ஜன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் நியூஜெர்ஸி வெள்ளை வெளேரென்ற உறைபனியில் இருக்க, என் மனதும் அடிவயிறும் நூற்றுப் பத்து டிகிரி உஷ்ணத்தில் தகித்துக்கொண்டு இருந்தது.
‘தீட்சண்யா! எப்படியடி நீ ஏமாந்தாய்? எல்லா விஷயத்திலுமே ஜாக்கிரதையாக இருப்பாயே… இந்த விஷயத்தில் மட்டும் எப்படிக் கோட்டை விட்டாய்?’ என் மனச் சாட்சி என்னைச் சாட்டையால் அடிக்க, நான் அதன் முன்னால் மண்டியிட்டு மானசீகமாகக் கை கூப்பினேன்.
‘தப்பு என் பேரில் இல்லை. எல்லாம் அந்த ராஸ்கல் அஜய்யால் வந்தது. அஜய்யை அந்த ராத்திரி இங்கே ஸ்டே பண்ண விட்டிருக்கக் கூடாது!’
‘சரி… இனிமே என்ன பண்ணப் போறே?’
‘இப்பவே கனடாவில் இருக்கும் அஜய்க்கு போன் செய்து உலுக்கி எடுக்கப் போறேன்.’
‘உலுக்கி எடுத்தா தப்பு சரியாயிடுமா? நீ கன்சீவ் ஆனது ஆனதுதானே?’ – மனச்சாட்சி என்னைக் கிண்டல் பண்ணிக்கொண்டு இருக்கும்போதே, எனக்குப் பின்னால் அந்தக் குரல் கேட்டது…
”ஏய்… தீட்சண்யா! ஜன்னலுக்குப் பக்கத்துல நின்னுக்கிட்டு அப்படி என்ன பலமான யோசனை?”- கேட்டுக்கொண்டே கிச்சனில் இருந்து வெளிப்பட்டாள் என்னோடு தங்கியிருக்கும் என் கம்பெனி கொலீக் அனிதா. அந்த நேரத்துக்கே குளித்து இருந்தாள். அவள் உடம்பினின்றும் எழுந்த சோப்பு வாசனைகூட என்னுடைய மார்னிங் சிக்னஸை அதிகப்படுத்திக் குடலைப் புரட்டியது. அனிதா கறுப்புக் காபி நிரம்பித் தளும்பும் பீங்கான் கோப்பையுடன் எனக்கு முன்பாக வந்து உட்கார்ந்தாள்.
”நீ காபி சாப்பிட்டியா தீட்சண்யா?”
”இல்ல…”
”ஏன்..?”
”சாப்பிடணும்னு தோணலை.”
”ஏய்! உனக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஓவரா டல்லடிக்கிறே?”
”கொஞ்சம் வயிறு சரியில்லை.”
”ஓ! அதான் விடியற்காலையில் வாமிட் பண்ணினியா? நான் பக்கத்து ஃப்ளாட்ல இருக்கிற எமிலியோன்னு நினைச்சேன். ஆமா, ராத்திரி எங்கே டின்னர் சாப் பிட்டே?”
”சிங்கோட இண்டியன் ரெஸ்டாரென்ட்டில்தான்!”
”சீஸ்ல வறுத்த சிக்கன் சாப்பிட்டிருப்பே?”
”ஆமா!” பொய்யாகத் தலையாட்டிவைத்தேன்.
”இனிமே அந்த ரெஸ்டாரென்ட் பக்கம் போகாதே!”
”எந்த அயிட்டமும் சரியில்லை. அந்த சிங் என்ன பண்றான் தெரியுமா? கோழிப் பண்ணைக்குப் போய், டிஸீஸ் வந்து செத்துப்போன கோழிகளைக் குறைஞ்ச விலைக்கு வாங்கிட்டு வந்து, சீஸ்ல வறுத்து, ஸ்பைஸி பண்ணி கல்லா கட்றான்!”
‘வாந்திக்குக் காரணம் சீஸ்ல வறுத்த சிக்கன் இல்லை. அஜய் என்கிற உண்மையை இவளிடம் எப்படிச் சொல்வேன்?’
அனிதா காபியைக் குடித்து முடித்துவிட்டு எழுந்தாள். என் தோளின் மேல் ஆதரவாகக் கையை வைத்தாள்… ”தீட்சண்யா! யு ஸீம் டு பி வெரி டயர்ட். உடம்புக்கு ரொம்பவும் முடியலைன்னா லீவு போட்டுடு. நான் நம்ம குரூப் லீடர் மெர்ஸி தாமஸ்கிட்டே சொல்லிடறேன்.”
”ம்…” எனத் தலையாட்டினேன்.
அனிதா லஞ்ச் கிட்டை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டாள். ”நான் கிளம் பறேன். படுத்துத் தூங்கி நல்லா ரெஸ்ட் எடு. மத்தியானம் தயிர் சாதம் மட்டும் சாப்பிடு. நான் ஃபார்மஸியில் சொல்லி, ஏதாவது மாத்திரை வாங்கிட்டு வரட்டுமா?”
”அதெல்லாம் வேண்டாம் அனிதா. நீ சொன்ன மாதிரி ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தாப் போதும். நீ மொதல்ல புறப்படு. வாட்டர் டாக்ஸியை மிஸ் பண்ணிடப் போறே!”
”டேக் கேர். அபார்ட்மென்ட்ல தனியா இருக்கே… டோரை நல்லா லாக் பண்ணிக்கோ.”
”ம்… ம்…”
அனிதா புறப்பட்டுப் போனதும், மனசுக்குள் கோபம் முளைத்து, அஜய்க்கு போன் செய்ய நினைத்து, செல்போனைக் கையில் எடுத்தேன். அதே விநாடி… அது ரிங்டோனை வெளியிட்டது. அழைப்பது யாரென்று பார்த்தேன். சென்னையிலிருந்து அப்பா. உற்சாகக் குரலோடு கேட்டார்… ”தீட்சண்யா… எப்படி இருக்கேம்மா?”
”நல்லா இருக்கேன்ப்பா…”
”என்னம்மா… ஆபீஸ் புறப்பட்டுப் போற அவசரத்துல இருக்கியா?”
”இல்லேப்பா… என்ன விஷயம் சொல்லுங்க?”
”நேத்திக்கு நெட்ல மாப்பிள்ளைப் பையனோட போட்டோவை அனுப்பியிருந்தேன். பார்த்தியாம்மா?”
”ம்… பார்த்தேன்!”
”உன் அபிப்பிராயம் என்னம்மா? மாப்பிள்ளை உனக்கு ஓ.கே-ன்னா, கல்யாணப் பேச்சை மேற்கொண்டு ஆரம்பிக்கலாம்னு…”
நான் குறுக்கிட்டேன்… ”அ… அப்பா..!”
”என்னம்மா?”
”எ… எனக்கு அவரைப் பிடிக்கலை!”
”ஏம்மா?”
”எஜுகேஷனல் குவாலிஃபிகேஷன் திருப்தியா இல்லை. இன்னும் கொஞ்சம் பெட்டராப் பார்க்கலாமே!.”
”உன் அண்ணனும் இதையேதான் சொன்னான். சரி, உன்னையும் ஒரு பேச்சு கேட்டுடலாம்னுதான் போட்டோவை உனக்கு அனுப்பிவெச்சேன். சரிம்மா… நான் புரோக்கர்கிட்டே சொல்லி வேற வரன் பார்க்கச் சொல்லிடறேன்.”
”ம்…”
”ஒரு நிமிஷம் இரும்மா. உன்னோட அம்மா கொஞ்சம் பேசணுமாம்!”
”இப்ப வேண்டாம்பா… அம்மா பேச ஆரம்பிச்சுட்டா, நான் ஆபீஸூக்குப் போக முடியாது. சாயந்திரம் ஆபீஸிலிருந்து வந்ததும் நானே போன் பண்றேன்!”
”அதுவும் சரிதான். நீ கிளம்பும்மா. நான் அம்மாகிட்டே சொல்லிக்கிறேன்!” – அப்பா மறுமுனையில் செல்போனை அணைக்க, நான் அனல் நிரம்பிய பெரு மூச்சோடு நாற்காலியில் சாய்ந்தேன். கையோடு கையாக அஜய்க்கு போன் செய்தேன். ரிங்டோன் போய், அஜய்யின் குரல் கேட்டது.
”குட்மார்னிங் தீட்ச்…”
”ஸே… பேட் மார்னிங்!”
”ஏய்! என்ன சொல்றே?”
”உனக்கும் எனக்கும் இன்னிக்கு பேட் மார்னிங்டா.”
”என்னாச்சு? ஊரிலிருந்து ஏதாவது கெட்ட செய்தியா?”
”நீ பண்ண தப்புக்கு ஊர்லேர்ந்து ஏன் கெட்ட செய்தி வருது?”
”குழப்பாதே தீட்ச்! விஷயத்துக்கு வா…”
”போன மாசம் என் ஃப்ரெண்ட் அனிதா இந்தியாவுக்குப் போயிருந்தப்ப, நீ என் அபார்ட்மென்ட்டுக்கு வந்திருந்தே. நான் வேண்டாம் வேண்டாம்னு பிடிவாதமா எவ்வளவோ சொல்லியும் நீ அடம்பிடிச்சு, ஸ்டே பண்ணினே! அதோட விளைவு..?”
”விளைவு…?”
”போன மாசம் நீ எழுதின பரீட்சைக்கு இந்த மாதம் ரிசல்ட் வந்தாச்சு. இன்னிக்குக் காலையில் கண் விழிச்சதிலிருந்து எனக்கு மார்னிங் சிக்னஸ். தமிழ்ல சொல்றதுன்னா மசக்கை. விடிகாலை அஞ்சு மணியிலிருந்து வாமிட், குமட்டல்னு அவஸ்தைப்பட்டுக்கிட்டு இருக்கேன்டா!”
”மை குட்னஸ்!” – அஜய் மறுமுனையில் அதிர்ந்து போனதை என்னால் உணர முடிந்தது.
”தீட்ச்! ப்ரக்னன்ஸி கன்ஃபர்ம்தானா?”
”இதை கன்ஃபர்ம் பண்ணிக்க வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போய் ஏடு எடுத்துப் பார்க்கணுமா என்ன? சரியா இருபது நாள் தள்ளிப் போயிருக்குடா…”
”நீ எப்படி இதைக் கவனிக்காம விட்டே?”
”ஒரு மாசமா ஆபீஸில் பயங்கர வொர்க்லோட். அந்த டென்ஷன்ல இந்த பயலாஜிக்கல் கணக்கைக் கவனிக்க மறந்துட்டேன்.”
”இப்ப என்ன பண்றது?”
”நீ உடனே புறப்பட்டு வா!”
”என்னது… நான் புறப்பட்டு வர்றதா? விளையாடறியா நீ? நான் கனடாவில் இருக்கேன். நீ நியூஜெர்ஸியில் இருக்கே..!”
”இருந்தா என்ன? அடுத்த ஃப்ளைட்டைப் பிடிச்சு உடனே வந்து சேரு!”
”இதோ பார் தீட்ச்! எனக்கு கம்பெனியில் லீவு கிடைக்கிறது கஷ்டம். நான் ஒரு யோசனை சொல்றேன். அதன்படி நீ செய்றியா?”
”சொல்லு!”
”நியூஜெர்ஸியில் ஹட்ஸன் லேக் அவென்யூ தெரியுமா?”
”தெரியும்…”
”அங்கே சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டரம்மா இருப்பாங்க… அவங்க பேரு மீனாம்பிகா. நல்ல கைன காலஜிஸ்ட். போய்ப் பாரு. விஷயத்தைப் பக்குவமா எடுத்துச் சொல்லு. சுத்தம் பண்ணிடுவாங்க.”
”நோ…”
”என்ன நோ?”
”மாட்டேன். எனக்கு ரொம்பப் பயமா இருக்கு…”
”பயப்பட ஒண்ணும் இல்லை!”
”நோ… அஜய். நீயும் வரணும்.”
”எனக்கு லீவு கிடைக்காது போலிருக்கே?”
”கேட்டுப் பார், கிடைக்கும்…”
”கிடைக்காது.”
”நான் செத்துட்டதா நினைச்சுக்கோ. லீவு கிடைக் கும்.”
”ஏன் இப்படிப் பேசறே?”
”அப்படித்தான் பேசுவேன். நான் இப்போ எப்படிப் பட்ட நிலைமையில் இருக்கேன்னு உனக்குப்புரியலையா அஜய்?”
”சரி சரி, அழ ஆரம்பிச்சுடாதே! வந்துடறேன்!”
அஜய்க்கு லீவு கிடைத்து, ஃப்ளைட் பிடித்து நியூஜெர்ஸி வந்து சேர்ந்தபோது, மறு நாள் காலை பத்து மணி.
உடனடியாக ஒரு டாக்ஸி பிடித்து, ஹட்ஸன் லேக் அவென்யூவில் இருக்கும் டாக்டர் மீனாம்பிகாவைப் போய்ப் பார்த்தோம். மீனாம்பிகாவுக்கு ஐம்பது வயது இருக்கலாம். செட்டிநாட்டு முகம். இரட்டை நாடி சரீரம். கவனமில்லாத பார்வையோடு கேட்டாள்…
”உங்களுக்கு என்ன பிரச்னை?”
நான் தலையைக் குனிந்துகொண்டே விஷயத்தைச் சொன்னேன். அஜய்யை வெளியே அனுப்பிவிட்டு என்னைச் சோதித்தாள். பிறகு, இரண்டு பேரையும் எதிரில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு, தலையைத் தீர்க்கமாக ஆட்டினாள்.
”நோ! இப்போதைக்கு டி அண்ட் சி சாத்தியமில்லை.”
”டாக்டர்!” அஜய் பதற்றப்பட, மீனாம்பிகா தோள் களைக் குலுக்கிக் கைகளை விரித்தாள்.
”ஐம் ஹெல்ப்லெஸ்! கருவைக் கலைக்க எந்த முயற்சி எடுத்தாலும், அது இந்தப் பெண்ணோட உயிருக்கு ஆபத்தா முடியக்கூடிய வாய்ப்பு இருக்கு…”
அஜய்க்குப் பதற்றம் இன்னும் அதிகரித்தது.
”ப்ளீஸ் டாக்டர்! தீட்சண்யாவின் பிரக்னன்ஸி விஷயம் வெளியே தெரிஞ்சா, அவ வேலை பார்க்கிற சாஃப்ட்வேர் கம்பெனியிலிருந்து அதே நிமிஷம் டெர்மினேட் பண்ணிருவாங்க. மாசத்துக்கு மூணு லட்ச ரூபா சம்பளம் வாங்கிட்டிருக்கா. ரெண்டு வருஷ ஒப்பந்தம். நீங்க அவளைச் சுத்தம் பண்ணலைன்னா… அது எல்லாமே கனவாகி கையை விட்டுப்போயிடும்!”
டாக்டர் மீனாம்பிகா அஜய்யையும் என்னையும் ஒரு கோபப் பார்வை பார்த்தாள். ”இதை எல்லாம் முன்னாடியே யோசனை பண்ணியிருக்கணும். உங்க நன்மைக்காக இப்பவும் சொல்றேன். தீட்சண்யாவுக்கு டி அண்ட் சி பண்றது, மரணத்துக்கு மனு போடறதுக்குச் சமம். நான் மறுத்துட்டதால நீங்க வேற ஒரு டாக்டரைப் பார்க்க முடிவு எடுத்தா… அது முட்டாள்தனமான முடிவு. இங்கே இருக்கிற டாக்டர்களில் பாதிப் பேர் மணி மைண்டட் டைப். பேஷன்ட்களோட உயிர் அவங்களுக்கு முக்கியம் கிடையாது. பணம்தான் முக்கியம். நான் சொல்றதைச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்.”
டாக்டர் கை கூப்ப… நாங்கள் வெளியே வந்தோம்.
ஒரு டாக்ஸி பிடித்து அபார்ட்மென்ட் வந்து சேர்ந்தோம். அனிதா ஷிஃப்ட் முடித்து இன்னமும் ஆபீஸிலிருந்து வீடு திரும்பவில்லை.
கண்கள் கலங்கி, முகம் இருண்டுபோய் உட்கார்ந்திருந்த அஜய்யின் தோள் மேல் கையை வைத்தேன்.
”இப்ப என்ன பண்றது அஜய்?”
”அதான் எனக்கும் புரியலை.”
”வேற டாக்டரிடம் பேசிப் பார்க்கலாமா?”
”வேண்டாம் தீட்ச்! இந்த விஷயத்துல நாம ரிஸ்க் எடுக்க வேண்டாம்.”
”அப்படின்னா பிரக்னன்ஸி?”
”இருக்கட்டும்.”
”வேலை?”
”விஷயம் தெரிஞ்சு அவங்க உன்னை டெர்மினேட் பண்றதுக்கு முந்தி, நீயே வேலையை ராஜினாமா பண்ணிடு.”
”மாசம் பொறந்தா மூணு லட்ச ரூபாய் சேலரி. அந்த வேலையை ரிசைன் பண்றதா?”
”அதைவிட உன்னோட உயிர் பெரிசு இல்லையா? இந்த வேலை போனா என்ன… வேற வேலை கிடைக்காமலா போயிடும்?”
அஜய்க்குப் பதில் சொல்ல நான் வாயைத் திறந்த அதே விநாடி… கதவருகே அந்தக் குரல் கேட்டது.
”தட்ஸ் குட்!”
திரும்பிப் பார்த்தோம். அனிதா உதட்டில் சிரிப்போடு நின்றிருந்தாள். ”நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன். அநாவசியமா எந்தப் பொய் யையும் சொல்ல வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் எடுத்த முடிவுதான் சரி!”- சொல்லிக்கொண்டே உள்ளே வந்த அனிதா, என்னை நெருங்கி தோளின் மேல் கையை வைத் தாள்.
”தீட்சண்யா! நம்ம சாஃப்ட்வேர் கம்பெனியோட ரூல்ஸ்தான் உனக் குத் தெரியுமே? ரெண்டு வருஷ கால ஒப்பந்தம் முடிகிற வரைக்கும் பெண்கள் கன்சீவ் ஆகக் கூடாது; மீறி கன்சீவ் ஆனா, உடனடியா டெர்மினேஷன்தான்னு கொட்டை எழுத்தில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்ல போட்டிருக்காங்களே… அதை நீங்க ரெண்டு பேருமே அலட்சியம் பண்ணிட்டீங்க!”
”இல்லை அனிதா… எவ்வளவோ முன்ஜாக்கிரதையாதான் நடந்துக்கிட்டோம். இருந்தாலும், எங்கே தப்பு நடந்துச்சுனு தெரியலை. விதி விளையாடிருச்சு. நான் கருத்தரிக்கணும்கிறது ஆண்டவன் கட்டளை போலிருக்கு!” என்ற நான், அஜய்யின் முதுகில் குத்தினேன்…
”எல்லாம் இவனால் வந்த வினை!”
”தீட்சண்யா! உன்கிட்டே எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் உண்டுன்னா, அது அஜய்யை இன்னும் ‘அவன், இவன்’னு பேசறதுதான். உனக்கும் அஜய்க்கும் கல்யாணம் நடந்து, ஒரு வருஷம் முடியப்போகுது. இன்னும் நீங்க பழைய லவ்வர்ஸ் கிடையாது.”
அஜய் குறுக்கிட்டான்… ”நோ நோ… மிஸ் அனிதா! தீட்சண்யா என்னை அப்படிக் கூப்பிட்டாதான் எனக்குப் பிடிக்கும். அந்த உரிமையில்தான் நெருக்கமும் உண்மையான அன்பும் இருக்கு!”
”உங்க ரெண்டு பேரையும் இந்த ஜென்மத்தில் திருத்த முடியாது!” – சொல்லிச் சிரித்த அனிதா எங்களுக்கு முன்னால் வந்து உட்கார்ந்தாள்.
”அது சரி… நீங்க ரெண்டு பேரும் ஒரு குழந்தையைப் பெத்துக்க முடிவு பண்ணிட்டீங்க. ஆனா, இந்த விஷயத்தை உங்க ரெண்டு பேர் வீட்லேயும் சொன்னா… ஒரு வீட்ல பூகம்பமும், இன்னொரு வீட்ல சுனாமியும் வெடிக்குமே… அதை எப்படிச் சமாளிக்கப் போறீங்க? ரெண்டு வருஷம் வரைக்கும் தீட்சண்யா குழந்தை பெத்துக்கக் கூடாதுங்கிறதுதானே ரெண்டு குடும்பங்களோட எதிர்பார்ப்பும்…”
”ஒரு பேரனோ, பேத்தியோ பிறந்தா அவங்களோட கோபமும் காணாமல் போயிடும்.” – அனிதாவிடம் சொன்ன அஜய், என்னை ஏறிட்டான். ”தீட்ச்! நேத்து ராத்திரி உன்னோட அப்பா உன் சிஸ்டர் நேத்ராவுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளைப் பையன் போட்டோவை எனக்கு நெட்ல அனுப்பியிருந்தார். நீ பார்த்தியா?”
”ம்… பார்த்தேன்! நேத்து காலையில் அப்பா எனக்கு போன் பண்ணினப்ப ‘மாப்பிள்ளை பிடிக்கலை. எஜுகேஷனல் குவாலிஃபிகேஷன் போதாது. வேற மாப்பிள்ளை பாருங்க’ன்னு சொல்லிட்டேன். அப்பாவும் சரின்னுட்டார்.”
”உனக்குத் தைரியம்தான்!”
”இதுக்கென்ன தைரியம் வேண்டியிருக்கு… மனசுல பட்டதைச் சொன்னேன்!” சொல்லிவிட்டு நான் அனிதாவை ஏறிட்டேன்.
”அனிதா! நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வர்றேன். எனக்கும் அஜய்க்கும் ஏதாவது டிஃபன் பண்ணிக் கொடேன். ஒரே பசி!”
”இதோ… பத்தே நிமிஷத்துல ரவா கிச்சடி ரெடி!” – அனிதா கிச்சனை நோக்கிப் போக, நான் அபார்ட்மென்ட் கடைசியில் இருந்த குளியலறைக்குள் நுழைந் தேன்.
கதவைச் சாத்திக்கொண்டு இடுப்பில் இருந்த செல்போனை எடுத்து, டாக்டர் மீனாம்பிகாவின் எண்ணை அழுத்தினேன். மீனாம்பிகா லைனில் கிடைத்தாள். குரலைத் தாழ்த்தினேன்… ”ரொம்பவும் நன்றி டாக்டர்!”
”எதுக்கு..?”
”நீங்க சொன்ன பொய்க்காக! டி அண்ட் சி பண்ணினா என்னோட உயிருக்கு ஆபத்துன்னு சொன்னதை, என் கணவர் அஜய் நம்பிட்டார்!”
மீனாம்பிகா சிரித்தாள்.
”அந்தப் பொய்யையும் நீதானே சொல்லச் சொன்னே! மாசாமாசம் கிடைக்கிற மூணு லட்ச ரூபாய் சம்பளத்தைக் காட்டிலும், முதன்முதலாக் கிடைச்சிருக்கிற இந்தத் தாய்மைதான் பெரிசுன்னு சொல்லி, அந்தத் தாய்மையைச் சுமக்கிற பாக்கியத்தை நீங்க எனக்குக் கொடுக்கணும்னு முன்கூட்டியே நீ சொன்னது என் மனசுக்குச் சரியாப்பட்டது. அதனாலதான் அப்படி ஒரு பொய்யைச் சொன்னேன். உன் கணவர் இப்பவும் வருத்தத்துலதான் இருக்காரா, தீட்சண்யா?”
”இல்லை டாக்டர்! என்னைக்காட்டிலும் அவர் இப்போ ரொம்பச் சந்தோஷமாவே இருக்கார்.”
”தேங்க் காட்!” என்றாள் மீனாம்பிகா.
– 15-04-09
ஆடுற மாட்ட ஆடிக் கற.. பாடுற மாட்ட பாடிக் கற..! என்பற்கு ஓர் சிறந்த உதாரணம் இந்த சுவையான சிறுகதை.