு நினைக்கிறேன். நீ மண்டபத்த விட்டு வெளியே போனவுடன், நிறைய நடந்து போச்சு”

“அதெல்லாம் நானும் கேள்விப்பட்டேன். என்னோட சூழ்நிலை அப்படி. அதான் மண்டபத்த விட்டு வெளிய போனேன். ஒரு வகையில் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. உன்னை போல ஒரு நல்லவன், அவளுக்கு கிடைச்சது. அதற்கு உனக்கு நான்தான் நன்றி சொல்லணும்” என ராஜா கூறி, தயக்கத்துடன் “ நான் ரேணுவை பார்க்கலாமா?” என கமலிடம் அனுமதி கேட்க,

அதற்குள் ரேணு “இந்த துரோகி எதுக்கு இங்க வந்தான். முதல்ல அவனை வீட்டை வீட்டு வெளிய போக சொல்லுங்க. அவன் முகத்தை பார்க்கவே விரும்பவில்லை” என பொரிந்து தள்ளிவிட்டு உள்ளே சென்றாள். கமலுக்கு என்ன கூறுவதென்றே புரியவில்லை. நிலைமையை உணர்ந்த ராஜா அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

அதன்பின் சில நாட்களில் ராஜா வெளி நாட்டிற்கு சென்று விட்டான். பருவததிற்கு மகள் இல்லா குறையை ரேணு போக்கினாள். அம்மா மீதான அவளின் அன்பும், குடும்பத்தின் மீதான அவளின் அக்கறையும், கமலுக்கு ரேணுவின் மீது காதல் உண்டாக காரணமாய் அமைந்தது. கமலும் ரேணுவும் நண்பர்களாக தொடர்ந்த அவர்களது வாழ்க்கை, ஒரு கட்டத்தில், இல்வாழ்க்கைக்குள் அழைத்து சென்றது. ஒருவரையொருவர் நன்கு புரிந்த பின், திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்தனர்.

கமல் கட்டலில் காத்திருந்தான். உள்ள வந்த ரேணு, கமலின் அருகில் வந்து அமர்ந்தாள். இருவரும் நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தனர். மற்ற நாட்களை போல் அல்லாது, அன்றைய இரவை இருவரும் வித்தியாசமாக உணர்ந்தனர். ஒருவரையொருவர் கண்களால் பேசிக்கொண்டனர். “நான் உனக்காகவே பிறந்தவள் போலிருக்கு. அதனால் தான் காலம் நம்மை, பல தடைகளை தாண்டி சேர்த்து விட்டதோ? என அவளின் கண்கள் பேச, அதை பார்வையிலேயே, புரிந்துகொண்ட கமல், “ஆமாம் நானும் உனக்காகவே பிறந்தவன் தான்” என்று தன் பார்வையால் பதிலளித்தான். அவர்களில் அழகான காதல், அன்றைய இரவில், தாம்பத்தியத்தில் இணைந்தது. இரண்டு மனங்களால் இணைந்த அவர்களின் ஈருடல், ஓருடலாக காமத்தில் கரைந்தது.

இப்படியே அழகாக நாட்கள் நகர்ந்தது. ரேணு கருத்தரித்தாள். பருவதமும் ரேணுவை நன்கு கவனித்து கொண்டாள். கமலின் பாசத்திற்கு பரிசாக அவனுக்கு ஒரு ஆண் குழந்தையை பெற்று தந்தாள் ரேணு.

பருவதம் ரேணுவை கவனித்து வந்ததால், கமல் புது வரவான குழந்தை அருண் மீது அதிகம் ஆர்வத்தை காட்டினான். இதனால் ரேணு தன் மீது வைத்த அன்பும் பாசமும் கமலுக்கு குறைந்ததோ என சந்தேகித்தாள். கமலின் மீதான அவளின் அன்பு, காலப்போக்கில் தவறாக யோசிக்க வைத்தது. தனிக்குடித்தனம் போனால் முழுக்கவனமும் நம் மீதே இருக்கும் என எண்ணி, அவ்வாறே போக முடிவும் செய்தாள். நாசுக்காக கமலிடம் தனிகுடித்தனம் போக வற்புறுத்தினாள். ஆனால் அவன் சம்மதிக்கவில்லை. இதை எதிர்பாராத விதமாக கேட்ட பருவதம், மறுநாள் தனியாக கமலை அழைத்து

“நேத்து ரேணு பேசினதா நானும் கேட்டேன். அவ ஆசைபடுரதுல எந்த தப்பும் இல்ல. அவ புருசனோட தனியா இருக்கணும்ன்னு ஆசைப்படுரா. அவ ஆசை நியமானது”

“அவ ஆசைப்படுறான்னு உங்களை தனியா விட்டுட்டு, நான் எப்படி போக முடியும். மாட்டேன் ம்ம்மா… என்னால முடியவே முடியாது”

“நீ எங்க இருந்தாலும் என் பையன்தான். அதை யாராலும் மாற்ற முடியாது. நான் சொல்றத கேளு. பக்கத்து தெருவுல ஒரு வீட்டை பாரு. தினமும் நான் உன்னை வந்து பார்க்கிறேன். நீயும் என்ன வந்து பாரு. அது மட்டும் இல்ல. தனியா இருந்தாதான் ஒரு குடும்பத்தில நடக்கும் வரவு செலவுன்னு எல்லா விசயத்தையும் கத்துக்க முடியும். கொஞ்ச நாள் பாரு!! உன் பொண்டாட்டியே, ஒன்னா இருக்கலாமன்னு சொல்லிடுவா பாரேன்” என பருவதம் கூற. அவளின் வார்த்தையை ஏற்ற கமல், ஒரு வீட்டை பார்த்து குடும்பத்துடன் குடியேறினான்.

சில மாதங்கள் ஓடியது. ஒருபுறம் பருவதத்தின் செலவிற்கு பணம் தரவேண்டும். மறுபுறம் குழந்தை பெரிதாக, பெரிதாக குடும்ப செலவும் அதிகமாகியது. குழந்தையின் வருங்காலத்தை எண்ணி இரண்டு இடத்தில் வேலை செய்தான் கமல். அவன் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்தது. இதனால் சமையல், வீட்டுவேலை, வீடு பொருள் வாங்குவது, தனியாக குழந்தை பராமரிப்பு என நிமிடம் ஒய்வு இல்லாமல் இருந்தாள் ரேணு.

கமலுக்கு வேலை பளு அதிகமானதால் சில நேரத்தில், வேலையில் உள்ள கோபத்தை வீட்டில் வெளிபடுத்தினான். ரேணுவும் வீட்டில் ஒய்வில்லாமல் உழைக்கும் தன்னை, கமல் மதிப்பதில்லை என்றும், தனக்காக நேரம் ஒதுக்குவதில்லை என்றும் அவனை புரிந்து கொல்லாமல் வாக்குவாதம் செய்து சண்டையிடுவாள். ஆனாலும் கமல் அவளை சமாதானம் செய்வான். கால ஓட்டத்தின் காரணமாக, அவளுக்கென்று தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லையே தவிர, அவளின் மீது பாசமாகவும், அக்கறையாகவும் இருந்தான். ஆனால் அதை ரேணு புரிந்து கொள்வதாகவே இல்லை.

ஒருநாள் ராஜா வெளிநாட்டிலிருந்து வர, அந்நேரத்தில் குழந்தை அருணின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை அறிந்த ராஜா நிறைய பரிசு பொருட்களுடன், சொகுசு வண்டியில் வீட்டிற்கு வந்தான். சற்றும் எதிர்பாரத ரேணு அதிர்ந்து நின்றாள். கமல் அவனை வரவேற்றான். விழா சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. கைபேசியில் கமலுக்கு அழைப்பு வந்தது. அவன் வேலை பார்த்த நிறுவனம் மூடப்பட்டது என்ற செய்தியை கேட்டு மனவருத்தத்துடன் இருந்தான். பணத்தேவையை சமாளிக்க வேண்டுமென்றால், தனிக்குடித்தனத்தை கைவிட்டுவிட்டு, அம்மாவுடன் சேர்ந்து இருப்பதுதான் நல்லது என்று முடிவு செய்தான். அவ்வாறே ரேணுவிடம் கூறினான். அவள் அதற்கு மறுக்கவே அவ்விடத்திலேயே இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது

“ரேணு கொஞ்சம் என்னோட நிலைமையை புரிஞ்சுக்கோ மா.. உனக்கே தெரியும் நம்ம குடும்ப சூழ்நிலை. அம்மா கூட போனா நமக்கு செலவு கொஞ்சம் குறையும். அதோட உனக்கும் கொஞ்சம் வேலையெல்லாம் கொறைஞ்சுரும். அம்மாவும் உனக்கும் உதவியா இருப்பாங்க”.

“நான் எனக்கு கஷ்டமா இருக்குன்னு உங்ககிட்ட சொன்னேனா? எனக்கு அங்க போக புடிக்கல”

“அதாம்மா….. ஏன்? எங்கம்மா ஏதும் உன்ன கொடுமை படுத்துறாங்களா? இல்ல உனக்கு என்ன தான் பிரச்சனை? சொல்லு!!!”

“நீங்க இங்கயே எனக்கு நேரம் ஒதுக்கி, என்கூட பாசமா இருக்கிறதில்லை. இதுல அங்க போனா… சொல்லிக்கவே வேண்டாம்..”

“ஏன்..டீ….. நான் யாருக்காக சம்பதிக்கிறேன்? உனக்கும் நம்ம பையனுக்காக தான!!! அதனால்தான் உங்க ரெண்டு பேர்கூடவும் இருக்க முடியறது இல்ல. அதுக்காக உங்க ரெண்டு பேர் மேலயும் பாசமும், அக்கறையும் இல்லன்னு நீயே நினைச்சா எப்படி?”

“நீங்க என்ன சொன்னாலும் சரி. நான் அங்க வர மாட்டேன். இது தான் என் முடிவு”

“சரி..விடு… வராட்டியும் பரவாயில்லை. மெதுவா பேசு. நெறைய பேரு வீட்டுக்கு வந்துருக்காங்க. தப்பா நினைக்க போறாங்க”

“நான் வரவே மாட்டேன். எனக்கு என்னோட சந்தோசம் தான் முக்கியம்”

“ஆக.. என்ன பத்தி உனக்கு கவலை இல்ல. உனக்கு உன் சந்தோசம் தான் முக்கியம். அப்படிதானா? ஆமாம்… என்ன மேல பாசம் இருந்தா தானா, என்ன பத்தி நினைக்க”

“அப்போ நான் உங்க மேல பாசம் வைக்கலன்னு சொல்றிங்களா?”

“ஆமாம்…. அதிலென்ன சந்தேகம்”… என கூற, இரண்டு பேருக்குமான வாக்குவாதம், சண்டையாக மாறியது. அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.

கடைசியில் “நீ ஏற்கெனவே வேறு ஒருத்தனை விரும்பியவள் தானே… அதனாலதான் என் உணர்வுகளை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என கூற, பின்னர் கைகலப்பில் முடிந்தது. அதை பார்த்த ராஜா உட்பட அனைவரும் அவ்விடம் விட்டு நகர்ந்தனர். ஆத்திரத்தில் இப்படி வார்த்தையை விட்டு விட்டோமே!!! என வருந்தினான் கமல்

ரேணு அச்சம்பவதிற்கு பின் கமலுடன் பேசாமலேயே இருந்தாள். அவ்வேளையில் ராஜா கைபேசியில் ரேணுவை அழைத்தான்.

அழைப்பை ஏற்ற அவளிடம் “ரேணு எப்படி இருக்க? நான் கொஞ்சம் உன்கிட்ட பேசணும்”

“என்ன பேசணுமோ… அத சீக்கிரம் பேசிட்டு வையுங்க”

“பிறந்த நாள் விழாவில எல்லோரும் முன்னாடியும், நீ வேற ஒருத்தனை காதலிச்சவ தானேன்னு கமல் சொன்னது, என் மனசுக்கு வருத்தமா இருந்தது” அழுது கொண்டே கைபேசியை காதில் வைத்து கேட்டுக் கொண்டிருந்தாள் ரேணு.

“உன்னை அவன் அடித்ததை என்னால் தடுக்க முடியல. அத்தன பேத்துக்கு முன்னாடியும் உன்ன அவன் அடிச்சுருக்க கூடாது. அது உனக்கு எவ்ளோ அவமானமா இருந்திருக்கும் ன்னு அவன் யோசிக்கலா”

“எனக்காக நீங்களாவது கவலப்பட இருக்கிங்களே!!”

“நீ கவலைபடாதே!! நான் உனக்கு எப்பவும் ஒரு நண்பனா, நல்ல ஆறுதலா இருப்பேன். உன்ன கல்யாணம் பண்ணி சந்தோசமா வைச்சுக்குர பாக்கியம் தான் எனக்கு கிடைக்கல.. உன் உணர்வை புரிந்த, நல்ல நண்பனாகவாவது இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததே போதும்” என்ற ராஜாவின் வார்த்தையில் மயங்கினாள்.

அடிக்கடி ரேணுவே ஆறுதலுக்காக ராஜாவின் கைபேசிக்கு அழைப்பாள். தன் குடும்பத்தில் நடக்கும் ஒவ்வொரு விசயத்தையும், அவனிடம் பகிர்ந்து கொண்டாள். ராஜா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, கமலுக்கும் ரேணுக்கும் இடையே நடக்கும் சிறு சிறு சண்டையும் பெரிதாக்கி, இருவருக்குமிடையே விரிசலை ஏற்படுத்தினான். ராஜா சொல்வதை மட்டும் கேட்கும் படியான சூழ்நிலை உருவாகியது ரேணுவிற்கு. அதுவே நாளடைவில் பழக்கமாக மாறியது. இருவரும் யாருக்கும் தெரியாமல் சந்தித்து கொள்ளுமளவுக்கு அதிகமானது.

ரேணு முன்பெல்லாம் காரணமாக சண்டை இடுவாள். ஆனால் தற்போது கணவனுடன் வேண்டுமென்றே கோபப்படுவதையும், சண்டை இடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தாள். ஆனாலும் கமல் அவள் மேல் பாசமாகவே இருந்தான். அவள் அவசியமில்லாமல் போடும் சண்டையை கூட பெரிது படுத்தாமல், அமைதியாக விட்டுவிடுவான். அவளையும், குழந்தையையும் குறையில்லாமல் பார்த்து கொண்டான். காலம் கடந்து கமலின் அன்பை புரிந்து கொண்ட ரேணு, குற்றவுணர்வால் மனம் குமுறினாள். ராஜாவுடனான பழக்கத்தை விட முயற்சித்தாள். ஆனால் ராஜா அவளை மிரட்டி, தன் காரியத்தை சாதித்து கொண்டே இருந்தான்.

அக்கம் பக்கத்தினர் ரேணுவையும், ராஜாவையும் இணைத்து பேசினர். அப்பேச்சு பருவதத்தின் காதிற்கு வர, கமலை அழைத்து தனக்கு உடம்பு சரில்லை என்றும், குடும்பத்துடன் மறுபடியும் தன் வீட்டிற்கே வர வேண்டுமென்று கூறினாள். அதற்கு கமல் ரேணுவிடம் பேசி அழைத்து வருவதாக வீட்டிற்கு சென்றான். மறு நாள் காலையில் அம்மாவின் உடல்நிலையை எடுத்து சொல்லி, ஒரே வீட்டில் இருக்க சம்மதம் வாங்க வேண்டும் என்று எண்ணி, ரேணுவின் அருகில் சென்றான். உடல் அனலாய் கொதித்தது. அவள் காய்ச்சலால் உடம்புக்கு முடியாமல் படுத்திருந்தாள். அவளுக்கு கஞ்சி வைத்து, மருந்து கொடுத்து விட்டு, அன்று ஏதும் பேசாமல், வேலைக்கு சென்றான்.

சிறிது நேரம் வேலை செய்தாலும் தன் மனைவிக்கு உடம்பு சரியில்லையே!! எப்படி குழந்தையை வைத்து சமாளிப்பாள் என்று பாதி வேலையிலேயே வீடு திரும்பினான். அவன் வீட்டின் வாயிலில் ராஜாவின் இரு சக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. பல நாட்களுக்கு பின் நண்பன் வந்திருக்கும் சந்தோஷத்தில் சென்றான் கமல். உள்ளே நுழைய முற்படும் போது, ஏதோ முனங்கல் சத்தம் கேட்க, ஜன்னலில் எட்டி பார்த்தான். அவன் கண்ட காட்சி, அவனை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. தொட்டிலில் குழந்தை. கட்டலில் ராஜாவுடன் தன் மனைவி. இதை கண்டவுடன் ரத்தம் கொதித்தது. கோபத்தில் அருகிலிருந்த கல்லை எடுத்து, ஜன்னலை உடைத்தான். சத்தம் கேட்டு, இருவரும் உடைகளை சரிசெய்து வெளியே பார்த்தனர்.

கமலை கண்டதும் இருவரும் பதறினர். ராஜா கதவை திறந்து வேக வேகமாக வண்டியிலேறி ஓடினான். ரேணு மட்டும் ஒரு மூளையில் அமர்ந்து, அழுது கொண்டிருந்தாள். குழந்தை தொட்டிலில் அழுக, குழந்தையை தூக்கிக்கொண்டு பருவதத்தின் வீட்டிற்கு சென்றான் கமல். அங்கு பருவதம் கோயிலுக்கு சென்றிருந்ததால், குழந்தையுடன் வீட்டு முட்டத்தில் அமர்ந்தான் கமல்.

மறுபுறம் ரேணு, “இப்படி ஒரு தவறை செய்து விட்டேனே!! மானம்தான் பெரிது என நினைக்கின்ற அப்பா அம்மாவிற்கு மகளலாய் பிறந்து, இப்படியொரு பாவத்தை செய்தேனே.!!!…. நான் மனமுடைந்த நேரத்தில், என் மானத்தை காப்பாற்றி, எனக்கு வாழ்க்கை கொடுத்து, குடும்ப மானத்தை காத்த கணவனுக்கு துரோகம் செய்து விட்டேனே!!!!. படித்த பெண் என்று சொல்லி கொல்லவே தகுதியற்றவள் நான்!!!. தலைமுறைக்கே அவமானமான செயலை இப்படி செய்தேனே!!!. கணவனின் அன்பை புரிந்து கொள்ளாமல், நம் குடும்ப விஷயத்தை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து, வேறொரு நபரிடம் சென்றதன் விளைவு தான் இது, இப்போது என் வாழ்க்கையே போய் விட்டதே!!!! கண் முன்னே மனைவியின் கோலம் கண்டும், தன்னை அடிக்கவோ, திட்டவோ இல்லையே!!! எவ்வளவு ரணம் அவர் மனதில் இருந்திருந்தால் அவ்வாறு சென்றிருப்பார்..” என எண்ணி கதறினாள்

அவசர அவசரமாக கமலை காண சென்றாள் ரேணு. அவன் குழந்தையுடன் சிலை போல அமர்ந்திருந்தான். அவள் கமலின் காலில் விழுந்து “நான் செய்தது தவறுதான்!!! நான் உங்களுக்கு பண்ணியது துரோகம், பாவம்… என்றைக்குமே அதுக்கு மன்னிப்பு கிடையாது. ஆனாலும் இந்த பாவிய மன்னிச்சிடுங்க. ஒரே ஒரு சந்தர்ப்பம் எனக்கு திருந்தி வாழ கொடுங்க….” என தலையில் அடித்து கொண்டு, அவன் காலில் விழுந்து கதறினாள். அதை கண்டு “உன்னை என் உயிருக்கும் மேல நினைச்சேனே…” என ரணம் தாங்கா முடியாமல் கமலும் அழுதான். பின்னர் அவளையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான். ‘தன்னை மன்னித்து விட்டார். இனி எந்த சந்தர்ப்பத்திலும் தவறு செய்ய கூடாது’ என்று உறுதி கொண்டாள் ரேணு.

வீட்டினுள் நுழைந்தனர். கதவு திறந்த நிலையிலேயே இருந்தது. வீடே நிசப்தமாக இருந்தது. குழந்தைக்கு விளையாட்டு பொருட்கள் போடப்பட்டு, தரையில் விளையாடிக் கொண்டிருந்தது. ரேணுவின் வாய் கட்டப்பட்டு, ஒரு நாற்காலியில், அவள் எங்கும் நகராதபடி கட்டியிருந்தான் கமல். அவளின் கண்கள் மட்டும் திறக்கபட்டு, அவள் பார்க்கும் படியாக இருந்தது. ரேணுவின் மனதில் ‘என்ன செய்ய போகிறார். தன்னை கொலை செய்ய போகிறாரோ? அப்படியெனில் அதை ஏற்கத்தான் வேண்டும். அவ்வளவு பெரிய துரோகத்தை அவருக்கு செய்திருக்கிறேன்’ என்று கலங்கினாள்.

சற்று நேரத்தில் “நான் உனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு, நீ எனக்கு கொடுத்த பரிசை பார்” என்று கண்ணிமைக்கு நேரத்தில், குழந்தையின் தொட்டில் துணியால் தூக்கில் தொங்கினான் கமல்.

இதை கண்முன் கண்ட ரேணு “நான் செய்த பாவத்திற்கு நீங்க சாகக்கூடாது. நான் இல்லாட்டியும், உங்களை போல நல்ல தகப்பன் என் பையனுக்கு வேணும். என்ன மன்னிச்சிருங்க, நான் உங்களுக்காக என்ன வேணுனாலும் பண்றேன். நீங்க மட்டும் சாகாதிங்க. அத என்னால தாங்க முடியாது, உங்கள காப்பாற்ற கூட முடியமா, என் கைகளை கட்டி போட்டுடிங்களே, அதுக்கு நீங்க என்ன கொன்னுருக்கலாமே, என்று அவளின் அடிவயிற்றிலிருந்து கத்தினாள். அவளின் வாய் உட்பட தேகம் கட்டப்பட்டு இருந்ததால், சத்தம் கேட்கவில்லை. சத்தம் போட முடியவில்லை.

அவளின் கண் முன்னே, கமலின் கழுத்து இறுகி, கால்களும் கைகளும் துடி துடிக்க, அவனின் தேகம் வீட்டின் செவுற்றில் அடித்தது. சில வினாடிகளில் கமலின் உயிர், அவன் தேகத்தை விட்டு பிரிந்தது. தன் இழிவான செய்கையால், தன் கண் முன்னே, கணவன் உயிரை மாய்த்து கொண்டதை கண்ட, அவளின் கண்களில் நீர் ஆராய் ஓடியது, அவளின் கண் முன்னே அவன் துடிதுடித்து இறந்தார். இதையெல்லாம் பார்த்த குழந்தை, பயத்தில் அழுதது. குழந்தையின் அழுகுரல் கேட்ட அக்கம் பக்கத்தினர், ரேணுவின் கட்டுக்களை அவிழ்த்து, கமலின் உடலை மீட்டனர். கமல் ஒரு காகிதத்தில் ‘என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை’ என்று எழுதியிருந்தான்.

சில நாட்களுக்கு பிறகு…..

ரேணு “பாண்பாடு… கலாச்சாரம்… உள்ள மண்ணில பொறந்துட்டு, கணவனுக்கே துரோகம் செய்துட்டேனே….” என எண்ணி எண்ணி பைத்தியமானாள்.

குழந்தை அருண் தன் பாட்டி பருவதத்தின் பராமரிப்பில், அவள் வீட்டிலிருந்து படிக்க சென்றான்.

இது போன்று மனிதன் செய்யும் கலாச்சார சீர்கேட்டினால் பாதிக்கப்படும் சில குழந்தைகளே, சமூகத்தின் இளம் குற்றவாளிகளாக உருவெடுகின்றனர்.

ஒரு ஆணாயினும், பெண்ணாயினும் நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பின்பற்றி, ஒழுக்க நெறிகளை கையாண்டு வாழ்ந்தால் மட்டுமே, வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *