அத்தியாயம் 15 – 16 | அத்தியாயம் 17 – 18 | அத்தியாயம் 19 – 20
அத்தியாயம் – 17
‘பாவம் புஷ்பா…’
‘ஒன்பது வயசுல தாலியைக் கட்டிவிட்டு;
பத்து வயசுல அறுத்துவிட்டு;
பெண்ணாய்ப் பிறந்தவ அனுபவிக்க வேண்டிய எந்தச் சுகத்தையும் அனுபவிக்க விடாம;
கதறக் கதற மனசாட்சியே இல்லாம தலையை மொட்டையடிச்சி, முக்காடுப் போட்டு மூலைல உட்கார வெச்சிடுத்தே இந்தச் சமூகம்…’
எல்லோரையும் போல, முன்பெல்லாம் சமூகத்தைச் சாடினவள்தான் குந்தலாம்பாளும்,.
‘ஒரு கதவு அடைச்சா இன்னொரு கதவு திறக்கும்’ கறது எவ்வளவு சத்தியமான வார்த்தை. ராஜாராம் மோகன் ராய் திறந்தது பெண்களுக்கான பரமபதவாசல் அல்லவா…
‘உன் பலத்தைக் கொண்டு, பலவீனத்தைப் போக்க வேண்டும்.
‘உன் அனுமதியின்றி, எதுவும் உன்னுள் நுழைந்துவிட முடியாது.’
‘நம்மிடம் பலவீனத்தை வைத்துக்கொண்டு சமூகத்தைச் சாடுதல் எந்த விதத்தில் ஞாயம்…!’
இப்படிப்பட்ட ஆணித்தரமான விவேகானந்தரின் கருத்துக்களையெல்லாம் படிக்கப் படிக்க, குந்தலாம்பாள் தன்னுள் நிறைய மாற்றங்களை உணர்ந்தாள்.
‘பால்ய விவாகம், வைதவ்யக் கோலம். பெண்ணடிமை, இதற்கெல்லாம் சமூகம் மட்டுமே காரணமல்ல…!’ என்று உறுதியாக நம்பினாள்.
சகோதரி புஷ்பாவின் பால்ய விவாகம், வைதவ்யம் இரண்டு சடங்குகளும் முடிந்துவிட்டது.
அடுத்த இலக்கு குந்தலாம்பாள்தான் அந்த வீட்டில்.
‘பெரியவர்களைப் பேசவிட்டால் வார்த்தைகளை வலைப் போல் பின்னி அதில் சிக்க வைத்துவிடுவார்கள். சிக்கிவிடக்கூடாது…’
முடிவு செய்தாள்.
“என் கிட்டேக் கல்யாணப் பேச்செல்லாம் வேண்டாம்…”
எடுத்த எடுப்பில் மறுத்தாள் குந்தலா.
பெரியவர்கள் சமாதானம் சொன்னார்கள்.
‘வேண்டாம்’
மூர்க்கத்தனமாக மறுத்தாள்.
அறுபது வருஷங்களுக்கு முன் விவேகானந்தர் படித்திருக்கவில்லை குந்தலா.
ராஜா ராம் மோகன் ராய் பற்றிய அறிவு கிடையாது.
இன்று இருக்கும் மனமுதிர்ச்சி அன்று துளிக்கூடக் கிடையாது.
பயம்…! இனம் தெரியாத பயம்…!
இதே பயத்தினால் புஷ்பா அடங்கிப் போனாள்.
‘அடங்கிப் போனதால் அனுதாபப்பட்டு அன்பாக ஆராதித்தார்களா புஷ்பாவை. இல்லையே…!’
‘பெற்ற மகள் என்ற பாசத்தைவிட, புஷ்பாவின் எதிரில் வருவது அச்சானியம் என்ற சுயநலத்தோடு, பின் கட்டில் ஒளிந்திருந்தார்களே அப்பாவும் அம்மாவும்…’ நினைத்து நினைத்து அருவருத்தாள்.
கூடப்பிறந்தவள், என்று கூடப் பார்க்காமல் ‘துக்கிரி முண்டை’ என்று விளித்த பெரியண்ணா வைதீஸ்வரனின் அழுக்கு குணத்தை நினைத்து, விம்மி வெடித்தது அவள் மனம்.
‘புஷ்பாவின் நிலை தனக்கு வந்துவிடக்கூடாது’
தற்காப்பு உணர்வு, விழிப்புணர்வைத் தந்தது.
புஷ்பா பயத்தினாள் அடங்கிப் போனாள். விதியின் மேல் பழிபோட்டுவிட்டு வீழ்ந்துகிடக்கிறாள்.
கவிக்குயில் சரோஜினி நாயுடு A Challenge To Fate என்ற கவிதையில்
‘O Fate, in vain you hanker to control My frail, serene, indomitable soul.’
என்று விதியை எதிர்த்துச் சவால் விட்டதுபோல் குந்தலாம்பாளும் சவாலுக்குத் தயாரானாள்.
பயமுறுத்துபவர்களை தைரியமாகத் திரும்பிப் பார்த்தாள்.
திடமாக மறுத்தாள்.
முகம் காட்டினாள்.
மூர்க்கமாகப் பேசினாள்.
ஒரு அளவிற்கு மேல் கட்டாயப்படுத்தவில்லை.
பயப்படுபவர்களைத் துரத்தித் துரத்தி அழிக்கும் சமூகம். தைரியமாய் திரும்பிப் பார்ப்பவர்களைக் கண்டு மிரளும்.
திடமாய்த் திரும்பிப் பார்த்த அவள் வழியில் யாரும் குறுக்கிடவில்லை.
எந்தக் காலத்திலும் அடங்கிப் போனவர்கள் மட்டுமே அடக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்த்து நின்றவர்களை எதிர்க்க முடியாமல் புறம் காட்டி ஓடியிருக்கிறார்கள்.
இதுதான் பொது விதி.
இதுதான் வரலாறு.
குந்தலாம்பாளிடம் எவரும் கல்யாணப் பேச்சு எடுக்கவேயில்லை.
துணிந்தபின் அவளுக்குள் தன்னம்பிக்கைத் தளிர் விட்டது.
துணிவே துணையானது அவளுக்கு.
“சுப்பாமணியோடு நானும் பள்ளிக்கூடம் போவேன்..”
அடுத்த கோரிக்கை வைத்தாள்.
செவிசாய்க்கவில்லை என்பதால் பிடிவாதம் பிடித்தாள்.
அவளுக்குக் கிடைத்தது வெற்றி.
கொடுமுடி வெங்கடாச்சாரி வாத்யாரிடம் அவளை அழைத்துப் போனார்கள்.
குந்தலாம்பாளின் அடிப்படை அறிவை சோதித்துவிட்டு, 5ம் வகுப்பு வரை பிரைவேட் ஸ்டடி போட்டுக் கொடுத்தார் அவர்.
உள்ளுர் டிஸ்ட்ரிக் போர்டு நடுநிலைப் பள்ளியில், ஆறாவது வகுப்பில் சேர்த்தார்கள் அவளை.
எட்டாவது வரை அங்கு படித்தாள்.
“அதற்கு மேல் அவளும் படிப்பைப் பற்றிப் பேசவில்லை. ஒரு வேளை கேட்டிருந்தால் சங்கரியைப் போல் உயர்நிலை, கல்லூரிப் படிப்பெல்லாம் படிக்க வைத்திருப்பார்களோ என்னவோ…!”
இப்போது நினைத்துப் பார்த்தாள் குந்தலாம்பாள்.
குந்தலாம்பாளின் வயதொத்தவர்களில் சங்கரி மட்டும்தான் பி.ஏ., வரைக்கும் படித்தாள்.
டைப்ரைட்டிங், ஷார்ட்ஹாண்ட் எல்லாம் தேறினாள்.
கலெக்டர் ஆபீசில் வேலை கிடைத்தது அவளுக்கு.
‘வேலை பார்த்த இடத்திலேயே சூப்ரண்ட்டாக இருந்த ராமதுரைக்கு வாக்கப்பட்டாள்.
‘இப்போது பேரன் பேத்திகளோடு எங்கே இருக்காளோ…!’
சங்கரியின் ஞாபகம் வந்து போனது குந்தலாம்பாளுக்கு.
புஷ்பா
பெயருக்குத் தகுந்தாற்போல் மிருதுவான சுபாவம்.
அவள் அனுபவித்தக் கொடுமைகள் கொஞ்சமா நஞ்சமா…!
குந்தலாம்பாளை விட ஒரு வயது மூத்தவள் புஷ்பா.
புஷ்பாவுக்கு ஒன்பது வயசு.
வயசுக்குக்கூட வராத சின்னஞ்சிறுமி அவள்.
கோவிலில் வைத்துப் பிரார்த்தனை முடியிறக்கி;
தலையில் சந்தனம் தடவி;
புதுபாவாடை அணிவித்து;
ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து;
வடை பாயஸத்துடன் விருந்து வைத்து;
பாலும் பழமும் இனிப்புகளும் ஊட்டி;
சந்தோஷப்படுத்த வேண்டிய வயசு புஷ்பாவுக்கு.
ஆனால், ‘என்ன நடக்குது…?, ஏது நடக்குது…?’ என்று ஒன்றும் புரியாமல் குழம்பிப்போய், ‘திருக் முறுக்’ என்று விழித்துக் கொண்டிருந்தாள்.
தன்னைச் சுற்றிலும் அழுது அரற்றிப் பிலாக்கணம் சொல்லும் பெண்டுகளைக் கண்டு பயந்து நடுங்கினாள்.
சில சமயம் அதெல்லாம் வேடிக்கையாகப் பட்டதோ என்னமோ… சிரித்தாள்.
அசோகவனத்தில் சீதாப்பிராட்டியைச் சுற்றி அரக்கியர்கள் அச்சுறுத்தியதைப் போல் மொட்டை முக்காட்டுக் கூட்டம் புஷ்பாவை மிரட்டியது.
புலிக்கூட்டத்தில் மாட்டிக்கொண்ட மான் போல் மிரண்டுபோயிருந்தாள் புஷ்பா.
அவள் கழுத்தில் தொங்கிய தாலியை அறுத்து எடுத்து, பால் சொம்புக்குள் போட்டாள் ஒரு கிழவி.
நூற்றுக் கணக்கான பிரேத பரிசோதனைகளைச் செய்த மருத்துவர், எந்த வித உணர்வுக்கும் இடக் கொடுக்காமல் கடமையே கண்ணாக செய்வதுபோல் தொழில் முறையில் நடந்தது அந்தச் சடங்கு.
‘அப்பாடா…கழுத்துல இருந்த தேவையில்லாத பாரம் இறங்கிடுத்து…!’
சந்தோஷப்பட்டவள் போல.. வெறும் கழுத்தை உள்ளங்கையால் தடவி விட்டுக் கொண்டாள் அந்தகச் சிறுமி.
இப்போதெல்லாம் கிராம்ம், நகரம் என்ற வேற்றுமையின்றி எங்கெங்கும், கையில் செல்போனை வைத்துக் கொண்டு வீடியோ கேம் ஆடுகிறார்கள் பெண் குழந்தைகள்.
அந்தக் காலத்தில் இதெல்லாம் ஏது?
கிராமத்தில் பெண் குழந்தைகள், கல்லாங்காய், பல்லாங்குழி, தாயக் கட்டை, பரம பதம், ஆடுபுலியாட்டம் போல ‘வளவியாட்டம்’ என்கிற விளையாட்டுப் பிரசித்த்தம்.
உடைந்த வளையல்களை ஆர்வத்துடன் சேகரிப்பார்கள் பெண் குழந்தைகள்.
சேகரிப்புக்காக தன் கை வளையல்களை உடைத்துவிட்டு, ‘உடைஞ்சிப் போச்சும்மா..’ என்று வீட்டில் பொய் சொல்லும் குழந்தைகளும் உண்டு.
வளவியாட்டம் தொடங்கும் முன், ஒவ்வொரு நிறத்திலும், இரண்டு வளையல் துண்டுகள் வீதம் எட்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட ஜோடிகளைச் சேர்த்துக் கொள்வார்கள்.
இந்த விளையாட்டுக்கத் தரையில் ஒரு வட்டம் வரைய வேண்டும்.
சிறிய வட்டமாகப் போட்டால் விளையாடுவதற்குக் கஷ்டமாக இருக்கும். பெரிய வட்டமாக இருந்தால் எளிதாக விளையாடலாம் வளவியாட்டம்.
விளையாடுபவர்களின் மனநிலையைப் பொறுத்து வட்டத்தின் விட்டம் மாறுபடும்.
வளையல் துண்டுகளை மொத்தமாப ஓர் கையில் எடுத்து வட்டத்துள் போடுவாள் ஒருத்தி.
அடுத்து, ஏதாவது ஒரு நிற வளையலை எடுத்துக்கொள்வர்.
அந்த வளையல் மூலம் அதே நிற ஒரு ஜோடி வளையல் துண்டுகளை இழுத்துக் கொண்டு வெளியே வர வேண்டும்.
அதிகம் வளையல் ஜோடிகளை வெளியில் எடுக்க எடுக்க வெற்றி எண்ணிக்கைக் கூடும்.
வளையலை வட்டத்துக்குள் போடும்போது, வளையல் துண்டுகள் வட்டத்துக்கு வெளியில் விழுந்துவிட்டாலோ;
வளையல் துண்டுகளை வெளியில் எடுக்கும்போது, அருகிலிருக்கும் வளையல் துண்டு நகர்ந்துவிட்டாலோ;
வளையல் நிறத்துக்கு ஏற்ற ஜோடியை விடுத்து மாற்றிச் சேர்த்துவிட்டோலோ;
தோற்றதாகக் கருதப்படுவார்கள்.
பத்தாம் நாள் சாங்கியத்தின் முதல் கட்டமாக தாலியை அறுத்துப் பால் செம்பில் போட்டாகிவிட்டது.
அடுத்த அமங்கல நிகழ்வுக்குத் தயாரானார்கள்.
புஷ்பாவின் கை வளையல்களை உருவினாள் ஒரு மூதாட்டி.
ஆளாளுக்கு அவைகளை உடைத்தார்கள்.
வண்ண வண்ண ஆரங்களாய் உடைத்து, பளிச்சிட்டவாறு, பரவலாக்க் கிடைந்த வளையல் துண்டுகள், புஷ்பாவுக்குக் கிளர்ச்சியூட்டின.
‘எல்லாரும் போனப்பறம், ‘வளவி விளையாட்டு விளையாட இதையெல்லாம் பொறுக்கி வெச்சிக்கணும்…’
மனசில் நினைத்துக்கொண்டாள் புஷ்பா.
கொல்லைக்கட்டில் நெல் பரத்தி அதன்மேல் போடப்பட்டிருந்தது.
பலகை மேல் புஷ்பாவை உட்காரவைத்தார்கள்.
நாவிதன் கத்தியோடு அவள் முன் குந்தி அமர்ந்தான்.
மிரண்டாள் புஷ்பா. பயம் அழுகையாய் வெளிப்பட்டது.
கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். இரண்டு வைதவ்யப் பாட்டிமார்கள்.
நாவிதன் ராசகிரி அவள் தலையில் தண்ணீரைச் செழும்பத் தெளித்து கையால் தேய்த்தான்.
‘வரக் வரக்…’
புஷ்பாவின் தலையை முண்டகம் செய்தான்.
மாட்டுத் தொழுவத்தில், குளம்புகளால் மிதிபட்டு, வைக்கோலும் கருக்காயும் பிசறியபடி கிடந்த பசுவின் சாணத்தைத் திரட்டி, உருட்டிக் கொண்டு வந்தாள் ஒருத்தி.
சுவற்றில் அறைந்து விராட்டி தட்டுவது போல் மொன்னைக் கத்தியால், மொட்டைப் போட்ட எரிச்சலோடு இருந்த புஷ்பாவின் தலையில், சாண உருண்டையைத் “தொத்” என்று போட்டாள் ரங்கம்மாப் பாட்டி.
அதைத் தொடர்ந்து உள்ளங்கையில் தண்ணீர் ஏந்தி ஏந்தி, சாணியின் மேல் தெளித்து இளக்கித் தலைமுழுதும் ‘ஷாம்பூ போல’ அப்பி அரக்கித் தேய்த்தாள் கமலாம்பாப் பாட்டி.
சாங்கியம் செய்யும் பாட்டிமார்களின் முகங்களில், ‘நாம் அனுபவித்ததை அவளும் அனுபவிக்கட்டுமே…!’ என்ற வக்ரம் அப்பட்டமாய்த் தெரிந்தது.
திமிர விடாமல், அழுத்திப் பிடித்ததால் ஏற்பட்ட வலி;
கத்தவிடாமல் வாயைப் பொத்திய உள்ளங்கையில் இருந்து வீசிய கெட்ட வாடை;
வெறும் தண்ணீரைத் தடவி ‘வரக் வரக்’ என மொக்கைக் கத்தியால் முண்டகம் செய்த எரிச்சல்;
அதன் மேல் அப்பிய சாணி இளகிக் கண், காது, மூக்கு, வாய் எங்கும் இறங்கி வீசிய துர்நாற்றம்;
பின்கட்டில் நனைந்தும் நனையாமலும் குவிந்து கிடக்கிற ஈரத் துணிகளின் வேகம்;
சாக்கடை அடைத்துக் கொண்டதால் வீசும் கும்பி நாற்றம்.
எல்லாம் சேர்ந்து வீசியது அங்கே.
புஷ்பா, குடல் பிரட்டி வாந்தியெடுத்தாள்.
“ஆம்படையானை முழுங்கிட்டு வாந்தியா எடுக்கறே…?”
அவள் ப்ருஷ்டத்தில் பளீரென்று ஒரு அடி இறங்கியது.
கண் முன் இப்போது போல் அந்தக் காட்சித் தெரிய குந்தலாவுக்குத் தூக்கிப் போட்டது போல் உணர்ந்திருக்க வேண்டும். அவளின் அங்க அவயங்கள் அதைப் பிரதிபலித்துக் காட்டின.
‘அய்யோ கொடுமையே’
வாய் அனிச்சையாய் உச்சரித்தது…
‘என்னதான் சமூகம் தேவையற்றக் கட்டுப்பாடுகளையும், மூட நம்பிக்கைகளையும் விதைத்தாலும் அதிலிருந்து மீண்டு வந்தவர்களும் இந்த சமூகத்தில் இல்லையா என்ன…?’
‘புஷ்பாவிற்கு போர்குணங்கள் இருந்திருக்கவேண்டும். அது இல்லாததால்தான் அவள் காலத்துக்கும் இப்படியே முக்காடிட்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறாள்…’
‘அறியாத பருவத்தில் இந்தச் சமூகம் என்னதான் செய்யட்டுமே…! அறியும் பருவம் வந்ததும் சீறி எழுந்திருக்கலாமே…! பாண்டு மாமாவின் மகள் பார்வதியைப் போல.’
நினைத்துக் கொண்டாள் குந்தலாம்பாள்.
பார்வதி ஈஸ்வரன் கோவில் பரிசாரகர் பாண்டுரங்கனின் ஒரே மகள்.
வறுமை காரணமாக தன் பத்து வயசு மகளை, நாற்பத்தைந்து வயது தாசில் பண்ணை வெங்கட்ரமணாவுக்கு கோவில் சந்நிதியிலேயே வைத்து கல்யாணம் செய்து வைத்தார் பாண்டு.
“தெரண்டதும் (பூப்படைந்ததும்) பார்வதியை அனுப்பிவைங்கோ மாமா…!”
மாப்பிள்ளை பெருந்தன்மையாகச் சொன்னதால், அப்பா, பாண்டுரங்கன் நிழலிலேயே இருந்தாள் பார்வதி.
அந்த வருஷம் மார்கழி மாசம் பனி கடுமையாக இருந்தது.
பனி என்றால் பனி அப்படி ஒரு பனி.
குளிர் தாங்காமல் கபம் கட்டிக் கொண்டது தாசில் பண்ணைக்கு.
உள்ளூர் வைத்தியர் ராமப்பிரசாதய்யாவின் சூரணத்துக்குக் கபம் கட்டுப்படவில்லை.
மூச்சுத் திணறல் வந்து, நிமிஷமாய்ச் செத்துப்போனார்.
புஷ்பாவுக்குச் செய்த அத்தனை வைதவ்யச் சடங்குகளும் சம்ப்ரதாயங்களும் பார்வதிக்கும் முறையாக நடந்தன.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை தலை மழித்தார்கள். அதனால்தானோ என்னவோ தலை முடி கரு கருவென்று வாளிப்பாய் வளர்ந்தது பார்வதிக்கு .
பதிமூணு வயசில் ‘நான் மொட்டையெல்லாம் போட்டுக்க மாட்டேன்…” என்று முரண்டு பிடித்தாள்.
வற்புறுத்திப்பார்த்துவிட்டு, கதைக்காகாதென, விட்டுவிட்டார்கள்.
கறுகறுவென்ற ஆறடிக்கூந்தலுடனும், துறுதுறுத்த கண்களுடனும், பாராமறிப்புள்ள கொல்லையில் கிளம்பிய வாழைக்கன்று போல், வெடித்து வெளிவந்த மூங்கில் குறுத்துபோல் நிகு நிகுவென்று வாளிப்பாய் நின்ற பதினாறு வயசுப் பார்வதியை கொல்லுமாங்குடி ஈஸ்வரமூர்த்தியின் மகனுக்குக் கேட்டார்கள்.
“அய்யோ… அவ வீணாப் போனவ…!” என்று பாண்டு ரங்கன் அதிர்ச்சியாய் சொன்னார்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளை மருமகளாக்கிக் கொண்டார்கள்.
‘இதோ! பேரனும் பேத்தியுமாக, பார்வதி, அமோகமாகத்தானே இருக்கிறாள்.’
இப்படி முன்னும் பின்னுமாக ஏதேதோ சிந்தனைகள் குந்தலாம்பாளைச் சூழ்ந்துச் சுழற்றின.
பெற்றவர்களையும், பெரியவர்களையும் எதிர்த்துப் பேசுதல்;
உடமை உரிமை என்றெல்லாம் முழங்குதல்;
ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து;
மரணம் தழுவிவிட்டால் மறுமணம் ;
பெண்ணீயம், பெண் விடுதலை
இப்போதுபோல, இப்படியெல்லாம் அந்த நாட்களில் பேசிவிடத்தான் முடியுமா…?
பெரியவர்கள் அப்படி ஒரு கண்டிப்பும், ஆதிக்கமும் செலுத்திய நாட்களல்லவா அந்த நாட்கள்.
ஒன்பதே வயதான புஷ்பா தோழிகளோடு சொப்பு வைத்து வாசல் திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
“புஷ்பா, உனக்குக் கல்யாணம்டீ…!”
அம்மா சொன்னதும் ‘கலகல’வென்று சிரித்தாள் புஷ்பா.
‘சொப்பு வைத்து விளையாடறது போல அம்மா தன்னை வைத்து விளையாடறா போல’
புஷ்பாவின் எண்ணத்தை அந்தச் சிரிப்புப் பிரதிபலித்தது.
சொந்த அத்தைப் மகள் புஷ்பாவைப் பெண் பார்க்க வந்தான் பரசு.
பரசுவுக்கு வயசு பனிரெண்டு.
அவனை வேதபாடசாலையில் சேர்ந்தபோது வயது 5.
7 வருஷ காலம் அத்யயனம் பூர்த்தியாகிவிட்டது.
தலையில் கருகருவென்று கட்டுக் குடுமி.
பட்டு வேட்டியைக் கட்டிக்கொண்டு, அங்க வஸ்திரத்தை யோக வேஷ்டியாய்ப் போர்த்தியிருந்தான்.
அம்மா அப்பாவிற்கு நடுவில் உட்கார்ந்திருந்த பரசுவுக்கும் இது புது அனுபவம்தான்.
‘பெரியவர்கள், குழந்தைகளான தங்களை வைத்து விளையாடுவதாக’த்தான் நினைத்தார்கள் பரசு, புஷ்பா இருவருமே.
‘தங்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்..’ என்ற அறியாமையில் இருந்தார்கள் அவர்கள்.
அறியாமையில் இருந்த குழந்தைகளை பெரியவர்கள் அவர்களுக்குத் தெரிந்த வழியிலெல்லாம் இயங்கிய காலமல்லவா அது.
“பரசுவை உனக்குப் பிடிச்சிருக்காடீ…!”
அத்தை கேட்டாள்.
“எனக்குப் பிடிக்குமே அவனை…!”
என்றாள் புஷ்பா.
“ஆம்படையானை அவன் இவன்’னு சொல்வாளா… அவர்னு சொல்லு…!”
திருத்தினாள் அம்மா.
புஷ்பா ‘கலகல’ வென உண்டியல் குலுக்கியதுபோலச் சிரித்தாள்.
அவள் சிரிக்க எல்லோரும் சிரித்தார்கள்.
சின்னஞ்சிறுவர்கள் இரண்டு பிரதிமைகளை வைத்து விளையாடும் அம்மா அப்பா விளையாட்டை பெரியவர்கள் பெரியவர்கள்… இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு விளையாடினார்கள்.
“புஷ்ப்பாவைப் பிடிச்சிருக்காடா பரசு…?”
அம்மா கேட்டாள்.
“எனக்கும் பிடிக்குமே…” என்றான் பரசு.
அம்மாவின் மடியிலிருந்து எழுந்து முன்னே வந்தாள் புஷ்பா.
“விளையாடலாம் வாடா பரசு…”
அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
“இப்போ விளையாடக் கூடாது…! கல்யாணத்துக்கு அப்பறம் விளையாடலாம்…” வக்ரம் வார்த்தையாக உருவெடுத்தாற்போலிருந்தது.
எல்லாரும் சிரித்தார்கள்.
இரட்டை அர்த்தம் பொருந்திய வக்ரப் பேச்சைப் புரிந்துக் கொள்ளும் வயசா அவர்களுக்கு…?
புஷ்பாவும் குந்தலாவும் அக்கம்பக்கத்துக் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தார்கள்…
“இனிமே இப்படி பொறுப்பில்லாம விளையாடல்லாம் கூடாது… உனக்குக் கல்யாணம் ஆகப்போறது…!”
புஷ்பாவை விரட்டினார்கள்.
“இனிமே அவளோட விளையாடப்படாது…”
குந்தலாவைக் கண்டித்தார்கள்.
“குந்தலா விளையாடப் போறா…! நானும் போவேன்…!”
புஷ்பா அழுவாள்.
ஆராட்டம் செய்வாள்.
“சாப்பிடமாட்டேன்…!” என்று அழிச்சாட்டியம் செய்வாள்.
“புஷ்பாவுக்குத் தெரியாம விளையாடப் போடீ…!”
குந்தலாவுக்கு திருட்டுத்தனம் சொல்லிக் கொடுத்தார்கள்.
‘ஓடி ஆடித் திரியும் கன்றுக்குட்டியைப் பட்டிக்குள் அடைத்து வாட்டியதைப்போல் புஷ்பா பட்ட கொடுமை, அவள் தவித்த தவிப்பு……..
“அய்யய்யோ, பெருங்கொடுமை…”
குந்தலாம்பாளின் வாய் முணுமுணுத்தது.
ஒருநாள், பட்டகசாலையில் அவள் வயதொத்த சிநேகிதர்களோடு அமர்ந்து பாவாடையைப் பரத்திக்கொண்டு கல்லாங்காய் விளையாடிக் கொண்டிருந்தாள் புஷ்பா.
“ஏண்டீ… கல்யாணம் ஆகப்போற பொண்ணு, இப்படிப் பொறுப்பில்லாம, லஜ்ஜையில்லாம கால் பரப்பிண்டு என்ன விளையாட்டு இது…?”
வழக்கம்போல ஒரு கரண்டி காப்பிப் பொடி கடன வாங்க வந்தாள் பட்டு மாமி.
விளையாடிக்கொண்டிருந்த புஷ்பாவின் தலைமுடியைப் பற்றி இழுத்துப், ‘படீர்…’ என்று ஒரு அடி கொடுத்தாள்.
சிநேகிதர்கள் எல்லோரும் பயந்து ஓடிவிட்டார்கள்.
திடீர் தாக்குதலை எதிர்பாராத புஷ்பா வீரிட்டு அழுதாள்.
இந்தக் காட்சிகளை மாறி மாறிக் கண்ட குந்தலா பிரமை பிடித்தாற்போல நின்றாள்.
‘குழந்தைகள் சண்டையோ என்னமோ…!’ என்ற நினைப்பில் சமையல் கட்டிலிருந்து அவசரமாய் வந்த அம்மா உண்மை அறிந்தாள்.
“புஷ்பா… அழப்படாது… மாமி உன் நல்லதுக்குத்தானே கண்டிச்சா… கல்யாணம் ஆகப்போறப் பொண்ணு… பொறுப்பா நடந்துக்கவேண்டாமா…?”
சமாதானப்படுத்தினாள்.
“இன்னிக்குச் சுமங்கலிப் பிரார்த்தனை…!”
“இன்னிக்கு தபஸ் வெச்சிருக்கு…!”
“பந்தக்கால் முகூர்த்தம்னா இன்னிக்கு…!”
“சத்ய நாராயண விரதமாச்சே…!”
“கௌரீ பூஜையோன்னோ…!”
“………………………………..”
ஏதாவது சாங்கியம் சொன்னார்கள்.
அவ்வப்போது குழந்தை புஷ்பாவைப் அரைப் பட்டினி. முழுப்பட்டினி என வதைத்தார்கள்.
மங்கள ஸ்நாநம் செய்வித்தார்கள்.
ஓடி ஆடிப் பட்டாம் பூச்சியாய் வளையவந்த புஷ்பாவுக்குப் புதுப் பாவாடை சொக்காய் மாட்டிவிட்டு மனையில் உட்கார வைத்தார்கள்.
ஹோமம் செய்தார்கள்.
ஜபம் செய்தார்கள்.
நலங்கிட்டார்கள்.
ஆரத்தி கரைத்துக் கொட்டினார்கள்.
கோலம் போடப்பட்ட மனைப் பலகையைக் கிணற்றடியில் போட்டு அதில் புஷ்பாவை உட்காரச் சொன்னார்கள்.
வேதவிற்பன்னர்கள் மந்திர உச்சாடனம் செய்து குடம் தண்ணீரை மூச்சு முட்ட முட்ட அவள் தலையில் கொட்டினார்கள்.
‘கௌரி கல்யாணமே வைபோஹமே’ என்று பாடிப் பரவசப்பட்டார்கள்.
‘இதெல்லாம் எதுக்கு?’
தெரியாமலே புஷ்பா என்கிற 9 வயதுக் குழந்தை பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டிருந்தது.
சில சமயம் அவளுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது.
சில நேரங்களில் பயந்து நடுங்கினாள்.
‘ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கறாங்க…?’
கேள்வி எழும் எப்பொழுதாவது.
அவளால் எதையும் சுயமாகச் சிந்திக்கவோ முடிவெடுக்கவோ முடியாத வயசல்லவா…
‘சப்பை கட்டாதே, சுயமாச் சிந்திக்கற வயசு வந்தப்பறம் மட்டும் சிந்திச்சிக் கிழிச்சாளாக்கும்…!’
ஆழ்மனம், குறுக்கிட்டதால் ஏற்பட்ட தடுமாற்றத்தை, குந்தலாம்பாளின் தற்காலிக சிந்தனை நிறுத்தம் பிரதிபலித்தது.
பயம்…! பயம்…! பயம்…!
பெரியவர்கள் சொன்னதை எதிர்த்தால் அடி விழும்.
அம்மா அடிப்பாள்.
அப்பா வாய்கு வந்தபடி திட்டுவார்.
ஊர் பெண்டுகள் கூட அடிப்பார்கள்.
அழுதால் “உன் நல்லதுக்குத்தானே அந்த மாமி அடிச்சா…”
நியாயப்படுத்துவார்கள்.
எந்த எதிர்ப்பும் காட்டாமல், எந்த சுய சிந்தனையும் இல்லாமல், கூப்பிட்ட குரலுக்கு ஓடினாள் புஷ்பா.
கோலாகலமாக நடக்கும் ஐந்து நாள் கல்யாண சடங்கு.
முதல் நாள் நிச்சயதார்த்தம்.
இரண்டாம் நாள் காசி யாத்திரை.
மூன்றாம் நாள் விவாகம்.
நான்காம் நாள் நலங்கு.
ஐந்தாம் நாள் கட்டுச்சாதக் கூடை.
என்று அமர்க்களப்படும்.
சாந்தி முகூர்த்தம் நான்கு ஐந்து வருடங்கள் கழித்துப் பெண் பூப்பு எய்தியதும் நடத்துவார்கள்.
பால்ய விவாகம் கொடுமை என்றால், அதை விடக் கொடுமை ஒன்பது பத்து வயதுக் குழந்தையைக் கிழவனுக்குக் கல்யாணம் செய்து வைப்பதுதான்..
வைதீஸ்வர சாஸ்திரிகளின் பேத்தி மித்ரா.
அவளை மிராசு வெங்கய்யாவுக்குக் கொடுத்தது கொடுமையிலும் கொடுமை.
வெங்கையாவுக்கு வயது நாற்பது சொச்சம்.
அவனுக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு குழந்தையும் உண்டு.
முதல் மனைவி வைசூரி போட்டு, முற்றி இறந்துவிட்டாள்.
ஏகப்பட்ட நிலபுலன்களுடன், கைக்குழந்தையோடு ஒண்டிக்கட்டையாக வாழும் வெங்கையாவுக்குத் தன் பேத்தியைக் கொடுத்தால், பேத்தி காசு பணத்தில் மிதப்பாள். நம்மைப் போல காலணாவுக்கும் அரையணாவுக்கும் மந்திரம் விற்று, லோல் பட வேண்டாமே…? பேத்தி மித்ராவாவது காசு பணத்தில் புரளட்டுமே…”
கணக்குப் போட்டார் காசிராமய்யா.
அதோடு மட்டுமில்லை. மகனிடமும் பக்குவமாக திட்டத்தை எடுத்துச் சொன்னார்.
, அவரைப் போலவே புரோகிதம் செய்து கஷ்ட ஜீவனம் செய்துவந்த மகன் சிதம்பர சாஸ்திரியும் அதற்குச் சம்மதித்தார்.
குழந்தை பவித்ராவைத் தாய்மாமன் தோளில் சுமந்து வந்தான்.
தன்னை வெட்டக் கொண்டு போகிறார்கள் என்பது தெரியாமல் ஆனந்தமாகப் புல் தின்னும் ஆட்டைப் போல சிரிப்பும் கும்மாளியுமாய், பல வகைத் திண்பண்டங்களை எடுத்து எடுத்துத் தின்றாள் மித்ரா.
மகள் வயதில் இருக்கும் அந்தச் சிறுமியின் கழுத்தில், மந்திர கோஷங்களும், தவில் நாதஸ்வர இசையும் முழங்க நாற்பது வயது வெங்கையா மாங்கல்யதாரணம் செய்து மனைவியாக்கிக் கொண்டான்.
ஐந்து நாள் திருமணமும் கோலாகலமாக நடந்தது.
உறவுகளும் ஊர்க்காரர்களும் மிராசு வெங்கையா செய்த தடபுடலான கல்யாணச் செலவுகளையும், அறுசுவையோடு அமர்க்களமாய் விருந்தளித்ததையும் மெச்சிவிட்டுச் சென்றார்கள்.
ஐந்தாம் நாள் கட்டுச் சாதக் கூடை முடிந்து, மேள தாளத்துடன், வெங்கையாவின் வீட்டில் கொண்டு போய் குழந்தையான மருமகள் மித்ராவை ஒப்படைத்தார்கள்.
கடந்த ஒரு மாதமாக கல்யாண முன்னேற்பாடுகளை முன்னிட்டு, மித்ரா பட்ட அலைக்கழிப்புகள்.
ஐந்து நாள்கள் கல்யாணச் சடங்குகளிலும் சாங்கியங்களிலும் அவள் பட்ட பாடு…
அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரையும் விட்டு, புதிய இடத்தில் யாரோ ஒருத்தனின் அறையில் இருக்கும் தனிமைப் பயம்.
இப்படிப் பலவித மன விகாரங்களுடன் இருந்தாலும், குழந்தையல்லவா. தூக்கம் சொக்கியது.
அப்படியேத் தரையில் படுத்துத் தூங்கிவிட்டாள்.
ருசி கண்ட பூனையல்லவா வெங்கையா.
மித்ரா குழந்தையாகத் தோன்றவில்லை அவனுக்கு.
தன் மனைவி என்ற உரிமையே மேலோங்கிருந்ததை அவன் செயல்பாடுகள் பிரதிபலித்தன..
அவள் இன்னும் பூப்படையாத பெதும்பை என்பதைக் கூட மறந்தான்.
அவளைத் தூக்கத்திலிருந்து எழுப்பினான்.
தூக்கக் கலக்கத்திலிருந்த அவள் கையில் ஏதோ தின்பண்டம் கொடுத்தான்.
அவளிடம் என்னென்னவோ நைச்சியமாகப் பேசினான்.
அவள் மேல் இஷ்டத்துக்கு கை வைத்தான்.
அவள் நெளிந்தாள். தூக்கக் கலக்கம் வேறு.
அவன் சொன்னது, பேசியது எதுவும் புரியவில்லை அந்தக் குழந்தைக்கு.
காலையில் மித்ராவை எழுப்பினாள் அம்மா.
“இன்னும் கொஞ்சநேரம் தூங்கணும்…”
அடம் பிடித்தாள் குழந்தை.
முந்தைய நாள் இரவு தூக்கத்தில் எழுப்பி வெங்கையாச் சொன்னதையும் , செய்ததையும், அப்படியே வந்துத் தன் அம்மாவிடம் சொன்னாள் மித்ரா.
‘இப்படி நடந்துகொண்டதற்காக அவனை அம்மாவும் அப்பாவும் கண்டிப்பார்கள்..’ என்று நினைத்தாள் மித்ரா.
“அவர் சொல்றபடி சமத்தா நடக்கணும். அவர் உன் ஆத்துக்கார். அவர் சொல்றதை, செய்யறதையெல்லாம் வெளீல யார் கிட்டேயும் சொல்லக்கூடாது…”
சிரித்துக் கொண்டே சொன்னாள் அம்மா.
மித்ராவுக்கு தலையில் இடி விழுந்தாற்போல இருந்தது.
மறு நாள் அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போய்விட்டார்கள்.
வெங்கய்யாவின் இம்சைக்குப் பயந்து பயந்து அந்த வீட்டில் வளைய வந்தாள் மித்ரா.
பகல் முழுதும் அத்தை அடுப்படியில் வைத்து அவளுக்குக் கடுமையான சமையல் பயிற்சிகள் தந்தாள்.
கணவன் மனைவி உறவின் உன்னதங்களை விளக்கும் சத்தியவான் சாவித்திரி போன்ற கதைகளைச் சொன்னாள்.
வயதுக்கு மீறிய திணிப்புகள் ஆயாசத்தைதான் அளித்தது மித்ராவுக்கு.
இரவு வந்தாலே குலை நடுங்கிற்று மித்ராவுக்கு.
வெங்கையா இரவில் தொடர்ந்து பலவகையில் தொல்லை கொடுத்தான் அவளுக்கு.
சாம, தான, பேத, தண்ட யுக்திகள் எல்லாவற்றையும் செய்துபார்த்துவிட்டான்.
எதுவும் பலன் தரவில்லை.
பயம் மேலிட முரண்டு பிடித்தாள் அவள்.
கோபம் எல்லை மீறியது வெங்கையாவுக்கு.
“உன்னோட குடித்தனம் நடத்தறதை விட, அதோ அந்த அரளிச் செடீலேந்து விதையைப் பறிச்சி அரைச்சித் தின்னு உயிரை விடலாம்…”
பக்கவாட்டுத் தோட்டத்தில் மஞ்சள் மஞ்சளாகப் பூத்து நிற்கும் அரளியைக் சுட்டிக் காட்டினான் வெங்கையா.
‘ஓ…! அப்படியா சேதி…?’ என்று மனதில் வாங்கிக் கொண்டாள் மித்ரா.
மறுநாள் வெங்கையா வயல்வெளிக்குச் சென்ற நேரத்தில் அரளி விதைகளைப் பறித்து அம்மியில் அரைத்துத் தின்று விட்டாள்.
இளங்கன்று பயமறியாதல்லவா…
பயமறியாத இளங்கன்று தனது அறியாமையால் செத்துப் போனது.
இந்தக் காட்சி மனத்தில் விரிய, சாஸ்திரியின் பேத்தி செத்துப்போனதைவிட, தன் தமக்கை புஷ்பா விதவையாகிப் பட்ட அவஸ்தைதான் பெரிதும் பாதித்தது குந்தலாம்பாளை.
புஷ்பாவுக்குக் கல்யாணமான மறு வருஷம்,
அவள் புருஷன் என்கிற வேதம் படித்த 13 வயது சிறுவன் பரசு ஆற்றங்கரையில் தர்ப்பைப் புல் அறுத்துவரச் சென்றான்.
வெகு நேரம் ஆகிவிட்டது.
‘பரசு வரவில்லையே…?’
கவலைப்பட்டனர் அவனைப் பெற்றவர்கள்.
புஷ்பா, தனது அத்தை (மாமியார்க்காரி) கையில் பிசைந்து போட்ட பழைய சோற்றைத் தின்றபின் கூடத்தில் உட்கார்ந்து கல்லாங்காய் விளையாடிக் கொண்டிருந்தாள்.
“………………………………..”
புஷ்பா ஒரு குழந்தை என்பதை மறந்தாள். பொறுப்பற்ற மருமகளாய் தோன்றியது, மாமியார்க்காரியாக மாறிவிட்ட அத்தைக்கு.
அவளைப் பார்த்து முறைத்தாள்.
முறைப்பில் “தர்ப்பை அறுக்கப் போன புருஷனைக் காணமேனு ஏதாவது கவலையிருக்காப் பாரு இவளுக்கு…” என்கிற வன்மம் தெரிந்தது.
தர்ப்பைப் பறிக்கப் போன இடத்தில் பாம்போ, பழுதோ தீண்டி பரசு இறந்துவிட்டான்.
செய்தி வந்தது.
செய்தியைத் தொடர்ந்து அழுகையும் கதறலுமாக பரசுவை தூக்கிக் கொண்டு வந்து உள்ளே கிடத்தினார்கள்.
என்ன ஏது என்று புரியாத புஷ்பா கல்லாங்காயை மடியில் கட்டிக்கொண்டு காமரா உள்ளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டு விட்டாள்.
“எங்கே அந்தத் துக்கிரி.”
அடியே… அதிர்ஷ்ட்டக் கட்டை…”,
“சண்டாளி, பாவி…!” என்றெல்லாம் விளித்தக்கொண்டே காமரா உள்ளுக்குள் ஆக்ரோஷமாய் வந்தார்கள்.
புஷ்பாவின் முடியைப் பிடித்துக் குலுக்கியபடி வெளியே இழுந்து வந்தார்கள்.
‘நாம் என்ன தப்பு செஞ்சோம்… ஏன் என்னை இப்படி செய்யறா…?’
யோசித்தபடி அவர்கள் இழுத்த இழுப்புக்குச் சென்றாள்.
ரேழியில் கிடத்தப்பட்ட பரசுவின் அருகில் கொண்டுபோய் உட்கார வைத்தார்கள்.
பரசுவை ‘வாடா… போடா…’ என்றுதான் விளிப்பாள். அவனை விளையாட்டுத் தோழனாகத்தான் எண்ணினாள் புஷ்பா.
ஐந்தாம் நாள் கட்டுச்சாதக் கூடை வைத்தார்கள். பரசு எங்போ புறப்பட்டபோது,“எங்கேடா போறே பரசு…?” என்றாள் புஷ்பா.
“புஷ்பா, பரசு உனக்கு ஆம்படையான். அவரை மரியாதையாத்தான் அழைக்கணும்…!”
அப்பா, அம்மா, பெரியண்ணா வைதீஸ்வரன் எல்லோரும், கண்டிப்பாகச் சொல்லிவிட்டனர்.
“அவனை எப்படிக் கூப்பிடணும்…?” அப்பாவியாகக் கேட்டாள் அவள்.
“அத்தான்’னு கூப்பிடு…!” என்றார்கள்.
“அத்தான், அத்தை குளிக்கக் கூப்பிடறா…!”
“அத்தான், மாமா கூப்பிடறா…!”
“அத்தான், அத்தை சாதம் பிசைஞ்சி கைல போடறாளாம். உடனே வரச்சொல்றா…!”
அவள் அப்படி அழைப்பது அவர்களுக்கே வேடிக்கையாய் இருந்தது.
“அத்தான், யாரு மொதல்ல சாப்பிட்டு முடிக்கறான்னு போட்டி வெச்சிக்கலாமா…!”
சீண்டுவாள் புஷ்பா.
“அத்தை, அத்தான் என்னைக் கிள்ளிட்டார்…!”
புஷ்பா கத்துவாள்.
“அம்மா… அவதான் முதல்ல என்னை கடிச்சா…!”
கடிபட்ட இடத்தைக் காட்டுவான் பரசு.
இருவருக்கும் நடுவில் புகுந்து, பஞ்சாயத்து செய்யும்போது, அத்தையின் தீர்ப்பு எப்போதும் பரசுவுக்குத்தான் சாதகமாக இருக்கும்.
கணவன் மனைவி வேஷம் கட்டிக்கொண்டிருந்த குழந்தைகள் இரண்டும் விளையாடிக்கொண்டும், ஒருவரை ஒருவர் மாட்டிவிட்டுக் கொண்டும், சிரிப்பும் கும்மாளியுமாய்ப் போய்க்கொண்டிருந்த குடும்பத்தின் மீது எந்தக் கொள்ளிக் கண் பட்டதோ.
இப்படி ஒரு சோகம் வந்துவிட்டது.
தூங்குவதுபோல் கிடந்த பரசுவைப் பார்த்த புஷ்பாவுக்கு,
தூங்குகிற மாதிரி நடித்து ஏமாற்ற நினைத்துக் கடிபட்ட, நேற்றைய பரசுவின் விளையாட்டு அவள் மனசுக்கு வந்தது.
“பரசுவைச் சாப்பிட அழைச்சிண்டு வாடீ” என்றாள் அத்தை.
“அத்தான் சாப்பிட வா…!”
நான்கைந்து முறை கத்தினாள் புஷ்பா.
பிடித்து உலுக்கினாள்.
ம்ஹூம் பரசு எழவில்லை.
கண்மூடித் தூங்குவது போல் பரசு பாசாங்கு செய்வதாகப் பட்டது புஷ்பாவுக்கு.
பரசுவின் கையை கையில் எடுத்து, ‘நறுக்’கெனக் கடித்து விட்டாள் புஷ்பா.
“அய்யோ என்று கத்திக்கொண்டே எழுந்து புஷ்பாவை அடிக்க ஓடினான் பரசு.
அத்தையின் பின்னால் போல் ஒளிந்து கொண்டாள் புஷ்பா.
பரசு நடந்ததைச் சொன்னான்.
குழந்தைகளின் இந்தக் குறுப்புகளை அத்தை மாமா உட்பட எல்லோருமே ரசித்துச் சிரித்தார்கள்.
“நீ செஞ்சதுதான் சரி. எப்பவுமே இப்படித்தான் அவனை எழுப்பணும்…” என்று சிரித்துக் கொண்டே சொல்லி முத்தம் கூடத் கொடுத்தாள் அத்தை.
ரேழியில் கிடத்தப்பட்ட பரசு கண்மூடி இருப்பதைப் பார்த்தபோது, அவன் கண்ணைத் திறக்காமல் தூங்குவது போல நடிப்பதாகப் பட்டது புஷ்பாவிற்கு.
எல்லோரும் ஏன் கதறிக் கதறி அழுகிறார்கள் என்று தெரியவில்லை.
“ அன்னிக்கு இப்பிடித்தான் கூப்பிடக் கூப்பிட கண்ணைத் திறக்காம நடிச்சான். நான் கையை இழுத்து வெடுக்குனு கடிச்சதும்தான் எழுந்தான். நான் கடிக்கட்டுமாத்தே…!”
வெள்ளந்தியாகக் கேட்டாள் அழுது கொண்டிருந்த அத்தையிடம்…
“மூதேவி, முண்டே அவன் செத்துப்போயிட்டாண்டீ… அவன் இனிமே எழவே மாட்டாண்டீ…”
சொல்லிச் சொல்லி அழுதாள் அத்தை.
புஷ்பாவுக்கு வயிறு பசித்தது.
“அவன் எந்திரிக்கலேன்னா போட்டும். எனக்கு மட்டும் சாதம் பிசிஞ்சி கைல போடு அத்தை. பசிச்சா அத்தானே எழுந்து வந்துடுவார்…”
சொல்லியபடி எழுந்தாள் புஷ்பா.
“கட்டின புருஷனை முழுங்கி ஏப்பம் விட்டுட்டு என்னடீ உனக்குப் பசி வேண்டியிருக்கு…”
ஒரு மாமி வந்து அவள் தலைமுடியைக் கொத்தாக இறுக்கிப் பிடித்தாள்.
வலிதாங்காமல் புஷ்பா அழத்துவங்கினாள்.
“அழுடீ… நல்லா அழு…!”
அவளை அழத் தூண்டினார்கள் சிலர்.
“நீ இங்கேயேதான் உக்காந்திருக்கணும்.”
கட்டளையிட்டார்கள்.
வந்தவர்கள் எல்லோரும் அவளிடம் வந்து “பாவி, தொடகாலி, துக்கிரி, அதிர்ஷ்டக் கட்டை…”
என்றெல்லாம் விளித்துத் துக்கம் கேட்டார்கள்.
“இப்படி ஆயிடுத்தே…! இப்படி ஆயிடுத்தே…!”
புலம்பினார்கள்;
தேம்பினார்கள்;
அழுதார்கள்;
அரற்றினார்கள்;
செய்தி அறிந்து, அம்மா, அப்பா, எல்லோரும் வந்திருந்தார்கள்.
“அம்மா வந்ததும் தனக்கு ஆறுதலாக இருப்பாள் என்று எதிர்பார்த்தாள் புஷ்பா.
புஷ்பா என்று வாய் நிறைய அழைக்கும் அம்மாவும், ‘முண்டே, மூதேவி’ என்றெல்லாம் விளிப்பதற்கு அர்த்தம் தெரியவில்லை.
அது மட்டுமா தெரியவில்லை.
ஏன் தூங்கிக் கொண்டிருந்த பரசுவை எழுப்பவில்லை?.
அவனைப் பச்சை ஓலையில் கட்டி எங்கே கொண்டு போனார்கள்?
செத்துப்போதல் என்றால் என்ன?
சாமியிடம் போதல் என்றால் என்ன?
முண்டை என்றால் என்ன பொருள்.?
விதவை என்பதன் அர்த்தம் என்ன?
இப்படி எவ்வளவோ தெரியாது அவளுக்கு.
“பத்து நாளுக்குள் புஷ்பாவை தன் வீட்டுக்கு ஒருதரம் அனுப்பினாத்தேவலை.”
சாஸ்திரம் பேசினான் பெரியண்ணா வைத்தீஸ்வரன்.
அழுகையும், விம்மலும், புலம்பல்களும், அமங்கல வார்த்தைப் பிரயோகங்களுமாக, புஷ்பாவின் நெற்றியில் குங்குமத்தை அப்பினார்கள்.
கைக் கொள்ளாமல் வளையல்களை அடுக்கினார்கள்.
கன்னத்திலும் கழுத்திலும் சந்தனமும் மஞ்சளும் கலந்து பூசினார்கள்.
காலில் ‘கொர்ரே முர்ரே’ என்று நலங்கு போட்டார்கள்.
வண்டிக் குடத்துக்கு மசி பூசுவதுபோல கண்களில் ‘மை’ அப்பினார்கள்.
மஞ்சள், குங்குமம், நலங்கு, வளையல், புஷ்பங்கள் எல்லாம் இந்த பத்து நாட்களுக்கும் வைத்தால்தான் உண்டாம்;
அதன் பிறகு இவையெல்லாம் பற்றி அவள் உயிருள்ளவரை நினைக்கக் கூட முடியாதாம்;
அதனால் அவள் ஆயுள் பூராவும் சுமங்கலியாக இருந்தால் வைக்கும் பூவையும் பொட்டையும் இந்த பத்து நாட்களுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்கிறார்களாம்.
இப்படி அதற்கு விளக்கமளித்தார்கள்.
இப்படியெல்லாம் செய்யறது மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு…” என்று கண்ணில் நீலிக் கண்ணீர் வைத்தார்கள்.
“இருந்தாலும் சாஸ்தரத்தை மீறக்கூடாது…!”
மனதில் சக்கல்பம் செய்துகொண்டு கொடுமைப் படுத்தினார்கள்.
ஏற்கெனவே கொடுமைப்பட்ட விதவைகள் ‘நாம பட்டது இவளும் படட்டுமே…’ என்று செய்தார்கள்.
கண்ணாடியின் முன் நிறுத்தி அலங்காரத்தைப் பார்க்கச் சொன்னார்கள்.
சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்து புஷ்பாவுக்கு.
கலகலவென்று சிரித்தாள் அவள்.
“சிரிக்கற வாயில பழுக்கப் பழுக்கச் சூடுபோடு…!”
ஒரு மாமி ஆக்ரோஷமாய்ப் பேசினாள்.
“இனிமே நீ சிரிக்கவேக் கூடாதுடீ…!”
அம்மா எச்சரித்தாள்.
கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினாள் புஷ்பா.
மோட்டார் கார் வந்து நின்றது.
“ஐ…! நான் மோட்டார் கார்ல போகப் பேறேனா…? அண்ணாவாத்துக்கா…? அம்மா, அப்பால்லாம் வல்லியா பாட்டி…!”
ஆசையாகக் கேட்டாள் புஷ்பா…
“அச்சானியமாப் பேசாதே… சுமங்கலி யாரும் உன் கூட வரப்படாது…”
வாயடக்கினாள் ஒரு பாட்டி.
பாட்டி மட்டும் புஷ்பாவை மோட்டார் காரில் அழைத்துப்போனாள்.
பெரியண்ணா வீட்டின் முன் கார் நின்றது.
வீட்டுக்குள் எப்படி நுழைய வேண்டும்;
என்னென்ன சாங்கியங்கள் செய்ய வேண்டும்;
எப்படியெல்லாம் நடந்துகொள்ளக்கூடாது;
என்னென்ன செய்தால் அச்சானியம்;
என்றெல்லாம் அந்தப் பாட்டி பேத்தியிடம் சொன்னாள்.
அவளுக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை
“செரி செரி…” என்று தலையாட்டினாள்.
மோட்டார் காரில் இருந்து இறங்கியதும் ‘வா!’ என்று வரவேற்க அண்ணா மன்னி கூட வரவில்லை.
தெருவே வெறிச்சோடிக் கிடந்தது.
‘விதவையைப் பார்ப்பது அச்சானியம்…’
ஊரார் கதவடைத்துக் கொண்டார்கள்…
காரிலிருந்து பாட்டிதான் புஷ்பாவை இறக்கி உள்ளே அழைத்துப்போனாள்.
சுமங்கலிகள் எவரும் எதிரில் வந்தால் அச்சானியம் என்று எல்லோரும் பின்கட்டில் ஒளிந்து கொண்டார்கள்.
காரிலிலுந்து இறங்கிய புஷ்பாவின் கையில் நெல் நிறைந்த மடக்கைக் கொடுத்தாள் பாட்டி.
“மடக்குலேந்து நெல்லைக் எடுத்து எடுத்து வீடு பூராவும் வாரி எரைச்சிண்டே வாடி…” என்றாள் பாட்டி.
‘எதையும் கீழே சிந்தக் கூடாது, இறைக்கக் கூடாது’ன்னு வார்த்தைக்கு வார்த்தை, சொல்லிச் சொல்லிக் கண்டிப்பாளே பாட்டி…’
‘இன்னிக்கு இப்படி வீடு பூராவும் நெல் வாரி இறைக்கச் சொல்றாளே?”
நெல் மடக்கைக் கையில் திணித்துவிட்டு பாட்டியும் சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டாள்.
ஏன் என்று கேட்பதற்கும் அங்கே யாரும் இல்லை.
வீடு முழுதும் நெல் இறைத்துவிட்டு வந்தாள் புஷ்பா.
அவள் கையில் ஒரு உள் கைப்பிடி புழுங்கல் அரிசி தந்தாள் பாட்டி.
அதை வாயில் போட்டு மென்று முழுங்கச் சொன்னாள்.
மட்கு வாடை அடித்தது அந்தப் புழுங்கரிசி.
மென்று தின்னுவதற்குள் அரை டம்ளர் புளித்த மோர் தந்து குடிக்கச் சொன்னாள்.
புளித்த மோர் வாடைக் குமட்டியது.
“அண்ணா மன்னியெல்லாம் எங்கே பாட்டி…?”
“………………………………..”
பதில் இல்லை.
“ரெண்டு நாள் இங்கே அண்ணாவாதுல இருந்துட்டுப் போலாமாப் பாட்டி…!”
அப்பாவியாகக் கேட்டாள் புஷ்பா.
“நீ எங்கேயும் வெளீல ராத் தங்கக் கூடாது புஷ்பா.. பரசுவாத்துலதான் இருக்கணும்.”
“ஏன் பாட்டி?”
“நீ விதவை ஆயிட்டே… இன்னிக்கு 5 ஆம் நாள்.”
“………………………………..”
இந்தப் பூ வைக்கறதும், பொட்டு வைக்கறதும், மஞ்சள் பூசிக்கறதும் கூட ,பத்தாம் நாள் வரைக்கும்தான்.”
“………………………………..”
ஒன்றும் விளங்கவில்லை அவளுக்கு. திரு திருவென முழித்தாள்.
“அடுத்த புதன் கிழமை உன் கழுத்துல தொங்கற தாலியை அறுத்துடுவா… கையிலே இருக்கற வளையல்களையெல்லாம் உடைச்சிடுவா… நெத்திப் பொட்டை அழிச்சி விட்டுடுவா…”
இப்படி மூளியாகி வந்து நிக்கறியே அதிர்ஷ்டக் கட்டை…”
ஒரு பாட்டம் அழுது அரற்றினாள் பாட்டி.
மீண்டும் அம்மா அப்பா எப்போ வருவா…?” என்று கேட்டாள் புஷ்பா
“அவா யாரும் இந்த வீட்ல வெச்சி இப்போ உன்னைப் பார்க்கக் கூடாது. மாமியாராத்துக்கு உன்னைப் பார்க்க வருவா. நாம இப்ப போகலாம்…”
என்று சொல்லி மீண்டும் காரில் ஏற்றி அத்தை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள்.
இன்னும் இன்னும் எவ்வளவு கொடுமைகள்… நினைத்து நினைத்து மருகினாள் குந்தலாம்பாள்.
பெரியண்ணா வைதீஸ்வரன் வீட்டிற்கு புஷ்பா வந்த நாளில் பெற்றவர்களோடும் உடன்பிறந்தானோடும் பின் கட்டில்தான் இருந்தாள் குந்தலா.
“அக்காவைப் நான் பார்க்கணும்…”
அடம் கூடப் பிடித்தாள்.
“நீ பார்க்கலாம். தோஷமில்லை. ஆனா அந்தத் துக்கிரி முண்டை உன்னைப் பார்த்துட்டு இங்கேயே வந்து ஒட்டினுடுத்துன்னா கஷ்டமாயிடும். அதனால நீ பாக்க வேணாம்…”
வைதீஸ்வரன் அண்ணா ஐம்பது வருஷத்துக்கு முன்னால் சொன்னது.
இப்போது சொல்வதைப்போல காதில் ஓங்கி ஒலித்தது.
புஷ்பாவுக்கு நேர்ந்த கொடுமைகளும், அவற்றிலிருந்து வெளிவரக் கையாலாகாத தன் தங்கை புஷ்பா கண்முன் உட்கார்ந்திருப்பதைக் கண்ட குந்தலாம்பாளுக்கு நெஞ்சு பிசைந்தது.
கண்கள் ஆறாய் நீரைப் பெருக்கின.
“அம்மா…!”
“………………………………..”
எதிரே நின்ற துரைராமனை ‘நீயெல்லாம் ஒரு மனிஷனா…?’ என்பதைப் போலப் பார்த்தாள் குந்தலாம்பாள்.
“பத்தாம் நாளுக்குள்ள ஒரு முறை நீ வந்தாத்தான், இந்த வருஷத்துக்குள்ளே ஏதாவதுன்னா நீ என் ஆத்துக்கு வரமுடியுமாம்…”
“ம்… எனக்கும் தெரியும் அந்த சாஸ்த்திரம் ”
“மோட்டார் கார் ஏற்பாடு பண்ணட்டுமாம்மா…?”
“நான் என்னத்துக்கு உன் ஆத்துக்கு வரப்போறேன்… நான் வரலை…!”
“ஏம்மா… அப்படிச் சொல்றே…?”
“ஏதாவது தேவைன்னா நீயே வந்துடுவியே…! நான் அங்கே வரணும்ங்கற ஆசையே எனக்கு எப்பவுமே கிடையாது.”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கம்போதே வாசல் திண்ணையிலிருந்து வந்தது கலியனின் குரல்.
“அம்மா…!”
“சொல்லு கலியா…”
“வண்டி கட்டியாச்சும்மா…”
“இதோ வந்துட்டேன் கலியா…”
“………………………………..”
“கலியன் வண்டி பூட்டிண்டு வந்து நிக்கறானே…?
“ம்… நான்தான் கட்டச் சொன்னேன்.”
“…..”
எங்கேம்மா போறே…?” கண்களாலேயேக் கேட்டான் துரைராமன்.
“பத்து நாளுக்குள்ளே யாராத்துல கால் பதிக்கறோமோ அவாத்துக்குத்தான் அவசரம் ஆத்தரம்னா இந்த ஒரு வருஷம் பூராகால் வைக்கலாம்னு சாஸ்த்தரம் சொன்னியோன்னோ…?”
“ம்…”
“அந்த சாஸ்திரத்தை மதிச்சி ஒரே ஒரு அகத்துக்கு மட்டும் போறேன்.”
“யாராத்துக்கு…?”
“கலியனாத்துக்கு…”
அத்தியாயம் – 18
முதல் முதலாக அறுத்த தாளை ஸ்வாமி மேடைக்கு முன் வைத்தாள் குந்தலாம்பாள்.
பக்தியுடன் காமாட்சி விளக்கு ஏற்றி வைத்தாள்.
தான்யலக்ஷ்மி ஸ்தோத்ரம் சொல்லி நமஸ்கரித்தாள்
“அய்யாம்மா…!”
கலியன் அழைத்தான்.
குரல் கேட்டு, சமையலறையிலிருந்து ஈரக் கையை துடைத்துக்கொண்ட வந்தாள் குந்தலாம்பாள்.
“அறுப்புக்கு நாள் பாக்கணும் அய்யாம்மா…!”
மாதய்யாவின் மறைவிற்குப் பிறகு குந்தலாம்பாவை ‘அய்யாம்மா!’ என்று அழைக்கத் தொடங்கியிருந்தான் கலியன்.
இந்தனைக் காலம் மாதய்யாவிடம் நாள் பார்க்கச் சொன்னவன் கலியன், இன்று குந்தலாம்பாளிடம் அதைக் கேட்டபோதே அவன் கண்களின் ஓரத்தில் நீர் அரும்பியது.
“… ”
குந்தலாம்பாளுக்கும் பேச நா எழவில்லை.
“அய்யா இருந்து நட்ட வய. அறுப்பறுக்க இல்லையேனு…!”
கலியன் தழுதழுத்தான்.
குந்தலாம்பாள் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.
தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டாள்.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா !
நமக்கும் அதுவழியே! நாம்போம் அ ளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்.
என்ற ஔவையாரின் மூதுரையை நினைவு கூர்ந்தாள் குந்தலாம்பாள்.
“கலியா, கண் கலங்காதே. அய்யா நட்ட வயல்ல அவர் எப்படி அறுவடை பண்ணுவாரோ அதே முறை மாறாமப் பண்ணி அவருக்கு அஞ்சலி செய்வோம்…”
ஆறுதல் சொன்னாள்.
“சரிங்கம்மா…!”
“அய்யா எப்படி அறுப்புத் தொடங்குவார்னு சொல்லு கலியா.?”
அனைத்தையும், விலா வாரியாய், விளக்கமாய் ஈடுபாட்டோடு சொன்னான் கலியன்.
எல்லாவற்றையும் மனதில் வாங்கிக்கொண்டாள் குந்தலாம்பாள்.
“நாளு பாருங்கம்மா…! அய்யா இந்தத் திண்ணைல உக்காந்துதான் நாத்துவிட, நடவுக்கு, அறுப்பறுக்க, களஞ்சியத்துல கொட்ட, வெதை நெல்லு கோட்டை கட்ட… எல்லாத்துக்கும் நாள் பாத்துச் சொல்லுவாங்க.”
கலியனின் ஆள் காட்டி விரல் கீழண்டை சாரமனையை சுட்டிக்காட்டியது. அவன் கண்கள் அந்த திண்ணையை ஏக்கத்தோடு நோக்கின.
குந்தலாம்பாள் உள்ளே சென்றாள்.
சில நிமிடங்களில் கையில் பாம்பு பஞ்சாங்கத்தோடு திரும்பி வந்தாள்.
சாரமனைத்திண்ணையில் அமர்ந்து குந்தலாம்பாள் அறுவடைக்கு நாள் பார்த்துச் சொன்ன விதம் அப்படியே மாதய்யா சொன்னதைப் போலவே உணர்ந்தான் கலியன்.
அருவடைக்கு நாள் சொல்லி கலியனை அனுப்பிய பின், அவள் மனசு முழுக்க வயல் வரப்பையே சுற்றிச் சுற்றி வந்தன.
குந்தலாம்பாள் வழக்கமாகச் செய்யும் பூஜைகளை முடித்தாள்.
சாப்பிட்டாள்.
சாப்பிட்ட உடனே படுத்து ஓய்வெடுக்கும் குணம் குந்தலாம்பாளுக்கு எப்போதும் கிடையாது.
மாட்டுத் தொழுவம் சென்றாள்.
வீரன் காளைக்குத் தீனி கிளறி வைத்தாள்.
மாட்டின் குளம்புகளில் மிதிபடாமல் அதெற்கென இருக்கும், உள்ளங்கை அகலக் கள்ளிப் பலகையால் மாட்டுச் சாணத்தை ஓர ஒதுக்குப்புறமாகத் தள்ளினாள்.
காலியாக இருந்த கவணையில் சிறிது வைக்கோல் வைத்தாள்.
அங்கிருந்து வந்தவள், கொல்லைக் கட்டுக்குச் சென்றாள்.
தேய்த்துக் கவிழ்த்திருந்த பாத்திரங்களை கொண்டுவந்து அதனதன் இடத்தில் கவிழ்த்தாள்.
அடுத்து, முற்றத்தில் காயவைத்த துணிகளை எடுத்தாள்.
பட்டகசாலையில் இருந்த விசி பலகையில் உலர்ந்த துணிகளை போட்டாள்.
ஒவ்வொன்றாய் எடுத்து, துணியில் தங்கியிருந்த வெம்மை கையில் உரைத்தது.
அந்த கதகதப்பை புறங்கையில் வாங்கிக் கொண்டு, நேர்த்தியாய் மடித்து அடுக்கினாள்.
மடித்த துணிகளை மார்போடு அணைத்தபடி, காமரா உள்ளுக்குச் சென்றாள்.
ட்ரங்ப் பெட்டிக்குள் வைத்து மூடினாள்.
சாப்பிட்ட ஆகாரம் செரிமானம் ஆக ஆரம்பிதற்கான அறிகுறிகளான, “ம்ம்ம்ம்……” என்ற பெருமூச்சு வந்தது.
அதைத் தொடர்ந்து வந்தது கொட்டாவி.
கண்கள் சோர்ந்து, அமட்டியது.
தலைக் கட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டாள்.
‘சிறிது நேரம் உடம்பைச் சாய்க்கலாம்…’
என்று குனிந்தாள்.
வாசலில் யாரோ “மாதவா…!” என்று பாசமாகக் கூப்பிடுவதுபோல காதில் விழுந்தது குந்தலாம்பாளுக்கு.
‘பிரமையாக இருக்குமோ…?”
சந்தேகப்பட்டாள்.
எத்தனை வயதானால்தான் என்ன கணவனுக்கு மனைவியின் நினைவும், மனைவிக்கு கணவனின் நினைவும்தானே சாஸ்வதம்.
தனக்கேற்பட்ட பிரமை குறித்து அவளுக்கே ஒரு கனம் லஜ்ஜையாக இருந்தது போலும். தனக்குத்தானே முறுவலித்துக்கொண்டாள்.
தலைக்கட்டையில் தலைவைத்துப் படுத்துக் கண்களை மூடினாள்.
அமட்டியது.
கண் செருகியது.
‘ஃபட்… ஃபட்…ஃபட்..”
துண்டால் திண்ணைமேல் தட்டும் சத்தம் கேட்டது.”
‘பிரமையல்ல…
உண்மைதான்…!’
முடிவு செய்துகொண்டாள்.
அமட்டிய கண்களைக் கசக்கிப் பிட்டாள்.
வலது உள்ளங்கையையை தலையில் ஊன்றி எழுந்தாள்.
புடவைக் கொசுவத்தை இழுத்துவிட்டுக் கொண்டாள்.
வலது உள்ளங்கையால் தலையை ஒருமுறை முன்புறமிருந்து பின் புறமாகத் தேய்த்துவிட்டுக் கலைந்த தலையைக் கோதிக் கொண்டாள்.
படியவில்லை.
கோடாலி முடிச்சை அவிழ்த்தாள். தலையை அன்னாந்த நிலையில் இரண்டு கை விரல்களையும் சீப்புப் பற்களாய் நுழைத்து, லாகவமாய்த் தலைமுடியை நுனி வரைக் கோதிவிட்டாள்.
இடது கையால் தலைமுடியைத் துக்கி, வலது கை “ஃப்ளிச்…! ஃப்ளிச்…! ஃப்ளிச்…!” எனச் சொடுக்கினாள்.
வணங்கா முடிகளும் படிந்தபின், கோடாலி முடிச்சுப் போட்டாள்.
‘யாராக இருக்கும்?’ யோசித்துக்கொண்டே வாசலுக்கு வந்தாள்.
சாரமனையில் சாய்ந்தபடி ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்.
“…”
‘நீங்க யாரு…?’ என்று குந்தலாம்பாளின் கண்கள் கேட்டன.
“மாதவன் ஒய்ஃபா நீங்க…?”
“ஆமாம்… நீ…ங்…க…?”
நான் மாதவனோட பால்ய சிநேகிதன்.
“…”
‘ஓ!’ நெற்றி சுருக்கி வியந்தாள்.
“என் பேரு முருங்கப்பேட்டை கிரி. நானும் மாதுவும் ஒண்ணா ஃபோர்த் ஃபாரம் வரைக்கும் படிச்சோம்.”
“…”
அப்படியா! என்ற வியப்பை முகம் பிரதிபலித்த்து.
“நானும் அவனும் ஒரே சமயத்துலதான் ராணுவத்துல ரெக்ரூட் ஆனோம். மாதவன் கண்டின்யூ பண்ணலை. வீட்டோட இருந்து விவசாயம் பாத்துக்கப்போறேன்னு வந்துட்டான்.”
“ராணுவத்துலேந்து என்னை விரட்டற வரைக்கும் சர்வீஸ் பண்ணினேன் நான். ரிடையரானப்பறம் கோயம்புத்தூர்ல செட்டில் ஆயிட்டேன்.”
“…”
அடடே! என ஆச்சரியத்தில் மலர்ந்தது அவள் முகம்.
“நேத்து மொத நாள் கோயம்புத்தூர்ல ஒரு டாக்டர்கள் செமினார். அதுல கலந்துக்க நம்ம ஜீவபுரம் டாக்டர் அருணகிரி வந்தான். அவன்தான் மாதவன் காலமான செய்தி சொன்னான்.”
“…”
அவரோடு சேர்ந்து அவள் முகமும் சோக ரசத்தை பிரதிபலித்தது.
இறந்து போன மாதய்யாவுக்கு மௌன அஞ்சலி செலுத்துகிறமாதிரி, சிறிது நேரம் இரண்டு பேரும், அமைதி காத்தார்கள்.
மறுபடியும் கிரியே தொடர்ந்து பேசினார்.
“மிஸஸ் மாதவன். டாக்டர் அருணகிரி எல்லாத்தையும் சொன்னான்.”
“…”
அப்படியா? என்று கேட்டது அவள் கண்கள்.
“எல்லாம் சரியாகும். பகவான் இருக்கான். அதைவிட மாதவனோட ‘சோஷல் சர்வீஸ்’க்கு பலன் கிடைக்காமலா போயிடும்.”
அவரைத் தொடர்ந்து பேச விடாமல் குந்தலாம்பாள் குறுக்கிட்டாள்.
“என்ன சாப்பிடறேள்…?” உள்ளே வாங்கோளேன்…” பரபரத்தாள்.
“எனக்கு ஒண்ணும் வேண்டாம். ஒரு டம்ளர் ஜலம் குடுங்கோ. அது போறும்.”
“தண்ணீர் கொண்டு வர வீட்டுக்குள்ளே செல்லத் திரும்பியபோது அவளைப் போக விடாமல் மீண்டும் பேசினார் முருங்கப்பேட்டை கிரி.
“மாதவனுக்கு ரொம்பப் பிடிச்ச திண்ணை இது. எப்பவும் அவன் உட்காந்துக்கற இந்தத் திண்ணையிலே ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்துட்டுப் போகத்தான் கார் எடுத்துண்டு கோயம்புத்தூர்லேந்து வந்தேனாக்கும்.”
“…”
அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை குந்தலாம்பாளுக்கு.
அவர் நட்பும், பாசமும், நேசமும் கண்டு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
‘இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே…!’
நினைக்க நினைக்கப் பெருமையாக இருந்தது.
அமைதியாக நின்றாள்.
“வர்ற வழிதானே ஜீவபுரம். அங்கே இறங்கி காவேரி ஸ்நானம் பண்ணினேன். அருணகிரியாத்துல ஆகாரமும் முடிச்சிட்டுதான் வந்தேன். அருணகிரிக்கு ஏதோ ஒரு அவசர கேஸ். அவனும் என்னோட வரதாத்தான் இருந்தான்.”
பேசிக்கொண்டே போனார் கிரி.
“ஜலம் எடுத்துண்டு வரேன்…”
‘டக்’ எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் குந்தலாம்பாள்.
‘பளிச்’ என்று பளபளக்கும், புளியிட்டுத் தேய்த்த, செப்புச் சொம்பில் தண்ணீர், கூடவே ஊற்றிக் குடிக்கச் செப்பு டம்ளரும் கொண்டு வந்து திண்ணையில் அவர் முன் வைத்தாள் குந்தலாம்பாள்.
மாதவன் ராணுவத்துல இருந்தப்போ, இதே மாதிரி செப்புச் சொம்பும் டம்ளரும்தான் வெச்சிருப்பான். ‘எனக்குத் தாடா’னு அவனைக் கேட்டேன் ஒரு சமயம். அவனும் தரேன்னான். அவன் ரிடையர் ஆகி வரும்போது எனக்கு ஜலந்தர்ல கேம்ப்.”
அவருடைய பேச்சின் இடையே தன் கருத்தைத் திணித்தாள் குந்தலாம்பாள்.
“அதே சொம்பு டம்ளர் தான் இது. நன்னா துடைச்சி பைல போட்டுத் தரேன். சிநேகிதர் ஞாபகமா வெச்சிக்கங்கோ…!” என்றாள்.
பத்து நிமிடங்களுக்கெல்லாம் செப்புச் சொம்பு, டம்ளர் அடங்கிய மஞ்சள் பையுடன், முருங்கப்பேட்டை கிரி காரில் ஏறி கோயம்புத்தூர் நோக்கிச் சென்றுவிட்டார்.
அவர் சென்ற பின்னர் கூடத்தில் வந்து படுத்தாள் குந்தலாம்பாள்.
தூக்கம் பிடிக்கவில்லை.
திடீரென்று கருமேகமெல்லாம் ஒன்று கூடி, வானம் இருட்டி, இடி இடித்து,மின்னல் மின்னி, மழைத் தூரி, மண் வாசனையைக் கிளப்பி விட்டுவிட்டு காற்றால் கலைக்கப்பட்ட மேகம் அப்பால் ஓடிவிட்டதைப் போல இருந்தது. மாதய்யாவின் சிநேகிதர் கிரியின் வருகையும் விடுகையும்.
அறுவடை துவங்குகிற முதல் நாளில் மாதய்யா என்னவெல்லாம் செய்வார். எப்படியெல்லாம் பாட்டுக் கட்டுவார்… அறுப்பாட்களுடன் எப்படிக் கலாய்த்துப் பேசுவார் என்று கலியன் சொன்ன அத்தனை செய்திகளையும் நினைத்துப் பார்க்கிறாள்.
மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கிறாள். ஒவ்வொன்றாக ஆதி முதல் அந்தம் வரையில் ஞாபகப்படுத்திக் கொள்கிறாள்.
‘விருட்…!’ டென எழுந்தாள். காமரா உள்ளுக்குச் சென்றாள்.
கொலுப் பெட்டிக்குக் கீழ், துருப்பிடிக்காமல் இருக்க கிரீஸ் தடவி, கித்தான் சாக்கு போட்டு பங்கிடாகச் சுற்றி வைத்திருந்த அறுப்பறிவாளை எடுத்துப் பிரித்தாள்.
அறுப்பறிவாளின் பித்தளைப் பிடியை புளி போட்டு விளக்கிப் பளபளப்பாக்கினாள்.
ஸ்வாமி அலமாரியின் முன் ஓர் ஆசனப் பலகை போட்டு அதில் வைத்தாள்.
முதல் முதலில் அறுவடைக்குச் செல்லவிருக்கும் குந்தலாம்பாள், எப்படியெல்லாம் இந்த நாளைக் கொண்டாட வேண்டும், அறுப்பாட்களை எப்படியெல்லாம் மகிழ்விக்கவேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கனாக் கண்டுகொண்டிருந்தாள். அவள் மனதில் அமிழ்ந்து கிடக்கும் இந்தத் திட்டங்களை யாரே அறிவார்…!
‘கலியனை இன்னமும் காணோமே…?’
விடிகாலையிலேயே எழுந்து, ஸ்நாநம் செய்துவிட்டு வடை பாயஸம் செய்தாள்.
தான்ய லெக்ஷ்மிக்கு அஷ்டோத்தரம் வாசித்து அர்ச்சனை செய்து வடை பாயம் நைவேத்யம் செய்து, எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டாள்.
‘கலியன் சொன்ன நேரம் கடந்துவிட்டது. இன்னும் வரக் காணோமே…’
யோசித்தாள்.
‘நாமே வண்டி பூட்டி , ஓட்டிப் போய்விடலாமா…?’
என்று தோன்றியது குந்தலாம்பாளுக்கு.
‘வண்டி பூட்டி, ஓட்டி கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கும் மேலே ஆயிடுத்தே… நம்மால முடியுமா…?’
யோசனையும் வந்தது.
‘ மாடு கீடு மிரண்டு, ஏடாகூடமாகிவிடுமோ…?’
பயம் வந்தது.
மாதய்யா வாய்க்கால் பாலத்தில் விழுந்து மாசக்கணக்கில் அவஸ்தைப் பட்டது நினைவில் எழ பயம் அதிகமானது.
‘உன்னை நீயே பலஹீனன் என்று நினைத்துக்கொள்வது பாவத்திலும் மிகப் பெரிய பாவம்…!’
என்றோ படித்த விவேகானந்தரின் பொன்மொழி நினைவில் பளிச்சிட, மனதில் உறுதி வந்தது.
முளையில் கட்டப்பட்ட தும்பை அவிழ்த்தாள்.
வீரன் காளையின் தலைக்கயிற்றைப் பிடித்து ஓட்டி வந்தாள்.
“ஈஸ்வரா…”
வாய் அனிச்சையாகச் சொல்லிற்று.
நுகத்தடியைத் தூக்கிப் பிடித்தாள்.
மாலையை ஏற்கத் தலைகுனியும் மணமகனைப் போல நுகத்தடியைத் தாங்க வாகாய் நின்றான் வீரன்.
கழுத்தில் பல்லக்கு நுகத்தடியை வைத்தபின் , பூட்டாங்கயிற்றைப் பூட்டினாள்.
எவ்வளவு வருடங்கள்தான் ஆனால் என்ன..
கற்ற கலை மறந்துவிடுமா என்ன…?
அதுவும் சின்னஞ்சிறு வயதில் கற்றவை பசுமரத்தாணி போல பதிந்திருந்தது.
எடுத்துக்கொள்ள வேண்டியவற்றை எடுத்து வண்டியில் வைத்துக்கொண்டாள்.
குந்தலாம்பாள் மருமகளாகி அந்த வீட்டுக்கு வந்த நாள் முதல் அந்த வீட்டின் வாசல் கதவு பூட்டியதே இல்லை. கதவைப் பூட்டிக்கொண்டு செல்லும் அளவுக்கு எந்த பிரமயமும் ஏற்படவில்லை.
கால மாற்றம்.
முதன் முறையாக, வீட்டை பூட்டினாள்.
சாரதிப் பலகையி ல் ‘டிங்…’ என்று பாய்ந்து ஏறி உட்கார்ந்தாள்.
சீரான வேகத்தில் சென்றது கூண்டு வண்டி.
குந்தலாம்பாள் ஆரம்பத்தில் பயந்தபடி எந்த அசம்பாவிதமும் நடந்துவிடவில்லை.
இன்னும் அறுப்பாட்கள் வந்திருக்கவில்லை.
கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை எவரும் வருவதாய் அறிகுறி இல்லை.
வீரனை அவிழ்த்து வண்டிச் சக்கரத்தில் கட்டினாள்.
வைக்கோல் அள்ளிப் போட்டாள்.
அறுவடை ஆகப்போகும் வயலைச் சுற்றி வந்தாள்.
ஆயுதம் ஏதுமின்றி ஆன்ம பலத்தை மட்டும் நம்பிப் போர்க்களத்தில் தலைநிமிர்ந்து நடக்கும் மாவீரன் போல மிடுக்குடன் இருந்தது குந்தலாம்பாளின் நடை.
‘மிடுக்காய் இரு’ என்ற பாரதியின் வாக்குக்கு உருவம் கொடுத்தாற்போல் இருந்தது அந்த நடை.
ஒரு கையில் நீராரத் தூக்கு. மறு கையில் கருக்கறிவாள்.
அறுப்பாட்கள் விடிகாலையிலேயேக் காணிக்குக் கிளம்பிவிட்டார்கள்.
காலைக் கதிரவன் தன் ஒளிக்கரங்களை பூமியில் முழுமையாகப் படறவிடவில்லை.
ஒளி வரும் முன், கட்டியம் கூற வந்த லேசான ஒளிக்கற்றைகள் பிரதிபலித்த மெல்லிய வெளிச்சம் சற்றேக் குளிர்ச்சியாகம், இதமாகவும் இருந்தது.
சாலையின் இரு மருங்கும் கண்ணுக்குத் தெரிந்த வரை அறுவடைக்குக் காத்திருக்கும் வயல்கள்.
தங்களைச் சூல் கொள்ள வைத்தச் சூரிய தேவன் தன் ஒளிக் கதிர்களால் தழுவ வருவதைக் கண்டு, நாணி, வெட்கிக் தலைகுனிந்தன, நிறைமாத கர்பிணிகளாய் நிற்கும் நெற்பயிர்கள்.
சுகமாய் வீசிய விடிகாலைத் தென்றலின் ஸ்பரிச சுகத்தில் நளினமாய் தலையாட்டின நெற்கதிர்கள்.
தன் மேல் நடப்பவர்களின் பாதங்களை இதமாய் வருடிச் சுகமேற்றும் வரப்போர தாவரங்கள்.
வண்ணவண்ணமாய், அழகாய் மலர்ந்து, அற்புதமாய் மணம்வீசும் வரப்போரக் குறும்பூக்கள்.
இரவு முழுவதும், கட்டி அணைத்துக்கொண்டு சுகமாய் உறவாடிய பனி கதிரவனின் ஆக்ரமிப்பால் ஆவியாகி அவசரமாய் ஓடி ஒளியும்போது அவசரத்தில் விட்டுச் சென்ற பனிநீர்த் திவலைகளை, நடப்போரின், பாதங்களிலும், கணுக்கால்களிலும், பூசிச் சிலீர் எனச் சிலிர்க்கவைக்கும் அருகு, கரிசலாங்கன்னி, பொன்னாங்கன்னி, கோரை, அவுரி, கொழுஞ்சி இத்யாதிச் செடிகள்.
பாம்புப் புற்று மீது தண்ணீர் ஊற்றி நனைத்தாற் போல் ஆங்காங்கே வரப்போரத்தில் கிடக்கும் நண்டு வளைகள்.
ஆள் நடமாட்டம் கண்டதும் பக்கவாட்டில் குடுகுடுவென்று ஓடிக் ஈரமான வளைக்குள் புகுந்துகொள்ளும் நண்டுகள்.
தொலைவில் தெரியும் பனை மரங்கள்.
சாலையோரங்களில் வளர்ந்து நின்ற பூவரசு, சரக்கொன்றை, கல்யாண முருங்கை, சவண்டல், வேம்பு, நுணா, உத்தராசு, அத்தி மற்றும் பல்வகை மரங்கள்.
வரப்புப் திருப்பத்தில், கும்பலாய் வளர்ந்திருக்கும் தேள்கொடுக்குச் செடிகள். காட்டுக் கருவை, இலந்தை, நொணா, பேயத்தி, துத்தி… அதில் படர்ந்திருக்கும் ஓணாங்கொடி, முடக்கத்தான், தூதுவளை…
அந்தச் செடிகொடிகளுக்கு இடையில் இடையில் தன்னை நுழைத்துக்கொண்டு கழற்றிப் போடப்பட்ட பாப்புச் சட்டை.
அதைக் குச்சியால் இழுத்து விளையாடும் கிராமத்துச் சிறுவர்கள்.
வற்றிய கன்னி வாய்க்காலில் பின்னிப் பிணைந்தபடித் தேங்கிக் கிடக்கும் இலைகள், சருகுகள், சுள்ளிகள், வாழைப்பட்டைகள் எல்லாம் பாசி பிடித்து அழுகின வீச்சம்.
ஆங்காங்கே எலி பிடிப்பதற்காக வெட்டிக் குதறிப் போட்ட வரப்புப் பள்ளங்கள்.
அறுப்பறுத்த வயல்களில் நடந்து நடந்து வாழைக்காய் வளைவாகப் பதிந்துபோன ஒற்றையடிப்பாதை,
வரப்பில் ஆங்காங்கே பல வகை உயரங்களில் வளர்ந்து நிற்கும் அகத்தி, வாழை போன்ற ஊடு பயிர்கள்.
அறுப்பு முடிந்த காணிகளில் ஆங்காங்கே திட்டுட் திட்டாய் கிடக்கும் புற்கள்.
அதை மேயும் பசுக்கள். பசுக்களின் பல்வகைக் கழுத்துச் சலங்கைகளின் கூட்டு ஒலி.
ஆக்காங்கே ‘கீக்கீ… கீச்… கீச்… கூ… கூக்…’ என்று இசைக்கும் புள்ளினங்களின் இசை.
இப்படி இறைந்துகிடக்கும் இயற்கை அழகையெல்லாம் கண்டு கொள்ளாமல், சில்லென்று வீசிய காற்றை சுவாசித்துக் கொண்டும், சுவாசித்த காற்றை பேச்சாய் உருமாற்றிக்கொண்டும் அறுப்பாட்கள் நடந்துகொண்டிருந்தார்கள்.
ஆண்களும் பெண்களுமாய்ச் சென்றாலும் பெண்களின் குரல்தான் ஓங்கி ஒலித்தது.
பெண்’மணி’கள் என்பதுதான் எவ்வளவு பொருத்தம்…!
ஏற்கெனவே மாதய்யா காணியில் அறுப்பறுத்த அனுபவம் உள்ளவர்கள் தங்களின் இனிய அனுபவத்தைப் புதியவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.
புதிய அறுப்பாட்கள், அனுபவஸ்தர்களின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டும், அதை ரசித்துக் கொண்டும் வியந்து கொண்டும் வருவது அவர்கள் முகக்குறிகளில் பளிச்’செனக் காணமுடிந்தது.
நடுநடுவே,
“ஆஹா…!”,
“அடடே…!”,
“ஓ…!”
“ஓஹோஹோ…!”,
“அப்படியா…!”
வியப்பை வாய்திறந்தும், வாய்ப் பிளந்தும் வெளிப்படுத்திக்கொண்டு வந்தார்கள்.
“நெசமாவாச் சொல்றீங்க…?”
வியப்பு வினாத் தொடுத்தாள் ஒருத்தி.
“ஆமாங்கறேன்…”
அபிநயம்பிடித்தாள் சொன்னவள்.
அறுவவைடைக்குறிய வயல் நெருங்க நெருங்க, அறுப்பாட்களின் பேச்சு திசை மாறியது.
“ஏண்டீ…! அய்யா இருக்கையிலே அறுப்புத் தொடக்கற மொத நாளு எல்லாருக்கும் டீத் தண்ணி கொடுக்க ஏற்பாடு பண்ணுவாரு. இல்லக்கா…”
“இனிமே யாரு அதெல்லாம் தரப்போறாக…? தவிச்ச வாயிக்குத் தண்ணிக்குக் கூடச் சிரமந்தேன்…”
“போடீ… போக்கத்தவளே… நம்ம கலியண்ணன் குணம் மட்டும் என்னவாம். அய்யா குணம் அப்படியே அண்ணங்கிட்டே இருக்காக்கும் …ஹா…ங்…கா…ம்…!”
“அதுவும் சரிதேன்… ஆனாலும் அய்யா, பாட்டுக் கட்டிக்கிட்டு, நையாண்டி பேசிக்கிட்டுச் சாலியாத் தாரது மாதிரி வருமா…?”
“அதுவுஞ் சரிதேன்… இந்தக் கலியண்ணனுக்கு சிரிக்கவே நாலு பணம் தருணுமேக்கா…”
இதைக் கேட்டு எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
ஒரு கையில் கைக்குழந்தையும், மறு கையில் அலுமினியத் தூக்கும் சுமந்து வந்த பெண். சிரிப்பலைகள் ஓய்ந்தபிறகு சென்னாள்.
“நீங்க சொல்றதெல்லாம் செரிதான். இதோ நான் கையில புள்ளையத் தூக்கிக்கிட்டு அறுப்பறுக்க வர்றேன். வேலை மும்மரத்துல நானே மறந்துட்டாலும், “நாளியாவுது பொன்னம்மா… புள்ளைய எழுப்பி வயித்துக்குக் கொடுன்னு’ன்னு சொல்லுற பாசம், உரிமை, குணம் இதெல்லாம் யாருக்கும் வருமா…?”
அங்கலாய்த்தாள்.
“…”
இப்படிப்பட்ட உயர்ந்த குணங்களை உடைய மாதையாவின் மறைவுக்கு சிறிது நேரம் அஞ்சலி செலுத்துவது போலச் சிறிது நேரம் அனைவருமே அமைதியாக நடந்தார்கள்.
“அய்யா சம்சாரம் வயலுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காகளாமே…?”
“கெட்டுது போ…! சாலியா பாட்டுப் பாடிக்கிணு சோலியப் பாக்க முடியாதுன்னு சொல்லு…”
“ஏன்…! நீ பாட்டும் கூத்தும் கட்டுறதை அந்த அம்மா குறுக்க விளுந்தா தடுத்தாக… எதையாவது ‘வாய் புளிச்சிதோ மாங்காப் புளிச்சிதோ’னு பேசவேண்டியது…!”
கடுப்பாகச் சொன்னாள் ஒருத்தி.
“அய்யா காலமாகி முழுசா மூணுமாசம் கூட ஆவலை. அவங்க முன்னால பாட்டும் கூத்துமா வேலை பாக்கறது அவ்வளவு நல்லா இருக்குமா…? அதான் சொன்னேன்.”
நீட்டி முழக்கினாள் மற்றவள்.
இவர்கள் பேச்சைக் காதில வாங்கிக்கொண்டே வந்த ஆண் ஆட்களில் ஒருவன் சொன்னான்.
“மொத மொத அறுப்புக்குப் போறோம். துக்க சமாச்சாரம் பேசிக்கிட்டுப் வாரீயளே…! வேற எதுனா பேசுங்க ஆச்சி…!”-
உணர்ச்சி வசப்பட்டான்.
“அண்ணன் சொல்றதும் செரிதேன். இந்த போகம் அறுப்புக்கு மொத ஈடு, மொத மொதல்ல அறுக்கப்போறோமில்ல அதான் சொல்றாக…”-
அவனுக்குச் சப்போர்ட்டாகப் பேசினாள் ஒருத்தி.
அறுப்பாட்கள் காணியை நெருங்கிவிட்டார்கள்..
சாலை ஓரத்தில் கூண்டு வண்டி நின்றது.
சக்கரத்தில் கட்டப்பட்ட வீரன் காளை வைக்கோலைப் பரத்திக்கொண்டு , கோவில் ரிஷபம் போலப் படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தது.
மாதய்யாவோடு வயல்காட்டுக்கு வந்த இனிய நாட்களை அசைபோடுகிறதோ…!
“அய்யா… சம்சாரம்… வந்திருக்காங்க… போல…!.” அறிவித்த பெண்ணின் மெல்லிய குரலில் ஆச்சரியம் அப்பியிருந்தது.
“கலியண்ணனை எங்கே இன்னும் காணம்…” கேட்டாள் இன்னொருத்தி.
“அதோ அறுப்பறுக்கப்போற வயல்ல நின்னு கீழத்தெருப் பாதையப் பாத்துக்கிட்டு நிக்கறாரு பாரு…”
நெற்றியில் குங்குமம் பளிச்சிட தீர்க்க சுமங்கலித் தோற்றத்துடன், வண்டி அருகில் நின்று கொண்டிருந்தாள் குந்தலாம்பாள்.
“அது அய்யா சம்சாரமில்ல… வேற யாரோ…!” என்றாள் ஒருத்தி
“அவங்களேதான். நான் ஒருக்கா பாத்திருக்கேன்…!”
சின்னப்பொண்ணு சொன்னாள்.
“பூவும் பொட்டுமா…?”
ஒரு அதிர்ச்சிக் குரல் வெளிப்பட்டது.
“அய்யா போன பிறகு, அவங்க சம்சாரம் இப்படி பூவும் பொட்டுமா வந்து நம்ம முன்னால நிக்கறாளேனு பாக்கறீங்களா…?”
கேட்டுக்கொண்டே அறுப்பாட்களை அருகே வரச்சொல்லி கை ஜாடை காட்டினாள் குந்தலாம்பாள்.
“…”
தயங்கியபடியே அருகே வந்தார்கள்.
“நான் மேலக்காட்டுப் பாதைல வந்ததே தெரியாம கீழக்காட்டுப் பாதைய வெறிச்சி வெறிச்சிப் பாக்கறாம்பாரு கலியன். அவனை கூப்பிடுங்க…”
குந்தலாம்பாள் அன்புக் கட்டளையிட, “கலியண்ணேய்…!” என்று எல்லாரும் சேர்ந்து ஒரே குரலில் கத்தினார்கள்.
திரும்பிப் பார்த்த கலியன் அய்யாம்மாவைப் பார்த்ததும் ஓட்டமும் நடையுமாய் அங்கே வந்தான்.
“சின்னப் பொண்ணேய்…! ”
அய்யா அழைப்பதைப் போலவே அழைத்தாள் குந்தலாம்பாள்.
“…”.
புதிய விருந்தாளிகளைக் கண்டுத் தயங்கியபடியே அடிமேல் அடி வைத்து மெதுவாக, அருகில் செல்லும் குழந்தையைப்போல, குந்தலாம்பாள் அருகே சென்றாள் சின்னப்பொண்ணு.
“வண்டீல காபி வெச்சிருக்கேன். சீக்கிரம் எடு…!” துரிதப்படுத்தினாள்.
“…”
வண்டி அருகில் போனாள்.
“கொதிக்கக் கொதிக்க ஊத்திக் கொண்டாந்தேன். ஏதோ கொஞ்சம் வெதவெதப்பு இருக்கும்போதே ஊத்திக் குடு. சீக்கிரம் எடு.
“…”
வண்டியிலிருந்து காபித் தூக்கை எடுத்தாள்.
டம்ளரில் ஊற்றி ஊற்றி எல்லோருக்கும் கொடுத்தாள்.
‘மடக்…மடக்… என்று பச்சைத் தண்ணீர் குடிப்பதைப்போல வேகமாய்க் குடித்தனர் அறுப்பாட்கள்.
“காப்பி கடுங்காப்பி…
காக்கா நெறத்துலயாம்…!
சூடில்லா சுக்குக் காப்பி…
அடிவயித்தைக் கலக்குதோடீ…!”
பாடினாள் குந்தலாம்பாள் சிரித்துக்கொண்டே.
அய்யாம்மாவின் பாட்டு எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்தது.
யாரும் சத்தம் போட்டுச் சிரிக்கவில்லை.
“…”
தயக்கம் தடுத்தது.
இதே மாதய்யாவாக இருந்திருந்தால் எதிர்ப்பாட்டுக் கட்டி உல்லாசமாய் குலவைப் போட்டு கூத்துக் கட்டியிருப்பாள் சின்னப்பொண்ணு.
“…”
‘மொத மொதலா அருவடைக்கு வந்திருக்காங்க அய்யாம்மா, எப்படிப் பழகுவாங்கன்னு தெரியலையே…?’
சந்தேகக் கேள்வி வந்தது
“… … … … … … … … …”
‘ஒரு வேளை நாம சகஜமாப் பளகப் போயி ‘சட்’டுனு மூஞ்சிய முறிச்சிட்டாங்கன்னா?.”
“…”
பயம் வந்தது.
“…”
மொத நாள் அறுப்பு வேற. மொதக் கோணல் முற்றும் கோணலாயிருச்சுன்னா…?’
மனசு எச்சரித்த்து.
சின்னப் பொண்ணு உட்பட எல்லாருமே அமைதியாக தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
“அம்மா!”
“சொல்லு கலியா…?”
“உங்களை வண்டி கட்டி இட்டார வூட்டுக்குப் போனேம்மா… நான் வாரத்துக்குள்ள நீங்க…”
“கலியா…? எனக்கு வட்டி பூட்ட, ஓட்டத் தெரியலைன்னாதானே உன்னை எதிர்பார்க்கணும்.”
“…”
“நீ சொன்ன நேரம் வரைக்கும் காத்திருந்தேன். வரலைன்னதும் வண்டியப் பூட்டிண்டு, காப்பித் தூக்கோட கிளம்பிட்டேன்.”
“அம்மா… அது வந்து…!”
ஏதோ சொல்ல வந்த கலியனை எதுவும் சொல்ல விடவில்லை.
“நீயும் ஒரு லோட்டா ஆறிப்போன காப்பியைக் குடிச்சிட்டு வெரசா வா… வேலையத் தொடங்கலாம்…”
சிரித்தபடி சென்னாள் குந்தலாம்பாள்.
இப்போது ஒரு சிலர் வாய்விட்டுச் சிரித்தனர்.
இருந்தாலும் கூச்சம் முழுவதும் விலகவில்லை.
“அதோ கருடன் பறக்குது… எல்லாரும் பாருங்க… நல்ல சகுனம்…”
குந்தலாம்பாளின் ஆள்காட்டி விரல் சுட்டிய திரையில் எல்லாரும் பார்த்தனர்.
சொல்லிவிட்டுக் குந்தலாம்பாள் கொசுவத்தை தூக்கிச் செருகிக் கொண்டாள்.
வண்டியில் வைத்திருந்த பித்தளைப் பூண் போட்ட தன் குடும்பத்தில் பரம்பரைபரம்பரையாய் வந்த அறுப்பறிவாளை எடுத்துக்கொண்டாள்.
கம்பீரமாக வயலுக்குள் இறங்கினாள்.
ஒரு தேர்ந்த அறுப்பாளைப் போல லாகவத்துடன் தேவையான அளவு குனிந்தாள்.
இடது கை தாளின் அடியைக் கொத்தாய் பிடித்திருந்தது.
“கொருக்…” என்ற சத்தத்துடன் அறுத்தாள்.
அறுத்த தாளைப் பக்குவமாய் வரப்பில் போட்டாள்.
ஒரு தாளோடு நிறுத்தவில்லை குந்தலாம்பாள். தொடர்ந்து பத்து பதினைந்து குத்துக்கள் அறுவடை செய்தாள்.
“அடியாத்தீ…! அறுப்பறுக்க வந்த என்னை வேடிக்கைப் பார்க்க வந்தமாதிரி நிக்கறீகளே…! எறங்கி வேலையைத் தொடங்குங்க…!”
அபிநயம் பிடித்தாள் குந்தலாம்பாள்.
‘அய்யாம்மா, இவ்வளவு தெரமையா அறுக்கறாங்களே…!’
வியப்புடன் வயலில் இறங்கிய அறுப்பாட்கள் அறுப்பைப் தொடங்கித் தொடர்ந்தார்கள்.
சிவகங்கங்கைச் சீமையில் வானம் பார்த்த பூமியில் ஏகப்பட்ட நிலபுலங்களை வைத்துக் கொண்டு விவசாயம் செய்த அப்பாவுக்கு உதவியாய் இருந்தவள்தானே குந்தலாம்பாள்.
அப்பாவோடு வயல்காட்டுக்குப் போய் வரண்ட பிரதேசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிற்கும் பலன்களை, அலுப்பு சலிப்பு இல்லாமல் அறுவடை செய்தவள் குந்தலாம்பாள்.
புகுந்த வீட்டு வயலில் வளமாய், வாளிப்பாய்த் தழைத்து வளர்ந்து கொழித்துக் கொட்டும் தானியலட்சுமியை அறுவடை செய்ய வந்ததில் உற்சாகம் கரைபுரண்டது.
தொழில்முறை அறுப்பாட்களுக்குச் சமமாக, ஏன் அதை விட வேகமாக என்றே சொல்லலாம். அறுத்துத் தள்ளினாள் குந்தலாம்பாள்.
“அம்மா… நீங்க கரையேறுங்கம்மா… அவங்க பாத்துக்குவாங்க…” என்றான் கலியன்.
கரையேறினாள் குந்தலாம்பாள்.
கையில் இருந்த அரிவாளை தூக்கிக் காட்டினாள் குந்தலாம்பாள்.
“உன் அறுவா என் அறுவா
உருக்கு வெச்ச கருக்கறுவா;
சாயப் பிடி அறுவா
சாம்புதடீ நெல்லுப் பயிர்.”
முதல் அறுவடைப் பாட்டுக் கட்டினாள் குந்தலாம்பாள்.
எல்லோருக்கும் கூச்சம் போயிற்று.
இயல்பாகச் செயல்பட்டனர்.
சின்னப் பொண்ணுக்கு குளிர் விட்டுவிட்டது.
“உங்க அறுவா எங்க அறுவா
உருக்கு வெச்ச கருக்கறுவா
வெள்ளிப் பிடி அறுவா
வீசுதம்மா நெல்லுப்பயிர்…”
எதிர்ப்பாட்டு கட்டினாள் சின்னப் பொண்ணு.
எல்லோரும் தங்களுக்குள் சிரித்தார்களே தவிர குலவைச் சிரிப்பைப் காணோம்.
“கலியா… இத்தினி பேர் இருக்க, சின்னப்பொண்ணுக்கு மட்டும்தான் பாட்டுக் கட்டத் தெரியுமாக்கும்…?”
நக்கலாகக் கேட்டாள் குந்தலாம்பாள்.
“ அன்னம்போல நடை நடந்து
அறுப்பறுத்துத் திரி திரிச்சி
சின்னக் கட்டாக் கட்டச் சொல்லி
சிணுங்கினாளாம் சின்னப் பொண்ணு…”
கட்டையாக ஒரு குரல் வந்தது.
பாடியது பேச்சிமுத்து.
சின்னப்பொண்ணுவை கேலிசெய்து பாட்டுக் கட்டியதால் அய்யாம்மா உட்பட அனைவரும் குலவையிட்டுச் சிரித்தனர்.
சின்னப்பொண்ணு கலகலவென வளையல் ஓசை எழுப்பினாள்.
அப்படி ஓசை எழுப்பினால், அவள் பாட்டுப் பாடப்போகிறாள் என்று பொருள்.
சின்னப்பொண்ணுவின் அடுத்த குறும்புப் பாடலைக் கேட்க காதைத் தீட்டி மௌனம் காத்த நேரத்தில் ‘கொரக் முரக்’ என அரிவாளும் தாளும் உரசிக் கொள்ளும் சத்தம் அவள் பாடப்போகும் பாட்டுக்குப் பின்னணி இசைப்போல ஒலித்துக்கொண்டிருந்தது.
“பேச்சி முத்தார் கருக்கறுவா
தலைச்சம்பிள்ளை கையறுவா
சொல்லிச் சொல்லி அறுத்துச்சாம்
சோம்பேறித் தனத்தோட…”
சின்னப் பொண்ணுவின் பாட்டுக்கு குலவைச்சத்தம் வானைப் பிளந்தது.
பாட்டும் கும்மாளியுமாக அறுப்புச் சூடு பிடித்துவிட்டது.
மாதய்யா எப்படியெல்லாம் கூத்துக் கட்டுவாரோ அதை விட அதிகமாகவே கூத்துக் கட்டினாள் அய்யாம்மா.
“பூசர களம்தான் இல்லைனு ஆகிப்போச்சு. நாளைக்குக் கட்டு அடிக்கணுமில்ல…?”
கலியனைக் கேட்டாள் குந்தலாம்பாள்.
“அதான் அய்யாம்மா நானும் யோசிக்கறேன்.
“சின்னப்பொண்ணு, பூலோகம், அமாவாசை, கதிரேசன் நாலு பேரும் வாங்க. களம் ஒக்கப் பண்ணோணும். சொச்சபேரு அறுப்பறுக்கட்டும்.”
உத்தரவு போட்டாள் குந்தலாம்பாள்.
அறுவடை நாள் முடிவு செய்த நிமிஷத்திலிருந்து, ‘எங்கே களம் போடுவது?’ என்று கலியன் யோசித்து யோசித்துப் பார்க்கிறான்.
ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை அவனால்.
குந்தலாம்பாள் கூப்பிட்ட நால்வரும் கரையேறிவிட்டனர்.
அய்யாம்மாவின் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருந்தனர்.
“கலியா…”
“சொல்லுங்க அய்யாம்மா…”
“இந்த நாலு பேரோட நீயும் நம்ம பண்டாரத்தாரு தெடலுக்குப் போங்க. அங்கே களம் ஒக்க பண்ணுங்க.”
அய்யாம்மாவின் யோசனையைக் கண்டு வியந்து போய் நின்றான் கலியன்.
“நான் போயி ஜாமான் செட்டல்லாம் எடுத்தாரேன்…” என்று துவங்கிய கலியனை மேலே பேச விடவில்லை குந்தலாம்பாள்.
“காலைல வரக்குள்ளயே பண்டாரத்தாரு கிட்டே சொல்லி மம்முட்டி, அருவா, ஜாடு, தட்டுக்கூடை எல்லாம் ஏற்பாடு செய்யச் சொல்லிப்பிட்டேன்.”
“களத்துக்குப் பொருத்தமான இடம்மா பண்டாரத்தாரு தெடல்…”
வாய்விட்டுப் பாராட்டினான் கலியன்.
“சாப்பாட்டுத் தூக்கோட போங்க;
ஒக்காந்து நிதானமா சாப்பிடுங்க;
கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க;
பெறகு களம் ஒக்க பண்ணுங்க;
வேலை அதிகமா இல்லை,
நான் பாத்துட்டுத்தான் வந்தேன்.”
திட்டம் சொன்னாள் குந்தலாம்பாள்.
“கலியா, ஆப்பக்கார அரும்பாகிட்டே சொல்லி உனக்குப் பசியார சாப்பாடு அனுப்பச் சொல்லியிருக்கேன். இந்நேரம் வந்துருக்கும். நீயும் வயித்தைக் காயப்போடாம பசியாறிட்டு வேலையப் பாரு…”
“அடேயப்பா, என்ன ஒரு திட்டம். என்ன ஒரு முன்னேற்பாடு…”
அய்யாம்மாவைக் கண்டு வியந்தான் கலியன்.
முதல் நாள் அறுவடை சிறப்பாக முடிந்தது.
‘அரி’ காய்ச்சலுக்காக’ வயலிலேயே கிடந்தது.
‘களம்’ பண்டாரத்தார் திடலில் தயாராகிவிட்டது.
நல்ல முகூர்த்த நாளாக இருந்ததால் சாஸ்திரத்திற்கு இரண்டு கட்டுகள் கொண்டு வரச்சொல்லிவிட்டு முதல் திரை அடித்து முகூர்த்தம் செய்தாள் குந்தலாம்பாள்.
மறு நாள் வேலைக்குத் திட்டம் பேசினாள் குந்தலாம்பாள்.
“நாளைக்குக் கட்டுக் கட்ட, கட்டுச் சுமக்க, கட்டு அடிக்க, வைக்கோல் போர் போட, இதுக்கெல்லாம் ஆம்பளை ஆளுங்க அதிகப்படியாச் சொல்லியிருக்கியா கலியா…!”
“ஏற்பாடு செஞ்சிரலாம் அய்யாம்மா…”
சொல்லிக்கொண்டே, வீட்டுக்குப் புறப்படத் தயாராக இருந்த அறுப்பாட்கள் பக்கம் திரும்பினான் கலியன்.
“எலே முத்துமாணிக்கம், “ரத்தனம், கொளஞ்சி, தங்கராசு, மருதை நாலு பேரையும் நாளைக்கு கட்டு கட்ட வரச் சொல்லிரு”
“சரிண்ணே…”
அனைவரும் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.
வண்டி பூட்டி வைத்தான் கலியன்.
சாரதி பலகையில் கம்பீரமாய் உட்கார்ந்து வீரன் காளையின் சப்பையில் ஒரு தட்டு தட்டினாள் குந்தலாம்பாள்.
“ஹாய்…க்கெ…க்கெக்…ஹை…” என்று வாயால் ஓசை எழுப்பினாள்.
“ஜல்…ஜல்…” என சலங்கைச் சத்தம் சங்கீதமாய் ஒலிக்க வீரன் புறப்பட்டான்.
அனுபவம் மிக்க சாரதியைப் போல, லாகவமாய், மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்ற அய்யாம்மாவையே கண்குளிரப் பார்த்துக்கொண்டு நின்றான் கலியன்.
இவ்வளவு திறமையும், கணக்கும், செயலும் செட்டுமாக இருக்கும் அய்யாம்மா, மாதய்யா இருந்தவரைக்கும் எதிலேயும் பட்டுக்காம ஒதுங்கியிருக்க எப்படி முடிஞ்சிது…!”
வியந்தபடியே வீடு நோக்கிப் போனான் கலியன்.
“பொம்பளையா அவ…!”
புருஷன் போனதும் தட்டிக் கேட்க ஆளில்லாமத் திரியறா…!”
“இவளை ஜாதிப் ப்ரஷ்டம் பண்ணி ஒதுக்கி வைக்கணுங்கறேன்…!”
“கன்னு செத்தா கைம்மலம்… கணவன் செத்தா நிர்மலம்’னு சொல்லுவா. நேர்லயே பாக்கறோம்…”
“இவ தடித்தனம், முரட்டுத்தனம், அடங்காத்தனம்… எல்லாமே ஆத்துக்கார் செத்தண்ணிக்கே வெட்ட வெளிச்சமாயிடுத்தே…!”
“ஏண்டீ…! எந்தப் பொம்பளையாவது புருஷன் பிரேதமாக் கிடக்கும்போது தெருவுக்கு வந்து ஊர் ஞாயம் பேசுவாளோ…?”
“எப்போ சாவார்…? எப்போ ஆளலாம்னு காத்துண்டே இருந்தாளோ என்னமோ…!”
“பாரேன்…!” ஆம்பளை ஆளுபோல வண்டியைப் பூட்டி, ‘டிங்கு டிங்கு’ன்னு ஓட்டிண்டு போறதை…!”
“காலமே காவேரிக்குப் போனப்போ, இந்தத் தடிச்சி ‘மங்கு…மங்குன்னு’ வயல்ல இறங்கி அறுப்பாளுக்குச் சமமா அறுப்பறுத்துண்டிருந்தாளாம். அதைப் பாத்துட்டு வந்து, “இப்படி உண்டோடீ…! இப்படி உண்டோடீ…! ன்னு மாஞ்சு மாஞ்சு போறார் எங்காத்துக்கார்…”
“பெத்தத் தாயைக் கொண்டுபோய் தன்னோட வெச்சிக்கப்படாதோ இந்த தொரைராமன்…!”
“நீ வேற, தொரை சொக்கத் தங்கம். அம்மாவை வரிஞ்சி வரிஞ்சி அழைச்சிருக்கான். இவதான் இங்கே தொப்ளான் மகன் இருக்கான் அது போறும்னு இருந்துட்டா..!”
சொல்லிவிட்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.
“பெத்த புள்ளையோட போய் இருக்க இவளுக்கு என்ன கசக்கறதோ தெரியலை…!”
“வயசான காலத்துல பெத்த மகனோட இருந்து ‘ராமா – கிருஷ்ணா’னு காலத்தைத் தள்ளாம என்ன பிழைப்போ இது…! எல்லாம் தலையெழுத்து. கிரஹச்சாரம்…! தூ…!”
“தலையெழுத்து, கிரஹச்சாரம்னெல்லாம் சொல்லாதேள். திமிரு, கொழுப்பு, ஆணவம், அகம்பாவம்னு சொல்லும்…”
“அடக்கி அடக்கி வெச்சா இப்படித்தான் திடீர்னு கன்னாப் பின்னான்னு கிளம்பிடும். மாமியார்க்காரி இருந்தவரைக்கும் பொட்டிப்பாம்பான்னா அடங்கிக் கிடந்தா…”
“மாதய்யா மட்டும் என்னவாம். எப்போப் பார்த்தாலும் கத்தல், இரைச்சல், ஊர் விவகாரம், வரட்டிழுப்புதான். வாயைத் திறக்காம காலம் தள்ளிப்புட்டா அவர் இருந்தவரை.”
“மாதய்யா மூச்சு நின்னதும் சுதந்திரமா கிளம்பிட்டாப் பாருங்கோளேன்…”
அக்ரஹாரத்தெருவில் எல்லார் வாயிலும் புகுந்து வந்தாள் குந்தலாம்பாள்.
பத்தாம் நாள் சாங்கியம், சம்ப்ரதாயம் என்று அவளைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.
அலங்கோலம் செய்யக் அலைந்தார்கள்.
குந்தலாம்பாள் ஒத்துழைக்கவில்லை
இப்படிப் பட்ட ஏச்சும் பேச்சும் குந்தலாம்பாள் எதிர்பார்த்ததுதான்.
எதிர்பார்த்தது நடைபெறும்போது, கோபத்திற்கோ, வியப்பிற்கோ இடமேது…!
வண்டியை அவிழ்த்து விட்டாள்.
முதல் முதலாக அறுத்த தாளை ஸ்வாமி மேடைக்கு முன் வைத்தாள்.
பக்தியுடன் காமாட்சி விளக்கு ஏற்றி வைத்தாள்.
தான்யலக்ஷ்மி ஸ்தோத்ரம் சொல்லி நமஸ்கரித்தாள்.
மாட்டுத் தொழுவம் சென்றாள்.
வீரன் காளைக்குத் தீனி கலந்து வைத்தாள்.
சூல் கொண்ட கோதாவரிப் பசுவுக்குத் தீவனம் வைத்தாள்.
கிட்டத்தட்ட பதினைந்து மாடுகள் கட்டிக் கிடந்த மாட்டுத் தொழுவம். ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு மாதிரியும், வெவ்வேறு வேகங்களிலும் அசையும்போது ஒவ்வொன்றின் கழுத்துச் சலங்கையும் ஒவ்வொருவிதமாக ஒலிக்கும்.
சலங்கை ஒலிகள் எல்லாம் சேர்ந்து ஒலிக்கும்.
தாளவாத்தியக் கச்சேரிபோல பல சலங்கைகள் ஒலித்த அந்த மாட்டுத் தொழுவம் இன்று வெறிச்சோடி இருந்தது.
அதைப் பார்க்கும்போது, பல தலைமுறைகள் கூட்டுக்குடி இருந்த அரண்மணை போன்ற பிரும்மாண்டமான வீட்டில், கணவனும் மனைவியும் மட்டும் தனிக்குடித்தனம் நடத்துவது போல இருந்தது.
ஜீவபுரம் டாக்டர் அருணகிரிதான் “கமிட்மெண்ட்ஸ்ஸை குறைச்சிக்கோ மாதவா…!” என்றார்.
மாதய்யாவுக்கு மனசு கஷ்டப்பட்டாலும், முதல் வயலை கிரயம் செய்தபோது மனசு தளர்ந்து கிலேசப்பட்டது.
“யாதெனின் யாதெனின் நீங்கியான்…”
என்ற திருக்குறளைச் சொல்லித் மாதய்யாவைத் தேற்றினார் டாக்டர் அருணகிரி.
போகப் போக அருணகிரி சொன்னதுதான் சரியெனப் பட்டது.
மாடுகளையெல்லாம் விற்க முடிவு செய்தபோது கோனார் கிருஷ்ணன் ஆட்கள் கொண்டு வந்தான்.
மாடு பற்றி அறியாதவனும், பல் பிடிக்கத் தெரியாதவனும் மாட்டுத் தரகுப் பேச வந்தபோது மாதய்யா மனம் குமுறினார். ஆத்திரப்பட்டார்.
“மாடு கொடுக்கறதுக்கில்லை…” என்று அனுப்பிவிட்டார்.
அக்கம்பக்கத் தெருக்களில் மாடு கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் கொடுக்க மனம் ஒப்பவில்லை.
பார்த்துப் பார்த்துச் செய்நேர்த்தி செய்த பசுக்களைத் தீனி போடாமல் எலும்பும் தோலுமாக உலவ விடுவார்கள்.
பால் மறத்த மறுநாள் காளைக்குச் சேர்ப்பார்கள்.
மாடு என்பது அவர்களுக்கு வெறும் வருமானம் மட்டுமே.
மாடுகளை மிகவும் நேசிக்கும் மாதய்யா, பணம் காசு கூடத் தேவையில்லை, தன் போல மாடுகளை நேசிப்பவருக்கே அதைக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாய் இருந்தார்.
ஜீவபுரம் அருணகிரி மூலம் ஒரு இடம் வந்தது.
மாட்டுப் பண்ணை வைத்திருப்பதாகத் தெரிந்தது.
வந்தவர்கள் மாடுகளைப் பார்த்தப் பார்வையிலேயே காருண்யம் தெரிந்தது.
மாடுகளைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.
கறவை எவ்வளவு என்று கேட்கவில்லை.
சுழி பார்த்துச் பிசிறவில்லை.
பல் பிடித்து யோசிக்கவில்லை.
துண்டு போட்டு மூடிக்கொண்டு பேரம் பேசவில்லை.
தங்கள் பண்ணையில் சமீபத்தில் எடுத்த புகைப்படம் காட்டினார்கள்.
மனசு திருப்தியாக இருந்தது மாதய்யாவுக்கு.
கோதாவரிப் பசுவையும் வீரன் காளை தவிர, மற்ற அனைத்தையும் மகிழ்ச்சியோடு லாரியில் ஏற்றி அனுப்பினார் மாதய்யா.
மலரும் நினைவுகளில் மாட்டுத் தொழுவத்திலேயே மயங்கி நின்றாள் குந்தலாம்பாள்.
மரப்பலகையால் ஆன தீனி தொட்டியை ‘வரக்…வரக்…’ என வீரன் காளையும், கோதாவரிப் பசுவும் நக்கும் சத்தத்தில் சுய உணர்வுக்கு வந்தாள்.
பசி வயிற்றைக் கிள்ளியது.
விடிகாலையில் காப்பி குடித்துவிட்டு வயலுக்குச் சென்றுவிட்டாள். ஏதும் சமைக்கவில்லை.
ஸ்வாமி நிவேதனத்துக்குத் தட்டிய நான்கு வடைகளும், ஒரு டம்ளர் பாயஸமும்தான் இருந்தது.
பிள்ளையார் எறும்புகளை நளினமாய்த் தட்டிவிட்டு அதைச் சாப்பிட்டாள்.
அரிசிப் பானையில் போட்டு வைத்த பேயன் வாழை பழுத்துப் பதமாய் இருந்தது.
அதில் இரண்டு உரித்துத் தின்றாள்.
எட்டு மணிக்கெல்லாம் படுத்தவள்தான் அடித்துப்போட்டாற்போல் அப்படி ஒரு தூக்கம் வந்து அவளைத் தழுவிக்கொண்டது.
– தொடரும்…
விகடன் மின் இதழான மை விகடன் இதழில், 02.05.2022 அன்று கலியன் மதவு என்ற சமூக நாவல் தொடங்கித் தொடர்ந்து 28.01.2023 ல் அதை நிறைவு செய்யும் வரை, அதைச் சிறப்பாக வெளியிட்டு ஊக்குவித்த ஆனந்த விகடன் ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – ஜூனியர் தேஜ்