கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 29, 2023
பார்வையிட்டோர்: 3,176 
 

அத்தியாயம் 1 – 2 | அத்தியாயம் 3 – 4 | அத்தியாயம் 5 – 6

அத்தியாயம் 3

“அய்யா, அனாவசியமா அரை ஏக்கர் தெடல் சும்மாத்தானே கெடக்கு, ஒரு காளவா போட்டுத் தெடலைக் கரைச்சிட்டமுன்னா, எடமும் வெளைச்சலுக்கு வந்துரும்… காளவாயில போடற காசு ரெண்டு பங்கா திரும்பிரும்…! வேண்டாம்’னு மட்டும் சொல்லிராதீங்கய்யா…?” என்று ஆத்மார்த்தமாகக் கேட்டான் தொப்ளான்.

“காளவா போட, ராசி வேணும்னு சொல்லுவாங்களே… ஜோசியரய்யாவைக் கலந்துக்கிட்டு அப்பறம் யோசிக்கலாமேன்னேன்…”

“அய்யா… அதல்லாம் வேண்டாம்யா… நான் பொறுப்புக் கட்டிக்கிட்டுப் போடறேன். நீங்க ‘செரி’ ன்னு ஒரு வார்த்தை சொன்னாப் போதுமுங்க…”

“தொப்ளா…! இதே தெடல்ல எங்க தாத்தா காளவா போடலாம்னு தொடங்கினாராம், நாள் நட்சத்திரம் பார்த்து கல் அறுப்பு கோஷ்டியும் வந்துருச்சாம். பூஜை போட்டுத் தொடங்கற நேரத்துல அறுப்பு கோஷ்டி ஆளு ஒருத்தன், ஏதோ விஷக்கடில செத்துடானாம். ‘நமக்கு காளவா ராசி இல்லேன்னு அதோட விட்டுட்டாராம் எங்க தாத்தா.

“…………..”

“எங்கப்பா துணிச்சலாக் கல்லறுத்த லட்சணம்தான் உனக்கேத் தெரியுமே…! காலமில்லாத காலத்துல அடைப்புப் புடிச்சாப்பல கொட்டித் தீத்த மழைல, அறுத்து அடுக்கின கல்லுங்கள்லாம் மண்ணாயிடுச்சே…! எடுத்தேன் கவுத்தேன்னு எதுனா செஞ்சி கை சுட்டுக்கப் படாதுன்னேன்.”

“அப்பாவுக்கு ராசியில்லாதபோனா, மவனுக்கும் அப்படித்தான்னு நினைக்காதீங்கய்யா…! அப்படியேப் பாத்தாலும் நீங்க போடலியே, நான்தானே போடப்போறேன்…”

மல்லுக் கட்டி நின்ற தொப்ளானின் மனசு நோகக் கூடாதே என்று “சரி… சரி… ஏதோ செய்யி…!” என்று அனுமதி கொடுத்துவிட்டார்.

ஆள் படைகளைக் கொண்டுவந்து, தானும் ஒரு ஆளாய் நின்று வண்டி வண்டியாய் மண் இறக்கி, கொத்திப் புரட்டி, புளிக்கவைத்து, மண் மிதித்துப் பதப்படுத்தி… பிசைந்து…, ஆசில் போட்டு அமுக்கிக் கல்லறுத்து… உலரவைத்துக்… கட்டாயங்கட்டி அடுக்கிவைத்து, மரம் வெட்டித் துண்டுபோட்டு , சூளையில் அடுப்புக் கட்டி, மரத்துண்டு செருகி, உரிமட்டை, ஓலை, கரும்புச் சக்கை எல்லாம் போட்டுக் கொளுத்தி, குறிப்பிட்ட நாட்கள், உள்ளே கணன்று, , வெளியே புகை கக்கி, அடங்கி… இதுவரை ஏதும் அசம்பாவிதம் நடக்கவில்லை.

ஆயிற்று…! ‘நாளைக் காலை முகூர்த்தம் பண்ணிப் பிரித்துவிட்டால் நம் ராசி தெரிந்துவிடும்…’ எண்ணங்கள் சுற்றிச் சுழன்றடிக்க இரவு முழுவதும் தூக்கமில்லை.

‘கடைசீல, நம்ம கெட்ட நேரம் தொப்ளானை காவு வாங்கிடுச்சே… பிடிவாதமா ‘காளவாயும் வேண்டாம், ஒண்ணும் வேண்டான்னு மறுத்திருக்கலாமோ…?’ காலம் கடந்தக் கழிவிரக்கம் வாட்டியது மாதய்யாவை.

வழக்கமாக சாலையோரத்துப் புங்கை, பனை மரங்களில் தொங்கும் கூட்டிற்கு வெளியே அமர்ந்து கழுத்தைச் சாய்த்தபடி உள்ளிருக்கும் குஞ்சுகளுக்கு புழு ஊட்டும் குருவிகள்.

கீ… கீக்கீ… கீச்… கீச்… என்று கத்திக்கொண்டே படபடபடவென றெக்கையை அடித்துக் கொண்டு ஒரே இடத்தில் பறந்து கூட்டிலிருந்து எட்டிப்பார்க்கும் குஞ்சுகளுக்கு விளையாட்டுக் காட்டும் குருவிகள்.

“ஃப்ட்ர்…….. ஃப்ர்ர் … … … … …” ரென ஜெட் வேகத்தில், குருவி கூட்டிலிருந்து இறைதேடப் பறந்த பின் அதன் கால்கள் கொடுத்த எதிர் விசையால் ஆடும் குருவிக் கூடுகள்..

இறைதேடித் திரும்பிய தாய்க்குருவி மூக்கில் இடுக்கிய புழுவுடன் வேகமாக வந்து உட்கார்ந்து, உள்ளே இருக்கும் குச்சுகளுக்குப் பகிர்ந்து கொடுக்கும் முன் சுற்றிச் சுற்றிப் பார்த்து தன் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் பாங்கு.

முட்டையின் மேல் உட்கார்ந்து கொண்டு அடைகாத்தபடியே கூட்டின் வாயிலில் தலையை நீட்டி ஆகாயத்தைப் பார்க்கும் குருவிகள்..

ஆங்காங்கேயிருந்து வரும் செம்போத்து, நாகணவாய், தவுட்டுக் குருவிகளின் கலவையான கீச்சுக்கள்…

மண்ணை பூப்போல வெளித்தள்ளிய வளையின் மேலிருந்து, மனிதக் காலடிச் சத்தம் கேட்வுடன் “டடக்..” கென பக்கவாட்டு வசமாய் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் நண்டின் சாமர்த்தியம்.

வரப்பில் நடக்கையில் கரிசலாங்கன்னி, கிழங்குக்கோரை, அருகம்புல், காஞ்சான் பச்சை, காஞ்சான் கோரை, நாயுருவி, மற்றும் பற்றபல வரப்புப் பூண்டுகள் காலில் உராய்வதில் கிடைக்கும் இன்ப நுகர்ச்சி.

வரப்பில் தேள்கொடுக்குச் செடி, கருவேலஞ்செடி இவைகளைப் பார்த்துவிட்டால் டக்…கென்று தவளை , பச்சைத் தத்துப்பூச்சி, இவைகளைப் போல தாண்டிக் குதித்தல்.

ஆங்காங்கே கிடக்கும் காஞ்சான் துளசி, திருநீற்றுப்பச்சை போன்றவைகளின் இலைகளை நாசூக்காக கிள்ளி எடுத்துக் கசக்கி முகர்ந்து வாசனையை கண் சொக்கி அனுபவித்தல்.

ஆங்காங்கே பால் வெண்மையாய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன செங்கால் நாரைகள் இறக்கையை அசைக்காமல் பறந்து, சடக்கென சேற்றில் நின்று பூச்சி பிடிக்கும் லாகவத்தை பார்த்து ரசித்தல்.

நாரையிடம் சிக்காமல் ஜிர்… ஜீர்… என்று ஓசையெழுப்பிப் பறந்து மறைந்துவிடும் பொன் வண்டின் லாகவத்தைப் பார்த்து பிரமித்தல்.

என்ற வழக்கமாக ரசனை எதுவும் இன்றி மாதய்யா இயந்திரத்தனமாக இறங்கினார். இன்றைய மனநிலை அப்படி.

அடுத்தடுத்து ஆக வேண்டிய சாங்கியங்களை அனிச்சையாய்ச் செய்தார்.

பூஜைச் சாமான்களை ஈசானிய மூலைக்கு எடுத்துச் சென்று

இயந்திர கதியில் தட்டில் பரத்தினார். தேங்காய் உடைத்து, அதன் குடுமியைப் பிய்தெறிந்துவிட்டு, வைத்தார். தோத்திரம் சொல்லிக்கொண்டே, வலது உள்ளங்கையில் இருந்த தண்ணீரால் பிரசாதத் தட்டை பாவனையாகச் சுற்றிப் படைத்தார்.

கைக்கெட்டிய தூரத்திலிருந்து ஒரு செங்கல்லை உருவி குத்து வசத்தில் ஈசான்யத் திக்கில் குத்து வசத்தில் கீழே போட்டார். அது தரையில் குத்திக்கொண்டு மெதுவாய்ப் படுத்தது.

அதைத் தொடர்ந்து மேலும் மூன்று கற்களை எடுத்து மற்ற மூன்று திசைகளிலும் குத்தினார்.

அடுத்து, முகூர்த்தம் செய்து பிரித்துப் போட்ட நான்கு கற்களையும் கூடையில் வைத்து வண்டியிலேற்றிக் கொண்டு வீடு திரும்பினார்.

வீரன் இதுவரை இல்லாத புதுப்பாதையில் வண்டியை இழுத்துக் கொண்டு சென்றான்.

தெரு முனையில் மாதய்யாவின் வண்டி வந்து நிற்பதாக அறிந்த கலியன் ஓடோடி வந்தான் கதறிக்கொண்டே.

மாதய்யா துக்கம் அனுஷ்டிக்கும் வகையில். தலைகுனிந்தபடி நின்றார்.

“அய்யா…! இப்படி ஆயிருச்சுங்களே…!” கலியனின் கேவல், மாதய்யாவின் வயிற்றைப் பிசைந்தது.

“முளியா…! வண்டீல காளவா முகூர்தம் பண்ணி எடுத்த கல்லு இருக்கு. அதைக் கொண்டுபோயி தொப்ளான் தலைமாட்ல வையி…”

“………………………..”

“என்னடா முளி யோசனை…?”

“மொதக் கல்லுங்க நாலையும் சாமி கோயிலுக்குக் கொடுக்கணும்னு சொல்லுவாங்களேய்யா…! அதான் யோசிக்கறேன்.”

“தொப்ளான் வேர்வை சிந்தி அறுத்த கல்லுடா…! அவனோட உயர்ந்த மனசு ஊரு உலகத்துக்கத் தெரியாததனால அவனை சாதாரணமா நினைச்சிடாதே… அவனும் இப்போ சாமிதாண்டா…! கொண்டு போயி வையி…!”

Elegy Written In A Country Church Yard என்ற இறங்கற்பாவில் Full Many A Flower is Born To Blush Unseen என்று Thomas Gray சொன்னதைப் போல இருந்தது மாதய்யா தொப்ளானைப் பற்றிச் சொன்னது.

மாதய்யா சொன்னதைச் செய்தான் முளி.

“கலியா…! உங்க குடும்ப வழக்கப்படி என்னென்ன செய்யணுமோ குறை வைக்காம செஞ்சிரு. காசு பணம் செலவு பத்தி யோசனை பண்ணாதே…! மனசு விட்ராதே…!” ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

“மனிசன மனிசன் மதிக்கற வித்தையை இந்த அய்யாகிட்டதாண்டா கத்துக்கிடணும்…!”

“தொப்ளானே சாமிதான்’னு சொன்னாராமே…!”

கலியன் வீட்டின் முன்னால் இருந்த பந்தலுக்குக் கீழ் போடப்பட்டிருந்த விசி பலகை, பெஞ்சி, ஸ்டூல் பலகைகள், ஆங்காங்கே கிடக்கும் பாறாங்கல், மரத்துண்டுகள், பைப்படி மேடை.. மாட்டு வண்டி நுகத்தடி… கோழி அடைக்கும் பஞ்சார மேடை, ஆட்டுக் கொட்டில் கொறடு, தவுட்டு மூட்டை… என்று பார்த்த இடத்திலெல்லாம் உட்கார்ந்துகொண்டும், ஆங்காங்கே நின்று கொண்டும், நடந்துகொண்டும், மரத்திலோ சுவற்றிலோ சாய்ந்துகொண்டும் ஜனங்கள் மாதய்யாவின் மனிதநேயம் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

அகிலாண்டக்கிழவி, உள்ளே சென்று, ஒப்பாரித் தலைமை பொறுப்பை தற்காலிகமாக ஏற்றுக் கொண்டாள்…

மூங்கில் துண்டுகள், பச்சை மட்டை, கப்பாணிக் கயறு, தருப்பைப்புல் கட்டு, அத்தி இலை, புரச இலை, வாழைஇலைகள், அலரி, துளசி மாலை, பன்னீர்ப் பூ, துலுக்கன் சாமந்தி, காகிதப்பூ, முக்கோணக் கொடி, தோரணம், வாழைக் கன்று, தென்னங் குருத்து… என எல்லாம் வந்துவிட்டது. பாடை சோடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

கட்டைப்-புகையிலையை வாயில் திணித்துக்கொண்ட அகிலாண்டக் கிழவி தொண்டையை ஒரு செருமு செருமிக் கொண்டாள்.

“வகை தொகையா வாழ்ந்தவரு….

வாகை சூடி நின்னவரு….

பகையறியா சுந்தரரே….

மண் சொர்க்கம் மறந்துட்டு….

விண் சொர்க்கம் போனீரே….!”

ஒரு கன்னியைப் பாடிவிட்டு, பொறுப்பை அன்னம்மாவிடம் கொடுத்துவிட்டு, எழுந்துத் தெருப்பக்கம் போனாள்.

தம்பட்டம் பிளந்து கட்ட, போதை ரங்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.

“வள்ளுவரே…! ‘மொறை’யத் தொடங்கலாமே…!” என்றாள் கிழவி.

“சுத்துப் பட்டுப் பங்காளிங்க எல்லாரும் தண்ணி மொண்டாரப் போவலாம்…” என்று குரல் உயர்த்திச் சொன்னார் பண்டாரம்.

“பிரேதம் குளியாட்ட காவிரியாத்துக்குப் போயித்தான் தண்ணி மொண்டாரணும்னு இல்லே… கன்னி வாய்க்கால்ல முளுவிட்டு மொண்டாந்துரலாம்… இப்ப ஒரு தபா ஊரு சுத்திக்கிட்டு மைல் கணக்குல நடந்துட்டு பொணத்தோட ஒரு தபா நடக்கவேணாம்…”

“…………..”

“என்னா ஊரோ…! சுடுகாட்டுக்குப் போக சொந்த ஊர்ல பாதையில்லாம, பக்கத்து ஊர் பாதை வளியா தூக்கிக்கிட்டுப் போற கொடுமை எண்ணிக்குத்தான் தீரப்போவுதோ…” புலம்பினாள் கிழவி.

“ஆத்தா… தண்ணி மொண்டார நம்ம ஊர் வளிப் போனா என்னா ஆத்தா…?” உருலாசு கேட்டான்.

“எலே…! வாயக் களுவுடா…! தெய்வக் குத்தம் பேசாத… தலமுறைத் தலமுறையா யாருக்கும் தெரியாமலா, நம்ம ஊரு பாதைல போவாம பக்கத்து ஊர் பாதைல போனாங்க…! எல்லையம்மன் உக்கிரமான தெம்வம்டா…” இதைக் கூறும்போது அகிலாண்டக் கிழவியின் குரலில் தெய்வ நம்பிக்கைத் தெரிந்தது.

உறவு முறைகள் கண்ணீருடன், தண்ணீர் சுமந்து வரப் புறப்பட்டன.

கலியன் முன்னே செல்ல, உறவு முறைகள் அவனைத் தொடர்ந்து சென்றன. ஒரு ஃபர்லாங் தூரத்தில் கிடக்கும் கன்னி வாய்க்காலில் மூழ்கி தண்ணீர் மொண்டார்கள்…”

எட்டு முழ வேட்டியின் நான்கு முனைகளையும் நான்குபேர் தூக்கிப் பிடித்திருக்க நடுவில் ஒருவர் குச்சியால் தூக்கிப் பிடித்தார்.

நகரும் வெள்ளைப் பந்தலாய் ஐவரும் நடந்துவர பந்தல் நிழலில் தலையில் சுமந்த தண்ணீருடன் நடந்து வந்தார்கள் உறவு முறைகள்.

தண்ணீர் வருவதற்குள் நாற்காலியில் நிமிர்த்தி உட்கார வைத்தது ஒரு கோஷ்டி.

பண்டாரம் முறை சொல்லச் சொல்ல தலையில் நல்லெண்ணெய், சீயக்காய்… என எல்லாவற்றையும் கலந்து, கொட்டி, பூசி, கழுவிக் குளிப்பாட்டி, துடைத்து முறை செய்தபின் பெஞ்சியில் கிடத்தினர்.

எல்லாத் தத்துவங்களையும் தன்னுள் அடக்கிய திருநீற்றுச் சாம்பலைப் பூசி பிரேதத்தை தெய்வீகமாக்கினார் பண்டாரம்.

தார்பாய்ச்சிக் கட்டிய புது ஈர வேட்டியுடன் வந்து நின்ற கலியன் கையில் தர்ப்பைப் புல் கொடுத்தார்கள்.

கலியன் தர்ப்பைப் புல் நுனியால் தொட்டுக் கொண்டே வர, பிரேதத்தை பெஞ்சியோடு தெருவாசலுக்குத் தூக்கி வந்தார்கள்.

“தோளில் சுமந்து வளர்த்தப் புள்ள….

தோளில் கலையம் சுமந்து வந்து….

கஞ்சி ஊத்த நினைச்சக் காலம்….

பஞ்சு அடைச்சிப் போனீரே…..!

ஒப்பாரி உச்சத்தைத் தொட்டது.

பெஞ்சி பிரேதத்தை அலங்காரப் பாடைக்கு மாற்றினார்கள்.

“பொன்னு உரு வட்டாவுல….

தல பாகம் கொண்டு வந்தான்…

தல பாகம் வேண்டாமுன்னு

தங்க ரதம் போறீகளே….!

மூங்கில் பிளாச்சி உரியில், புகைந்துகொண்டிருந்த நெருப்புச் சட்டியை, யாரோ எடுத்துக் கொடுக்க, கலியன் சிரத்தையாய் பெற்றுக் கயிறை இடது கையிலும் பானையின் அடிபாகத்தைத் தாங்கிய சும்மாட்டை வலது உள்ளங்கையிலும் தாங்கிச் சுமந்து மெதுவாய் முன்னே நடந்தான்.

தீப்பானையிலிருந்து கெட்டியாய் வெண்புகை பொங்கி, வெளியேறி கலியனின் கண்களைக் கரித்தது.

தரைப் பாடை நாலு பேரின் தோளில் ஏறி உட்கார்ந்ததும் புறப்பட்டது மயானத்தை நோக்கி.

முத்துப் பல்லக்காய் ஆடி அசைந்து சென்றது அலங்காரப் பாடை.

தெருமுனை வரைதான் இப்படி ஆடியசையும். சந்து திரும்பியதும் எடுத்துவிடும் ஓட்டம்.

தெருமுனை வரை வந்தனர் பெண்டுகள்.

பெண்டுகளின் கதறல் உச்சம் தொட்டு, படிப்படியாய் ஒப்பாரிப் பாடுவது அறவே நின்றுபோனது.

ஆண்கள் மட்டும் பிரேதத்தைத் தொடர்ந்தனர்.

அரிசிப் பொறி, அவல் பொறி, கொண்டகடலை, வண்ணவண்ணப் பூக்கள், சில்லறை நாணயங்கள்… என இறைத்தபடி வேகம் எடுத்தது பல்லக்கு.

நடு நடுவே தோள் வலிகண்ட தூக்கிகளை விடுவித்து மாற்றுத்தோளில் உட்கார்ந்தது பச்சை மூங்கில்.

“இன்னும் எம்மாந்தொலவு போவணும்…! உஸ்….!” என்று சிலர் பெருமூச்சு விட்டார்கள்.”

“அது கெடக்கு இன்னும்……!” என்று தொலைவை சொல்லாமல் சொன்னார்கள்.

“ஏன்…! ஊரு வளியா பொணம் போவ, பாதைக்கு ஏற்பாடு பண்ணணும்னு யோசனையே இல்லியா…?” ஒருவர் கேட்டார்.

“எங்க ஊர் பாதைவளியா போவப்படாதுன்னு பக்கத்து ஊர்க்காரங்க மறிச்சா…? என்ன பண்ணுவிங்க…?” இது இன்னொருவரின் ஞாயமான கேள்வி. ஆராய்ச்சிபூர்வமான சந்தேகமும் கூட.

“நம்ம ஊர்ல தலை விளுந்தா தூக்கிப்போக… பக்கத்து ஊர் பாதையைத் தேடுறது கேவலமா இருக்கு…!” ஒருவன் அங்கலாய்த்தான்.

“நாலு பேரைப் பழி வாங்கணும்னா இந்த ஊர்ல வந்து செத்தாப் போதும்…” ஒருவன் நகைச்சுவை கலந்தான்.

“ஏன்…? அந்தக் கோயில் வழியா கொண்டு போனாத்தான் என்ன ஆயிரும். அதையும் பார்த்துறவேண்டியதுதானே…!” ஒரு நாத்திகனின் நியாயமான உணர்வு.

இப்படியாக ஆளாளுக்கு வழக்கம்போல மயான வைராக்கியம் பேசிக்கொண்டே பிரேதம் இலக்கை அடைந்தது.

மயான காண்டம் தொடங்கியது.

வள்ளுவர் கொடுத்த தர்ப்பைப் புல்லை இடுப்பில்…, விரலிடுக்கில்…, காதில்….பானையில், பாடையில், சிதையில்… என வள்ளுவன் சொன்னபடி செருகிக்கொண்டும், வைத்துக்கொண்டும், போட்டுக்கொண்டும், இறுதிக் காரியம் செய்தான் கலியன்.

எள் தூவி, வாய்க்கரிசியிட்டு, கைத் தடவிக் காசு எடுத்து, பிரேதம் சிதைக்கு ஏறியபின் நேர்த்தியாய் எரிமுட்டை அடுக்கி, நெஞ்சுத் திறப்பில் நெருப்புச் சட்டியைக் கவிழ்த்துவிட்டு, வள்ளுவர் சொன்னபடி, சிதையைச் சுற்றி வந்தான்.

ஒவ்வொரு சுற்றுக்கும் பண்டாரம் அரிவாள் மூக்கால் பானையைப் பொத்துவிட இட வலமாய் முறையே மூன்று முறை சுற்றி வந்து பானையைப் பின்புறம் தூக்கி போட்டு உடைத்துவிட்டு திரும்பிப்பாராமல் நடந்து கருமாதிக் கரையில் தயாராய் இருந்த நாவிதன் முன் வந்து உட்கார்ந்தான் கலியன்.

துஷ்டிக்கு வந்தவர்கள் அகண்ட காவேரியில் ஆங்காங்கே மனம் போனபடி அங்கலாய்ப்பும், வாய்க்கு வந்தபடி வெட்டிப் பேச்சுமாக தலை முழுகிக்கொண்டிருந்தார்கள்.

கலியன் வீட்டில் செங்கற்களைக் கொடுத்துவிட்டு, வண்டியை ஓட்டிக்கொண்டு சென்ற மாதய்யாவுக்கு, மனசு ஒரு நிலையில் இல்லை.

கலியன் கேவிக் கேவி அழுதது மனதைப் பிசைந்தது.

அந்த நேரத்தில் மாதய்யாவுக்கு, தன் மகனின் நினைவு வந்தது. அதோடு தன் தந்தையும் நினைவும் ஏனோ சம்பந்தமில்லாமல் வந்தது.

‘இந்தக் காலனிப் பக்கம் வருவது இது இரண்டாவது முறை…!’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

பதிமூன்று பதினாலு வயதில் அப்போது பண்ணையாளாய் இருந்த ராசப்பனை அழைப்பதற்காக வயல் வரப்புகளில் நடந்து வந்திருக்கிறார். இப்போது மாட்டு வண்டியில் கப்பி ரோட்டில் வருகிறார்.

‘கிட்டத்தட்ட ஐம்பது வருஷ முன்னேற்றம். ஒரு கப்பி ரோடு போட்டதுதானா…?’

‘வெள்ளையன் ஆண்டு, அவனை விரட்டி நம்மை நாமே ஆண்டுகொள்ளும் லட்சணம் இதுதானா? இத்தமட்டும் கப்பி ரோடாவது போட்டார்களே…!’

இந்தியாவின் இதயம் கிராமப் புறங்களில் என்று சொன்ன மகாத்மாவின் கனவு பகற்கனவாகிவிடுமோ…?’ என்று ஏதோதோ எண்ண ஓட்டங்கள்.

குண்டும் குழியுமாய்க் கிடந்த பராமரிப்பற்ற கப்பிரோடு. பாதைக்கு இரு புறமும் மண்டிக்கிடந்த நெய்வேலிக் காட்டாமணிக் காடு. அதோடு பின்னிப் பிணைந்திருக்கும் கொடிகள். ஊசி ஊசியாய் குத்திட்டு நிற்கும் சப்பாத்திக் கள்ளிகள், கடுகுப் பூண்டு, இலந்தை, தேள்கொடுக்குச் செடி என ஏகமாய் வளர்ந்து காடாய் மண்டியிருந்தன.

நட்ட நடுவில் நடந்து நடந்து பழகிய ஒற்றையடிப்பாதை. அந்தச் சோடை நீங்கலாக மற்ற இடங்களில் நரகல்… நரகல்….

வலக்கைப் புறம் அறுவடைக்காகத் தலை குனிந்து காத்திருக்கும் நெற்பயிர். சரியான போஷாக்கில்லாத மத்தியத் தர வர்க்கத்து விடலைப் பெண் ஈன்ற குழந்தையைப் போல, மினுமினுப்புக் குறைவாக சோகையாக இருந்தது பயிர்.

இடப்பக்கத்தில் வாழைச் சருகுகள், பழைய பாய்கள், காட்டன் புடவைகள் என கிடைத்ததையெல்லாம் வைத்து மறைப்புக் கட்டிப் பயிரிடப்பட்ட புடல் கொல்லை.

பந்தலுக்கு இரண்டடி மேலே, கிழிந்து நைந்த சட்டையில் ஆங்காங்கே வைக்கால் துருத்தியபடி கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்ட, செக்கச் செவேல் என நாக்கைக் தொங்கப் போட்டுக் கொண்டு முழிக்கிற முகத்தோடு, நிற்கும் சோளக்காட்டு பொம்மை…

மறைப்பையும் தாண்டி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கொடிகளில் இருந்த பூக்களும் பிஞ்சுகளும், கொல்லையின் செழிப்பான மண்ணுக்குக் கட்டியம் கூறின.

தன் வயலின் அடுத்த பாட்டம் நடக்கவேண்டிய அறுவடையைப் பற்றித் திரும்பியது மனம். ஆயாசமாக இருந்தது. கை சுத்தம், வாய் சுத்தம், மற்றும் விசுவாசத்துடனும் ஈடுபாட்டுடனும் விவசாயத்தை கவனித்து வந்த தொப்ளான் போய்ச் சேர்ந்துவிட்டதை நினைத்தபோது வலது கை ஒடிந்தாற்போல இருந்தது.

‘ஊரோடு இருந்து சொந்த சொத்துக்களை கவனித்துக்கொண்டு மிராசுப் பட்டத்துடன் ராஜாவைப் போல இருக்கவேண்டியவன், பட்டணத்தில் யாருக்கோ கைக் கட்டிச் சேவகம் பண்ணுகிறானே…!’ என்று மகன் துரைராமனைப் பற்றி நினைத்தபோது….

‘நீ மட்டும் என்னவாம், உன் முதுகுக் கோணலை மறந்துவிட்டு, அடுத்தவன் முதுகைப் பார்த்து அங்கலாய்க்கிறாயே…!” என்றது மாதய்யாவின் மனசாட்சி.

மாதய்யாவும், இளமையில் தன் அப்பாவின் சொல்படி கேட்டு உடனே விவசாய வேலைகளை ஏற்றுக் கொண்டு விடவில்லை. எத்தனையோ எடுத்துச் சொல்லியும் நாலாவது ஃபாரத்தோடு படிப்பை முடித்துக் கொண்ட மாதய்யா காஜாமலையில் மிலிட்டெரிக்கு ஆள் எடுக்கும் ரெக்ரூட்மெண்டில் கலந்து கொண்டார்.

அவர் உயரத்திற்கும், நெஞ்சு விரிவுக்கும் மதிப்பளித்து உடனே வேலையில் சேர்த்துக் கொண்டது ராணுவம். மூன்று வருடங்கள் ராணுவ சேவையாற்றினார் அவர்.

தன் பேச்சை மதிக்காதவனிடம் பேச்சை நிறுத்திக்கொண்டார் மாதவனின் அப்பா. அவர் பேசவில்லையே என்று கவலைப்படவும் இல்லை மகன். விடலைப் பருவமல்லவா…!

மூன்று வருஷ காண்ட்ராக்ட் முடிந்ததும், மாதவனின் திறமைக்கு மேலும் ஐந்து வருஷ காண்ட்ராக்ட் தர முன் வந்தது ராணுவம்.

ஒப்பந்தத்தின் கையொப்பமிடும் முன் மூன்று மாத விடுப்பில் ஊருக்கு வந்த போதுதான் அப்பா காலராவில் சிக்கித் தவித்துச் செத்துப் போனார்.

அப்போது வேறு வழியில்லாமல் விவசாயத்தில் வந்து விழுந்தவர்தான் மாதவன்.

நிர்பந்தத்தில் வந்தாலும், வந்தபின் ஒவ்வொன்றின் சூட்சுமத்தையும் புரிந்துகொண்டு செய்தான் மாதவன்.

தன்னுடைய ஒழுங்கும், கட்டுப்பாடும், காலந்தவறாமையும், மன உறுதியும், நேர்த்தியும், மிலிட்டரி கொடுத்தது என்பது மாதய்யாவின் திடமான நம்பிக்கை.

‘மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் குறைந்தது ஆறு மாதங்களாவது மிலிட்டரி டிஸிப்ளினில் இருக்க வேண்டும்.’ என்பார் அவர்.

அடிப்படையில் கம்யூனிச சித்தாந்தத்தில் நாட்டம் கொண்டிருந்த மாதய்யாவுக்கு மேலும் மேலும் அதை ஊதி வளர்ப்பதற்கு மிலிட்டரிதான் உதவியது.

‘ஒரு வேளை என் சாவுக்குப் பிறகு துரைராமன் வந்து விவசாயத்தில் ஈடுபடுவானோ என்னவோ…!’ என்று நினைத்தார் அவர்.

புடலங்கொல்லையில் கொலுசுச் சத்தமும், அதைத் தொடர்ந்து கல கல வென்ற மங்கையின் சிரிப்பொலியும், மாதய்யாவை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்தது.

‘யாராவது புது ஜோடியா இருக்கும்…!’ என்று நினைத்தார்.

“அதெல்லாம்… கல்யாணத்துக்குப் பிறகுதான்….!” என்ற தேன் போன்று இழைந்த குரல்… மாதய்யாவைச் சிந்திக்க வைத்தது.

‘யார்… எங்கே… எப்படி… எக்கேடும் கெட்டுப் போனால் என்ன? நாம் நம் வேலையப் பார்ப்போம்…’ என்ற சுயநலமி அல்ல அவர்.

“யாரது கொல்லைல…?” இடி போலக் குரல் கொடுத்தார்.

“மாட்டிக்கிட்டா அந்தனூர் அக்கிரகாரத்தெருவையே கொளுத்திப்புடும் எங்க அண்ணன்.” பெண்ணின் குரலில் பயம் தெரிந்தது.

அதைத் தொடர்ந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம்.

மாதய்யா அதிர்ந்தார். ஏதோ தப்பு நடப்பதாக உள்ளுணர்வு சொல்லியது.

அந்த நேரம் பார்த்து வெள்ளாழத்தெரு சொக்கலிங்கம் கையில் கோலுடன் எதிரில் வந்தான்.

“சொக்கு… யாருது பொடலங்கொல்ல…?”

“வேலு நாயக்கர் காணிங்க… பிச்சைக்கன்னுக்கு வாராத்துக்கு விட்ருக்காப்பல…”

“ஓ…! சரிதான்… தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்…”

“அண்ணனுக்குத் தெரிஞ்சா அந்தனூர் அக்கிரகாரத்தையே கொளுத்திப்புடும்…” என்ற பெண்ணின் குரல் மட்டும் வெண்கல மணி அதிர்வாய் மாதய்யாவின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

வேறு எதிலும் கவனம் செல்லவில்லை அவருக்கு. ‘அந்தக் கள்ளக் காதலர்கள் யாராக இருக்கும்….’ என்று ஓயாமல் மாதய்யாவின் மனம் சிந்தித்துக்கொண்டேஇருந்தது.

அத்தியாயம் – 4

இடது பக்கம் சிவன் கோவில் மதில். மதிலை ஒட்டி வந்து வலக்கைப் புறம் திரும்பினால் அக்கிரகாரம் தெரு.

மேலக் கோடியில் கிழக்குப் பார்த்தபடி பெருமாள் கோவில். கோவில் மணி அடித்து பெருமாளுக்கு தீபாராதனை காட்டும்போது தன் வீட்டு முன் நடு வாசலில் வந்து நின்று பெருமாளே…! வரதராஜா…வரதராஜா…..! என்று, கன்னத்தில் போட்டுகொண்டு தலைக்கு மேல் கை தூக்கிக் கும்பிடுவார்கள்.

கிட்டத்தட்ட இருநூறு வீடுகள் இருந்த பெரிய தெரு. நீளமாகப் பரந்து விரிந்து கிடக்கும் தேரோடும் வீதி. கீழக் கோடியில் தெற்குப் பார்த்தபடி ஈஸ்வரன் கோவில்.

நடுவில் வடக்குப் பார்த்தபடி ராம பஜனை மடம்.

தெற்குப் பார்த்த மனைக்காரர்கள் மீது, வடக்குப் பார்த்த மனைக்காரர்கள் பொறாமைப் படுவார்கள்.

காரணம் தெற்குப் பார்த்த மனைக்கு வால் வீச்சு அதிகம். கிட்டத்தட்ட ஒரு ஃபர்லாங்கு இருக்கும். பட்டா எல்லை முடிந்தவுடன் தார் ரோடு.

ஈஸ்வரன் கோவிலுக்கு நேர் எதிரில் நந்தவனம். தாண்டி தெற்குப் பார்த்திருப்பது பசுபதி சிவாச்சாரியாரின் வீடு.

நந்தவனம் இருப்பதால் பெருமாள், வசந்த உற்சவத்தின் பத்தாம் நாள் ரதம், சிவாச்சாரியார் வீட்டு முகப்புக்குப் போகாது.

சந்து திரும்பும்போது முதலில் இருக்கும் தெரு முனை ‘கார்னர்’ வீடான வைத்தியர் கோபாலன் வீட்டு முன் ரதம் நிற்கும். அங்கே கொண்டு வந்துதான் அர்ச்சனைத் தட்டு கொடுப்பார் குருக்கள்.

குருக்கள் வீட்டுக்குப் அடுத்த வீடு சிவன் கோவில் ட்ரஸ்டியுடையது. வீர சைவரான அவர் பெருமாள் தேர் வீட்டின் முன் வராமைக்கு சந்தோஷமே பட்டார்.

பெருமாள் கோவிலைச் சுற்றி மட விளாகம். அதுவும் குறுகலானதுதான் என்றாலும், அங்கே கோவில் ட்ரஸ்டி குடியிருப்பதை அனுசரித்து, அப்படி இப்படி, அகட விகடம் செய்து எப்படியோ ரதத்தை கொண்டு போவார் கம்மூடி அய்யா.

இருநூறு வீடுகள் இருந்த அந்தத் தெருவில் நடு நடுவே இடிந்து சிதிலமாகிக் கிடக்கும் பாழ்மனைகளின் எண்ணிக்கைதான் இன்று அதிகம்.

கூட்டி மெழுகி விளக்கேற்றும் நிலையில் கிட்டத்தட்ட ஐம்பது அறுபது வீடுகள் இருந்தாலும், நல்ல பராமரிப்புகளோடு ஆரோக்கியமாக இருக்கும் வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இருக்கும் வீடுகளில்; வாரிசுகள் இல்லாத, இருந்தும்கூட தலையெழுத்தை நொந்து; தனியாகக் காலம் கழிக்கும் முண்டகப் பாட்டிகள் இருபது வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள்.

மாதா மாதம் தபால்காரர் தரும் மணியார்டர் தேதியாகச் சுருங்கிப் போனவர் சிலர்.

அவர்களாலெல்லாம், சத்திரம் போன்ற ஹோ’வென்ற பெரிய்ய்ய்ய… வீடுகளை எப்படிப் பராமரிக்க முடியும்…?’

காரை பெயர்ந்து பல்லிளித்தாலும்; ஓடுகள் புரண்டு வீட்டினுள் மழை வெள்ளம் நிறைந்தாலும்; தேள், பாம்பு என விஷ ஜந்துக்கள் வீட்டினுள் புகுந்தாலும்; அரச மரம் சுவர்களை சிதைத்தாலும்…, எதையும் தாங்கும் இதையம் உள்ளவர்களாக வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்தத் தெருவிலேயே நிலபுலங்களை கட்டிக்காத்து, மாடும் மனையுமாக, சொந்த சாகுபடி செய்துகொண்டு, எட்டுக்கண் விட்டெறியும் ஒரே ஒருவர் மாதய்யா மட்டும்தான்.

சந்து திரும்பும்போது வைத்தியர் பேரன் பிச்சுமணி சதாசிவத்தோடு வெட்டியாக வெகண்டைப் பேச்சுப் பேசிப் பொழுது போக்கொண்டிருந்தான்.

மாதய்யாவின் மாட்டு வண்டியைப் பார்த்ததும் நக்கலாகச் சிரித்துக்கொண்டே தொண்டையைச் செருமிக்கொண்டு, வார்த்தைகளால், அவரைத் தாங்கத் தயாரானான்.

‘பிச்சுமணியின் தாத்தா உள்ளங் கையில் ரோமம் வளர வைப்பேன்’ எனச் சவால் விட்டுச் செய்து காட்டிய சிறந்த சித்த வைத்தியர்.

அவர் காலத்தில் இந்த வீட்டு வாசலில், நோயாளிகளை ஏற்றி வந்த, ரேக்ளா வண்டி, வில் வண்டி, கூண்டு வண்டி, பிளஷர் கார்… என்று எப்போதும் நின்றிருக்கும்.

அவரின் வைத்தியத் திறமையைக் கேள்விப்பட்டு வெளியூர்களிலிருந்தெல்லாம் கூட்டம் அலை மோதும்…

பிச்சுமணியின் அப்பா காலத்தில் பெருங்காயம் வைத்த பாண்டமாய் ஓடிக்கொண்டிருந்தது…

கலுவத்தில் மூலிகைகள் அரைபடும் ஓசையும், உரலில் மருந்துச் சரக்குகள் இடிபடும் சத்தமும், இரும்புக் கடாயில் லேகியம் கிண்டும் ஓசையும், கேட்டுக்கொண்டிருந்த வீட்டில், பிச்சுமணியின் தலைமுறையில் இன்று இப்படி வெட்டி அரட்டைச் சத்தம் கேட்கிறதே…!’ என நினைத்துக்கொண்டார் மாதய்யா.

“அய்….யா………. காலனித் தெருவுல போயி, மக்கள்சேவை செஞ்சிட்டு வராப்ல இருக்கு…?” என்று சதாசிவத்திடம் சொன்னான் பிச்சுமணி.

“தொப்ளான் செத்துட்டானோன்னோ…! துக்கம் கேட்க வேண்டாமோ…?” என்றார் சதாசிவம் பதிலுக்கு.

“என்னங்காணும்…! பண்ணையாள் செத்ததுக்கு துக்கம் கேட்கப் போறதுல என்ன தப்புன்னேன். தாயா புள்ளையா பழகரவன் யாராத்தான் இருந்தா என்னன்னேன்…!” கொம்பு சீவினார் பிச்சுமணி.

இவர்களின் வெட்டிப் பேச்சை காது கொடுத்து கேட்கப் பிடிக்கவில்லை மாதய்யாவுக்கு.

அந்த நேரத்தில் இரண்டு தெரு நாய்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் அர்த்தமில்லாமல் குலைத்துக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார்.

வண்டியை அவிழ்த்துவிட்டு, மாதய்யா தோட்டத்துச் சந்து வழியாகச் சென்றார்.

வாளியோடு தலையில் தண்ணீரைக் கவிழ்த்துக் கொண்டபோது தொப்ளானுக்காக அவர் வடித்த கண்ணீரும் அதில் கலந்து கரைந்தது.

வாசல் திண்ணையில் இருந்த ‘சாரமனை’யில் குந்தலாம்பாள் தயாராக வைத்திருந்த வைத்திருந்த சொம்புத் தண்ணீரை எடுத்துச் சென்று, தெருவில் இறங்கி நின்று கால் கழுவி, வாய் கொப்பளித்து விட்டு வீட்டுக்குள் வந்தார்.

சாப்பாடு பிடிக்கவில்லை. பெயருக்கு ஏதோ கொரிந்தார்.

“புள்ளையப் பெத்து என்ன சுகத்தைக் கண்டே குந்தலாம்பா… உனக்கு நீயே பரிமாரிண்டு திங்கறதுதான், நீ வாங்கி வந்த வரம் போல…”

“ஏன் அவனைக் கரிக்கறேள். எங்கேயோ, பெத்த புள்ள சவுரியமா இருந்தா சரிதான்… உத்யோக நிமித்தம் எங்கியோ எட்டக்க இருக்கான்.”

“ஆமாண்டீ… நீ வக்காலத்து வாங்கு அந்தப் பயலுக்கு…” என்று தொடங்கிய அவரை மேலே பேச விடவில்லை குந்தலாம்பாள்.

அதோ அந்த வெத்தலைச் செல்லத்தை ரேழி மாடத்துல வெச்சிருக்கேன். சித்தே போய் விஸ்ராந்தி எடுங்கோ…!”என்று மடை மாற்றினாள்.

“மடை மாறும் முன்… “ இந்த மண்ணை மதிக்காதவன் உருப்படவே மாட்டான்…” என்று சீறிப்பாய்ந்துவிட்டு, வெற்றிலைச் செல்லத்தோடு சென்றவர் தோள் துண்டால் ‘பட்…பட்…பட்…’டென தூசித் தட்டிவிட்டு வாசல் சாரமனையில் சாய்ந்துகொண்டார்.

வெற்றிலை போடக்கூடத் தோன்றவில்லை. தொப்ளானின் இழப்பைக் கூட மனது ஒருவாறாக ஜீரணித்துக்கொண்டுவிட்டாலும், அந்தப் புடலங்கொல்லையில் கேட்ட அசரீரி மீண்டும் மீண்டும் மனதை அலைக்கழித்தது.

தெருவாசிகள் ஒவ்வொருவரையும் மனதிற்குக் கொண்டு வந்தார். ‘இவனாக இருக்குமோ…? அவனாக இருக்குமோ…?’ என்று அசைபோட்டுச் சோர்ந்து போனார்.

இன்னார் என்று உறுதியாக எதுவும் பிடிபடவில்லை. ‘ஏதோ விபரீதம் நடப்பதாக’ மட்டும் மனதிற்குப் பட்டது. ‘அதைத் தடுத்து நிறுத்த முடியாது…’ என்றது மாதய்யாவின் உள்ளுணர்வு.

புடல் கொல்லை சம்பவம் ‘காதல் இல்லை, காமம்…’ என்றது அவர் மனம்.

சாப்பிட்ட இலையை தெருவில் வீச வந்தாள் குந்தலாம்பாள்.

‘இந்த எச்சில் இலையைத் தூக்கி வீசுவது போல அந்தப் பெண்ணையும் தூக்கி வீசிவிடுவான் அந்தக் காமுகன் என்று யோசித்தார் மாதய்யா.

‘அந்தனூர் அக்ரகாரத் தெருவையே கொளுத்திப்புடும் எங்க அண்ணன்…! என்றாளே அந்தப் பெண்…! அப்படியானால் பெண் முத்தனூரைச் சேர்தவள்தான். முத்தனூர் பெண்ணை… சுத்துற அந்தனூர் ஆண் யாரா இருக்கும்….?’

“என்ன ஓய் பலமான யோசனை…” என்று கேட்டுக்கொண்டே வெற்றிலைச் செல்லத்தில் கை வைத்தபடி எதிரில் உட்கார்ந்தார் பசுபதி குருக்கள்….

“தொப்ளான் போய் சேந்துட்டானே , எப்படி தொடர்ந்து விவசாயத்தைப் பார்க்கறதுன்னு யோஜனையோ…? சரீ… தொப்ளானுக்கு என்ன செஞ்சிதாம்…?”

குருக்களின் முதல் கேள்வியை தவிர்த்துவிட்டு, “ராத்திரி படுத்தவன் தூக்கத்துலயே போய்ச் சேர்ந்துட்டன்.

“……………”

“நம்ம வயசுதான் இருக்கும் அவனுக்கு… கொடுத்து வச்சவன்…!” இரண்டாவது கேள்விக்கு பதில் சொன்னார்.

மாதய்யா ஏதும் பேசவில்லை.

சின்னக் குழந்தைகள் சாப்பிடுவதுபோல, நெஞ்சில் பாதி விழ மீதி வாயில் விழுமாறு சீவலை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டார் குருக்கள். போதாமைக்கு மீண்டும் சீவல் அள்ளினார். வெற்றிலை மேல் சுண்ணாம்பை அப்பிக் கசக்கி வாயில் திணித்தார் குருக்கள்.

வாயில் போட்டு மென்று துப்புவதுதான் என்றாலும் மாதய்யா தாம்பூலம் தரிப்பதே தனி அழகு.

தலை நிற்காத பச்சைக் குழந்தைபோல, கவனமாக வெற்றிலைச் செல்லத்தை எடுத்து மடியில் வைத்துக் வைத்துக் கொள்வார்.

வலது கையால் செல்லத்தின் அடிப்பகுதியைப் பிடித்துக்கொண்டு இடது கையால் மூடியை விரியத் திறப்பார்.

தேவையான வெற்றிலைகளை ஒவ்வொன்றாக நிதானமாக எடுத்து மடியில் வைத்துக் கொள்வார்.

தேர்ந்த ஓவியன் தூரிகையால் வண்ணம் எடுப்பதைப் போல் டப்பாவிலிருந்து ஆள்காட்டி விரலில் சுண்ணாம்பை எடுப்பார்.

வெற்றிலையின் பின்புறத்தை மெதுவாய்த் தன் யோக வேஷ்டியில் தடவித் துடைப்பார்.

கான்வாஸில் வண்ணம் தீட்டுவதைப் போல் கலை நயத்துடன் வெற்றிலையின் பின்புறம் சுண்ணாம்பு தடவி, அழகாய் மடித்து இடது கை விரலிடுக்கில் செருகிக் கொள்வார்.

அடுத்து, ஆள்காட்டி விரல், நடு விரல், கட்டை விரல் மூன்றும் சேர்த்து அளவாய் எடுப்பார் சீவலை.

அன்னாந்த நிலையில் , ஒரு துணுக்குக் கூட சிதறாதவாறு எடுத்த சீவல் மொத்தமும் வாய்க்குள் செல்லும்.

இடது கைவிரலிடுக்கில் தயாராயிருக்கும் வெற்றிலைப் பட்டியை ஒவ்வொன்றாய் எடுத்து வாயில் போட்டு நளினமாய் மெல்வார்.

“அப்பறம் என்ன விசேஷம் குருக்கள்வாள்…?” என்று கேட்டுக் கொண்டே மாதய்யா வெற்றிலைப் போட ஆயத்தமானார்.

“என் புள்ளாண்டான் வந்திருக்கான். உங்களை வந்து பார்க்கணும்னு சொல்லிண்டிருக்கான் …”

“அப்படியா… இப்ப என்ன விசேஷம்னேன்…?”

“உமக்குச் சேதியே தெரியாது போல இருக்கு… வாரா வாரம் சனி ஞாயிறு லீவுக்குத் தவறாம அவன் வரானாக்கும்…”

“அப்படியா…? நேக்குத் தெரியாதே…”

“ஏண்டா அனாவசிய செலவுன்னு கேட்டதுக்கு, அப்பா அம்மாவோட ரெண்டு நாள் இருந்துட்டுப் போலாம்னுதான்’னு சொல்லி வாயடிக்கறான்…”

உன் புள்ளாண்டான் ராமுவுக்கு வயசு முப்பது இருக்காது…?”

“ஏன்…! முப்பத்தொண்ணாறது. கல்யாணப் பேச்செடுத்தாலே பிடி கொடுக்க மாட்டேங்கறான். இங்கே வரும்போது அவனுக்கு நீர் எடுத்துச் சொல்லும் ஓய்…!”

“ஓ…! சொல்றேனே…! வீட்லதான் இருக்கானா…?”

“அதையேன் கேட்கறீர்… சொல்றதுதான் அப்பாம்மாவோட இருக்க வரேன்னு, ஒரு மணி நேரம் கூட முழுசா வீட்ல தங்கறதேயில்ல.”

“………………”

“ரெண்டு நாளும் எங்கியோ சுத்தறான். தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளை. என்னத்தை கேட்கறது சொல்லு…?”

“அப்படி எங்கதான் சுத்துவானாம்…?”

“நீரே கேளும்… அவன் வந்தா… அப்படியே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லியும் ப்ரஷர் கொடும்… என் ஆம்படையாளோட மாமா பேத்தி இருக்கா. ராமுவுக்குக் கொடுக்கணும்னு ரொம்ப பிரியப்படறா… இவனானா பிடி கொடுக்க மாட்டேங்கறான்…” என்று சொல்லிவிட்டு “அப்ப… நான் புறப்படறேன்…” கிளம்பிவிட்டார் குருக்கள்.

தெருவில் இறங்கிய குருக்கள் சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பி உள்ளே வந்தார்.

“ராமு, கீழக்கோடீல வரான்… நான் உம்ம கிட்டே எதுவும் சொன்னதா காட்டிக்க வேண்டாம்…!” என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திருக்காமல் அவசரமாய் சென்றுவிட்டார் பசுபதிக் குருக்கள்.

“மாமா…சௌக்யமா இருக்கேளா…?” கேட்டுக்கொண்டே வந்தான் ராமு.

“ம்… நல்ல சௌக்யம்தான்…ஒக்காரு…” சொல்லிவிட்டு எழுந்து போய் வெற்றிலைச் சாறு துப்பிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தார் மாதய்யா.

“வாரா வாரம் ஊருக்கு வரயாமே… கேள்விப்பட்டேன். கண்லயே படறதில்லையே…”

“வந்தா… ஜோலி சரியா இருக்கு. ரெண்டு நாள் ரெண்டு நிமிஷமாப் போயிடறது மாமா… ஊருக்குக் புறப்படத்தான் சரியா இருக்கு…”

ராமு சொல்லிக்கொண்டிருந்தபோதே, மூச்சை ஆழ்ந்து இழுத்து ஏதோ மோப்பமிட்டார் மாதய்யா…

புடலங்காய் வாசம் வருவதை உணர்ந்தார்.

‘ஒரு வேளை பிரமையோ…?’ என்று தோன்றியது.

“தொரைராமனைப் பாத்தேன் மாமா… அவன்…” என்று தொடங்கிய ராமுவை மேலே பேசவிடவில்லை மாதய்யா…

“அவன் சேதி என்கிட்டே சொல்லாதே, உள்ளே மாமி இருக்கா… ஏகபுத்ரனைப் பத்தி அவள்கிட்டே போய்ச் சொல்லு.”

ராமு வீட்டுக்குள் செல்வதற்காக திண்ணையிலிருந்து எழுந்தான். அவன் காலில் பூசியிருந்த சேறு… கால் சட்டையில் அப்பியிருந்த களிமண்… கண்ணில் பட்டது.

வீட்டுக்குள் சென்றபோது பின்புறமாய் அவன் சட்டையில் பார்த்தார், ஒட்டிக்கொண்டிருந்தது ஒரு புடல் சருகுத் துணுக்கு.

மாதய்யாவுக்கு உஷ்ணம் தலைக்கேறியது.

புடல் கொல்லையில் கேட்ட சிரிப்புச் சத்தம், அங்கு கேட்ட அசரீரி… ‘இவனாக இருக்குமோ…? அவனாக இருக்குமோ…? என்று யார் யாரையோ சந்தேகப்பட்ட நான் இவனை மட்டும் எப்படிவிட்டேன்…?’ மனசு கிலேசமாயிற்று.

“ஏண்டா ராமு…”

“ஏன் மாமா…?” உள்ளே செல்ல நான்கு அடி எடுத்து வைத்தவன் திரும்பி வெளியே வந்தான்.

அதென்னடா பேண்ட், சட்டையெல்லாம் சேறு அப்பிண்டு… வயக்காட்டுல வேலை பார்த்தா மாதிரி…”

“அது வந்து…”

“நீ பக்கத்துல வந்தாலே புடலங்கா வாசம் வீசறது…! சட்டை காலர் பக்கமெல்லாம் பொடல் சருகு ஒட்டிண்டிருக்கு…! பொடலங்கொல்லைல வேலை செஞ்சிட்டு வரயோனு கேட்டேன்.”

“நான் மாமியைப் பார்த்து சொல்லிட்டு வரேனே…!” என்று பேச்சு மாற்றினான் ராமு.

“வாடா ராமு…! தொரை நன்னா இருக்கானா…?” விசாரித்துக்கொண்டே குந்தலாம்பாள் வர… இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்த ராமு தப்பித்தோம் பிழைத்தோம் என்று மாமிக்கு செய்தி சொல்ல ஓடிவிட்டான்.

மாதய்யாவுக்கு அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.

துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு மாட்டுத் தொழுவத்துக்குச் சென்றார்.

– தொடரும்…

விகடன் மின் இதழான மை விகடன் இதழில், 02.05.2022 அன்று கலியன் மதவு என்ற சமூக நாவல் தொடங்கித் தொடர்ந்து 28.01.2023 ல் அதை நிறைவு செய்யும் வரை, அதைச் சிறப்பாக வெளியிட்டு ஊக்குவித்த ஆனந்த விகடன் ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – ஜூனியர் தேஜ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *