கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 25,062 
 
 

கானல் நீர் காட்சிகள்வாட்ஸ்அப் பதிவு : 1

எங்கே இரண்டு நாளா ஆளையே காணோம்” 7.35 PM

“டூர் போயிருந்தேன்” 7.36 PM

“டூரா ! எந்த ஊருக்கு ?” 7.37 PM

“மூணாறு, கேரளா” 7.39 PM

“சொல்லவே இல்லை” 7.40 PM

“சாரி.. திடீர்னு முடிவாயிடுச்சு” 7.42 PM

“பரவாயில்லை, குடும்பம் எல்லாரும் போனீங்களா” 7.44 PM

“இல்ல… ப்ரெண்úஸாட போனேன்” 7.46 PM

“பயங்கர ஜாலிதான், ட்ரிங்க்ஸ்” 7.38 PM

“கொஞ்சம், ரொம்ப கொஞ்சம்” 7.48 PM

“ஏன் குடும்பத்தை கூட்டிப் போகல” 7.51 PM

“அடுத்த வாரம் கூட்டிப் போகணும்” 7.52 PM

“எதுல கூட்டிப் போவீங்க” 7.55 PM

“வீட்ல இனோவா இருக்கு, ஒரு சுவிப்ட் டிசையர் இருக்கு, ரெண்டுலேயும் தான்” 7.57 PM

“நீங்க நான்கு பேரு தானே ?” 7.57 PM

“அண்ணன் குடும்பம் வரும், ஆமா நீங்க எங்கேயும் போகலையா” 7.57 PM

“ம்… நாங்களா ? கூட்டிட்டு போயிட்டுதான் அடுத்த வேலை” 8.00 PM

“அப்படி சொல்லாதீங்க, சார்ட்ட சொல்லுங்க, மே மாத லீவுல குழந்தைங்க என்ஜாய் செய்யுங்க” 8.02 PM

“அட… ஏன் சார்? சரி. பாப்பா டியூசன் முடிச்சிட்டு வந்துட்டா அப்புறமா லைன்ல வர்றேன்” 8.03 PM

“ஓகேம்மா” 8.02 PM

வாட்ஸ் அப் பதிவு : 2

“குட்மார்னிங், குட்மார்னிங் பிக்சர், சூப்பர்” 9.10 AM

“எங்க மேனேஜர் அனுப்பிச்சான், அதான் பார்வர்ட் செய்தேன்” 9.11 AM

“ப்ரொபைல் பிக்சர் மாத்திட்டீங்க போல, சூப்பரா இருக்கீங்க” 9.13 AM

“நேர்ல இன்னும் நல்லாயிருப்பேங்க, ஆனா உங்க அளவு வரமாட்டேன்” 9.13 AM

“ச்சே.. நான் ஒண்ணும் அவ்வளவு அழகில்லை” 9.15 AM

“சும்மா சொல்றீங்க, நீங்க சராசரி அழகில்லை” 9.17 AM

“சொல்லாடல் சூப்பர்” 9.18 AM

“உங்கள் ப்ரொபைல் பிக்சர்ல மயங்கிதானே முகநூல் நண்பரானேன்”. 9.18 AM

“ரொம்ப புகழ்றீங்க சார்” 9.19 AM

“உண்மையச் சொல்றேன்” 9.20 AM

“உண்மையைச் சொன்னா உங்க முகத்துல தெரிஞ்ச கம்பீரம்தான் என்னை வலிய வந்து ரெக்வஸ்ட் செய்ய வைத்தது.” 9.22 AM

“பெரிய பதிவு, கூடுதலான புகழ்ச்சி” 9.23 AM

“உண்மைதான் சார்” 9.24 AM

“தயவு செய்து பதிவுகளை அன்றாடம் அழிச்சிடுங்க” 9.25 AM

“நான் ஒரு பெண். நான் சொல்ல வேண்டியது, யு ஆர் எ ஜென்டில்மேன்.” 9.26 AM

“ஆபிஸ் கிளம்பியாச்சா ?” 9.27 AM

“ஆன் த வே… பஸ்” 9.28 AM

“ஓகே… மதியம் கூப்பிடுறேன்” 9.29 AM

“ஓகே,பை” 9.30 AM

வாட்ஸ் அப் பதிவு : 3

“கவிதை சூப்பர்” 8.45 PM

“சார் நான் எழுதினதில்லை, படித்தது” 8.46 PM

“இருந்தாலும் அழகா பதிவிட்டிருந்தீங்க” 8.48 PM

“எல்லாத்துக்கும் பாராட்டுவீங்களா ?” 8.49 PM

“எல்லாரையும் பாராட்டலாமே . ஒண்ணும் தப்பில்லம்மா” 8.49 PM

“வெறும் வார்த்தைதானே” 8.50 PM

“அதில்லைம்மா, நான் அருகிலில்லை, இல்லைன்னா தினந்தோறும் பரிசளிப்பேன்” 8.51 PM

“ம்… பெரிய கம்பெனி ஓனர். செய்ய வேண்டியதுதான்” 8.52 PM

“பெரிய பணக்காரன் இல்லைன்னாலும் செய்வேன்” 8.53 PM

“என்ன கம்பெனி ?” 8.53 PM

” கிரைண்டர் கம்பெனி” 8.54 PM

“ஒரு நூறுபேர் வேலைப் பார்ப்பாங்களா ?” 8.56 PM

“இருநூற்றி ஐம்பது பேர்” 8.56 PM

“அடேயப்பா, பெரிய கம்பெனிதான்.” 8.57 PM

“அதை விடுங்க, நைட் என்ன டிபன் ?” 8.57 PM

“பூரியும், கிழங்கும். இரண்டும் சாப்பிட்டு அதுங்க ரூமுக்கு போயிடுச்சுங்க..” 8.59 PM

“சார் ?” 8.59 PM

“பேங்க் மேனேஜர், கேம்ப் போயிருக்கார். சேலம்.” 9.01 PM

“எத்தனை நாள் ?” 9.03 PM

“இரண்டு நாள்” 9.04 PM

“ரொம்ப கஷ்டமில்லை உங்களுக்கு ?” 9.04 PM

“அதொண்ணுமில்லை அவங்க இருந்தாலும், இல்லாட்டியும் ஒண்ணுதான்.” 9.06 PM

“ஏன் ?” 9.06 PM

“இங்கே இருந்தா போதையில பத்து மணிக்கு வருவார். ஷூ கூட கழட்டாம பெட்ல விழுந்துடுவார்.” 9.08 PM

“சாரி, உங்கள் சோகங்களை கிளறுறேன்” . 9.08 PM

“இல்லை சார், யார்கிட்டயும் பகிர்ந்துக்கவே முடியல, கடவுள் புண்ணியத்துல நீங்க கிடைச்சீங்க” 9.11 PM

“ஓகே” 9.11 PM

“உங்களுக்கு ஒண்ணும் டிஸ்டர்ப் இல்லையே சார்” 9.13 PM

“நோ.நோ. ஒரேயொரு டிஸ்டர்ப்தான்” 9.14 PM

“என்ன ?” 9.15 PM

“சார் வேணாமே ராஜ்ன்னே கூப்பிடலாமே ?” 9.15 PM

“நீங்க சுதான்னு கூப்பிடறதா இருந்தா. நானும் ராஜ்னு கூப்பிடறேன்.” 9.16PM

“சுதா, சொல்லச் சொல்ல இனிக்குது.” 9.17 PM

“ராஜ், என்னைய இந்த மாதிரி மகிழ்வூட்டியது யாருமே இல்லிங்க” 9.19PM

“ம்… வாழ்க்கையில ஒரே ரசனையுள்ள இரண்டு பேரை ஆண்டவன் இப்படித்தான் பிரிச்சுப் போடறான்.” 9.20 PM

“உங்க மனைவியும் படத்துல அழகாய்த்தானே இருக்காங்க.” 9.21 PM

“அவளும் சுமாரான அழகுதான். ஆனா என்னை மாதிரி பிஸினஸ்ல இருக்கறவங்களுக்கு வீட்டுக்குப் போனா ரிலாக்ஸ் வேணும். ஆனா கிடைக்காது. புகார் பட்டியல்தான் நீளும். சாரி, நீளமான பதிவு” 9.24 PM

“அது ஒண்ணும் பிரச்சனையில்லை. ஆனா ரொம்ப வேகமா பதிவிடுறீங்க” 9.26 PM

“நன்றி, சாப்பீட்டிங்களா ?” 9.27 PM

“இன்னும் இல்லை ராஜ். சாப்பிடவே பிடிக்கல” 9.29 PM

“சார் இல்லாம கஷ்டமா இருக்கா ?” 9.30 PM

“நீங்க வேறங்க. அவரு இல்லைன்னாதான் ஃபுல்லா சாப்பிடுவேன். நல்லா தூங்குவேன்.” 9.32 PM

“அப்புறமென்ன” 9.32 PM

“என்னமோ தெரியல. ஆபீஸ்லயும் நிம்மதியில்லை.” 9.33 PM

“………………………” 9.34 PM

“பதிவுல இருக்கீங்களா ?” 9.36 PM

“இருக்கேன்மா, உங்க சோகங்களை கிளறிவிட்டு வேதனைப்படுத்தறேனோன்னு வருத்தப்படறேன்.” 9.38 PM

“அட நீங்க வேற ராஜ்… உங்கள்கிட்ட பரிமாறிக்கிட்ட பின்னாலதான் ஓரளவு ரிலாக்ஸா இருக்கேன். என் சோகம் சொல்லி உங்களைத்தான் ரொம்ப டிஸ்டர்ப் பண்றேன்.” 9.41 PM

“ச்சே அதெல்லாம்மில்லை. நீங்க வாங்கற சம்பளத்துல என்கிட்ட பத்து பேரு வேலை பார்க்கிறான். நீங்க எனக்கு பக்கத்து ஊரா இருந்தா இதைவிட நல்ல போஸ்ட்ல உங்கள அமர்த்தி எங்கூடவே வச்சிருப்பேன்” 9.45 PM

“அதாவது வச்சிப்பீங்க அப்படித்தானே ?” 9.47 PM

“ஐய்யையோ, நான் அந்த அர்த்தத்திலே சொல்லலீங்க. மன்னிச்சுடுங்க.” 9.48PM

“ச்சே, சும்மா தமாஷ், இந்த பதறு பதறுறீங்க”

9.50 PM

“பயந்துட்டேங்க சுதா” 9.51 PM

“அப்படி வச்சுகிட்டாலும் சந்தோஷம்தாங்க” 9.52 PM

“என்னங்க சுதா இப்படியெல்லாம் பேசறீங்க ?”

9.53 PM

“ஏன் ராஜ்… நான் விரும்பக்கூடதா” 9.54 PM

“இல்லை, சார் பிள்ளைங்க” 9.54 PM

“இப்படி பார்த்துதான் நடை பிணமாக வாழ்ந்துட்டுருக்கேன் ராஜ்” 9.55 PM

“இரவு, தனியாருக்கீங்க, நாளைக்கு பேசலாம், குட்நைட் பை.” 9.57 PM

“இல்ல ராஜ் பேசுங்க, நான் அப்படி விரும்பக் கூடாதா” 9.57 PM

“வேணாம், சுதா நானும் மனசுல இருக்கிறதக் கொட்டிருவேன்” 9.59 PM

“அப்ப ஏதோ மறைக்கிறீங்க” 10.02 PM

“சரி நாம் சாட் செய்து எத்தனை நாள்

ஆகியிருக்கும் ?” 10.04 PM

“அதாவது பார்க்காமலேயே பழகுறோமே எத்தனை நாள் ஆச்சுன்னு கேட்கறீங்க” 10.06 PM

“ஆமா” 10.06 PM

“என்ன ஒரு பத்து நாள் இருக்குமா ?” 10.07 PM

“இன்னையோட பதினொரு நாள்” 10.08 PM

“ரைட் அதுக்கும் நீங்க எதையோ மறைக்கறதுக்கும் என்ன சம்பந்தம் ?” 10.09PM

“ஒண்ணுமில்லை என் மனைவி என் கனவுகளுக்கு ஏற்ற உருவமில்லை. நான் இளமையில் கற்பனை பண்ணியிருந்த, வாழ விரும்பிய உருவம் அவ இல்லை. அது அத்தனையும் உங்கள்ட்டதான் பார்த்தேன்.” 10.12 PM

“எங்கிட்டயா ?” 10.13 PM

“ஆமா. என் கற்பனை மனைவியோட கண், காது, அந்த உதடுகள், நெற்றிமேடு எல்லாமே உங்கள்கிட்டதான் பார்த்தேன்.” 10.15 PM

“ஏன் ராஜ் உங்கள் வயதென்ன” 10.16 PM

“எதுக்கு சுதா திடீர்னு ?” 10.17 PM

“சும்மா சொல்லுங்க” 10.18 PM

“முப்பத்தியெட்டு” 10.19 PM

“பரவாயில்லை. என்னை விட ஒன்றரை வயது தான் மூத்தவர்தான்.” 10.21PM

“புரியல. இதெல்லாம் ஏன் சொல்றீங்க ?” 10.24 PM

“பயப்படாதீங்க ராஜ்… உங்களை என்னைக் கட்டிக்க சொல்லல” 10.24 PM

“இன்னும் புரியல” 10.25 PM

“பெரிய பணக்காரர். அழகானவர். கம்பீரமானவர். இன்னொரு பெண்ணா பிடித்த மாதிரி கட்டிக்க வேண்டியதுதானே ?” 10.27 PM

“என்னை நேர்லே பார்க்காமலேயே இவ்வளவு புகழ்றீங்க. பரவயில்லை. நீங்க சொன்னதுல ஒரு எண்பது சதவீதமாவது உண்மைதான்.” 10.28 PM

“அப்பறம் என்ன பொண்ணுப் பார்ப்போமா ?” 10.28 PM

“சுதா மாதிரி அழகாக் கூடப் பிடிக்கலாம். ஆனால் இந்த அன்பு பண்பு இருக்குமா ?” 10.29 PM

“என்னைப் பண்பானவள்னு சொல்றீங்களா ? இன்னொருத்தர் மனைவி இன்னொருத்தர்கிட்ட இவ்வளவு அந்தரங்கமா பேசறேன்.” 10.31 PM

“அதனாலென்ன நாம எந்த தப்பும் பண்ணலேயே ?” 10.32 PM

“நான் தப்பானவ இல்லையே ராஜ் ?” 10.33 PM

“நிச்சயமா இல்லம்மா, சாப்பிடு” 10.34 PM

“என்னைய வெறுத்துட மாட்டீங்களே” 10.34 PM

“நிச்சயமாடா. உன்னை வெறுப்பேனா ?” 10.36 PM

“ராஜ்” 10.37′ PM

“ம்” 10.38′ PM

“ராஜ்” 10.39′ PM

“என்ன” 10.40′ PM

“ராஜ்” 10.41′ PM

” என்னடி” 10.42′ PM

“தனியாவே படுக்க முடியலப்பா” 10.43 PM

“சாப்பிட்டுத் தூங்கும்மா” 10.44 PM

“கனவுல வர்றியா” 10.45 PM

“வர்றேன்” 10.46 PM

“வந்து கட்டிக்கறியா ?” 10.47 PM

” ம் கட்டிக்கிறேன்.” 10.48 PM

“தப்பாப் பேசுறேனா ?” 10.49 PM

“இல்லை சுதா” 10.50 PM

“என்னை தப்பானவளா நினைப்பியா?” 10.51 PM

“இல்ல சுதா” 10.52 PM

“இறுக்கிக் கட்டிப்பியா ?” 10.53 PM

” ம்” 10.54 PM

“அப்புறம்” 10.55 PM

“தோள்ல சாய்ச்சுப்பேன்” 10.56 PM

“ம் அப்புறம்” 10.57 PM

“கூந்தலைக் கோதிவிடுவேன்” 10.58 PM

“எனக்கு அவ்வளவு முடியில்லை ராஜ்” 10.59 PM

“கன்னத்தில் முத்தமிடுவேன்” 11.00 PM

“அப்புறம்” 11.01 PM

“அவ்வளவுதான நம்ம எல்லை” 11.02PM

“ஏன்?” 11.03PM

“போதும்மா உடல்ரீதியான உறவு தவறாப் போகும் சுதா” 11.03 PM

“நீங்க ஒரு ஜெம் ராஜ்… உங்களப் பார்க்கணுமே ?” 11.04 PM

“அது ஒண்ணும் பிரச்சனையில்லை. ஆனா நேர்ல பார்த்தா சுவாரஸ்யம் கெட்டிருமோன்னு பயப்படறேன்.” 11.04 PM

“இல்ல, ஒரு தடவை ஒரே ஒரு தடவை பார்த்தாப் போதும்பா” 11.03PM

“ம்.. ஓகே சீக்கீரம் உங்க ஊருக்கு வர்றேன், பொது இடத்தில பார்ப்போம். ஓ.கே.” 11.05 PM

“தாங்க்ஸ் ராஜ்” 11.05 PM

“இப்பவாவாது சாப்பிடுங்க மணி 11 ஆகுது.” 11PM

“குட்நைட்” 11.06 PM

“குட்நைட் ராஜ்” 11.06 PM

வாட்ஸ் அப் பதிவு : 4

“ஹலோ இருக்கீங்களா ?” 8.10 PM

“ம். இருக்கேன்” 9.15 PM

“என்னாச்சு ?” 9.16 PM

“சண்டை. எனக்கும் அவருக்கும்” 9.17 PM

“ஏம்மா ?” 9.17 PM

“ஊர் சுத்தறது. குடிக்கிறது. இப்ப சந்தேகம் வேற” 9.17 PM

“சந்தேகமா ?” 9.18 PM

“ஆமாம் ராஜ் காரணமேயில்லாமல் சந்தேகப்படறார். அவன வச்சுருக்கேன். இவன வச்சுருக்கேன்கிறார்” 9.19 PM

“பெரிய சண்டையா ?” 9.20PM

“அடிச்சார். போனை பிடுங்கி உடைச்சிட்டார். அதான் உங்களோட சாட் கூட பண்ண முடியல.” 9.21 PM

“இப்ப போன் வாங்கீட்டிங்களா” 9.21 PM

“ம்.. வாங்கிட்டேன். அவர்தான் வாங்கி தந்தார்.” 9.22 PM

“ஓகே. நாளைப் பேசவா ?” 9.23 PM

“ஆமாம் ராஜ். எனக்கும் ஒரே தலைவலி” 9.25 PM

“குட்நைட்” 9.27 PM

“குட்நைட் ராஜ்” 9.28 PM

வாட்ஸ் அப் பதிவு – 5

“ஹலோ” 8.44 PM

“ஹலோ சுதா ஆன்லைன்ல இருக்கீங்களா ?” 9.10 PM

“சுதா” 9.12 PM

“சுதா” 9.12 PM

“ம்… இருக்கேன்.” 9.15 PM

“தொந்தரவு பண்ணிட்டேனா” 9.16 PM

“ம்..” 9.16 PM

“என்னப் பண்ணிட்டு இருக்கீங்க ?” 9.17 PM

“அழுதுட்டு இருக்கேன்.” 9.19 PM

“அழுகுறீங்களா ஐயோ ஏன் ?” 9.20 PM

“பின்னே அடிக்கிறார். போதை… என்ன பண்றது ?” 9.31 PM

“வெரி சாரி சுதா. நான் நாளைக்கு பேசவா?” 9.32 PM

“வேண்டாம் ராஜ். தாலியக் கூட கழட்டி எறிஞ்சிட்டேன்” 9.33 PM

“ச்சே. அதெல்லாம் தப்பு” 9.34 PM

“முடியல ராஜ். உங்கள மாதிரி பண்புள்ளவர் எனக்கு அமையக்கூடாது ?” 9.35 PM

“அப்படியெல்லாம் யோசிக்காதீங்க” 9.36 PM

“இல்ல. ராஜ் உங்களோட சாட் பண்ணதுக்கு அப்புறம்தான் நான் எவ்வளவு இழந்துருக்கேன்று தெரியுது.” 9.37 PM

“அமைதியாயிருங்க. பை தி பை நாளை மறுநாள் நான் உங்க ஊருக்கு வர்றேன்.” 9.38 PM

“மை காட், வாட் எ சர்பைரஸ் எங்கே வரட்டும் ?” 9.40 PM

“உங்க ஊருக்கு பக்கத்துல முருகமலைன்னு ஒரு கோயில் இருக்காம்ல?” 9.42PM

“ஆமாம் என்னோட பேவரைட் கோயில்தான் அது” 9.43 PM

“அங்கேதான் வர்றேன்” 9.45PM

“பேமிலி ?” 9.47 PM

“நான் மட்டும்தான். ஒரு தோஷம் கழிக்கணும்.” 9.48 PM

“ரொம்ப நன்றி, எனக்கு ஒரு பத்து நிமிம் ஒதுக்குவீங்களா ?” 9.49 PM

“அரை நாள் உங்க கூட தான்.” 9.50 PM

“தாங்க் காட், அந்த கோயில்ல குருக்கள்ல இருந்தது. தேங்காய் கடைக்காரன் வரை நல்லா தெரிஞ்சவங்கதான்.” 9.51”PM

“ரொம்ப நல்லதாப் போச்சு. ஆமா யாருன்னு சொல்வீங்க ?” 9.52 PM

“என்னோட மாமான்னு.” 9.53 PM

“தாய் மாமனா ? முறை மாமனா ?” 9.53 PM

“எனக்கே எனக்கான மாமான்னு” 9.54 PM

“அப்புறம் சுதா ரெண்டு நாள் சாட் பண்ண முடியாது.” 9.55 PM

“ஏன் ராஜ் ?” 9.57 PM

“கம்பெனி ஆடிட்டிங் நகர முடியாது.” 9.57 PM

“ஓகே ராஜ் கோயிலுக்கு வர்ற அன்னிக்கு காலையில சாட் பண்ணுவீங்கள்ல ?” 9.58 PM

“நிச்சயமா” 9.59 PM

“எதுல வருவீங்க ?” 10.00 PM

“சாரி, உங்ககிட்ட சொல்லல, ஆடிகார் ஒண்ணு

எடுத்துருக்கேன். அதுல நான் மட்டும்தான் வர்றேன்.” 10.02 PM

“சூப்பர் ராஜ் ஆடிகார தொட்டுப் பார்த்தது கூட இல்லீங்க” 10.02 PM

“மகாராணி மாதிரி முன் சீட்டுல உட்காரவெச்சு ஊரு சுத்தப் போறேன்.” 10.03PM

“ராஜ்” 10.04 PM

“சொல்லுங்க” 10.05 PM

“ராஜ்” 10.06 PM

“ம்ம்ம்…” 10.07 PM

“ஐ லவ் யூ” 10.08 PM

“லவ் யூ… புதன்கிழமைப் பார்ப்போம்” 10.09 PM

“காதலோடு காத்திருக்கேன்” 10.11 PM

“சரி மனநிலை மாறிடுச்சா ?” 10.13 PM

“மாத்திட்டீங்க, தாங்க்ஸ்” 10.15 PM

“அழக்கூடாது, குட் நைட்” 10.17 PM

“அழமாட்டேன், கனவுல வாங்க. குட்நைட்” 10.17 PM

புதன்கிழமையும் ராஜ் வாட்ஸ் அப் சாட்டில் வரவில்லை சுதா குழம்பினாள்.

ஆபிஸ் போவதா ? கோயிலுக்குப் போவதா ? ராஜ் ஏறக்குறைய முன்னூறு கிலோ மீட்டர் வரணும். புதுக்கார். வழியில டவர் இருக்கிறதோ, இல்லையோ கோயிலுக்கே போவோம் என முடிவெடுத்தாள்.

சற்று கூடுதலாகவே அலங்கரித்துக் கொண்டாள்.

எப்போதும் ஏறெடுத்துப் பார்க்காத அவள் கணவனே சற்று நின்று அவளைப் பார்த்துவிட்டு வங்கிக்கு கிளம்பிப் போனான்.

தன் ஸ்கூட்டியில் சரியாக ஒன்பதரைக்கெல்லாம் அந்த சிறுகுன்றில் முருகன் குடியிருக்கும் முருகமலையின் அடிவாரத்தை அடைந்தாள்.

“வாங்கம்மா என்ன இன்னைக்கு ஆபீஸ் போகலையா ?” அடிவாரத்தில் தேங்காய் கடைக்காரன் சற்று இளிப்போடு வரவேற்றான்.

இவன் வேற எப்பப் பார்த்ததாலும் ஈய்ய்ன்னு இளிப்பான்.

“இல்லீங்க எங்க மாமா கோயிலுக்கு வர்றேன்னார் அதான்” சற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு சில இருசக்கர வாகனங்கள்தான் நின்றன.

“உட்காருறீங்களாம்மா ?” – என்றபடி கடை உள்ளிருந்து சிறு ஸ்டூலை எடுக்க,

“வேண்டாம் மேலே வெயிட் பண்றேன்” என்றபடி படி ஏறினாள்.

ஆச்சு. முருகனை மூன்று முறை வணங்கியாச்சு. கடிகாரத்தில் முட்கள் முனகியபடியே மணி பதினொன்றை நெருங்க, சலித்துப் போனாள்.

நூறு தடவையாவது அலைபேசியை எடுத்துப் பார்த்திருப்பாள். அந்த பக்கம் அழைக்கவே இல்லை.

போன் செய்து பார்த்தால் என்ன என மனதில்

உதிக்க, தயக்கம் திரை போட்டது.

“எக்காரணம் கொண்டும் போன் செய்யாதீங்க, போன் அவ கையிலோ பிள்ளைங்க கையிலோ இருந்தா தொலைஞ்சேன்” என்ற ராஜின் வேண்டுகோள் நினைவூட்டி எச்சரிக்க, இனி காத்திருந்தால் குருக்களே தவறாய் எண்ணிவிடுவார் என்றெண்ணி, படிகளில் இறங்கத் தொடங்கினாள்.

“என்னம்மா, மாமா வரலையா?” – தேங்காய் கடைக்காரன் குரல் கூடுதலாய் ஒலித்தது.

“சனியன் இவன் முகத்துல முழிச்சா என்ன நடக்கும். இவனும் இவன் ட்ரெஸ்ஸýம்’ என்றெண்ணியபடி வண்டியை நெருங்கியவாறே,

“இல்லங்க. வீட்ல இருக்காராம். சாயந்திரம் கூட்டிட்டு வர்றேன்”

“பெரிய மாலையா கட்டி வைக்கவா ?”

“ம்” என்றவள் வண்டியை கிளப்பினாள்.

பாதிதூரம் சென்றிருப்பாள், அலைபேசி ஏதோ இரைய லாகவமாய் வண்டியை நிறுத்தி அலைபேசியை உயிர்ப்பித்தாள்.

ராஜின் பதிவு பளிச்சிட்டது.

“சாரி டியர்” 11.32 AM

“என்னாச்சு, எவ்வளவு நேரம் காத்திருப்பது ?” 11.33 AM

“சாரி, சாரி வர்ற வழியில ஒரு ஆக்ஸிடெண்ட்” 11.34 AM

“ஐயோ, என்னாச்சு ?” 11.34 AM

“எனக் கொண்ணுமில்லை வண்டிதான் மரத்துல மோதி கொஞ்சம் அடிப்பட்டிருச்சு” 11.35 AM

“ரொம்ப அடியா” 11.36 AM

“அதொண்ணுமில்லை இன்சூரன்ஸ் கிளைம் பண்ணிக்கலாம். உங்களைக் காக்க வெச்சதுதான் உறுத்துது.” 11.38 AM

“பரவாயில்லைங்க நீங்க சேஃப்டியா வீட்டுக்குப் போங்க.” 11.39 AM

“சாரி… சுதா கோபமில்லையே ?” 11.40 AM

“ச்சே, அதொண்ணுமில்ல நீங்க ரெஸ்ட் எடுங்க, நைட் சாட் பண்ட்றேன்.” 11.41 AM

“ஓக்கேம்மா” 11.41 AM

என்றபடி துண்டிக்கப்பட, சுதா வீட்டிற்கு விரைந்தாள்.

கோவிந்தராஜ் என்ற ராஜ் என அழைக்கப்படும் அந்த தேங்காய்க் கடைக்காரன் அலைபேசியை அணைத்து அவனது கால்சட்டைப் பையில் போட்டு கொண்டு கடையில் அமர்ந்தான்.

இரவிற்காய் காத்திருக்கத் தொடங்கினான்.

– எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.50,000 பெறும் சிறுகதை (பெப்ரவரி 2018)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *