காந்திபுரத்து ராமுக்கண்ணு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 20,542 
 
 

ஆச்சர்யம் பூக்க அந்தச் சிறுவனை மீண்டும் பார்த்தேன்.

சைக்கிள் கேரியரில் அனசலாக இருந்த டீ கிளாஸ் சாய்ந்துவிடாமல் கவனமாக இருந்தான். ‘பன்’னைப் பிய்த்து மெதுவாக டீயில் நனைத்துத் தின்று கொண்டே பேசினான். சாமியார் மாதிரி பேச்சு-உலகத்தின் எந்தப் கஷ்டமும் இனி அவனை எதுவும் செய்து விட முடியாதது போல!

திரும்பவும் – மறந்து போன மாதிரி கேட்டேன்: “ஆமா உம் பேரென்ன சொன்னே? நிமிர்ந்து ஒரு தரம் தலையைச் சாய்த்துப் பார்த்துவிட்டுச் சொன்னான்: “ராமுக்கண்ணு எம்.பி.பி.எஸ்.”

நனைந்த ‘பன்’னிலிருந்து டீ வழிந்து விடாமல் வெடுக்கென்று வாய்க்குள் தள்ளிக் கொண்டான்.

பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். அதையும் குறைத்துக் காட்டும் வாடிய முகம். பிறந்த போது உச்சந்தலையில் எண்ணெய் வைத்திருப்பார்கள் போல அலரி அடங்கிக் கிடந்த செம்பட்டை முடி. இந்த வயதிலேயே பழகிவிட்ட சாராயத்தால் பெருத்திருந்த கண்கள். வரிச்செலும்பு துருத்திய மார்புக் கூடு. வயசை மீறி ஊதிய வயிறு. சுமையற்கட்டுக் கைப்பிடித் துணிபோலக் கசங்கிக் கனமேறிப் பின்புறம் நைந்து கிடந்த டிரவுசரில் ஒரு பட்டன் கூட இல்லை. இறுக்கி முடிச்சுப் போட்டிருந்தான்.

ஏழாம் வகுப்பில் எனக்குப் பாடம் கிடையாது. காலையில் முதல் பீரியட் முடிந்தவுடன் இவனைப் பார்க்கப் போன போதுதான் இவன் வரவில்லை என்று பையன்கள் சொன்னார்கள்.

“சார்! எம்.பி.பி.எஸ். ஸோட தாத்தா செத்துப் போயிட்டாரு சார்.”

“இல்ல சார்! அவனை நா வர்றப்பக் கூட சாராயக் கடையிலே பார்த்தேன் சார்! மீனு வித்துக்கிட்டிருந்தான் சார்.”

“லே! ஓவ்வொருத்தனாச் சொல்லு! தாத்தா செத்துப் போயிட்டாரா. எப்படா?”

“ஆமா சார். நீங்க சொன்னதிலேர்ந்து ரெண்டு மூணு நா ஒழுங்காத்தான் சார் வந்துகிட்டிருந்தான். நேத்து ராத்திரி அவுங்க தாத்தா செத்துப் போயிட்டாரு சார். இனிமே பள்ளிக் கூடத்துக்கு வரமாட்டானாம் சார். எட்டாம்ப்பு செயாவைக் கேட்டுப் பாருங்க சார்?”

பையன்கள் அவனவனுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லி அதை உறுதிப்படுத்துவதில் குறியாயிருந்தார்கள்.

எனக்குள் குற்ற உணர்ச்சி மௌ;ளப் பரவியது.

முன் நெற்றி அரித்தது.

‘இவனை மீண்டும் கவனிக்காமல் விட்டு விட்டோமே?…’
ஆனால் இந்த ஸ்கூலுக்குமாற்றி வந்ததிலிருந்து எனக்கு ஆச்சரியமாகவும் அவமானமாகவும் பட்டதெல்லாம் இங்கு சர்வ சாதாரணமாகவே இருந்தது! எனக்கே பயமாகவும் இருந்தது!

தஞ்சாவூர் நகர எல்லையைத் தொட்டுக் கொண்டு இருந்தது அந்தக் காந்திபுரம். அந்தப் பக்கம் நகரம். இந்தப் பக்கம் புதுக்கோட்டை ரோட்டைத் தொடும் புஞ்சைக் காட்டுப் பகுதி. காவிரியில் தண்ணீர் வந்த அந்தக் காலத்திலேயே இது வானம் பார்த்த சீமைதான்.

இப்போது ரெண்டுங்கெட்ட பிழைப்பு. ஆலாய்ப் பறக்கும் சேரி ஜனங்கள். சாராய ஊறலை நம்பிப் பல குடும்பங்கள். வேறு வேலைக்கு வழியில்லாத வாலிபர்கள் அடியாள் வேலைக்கு பழக்கப்பட்டிருந்தார்கள். தற்காலிக சம்பாத்தியத்துக்காக முந்திரிக் காட்டுக்குப் போய்வரும் பாவப்பட்ட பெண்கள். பெரும்பாலும் மத்தியான சாப்பாட்டுக்காகவே பள்ளிக்கூடம் வரும் பிள்ளைகள். பழகிப் பார்த்த போதுதான் ஃபார்மாலிடி அறியாத பால்மனசுகள்…. பாசத்துக்கு ஏங்குவது புரிந்தது.

பள்ளிக்கூட நாளிலேயே மத்தியானச் சாப்பாடு முடிந்ததும் சின்னச் சின்ன வேலைகளுக்குப் போய் விடும் பையன்களைப் பார்க்க நமது சுய ஆற்றாமை மேலெழும்பும். அரசாங்கம் ஆசிரியர் சங்கங்கள் அந்தப் பகுதிப் பெரியவர்கள் யாருக்குமே இது பற்றி அக்கறையில்லையோ என்று கோபம் கோபமாக வரும்.

நான் இங்கு வந்த புதிதில் எட்டாம் வகுப்பில் ஒருத்தன் சாராய வாடையோடு இருந்ததை விசாரிக்கப் போய் ஆறாம் வகுப்பிலேயே அது சர்வ சாதாரணம்தான் என்பது தெரிந்தது. போன மாதம் கக்கூஸிருந்து ‘வெள்ளை பலூன்’ ஒன்று கிடந்து பயல்கள் எடுத்து விளையாடியதை அதட்டப் போய் அதை முதல் நாள் ‘பத்தாம் வகுப்பு சாமித் துரையின் புஸ்தக மூட்டையில் பார்த்ததாக’ ஒருவன் சொன்னான்!

ஒவ்வொன்றும் முகத்தில் அறை விழுந்த நிகழ்ச்சிகள். போனவாரம் ஏழாம்வகுப்பில் அட்டெண்டென்ஸ் எடுத்தபோது “ராமுக்கண்ணு ஏன் வரலை? அடிக்கடி வரமாட்டான் போலிருக்கு?” என்று கேட்டதற்குப் பையன்கள் சொன்ன பதில் ஒவ்வொன்றும் மதுரைச் சொக்கநாதருக்கு விழுந்த அடி போல – யார் யாருக்கோ மனசு வலிக்க விழுந்திருக்க வேண்டிய அடிகள் – என் மீது விழுந்தது.

“சார்! அவன் சந்தைக்குப் போயிருப்பான் சார்.”

“இல்ல சார்! சந்தையில பேப்பர் பொறுக்கிக் கொண்டாந்து கடையில போட்டுக் காசு வாங்குவான் சார்.”

“செவ்வாக்கிளமெ-சந்தை அன்னிக்கு-அவன் வர மாட்டான் சார்!”

“மத்த நாள்லயும் சாராயக் கடையில சாக்னா வித்துகிட்டுருப்பான் சார். எப்பயாச்சும் மத்தியானச் சோத்துக்கு மட்டும் பள்ளிக்கூடத்துக்கு வந்துருவான் சார்;.”

ரெண்டு நாள் கழித்து அவன் வந்தபோது பார்த்தேன். பழுப்பேறிக் கசங்கி-அடுக்குப் பானையிலிருந்து சுருட்டி மடக்கி எடுத்தது போல் இருந்த ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருந்தான். பழைய மஞ்சள் பை ஒன்றில் ஒரு நோட்டோ புத்தகமோ இருந்திருக்க வேண்டும்.

எஸ்.சி. எஸ்.டி.க்கென்று இலவசப் புத்தகம் தருவார்கள் என்பதால் பெரும்பாலானவர்கள் இங்கு ரெண்டு மூன்று மாதங்களுக்குப் புத்தகமில்லாமல்தான் இருப்பார்கள். அந்தப் புத்தகமும் பள்ளிக் கூடம் திறந்து நாலைந்து மாதம் கழித்துத் தான் வரும். அதுவும் இவன் ஒழுங்காய் வராததால் கிடைத்திருக்காது.

ஸ்டாஃப் ரூமில் தயக்கமில்லாமல் அருகில் வந்து குனிந்து கொண்டே “சார்! சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்டதும் எங்க தாத்தா ஒங்கள வந்து பாக்குறம்ணு சொல்லச் சொல்லிச்சு சார்…” என்று சொல்லி விட்டு நிமிர்ந்து பார்த்த போது லேசாகச் சிரித்த மாதிரி தெரிந்தது.

“அட எண்ணெ தடவாட்டியும் தலையச் சீவியிருக்கிற மாதிரி தெரியுதே! வெரி குட்! சரி.. எதுக்குத் தாத்தா வர்றாராமா! சரி நீ போ கிளாசுக்குப் போய்விட்டுச் சாயந்தரம் மணி அடிச்சதும் என்னைப் பாத்துட்டுப் போகணும் என்ன?”

மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் ராமுக்கண்ணு ஓடி வந்தான். கூடக் கிளம்பிய ஆசிரியர்களிடம் நான் கொஞ்சம் பின்னால் வருவதாகச் சொல்லி அனுப்பி விட்டு ராமுக்கண்ணுவுடன் ரோட்டுக்கு வந்து அருகில் இருந்த பெட்டிக் கடையில் சிகரெட் ஒன்று வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டே இவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.

தாத்தாதான் யார் கேட்டாலும் ‘ராமுக்கண்ணு எம்.பி.பி.எஸ். என்று சொல்லச் சொல்லியிருந்தாராம். ஏன் என்று இவனுக்குத் தெரியாதாம். தாத்தாவுக்கு மாதம் அம்பது ரூவா ‘பிஞ்சினு’வருதாம். இப்ப ரொம்ப வயசாயிருச்சாம். தேவர் வீட்டுக் கொட்டகையிலதான் இருக்காங்களாம்.

“வணக்கமுங்க.உங்களைப்பத்திப் பசங்க சொல்லிக்கிட்டேயிருக்கும்..”

“வணக்கம். வாங்கய்யா அந்தக் கட்டையில உக்காருவம்”என்று தாத்தாவிடம் இயல்பாகவே பேசத் தொடங்கினேன்.

“அது ஏன் பேரு கூட எம்.பி.பி.எஸ்.னு சேத்துச் சொல்றான்?நீங்கதான் அப்படிச் சொல்லச் சொன்னீங்கங்றான்!”

பாவமாக ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினார். ‘பெருமூச்சு விட்டிருக்க வேண்டும். லேசாக நடுக்கம் கண்ட தேகம். உழைத்துக் கருத்துச் சுருங்கிய உடம்பு. சுக்கு போல இரும்பாக ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும்.

“இவனோட பாட்டி ரொம்ப நா சீக்காளியாகக் கெடந்தா. ஆசுபத்திரி கூடக் கொண்டு போய்க் காம்பிக்க முடியல. இந்தப் பய ஒரு நா சொன்னான்: ‘தாத்தா நா பெரிய படிப்புப் படிச்சு அப்பத்தாவுக்கு வைத்தியம் பாக்குறன் தாத்தாவ்’னு. அந்தச் சந்தோசத்துல ரெண்டு நா கெடந்துட்டு கண்ண மூடிட்டா மவராசி. ரெண்டு வருசமாச்சி அப்ப ஏதோ வேகத்துல இவன எப்பிடியாவது ‘டாக்குட்டருக்கு’ படிக்க வைக்கணும்னு ஒரு வெறி. எங்க எசமான் ஒருத்தரு தெய்வம் மாதிரி இருந்து இவன் படிப்புக்கெல்லாம் ஒதவுறம்னு சொல்லியிருந்தாரு. அவரும் போன வருசமே பொக்குனு போயிட்டாரு…ஹ_ம்…”

“அப்பா இல்லியா?”

“இருக்கான். வெருவாக்கெட்ட பய. எங்கிட்டோ தஞ்சாவூர்ல ரிக்சா ஓட்டிக்கிட்டு எவளோடயோ இருக்கானாம். இவன் ஆயி பாவம்! நல்ல சாதியில பொறந்து இவன்ட்ட வந்து…கொஞ்ச நா நல்லாத் தான் இருந்தாவ. அவன் அப்படிப் போனான். இவளும் அப்பிடி இப்பிடி இருந்து பாத்துட்டு இப்ப புதுக்கோட்டைலதான் எங்கியோ இருக்காளாம். இவந்தான் இங்கிட்டே கெடந்து என்னோட சீப்படுறான்…

“தொயந்து படிக்க வைக்கிணும்னுதான் பாத்தேன். இவனுக்கும் படிப்புன்னா அம்புட்டு ஆச. இப்ப ஒரு வருசமா எனக்கும் ஒடம்புக்கு முடிய மாட்டேங்கிது. நடக்கவே சீவனில்ல. ரெண்டு வவுத்துக்கு ஒரு வளியும் தெரியல. இந்த வயசிலயே எங்கெங்கயோ போறான். என்னான்னமோ லோல்பட்டு அரை வவுத்துக்குப் பாத்துக்கக் கத்துக்கிட்டான். நீங்கதான் மவராசன் – அவனுக்கு ஒரு வளியக் காட்டணும். தெய்வத்துக்கிட்ட சொல்ற மாதிரி ஒங்ககிட்டச் சொல்லிக்கிறேன். நா இன்னம் எத்தினி நாளோதெரியல”

மூச்சு வாங்கியது. கண் மூடி மூடித் திறந்தார்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன்.

இவனுக்கு உதவித் தொகை வாங்கித் தரலாம் என்றால் இவன் தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்க வேண்டும். தொடர்ந்து வர வேண்டும் என்றால் சாப்பாட்டுக்கு? எனக்கு ராத்திரியெல்லாம் தூக்கமில்லை.

அடுத்த நாள் அந்த ஊர்ப் பெரியவர் ஒருவரைப் பார்த்து ஒரு செட் புத்தகமும் நோட்டும் கேட்டேன். பேனாவோடு சேர்த்து வாங்கிக் கொடுத்தார். நான் ஒரு தட்டும் பையும் வாங்கி அவர் மூலமாகவே கொடுத்தேன்.

இரண்டு மூன்று நாள் ஒழுங்காக வந்து கொண்டிருந்தான்.

நேற்று – சந்தை – திரும்பவும் காணாமல் போய் விட்டான்.

பள்ளிக்கூடம் விட்டதும் சந்தைப் பக்கம் போனேன். மேல் சட்டை இல்லாமல் கிழிந்த டவுசரோடும் குழிவிழுந்த கண்களோடும்..சாக்கு மூட்டை இரண்டு கால்களுக்கிடையில் நின்றது. முக்கால் சாக்கு பேப்பர்.

சுருங்கிய முகம் எனக்கே இங்கு வந்து இப்படி இவனைப் பாத்திருக்கவேண்டாம் போலத் தோன்றியது.

சைக்கிளை நிறுத்தி அருகில் போனேன்.

“இந்தப் பேப்பரைப் போட்டு என்ன செய்யப் போறே?”

பேசாமல் இருந்தான். என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து என் பழைய சைக்கிளைப் பார்த்தான். அக்கம் பக்கம் கிடந்த பேப்பர்களில் கண் ஓடியது. சுத்தி சந்தைக் கூட்டம். சந்தைக்கே உரிய கலந்துகட்டியான இரைச்சல். எரிச்சலாக வந்தது எனக்கு.

மீண்டும் அவனுக்கு மட்டும் கேட்பது போல் கேட்டேன்:

“சொல்றா என்ன பண்ணப் போறே?”

மெதுவான குரலில் குனிந்து கொண்டே சொன்னான்:

“சட்டையில்லன்னு எல்லாரும் கிண்டலடிக்கிறாங்க…”நிமிர்ந்து பார்த்து விட்டு அவசரமாக வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.

“சரி வா” என்று கூறித் திரும்பினேன். அவன் வருவது போல் இல்லை.

“…ந்தா. அங்கெ சட்டை விக்கிறாங்க.” கொஞ்சம் தள்ளிக் கை காட்டினான். பையைத் தடவிப் பார்த்தேன். எனக்கே என் மீது எரிச்சல் வந்தது.

“சந்தையில வாங்க வேணாம். உனக்கு நா சட்டை வாங்கித் தாரேன்… பேசாம வா.”

“இல்ல சார். அங்கிட்டுப் பளைய சட்டையெல்லாம் விக்கிறாங்க. மீனு வித்து மூணர் ரூவா வச்சிருக்கேன். இந்தப் பேப்பரைப் போட்டா…” முடிக்காமல் முன்னே போனான். விறுவிறுவென்ற நடை.

சந்தையின் ஒரு பக்கத்தில் பழைய சட்டைத்துணிகள் வியாபாரம். எங்காவது ஓரிரு சின்னக் கிழிசல்களுடன் கூடிய பல தரப்பட்ட துணிகள். சட்டை டிரவுசர் பாவாடை புடைவை…கூவிக் கூவி விலை சொன்னார்கள்.

சாரதாஸ்…ரஞ்சனாஸ்… விளம்பரங்கள் நினைவு வந்து பின்னணியில் இந்தச் சந்தைக் கடை இரைச்சலிட்டது. எனக்கு என்னவோ போலக் கிறுகிறுப்பாயிருந்தது. ஒரு மரத்தடியில் நின்று கொண்டேன். அவனை இப்போது தடுக்கச் சக்தியில்லை.

பேப்பர் போட்;ட காசும் போதவில்லையாம்.

‘நாளைக்கு எப்படியும் ஒரு சட்டை வாங்கி விடுவோம்’என்று சமாதானப்படுத்தி. அவனையும் அழைத்துக் கொண்டு திரும்பினேன்.

இன்று –

‘பன்’னைத் தின்று டீயையும் குடித்து முடித்துப் புறங்கையால் வாயைத் துடைத்து விட்டுக் கொண்டான். டிரவுசரை ஒரு தரம் இறுக்கி முடிந்து அரைஞாண் கொடியை மேலேற்றிப் போட்டுக் கொண்டான். நூல் நூலான அரைஞாண் கயிறு.

தாத்தாவை காலையிலேயே முனிசிபால்டி வண்டியில் கொண்டு போய் விட்டார்களாம். அழுது கூடவே ஓடியவனைப் பக்கத்தில் இருந்தவர்கள்தான் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். ராத்திரியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த மத்தியானச் சாப்பாட்டையும் தொடவில்லையாம்.

“சரி…டீ கிளாஸைக் குடுத்திட்டு வா.”

கொஞ்ச தூரத்தில் எனது நண்பருடன் ஓவிய ஆசிரியர் வந்து கொண்டிருந்தார். இவனைப் பற்றி நேற்றுத்தான் பேசியிருந்தோம். நண்பர் கவிதை எழுதும் பழக்கமுடையவர். கண்கள் விரிய அவனைப் பார்த்தார். ஆதரவாகத் தோளைத்தொட்டு “உன் பேரென்ன தம்பீ!” என்று கேட்டார்.

“ராமுக்கண்ணு எம்.பி.பி.எஸ்” என்று அழுத்தமாகக் கூறியவன். டீக் கிளாஸை எடுத்துக் கொண்டு கடையை நோக்கிப் போனான்.

—————————————————-

(நான் எழுதி, 1990இல் கல்கி வார இதழில் வெளிவந்த சிறுகதை இது.பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொகுத்துவெளியிட்ட “புதிய காற்று“ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் B.A. B.S.c. பட்டப்படிப்பு களுக்கான துணைப்பாட நூலில் கடந்த பல ஆண்டுகளாக இடம்பெற்றிருந்தது, தற்போதும் இருக்கிறதா என்று அந்தப்பக்கத்திலுள்ள நண்பர்கள்தான் சொல்லவேண்டும். ஏனெனில், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. முதுகலைத் தமிழ்ப்பாட நூலாக எனது புதிய மரபுகள் கவிதைநூல் கடந்த 1993முதல் இருந்தது, இதை இருந்தது என்று கடந்த ஆண்டு இங்குவந்த ம.கா.ப.பேரா.முனைவர் திரு இரா.மோகன் அவர்கள் முன்னிலையில் சொல்ல, பின்னர்ப் பேசிய அவர்கள், அதென்ன இருந்தது? இப்போதும் இருக்கிறது என்றார்கள்…என்பதால்தான்…)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *