“டிங்டாங். டிங்டாங்”
காலிங்பெல் சப்தம் கேட்டு பரமேஸ்வரன் எழுந்து கதவைத் திறந்தவர்.
“ஓ… பிருந்தாவா? வா, வா குட் ஈவினிங்” உற்சாகமாக வரவேற்றார்.
“குட் ஈவினிங், எங்கே சார் ஒய்ப் இல்லே?”
‘இருக்கா, இருக்கா அவ உலகத்திலே ஐ மீன் அடுப்படியிலே.’
அதைத் தொடர்ந்து க்ளுக்’ என்று சிரித்தாள் பிருந்தா.
உள்ளே வேலையாய் இருந்த நீலாவின் உள்ளம் இந்த உரையாடலைக் கேட்டு கொதித்தது “வந்துவிட்டாளா, துப்புக்கெட்டவ. ஆபீசில் அடிக்கும் கொட்டம் போதாதென்று வீட்டிற்கும் அல்லவா வந்து விடுகிறாள், சே! வெட்கங்கெட்ட ஜென்மங்கள்!” உள்ளுக்குள்ளேயே பொருமினாள்.
“நீலா, இரண்டு கப் காபி கொண்டு வா” ஆணையிட்டார் பரமேஸ்வரன்.
“உள் நிலவரம் தெரியாமல் என்ன ஆர்டர் வேண்டி இருக்கு? அவளைக் கண்டு விட்டால் இவருக்குத்தான் ஏன் இப்படி தலைகால் புரியாத சந்தோஷம். காபி பொடி இருக்கிறதா இல்லையா என்பதுகூட தெரியாமல் என்ன உபச்சாரம்?”
எரிச்சலோடு இருந்த டிகாஷனை ஊற்றி வேண்டா வெறுப்பாக எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தாள்.
சிநேகமாய் சிரித்த பிருந்தாவைப் பார்த்து எரிந்த உள்ளத்தைக் கட்டுப்படுத்தி இளநகையை வெளியிட்டவாறே “சவுக்கியமா? அடுப்பில வேலை இருக்கு இதோ வரேன்” என்று கூறி விட்டு அங்கு நிற்கப் பிடிக்காமல் அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள்.
உள்ளே இருந்தாலும் அவள் செவிகள் மட்டும் வெளியே நடக்கும் அரட்டையில்தான் நிலைத்திருந்தது.
காபியை உறிஞ்சியபடியே பிருந்தா, “ஏன் சார் ஏதோ புதிய கதை எழுதியிருப்பதாக சொன்னீர்களே, என்ன கதை கொஞ்சம் சொல்றீர்களா?”
“பார்த்தாயா, பிருந்தா உன்னைப் பார்த்த சந்தோஷத்தில் அதை நான் மறந்தே போயிட்டேன் எக்ஸ்யூஸ்மீ! கதையின் முடிவை இன்னும் நான் எழுதலே. ஏன்னா முடிவை நீதான் சொல்லணும்கிறதுக்காகத்தான் முடிக்காம வைச்சிருக்கேன் கதையைக் கேளு.
பிரசாத் ஒரு தலைசிறந்த ஓவியன். அவன் தான் பார்க்கிற எந்தக் காட்சியையும் கற்பனைத் திறத்தோடு தன் கைவண்ணத்தில் காட்டுபவன். அவன் ஓவியத்தை பாராட்டாதவர்களே கிடையாது! ஆனால் அவனுக்கு வாய்த்த மனைவியோ கொஞ்சமும் ரசனையே இல்லாதவள் அழகு உணர்ச்சியோ, கலாரசனையோ இல்லாதவள்.
கணவனின் தேவையை நிறைவேற்றுவதும் வீட்டை நிர்வகிப்பதையும் தவிர வேறு ஒன்றும் தெரியாது. தன்னுடைய டேஸ்ட்டுகளுக்கு அவள் சரியானவளாகப் படாததினால் மனம் வெதும்பி தான் வாழும் அமைதியற்ற – உற்சாகமற்ற வாழ்க்கை நிலையை வெறுத்த பிரசாத் அவனுடைய ரசனைகளுக்கு ஈடு கொடுக்கும், எல்லாவிதமான அழகும், அழகுணர்ச்சியும் மிக்க, புத்திசாலிப்பெண் ஒருவளைக் காண்கிறான். இருவருக்குள்ளும் நட்பு வளர்கிறது. அவன் அவளை மனப்பூர்வமாக விரும்புகிறான். அவள் மனதில் அவனைப்பற்றி என்னதான் நினைக்கிறாள்? அதை தெரிந்து கொள்ள அவன் விழைகிறான்.
கதையைச் சொல்லிவிட்டு பிருந்தாவை ஆழமாகப் பார்க்கிறார் பரமேஸ்வரன்.
தன் நட்பை தவறாகப் புரிந்து கொண்டு விட்டாரோ என்று எண்ணிய பிருந்தா அவரைப் போலவே தன் கருத்தையும் அவருடைய பாணியிலேயே சொல்ல ஆரம்பித்தாள்.
“வேண்டாம் பரமேஸ்வரன் வேண்டாம். புதிய சிந்தனையோடு கதை எழுதியிருப்பீர்கள் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து வந்தேன். ஆனால் நீங்களும் குப்பையைத்தான் எழுதியிருக்கீங்க? இதே மாதிரி கருத்துக்களை படிச்சும், கேட்டும், பார்த்தும் எனக்குப் புளிச்சுப் போச்சு. சிவசங்கரியின் கப்பல் பறவையிலிருந்து, பாலசந்தரின் சிந்து பைரவி வரை இதே தீம் தான்!
அந்த ஹீரோ சகல அம்சங்களும் பொருந்தியவனா இருப்பான். அவனுக்கு எந்த விதத்திலும் பொருந்தாத ஒரு மனைவி எப்படியோ சில காலங்கள் வாழ்ந்து பின்பு, ஒரு புதிய பெண்ணின் குறுக்கீட்டால் அவனுக்கு அப்பொழுதுதான் தன் மனைவியைப் பற்றி, அவளது குறையைப் பற்றிய ஞானோதயம் ஏற்படும் சே! இதைவிட்டால் தீமே கிடையாதா!
ரசனை இல்லே ரசனை இல்லேன்னு அலையறானே. ஏன்? திருமணத்திற்கு முன்பே தன் ரசனைகளுக்கு ஏற்ற ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை? சில நாள் எப்படியோ வாழ்ந்து விட்டு அப்புறம் ரசனை இல்லே என்று சொல்லி அவளை வெறுக்கிறதை நினைச்சா எனக்கு சிரிப்பா இருக்கு.
இப்படியே ஒவ்வொருத்தருடைய ரசனையும் போனால் உலகத்திலே வாழாவெட்டிங்க நிறைய ஆகிவிடுவாங்க இது தேவைதானா?
வாழ்க்கைக்குத் தேவை ரசனை இல்லே அன்புதான்! உங்களுடைய படைப்புகளை யாரு வேணுமானாலும் ரசிக்கலாம். ஆனால் எல்லோராலும் உங்ககிட்ட அன்பு செலுத்த முடியாது.
காலப்போக்கில் உங்க ஆற்றல் மறைஞ்சி போனாலோ, மங்கிப் போனாலோ இந்த ரசிகர்கள் ஓடிடலாம். ஆனால் மனைவி அப்படி இல்லே! கடைசி வரை உங்ககூட இருக்கிறவள். இந்த சாதாரண விஷயம்கூட உங்க மூளைக்கு ஏன் எட்டலே! அதிகமா சிந்திச்சு, சிந்திச்சு மூளை புழுத்துப் போயிடுமோ?
வெளி ஆரவாரங்களைக் கண்டு மயங்கிடாதீங்க! இண்டெலக்சுவலாக இருக்கிற அத்தனை பேருக்குமே இப்படித்தான் மூளை வக்கரித்துப் போயிடுமோ? ப்ளீஸ்! பரமேஸ்வரன் இனிமேலாவது இப்படிப்பட்ட தீமை எழுதி சமூகத்தைக் கெடுக்காதீங்க. நல்ல படிப்பினை ஊட்டும் கதைகளை எழுதுங்க!”
மனதில் விழுந்த அடியால் பரமேஸ்வரன் தலைகுனிந்து நிற்க, குழப்பம் நீங்கிய நீலா ஸ்நேக பாவத்தோடு ஓடி வந்து பிருந்தாவின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டாள்.
தவறை உணர்ந்த பரமேஸ்வரன் கண்களாலேயே மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான்.
-11-3-1987