கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 16,107 
 

தான் பதவிக்கு வந்திருந்த முதல் வாரத்தில், நீதிமன்ற அலுவல்களில் மிகவும் கண்டிப்பு காட்டினார், புதிதாகப்பதவியேற்றிருந்த அந்த முன்சீப். ஶ்ரீவில்லிபுத்தூர், சிறிய வட்டாரம் என்பதால், அவரையே மாஜிஸ்திரேட்டாகவும் கூடுதல் பதவியேற்கச் சொல்லியிருந்தார்கள்.

சிவில் வழக்குகளில், வழக்கை சவ்வு மிட்டாய் போல இழுத்தடிப்பதற்கு, மகாகனம் பொருந்திய பெருமைமிகு வக்கீல் பெருமக்கள் கைக்கொள்ளும் சகலவிதமான நீதிமன்ற சித்து வேலைகளும் புதிய முன்சீப்புக்கு ஏற்கனவே அத்துபடி என்பதால், எக்ஸ்-பார்ட்டி எனப்படும் ஒரு தலைப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணை வரிசைப்பட்டியலுக்குக்கொண்டு வருவதற்கு வக்கீல் பெருமான் மனு கொடுக்கும் போது முன்சீப் அவரைக் கடுமையாக எச்சரித்தார்.

‘நீங்க எக்ஸ்-பார்ட்டி உத்தரவை ரத்து பண்ண மனு கொடுக்கறீங்க. வழக்கு செலவுத்தொகை அதிகமாகத் தரச்சொல்லுவேன்’ என்று எச்சரித்தார். அவர் சொன்ன விதமாகவே, செலவுத்தொகை ரூபாய் மூவாயிரத்தை வாதி தரப்புக்கு செலுத்துமாறு சொன்ன போது, பிரதிவாதி தரப்பு வக்கீல் அதிர்ந்து போனார்.

அநாவசியமான வாய்தாக்கள் எதுவும் தரவே முடியாது என்று நேரடியாகவே கடுமையாய்ச்சொன்னவர், வக்கீலின் சோம்பலால் வழக்கு காலதாமதமானால், எதிர் வழக்குரை தாக்கல் செய்யப்படவில்லை என்று எழுதி, வழக்கை விசாரணைப்பட்டியலில் சேர்த்தார். எதிர் உரை தாக்கல் செய்ய வேண்டிய மனுக்களில், இருபது நாட்கள் அவகாசம் கேட்ட போது, இரண்டு நாட்கள் மட்டும் தான் அவகாசம் என்று சொல்லி, வழக்கை ஒத்தி வைத்தார்.

தடாலடியாக அவர் தனது பச்சைப்பேனாவால், எதையாவது எழுதித்தொலைத்து விடக்கூடாதே என்று வக்கீல்கள் நிஜமாகவே பயந்தனர். கேஸ் கட்டின் எண்ணை எல்லோருக்கும் புரியும் வண்ணம், சத்தமாக வாசிக்குமாறு சூட் கிளார்க்கிடம் அவர் சத்தமிட்ட போது, சூட் கிளார்க் அதே இடத்தில் நடுங்க ஆரம்பித்தார்.

இரவு எட்டு மணிக்கு மேல், தலைமை எழுத்தரின் அறையில், முழு நீள பாட்டில்கள் திறக்கப்பட்டு, தீர்த்தக்கச்சேரி நடத்தப்படுகிறது என்று யாரோ அரசல் புரசலாகத் தகவல் சொல்லிவிட, ஆறரை மணிக்கு மேல் தலைமை எழுத்தரின் அறை உள்ளிட்ட எல்லா அறைகளுமே பூட்டப்பட்டு, அனைவரும் கோர்ட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு போட்டார்.

தனது வக்கீல், புரோநோட்டு வழக்கில் ரெண்டு லட்ச ரூபாய் டிக்கிரி வாங்கி விட்டு, தன்னிடம் ரூ. 70,000/- பீஸ் கேட்டதாக, கிருஷ்ணன் கோவில் கிராமத்து சம்சாரி முன்சீப்பிடம் எழுத்து மூலமாகப்புகார் தந்து நீதி கேட்க, உடனே அந்த வழக்கில், வக்கீலின் வக்காலத்தை, தானே முன் வந்து ரத்து செய்து விட்டு, அந்த வழக்கை, இலவச சட்ட உதவி அமைப்பிற்கு மாற்றினார். வக்கீல் சங்க செயலாளர் பரமகுரு, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும், அதனால் அடுத்த திங்கட்கிழமை அன்று எந்த வழக்குகளையும் விசாரிக்கக்கூடாது என்றும், வேண்டுகோள் வைத்தார். அதற்கு, புதிய முன்சீப், ‘கோர்ட்டுக்கும் பீஸ் கட்டிட்டு, உங்களுக்கும் பீஸ் கட்டினவன் கட்சிக்காரன். ஆனா, நீங்க அவன் கிட்ட பீஸ் வாங்கிக்கிட்டு, அவன் கேஸை நடத்தாம வேலை நிறுத்தம் பண்ணினா என் அர்த்தம்? நீங்க கோர்ட்டை புறக்கணிச்சா, அது என்னைய கட்டுப்படுத்தாது. திங்கட்கிழமை, காலையில எல்லா கேஸையும் வருசையா கூப்பிடுவேன். ஆள் வரலைனா, கேஸ் டிஸ்மிஸ் ஆயிடும். நீங்க கோர்ட்டுக்கு வெளியே போராடினா, போராடிக்கோங்க. என் வேலை தொடர்ந்து நடக்கும்’ என்று செவுட்டுல அறைஞ்ச மாதிரி சொன்னதும், வக்கீல் சங்க செயலாளர் பயத்தில் சுருங்கி விட்டார்.

சாட்சி சொல்ல பெட்டியேறி விட்டு, கீழே இறங்கும் சாட்சிகளிடம், வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கி விட்டு, ஊசி நூல் வைத்து அந்த வாக்குமூல காகிதங்களை தைத்துக்கொண்டே, அந்த டவாலி தனக்கு டிபன் செலவுக்கு அந்த சாட்சியிடம் பணம் கேட்க, ரொம்ப அப்பிராணியான விசயம் தெரியாத ஒரு வத்திராயிருப்பு கிராமத்துக்காரன், நேரா முன்சீப்பு மேஜைக்கு முன்பாக நின்று, “அய்யா, பெரிய எசமான், நான் இங்க வாய்தாவுக்கு வர்ற போதெல்லாம், இந்த பியூன் என் கிட்ட பணம் கேக்கறாரு. இவருக்கும் நான் சேத்து பீஸ் கொடுக்கணுமா சாமி” என்று ரொம்ப அப்பிராணித்தனமாகக்கேட்க, முன்சீப் அவர்கள், டவாலி முனுசாமியைப்பார்த்த பார்வையில், சிவபெருமானின் மூன்றாவது கண் தெரிந்தது.

மாதக்கணக்கில், வாய்தா தந்து கொண்டிருந்த நடைமுறைகள் எல்லாம் மாறிப்போய், நாள் கணக்கிலும், மணிக்கணக்கிலும் வாய்தா தரும் நடைமுறை வந்தது.

‘இந்த வக்காலத்து, கவுண்டர், ரிட்டன் ஸ்டேட்மெண்ட், இதையெல்லாம் ஹெட் கிளார்க் கிட்டயே கொடுத்து முடிச்சிட்டு வந்துருங்க. இதையெல்லாம் இங்க ஓபன் கோர்ட்ல, வருசையா ஏன் கூப்பிடணும்? காலையில பத்து மணிக்கு நான் வந்ததும், நேரடியா கேஸ் ட்ரையல் ஆரம்பிச்சுரலாம்’ என்று அவர் பொது அரங்கில், எல்லா வக்கீல்களுக்கும் உத்தரவிட, அதுவரை ஆமை போல போய்க்கொண்டிருந்த வழக்குகள் எல்லாம், ராக்கெட் வேகத்தில் முடிவை நோக்கிப்போயின. தினசரி மூன்று கேஸுக்காவது தீர்ப்பு எழுதி முடித்து விட்டுத்தான், தனது பச்சை பேனாவினை மூடி வைப்பது என்று ஒரு இலக்கு வைத்துக் கொண்டார் முன்சீப்.

அவரைப்பார்த்ததும், அசடு வழியும் சீனியர் வக்கீல்கள், நேராக அவர் முன்னே நின்று, அவரிடம் நெளிந்து கொண்டே பேச ஆரம்பித்தார்கள்.

‘கோர்ட்டார், என்னோட கட்சிக்காரரோட அப்பாவுக்கு தெவசம் நடக்குது. இந்தக்கேஸ்ல அவர் இன்னிக்கு வர்ரல. அதனால, இந்தக் கேஸ்ல இன்னொரு நாள் வாய்தா போடுங்க கோர்ட்டார்’ என்று சீனியர் வக்கீல் மாதவஸ்வாமி, தலையைச்சொறிந்து கொண்டே வாய்தா கேட்க, உடனே முன்சீப்,

‘உங்க கேஸே தெவசம் பண்ண வேண்டிய கட்டு தான். அதுல தர்ப்பையைப்போட்டு, எள்ளும், தண்ணீரும் ஊத்த வேண்டியது தான். முழுக்கேஸ் கட்டையும் படிச்சுப்பார்த்துட்டேன் அந்தக் கேஸூக்கு முதல்ல தெவசம் பண்ணுங்க சார்,’ என்று நீதிமன்ற அவையில் பகிரங்கமாக பெரிய வக்கீல்கள் மத்தியில் சொல்லி வைக்க, அப்போது எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரம் ஆனது. அன்று நீதிமன்ற வளாகம் முழுவதும், இந்த முன்சீப்பின் கேஸ் தெவசம் எனும் நையாண்டி பேசப்பட்டு, மொத்த வளாகமே சிரித்துக் கொண்டிருந்தது.

‘இவரோட வேகம் எந்த அளவுக்கு போகுதுன்னு பார்ப்போம். எப்படியும் அவரே ஒரு கட்டத்துல ப்ரேக் அடிச்சு நிப்பாரு…. எனக்கு நல்லாத்தெரியும்’ என்று மூத்த வழக்கறிஞர் தலை நரைத்த அருள்மணி, தன் வயதொத்த ஆட்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். புதிதாகத் தொழிலுக்கு வந்த ஜுனியர் வக்கீல்கள், முன்சீப்புக்கு ‘அருவா வெட்டு’ என்று பட்டப்பெயர் வைத்தனர்.

அன்று வெள்ளிக்கிழமை. வழக்கத்துக்கு மாறாக கால் மணி நேரத்துக்கு முன்னயே மேடையேறிய முன்சீப், ‘எஸ். டிரையல்!’ என்றார்.

அன்றைய சிவில் கேஸ் கட்டுக்களை எடுத்து வரச் சொன்னவர், அவைகளைக்கூப்பிடச்சொல்லி, அடுத்தடுத்த தேதிகளுக்கு ஒத்தி வைத்து விட்டு, கிரிமினல் வழக்குகளை எடுத்து வரச்சொன்னார்.

ஆண்டுக்குற்றப்பட்டியல் எண்ணில் வரிசையாக வழக்குகள் அழைக்கப்பட்டன. ஆறு வழக்குகள் ஒரே மாதிரியாக இருந்தன. வழக்கில் எல்லா எதிரிகளுமே கான்சாபுரம் பக்கம் கூமாப்பட்டி கிராமத்துக்காரர்கள். எல்லாப்பேர்களுமே, மாயாண்டி, பெரிய கருப்பன், சுடலைமணி, வயிரவன், நெட்டையசிங்கம், நடுக்காட்டான் என்று இருந்தன.

பேர் கூப்பிட்டதும் ஒவ்வொருவராக வரிசையாக வந்தனர்.

எல்லாமே ஒரே மாதிரியான குற்றங்கள். ‘பல்லை உடைத்தான். கையைக் கடித்தான். கட்டையால் அடித்தான். புரட்டிப்போட்டு மிதித்தான்’ என்று எல்லாமே அடிச்சான் பிடிச்சான் கேஸ்.

கறுத்த, முரட்டுத்தோல் ஆட்கள், எல்லாத்தலைகளுமே எண்ணையில்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்த தலைகள். முற்றிய ஐம்பது வயது தாண்டிய முகங்கள், கை, கால், மார்பு எல்லாம் கரளை கரளையாய், பாடுபட்டு முறுக்கேறிய கறுத்த தசைத் திரள்கள். ஒருவர் மார்பிலும் சட்டை கிடையாது. ஆஸ்பத்திரி கட்டு பிளாஸ்திரி போன்ற சல்லடைத் துணியாய் இருந்த அவர்களது பழுப்பு வேட்டியைப் பார்த்ததுமே தெரிந்தது, அது அரசாங்கம் கொடுத்த இனாம் வேட்டியென்று.

கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு, ஒடுங்கியபடி ‘கும்பிடுறேன் எசமான்!’ என்று அவர்கள் சொன்ன போது, அவர்களின் சதைத்திரள்கள் முறுக்கிக்கொண்டு நின்றன. செவக்காட்டு புழுதியில் அளைந்த அழுக்கேறிய செருப்பில்லாத கால்கள்.

‘ஏன்யா, உங்களுக்கு கோர்ட்டுக்கு வர்றதுக்கு இது தான் மொத தடவையா?’

‘ஆமா எசமான்! இதுக்கு முன்னாடி, இந்தப்பக்கம் கூட வந்தது கெடையாது சாமி!’

‘என்ன நடந்துச்சு?’

‘எசமான், எல்லாமே இந்த பயபுள்ளகளால தான். மக்காச்சோளக்காட்டுல, கதிரு ஒடிக்க எளந்தாரிப்பயலுவ உள்ள வந்தானுவ. அவனுக கதிரை ஒடிச்சு, ஒரு துண்டுல கட்டிக்கிட்டு, இருந்தப்பவே, நான் அரவமில்லாம, பின்னாடியே போயி, பல புள்ளைகள கையும் களவுமா புடிச்சுட்டேன். நாலு பேரு இருந்தானுவ. பிடிச்சு, அதே இடத்துலயே வெச்சேன் நாலு வெப்பு. அங்கயே நொக்கைப் பிதுக்கியிருப்பேன். விசாரிச்சதுல அவனுவ மேக்கத்துல செம்பகத்தோப்பு ஆளுகளாம். வெதைக்கரும்பு வாங்க காடு காடா அலைஞ்சு வந்தவங்க, எங்க ஊரு சோளக்காட்டைப் பார்த்ததும், உள்ளே புகுந்துட்டாங்க. அவனுவள எங்களோட ஆளுக மல்லுக்கட்ட, அப்புறமா என் வகையறா ஆளுக, மொதல் திருடு போன கோவத்துல, அவனுவள வெளுத்துட்டோம். நாலு இறுக்கு இறுக்கினதும் தான். எங்க ஆத்திரம் கொறைஞ்சது, எசமான். ஆத்துரத்துல ஏதோ அடிதடி போட்டுட்டோம் சாமி! எங்க வெள்ளாமை எவ்வளவு பாடுபட்டது!’

‘அப்ப செஞ்ச குத்தத்துக்கு தண்டனை தான்! நீங்க எல்லாருமே ஜெயிலுக்குப்போய் தான் ஆகணும்!’

‘எசமான்! கொஞ்சம் மனசு வைங்க! பிஞ்சைக்காட்டுல அனலா அடிக்கற வெயில்ல, மண்ணை நோண்டி, நோண்டி, வெள்ளாமை பண்ணி, ஏதோ அரை வவுத்துக்கஞ்சிய குடிச்சிக்கிட்டிருக்கோம். சாமி, இங்க வெள்ளாமையை வந்து அழிச்சாட்டியம் பண்ணுனா, என்ன செய்யட்டும்? அடுத்த நாள் பொழைப்புக்கூட நாதியியில்லாத சம்சாரிங்க. எங்கள செயிலுக்குள்ள தள்ளுனா, எங்க புள்ள குட்டியெல்லாம் பட்டினியில செத்துப்போகும் சாமி,’ என்று மன்றாடுகிறான் ஒருவன்.

ஆறு வழக்குகளாக, தனித்தனியாய் பிரித்து போட்டிருக்கிறார்கள். சட்டை கூட போடாத வெத்து உடம்பு சம்சாரிகள் மேல!

‘ஏன்யா, செய்யறதையும் செஞ்சுட்டு, அதுக்கு பெருசா வௌக்கமா? சட்டம் ஒங்கள சும்மா வுடுமா?’ என்று பேசியபடி ஏ.பி.பி. என்னும் உதவி குற்றவியல் அரசு வழக்குரைஞரை தன் பக்கமாய் வரும்படி ஒரு பார்வை பார்க்கிறார் மேஜிஸ்திரேட். மேஜிஸ்திரேட்டின் முகம் சொல்லும் மொழி, ஏ.பி.பி.க்கு மட்டுமே தெரியும். ‘சரி’ என தலையாட்டுகிறார். கால் மணி நேர இடைவெளிக்குப் பின்பு, ஆறு வழக்குகளிலும் அரசு தரப்பு சாட்சிகள் ஒவ்வொருவராய் சாட்சிக்கூண்டிலேற எல்லா சாட்சிகளுமே, பிறழ் சாட்சிகளாக மாறி, மேஜிஸ்திரேட்டின் முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்து, தங்களுக்கு நடந்த சம்பவம் பற்றி ஒண்ணுமே தெரியாது என வாக்குமூலம் தர, அந்த வாக்குமூலங்கள் பிறழ் சாட்சிகளாக மாற, ஒன்றுமே புரியாமல் வக்கீல்கள், திருதிருவென முழிக்க, ஆறு வழக்குகளிலும் அரசு தரப்புக்கு எதிராக விசாரணை ஏன் அப்படிப்போனது என புரியாமல் தவித்தனர்.

விசாரணை முடிந்ததும், மேஜிஸ்திரேட் அருகில் இருந்த டைப்பிஸ்ட் பெண் அவரை வணங்கி விட்டு, எழுந்து சென்ற பிறகு.

‘இது தான் கடைசி தடவை. இனிமே ஒங்க முகம் கூட இங்க தட்டுப்படக்கூடாது. உங்கள்ல யாராவது இங்க வந்து நான் பாத்தேனா, தொலைச்சிட்டேன். இந்தப்பக்கம் தலை வெச்சுக்கூட படுக்கக்கூடாது. போங்கய்யா எல்லாரும்’ என்று கண்களில் கோப நெருப்பு பொறி பறக்க, கைகட்டி, தனக்கு எதிரே தூரத்தில் மரப்பெட்டிக்குள் நின்று கொண்டிருந்த ஆஜர் எதிரிகளைப்பார்த்து மாஜிஸ்திரேட் ஏக வசனத்தில் திட்டவும் அவரைப்பார்த்து ‘குல தெய்வமே! பதினெட்டாம்படி கருப்பணசாமி! இனிமே இந்தப்பக்கம் எங்க நெழல் கூட வுழாது எசமான்!’ என்று தலைக்கு மேல் கும்பிடு போட்டபடி விடுதலை அடைந்த சந்தோசத்தில் அந்தக்கோர்ட்டை விட்டு வெளியேறி, தெற்கு ரத வீதியில் நடந்து போகின்றனர் வழக்கின் எதிரிகள்.

வழக்கறிஞர்கள், டவாலிகள், ப்யூன்கள், மஸால்ஜி, ப்ராசஸ் சர்வர்கள் என சகலரும் இந்த விசாரணையைப் பார்த்து விட்டு, திகைப்பு மாறாமல் மாஜிஸ்திரேட்டைப் பார்த்தபடி நிற்கின்றனர். அனைவரையும் பணிந்து வணங்கி விட்டு, மேடையிலிருந்து கீழே இறங்கி தன் தனியறைக்குச்சென்றவர், புழுக்கமான கருப்பு அங்கிகளை களைந்து போட்டு விட்டு, ப்யூன் அவரது பிரயாண பெட்டியைத் தூக்கிக்கொண்டு வரட்டுமா என்று கேட்டதற்கு ‘வேண்டாம்!’ என்று மறுத்து விட்டு, தெரு முனைக்கு நடந்து சென்று, பஸ் ஏறினார்.

நாப்பது மைல் தள்ளி, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில், இடையங்குளம் பக்கம் கோரைவளைஞ்சான்பட்டி என்ற செம்மண் புழுதிக்கிராமத்தில், வானம் பாத்த பிஞ்சைக்காட்டில், முண்டாசு கட்டும், கோவணமும் மட்டும் கட்டி, எருது உழவு ஓட்டி, பருத்தி வெள்ளாமை செய்யும் நோஞ்சானான தன் அப்பா சின்ன மாயனைப்பார்க்க பயணத்தைத்துவக்கினார், சமூகம் நீதித்துறை நடுவர் என்ற மாஜிஸ்திரேட் அய்யா அவர்கள்.

– இந்தச்சிறுகதை “பேசும் புதிய சக்தி” (மாத இதழ் ) 2018 -ல் நடத்திய, எழுத்தாளர் ராஜகுரு நினைவு சிறுகதைப்போட்டியில் 2- ம் பரிசு வென்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *