கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 23, 2023
பார்வையிட்டோர்: 3,143 
 
 

அத்தியாயம் 25 – 26 | அத்தியாயம் 27 – 28

அத்தியாயம்-27

“அந்தனூர் அக்ரஹாரத் தெருவில் நாற்பது வருடங்களுக்கு முன், தன் தாத்தா, ஐந்தாயிரம் ரூபாய்க்கு, வடமதுரை குஞ்சிதபாதத்திற்குக் கிரயம் செய்துவிட்ட வீட்டை, இப்போது, அதே ‘பார்ட்டி’யிடமிருந்து, ஐந்து லட்சத்திற்கு வாங்கிய இஞ்சினியர் திருநாவுக்கரசு, மொத்த அந்தனூருக்கும் பேசு பொருளானார்.

“திருச்சி, மெட்ராஸ், டில்லி, கல்கத்தான்’னு மாறி மாறிப் பிழைப்புக்குப் போற இந்தக் காலத்துப் பசங்களுக்கு நடுவுல, தனதுத் தாத்தா வாழ்ந்த இடத்தை வாங்கி, அதுல இருக்கணும்னு நினைக்கற ‘திருநா’வ நெனைச்சாப் பெருமையா இருக்கு!;

‘கெட்டும் பட்டணம் சேர்’னுவாங்க. இந்தத் திருநா, கிராமத்துக்குல்லத் திரும்பி வராறு;

ஏகப்பட்டக் காசு ஏறிப்போச்சு. ஒரு ‘இன்வெஸ்ட்மெண்ட்’டா, இதை வாங்கிப் போடுவாரா இருக்கும்?;

ஏதோப் பெருசா நெனச்சிக்கிட்டு வர்றாரு. கிராமத்துலல்லாம் அவராலக் காலந்தள்ள முடியாதுங்கிறேன்!”

வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைத்தார்கள்.

பத்திரப் பதிவு முடிந்ததும், வீட்டை வந்துப் பார்த்தார் திருநா.

தாத்தாவிடம் வீட்டை வாங்கின வடமதுரையார், எந்த மாற்றமும் வீட்டில் செய்யவேயில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

இந்த நாற்பது வருடங்களில் இரண்டு அல்லது மூன்று முறை சுவற்றுக்கு வெள்ளை மட்டும் அடித்திருந்திருப்பதுத் தெரித்தது.

கடைசியாக, ஐந்து வருஷத்துக்கு முன், அதுவும் முன் கட்டுக்கு மட்டும் வெள்ளையடித்திருப்பதைத் தன் பொறியியல் அனுபவத்தால் அறிந்தார் திருநா.

நான்குக் கட்டு வீடு அது.

நான்காம் கட்டு, பெரிய மாட்டுத் தொழுவம்.

நெளித் தகரம் வேய்ந்த மாட்டுக் கொட்டகை;

பதினைந்து இருபது மாடுகள் தாராளமாகக் கட்டுமளவுக்கு ‘ஹோ!’ வென்ற பிரம்மாண்டம்;

முறையாகப் பராமரிக்காமையால், சரிந்தும் சிதைந்தும் போய்விட்டது.

விழ விழ, நெளித் தகரங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டார் வடமதுரையார்.

விலைப் போகாத, மடித்துப் போன சாத்துக்களும், சரங்களும் வெந்நீர் அடுப்பில் ஆகூதி ஆகிவிட்டன.

இடிபாடுகளில் செடி கொடிகள் வளர்ந்து நின்றன;

நின்ற நெடுஞ்சுவரும் சீரற்று, வலுவிழந்திருந்தன..

மேற்கூரையைத் தாங்கிப் பிடித்ததற்குச் சாட்சியாகச், சுவற்றில் துருத்திக் கொண்டிருந்தன ஓரிரு கருங்கல் தண்டியங்கள்.

வளர்ந்த மரங்கள் நெக்கித் தரையில் தள்ளியத் தண்டியங்கள், சுவற்றோரம் பிசறிக் கிடந்தச் செங்கல் சல்லிகளும், ஓட்டாம்பாளமும் கலந்துக் குவிந்த முட்டுக்கு நடுவில் அரைகுறையாய்ப் புதைந்துக் கிடந்தன.

நடப்பட்டிருந்தக் கருங்கல் தூண்களில் சில நேராகவும், பல, சாய்ந்தும் நின்றன.

மாடுகளின் குளம்புகள் வழுக்காமல் இருக்கச் சொரசொரப்பானக் கருங்கல் பத்தைகள் பரத்தியத் தளவரிசை;

இரண்டுக்கு ஒன்று, ஒன்றுக்கு ஒன்று என்ற அடிக்கணக்கில் தளவரிசைக்காக அறுக்கப்பட்ட யானையடிக் கற்ளால் குத்துக்கல் பாய்ச்சிப் புருவம் கட்டப்பட்டிருந்தது.

கோமியம் பட்டுப் பட்டுப், பரவலாகப் பல இடங்களில் உப்பு அலர் அடித்துக் கரைந்து, ஒரு அசட்டுச் சிகப்பாய்ப் பல்லிலிளித்தது, புருவம்.

மூன்று துளைகளிட்ட, ‘மயில்-கல்’ வடிவில் நடப்பட்டக் கவணைக் கற்களை ஒட்டிப் பேயத்தி, உத்தராசு, எருக்கு என வளர்ந்து, கவணைக் கற்களைச் சாய்த்திருந்தது.

சில கவணைக் கற்கள் தெரித்துச் சிதைந்து, உடைந்திருந்தன.

பாறாங்கல்லால் வடிக்கப்பட்டத் தீனித்தொட்டியில், மண் நிரப்பித் துளசி வளர்த்திருந்ததற்கான அடையாளம் தெரிந்தது.

மாட்டுத் தொழுவம் இருந்ததற்குச் சாட்சியாக நின்ற அனைத்தையும் பார்த்து, மனதிற்குள் திட்டங்களைத் தீட்டினார் திருநா.

மேலண்டைச் சுவற்றிலிருந்து ஒன்றரை அடித் தள்ளி இரண்டடி உயரத்தில், வட்டக் கருங்கற்கள் மூன்று நின்றன.

பார்க்க, அம்மி போல இருந்தாலும், அது அம்மி இல்லை. தேங்காய் உரிப் பாரைக்கானப் பீடம்.

நடுவில் லிங்கம் போல் ‘உரிப் பாரை’ நிற்கும்.

‘வருடத்திற்கு இரண்டுப் பாட்டம் ‘கானம் போட்டு’த் தேங்காய் எண்ணை ஆட்டும் பழக்கம் தாத்தாக் காலத்தில் உண்டு’

பாட்டி, தேங்காய்க் ‘கானம்’ பற்றிக் கதைக் கதையாகச் சொல்லிக் கேட்டதெல்லாம் இப்போது நினைவில் வந்தன.

திருநாவின் கண்கள் முன் காட்சிகள் விரிந்தன.

இலகுவாகத் தேங்காய் உரிக்க, ஆட்டமில்லாமல், விகுவாக நடப்பட்டிருக்கும் கடப்பாரைகள் இப்போது அதில் இல்லை.

அக்ரஹாரத் தெருவை ஒட்டி இருப்பது வாணியத்தெரு.

வெயில் வந்தால் மாடுகள் களைத்துவிடும் என்பதால், விடிகாலையிலேயேச் செக்கோட்டம் தொடங்கிவிடும்.

“இக்…..கீங்ங்ங்……..ஙீ………..கூஉஉஉஉ……ஙௌ….ஊஊஊஊ…….ஙே…………..கீஈஈஈஈஈ… …ஙௌ ஊஊஊ…… ………ஙீ ஈஈஈ……”

இப்படி, விநோதமாய்ச் சத்தங்களை வெவ்வேறுத் தாள கதிகளில் எழுப்பி, எண்ணைப் பிழியும் நாட்டுச் செக்குகள்தான் வாணியத்தெருவின் வாழ்வாதாரம்.

“அந்தநூர் நாட்டுச் செக்கு எண்ணை உற்பத்தி நிலையம்”

என்று, ‘டெம்பராக் கலர்’ல், கோணலும்-மாணலுமாக, இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்ட கூண்டு வண்டிக்குள், திருகு ‘பைப்’ வைத்த ‘ட்ரம்’கள் வரிசையாக இருக்கும்.

கடலை எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, என்று ஒவ்வொரு ‘டிரம்’க்கும் கீழே, உபரி எண்ணை சொட்டுக்களை ஏந்தச் சதுர வடிவில் சின்ன அலுமினியத் தட்டு கிடத்தப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு எண்ணைக்கும் தனித்தனியாக முகத்தலளவைக் குப்பிகள் இருக்கும்.

அந்தந்த எண்ணைக்குக் கீழே இருக்கும் தட்டிலேயே அது வைக்கப்பட்டிருக்கும்.

வண்டியின் பின்னாலேயே, சுற்று-முற்றும் கஸ்டமர்களின் இருப்பைப் பார்த்தபடி, நடந்து வருவார் சம்பந்த வாணியரின் தம்பி கலியமூர்த்தி.

கஸ்டமர்களுக்கு எண்ணை அளந்து ஊற்றுவது அவர்தான்.

அடடா! ‘பைப்’ திறந்ததும் அரைக்கால் கம்பி போல, அமைதியாக எண்ணைக் இறங்குமே!

கண் கொள்ளாக் காட்சி.

குவளைப் போல விளிம்பற்ற அளவையில் பிடித்த எண்ணையை, சீசாவின் குறுகிய வாயில், புனல் திணித்துத், டக்’கென லாகவமாய் எண்ணை ஊற்றும் வாணியச் செட்டியாரின் திறமையேத் திறமை!

சமயத்தில், அளவையின் ஒரத்தில் வழிந்துவிட்டால், கீழிருந்து மேல் நோக்கி, இரண்டு விரல்களால் வழித்துச், செவ்வகத் தட்டின் விளிம்பில் வழிப்பார்;

வண்டிக் கூண்டில் தொங்கும் துணியில், அழுந்தக் துடைத்துக் கொள்வார் விரல்களை.

வண்டியின் மேற்கூரையின் முன் முகப்பில், வெண்கல மணி, தொங்கும்.

“டண்… டண்… டண்… டண்…”

சீராக, மணி அடித்துக் கொண்டே வண்டியை ஓட்டி வருவார் சம்பந்த வாணியர்.

வாணியஞ் செட்டியார் என்றும் சொல்வதுண்டு.

யார் யார் வீட்டில் வழக்கமாக எண்ணை வாங்குவார்களோ, அவர்கள் வீட்டு வாசலில் மாடு, தானாகவே நிற்கும்.

பழக்கத் தோஷம்.

தெலுங்கு பேசும், சம்பந்த வாணியர் குடும்பத்தைத். ‘தெலிகுலா’ என்பார்கள் ஊரார்.

“ஏங்கா உந்நாரு ஸம்பந்தகாரு? பாக உந்நாரா?”

அவரைத் தெலுங்கில் குசலம் விசாரித்தால், 50 மில்லிக்குக் குறையாமல் கொசுறு எண்ணை ஊற்றுவார் செட்டியார்.

வண்டியை விட்டு நான்கு ஐந்தடித் தள்ளி நின்றால் கூட நல்லெண்ணையின் ‘கம்’ என்ற வாசனை மூக்கைத் துளைக்கும்.

இப்படி, கிராமங்களில் எத்தனை எத்தனையோப் பழமைகளைப் போலத் தடமழிந்து விட்டது நாட்டுச் செக்கு இருந்த இடமும்.

செக்கு இருந்ததற்கு அடையாளமாக, இப்போது கருங்கல் அடிப்பாகம் மட்டும் தரையில் புதைந்துக் கிடந்தது.

நுகத்தடியை ஒரே சீராக அழுத்திப் பிடிக்க, முன்பாரமாகக் கிடத்தும், அம்மிப் போன்றச் செவ்வக வடிவக் பாறாங்கற்கள், இப்போது வாணியஞ்செட்டியார் கடைக்கு முன்னேப் படியாகக் கிடந்தன.

புதைந்துக் கிடந்த அடிப்பாகத்தின் பக்கவாட்டில், வளர்ந்த நுனா, பேயத்தி, உத்தராசு, அரசு,…….இத்யாதி மரங்களை, அவ்வப்போது மேல் மட்டத்தில் வெட்டி வெட்டி விட்டதால், அடிப் பெருத்து, வேர் வீசிப் புடைத்துத் துருத்திக்கொண்டு நின்றன.

நட்டு வைத்த தீவட்டிகள் சிகப்பும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் வான் நோக்கி எகிறுவதைப்போல

வேரடியிலிருந்து பானம் போல் கிளம்பி, உயர்ந்த போத்துக்களில் இலைகளும் தளிர்களுமாய் கொழுந்துவிட்டுப் பசுமையாய் எகிறின..

செக்குக்குள், லிங்கம் போல நின்றுச் சுழன்றுச் சரக்கை நசுக்கி எண்ணைப் பிழியும் பிழிக்-கட்டை; அல்லது குழவிக் கட்டை;

வட்டப் பாதையில் சுற்றி வரும் மாடுகளின், கழுத்தில் கிடக்கும் நுகத்தடி.

குத்துக் கட்டைகளையும் நுகத்தடியையும் இணைக்கும் அச்சுக் கட்டை, எதுவும் இப்போது இல்லை.

அநேகமாக, நாளாவட்டத்தில், எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தீமிதிக் குழிக்குக் கொடுத்துக் காலி செய்திருப்பார்களாக இருக்கும்.

மூன்றாம் கட்டு, பெரும்படிச் சமையலுக்கானது.

நீளமானக் கோட்டை அடுப்புதான் பிரதானம் அந்தக் கட்டில்.

மூன்றாம் கட்டிலும் ஒரு கிணறு உண்டு.

கல்யாணச் சமையல் என்றால், கங்காளம், ஜோடு தவலை… என்று பெரியப் பெரியப் பாத்திரங்கள் அலம்பிக் கவிழ்க்க விஸ்தாரமான கிணற்றடி..

சமையல் பாத்திரங்களை அடுக்க; வாகாய் எடுக்க; அலம்பிய பாத்திரங்களை வாட்டமாய்க் கவிழ்க்க, வசதியான மேடை.

காய்கறிகளைக் காற்றோட்டமாய்ப் பரத்தி வைக்கப், பிரத்யேகமாக ஜன்னல், வெண்டிலேட்டர்கள்.

கீழண்டைத் தாய்ச் சுவற்றில், மளிகைச்சாமான், அரிவாள் மனை, சீவுக் கட்டை, சேவை நாழி, அச்சு வில்லைகள்… என வைத்துக்கொள்ள அகலமாய் ஐந்து ‘ஸ்லாப்’புக்கள் போடப்பட்ட அலமாரி.

எல்லாமே, அடையாளமாகத்தான் இருந்தன இப்போது.

சமையல் கட்டும், இரண்டாம் கட்டும் இணையும் ரயிலோட்டுச் சார்ப்பில் ஊட்டமாக வளர்ந்து நின்றது நுனா;

கிணற்றின் உள் வளைவுளில் வேரூன்றிவிட்டது அரசு;

சுற்றிலும் வளர்ந்து, தளத்தைச் சிதைத்து நிற்கும் பேயத்தி.

பாழும் கிணற்றில், ஏதேனும் ஜந்துக்கள் விழுந்து விடக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில், மாட்டுத் தொழுவம் பிரித்த வளைவுத் தகரத்திலொன்றை குறுக்கேப் பாலம்போல் போட்டு மூடப்பட்டிருந்தது.

***

நல்ல அனுபவம் உள்ள இஞ்சினியர் என்பதால், மனசுக்குள் எஸ்டிமேட் போட்டார் திருநா.

திருச்சிக்கும் அந்தனூருக்கும் அலைந்து அலைந்துப் பழைய வீட்டை செப்பனிடுதல் சிரமம் என்பதை உணர்ந்தார்.

முதலில் முன் கட்டில், சுவற்றுக்கும் சீலிங்குக்கும் பொக்கைப் போறை பார்த்து நெற்றி பூசிப் பட்டி பார்த்து சுண்ணாம்படித்தார்,

அருகால், கதவுகள், ஜன்னல், அட்டை, இதெற்கெல்லாம் வார்னிஷ் அடித்தார்

முன்கட்டு, புதுப்பிக்கப்பட்டதும், ஒரு நல்ல நாள் பார்த்து, நவக்ரஹ ஹோமம் செய்து, பால் காய்ச்சிக் குடித்து, குடும்பத்தோடு அந்தனூரில் குடியேறினார்.

தொடர்ந்து, இரண்டாம் கட்டு; மூன்றாம் கட்டு, எனக் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களில் மொத்த வீட்டையும் செப்பனிட்டுப் புதுப்பித்துவிட்டார் திருநா.

நடுநடுவே சுப்பாமணி மாமா கேட்டுக் கொண்டதால், கலியனின் நிலத்தில் செய்யவேண்டியவற்றிற்கான ‘ப்ளான்’ போட்டார்.

கலியன், சுப்பாமணி, குந்தலாம்பாள் அனைவரும் உட்கார்ந்துப் பேசித் தேவையான மாற்றங்களைச் செய்து, ‘ப்ளான்’ போட்டு முடித்தார் திருநா.

அதற்கு நடுவே, கலியனை விவசாய ஆபீசுக்கு அழைத்துச் சென்றார்.

விவசாய ஆபீசர் சேதுராமன் சாரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

‘அடுத்தத் தைப் பொங்கலுக்குள், என்னென்னப் பயிரிட்டால் லாபகரமாக இருக்கும்’,

என்பதை விவசாய ஆபீசர் சேதுராமன் கலியனுக்குப் எடுத்துச் சொன்னார்.

அனுபவத்தில், நிறைய விவசாய நுணுக்கங்கள் தெரிந்திருந்தாலும், விவசாயப் படிப்புப் படித்த, சேது அய்யாவின் வழிகாட்டுதல் கலியனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

அதோடு இரண்டு, மூன்று வகையன புதிய ‘ஹைப்ரீட்’ விதைகளைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்.

“புதுசாக் கண்டுபிடிச்ச வகைங்க, கலியா!.”

“அப்பிடிங்களா..?”

“வீரிய ஒட்டு ரகங்கள். இதுங்களை விதைச்சி அறிமுகப்படுத்தினா, மானியம் தருவோம்!”

விளக்கமளித்தார் சேதுராமன்.

விவசாய ஆபீசர் சொன்ன விபரங்களை குந்தலாம்பாளிடம் வந்து சொன்னான் கலியன்.

சேதுராமன் சார் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அவர் சொல்றபடியேச் செய்வோம் கலியா. சிறப்பா விளையும்.”

ஊக்கப்படுத்தினாள் குந்தலாம்பாள்.

“அ…ம்…மா!”

தயக்கத்தோடு அழைத்தான் கலியன்

“சொல்லு கலியா, ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

“எப்பவும் போல… நீங்கதான் … வந்து வெவசாயத்தைப் பார்க்கணும்மா!”

தயங்கியபடியேக் கேட்டான் கலியன்.

“அதுக்கென்ன? வந்தாப் போச்சு!…”

வழக்கம்போல குந்தலாம்பாள் வயல்காட்டில் வந்து நின்றாள்.

விவசாய இலாக்காக் கொடுத்த உளுந்து விதைகளை முறையாக விதைத்தான் கலியன்.

அவ்வப்போது விவசாய இலாக்காவிலிருந்து, ஃபீல்டு ஆபீசர்கள், வந்து விளைச்சலைப் பார்ப்பதும் போவதுமாக இருந்தார்கள்.

புகைப்படம் எடுத்தார்கள்.

வகை மாதிரிகைளை சேகரித்துச் சென்றார்கள்.

விதைகளின் வீர்யத்தை அவ்வப்போது சோதித்தார்கள்.

தை மாதம் விதைத்த உளுந்து;

விதைத்தவுடன் ஒரு தண்ணீர் விட்டாயிற்று;

பிறகு உயிர்த் தண்ணீர் மூன்றாவது நாளில் பாய்ச்சியாயிற்று;

10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுதல் மட்டும்தான் வேலை;

வைகாசி மாதம்தான் அறுவடைக்கு வரும்.

அறுவடைக் காலம் வரை, தானம் செய்வதற்கு முன் கோவில் சம்பாக் காணியில், செய்யவேண்டிய வேலைகளைக் கவனித்தான் கலியன்.

சித்திரைக் காய்ச்சல்.

கலியன் களத்துக்கு அருகில் காளவாய்க்கு மண் வெட்டிய பள்ளத்தில் தண்ணீர் வற்றிக் காய்ந்துவிட்டது.

ஆகாயத்தாமரைகளும், ஆங்காங்கே முளைத்திருந்த தாமரைகளும் அல்லியும் வதங்கிவிட்டன.

ரிவிட்மென்ட் வேலையைத் தொடங்கினார் இஞ்சினியர் திருநா.

கரூரிலிருந்து லாரிகளில் சதுரக் கருங்கல் ஸ்லாப் வரவழைத்தார்.

உள்ளூர் கொத்தனார்களும், கூலிகளையும் வைத்து குளக்கரை கட்டும் வேலை தொடங்கியது.

ஊர் நன்மைக்காகத், தன் மொத்த நிலத்தையும் தானம் செய்துப் பத்திரப் பதிவு செய்த கலியனை எல்லோருமே பாராட்டினார்கள்.

ஒரு கூலிக்காரனின் தர்ம சிந்தனை, ஊரிலுள்ள மற்றவர்களையும் சிந்திக்க வைத்தது.

‘இடது கைத் தருவது வலது கைக்குத் தெரியாமல்’ கலியன் குளம் அமைக்கப் பொருளுதவி செய்தார்கள் சிலர்.

பஞ்சாயத்துக்கு மூன்று ஏக்கர் நிலத்தை தானம் செய்த கலியனை மனதாரப் பாராட்டினார்கள் பலர்;

தங்கள் பங்கிற்கு சிலர் சம்பளமில்லாம் ஓரிரு நாட்கள் வேலை செய்வதாக ஒத்துக் கொண்டார்கள்.

கூலிக்காக வேலை செய்யாமல் ஊர் பொதுவுக்காக நேர காலம் பார்க்காமல் வேலை செய்தார்கள் பல உள்ளூர்வாசிகள்.

தான் வாங்கிப் புதுப்பித்த, தாத்தாக் காலத்துத் சமையல் கட்டில், சுவையாகவும் சத்தாகவும் சமைத்து, ஊருக்காகக் கடினமாய் உழைக்கும் உழைப்பாளிகளுக்குத் திருப்தியாகச் சாப்பாடு போட்டார் திருநா.

அவ்வப்போது குந்தலாம்பாள் வந்து, சமையல்கட்டில் நின்று சமையலைக் கண்காணித்தாள்.

“திருநா, உன் தாத்தாக் குணம் அப்படியே உன்கிட்டே இருக்கு. ஊருக்குச் சாப்பாடு போடறதுல அவரை அவருக்கு நிகர் அவர்தான்.…”

இப்படி, அவ்வப்போது திருநாவைச் சிலாகித்துப் பேசுவாள் குந்தலாம்பாள்.

விவசாய இலாக்காவோடு ஒண்றிணைந்து, பார்த்துப் பார்த்துப் பராமரித்தலாலும், ‘ஹைப்ரீட்’ விதைகள் என்பதாலும், வழக்கத்தை விட அதிமாகவே விளைச்சல் கண்டது.

உளுந்து அருவடைக்கு வரும் முன்பே, மானியப் பணம் கொடுத்தார்கள் இலாக்காவினர்.

மானியமாக வந்த பணத்தைப் போட்டு, சம்பாக் காணியில் பச்சைவெட்டுக் கல் கரைந்து மேடாகிக் கிடந்த காளவாய் மேட்டைச் சீரமைத்து களமாக நிரவினான் கலியன்.

கிட்டத்தட்ட அரை ஏக்கர் விஸ்தீரணத்தில் மிகப் பெரிய களம்.

“சரியான பயித்தியக்காரனா இருக்கானே கலியன்!;

பாசனம் பண்ண முடியாம மேடிட்டுக் கெடக்கு. சரி. புஞ்சையா மாத்திப்பிடலாமே!;

அதுவுஞ்சரிதேன். தேக்கு, மகாகனினு மரங்களை வெச்சிட்டு, தென்னம்புள்ளைங்கப் போட்டு மண்ணுக்கு மதிப்பேத்தறதை வுட்டுப்புட்டு இப்படி ஊருக்குக் களங்கட்டறானே பித்துக்குளிப் பய.;

பூசர களம் இல்லேனு ஆயிட்டபிறகு, அறுவடைக்குக் களம் இல்லாம அவஸ்தைப் பட்ட நமக்குக், கலியன் பெரிய உதவி செஞ்சிட்டான்;

பூசர களம் போலவே கலியன் களத்துக்குப் பக்கத்துலயே, தாமரைக் கொளமும் இருக்கறது ரொம்ப வசதியா இருக்குதானே…;

ஏய் ! இது பூசர களத்தை விட ரெண்டு மடங்கு பெரிய களம்டா..”

ஊரெங்கும் கலியன் களம் பேசுபொருளாகிவிட்டது.

களம், ஊர்ப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

சுற்று வட்டாரத்தில் விவசாயம் செய்பவர்களும், அந்தக் களத்தைச் சௌகரியமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

“கலியன் களம் ரொம்ப வசதியா இருக்கில்ல…!”

சிலாகித்துப் பேசினார்கள்; அந்தக் களத்தில், கட்டடித்துக் கண்டுமுதல் எடுத்தவர்கள்.

‘கலியன் களம்’ பிரபலமானது அந்தனூரில்.

நாலு புறமும் சுற்றுச் சுவரும், படிகளும், பாறாங்கல் ரிவிட்மெண்ட்டுமாய் அழகாகவும் வசதியாகவும் குளம் கட்டித் தந்த திருநாவை ஊரேப் புகழ்ந்தது.

ஆகாயத் தாமரையை அவ்வபோது நீக்கி, தாமரை மட்டும் செழிப்பாய் வளரவிட்டான்.

களத்தையும், குளத்தையும் நேர்த்தியாய்ப் பராமரித்தான் கலியன்.

கலியன் குளத்தில் நிறையத் தாமரை மலர்ந்தன.

மூங்கில் கழிகளால் கட்டிக் கிடத்திய மிதவையில் ஏறிப்போய் தினமும் தாமரை மலர் கொய்தான்.

கலியன் குளத்துத் தாமரை மலர்கள் தினம் தினம் எல்லையம்மன் பாதங்களையும், குந்தலாம்பாள் வீட்டு பூஜையறையையும் அலங்கரித்தன.

நிலத்தைச் சாசனம் செய்துக் கொடுத்த நாளில், நட்டுப் பராமறித்த அரசும் வேம்பும், ஒரு வருஷ இளம் தம்பதியர்போல் தளதளவென்று செழித்து வளர்ந்திருந்தன.

காவிரிக்குச் சென்றுத் திரும்பும் மாமிகள், அந்த அரசு வேம்பு தம்பதியரைச் சுற்றி வந்து நமஸ்கரித்தனர்.

யாரோ ஒரு பக்தர் வேண்டுதல் நிறைவேற நாகர் சிலை ஒன்றை அங்கே பிரதிஷ்டை செய்தார்.

வெறும் மரத்தடி என்ற நிலை மாறி, பக்திக்கும் மரியாதைக்கும்உட்பட்ட புனிதமான இடமாகத் தரம் உயர்ந்தது.

மாட்டு வண்டிகள், டிராக்டர்களில் கண்டு முதல் கொண்டு செல்வதும், வைக்கோல் ஏற்றிச் செல்வதுமாக கலியன் களம் அறுவடை நாட்களில் மட்டுமல்லாமல் எப்போதுமே, பரபரப்பாகவே இருந்தது.

விஸ்தாரமாக இருந்ததால் வாழைத்தார் கூட அங்கே அடுக்கி ஏற்றினார்கள்.

‘கோவில் சம்பாக் காணி.’ என்ற விளியே சுத்தமாய் மறைந்துவிட்டது.

“நல்ல உசரம் ஏத்திக் கெடக்கறதுனால, காத்துன்னா காத்து அப்படியொரு காத்து கலிங்களத்துல…;

இப்படி ஒரு களம் இந்த ஜில்லாவுலயே கெடையாதுங்கறேன்…;

கலியங்களத்துல தூத்தின நெல்லுதானே…! ஒரு கருக்காத் தங்காது…!”

கண்ணை மூடிக்கொண்டுத் துணிந்து வாங்குவார்கள் வியாபாரிகள்.

வயலை ஒட்டியக் கன்னி வாய்க்கால் அகலப்படுத்தப்பட்டது.

ரிவிட்மெண்ட் கட்டி ஆங்காங்கே புழங்குவதற்கு ஏதுவாகப் படிகள், சறுக்குகள் எல்லாம் வைத்து, கான்கிரீட் கால்வாயாக மாற்றியமைத்தது பஞ்சாயத்து போர்டு.

“கலியங்களத்துக்கு வண்டி, டிராக்டர் எதுவும் போக முடியாம காங்கிரீட் தடுப்பை கட்டிட்டீங்க;

ரோடுலயே நிறுத்திக் கண்டுமுதல் ஏந்த வேண்டியதாயிருக்கு..”

“பாலங்கட்டிக் கொடுத்தாப் போக்குவரத்துக்கு சவுரியமா இருக்கும்”

உபயோகிப்பாளர்கள் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தார்கள்.

பஞ்சாயத்துக் கூட்டத்தில் வற்புறுத்தினார்கள்.

கோரிக்கை வலுத்தது.

சுப்பாமணியின் செல்வாக்கை வைத்து நிர்வாகத்தை அணுகினார்கள்.

“பாலம் மதகெல்லாம் கட்ட, ஃபண்டு எதுவும் கிடையாது. பர்மிஷம் தரோம், நீங்க செலவு பண்ணிக் கட்டிக்கிடுங்க…” என்றார் தாசில்தார்.

“அய்யா வய இப்படியா ஆவணும்…?;

நல்லா வெளையற வய. இப்படிப் பாழடிச்சிட்டானே இந்தக் கலியன்’;

கலியனா பாழடிச்சான். ஏற்கெனவே மாதய்யா மவன் ‘மூணே முக்கா நாழி முத்து மழைப் பெஞ்சாப்பல’, காளவாப் போடறேன்னு இறங்கி வயலைக் கொதறித் தள்ளிப்பிட்டானே;

கொதறலை நிரவிட்டு விவசாயம் பாக்காம, போக்கத்த பய, இந்தக் கலியன், களமும் குளமுமா காலத்தைக் கழிக்கறானே;

எது எப்படியோ நமக்கு கட்டடிக்கத் தோதாக் களம் அமைஞ்சிருக்கு. விட்டுத்தள்ளு;

பதினைஞ்சி வருசத்துக்கு முன்னே உடையார் விட்டுப் போன களத்தையும், தாமரைக் குளத்தைத்தையும் அவுரு வாரிசுங்க வந்து துத்தாங்க;

ஆனா இந்தக் கலியன் களத்தையும் குளத்தையும் குறைஞ்ச பட்சம் இன்னும் இருபத்தைஞ்சி வருஷத்துக்கு யாரும் வந்து துக்கமாட்டாங்க;

ஏன் அப்படிச் சொல்றே…?;

கலியனுக்கு இன்னும் கலியாணமே கட்டலை. கலியாணமாகி, குளந்தை பிறந்து, அதுக்கு இருபது இருபத்தஞ்சி வயசு வளரணுமே…!”

இப்படியெல்லாம் கலியனைப் பற்றியும் கலியன் குளம், களம், மதகு பற்றியெல்லாம் பேச்சுக்கள் பரவலாக இருந்தன.

கலியன் பேசியபடி, இது கடைசீப் போகம் சாகுபடி அவனுக்கு.

சுப்பாமணியின் முயற்சியால், எல்லா பேப்பர்களும் சிக்கலில்லாமல் நகர்ந்தது போல, சாகுபடியும் சிறப்பாக நடந்தது.

எல்லையம்மன் கோவிலுக்குப் பின்புறம், கலியன் மதகு தொடங்கி பெரியவாய்க்கால் பாலம் வரை பஞ்சாயத்து சார்பில் கப்பி ரோடு போட்டார்கள்.

தாராளமாக இரண்டு லாரிகள் போய் வரும் அளவுக்கு அகலமாக இருந்தது ரோடு.

திருச்சி கரூர் பிரதான சாலைக்கு வெகு அருகில் இருந்ததால் கலியன் களத்துக்கும் கலியன் சாலைக்கும் இடைப்பட்ட அரை ஏக்கருக்கும் அதிகமான இடத்தில் ‘டிபிசி’ அலுவலகம் கட்டவேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.

அல்லூரின் கடைக் கோடியில், லாரி போய் வர இடைஞ்சலாக, சிறிய இடத்தில், குடியிருப்புப் பகுதியில் இயங்கிவந்த ‘டி பி சி’ அலுவலகத்தை அந்தனூரில் கலியன் களத்துக்கு அருகில் மாற்றினார்கள்.

அந்தனூர்க்காரர்கள் மட்டுமல்லாது, முத்தனூர், முருங்கப்பேட்டை, மல்லாச்சிபுரம், ஜீவபுரம் வரை இருக்கிற விவசாயிகள், விளைந்த நெல்லைக் கண்டுமுதல் கண்ட கையோடு ‘டிபிசி’ல் சௌகரியமாக விற்றார்கள்.

‘டிபிசி’ அதிகாரிகளும், வெளியூரிலிருந்து வரும் நெல் சற்றே ஈரப்பதத்துடன் வந்தால், ஒரு பகல், கலியன் களத்தில் காயவைத்து எடுத்து வரச்சொல்லி ஊக்கப்படுத்தினார்கள்.

“கலியன் ஊர்ப் பொதுவுக்காக எழுதி வைத்த அந்தக் காணி, அந்தனூருக்கு மட்டுமல்லாது சுத்துப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் மிகவும் உபயோகமாக இருந்தது.

“பொறம்போக்கக் கட்டிகற இந்தக் காலத்துல சொந்த நெலத்தச் சமுதாயத்துக்குக் கொடுத்திருக்கற கலியனுக்குக் கோவில் கட்டிக் கும்பிடலாண்டா…!;

தர்மத்துக்கு வந்த சொத்து தர்மத்துக்கேப் போவுது…!;

கல்யாணங் கட்டிப் புள்ளை குட்டினு இருந்தா இப்படிச் செய்வானா…;

முத்தனூரு வளியா மணிக்கணக்கா பொணம் தூக்கற வலி குறைய வளி பண்ணிட்டான் கலியன்;

நல்ல காரியம் பண்ணிண்டிருக்கான்…!”

“பூதான இயக்கம் வெச்ச வினோபா இப்போ இருந்தா அந்தனூருக்கு உடனே வந்து கலியனை வாழ்த்துவாரு…”

திருநா, ப்ருக்யூர்மெண்ட் ஆபீசரோடு பேசிக்கொண்டிருந்த போது சொன்னார்.

“மாதய்யா செய்ய நினைச்சதை கலியன் செஞ்சிட்டான்…!” நெகிழ்ந்தார் ஆபீசர்.

அந்த நேரத்தில் வந்த கிட்டாவய்யா, குறுக்குச் சால் ஓட்டினார்.

“ஊர் நாசக்காடா ஆகப் போறது சார்…!” என்றார் ப்ரோக்கியூர்மெண்ட் ஆபீசரைப் பார்த்து.

“ஏன் அப்படிச் சொல்றேள்…!”

“மாதய்யாவோட அப்பாவும் பரோபகாரிதான். அவர் நினைச்சிருந்தா இதே வயல்ல பாதை போட்டுக் கொடுத்திருப்பார். ஏன் செய்யலை…?”

“ஏன்?” என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம், எதிரில் இருந்த திருநா முகத்திலும் அப்பட்டமாய்த் தெரிந்தது.

“காலம் காலமா இருக்கற சிலதை மாத்தக்கூடாதுன்னுதான் செய்யலை. இந்த மாதய்யா…! புரட்சி பண்றதா நினைச்சி அந்த வயல் மூலம் குருக்களாத்துப் பையனை தூக்கிண்டு போனான். இப்போ! பொணம்போற பாதையாவே ஆயிடுத்து பாருங்க…!;

“…………………”

“இந்தப் பாதையை என்னால ஒத்துக்க முடியாது…!” என்றார் கிட்டாவய்யா.

“நீர் ஒத்துக்காட்டி போமேன். ஊர்ல நல்ல காரியம் அதும்பாட்டுக்க நடக்கும்…!” என்றார் ப்ரோக்யூர்மெண்ட் ஆபீசர்.

“கிட்டா மாமா. ரிஜிஸ்ட்ரேஷன் எல்லாம் பக்காவாப் பண்ணி, கலியன் பஞ்சாயத்துக்குத் தானம் பண்ணின காணி இது. இதுல நீங்க எதுவும் கலசல் பண்ண வழியில்லே. போயி வேற வேலை இருந்தாப் பாருங்க..!”

முதல் முறையாகத் தன்னிடம் இப்படி அலட்சியமாகப் பேசிய திருநாவை முறைத்தார் கிட்டாவய்யா.

“என்ன முறைக்கறீங்க..?”

“தம்பீ! என் சுயரூபம் தெரியாமப் பேசறீங்க..? அடக்கி வாசிங்க.!”

“கிட்டாமாமா. எல்லாரையும் போல என்கிட்டே வாலாட்டினா ஒட்ட நறுக்கிருவேன்.!”

“வரம்பு மீறி பேசறீங்க திருநா..!”

“மாமா…

“மாமா…! இந்த அக்ரகாரத்துலயே உங்க மனைக்கட்டுக்கு மட்டும் இரண்டு பக்கமும் தாய்ச்சுவர் எப்படி வந்துதுனு சொல்ல முடியுமா?”

திருநா கேட்ட கேள்வியில் அதிர்ந்தார் கிட்டாவய்யா.

கிட்டாவய்யாவின் அப்பா, ஆங்கிலேய சர்வேயரோடு நடத்திய தில்லு முல்லுகளையெல்லாம் திருநா கோடிட்டுக் காட்டியபின் ‘கப்-சிப்’ என்று அடங்கிப்போனார் கிட்டாவய்யா.

குளத்தங்கரை அரசமரத்துக்கு அடியில் பிள்ளையார்கோவில் கட்ட முடிவெடுத்தது ஒரு கோஷ்டி.

சிலர், ரசீதுப் புத்தகத்தையும், நாப்பது பக்க நோட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

காணும் பொங்கலண்ணிக்கு நம்ம ஊருக்கு மாவட்ட ஆட்சியர் வரப்போவதாகச் செய்தி பரவியது.

“கலெக்டர் இது போல சின்ன விழாவுக்கெல்லாம் வருவாராண்ணே…!”

அறியாமையோடு, கேட்டான் ஒருவன்.

“எது சின்ன விழா. நம்ம கலியண்ணன் தன்னோட மூணு ஏக்கர் நிலத்தை சமுதாயத்துக்கு விட்டுக் கொடுத்தது சின்ன விஷயமா?

ஊரு உலகமெல்லாம் சுத்தாம, நம்ம ஊரு பொணம் நம்ம ஊரு வளியாப் போறதுக்கு பாதை போட்டுக் கொடுத்திருக்கான்;

அவனைப் பாராட்ட கலெக்டர் என்ன… பிரதம மந்திரியே வந்தாலும் தகும்னேன்…!”

“செரிதான்… செரிதான்…!”

பொழுது விடிந்தால் போகிப் பண்டிகை.

பஸ்ஸ்டாண்டுக்குச் சென்று சென்னையிலிருந்து வந்த துரைராமன், மோகனா, ரஞ்சனி மூவரையும், வரவேற்று அழைத்து வந்தார் சுப்பாமணி மாமா.

கலியன் தன் பங்கு நிலத்தை என்னென்ன செய்திருக்கிறான் என்பதையெல்லாம் காட்டிகொண்டே, கலியன் பாதை வழியே அவர்களை அழைத்து வந்தார் சுப்பாமணி.

கலியனுக்கு தான் செய்த உதவிகளையும் சுப்பாமணி சொன்னார்.

கலியன் மதவருகில் நின்றான் துரை.

களம்,குளம்,பாதை எல்லாவற்றையும் தீர்க்கமாகப் பார்த்தான்.

சுப்பாமணி மாமாவையும் பார்த்தான்.

“குத்தகைச் சீட்டு பத்திக் கலியனோட பேசினேளா மாமா..? நாளைக்கு கெடு வெச்சிருக்கான்.”

“பேசினேன்…!” என்றார் சுப்பாமணி.

அதே சமயம் ‘இப்படி ஒரு அல்பப்பயலாய் இருக்கிறானே இந்த துரை…!”

தனக்குள் நொந்து கொண்டார்.

*****-

போகியன்றுக் காலை, சொன்னச் சொல் தவறாமல் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தான் கலியன்.

சுப்பாமணி மாமா சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தார்.

மாதய்யாக் கொடுத்த அனைந்துக் குத்தகைச் சீட்டுக்களையும், ஒன்றும் எழுதாமல் கையெழுத்துப் போட்டப் வெற்றுக் காகிதங்களையும், எல்லாரிடமும் பிரித்துக் காட்டினான் கலியன்.

சுப்பாமணி, குந்தலாம்பாள், மோகனா, துரை ஆகியோர் முன்னிலையில் போகித் தீயில் அவற்றைப் போட்டான்.

போகித்தீ ஹோமாக்னிப் போலத் தழல் விட்டு எரிந்தது.

அத்தியாயம் – 28

“…௵ , ……….௴ ………. தேதி ………. திருச்சிராப்பள்ளித் தாலுக்கா, கக்குடி கஸ்பா, அந்தனூர் கன்னி கோவில் தெருவில் வசிக்கும் லேட் தொப்ளன், விவசாயக்கூலி, அவர்களின் ஒரே மகன் கலியன், விவசாயக்கூலி, வயசு 34, புத்தி சித்தம் கலங்காத மனநிலையில் எழுதிக் கொடுத்த உயில்.

என் சுய சம்பாத்யத்தை வைத்து, அக்ரஹாரம் தெரு, லேட் மாதவன் என்கிற மாதய்யா அவர்களின் குமாரர் துரைராமன், உத்தியோகம்,மதறாஸ், அவர்களிடம் ………. வருஷம், துல்லியமான பிரதி பிரயோஜனத்துக்குக் கிரய சாசனப் பத்திரம் எழுதி, மேற்படி பத்திரம் ………. சார்- பதிவகத்தில் ………. வருடத்திய ………. என் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு, மேற்படி கிரய தேதி முதல் என் பேரில் பட்டா, வரி வகையறாக்களுடன் சர்வ சுதந்திரமாக அனுபவித்து வருகிறேன்.

நெல் கட்டடித்தல், போரடி, காயவைத்தல், தூற்றுதல், உளுந்தடி, வாழைத்தார் அடுக்கி ஏற்றல் போன்ற அனைத்து விவசாய வேலைகளுக்காக மேற்படி காணியில் களம் அமைக்கப்பட்டுள்ளது.

களத்திற்கும், அதனை ஒட்டிய, தாமரைக் குளத்திற்கும் செல்வதற்குப் பிரத்யேகச் சாலையும் போடப்பட்டுள்ளது.

களம், குளம், பாலம், மதகு, சாலை அனைத்தும் உள்ள, மேற்படி சொத்தை ஊர்ப் பொதுவுக்குத் தானமாகச் சமர்ப்பித்து விடுகிறேன்.

இந்த வசதிகளை, நாளது தேதி முதல் ஊர் ஜனங்கள் ஆண்டு அனுபவித்துக் கொள்ளும்படி விட்டுவிட்டேன்.

இது ஏகதேச, பாத்தியப்பட்ட சொத்து;

இந்தக் கிரயச் சொத்தின் பெயரில் பெந்தகம், போக்கியம், ஜாமீன், ஈடு எதுவும் இல்லை;

மேலும், தஸ்தாவேஜு வைத்து, யாரிடமும் அடமானமோ, கடனோ, கோர்ட் மற்றும் அரசாங்க நடவடிக்கைகளோ, கிஸ்தி மற்றும் எந்தவிதமான காசாங்க பாக்கிகளோ, வேறு எந்த விதமான கடன்களோ, வில்லங்கங்களோ இல்லை என்று எல்லாரும் நம்பும்படிக்கு உறுதி கூறுகிறேன்.

இந்த பூதானத்திற்கு ஆதாரமான மூல பத்திரங்களையும்,

கிஸ்தி ரசீதுகளையும், வில்லங்கமில்லை என்பதற்கான EC சான்றிதழும் இத்துடன் இணைத்துச் சமர்ப்பிக்கிறேன்.

சொத்து விபரம் – நான்கெல்லை

அந்தனூர் கிராமம் ஊர்ப் பொது பெரிய வாய்க்கால் கரைக்கு வடக்கு ;

ஊர்ப் பொது எல்லையம்மன் கோவில் பின்புறம் கிடக்கும் பொதுக் கன்னி வாய்க்காலுக்கு மேற்கு ;

ராஜம்மா தென்னந்தோப்பு, சர்வே எண்………. க்குத் தெற்கு ;

திருவதிகாரம்பிள்ளை புஞ்சை, சர்வே எண்……….க்குக் கிழக்கு.

மேற்படி நான்கெல்லைக்கு உட்பட்ட மூன்று ஏக்கர்நிலத்தில், நீளவாக்கில் ஒரு ஏக்கர் பரப்பில் பதினைந்தடி அகலமுள்ள கப்பிச் சாலையும், முக்கால் ஏக்கர் பரப்பில் தாமரைக் குளமும், முக்கால் ஏக்கர் விஸ்தீரணத்தில் விவசாயக் களமும் முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வருங்காலங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு ஏதுவாக அரை ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது. அதில் தற்காலிக கொள்முதல் நிலையமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

களத்திற்கும் பாதைக்கும் ஊர் ஜனங்கள் நடந்தோ, சைக்கிள், மோட்டார், மாட்டு வண்டி, டிராக்டர், லாரி போன்ற வேளாண் வாகனங்கள் செல்ல வசதியாக ஊர்ப் பொதுக் கன்னி வாய்க்கால் மீது அரசாங்க மராமத்துத் துறையிடம் முறையாக அனுமதிப் பெற்று மதகு ஒன்றும் முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேற்சொல்லப்பட்ட எல்லாம் இந்த அந்தனூர் கிராம மக்களின் பொது உபயோகத்திற்கு எழுதி வைத்து; சட்டப்படி சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாகப் பதிவு செய்து ஒப்படைத்துள்ளபடியால், இவைகளை ஊர் ஜனங்கள் எந்தவித தடையுமில்லாமல் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

எல்லையம்மன் கோவில் முகப்பு வழியாக பிரேதங்கள் செல்லக்கூடாது என்ற நடைமுறை உள்ளதால், பக்கத்து ஊரான முத்தனூர்ப் பாதையில்தான் இதுகாரும், நம் ஊர் பிரேதங்களைத் தூக்கிக் செல்கிறோம்.

முத்தனூர் பாதையில் அதிக தூரம் சுமக்க வேண்டியிருப்பதாலும், அந்தனூருக்கன பிரத்யேகப் பாதை வேண்டும் என்ற ஆவலாலும் இந்தப் பாதை நிர்மாணிக்கப்பட்டது.

மேலும் கிராம சேவகராய் இருந்த லேட் மாதவன் என்கிற மாதய்யா அவர்கள் முன்னிற்று, ஒரு சமயம் இந்தப் பாதை வழியாக பிரேதம் எடுத்துச் செல்ல அனுமதித்தார் என்பதை இங்கேப் பதிவு செய்கிறேன்.

எனவே இந்த வழியாக பிணம் தூக்கிச் செல்வதில் அச்சானியமோ, தெய்வக்குற்றமோ ஏதுமில்லை என்பது நிரூபணமாகிவிட்டது.

நான் இறந்த பிறகு இந்தப் பாதை வழியாகத்தான் என் உடலை எடுத்துச் செல்லவேண்டும் என்பதுவே என் விருப்பம்.

மேற்படி சொத்துக்களில் எந்த வில்லங்கமும் இல்லாத நிலையில் யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு

கலியன்.

சாட்சிகள்

குந்தலாம்பாள்

சுப்பாமணி

திருநாவுக்கரசு

ஏழுமலை

சின்னப்பொண்ணு

இந்த உயிலுடன், சப்ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உள்ளூர் பஞ்சாயத்து பிரெசிடெண்ட் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.

உயிலையும், பதிவுப் பத்திரங்களையும் படித்துப் பார்த்தான் துரைராமன்.

துரைராமனுக்கு ஆச்சரியமும், அய்யமும் மாறி மாறி ஏற்பட்டன.

அம்மாவையும் சுப்பாமணி மாமாவையும் மாறி மாறிப் பார்த்தான்.

கலியனின் கை தன் கழுத்தில் தொங்கிய தாயத்தை பக்தியோடு ஆதரவாகப் பற்றிகொண்டிருந்தான்.

“சின்னய்யா… உங்க நிலத்துல நான் இன்னுமே எந்த வகைலயும், சொந்தம் கொண்டாட மாட்டேன்;

நீங்க உங்க இஷ்டத்துக்கு விற்கவோ, சாகுபடி செய்யவோ, நான் தடையா இருக்க மாட்டேன்.”

“… … … … … … … … …”

பெரியய்யாவோட குறிக்கோள், நம்ம வயல் வழியா பொதுப்பாதை அமையணும்னுதான்;

அதை நிறைவேத்தத்தான் நான் கொஞ்சம் எக்குத்தப்பா நடந்துக்கவேண்டியதாப் போச்சு…”

“… … … … … … … … …”

“அம்மா… உங்க கையால ஒரு கவளம் சோறு போடுங்கம்மா…”

கேட்டான் கலியன்.

கலியனுக்குச் சோறு போட எழுந்தாள்.

சுரீர் என்ற குத்து வலி எடுத்தது அவளுக்கு.

எழ முடியவில்லை.

தடவி விட்டுக் கொண்டாள்.

நெஞ்சைப் பிடித்துக்கொண்டு குனிந்தாள். துடித்தாள்.

குப்’பென்று உடல் பூராவும் வியர்த்தது.

“அம்மா… என்னம்மா ஆச்சு…!”

கலியன் பதறினான், கதறினான்.

“கொந்தலா… என்ன பண்றது சொல்லு…!”

சுப்பாமணி தவித்தார்.

திருநாவின் மோட்டார் காரில் டாக்டரை அழைக்க ஜீவபுரம் போனான் துரைராமன்.

“அம்மா…! அம்மா…!!”

வீரன் காளையின் குரல் தொழுவத்திலிருந்து வித்தியாசமாகக் கேட்டது.

கலியன் ஓடோடிப் போய்ப் பார்த்தான்.

வீரன் கால் பரப்பிக் கொண்டுத் தாறுமாறாகக் கிடந்தது. மூச்சு விடச் சிரமப்பட்டது.

“வீரா…! என்னடா ஆச்சு உனக்கு…!”

கால்களை இழுத்துச் சீராக்கினான்;

தலையை மடியில் போட்டுக்கொண்டான்;

காளையின் முகவாயைப் பாசத்துடன் தடவிக் கொடுத்தான் ;

கலியன் குனிந்தபோது அவன் கழுத்திலிருந்த தாயத்து வீரன் கொம்பில் மாட்டியது.

விகாரமான கனைப்புக் கதறல் வந்தது , வாய் நுரைக் கக்கியது. வீரன் தலைச் சாய்ந்தது.

அதன் கொம்பில் மாட்டியத் தாயத்தைக் கழற்றி எடுத்தான்;

கனத்த இதயத்துடன் மௌனமாகக் கண்ணீர் விட்டான் கலியன்.

ஜீவபுரத்திலிருந்து வந்தார் டாக்டர் அருணகிரி.

குந்தலாம்பாளைச் சோதித்தார்.

“இது ரெண்டாவது அட்டாக்;

அதிர்ச்சியான சமாச்சாரங்கள் எதுவும் அவரிடம் சொல்லவேண்டாம்…”

டாக்டர் கேட்டுக் கொண்டார்.

விஷயத்தை மறைப்பதில் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப, ஒருவருக்கொருவர் எச்சரித்துக்கொண்டனர்.

அபாயமான விளைவை ஏற்படுத்திவிடும் என்பதால், எல்லாரும் பேசி வைத்துக் கொண்டு,வீரன் காளையின் இறப்பைக் குந்தலாம்பாளிடம் சொல்லவேயில்லை;

வீட்டுக் கொல்லையில் அடக்கம் செய்தாகிவிட்டது.

படுத்த படுக்கையாய்க் கிடந்தாள் குந்தலாம்பாள்.

அவ்வப்போது விழிப்பு வரும்போது, பேசமுடியாத இயலாமையில் பலஹீனமான விழிகளால் சுற்றுமுற்றும் பார்த்தாள்.

பார்வை சுப்பாமணியிடம் நிலைத்தது.

இரண்டு பாட்டில் செலைன் ஏறி, மருந்தும் வேலை செய்ய ஆரம்பித்த்தால் லேசாக குரல் வந்தது குந்தலாம்பாளுக்கு.”

“சுப்பாமணி…!”

ஹீன ஸ்வரத்தில் அழைத்தாள் குந்தலாம்பாள்.

“சொல்லுக்கா…!”

“அந்தப் பச்சை ‘ட்ரங்க் பெட்டி’ய’… என்றாள்

தொண்டை அடைத்தது

“எடுத்துண்டு வாயேன்..!”

ஜாடை செய்தாள்.

“இப்போ எதுக்குக்கா அதெல்லாம்…?” என்றார் சுப்பாமணி

இருந்த தெம்பையெல்லாம் ஒன்று சேர்த்துக் கொண்டு பேசினாள் குந்தலாம்பாள்.

“சொன்னாக் கேளு. கொண்டுவா.;

அவரோட பால்ய ஸ்நேகிதர் டாக்டர் அருணகிரி சார் இருக்கச்சே சிலது காட்டணும்.!”

உடல்நிலை அசக்தமாக இருந்ததால், குரல் ஹீனமாக வந்தது.

“இப்பவே என்னம்மா அவசரம்…! நான் தான் தினமும் வரேனே… உடம்பு நார்மலானதுக்கு அப்பறம் பாத்துக்கறேனே…!” என்றார் அருணகிரி.

“இப்பவே காட்டணும்னு தோணறது. தயவு செஞ்சி பாருங்கோளேன்…!”

பேச்சுத் தடுமாறியது.

“சரி, உங்க இஷ்டம்…!” என்றார் டாக்டர்.

பெட்டியைக் குந்தலாம்பாள் பார்வைப் படுவதற்கு வசதியாக வைத்துத் திறந்தார் சுப்பாமணி. குந்தலாம்பாள் சுட்டிக் காட்டிய பழுப்புக் உறையை எடுத்தார்.

தன் கையில் வாங்கினாள் குந்தலாம்பாள்.

துரைராமனை அருகில் அழைத்து, அந்தக் கவரை அவன் கையில் கொடுத்தாள்.

இப்போது டாக்டர் அருணகிரியைப் பார்த்தாள் குந்தலாம்பாள்.

“டாக்டர் சார். உங்க சிநேகிதர் அவருக்குத் தெரிஞ்சவரைக்கும், தன் ஒரே மகன் துரைக்காகச் செஞ்சது… அவன் கையில் ஒப்படைச்சிட்டேன்..! ”

மூச்சு வாங்கியது அவளுக்கு.

“டாக்டர் சார்…! நீங்க நிறைய ஒத்தாசை பண்ணியிருக்கேள்…!”

கையெடுத்துக் கும்பிட்டாள்.

மீண்டும் நெஞ்சைப் பிடித்தாள்.

துடித்தாள்.

“இது அடுத்த அட்டாக். மூணாவது அட்டாக் சுப்பாமணி சார்.”

பரபரவென்று சிகிச்சைகளைச் செய்தார்

பிராணவாயு சிலிண்டர் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. கார் டிக்கியில் எதற்கும் இருக்கட்டும் என்று போட்டுக் கொண்டு வந்ததை அவசரமாகக் கொண்டு வந்து பொறுத்தினார் டாக்டர்.]

“ஒரே நாள்ல அட்டாக் மேல அட்டாக் வந்து, கண்டிஷன் இப்படி வொர்ஸன் ஆகுமா டாக்டர்..?”

முகத்தில் கவலை அப்பிய நிலையில், சுப்பாமணி கேட்டார்.

வயசும் ஏறிப் போச்சு. ஏஜ் ரிலேடட் இஷ்யூஸோட, ‘மெண்டல் ஸ்ட்ரெஸ்’ ஓவரா இருந்தா இப்படிப் பாதிக்க நிறைய சான்ஸ் இருக்கு.

சிங்கம் போல கம்பீரமாக உலா வந்துகொண்டிருந்த குந்தலாம்பாளை இப்படி அசக்தமாகப் படுக்கையில் பார்க்கையில் சுப்பாமணிக்கு வருத்தமாக இருந்தது.

‘செடேஷன்’ குந்தலாம்பாளைத் தழுவியிருந்தது.

அம்மா கொடுத்த உறையில் இருந்த தஸ்தா வேஜூக்களைப் பார்த்தத் துரைராமனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சென்னை திருவல்லிக்கேணியில் ஆறு லட்ச ரூபாய்க்கு துரையின் பெயரில் பழைய கட்டடம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்து, மேலும் மூன்று லட்சங்கள் செலவு செய்துப் புதுப்பித்துக் கட்டிய வீட்டின் பத்திரங்களை அம்மா மரணப் படுக்கையில் இருக்கும்போது எடுத்துக் கொடுத்தால்… அதிர்ச்சியாகத்தானே இருக்கும்…?

சுப்பாமணி மாமாவையும், டாக்டர் அருணகிரியையும், வீட்டுப் பத்திரத்தையும், படுத்த படுக்கையாகக் கிழித்துப் போட்ட நாராய்ப் படுத்துக் கிடக்கும் அம்மாவையும், சொன்ன நேரத்தில் சொன்னபடி குத்தகைப் பத்திரங்களை அனைவரின் எதிரிலும் போகித் தீயில் பொசுக்கிய கலியனையும், மாறி மாறிப் பார்த்தான்.

துரைக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

எல்லாவற்றையும் காதும் காதும் வைத்தாற் போலச் செய்துவிட்டு , அந்த ரகசியத்தைக் கட்டிக்காத்த டாக்டர் அருணகிரியின் மீதும், சுப்பாமணி மாமா மீதும் மரியாதை அதிகரித்தது துரைக்கு.

“தன் பேரில் சென்னையில் வீடு வாங்கி வைத்திருக்கும் அப்பாவைப் புரிந்துகொள்ளாமல் கடைசீ மூச்சு வரை அவரோடு இணக்கமில்லாமல், அவரை மதிக்காமல், எடுத்தெரிந்துப் பேசிக்கொண்டு, இருந்துவிட்டோமே…!’

துக்கம் தொண்டையை அடைத்தது.

‘அப்பாவின் இறுதி விருப்பத்தைக் கூட மதிக்காமல், ஒரு மகனாக அதை நிறைவேற்றாமல் போனோமே!’

கலங்கியது கழிவிரக்கத்தில் உள்ளம்.

பிராயச்சித்தமாக, ‘அம்மாவையாவது காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்!’

எண்ணம் வலுப்பெற்றது துரைராமனுக்கு.

ஞானம் எப்போதுமே காலங் கடந்துதானே ஜனிக்கிறது.

“குந்தலாம்பாளுக்கு அவ்வப்போது நினைவு வருவதும், தப்புவதுமாகக் கடந்துகொண்டிருந்தது காலம்.

மருமகள் மோகனா, தேவையான சிசுருஷை செய்தாள்.

செலைனோடு மருந்துகள் கலந்துச் செலுத்துவதும், ஊசி மூலம் ஏற்றுவதுமாக டாக்டர் அருணகிரி ஓய்வு ஒழிச்சல் இல்லாது சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.

ஜீவபுரமோ, திருச்சியே கொண்டு செல்லும் நிலையில் கண்டிஷன் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

கை லெட்டர் கொடுத்து, திருச்சியிலிருந்து கார்டியாலஜிஸ்ட்டை திருநாவுக்கரசு மூலம் வரழைத்து ஒரு முறை பார்த்தாகிவிட்டது.

ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால்தான் பிழைப்பதற்கு வாய்ப்பு என்று இரண்டு டாக்டர்களும் சேர்ந்து முடிவு செய்தார்கள்.

குந்தலாம்பாள், படுத்தபடுக்கையாகக ஒடுங்கிக் கிடந்ததால், பொங்கல் பண்டிகையைப் பேருக்குக் கொண்டாடினார்கள்.

இருந்த ஒரே வீரன் காளையும் போய்ச் சேர்ந்தபிறகு தொழுவம் வெறிச்சோடியிருந்தது.

இருந்தாலும், மாட்டுப் பொங்கல் நாளில், மாட்டு வண்டியைக் கழுவித் துடைத்து, தொழுவம் அலம்பி விட்டான்.

மாவிலைத், தோரணம் எனப் பேருக்குக் கட்டி, சாம்பிராணிப் புகைப் போட்டுவிட்டான் கலியன்.

மோகனா, மாக்கோலம் போட்டு, விளக்கேற்றி வைத்தாள்.

மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள்.

காணும் பொங்கல்.

அந்தனூரில் கும்மி, கோலாட்டம், பல்வேறு பந்தயங்கள் வைத்தல், பரிசு கொடுத்தல் என்று ஊரே அமர்க்களப்படும்.

இந்த காணும் பொங்கல் நாளன்று, ‘கலியனின் ‘பூதான விழா’ நடத்தவேண்டும் என்று ஊர் கூடி முடிவெடுத்தபடி, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

குந்தலாம்பாளின் நிலையில் ஏதும் முன்னேற்றமே இல்லாத்தால் வீடே சோக மயமாக இருந்தது.

வீட்டுக்கேச் செல்லவில்லை கலியன்.

“அம்மாவுக்கு எப்படி இருக்கு டாக்டரய்யா?”

மூச்சுக்கு மூன்று முறை கேட்டுக் கொண்டேக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தான்.

‘எல்லையம்மா… அம்மாவைக் காப்பாத்து…” வாய்விட்டு வேண்டிக்கொண்டான் கலியன்.

கலியனைப் பார்க்கப் பார்க்க துரைராமனுக்கு, அவனை அசிங்கமாக நடத்திய கடந்த காலங்கள் நினைவுக்கு வர அதற்காக இப்போது குற்ற உணர்வில் மறுகினான்.

அனைத்தையும் விட்டுக்கொடுத்ததோடு, அவனுக்கென்று பிடிவாதமாய்ப் பெற்ற நிலத்தையும் பஞ்சாயத்துக்குத் தானம் செய்த இந்தக் கலியனை புரிந்து கொள்ளாமல் அசிக்கப்படுத்தியதற்காகக் கழிவிரக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை துரைக்கு.

ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.

திருநாவுக்கரசு தன் மோட்டார் காரை எடுத்துக்கொண்டு திருச்சி செல்வதும், கலெக்டர் ஆபீஸ் செல்வதும், தொகுதி எம் எல் ஏ வுக்குத் தகவல் தருவதும், கணக்குப் பிள்ளை, முனுசீப், கிராம சேவகர், பஞ்சாயத்துப் பிரசிடெண்ட் போன்ற ரெவின்யூ அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறைகளைப் பகிர்வதுமாக பிஸியாக இருந்தார்.

கலெக்டர், எம் எல் ஏ போன்றோர் வரும் நேரமாகிவிட்டது.

விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின் சுப்பாமணி திருநாவைக் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.

“விழாவுக்குப் புறப்படு கலியா!”

சுப்பாமணி கலியனை அழைத்தார்.

“அய்யா…! நான் அம்மாவைப் பாத்துக்கிட்டு வீட்டுலயே இருக்கேன்யா… நீங்களே இருந்து சின்னய்யாவை வெச்சிக்கிட்டே எல்லாத்தையும் முடிச்சிடுங்கய்யா…!” என்றான் கலியன்.

ஒரு டியூப் லைட் தர்மம் செய்தால்கூட அதன் ஒளி மறைக்கும் அளவுக்கு உபயதாரர் பெயர் எழுதி விளம்பரப்படுத்திக் கொள்ளும் இந்த உலகில், கலியன் இப்படிச் சொன்னது துரைராமனுக்கு வியப்பாக இருந்தது.

‘இப்படிப்பட்ட கலியனையா நான் துரோகி என்றேன்…?;

இப்படிப்பட்ட கலியனை சந்தேகித்தோமே…!;’

மனசுக்குள் மருகினான் துரைராமன்.

‘நீ போ…!”

கலியனைப் பார்த்துக் குந்தலாம்பாள் ஜாடை காட்டினாள்.

அம்மாவின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு விழாப் பந்தலுக்குச் சென்றான் கலியன்.

‘கலெக்டர் எப்போ வருவார்…!’

‘பூமிதான விழா’ என்று எழுதப் பட்ட பேனர் தாங்கிய திறந்த வெளி விழாமேடைக்கு முன் ஆர்வமாகக் குழுமியிருந்தனர் மக்கள்.

“கலேக்டர் வருவாராண்ணே…?”

“வர்ற வழீல சர்ப்ரைஸா கம்பரசம்பேட்டை வாட்டர் ஹவுஸ் விசிட் பண்றாராம். அதான் லேட் ஆவுது…”

“இதுக்கெல்லாம் கலக்டராவது வர்றதாவது…?”

“கூட்டம் கூட்டறதுக்காக, இப்படி மந்திரி வர்றாரு, கலெக்டர் வர்றாருனு எதாவது சொல்றதுதான். அவங்களுக்கெல்லாம் வேற வேலையில்லையா…? கேக்கறேன்.”

“அப்போ கலெக்டர் வரமாட்டாருன்றியா…?”

“வழக்கமா, நம்ம ஊர் போட்டி பந்தயத்துக்கெல்லாம் இவ்ளோ பெரிய மேடையும், பிரம்மாண்டமான பந்தலும் போடமாட்டாங்களேண்ணே…!”

“ஆமாமாம்..!”

“கலியனுக்கு ரொம்ப நல்ல மனசு; இல்லேண்ணே…!”

“கடைத் தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கற அளவுக்கு நல்ல மனசு…!”

“அதெல்லாம் சொல்லாதீங்கண்ணே…! பொறம்போக்குல தம்மாந்துண்டு நெலம் கிடந்தாலே, இருக்கறவன், இல்லாதவன் எல்லாரும், எனக்கு உனக்குனு சுருட்டறதுக்கு, அலையற காலத்துல, கலியனைப் போல ஒருத்தன் இருக்கறதை பெருமையா நினைங்கண்ணே…!”

இப்படியாக நேர்மறை, எதிர்மறை விமரிசனங்களும், கேள்விகளும், வியப்புகளும், பொறாமைகளும், விஷமப் பேச்சுகளுமாக விழாப் பந்தல் முன் மக்கள் கூட்டம் கலகலப்பாக இருந்தது.

வெகு தூரத்தில் பெரிய வாய்க்கால் கரையில், ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டர், அலங்கார வளைவுகளிலும், மேடையிலும், கலியன் சாலையின் இருபுறம் நடப்பட்ட ட்யூப் லைட்டுகளுக்கும், சீரியல் செட்டுகளுக்கும், உயிர் கொடுத்தது.

அடிக்கடி மைக் பிடித்து ‘ஹலோ, மைக் டெஸ்டிங்…, ஹலோ, மைக் டெஸ்டிங்…”

கத்திக் கொண்டிருந்தான் ஒருவன்.

கலெக்டர் வருகையை உத்தேசித்து, தாசில்தார், ரெவின்யூ இன்ஸ்பெக்டர், கணக்கப்பிள்ளை, பட்டாமணியம், முனுசீப் எல்லோரும் திரண்டிருந்தார்கள்.

தெருவெல்லாம் சுத்தமாகக் கூட்டப்பட்டு, குப்பை அள்ளப் பட்டு, வட்ட வட்டமாக குளோரின் கோலம் போட்டிருந்தார்கள் துப்புறவுத் தொழிலாளர்கள்.

முன்னால் வந்தது பாதுகாப்புப் போலீஸ் பெட்ரோல்

தமிழக அரசின் இலட்சினை பொறித்த அரசாங்க ஜீப் வந்தது.

கலெக்டர் இறங்கினார்.

கலெக்டருக்கு அருகில் யாரும் நெருங்க முடியாதபடிக்கு வந்தார் டவாலி.

சுட்டினால் சிவக்கும் தோல்.

நல்ல உயரம். நீளமான விரல்கள்.

கண்ணாடியை தங்கப் பிரேமுக்குள் நுழைத்து அணிந்திருந்தார்.

பதவிக்கான மிடுக்கு பேண்ட் சூட்டில் மட்டுமல்ல. முகத்தில், கண்களில், நடையிலும் தெரிந்தது.

‘மிடுக்காய் இரு’ என்ற பாரதியின் வாக்குக்கு உதாரணமாய் இருந்தார் கலெக்டர்.

சுப்பாமணி அவர்முன் பூர்ண கும்பம் காட்டினார்.

பூர்ண கும்ப கலசத்தில் இருந்தத் தேங்காயைத் தொட்டு வரவேற்பை ஏற்றுக் கொண்டார்..

பூர்ண கும்ப மரியாதை முடிந்ததும் யாரோ சுப்பாமணியிடமிருந்து குடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

அடுத்தாற்போல் எம் எல் ஏ வந்து சேர்ந்தார்.

மேடைக்கு அருகே அடைப்புக் கட்டி ஏற்படுத்தப்பட்ட அறைக்குள் கலெக்டர், எம் எல் ஏ மற்றும் சிறப்பு விருந்தினருக்கு எளிய விருந்தோம்பல் நடைபெற்றது.

அந்த நேரத்தில் கலியனை வரவழைத்து கலெக்டருக்கும், எம் எல் ஏ வுக்கும் அறிமுகம் செய்துவைத்தார் சுப்பாமணி.

தமிழக முதல்வர் வாழ்த்து அனுப்பியிருக்காரு. நம்ம தொகுதிக்குச் சுற்றுப் பயணம் வரும் போது இங்கே வந்து பார்க்கறேன்னு சொல்லியிருக்காரு…”

செய்தியை பகிர்ந்து கொண்டார் எம் எல் ஏ.

சாப்பிட்டு எழுந்து கை துடைத்துக் கொண்டதும்,

“ரொம்ப உயர்வான காரியம் செஞ்சிருக்கீங்க…!”

பாராட்டிய கலெக்டரும், எம் எல் ஏயும் கலியன் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள்..

‘எல்லாப் புகழும் அய்யா உங்களுக்கே…!’

மனதுக்குள் கூறியபடி தன் கழுத்தில் தொங்கிய தாயத்தை பக்தியோடு பிடித்துக்கொண்டான் கலியன்.

விழாத் தொடங்குவதற்குள் ரெவின்யூ இன்ஸ்பெக்டர், காவல் அதிகாரி, மருத்துவ அதிகாரி, சானிடரி அதிகாரி என ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து ஏதோ கேட்டுக் கேட்டுக் குறிப்பெழுதிக் கொண்டார் கலெக்டர்.

மராமத்துத்துத் துறை அதிகாரி அனைத்தையும் விவரமாக எடுத்துச் சொன்னார்.

பத்திரிகை நிருபர்கள் தங்கள் வேலையை ஜரூராகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ரெவின்யூ டிபார்ட்மெண்ட் ஊழியர்கள் கோப்பும் கையுமாய் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து பிஸியாகக் காட்டிக்கொண்டார்கள்.

குந்தலாம்பாள் கிழித்துப் போட்ட வாழைப் பட்டைப்போல் அசையாது நினைவற்றுக் கிடந்தாள்.

டாக்டர் அருணகிரி மட்டும்தான் குந்தலாம்பாள் அருகில் இருந்தார்.

ஊசியின் மூலம் செலுத்தப்பட்ட மருந்துகளின் விளைவுகளைக் கண்ணும் கருத்துமாய் உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்.

பிழைக்காது’ என்று தீர்மானமாய் தெரிந்தாலும் தொழில் தர்மம் காக்கின்ற வகையில் தேவையான ஊசி மருந்துகளை செலுத்திக்கொண்டே இருந்தார் டாக்டர்.

‘பல்ஸ் ரேட்’ குறைந்துகொண்டே வந்தது குந்தலாம்பாளுக்கு.

கலெக்டருடன் அந்தரங்கமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே, மேடைக்கு அழைத்துக் கொண்டு வந்தார் சுப்பாமணி.

கலெக்டர், எம் எல் ஏ இருவர் முன் வரைப் படத்தைக் காட்டி விளக்கிக்கொண்டிருந்தார் இஞ்சினியர் திருநாவுக்கரசு.

தன் சகோதரியின் நிலையைச் சொல்லி, விழாவை விரைவில் முடிக்கவேண்டும் என்று கலெக்டரின் காது கடித்தார் சுப்பாமணி.

கலெக்டர், எம் எல் ஏ, மராமத்துத் துறை அதிகாரி, சுப்பாமணி எல்லோரும் மேடையேறும்போது, மக்கள் கைத் தட்டி வாழ்க கோஷம் போட்டு ஆரவாரம் செய்தார்கள்.

கடவுள் வாழ்த்து பாடினார் ஓதுவார் தட்சிணாமூர்த்தி.

சுருக்கமாக வரவேற்புறை நல்கினார் பஞ்சாயத்துப் பிரசிடெண்ட் குழந்தைசாமி.

அடுத்தபடியாக கலியன் ஊர்பொதுவுக்காக மதகு கட்டியும், குளம் வெட்டியும், களம் அமைத்தும், சாலை போட்டும் தானம் செய்யும் தன் மூன்று ஏக்கர் நிலத்துக்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது.

கலெக்டர் எழுந்து மைக் முன் நின்று, ஊருக்கு நல்லது செய்த கலியனைப் புகழ்ந்தார்.

வினாபா பாவே அவர்களின் பூதான இயக்கம் பற்றிக் கோடிட்டுக் காட்டினார்.

“கிராம ராஜ்யம் பற்றி” சுருங்கச் சொன்னார்.

கலியன் கையால் வாங்கிய ஆவணங்களை கலெக்டர், எம் எல் ஏ கையில் தர, அவர் உள்ளூர் பஞ்சாயத்துப் பிரசிடெண்ட் கையில் சமர்ப்பித்தார்.

பத்திரிகையாளர்கள் போட்டோக்கள் எடுத்தார்கள். தொலைக்காட்சியினர் விழாவை வீடியோ எடுத்தார்கள்.

கலியனுக்கு விழா மேடையில் இருப்புக் கொள்ளவில்லை.

நெஞ்சு அழுத்துவதுபோல இருந்தது.

‘அம்மாவுக்கு எப்படி இருக்கிறதோ!’

நினைத்தபோதே மேலும் நெஞ்சு அடைத்தது அவனுக்கு.

முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பதுப் போல மேடையில் உட்கார்ந்திருந்தான் கலியன்.

‘குந்தலாம்பாள் இறந்துவிட்டாள்!’

இந்தச் செய்தியை அறிவிக்கக் கிட்டாவய்யா ஓட்டமும் நடையுமாக அவசரமாக வந்தார்.

விழாப் பந்தலை நெருங்க முடியவில்லை அவரால். அப்படி ஒருக் கூட்டம்.

ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உதவியுடன் எப்படியோ மேடையருகே சென்றார்.

சுப்பாமணியை அவசரமாய் அழைத்தார்.

குந்தலாம்பாள் இறந்த செய்தியைக் காதுகடித்தார்.

செய்தி அறிந்தான் கலியன்.

“அம்……….மா……………………………………………………………!”

கதறினான்.

நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தான் கலியன்.

டாக்டர் அருணகிரி உடனடியாக வந்து கலியனைச் சோதித்தார்.

‘ஹார்ட் ஃபெயிலியர்”

சொல்லி உதடு பிதுக்கினார்.

கலியன் இறந்ததால் மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் ஒத்தி வைக்கப்பட்டன.

சுடுகாட்டுக்குப் பாதையில்லாத தன் ஊருக்குத் தன் சொந்த நிலத்தில் பாதை போட்டுக் கொடுத்த கலியனின் தியாகத்தைப் பாராட்டியது மாநில அரசாங்கம் மட்டுமல்ல மத்திய அரசாங்கமும்தான்.

மீடியாக்களில் செய்தி வைரலாகப் பரவியது.

உறவு எனச் சொல்ல எவருமில்லா ஒண்டிக்கட்டையான கலியனின் ஊர்வலத்தில் ஊரே உறவாய்ப் பின் தொடர்ந்தது.

தான் தானம் செய்த புதுப் பாதை வழியாக, பஞ்சமுகத்தேரில், முதன் முதலாக்க் கலியனின் பூத உடல் சென்றபோது தூவப்பட்ட மலர்கள் வண்ண வண்ணமாய் சிலிர்ந்து மலர்ந்து கிடத்தன.

ராஜபாதைப் போல மலர்த் தூவிய பாதையில் குந்தலாம்பாளின் பூத உடல் தொடர்ந்துச் சென்று மயானத்தை அடைந்தது.

இரண்டு எரி மேடைகள் இருந்த மயானத்தில் இரண்டாவது எரிமேடையில் ஏறியது குந்தலாம்பாளின் பூத உடல்.

அடுத்து ஆக வேண்டிய காரியங்களை நெறிப்படுத்தினார் சுப்பாமணி. அவருக்கு உதவியாக திருநா எல்லா உதவிகளையும் செய்தார்.

கலெக்டர், எம் எல் ஏ, மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள், ரெவின்யூ அதிகாரிகள் அனைவர் முன்னிலையிலும் பூதானம் செய்த சமூக சேவகர் கலியனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

கொள்ளி வைக்கப் பிள்ளை இல்லாவிட்டால் என்ன.. ஊர் கூடிக் கொள்ளி வைத்தது.

அரசு மரியாதையோடு கலியனுக்குக் கொள்ளி வைத்த அடுத்த கணம் தன் தாய்க்குக் கொள்ளி வைத்தான் துரைராமன்.

கலியன் களம், கலியன் குளம், கலியன் சாலை, கலியன் மதவு இவைகளையெல்லாம் தன் வாரிசாக விட்டுப் போனக் கலியனைப் பற்றிக் பாராட்டிப் பேசிக் கொண்டே கலியன் பாதையில் நடந்தார்கள், துஷ்டி முடிந்து திரும்பும் கூட்டம்.

அந்தனூர் மயானத்தில், தாயத்து வடிவில் மாதய்யாவும்; குந்தலாம்பாளும், கலியனும் சிதைகளில் வெந்து கொண்டிருந்தனர்.

காவிரிக்கரை, மயானத்தில் இரண்டு சிதைகளில் மூவர் எரியும் தழல் அமைதியாய் நகர்ந்து கொண்டிருக்கும் காவிரி நீரோட்டத்தின் மேற்பரப்பில் பிரதிபலித்தன.

மயான எரிமேடைகள் உமிழும் ஜ்வாலைகளை வாங்கி, அலைந்து, அதன் வெம்மை தாளாது, அவசரமாய் கடந்து வருகையில், படித்துறை அருகே துருத்திக் கொண்டு நிற்கும் ரிவிட்மெண்ட்டில் மோதிச் சுழலிடும் ஓசை தம்புராச் சுருதிப் பின்னணிபோல் ஒலித்த்து.

காவிரிப் கரையின், பக்கச் சுவரில் சாய்ந்துக் கால் நீட்டி அமர்ந்தபடி, நீரினுள் கனன்று எரியும் தழலையேக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அயிலாண்டத்துக் கிழவி.

கவியத் துவங்கிய இருளுக்கு, அணிலாண்டக் கிழவியின் ஓங்கி ஒலித்த ஒப்பாரி, மேலும் கனம் சேர்த்தது.

‘பாதை வகுத்தாச்சு பயணம் அவர் பாடு…

கோதை எடுத்தாச்சு புளிக்குழம்பு அவர் பாடு…

சாதம் வடிச்சாச்சு சாப்பிடுவதினி அவர் பாடு…

ஏதும் எனக்கில்லை எனச்சொல்லிப் போனீரோ………

***

-முற்றும்-

விகடன் மின் இதழான மை விகடன் இதழில், 02.05.2022 அன்று கலியன் மதவு என்ற சமூக நாவல் தொடங்கித் தொடர்ந்து 28.01.2023 ல் அதை நிறைவு செய்யும் வரை, அதைச் சிறப்பாக வெளியிட்டு ஊக்குவித்த ஆனந்த விகடன் ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – ஜூனியர் தேஜ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *