சித்திரை மாதத்தின் முதல் வாரத்தில் மேற்கே முழு வட்டமாய் சுடர்ந்த சூரியன் உள்ளிறங்கிக் கொண்டிருந்தது. சில நாட்களாய் நல்ல வெயில் அடித்தது. அதிகாலையில் உதயமாகும் கணத்திலிருந்து அஸ்தமனம் ஆகும் காலம் வரை ஒரே சீரான அலைவரிசையில் பகற்பொழுது இருந்தது. செவத்தகன்னி ஓடம்போக்கி ஆற்றின் கரையில் இருந்த அவுரிதிடலில் மிளகாய்க்கு பாத்தி அணைத்து கொண்டே சூரியனைப் பார்த்தாள். மிளகாய்த் தோட்டத்தைச் சுற்றியும் இலந்தை முள்ளை மூங்கில் முள்ளோடு இணைத்து வைத்து கட்டியிருந்தார்கள். ஆற்றோர படுகையில் மேயவிட்டிருந்த ஆடுகளைத் தேடினாள். பொழுது ஏறிவிட்டது. அவுரி செடி மறைவில் மறைந்து மேயும் ஆடுகள் வேகமாக புற்களைத் தேடி தின்றன. கறுப்பு, சிவப்பு, வெள்ளை என பெயரிட்டு அழைத்தாள். இவள் குரல் கேட்டதும் ஆடுகள் தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு ஓடி வந்தன. இவள் கையிலிருக்கும் முதிர் பச்சை நிறம்கொண்ட கிளுவை தழைகளைப் பார்த்து வேகமாக இவளை பின் தொடர தொடங்கியது. செடிகளை முகர்ந்துப் பார்த்தாள். கொழுந்துகளின் வருடலான வாசனையை நுகர்ந்து பிய்த்துத் தின்றபடி இவள் மீதேறி செடியைப் பிடுங்கியது .. கிளுவைச் செடிகள் இப்பகுதியில் மிக அரிதாக கிடைக்கும் செடியாகி விட்டதால் இதனைப் பார்த்து விட்டால் சும்மா விடாது. துரத்த ஆரம்பித்துவிடும். அந்த இலைக்கு அப்படியொரு சுவை. இந்த மரத்தை பார்த்துவிட்டால் சிறுவர்கள் பறித்து தின்ன சுற்றி சுற்றி வருவார்கள்.
வேலை முடிந்து சீக்கிரமாகப் வீட்டுக்கு போனால், பண்ட பாத்திரங்களை கழுவி வேலைகளை முடித்துவிட்டு நல்ல தூக்கம் போடலாம். இரண்டு நாட்களுக்கு முன் பிடித்து வந்து மண்பானையில் மேயு விட்டிருக்கும் நத்தைகளை ‘சூந்து’ குழம்பு வைத்து தின்றால், தகிக்கும் சூடு தணியும். பொழுதுக்கும் பாத்தி கட்டியதில் பெரும் சிரமம் இல்லையென்றாலும் உட்கார்ந்து எழுந்ததில் இரு தொடைகளிலும் அங்கங்கே வலிகள் . தொடைகள் உரசியதில் எரிச்சலும் ஏற்பட்டன. ‘நடந்து வரும்போது மேல அவுரித்திடலில் மாடுகள் புற்கள் இல்லாத தரையை நாவால் வருடி புல் தேடின. , எழுந்து நின்ற ஒரு பன மரத்தை சுற்றிப் பிணைந்து காக்கரத்தான் செடிகளும், கருங்கொடியும் கிடந்தன. அதில் சிவப்பு நிற பழங்கள் இதனை குயில்கள் தேடி வந்து விரும்பி உண்ணும். மாரியப்பன் தோளில் மண்வெட்டியை போட்டபடி ஒரு காலை உந்தி உந்தி நடந்து வந்து கொண்டிருந்தான்.
“வேலை முடிஞ்சுட்டா மாமா…”
“ஆமாங்கன்னி கொல்லை வேலை முடிஞ்சிட்டு..”
அந்த வேலை வீட்டுல தான் போய் உக்காவ செய்யணும்..
“ச்சிபோய்யா.. உன்கிட்டே நான் பேசினேன் பாரு”
மாரியப்பன் இடுப்புக்கு மேலே விஷமாக பார்த்துப் போனான்.”
“ஆடுகள் முண்டியடித்துக்கொண்டு, கிளுவை இலை தின்ன போட்டிப் போட்டன.”
படுகையில் இருந்து பிரியும் மண் சோட்டில் நடந்து வரும்போது ஒரு ஜோடி கீரிப்பிள்ளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. கீச் கீச்சென அதன் வீறிடலில், ஆடுகள் அஞ்சின. இது ஜோடியான கீரிப்பிள்ளைகள். இது ஊடல் என தெரிந்தது. “இவளைக் கண்டதும் மண்டிக்கிடக்கும் அவரைக்கீரை செடிகளில் இடையே புகுந்தன. வேகமாக நடந்து வண்டிப்பாதை பக்கமாய் வந்த செவத்தகன்னியைப் பார்த்த கார்மேகம் செங்கல் சூளை பள்ளத்திலிருந்து வெளியே வந்தான். இவளைக் கண்டதும் அவன் பொய்யாய் சிரித்தான். அவன் பின்னால் புஷ்பவள்ளி முந்தானையை சரிசெய்து கொண்டே மேலே வந்தாள். சற்று மிரட்சியுடன் கண்களை திறந்து மூடினாள்.
இவள் எதுவும் பேசாமல் எச்சிலை காறித் துப்பினாள். அவர்கள் மீண்டும் பள்ளத்துக்குள் இறங்கினார்கள். அவளை கடுமையாக திட்டவேண்டும் போலிருந்தது. இருவருக்கும் குடும்பம் இருக்கும்போது இப்படியே ஏன் நடந்து கொள்ள வேண்டும், கசப்பு படர்ந்தது. தெரிந்து செய்யும் தவறுகள் நிம்மதியைப் பறிக்கும். இல்லையென்றால் மரணத்தை நோக்கி போக செய்யும். சில மணி நேரத்துக்கு முன்பு தனக்கு நேரயிருந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. வீடு வந்து ஆடுகளை தெற்குப் பார்த்து இருந்த மண் சுவரலான கீற்று வேய்ந்த வீட்டுக்கு வந்தாள். ஊரின் கடைசியில் ஊரான் குளத்தில் கரையில் கட்டப்பட்டிருந்தது. அப்பாவின் முன்னோர்கள் கிழக்கில் உள்ள மயானக்கரைப் பக்கம் தான் வாழ்ந்து வந்தார்கள். 70க்கு பிறகு பெரும் வெள்ளத்துக்கு பிறகு ஆற்றங்கரையை தவிர்த்து மேட்டுப் பங்கான புறம்போக்கு இடங்களில் குடிசைப் போட்டு வாழத் தொடங்கினார்கள். பக்கத்தில் போட்டிருந்த ஆட்டு கொட்டிலில் ஆடுகளை கட்டி விட்டு,பால் கொடுத்து குட்டிகளை பஞ்சாரத்துக்குள் விட்டு கவிழ்த்தாள். கொஞ்ச தூரம் நடந்து வந்து பூர்ணத்திடம் இரவல் சைக்கிள் கேட்டாள். வேலையில் ஈடுபட்டிருந்த அவள் சாய்ப்பில் வெயில் படமால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை காட்டிஎடுத்துக் கொள்ள சொன்னாள். கன்னி எடுத்துக் கொண்டு கிளம்பினாள். பெருமாள் கோவில் அருகே மேல வீட்டில் நாலைந்து ஆட்கள் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.“பட்டாமணியரின் மருமகள் பூதலூர் சின்னாச்சி நாற்காலியில் உட்கார்ந்து வெற்றிலை மென்று கொண்டிருந்தாள்.”
இவள் வாசலுக்கு வரவும் அவர்கள் கிளம்பவும் சரியாக இருந்தது. அவர்கள் பேச்சில் மாடு வாங்க வந்தவர்கள் என்பது தெரிந்தது.
“ஆச்சி மிளகாய் கொல்லையில, பாத்தி கட்டியாச்சு”
“அப்படியா.. இந்தா இருவது ரூவா இருக்கு எடுத்துக்க..” அவுங்க சந்தைக்கு போயிருக்காங்க வந்ததும் பார்த்துக்கலாம்…!
ஆச்சியின் பேச்சு நெருடலாய் இருந்தது.
வீட்டுக்கு வந்து குளிக்க கிளம்பினாள்.
மாற்றுத் துணியையும், சோப்பையும் எடுத்துக்கொண்டு, தெருவிலிருந்து கோவிலருகே இருக்கும் குளத்துக்கு வந்தாள். மாராப்பு கட்டிக்கொண்டு குளத்தில் இறங்கும்போது நாலைந்து சிறுவர்கள் கோக்காலி விளையாட்டின் உச்சத்தில் ஆர்வ மிகுதியால் கூச்சலிட்டார்கள். மதியம் சாப்பிட்ட புளித்த சோற்று கஞ்சியும், நெல்லிக்காய் ஊறுகாயும் செரித்து வெகு நேரம் ஆகி விட்டிருந்தன. சித்திரை மாத வெயிலின் தாக்கத்தால் குளத்து நீர் வற்றத் தொடங்கியிருந்தன. நீரில் ஓரு அடி அளவுக்கு சுடு தெரிந்தது. வளர்ப்பு மீன்கள் துள்ளிக் குதித்தன. நாட்டு ரகங்கள் இது போன்ற காலங்களில் சேற்றில் புகுந்து கொள்ளும். இரவும் பகலுமாக பொழுது மசமசவென ஏறிக்கொண்டிருந்தது. தெற்கிலிருந்து மென் காற்று குளிர்ச்சி நிரம்பியது. பாத்தி வெட்டும் போது மண் கோட்டிலிருந்து தெறித்து உடலில் படிந்த மண் துகள்கள் வியர்வையோடு கலந்து படிந்தன. அது போகும்படி ஆனந்த குளியல் குளித்து கொண்டிருந்தாள்.நீரில் இறங்கியதும் தன்னை சிறுமி போல உணரத் தொடங்கினாள். நீச்சலடித்தாள்…மல்லாக்க படுத்து மிதந்தாள். படித்துறையில் ஏறி நின்று, அழுக்கு தீர சோப்பு போட்டாள். எதிரே இரண்டு ‘ஆண்கள்’ இவளையே வெறித்து பார்ப்பது போலிருந்தது. சுதாரித்துக் கொண்டு உடைகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டாள்.
அப்போது அவளின் அப்பாவின் சினேகிதர் தங்கவேலு இறுமிக்கொண்டே படித்துறை முகப்பில் வந்து நின்றார். இவள் அவரை ‘அப்பா’ என்று தான் அழைப்பாள். துணிகளை எடுத்து மடக்கிக்கொண்டு ஈரப்பாவாடையுடன் வந்து ‘நீ குளிப்பா’ என்று சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினாள்.
சுரேஷ் எதிரே நடந்து வந்து இவளை மோதுவது போல் பாவனை செய்து விலகி நடந்தான்.
“வகுந்துர்வேன்.. மச்சான்.. பாத்துக்க..”
“சற்று தூரத்து கோவில் மறைவில் நாலைந்து ஆண்கள் சேர்ந்து சிரிப்பது கேட்டது.”
“தர்றேன்.. வாங்கிக் குடிக்கிறீங்களாடா”
முணுமுணுத்துக்கொண்டாள்.
மண்ணால் வனையப்பட்ட அடுப்பில் ஒன்றில் சோறும், மண்பானையில் குழம்பும் கொதித்துக் கொண்டிருந்தது அம்மா சுள்ளி குச்சிகளை போட்டு, எரித்துக் கொண்டிருந்தாள். ஆடைகளை மாற்றும்போது தன்னுடலை பார்த்து ஒரு கணம் கர்வப்பட்டுக் கொண்டாள்.
சட்டியில் கொதிக்கும் குழம்பில் பொய்க்கான் கருவாட்டு தலையை கிள்ளி ஒதுக்கி விட்டு பூண்டை நசுக்கி போட்டாள் அம்மா. மகளும், அம்மாவும் பேசிக்கொள்ளவேயில்லை. டி.வி.யை ஆன் செய்து பார்த்தாள். ஒரு வாரமாகவே கேபிள் வரவில்லை. சரியாக பணம் பைசல் செய்யப்படாததால் நெம்மேலி கிராமத்துக்கே இனிமேல் கேபிள் வராது என்று பேசிக்கொண்டார்கள். கூந்தலை உலர்த்தி, கைப்பின்னலாக கட்டிக்கொண்டாள். பவுடரை அக்குள் கழுத்து என அடித்துக்கொண்டாள்.
“சம்பளம் முழுசா கொடுத்தா தேவலாம். சில்லறைக் கடனைலாம் தீர்த்துப்புடலாம். மளிகை சாமான் வாங்கனும் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட போட்டது கெடக்கு எடுத்து வர்றணும் எத்தினி நாளக்கி தான் சைக்கிள் ஓசி கேட்குறது..” தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
“நாலு காசு சேர்த்து நூறு குழிய சாகுபடி செய்ய முடியும். வீட்டுக்கு தென்னங்கீற்று போடணும்..” அம்மா புலம்பினாள்.
“பண்ணையில சில்லறையா கொடுக்கறாங்க. முழுசா சேர்த்து கொடுக்க மாட்டேங்குறாங்க..”
“சரி நேரமாயிட்டு படு என்று வீட்டை கூட்டி ஒழுங்குபடுத்தி பாயை விரித்தாள் அம்மா..”
காணியாச்சிக்காக கொடுத்த ஒரு ஏக்கர் நிலத்தையும் பிடுங்கி கொண்டு ஊர்காரர்கள் பிடிங்கி கொண்டு விட்டார்கள். நல்ல மேட்டு நிலம். ஆற்றோரத்தில் இருந்தது. நல்ல செம்மண் பூமி அது. நிலக்கடலையும் மரவள்ளிக்கிழங்கும் நல்ல மகசூல் தரும். பங்காளிக்கார அண்ணன் சேகர் அதனை வடக்கேயிருக்கும் பெரிய நெம்மேலி கிராமத்தில் பேசி எப்படியாவது வாங்கி விடலாம் என்று கட்சிக்காரர்கள் சிலரைப் பார்த்தார். ஆனாலும் ஒன்றும் ஆகவில்லை. அது கூட்டுப்பட்டா என்று சொன்னார்கள். ஊரில் காணியாச்சி பார்க்கும் ஆள் சாகுபடி செய்து கொள்ள மட்டுமே முடியும். உரிமை கொண்டாட முடியாது. அப்படி ஊரில் ஆள் வேலைப் பார்க்காத நேரத்தில் ‘அது’ ஊரின் பொதுச் சொத்தாக இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள். ‘கிராமம்’ என்ற அமைப்பு உருவான காலத்திலேயே இது தொடங்கி விட்டது என்றும் கிராமத்தினர் உறுதிபட சொல்லி விட்டனர். செவத்தகன்னியின் தந்தை காணியாச்சிக்காரர் செவத்தகண்ணு தலைமுறையினர் பல ஆண்டுகளாய் அந்த வேலையை பார்த்து வந்தார்கள். அவர்கள் பெரும் குடும்பம். ஊரின் நிலை சரியில்லாதால் எங்கோ பஞ்சம் பிழைக்கப் போய் விட்டார்கள். அதில் மிஞ்சியிருப்பது சிலர்தான். செவத்தகன்னி ஒரே பெண். ஆண் வாரிசு இல்லை. மற்ற பங்காளிகளும் இதனை விரும்பவில்லை.
லைட்டை அணைத்தாள். கொசுக்கள் ரீங்காரமிட்டன. நாலைந்து துணிகளை மெத்தை போல் சுருட்டி தலைக்கு வைத்துக் கொண்டாள்.
“பட்டாமணியார் மகன் மற்ற ஆட்களை எல்லாம் பருத்தி வயல்களுக்கு அனுப்பி விட்டு தன்னை மட்டும் மிளகாய் கொல்லைக்கு தனியாக அனுப்பினார். கொல்லையின் பின்புறம் ஓடம்போக்கி ஆறு. ஏற்றம் போட்டு ஆட்கள் நீர் இறைத்து ஒரு வாரமாகியிருந்தது. நல்ல உச்சி நேரத்தில் இறுமிக் கொண்டே கொல்லையில் புகுந்தார். பட்டாமணியார் மகன் வளர்ந்திருக்கும் மிளகாய் செடிகளிலிருந்து! எழுந்து யாரென்று பார்த்தாள். வழுக்கை தலையில் வழியும் வியர்வையை பூதுண்டால் துடைத்துக் கொண்டே கேட்டார்.
“இன்னக்கி முடிஞ்சுடுமா பார்ணைப்பு”
“தலையாட்டிக்கொண்டே வேலையில் தீவிரம் காட்டினாள். திடீரென்று பாத்தியில் மிளகாய் செடிகள் அசைந்தன. திரும்பி பார்த்தாள். பின்புறமாக வந்து இறுகிப் பிடித்தார். கோர்த்த கையைப் பற்றி விலக்கி தள்ளினாள். செடிகளில் போய் ‘வதக்கு’ என்று விழுந்தார். இவள் திரும்பிப் பார்த்ததும் எழுந்து எதுவும் பேசாமல், படலை திறந்து கொண்டு கிளம்பிப் போய் விட்டார். வேலைப் பார்க்கவே பிடிக்கவில்லை. கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாள். பிறகு வாங்கும் கூலிக்கு ஏற்ற வேலையை செய்து தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு முடிந்தவரை வேலையை பார்த்தாள். பொழுது ஏறிவிட்டிருந்தது.
அவரைத் தள்ளிவிட்டதில், சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கும் என்றே தோன்றியது. ஒரு வேளை நாளை காலையிலிருந்து இதுவரையிலும் பார்த்த நாட்களுக்கு கூலியை கொடுத்து வேலைக்கு வர வேண்டாம் என சொல்லி விடுவாரோ! சொல்லட்டும் கவலையில்லை. பிழைக்கவா வழியில்லை! ஞாபகங்கள் முன்னும் பின்னுமாக அலைவுற்றன. வயது முப்பதை நெருங்கி விட்டது. திருமணம் குறித்த அக்கறை மெல்ல நழுவிக் கொண்டிருந்தது. ஒரு வேளை அப்பா இருந்திருந்தால் யாரோ ஒரு காணியாச்சிக்காரனுக்கு மனைவிக்யாக்கி விட்டிருப்பார். குழந்தைகள் கூட வாய்த்திருக்கலாம்.
“ அன்று அந்த அதிகாலை பொழுதில் கிழக்கே நெடுங்காட்டிலிருந்து வந்து நின்ற பைக்கில் இறங்கிய ஆட்கள், காணியாச்சிக்காரனான அப்பாவைத் தேடி வந்திருந்தார்கள் வெள்ளையும் சொள்ளையுமாக அதுவும் மிராசுதாரர்கள் தேடிக்கொண்டு வருவது அரிது. கொல்லையில் வளர்ந்து நின்ற ‘நாகடுவு’ செடியில் பறித்து வந்த தானியங்களை உதிர்த்துக் கொண்டிருந்த அப்பா திண்ணையிலிருந்து பதறி எழுந்து வந்து..
“சொல்லுங்க அய்யா என்ன வேணும்”
“எங்க குலதெய்வம் அய்யனாரு சாமிக்கு கிடா வெட்டி பூஜை பண்றோம். தப்படிக்க ஆளுங்க வேணும்”
“உடனே ஆளு இல்லைங்களே..”
“சாயந்தரத்துலேயிருந்து வந்த போதும் நாளை கழிச்சு மறுநாள் கிடா வெட்டு பூஜை..”
“சரிங்க நாளு பேரு போதுமா!”
“போதும் வாங்க!”
புது சலவைத் தாள்களை வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்ட சாமி மடத்தில் ஒரு தாளை வைத்துவிட்டு,
அவர்.. கீழ வாய்க்கால் பக்கமாய் போகத் தொடங்கினார். வளர்ந்து நின்ற அழிஞ்சை புதர் நடுவில் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார்கள். வேலைக்கு போகாத சில ஆட்கள் வீண் நியாயம் பேசிக்கொண்டு குடித்துக் கொண்டிருந்தார்கள். இவர் தேடி சென்ற குப்பும், நீலாச்சேரி மச்சான் சுக்குருவும் குடிபோதையில் நாவல் மரத்தடியில் துண்டை விரித்துப் போட்டு படுத்துக் கிடந்தார்கள்.
தட்டியெழுப்பியபோது துடித்து எழுந்த அவர்கள் தூக்கம் கலைந்து கோபத்தில் வெறித்துப் பார்த்தார்கள்..
“தப்படிக்க போவோமா…!”
தலையாட்டிக்கொண்டே எழுந்து நின்றார்கள். ஆளுக்கொரு கிளாசு சாராயம் வாங்கிக் கொடுத்து, தானும் ஒரு க்ளாஸ் குடித்து கிளம்பி வந்தபோது உச்சிப்பொழுதாகியிருந்தது. போகும் வழியில், வளவனூர் செல்வராசுவை அழைத்துக் கொண்டு நால்வரும் கிளம்பினார்கள். வெயில் இறுக்கமாக அடித்தது. தட்டான்கள் பறந்தன. பத்து மைலில் இருந்தது. நெடுங்காடு அதிக பஸ் வசதியில்லை. நடந்து போனால் குறுக்கு வழியாக ஏழரை மைலை அடைந்து விடலாம். அவர்கள் தோளில் அநாயசமாக ‘தப்பு’ தொங்கிக் கொண்டிருந்தது.
அடிக்கும் குச்சிகளை பூவரசு, அழிஞ்சை மரத்தில் வெட்டி உலர்த்திக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தார்கள். நால்வரும் ஐயனார் கோவிலுக்கு சேர்ந்தபோது அந்திபொழுது வந்திருந்தது. ஊருக்கு மேற்கே மரங்கள் சூழ்ந்த பெரும் திடலில் எழுந்து நின்றது குதிரை பிடித்துக் கொண்டிருக்கும் ஐய்யனார் சிலை. இவர்கள் திடல் முகப்புக்கு போகும் போது அழைக்க வந்த இருவரில் ஒருவர், “வாங்கடா.. தோ.. பாருங்க குளம் அதுல போயி குளிச்சிட்டு வந்து அடிக்க ஆரம்பிங்க என்றார். கிழக்கு பார்த்து நின்ற ஐய்யனார், சாந்த ரூபத்தில் இருந்தார். அவர் முகத்தில் உதட்டில் சூழ் கொண்டிருக்கும் மந்தகாசப் புன்னகை! பக்தர்களுக்கு பரவசம் தரக்கூடியதாக இருந்தது. நால்வரும் பசியில் துடித்துக் கொண்டிருந்தார்கள்.
“டண்டனக்… டனக்…
டண்டனக்… டனக்…”
ஐய்யனாருக்கு, அபிஷேக ஆராதனை நடைபெற தொடங்கிய போது சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பெரும் கூட்டம் கூடியது. அவரவரும் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி என வசதிகேற்றபடி ஓட்டிக்கொண்டு வந்து நின்றார்கள். ஆராதனை முடிந்து கிடா வெட்டு தொடங்கியபோது யார் யாருக்கோ சாமி வந்து ஆடி குறி சொன்னார்கள் பேய் பிசாசுங்களும், துர்மரண ஆவிகளையும் விரட்டியடித்த அய்யனார் கிடா வெட்ட ஆணையிட்டார்.
ஒரு வழியாக பூஜை முடிந்து அன்னதானம் வழங்கினார்கள். தப்படித்தவர்களுக்கு கை நிறைய சம்பளமும் வழங்கப்பட்டது. அய்யனார் கோவில் எதிரேயிருந்த மரத்தடியில் குடித்துவிட்டு, நல்ல இறைச்சி தின்று மூன்று நாள் கழித்து ஊருக்கு வந்தவர்கள் இந்த வைபவத்தை சொல்லி மகிழ்ந்துப் போனார்கள். காணியாச்சிக்காரனான அப்பாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் பற்றி டீக்கடை, வயல் வாய்க்கால் என்று தினந்தோறும் பேச்சுகள் நடந்தன. இந்த நிகழ்ச்சி முடிந்த பதிமூன்று நாள் கழித்த ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பூதமங்கலத்தில் திரௌபதி அம்மன் கோயில் சிவராத்திரி விழாவுக்கு அழைத்தார்கள்.
மீண்டும் அதிர்ஷ்டம் அடித்துவிட்டதாக சொல்லி அப்பா வந்து வீட்டு மண்சுவரில் வரிசையாக மாட்டப்பட்ட ‘தப்புகளை’ எடுத்து குச்சியால் தட்டிப் பார்த்தார். அப்போது அது ஒரு முற்பகல் வேளை. கடும் வெயிலில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. மரங்கள் அசைவின்றி உறைந்து போயிருந்தன. தப்படிக்க அவர் அழைக்கவும் நீ ,நான் என்று போட்டி போட்டார்கள். எப்போதும் உறங்கி நிழலில் ‘சவுத்துப்போய்’ உறங்கிக் கிடக்கும் தப்பு. அன்று கணீரென்று வெண்கலக்குரல் கொடுத்தது. வெயிலில் சில நிமிடங்கள் வைத்த பிறகு கம்பி வாத்தியங்களில் மெருகூட்டப்படும் ஒழுங்கும் நேர்த்தியும் கூடியிருந்தது. பறை கருவியில் இது கீழத்தஞ்சைக்கே உரித்தான பாணி. தப்பு கட்டையில் நுட்பமான தொழிற்நுட்பத்தால் தோல் ஒட்டப்பட்டவை. எப்போதும் ஒரே குரல் கொடுக்காது. பருவத்துக்கும் கால சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் அதன் மொழியும் உச்சரிப்பும் மாறும். சித்திரா பௌர்ணமிக்கு முன்பாக நடக்கும் திரௌபதி அம்மன் கோவில் ‘மயானக்கொள்ளை’ விழா! அதனை சிவராத்திரி என்றழைப்பார்கள். முதல் நாள் அம்மன் உலாவும், இரண்டாம் நாள் கிடாவெட்டும், பூஜையும். மூன்றாவது நாள் பூசாரி சிவன் வேடம் தரித்து, மயானம் சென்று, எலும்பு பொறுக்கி தின்று, பக்தர்களை பரவசம் அடைய செய்யும் நிகழ்வு நடைபெறும்.
பந்தல் போடப்பட்டு, தோரணங்கள் கட்டப்பட்டன. தேங்காய், பனங்காய், ஈச்சங்காய் குலைகள் கட்டப்பட, கிழக்குப் பார்த்த அம்மன் கோவில் முகப்பில் நின்று அந்த நால்வரும் அடித்துக் கொண்டிருந்தார்கள். நெம்மேலி காணியிச்சிக்காரன் தப்படிக்கிறார் என்றால் கூட்டம் கூடிவிடும். பழுப்பும், கறுப்பும் கலந்த நிறம் கொண்ட பறையை இடது தோலில் மிக நேர்த்தியாக மாட்டி ஆறடி உயரம் கொண்ட உடலை ஒரு சிலுப்பு சிலுப்பி வேட்டைக்கு தயாராகிவிட்ட மிருகம் போல தப்பை மாட்டிக்கொண்டு ஒரு முறுக்கு முறுக்கி சுதியை பெருக்கி நரை படர்ந்த கெழுத்தி மீசையை ஒரு தடவு தடவி அடிக்கத் தொடங்கியபோது வேடிக்கைப் பார்த்த அத்தனை பேருக்கும் உடல் நடுக்கம் ஏற்பட்டது. அடித்த மூன்று பேரும், அவரடியை பின்தொடர்ந்தார்கள். மைக் செட்டுக்காரன் ஒரு ஸ்டூலில் மஞ்சள் துணியை போட்டு ‘மைக்கை’ வைத்தான். அதுவரை உறக்கம் கலையாது கிடந்த கோவில் வீதி பரபரப்பானது. வணக்கமாய் தொடங்கி மூர்க்கமாய் பறையோசை காற்றில் பீதியுணர்த்தியது. துச்சதனின் தொடை இரத்தத்தையும், நெஞ்சை கிழித்த குருதியையும் உடம்பெங்கும் பூசிக்கொண்டு தீராத வெறியுடன் திரௌபதி கடும் சீற்றத்துடன் ஆகாயமும் பூமியும் அதிர …குரலிட்டு கலைந்த கூந்தல் தாழ்ந்தோட சத்திய சபதம் நிறைவேற்றிய இடத்திலிருந்து மண் எடுத்து வந்து கட்டப்பட்ட கோவில் என்பது இதனுடைய தலபுராணம். வருஷத்தின் இந்த திருவிழாவின்போது மடி பிச்சை எடுக்கும் பெண்களுக்கு, குழல் ஊதும் கண்ணன் மகனாக வந்து பிறப்பான் என்பது ஐதீகம்.
காணியாச்சிக்காரனின் முகம் மாறிக்கொண்டே போனது. நீண்ட தோளில் கிடந்து குரல் கொடுக்கும் பறை மெல்ல சுதியிழக்கத் தொடங்கியது.
“வைக்கோலை அள்ளி போட்டு கொழுத்துங்கப்பா”
சிவரூபம் பூண்ட, பெரிய வெண்கல சலங்கைகள் கட்டிய கோவில் பூசாரி பெரிய சூலத்தை கையிலேந்தி அம்மனைப் பார்த்து நின்றார். எலுமிச்சைப் பழ மாலையை தோளில் போட்டார்கள்.
தவில் வித்துவான் சூலமங்கலம் கதிரேசன் பிள்ளை கோஷ்டியினரின் எதிரே வந்து நின்று வாசிக்கத் தொடங்கினார்கள்.
கூட்டம் கூடத் தொடங்கியது..
பூசாரி திடீரென்று ஆக்ரோஷம் கொண்டவராய் பல்லை நறநறவென கடித்து, சூலத்தை மேலும் கீழுமாக சுழற்றி அடித்தொண்டையிலிருந்து ஹா.. ஹான என குரல் கொடுத்து குதிரையை போல பாயத் தொடங்கினார். மாசனபுத்திரன் வந்து இறங்கி விட்டார் என சொல்லிக்கொண்டே ஆடும் சிவ நடனத்தை கண்டு வட்டமாக ஆடுவதற்கு இடம்கொடுத்து விலகி நின்றார்கள்.
தவில் வித்துவான் கோஷ்டியினரும் காணிச்சிக்காரன் கூட பறையடிப்பவர்களில் பிரிந்து நின்று எதிர் எதிராக வாசிக்கத் தொடங்கினார்கள். வருடத்தின் 364 நாட்கள் வரை வீட்டுக்கும், கோவிலுக்கும் சாந்தமான மனிதராக அலைந்து கொண்டிருந்த பூசாரி இப்படி ஆக்ரோஷமாக அந்தரத்தில் குதித்து பூமி குலுங்க ஆடிக்கொண்டே ஒவ்வொரு தெரு முனையிலும் நின்று ஆடுவது ஊர்க்காரர்களுக்கு புதுமையாக தெரிந்தது. அப்போது தான் காணியாச்சிகாரருக்கும் ,தவில் வித்துவானுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. குச்சியை சுழற்றியும் நிறுத்தியும் மேலே அந்தரத்தில் விட்டெறிந்து பிடித்தும் ஆடாதவரையும் ஆட வைக்கும் அபார துள்ளிசையை அடித்துக் காட்டினார். பதிலுக்கு தவில் வித்துவான் நய்யாண்டியும் கோடை இடியும் போல குரல் கொடுத்து தோளில் மாட்டியிருந்த தவிலை தூக்கி பாய்ந்து குனிந்து அடித்து எல்லோரையும் ஆட்டமுற செய்து கொண்டிருந்தார். பதினேழு தெருக்களையும் மூன்று ஊர்களையும் எட்டு வீதிகளையும் கடந்து பாண்டவை ஆற்றின் கரையில் இருந்து மயானத்துக்கு வந்து சேர்ந்தபோது இரவாகியிருந்தது. பெரும் திரளான ஜனங்கள் பின்தொடர மசானபுத்திரன் வேகம் கூட்டி ஓடிக்கொண்டிருந்ததால் பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் படர எல்லோரும் மயானக்கரையை நோக்கி ஓடினார்கள். அக்கணத்தில் ஆடிய ஆட்டம், பெரும் கிலியை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆட்கள் எல்லாம் சோர்ந்து விட்டார்கள். விழா நிர்வாகிகள் மற்றும் ஏனையோர் பதட்டமாக காணப்பட்டார்கள். ஒரு ஏழு எழுமிச்சைம்பழம் ஏழு திசையிலும் வீசி கூவும் சேவல் அறுத்து மயானக்கொட்டகையில் இறங்கி சாம்பலைத் துளாவி எலும்பை எடுத்து தின்று கேட்டவர்களுக்கு வழங்கிய மசானபுத்திரன் சாந்தமாகிப் போனார். எல்லாம் முடிந்து வரும் வழியில் தான் காணியாச்சிக்காரனுக்கும் சூலமங்கலம் தவில் வித்துவானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
“என்கிட்டே மல்லுக்கு நின்று அடிக்கிற அளவுக்கு அப்படியென்ன கலை தெரியும் ஒனக்கு.. கூதிமவனே.. ‘நாங்கள்லொம் சுதி பிடிச்சு கட்டையை மாட்டுனவங்க…”
“சாமியோவ்.. உங்களுக்கு எல்லாம் சூத்திரமும் தெரிஞ்சிருக்கலாம். ஆனா நாங்க எழுபது தலைமுறையா எண்பதான்னு எனக்கு தெரியாதுங்க. பாட்டன் பூட்டான்னு பல காலமா ரத்ததுல ஊறியதுங்க”
“சரிடோய்.. நாளைக்கி ராத்திரி திரௌபதியம்மன் வாசல்ல நம்ம கச்சேரிய வெச்சிக்கலாம். இந்த சூரமங்கலத்தனா இல்ல அந்த நெம்மேலிக்காரன் தான் தவில் வித்துவான் கதிரேசன் அறிவித்தார்.”
“கோவில் நிர்வாகிகள் ஓடிவந்து என்ன புள்ள இப்படி சொல்லிட்டீங்க இந்த கோயிலுக்கு இந்த விழா மூணு நாளைக்கு மட்டும் நடத்துறது வழக்கம்.”
அம்மன்கிட்டே சீட்டு எழுதிப்போட்டு உத்தரவு வாங்கிட்டுத்தான் செய்ய முடியும். உங்க போட்டிக்கும் தெம்புக்கும் அம்மன்கிட்டே விளையாடாதீங்க சக்தி வாய்ந்தவா நாக்க புடுங்கி நடுவீதியில வீசிருவா..
“அவர் பேச்சை கேட்டு, காணிக்காரனும் கூட அடித்த ஆட்களும் சற்று தயங்கி நின்று தலையை தாழ்த்தினார்கள்.”
“இந்த செய்தி சுற்றுப்புற கிராமம் முழுமையும் பரவியது.”
“மறுநாள் காலையிலே அம்மனிடம் சீட்டு எழுதிப்போட்டதும் உத்தரவு வந்தது. ஆட்டோ விளம்பரம் செய்து ஆளுக்கொரு செலவை ஏற்றுக் கொண்டனர் கிராம மக்கள்.”
மூன்று நாள் அடித்த செலவுக்கு காணியாச்சிக்காரனுக்கு முன்னூறு ரூபாய் சம்பளம் கூலியாக தரப்பட்டது. தப்பை தோளில் மாட்டிக்கொண்டு ஊர் எல்லையில் விற்ற மதுக்கஷாயம் குடிக்க கிளம்பினார்கள்.
“அண்ணே! போட்டிக்கு ஒத்துக்கிறீங்க எனக்கு என்னமோ பயமா இருக்கு.. இந்த பக்கத்து ஆளுங்க முரடனுங்க. நமக்குனு பேச ஆள் கெடையாது.. வாண்ணே இப்படியே நடையை கட்டிர்ருவோம்.. செல்வராசு பயத்துடன் சொன்னான்.”
“இந்த காணியாச்சிக்காரனைப் பத்தி என்னடா நெனைச்சே நம்ம ஒண்ணும் கம்பை எடுத்து மல்லுக்கு நிக்கப்போறது இல்ல. நமக்கு தெரிஞ்சதை நாம செய்யப் போறோம்.. அப்படி தோத்துட்டாமுன்னு நாலு பேரு சொன்னா ஒத்துக்கிட்டு ஊருக்கு போக போறோம்..”
காணியாச்சிக்காரர் மிக தெளிவாக இருந்தார்..
“ஆளுக்கு இரண்டு கிளாசு குடித்து வந்தபோது மாலைபொழுது நெருங்கியிருந்தது. கோவிலுக்கு எதிரேயிருந்த மைதானத்தில் நான்குபுறம் டியூப்லைட் கட்டி மற்ற ஆட்கள் உள்ளே போகாமல் வாத்திய கோஷ்டியினர் மட்டும் உள்ளே போகும்படி ஏற்பாடு செய்து இருந்தார்கள். அந்த ஊர் பூதமங்கலத்தில் ஒரு பிரிவு கோஷ்டியினர் காணியாச்சிக்காரருக்கு தெம்பூட்டி பேசினார்கள்.”
போட்டித் தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்பாக ஆதரவாக இருந்த சிலர், குடிக்க அழைத்தார்கள். யோசித்த அவர் வேண்டாங்க என்றார். கூட அடிக்கும் செல்வராசு கூட அதனை ஆமோதித்தான்.
“இல்லைய்யா.. கொஞ்சம் சுதி ஏத்திக்கிட்டா போட்டியில்ல சுதி குறையாம அடிச்சு அந்த புள்ளைய விரட்டியடிக்கலாம்.” காணியாச்சிக்காரன் உறுதியாக இருந்தார்.
கோவில் மைதானத்திலிருந்து பின்னே நீண்டுக்கிடக்கும். தரிசு வயல்களைத் தாண்டி அழைத்து போனார்கள்.
“கேனிலிருந்து ஊற்றிக் கொடுக்க நல்ல துவர்ப்பும் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையில் இருந்தது. குடிக்க வேண்டாம் என சொன்ன செல்வராசு கூட மூன்று கிளாசு குடித்தான். காணியாச்சுக்காரர் ஐந்து கிளாசை தாண்டிவிட்டார். சுட்ட கருவாடு கொடுத்தார்கள். நல்ல போதை ஏறிவிட்டது கிளம்பி வந்தார்கள். எதிரே கொஞ்சம் வைக்கோலை அள்ளிக் குவித்து பறையை சூடுப்படுத்தி எரிய வந்தார்கள். இடது கையில் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி சூடுபடுத்திய போது சுணங்கி கிடந்த தப்பு உறங்கிக் கிடந்த குரலை மாற்றி டண்.. டண்.. என பேசத் தொடங்கியது..!”
நெற்றியிலிருந்து உடல் முழுவதும் வியர்வை ஆறாக பெருகியது. காணியாச்சிக்காரன் செவத்தகண்ணுக்கு. சாயத்தின் வேலை அதிகமாகி விட்டது என்று தோன்றியது. நல்லா சூடுபடுத்திகிங்க ஒரு சத்தம் அடித்து முடித்து தான் அடுத்த சத்தத்துக்கு சூடுபடுத்த முடியும் என்று ஊர்க்காரர் ஒருவர் யோசனை சொன்னார்.
இவரைப்போல மற்ற மூன்று ஆட்களும் வியர்வையில் நனைந்துக் கொண்டிருந்தார்கள்.
“ஒரே புழுக்கமா இருக்கு மழை வரலாம் சாமிகளா என்று சுதியை ஒழுங்குப்படுத்திக் கொண்டே செல்வராசு சொன்னான்.”
சீக்கிரமாக மைதானத்துக்கு வாருங்கள் என மைக்கில் முழங்கலானார்கள்.
திரௌபதி அம்மனை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கிட்டு, படியில் கிடந்த திருநீற்றை அள்ளி நெற்றியில் பட்டை போட்டுக்கொண்டு, நால்வரும் மைதானத்துக்கு நடந்தார்கள். கூட்டம் கூடி விட்டிருந்தது. தயாராக கதிரேசன் கோஷ்டியினர் தவில்களுக்கு வார் பிடித்து சுதி பிடித்து விட்டார்கள் போல. அடித்து பார்த்துக் கொண்டார்கள். தவிலிசை மிக நுணுக்கமாக ஒலி வாங்கியிருந்தது வெளியே வந்தது.
இரண்டு பெஞ்சை சேர்த்து போட்டு கிராம நிர்வாகிகள் ஐந்து பேர் நடுவர்களாக உட்கார்ந்து கொண்டார்கள். கிராமத்தலைவர் பேசினார். நாங்கள் கிராம கமிட்டி எடுக்கும் முடிவுகளுக்கு இரண்டு கோஷ்டியினரும் கட்டுப்பட வேண்டும். எவருக்கும் இங்கு பாரபட்சம் காட்டமாட்டோம். ஒரு கோஷ்டி எழுப்பும் இசை அதே நுணுக்கத்தோடு மற்றொரு கோஷ்டியும் எழுப்ப வேண்டும் என்று சுருக்கமான விதிமுறையை சொல்லி முடித்தார்.
“முதலில் அம்மாளுக்கு இசையை சமர்ப்பித்து விடுங்கள்”
“காணியாச்சிக்காரனுக்கு வியர்வை பெருகிக்கொண்டே போனது. அவ்வப்போது துண்டால் துடைத்துக் கொண்டே அடிக்கத் தொடங்கினார். முதல் சத்தத்தை அடித்து இறைவணக்கத்தை செலுத்த வேண்டும். அப்போது எம்பி குதித்து தரையில் படுத்து ஒரு நமஸ்காரம் செய்ய வேண்டும். அப்படி குனிந்தபோது அப்படியே சரிந்து கீழே விழுந்தார். கூட்டத்தில் ஒரே கூச்சல். எழ முயன்றார் முடியவில்லை. தொண்டையில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது. பார்வை மங்கலாகிக் கொண்டே போனது. அப்படியே சரிந்தார் மண்ணில். கூட அடித்த ஆட்கள் குலை நடுங்கிய குரலில் மச்சான் எந்திரிய்யா.. என்று கதறினார்கள் எழவில்லை. அப்படியே கையில் மாட்டிய பறையோடு சரிந்து கிடந்தார். வண்டிய பிடிங்கடா.. அவரோடு கூட அடித்த ஆட்களும் மயங்கினார்கள். எல்லோரையும் நீடாமங்கலம் ஆஸ்பத்திரியில் சேர்ந்தபோது காணியாச்சிக்காரனின் உயிர் பிரிந்து விட்டது என்று டாக்டர்கள் சொன்னார்கள். மற்ற மூன்று பேரும் மயக்க நிலையில் இருந்தனர். குடித்திருந்த சாராயம் தான் மரணத்துக்கு காரணம் என்று சொல்லி விஷயத்தை முடித்து விட்டார்கள் மேற்கொண்டு எதுவும் நடக்கவில்லை. வழக்கு முடிக்கப்பட்டது.
நினைவுகள் உறங்கவிடாமல் வலி கொடுத்தது. எழுந்து உட்கார்ந்து விட்டாள் கன்னி. அப்பா இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். மானிய நிலம் போயிருக்காது. எப்படியாவது என்னுடைய வாழ்க்கையும் இந்த நெம்மேலி கிராமத்திலிருந்து வேறு எங்காவது போயிருக்கும்.. நல்ல இருட்டு அம்மாவின் குறட்டையொலி.. இதமாக இருந்தது. உட்கார்ந்தாள். படுத்தாள். புரண்டாள். கண்களை மூடினாள். நினைவுகளை களைத்தாள். புதியதாக ஏதாவது ஒன்றை நினைக்க வேண்டும் என விரும்பினாள்…! மகிழ்ச்சியாக மேலும் இதமாக சுகம் தருவதாக, துணிச்சலாக எப்படியாவது இந்த கஷ்டத்திலிருந்து வறுமையிலிருந்து மீள வேண்டும், நிலத்தை மீட்க வேண்டும் அப்பாவை போல் அதில் உழைத்து நெல் சாகுபடி செய்யவேண்டும் மூன்று போகம் விளையும் வளமையான கடைமடை வயல். அப்படியே உறங்கி போனாள் செவத்தகன்னி.
காலையில் எழுந்ததும் பரணில் சாக்கில் சுற்றியிருந்த கிடந்த அப்பாவின் தப்பை எடுத்து தோளில் மாட்டி கொண்டு கூடவே செல்வராசு மாமாவையும் சேகர் அண்ணனையும் அழைத்து கொண்டு பெரிய நேம்மேலி கிராமத்தை நோக்கி நடக்க தொடங்கினாள். விவரம் தெரிந்த இருவரும் அவள் சொல்லுக்கு கட்டுபட்டு பின்னே நடந்தார்கள். தெருவில் வேடிக்கை பார்த்த ஜனங்கள் ‘காணியாச்சிக்காரன் மகள் தப்பை மாட்டிக்கிட்டு எங்க போறா’ என்று பேசிகொண்டார்கள். மூவரும் வேகமாக நடந்து மிராசு தெருவில் நின்றனர். அப்போது செவத்தகன்னி தெருமுனையில் இருந்த மச்சு வீட்டின் பின்னே போய் வைகோலை அள்ளிவந்து போட்டாள். செல்வராசு கொழுத்திவிட்டார். தப்பையை காய்ச்சி அடிக்க தொடங்கினாள்.
டன்டனக்… டனக் னக்…
டன்டனக்… டனக் னக்…
வெளியே வந்து நின்ற பெரிய வீட்டுகாரரிடம் ஒரு சத்தம் அடித்து நிறுத்தி ‘இன்னையிலிருந்து காணியாச்சி பார்க்க போறேன்’ என்றாள். அதிர்ச்சி உடன் அவர் பார்த்தார்.
“உங்கப்பாவுக்கு சாராயத்துல வெஷத்த போட்டுத்தான் தாயீ கொன்னுப்புட்டானுங்க” என்று செல்வராசு மாமா சொன்னது நினைவுக்கு வந்தது.
”எங்க அப்பா தப்பு இனிமே துங்காது இனி யாரையும் துங்காவும் விடாது”.
அவள் வார்த்தைகளை இருவரும் அர்த்ததுடன் பார்த்தனர்.
– பேசும் புதியசக்தி மாத இதழ்
ஐயா! கதை சொன்ன நேர்த்தி, வாழ்க்கையை படம் பிடித்து கட்டியது போன்ற தங்களின் நடையை மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள். தி.தா.நா