கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 15, 2023
பார்வையிட்டோர்: 3,094 
 
 

அத்தியாயம் 17 – 18 | அத்தியாயம் 19 – 20 | அத்தியாயம் 21 – 22

அத்தியாயம் – 19

துரை வந்துவிட்டான் என்ற சேதிக் கேள்விப்பட்டு, மூணு மணி சுமாருக்குச் சாஸ்திரிகள் வந்தார்.

அவர் வந்தபோது தானத்துக்கான சாமான்களை கூடத்தில் பரத்திப் பார்த்துக்கொண்டிருந்தனர் துரையும், மோகனாவும்.

சாஸ்திரிகளும் எல்லாவற்றையும் பார்த்தார்.

ஒவ்வொன்றையும் கையில் எடுத்து அதன் கனம், தரம் எல்லாவற்றையும் கவனித்தார்.

முகம் பிரசன்னமானது அவருக்கு.

“நன்னா காத்தரமா, ஃபர்ஸ்ட் குவாலிட்டியா, நிறைய செலவு பண்ணி சிரத்தையா வாங்கியிருக்கேள் மாமி…”

மனதாரப் பாராட்டினார்.

காலம்தான் எவ்வளவு விரைவாய் ஓடுகிறது.

நேற்றுதான் நிகழ்ந்த மாதிரி இருக்கிறது.

மாதய்யா காலமாகி ஒரு ஆண்டு ஓடிவிட்டது.

ஓராண்டில் மாஸிகம், ஊனமாஸிகம் என்றெல்லாம் மாதாமாதம் செய்யவேண்டிய, பல்வேறு நீத்தார் கடன்களைச் சென்னையில் பிரபல ட்ரஸ்ட் நடத்தும் சாவடியில் வைத்துச் செய்தான் துரைராமன்.

அப்பா காலமான பத்து நட்களுக்குள் அம்மா துரையின் வீட்டுக்கு வர மறுத்துவிட்டாளல்லவா!

அதனால், சென்னையில் உள்ள தன் வீட்டுக்கு அம்மா வருவது அச்சானியமாகப் பட்டது அவனுக்கு.

கிரேக்யம் , சுபஸ்வீகாரம், சுபம் என்றெல்லாம் சொல்லக் கூடிய 13ம் நாள் சம்ப்ரதாயங்களும், சடங்குகளும், பூஜைகளும், புரோட்சணங்களும், நல்லபடியாக நடைபெற்று முடிந்தது.

பதிமூன்று நாட்கள் நீத்தார் கடன்பற்றி கருடபுராணத்தில் உள்ளவற்றைத் தொகுத்துப் பண்டிதர் பிரவசனம் செய்தார்.

‘ஆன்மா’ என்பது ஜீவாத்மாவாகிய சூக்ஷ்ம சரீரம்.

அது குடியிருந்த ஸ்தூல சரீரமாகிய பூத உடலை விட்டு வெளியேறுவதே மரணம்.

ஆத்மாவுக்கு அழிவில்லை.

பல்வேறு பிறவிகளில், வேறு வேறு ரூபங்களில், விதவிதமான சரீரங்களில் வாழவேண்டிய காலம் முடிந்த பிறகு ஆன்மா மீண்டும் இறைவனிடமே சென்றடையும்.

உண்மையில் ஜீவாத்மா பரப்பிரம்ம நாடகத்தின் ஒரு கதா பாத்திரமே ஆகும்.

ஜீவன் உடம்பிலிருந்து சென்றுவிட்டாலும், கண்ணில் சூரியன், வாயில் அக்னி, கையில் இந்திரன்… இப்படி ஒவ்வொரு அங்கத்திலுமிருந்த பலவேறு தெய்வகனங்கள் அனைத்தும் அதனதன் மூலஸ்தானத்துக்கு உடனே போய்ச் சேர்வதில்லை.

மனித உருவத்தை ஆட்கொண்டுள்ள அந்த தேவகணங்களையெல்லாம் முறையாக அதனதன் இடத்திற்கு அனுப்புவதற்காகத்தான், ‘மந்திரங்களை ஓதி, நெய் ஊற்றி,’ அக்னி குண்டத்தில் ஹோமாஹூதி கொடுப்பதுபோல, பிரேதத்தைச் சிதையில் வைத்துத் தேவ கனங்களை சிதை அக்னியின் மூலம் அதனதன் க்ருஹத்துக்கு அனுப்பி வைக்கிறோம்.

பிரேத தஹனத்தை சாஸ்த்திரம் ‘அந்த்யேஷ்டி’, அதாவது ‘இறுதி வேள்வி’ என்கிறது.

இறுதி வேள்வியின் மூலம் சில பல தேவகனங்களை அனுப்பினாலும், அதன் பிறகும் சில, அந்த ஆன்மா வசித்த இடத்தில் இருக்கின்றன.

இரண்டாம் நாள் சஞ்சயனம் (பால் தெளி) என்ற சடங்கின் போது சில விடுதலை பெறுகின்றன.

மற்ற, எஞ்சிய தேவகனங்கள் அதன் பிறகு செய்யும் பனிரெண்டு நாள் காரியங்கள் மூலம் விடுதலை பெறுகின்றன.

பதிமூன்றாம் நாள் ஜபம், ஹோமாதிகளெல்லாம் செய்யப்பட்டு, வீடு முழுதும் மாவிலைக் கொத்தால் புண்ய தீர்த்தம் தெளித்து புனிதப்படுத்துகிறோம்.

இப்படிப் பதிமூன்று நாள் காரியத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசினார் பண்டிதர்.

“ஆ…!”

“ஆஹா…!”

“அடடே…!”

“ராம்…ராம்…ராம்…ராம்…!”

“கிருஷ்ண கிருஷ்ண…”

என்றெல்லாம் அவ்வப்போது அவரவர்களின் அனுபவ வெளிப்பாடு உரத்து வெளிப்பட்டது.

சிலர் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கிக் காட்டி ‘எல்லாம் அவன் செயல்’ என்பதைக் குறியீட்டால் உணர்த்தினார்கள்.

வேதங்கள், சாஸ்த்திரங்கள், புராண, இதிகாசங்கள், உபநிஷத்துக்கள் என்று எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பிரவசனம் செய்து ஓய்ந்தபின் கண்மூடிச் சிறிது நேரம் அமர்ந்தார் பண்டிதர்.

கேட்டுககொண்டிருந்தவர்களும் சிறிது நேரம் கண்மூடி அமர்ந்திருந்தனர்.

“ஜானகீ காந்த ஸ்மரணம்…!”

ஓங்கி ஒலித்துத், தன் மௌனம் கலைத்தார் பண்டிதர்.

“ஜெய் ஜெய் ராம ரா…….ம…”

கோரஸாகச் சொன்னார்கள் எதிரில் அமர்ந்திருந்தவர்கள்.

“அப்பா சொர்க்கம் போனார்னா அதுக்கு உங்க மந்த்ரப் ப்ரயோகம்தான் காரணம்… பொன்னு வைக்கற இடத்துல பூ வைக்கற மாதிரி, எங்க சக்திக்கு செஞ்சோம். புரோகிதா எல்லாரும் ரொம்ப நன்னா சிறப்பாச் செஞ்சி வெச்சேள்.”

சொஸ்தி கூறினான். உபச்சார வார்த்தைகள் சொன்னான் துரைராமன்.

“தொரை, ரொம்ப சிரத்தையா தகப்பனாருக்குக் காரியங்கள் எல்லாம் பண்ணியிருக்கான்.

‘கோ…பூ…சொர்ண, தில, ஆஜ்யா’திகளோட காரியங்கள் ரொம்ப ஒஸத்தியா காரியங்கள் செஞ்சி தகப்பனாரை சொர்க்கத்துக்கு அனுப்பிட்டான். சம்பாவனை எதேஷ்டமா இருந்தது. எல்லாருக்கும் பரம திருப்தி”

சாஸ்திரிகள் பதில் மரியாதை வார்த்தைகளைச் சொன்னார்.

“அடுத்தது, பரமபதம் அடைஞ்சிட்ட மாதவய்யாவுக்கு ‘சரம ஸ்லோகம்’ வாசிக்கப் போறேன்.”

கவனமாக் கேளுங்கோ.”

சொல்லிவிட்டுத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார் பண்டிதர்.

கூடியிருந்தோர் காதைத் தீட்டிக்கொண்டார்கள்.

‘சரமஸ்லோகம்’ என்கிற இறங்கற்பா வாசித்தார்.

வடமொழியில் ஏற்ற இறக்கங்களோடு வாசித்தார்.

மொழி தெரிந்தவர்கள் தலையாட்டி, ரசித்தார்கள்.

தமிழில் அதன் பொருள் சொன்னார்.

மற்றவர்களும் ரசித்தார்கள்.

பதிமூன்றாம் நாள் காரியம் ஆன இரவே, மெட்ராஸ் கிளம்பிச் சென்றுவிட்டான் துரை.

ஆபீஸ் காரியங்கள் இருக்கிறதே அவனுக்கு.

மோகனாவும், ரஞ்சனியும் அந்தனூரில் இருந்தனர்.

27 ம் நாள் குறை (ஊன) மாசிஹம் என்கிற நீத்தார் கடனை முடிக்க மெட்ராஸிலிருந்து வந்தான் துரைராமன்.

நல்லபடியாக முடிந்தது அதுவும்.

அன்று இரவு ரயிலுக்கே, மோகனா ரஞ்சனி உட்பட மூவருக்கும் டிக்கெட் ரிசர்வேஷன் செய்திருந்தான் துரை.

வீட்டில் துரை மிகவும் கவனமாகப் பேசினான்.. நிதானமாகப் பேசினான்.

துரைராமனைப் பொருத்தவரை, இந்த நிதானமும், கவனமும், பொதுவாக, கூடுதல் பொறுப்பு வந்தபிறகு தானே வரும் ஒரு குணமாக இல்லை. கவுட்டுத் தனத்துக்கு அச்சாரம் போடும் நிதானம் அது. குடி கெடுக்கும் மௌனம் அது.

“அம்மா,”

அழைத்தான் துரை. வாய் நிறைய பாசத்தோடு அழைக்கவில்லை. உதட்டளவில் காரியார்த்தமான அழைப்பாக இருந்தது அந்த அழைப்பு.

“ம்…! சொல்லு…!”

“நான் ஏகமா ஆபீசுக்கு லீவு போட்டாச்சு.”

“சரி…”

“குழந்தையும் பள்ளிக்கூடத்துக்கு நிறைய லீவு எடுத்துட்டா.!”

“சரி…!”

“அதனால…!”

“அதனால…!”

“மாசா மாசம் இங்கே வந்து அப்பாவுக்கான காரியங்களைச் செய்யறது கஷ்டம்…மா…!”

“செரி. செய்ய வேண்டாம். விட்டுடு…!”

“நான் அப்படிச் சொல்லலைம்மா.”

“… … … … … … … … …”

“மெட்ராஸ்ல காயத்ரீ ட்ரஸ்ட்’ னு சாவடி ஒண்ணு இருக்கும்மா. அதுல செஞ்சிக்கறேம்மா…!”

“ஏதோ இத்தமட்டும் அப்பாவுக்கு கிரமப்படி, காரியம் செய்யறேன்னு சொல்றியே. ரொம்ப சந்தோஷம். பேஷா செய். உனக்குத் தோண்றதைச் செய்!”

“… … … … … … … … …”

“அம்மா…”

“அதான் சரின்னுட்டேனே…”

“ காரியம் செய்யறபோது நீ இருக்கணுமான்னு, சாஸ்திரிகளைக் கலந்துண்டேன்.”

“… … … … … … … … …”

“தாயார் இருந்தா ஸ்ரேஷ்டம். இல்லேன்னா தோஷமில்லைன்னுட்டார். அதனால…”

“நீ வரவேண்டாம்கறே…! சரி, நான் வரலை. நீ பாத்துக்கோ…!”

இந்த ஒரு வருஷத்தில் துரைராமன் மூன்று முறை அந்தனூர் வந்தான்.

அப்பாவின் வயல்களிலிருந்து வரும் வருமானத்தில் நீத்தார் கடன் செய்தால்தான் ‘ஸ்ரேஷ்டம்’ என்று சாஸ்திரிகள் சொல்லிவிட்டாரோ என்னவோ…!’

கழுகுக்கு மூக்கில் வியர்த்தாற்போல், குறுவை அறுப்பு முடிந்து, நெல் விற்ற நாளில் வந்தான்.

பணம் வாங்கிக்கொண்டு போனான்.

அதைப்போலவே சம்பா அறுவடை, தாளடி அறுவடையின் போதும் சரியான நாளில் வந்தான்.

பணம் தண்டிக்கொண்டுச் சென்றான்.

ஒவ்வொரு முறையும் நேரில் வந்தபோது கூட,

“நீ எப்படி இருக்கே? எப்படி இங்கே தனியாச் சமாளிக்கறே…?”

எதுவும் கேட்டுக்கொண்டதில்லை.

‘ஏதாவது கேட்கப்போய், அம்மா வந்து ஒட்டிக்கொண்டுவிடுவாளோ? தாயாரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள நேர்ந்துவிடுமோ…!’

பயம்.

நகரவாழ்க்கைக் கற்றுக் கொடுத்த பாடம்.

மெட்ராஸ் பழக்கிய சுயநலம்.

“இந்த மாசம் ஏகப்பட்ட செலவு…”

“குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டவே காசு இல்லே…?”

“வீட்டு வாடகை உயர்த்திட்டான். எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலே…?”

“நேரமில்லே, காலமில்லே…!”

“பணம் இல்லே, பவிஷூ இல்லே…!”

“லீவு இல்லே, நிம்மதி இல்லே…!”

“அது இல்லே… இது இல்லே…!”

‘இல்லே’ப் புலம்பல் புலம்புவான்.

அடுத்த வேளை சோற்றுக்கேத் திண்டாடுபவன் போல பஞ்சம் பேசுவான்.

குந்தலாம்பாள் எதற்கும் வாய்திறப்பதில்லை.

“மனிஷாளோட, மனோதிடத்தையும், தைரியத்தையும், பொறுமையையும், நம்பிக்கையையும், விடாமுயற்சியையும் சோதிக்க சமயத்துல கஷ்ட காலம் தேடி வரும். ஜாக்ரதையா அதைக் கடந்து போகணும்” என்று அடிக்கடி மாதய்யா சொல்வார்.

அதை நினைத்துக் கொண்டாள்….!’

அதையெல்லாம் கடந்து போகத் துவங்கிவிட்டாள் குந்தலாம்பாள்.

******

மூன்றாவது முறையாக நெல்லு விற்றக் காசுத் தண்ட வந்தபோது, மாதய்யாவின் தலைத் திவசம் பற்றிப் பேச்செடுத்தான் துரைராமன்.

“அப்பாவோட தலைத் திவசம் …………. க்குதானே வறது…?”

நாள், நட்சத்திரம், கிழமை, ஆங்கில தேதி எல்லாவற்றையும் சொன்னான்.

உள்ளத்துக்குள்ளேயே நீண்ட காலமாக எத்தனையோ விஷயங்களை அடக்கியிருந்ததனால், நாக்கு பேசத் துடித்தது குந்தலாம்பாளுக்கு.

‘புள்ளைப் பூச்சி’ என்று அலட்சியப்படுத்தும் துரைக்கு முன், தேள் என்று தன்னைக் காட்டிக்கொள்ளும் உந்துதல் வந்தது.

வாய் நமநமத்தது.

உள்ளக் கருத்தை உதடு வீசியது.

“இதையாவது அப்பா வாழ்ந்த க்ரஹத்துல பண்ணலாமா?”

மனசில் அவள் இத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த கசப்பெல்லாம் இந்தக் குத்தல் கேள்வியின் மூலம் வெளியே வந்து விட்டதுமாதிரி இருந்தது.

“சரி…!”

‘உடனே சரி சொல்லிவிட்டான் துரைராமன்.’

‘அவன் மனதில் ஏதோ கணக்கு இருந்திருக்க வேண்டும்.’

“அதுக்கான, முன்னேற்பாடுகளை நான் கவனிக்கட்டுமா தொரை..?”

“… … … … … … … … …”

துரை ஏதும் வாய்திறந்து பேசவில்லை;

தலையை மட்டும் சம்மதத்தைத் தெரிவிக்கிற வகையில் ஆட்டினான்.

‘பேசும்போது எதிலாவது கமிட் ஆகிவிடக்கூடும்.’ பயந்தான். எதிலும் சிக்கிவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தான்.

வாய்திறந்து பேசுவதை முற்றிலும் தவிர்த்தான்.

‘அந்தனூருக்கு வந்தால் ஏதாவது பேசுப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது…!

பயம் வந்தது.

அந்தனூர் வருவதையேத் தவிர்த்தான்.

“லீவு இல்லைம்மா…!”

“ஆடிட் வர்றது. நான் இருந்தே ஆகணும்…!”

“ரொம்ப டைட் ஷெட்யூல்…!”

“குழந்தைக்கு பரீட்சை நேரம்…”

“ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ்…!”

என்றெல்லாம் அவ்வப்போது ஒரு போஸ்ட் கார்டு எழுதிப் போடுவான்.

சில நேரம் ரிப்ளை கார்டு போடுவான்.

குந்தலாம்பாளும், ‘நீ கவலைப் படாதே, அம்மா நான் பாத்துக்கறேன்…!”

ஆறுதலாக ரிப்ளை கார்டில் எழுதிப் போட்டுவிடுவாள். பதிலுக்கு.

அந்தனூர் பக்கம் வராமலே சமாளித்தான் துரை.

‘பரந்து விரிந்ததல்லவா நகர வாழ்க்கை.

நகர வாழ்க்கையினால், அவன் வாழ்க்கை வரம்பு உயர்ந்துவிட்டது.

உள்ளம் குறுகிவிட்டது.

பலஹீனனாகிவிட்டான் துரை.’

மகனின் பதுங்கலுக்குக் காரணமும் உறுத்தலும் நன்கு புரிந்தது குந்தலாம்பாளுக்கு.

மாதய்யாவின் ஒளி நிழலில் இருந்திருந்தால் அவரின் வழிகாட்டலால் ஸ்திதப்ரக்ஞ தரிசனம் பெற்றிருப்பான்.

குந்தலாம்பாளைப் போல கர்மயோகியாய்ச் சாதிக்கும் பலசாலியாக இருந்திருப்பான்.

ஆனால் அவன் போதாத நேரம், கிட்டாவய்யாவின் கரு நிழலிலேயல்லவா ஒதுங்கிவிட்டான் துரைராமன்.

கபடும் சூதும் வாதுமே வரமாய்ப் பெற்று, மன ரோகியாய், பலஹீனனாகிவிட்டதில் ஆச்சர்யம்தான் என்ன?

பலசாலியான குந்தலாம்பாளுக்கு, பலஹீனனான மகன் துரையின் மேல் அனுதாபமும் அக்கரையும்தான் வந்தது.

‘பெற்ற தாயிடமே கற்ற வித்தையையெல்லாம் போட்டுக் காட்டுகிறானே…? தாயரியாச் சூலும்தான் உண்டோ?’

துரையைக் உச்சி முகர்ந்து…;

கையில் ஏந்தி…;

தோளில் தூக்கிச் சுமந்து…;

அணில் அழைத்து…;

நாய் சுட்டி…;

மாடு காட்டி…;

காக்காய்க் கூவி…;

பாலூட்டி…;

சோறூட்டி…;

கவி பாடி…;

கதை சொல்லி…;

அறிவு புகட்டி…;

கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்தவள் அல்லவா…?

அதே தாய்ப்பாசத்துடன், அவனிடம் உள்ள குறைகளையெல்லாம் தள்ளி வைத்தாள்.

என்ன இருந்தாலும் பத்து மாதம் சுமந்து பெற்ற மகன் அல்லவா.

விட்டுக் கொடுத்துவிடமுடியாதே.

எல்லா ஏற்பாடுகளையும் தனி ஒருத்தியாகவேச் செய்தாள்.

ஐந்தாறு முறை, வண்டி கட்டிக்கொண்டு திருச்சிக்குப் போனாள்.

தானத்திற்கான சாமான்கள்…

ஹோமங்களுக்கான பொருட்கள்…

ஜவுளிகள்…

மளிகை சாமான்கள்…

…………………………………

எடுத்துக் கட்டிக்கொண்டு, ஒன்று விடாமல் எழுதி வைத்துக்கொண்டு வாங்கி வந்தாள்.

அப்படியே பொட்டலம் பொட்டலமாகவோ, மூட்டை மூட்டை மூட்டையாகவோ போட்டும் வைக்கவில்லை அவைகளை.

அததற்குறிய, பானைகளில், டின்களில், சம்புடங்களில், டப்பாக்களில், சீசாக்களில், ஜாடிகளில்… வைத்தும், கொட்டியும், போட்டும், அடுக்கியும், ஊற்றியும், மூடிப் பங்கிடாக வைத்தாள்.

பட்ட மிளகாய் போன்ற சில மளிகை ஐட்டங்களை ஓரிரண்டு நாட்கள் முற்றத்தில் உலர்த்தி எடுத்து வைத்தாள்.

ஆவக்காய், எலுமிச்சை, கிடாரங்காய், ஊறுகாய்களை போட்டுக் கல்ஜாடியில் வைத்தாள்.

ரஞ்சனிக்குப் பிடிக்குமே என நார்த்த இலைப் பொடி இடித்து வைத்தாள்.

உயரப் பீங்கான் ஜாடியில் மாவடு போட்டு வேடு கட்டி மூடினாள்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, மடியாக வேடு அவிழ்த்து, மாவடுவை கிளரிப் பதம் பார்த்து அழுகி அமுங்குவதை அப்புறப்படுத்தினாள்.

குழந்தை வந்தவுடன் தின்னக் கொடுக்க, மைசூர் பாக்கு வெட்டி வைத்தாள்..

கொஞ்சமாக எண்ணை வைத்து தேன்குழல், முள்ளு தேன்குழல், முறுக்கு எல்லாம் செய்துவைத்தாள்.

மடியில் பலகையைச் சாய்த்துக்கொண்டு கடுகு உருட்டி, கல் நேம்பினாள்.

திருகைக் கல்லில் போட்டுச் சுற்றி உளுந்து உடைத்தாள்.

உடைத்த உளுந்தை உளுந்துச் சல்லடையில் சலித்துக் காய வைத்துப் , பங்கிடு செய்து பானையில் கொட்டி வைத்தாள்.

திருகையில் உடைக்கும்போது, மைய முளையைச் சுற்றிலும் உடையாமலே கிடக்கும் அல்லவா சில உளுந்துகள்.

அதைக் கூர்ந்து பார்த்தாள்.

‘சுற்றிச் சுற்றி வந்து நசுக்க வந்தாலும் எங்களைப்போல உடையாமல் நிற்கவேண்டும் குந்தலாம்பா…!”

அந்த உளுந்துகள் தன்னிடம் சொல்வது போல இருந்தது அவளுக்கு.

ஒருக் சாரதம், மாச்சா, சாவித்திரி, விசாலி, சுந்தி, பட்டு, சின்னப் பொண்ணு, ஜானகம், லட்சுமி, அம்மாக்குட்டி, குஞ்சி……. என்று, அக்கம் பக்க வீட்டிலிருந்து, மாமிகள் எல்லோரும் வந்து உட்கார்ந்து வம்பு பேசிக்கொண்டே நூற்றுக் கணக்கில் அப்பளம் இடுவார்கள் அந்த வீட்டில்.

அதே பட்டகசாலையில், தனி ஒருத்தியாக உட்கார்ந்து, வைதீக காரியங்களுக்குத் தேவையான அளவுக்கு, உளுந்து அப்பளம், அரிசி அப்பளம் இட்டுக் காயவைத்து எடுத்து வைத்தாள்.

திருச்சி கோபால்தாஸ் கடையில், தானத்திற்குத் தங்கமும், வெள்ளியும், வாங்கி வந்தாகிவிட்டது.

தேங்காய் வியாபாரி வரதுக்குட்டி தேவையான அளவுக்குத் தேங்காய் உரித்துக் கொடுத்துவிட்டு, மீதி காய்களை விலைக்கு எடுத்துக்கொண்டு சென்றான்.

கூடையில் வரதுக்குட்டி வைத்துவிட்டுப் போன தேங்காய்களில் நார் நீக்கி, அலம்பி சுவற்றோரம் நிமிர்த்தி நேர்த்தியாய் அடுக்கி வைத்தாள்.

வரதுக்குட்டி சீசனல் வியாபாரி.

எந்த வேலை கிடைத்தாலும் தட்டாமல் செய்வான்.

“என்னடா வரதுக்குட்டி எங்கே கண்லயே காண முடியலே…?”

“தேங்காய் ஆஃப் சீசனோன்னோ… அதான் டவுன்ல போயி ரோடுல கடை போட்டு செருப்பு வியாபாரம் பாத்தேன்.”

“டேய் நான் ரெண்டு வாரத்துக்கு முன்னால திருச்சிக்கு வண்டி கட்டிண்டு வந்திருந்தேன். அன்னதான சமாஜம் பக்கத்துல செருப்புக்கடை போட்டுண்டு உக்காந்திருந்தது உன்னைப் போல இருந்துது. அதான் தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்.”

“ஏன் மாமி செருப்பு வியாபாரம் மட்டமா…?”

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்திரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
மண்ணெடுத்துக் குடங்கள்செய் வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய்,பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!

பாரதியின் பாடல் நினைவுக்கு வந்தது.

வரதுக்குட்டியை நினைத்து பெருமைப்பட்டாள்.

“பொய் சொல்லாம, திருடாம, பிச்சை எடுக்காம எந்தத் தொழில் செய்தாலும் அது ஒசத்திதான் வரதுக்குட்டி. வாய்நிறையப் பாராட்டினாள் குந்தலாம்பாள்.

கொல்லைத்தாவாரத்தில் வெந்நீர் அடுப்புக்குச் சற்றுத் தள்ளிக் குத்துக் கல் போட்டு மூடப்பட்ட கோட்டை அடுப்பின்மீது, பெரும்படிச் சமையலுக்காக, மூன்றடி இடைவெளியில் போடப்பட்டிருந்த மண் அடுப்புகளைப் போனது வந்தது பார்த்து, சேறு பூசி, சாணியால் மெழுகிக் கோலம் போட்டாள்.

அடுப்பெறிக்க விறகு, சிராய்த்தூள், இழைப்புச் சுருள்கள், தேங்காய் மட்டை, அடிமட்டை, கூராஞ்சி, சுள்ளி சிப்பிகள், விராட்டிகள் என எல்லாம், கூடை, தட்டுக்கூடை, தரை, மச்சுப்பரண் என அதனதல் இடத்தில் வைத்தாள்.

ஹோமத்திற்காகத், சமித்துகள், தவிடு, உமி, சிராய்த்தூள், இழைப்புச் சுருள், விராட்டி, ஊதுகுழல், சாமணம், விசிறி மட்டை, புரசு இலை எல்லாம் தயாராக கூடையில் போட்டு கூடத்தில் வைத்தாள்.

நவக்ரஹ ஹோமத்திற்கான நவ தான்யங்கள், கலர் கலராய் ரவிக்கைத் துண்டுகள், நெல், அரிசி என அனைத்தும் காமரா உள்ளில் தனியாக இருந்தது.

ஒவ்வொரு முறை திருச்சிக் கோட்டைக்குச் சென்றுச் சாமான் வாங்கும்போதெல்லாம், சில்லரை நாணயங்களாக மாற்றி மாற்றிப் போட்டு வைத்த சம்புடத்தை எடுத்து ஸ்வாமி மேடையில் தட்சிணைக்காக, வைத்தாள்.

வீட்டுக் கொல்லையில் விளைந்த நீலம் மாங்காய்களையும், பூவன், ரஸ்தாலி வாழைத்தார்களையும் கொடாப்புக் கொட்டகையில்,மூட்டம் போட்டு பழுக்கவைக்க ஏற்பாடு செய்தாள்.

நுனியிலை, ஏடு, தொன்னைக்கு என வகை தொகையாக வாழை மட்டைகளை நறுக்கி முற்றத்து ஓரம் வெய்யில் கானலில் போட்டாள்.

சற்றே வதங்கி முடமுடப்பு நீங்கிய பின் ,கிணற்றடியில் போட்டுத் தண்ணீர் ஊற்றி அலம்பி, ஆறவைத்துத் துடைத்து அடுக்கி அழகாய் அரிசிச் சாக்கில் சுற்றி வைத்தாள்.

திருச்சி காந்தி மார்க்கெட் சென்றாள்.

பார்த்துப் பார்த்துக் காற்கறிகள் வாங்கி வந்தாள்.

கங்காளத்தில் நிரப்பிய தண்ணீரில் போட்டு சிறிதுநேரம் ஊறவைத்தாள்.

அலம்பித் துடைத்து காற்றோட்டமாக உக்ராண அறையில் தரம் பிரித்துப் போட்டு மெல்லிய வெள்ளை காட்டன் வேட்டித் துணியால் மூடிவைத்தாள்.

வெண்ணெய் காய்ச்சினாள்.

சாப்பாடுக்கு, ஹோமத்துக்கு என தனித்தனிச் சம்புடங்களில் கொட்டி வைத்தாள்.

முதல் நாள் மதியமே சமையல் மாமி செண்பகாவும், நளாயினியும் வந்துவிட்டார்கள்.

அவர்கள் இருவருக்கும் சாமான், சஜ்ஜா எல்லாம், எதெது எங்கெங்கு இருக்கிறது என்பதைக் காட்டினாள்.

“நான் இங்கேதான் இருக்கேன். இருந்தாலும் நான் அங்கே இங்கே போன நேரத்துல அவசரமாச் சமாளிக்கணும்னா உங்களுக்கு தெரிஞ்சிருக்கணு மோன்னோ…!” அதான் காட்டினேன்.

விளக்கம் தந்தாள்.

“செரிதான்…” என்றார்கள் இருவரும்.

தன்னுடையது முதல் ரஞ்சனியுடையது வரை எல்லாருடைய துணிகளையும் நனைத்து கூடத்துக் கொடியில் மடி உலர்த்தினாள்.

“பணம் காசை வாரி எறைச்சி, ஏகமா இழுத்து விட்டுக்கறியே குந்தலா…?”

கரிசனத்தோடு கேட்டாள் அலமேலு மாமி.

“அவர் சேமிச்சது. அவர் பொருட்டு செலவு செய்யறதுல நாம ஏன் சிக்கனம் பிடிக்கணும்…?”

“அதுவும் சரிதான்…!”

“அவர் கடைசியா தன்னை, அவரோட கோவில் சம்பாக் காணி வழியா தூக்கிண்டு போகணும்னு ஆசைப்பட்டார். அதை நிறைவேத்த முடியலை. இன்னிக்கு இருக்கற துணிச்சல் அன்னிக்கு எனக்கு இல்லாம போயிடுத்து.”

என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், “செரிதான்…” என்றாள் அலமேலு மாமி.

“அன்னிக்கு மட்டும் இப்படி ஒரு துணிச்சல் வந்திருந்தா நான் தனி ஒருத்தியாவே அவரைத்தூக்கி மாட்டு வண்டீல போட்டுண்டு அவர் ஆசைப்பட்ட அந்தக் காணி வழியாவே கொண்டுபோயிக் கொளுத்தியிருப்பேன்…”

“பழசைக் கிளராதே விடு குந்தலா… அதான் நிறைய தானம் தருமம்னு செய்யறியே…”

“கடைசீ ஆசையை நிறைவேத்த முடியாத கையாலாகாத்தனத்துக்கு தானம் தர்மம்ன்னு எவ்வளவுதான் ப்ராயச்சித்தம் செஞ்சாலும் ஈடாகுமா…?”

முதல் நாள் மதிய சாப்பாட்டுக்கே குடும்பத்தோடு வந்து சேர்ந்துவிட்டான் துரை.

துரை வந்த சேதிக் கேள்விப்பட்டு, மூணு மணி சுமாருக்குச் சாஸ்திரிகள் வந்தார்.

அவர் வந்தபோது தானத்துக்கான சாமான்களை கூடத்தில் பரத்திப் பார்த்துக்கொண்டிருந்தனர் துரையும், மோகனாவும்.

சாஸ்திரிகளும் எல்லாவற்றையும் பார்த்தார்.

ஒவ்வொன்றையும் கையில் எடுத்து அதன் கனம், தரம் எல்லாவற்றையும் பார்த்தார்.

முகம் பிரசன்னமானது அவருக்கு.

“நன்னா காத்தரமா, ஃபர்ஸ்ட் குவாலிட்டியா, நிறைய செலவு பண்ணி சிரத்தையா வாங்கியிருக்கேள் மாமி…”

மனதாரப் பாராட்டினார் .

ஆப்தீகக் காரியங்களைச் சிரத்தையாகச் செய்து முடித்தான் துரை.

ஒரு வழியாகத் தலைத் திவசம் மிக விமரிசையாக முடிந்துவிட்டது.

கோதானம், பூதானம், ஸ்வர்ணதானம்,வஸ்த்ரதானம் எனத் தாராளமாகவேச் செய்ததில் புரோகிதர்களுக்குப் பரம திருப்தி.

பெற்ற மகனைச் சல்லிக் காசு கேட்கவில்லை.

அதனாலேயே துரைராமன் சிரத்தையாக கர்மாக்களைச் செய்தான்.

மாதய்யா அன்போடு வளர்த்த கோதாவரிப் பசுவை விஸ்வாமித்ர கனபாடிகளுக்கு தானமாகக் கொடுத்தார்கள்.

வடக்கு நோக்கி பசுமாட்டின் வாலை அவர் கையில் கொடுத்து தீர்த்தம் விட்டு கோதானம் செய்தான் துரைராமன்.

“மாதய்யா மூச்சுக்கு மூச்சு கோதாவரிப் பசுப் பத்திப் பேசுவார். ‘கண்ணுக்குக் கண்ணாய்’ அவர் வளர்த்த பசுவாச்சே அது.!”

கனபாடிகள் நினைவு கூர்ந்தார்.

போனவாளுக்கு எது ரொம்ப இஷ்டமோ அதை தானம் செய்யறதுதானே ஸ்ரேஷ்டம்…”

என்றாள் குந்தலாம்பாள்.

எல்லாம் முடிந்தபின்னர், தம்பதியர்கள் குனிந்து அங்க வஸ்திரத்தை விரித்துப் பிடித்து ஏந்தியபடி, தலை வணங்கி ஆசி பெற்றார்கள்.

பஞ்சாதி சொல்லி, அட்சதை போட்டு, ஆசீர்வதித்து, ததாஸ்து சொன்னார்கள் புரோகிதர்கள்.

வருஷத் திவசத்தை முன்னிட்டு அந்தனூர் வந்த துரை, எதிலும் பட்டுக்கொள்ளவில்லை.

விலகியே இருந்தான்.

வைதீக காரியங்களை சாஸ்திரிகள் சொன்னபடி செய்தான்.

காரியம் முடிந்ததும், சமையல் மாமி பங்கஜா போடும் சாப்பாட்டைச் சாப்பிட்டான்.

சாப்பிட்ட இலை எடுத்து, இடம் துடைப்பதற்குள் கிட்டாவய்யா வீட்டுக்குச் சென்றுவிடுவான்.

ராத்திரி பலகாரத்துக்குத்தான் திரும்புவான்.

காணி, தோப்புகளுக்கெல்லாம் போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லை.

வயல் வரப்பெல்லாம் எப்படி இருக்கு? வெவசாயம் எப்படிப் போறது? கண்டுமுதல் என்ன?-

எதுவும் கேட்கவும் இல்லை அம்மாவிடம்.

அவ்வளவு ஏன்… கொல்லைக்கட்டுக்குச் சென்று இருக்கிற ரெண்டே உருப்படிகளான வீரன் காளையும், கோதாவரிப்பசுவும் கூட எப்படி இருக்கிறது என்று பார்த்ததில்லை அவன்.

குந்தலாம்பாளும் அவனிடம் எதுவும் சொல்லவில்லை.

“தொரை… வா…!”

அழைத்தார் கிட்டாவய்யா

“ம்…”

இன்னிக்குக் காரியம் நல்லபடியா ஆச்சா…?”

“ஆச்சு மாமா..!”

சிறிது நேரம் தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்தார் கிட்டாவய்யா.

துரைராமனும் பேசாமல் உட்கார்ந்திருந்தான்.

“நான் சொன்னதை யோசிச்சியோ…?”

கிட்டாவய்யா துரையின் முன் கேள்வியைத் தூக்கிப் போட்டார்.

“யோசனைப் பண்ணினேன் மாமா. ரொம்ப மலைப்பாப் படறது..”

“துணிஞ்சவனுக்கு துக்கம் இல்லைனு சொல்லுவா… துணிஞ்சி இறங்கினாத்தான் எதுலயும் ஜெயிக்க முடியும்.”

‘பிறருக்கு நல்லது செய்வது என்பதே தன் அகராதியில் இல்லாத கிட்டாவய்யா உசுப்பேற்றிவிடுகிறார். நிச்சயமாக இது குடி கெடுக்கும் செயல் ..’ என்பதை அறியவில்லை துரை.

சாத்தான் பாம்பின் உடம்பில் புகுந்துகொண்டு ஏவாளிடம் பேசிய பேச்சைப் போல அவ்வளவு அலங்காரமாகப் பேசினார் கிட்டாவய்யா.

பாம்பு வடிவில் பேசுவது சாத்தான் என்பதை அறியாமல், அந்தப் பேச்சின் சாரத்தை மீண்டும் மீண்டும் யோசித்த ஏவாள் புத்தி மழுங்கி… ‘ஈடன் தோட்டத்தில், ஆண்டவனால் தடை செய்யப்பட்ட அந்தப் பழத்தைச் சுவைத்தால்தான் என்ன…?’ என்ற முடிவுக்கு வந்ததைப்போல் ஒரு தவறான முடிவுக்கு வந்தான் துரை.

மீண்டும் மீண்டும் கிட்டாவய்யா சொன்னதையே, யோசித்தான்.

‘செய்துதான் பார்ப்போமே…!’

துணிந்தது அவன் மனசு.

******

கிட்டாவய்யா எப்படியெல்லாம் துரையின் மனசைக் கலைக்கிறார் என்பது அரசல் புரசலாகத் தெரிந்திருந்தது குந்தலாம்பாளுக்கு.

துரையிடம் அதைப் பற்றிக் கேட்கவுமில்லை. வேறு யாரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணமும் அவளுக்கில்லை.

சமயத்தில் தம்பி சுப்பாமணியிடம், எதையாவது பகிர்ந்து கொள்வாள்.

‘அந்தரங்கத்தையும், ஆதங்கத்தையும் பகிர்ந்து கொள்ளுகிற மாதிரியா இருக்கிறான் துரை. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்…!’

மனதைத் தேற்றிக்கொண்டாள்.

என்னதான் பாராமுகமாய் இருந்தாலும், பெற்ற மகனாயிற்றே துரை.

ஒரு தாயாய் அவன் மேல் கரிசனம் இருக்கும்தானே..?

‘பகவானே… நீதான் என் மகனை அந்த அசுரன் கிட்டாவய்யாகிட்டேருந்து காப்பாத்தணும்…’

ஆண்டவனை வேண்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை குந்தலாம்பாளுக்கு.

மனசு முழுவதும் என்னென்னவோ எண்ணங்கள் வந்து அலைக்கழித்தது குந்தலாம்பாளை.

‘ஒரு வீம்புல சொத்து பத்தெல்லாம் கட்டிக்காத்துண்டு, ஊர்ல தலை நிமிர்ந்து நடக்கறதாப் பாவ்லாப் பண்ணிண்டு இருந்தாலும், உடம்பு நாளுக்கு நாள் தளர்ந்துதான் போறது. தெம்பு குறையறது.’

எதிர்மறை எண்ணம் வந்தது.

‘நமக்குப் பிறகு இந்த நிலம் நீச்செல்லாம் என்னாகும்…?’

அர்த்தமற்ற கேள்வி மனசைப் பிசைந்தது.

‘தொரையே மனசு மாறி கிராமத்தோட இருந்து விவசாயம் செய்ய ஆசைப்பட்டாலும் இந்தா கிட்டா அவனை வாழவிடுவானா… சந்தீலன்னா நிறுத்திடுவான்…!’

ஞாயமான சந்தேகம் உதித்தது.

நில – புலம், வீடு – வாசல், தோப்பு – தொரவு, மாடு – கன்னு எல்லாத்தையும் வித்துட்டு பட்டணத்தோட போயி இவனோட கௌரதையா இருந்துடமுடியுமா…?”

அவநம்பிக்கை உதித்தது.

“ஏம்மா! சொல்றேனேனு வருத்தப்படாதீங்க. பெத்த தாய் இங்கே ஒண்டிக்கட்டையா நின்னு அய்யா பாத்த நிர்வாகத்தையெல்லாம் பாத்துக்கிட்டிருக்கீங்க. உங்களுக்கு விவரமா ஒரு தபால் போடக்காணோம். அந்த கிட்டாவய்யாவுக்கு வாரம் தவறாம இன்லெண்டு தபால் எழுதறானே உங்க மகன்…”

தபால்காரன் ஒரு முறை சொன்னபோது குறுகித்தான் போனாள் குந்தலாம்பாள்.

‘ஒரு இடத்தில் பாடுபட்டு, அதில் பயனடைந்துப் பழகிய ஆசாமி, அதை விட்டு நிரந்தரமாகக் கிளம்புவதென்றால் மனசு வராதுதான், மனக் கிலேசம்தான், சிரமம்தான், கொடுமைதான் அது.

அதே சமயம், அப்படி நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் மனிதன் என்னதான் செய்ய முடியும்.?’

‘ஆண்டவன் விட்ட வழி…’, ‘நடப்பது நடந்தே தீரும்…’ என்ற வேதாந்தங்களுக்குள் தன்னை முழுவதுமாய் புதைத்துக்கொண்டாள் குந்தலாம்பாள்.

பட்டணத்துக்கு ரயிலேற்றிவிடக் கலியன் வண்டியைப் பூட்டித் தயாராக வாசலில் நிறுத்தினான்.

திண்ணையிலிருநது, பிரயாணப் பைகளை கொண்டு போய் வண்டியில் வைத்தான்.

“அத்தை, எங்க கூட பட்ணம் வந்துடுங்களேன்… இங்கே எதுக்கு நீங்க தனியா இருக்கணும்…?”

வந்தது முதல் நூற்றுக்கணக்கான முறை கேட்டுவிட்ட மருமகள் மோகனா இப்போது கிளம்பும் போதும் கேட்டுவிட்டாள்.

வரவே மாட்டேன். என்று வைராக்யமாக இருப்பவர்களை “வா… வா…” என்று வற்புறுத்துவதுதானே இயற்கை.

“பாட்டி எங்ககூட பட்டணம் வந்துடேன்…”

கொஞ்சல் குரலில் விண்ணப்பம் வைத்தாள் பேத்தி ரஞ்சனி.

“வரேன்…! வராம எங்கே போப்போறேன்…!”

வழக்கமான பதிலைச் சொல்லியபடியே ரஞ்சனியின் கன்னத்தை வழித்த விரல்களைக் குவித்து உதட்டில் வைத்து முத்தமிட்டாள்.

“சரிம்மா…!” என்றான் துரைராமன்.

சரிம்மா என்ற ஒரு வார்த்தையில், “நேரமாயிடுத்து, இப்படியே பேசிண்டிருத்தா வண்டியைப் பிடிக்க முடியாது. நாங்க புறப்படறோம்…” என்ற பொருள் பொதிந்திருந்தது வெளிப்படையாகவேத் தெரிந்தது குந்தலாம்பாளுக்கு.

“சரி, போயிட்டு வாங்கோ…!”

விடை கொடுத்தாள் குந்தலாம்பாள்.

கிளம்பி வண்டியை நோக்கி இரண்டடி வைத்தான்.

எதையோ மறந்தவன்போல் சட்டெனத் திரும்பி ஒரு அடி அம்மாவை நோக்கி வந்தான்.

“எதையாவது எடுத்துக்க விட்டுட்டியா தொரை…?”

குந்தலாம்பாள் கேட்டாள்..

“ஊம்ஹூம்…!”

“… … … … … … … … …”

“உன்னண்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.”

“… … … … … … … … …”

‘என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வி குந்தலாம்பாளின் கண்களில் தேங்கியிருந்தது.

“அடுத்த வாரம் நான் இங்கே வருவேன்மா…!”

“… … … … … … … … …”

குந்தலாம்பாளின் முகக்குறிகளில் அப்பட்டமாய் அப்பியிருந்தது அதிர்ச்சி..

‘அடுத்த வாரம் இவனுக்கு இங்கே என்ன வேலை…?’ மனசுக்குள் கேள்வி எழுந்தது.

“என்ன விசேஷம்…னு?”

மனதில் உள்ளது வாயில் வந்து விட்டது.

“விசேஷம்னாதான் வரணுமா…?

சாதாரணமா வரக்கூடாதா…?”

“அதுக்கில்லேடா தொரை. வீண் அலைச்சல், செலவு, பெண்டாட்டி பிள்ளையை விட்டுட்டு வரணுமேன்னு நீதானே அடிக்கடி அலுத்துப்பே… அதான் கேட்டேன்.”

“… … … … … … … … …”

பதில் ஏதும் சொல்லவில்லை அவன்.

குந்தலாம்பாளேத் தொடர்ந்தாள் – “ அடுத்த வாரம் வர்றதென்ன… ஒரு வாராத்துக்கு ஃபோன் பண்ணி ஆபீசுக்கு லீவு சொல்லு. இங்கேயே இருந்துட்டுப் போயேன். நானும் ‘கொட்டுக் கொட்டுன்னு’ தனியா இருக்கறதுக்கு எல்லாரோடையும் ஒரு வாரப் பொழுது போகுமே…!”

“ஒரு முறைக்கு ரெண்டு முறை வந்து போற அலுப்புப் பாத்தா ஆகுமா…! அதுவும் தவிர ரஞ்சனிக்கு பள்ளிக்கூடம் போகணுமே… ஏற்கெனவே பத்து பன்னென்டு நாள் லீவு போட்டாச்சுவேற.”

“சரி.. உன்னிஷ்டம்…”

“நான் வர்றது எதுக்குத் தெரியுமோ…?”

“சொன்னாத்தானே தெரியும்…”

“அம்மா…!; அப்பா பண்ணினது பெரிய தப்பு… நிலங்களையெல்லாம், குத்தகைக்கு எழுதிக் கொடுத்திருக்கவேக் கூடாது…”

குந்தலாம்பாளுக்கு விவரம் புரிந்துவிட்டது. துரையிடம் போட்டு வாங்கத் தீர்மானித்தாள்.

“கலியன்தான் சரியா அளக்கறானேடா…”

“பொழுது போக்குக்காகவும், வெட்டி ஜம்பத்துக்காகவும் குத்தகைக்கு விட்டவயலுக்குப் போயி நின்னுட்டு வந்தாப் பணம் காசு சேருமா…?

“… … … … … … … … …”

“இப்படி பேருக்கு விவசாயம் செய்யறதெல்லாம் கவைக்காகாதும்மா… நான் ஒரு பெரிய திட்டம் வெச்சிருக்கேன்… அது சம்பந்தமாப் பேசத்தான் அடுத்தவாரம் வரலாம்னு…”

“அப்படி என்னடா தொரை திட்டம்…? சொல்லேன் நானும் தெரிஞ்சிக்கறேன்…”

“நேரம் வரும்போது சொல்றேன்…”

“என்ன செய்யப்போறேன்னு சொன்னா, நான் அதுக்கு ஒத்தாசை பண்ணலாமேனு கேட்டேன்.”

“ சொல்றதப் பத்தி இல்லை. நான் சொன்ன உடனே அதெல்லாம் வேண்டாம்னு அஸ்து பாடப்படாது. இந்த கண்டிஷனுக்கு ஒத்துண்டா சொல்றேன்.”

“சரி, அஸ்து பாடலை. சொல்லு.”

“சொல்றேன் , குறுக்கே பேசாம கேட்டுக்கோ . மொதல்ல நான் கேட்கற கேள்விகளுக்கு பதில் சொல்லு.

“ம்… கேளு எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.

சம்பா நட்டு ; மூணு மாசம் காத்திருந்து ; உழவு, உரம், பூச்சி மருந்து, கூலி ன்னு செலவழித்து கண்டுமுதல் எடுக்கறே. என்ன மிச்சப்படறது சொல்லு ?

“… … … … … … … … …”

“அம்மா, என் யோசனைப்படிச் செஞ்சா…?”

பேச்சாளர் கேட்பாளரின் முகக்குறிப்பைப் பார்த்தபின் பேசுவதுபோல, அம்மாவைப் பார்த்தான்.

“டோக்கு டோக்குன்னு வள்ளிசா பணம் புரளும்மா… பணம் புரளும்…”

“… … … … … … … … …”

குந்தலாம்பாள் எதுவும் பேசவில்லை.

“புள்ளைக்கு வயல் வரப்பு மேல அக்கரையில்லை. ஏதோ மெட்ராஸ்ல ஒக்காந்து பொறுக்கறது’ன்னு அப்பா அடிக்கடி சொல்லுவாளோன்னோ… அதுக்கு பதில் சொல்றேன் கேட்டுக்கோ…”

“நாங்க மூளைய செலவு பண்றோம்மா. எதை, எங்கே, எப்படிச் செஞ்சாப் பணம் கொழிக்கும்னு, யோசிக்கறோம்.,

“ஒண்ணு போட்டா பத்து எடுக்கணும், அந்தப் பத்தையும் போட்டு நூறு எடுக்கணும். அதுதான்மா புத்திசாலித்தனம்.”

‘அவனாகப் பேசவில்லை.

அவன் உள்ளே கிட்டாவய்யா புகுந்து கொண்டு பேசுகிறார் என்பது நமக்கேத் தெரியும்போது குந்தலாம்பாளுக்குத் தெரியாதா என்ன?

இருந்தாலும் எப்படியோத் தன் மகனுக்கு இந்த ஊர் மண்ணைப் புரட்டிப் போடும் எண்ணம் வந்ததற்காக சந்தோஷமேப் பட்டாள் அவள்.

“என்னம்மா எதுவும் பேசாம இருக்கே..?”

“ விரலுக்குத் தக்கபடிதான் வீங்கணும். பேராசைப் பெருநஷ்டம்னு சொல்லுவா. எவ்வளவுதான் எண்ணையத் தடவிண்டு உருண்டாலும் ஒட்டறதுதான் ஒட்டும்…”

“அம்மா… நான் சொல்றேனேனு தப்பா நினைக்காதே. நீ வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்கறதால உனக்கு உலகம் தெரியலை. அதான் கிணத்துத் தவளையாட்டம் வேதாந்தம் பேசறே.”

“டேய்… உங்கப்பா என்னை உலகம் தெரியாம வெச்சிருக்கலை. வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதே தொரை. மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு…”

“சரி பேசலை. ஒண்ணு மட்டும் தீர்மானமாச் சொல்றேன். காசுதான் உலகம். நாலு காசு இல்லேன்னா நாய் கூட மதிக்காது. துட்டு சம்பாதிக்க நான் போட்ட திட்டத்தை அடுத்த வாரம் வந்து சொல்றேன். இப்போ ரயிலுக்குநாழியாச்சு…”

அவசரமாக ரயிலுக்குக் கிளம்பினான் துரை.

அத்தியாயம் – 20

“ஏந்நா…!”

“சொல்லு மோகனா…”

“நேக்கு ரொம்பக் கவலையா இருக்குந்நா…”

“என்னத்துக்கு கவலை இப்போ?”

“உள்ளூர் பெண்ணும் வெளியூர் மண்ணும் சரி வராது’னு சொல்லுவாளோன்னோ…!”

மோகனா சொல்ல வரும் விஷயம் புரிந்துவிட்டது துரைராமனுக்கு.

அந்தனூரில் காளவாய்ப் போடத் திட்டமிட்டத் துரையை எச்சரிக்கிறாள்.

‘அப்படித்தான் செய்வேன்!’ என்று எடுத்தெறிந்துப் பேசிவிடலாம். அப்படிப் பேசிவிட்டுக், கசந்து முகர்ந்து, ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதை விரும்பவில்லை துரை.

‘உண்மையாகக் கவலைப்படும் மனைவி மோகனாவைக் ‘கன்வின்ஸ்’ செய்துவிடலாம்,’ என்று தோன்றியது துரைக்கு.

“ஞாயித்துக்கிழமை அந்தனூர் போறேளா…?”

“நிச்சயமாப் போறேன் மோகனா…!”

“காளவா, கல்லு பிசினஸ் எல்லாம் நமக்குச் சரியா வருமா…?”

“இதோ பாரு மோகனா, எல்லாத்தையும் ‘ஏ டு இஸட்’ ப்ளான் பண்ணிட்டுத்தான் இந்தக் காரியத்துல இறங்கறேன். நிச்சயமா ஜெயிப்பேன். நீ கவலையேப் படோதே…”

துரைராமனின் பேச்சு தைரியத்துடனோ, பெருமையாகவோ சொன்னதாக இல்லை. மாறாக, மோகனாவின் வாயை அடைப்பதற்காக, அசட்டுத்தனத்துடனும் டம்பமாகவும் சொன்னதாகத்தான் பட்டது மோகனாவுக்கு.

‘அசட்டுக்கு அகங்காரத்தை ஏற்றிவிடக்கூடாது. இறக்குவது ரொம்பவும் கஷ்டமாகிவிடும்’

எதார்த்த நிலையை கருத்தில் கொண்டு, மோகனா எதபதமாகப் பேசினாள்.

“நீங்க ராவும்-பகலுமா உழைச்சி, குருவி சேக்கறாப்ல சேத்து வெச்சக் காசுந்நா. ஒத்தை பெண் வேற பெத்து வெச்சிருக்கோம். பண நஷ்டம் நமக்குத் தாங்காதுந்நா. நேக்கு ரொம்ப பயமா இருக்கு.”

சொல்லும்போதே மோகனாக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

“… … … … … … … … …”

மோகனாவின் நியாயமான ஆதங்கத்துக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக நின்றான் துரை.

துரையின் மௌன யோசிப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினாள் மோகனா.

இதுதான் சமயமென்று தன் கருத்துக்களைத் திணித்தாள்.

“அம்மாவுக்கு கிராமத்து அனுபவங்கள் ஜாஸ்தி. உங்க திட்டம், செயல்பாடு எல்லாம் அம்மாவுக்குத் தெரிஞ்சிருந்து, அம்மா இருந்து பாத்துண்டாக் கூட நான் கவலைப்படமாட்டேன்ந்நா.”

“அதெல்லாம் யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. பார்த்துக்கவும் தேவையில்லை.”

அலட்சியமாகச் சிரித்தான்.

ஆனால் ‘ மோகனா சொல்வது போல அம்மா பார்த்தால் நன்றாகத்தான் இருக்கும்…!’

துரையின் மனசு இப்படி எண்ணாமலும் இல்லை.

“அந்நா, அந்த கிட்டாமாமா பத்தி அப்பாவும் அம்மாவும் நல்ல அபிப்ராயம் சொன்னதே இல்லை. அவரை நம்பி இறங்கறது ரொம்ப ரொம்ப பயமா இருக்குந்நா.”

அவள் பயத்தின் உண்மையான காரணம் அறிந்ததும் துரை ‘ஹ…ஹ…’ என்று சிரித்தான்.

“மோகனா.. அசட்டுப்பிசட்டுன்னு பேசாதே. நன்னாப் புரிஞ்சிக்கோ. நான் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லே. கிட்டா மாமாவையே முழுக்க நம்பி இந்தக் காரியத்துல இறங்கலை. கல்லறுத்துக் காளவாய் போடற மேஸ்திரி முருகானந்தத்துக்கிட்டியே நேரே பேசிட்டேன். அது மட்டுமில்ல. ஸ்டாம்ப் பேப்பர்ல பக்காவா ஒப்பந்தம் எழுதிக் கையெழுத்து வாங்கிடுவேன். நம்மை ஒருத்தரும் ஏமாத்த முடியாது… கவலையேப் படாதே. எல்லாம் நல்லபடியா முடியும்.”

இந்த முறை துரையின் குரல், முன்புப் பேசியதை விட இறக்கமாக இருந்தது.

‘ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமோ…!’ என்று ஒரு கனம் நினைத்திருப்பானோ என்று தோன்றியது.

“நான் ஒண்ணு சொல்வேன் கேப்பேளா…?”

“சொல்லு மோகனா…!”

“வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிட நிலையத்துல ஒரு நாடி போட்டுப் பாத்துட்டு…”

அவள் முடிக்கக்கூட இல்லை. துரை பேசினான்.

“மோகனா…! எனக்கு இதுலல்லாம் நம்பிக்கையே கிடையாது… நான் ஜெயிப்பேன் என்னை நம்பு”

“எனக்கு நாடி ஜோசியத்துல பூர்ண நம்பிக்கை உண்டுந்நா.”

“… … … … … … … … …”

‘செய்யும் தொழில் புதுசு. துளிக்கூட அனுபவம் இல்லாமல் செய்யப்படும் தொழில். கை நட்டம் இல்லாமல் கரையேற வேண்டுமே…!’

பயம் உள்ளுக்குள் லேசாக இருந்ததாலும்

பலமாய் எதிர்க்காமல் அமைதியாக இருந்தான்.

“சுப்பாமணி மாமா என்னை உங்களுக்குப் பொண்ணு கேட்டு வந்தப்போ, நாடி எடுத்துப் பாத்தோம். உங்க அப்பா அம்மா பேருலேந்து, உங்க பேரு, நட்சத்திரம், ராசி, படிப்பு, உத்யோகம்னு மொத்த விபரமும் வந்துடுத்து நாடீல. ‘இந்த வரன்தான் உனக்கு’ன்னு… நாடி ஜோசியர் துல்லியமாச் சொன்னதும்தான் எங்கப்பா கல்யாணத்துக்கே முடிவெடுத்தார்.”

“சரி இவ்ளோ தூரம் சொல்றே…! நாடி எடுத்துப் பாத்துடறேன். இப்ப சரியா.”

அவளுக்காக ஒத்துக் கொள்வதைப் போல பாவ்லாக் காட்டி, நாடி பார்ப்பதற்கு ஒத்துக்கொண்டான் துரை.

ஒரு நாள் முன்னதாகவே சென்னையை விட்டுக் கிளம்பினான். வைத்தீஸ்வரன் கோவிலில் லாட்ஜ் எடுத்துத் தங்கினான்.

இரவே நாடி ஜோதிட நிலையத்தில் பதிவு செய்துவிட்டு வந்தான்.

மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் முதல் ஆசாமியாக ஜோதிடர் முன் உட்கார்ந்தான்.

துரைக்கும், நாடி ரீடருக்கும் நடுவில் போடப்பட்டிருந்த கணக்குப்பிள்ளை மேஜையின்மீது விரிக்கப்பட்ட மஞ்சள் வஸ்திரத்தின் மேல் ஜரிகைத் துணியால் சுற்றப்பட்ட பனை ஓலைச்சுவடிகள் இருந்தன.

ஜோதிடர் கண் மூடியபடி, “…ர்…” என முடியும், ஓலையை எழுதிய ரிஷியின் பெயரை, ஒரு மாதிரி ராகத்தோடு பல முறை உச்சரித்தார்.

கிட்டத்தட்ட முப்பது செகண்டுக்குள், பத்து முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் ரிஷியின் பெயரைச் சொன்னார்.

சொல்லிக்கொண்டே துரையில் வலது கைக் கட்டைவிரல் ரேகையை நிலைய லெட்டர் பேடில் பதிவு செய்தார். (பெண்களுக்கு இடது கைப் பெருவிரல் ரேகையைப் பதிவு செய்வார்கள்.)

பதிவு செய்த ரேகையைப் பார்த்துக்கொண்டே, அவர் சொல்லும் விஷயங்கள் கால் பங்கு என்றால் ரிஷியின் பெயரை பல்வேறு தொனியில் சொல்வதுதான் முக்கால் பங்காக இருந்தது.

“பொதுக்காண்டம் பார்த்துடுவோம்.” என்றார் ஜோதிடர்.

“பொதுவா முதல் முறை வரும்போது பொதுக்காண்டம் பாக்கறதுதான் முறையா இருக்கும்.” என்றார்.

“… … … … … … … … …”

வாய் திறந்து ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை துரை.

கைக் குவித்து ஜோசியரைக் கும்பிட்டான்.

‘எது வேணாப் பாருங்க.’ என்று அனுமதி கொடுப்பதைப் போல இருந்தது அந்தக் கைக்கூப்பு.

“நான் முதல்ல இந்த அறிமுகச் சுவடிக் கட்டுலேந்து வாசிப்பேன். உங்க விவரம் சரியா இருந்தா சரினு சொல்லுங்க. இல்லேன்னா இல்லேனு சொல்லுங்க…”

“சரி…”

தலையாட்டினான் துரை.

அவசரப்பட்டு ஆமாம்னோ இல்லைன்னோ சொல்லிடாதீங்க. நான் சொல்றதை உள் வாங்கி நல்லா யோசிச்சிப் பதில் சொல்லுங்க.”

“… … … … … … … … …”

அதற்கும் தலையாட்டினான்.

“ஆயிரத்துல ஒருத்தர்தான் இப்படி உங்களைப் போல தனியா வருவாங்க. பொதுவா இங்கே வர்றவங்க அம்மா, சம்சாரம், சகோதரிகள் இப்படி யாரையாவது அழைச்சிக்கிட்டுதான் வருவாங்க.”

“அப்படியா..?” என்றான் துரை.

“வேறெ எதுக்கும் இல்லை. பெண்கள் இந்த விஷயத்துல கூர்மையா, கவனமா இருப்பாங்க. சொன்னதைக் “கப்”னு பிடிச்சிப்பாங்க. தூண்டித் துருவி பல கேள்விகளைக் கேப்பாங்க.. பரிகாரங்கள் எதும் சொன்னா அதை ஞாபகத்துல வெச்சிக்கிட்டு தவறாமச் செய்வாங்க…”

“… … … … … … … … …”

இதற்கு ஏதும் பதில் சொல்லவில்லை துரைராமன்.

ஜோசியர் சொன்னதைக் கேட்டபிறகு, மோகனாவை அழைத்து வந்திருக்கலாமோ..?’

இப்படியொரு எண்ணம் ஒரு கனம் வந்து போனது துரைக்கு.

பேசிக்கொண்டே இருந்த நாடி ஜோதிடர் “டக்’கென்று ரிஷியின் பெயரை உரத்துக் கூவினார்.

டெஸ்க் மேலிருந்த சுவடிக் கட்டில் கை வைத்தார்.

அரைக் கண்மூடிய நிலையில், ரிஷியின் பெயரை மந்திர உச்சாடனம் போல பல முறை பல்வேறு ஏற்ற இறக்கங்களில் உச்சரித்தார்.

தலைக் குனிந்து சுவடிக் கட்டில் நெற்றி இடிக்கக், கடும் தமிழ்ப் பாக்களைக் கூவிப் பிரார்த்தனை செய்தார்.

மயக்க நிலையில் இருப்பவர்போல், அரைக் கண் திறந்த நிலையில் இருந்தார்.

பக்தியோடும், சிரத்தையோடும் சுவடிக்கட்டுக்களைச் சுற்றிக் கட்டியிருந்த வஸ்திரத்தைப் பிரித்தார்.

அதிலிருந்து ஒரு சுவடித் தொகுப்பை எடுத்தார்.

கண்ணில் ஒற்றிக்காண்டு அதை டெஸ்க் மேல் வைத்தார்.

மீண்டும் துணியைச் சுற்றிக் கட்டி, இருந்த இடத்திலேயே வைத்தார்.

கையிலெடுத்த சுவடித் தொகுப்பை எடுத்து இரண்டு கண்களிலும் மாறி மாறி பக்திச் சிரத்தையுடன் ஒற்றிக் கொண்டார்.

தியான ஸ்லோகம் போல ரிஷியின் பெயரை கண்மூடி உச்சரித்தார்.

சுவடியின் மேலும் கீழும் வைக்கப்பட்ட ஸ்கேல் போன்ற மெல்லிய கட்டைகளைச் சுற்றியிருந்த நூல் கயிற்றை அவிழ்த்தார்.

நாடி ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்தக் கயிறு அவிழும்போதே தங்கள் வாழ்க்கையில் கண்களுக்குத் தெரியாமல் கட்டப்பட்டிருக்கும் தளைகளும் அவிழ்வதாகத் தெரியும்.

தங்கள் வாழ்வில் பலப் பலத் தலைமுறைகளாக விழுந்துவிட்ட அத்தனை முடிச்சுகளும் அவிழ்ந்து நிம்மதி விரிவதாகத் தோன்றும்.

துரைராமனுக்கு அப்படி எதுவும் தெரியவில்லை.

ஒரு சாதாரணப் பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பாதுகாப்புக்காக மேலும் கீழும் வைத்திருந்த ஓலை அளவுக்கு வைக்கப்பட்ட மரச் சட்டத்தை இடது கையால் மேலே தூக்கிப் பிடித்தார்.

அதைத் தொடர்ந்து முதல் சுவடியை மேலே தூக்கினார். மரச் சட்டத்தோடு நெருக்கிக் கொண்டார்.

சுவடியின் நடுவில் இருந்த இரண்டு ஓட்டைகளில் நுழைத்துக் கட்டப்பட்ட சிகப்பு அரணாக்கொடிக் கயிற்றில், ஓலைகள் மேலேறுவதும் கீழிறங்குவதுமாக இருந்தது.

தனி ஓலையாகவோ, பல ஓலைகளைச் சேர்த்தோ, மேலே ஏற்றினார் ஜோதிடர்.

கொத்தாக ஏற்றிய ஓலைகளிலிருந்து ஒன்றையோ இரண்டையோ மீண்டும் கீழே இறக்கினார்.

கூர்ந்து பார்த்தார். உதடு பிதுக்கினார். அடுத்த ஓலை விரித்தார்.

திடீரென முகம் பிரன்னமானது நாடி ரீடருக்கு.

சந்நதம் வந்தவர் போல ரிஷியின் பெயரைச் சொல்லி கரடு முரடாகச் செய்யுள் பாடினார்.

“… … … … … … … … …”

அங்கு வருகிற எல்லா வாடிக்கையாளரைப் போல துரைக்கும் நாடி ஜோதிடர் படிப்பதில் எதுவும் புரியாமல் விழித்தான்.

“விஸ்வேஸ்வரன், மஹாதேவன், பரமேஸ்வரன்… இப்படி சிவபெருமானின் திரு நாமங்களில் ஒன்றோ உங்கள் தந்தை பெயர்…”

பழங்காலத்து சினிமா டயலாக்குகளில் பேசுவது போல செந்தமிழில் ஜோதிடர் தெளிவாகக் கேட்டார்.

“… … … … … … … … …”

துரைராமன் ‘இல்லவே இல்லை’ என்று பலமாகத் தலையசைத்தான்.

ரிஷியின் பெயர் சொல்லி அடுத்த ஓலை எடுத்தார். பார்க்கடலில் பள்ளி கொண்ட………பரந்தாமன்……’ என்று தொடங்கி… அடுத்த கரடு முரடான செய்யுளை வாசித்தார்.

“கேசவன், மாதவன், கோவிந்தன், பத்மநாபன் இப்படிப் பெருமாளின் பெயருங்களா…?”

“… … … … … … … … …”

தலையசைப்பில் “ஆம்!” என்றான் துரை.

“சில பேருக்கு முதல் ஓலையிலேயே குறிப்புக் கிடைச்சிடும் உங்களுக்கு இரண்டாவது ஓலைல கிடைச்சிருக்கு.”

வாடிக்கையாளருக்கு நம்பிக்கையைக் கூட்டும் வகையில், கூடுதல் விவரத்தையும் தந்தார் நாடி ஜோதிடர்.

ஓலைத் தொகுப்பிலிருந்த ஓலைகளை மேலும் கீழுமாக புரட்டுவதும்;

ஓரிடத்தில் நின்று கடினத் தமிழில் பாடுவது போலப் படிப்பதும்;

எளிய தமிழில் கேள்வி கேட்பதுமாய், மாறி மாறிச் செயல்பட்டார் நாடி ஜோதிடர்.

நாடி ஜோதிடத்தில் முதற்கட்டம் இது.

சுவடிகளில் மறைமுகமாகச் எழுதப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும், அதாவது, அந்த நபரின் பெயர், தாய் பெயர், தந்தை பெயர்., வயது, இராசி, அனைத்தும் ஒரு ஓலையில் சரியாகப் பொருந்தி வரும்.

எல்லாம் பொருந்திய ஓலை கிடைத்தபின் அந்த ஓலையை மட்டும் சுவடிக் கட்டிலிருந்து கழற்றி எடுத்து அதன் தொடர்ச்சியைத் தேடிக் கொண்டு வருவார்கள்.

ஜோதிடம் அடுத்த கட்டத்துக்கு நகரும்.

அடுத்து, கடந்த காலம், உற்றார் உறவினர்களோடு இருக்கும் சுமுக அசுமுக உறவுகள், தொழில், வாரிசுகள், இதுபோன்று பொதுவான குடும்பப் பின்னணியைக் கணிக்க வேறு ஒரு ஓலைக்கட்டு எடுத்துவருவார்கள்..

இதைப் பொதுக்காண்டம் என்பார்கள்.

பொதுக்காண்டத்திலேயே பொதுவாக அனைத்து விவரங்களும் வந்துவிடும்.

அதையும் தாண்டிக் குறிப்பாக ஏதேனும் பார்க்கவேண்டியிருப்பின், திருமணக் காண்டமோ, உத்யோகக் காண்டமோ, ஆயுள்பாவமோ, இப்படி வாழ்வின் எந்தப் பகுதி வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.

அதிகார பலம், காசு பணம், நேரம் எல்லாம் இருக்கிறது என்பதனால், உடனடியாக தொடர்ந்து எல்லாக் காண்டங்களையும் ஒரு காரியம் ஆயிற்று என்று பார்த்துவிட்டுப் போய்விடமுடியாது.

மற்ற மற்றக் காண்டங்களை எப்பொழுது எந்த வயதில் எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்று பொதுக் காண்டத்தில் வரும். அதை எழுதிய ரிஷி எந்த தேதியைக் குறிப்பிட்டிருக்கிறாரோ அப்போதுதான் அதைப் பார்க்க முடியும்.

நாடாளும் மன்னராயினும் சரி, பிச்சைகாரனாயிருப்பினும் சரி, ரிஷியின் முன் அனைவரும் சமம்.

ரிஷி வெறும் செய்தியை மட்டும் எழுதி வைத்திருக்கவில்லை.

இந்த நாளில் இன்னார் வந்து இந்த நாடியை எடுத்துப் படிப்பார். அவருக்கு இன்னன்ன பிரச்சனைகள் இருக்கும். இன்னன்ன பரிகாரம் செய்யவேண்டும் என்றும் தெளிவாக எழுதியிருப்பார்.

தெளிவாக என்றால் சுவடி படிப்பவருக்குத் தெளிவாகப் புரியும். நாடி ரீடர் புரிந்து கொண்டு நமக்குச் சொல்வார்.

பட்டீஸ்வரம் துர்க்கையம்மனுக்கு பால் அபிஷேகம்;

திருச்சி தாயுமானவருக்கு வாழைத்தார் சுமத்தல்;

வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் கோவிலில் பாடைகட்டிச் சுமத்தல்;

பழனியில் காவடி எடுத்தல்;

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் அபிஷேகம்;

சமயபுரம் மாரியாத்தாவிற்கு பொங்கல் வைத்தல்;

இப்படி ரிஷி எழுதிவைத்த பரிகாரங்களையும் விளக்கமாகச் சொல்வார் ஜோதிடர்.

அப்பா பெயர் சரியாக வந்தபிறகு, ஒரு சில ஓலைகள் கடந்து, அம்மாவின் பெயர் மட்டும் சரியாக வந்தது.

ஏழெட்டு ஓலைகளுக்குப்பின் அப்பா அம்மா பெயர் இரண்டுமே ஒத்து வந்து விட்டது.

மற்ற கூறுகள் சரியாகப் பொருந்தவில்லை.

முடிவாக, முதல் கட்டு ஓலைகளில் துரைக்குப் பொருத்தமாக ஓலை அமையவில்லை.

துதி பாடி ரிஷியை வேண்டினார் ஜோதிடர்.

கண் மூடித் தியானித்தார்.

அடுத்தத் தொகுப்பு எடுக்கப் பட்டுத் துணி பிரித்தார்.

கட்டு எடுத்தார்.

கை நழுவியது.

மீண்டும் கண்மூடி தியானித்தார்.

“சுவடி எடுக்க நேரம் வரவில்லை.” என்றார்.

ரிஷியின் பெயரை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, இது உகந்த நேரமல்ல என்றும் ‘ஆவணியில் ஓர் நாள் உம்மை இங்கே வரவைழைக்கும்’ என்று ரிஷி சொல்லிவிட்டதாக ஜோதிடர் அறிவித்தார்.

“வைதீஸ்வரனை தெரிசித்துவிட்டு, வருகிற ஆவணி மாசம் வாருங்கள்…” என்று வழியனுப்பினார்.

ஜோதிடம், ஜாதகம் என்பதிலெல்லாம் அதிக நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், ஓலை கிடைக்காத விஷயம் துரையின் மனதில் சற்றே கிலேசத்தை ஏற்படுத்தத்தான் செய்தது.

வைத்தீஸ்வரனை தெரிசித்துவிட்டு, இரவு ரயில் ஏறி காலை பத்து மணி சுமாருக்கு அந்தனூர் அடைந்தான் துரை.

“வா தொரை.”

“ம்…”

“மோகனா, ரஞ்சனி எல்லாரும் சௌரியமா இருக்காளா…?”

“ம்…”

“காப்பி தரட்டுமா…?”

“வேண்டாம்மா…”

“அப்ப, குளிச்சுட்டு வா. சூடாச் சாப்பிடு…”

சொல்லிவிட்டு மாட்டுக் கொட்டகைப் பக்கம் சென்றுவிட்டாள் குந்தலாம்பாள்.

இடைப்பட்ட ஒரு வாரத்தில் துரைராமனின் அனைத்துத் திட்டங்களையும் கலியன் மூலம் அரசல் புரசலாக அறிந்து வைத்திருந்தாள் அவள்.

சாப்பிடும்போது மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான் துரை.

“நான் நம்பச் சம்பாக் காணீலக் காளவாப் போடத் தீர்மானம் பண்ணியிருக்கேன்மா.”

“காளவாப் போடப்போறியா?” பொய்யாக அதிர்ந்தபடிக் கேட்டாள் குந்தலாம்பாள்.

“ஆமாம்மா… இப்போச் செங்கல்லுக்கு நல்ல டிமாண்ட் இருக்கு. நிறையச் சம்பாதிக்கலாம்…”

“வேலைய விட்டுட்டு கிராமத்தோட வந்துடறமாதிரி ப்ளான் பண்றியா தொரை…?”

“அதெல்லாம் இல்லேம்மா. மண்ணு நோண்ட, சேறு குழைக்க, கல்லறுக்க, அடுக்கிக் கொளுத்த…ன்னு எல்லாத்துக்கும் கான்ட்ராக்ட் போட்டு நடக்கப் போறது.”

“என்னதான் இருந்தாலும் ‘உடையவா இல்லாத வேலை ஒரு மொழம் கட்டை’னு சொல்வாளே தொரை.”

“நான்தான் வாரா வாரம் வரப்போறேனே. சமாளிச்சுக்குவேன்…”

“சரிதான். வயலை நோட்டி மண்ணெடுத்து காளவாய் போட்டுக் காசு சம்பாதிக்கப் போறேன்னு சொல்றே செய்யி. திரும்பவும் வயலைத் துத்தாத்தானே மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியும்…?”

“ஹ…ஹ…ஹ…” என்று ஏளனமாய் சிரித்தான் துரை.

“எதுக்கு விவசாயம் பண்ணணும்கறேன். மேலேமேலேக் கல்லு அறுத்து அறுத்தே நிறையச் சம்பாதிக்கலாமே…?”

“எதுக்கும் ஒரு அளவு இருக்கே துரை. எவ்ளோதான் நோண்டுவே நீ… எல்லாத்தையும் நோண்டின பிறகு என்னதான் செய்வே அந்த வயலை?”

“உலகம் புரியாம இருக்கியேம்மா நீ… அவனவன் வீடுகட்ட லட்சம் லட்சமா பணத்தை வெச்சிண்டு மனைக்கட்டு கிடைக்குமானு அலையறான்கள். அவாகிட்டே வித்துட்டா, அவன் துத்துட்டு, வீடு கட்டிக்கப் போறான்.”

அலட்சியமாகச் சொன்னான் துரை. அதிர்ந்தாள் குந்தலாம்பாள்.

“வயித்துப் பசி தீர்க்கத்தான் நெல்லு கொடுக்கறோம். நம்ம வீட்டுக்கு வைக்கற நெல்லு சுமாரா இருந்தாலும் கொடுக்கற நெல்லை ஒரு குறையில்லாம, ஒரு முறைக்கு நாலு முறை தூத்தி, விதை நெல் மாதிரி, பவுன் மாதிரி கொடுக்கணும்…!” என்பார் மாதய்யா.

மொத்த அறுப்புக் கூலியையும் போரடியின் போது அளந்து தரும் மிராசுகளுக்கு நடுவில் மாதய்யா மிகவும் உயர்வானவர்.

போரடியன்று கூடப் போரடி நெல்லைக் கூலியாகத் தராமல் முதல் கோப்பில் கட்டடித்தப் பவுன் போன்ற நெல்லைக் கொண்டுவந்து போரடிக் கூலியாகத் தருவார் மாதய்யா.

அப்படி ஒரு பரோபகாரி.

அடுத்தவருக்கு நல்லது மட்டுமே செய்யவேண்டும் என்று நினைப்பவர்.

‘இப்படிப்பட்ட பரோபகாரியான மாதய்யாவின் மகன் இப்படி அவருக்கு நேர்மாறா இருக்கானே. சுயநலமே உருவமா இருக்கானே…? எவ்வளவு கசப்பான நாக்கு அவனுக்கு. என்னமாய்ப் பேசறான் அவன். குரூபி. குணமே இல்லாதவன். கோடரிக் காம்பாய் இப்படி வந்து உதிச்சிருக்கிறானே…!’

இறை நம்பிக்கையே இல்லாத இரணியனுக்கு மகனாகப் பிறந்த பிரகலாதன் பற்றிய நினைவு வந்து போனது குந்தலாம்பாளுக்கு.

மகா பக்திமானான நாராயண தீர்த்தர் ஏழெட்டு வருஷம் வயித்து வலியால துடிச்சாரே…

‘இது இந்தப் பிறவியோட விளைவு இல்லே. ஊழ்வினை. எந்தப் பிறவியிலோச் செய்த பாவத்தின் விளைவு…’

என்றெல்லாம் தன்னையேத் தேற்றிக்கொண்டாள்.

ஆயாசமாக இருந்தது குந்தலாம்பாளுக்கு.

“தொரை…”

“சொல்லும்மா…”

“நான் சொல்றேனேனு வருத்தப்படாதே. நம்ப மட்டும் நல்லா இருந்தாப் போதும்னு உங்க தாத்தா யோசிச்சிருந்தாருன்னா, அவர் காலத்துலயே இந்த நிலங்களை எல்லாம் வித்திருப்பாரே. அவர் அப்படிப் பண்ணாம உங்க அப்பாவுக்கு விட்டுப் போனார். உங்க அப்பா விட்டதை நீ உன் குழந்தைக்கு விட்டுப் போனா அதுதாண்டா சிலாக்கியம்.”

“எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு. அவ வந்து இந்த கிராமத்துல உக்காந்து விவசாயம் பாக்கப் போறாளாக்கும்…”

“காசு பணம் எவ்ளோ இருந்தாலும் பசிக்கறபோதுக் காசுப் பணத்தைக் கடிச்சித் தின்ன முடியாது துரை. சோறுதான் திங்கணும். ஞாபகம் வெச்சிக்கோ.”

இதற்குப் பதில் சொல்ல முடியாதவன் அல்ல துரைராமன். ஏதாவது பதில் சொன்னால் அதிலிருந்து வேறு ஒரு கேள்வி முளைக்கும். உணர்ச்சியின் வசமாகிப் பேசத் துவங்கிவிட்டால் சமயத்தில் பேச்சு ஏடாகூடமாய்த் திரும்பிவிடவும் வாய்ப்பு உண்டு.

இப்படிப்பட்ட நேரங்களில் சாபங்களும், வைராக்யங்களும் பரஸ்பரம் வெடித்துச் சிதறும்.

‘ஆன்ட்டி கிளைமாக்ஸ்’ உருவாகிவிட்டால் காரியம் கெட்டுவிடும்.

இதையெல்லாம் யோசித்தான் துரை

“… … … … … … … … …”

அமைதியாக அம்மாவின் பேச்சுக்குக் காது கொடுத்தான்.

“முடிவாச் சொல்றேன். நல்லாப் பொன் விளையற பூமிய வீணடிக்க என் மனசு ஒப்பலை. நீ ஆசைப்படறே. யோசிச்சுச் சொல்றேன்.” என்றாள் குந்தலாம்பாள்.

“… … … … … … … … …”

‘அம்மா யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். நிச்சயமாகப் பழம்தான்’

எண்ணியது துரையின் மனசு.

குந்தலாம்பாளேத் தொடர்ந்தாள்

“தொரை, கலியனைப் பக்கத்துல வெச்சிக்கோ. அவன் ஒத்தாசைப் பண்ணுவான்.”

கலியன் என்ற வார்த்தை வந்ததும் கடுப்பானான் துரை.

“எதுக்குக் கலியனோட ஒத்தாசை. அவன் என்ன பெரியக் கொம்போ…?” சீறினான்.

“… … … … … … … … …”

“காசை விட்டெறிஞ்சா நூறு பேர் வருவா ஒத்தாசைக்கு.

“… … … … … … … … …”

இப்போ சொல்றேன் கேட்டுக்கோ. என்னோட பிசினஸ்ல கலியனோட தலையீடு அறவேக் கூடாது. சொல்லிட்டேன்.” அவன் அறிவிப்பில் ஆத்திரம் வெளிப்பட்டது

“… … … … … … … … …”

“கலியனை வைக்கற இடத்துல வைக்காம அனாவசியமா அவனைப் பெரிய மனிசனாக்கறதே நீதாம்மா.”

குற்றஞ்சாட்டினான்.

குந்தலாம்பாளுக்கு மனசு வலித்தது.

‘நல்லது கெட்டதுத் தெரியாமல் இப்படிப் பேசுகிறானே…’

மனசு வேதனைப் பட்டாள்.

தலையில் புல்லுக்கட்டுடன் கலியன் வந்தான்.

கலியன் கண்களில் படாமல் ‘விருட்’டென உள்ளே சென்றுவிட்டான் துரைராமன்.

கோதாவரிப் பசுவையும் தானம் செய்தாகிவிட்டது. இப்போது வீரன் காளை மட்டும்தான் வீட்டில்.

இருபது இருபத்தைந்து உருப்படிகள் கட்டிக் கிடந்த மாட்டுத் தொழுவத்தில், இப்போது வீரன் மட்டுமே இருந்தான்.

தொழுவமே ‘ஹோ…’ என்றிருந்தது.

புல்லுக்கட்டை பிரித்து உதறினான்.

ஒரு திரை அள்ளி வீரனுக்கு முன் போட்டான்.

சாணத்தை, குளம்பில் மிதிபடாமல் ஓரமாகத் தள்ளிவிட்டான்.

“கலியா…” குந்தலாம்பாளின் குரலிலும் முகத்திலும் சோர்வு அப்பட்டமாய்த் தெரிந்தது.

“சொல்லுங்க அய்யாம்மா…”

“நாத்துச் சாத்தி வளந்து நிக்கற தென்னம்பிள்ளைங்களை இன்னிக்குப் பேத்து நட்டுரலாமா கலியா…?”

“அதுக்கென்னம்மா, நட்டுட்டாப் போச்சு…”

“தென்னையப் பெத்தா இளநீருனு’ சொல்றதுதான் கலியா நெசம்.”

வீட்டில் ஏதோ மனஸ்தாபம் என்பதை உணர்ந்தான் கலியன்.

“ஏம்மா விரக்தியாப் பேசுறீங்க…?”

“வேற எப்படிப் பேச கலியா…!”

“ சின்ன முதலாளி ஏதாவது குத்தலாப் பேசிட்டாருங்களா…? அதையெல்லாம் விட்டுத்தள்ளுங்க பெத்த தாயிதானேனு உரிமைல பேசியிருப்பாரு. மனசுல போட்டுக்காதீங்க தாயி.”

“நீங்க காளவாப் போட வேண்டாம்னு மறுத்துட்டீங்களா அய்யாம்மா…?”

“நான் வேண்டாம்னா விட்ருவானாக்கும். காளவாப்போடறேன்னு கைச் சுட்டுக்கிட்டு நின்னுடுவானோனு பெத்த வயிறு துடிக்குது கலியா. யோசிச்சுச் சொல்றதா சொல்லியிருக்கேன்.”

“ரொம்ப யோசிக்காதீங்கம்மா. சின்னய்யா இஸ்டத்துக்கு விடுங்க. இந்த மட்டும் கிராமத்து மண்ணு மதிப்பு தெரிஞ்சி, இந்தப் பக்கம் திரும்பறாங்களே அதுவேப் போதும். விடுங்க இஷ்டத்துக்கு என்ன வேணாச் செய்யட்டும்.”

“கையைச் சுட்டுக்கறதோ, காசு நஷ்டமோப் பெரிசு இல்லே கலியா. நம்ம குடும்பத்துக்குக் காளவா ராசி இல்லாதப்போ, இவன் உசுருக்கு ஏதும் ஆபத்து வந்துரப்படாதேனு கவலையா இருக்கு.”

“ஆத்தா அந்த அளவுக்கெல்லாம் சோதிக்க மாட்டாம்மா. எல்லையம்மா மேல பாரத்தைப் போட்டுட்டு, உத்தரவுக் கொடுங்கம்மா. ஜமாய்க்கட்டும்.”

கலியனிடம் பேசியதில் ஒரு தெளிவு கிடைத்தது குந்தலாம்பாளுக்கு.

“என்னம்மா யோசிச்சியா…?”

“யோசிச்சேன். செய்யி. செய்யறதை சிறப்பாச் செய்யி. லாப நட்டத்தைப் பத்திக் கவலைப்படாதே. விரலுக்குத் தக்கபடி வீங்கணும். அதை ஞாபகம் வெச்சிக்கோ.”

அம்மா இவ்வளவு சீக்கிரம் அனுமதிப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை துரை. அகமகிழ்ந்தான்.

“துரை, எனக்கும் வர வரத் தள்ளலை. இருந்தாலும் அப்பப்போப் போய் பாத்துக்கறேன். கலியனண்ட சொன்னாக் கல்லறுக்க ஆள் ஏற்பாடு பண்ணித் தருவான்.

“அதெல்லாம் வேண்டாம்மா. என் போக்குக்கு விடு நான் பாத்துக்கறேன்.”

“சரி. ‘ஈஸ்வரோ ரக்ஷது’

“வேலை தொடங்ச்சே இவ்வளவு பணம் கைல இருக்கணும்.”

கிட்டாவய்யா முன்பேச் சொல்லியிருந்தார்.

சொன்னதற்கு மேலேயே பணம் புரட்டி வைத்துவிட்டான் துரை.

அடுத்தடுத்துத் தேவையானப் பணத் தேவைகளுக்கும் சொல்லி வைத்துவிட்டான்.

“கல் அறுப்புக் கோஷ்டியை நம்மாத்துக்கு வரச் சொல்லு தொரை. என்னையும் வெச்சிண்டுப் பேசு..” என்றாள் குந்தலாம்பாள்.

காதில் வாங்கிக்கொள்ளவில்லை துரைராமன்.

கிட்டாவய்யாவின் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து கல் அறுப்பு மேஸ்திரியோடுப் பேசி ஒப்பந்தம் போட்டான்.

கிட்டாவய்யா நல்ல நேரம் பார்த்துச் சொன்னார்.

மேஸ்திரி அனுப்பிய இரண்டு ஆட்களும் சம்பாக் காணியின் ஈசானியத்தில் ஏற்கெனவே முடிவு செய்யபட்ட இடத்தை புல்லெல்லாம் செத்தித் தயாராக வைத்திருந்தனர்.

மேஸ்திரி துரைராமனோடு வந்ததும்

தரையில் வெட்டி வைத்த பள்ளத்தில் , ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, மண்வெட்டியால் வெட்டிப் பிரட்டிப் பதமானதும், கால்களால் மிதித்துவிட்டுப் பிறகுக் கைகளால் எடுத்துப் பிசைந்தான் ஒருவன்.

மற்றவன் கல் அறுக்கும் ஆசுக்கட்டையை அலம்பி அருகில் வைத்தான்.

கல், கட்டி நீக்கிப் பதமாய்ப் பிசைந்த மண்ணை உருட்டித் துரைராமன் கையில் கொடுத்தான்.

அவன் வாங்கி ஆசுக் கட்டைக்குள் போட்டான்.

மேஸ்திரி, மட்டப் பலகையால் ஆசுக்கட்டையில் குவிந்த மண்ணை வழித்தெடுத்தான்.

சேற்றைப் பச்சைக் கல்லாக உறுமாற்றிய ஆசுச் சட்டத்தை லாகவமாக வெளியே எடுத்தான் ஒரு தொழிலாளி.

அந்த இடத்தில் சூடம் காட்டினான் மேஸ்திரி.

கொளுத்திக் காட்டிய சூட ஜோதியை, கரன்ஸிக் கனவுகளுடன் கைக் கூப்பித் தொழுதான் துரைராமன்.

“கலியனை வண்டி கட்டச் சொல்லட்டுமா தொரை.”

“வேண்டாம்மா. நான் பஸ்ல போயிடறேன்.”

“ஏண்டா…?”

“வேண்டான்னா விடேன்…”

அதற்கு மேல் வாய் வளர்க்கவில்லை குந்தலாம்பாள்.

அவன் போக்கில் விட்டுவிட்டாள்.

நாக்கு அனிச்சையாகப் புரண்டு, ஏதேனும் தேவையற்றதை உளரிக் கொட்டி, வருத்தத்தை உண்டாக்கிவிடுமோ என்கிற பயம் இருவருக்குமே இருந்ததால் இறுக்கமான ஒரு அமைதி அங்கே நிலவியது.

ஒரு நீளமான ‘அக்கவுண்ட்-நோட்’டில் எழுதிக் கொண்டும் , கூட்டிக் கழித்து வகுத்துப் பெருக்கிக்கொண்டும் உட்கார்ந்திருந்தான் துரை.

மொழி தெரியாத ஊருக்கு மாற்றம் செய்யப்பட்ட ஆபீசர் அங்கு சென்ற முதல் நாளில், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல ‘ஙே…’ என்று விழித்துக் கொண்டிருப்பாரல்லவா அப்படித்தான் இருந்தது துரையின் முகம்.

“அம்மா… டிபன் ரெடியா…”

ரெடியா இருக்கு வந்துச் சாப்பிடு…”

இயந்தரத்தனமாகச் சாப்பிட்டான். புறப்பட ஆயத்தமானான்.

புறப்படும் நேரத்தில் ஒரு கையடக்கமானப் பையைக் கொண்டுவந்து வைத்தாள் குந்தலாம்பாள்.

“… … … … … … … … …”

“இதுல என்ன?”

கேட்டதுத் துரையின் பார்வை.

“மோகனாவுக்குப் பிடிக்குமே’ன்னு மாகாளி ஊறுகாயும், ரஞ்சனிக்கு மைசூர் பாகும் இருக்கு. ஆத்து எலுமிச்சம்பழம் நாலு, ஒரு வாழைப்பூ வெச்சிருக்கேன். உனக்கு உசிலின்னா பிடிக்குமே..”

துரை பதில் எதுவும் சொல்லவில்லை.

“வர்ற சனிக்கிழமை வரயோன்னோ…?”

“ம்”

ஒற்றை எழுத்தில் பதில் சொன்னான்.

அவனுடையப் பையோடு, குந்தலாம்பாள் கொடுத்த பையையும் எடுத்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடினான் துரைராமன்.

வீரனை காவிரியாற்றில் வைத்து குளிரக் குளிப்பாட்டினான் கலியன்.

வீரனைத் தொழுவத்தில் கட்டிக்கொண்டிருக்கும்போது காப்பி கலந்து வந்து, கலியனுக்கு வைத்தாள் குந்தலாம்பாள்.

“கலியா… நேத்து காளவாய்க்கு முகூர்த்தம் பண்ணியிருக்கான் துரை.”

“தெரியும்மா…! இன்னிக்குக் கருக்கல்லயேக் காணீல வேல நடக்குது. காவிரியாத்துக்குப் போயி வரும்போதேப் பாத்தேன்.”

“கலியா ரொம்ப மனசு வருத்தமா இருக்கு…”

“எதுக்கு வருத்தம்…?”

“காளவாய்ப் போட முகூர்த்தம் பண்ணப்போறேன். வாம்மானு’ ஒரு வார்த்தைப் பெத்தத் தாயைக் கூப்பிடலைப் பாத்தியா…”

சொன்னபோது குந்தலாம்பாளின் கண்கள் கலங்கின.

கலியன் ஏதும் பதில் சொல்லவில்லை.

“ஏன் கலியா ஒண்ணும் பேசாம நிக்கறே…?”

“என்னத்தம்மாச் சொல்ல. போறப் போக்கு ஒண்ணும் மனசுக்குத் திருப்தியாப் படலைம்மா.!” கலியன் தலை இறங்கிற்று.

குனிந்த தலை நிமிராமலே சொன்னான்.

“அய்யாம்மா. சின்னய்யா, கிட்டாவய்யா மூலம் கல்லறுப்புக்குப் பிடிச்சிருக்கற மேஸ்திரி ரொம்ப ரொம்ப மோசமான பய’ம்மா…”

“… … … … … … … … …”

“ஆமாம்மா. அவன் பூந்த இடம் இது வரைக்கும் விடிஞ்சதில்லே. அவன் போட்டுக் கொடுத்து இதுவரைக்கும் யாரும் உருப்படியா கல்லு சுட்டு எடுத்ததில்லே. அதுதான் நிஜம்.

“என்ன கலியா இப்படிச் சொல்றே.?”

அதிர்ச்சியில் உரைந்தாள் குந்தலாம்பாள்.

“ஆமாம்மா. ஆயிரம் கல்லு அறுத்துப்புட்டு ஐயாயிரம்பான்;

“ஆளு பக்கத்துல நின்னு காவ காக்கும்போதே கண்ணுல மண் தூவிட்டு, வண்டி வண்டியா மண்ணு திருடி விப்பான்;

இப்ப கேக்கவே நாதியில்லியா, லாரி லாரியா லோடு போட்டுத் திருடுவான்;

அடுப்புக் கட்டற மாதிரி கூடு விட்டுக் ‘கட்டாயம்’ அடுக்குவான்;

பேர் பாதி அறுப்பு முடிக்கும் முன்னே, அஹாஸுஹாப் பண்ணி முழுப்பணத்தையும் கறந்துடுவான்;

சட்டம் பேசுவான்;

ஊர்க்கூட்டுவான்;

நஷ்டஈடு கேப்பான்;

ஆளைத் தேடிப் போனா ஆட்டங்காட்டுவான்;

இன்னதுதான்னு இல்லே எதுவும் செய்வான்;

அவனுக்குன்னு எந்த நியாயமும் கிடையாது;

அசிங்கமானவன். அருவருப்பானவன் அவன்;

இதெல்லாம் சின்னய்யாவுக்குத் தாங்காதுங்க. ரொம்ப அவஸ்தைப்படப்போறாரு.”

கலியன் சொன்ன விவரங்களைக் கேட்டதும் குந்தலாம்பாளின் தலை ஒடிந்து தொங்கியது.

“அய்யாம்மா…”

குனிந்த தலை நிமிர்ந்தாள்.

கண்களில் பொங்கியது கண்ணீர்.

குந்தலாம்பாளின் பார்வை கலியன் சொல்லப் போகும் ஆறுதல் வார்த்தைக்காகக் காத்திருந்தது.

அம்மா நான் சொல்றேனேனு என்னைத் தப்பா நினைக்காதீங்கம்மா. நான் உங்க குடும்பத்துக்கு சின்னக் கெடுதல் கூட நினைக்க மாட்டேம்மா.”

“உன்னைத் தெரியும் கலியா. சொல்ல வந்ததைச் சொல்லு.?”

“சின்னய்யாவுக்கு இந்த அடி தேவை’னு படுதும்மா.”

“… … … … … … … … …”

“என்னடா நம்ம மவனைப் பாத்து இப்படிச் சொல்றானே கலியன்னு நினைச்சிடாதீங்கம்மா..;

நல்லது-கெட்டது , நல்லவங்க-கெட்டவங்க யாருன்னு புரிஞ்சிக்கணும்னா அடிபடாம வராதும்மா.”

“அவங்கிட்டே நிலவரத்தைச் சொல்லிப் பாக்கலாமா கலியா…”

பெற்ற மனம் பித்தாய் யோசித்தது.

“அய்யாம்மா. நீங்க எடுத்துச் சொன்னாலும் சின்னய்யா நம்ப மாட்டாரு. கிட்டாவய்யாவையேத் தெய்வமா நம்புற சின்னய்யாகிட்டே தெய்வமே வந்துச் சொன்னாலும் எடுபடாதும்மா.”

“… … … … … … … … …”

“அய்யாம்மா. உங்களை முகூர்த்தத்துக்குக் கூப்பிடாம இருந்ததுக்காக சந்தோஷப்படுங்க. பின்னால நட்டமாகும்போது முகூர்த்தம் பண்ண நீ வந்ததாலத்தான் எல்லா நட்டமும்னு சொன்னாலும் சொல்லும்.”

கலியன் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தது குந்தலாம்பாளுக்கு.

காளாவாய்க்கு முகூர்த்தம் போட்ட செய்தியை, ஃபைனான்சியர் வரதராஜனிடம் சொன்னான் துரை.

“அடுத்த வாரம் நானும் உன்னோட வரேன் மிஸ்டர் துரைராமன். எனக்கும் சேத்து டிக்கெட் ரிசர்வ் பண்ணிடுங்க.” என்றார் ஃபைனான்சியர்.

இருவரும் பஸ் இறங்கி வரும்போதே காளவாயைச் சென்று பார்த்தனர்.

ஃபைனான்ஸியர் ஒரு பச்சைக் கல்லை கையிலெடுத்துப் பார்த்து ‘சூப்பர் கல்லு சார்’ என்று வியந்தார்.

“ஏன் இன்னிக்கு வேலை நடக்கலையா…?”

“அதான் தெரியலை எனக்கும். போய்தான் கேட்கணும்..” என்றான் துரைராமன்.

ஓ கே மிஸ்டர் துரை; நான் இப்படியேத் திரும்பறேன்.”

“வீட்டுக்கு வந்துட்டு…” என்று தொடங்கிய துரையைப் பேசவிடவில்லை வரதராஜன்.

“உறையூர் பாண்டமங்கலம் அக்ரஹாரத்துல என் கசின் இருக்கான். அவனைப் பாத்துட்டு ராத்திரி கிளம்பி மெட்ராஸ் போறேன். அடுத்தபடியே எப்போ பணம் வேணுமோ பணம் அப்ப வாங்கிக்கலாம்.”

துரைராமன் எவ்வளவு வற்புறுத்திக் கூப்பிட்டும் வீட்டுக்கு வரவில்லை ஃபைனான்சியர்.

துரையே ஃபைனான்ஸியரோடு காவிரிக்கரை பஸ் நிறுத்தத்தில் அரை மணி நேரம் நின்று, அவரை பஸ் ஏற்றிவிட்டு வந்தான்.

திரும்புகாலில் காளவாய்க் காணிக்கு மீண்டும் சென்றான்.

ஒரு வாரம் முழுக்க வேலை நடந்ததாகத் தெரியவில்லை.

கல்லின் காய்ச்சலைப் பார்த்தபோது நான்கைந்து நாட்களாகவே வேலை எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

வெட்டப்பட்ட பள்ளத்திற்கும், குவிந்துகிடந்த மண்ணுக்கும், அறுக்கப்பட்ட கல்லுக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இருந்தது.

எப்படி இதை அணுகுவது என்று தெரியவில்லை.

‘மீசையில் மண் ஒட்டாமல் இருப்பது எப்படி?’ என்று யோசித்தானேயொழி, ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’ என்று அதிலிருந்து வெளியே வரத் தெரியவில்லை.

வரும் துணிவும் இல்லை.

துரை நேரடியாக தன் வீட்டுக்குச் செல்லவில்லை.

கிட்டாவய்யா வீட்டுக்குச் சென்றான்.

வழக்கமான கும்பலுடன் உட்கார்ந்து சுவாரசியமாக ரம்மி விளையாடிக்கொண்டிருந்தார் கிட்டாவய்யா.

“மாமா…” என்று அழைத்தான் துரை.

குரலைப் புரிந்துகொண்டு, “துரையா.. வா…” என்றார் திரும்பிப் பாராமலே.

“… … … … … … … … …”

எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் தவித்தான் துரை.

“தொரை. ஒக்கார்றியா. ஒரு கை ரம்மி ஆட்ரயா…?” என்று புகையிலைச் சாறு நெஞ்சில் சிந்திவிடாமல் வாயை அன்னாந்து கொண்டு அழைப்பு விடுத்தார் கிட்டா.

மற்றவர்கள் அனைவரும் சீட்டை விசிறியாய் பிடித்துக்கொண்டும், ஆடுதன் தேடிக்கொண்டும், அடுத்து விடும் சீட்டை ஏற்றிச் செருகியபடியும், கவிழ்ந்த சீட்டை நான்கு விரல்களால் தடவி எடுத்தபடியுமாய் நக்கலாகவும் நய்யாண்டியாகவும் சிரித்தார்கள்.

சீட்டாடி வெட்டிப்பொழுது போக்கும் கூட்டம் ‘மெல்வதற்குப் புகையிலை ஆகிவிட்டோமே’ என்று ஆதங்கமாக இருந்தது துரைராமனுக்கு.

‘ஆத்திரப்பட்டால் காரியம் கெட்டுவிடும்..’ என்பதை மனதில் நிறுத்தினான் துரை.

“மாமா… உங்ககிட்டேப் பேசணும்.” என்றான்.

“இங்கேயேச் சொல்லு…” பரவாயில்லை என்றார் கிட்டா. இப்போதும் அவர் திரும்பிப் பார்க்கவில்லை.

முதல் வாரம் இருந்த துரையாய் இரண்டாம் வாரம் இல்லை.

வாராவாரம் துரை தேய்ந்துகொண்டே போனான்.

கிட்டாவய்யாவின் நடவடிக்கைகள் துரைக்குப் பேரதிர்ச்சியைத் தந்தன.

பழைய அதிகாரியிடம் தற்போது வேலை பார்க்கும் குமாஸ்தா பேசுவது போல இருந்தது கிட்டாவின் பேச்சு பல நேரங்களில்.

‘அதற்குப் பணம் – இதற்குக் காசு’ என்று கிட்டாவும், மேஸ்திரியும் மாறி மாறிக் கேட்பதும்;.

“இதோட விட்டுடறேன் வேற ஆளுங்கள வெச்சி மீதியப் பாத்துக்கங்க…”

என்று விரட்டுவதையும் எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் திணறினான் துரை.

அனேகமாக பேசிய தொகையில் தொண்ணுறு சதவிகிதம் பணம் பட்டுவாடா ஆகிவிட்டது.

ஆபீசில் அதிகம் விடுப்பெடுத்ததால் ஏற்பட்ட வேலைப் பளு.

ஆபீஸ் வேலையைச் சரிவரச் செய்ய முடியாததால் வாங்கிய கெட்ட பெயர்.

பைனான்சியரிடம் வாங்கிய பணத்திற்கு ஏறும் வட்டி

இப்படி எல்லாம் அவனைச் சுற்றி நின்று உலுக்கியது.

‘எல்லாம் இப்படியேப் போயிடாது. நாளாவட்டத்தில் எல்லாம் சரிப்பட்டுடும்’ என்று நினைத்த துரைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“இந்தவாரம் போயிட்டு வாங்க. அடுத்த வாரத்துலேந்து சனி ஞாயிறும் வேலை பாத்து குவிஞ்சி கிடக்கற பெண்டிங் எல்லாத்தையும் முடிங்க துரை…”

கடுப்படித்துவிட்டார் கம்பெனி ஜி எம்.

அவன் ஆசை, பிடிவாதம் எல்லாம் விலவிலத்துவிட்டது. மொத்தமாக நிலைகுலைந்து போனான் துரைராமன்.

அந்த வாரமும் வந்து கிட்டாவய்யாவிடம் அவமானப்பட்டு, மேஸ்திரியிடம் பணம் நஷ்டப்பட்டு, மனசு குழைந்து, சரீரம் சரிந்து, துவண்டு, நம்பிகையற்றுச் சென்னை திரும்பினான் துரை.

பெற்ற மனம் மருகினாலும், கலியன் சொன்னதைப்போல, ‘முழுவதும் பட்டுத் திரும்பட்டும்…’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு வரப்போகும் நல்ல காலத்திற்காகக் காத்திருந்தாள் குந்தலாம்பாள்.

– தொடரும்…

விகடன் மின் இதழான மை விகடன் இதழில், 02.05.2022 அன்று கலியன் மதவு என்ற சமூக நாவல் தொடங்கித் தொடர்ந்து 28.01.2023 ல் அதை நிறைவு செய்யும் வரை, அதைச் சிறப்பாக வெளியிட்டு ஊக்குவித்த ஆனந்த விகடன் ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – ஜூனியர் தேஜ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *