கனபேர் வந்து போயிருக்கினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 10,948 
 
 

கதைக்கிற ஒருத்தருக்கும் உண்மையிலை சனத்திலை அக்கறையில்லை, எல்லாரும் தங்கடை சுயநலத்துக்கும், நாங்களும் இருக்கிறம் எண்டு அடையாளம் காட்டவும் கதைக்கினம். இன்னொருத்தருக்கு ஒரு கஸ்டம் எண்டால் அரைவாசிப்பேருக்கு சந்தோசம். அரைவாசிப்பேருக்கு அக்கறையில்லை. உண்மையான அக்கறையுள்ளவன் கதைக்கமாட்டான், கதைக்கிறதைவிட செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்குது’

அதிகமான சமூக அக்கறை காரணமாகவோ, இந்த சமூகக்கட்டமைப்பின் மீதான திருப்தியீனமோ, எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமோ தெரியவில்லை, சரவணன் பேச்சில் எப்போதும் இப்படியான ஒருவித கோபம் தெரியும்.

இரண்டுமே மணல்தான் என்றாலும் வடமராட்சி கிழக்கின் சிலிக்கா வெண்மணலுக்கும் புல்மோட்டை இல்மனைற் கருமணலுக்கும் எவ்வாறு ஒத்த இயல்புகள் எவையும் இல்லையோ அதுபோல, வெளிமாவட்டத்தில் ஒருபோதும் வேலைசெய்யாதவர்கள் என இனங்காணப்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிப் பெருநிலப்பரப்பின் தொலை தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டவர்கள் என்பதைத்தவிர ஒரே உத்தியோகம் பார்த்தாலும் வேறு எவ்விதத்திலும் எங்கள் இரண்டு பேருக்கு இடையிலும் இன்றுவரை கருத்தொற்றுமை காணமுடியாமல் இருந்தது.

கொக்கிளாயிலிருந்து நான்கு மணிக்குப் புறப்பட்ட தனியார் பேரூந்து அளம்பில் கடந்தபோது, சாரதியாலும் நடத்துனராலும் இனங்காணமுடியாத நோயினால் தாக்கப்பட்டுவிட, பேரூந்திற்கு ஏற்பட்ட நோய் இன்னதென நிர்ணயம் செய்து சிகிச்சையளிப்பதற்காக வேறொரு நிபுணரின் வரவிற்காக தெருவோரம் வெகுநேரம் காத்திருக்கவேண்டியிருந்த ஒரு வெள்ளிக்கிழமை மாலை வேளை.

‘நாங்கள் என்னதான் செய்தாலும் எங்கடை சனம் சீரழியிறன் பந்தயம் பிடி எண்டுதான் மச்சான் நிக்குதுகள்’

சிகரட் ஒன்றைப்பற்ற வைத்தபடி நான் கதையை ஆரம்பித்தபோது ஆமோதிப்பது போல சிரித்தான். இன்று சமூக அக்கறையுள்ள பலராலும் பேசப்படும் சமுக சீர்கேடுகளின் அதிகரிப்பின் வேதனை என்னையும் பேசவைப்பதுண்டு.

‘ஒருகாலத்திலை என்னமாதிரி இருந்தசனம், ஒழுக்கம் மலிஞ்சிருந்த பூமி. இண்டைக்கு புருஷன் இல்லாமல் குழந்தை பிறந்த கதையளும், பிறந்த குழந்தையை புதைச்ச, வீசின கதையளும், மூண்டு நாலு கலியாணம் கட்டின கதையளும் மலிஞ்சு போய்க்கிடக்குது. எல்லாரும் கதைச்சும், கவலைப்பட்டும் ஒண்டும் நடக்குதில்லை மச்சான். நாங்களும் இந்தச்சனத்தை நல்லாக்கிப்போடவேணும் எண்டு யோசிக்கிறம். ஆனால்………..’ நான் கதையை இன்னும் முடிக்கவில்லை.

‘கதைக்கிற ஒருத்தருக்கும் உண்மையிலை சனத்திலை அக்கறையில்லை……… என்ற சரவணனின் கோபம் இவனிடம் பேச்சுக் கொடுத்தது தவறோ என்று எண்ண வைத்தது. சுதாரித்துக்கொள்ள அதிக நேரமெடுத்தது. சிகரட் பற்றவைப்பதற்காக பிரயாணிகளிலிருந்து தொலைவாக வந்தது இப்போது நல்லதாகப்பட்டது.

இந்தச் சமூகத்தை அவலங்களில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்போடு உழைக்கின்ற அத்தனை பேரையும் ‘எல்லாரும் தங்கடை சுயநலத்துக்கும், நாங்களும் இருக்கிறம் என்று அடையாளம் காட்டவும் கதைக்கினம்’ என்று கொச்சைப்படுத்தியது வேதனையாக இருந்தது. எத்தனை தனிநபர்கள், எத்தனை அமைப்புக்கள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்த மக்களுக்காக குரல்கொடுக்கிறார்கள்.

அவன் கருத்துக்கள் பெரும்பாலான வேளைகளில் நான் விரும்பத்தக்கதாக இருப்பதில்லை. ஆனாலும் அநேகமான நேரங்களில் நான் எதிர்வாதம் செய்வதில்லை. ஆனால் இன்று

‘எனக்குச்சொன்ன மாதிரி வேறை ஆருக்கும் சொல்லிப்போடாதை மச்சான். எங்களை சமூக அக்கறையுள்ள படிச்ச மனிசர் எண்டு சிலபேர் நம்புகினம். சனத்தின்ரை வேதனை விளங்காதவங்கள் கதைக்கிற மாதிரி நாங்களும் கதைக்கக் கூடாது. எனக்கும் கவலைதான் மச்சான். உடைஞ்ச குடும்பங்கள் சமூகத்திலை அதிகமாகுது. அதாலை வரப்போற குடும்ப, சமூகப் பிரச்சனையள் இந்த சமூகத்தை அவலமாகத் தாக்கப் போகுது. இதுக்கெல்லாம் கதைக்கிறது தீர்வில்லை. தீர்க்கவேண்டிய கனபேர் வேறை காரியங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறம்.’ என்று சமூகச்சீரழிவையும் சோரம் போவதையும் நியாயப்படுத்தி தொடர்ந்தும் பேசியபோது தவிர்க்கமுடியவில்லை.

‘நான் சொல்லுற மாதிரி ஒண்டும் நடக்கயில்லை எண்டு சொல்லுறியோ?’ என்ற என் கேள்வியில் ஒருவித ஆவேசமிருப்பதை என்னாலேயே உணரமுடிந்தது.

‘சமூகமீறல் எல்லாக்காலத்திலையும் இருந்திருக்குது பாலா!. இருக்கிற சமூக நிலைமையைப் பொறுத்து அளவு கூடிக்குறையும். பிழைசொல்லுகிற உங்களைப்போலை ஆக்களுக்கு அந்த வேதனை விளங்காது. எல்லாக்காரியத்திற்குப் பின்னாலையும் நிச்சயம் காரணங்கள் இருக்கும்.’

எல்லாம் தெரிந்தவன் போல எதையெடுத்தாலும் விமர்சிப்பதும், மட்டந்தட்டிப் பேசுவதும் பலரை அந்நியமாக்கும் என்ற அடிப்படை விடயம் கூட புரியாதவன்.

‘நீ கதைக்கிறது எனக்கு விளங்கயில்லை சரவணன்! இப்பிடி நடக்கிறது சரியெண்டு சொல்லுறியோ’

‘ நான் இதிலை சரி பிழை கதைக்கயில்லை, நீ சொல்லுகிற கதையள் மாதிரி எனக்கு நிறையக்கதை தெரியும் பாலா! இந்தமாதிரி சம்பவங்கள் நடக்கவே இல்லை எண்டதை எப்பிடி அறுதியிட்டுச் சொல்ல ஏலாதோ, அதே போலை அப்படித்தான் நடந்தது எண்டதையும் ஒரு போதும் நிரூபிக்க ஏலாது. ஆனால் பிரச்சினையைத் தீர்க்கவேண்டிய நாங்கள் அதை விட்டிட்டு வீண்கதை பேசித்திரியிறம் எண்டுதான் சொல்லுறன் ‘
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா. முதலையை ஒரு கை பார்ப்பதென மனதில் முடிவு செய்து கொள்கிறேன்.

‘சரி சரவணா! எப்பிடித்தீர்க்கலாமெண்டு நீ சொல்லு? ஆதரவாகச்சிரித்தான். சிரிப்பின் அர்த்தம் விளங்கவில்லை.

‘மச்சான்! இலட்சியம் பேசிற எங்கடை தலைவர்கள், அவலங்களைச் சொல்லி அழவைச்சு புகழ் தேடுகிற படைப்பாளிகள், பத்திரிகைகள் மாதிரித்தான் நீயும் கதைக்கிறாய். இண்டைக்கு வெளிநாடுகளிலை செங்கொடி பிடிக்கிறவை, உள்நாட்டிலை உணர்வாளர்கள் எண்டு சொல்லித்திரியிறவை, இவையளிலை கனபேர் கல்யாணமாகாதவைதான். இவை ஒவ்வொருத்தரும் அநாதரவாய் நிக்கிற ஒரு குடும்பத்தைப்பொறுப்பெடுப்பினமோ ? கல்யாணமானவையும் விரும்பினால் செய்யலாம், ஏலுமோ? ஏலாதவை கதைக்கக்கூடாது’

தொலைவாகப் பார்த்தபடி பேசியது எதற்கோ எனக்கு அனுதாபம் சொல்வது போலப்பட்டது. அவனது பேச்சில் என்மீதான கோபம் துளியும் இருக்கவில்லை. பேரூந்தின் ஹோர்ன் அலறியது.

‘பஸ் சரியாம் மச்சான்! வாடா. இண்டைக்கும் சாமத்திலைதான் வீட்டை போகலாம்’

பயணத்தில் அதிகமான நேரம் பேசாமலே வந்தான். அந்த அமைதி உறுத்தியது.

‘சரவணன்! சைக்கிள் ரவுணிலை விட்டிட்டே வந்தனி’
என்ற கேள்விக்கு உற்றுப்பார்த்தான்.

‘சைக்கிள் இல்லையடா மோட்டபைக். இண்டைக்கு யாழ்ப்பாணம் போய்ச்சேர இரவு இரண்டு மணியாகும். இப்போதும் சிரித்தான்.

– அக்டோபர் 2013

நாடாளவிய ரீதியில் நடத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் தேசிய மட்டத்தில் சிறுகதைக்கான முதல்பரிசினை வென்ற கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *