கலையும் பிம்பங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 8,165 
 
 

பிந்தியா மிகவும் அழகு என்று சொல்லி விட முடியாது. ஆனால் சந்திப்பவரின் மனதில் பதிந்து போகிற முகம் அவளுடையது. நல்ல நிறமில்லை; ஆனால் நவீன நடை உடை பாவனைகள் வாயிலாக நினைவை நிறைத்துவிடக் கூடியவள். அவளுடைய பகட்டில் கொஞ்சமும் செயற்கைத்தன்மையைக் காண முடியாது. பஞ்சாபி கலந்து பேசும் இந்தியை நாள் முழுதும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி கேக்கை வாயில் அடைத்துக் கொண்டிருந்தாள். நான் கேட்ட கேள்விக்கு அவளின் பதிலை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தேன். காபியின் நுரையின் மேல் க்ரீமினால் வரையப்பட்ட இதய டிசைன் காத்துக்கொண்டிருந்தது..

“என்னுடன் சினிமா போக வேண்டும் என்று கேட்ட முதல் ஆள் நீயில்லை. ஆனா நீ இதைக் கேட்கறது ஒரு மாதிரி இருக்கு. நேரா சொல்லிடறேன். நீ ஒரு நல்ல நண்பன். அப்படி இருக்கறதை மட்டும்தான் விரும்பறேன். அதைத் தவிர வேறெந்த ரிலேஷன்ஷிப்பும் நமக்கு வேண்டாம். நீ ரொம்ப சென்டின்னு எனக்கு தெரியும். அதனால் இதை க்ளியர் பண்றது முக்கியம்னு நினைக்கிறேன்”

கோபம் கலவாத வார்த்தைகள் வெளிவந்தன. இருவரிசைப்பற்களும் வழக்கம் போல பளிச்சிட்டு ஒளிர்ந்தன. வார்த்தைகளின் தீவிரத்தை பார்வையில் பொதிந்திருந்த துள்ளல் பிரதிபலிக்கவில்லை. திசுக்காகிதத்தால் உதட்டைத் துடைத்துக்கொண்டாள்.

”ஹ்ம்ம் என்ன பிரதர்…. ஏண்டா இவளை டேட்டிங்குக்கு கூப்பிட்டோம்னு இருக்கா?”

கண் சிமிட்டினாள்.

என்னுள் எழுந்த உணர்ச்சி என்னவிதமானது என்று தெளிவாக விளங்கவில்லை. ஏமாற்றவுணர்வு என்று அதைச் சொல்லிவிட முடியாது. அவள் என்னிடம் ஒரு முறைகூட விளையாட்டு வார்த்தைகளைப் பேசியதில்லை. ஈர்ப்பு கொள்ளாமல் என்னால் ஒரு பெண்ணிடம் பழக முடியுமா? ஆண் – பெண் ஈர்ப்பு கற்றுக் கொள்ளப்பட்ட பழக்கம். எதையும் மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் அது பழக்கமாக ஆகிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பிந்தியாவின் மேலிருக்கும் ஈர்ப்பை மூன்று வாரங்களில் கைவிட முடியுமா என்று பார்க்க வேண்டும்.

ஒரு வறண்ட சிரிப்புடன் ‘நீ சொன்னது சரி…. நட்பைத் தவிர வேறெந்த உணர்ச்சியும் இனிமேல் நமக்கு நடுவில் வராம பார்த்துக்கறேன்” என்றேன். எனக்கு பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த அவள் அருகே வந்து என் கன்னத்தில் தன் கன்னத்தை சில கணங்களுக்கு வைத்து விலகினாள். “யூ ஆர் அ ஜென்டில்மேன்”

காபிக்கடைக்குள் இருந்த முகம் கழுவும் அறைக்கு வந்து அங்கிருந்த வாஷ் பேசினுக்கு மேல் இருந்த கண்ணாடியில் எண்ணெய் படிந்த என் முகத்தைப் பார்த்தவாறு ஒரு நிமிஷம் நின்றேன். குழாயைத் திறந்து உஸ்ஸென்ற மெலிதான சத்தத்துடன் நுரைத்துக்கொண்டு கொட்டிய நீரை முகத்தில் வேகமாக அடித்துக் கொண்டேன். நீர்த்திவலைகள் கண்ணாடியில் படிந்தன ; என் முகம் தெளிவற்று தெரிந்தது.

மீதி காபியைக் குடிக்க இருக்கைக்கு திரும்பியபோது அங்கே பிந்தியாவைக் காணவில்லை. சற்று முன்னர் போன் பேசுவதற்காக வெளியே எழுந்து சென்றிருந்த அருண் குமார் திரும்பி வந்திருந்தான். அருண் பிந்தியாவின் அலுவலகத்தில் வேலை பார்க்கிறவன். விற்பனை மேலாளன். அருணுடன் ஒரு முறை சேர்ந்து அந்த காபிக்கடைக்கு வந்திருந்த போதுதான் பிந்தியா முதன்முதலாக எனக்கு அறிமுகம் ஆனாள்.

”எங்கே பிந்தியா?”

“எங்க கம்பெனி முதலாளி ரவீந்தர்ஜியோட போன் வந்தது. ஓடிப்போயிட்டா. . ”

காபிக்கடையை விட்டு வெளி வந்தபோது அருண் சிகரெட்டைப் பற்ற வைத்தான். நாங்களிருவரும் புகைத்தவாறே கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு பிந்தியாவுடன் இருந்த அளவிற்கு. அருணுடன் நெருக்கமான நட்பில்லை.

அவர்களுடைய அலுவலகத்தில் நிலவும் அரசியல் பற்றி பெயர்கள் சொல்லாமல் பேசினான். ”அழகா இருக்கணும், பெண்ணா இருக்கணும், எங்க கம்பெனில வேகமா முன்னேறிடலாம். ஆம்பளையா இருந்தா டிஸ்-அட்வாண்டேஜ்தான்” என்று அவன் சொன்னது பிந்தியாவை நினைத்துதான் என்று எனக்குப் புரிந்தது. ”எல்லா கம்பெனியிலும் அரசியல் இருக்கப்பா….” என்று அவனுக்கு சமாதானம் சொன்னேன். “இதெல்லாம் உன் ஃப்ரெண்ட் கிட்ட ஷேர் பண்ணாதே” என்றான். “சில் அருண்” என்றேன். மூன்று வாரங்கள் அல்ல, அதன்பின் வந்த பல மாதங்கள் பிந்தியாவை நான் சந்திக்கவேயில்லை. அவளுக்கு போன் செய்யவில்லை. எங்கள் அலுவலகங்கள் எதிரெதிர் ப்ளாக்குகளில் இருந்தன. பார்க்கிங் ஏரியாவிலோ வழக்கமாகச் செல்லும் காபிக்கடையிலோ அவள் கண்ணில் படவில்லை. நானும் அவள் கண்ணில் படவில்லை.

+++++

அப்பா போன் பண்ணி காயத்ரி என்ற பெண்ணின் போன் நம்பரைத் தந்தார் ; ”இந்த பெண் தில்லிலதான் இருக்கா… ஆனந்த் விகார்லதான் அவங்க வீடு…. அவளோட பேசிப்பார்த்து உனக்கு புடிக்கறதான்னு சொல்லு” என்றார். பெற்றோர்களின் அனுமதியோடு ஒரு பெண்ணை சந்திப்பது புது அனுபவமாக இருந்தது.

சாகேத்தில் ஒரு ஷாப்பிங் மாலில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. காயத்ரி தில்லியில் வளர்ந்த தமிழ்ப் பெண். தனியார் பல்கலைக்கழகமொன்றில் எம்பிஏ படித்திருக்கிறாள். அறிவு முதிர்ச்சி அவளுடைய தோற்றத்தில் பிரதிபலித்தது. சிரிக்காமல் இருக்கும்பொழுதும் ஒரு நிரந்தரப் புன்னகை பரவிய முகம். பார்வையிலும் குரலிலும் நேர்மை படிந்திருந்தது என்று சொல்ல வேண்டும். வலது கையால் தன் கூந்தலை அவ்வப்போது கோதிக்கொண்டாள். ஆறு மாதம் முன்னர் வேலையை விட்டுவிட்டாள். Still life paintingல் அதிக ஆர்வம்; ஓவிய வகுப்புக்கு செல்கிறாள்.

சுய அறிமுகங்களுக்குப் பிறகு எங்கள் பேச்சு எங்கேங்கோ சுற்றி விட்டு காயத்ரியின் படிப்பின் பக்கம் திரும்பியது.

“இவ்வளவு படிச்சிருக்க… வேலைய ஏன் விட்டுட்ட…. ?”

“ஏன் கேட்கறிங்க… வேலைக்குப் போற மனைவிதான் வேணுமா?” – உதட்டின் ஓரத்தில் சிரிப்பு

“அப்படியில்ல…. ”

“ரெண்டு கம்பனியில வேலை பண்ணேன்…. என்னால கார்ப்பரேட் சூழல்ல வெற்றி பெற முடியாதோன்னு எண்ணம். கார்ப்பரேட் கேரியருக்கு தேவையான போட்டித்தன்மை என்னிடத்தில் இல்லைன்னு நினைக்கிறேன்.”

மூன்று வார நடத்தை மாற்றம் எப்படி பழக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று அவளுக்கு ஓர் உரையாற்ற வேண்டும் என்ற அவாவைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“ஏன் அப்படி நினைக்கிற?”

“ஸ்போர்ட்டிவ்னெஸ் கம்மின்னு நினைச்சுக்குங்க… என்னுடைய பலம் – பலவீனம் பற்றிய ஒரு தெளிவை ஒரு வருஷம் முன்னாடி அடைஞ்சேன்னு சொல்லலாம்.”

“அலுவலகத்தில் ஆண்கள் ரொம்ப சீண்டினார்களோ?” – அவளை வம்புக்கிழுத்தேன்.

“என்னைப் பார்த்தா ஆண்கள் தூர ஓடிப்போயிடுவாங்க; அவங்களைப் பத்தி கவலையில்லை. சொன்னா ஆச்சரியப்படுவீங்க…. பெண்களே மத்த பெண்களை வளர விடறதில்லை… ஃபுட் நெட்ல இருந்தப்போ………..”

”இரு…இரு… என்ன பேர் சொன்ன…?”

”ஃபுட் நெட் லிமிடெட்.”

”ஒனக்கு பிந்தியாவைத் தெரியுமா?”

ஃபுட்நெட்ல வேலை பார்த்துட்டு பிந்தியாவைத் தெரியாம இருக்க முடியுமா…? உங்களுக்கு அவளை எப்படித் தெரியும்?”

அவளை டேட்டிங்குக்கு அழைத்ததைத் தவிர மற்றெல்லாவற்றையும் சொன்னேன். அதற்கப்புறம் எங்கள் பேச்சு வேறு திசையில் சென்று விட்டது.

வீட்டுக்குத் திரும்பியவுடன் அப்பாவுக்கு போன் செய்து, “நல்ல பெண்ணா தெரியறா…. யோசிக்கணும்” என்றேன். “இதுல யோசிக்க என்ன இருக்கு?” என்றார் அப்பா.

+++++

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு நாள் பிந்தியாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்த்து. தாய்லாந்தில் நடைபெறும் ஒரு பொருட்காட்சிக்குச் செல்கிறாளாம். அவள் கம்பெனி அனுப்புகிறது. அதுவும் தனியாக. முதல் வெளிநாட்டுப் பயணம். நல்ல ஹோட்டல் ஏதாவது தெரியுமா என்று கேட்டாள். அங்கு என்னுடைய நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்றும் கேட்டாள். நான் ஓரிரு முறை தாய்லாந்து சென்றிருக்கிறேன்.

”எதுவும் கவலைப்படாதே! எங்களது கம்பெனியின் விற்பனை முகவர் ஒருத்தன் பாங்காக்குல இருக்கான். அவன்ட்ட சொல்றேன். எல்லா அரேஞ்மெண்டும் பண்ணுவான். ரொம்ப நல்ல மனுஷன் கூட.”

ஹோட்டல் விவரங்களை நான் வருவித்தேன். புக் பண்ணச் சொல்லட்டுமா என்று பிந்தியாவிடம் கேட்டபோது வேண்டாமென்று பதில் வந்தது. “தேங்ஸ்…. ஆனா பாஸே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டார். கூட அவரும் வரார்” என்றாள்.

ரவீந்தருக்கு என்ன வயசு இருக்கும் என்ற எண்ணம் தேவையில்லாமல் வந்து போனது.

+++++

அருண் ஒரு நாள் அலுவலகம் வந்தான். பதற்றத்தில் இருந்தான்.

“ஒரு பிரச்னை! வேலை போயிடுச்சு. இப்போதான் ராஜினாமா பண்ணிட்டு வந்தேன்.”

”ஏன் என்னாச்சு?”

“எனக்கு முதல்லேர்ந்தே பிடிக்கலை…. ரவீந்தர் பிந்தியா பேச்ச கேட்டு ஆடறார்… அவ சொக்குப்பொடி போட்டு மயக்கி விட்டுருக்கா”

”ப்ளிஸ்…. இந்த மாதிரி பேச்சு வேண்டாமே…. வேலை போனது கெட்ட விஷயம் தான்… இனி ஆக வேண்டியதப் பார்க்கறதுதான் சரி.”

தெரிந்த கம்பெனிகளில் பேசுவதாக அவனுக்குச் சொன்னேன்.

“வேலை போனா என்ன? ஃபுட் நெட் ஒரு குட்டி கம்பெனி…. வேற நல்ல பெரிய கம்பெனில வேலை கிடைக்கும்” என்று ஆறுதல் சொன்னேன்.

பதவியும் அதிகாரமும் நிறுவனம் என்ற கட்டமைப்பின் இன்றியமையாத அங்கங்கள். கடைநிலை ஊழியன் முதல் இயக்குனர் வரை அவரவரைப் பொறுத்த அளவில் அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் நாடுகின்றனர். இத்தேடலில் குறுக்கிடுபவர்கள் நண்பராக இருந்தாலும்கூட சூழ்ச்சித் திறத்துடன் அவர்களை விலக்கவும் யாரும் தயங்குவதில்லை. மகளிர் அதிகம் வேலைக்குச் செல்லாத காலங்களில் இந்தப் போராட்டம் ஆடவர்களுக்கு மத்தியில் இருந்தது. அதிகாரப் போராட்டத்தில் மகளிர் சேரும்போது பாலியல் என்ற உள்ளார்ந்த இயக்கமும் சேர்ந்து சிக்கலை அதிகமாக்குகிறது. பாலுணர்வு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகையில் அது ஏற்படுத்தும் விளைவுகள் அலுவலகச் சூழலில் பதற்றத்தை உண்டு பண்ணுகின்றன.

விற்பனை மேலாளராக இருந்தும் தன்னை விடுத்து பிந்தியா தாய்லாந்து சென்றது அருணுக்கு அதிருப்தியாய் இருந்திருக்கும். அக்கோபத்தை ரவீந்தரிடம் வெளிப்படுத்தியிருப்பான். ரவீந்தர் போன்ற முதலாளிகளுக்கு அருண் போன்றவர்களை இழப்பதைப் பற்றி ஒரு கவலையுமில்லை. ஆயிரம் அருண்கள் கிடைப்பார்கள் என்ற நிச்சயம் அவர்களுக்கு!

இதில் பிந்தியாவின் பங்கு என்ன? பிந்தியாவின் நிலை உயர்வைக் கண்டு பொறுக்க இயலாததுதான் அருணின் வேலையிழப்புக்குக் காரணமா? இல்லையெனில் ரவீந்தரிடம் கோள் மூட்டி விட்டு அருணைத் துரத்தியனுப்பும் படி செய்து தன் பூரண அதிகாரத்தை நிலைநாட்டும் எண்ணத்துடன் பிந்தியா சாதுர்யமாய் நாடகமாடியிருப்பாளா?

பிந்தியாவை முதல்முறை சந்தித்தபோது தந்த விசிட்டிங் கார்டைத் தேடிக் கண்டு பிடித்தேன். “அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃபீசர்” என்று போட்டிருந்தது.

+++++

பிந்தியா பாங்காக்கிலிருந்து திரும்பிய பிறகு ஒரு மாலையில் திரைப்படம் காணச் சென்றோம். அவள்தான் அழைத்தாள். முதல் வெளிநாட்டுப் ப்யணத்துக்கு கொடுக்கும் ட்ரீட் என்றாள். சிரிப்பும் உற்சாகமான பேச்சுமாக பொழுது நன்றாகக் கழிந்தது. அருணையும் காயத்ரியையும் பற்றி எதுவும் கேட்கவும் இல்லை; சொல்லவும் இல்லை. ஒரு கல்லூரி நண்பனிடம் பழகுவது போலவே அவளிடம் பழகினேன். கார்ப்பரேட் நடைமுறைகள் பற்றிய அவளின் உலகப் பார்வையை அறியும் முயற்சியிலும் நான் இறங்கவில்லை.

சினிமாவுக்குப் பிறகு ரெஸ்டாரன்டில் உட்கார்ந்து வெகு நேரம் பேசினோம். பத்தாம் வகுப்பு படிக்கும்போது பிந்தியா தன் தாயாரை இழந்ததைப் பற்றிச் சொன்னாள். அவுட்டர் ரிங் ரோடில் ஒரு கோரமான கார் விபத்தில் சிக்கி அவள் அம்மா உயிரிழந்திருந்தார். அம்மாவின் மறைவின் காரணமாக உண்டான மன அதிர்ச்சியிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை மீள முடியவில்லை. இதன் காரணமாக பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றாள். கல்லூரி முதலாம் ஆண்டில் அவளுடைய அப்பாவிற்கு புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்படவும், அப்பாவின் உடல் நலம், அவருடைய வியாபாரம் மற்றும் வீடு இவைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிந்தியாவின் மேல் விழுந்தது. கல்லூரிப் படிப்பு முடிவதற்கு முன்னர் அப்பாவும் இறந்து போனார். கடும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த வியாபாரத்தை வேலை பார்த்த ஊழியர்களுக்கே விற்றுவிட்டு வியாபாரத்தில் இருந்து விலகிக் கொண்டாள். மூன்று வருடங்களாக ஃபுட் நெட்டில் உத்தியோகம். இதற்கெல்லாம் நடுவில் குடும்பச் சொத்தை அபகரிக்கும் எண்ணத்துடன் உறவினர்கள் போட்ட வழக்குகள் வேறு. அவற்றையெல்லாம் ஒற்றையாக சந்தித்து போராடி வெற்றியும் பெற்றிருக்கிறாள்.

“ஆ… சொல்ல மறந்துட்டேனே! என்னோட டைட்டில் மாறிப்போச்சு” என்று சொன்னபடி தன் கைப்பையிலிருந்து ஒரு கார்டை எடுத்து நீட்டினாள். வைஸ்-பிரெசிடெண்ட் – பிசினஸ் டெவலப்மெண்ட் என்று போட்டிருந்தது. எனக்கு அருணின் முகம் நிழலாடியது. அவனுக்கு போன் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வேலை கிடைத்து விட்டதா என்று கேட்க வேண்டும்

அவளுடைய வீட்டு வாசலில் அவளை இறக்கி விட்டேன். போர்டிகோவில் ஸ்கோடா கார் நின்றிருந்தது. “என்ன கிஃப்ட்டா?” என்று கேட்டேன்,

“இல்லப்பா… கார்டு மாறிச்சு இல்லையா… அது போல காரும் மாறிடிச்சு” என்று சொல்லி என் தலையை லேசாக கோதி விட்டாள். முதல் மாடியில் இருந்த அவளுடைய போர்ஷனுக்குச் சென்று பால்கனிக்கு வந்து அவள் எனக்கு கையாட்டும் வரை கேட்டிலேயே நின்றிருந்தேன்.

+++++

”நேத்து என்ன ஆச்சு? அப்புறமா பேசறேன்னு எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தீங்க.. கூப்பிடவேயில்ல” – காயத்ரி போனில் கேட்டாள்.

“சினிமாவுக்கப் போயிருந்தேன் பிந்தியான்னு என் ஃப்ரெண்ட் பற்றிச் சொன்னேனில்லையா…அவளோட…” – சவரம் செய்து கொண்டே பேசினேன்.

“ஹ்ம்ம்…”

கொஞ்சம் அமைதி.

“நீங்க தப்பா நினைக்கலன்னா ஒண்ணு சொல்லணும்….”

“பேஷா….”

“அந்த பிந்தியா அவ்வளவு நல்லவள் இல்லை…. ”

“அது உன்னோட ஒப்பீனியனா இருக்கலாம்…அதை ஏன் என்கிட்ட சொல்ற?”

“நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்னுதான்…”

“எனக்கென்னமோ தீயற வாசனை வருது !”

“இதுல பொறாமைப்பட என்ன இருக்கு?”

அமைதி. போனில் தும்மினாள். தும்மல் சத்தத்தை போனில் கேட்டு லேசாக புன்னகைத்தேன். தும்மும்போது அவள் முகம் எப்படி மாறியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

“ஒக்கே. உங்க இஷ்டம்.”

“எது என் இஷ்டம்?”

“உங்க ஃப்ரண்ட் யாருங்கறது உங்க இஷ்டம்… ஹேப்பி?”

சவரம் செய்து முடித்து டவலால் துடைத்துக் கொண்டு வராண்டாவில் சேரில் அமர்ந்து, பின்னர் கட்டிலில் படுத்துக் கொண்டு் எங்கள் போன் சம்பாஷணையில் ரொம்ப நேரம் போய்க் கொண்டிருந்தது.

”என் அப்பா போன் பண்ணினாரு… அடுத்த வாரம் தில்லி வராறாம்….”

“ஹ்ம்ம்… தெரியும்” என்றாள்.

+++++

அருணைப் போனில் தொடர்பு கொண்டு விசாரித்தேன். மாற்றுத் திறனாளி தொழில் முனைவோருக்கு நிதி ஏற்பாடு செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்றில் கள அதிகாரியாக சேர்ந்திருந்தான்.

“ஏன் என் ஜி ஓ வேலையை எடுத்துக்கிட்டீங்க?”

“ஏற்கெனவே நேரம் கிடைக்கும்போது பண்ணிட்டு இருந்ததுதான்…மனநிறைவு பார்ட்-டைமாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று புரிபட கொஞ்ச காலம் பிடித்தது. வீட்டுல இருந்தபோது நிறைய யோசிச்சேன். ரவீந்தரையோ பிந்தியாவையோ காரணம் சொல்லி அதிருப்தியுடன் செய்த வேலையில் என்ன மன நிறைவு கிடைக்கும்? மனசுக்கு பிடிச்ச வேலை செய்யறதைத் தவிர திருப்தி தர்றது வேற எதுவுமில்லை…..இதைத் தவிர இந்த வேலைய எடுத்துக்க இன்னொரு காரணமும் இருக்கு….எங்க வீட்டுலயே ஒரு மாற்றுத் திறனாளி இருக்கார்”

“யாரு?”

”என் மனைவி”

போட்டித்தன்மையின்றிச் செய்யும் வினைகள் எல்லாமே பொழுதுபோக்குகள் மாதிரி சுமையற்றுப் போகும் போல. எப்போதும் பதற்றமாகவே பேசும் அருணின் குரலில் படர்ந்திருந்த அமைதியே சாட்சி. வேலையை விடுத்து ஓவிய வகுப்புக்கு செல்லும காயத்ரியை நினைத்துக் கொண்டேன்.

+++++

அடுத்த மாதம் எனக்கும் காயத்ரிக்கும் கல்யாணம் நிச்சயமானதும் பிந்தியாவுக்கு தெரியப்படுத்தினேன். ஒரு வார இறுதி நாளில் தன் வீட்டில் சாப்பிட அழைத்தாள்.

அவள் வீடு மிகச் சுத்தமாக இருந்தது ; எல்லாப் பொருட்களும் அதனதன் இடங்களில். ஜன்னல் திரை முதல் செருப்பு வைக்கும் அலமாரி வரை பிந்தியாவின் ரசனை ஒவ்வொன்றிலும் தெரிந்தது.

சிக்கன் பிரியாணி, தயிர் பச்சடி, வீட்டில் பொறித்த உருளைக் கிழங்கு வறுவல், அவளே செய்த ஐஸ்-க்ரீம் என்று தடபுடலான டின்னர். அவளே சமைத்தது என்று சொன்னாள்.

இருட்டான பால்கனியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நவம்பர் மாதம். குளிர் காற்று வீசியது. வராண்டாவில் வடலி சகோதரர்களின் கவ்வாலி இசை ஒலித்துக்கொண்டிருந்தது.

”இதோ வந்துடறேன்” என்று உள்ளே சென்றவள் சிறிது நேரம் கழித்து இரண்டு கோப்பைகளில் வைன் எடுத்து வந்தாள்.

“ஃபார் யுவர் ஹேப்பி மேரேஜ்” என்று கோப்பையை உயர்த்தினாள்.

“நீ சரியான அமுக்குளி. எங்கேஜ்மெண்ட் ஆகப்போகுதுன்னு சொல்லவேயில்லையே…? அது போகட்டும்…. உன் வருங்கால மனைவி பற்றிச் சொல்லு”

“ஒனக்கும் அவளைத் தெரியும்”

“அப்படியா… யாரு?”

“காயத்ரி… உன்னோட முன்னால் கலீக்….”

“அப்படி யாரையும் தெரியாதே… ஃபுட் நெட்ல வேலை பண்ணாளா? எப்போ?”

“என்ன சொல்ற…. ஒன்றரை வருஷம் முன்னால வரைக்கும் அங்கே வேலை பண்ணவதான்…. இருபத்தைஞ்சு பேர் மட்டும்தானே வேலை செய்யறாங்க உங்க கம்பெனில… உனக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்…. ”

“இல்லப்பா…. கண்டிப்பா நான் ஜாய்ன் ஆறதுக்கு முன்னால வேலை பார்த்துருப்பா…”

இருட்டாக இருந்ததினால் அவள் கண்ணை உற்று நோக்க முடியவில்லை. அவள் பால்கனிக்குக் கீழே எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். நான் வைனை வேகமாக அருந்தினேன். கொஞ்ச நேரம் அங்கு அமைதி நிலவியது.

“அப்போ நான் கிளம்பறேன் பிந்தியா”…

“ஒக்கே….”

கிளம்புமுன் பிந்தியா வீட்டு பாத்ரூமைப் பயன்படுத்தி விட்டு கை கழுவ பேசின் குழாயைத் திறந்தேன். சுடுநீர் வந்தது. கையை சில வினாடிகளுக்கு குழாய்க்கடியில் வைத்திருந்தேன். குழாயை மூடி விட்டு கண்ணாடியில் பார்த்தேன். கண்ணாடியில் படிந்திருந்த நீராவி என் முகத்தை மறைத்திருந்தது.

அந்த சந்திப்புக்குப் பிறகு பிந்தியாவை நான் மறுபடி சந்திக்கவேயில்லை. நான் எதிர்பார்த்தது போலவே என் திருமணத்துக்கு அவள் வரவில்லை. அருண் மனைவி சகிதம் வந்திருந்தான்.

அதன்பின் இரண்டு – மூன்று வருடங்களுக்குப் பிறகு ஜூனியர் போஸ்டுக்கு வந்திருந்த விண்ணப்பக் குவியலுக்கு நடுவே பிந்தியாவின் புகைப்படத்தை ஒரு விண்ணப்பத்தில்தான் பார்த்தேன். வைஸ் பிரெசிடெண்ட் – பிசினஸ் டெவலப்மெண்ட்-டாக வேலை பார்த்தவள் சீனியர் சேல்ஸ் சூப்பர்வைசர் வேலைக்கு எதற்கு விண்ணப்பிக்க வேண்டும்? நேர்முகம் காணப்போகும் என் பாஸ் (திருமதி) ராவ் அவர்களிடம் சொல்லி இதைப் பற்றிக் கேட்கச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. பிறகு வேண்டாம் என்று ஒன்றும் சொல்லாமலேயே விட்டுவிட்டேன்!

– Dec 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *