கருவேலங்காடுகள் தாண்டி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 11, 2023
பார்வையிட்டோர்: 3,462 
 
 

பங்குனி வெயில் உச்சியைத் தீய்க்கத் தொடங்கியது.

பனை ஓலை விசிறியை வேகமாக வீசிக்கொண்டதில் கிடைத்த சுகம் பூராவையும் பிடரி அனுபவிக்கத்தக்கதாக தலையை இங்கு மங்கும் புரட்டிக்கொண்டார்.

இத்தனைக்கும் இலந்தை மரத்தின் கீழ்தான் வாசம். குடை நிழலாய்க் குளிர் பரப்பியிருந்த இலந்தை மரத்தை, மேகமாய்ச் சுற்றிப் பிணைந்து கிடந்த பீர்க்கஞ்செடி…… ஒரு சொட்டு வெப்பமும் கீழே விழாமல் தாங்கிக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் வெக்கை தாங்க முடியவில்லை.

இன்றைக்குத் தங்கச்சி வருவாளோ?……

செம்மண் புழுதி தாண்டி நேர்கோடாய் நீண்டு செல்லும் வண்டில் பாதையை மறைத்து நிற்கும் கருவேலங்காடு…… அதையும் தாண்டி பத்து மைலுக்கப்பால் தங்கச்சி வாழ்க்கைப்பட்டிருக்கிறாள்.

கிணற்றடியைச்சுற்றி நீளம் நீளமாய் வளர்ந்து நிற்கும் கமுகம் பாளைமேல் அமர்ந்து காகம் காலையில் இருந்து கரைந்து கொண்டே இருக்கின்றது. தங்கச்சியோடு மச்சானும் வருவாரோ?…… குழந்தை?….. தோளில் சாய்ந்து முதுகைத் தடவிக் கொஞ்சுகிறபோது மாமனின் பாசத்தூதில் மனமகிழ்ந்து – எச்சிலாய் வழிந்து சருமம் சிலிர்க்கின்றபோது – அந்த சுகானுபவம் ஒன்றுக்காகவே, மச்சான்

செய்கின்ற அழிச்சாட்டியங்களை மறந்து போகலாம்.

கைகால் அலம்பியாயிற்று.

கரீமா, சோற்றை வாழை இலையில் ஆறப்போட்டு, இலந்தை மரத்தடியில் தென்னம் பண்ணாங்கில் பரப்பி வைக்கிறாள். இப்படிக் காற்றோட்டமாய் இருந்து சாப்பிட்டால்தான் அவருக்கு ஆயிற்று…… பூனைக்கும் காகங்களுக்கும் சட்ட உரிமைபோல சரி பாதியை அள்ளி வைத்துத் தானும் உண்ணும்போதும் பார்வை மட்டும் செம்மண் பாதையில் குவிந்து நீளும்…. தங்கச்சியும் அருகில் இருந்தால் எப்படி இருக்கும்?… மணி ஆட்டுக்குட்டி சிறிய நாக்கால் முதுகை நக்கி ஓடுகின்றது.

இரண்டு மாதங்களுக்கு முன் கரீமாவுக்குப் புறா வளர்க்கும் ஆசை வந்தது, அதுவும் மணிப்புறா. மருட்சியும் அழகும் கொண்ட கண்களும்…. கேவிக்கேவி நடக்கின்ற நடையுமாக…… அவைக்குப் பாதுகாப்பான கூடு தேவைப்பட்டது. கிணற்றடியைத் தாண்டி பன்னீர் மரங்கள் பூவாசம் காட்டி நிற்கும் நிலத்துண்டில் உயரமாக கூடு அமைக்கப்பட்டது.

தேவன் ஐயாதான் ஆணும் பெண்ணுமாக ஒருசோடி மணிப்புறாக்களை அல்லிக் காட்டில் இருந்து கொண்டு வந்தார்.

“கரீமா தாத்தாவுக்குப் புதிசு புதிசாவெல்லாம் ஆசை வந்திருக்கு”

“அப்படி என்டில்லை. இங்கினேக்க ஆடு, மாடு, பூனை எல்லாம் இருக்குதான். அவர்ட தங்கச்சி ஆரிபாட புள்ள வந்தா வெளையாடத் தோதா இருக்குமென்டு பாத்தன்…… அவ்வளவுதான்”

தேவன் ஒன்றும் பேசவில்லை . மகளின் நினைவில் மூழ்கி விட்டாரா? கண்கள் கலங்கத் தொடங்கிவிட்டன.

“வதனியை நினைச்சுக் கொண்டீங்கள் போல”

தேவனுக்குக் குரல் உடைந்து வார்த்தை கலங்கிற்று. “நானும் இங்க வந்து இரு புள்ள என்டு கேக்காத நாளில்ல…. நீங்க என்ன அசலவரே?…. பக்கத்து வீடு… நாம வளவுக்கு வேலிகூடப் போடறதில்ல…. ஆரிபாவும் வதனியும் என்ட இரு புள்ளைகள் மாதிரி. வருசப் பொறப்புக்கு புள்ளையள் இரண்டும் என்ட மடியில தான் இருந்து சாப்பிடத் தொடங்கும். ஒருத்திட உடுப்பெ இன்னொன்டு மாத்திப் போட்டுக் கொண்டா ஆளையே மதிக்கேலாது…. விளாட்டு மாமரத்தில் ஏறி வதனி கால் உடைஞ்சு ஆசுப்பத்திரியில் படுத்தப்போ, தானும் அவளோடதான் வாட்டுல படுத்துக் கொள்வன் என்டு ஆரிபா அடம் பிடிச்சது இன்னைக்கும் எனக்கு கண்ணுக்குள்ள இருக்கு. அதுகள் ரெண்டும் ஆளுக்கொரு தெசையில் இப்படி கஸ்ரப்பட்டுக் கெடக்குறதெ நெனைச்சா….அதான் கண் கலங்கிடுச்சி……”

தேவன் ஐயா மூதூருக்கு எப்ப வந்து சேர்ந்தார் என்பது யாருக்குமே ஞாபகம் இல்லை. கொட்டியாரக் குடாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி இராட்சத வத்தைகள் வைக்கோலும் புது நெல்லுமாக ஏற்றி இறக்கத் தொடங்கியபோது இருந்து இங்குதான் இருக்கிறார். ஒண்டுக்குள் ஒண்டு பேதமில்லை…. அப்பெல்லாம் சொண்டான் காடாய்க் கிடந்த காணியை பங்குபோட்டு ஐயாவும் ஆதமும் வாங்கிக் கொண்ட போது அவருக்குக் கல்யாணம்கூட ஆகவில்லை. கல்யாணம் ஆகி புது மனைவி வந்தபோதும் தொழிலுக்கு தோதாக அவர் இங்கேயே இருந்துகொண்டார். செல்வச் சந்நிதியில் கொடியேறும் போது மனைவியையும் அழைத்துக்கொண்டு ஊருக்குப் போய் வருவார். இருந்து போட்டு வைகாசியில் ஊரில் ஏதும் விசேசமென்றால் வத்தையை முன்னதாக அனுப்பிவிட்டு போய் வருவார்….

கொட்டியாரத்தில் இருந்து புதுநெல், வைக்கோல், களிமண் பாண்டம் என்று வத்தை வத்தையாக விளைபொருட்களெல்லாம் ஏற்றி பருத்தித்துறை போய் வருவார். ஒருமுறை போய் வந்தார் என்றால் ஆதமின் வீடு முழுக்க அம்பலவி மாம்பழமும் புழுக்கொடியலுமாக நிறைந்து விடும்…… ஆளுயரத்திற்கு நிமிர்ந்திருக்கும் கதலி வாழைக்குலைகளை கொள்ளை மலிவாக விற்றுத் தீர்ப்பார்.

அதெல்லாம் காலம் முடிந்துவிட்டது. இப்போது வத்தைப் போக்குவரத்தும் கிடையாது. போன கச்சானுக்கு முதல் கச்சான் தொடங்கியபோது, இருமல் உரத்து மனைவியும் இறந்து போனாள். இருந்த சொத்தையெல்லாம் விற்று மகளுக்கு வவுனியாவில் வீடும் கட்டிக்கொடுத்தாயிற்று. மருமகனும் வாத்திப்பொடியன்தான் மகளைப்போல! அவங்களைக் குழப்புவானேன் என்று ஐயா இங்கேயே தங்கிவிட்டார்.

ஒரு மைலுக்கப்பால் பாதையை மறைத்து நிற்கும் கருவேலங் காட்டையும் ஊடறுத்துச் செல்லும் செம்மண் பாதை. சிறுபுள்ளியாகத் தோன்றிய உருவ அசைவில் ஆதம் கணித்துச் சொல்லி விட்டார்.

“புள்ள தங்கச்சிதான் வாராள். தாவளத்து நாம்பனின் ஒருக்களித்த இழுவையில் வண்டி இடது பக்கம் சாய்ந்து வருவதைப் பாரு… இதெல்லாம் தூக்கு. நான் தங்கச்சியோடயே சாப்பிடறன்.” ஆதம் பரபரக்கத் தொடங்கினார்.

ஆரிபாமீது அவ்வளவு பாசம்.

செம்மண் புழுதியை வாரி இறைத்துக் கொண்டு வண்டில் வாசலில் நின்றபோது ஆரிபாவை ஒருகை கொடுத்து இறக்கிவிட்டு புறாக்குஞ்சை அள்ளுவதைப்போல மருமகளை அள்ளிக்கொண்டார் ஆதம். பன்னீர் மரங்கள் தாண்டி அமைந்துள்ள மணிப்புறாக் கூட்டிற்கு அப்பால் பதிந்து வளர்ந்திருந்த நெல்லிக்காய் மரத்தில் இருந்து காய் புடுங்கிப்போட்டார்.

கரீமா எல்லாருக்குமாக இலந்தை மரத்தின்கீழ் சோறு போட்டாள்.

“பிரயாணம் எப்படி ஆரிபா?” – ஆதம்

“பங்குனி வெயிலத் தெரியுந்தான்… என்ன செய்றதெண்டு வந்து சேந்தன். திரும்பிப் போறதெ நெனச்சாத்தான் பயமாயிருக்கு”

ஆதமுக்குப் புரிந்து போய்விட்டது. ஆரிபா இங்கு தங்கிப் போகின்ற ஏற்பாட்டுடன் வரவில்லை. ஏதோ அவசரத் தேவைக்காக வந்திருக்கிறாள்….. மச்சான், இன்டைக்கென்டு என்ன சொல்லி அனுப்பி இருக்கானோ?…..

ஆரிபாவை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார். அவரது பார்வையைத் தவிர்ப்பதற்காக அவள் முகம் குனிந்து சோற்றைப் பிசையத் தொடங்கினாள்.

பதினைந்து ஏக்கர் நீர்ப்பாய்ச்சல் காணி. குடியிருக்கும் மேட்டுக் காணி ஒரு ஏக்கருக்குக்கூட…. ஆடு, மாடு என்று ஆதம் பூர்வீகச் சொத்துக்களோடு அமோகமாகத்தான் இருந்தார்.

தேவன் ஐயா ஒருமுறை இரண்டு வத்தைகளை வாடகைக்கு அமர்த்தினார். முதல் வத்தை கிழக்கில் சிவப்பு தோன்று முன்னமே – கிளம்பிப் போய்விட்டது. மற்றது மதியத்திற்குத்தான் வெளிக்கிட்டது. ஆதம் அந்தப் போகத்து வௌச்சல் முழுவதையும் ஐயாவுக்கே கொடுத்து விட்டார். பருத்தித்துறை போய் வந்து காசு தரும் ஏற்பாட்டுடன் கொட்டியாரக் கரையோரம் நின்று வத்தைக்குக் கையசைத்துவிட்டு வந்தபோதும், அப்படி ஓர் அனர்த்தம் நடக்கு மென்று இருவரும் நினைக்கவில்லை. குடாக்கடல் தாண்டி வெளிக் கடலுக்கு வத்தை முகம் கொடுத்தபோது வாடை வீழ்ந்து விட்டது. தொடர்ந்து வீசிய சோளகச் சூறாவளியில் வத்தை பாய் புரண்டு கடலோடு சங்கமித்து விட்டது. கூலிக்காரர்கள் மட்டும் வெளிச்ச வீட்டை நோக்கி நீந்தி கரை சேர்ந்தார்கள்.

ஐயா நொடிந்து போனார். ஆதமும்தான். ஒரு போகத்து வௌச்சல் முழுவதுமல்லவா?…. ஐயா எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். தாண்டுபோன நெல்லுக்கு பாதிக்குப் பக்கமாவது காசு வாங்கிக்கோ என்று. ஆதமா இணங்குவார்? “உனக்கு நட்டமென்றால் அதில் எனக்குப் பங்கில்லையா?….. எல்லாம் உழைத்துக் கொள்ளலாம்.” ஆதம் காரணம் சொல்லி விட்டாலும், ஐயாவுக்கு மெல்லிசாக ஓர் உறுத்தல் மட்டும் நெடுகிலும் இருந்து கொண்டே தான் இருந்தது……

சூறாவளி ஆதமுக்கு மட்டுமா வீசியது?… எனக்கும்தானே…..

ஆனால், ஆதமின் வாழ்க்கையில் அதைவிடப் பெரிய சூறாவளி அதன் பிறகுதான் வீசத் தொடங்கியது. ஆரிபாவின் கல்யாணத்தின்போது.

தங்களது ஊரிலேயேதான் வீடு கட்டித் தரவேண்டும் என்று மாப்பிள்ளைப் பகுதி உறுதியாகக் கூறிவிட்டது. ஆதம் தலையாட்டிச் சிரித்தார். ஐந்து ஏக்கர் நிலம் வித்து வீடு கட்டிக் கொடுத்தார்.

ஐந்து ஏக்கரைச் சீதனமாகக் கொடுத்தார்.

மச்சானுக்குத் தொழிலில்லை.

கடை போடவென்று சீதனக்காணி ஐந்து ஏக்கரையும் விற்றுக் கேட்டார். மாறாப் புன்னகையோடு ஆதம் அதையும் விற்றுக் கொடுத்தார்.

எண்ணி ஆறே மாசந்தான்.

ஆரிபா, மறுபடி வண்டில் கட்டிக்கொண்டு கருவேலங்காடுகள் தாண்டி வீட்டுக்கு வந்து சிணுங்கினாள்.

நிறைமாசக் கர்ப்பிணி வேறு. ஆதம் பதறிப்போனார்.

“சொல்லிவிட்டாப் புள்ள, நானே வந்திருப்பனேயம்மா. நீ ஏன் இந்த நெலமையில் இவ்வளவு தூரம் வந்தநீ?”

விழியோரம் கசிந்து நீர்த்திவலைகள் முட்டிட்டு நின்றன.

“சொல்லக்கூடிய வெசயம் என்றால் சொல்லியனுப்பியிருப்பன் நாநா. ஆனா….” மேலும் விசும்பினாள்.

ஆதம்மின் மனைவி ஆதரவாக தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

“கடையெல்லாம் நட்டமாயிடுச்சி. கடன் தொல்லை. தினமும் கடன்காரர் வீட்டுப்படியில்…. கயிறு போடுறன் கழுத்தில் என்டு அவர் நிக்கிறார்.”

ஆதம் மெல்லிசாகச் சிரித்தார்.

“இதற்குத்தானா இந்தக் கூத்து?….. இந்தாம்மா எனக்கெண்டு அஞ்சு ஏக்கர் நீர்ப்பாய்ச்சல் கெடக்கு….. இன்டைக்கே வித்துத் தாரன். பணமாய்க் கொண்டு போ. கடன்காரன் முகத்தில் எறி. நானே உன்னெ விட்டுட்டு வாரன்.”

ஆரிபா, மறுபடியும் விசும்பத் தொடங்கினாள். “இருந்த சொத்தெல்லாம் எனக்கென்டே செலவழிச்சா உங்களுக்கென்டு வேறு என்னதான் மிஞ்சப் போகுது?”

“வாப்பா வெச்சிட்டுப்போன சொத்தைச் சொல்றியா? வாப்பா இதைவிடப் பெரிய சொத்து ஒன்டையும் எனக்குத் தந்திட்டுத்தான் போயிருக்கார். அது என்ட சீவியத்துக்கும் போதுமம்மா.”

அடுத்த நாள் மாட்டுவண்டி ஆரிபாவைச் சுமந்துகொண்டு செம்மண் பாதையில் இறங்கியபோது தன்னுடைய பூர்வீகச் சொத்து – நீர்ப்பாய்ச்சற் காணி முழுவதையும் ஆதம் இழந்து நின்றார்.

ஜீரணிக்கக்கூடிய இழப்பா அது?…

தேவன் ஐயா, ஆதமின் கைகளை ஆதரவோடு பற்றிக் கொண்டார். அந்தக் கைகளுக்கும் உணர்ச்சி இருக்கின்றதா?…… ஈரம் கசிகிறதே?…..

***

ஆரிபாவிற்கு குழந்தை பிறந்து நாப்பது அண்டைக்கு ஆதம் மனைவியோடும் தேவன் ஐயாவோடும் புறப்பட்டார். கருவேலங் காடுகள் தாண்டிச் சென்ற செம்மண் பாதையில் பத்து மைல் பிரயாணம் செய்த களைப்பை, மருமகளின் பிஞ்சு முகத்தைப் பார்த்தவுடன் ஆதம் மறந்து போனார். அரைப்பவுணில் சங்கிலியும், காப்பவுணில் பெண்டனும் செய்து போட்டார். தேவன் ஐயா அரைப் பவுணில் காப்பு செய்திருந்தார். வட்டப்பெட்டி முழுக்க செய்திருந்த கொண்டைப் பணியாரங்களை ஊர் முழுக்கப் பகிர்ந்து விட்டுத் திரும்பினார்கள்.

ஆரிபாவின் பிள்ளை ‘தத்தக்கா பித்தக்கா’ என்று நடை பழகத் தொடங்கியபோது மறுபடியும் கருவேலங்காடுகள் தாண்டி நாநாவிடம் வந்து சேர்ந்தாள் ஆரிபா. ஆதம் வீட்டில் இருக்க வில்லை. கரீமாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் சொரிந்தாள்.

“மச்சி, நாநா அண்டைக்கு பேச்சு வாக்கில சொன்னாங்கள்ளே…. பெரிய சொத்தொண்ண வாப்பா தந்துட்டுப் போனதெண்டு……”

“அது எனக்கும் தெரியாதேம்மா…. நான் விசாரிச்சும் காணலியேம்மா, இந்த வீடு வளவு தானேம்மா மிச்சமா இருக்கு.”

மதனியின் நெஞ்சோடு முகம் புதைத்து ஆரிபா கேவத் தொடங்கினாள்.

“மச்சான் ரொம்பக் கோவமா இருக்காங்க. பெரிய சொத்தெல்லாம் வாப்பா விட்டுட்டுப் போன மாதிரியும், அதை நாநா மறைச்சு வெச்சு அனுபவிக்கிற மாதிரியும்.”

“அப்படியெல்லாம் நானறிய ஒன்டுமில்லியேம்மா.” “அந்தச் சொத்தெல்லாம் தனக்குத் தெரியோணுமென்கிறாங்க மச்சான். இல்லாட்ட இந்த வீட்டையும் வளவையும் தங்கட பேருக்கு எழுதிக் கேக்கிறாங்க.”

அதற்குள் ஆதம் வந்துவிட்டார். “வாப்பா எனக்கு இந்த வளவு வீடையெல்லாம்விட பெரிய சொத்தொண்ணைத் தந்துட்டுத்தான் போயிருக்காங்க. அதை நான் மச்சானுக்குச் சொல்லோணுமென்டில்ல. இந்த வீடு வளவு தான வேணும். நாளைக்கே உறுதி மாத்தித் தாரன். எடுத்திட்டுப் போம்மா. இதுக்கு ஏம்மா அழறே….. வாம்மா…. என்னோட உக்காந்து சாப்பிடு…”

ஆரிபா சாப்பிடவில்லை .

ஆனால் அடுத்த நாள், கருவேலங்காடு தாண்டி வண்டில் சென்றபோது ஆதம், தனது வீட்டிலேயே – இன்னொருவனுக்கு உறுதி எழுதி கையளிக்கப்பட்ட வீட்டில் – அந்நியன்போல் நின்று கொண்டிருந்தார்.

ஆறு மாதம் கடந்து – கதிரறுப்புக்கள் முடிந்து ஓய்வாக இருந்த ஒருநாள் மாலையில் வவுனியாவில் இருந்து, தேவன் ஐயாவுக்கு தந்திச் செய்தி வந்தது. முற்றத்து தென்னைமரம் முறிந்து விழுந்ததில், வதனியின் வீட்டுக் கூரை முற்றாகச் சேதம் அடைந்து விட்டதாம்…. ஐயா நிண்டது நிற்க வவுனியாவுக்குப் பஸ் ஏறினார். ஆதமும் கூட வெளிக்கிட்டார். தேவன் ஐயா தடுத்து விட்டார்…. தேவன் ஐயாவின் வீட்டையும், தனக்கு உரித்தற்றுப்போன வீட்டையும் பார்த்துக்கொண்டு காத்திருந்தார்.

கடைசி லோஞ்சில் மூதூருக்கு வந்து சேர்ந்த தேவன் ஐயா சொன்ன செய்திகள் ஆதமை உலுக்கி விட்டன. வதனியின் வீட்டுக் கூரையும் இரண்டு பக்கச் சுவர்களும் சேதமாம். மகளும் மருமகனும் வீட்டின் சிறு அறை ஒன்றில் ஒதுங்கி இருக்கிறார்களாம்.

“என்ன செய்யப் போறீங்க?”

“இனி ஒன்டும் செய்றதுக்கில்ல ஆதம். இந்த வீட்டையும் வளவையும் வித்துக் காசாக்கிக் கொண்டு வவுனியா போகப் போறன். வதனிட வீட்டைத் திருத்தணும், வீடில்லாமல் அதுகள் அந்தரப்பட்டுப் போகுங்கள்.”

மளமளவென்று காரியங்கள் நிறைவேறி முடிந்தன. உறுதிப் பத்திரம் எழுதி முடித்து காசும் கைமாறி விட்டது. ஒரு லட்சம்.

***

பங்குனிப் புழுக்கம்.

இலந்தை மரத்து நிழலில் மரவள்ளிக் கிழங்கும், தேங்காய்ச் சம்பலும் சமுளை இலையில் பரப்பி வைக்கப்பட்டிருக்கிறது….. மனப் புழுக்கத்தோடு ஆதம்….

தனக்கே சொந்தமற்றுப்போன வீட்டில், இனி எத்தனை காலம் இருப்பது?… சொந்தம் போல் இருந்த மனுசன் தேவன் ஐயா. அவரும் போகப் போகிறார்….. இனி எங்கே போய்க் குடியிருப்பது?…

கண்ணீர் திரையிட்டு நிற்கின்றது……. உண்ணப் பிடிக்கவில்லை …. கரீமா, வாயில் சீலையைப் புதைத்துக்கொண்டு மெல்லிசாகக் கேவுகிறாள்.

முத்தாய்த் திரண்டிருந்த கண்ணீரினூடே நீண்ட செம்மண் சாலையில் தாவளத்து நாம்பனின் ஒருக்களித்த நடையோடு தங்கச்சியின் வண்டில் வருவதை அவர் அவதானித்து விட்டார். கண்ணீரைத் துடைத்துவிட்டு வாசலுக்கு விரைந்தார்..

சிறுபுள்ளியாய்த் தெரிந்த வண்டில் பாக்கு வெட்டும் நேரத்தில் வாசலுக்கு வந்து நின்றது…. தாவளத்து நாம்பனின் கழுத்து முழுக்க உண்ணிகள் ஊர்ந்து நின்றன.

“வா புள்ள…. இந்த வேகா வெயில்ல வாறாய்… பின்னேரமா வெளிக்கிட்டிருந்தா செக்கனுக்குள்ள வந்திருக்கலாமில்ல.” மரு மகளை வாரிக் கொண்டு மணிப்புறா காட்ட கொண்டு சென்று விட்டார்.

தங்கச்சியின் சிவந்த கண்களையும், வாடிய முகத்தையும் கண்டு ஏதோ மீண்டும் பிரச்சினையோடுதான் வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்துதானோ என்னவோ, ஆதம் தூரமானார். இரவுக்குப் பிடிகொழுக்கட்டை அவித்தார்கள். அளவாக வறுத்த பயறில் தேங்காய்ப்பூவும், சீனியுமிட்டு வண்டுகட்டி அவித்து சுளகில் பரத்தியபோது, ஆரிபாவின் குழந்தை பிஞ்சுக் கைகளால் பிசைந்து பிசைந்து விளையாடியது.

“நல்ல நேரத்துக்கு வந்தாய் புள்ள. நாளைக்கே தேவன் ஐயா வவுனியா போறார். வீடெல்லாம் வித்துக் காசாக்கிப் போட்டார். வதனிட வீடு சேதமாம். திருத்துறதுக்குக் காசு வேணுமாம்….. இனி போனால் எப்ப வரவாரோ?…… மகளுக்குக் கொண்டு போகவெண்டு பட்டித்திடல் பலாப்பழம் வாங்கவெண்டு போனவர். இப்ப வந்திடுவார்….. நீ சாப்பிடம்மா….. ஒருநாளைக்கு மச்சானையும் கூட்டிக்கொண்டு வாவன்…. இனி இது அவர்ர வீடுதான….”

ஆரிபாவின் கண்களில் நீர் திரண்டு கன்னத்தில் இறங்கிற்று.

“அப்படியெல்லாம் ஒரு வாழ்க்கை எனக்குக் கெடைக்கலை…. நாநா உழைக்க முடியாத ஒரு புருசனுக்கு வாழ்க்கைப்பட்டுப் போனன். இப்பவும் பிரச்சினையோடதான் இங்க வந்திருக்கிறன். நீங்க வாங்கித் தந்த வீடு பழைய வீடு….. கூரையெல்லாம் ஒழுகுது. இந்த வெட்டாப்போட திருத்தணும் என்கிறார்….. சுவரெல்லாம் உயத்தி சீட் போட்டுத் தரச் சொல்றார்….. இல்லாட்டா….”

“இல்லாட்டா…?” – “இல்லாட்ட என்ன நாநா ஒண்டுமில்ல….. நானும் புள்ளயும் இங்கேயே இருந்திட வேண்டியதுதான்.”

“நாநாட்ட ஏதும்மா பணம்?… கடைசியா இருந்த சொத்து இந்த வீடு. அதையும் உங்களுக்கே எழுதித் தந்துட்டார். வேற என்னம்மா இருக்கு,”

“நீங்க இப்படிச் சொல்றீங்க…… ஆனா அங்க வேற மாதிரி சொல்றாங்க. வாப்பா எனக்குப் பெரிய செல்வமொன்டைத் தந்திட்டுப் போயிருக்கிறதா நாநா அடிக்கடி சொல்லுவாங்களே…. நாநாட்ட பெரிய நகைநட்டுப் புதையல் எல்லாம் வாப்பா குடுத்திட்டுப் போயிருப்பாங்க. அதுல இருந்து வாங்கிட்டுவா அப்படின்னு சொல்றாங்க.”

“அப்படியெல்லாம் வாப்பா எனக்கு ஒன்றும் தந்திட்டுப் போகலியேம்மா” – ஆதம்

“அப்ப அந்தப் பெரிய செல்வம் எண்டு சொல்றது?”

ஆதம் தயங்கினார்….. “அந்தச் செல்வம் நீதானம்மா…”

“…நாநா….” என்று விசும்பி அழுகிறாள் ஆரிபா. கரீமா நெஞ்சுக்குள் பொங்கி வெடிக்கிறாள்…. கதவைத் திறந்துகொண்டு தேவன் ஐயா வருகின்றார்.

“ஆரிபா எப்பம்மா வந்தநீ?…” எல்லாம் கேட்டுக்கொண்டுதான் இருந்தனான். வதனிட செய்தியெல்லாம் கேள்விப்பட்டிருப்பே….. நீங்க இருவருமே எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி…” பெருமூச் செறிகிறார்.

பங்குனி மாத இரவுகளில் வெள்ளி பூத்து இரவைப் போக்கடிக்கும் நிலைமாறி இந்தக் குடும்பங்களின் அவலங்களை எண்ணி கறுப்புப் போர்வையைப் போர்த்துக் கொண்டதில், கும்மிருட்டாயிற்று.

கிழக்கில் ஆனை வெள்ளாப்புத் தோன்றுவதற்கு முன்பே ஆரிபா புறப்பட்டிருந்தாள். யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. சொல்லிக் கொள்வதற்கு என்ன இருக்கிறதென்று நினைத்தாளோ. அல்லது புருசன் துரத்தி விட்டதும் மறுபடியும் நிரந்தரமாகத் திரும்பி வரப்போகும் வீடுதானே என்று நினைத்தாளோ?….

தேவன் ஐயா புறப்பட ஆயத்தமானார்.

இடுப்பு வாரில் வீடு விற்ற காசு ஒரு இலட்சத்தையும் சொருகிக் கொண்டார். பிரம்புக் கூடையில் பாரைமீன் கருவாட்டையும், பட்டித்திடல் பலாப்பழத்தையும் திணித்துக்கொண்டார்.

வீட்டைப் பூட்டி சாவியை ஆதமிடம் தந்தார். வீட்டை வாங்கின வனுக்குக் கொடுத்து விடும்படி.

ஆதமுக்கு வருத்தம். “ஆரிபா, உங்களிடமாவது சொல்லிக் கொண்டு போயிருக்கலாம். சின்னப் பிள்ளை… மன்னிச்சிடுங்கோ…”

“அதுல ஒண்டுமில்ல…. ஆரிபாட நெலமெ பரிதாபம். நான் அடிக்கடி சொல்லுவன். ஆரிபாவும் வதனியும் எனக்குச் சொந்தப் பிள்ளைகள் மாதிரியெண்டு. ஆனா ரெண்டு புள்ளைகளுமே இண்டைக்குக் கஸ்ரப்பட்டுக் கிடக்குதுகள்.”

ஐயா தொடர்ந்தார். “வதனி வீடு சேதம்தான். ஆனா புருசன், மனைவி ஒத்துமையா இருக்காங்க….. ஒரு சின்ன அறையில் கூட அவங்களால சந்தோசமா சீவியம் நடத்த முடியும்…. ஆனா ஆரிபாட நெலெம் சீரில்ல…. நாம அவட வீட்டை சீர் பண்ணிக் கொடுக்காட்டி அவ வாழ்க்கை இழந்து திருப்பியும் இங்கேயே திரும்பி வருவா…. ராவெல்லாம் எனக்கு இதுகள்ர நெனைவே சிந்தனையாப் போட்டுது….”

வெயில் ஏறத்தொடங்கியது.

“லோஞ்சிக்கு நேரமாயிடுச்சு. எட்டுமணிக்கு லோஞ்ச்….. இப்ப வெளிக்கிட்டாத்தான் லோஞ்ச் பிடிச்சு வவுனியா பஸ் பிடிக்க சரியா இருக்கும்”-ஆதம்

இடுப்பில் இருந்த பணத்தைத் தொட்டுப் பார்த்துக்கொண்ட தேவன் ஐயா கேட்டார்.

“நான் வவுனியாவுக்குப் போறதெண்டு யார் உனக்குச் சொன்னது?….”

“அப்ப?”

“நான் ஆரிபாட ஊருக்குப் போறன். தலைக் கச்சானுக்கு முந்தி அவட வீட்டைத் திருத்திக் கொடுக்க வேண்டாமா?”

தேவன் ஐயா சைக்கிளில் ஏறிக்கொண்டார்.

கருவேலங்காட்டை ஊடறுத்துக்கொண்டு நீண்ட நெடுங் கோடாய்ச் செல்லும் செம்மண் சாலையில் பலாப்பழக் கூடையோடு சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் தேவன் ஐயாவின் உருவம் சிறுகச் சிறுகத் தேய்ந்து ஒளிப்புள்ளியாக மறையும்வரை ஆதம் பார்த்துக்கொண்டே இருந்தார்.

கண்களில் நீர் திரையிட்டு நின்றது – பிரபஞ்சத்தில் இன்னமும் தர்மத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டு விடவில்லை என்பதற்குச் சாட்சியாக.

– தினகரன் வாரமலர் 1999 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *