கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி முதல் அத்தியாயம்  
கதைப்பதிவு: January 27, 2023
பார்வையிட்டோர்: 3,928 
 

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம் 1

‘பாதை வகுத்தாச்சு பயணம் அவர் பாடு…
கோதை எடுத்தாச்சு புளிக்குழம்பு அவர் பாடு…
சாதம் வடிச்சாச்சு சாப்பிடுவதினி அவர் பாடு…
ஏதும் எனக்கில்லை எனச்சொல்லிப் போனீரோ………

வைகரையின் ரம்யமான அமைதியை கீறிக் கிழித்துக்கொண்டு பிசிர் இல்லாமல் ஒலித்துப் பரவியது அகிலாண்டக் கிழவியின் ஒப்பாரி.

‘கிளவி ஒப்பாரி பாடுதே…!’

‘நோவு நொடீல படுத்தக் கிளங்கட்டைங்கக் கூட தெருவுல யாருமேயில்லையே…!’

‘பாம்பு கீம்பு கடிச்சி யாரும்… …!’

‘திடீர்னு யாரு மண்டையப் போட்டிருப்பாக…?’

ஒப்பாரி ஓசையில் திடுக்கிட்டு விழித்த அக்கப்பக்க ஜனங்கள் ‘செத்தது யாராயிருக்கும்..!’ என்று ஊகித்தபடியே ஓடுவதும், நடப்பதும் ஓடி ஓடி நடப்பதுமாக ஒரே பரபரப்பு.

செத்தது யார் என்று இரண்டாவது ஒப்பாரியில் தெளிவாகப் பாடிவிட்டாள் கிழவி.

“சப்பாணியா செத்துட்டாரு…! நேத்துக் கூட நல்லா இருந்தாரே…!”

“அட…! நேத்து அந்தீல தெருவுல நின்னு மவனாண்ட ஏதோ சொல்லிக்கணு நின்னாருங்கிறேன்…!”

“என்ன ஆயிருக்கும் அவுருக்கு..?”

“வயசானாலும் சப்பாணி நல்லா ஆரோக்கியத்தோடக் கல்லுக்குண்டாட்டம் விகுவாத்தானே இருந்தாரு…!”

“நோவு நொடீனு ஒரு வேளை சுணங்கிப் படுத்தவர் இல்லியே அவுரு… அவருக்கு என்னவாயிருக்கும்..!”

தொப்ளானை அந்த வட்டாரத்தில் ‘சப்பாணி’ என்பார்கள். ஒரு கால் விந்தி விந்தித்தான் நடப்பார் அவர்.

பிலாக்கணக் கூட்டாளிகள் சுறுசுறுப்பாகத் தத்தம் குடிசைகளில் இருந்து புறப்பட்டு ஓட்டமும் நடையுமாக இழவு வீட்டுக்கு விரைந்தார்கள்.

யார் வீட்டில் தலை சாய்ந்தாலும் அகிலாண்டக் கிழவிக்குத் தான் முதலில் தெரிவிப்பார்கள். கிழவி வந்து சந்தேகத்துக்கு மீண்டுமொறு முறை நாடி பார்த்து சாவு தீர்மானித்துவிட்டு’த் தரையில் துணி விரித்து பிரேதம் கிடத்தி, மூட வேண்டிய துவாரங்களை மூடவேண்டிய முறையில் மூடி, கை, கால்களைச் சேர்த்துக் கட்டியபின், விளக்கு, ஊதுபத்தி கொளுத்தி வாழைக்கட்டையில் நட்டு ஜோடனையெல்லாம் முடித்துவிட்டுத்தான் உரத்த குரலில் நடு வீதியில் நின்று முதல் ஒப்பாரியை உரத்துப் பாடுவாள்.

முதல் ஒப்பாரி எல்லோருக்கும் பொதுவானதுதான். செத்தது யார் என்று இரண்டாவது ஒப்பாரியில் பூடகமாகத் தெரியப்படுத்துவாள் கிழவி. காது கேட்கும் தூரத்தில் பிலாக்கணக் கூட்டாளிகள் இருந்துவிட்டால் வாங்கிப் போட்டு மாரடிக்க மூன்றாவது ஒப்பாரிக்குக் கூட்டாளிகள் வந்துவிடவேண்டும்.

இருந்துகொண்டே அலட்சியப்படுத்தினாலோ தொலைத்துக் கட்டிவிடுவாள் கிழவி. அகிலாண்டத்தின் கோபம் பொல்லாதது.

அப்படித்தான்… அம்மாவாசைக் கிழவன் சாவுக்கு, ‘சம்முடியக்கா’ அலட்சியமாகப் பிரேதம் எடுக்கும் நேரத்தில் மாரடித்துக்கொண்டு ஓடிவந்தாள்.

துஷ்டிக்கு வந்த உறவுக் கூட்டம், ஊர்க் கூட்டத்துக்கு மத்தியிலேயே, சம்முடியக்காளை விட்ட பாட்டு, கேட்ட நாராசமான கேள்விகள், அப்பிய அவமானங்கள்….. அப்பப்பா கிழவியின் கோபம் ரொம்பப் பொல்லாததுதான்.

சம்முடியக்கா நெடுஞ்சாண்கிடையாக பூமியில் விழுந்து மன்னிப்புக் கேட்டபின்தான் சமாதானமானாள் கிழவி.

கூட்டாளிகளான செவிலி, அன்னம்மா, குப்பாத்தா, பொன்னுத்தாயி, சரோசா, மாரியாயி, காத்தாயி எல்லோரும் வந்தாயிற்று.

அயிலாண்டக் கிழவிக்கு ஓங்குதாங்கான இரட்டை நாடி உடம்பு. தேங்காய்ச் சிரட்டை மாதிரி மொரப்பாக பம்மிப் பம்மி செம்பட்டையாய், எண்ணைப் பிசுக்குக் காணாத தலைமுடியை கொத்தாகப் பிடித்து ஒரு சுற்று சுற்றி கோடாலி முடிச்சாய் செருகியிருந்தாள். சதுர வடிவ முகம். புடலங்காய்க்குக் கல் கட்டி விட்டாற்போல் காதில் தொங்கும் தோடுகள். அறுந்துவிழத் தயாராக இருப்பதுபோல் தோடுக்கு மேல் நீளவசத்தில் தெரியும் காது ஓட்டை. நீளமான கரடு முரடான மூக்கில் கிடக்கும் பெரிய சைஸ் பேசரி. இந்த வயசிலும் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொள்ளாமல் பெரிய எழுத்து விக்கரமாதித்தன் கதை படிக்கும் பிரகாசமான சின்னக் கண்கள். கடும் கோடையில் வெடித்த வயல் வெடிப்புப் போலப் பரவிய முகச்சுருக்கங்கள்.

நார்மடிச் சேலையை இழுத்துக் கட்டிய கம்பீரம். இழுத்துச் செருகாவிட்டாலும் அவள் உயரத்திற்குப் புடவை கணுக்காலோடு நின்றுவிடும். அந்தப் புடவைக்கு சற்றும் பொருத்தமில்லாத சாயம்போன வண்ணத்தில் தொளதொளவென ரவிக்கை. முகத்தில் நிரந்தரமாகத் தங்கிக்கிடக்கும் சிடுசிடுப்பு. வெற்றிலைக் காவி ஏறிய பல் வரிசை. அந்த முகத்துக்கும், கடுமைக்கும், பொருத்தமே இல்லாத கணீர் வெண்கலக் குரல். பிசிர் இல்லாமல் ஒலிக்கும் ஒப்பாரி. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக ஒப்பாரி பாடுகிற அனுபவத்தால் கிடைத்த ஆளுமை….

அகிலாண்டக்கிழவி ஒப்பாரி பாடுவதற்காகவே செத்துப்போக வேண்டும் என்று தோன்றும் அதை கேட்பவர்களுக்கு. அப்படி ஒரு அபாரத் திறமை அவளிடம்.

நவரச ஒப்பாரியா… நவரத்தின ஒப்பாரியா… எமலோக ஒப்பாரியா… வாழ்க்கை ஒப்பாரியா…. காந்தாமணி ஒப்பாரியா… மோகனாங்கி ஒப்பாரியா…. தெய்வலோக ஒப்பாரியா…. எல்லா ஒப்பாரியிலும் தேர்ந்த புலமை அவளுக்கு.

தந்தை மகனுக்குப் பாடுவதா… மகன் தந்தைக்குப் பாடுவதா… தாய் மகனுக்கா…. மகன் தாய்க்கா….. யார் யாருக்கு, எதை, எங்கு, எப்போது, எப்படிப் பாடவேண்டும் என்ற வரையறையும், ஏன் … ? என்ற தெறிவும் அவளிடம் இருந்தது.

புதிது புதிதாக கற்பனை செய்து இட்டுக்கட்டியும் பாடுவாள் கிழவி. இறந்தவரின் சிறப்பை அவள் இட்டுக் கட்டிப் பாடுவதைக் கேட்டால் நாமும் ஒரு முறை செத்தால் தேவலை என்று தோன்றும் எவருக்கும்.

குரல் ஏற்ற இறக்கத்தோடு ஒப்பாரிக்கென இருக்கும் விதிகளை மீறாமல் இறந்தவரின் சிறப்புகளைப் பாடும்போது எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சமும் நெகிழ்ந்து கண்ணீர் பெருக்கும்.

தினம் தினம் சாதகம் செய்யும் சங்கீத வித்வான்கூட சமையத்தில் எங்கேனும் சுருதி பிசகிவிடக்கூடும். ஆனால் எப்போதாவதுதான் பாடினாலும் ஒரு சின்னப் பிசிரோ, பிசகலோ இருந்ததில்லை. அப்படி ஒரு நறுவிசு. அப்படி ஒரு திட்டம்.

ஒப்பாரிக் கூட்டாளிகள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குந்தினர் குத்துக்காலிட்டு.

குப்பாத்தா பிரேதத்தின் தலைமாட்டில் உட்கார்ந்தாள்.

தனக்குப் பிறகு குப்பாத்தாவைத் தான் ஒப்பாரித் தலைவியாய் நியமித்திருக்கிறாள் அகிலாண்டக்கிழவி.

கூட்டாளிகளை ஒரு முறை தீர்க்கமாய்ப் பார்த்த கிழவி; அடுத்த ஒப்பாரிக்கு அச்சாரம் போட்டாள்.

குடிசைக்கு வெளியே இறந்த தொப்ளானின் ஒரே மகன் கலியன் சேருமோடையில், தலையில் கை வைத்தபடி குத்துக்காலிட்டுக் குந்தியிருந்தான்.

கட்டை குட்டையான உருவம். அப்பனைப் போலவே உடம்புக்குப் பொருத்தமில்லாத பெரிய தலை. சோகையால் உப்பலான முகம். உடம்பெல்லாம் சாம்பல் பூசினாற்போல சோகை வெளுப்பு. தாடையில் குத்திட்டு நிற்கும் முடி…, வணங்காமுடியாய்த் துருத்தி நிற்கும் செம்பட்டை தலைமுடி.

இடுப்பில் கட்டிய நீர்க் காவி ஏறிய, ஏகப்பட்ட கறைகளைத் தாங்கிய நாலு முழ வேட்டி. அதற்குப் பொருத்தமாய் கழுத்தில் மாலையாய்த் தொங்கும் ஒரு காசித்துண்டு.

கலியனுக்கு அடுத்த மாதம்தான் முப்பது வயது முடியப் போகிறது, என்றாலும் நாற்பதைத் தாண்டி தெரியும் முதிர்ச்சி.

செய்தி கேள்விப்பட்டு வந்த தலையாரி தாளமுத்து தலை குனிந்தபடி குந்தியிருந்த கலியனின் தலைமேல் ஆதரவாகக் கை வைத்து, “ கலியா..” என்றதும் திரியில் தீ வைத்ததும் விர்…ரென் மேலெழும் ராக்கெட் வானம் போல கலியன் ‘விருட்’டென எழுந்தான். கேவிக் கேவி அழுதான்.

“கலியா… நேத்து கூட…” என்று தொடங்கிய தலையாரியின் கைகளை இறுகப் பற்றியபடி கதறினான்.

அழுகைக்கு நடுவே, ‘ராத்திரிக்குப் படுக்கும்போது, “வெள்ளன எழுப்புடா, காளவா பிரிக்கப் போவணும்னாரு… கருக்கல்ல ‘யப்பா… யப்பா’ன்னேன்… எழுவலையே…!” மேலே பேச முடியாமல் அழுதான் கலியன்.

‘தலையாரி எப்போ கிளம்புவார். நாம எப்போ போவலாம்…’ என்று நினைத்தபடி எட்ட நின்றிருந்தவர்கள் தலையாரியையும், கலியனையும் மாறி மாறிப் பார்வையால் துளைத்தனர்.

எப்படி அகிலாண்டக்கழவி முதல் முதலில் ஒப்பாரி பாடி பிறகுதான் மற்றவர்கள் வரவேண்டும் என்று முறை இருக்கிறதோ, அதுபோலத்தான் இதுவும். முதலில் தலையாரி வந்து துக்கம் கேட்டுப் போன பிறகுதான் மற்றவர்கள் வந்து விசாரிக்கவேண்டும். இது எழுதப்படாத சட்டமாக இருந்தாலும், இதை இன்று வரை யாரும் மீறியதில்லை.

இதுபோல சாங்கியமாய் மதிக்கப்படுகிற எழுதப்படாத சட்டங்கள் கிராமங்களில் நிறைய உண்டு.

“அளுவாத கலியா… மனசு தேத்திக்க… அடுத்தாப்ல காரியங்களுக்கு… பணங்… காசு… எதுனா…” என்று சற்றே நீட்டி நிறுத்தினார் தலையாரி.

காசு பணத்துக்கு ஏதும் குறை வைக்கலை எங்கப்பன். பானை நிறைய பணம் கிடக்குது. ‘மொரை’யெல்லாம் கிளவி சொல்லும்..” கலியன் அரற்றினான்.

குனிந்து குடிசைக்குள் போனதும், கையாள் பாலித்தீன் பையிலிருந்து எடுத்துக் கொடுத்த சாட்டை மாலையை தலையாரி வாங்கியபோது அன்னம்மா ஒப்பாரி பாடினாள்.

தலையாரி சென்றதும், அக்கம் பக்க ஜனங்கள் கலியனை துக்கம் விசாரிப்பதும் உள்ளே சென்று திரும்புவதுமாய் இருந்தார்கள்.

பிரேதத்தின் தலைமாட்டில் எரிந்த அரிக்கேன் விளக்கு ‘கபக்… கபக்…’ என்று எகிறிக் குதிக்க, அதை வாயால் ஊதி அணைத்த கிழவி. “சீமெண்ணெண் புட்டி எங்கேடா கலியா..?”என்றாள்.

“அடுப்படீல கெடக்கு… எடுத்தாரட்டா..?”

“நீ வேணாம். ஏய் அமூஸு… கொண்டாந்து ஊத்துடீ..” என்று சொல்லிக்கொண்டே கையூன்றி எழுந்து, கைப்பிடித் துணியால் மூக்கைப் பிழிந்துகொண்டே குடிசைக்கு வெளியே வந்தாள் அயிலாண்டக் கிழவி.

“ஆம்பள ஆளுவ எல்லாம் பல்லு வௌக்கி, பசியாறி வந்துரலாம்… ‘பளார்…’னு விடிய பந்த போட்டாவணும். ஏகப்பட்ட வேலை கெடக்கு…”- ஆங்காங்கே நின்று கொண்டும், சம்மணம் போட்டும், குத்துக்காலிட்டும் குந்தியும் இருந்தவர்களை நோக்கிப் பொத்தாம் பொதுவில் சொன்னாள் கிழவி.

“எலே காத்தவராயா…! கைப்பாரை கொண்டாந்து பந்தலுக்கு ஊனு குளி நோண்டுடாலே…” என்றதும் “செரி ஆத்தா…!” என்று சொன்னபடியே கடப்பாரை எடுத்துவர ஓடினான்.

கண்ணுக்கு மேல் கை வைத்து மறைத்தபடி எட்டப் பார்த்தாள் கிழவி “ எவடீ அவ… பொன்னம்மாவா…! மருமவ எப்படி இருக்கு ?. நாளைக்கு அந்திக்குள்ற பிரசவமாயிரும். கவலைப்படாதே… நீ என்னாத்துக்கு எளவு வீட்டாண்ட வந்து நிக்கிறியாம்… போடீ வூட்டப் பாக்க… போக்கத்தவளே…” என்று கடிந்து கொண்டாள்.

“எதனாச்சும் ஒதவி வேணும்னா கேளு ஆத்தா செய்யுறேன்.”

“வேணுந்தேன்… உனக்கே, புள்ளத்தாச்சி மருமவ இப்பவோ அப்பவோனு இருக்காளேன்னு யோசிக்கறேன்…”

“அதுக்கும் இதுக்கும் என்னாத்தா… எதுனா தேவைன்னா சொல்லு செய்யிறேன். சமயத்துக்கு செய்யத்தானே அக்கம்பக்கம்…”

“செரி… ஒண்ணு செய்யி. சுக்கு , மல்லி தட்டிப்போட்டு ஒரு கலயத்துல சூடாக் கொண்டா. மாரடிச்ச நெஞ்சுக்கு எதமா ஊத்திக்கிடறோம்… ஏண்டீ பொன்னம்மா… ஒன் மவனைப் பத்தி, எங்க இருக்கான்… ஏது செய்யிறான்னு சேதி எதுனா தெரிஞ்சிச்சாடீ…!”

“….” பொன்னம்மா மொனமாய் இருந்தாள்.

“அது எங்கன குடிபோதைல வுளுந்து கிடக்குதோ… எல்லாம் நீ வாங்கிக்கிட்டு வந்த வரம்… கிரகச்சாரம்தான் போ… போ…”

“எலே கலியா…! நீ சின்னக் கொளந்தயில்லே… அவனவன் எரியற வூட்டுல என்னத்தை புடுங்கலாம்னு நிப்பானுவ. நான் குத்துக்கல்லாட்டம் நின்னு அததுக்கு உள்ளதைச் சொல்லுதேன். என்னைக் கலக்காம நீ ஏதும் செஞ்சிராதே…” என்று கிழவி சொல்லிக் கொண்டிருந்ததை காத்தவராயன் கவனமாகக் கேட்டுக்கொண்டே உட்கார்ந்திருந்தான்.

கிழவி காத்தவராயனை கண்ணோடு கண் பார்க்க, அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

“வுளுந்தவன் சிரிச்சானாம் வெக்கத்துக்கு அஞ்சி…! ஒட்டுக் கேக்காம கவனமா வேலையப் பாருடா சோமாரி..” என்று காத்தவராயனை வசைபாடிக்கொண்டிருந்தபோதுதான் “ஆத்தா… சுக்குத்தண்ணி..” என்ற பொன்னம்மாவின் குரல் கேட்டது.

“எலே காத்தவராயா.. அந்த சுக்குத் தண்ணிய கொண்டுபோயி மாரடி வாயிக்குக் குடு… நீ மொதல்ல ஒரு லோட்டா ஊத்திக்க…” என்றதும் கடப்பாறையை தரையில் ஊன்றிவிட்டு எழுந்துவந்தான்.

அந்த நேரத்துக்கு சூடான சுக்குத் தண்ணீர் இதமாக இருந்தது.

எட்டு மணிக்கெல்லாம் தெரு பரபரப்பாகிவிட்டது. தெருவில் ஒரு துஷ்டி என்றால் யாரும் வேலைக்குப் போவதில்லை என்பதால், தெருவாசிகள் எல்லாம் இழவு வீட்டைச் சுற்றிலும் ஆங்காங்கே உட்கார்ந்துகொண்டும், நின்று கொண்டும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்.

வெற்றிலை, சீவல், புகையிலை, சுண்ணாம்பு டப்பா, பொறி கடலை, அன்றைய நியூஸ் பேப்பர்கள், எல்லாம் வாங்கி வந்து முறையாக வைத்துவிட்டான் நாகராசு.

பாடைக்கு வேண்டிய மூங்கில், பச்சைமட்டை, வாழைக்கன்று, பந்தல்கயிறு எல்லாம் கொண்டு சேர்த்தான் சுடலை.

“எலே, வள்ளுவரக் காணலயேடா… தாரை தம்பட்டத்தக் காணலியேடா அளைக்கப் போனது யாரு..?” பொதுவாகத் தொடுத்தாள் கேள்வி.

“போ.. .வாரோம்னு சொன்னான் ஆத்தா ‘தப்பு’ தம்புசாமி…” என்றான் மாணிக்கம்.

“இருந்து கையோட அளைச்சி வராலாமில்ல… நீ அவுசரமா இங்கே வந்து எந்த பாடைல போவப்போறே…” என்று கடிந்து கொண்டிருக்கும்போதே, தெரு முனையில், தாரை, தம்பட்டம், கொம்பு, உறுமிமேளம்… எல்லாம் வந்துகொண்டிருந்தன. அவர்களோடு போதை ரெங்கனும் வந்தான்.

அகிலாண்டக் கிழவிக்கு ரங்கனைக் கண்டதும் வயிறு பற்றியெரிந்தது. ‘இன்னிக்கோ.. நாளைக்கா பிரசவமாவுற நிலைமைல பொண்டாட்டி இருக்கா. இப்பிடிச் சீரழியறானே இந்த ரெங்கன்… பொன்னம்மாவுக்கு இப்படி ஒரு மவனா…!’ என்று நினைத்த கிழவியின் கண்கள் பனித்தன.

கலியன் வீட்டுக்கு முன் நடு வீதியில் புகைந்துகொண்டிருந்த நெருப்பில் கூளத்தைப் போட்டு எகிறவிட்டு தம்பட்டம், உறுமிமேளம் எல்லாம் காய்ச்சிப் பதப்படுத்தினார்கள்.

“ட்..ரான்..ட்..ரா..ன்.. ணக்கு… ணக்கு… ப்ரும்.. ப்ரும்..” என்று உரசியும் தட்டியும் பதம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தாரையின் கதறல், சாவுச் சங்கின் கூவல், கொம்பின் பிளிரல், தப்பின் தட்டல், எல்லாம் கலந்த ஓசை… அந்த ஓசைக்குத் தக்க போதை ரங்கன் விகாரமாக முகம் சுருக்கியபடி, ‘தய்யாத் தக்கடியென…’ விகாரமாக ஆட்டம்போட்டான்.

சின்னஞ்சிறுசுகளுக்கும், குஞ்சு குளுவான்களுக்கும் இது வேடிக்கையாக இருந்தது. ‘நற…நற…வெனப் பல்லைக் கடித்தாள் அகிலாண்டக் கிழவி.

இந்த நேரத்தில்தான் பொன்னம்மாவின் புருஷன் “ஆத்தா.. ஆத்தா.” என்று எட்ட நின்று அழைத்தான். அவன் அழைப்பில் அவசரம் இருந்தது.

“மருமவளுக்கு பிரசவ வலி எடுத்துடுச்சு ஆத்தா…!” குரலில் பதற்றம்.

“பதட்டப்படாதே… அஞ்சு நிமிசத்துல தலைமுளுகிட்டு வந்துடறேன்..”

பிரசவம் பார்த்துவிட்டு வரும்போது கிழவிக்கு ஒரு யோசனை தோன்றியது. “நீ ஒரு ஆம்பளைப் பிள்ளைக்கு அப்பனாயிட்டே…!” என்று சொன்னால் அவன் திருந்திவிடுவான் என்று நம்பினாள் கிழவி.

வாழ்வின் ஜீவநாடியே நம்பிக்கைதானே…!

மகன் பிறந்த சேதி கேட்டதும் ரெங்கன் இன்னும் அதிகமான விகாரச் சிரிப்புடன் “ஏன் பிறந்தாய் மவனே… ஏன் பிறந்தாய்…!!” என்று இளித்துக்கொண்டே குத்தாட்டம் போட்டான்.

‘இவனைத் திருத்தவே முடியாது..’ என்ற முடிவோடு கலியன் அருகில் சென்றாள் அகிலாண்டக் கிழவி.

அத்தியாயம் – 2

‘இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தார் மாதய்யா. நடு நடுவே கொஞ்சம் கோழித் தூக்கம் போடுவதும், திடீரென்று உலுக்கி எழுவதும்… சிறிது நேரம் உலாத்துவதும்… வெற்றிலை சீவல் போட்டுத் துப்புவதும்… வாய் கொப்பளிப்பதும்… தூக்கமின்றிப் புரள்வதுமாக இரவைப் போராட்டத்தோடு கழித்தார்.

மாதய்யா கிராம சேவகர். கொஞ்சம் முன்கோபி. அவருடைய கோபமே அவரின் பலம் என்றால் அதுவே அவருக்கு பலவீனமும் கூட.

‘கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்.’ என்ற பழமொழி இவருக்கு முழுமையாகப் பொருந்தும். கிராமத்தில் அவருக்கு அவ்வளவு மரியாதை.

‘காலந்தவறாமை’ என்பது அவர் ரத்தத்தில் ஊறிய விஷயம்.

சுவர் கடிகாரம் ஐந்து அடித்து ஓய்ந்தது. மாதய்யா எழுந்து மாட்டுத் தொழுவத்தை நோக்கிச் சென்றார்.

கவணையிலிருந்து பசுக்கள் இழுத்துப் பரப்பிய வைக்கோலைக் குச்சியால் திரட்டி மீண்டும் கவணைக்குள்ளே போட்டார். சாணத்தை மாட்டின் குளம்புகள் மிதிபடாத தூரம் ஒதுக்கித் தள்ளினார்.

கோதாவரி, கங்கா, காவேரி, சிந்து, ரோஹிணி… என்று பெயர் சொல்லி ஒவ்வொரு பசுவின் கன்னத்தைத் தடவியும், முகம் தூக்கிக் காட்டிய பசுக்களின் கழுத்தை இதமாக வருடியும் கொடுத்தார். பசுக்களின் கழுத்தில் கட்டப் பட்டிருந்த மணிகளின் ஓசை ஜலதரங்கத்தில் வாசிக்கும் சுப்ரபாதமாய் ஒலித்து, வைகரையின் அழகுக்கு மேலும் அழகு கூட்டியது…

கோதாவரிப் பசு கோமியம் இறக்கியது. “ஈஸ்வரா…” என்று சொல்லிக்கொண்டே, உள்ளங்கையில் கோமியம் ஏந்தி தலையில் தெளித்துக்கொண்டார்.

மாதய்யாவின் மனைவி குந்தலாம்பாள், பளீரெனப் பளிச்சிடும் பால் தூக்கும், விளக்கெண்ணைக் கிண்ணத்தையும் கொண்டுவந்து வைத்தாள். கோதாவரிப் பசுவை அவிழ்த்துத் தனிக்கொட்டகையில் மாற்றிக் கட்டினார்.

கோதாவரிப் பசுவை மட்டும் வழக்கமாக அவரே கறந்துவிடுவார். மற்ற பசுக்களை கோனார் கிருஷ்ணன் வந்து கறப்பார்.

‘ஒவ்வொரு பசுவையும் தனிக் கொட்டகையில் கட்டித்தான் கறக்கவேண்டும் என்பது மாதய்யாவின் சித்தாந்தம். கன்றுகளும் குழந்தைகள்தான். ஒரு கன்று தாய் மடியில் பால் ஊட்டும்போது மற்ற கன்றுகள் அதைப் பார்த்து ஏங்கக்கூடாது…’ என்று நினைப்பவர் அவர்.

இது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் ஒவ்வொரு பசுவையும் கறந்தபின் இடம் மாற்றி, அடுத்த கறவைப் பசுவை கொண்டு வந்து கட்டிக் கறப்பது பழகிவிட்டது கிருஷ்ணக் கோனாருக்கு.

மாதய்யா பால் கறக்கும் அழகே அழகு.

ஒவ்வொரு அவயத்திலும் ஒவ்வொரு தெய்வத்தை ஆவாஹனம் செய்துகொண்டு, நம்மை ரட்சிக்கும் பசுவாகிய நடமாடும் தெய்வத்திடமிருந்து, விநயமாக பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது போல இருக்கும் அந்தப் பால்பிழியும் காட்சி.

தான் பிரசாதம் பெறும் முன், மற்றவரை பெறச்செய்து, பிறர் அனுபவிக்கும் ஆனந்தத்தைக் கண்டுப் பேரானந்தம் கொள்ளும் யோகிபோல் இருக்கும் அவர் செயல்.

கயிற்றுடன் கன்றை அவிழ்த்துவிட்டு, கன்று பால் குடிக்கும் ஆவலில் துள்ளி ஓடி மடியில் வாய் வைக்க, கழுத்துத் தும்பு கால்களை இடற விழுந்து எழுந்து ஊட்டும்போது கால் மிதி பட்டு, கயிறு கழுத்தை இறுக்க ஊட்டுவதில் சிரமம் ஏற்பட, கடி தாங்காமல் பசு கால்த் தூக்க, கன்றுக்கு தாய்மடியே துயரமாய் மாறும் அவலம் மாதய்யா கறவையில் இருக்காது.

கழுத்தில் தடையின்றி, கழுத்துப்பூட்டை அவிழ்த்துவிடுவார். கன்று சுதந்திரமாய் மடிமுட்டிக் குடிக்கக் குடிக்க, அந்தக் கிறக்கத்தில் பசு கன்றின் பிருஷ்டத்தை நாவால் நக்கிச் சுவைக்க, தன்னை இழந்த நிலையில் பசு, பால் முழுவதையும் மடியில் இறக்கும் வரை காத்திருப்பார்.

மடியில் பால் சுரந்து நிறைந்த சேதியை பசு வால் தூக்கி கோமியம் இறக்கித் தெரிவித்ததும், எல்லோரையும் போலக் கன்றை ஒரே இழுப்பு இழுத்து அரக்கத்தனமாக எட்டக் கட்டிவிட்டு பால் தூக்குடன் மடி தொடும் அவசரம் அவரிடம் கிடையாது.

ஊறித் திளைத்துத் திணவெடுத்துப் ‘பும்ம்…மென’ப் பம்மி நிற்கும் பால் மடியில் கன்று சுவாரஸியமாய் பால் குடிக்க, நுறை பிதுங்க வாயில் நிறைந்துள்ள பாலை தொண்டைக்குள் இறக்க, ஒரு கணம் சுரப்பிலிருந்து கன்று வாயை எடுக்கும்போது, அதை ஒரு குழந்தைபோல இரு கைகளாலும் ஏந்தி அரவணைப்போடு மெதுவாக நகர்த்திக் கட்டுவார்.

கன்றின் பிருஷ்டத்தை விட்டு, கன்றின் மேனியெங்கும் பசு நாவால் சுவைத்துக் கொண்டிருக்க, அந்தச் சுகத்தில் கன்று மெய் மறந்து, பருகிய பாலை அசை போடும் நேரத்தில், இளகிய பால் சுரப்பை விளக்கெண்ணை கொண்டு மேலும் இளக்குவார்.

தொடைகளின் நடுவே இடுக்கிய பால் தூக்கில் பால் பீய்ச்சும்போது, தொடையில் சட்டெனப் பரவும் பாலின் இதமான வெம்மை, அதுவும் குளிர்காலத்தில் அதன் சுகமே அலாதி.

பிழியும்போது பாலும் தூக்கும் சந்திக்கும் சங்கீதத்தை எந்த பக்க வாத்திய வித்வானும் தந்துவிட முடியாது. நுங்கும் நுரையுமாகப் பொங்கும்போது, பால் தூக்கிலிருந்து பரவும் பச்சைப் பால் மணம்.

‘இன்னும் எடுத்துக்கொள்… எடுத்துக்கொள்…’ என்று ஊற்றாய்ப் பெருக்கி, மடியை வற்றாமல் வைத்திருக்கும் பசு. மாதய்யா கை பட்டால் வற்றித் தலைமாறின அடிமாடு கூட அம்பாரம் பால் கறக்கும் என்பார்கள் ஊரில்.

வெண்மையான அந்தச் சங்கீத ஆலாபனை முடிந்து, அந்தப் பாலின் நுரை, பொங்கல் வாழ்த்து அட்டைகளில் எழுதிய பொங்கல் பானைச் சித்திரம் போல், கோபுரமாய்ப் பொங்கி நிற்க, இரண்டு கைகளாலும் பால்தூக்கைப் பிடித்தபடி, எழுவார்.

அடுத்து, கன்று பசுவின் மடியில் ஊட்டி இதம் பெற்று, இதமளிக்கும்.

“ஈஸ்வரா…” என்று சொல்லிக்கொண்டே பால் தூக்கை ஓரமாக வைத்துவிட்டு கையில் பிசுபிசுக்கும் விளக்கெண்ணையை பசுவின் முதுகில் தட்டித் தடவிவிட்டு, மாட்டை அவிழ்த்து வெட்ட வெளி முளையில் கட்டினார். கன்று தொடர்ந்து மடிமுட்டிக்கொண்டிருந்தது.

செப்புக் குடமும் விபூதிச் சம்புடமும் எடுத்துக்கொண்டு மீண்டும் மாட்டுத்தொழுவம் வந்தார். காளை தயாராக இருந்தது. “வீரா போலாமா…?” என்று காளையிடம் கேட்டார்.

வீரன் தலையாட்டினான்.

குதிரை தலையை அசைத்து, மணியோசை எழுப்பி, நேரமாயிற்று எஜமானே புறப்படுங்கள் என்று சொல்வதாக Stopping By Woods In A Snowy Evening என்ற கவிதையில், Robert Frost என்ற அமெரிக்கக் கவிஞர் எழுதுவாரே, அதுபோல தலை ஆட்டி மணியோசை எழுப்பி மாதய்யாவை புறப்படச் சொன்னதைப் போல இருந்தது அந்தக் காட்சி.

மாதய்யா வீரனோடு காவிரியாற்றுக்குச் செல்கையில், உயரம், குள்ளம், நோஞ்சான், கட்டை, கருப்பு, மாநிறம், சேப்பு, சோம்பேறி, ஊத்தை வாய், ரெண்டும் கெட்டான், அசடு… இப்படிப்பட்ட விதவிதமான பெண்கள், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் என அவரவர் வீட்டு வாசலில், கோலம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

மாதய்யா ஓட்டிச் சென்ற வீரனின் சலங்கைச் சத்தம் அந்தப் பெண்களின் பேச்சுக்குப் பின்னணி இசையாய் லயத்தோடு ஒலித்தது.

மேலக்கோடி பெருமாள் கோவிலையும் தெருவையும் பிரிக்கும் பாதையில் வலப்புறமாகத் திரும்பினார். நாய்க்கர் ரைஸ் மில்லை ஒட்டிய ராஜம்மா தென்னந்தோப்பைத் தாண்டி நேராகச் சென்றார்.

எல்லையம்மன் கோவில் முகப்பில் மாட்டை நிறுத்திவிட்டு இடிந்து சிதிலமான கோவில் மதிலை பார்த்துக்கொண்டே நின்றார். ‘இதை சீக்கிரம் புதுப்பித்துவிடவேண்டும்…’ என்று மனதார எண்ணினார். அதை ஆமோதிப்பது போல வீரனின் சலங்கை ஒலித்தது.

எல்லையம்மன் கோவிலுக்குப் பின்புறம் மூன்று ஏக்கர் நிலம் மாதய்யாவுடையதுதான். அதில் சம்பாப் பட்டம் மட்டும்தான் பயிரிடுவார் அவர். கோவிலுக்குப் பின்புறம் உள்ளதாலும் அதில் சம்பாப்பட்டம் மட்டுமே பயிரிடுவதாலும் ‘கோவில் சம்பாக்காணி’ என்ற பெயரே அதற்கு நிலைத்துவிட்டது. தரிசாகக் கிடக்கும் மற்ற நாட்களில் மந்தக் கரை போல இதில் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவார்கள்.

மாதய்யா, வீரனைப் ‘பெரிய வாய்க்காலில்’ குளிப்பாட்டிவிட்டு அதைத் தன் சம்பாக் காணியில் மேய்ச்சலுக்கு விட்டார். குடமும் விபூதிச் சம்புடமுமாய் காவிரிக்குப் புறப்பட்டார். ‘பெரிய வாய்க்கால்’ பாலம் தாண்டி நூறு அடியில் ரயில்வே கேட். ரயில்வே கேட்டிலிருந்து ஒரு ஃபர்லாங்கில் தார்சாலை. சாலைக்கு மறுபுறம் சாலையை ஒட்டிப் பாயும் ‘அகண்ட காவேரி’.

காவிரிக்கும் தார்ச் சாலைக்கும் இடையிலிருந்த மயானத்தில் ஆள் நடமாட்டம் தெரிந்தது.

அகண்ட காவேரியில், பாங்காக அமைக்கப்பட்ட கருங்கல் படிக்கட்டுகள். சாலையிலிருந்து நான்கு படிக்கட்டுகள் ஏறி பின் காவிரிக்கு இறங்கவேண்டும்.

படியேறும் முன்னே படித்துறையில் பெண்டுகள் பேச்சுக்குரல் கேட்டு, அதிலிருந்து பத்தடி தள்ளியிருந்த ‘கருமாதிப் படிக்கட்டில்’ இறங்கினார் மாதய்யா.

எல்லோரும் குளிக்கவும் துவைக்கவும் உபயோகப்படுத்தும் படிக்கட்டில் கருமாதி, கல்லெடுப்பு என்று செய்யும்போது, வழக்கமாகக் குளிக்க வருபவர்களுக்கு பாதகமாய் இருக்கும் என்பதால், அது போலக் காரியங்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட படிக்கட்டு அது.

சாதாரண நாட்களிலும் ஜனங்கள் அதை உபயோகிப்பதும் உண்டு.

மாதய்யா கருமாதிப் படிக்கட்டின் வழியாக காவிரியில் இறங்கினார்.

விடிகாலைக் காவிரிக் குளியல் ஒரு சுகானுபவம். அந்த நேரத்தில் சலசலத்து ஓடும் காவிரி நீர் இளஞ்சூடாக, உடம்புக்கு இதமாக இருப்பதன் ரசவாதம்தான் என்ன…?

தண்ணீரில் நின்றபடி கிழக்குத் திசையில் பார்த்தால் தெரியும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். “கஸ்தூரி ரெங்கா, காவேடி ரெங்கா, ஸ்ரீரங்க ரெங்கா… ரங்கா…” என வாய்விட்டு உச்சரித்துக்கொண்டே அழுந்தி அழுந்தித்… தலை முழுகினார்.

கரலாக்கட்டை போன்ற உறுதியான உடம்பும், எதையும் சாதிக்கும் திடமான மனோ பலமும், வயதுக்கு மீறிய வலிவும் வர இந்தக் காலை நேரக் குளியல்தான் காரணம் என்பது மாதய்யாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

குளித்து, அனுஷ்டானம் முடித்துக்கொண்டு தண்ணீர் குடத்தை ஒரு கையிலும், மறு கையில் வீரனையும் பிடித்துக்கொண்டு அவர் வரும்போது, தைத்ரீயம் தவழும்.

மாதய்யாவுக்கு நெடிய வடிவம். நீள் வட்ட முகம். முன் வழுக்கை. சுமாரான வெளுப்பும் செம்பட்டையுமான தலைமுடியைக் விரல்களால் கோதி, நெல்லிக்காய் அளவுக்குக் கட்டிய குட்டிக் குடுமி. பத்தாறு வேட்டியை கச்சம் வைத்து கட்டிக்கொண்டு, மார்பை மூடி யோக வேஷ்டியாய்ப் போர்த்திய அங்கவஸ்திரத்தோடுதான் அவரை எப்போதும் பார்க்கமுடியும்.

காதுகளில் தொங்கும் சிகப்புக் கல் கடுக்கனுக்கு ‘மேட்ச்’சாக இருக்கும், வெற்றிலை காவி ஏறிய பற்கள்.

“மாதய்யாவின் அப்பாவை வெற்றிலைப் பெட்டி, பாக்குவெட்டி சகிதம் உட்கார வைத்து, ஓவியர் சில்பி வரைந்த கோட்டோவியம் வீட்டின் கூடத்தில் கட்டம் போட்டு மாட்டி இருக்கிறது.

“சீனிவாசா, என்னைப் பார்த்து பொம்மை போடப் போறியா? போடு என்று உரிமையோடு சொன்ன அந்த நாளை அடிக்கடி எல்லாருக்கம் சொல்வார் மாதய்யா.

அந்த ஓவியத்தைப் பார்த்தால் மாதய்யா என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். அப்படி ஒரு முக ஒற்றுமை அப்பாவுக்கும் மகனுக்கும்.

ஒற்றுமை உருவத்தில் மட்டுமா..? கோபம், பொறுப்பு, தர்மசிந்தனை, பரோபகாரம்… என எல்லாவற்றிலுமே அப்பாவைப்போல் பிள்ளை மாதய்யா.

காவிரியிலிருந்து திரும்பியதும் பட்டகசாலைக் கொடியில் உலர்த்திய வேஷ்டியை குச்சியால் தள்ளி எடுத்து உடுத்திக்கொண்டு நெடுஞ்சாண்கிடையாக அப்பாவின் படத்துக்கு முன் விழுந்து வணங்கினார்.

குந்தலாம்பாள் கொண்டுவந்து வைத்த அவல் கஞ்சியைக் குடித்தார்.

தாம்பாளம், செப்புக்குடம், மணி, விளக்கு, திரி, எண்ணைசம்புடம், புஷ்பம், பழம், தேங்காய், ஊதுபத்தி, தீப்பெட்டி என அனைத்து பூஜை சாமான்களையும் ஒரு மூங்கில் கூடையில் எடுத்து வைத்துக்கொண்டார்.

கூடையை வண்டியில் வைத்துவிட்டு வண்டியில் உட்கார்ந்து, வகுப்பில் நல்ல மாணவனை ஆசிரியர் முதுகில் தட்டிக் கொடுப்பது போல, வண்டி இழுக்கும் வீரன் முதுகில் தட்டிக்கொடுத்தார். வீரன் வண்டியை சீராய் இழுத்துச் சென்றான்.

சப்பட்டி மதகு கடக்கும்போது, மைனர் காணியில் வெளியூர் ஆட்கள் அரப்பறுத்துக்கொண்டிருந்தார்கள்.

கப்பி சாலையில், ‘கடக்… முடக்… டடக்… டொடக்…’என ஓசை எழுப்பியவாறு வண்டி சென்றுகொண்டிருக்க, எதிர்ப்பட்ட ஓரிருவர் “கும்பிடறேங்கய்யா…!” என்றுவிட்டுப் போனார்கள்.

“அறுப்புங்களாய்யா…?” என்று கேட்டார் கையில் கோலோடு எதிர்ப்பட்ட அண்ணாமலை.

“அறுப்பில்ல… அண்ணாமல… சடையங்கோயில் காணில காளவா முகூர்த்தம் பண்ணிப் பிரிக்கோணும்கறேன்…”

“வேக்காடு சீரா இருக்குதுங்களா…?”

“காத்து அப்பப்ப வீசக்குள்ள எப்படி சீரா இருக்கும்னேன். தென்னண்ட கைல உருக்கடிச்சிறுக்குமோனு சமுசயமாத்தான் இருக்கு… பிரிச்சாத்தான் தெரியும்னேன்…”

“கல்லு குடுக்கறதுங்களா…?”

“உமக்கு வேணுமோ…?”

“எனக்கேன்…? நாட்டுச் செங்கல்லுக்கு நல்ல டிமாண்டு இருக்கேன்னு கேட்டேன்…”

“தர்றத்துக்கில்ல, அம்பது கல்லுதான் போட்ருக்கேன். கல்லு வீடு கட்டிக்கணும்னு தொப்ளான் ஆசையாக் கேட்டான். அதோட கோவில் மதிலுக்கும் தரலாமுன்னு…. எனக்கும் வால்வீச்சு வீசியாவணும்… அதுக்கே பத்துமோ பத்தாதோ…”

“போட்டதுதான் போட்டீரு… மெனக்கடுக்குக் குறைச்சலில்லே… இன்னும் அதிகமாப் போட்டிருக்கலாமில்ல…!”

“அடுத்தாப்ல போட்டாப் போச்சு… வரட்டுங்களா…!”

“நல்லது… வாங்க…”- அண்ணாமலை தன் வழி சென்றார்.

‘அண்ணாமலை சொன்னாப்ல கொஞ்சம் அதிகமா போட்டிருக்கலாமோ…!’ என்ற சிந்தனையில் வண்டியை ஓட்டிக்கொண்டிந்தபோது, வண்டிச் சக்கரம் ஒரு நொடியில்(பள்ளத்தில்) ஏறி இறங்கி மாதய்யாவை அலைக்கழித்தது.

“அய்யா, கும்பிடறேனுங்க…!” எதிரில் வந்த மாணிக்கம் கும்பிடு போட்டான்.

“என்னடா மாணிக்கம்… அறுப்போ…?”

“ஆமாங்க… நானே அய்யாவைப் பார்க்கத்தான் வந்துக்கிட்டே இருக்கேன். ‘கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தாப்ல நீங்களே வந்துட்டீங்க…”

“எதாவது சேதி உண்டா மாணிக்கம்…?”

“பூசர (பூவரசு) களத்து-மேட்ல உங்க களம்தான் காலியாக் கெடக்கு… மத்ததுலெல்லாம் வேல நடக்குது…” என்று இழுத்தான்.

“நான் அடுத்த வாரம்தானே அறுப்பு தொடங்கப்போறேன்…!”

“அது தெரிஞ்சிதாங்க, உங்க களத்தை நாலு நாளைக்கு கேக்கலாம்னு…”

“போட்டுக்க… போட்டுக்க … எனக்கு அறுப்பு தொடங்கினதும், இடைஞ்சல் இல்லாம காலிபண்ணிக் கொடுத்துட்டா சரிதான்…”

“சரிங்க…”

“ஏண்டா… சடையங்கோவில் வழியாத்தானே வர்றே… தொப்ளான் கண்ல பட்டானாடா…?”

‘தொப்ளான் செத்துட்ட சேதி அய்யாவுக்குத் தெரியாது போலிருக்கே… சொல்லிரலாமா…!’ என்று குழம்பிக்கொண்டு நின்ற மாணிக்கம், ‘காலை நேரத்துல நம்ம வாயால அவருக்கு இழவு செய்தி சொல்ல வேண்டாம்…’ என்ற எண்ணத்தில் “பாக்கலீங்களே…” என்றான்.

“எதுக்கப் பாத்தா நான் காளவாயாண்ட இருக்கறதா சொல்லி விரசா வரச்சொல்லு…” சொல்லிவிட்டு “வீரா… போ… என்று செல்லமாய் தட்டி வண்டியைக் கிளப்பினார்.

“சரிங்கய்யா…!” ஒற்றை வார்த்தையை அவசரமாய்க் கொட்டிவிட்டு விரைவாய் இடத்தைக் காலி செய்தான் மாணிக்கம்.

மாணிக்கத்தின் மனசில் குற்ற உணர்வு உறுத்தியது.

“அய்யா…!” என்று அழைத்துக்கொண்டே, மாட்டுவண்டியைத் தொடர்ந்து ஓடினான்.

தலைக் கயிற்றை இழுத்து வண்டியை நிறுத்திய மாதய்யா “ஏண்டா…! மாணிக்கம் துரத்திக்கிட்டு ஓடி வந்த நீ இப்படி ‘கம்’முனு நிக்கிறே…?”

“அய்யா… உன்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க மொதல்ல…”

“என்னடா சொல்றே…? நான் எதுக்கு மன்னிக்கணும்…? நீ எனக்கு என்ன தப்பு பண்ணினே…?”

“அய்யா, நான் தப்புதான் பண்ணிட்டேன். ஒரு உண்மைய மறைச்சிட்டேன்…”

“களம் உனக்காகனு சொல்லி வேற யாருக்காவது… அப்படியே செஞ்சாலும் இது ஒரு பெரிய தப்பு இல்லியே… இதெல்லாம் சகஜம்தானே…”

“அதில்லைய்யா… தொப்ளானைப் பாத்தியானு கேட்டீங்கல்ல…”

“அதான் பாக்கலைனு சொல்லிட்டியே…!”

“அதுதானுங்க பொய்யி… தொப்ளான் விடி கருக்கல்ல செத்துட்டாருங்க…”

“என்ன…! தொப்ளான்… செ…த்…து…ட்டா…னா…??” அதிர்ந்த மாதய்யாவின் முகம் வாட்டம் கண்டது…

சடையன் கோவில் காணியை நோக்கி வண்டியை வீரன் மெதுவாக இழுத்துச் செல்ல, மாதய்யாவின் மனம் பின்னோக்கிச் சென்றது.

“அய்யா…! நாளைக்கு விடி கருக்கல்’ல நீங்க காளவாய்க்கு வந்துருங்க… பூசை போட்டுப் பிரிச்சிருவோம்…” நேற்று மாலை சொல்லிவிட்டுப் போன தொப்ளான் இன்று இல்லை என்று நினைக்கையில் மாதய்யாவுக்கு ஆயாசமாக இருந்தது. இனம்புரியாத கவலை அவரைப் பற்றிக்கொண்டது.

‘இடிக் கொம்புக்காரன் கோழிக்குஞ்சுக் கூச்சலுக்கு அஞ்சினா சரியா வராது… எப்படா… இவன் தடுக்கி விழுவான், கைக் கொட்டிச் சிரிக்கலாம்’னு காத்திருக்கற ஜனங்களுக்கு நடுவுலதான் நீ தடுக்கி விழுந்துராம எல்லாத்தையும் நிர்வாகம் பண்ணணும். அப்படியே தடுக்கி விழுந்துட்டாலும், விழுந்துட்டோமேனு விழுந்தே கிடக்காம பயிற்சி பெற்ற போர் வீரனைப் போல எழுந்து நின்னு வாழ்க்கையோடப் போராடணும். எச்சரிக்கையா இருக்கணும்… எதுக்கும் கலங்காம இருக்கணும்… நீ மிலிட்டரில இருந்தவன். உனக்கு எப்பவும் கலக்கமே வரக்கூடாதுடா மாது…” அப்பா தன் கடைசீ காலத்தில் அடிக்கடிச் சொல்லிச் சொல்லி உருவேற்றியது நினைவில் உதித்தது.

பழக்கப்பட்ட வீரன், சடையன் கோவிலின் முன் நின்றான். பல்லக்கு நுகத்தடியை கழுத்திலிருந்து விடுவித்துவிட்டு பூஜை சாமான்கள் அடங்கிய கூடையைக் கையில் எடுத்துக்கொண்டு கூப்பிடு தூரத்தில் இருக்கும் காளவாய் நோக்கி நடந்தார்.

நினைவுகள் பின்னோக்கி ஓடின.

– தொடரும்…

விகடன் மின் இதழான மை விகடன் இதழில், 02.05.2022 அன்று கலியன் மதவு என்ற சமூக நாவல் தொடங்கித் தொடர்ந்து 28.01.2023 ல் அதை நிறைவு செய்யும் வரை, அதைச் சிறப்பாக வெளியிட்டு ஊக்குவித்த ஆனந்த விகடன் ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – ஜூனியர் தேஜ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *