கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை  
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 85,481 
 

குதூகலமாக கொக்கரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் துரியோதனன் “ சகுனி மாமா! நமக்குத்தான் வெற்றி ! பாண்டவர்கள் போரில் தோற்பது நிச்சயம்!” .

எதிர் கொண்டு அழைத்தான் சகுனி !. “ என்ன ஆச்சு துரியோதனா, போன காரியம்? காயா? பழமா? நம்மோடு சேர்ந்து பாண்டவர்களை எதிர்க்க, பலராமனும் கிருஷ்ணனும் ஒப்புக் கொண்டார்களா? அவர்கள் சைனியம் நம்ம பக்கம் என்னிக்கு வந்து சேருமாம்?” ஆவலோடு கேள்விக்கணைகளை வீசினான் சகுனி மாமா !

“இல்லே மாமா! பலராமன் மாமா, யாரோடும் சேர்ந்து யுத்தம் செய்ய மாட்டாராம்! இந்த சண்டையின் போது ‘நான் இமய மலை பக்கம் போய்விடுவேன்’ என்று சொல்லி விட்டார். “

“ அப்புறம்? கிருஷ்ணன் நம் பக்கம் சேர்ந்து விட்டானா?” – சகுனிக்கு என்ன ஆயிற்று என தெரிந்து கொள்ள ஆவல்.

துரியோதணன் தொடர்ந்தான் “ அங்கே தான் மாமா , நம்ம பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது! கிருஷ்ணன் , என்னையும் , அர்ஜுனனையும் பார்த்து, ‘எனக்கு கவுரவர்களும் பாண்டவர்களும் சமம் . அதனால், நான் மட்டும் உங்க பக்கம் இருந்து யுத்தத்தில் கலந்து கொள்ள வேணுமா, அப்போது என் படை, எதிர் பக்கம் நின்று போரிடும்! இல்லை என் யாதவ குல சைனியம், உங்கள் பக்கம் இருந்து போரில் கலந்து கொள்ள வேண்டுமா? அப்போது , நான் எதிர் பக்கம் நின்று யுத்தம் செய்வேன் ? முடிவு உங்கள் கையில் !’“ அப்படின்னு சொல்லி குழப்பி விட்டான்.”

“அப்புறம் என்ன ஆச்சு ?” சகுனிக்கு மெதுவாக சந்தேகம் தலை தூக்கியது. கிருஷ்ணன் பெரிய வேஷ தாரியாயிற்றே!

துரியோதனன் சொன்னான் “ அந்த முட்டாள் அர்ஜுனன் ‘கண்ணா ! நீ எங்க கூட இருந்தால், அதுவே போதும் ! எங்களுக்கு வேறே எதுவும் வேண்டாம்!” அப்படின்னுட்டான். . உடனே நான் முந்திகிட்டேன் “ கிருஷ்ணா , உன் படையை எனக்கு கொடு ! எனக்கு அது போதும் !” அப்படின்னு கறாராக கேட்டு விட்டேன்.” கிருஷ்ணனும் ஒப்புக்கொண்டான். “

கேட்டதும், தலையில் இடி இறங்கியது போல ஆனது சகுனிக்கு ! அப்போதே அவனுக்கு தெரிந்து விட்டடது. பாரதப் போரில், வெற்றி யார் பக்கம் என்று ! நிச்சயமாக, கிருஷ்ணன் எந்த பக்கமோ, அங்கு தான் வெற்றி ! அவன் யுத்த தந்திரமும், அசாத்திய திறமையும், பாண்டவர்களை நிச்சயம் வெற்றிப் பாதையில் இட்டுச்செல்லும்!.சந்தேகமே இல்லை , நாம் தோற்பது உறுதி !

“முட்டாள் துரியோதனா! கோட்டை விட்டு விட்டாயே! கிஷ்ணனும், பாண்டவர்களும் ஒன்று சேர்ந்தால், நாம் அவர்களை ஜெயிக்கவே முடியாதே!” சகுனி வருந்தினான். எல்லாம் போச்சு !

புரியவில்லை துரியோதனனுக்கு! “என்ன மாமா சொல்கிறீர்கள்? நம் படையில் , அவர்களது சைனியத்தை விட நாலு லக்ஷம் போராளிகள் அதிகம் ! பீஷ்மர், துரோணர், கர்ணன், கிருபர், அசுவத்தாமன் நம் பக்கம் ! நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள்! பார்க்கலாம் ஒரு கை ! இன்னொரு விஷயம் ! நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கிருஷ்ணன் நம்மை எதிர்த்து ஆயுதம் எடுக்க போவதில்லையாம். அர்ஜுனனின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவனுக்கு வெறும் தேர் சாரதியாக மட்டும் இருப்பான் ! அப்புறம் நமக்கு என்ன கவலை மாமா ? “

சகுனி தீர்க்கமாக யோசித்தான் . “ சரி ! ஒன்று செய் !! அர்ஜுணனை வெல்ல, கர்ணன் ஒருவனால் தான் முடியும்! அதனால், கர்ணனுக்கு துணையாக, இணையாக இருக்க, கிருஷ்ணன் அளவிற்கு சாமர்த்தியசாலியை, கர்ணனின் தேர்ப் பாகனாக ஏற்பாடு செய்ய வேண்டும் ! கிருஷ்ணனுக்கு நிகாரனாவன், சல்லிய மகா ராஜாதான் .ஆனால், அவன் தான், பாண்டவர் சைனியத்தோடு போய் சேரப் போகிறானே! என்ன செய்யலாம் ? “

****

சல்லியன், மாதுரியின் சகோதரன். மாதுரி , பாண்டவர்களின் அம்மா. அதனால், மாமன் முறையில், சல்லியன் பாண்டவர் பக்கம் , தன் படையுடன் சேர முடிவு எடுத்திருந்தான். இன்னொரு முறையில், அவன் குவுரவர்களுக்கும் உறவு. இருப்பினும், அவன், நியாயத்தின் பக்கம், பாண்டவர் பக்கம் சேர்ந்து, மகா பாரத போரில் யுத்தம் புரிய , பாண்டவர் கூடாரம் நோக்கி தன் சைனியத்துடன் பயணித்து கொண்டிருந்தான்.

வரும் வழியெல்லாம், அவனுக்கு ராஜ வரவேற்பு. அவனது படைகளுக்கு அறுசுவை உணவு, படைதங்க கூடாரம், பழம் , மது அனைத்தும் தயார் நிலையில் இருந்தன. தனது பாண்டவ மருமகன்கள், தன்மீது எத்துனை மதிப்பும், ப்ரீதியும் கொண்டிருக்கிறார்கள்.? மிகுந்த மகிழ்ச்சி, பெருமிதம் சல்லியனுக்கு.

பாண்டவ சைனியம் தூரத்தில் தெரிந்தது. அப்போது, சல்லியனை எதிர் கொண்டழைத்தான் துரியோதனனும் அவனது மாமா சகுனியும் ! “ சல்லியன் மாமா !! நலமா ? வழியில் எதுவும் பிரச்னை இல்லையே? “ பாசமாக விசாரித்தான் துரியோதனன்.

ஏதும் புரியவில்லை சல்லியனுக்கு ! துரியோதனன் எங்கே இந்த பக்கம் ? தனது ஆச்சரியத்தை அடக்கி கொண்டு சல்லியன் சொன்னான் . “ மிக்க நலம் துரியோதனா! உபசரிப்பு, உணவு , தங்குமிடம் எதற்கும் எந்த குறையுமில்லை!”

“அப்படியா? இவை அனைத்தும் இந்த காட்டில் உங்கள் படைக்கு எப்படி கிடைத்தது மாமா? “ – கேட்டது துரியோதனன்.

“இது என்ன கேள்வி துரியோதனா? நான் யார் பக்கம் சேர வந்தேனோ, அவர்கள் எனக்காக செய்த உபசரணை! “ மிகுந்த சந்தோஷத்துடன் சல்லியன் சொன்னான். யானை தன் தலையில் மண்ணை, தானே அள்ளி போட்டுக் கொள்ளப் போவது அதற்கு அப்போது தெரியவில்லை !.

சகுனி இடை மறித்தான்!! “ சல்லியன் அண்ணா ! இவ்வளவு ஏற்பாடுகளையும் உங்களுக்காக செய்தது, துரியோதனன்,! அவனும் உங்களது மருமகன் தானே !! அவன் பக்கம் சேரத்தானே நீங்கள் வந்தீர்கள்?”

தலையில், நெருப்பை அள்ளிக் கொட்டியது போல இருந்தது சல்லியனுக்கு. ‘ஐயோ! இவ்வளவு உபசரிப்புகளும், ஏற்பாடுகளும் செய்து துரியோதனனா? இது தெரியாமல், அவசரப்பட்டு, இந்த உபசரிப்புகளை செய்தவர் பக்கம் சேர்ந்து சண்டை போட வாக்கு கொடுத்து விட்டேனே ! வாக்கு மீறலாகாதே !” பிராணன் போனாலும், சொன்ன சொல் தவறக் கூடாதே !”

வேறு வழியின்றி, துரியோதனனின் படையுடன் சேர்ந்து விட்டான். சல்லியன், நாட்டின் ராஜா, அவன் ஒரு மகா சாரதி. கிருஷ்ணனை போன்ற யுத்த கள தேரோட்டி ( இந்த கால, grand prix கார் ரேஸ் ட்ரைவர் போல!) அதனால், அர்ஜுனனை வெல்ல, சல்லியனை , கர்ணனுக்கு தேரோட்டியாக நியமித்தான் சகுனி.

***

மிகுந்த வருத்தத்துடன், கிருஷ்ணனை பார்த்து, நடந்ததை கூறினான் சல்லியன். தன்னை, சகுனியும், துரியோதனனும் எப்படி பாண்டவர்களிடமிருந்து பிரித்து, கர்ணனின் தேரோட்டியாக , அர்ஜுனனை வெல்ல யுக்தி செய்தனர் என்பதை சொல்லி கலங்கினான்.

கண்ணன் சொன்னது இதுதான் ! “ கவலைப் படாதே சல்லியா ! இதுவும் நல்லதற்கே ! நீ தாராளமாக கர்ணனுக்கு தேரோட்டியாக இரு ! எங்களை எதிர்த்து யுத்தம் செய் ! ஆனால், எங்களுக்காக ஒன்று செய் ! எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் கர்ணனை மட்டம் தட்டிக் கொண்டே இரு ! கர்ணா ! நீ தோற்பது உறுதி ! அர்ஜுனன் உன்னை வெல்வான் ! பாண்டவர்தான் வெற்றி பெறுவார்கள் ! அர்ஜுனன் ஜெயிப்பது நிச்சயம் ! நீ தேரோட்டி மகன் தான் ! நீசன் ! உன்னால் அர்ஜுனனை வெல்லவே முடியாது ! “ என்றெல்லாம், அவனை இகழ்வாக பேசு ! . அது போதும் எங்களுக்கு ! “ எதிர்மறை எண்ணங்களை கர்ணன் மனதில் விதைக்க, கிருஷ்ணனின் லீலை இது !

கண்ணனின் சொல்படி, கர்ணனை இகழ்வேன் என வாக்கு கொடுத்து விட்டு, சல்லியன் பிரிந்தான் !. சல்லியன் என்றால், முள் என்று பொருள். ‘சள் சள் என்று எரிந்து விழுகிறான், சுள் என்று வார்த்தையால் குத்துகிறான், என்று சொல்கிறோமே, அந்த வார்த்தை சல்லியனிலிருந்து தான் வந்ததோ ? கர்ணன் என்றால், காது என்று பொருள். மகா பாரதத்தில், வியாசர், என்ன அழகாக பாத்திரங்கள் பெயர்களை வைத்திருக்கிறார் ?

****

பாரதப் போர் மூண்டது. குருக்ஷேத்திர போர்க்களம் !

அருஜுனன் வீராவேசமாக , தனது தேரோட்டி கிருஷ்ணனை பார்த்து “ கண்ணா ! கவுரவர் படை முன், நமது ரதத்தை கொண்டு நிறுத்து ! நான் பார்க்கட்டும் ! கவுரவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்புகிறேன்! பாஞ்சாலியின் சபதத்தை முடித்து வைக்கிறேன்! உடனே போ !” என்று தனது தேவதத்தா எனும் சங்கை ஊதினான்.

கண்ணனும் அப்படியே, இரண்டு சேனைகளுக்கு மத்தியில் தேரை கொண்டுபோய் நிறுத்தினான். அர்ஜுனன் எதிர் திசையில் இருக்கும் சேனையை பார்த்தான். அங்கு நின்றுகொண்டிருப்பது தனது கொள்ளு தாத்தா பீஷ்ம பிதாமகர், பெரிய சிறிய தகப்பன்மார், மரியாதைக்குரிய துரோணர் போன்ற குருமார், தன் மாமன்மார், சகோதரர்கள், பிள்ளைகள், பேரன்மார்கள், நண்பர்கள். எல்லாம் அவனது உறவினர்கள். இவர்களையா நாம் கொல்வது ?

அப்படியே திகைத்துப் போய், தேர்த்தட்டில் உட்கார்ந்து விட்டான். போர்க்களத்தில் நின்றுகொண்டு யுத்தம் செய்ய மறுக்கிறான், ஏன் அவனுக்குள் இந்த திடீர் மனமாற்றம்.? எவ்வளவோ போர்களை பார்த்த அவன் என்ன கோழையா?

அர்ஜுனன் சொன்னான் “கண்ணா ! போர் புரியக் கூடியிருக்கின்ற இந்த உறவினர்களைக் கண்டு என் அவயங்கள் சோர்கின்றன. வாயும் உலர்கிறது. என் உடலில் நடுக்கமும் மயிர்க் கூச்சமும் உண்டாகிறது. காண்டீவமும் கையை விட்டு நழுவுகின்றது, என்னால் நிற்கவும் முடியவில்லை. என் மனம் நிலையற்று சுழல்வது போல் உணர்கிறேன்

மதுசூதனா ! விபரீதமான பல சகுனங்களைக் காண்கிறேன். போரில் சொந்த ஜனங்களைக் கொல்வதால் ஒரு நன்மையும் நான் காணவில்லை. கண்ணா ! நமக்கு ரஜ்ஜியத்தால் ஆவதென்ன? இன்பங்களால் ஆவதென்ன? வாழ்க்கையால் ஆவதென்ன? கிருஷ்ணா ! நான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல நான் விரும்பவில்லை.உறவினர்களைக் கொன்று நாம் எவ்வாறு இன்பம் அடைவோம்?

பேராசையால் விவேகம் இழந்தவர்களான இவர்கள் செய்யும் போர் , குல நாசத்தில் விளையும்! இதை விட, நான் மரிப்பது மேல். என்னை அவர்கள் கொல்லட்டும்! நான் இந்த போரில் கலந்து கொள்ள மாட்டேன் ! அது என்னால் இயலாத காரியம் !”

இவ்வாறு ஒரு பாட்டம் கதறி விட்டு, யுத்த களத்தில் அர்ஜுனன், தன் வில்லையும் அம்பையும் எறிந்துவிட்டு சோகமே உருவாய் தேர் தட்டு மீது உட்கார்ந்தான். நிலை குலைந்து போனான்.

சிரித்துக் கொண்டே, கண்ணன் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, “முடித்து விட்டாயா பார்த்தா! கொஞ்சம் நான் சொல்வதையும் கேட்கிறாயா?” என்று ஆரம்பித்து அவனுக்கு புத்தி சொல்ல ஆரம்பித்தான் , இதுவே பகவத் கீதை. கண்ணன் சொன்னான்:

“அர்ஜுனா ! தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.

தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான். அதை புரிந்து கொள்!

நீ இந்த போரில் கலந்து கொள்ளாமல் வெளியேறினால், நாளை உன் வம்சம், உன் உறவினர்கள் உன்னை தூற்றுவர். அதை விட, இந்த போரில் கலந்து கொண்டு, இறந்து போனாலும், உனக்கு சுவர்க்கம் நிச்சயம்!. ஜெயித்தாலோ, உன் குலம் உன்னை கொண்டாடும் ! நன்றாக யோசனை செய்து முடிவெடு ! :

தனஞ்சய ! உன்னை நீயே உயர்த்திக் கொள்வாயாக; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா; உனக்கு நீயே நண்பன்; தனக்குத்தானே பகைவன். தன்னைத்தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன்; தன்னைத்தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போல் கேடு கொள்கிறான். அதனால் மனதால் வலிமை கொள்! யுத்தம் புரி ! உன்னை வீழ்த்த யாருமில்லை !!”

—இவ்வாறாக நேர்மறை எண்ணங்களை, பார்த்தன் மனதில் தைக்கும் படி , மேலும் சொல்லி, போரில் பங்கேற்க செய்தான்.

கண்ணன் இல்லையென்றால், அவன் உபதேசம் இல்லையென்றால், பாண்டவர்கள் போரில் வென்றிருக்க முடியாது.

அது மட்டுமல்ல, தனது புத்தி சாதுரியத்தாலும், சமயோசித முடிவாலும், கண்ணன் அர்ஜுனனை மரணத்தின் பிடியிலிருந்து, போர்க்களத்தில், பல தடவை, காப்பாற்றினான்.

பாண்டவர்களும், அர்ஜுனணனும் , கிருஷ்னனின் நல்லுபதேசங்களை கேட்டதும், பாண்டவ வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். ஒன்று நிச்சயம் !

காது நெருப்பு போல.!கேட்பதால், குளிரும் காயலாம், உணவும் சமைக்கலாம், இல்லை , ஊரையே எரிக்கலாம்.

****

சரி இந்த பக்கம், கர்ணன்- சல்லியன் நிலை என்ன என்று பார்ப்போம் !

காதின் வலிமையை தெரிந்து கொள்வோம் !

போர் ஆரம்பிக்கையிலேயே கர்ணனுக்கும், தேரோட்டியான சல்லியனுக்கும் முரண்பாடு ஏற்பட்டு விட்டது. போயும் போயும் தேரோட்டியின் மகனுக்கு நான் தேரோட்டி ஆனேனே எனும் உணர்வு சல்லியனை வாட்டியது. . தன்னை கவுரவர்கள் ஏமாற்றி விட்டனர் என்ற வருத்தம் வேறு.

‘இன்று பாண்டவர்களை வெல்வது உறுதி ‘ என்றான் கர்ணன்.

உடனே சல்லியன் ‘ உன் தற்பெருமையை நிறுத்தி வீரத்தை போர்க்களத்தில் காட்டு ‘என்றான். “நம்மிடம் பெரிய சைனியம் இருக்கலாம், பீஷ்மர், துரோணர் இருக்கலாம், ஆனால், நாம் தோற்பது உறுதி. நீ அர்ஜனணனை வெல்ல முடியாது. அது நிச்சயம்!” என்று இகழ்ந்தான்.

‘ தேவாதி தேவர்களையும், அசுரர்களையும் வென்ற எனக்கு அர்ச்சுனனை வெல்வது எளிது ‘ என்றான் கர்ணன்.

“ வீண் தற்பெருமை வேண்டாம். உன் வீரம் நான் அறிவேன். சிவனுடன் போர் புரிந்தவன் அர்ச்சுனன். சித்திரசேனன் என்னும் கந்தர்வனுடன் போரிட்டு துரியோதனனை மீட்டவன் அவன். அப்போது, கர்ணா நீ எங்கே போனாய்? விராட நகரில் ஆநிரைகளை மீட்ட போது அர்ச்சுனனுக்கு பயந்து ஓடியவன் நீ. உத்தரன் தேரோட்டிய போதே கங்கை மைந்தனையும், துரோணரையும் வென்றவன், கண்ணன் தேரோட்டும் போது சற்று எண்ணிப்பார். உன் ஆணவப் பேச்சை நிறுத்தி, ஆற்றலை செயலில் காட்டு “ என்றான் சல்லியன்.

கண்ணனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டாமா ? சல்லியன் , தன் வேலையை ஆரம்பித்தான்

அருச்சுனனுடன் கர்ணன், சண்டை போடும்போது , அருச்சுனனின் திறமைகளை பாராட்டி கர்ணனின் குறைகளை மேம்படுத்தி, கர்ணனின் குவியத்தை சல்லியன் கெடுத்தான். அவனது கோபத்தீயை கொழுந்து விட்டு எரியசெய்தான்.

கர்ணனும், அர்ச்சுனனும் போரில் இறங்கினர். கர்ணன், மற்றும் இருவருக்கும் இடையே கடுமையான யுத்தம் துவங்கியது.

அர்ஜுனனிடம் இருந்து. ஆக்னேய அஸ்திரத்தை கொண்டு கர்ணனுக்கு துணை இருந்த அனைத்து வீரர்களையும் அக்னி கொண்டு துரத்தினான். அதற்கு பதிலாய் கர்ணன், வாருனாஸ்திரம் எய்தான். அது கரிய மேகங்களுடன் கூடிய மழையை வருவித்து அந்த இடத்தையே வெள்ளக்காடாக ஆக்கியது.

அர்ஜுனன் வாயுவாஸ்திரம் கொண்டு அந்த மழை மேகங்கள் அனைத்தும் தூர துரத்தினான். பின்னர், இந்திரனால் தனக்கு தரப்பட்ட சக்தி அஸ்திரத்தை கர்ணன் மேல் பிரயோகித்தான். அஸ்திரத்தின் வலிமையால் ஆயிர கணக்கான அம்புகள் காண்டீபத்திலிருந்து பாய்ந்து கர்ணனின் உடலை பதம் பார்த்தன. அதற்கு பதிலாய் பார்கவா அஸ்திரத்தை கர்ணன் பிரயோகிக்க, அது பாண்டவ சேனையின் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்றது.

இப்படியாக யுத்த பூமி ரண களமானது. நேரமாக ஆக, போரின் கடுமை அதிகமானது !

இடையிடையே, கர்ணனின் தேரோட்டி சல்லியன், நேரம் கிடைக்கையில் எல்லாம், பாண்டவர்களை புகழ்ந்தான். அருஜுனனை மெச்சினான். “ பாண்டவர்களை விட அதிக சேனை பலம் நம்மிடம் இருந்தும், என்ன பயன் ? ஜெயிக்க போவது என்னவோ, பான்டவரே! பார், உன் கணைகள் எல்லாம் பயனற்றதானது? என்னதான் ஆனாலும், நீ தேரோட்டி மகன் தானே! நீ எப்படி அர்ஜுனனுக்கு நிகர் ஆக முடியும்? “ என்று உசுப்பேற்றினான்.

பகவத் கீதையில் ஓரிடத்தில் கண்ணன் சொல்வான். “ சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் மனிதன் அழிகிறான். ||2-63||)”

அது இங்கு நிஜமானது. சல்லியனின் கொடூரமான சொல்லம்புகளால், கர்ணன் தன் நிதானத்தை இழந்தான். கோப வசப்பட்டான். புத்தி நாசமானது. நினைவு தவறியது. பொறுமை இழந்து, கர்ணனும், பல அஸ்திரங்கள் எய்து பார்க்க, அர்ஜுனன் அத்தனை அஸ்திரங்களையும் தடுத்தான்.

சல்லியன், நேரம் கிடைக்கையில் எல்லாம், பாண்டவர்களை புகழ்ந்தான். அருஜுனனை மெச்சினான். மீண்டும் மீண்டும், ‘ஜெயிக்க போவது என்னவோ, பான்டவரே ! தோற்கப் போவது நாமே! உன்னால் அர்ஜுனனை ஜெயிக்க முடியாது” இவ்வாறாக எதிர்மறை எண்ணங்களை, கர்ணன் மனதில் தைக்கும் படி சொல்லி, அவனது மதி பேதலிக்க செய்தான்.

சல்லியன் இல்லையென்றால், அவன் துர் – வார்த்தைகள் , எதிர்மறை எண்ணங்கள் இல்லையென்றால், கர்ணன் போரில் வென்றிருக்க கூடும்! கர்ணனின் கோபம் , அகங்காரம், ஆத்திரம் , சல்லியனின் நிந்தனை வார்த்தைகள், அவனை நிலை தடுமாற செய்தன. அவனது நிதானத்தை குலைத்தது. தவறுகள் இழைக்க ஆரம்பித்தான்

முடிவில் கர்ணன், நாகாஸ்திரத்தை எடுத்து (நாகாஸ்திரத்திற்கு பதில் அஸ்திரம் அர்ஜுனனிடம் இல்லை ) , விஜயம் எனும் தனது திவ்விய வில்லில் தொடுத்து, நாணை முழு நீளத்திற்கு இழுத்து எய்ய போகும் தருணம், கர்ணனின் குறியைக் கண்ட சல்லியன் கர்ணனிடம், அவன் கழுத்துக்கு குறி வைக்காதே, மார்புக்கு குறி வை என்றான்.

கர்ணன் கேட்கவில்லை. கழுத்துக்கே குறி வைத்தான். தன் பேரில் அவ்வளவு நம்பிக்கை அவனுக்கும் நாகஸ்திரம் அர்ஜுனனை நெருங்கியது. அர்ஜுனன் தன் முடிவு நெருங்கியது என நினைத்தான். ஆனால், அந்த நேரத்தில், கண்ணன் தன் காலால் தேரை அழுத்த, அது, ஒன்னரை அடி மண்ணுக்குள் புதைந்தது. அர்ஜுனன் தலையைக் கொய்ய வந்த நாகாஸ்திரம், அர்ஜுனனின் கிரீடத்தை மட்டும் சுக்குநூறாக உடைத்தது.

அஸ்திரம் திரும்ப கர்ணனை வந்தடைந்தது. கோபம் கொண்ட சல்லியன் கர்ணனை மீண்டும் நாகாஸ்திரத்தை செலுத்துமாறு வற்புறுத்தினான். “ கர்ணா ! தேரோட்டி மகனே ! நான் நாட்டின் ராஜா! நான் சொல்வதைக் கேள். மீண்டும் நாகாஸ்திரத்தை செலுத்து”! அர்ஜுனனை கொல் ” . ஆனால் , குந்தி தேவிக்கு கர்ணன் கொடுத்த வாக்கு, “நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை அர்ஜுனன் மேல் பயன் படுத்த மாட்டேன்”. அவன் கர்வம்,தன்னம்பிக்கை , அவன் அகங்காரமே, அவன் கொடுத்தவாக்குக்கு காரணம்.! அதனால், மீண்டும் நாகாஸ்திரத்தை பிரயோகிக்க மறுத்தான்.

சல்லியன் மீண்டும் மீண்டும் வற்புறுத்த, கோபம் அடைந்த கர்ணன் “ நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். உங்கள் வேலை ரதம் ஓட்டுவது மட்டும் தான். அதை மட்டும் செய்யுங்கள்” என்றான்.

இதற்கிடையில், கர்ணனின் தேர் சக்கரம் மண்ணில் புதைந்தது. கர்ணன் சல்லியனிடம் தேரை பூமியில் சிக்குண்ட இடத்தில் இருந்து மீட்குமாறு கூறினான்.

அதற்கு சல்லியன் “ எனது வேலை தேர் ஓட்டுவது மட்டும் தான். தேரை மீட்பது அல்ல. மேலும் நான் ஏற்கனவே துரியோதனனிடம் என்னை நீ அவமதித்து பேசினாலோ, முறை தவறி பேசினாலோ நான் உன்னை விட்டு விலகி விடுவேன் என்ற நிபந்தையின் பெயரில் தான் உனக்கு சாரதி ஆனேன். இப்போது நான் போகிறேன் “ என்று கூறிவிட்டு தேரை விட்டு இறங்கி நகர்ந்தான்.

வேறு வழியிண்றி, கர்ணன் தன் தேரில் இருந்து குதித்து தன் தேர் சக்கரங்களை வெளியே எடுக்க முயன்றான்.

இறுதியாக அர்ச்சுனன் தன் சக்தி அஸ்திரத்தை எடுத்து கர்ணன் மீது செலுத்தினான். கர்ணன் வீர மரணம் அடைந்தான்.

கர்ணன்- சல்லியன் கூட்டு, சல்லியணனின் சுடு வார்த்தைகள் , கர்ணனின் மரணத்திற்குஒரு முக்கிய காரணம். !

பாடம் இங்கும் அதேதான் !மாந்தரின் காது நெருப்பு போல.! அதில் குளிரும் காயலாம், உணவும் சமைக்கலாம், இல்லை ஊரையும் எரிக்கலாம். இங்கு சல்லியனால், சல்லியனின் எதிர்மறை பேச்சுக்களால், கர்ணன் அழிந்தான் . அங்கு கிருஷ்ணனால், அவனது நல்லுபதேசங்களை கேட்டதால், அர்ஜுனன் வாழ்ந்தான்.

***

கதையை சொல்லி முடித்தான் என் நண்பன் விஷ்வா . வாயை பிளந்து கேட்டு கொண்டிருந்தேன் நான். “ இப்போ சொல்லு, முரளி , இந்த கதையின் கருத்து என்ன ? . நீ தெரிந்து கொண்டது என்ன?: ”

நான் விழித்தேன் ! எனக்கு , கதையில் இருந்த கவனம், கதையின் பின் இருந்த, தத்துவத்தில் இல்லை. பின் ஒரு வழியாக சுதாரித்துக் கொண்டேன்.

“என்ன ! நல்ல உபதேசங்கள், ஒருவனை மேலே மேலே கொண்டு செல்லும். கண்ணனால், அர்ஜுனன் வெற்றி பெற்றான். திறமை இருந்தும், சல்லியனின் சுடு சொல்லால், மதி இழந்து, கர்ணன் தோற்றான், மாண்டான்! இதுதானே !”

விஷ்வா சிரித்தான் . “ ரொம்ப சரி ! இந்த காது தான் ஒருவன் முன்னேறவும், அல்லது பின்னடையவும் காரணம். நல்லவர்கள் நட்பு, அவர்களது நல்ல எண்ணங்களை பகிர்ந்து கொள்ளல், இதுவே இந்த கதையின் தத்துவம். போகட்டும், போன கதையில், இறைவன் கோயிலில் இருக்கின்றானோ இல்லையோ, நம் மனதில் இருக்கிறான். அவனை பார், தியானத்தின் மூலமாக , என்று சொன்னேனே! செய்தாயா?”

“ இல்லியே! தியானத்தை ஆரம்பிக்க, மனத்தை உள் முகமாக திருப்ப வேண்டும், இறைவனை அல்லது நிம்மதியை அங்கு தேட வேண்டும் என்று அந்த கதையில் சொன்னாய். இன்னிக்கு தியானம் செய்ய முக்கிய தேவை ஞானம் அதை முதலில் தேடு என்று சொல்கிறாய். அதற்கு நல்ல குருவை தேடு, நல்ல பண்புடைய நட்பை தேடு , நேர் மறை எண்ணங்களை வளர், எதிர்மறை எண்ணங்களை தவிர். என்கிறாய் ! அவ்வளவு தானா! இது தெரிந்தால், நான் யோகி ஆகி விடலாமா ? “ நான் ஒன்றுமே தெரியாதது போல கேட்டேன். எனக்கும் நக்கல் வருமே !

விஷ்வா சிரித்தான். “ இல்லே முரளி ! இது வெறும் பால பாடம் தான். ! எல்.கே.ஜி. இன்னும் நிறைய ஸ்டெப்ஸ் இதிலே இருக்கு. ஒன்னொன்னா வருவோம். கதை வடிவிலே. ! ஒகே வா ? பதாஞ்சலி அப்படிங்கிற முனிவர் தியானம் பற்றி எட்டு அடுக்கு மாடி கட்டியிருக்கிறார். யம, நியம, ஆசன , இப்படி எட்டு மாடி . …

நாம இப்போ பார்த்தது, கிரௌண்ட் ப்ளோர்லே ஒரு சின்ன ஸ்டெப் தான். இன்னும் நிறைய போகணும் ! நாம ஒன்னொன்னா ஏறுவோம் ! நிச்சயம் ஏறுவோம் ! கூடவே வேத வியாசர், சர்வப்ரியானந்தா, ரமணர், அப்புறம் மத்தவங்க சொன்ன சுவாரசியமான கதைகளை கேட்டு, அதில் உள்ள மறை பொருளை, கூடிய மட்டில் உணர்வோம்! அது முக்கியம் ! கதை, கருத்தை புரிந்து கொள்ள மட்டும் தான் ! கதையை கேட்டு விட்டு, கருத்தை விட்டு விடக் கூடாது ! ஓகே வா?”

‘ஓகே ! ஓகே ! ’ என்றேன் . என் தலை விதி ! ” ஆனால், இது மாதிரி , கதையை வள வள என இழுக்கக் கூடாது! அது ஓகே வா? ” இது என் பதிலடி !

விஷ்வா சிரித்துக் கொண்டான்.

*****

(நன்றி – inspired by Ms Ben Prabhu’s speech in hindi on Dhyanam. Courtesy : google and other articles on the subject of Maha bharatha)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *