கமலியும் ப்ரியாவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 12,383 
 
 

கமலி கோவிலில் விளக்குக்கு விட எண்ணெயை ஒரு பாட்டிலில் எடுத்து அதனோடு தொடுத்த பூவையும் ஒரு கூடையில் வைத்துவிட்டு சாரியை மாற்றிக் கொண்டே மணியைப் பார்த்தாள். ஐந்து நாற்பது. ஆச்சு!. ப்ரியா வந்துடுவள் என்று எண்ணுமுன்பே ஹாலில் வந்து பொத்தென்று சோபாவில் விழுந்தாள் ப்ரியா. அவளை காலேஜ் பஸ் தினமும் சரியாகக் வீட்டில் கொண்டு சேர்த்துவிடும்.

“ப்ரியா! கோவிலுக்கு வரியா. இன்னிக்கு ஸ்ரீராம நவமி. ராமரை தரிசித்து ரொமப நாளாச்சே. வாயேன் போய்ட்டு வருவோம்” என்றாள் கமலி.

“இல்லைம்மா! எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கிறது. மேலும் எனக்கு ஒரு அசைண்ட்மெண்ட் வேறு எழுத வேண்டியிருக்கிறது. நீ போய்ட்டு வா!” என்றாள். எதிர்பார்த்த பதில் என்பதால் கமலி ப்ரியாவிடம் டைனிங்க் டேபிளில் எல்லாம் ரெடியாக வைத்துள்ளேன். பாட்டிக்கும் எல்லாம் கொடுத்தாகி விட்டது. இருந்தாலும் பாட்டியை அப்பப்ப கவனித்துக் கொள்.கெட்டிலில் வென்னீர் இருக்கு. கேட்டால் கொடு. ஒரு எட்டு கோவிலுக்குப் போயுட்டு வந்துடறேன். சரியா! என்றவள் பதிலுக்குக் காத்திராமல் நேரே மாமியாரின் அறைக்குச் சென்று ” ப்ரியா வந்தாச்சு. இன்னிக்கு ராம நவமி.கோவிலுக்கு ஒரு எட்டுப் போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்துடறேன் ” என்றாள். ” மகராசியா போய்ட்டு வா” என்றாள் கட்டிலில் படுத்துக் கிடந்த மாமியார் பாட்டி. கூடையை எடுத்துக் கொண்டு பர்ஸில் அர்ச்சனைக்கு பணமிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே வெளியே வந்தாள் கமலி.நடக்க ஆரம்பித்ததும் நினைவுகள் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது.

ப்ரியா சிறுமியாக இருக்கும் பொழுது தினமும் கோவிலுக்குப் போகனும் என்று அடம்பிடிப்பாள். அங்கு வெளி மண்டபத்தில் இருக்கும் மணலில் அவளை யொத்த குழந்தைகளெல்லாம் மணல் வீடு கட்டி விளையாடுவார்கள். ப்ரியாவுக்கும் மணலில் வீடு கட்டி விளையாட ரொம்ப ஆசை. தினமும் சாயந்திரம் ப்ரியாவைக் கூட்டிக் கொண்டு அங்கு சென்று விடுவாள். சாயரட்சை கழிந்துதான் வீட்டுக்குத் திரும்புவார்கள். தினமும் கும்பிட்டுகும்பிட்டு ராமனும் சீதையும் ப்ரியாவின் இஷ்ட தெய்வங்களாகிவிட்டனர். போதாக்குறைக்கு அவளப்பா தினமும் கதை சொன்னால் தான் தூங்குவள். அதனால் ப்ரியாவின் அப்பா ராமாயணம், மகாபாரதக் கதைகளையெல்லாம் ஒன்னு விடாமல் சொல்லிச் சொல்லி அவளுக்கு நம்ம இதிகாசக் கதைகளெல்லாம் அத்துப்படி. பக்கத்தில் உள்ள அடுக்குக் குடியிருப்பில் புதிதாக வந்த வடக்கத்தி க் குடும்பத்தில் ரேஷ்மி என்ற பெண் ப்ரியாவிற்குத் தோழியானாள். இருவரும் சாயந்திரமானால் கோவிலுக்குச் சென்று மணலில் விளையாடிவிட்டு சாயரட்சை தீபாராதனைக்கு கமலியும் போக அவளுடன் தான் வீடு திரும்புவார்கள். இருவரும் ஆறாம் வகுப்பில் அடி வைத்ததும் சுடிதார் யுனிபார்ம் ஆயிற்று. எப்பொழுதும் போல் அந்த ரேஷ்மி பிரியாவை விளையாடக் கூப்பிட வந்திருந்தாள்.நல்ல வளர்த்தி. ஆறாவது படிக்கிறாள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.இப்ப குழ்ந்தைகளெல்லாம் நல்ல கொழுப்பான ஆகாரங்களை விரும்புவதும் அது அவர்களுக்கு குறைவில்லாமல் கிடைப்பதாலும் அபரிமிதமான வளர்ச்சி உடலில் நன்கு தெரிகிறது.வடக்கத்திப் பெண்ணுக்கே உண்டான நல்ல எலுமிச்சம் பழ நிறம். ப்ரியாவும் நல்ல நிறந்தான். ஆனால் அந்தப் பெண்ணருகே ப்ரியா கொஞ்சம் டல்லாகத்தான் தெரிவாள்.ரேஷ்மி ரொம்பக்குட்டையான கவுண் அணிந்திருந்த்தால் வாழத்தண்டு போன்ற வழவழப்பான செம்பொன்னிறத்தில் பள பள வென்று மின்னுகின்றஅவளின் தொடைகள் பிரமிப்பூட்டுவதாக தோன்றியது கமலிக்கு. பதினொன்று வயசிலிருந்து எண்பத்தொறு வயசு வரை உள்ள ஆண்களில் முக்கால் வாசிக்கு மேல் வக்கிரம் பிடிச்ச விகாரமுள்ள நாய்களாச்சே சந்தர்ப்பம் கிடைக்காதவரை நல்லவர்கள் என்ற முகமூடியில் ஒளிந்து திரியும் மிருகங்களாச்சே என்ற கவலையால் கமலி ரேஷ்மியிடம்

” அவசரத்தில் உன் தங்கையுடைய கவுணைப் போட்டுக் கொண்டு வந்து விட்டாயா விளையாட ”

” இல்லை ஆண்டி! என்னோடுதான்”

“அப்படியா! ரொம்ப சின்னதாகிவிட்டது. இனிமேல் கொஞ்சம் பொ¢சாகப் போட்டுக்கோ. வளர்ந்துட்ட இல்லியா” என்றாள் கமலி.

கூடவே தன் பெண்ணையும் இதுவரை பார்க்காத கோணத்தில் பார்த்த பொழுதுதான் ப்ரியாவின் மீதும் இயற்கை அழகை வாரி இறைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பது புரிய ஆரம்பித்தது. அடுத்த நாளே பஜாருக்குச் சென்று காட்டன் சுடிதார் ப்ரியாவின் ஸ்கூல் யுனிபார்ம் சைஸ¤க்கு ரெண்டு வாங்கி வந்ததுவிட்டாள் எப்பவும் போல் ப்ரியா விளையாடப் புறப்பட கமலி அவளிடம் புது சுடிதாரை நீட்டியபடி

” இதைப் போட்டுக் கொண்டு போ” என்றாள்.

“ஐ! புதுசா! நன்னாருக்கே! விளையாடப் போட்டுண்டு போனால் அழுக்காகிடுமே. நான் வெளியே போக வச்சுக்க்றேன்”

“இல்லைடி! கோந்தே!இப்பல்லாம் எங்கு பார்த்தாலும் டெங்கு, டங்கு என்னென்ன்மோ வியாதி எல்லாம் கொசுக் கடியால் வ்ருது என்கிறார்கள்.சுடிதார் போட்டுண்டா காலெல்லாம் முழுசா கவர் ஆயிடுமில்லையா. கொசுக்கடியிலிருந்து ஒரளவு தப்பிக்கலாமே. அதுக்குத்தான் சுடிதார் போட்டுக்க ச் சொல்றேன்.அழுக்கான பரவாயில்லை. தோச்சுக்கலாம். சாதா சுடிதார்தானே. தினமும் போட்டுக்கத்தானே வாங்கிருக்கு” என்றாள். ப்ரியாவும் சுடிதாரில் வளையவர ஆரம்பித்தாள்.பாவம் அவள் தோழி ரேஷ்மி தான் குட்டை கவுண்களில் வலம் வந்து அங்கிருந்த விடலைகளின் தூக்கத்தையும் மனசையும் கெடுத்துக் கொண்டிருந்தாள் என்று கோவிலுக்கு வம்பு பேசுவதற்கென்றே வரும் ஜனங்களின் பேச்சுகளில் தெரிந்தது.

அதுமட்டுமில்லை ஒரு ஆட்டோவில் டியுஷனுக்குப் போய்க் கொண்டிருந்த அவளை அந்த அரும்பை மலர்வதற்கு முன்னே ஆட்டோக்காரனும் அவன் சகாக்களும் கசக்கி முகர்ந்து விட்டதாகவும் அரசல் புரசலாகப் பேசிக் கொண்டார்கள். கமலி ப்ரியாவிடம் ரேஷ்மி பற்றி க் கேட்டதும் அவள் ஸ்கூலுக்கு வருவதில்லை என்றும் அவர்கள் வீடு மாறிப் போய்விட்டதாகவும் சொன்னாள்.அந்தப் பெண்ணிடம் சொன்னதை அவள் அம்மாவிடம் சொல்லாம்ல் போனோமே என்ற குற்ற உணர்வு தோன்றி மறைந்தது கமலிக்கு. கோவிலில் ஏக்கச்சக்கக் கூட்டம். அர்ச்ச்னைத் தட்டை வாங்கிப் போனாலும் அந்தக் கூட்டத்தில் புகுந்து போய் அர்ச்சனை செய்யமுடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே கமலி என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்க திரும்பிப் பார்த்தால் அவள் தோழி பக்கத்துத் தெரு சுமதி நின்றிருந்தாள். நெருங்கி வந்த அவள் ” என்ன அதிசயமா! கோவிலுக்கு வந்திருக்க” என்றாள். எங்க! ப்ரியா பத்தாவது படிக்க ஆரம்பித்ததும் டியுஷன், ஸ்பெஷல் கிளாஸ் அது இது என்று ஆகி விட்டது. மேலும் வயதான மாமியாரும் எங்களுடன் வந்து விட்டதால் வீட்டை விட்டு நகரமுடிவதில்லை” என்றாள். “இந்தக் கூட்டத்தில் அர்ச்சனை ஒன்னும் பண்ணிக்க முடியாது. கொண்டு வந்த பூ, எண்ணெயை கொடுத்துவிட்டு சுவாமி தரிசனம் பண்ணிவிட்டுப் போய் விடுவோம் என்று சுமதி சொல்ல இருவரும் கூட்டத்தில் அடித்துப் பிடித்து தரிசனம் செய்து விட்டு கிடைத்த ப்ரசாதத்துடன் வீடு போய் சேர்ந்தார்கள்.

சனி இரவு சாவகாசமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கமலி ப்ரியாவிடம் ” உன் பொறந்த நாளுக்கு இன்னும் பத்து நாட்கள் தானே இருக்கு அப்பாவோட போய் நாளைக்கு உனக்கு வேணுங்கிற டிரஸ்கள வாங்கிண்டு வந்துடேன்” என்றாள். சாரங்கனும் ” என்ன ப்ரியா! நாளைக்கு காலம்பறேயே போய்ட்டு வந்துடுவோமா” என்றான்.” அம்மா! நீயும் வாயேன்” என்றாள் ப்ரியா.” வயசான பாட்டி ஆத்தில இருக்கா. விட்டுட்டெல்லாம் வர முடியாது. நீங்க போய்ட்டு வாங்கோ” என்றாள். ப்ரியா சாரங்கனிடம் ” அப்பா! என் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் லெக்கின்ஸ் வச்சுண்ருக்கா. எனக்கும் வேணும். நாளைக்கு அதுவும் வாங்கனும். வில ரொம்ப இல்லை. ஒரு செட் நாலு பீஸ். நாலு வேறுவேறு கலர். டாப் மட்டும் மாத்தி மாத்திப் போட்டுக்கலாம். ரொம்ப சௌகா¢யமா இருக்கு என்று என் ப்ரெண்ட்ஸ் சொல்கிறார்கள்” என்றாள். கேட்டுக் கொண்டிருந்த கமலி ப்ரியாவிடம் ” ரொம்ப இறுக்கமா தொடையோட வடிவத்த வெளிச்சம் போட்டுக் காட்டிண்டு அலையற்தே சிலதுகள். அதத்தானே சொல்றே” என்றாள். ப்ரியா கோபமாக ” நீ ஒரு பத்தாம் பசலி எதையும் குறுகிய கண்ணோட்டத்தொடயே பாரு உனக்கு அந்த காலத்திலே சுதந்திரம் கொடுக்காத்தாலே நீங்களெல்லாம் போர்த்திண்டு அலஞ்சமாதிரி இப்ப யாரும் அலயறதில்ல. இளமையாக இருக்கும் பொழுது தான் இதெல்லாம் போட்டு அனுபவிக்க முடியும் புரிஞ்சுக்கோ” என்றாள்.

” பத்தாம் பசலின்னோ அல்லது பழைய பஞ்சாங்கம் என்றோ என்ன வேணாலும் சொல்லிட்டுப் போ. தோளுக்கு மேல வளந்துட்ட. படிச்சுமிருக்க.ரெண்டு விஷயம் சொல்லிடறேன். ஒன்னு ரொம்ப உஷ்ணமான நம்ம ஊர்கள்ள இறுக்கமான ஆடைகள் அதுவும் சிந்தெட்டிக் ஆடைகளை இறுக்கமாக உடுத்துவது ஆரோக்கியத்துக்கு கேடு.சொட்ட சொட்ட நனையறமாதி ஊத்தற வியர்வை வெளியேற முடியாத்தால் தோல் வியாதி வரவும் வாய்ப்புகள் உண்டு. எனது சிறிய பொது அறிவை வைத்துச் சொல்கிறேன். வேண்டுமானால் யாராவது டாக்டர்களைக் கேட்டுப் பார். ரெண்டு. இளமை அழகு எல்லாம் இயற்கை கொடுத்த கொடை.எல்லா மிருகங்களுக்கும் தான். இனக் கவர்ச்சிக்காக. இந்த மாய உலகம் தொடர்ந்து இயங்க எல்லா இன்ங்களிலும் உற்பத்தி கட்டாயமாகத் தேவைதானே. கார்த்திகை மாசத்து நாய் என்று சொல்வார்கள் கேள்விப் பட்டிருக்கியா. மிருகங்களுக்கெல்லாம் புணரும் காலம் என்று ஒன்று உண்டு. அதான் மேட்டிங்க் சீசன் என்பார்களே. ஆனால் 365 நாட்களும் 24 மணி நேரமும் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரே மிருகம் மனிதன் மட்டும்தான். இந்த சினிமா, டீவி,இண்டர்னெட் இத்யாதிகளில் நல்லதும் கெட்டதும் கலந்து கிடக்கு. ஆனால் முக்கால்வாசிக்கு மேல் கெட்டதுக்குத் தானே பயன்படுத்துகிறார்கள். இங்கோ இப்பொழுது எங்கும் எதிலும் அசிங்கம் ஆபாசம். போன வாரம் ஒரு தினசரியில் பார்த்தேன்.பள்ளி கல்லூரிக்குப்போகின்ற பெண்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் பாலியல் தொல்லைக்கு நாள் தோறும் ஆளாக்கப்படுகிறார்கள் என்று. ஆனானப்பட்ட விசுவாமித்திரரே ஏன் அப்படிச் சொல்கிறேனென்றால் விசுவாமித்திரர் ஒரு ராஜ ரிஷி. அதாவது ராஜாவாக இருந்து அனைத்து சுக போகங்களையும் அனுபவித்து அதன் பின் அதிலொன்றுமில்லை என்று உதறிவிட்டு தபசு செய்யச் சென்றவர். சிறு வயது முதல் மனதைக் கட்டுப்படுத்தி பழக்கி வரும் வைராக்யத்தின் சக்தியை விட சுகங்களை அனுபவித்துவிட்டு இதில் ஒன்றுமில்லை என்று உதறி உண்டாகும் வைராக்யத்தின் சக்தி அதிகமானது.அப்படிப்பட்ட விசுவாமித்திரரே ரம்பையின் அங்க அழ்கிலே மயங்கி தபஸைக் கெடுத்துக் கொண்டார்.

நம்மைச் சுற்றி ஆபத்து பல ரூபத்தில் வளைய வந்து கொண்டிருக்கிறது. பெண்ணுரிமையென்று பிதற்றிக் கொண்டு முட்டாள்தனமாக இறுக்கமான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வருவது இந்த ஆபத்துகளின் கண்களுக்கு விருந்து கொடுத்து ஆபத்துகளை விருந்துக்கு அழைப்பதற்கு சமம். வடிகட்டின முட்டாள் கூடஆபத்தை வரவேற்று விருந்து கொடுக்க முயற்சிக்க மாட்டான். ஒழுக்கத்தோடும் நிரந்தர நிம்மதியுடன் கூடிய சந்தோஷத்துடன் வாழ விரும்பினால் கண்ணியமாக உடை உடுத்தி வெளியாட்களின் மனது சஞ்சலப்படாமல் பார்த்துக் கொண்டால் ஒரளவிற்கு நிச்சயமாக பாதுகாப்பு கிடைக்கும். இது ஒரு தற்காப்பு முயற்சி. இயற்கை கொடுத்த இளமையையும் அழகையும் பொது இடத்தில் தவறாக ப் பயன் படுத்தினால் அதன் மோசமான விளைவுகளையும் சந்திக்கத்தான் வேண்டிவரும்.சீரழிந்து போன சமூகத்தை சுலபமாக திருத்த ஒன்னும் முடியாது. தனி நபர்கள்தான் தற்காத்துக் கொள்ள உடை உடுத்துவதிலிருந்து எல்லாவற்றிலும் கண்ணியமாக நடந்துக்கணும். கோவில்களுக்கு கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்று சொன்னதே மற்றவர்களுக்கு கவனச்சிதறலும் மனசஞ்சலமும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் தான். ஆனால் மெத்தப் படித்த நீதிமான்கள் நோக்கத்தை ஆராயாமல் முடிவுகள் சொல்கின்ற லட்சணத்தில் சமூகம் இருக்கிறது. உன் தோழி ரேஷ்மியை ஞாபகமிருக்கா.அப்போழுது நீ சின்னக்குழந்தை. உனக்கு எதுவும் தெரிந்திருக்க முடியாது . எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன்” என்று கூறிக் கொண்டே அடுக்களைக்குள் சென்று விட்டாள் கமலி. ப்ரியா ” என்னப்பா! அம்மா பேசிக் கொண்டே இருக்கிறாள்.நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே” என்றாள். “இந்தக் கருத்துகளில் உடன்பாடு இல்லாமலிருந்தால் தானே பேச வேண்டும்

என்ன!நீஎன்னையும் பத்தாம் பசலி, பழம் பஞ்சாங்கம் என்று சொல்வாய். போகட்டும். எனக்காக ஒரு வாரம் இதனை அலசி ஆராய். முடிந்தால் லெக்கின்ஸ் அணிந்து வருபவர்களை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் கூர்ந்து கவனி அடுத்த வாரம் டிரஸ் எடுக்கப் போகும் பொழுது நீ விரும்பினால் கட்டாயம் லெக்கின்ஸ் வாங்கித் தருகிறேன்.எங்கள் கருத்துகளை உன் மீது நான் திணிக்க என்றும் முயற்சிக்க மாட்டேன்.
நல்லது கெட்டதுகளை ச் சொல்ல வேண்டியது எங்க்ள் கடமை.வாழப்போற நீ எதையும் யோசித்து முடிவு செய்.” என்று முடித்தான் சாரங்கன்.
அடுத்த வாரம் டிரஸ்கள் எடுத்தபின்பு ப்ரியாவிடம் சாரங்கன்

” லெக்கின்ஸ¤ம் வாங்கிடுவோமா ”

“இல்லை. வேண்டாம்”

” எங்களுக்காக உன் ஆசையைத் தியாகம் செய்யாதே. வாங்கிப் போவோம். உபயோகித்துப் பார்த்து பிடிக்கவில்லையென்றால் தூக்கி எறி. அவ்வளவுதானே”

” இல்லை. எல்லாம் புரிந்து கொண்டுதான் மனப்பூர்வமாக வேண்டாமெங்கிறேன்”

“சிட்டுக்குருவிக்கு ரெக்கை முளைத்தாகிவிட்டது. அடுத்த வருடமே உலகில் எந்த மூலைக்குப் பறந்து போகப் போகிறதோ. அதனால் எப்பொழுதும் போலில்லாம்ல் இந்த வருஷ்ம் சிட்டுக்குருவியின் பொறந்த நாளை கொஞ்சம் விமா¢சையாகக் கொண்டாடனும்ன ஆசை. உன் நண்பர்களையெல்லாம் கூப்பிடறயா”

” சிட்டுக் குருவி உங்களயும் உங்கள் அபரிமிதமான அன்பையும் விட்டு எங்கும் பறந்து போகாது. வேணுமான என்னுடைய நெருங்கிய சினேகிதர்கள் ஒரு நாலு பேரைக் கூப்பிடட்டுமா”

“OK”

பொறந்த நாள் பார்ட்டிக்கு வந்திருந்த நண்பர்களை ப்ரியா பெற்றோருக்கு அறிமுகப்படுத்தினாள். ஒரு பையன் மட்டும் வ்ந்திருந்தான். அவனை அறிமுகப் ப்டுத்தும் போது “அப்பா! PBசீனிவாஸ், AMராஜா என்று அடிக்கடி சொல்வாயே. அது போன்ற மெஸ்மரைஸிங்க் ஸ்வீட் வாய்சாக்கும் இந்த சையத்துக்கு. இவன் குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் ரொம்ப ஸ்மார்ட் அண்ட் இண்டெலிஜண்ட் ஆக்கும். பஜாரில் செலக்ஷன் என்று ஒரு ரெடிமேட் கடை இருக்கிறதில்லையா. அது இவர்களுடையதுதான். அவன் வீட்டுக்குப் போயிருக்கிறேன். அவன் அம்மாஅப்பாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.” என்றாள்.

கமலி அந்தப் பையனை ஒருமுறைக்கு இருமுறை கூர்ந்து பார்த்தாள். சையத் ரொம்ப ஹேண்ட்சம் என்று தோன்றியது. ப்ரியா அவனிடம் உரிமையுடனும் சற்றுக் கெஞ்சலாகவும் பாடும் படி கேட்க அவன் முதலில் சிறிது தயங்கினாலும் பின் பழய பாடலொன்றை பாடினான். “கண் படுமே! பிறர் கண் படுமே!நீ வெளியே வரலாமா!” என்று ப்ரியாவைப் பார்த்துக் கொண்டே பாடினான். ப்ரியாவும் அவன் பாடுவதையே பார்த்துக் கொண்டு சிரித்து ரசித்துக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கமலியின் மனதில் சந்தேகப் பேய் புகுந்து தேவையற்ற பயங்களை உருவாக்கியது.
பார்ட்டி முடிந்து எல்லோரும் போன பின்பும் ப்ரியா சையத்தின் குரலையும் பாட்டையும் பற்றியே பேசிக் கொண்டிருந்தது கமலிக்கு எரிச்சலை உண்டாக்கியது. ப்ரியாவுக்குத் தெரியாமல் கமலி சாரங்கனிடம் ப்ரியாவைக் கண்காணிக்கும் படி வேண்டினாள். சாரங்கன் கண்டு கொள்ளவில்லை.

ஒரு நாள் ப்ரியா கமலியிடம் வந்து ப்ராஜக்ட் ஒர்க்குக்கு காலேஜில் யார் யார் எந்த் டீம் என்று சொல்லி விட்டதாகவும் அவள், கீர்த்தி,சையத் மூவரும் ஒரு டீம் என்றும் சொன்னாள்.சாரங்கன் வந்ததும் அவனிடமும் இதைச் சொல்லிவிட்டு “சையத் ஒரு ப்ராஜக்ட் சொன்னான. ரொம்ப இண்டரஸ்டிங்க்.அதைத்தான் பண்ணப் போறோம். “எனக்கு இரண்டாயிரம் ரூபாய் வேண்டும்ப்பா. ப்ராஜக்ட் பண்ண மெட்டிரியல்ஸ் எல்லாம் வாங்கனும். வர சனிக்கிழமை நாங்கள் மூவ்ருமாகப் போய் வாங்கலாமென்றிருக்கிறோம் ” என்றாள். கமலி இடையில் புகுந்து அப்பாவும் கூட வந்து வேண்டியதை வாங்கித் தருவர் என்றாள்.
ப்ரியா உடனே

“அப்பா எதுக்கு. வீணா அவரைக் கஷ்டப் படுத்தாதே கடைகடையா ஏறி இற்ங்கி எங்கு கிடைக்கிறது என்று பார்த்து வாங்க வேண்டும். நாங்கள் மூவருமாகப் போய் பார்த்துக் கொள்வோம்” என்றாள்.

சாரங்கனும் சரி என்று சொல்லவே கமலி முணுமுணுத்துக் கொண்டே சென்று விட்டாள். காலையிலேயே கடைக்கு போனவர்கள் இரவு 8 மணியாயும் வீடு திரும்பவில்லை. கமலி ப்ரியாவிடம் அடிக்கொருதரம் கைபேசியில் பேசி கொண்டிருந்தாள். இருப்புக் கொள்ளாமல் கீர்த்தியின் அம்மாவிடமும் பேசினாள். ஒருவழியாக 9 மணிக்கு மேல் ப்ரியா சையத்தின் பைக்கில் வந்து வீட்டு வாசலில் இறங்கினாள். சையத் போனதும் கமலி ப்ரியாவிடம்
“கீர்த்தியுடன் வருவதாகத் தானே சொன்னாய்” என்று பதற்றமாகப் பேசினாள். ” கீர்த்தி என்னை க் கொண்டு விட வந்தால் திருப்பி அவள் தனியாக்ப் போக வேண்டி வராதா.அதனால்தான் சையத்துடன் வந்தேன்” என்றாள். அப்பாவைக் கீர்த்திக்கு துணையாக அனுப்பியிருக்கலாமே என்று மீண்டும் குற்றப் பத்திரிகை வாசித்தாள் கமலி. அதன்பின் ப்ராஜக்ட் ஒர்க் இருந்த்தால் ப்ரியா அடிக்கடி தாமதமாக வருவதும் சையத் பைக்கில் கொண்டு வந்து விடுவதும் நடந்து கொண்டிருந்தது. கமலிக்கு இது எதுவும் பிடிக்காததால் ப்ரியாவிடம் காரண காரியமில்லாம்ல் எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். ப்ரியா எதையும் சட்டை செய்யவில்லை.ஆனால் கமலியின் தேவையற்ற மன இறுக்கத்தினால் ப்ரியாவும் கமலியும் அருகருகே இருந்தாலும் விலகி தொலை தூரம் போய்விட்டது போன்ற தோற்றம் உருவாகிவிட்டது. திடீரென்று ஒரு நாள் ப்ரியா சாரங்கனிடம்

‘எங்கள் கல்லூரியில் அடுத்த வாரம் கேம்பஸ் இண்டர்வ்யு நடக்கப் போகிறது” என்றாள். சாரங்கன் ” ஆல் த பேஸ்ட்” சொன்னான் ப்ரியாவுக்கு.
இண்டர்வ்யு முடிந்த அன்று ரொம்ப சந்தோஷமாக வந்த ப்ரியா கமலியிடம் இன்போசிஸ் கிடைத்து விட்டதாகவும் மைசூரில் ஆறு மாதம் பயிற்சி என்றும் சொன்னாள். கமலி கீர்த்தியைப் பற்றிக் கேட்க அவளுக்கு TCS கிடைத்திருப்பதாக ச் சொன்னாள். கமலிக்கு குறுகுறுப்பு சையத்தைப் பற்றி அறிவதில் தான். எனவே அடுத்து சையதைப் பற்றிக் கேட்கவும் அவனுக்கும் இன்போசிஸ் கிடைத்திருப்பதாகவும் இருவரும் சேர்ந்துதான் மைசூரில் பயிற்சி எடுத்துக் கொள்ளப் போவதாகவும் சொன்னாள். சாரங்கன் வரும் வரை காத்திருந்துவிட்டு

கமலி ப்ரியாவிடம் ” நீ வேலைக்குப் போய் சம்பாதித்துத் தான் குடும்பம் நடக்கனும் என்றில்லை. படிக்க வைச்சாச்சு. பாட்டியும் அவள் கண்ண மூடறதுக்குள்ளே பேத்தி கல்யாணத்தைப் பார்க்க்னும் என்று ஆசைப் படறா. படிப்பு முடிஞ்சதும் ஒரு நல்ல பையனாப் பார்த்து கலயாணம் பண்ணி கொடுத்துடறோம் அதுக்க்ப்புறம் நீ வேலைக்குப் போ போகாம்லிரு. எங்க பொறுப்ப நல்ல விதமாக முடிக்க உதவு” என்றாள். “அதெல்லாம் முடியாது. படிச்சுட்டு என்னால சும்மா வீட்டில் இருக்க முடியாது. எனக்கு வேலைக்குப் போகனும்” என்று ப்ரியா பதில் சொல்ல

” உன்ன க் கல்யாணம் பண்ணிக் கொடுத்துடறோம்.கல்யாணம் பண்ணிண்டு ப் போனப்புறம் என்ன வேணுமானாலும் செய்து கொள். நாங்கள் தலையிட மாட்டோம். எங்களுக்குன சில பொறுப்புகள் இருக்கு. அத நாங்க நல்ல விதமாக செய்து முடிக்க உதவி செய்”என்றாள் கமலி.

ப்ரியா திடீரென்று அமைதியாகி விட்டாள்.ஆனால் அவள் காரியத்தில் கண்ணாயிருந்து பயிற்சிக்கு மைசூருக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள்.இடையில் ஒரிரு தடவை வந்த போதும் கமலி சிடுசிடுத்துக் கொண்டேயிருந்தாலும் ப்ரியா அமைதியாக இருந்தே சமாளித்தாள். ஒரு நாள் சாரங்கனிடம் கைபேசியில் தனக்கு பயிற்சி முடியப் போவதாகவும் வேலை பெங்களூரில் என்றும் சொன்னாள்.சாரங்கன் முழுங்கி முழுங்கி சையதைப் பற்றி விசாரிக்க இருவரும் பெங்களூரில் ஒரே அலுவலகத்திற்கு செல்லப் போவதாகவும் சொன்னாள். கமலியிடம் சொன்னால் பூகம்பம் வெடிக்குமே என்ற பயம் பிய்த்து தின்றது சாரங்கனை. சொல்லாமல் விட்டுவிடுவோமா என்று யோசித்தான். பின்னால் பிரச்ச்னை ஆகிவிடுமோ என்று தோன்றவே ப்ரியாவைப் பற்றி மட்டும் கமலியிடம் சொன்னான். அவள் ஒரு விடாக்கண்டன் ஆச்சே. சையதைப் பற்றிக் கேட்டாள். உண்மையை ச் சொல்வதா வேண்டாமா என்று யோசித்தவன் அவனுக்கும் பெங்களூர் தான் என்று ஏதோ சொன்ன ஞாபகம். நான் சரியாகக் கேட்கவில்லை என்று சமாளித்தான். கமலி என்ன சாதாரண ஆளா. நிலைமையை தெளிவாகப் புரிந்து கொண்டு சாரங்கனிடம் சண்டையை துவக்கினாள். சாரங்கன் உடனே அம்மா காதில் விழப் போகிறது என்றான். “ஆமாம்! தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு.இனி என்னத்த மூடி மறைக்க”இனிமேல் நின்றால் விபரிதமாகிவிடும் என்று சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே ஓடித் தப்பினான் சாரங்கன்.கமலியின் புலம்பல்களுடன் நாட்கள் மாதங்களாகி நகர்ந்தன. ஒரு நாள் காலை

சாரங்கன் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது திடுதிப்பென்று வீட்டில் வந்து குதித்தாள் ப்ரியா. சாரங்கனுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. கையும் ஒடல்ல காலும் ஒடல்ல.

“என்ன ப்ரியா ஒரு போன் கூட பண்ணல.ஸர்ப்ரைஸாக இருக்கு”

“ஸர்ப்ரைஸ் கொடுக்கனும்னுதான் போன் பண்ணல ”

“எத்தன நாள் லீவு போட்டுருக்க?”

“இன்னிக்கு ராத்ரியே புறப்பட வேண்டியதுதான்”

” அப்படியென்ன தல போற காரியம்”

“எங்கேஜ்மெண்ட்.” அப்பா! இன்னிக்கு ஆபிஸிலிருந்து கொஞ்சம் சீக்கிரம் வரணும். நான், நீங்க, அம்மா மூனு பேரும் சாய்ந்திரம் சையத் வீட்டுக்கு போறோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கமலி பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்தவள் தடாரென்று வெடித்துவிட்டாள்.

“என்ன அதிகாரம் தூள் பறக்கறது. சம்பாதிக்கிறோம்கிற திமிரா. நாங்க எங்கும் வர முடியாது. வரவும் மாட்டோம். ரெக்கை முளைச்சுடுத்து. உன் இஷ்டத்திற்கு எப்படி வேணாலும் எங்கு வேணாலும் பறந்து போ. ஆனால் நீ அடிக்கிற கூத்துக்கு நாங்க பக்க வாத்தியம் வாசிப்போம் என்று கனவு கூடக் காணாதே.” என்று கத்தினாள்.

” என்னம்மா இப்படிப் பேசற். சயத்திடம் ப்ராமிஸ் பண்ணிட்டு வந்திருக்கிறேன் தெரியுமா”

“உன் ப்ராமிஸக் கொண்டு ஒடப்பில போடு”

“என்னப்பா! என் மேல அன்பும் பாசமும் பொழியற பழைய அம்மா எங்க போய்ட்டாப்பா.நான் அவள தொலச்சுட்ட அதிர்ஷ்ட்டக்கட்டையா”

“இல்லைம்மா! உன் மேல் அளவுக்கதிகமான அன்பும் பாசமும் இருப்பதால்தான் தேவையற்ற கற்பனைகளையும் பயங்களையும் மனதில் தேக்கிக் கொண்டு நீ அவளை விட்டு விலகி விட்டதாக எண்ணி வெந்துருகுவதால் வார்த்தைகளில் வெப்பம் தெறிக்கிறது”

“நான் என் நண்பர்களிடமெல்லாம் உங்களையும் உங்கள் வளர்ப்பையும் பற்றி எவ்வளவு பெருமையாக ப் பேசுவேன் தெரியுமா. அபரிமிதமான அன்பும் பாசத்துடனும் எவ்வளவு இதிகாசக் கதைகள், தர்மங்கள், நல்லது கெட்டதுகளையெல்லாம் எனக்கு சொல்லித் தந்திருக்கிறீர்கள். என் ரத்தத்தில் எல்லாம் ஊறிப் போயிருக்கிறது.ஓழுக்கத்தோடு நல்ல மனுஷியாக வாழ வேண்டுமென்ற என் நினைப்பிற்கு நீங்கள் வளர்த்த வளர்ப்புதானே காரணம்.
சயத் என்னைப் போல் ஒழுக்கமாக வளர்க்கப் பட்டவன். அவன் பெற்றோர்கள் சொந்தத்திலேயே அவனுக்குப் பெண் பார்த்திருக்கிறார்கள். இன்று நிச்சயம் செய்கிறார்கள். அதற்குத் தான் உங்களையும் கூப்பிட்டேன்.

அம்மா! நீ சொல்வது போல் எனக்கு ரெக்கை முளைத்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியிருந்தாலும் நீங்களிருவரும் எத்திசையை காட்டி அதில் எங்கு எப்படி பறக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ அப்படித்தான் பறப்பேன். என் இஷ்டத்திற்கு பறக்க மாட்டேன். என் வாழ்க்கையின் மேல் என்னைவிட உங்களுக்கு அக்கறை அதிகம் என்பது எனக்குத் தெரியும். எனக்கு என் பழய அம்மா வேண்டும் என்று கலங்கிய கண்களுடன் சாரங்கனின் தோளில் சாய்ந்தாள்.

விக்கித்துப் போன கமலியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது.ப்ரியா அவர்கள் வளர்ப்பை பற்றி சொன்னது பெருமையையும் பூரிப்பையும் தந்தது.ப்ரியாவை வாரி அணைக்கத் தாவினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *