கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 24, 2021
பார்வையிட்டோர்: 13,913 
 
 

பிறரது சோகத்தில் சிரிக்கக்கூடாதுதான், ஆனாலும் இதில் சிரிப்பு வருவதைத் தடுக்கமுடியவில்லை. எம் மூத்தமகள் ருதுவாகி இருந்தவேளையில்த்தான் எமக்கு நாலாவது குழந்தையும் பிறந்திருந்தாள். நேரில் போனில் விசாரித்தவர்களின் குரலில் இருந்த சோகத்தைக் கேட்கத்தான் எமக்குச் சிரிப்புச்சிரிப்பாக வந்தது.

“ இந்தமுறையாவது ஒப்பிறேசனைச்செய்துவிடுங்கோ ”

“அவளைப்பார்க்கிறதோ, இவளைப்பார்க்கிறதோ நல்லாய்க் கஷ்டப்படப்போறியள் ”

‘அப்படி என்ன பார்வை, என்ன கஷ்டம் சனம் எதுக்கு மூக்கால் அழுகுது ’ எமக்குப் புரியவேயில்லை.

ஏழாவது தேறாததுகளே எமக்குக் குடும்பக்கட்டுப்பாடுபற்றி உபதேசிக்கலாயினர்.

அத்தை மாத்திரம் மகளிடம் “ அஞ்சு பிள்ளைதான்டி அதிஷ்டம், அஞ்சாய்ப்பெத்துக்கோ ” என்று உற்சாகப்படுத்தினார்.

கால்நூற்றாண்டுப்போரிலும், இப்போது சுனாமிப்பேரலையிலும் எத்தனை குழந்தைச் செல்வங்களைத் தொலைத்துவிட்டோம்? எமக்கு இன்னும் வீடு நிறைந்த மழலைகள் வேணும். அவர்களைத் தொட்டுத் துய்க்கும் சுகிர்தம் வேண்டும்.

சிலவற்றைப் பூராவும் சொல்லிப்புரியவைக்க முடியாது. புரியாதவர்களை என்ன சொல்ல, அழகழகாக எத்தனை பெயர்கள் சேகரித்து வைத்திருக்கிறோம். அவைகளுக்காகவேனும் குழந்தைகள் வேண்டும் நமக்கு. அதற்கென முடிந்தால் இன்னும் பல ஜென்மங்கள் எடுக்கவும் நானும் சகி ரஞ்ஜினியும் தயார். இங்கத்தைய தமிழ் வட்டத்தில் யாருக்காவது குழந்தை பிறந்ததும் ‘ஒரு பெயர் சொல்லுங்கோ ’ என்று எனக்குத்தானே முதலில் போன் போடுகிறார்கள். என்ன நான் ‘நயனிகா என்று சொன்னால் அது நியூமொரொலொஜிக்குப் பொருந்தவில்லையென்றுவிட்டு ‘ஜோனிகா’ என்றும் ‘ஆரணி’ என்றால் ‘அக்னக்ஷா’ என்றும் எனக்குச் சொல்லாமலே மாற்றி வைத்துவிடுவார்கள், என்பது வேறு விஷயம்.

எந்தவொரு பெயருக்கும் அர்த்தம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறவர்களா நீங்கள், விட்டுத்தள்ளுங்கள் அர்த்தங்களை…….. மனிதன் செயல்களுக்கே அர்த்தங்கள் இல்லாதபோது வெறும் பெயர்களுக்கு எதுக்குங்க அர்த்தங்கள்?

***

1977 இல் ஷியாம் பெனகல் மராத்திமொழியில் ஒரு படம் எடுத்திருந்தார். அதில் தன் சொந்த வாழ்க்கையில் குடும்ப அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பல சமூக அவலங்களுக்காகவும் தன்னந்தனியாக அதிரடியாகப் போராடிப் புரட்சிகள் செய்யும் கதாநாயகியின் பெயர் ‘பூமிகா’. அத்திரைச்சித்திரத்தில் பூமிகாவாக ஸ்மிதா பாட்டீல் வாழ்ந்திருந்தார். அப்படத்தைப் பார்த்த காலத்திலிருந்து மனதில் பதிவாகிப்போன அப்பெயரை எவருக்கும் தராமல் 23 ஆண்டுகள் பொத்தி வைத்திருந்து எம் கடைச்செல்வம் பிறந்ததும் அவளுக்கு ‘பூமிகா’ என்றே பெயர் வைத்தோம். பூமிகாவும் சரியான வால். ஒரு குட்டி விதூஷகி. அறம்சார்ந்த விஷயங்களின் உபாஷகி, கறாரான ஒரு நீதிவாட்டி, குட்டி Rebel எனப்பல குணாம்சங்களின் சமவிகிதக்கலவை அவள்.

‘குட்டி’ ‘கிட்டி’ என்பதெல்லாங்கூட அவளுக்கு ஒத்துக்காது.

“ நான் என்ன ஆட்டின்ர பில்லையா…….. குட்டி என்கிறியள் ” என்று கடுப்பாவாள். மூன்று வயசிலேயே அவளுக்கு அக்கா ‘ஜெகதா’வை விடவும் சரளமாகத் தமிழ் பேசவரும். பெரியவள் காருண்யாவுக்கு 14 வயசு, அடுத்தவள் ஜெகதாவுக்கு 10 வயசு அவளுக்கு ‘ஜெகதா’ என்றுதான் பெயர் வைத்தோம், ஆனால் முன்பள்ளியில் அதை ‘ஜெக்கி’ என்பதாகச் சுருக்கிவிட்டார்கள். அவள் கொஞ்சம் விவகாரமான தமிழ்தான் கதைப்பாள்.

***

பூமிகா கைக்குழந்தையாக இருந்தபோது நல்லபுஷ்டியாக காற்றடித்து விட்ட Dunlop பொம்மை மாதிரிச் சுருக்கமில்லாது இருந்தாளாதலால் ஆறேழு மாதமாகியும் தரைவிரிப்பிலோ, கட்டிலிலோ இருத்திவிட்டால் சரியாக உட்காரத்தெரியாது, அடுத்த விநாடியே ஏதோவொரு பக்கமாக குடைசாய்ந்தாற்போல் விழுந்துவிடுவாள். ஒருநாள் நாங்கள் எல்லோரும் ஏதோ வேறுபுலனாக இருந்த கணம் ஜெக்கி பூமிகா விழுவதை ரசிக்கவேண்டி அவளைத்தூக்கி தரை ஜமுக்காளத்தில் உட்காரவைத்தாள். அன்று எந்தத் தேவதையின் ‘ப்ரபை’ பட்டதோ பூமிகாவுக்கு விழாமல் உட்காரும் சூக்குமம் பிடிபட்டுவிடவே மேடையில் வயலின்காரரைப்போல முன்நோக்கிச்சிறிது சாய்ந்துகொண்டு ஜெக்கியைப்பார்த்து பழிப்போடு தலையை ‘ஜூ ஜூ ஜூ ஜூ’ வென்று மேலுங்கீழும் ஆட்டிக்கொண்டு நெடுநேரம் அமர்ந்திருக்கவும், ஏமாந்துபோன ஜெக்கி கூவினாள்:

“ எடியே……… பூமி, நீ இன்னும் விழேல்லயா………!”

***

எம் பிள்ளைகள் ஜெர்மனியில் பிறந்தவர்களாதலால் அவர்களுக்கு நாம் விண்ணப்பிக்காமலே பிரஜாவுரிமை கிடைத்தது. ஒரு சடங்கைப்போல பிரஜாவுரிமைச் சிறகத்துக்கு எம்மை அழைத்து அதற்கான சான்றிதழை எம்மிடம் கையளிப்பார்கள். ஒரு அலுவலர் விஷயத்தை ஜெக்கிக்கு விளக்கிவிட்டு அவளிடம் இன்றிலிருந்து “ நீ ஸ்ரீலங்காக்காரி அல்ல, ஜெர்மன்காரி ” என்று சொல்லிவிட்டு சான்றிதழைக்கொடுக்கவும் ஜெக்கி நிலத்தில் விழுந்து குளறினாள்: “ ஐயோ….. இது எனக்கு வேண்டாம், நான் நெடுவலும் தமிழாய்த்தான் கிடக்கப்போறன்.” எமக்கும் நெஞ்சை அடைத்தது.

பெர்லினில் Pfauen Insel என்றொரு பறவைகளின் சரணாலயம் Wannsee எனும் கடலேரியின் மத்தியிலுள்ள சிறுதீவின் ஈரக்காட்டில் அமைந்துள்ளது. ஒருநாள் அத்தீவிற்கு ஜெகதாவின் பள்ளியாசிரியை தன் வகுப்புப்பிள்ளைகளை சுற்றுலா அழைத்துச்சென்றிருக்கிறார். அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் ஜெக்கி தாங்கள் அத்தீவில் என்னவென்னவெல்லாம் பார்த்தோமென்று எம்மிடம் மாறிமாறிச் சொல்லிக்கொண்டிருக்கவும் “ சரி சரி நிறையப்பார்த்திருக்கிறாய்…. ஆனால் நீ பார்த்த எல்லாவற்றையும் எமக்குத் தமிழில் சொன்னால்த்தான் ஜெக்கி மகாகெட்டிக்காரியாம் ” என்று ஐஸ் வைத்தேன். “ஓகே ” என்றுவிட்டு ஆரம்பித்தாள்.

“ நாங்கள் எல்லாரும் பஸ்ஸோட Pfauen Insel க்கு ஓடின்னாங்கள்….. அங்க சுத்திவரத் தண்ணி கிடக்கு. அதுக்கு நடுவில எல்லா ஆம்பிளைப்பிள்ளை மயிலுகளும் நிண்டு ஆட்டிக்கொண்டு நிக்கினம் ”

“ ஏய்…….. ஆட்டிக்கொண்டு நிக்கினம் இல்லை…… ஆடிக்கொண்டு நிக்கினம் என்டு சொல்லு ” பூமிகா நடுவில் வந்து திருத்தினாள்.

ஒரு பள்ளிவிடுமுறைநாளில் ரஞ்ஜினி அசந்துதூங்கிக்கொண்டிருந்த நேரம் ஜெக்கி தாயிடம்போய் “ அம்மா……… நான் Bohnen ( அவரைக்காய்) எல்லாத்தையும் கழட்டட்டோ ” என்று கேட்டாள். நித்திரைச்சோம்பலில் அவளும் “சரி, போய்க்கழட்டு” என்றுவிட்டுத் தூங்கியிருக்கிறார். தூங்கி எழுந்த ரஞ்ஜினி கன்னிமாடத் தோட்டத்துக்குப் போனால் அங்கே செடியில் பிடித்திருந்த அவரைப் பிஞ்சுகள் காய்கள் அனைத்தும் பேதமின்றித்தரையில் கிடந்தன.

அதுவும் ஒரு விடுமுறைநாள்த்தான், ஏதோ ஒரு பத்திரிகைக்கான பணியுடன் நான் ‘முசு’வாக இருந்தேன். ஜெக்கி வந்து “டடா வாங்கோ…….. நாங்கள் நீந்தப்போகலாம் ” என்று நச்சரித்தாள். “ இல்லேம்மா….. எனக்குக்கொஞ்சம் கையில அவசரமான வேலை இருக்கு. அடுத்த கிழமை போவம்” என்று சொல்லித்தட்டிக் கழித்துக்கொண்டிருந்தேன். அவளோ விடுவதாக இல்லை. நான் தொடர்ந்து அவளுக்குப் போக்குக்காட்டவும் தன் இறுதி அஸ்திரத்தை எடுத்தாள். “ டடா…… இன்றைக்குத்தான் அங்கே கனக்க Hubsche Mädchen (அழகான குட்டிகள்) வருவினம்.”

ஒருவேளை நம்ம பலவீனங்கள் பொடிசுகளுக்கும் தெரிஞ்சுபோச்சோவென்று மனது ‘திக்’கென்றிருந்தது.

***

ரஞ்ஜினி ஒரு முறை இந்திய ஜவுளிக்கடைக்குப் போனபோது பூமிகாவையும் கூட்டிப்போனார். அங்கே தொங்கிய புடவைகளில் Bhumika என்றிருக்கவும் பார்த்துவிட்டு “ அல்லாச் சேலையும் என்னோடது….. அல்லாத்தையும் வாங்கு” என்று நின்றிருக்கிறாள். தாயுக்கோ ஆச்சரியம் முன்பள்ளியில் எழுத்துக்கள் சொல்லிக்கொடுத்திருக்க மாட்டார்களே இவள் எப்படி வாசித்தாள்?

“உனக்கு எப்படித்தெரியும் அது உன்னுடைய பெயர் என்று” விசாரிக்கவும் அவள் சொன்னாளாம்: என்னுடைய கின்டர்கார்டன் Gardrobe இல இப்பிடித்தான் எழுதியிருக்கு”

மூன்று வயதில் அவளுக்கு முளைத்திருந்த பாற்பற்கள் அனைத்தும் ஏதோவொரு குறைபாட்டால் ஈச்சம்பழக்கறுப்பாக மாறத்தொடங்கியிருந்தன. ஒரு நாள் படுக்கையறையின் அலங்கரிப்பு மேசையின் கண்ணாடியில்போய் சிறிய ஸ்டூலைப்போட்டு ஏறிநின்றுகொண்டு தலையைப் பெருந்தலைக் காகத்தைப்போல பலகோணங்களிலும் சரித்துச்சரித்துப்பார்த்தாள். முன் பின் பக்கவாட்டிலும் திரும்பித்திரும்பி பலதடவைகள் பார்த்தாள். பின் வாயைத்திறந்து பற்களைப்பார்த்தவள், விசைத்துக்கொண்டு தாயிடம் போனாள்.

“அம்மா…… ”

“என்ன……”

“என்னைய வயித்துக்குள்ளவைச்சி நீங்கதானே ‘அசெம்பிள்’ பண்ணினது.”

“ஓம்……. அதுக்கிப்ப என்ன ”

“அப்ப ஏன் ஏன்ட பல்லை இப்படிக் கறுப்பாய்ப்பண்ணினீங்கள். மூக்கும் சப்பை, உங்களுக்கு சரியாய் அசெம்பிள் பண்ணத்தெரியாட்டால் ஒரு schön (அழகான) பேபியைப்பார்த்துச் செய்யிறதுதானே…..”

‘இந்தத் தமிழாக்களும், ‘தானும்’ மாத்திரம் ஏன் இப்படிக் கறுப்பாக இருக்கிறோம்’ என்பதுவும் பூமிகாவுக்குப் பிடிபடாத விஷயங்களில் ஒன்று. அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

எம் குடும்ப பல் மருத்துவர் (பெண்) ‘இப்போது அவள் பற்களுக்கு என்ன வைத்தியம் செய்தாலும் பலனளிக்காது. அவை விழுந்து புதிய பற்கள் முளைக்கும்போது எல்லாம் சரியாகவே இருக்கும்’ என நம்பிக்கையூட்டினார். சிலநாட்களில் பாற்பற்கள் சில ஆட்டங்கண்டபோது சாப்பிடமுடியாமல் கஷ்டப்பட்டாள். எனது பற்களின் பரிசோதனைக்காக மருத்துவரிடம் கூட்டிப்போன ஒரு நாளில் அவளையுங்கூட்டிப்போனேன். அத்தனை மனமில்லைத்தான், ஆனாலும் முனகிக்கொண்டுவந்தாள்.

அவளையும் சோதனைக்கதிரையில் அமரச்செய்ததும் வைத்தியரிடம் கதைக்கலானாள்.

“ ஹலோ டொக்டர்……. இன்றைக்கு நீங்கள் என்னை மன்னிக்கவேணும், டாடி என்னை ஆலோசிக்காமல் தன்பாட்டுக்கு என்னை இங்கே கூட்டிவந்திட்டார், ஆனால் இன்றைக்கு நான் யாருக்கும் என் பற்களைக் காட்டிற ‘மூட்’டில் இல்லை., வெறி சொறி.”

இங்கே குழந்தைகளானாலும் நோயாளி விரும்பாத நேரத்தில் எந்த வைத்தியமும் செய்யமாட்டார்கள்.

“அப்போ பற்கள் வலிக்கலையா ”

“Nicht so schlim. ” ( அத்தனை மோசமாக இல்லை)

“அப்போ என்ன செய்யலாங்கறீங்க மிஸ்”

“நாளைக்கு பார்க்கலாமே”

“நாளைக்கு முடியாது, பிஸியா இருப்போம்……… ஒரு கிழமை தள்ளிப்பார்ப்போமா. ”

“மிகவும் நல்லது ”

ஒரு வாரம்தள்ளி அடுத்த (Termin) சந்திப்பிணக்கத்துக்குப் போனோம்.

இவள் பெயர் கூப்பிடப்பட்டதும் தானாகவேபோய் சோதனைக்கான கதிரையில் ஏறி அமர்ந்துகொண்டாள். வைத்தியர் என்னவெல்லாம் செய்யப்போகிறேன் என்பதைத்திரும்பவும் சொல்ல ஆரம்பிக்கவும் பெரிய மனுஷித்தோரணையில் அவரைக்கையமர்த்தி “ தெரியும்… நன்றி ” என்றாள்.

விறைப்பூசியை ஏற்றவும் அவள் கண்களால் மட்டும் நீர் கொட்டுகிறது, ஒரு முனகலின்றித் தாங்கிக்கொள்கிறாள். ஆனால் ஒரு பல்லைக்கொறட்டால் இழுத்துப்பிடுங்கியபோது அந்தவலியை அவளால் தாங்கமுடியவில்லை, அலறினாள், கண்ணீர் இப்போது எங்கள் கண்களிலிருந்து கொட்டியது.

***

அவளுக்கு எப்போ, என்ன விஷயத்தில் சந்தேகம் வருமென்று சொல்லமுடியாது. Discovery Channel இல் ஒரு பிரசவத்தைப் பார்த்திருக்கிறாள், கொஞ்சம் குழப்பம் வந்துவிட்டது. ரஞ்ஜினியை மறுபடியும் கேட்டாளாம்

“அம்மா என்னை எப்படிச் செய்தனீங்கள்…”

ஒருநாள் இரவு திறந்திருந்த எங்கள் பாத்றூம் ஜன்னலூடாக யார் வீட்டதோ மஞ்சள் வளர்ப்புக்குருவி ஒன்று வந்தது. யாருக்கும் வெகுளாமல் அது எமக்கு அருகாகவெல்லாம் வரவும் கொஞ்சம் சூரியகாந்திவிதைகள், வெல்லம் எல்லாம் கொடுத்துப்பார்த்தோம், விதைகளில் ஒன்றைமட்டும் எடுத்துவைத்து வெகுநேரம் நன்னியது. பூமிகாவுக்கு குதூகலம் தாங்கமுடியவில்லை, அதன் ஒவ்வொரு அசைவையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அம்மா இனிமேல் இது எங்களுக்கோ…….”

“அதை அந்தக்குருவிதான் தீர்மானிக்க வேண்டும்…… நாமாகப் பூட்டிவைத்துக்கொண்டால் அதுக்குப்பிடிக்காது,”

அதிகாலை வெளிச்சம் பரவவும் அது பறந்துபோய்விட பூமிகாவால் துக்கம் தாளமுடியவில்லை.

“ஒருநாள் பாத்றூமுக்குள்ள வந்துதே மஞ்சள் குருவி……… அதைப்போலத்தான் நீயும் ஒருநாள் வந்தாய், பிடித்துவைச்சு பாலும் சோறுமாய் உனக்குத்தந்தமா வேகமாய் பூமிகாவாய் வளர்ந்திட்டாய் செல்லம்………. ”

“அப்போ நீங்க வயித்தில வைச்சிருந்து பெக்கலையா….”

“பின்னே என்ன வானத்திலயிருந்தாடி குதிச்சாய்….. ”

“சரி……. வயித்துக்குள்ள எப்பிடி வைச்சநீங்கள் அந்தக்கதையைச் சொல்லுங்கோ…”

“சாமி கோயில்ல தீர்த்தம் வாங்கிக்குடிச்சமா…… வயித்தில் தானா வந்திட்டாய்.”

“இல்லை… செக்ஸ் செய்தா பேபி வருமாமே லீனா சொல்றா….”

“ஓமோம் அப்பிடியும் வருந்தான்…..”

இன்னொரு நாள் முன்பள்ளியால் திரும்பியதும் நேராக ரஞ்ஜினியிடம்போய்க் கேட்டாளாம்

“அம்மா…… நான் அப்ப சேயோனையா Heiraten (திருமணம்) செய்யிறது ”

லீனா, சேயோன் இருவரும் இவளின் முன்பள்ளித்தோழர்கள்.

“….க்கும், இனி அவனுக்கும் சேர்த்து நான்தான் பம்பேர்ஸ் மாத்திறதாக்கும்…. ஏன்டி யாரடி அப்படிச்சொன்னா… ”

“சேயோன் இன்டைக்கு எனக்கு வாயில கொஞ்சிட்டான் ”

***

ஒருமுறை நான் அஞ்சல் அலுவலகத்துக்குப் புறப்பட்டபோது பூமிகாவும் ஓடிவந்து “ நானும் நீங்கள் அங்க என்ன செய்யப்போறியள் என்று பார்க்கப்போறன்” என்றாள். ‘சரி….. அவளுந்தான் பார்க்கட்டுமே’ என்று கூட்டிப்போனேன். அங்கே வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஏராளம் ஊற்றுப்பேனாக்களைப் போட்டு வைத்திருப்பார்கள். அதிலொன்றை எடுத்துப் பணவிடைப்பத்திரம் ஒன்றை நிரப்பிவிட்டு அனிச்சியாக என் பொக்கெட்டில் வைத்துவும் அதைக்கவனித்த பூமிகா அலறினாள்.

“ஹேய்…….. டடா, அது போஸ்ட்காரங்களோடது, வீட்டுக்குக்கொண்டுவரப்படாது ”

“ஸொறி…… மறதியாய் பொக்கட்டில வைச்சிட்டேன்டா ”

“நோ வே…….. ஸொறியெல்லாங்கிடையாது, திரும்பவும் பேனையை இருந்த இடத்தில் வைக்கலாம்…… “ உத்தரவு பிறப்பித்தாள்.

என் தாய்வழிப்பாட்டி அன்னப்பிள்ளை வாசித்தது ஐந்தாவது வரையில்த்தான், ஆனால் விவாதமென்று வந்திட்டால் ஆனானப்பட்ட ராணி அப்புக்காத்துமாருக்கே கோதாவில் தனித்துநின்று ‘வகை’ சொல்லத்தக்க ‘வாக்குசாதுர்யம்’ கொண்டவர். பூமிகாவின் சாமர்த்தியமும் அவர் மரபுவழி வந்திருக்கவேண்டும்.

ஒருநாள் பின்மாலையில் இவளது முன்பள்ளி ஆசிரியை மெலீட்டாவைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவரது பூர்வீகம் Croatia. மெல்லிய சொக்கோ-பிறவுண் நிறத்தில் வெகு அழகாக இருப்பார். பூமிகாவும் தன் நிறத்தைக் கொண்டிருப்பதாலும் துடுக்குத்தனத்தாலும் அவள்மீது கொள்ளை பிரியமாக இருப்பார். எப்போதும் தன்னோடுவைத்து ‘ என்னோட சொக்கிளேட் மவுஸ், மில்க் சொக்கிளேட்’ என்று கொஞ்சிக்கொண்டிருப்பார்.

நாங்கள் மெலீட்டாவுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்படும் நேரம் மற்றச்சிறுவர்கள் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டிருந்தனர். நாமும் திரும்பி வந்துகொண்டிருக்கையில் கீழே மாடிப்படிகளின் ‘கிராதி’யில் எவரோ தனது ஜேர்க்கினை விட்டுவிட்டுப் போயிருப்பதைப் பார்த்துவிட்டு “ பூமி இங்கேபார் யாரோ தம் ஜேர்க்கினை இதில விட்டுவிட்டார்கள் ” என்று காட்டினேன்.

“உஸ்க்……… அதெல்லாம் மறந்த ஆக்கள் நாளைக்கு வந்து எடுப்பினம்…… நீங்கள் ஒன்றுந்தொடத்தேவையில்லை” என்றாள் பொலிஸ் கண்டிப்புடன்.

இப்படியாக அவளுடன் பேசியபடி முன் வளவிலிருந்த தோட்டத்தினூடு நடைபாதையில் மிதியுந்தை உருட்டிக்கொண்டு வருகையில் பாராதீனமாக அருகில் கொஞ்சம் எச்சிலைத் துப்பிவிடவும் பூமிகா கடுப்பானாள்.

“டாட்…… இங்கே எல்லாம் பிள்ளையள் விளையாடிறவை, நீங்கள் இதில எப்பிடித் துப்பலாம், ஹாவ் எ ஹார்ட் டாட் ” என்றாள். எனக்கு அப்போதான் விதிர்த்தது, அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று.

***

இதுபோன்ற பொது ஒழுங்குகளை மீறுவதையடுத்து அவள் வெறுக்கும் விஷயங்களில் ‘சண்டை / போர்’ முதன்மையானது. வீட்டுக்கு வரும் ‘எரிமலை’யில் குமுதினிப்படகில் நிகழ்ந்த அவலங்களையும், தொலைக்காட்சிகளில் அப்போது அடிக்கடி காட்டப்பட்ட ‘சுனாமி’ அவலங்களையும் பொம்மைகளைப்போல் குழந்தைகள் கடற்கரைகளில் விசிறப்பட்டுக் கிடந்ததையும் அதிர்ச்சியுடன் பார்த்திருக்கிறாள்.

“ டாட்…….. இப்ப ஏன் சுனாமி அலைகள் வந்தது….”

“அது கடலுக்கு அடியில பூமித்தகடு கொஞ்சம் உடைஞ்சதால வந்தன.”

“பூமி ஏன் அங்க உடைஞ்சது ”

“உடைஞ்ச இடத்தில பூமி கொஞ்சம் மெல்லிசாய் இருந்திச்சாம் ”

“ஸ்ரீலங்காவில ஏன் ஆமிக்காரர் குழந்தையளைக் கொண்டவை ”

“அவங்கள் தமிழர்களை வெறுக்கிறாங்கள் போல”

“நாங்கள் அவங்களுக்கு ஒன்றுஞ்செய்யேல்லையே…… பின்ன ஏன் குத்தினவை. ”

“ஏதோ….. தெரியாம குத்திப்போட்டினம்.”

“ஏன்…. ஏன்…. ஏன்….. ”

இவை எல்லாம் உடனே பதிலிறுக்கக்கூடிய கேள்விகளா, ஏதோ சமயத்துக்கேற்றாப்போல ஒவ்வொரு பதில்களைச் சொல்லிவைப்போம்.

நாம் இலங்கை நிலவரங்களைப் பேசிக்கொண்டிருந்த ஒரு சமயம் தான் விளையாடிக்கொண்டிருந்த Labyrinth பலகையைக் கீழே வைத்துவிட்டுவ்ந்து “ இலங்கையில் ஏன் சண்டை நடக்குது” என்றாள்.

“நீ ஒரு சின்னப்பாப்பாவாம், அதுக்கொரு நீண்ட கதையிருக்கு, உனக்குப்புரியவைக்கிறது கஷ்டம்டா ” என்றேன்.

“சரி, எப்படித்தொடங்கிச்சு என்று சொல்லுங்கோ…. நான் புரிஞ்சுவன்” என்றாள்.

“அங்கே இரண்டுவகை இனங்கள் வாழ்கின்றன ”

“இனங்கள் என்றால்…..”

“இரண்டு வெவ்வேறு மொழிகள் பேசிற மக்கள்.”

நான் சொல்லிக்கொண்டிருக்கையில் நான் அமர்ந்திருந்த மென்னிருக்கைக்குப் பின்னால் இருந்தவளை Labyrinth விளையாட்டே இன்னும் அதிகமாக ஈர்க்கவும், அவள் அதோடு ஐக்கியமாகிவிட்டதைக் கவனிக்காமல் நானும் ‘எம் இனங்களுக்கிடையில் பாகுபாடுகள், பாரபட்சங்கள் வந்தமை, பின் பகைமை வளர்ந்தமை, போரில்லாமல் சாத்வீகவழிகளில் அரசியல் தலைவர்கள் போராடி எதுவும் முடியாதுபோய் பின்னால் இளைஞர்கள் ஆயுதமெடுத்துப்போராடப் புறப்பட்ட வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவளிடமிருந்து எதிர்க்குரல் எதுவும் வராதிருக்கவே என்னதான் செய்கிறாளென்று திரும்பி எட்டிப்பார்க்கவும்

“டடா…. இன்னும் என்னோடையா கதைக்கிறியள் ” என்றாள்.

***

ஒருமுறை என் மேசையிலிருந்த கடிதமரவையிலிருந்து (Tray) ஒரு கடிதத்தை எடுத்துவைத்துக்கொண்டு “ பொன்னையருக்கு ஒரு கடிதம் வந்திருக்கு, அதை எப்படித்தான் அவருக்குச்சேர்ப்பிப்பேன்……Shade (pity) அவங்கள் அதை அவர் சாகமுதலே அனுப்பியிருக்கலாம்” என்று வெகுவாகக் கவலைப்பட்டாள். பொன்னையா வேறு யாருமல்ல எங்க அப்பாதான்.

“அவர் உன்னுடைய தாத்தாவல்லவா….. பொன்னையா என்கிறாய் ” என்றதுக்கு அவள்

“சரி…….. தாத்தா பொன்னையா ” எனவும்

“அக்கடிதம் அவருக்காய் இருக்காது,…. அவர் செத்து இருபத்தைந்து வருடங்களாயிற்றே ” என்று விளக்கினேன்.

“இல்லை… இது அவருக்குத்தான்….. பொன்னையா என்றுதான் பெயர் போட்டிருக்கு, தரமாட்டன் ” என்றுவிட்டுக்கொண்டோடித்திரிந்தாள்.

வைத்தியகூடங்கள், சுகாதாரச்சிறகம், முன்பள்ளிபோன்றவற்றிலிருந்து அவளுக்குவரும் கடிதங்களில் Bhumika Karunaharamoorthy என்றே இருக்கும். இக்கடிதத்திலும் என் முதற்பெயர் Ponniah இடம்பெற்றிருப்பதால் அது பொன்னையாவுக்குத்தான் என்பது அவள் வாதம். அவள் தூங்கிய பின்னாலேயே அன்று அக்கடிதத்தைப் படிக்க முடிந்தது.

விடுதலைப்புலிகள் தயாரித்து இங்குள்ள எல்லாத்தமிழர்கள் வீடுகளிலும் விநியோகித்திருக்கும் தினக்காலண்டர் ஒன்று எங்கள் வீட்டிலும் இருந்தது. அதில் விஷேசம் என்ன வென்றால் அதன் ஒவ்வொரு நாளிலும் அத்தேதியில் இறந்த மாவீரரின், அரசியல்தலைவரின், மாமனிதர்களின் மேதாவிகளின் படங்களும் அவர்களைப்பற்றிய குறிப்புகளும் அச்சிடப்பட்டிருக்கும், ஒரு ஏப்ரல் மாதத்தில் பூமிகா அக்கலண்டரைத் தூக்கிக்கொண்டுபோய்க் காருண்யாவிடம் கொடுத்துவிட்டு “என்னுடைய பிறந்த தேதியைக்காட்டு ” என்று நச்சரித்திருக்கிறாள். பூமிகா பிறந்ததோ ஜனவரியில்.

“உன்னுடைய பிறந்தநாள் ஜனவரியில் அந்தத்தேதி எப்போவோ கிழிச்சாச்சு போடி ” என்றவளை விரட்டவும், ஏமாற்றத்தில் கொஞ்சநேரம் மன்னையை இறக்கிவைத்திருந்திருந்துவிட்டுத் திரும்பவும் அவளிடம்போய் கேட்டாள்:

“பிறந்த தேதி இல்லாட்டிப் பரவாயில்லை…….. அப்ப நான் சாவுற தேதியைக்காட்டு. ”

***

அவளது முன்பள்ளி முடிந்ததும் தன்னைவீட்டுக்கு அழைத்துவர எப்போதும் என்னையே வரவேண்டும் என்று அடம் பிடிப்பாள், எனக்கு இரவுப்பணி இருக்கும் நாட்களில் பகலில் ஒரு தூக்கம் போட்டாலே பணியில் தூங்கிவழியாமல் உற்சாகமாக இருக்கலாம். அது அவளுக்குப் புரிந்தால்த்தானே?

பூமிகா என்னையே வரச்சொல்லிக்கோருவதற்கும் அவளுக்கு இரண்டு தனியான காரணங்கள் இருந்தன. நான்தான் அவள் கேட்கும் ஐஸ்கிறீமை வாங்கித்தருவேன். மற்றது நாங்கள் ஊடறுத்து வரும் பூங்காவில் இருக்கும் ஊஞ்சலில் நான்தான் அவளை ஆடானுமதிப்பேன். இன்னும் அதற்குள் சலம்பிக்கொண்டிருக்கும் அத்தனை குருவிகளையும், குட்டையிலுள்ள மீன்களையும் அவள் குசலம் விசாரிக்கவேண்டும். ரஞ்ஜினியானால் அவருக்கு இதற்கெல்லாம் வினைக்கெடும் பொறுமை கிடையாது, இழுத்துக்கொண்டு வந்துவிடுவார். ஒருநாள் இவள் குருவிகளைத் துரத்தித்துரத்தி வெகுநேரம் விளையாடிக்கொண்டிருக்கவே தூக்கம் கலைந்த எரிச்சலில் நானும் “ அடியே….. நான் செத்துப்போனால் அப்போ நீ யாருடன் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வருவே……” என்றேன்.

அவளுக்குக் கண்கள் ‘பொலக்’கென்று முட்டிக்கொண்டு விட்டன.

“நான் ஒருநாளும் Heiraten (கல்யாணம்) செய்ய மாட்டன், நீங்களுஞ் சாகக்கூடாது” என்றாள் உடைந்த குரலில்.

“நீ கல்யாணஞ்செய்தால் நான் ஏன்டி சாகப்போறன் ”

“எனக்குத்தெரியும்……….. அம்மா சொன்னவ, நான் கலியாணம் செய்தால் நீங்கள் செத்துப்போடுவியள் ”

அவளது தர்க்கம் எனக்குப்பிடிபடவில்லை, வந்து ரஞ்ஜினியிடம் விபரம் கேட்டேன்.

“அட அதுவா நாங்கள் குயில்மொழியின் ரிஷெப்சனுக்குப் போனமப்பா…….. அங்கே அவள் உடுத்தியிருந்த இளவயலெட் சாறியும், எம்பிறோய்டறி வேலைசெய்து நீளக்கைவைத்த பிளவ்ஸும் இவளுக்கும் பிடித்துப்போய்……. தன்னுடைய கல்யாணத்துக்கும் அதுமாதிரி வாங்கித்தாறியளோவென்று கேட்டாள்…….. ‘உன்னுடைய கல்யாணத்துக்கு நாங்கள் இருப்பமோ தெரியாது செல்லம், ஆனால் டாட் இருந்தால் நிச்சயம் வாங்கித்தருவார்’ என்று சொன்னேன், அதைத்தான் அவள் அப்பிடி விளங்கிக்கொண்டுவிட்டாள்போல” என்று விளக்கம் தந்தார். ‘குழந்தைகளுடன் உரையாடுவதற்கு பெரியவர்களுக்கும் பயிற்சி வேண்டும்’ என்று மனவிலாளர்கள் சொல்வது காரணமில்லாமலா?

***

ஒரு சனிக்கிழமை, நான் இரவுப்பணி முடித்துவிட்டு வழியில் பிள்ளைகளுக்குப் பிடித்தமான ‘சீஸ் பன்’னும், ‘பன்கேக்’கும் வாங்கிக்கொண்டு காலை 07:00 மணிக்கே வீட்டுக்கு வந்தேன். விடுமுறை தினத்தை அனுபவித்தபடி ரஞ்ஜினியும் பிள்ளைகளோடு சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தார்.

நான் படுக்கையறைக்குள் புகுந்து சத்தமாக “ யார் எழும்பிப் Zahn putzen (பல் துலக்கி) பண்ணிவிட்டு வருகிறீர்களோ அவர்களுக்கு சூடாக ‘சீஸ் பன்’னும், ‘பன்கேக்கும், தேநீரும் கிடைக்கும்” என்று அறிவித்தேன்.

பூமிகா எழும்பி உடம்பை முறுக்கிச்சோம்பல் முறித்துக்கொண்டு கண்களைத் திறந்தும் திறவாமல் ஒருவாறு என்னிடம்வந்து “ எழும்பியாச்சு டாட்…… ஆனால் ஒரு பல்லை மினுக்குவதுதான் கஷ்டம்” என்றாள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது நான் Zähne என்று பன்மையில் சொல்லாமல் தமிழில்ப் போல ’பல்லை மினுக்கிவிட்டு வாருங்கள்’ என்று ஒருமையில் சொன்னது.

ஒருமுறை அவளிடம் நான் கணக்குப் பரீட்சை வைத்தேன்.

“உனக்கு நான் ஒரு கையில் ஒரு அப்பிளும், மற்றக்கையில் 5 அப்பிளும் தந்தால் எத்தனை மொத்தம் எத்தனை அப்பிள் வைத்திருப்பே……”

“ஒன்றுதான் ”

“ஏம்மா…. ”

“நான் எப்படி சின்னக்கையில 5 அப்பிள் வைத்திருப்பன், எல்லாம் கீழே போட்டிடுவன் டாடி ”

நான் வேறுவிதமாகக் கேட்பதாக நினைத்து ஒரு கையில் ஒன்றையும், மறுகையில் 5 ஐயும் காட்டி எத்தனை என்றேன்.

அவள் “பதினைஞ்சு” என்றாள்.

“எப்படி ”

“ஒன்றுக்குப்பக்கத்தில 5 இருந்தால் பின்ன எத்தினை”

***

தான் இல்லாத சமயங்களில் ஜெகதா தன் வாட்டர்கலர் பெட்டியை எடுத்துப் பாவிப்பதை பூமிகா நுட்பமாகக் கண்டுபிடித்தாள். ஜெகதா அவ்வாறு அதை எடுப்பது தனக்கு இஷ்டமில்லை என்பதை அவளுக்குத்தெரியப்படுத்த வேண்டும். வாய்த்தர்க்கமும், சச்சரவுமின்றி அதற்கொரு முடிவுகட்டவேண்டும். உடனே ஒரு வெள்ளைத்தாளை எடுத்து ஜெகதா தன் வர்ணப்பெட்டியை மேசையிலிருந்து தூக்குவதைப்போல ஒரு கார்ட்டூன் வரைந்தாள். தூக்குகிறகை, மற்றக்கையைவிட நீளமாகவும், அது 3 விரல்களை மட்டும் கொண்டிருந்தது சிறப்பு. மேற்படி செய்கையானது தடுக்கப்பட்டிருப்பதான அர்த்தத்தில் அப்படத்தின்மேல் சிவப்பு மையினால் ஒரு X பெருக்கல் குறியும் வரைந்து தன் மேசை எதிரில் பின்பலகையில் (Pin board) அதை ஒட்டிவிட்டாள்.

சதா ‘டாட்’ ‘டடா’ ‘டாடி’ என்று கழுத்தைக் கட்டிக்கொண்டும், காலைச்சுற்றிக்கொண்டுமிருக்கும் குழந்தைகள் எல்லாமே வளர வளர தங்கள் பள்ளிக்கூடம், வீட்டுவேலைகள், செய்முறைப்பயிற்சிகள், கணினி, இணைவலையென்று ‘முசு’வாகிவிடுவார்கள். சிறிது காலத்துள்ளேயே அவர்கள் வீறமைவான (Serious) வேறுமனிதர்களாக ஆகிவிடுவதுதான் மனதுக்குக் கஷ்டம். கண்முன்னே கண்டுகொண்டிருக்கும் எம் சொப்பனம் பூமிகாவும் மெல்லமெல்லத் தன்னை மாற்றிக்கொண்டு பெரிய மனுஷியாகிவிடுவாளோவென்ற நினைப்பே என்னவோ மாதிரியிருக்கிறது. மழலையும் குறும்பும் துடுக்குமாக எப்போதும் அவள் முன்பள்ளிக்கே சென்றுகொண்டு எமது கனவு கலைந்துபோகாமலிருக்கவேண்டும் என்பதுவும் எம் பேராசைகலந்த கனவுகளில் ஒன்று.

எங்கள் வீட்டிலிருந்து 2 கி.மீட்டர் தொலைவில் ஒரு கிருஷிக பாடசாலை இருக்கிறது. நிறைய குதிரைக்குட்டிகள், கோவேறுகழுதைகள், கம்பளியாடுகள், செம்மறியாடுகள், மலையாடுகள், கழுத்து நெடுத்த லாமாக்கள் என்று பல ஜாதி ஆடுகளும் அங்கே நிற்கும்.

ஒவ்வொரு வாரமும் வீட்டில் எஞ்சும் காய்கறிகளையும், பாண் / ரொட்டி என்பனவற்றையும் மாலைவேளைகலில் கொண்டுபோய் அவற்றுக்கு ஊட்டுவோம். அப்படி அவற்றைப் பழக்கியபிறகு நாம் சும்மாதான் அவ்வளவுப்பக்கமாகப் போனாலும் அத்தனையும் பிராணிகளும் ஓடி வந்துவிடும். ஒருநாள் பூமிகா எடுத்துப்போன வாழைப்பழத்தை இவள் எடுத்துக்கொடுக்க முதலே ஆடொன்று பறித்துத் தின்றுவிடவும் இவள் நிலத்தில் காலை உதைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“ஏன் என்னடி என்ன ” என்றால்

“ஐயோ அந்த ஆடு….. அந்த ஆடு….. அந்த ஆடு” என்கிறாளேயல்லாமல் அதிர்ச்சியில் அவளால் அதற்கும்மேல் பேச முடியவில்லை.

”அந்த ஆட்டுக்கு என்னடி” எனவும் “ அந்த ஆடு வாழைப்பழத்தைத்தோலோட தின்னுட்டுது…… சாகப்போகுது. ” என்று முடித்தாள்.

நாம் ஒரு முறை நெடுந்தூரத்தொடரியில் பயணம் செய்தபோது வழியில் ஒரு பண்ணையின் முளைப்பயிர் விதைக்கப்பட்டிருந்த வயலில் ஏராளம் கோழிகள் மேய்ந்துகொண்டிந்தன. அதைப்பார்த்துக் குதூகலமான பூமிகா கூவினாள்:

“ஹையா……. இஞ்சபாருங்கோ Zu viel (ஒருதொகை) மாடுகளை………. ”

நாங்கள் சேர்ந்து சிரிக்கவும் நெழிந்தபடி வெக்கறைப்பட்டாள்.

அடுத்த ஊரில் தொடரி நிற்கவும் ஒரு பெண் கூண்டினுள்வைத்த ஒரு ஜோடிக்கிளிகளுடன் வந்து ஏறினாள். பூமிகாவின் குதூகலத்தைக் கேட்கவேண்டுமா? அவற்றையே கண்களைவிரித்தபடி அதிசயத்துடன் சுற்றிச்சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவளைக்கேட்டாள்.

“இந்தக் குருவியளோட அம்மா எங்கே………”

என்ன சொல்வதென்று தெரியாமல் கிளிக்காரி.விழிக்கவும் வார்த்தைகளில் சற்றே சூடுகலந்து கேட்டாள்:

“ அம்மாவை அங்கே தனிய விட்டிட்டு ஏன் இதுகளை எடுத்துக்கொண்டு வாறாய்…….. ”
இப்போதான் எனக்கும் அவளுக்கும் கேள்வியின் ‘த்வனி’ புரிந்தது, சமாளித்தோம்.

“இவளுடைய அப்பா அம்மாக்குருவியைக் குளிப்பாட்டித்தூங்க வைச்சிட்டு அடுத்த ரெயினில எடுத்து வருவாராம் ”

“Ach So…..(அப்படியா) ” என்றாள் பெரிய மனுஷியாட்டம்.

ஒரு முறை நகரத்தின் மையத்திலிருந்த பல்பொருளங்காடி ஒன்றுக்கு பூமிகாவோடு பேருந்தில் போயிருந்தோம். பேருந்தில் ஏறியவுடன் என்னைக் கேட்டாள்:

“டடா…. நாங்கள் போகிற இடத்துக்கு இந்த பஸ் வருகுதோ, இல்லை பஸ்போகிற இடத்துக்கு நாங்கள் போறமோ….. ”

“நாங்கள் போகிற இடத்துக்கு போகிற பஸ்ஸாய்ப்பார்த்து ஏறியிருக்கிறம்டா…..”

“அப்பச்சரி ” என்றாள்.

பல்பொருளங்காடியில் இறைச்சிப்பக்கமாகவும் போக நேர்ந்தது. அங்கே கண்ணாடிக் குளிர்பதனப்பெட்டிகளுள் ஆட்டின் தலைகளை உரித்து அடுக்கிவைத்திருந்தார்கள். இவளுக்குத் தாங்கமுடியவில்லை, தலையிலடித்துக்கொண்டு அரற்றினாள்:

“கடவுளே எல்லா இடத்திலும் என்னுடைய Lieblingtier (செல்லப் பிராணி) யைத்தான் சாக்கொல்லுறாங்கள் Idioten……. அதுகளைப் பல்லு மினுக்கக்கூட விடேல்லைப்போல கிடக்கு, எல்லாம் மஞ்சளாய்க்கிடக்கு.” வருந்தினாள்.

அவள் வீட்டில் இருக்கும்போது இரண்டு சூடைமீன்களைக்கூட வெட்டமுடியாது.

“ஐயோ அதுக்கு அவ்வா செய்யும் (வலிக்கும்)” என்று கத்தி ரகளை பண்ணுவாள். ஒருநாள் அவளின் கவனம் சமையலறைப்பக்கம் திரும்பாதபடி நான் அவள் கவனத்தை மாற்றி வைத்துக்கொண்டிருக்க குளிர்பதனப்பெட்டியிலிருந்த கோழியை ரஞ்ஜினி எடுத்துச் சமைக்கலானார். நான் கதைப்புத்தகம் ஒன்றுடன் ஒன்றி அயர்ந்த கணத்தில் சமையலறைக்குள் புகுந்துவிட்ட பூமிகா தாயைக் கேட்டாள்:

“அம்மா… இந்தக்கோழி யார்…. ”

சித்தர்களும், முக்தர்களும். ஞானிகளும், யோகிகளும் விடைதேடிய கேள்வியல்லவா அது.

“என்னடி கேட்கிறாய்… எனக்கு விளங்கேல்ல.”

“இந்தக்கோழி அதின்ர வீட்டில யார்…. அம்மாவோ, அப்பாவோ, பிள்ளையோ……”

“சரி……. அம்மாவென்றுதான் வையன்.”

“அப்ப…… அதின்ர பிள்ளையள் தேடுவினமல்லோ….. அம்மாவைக் காணேல்லயென்று.”

ஒருவேளை ‘பிள்ளை’ என்றிருந்தாலும் ‘அப்ப அவவின்ர அம்மா தேடுமல்லா பிள்ளையைக் காணேல்லையென்று’ என்றிருப்பாள்.

ரஞ்ஜினி கூவினார்: “ இஞ்சாரப்பா…… இவளை உங்க கூப்பிட்டு வைச்சிருங்கோ அப்பா……. இங்க funny funny யாய் என்னவோ எல்லாம் கேட்டுக்கொண்டு நிற்கிறாள்.”

பூமிகா முன்பள்ளியிலோ வீட்டிலோ எந்த உணவிலாவது மாமிசம் கலந்திருக்கிறது என்று தெரிந்துவிட்டால் அதைச் சாப்பிடவே மாட்டாள். ஆனால் Ham / Salami ஐ வைத்த சான்ட்விச்சை மட்டும் விரும்பிச்சாப்பிடுவாள். அவை இறைச்சியை அரைத்துப்பின் நீராவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படுவதால் மணமின்றியும் மிக மென்மையாகவும், இருப்பதால் அவை அப்பளம்போல ஒரு பண்டம் என்பதே அவள் எண்ணம். அதற்கும் ஒருநாள் வினை வந்தது.

ஒரு இரவில் அவளுக்குத் தும்மல் வந்தது, என ஜாக்கெட் பொக்கற்றிலிருந்து ஒரு டிஸுவை எடுத்து நாசியைத் துடைக்கச் சொல்லிக்கொடுத்தேன். வனிலா நிறத்தில் தங்க வரிகளோடு இருந்த அது சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் வகை டிஸூவல்ல என்பதைக் கண்டுகொண்டவள் “ டடா இது உங்களுக்கு எங்கே கிடைச்சது” என்றாள். நான் விகற்பமில்லாமல் உண்மையைச் சொன்னேன்.

“அதொரு றெஸ்ரோறன்டில் கிடைச்சது ” அவளுக்கு வந்ததே கோபம்.

“என்னிய விட்டுப்போட்டுத் தனியப்போயிட்டாய் என்ன………”

அவளைச் சமாதானம் பண்ணவேண்டி அடுத்தநாள் ஒரு ஆர்ஜெண்டினா ஸ்டேக் உணவகத்துக்கு அழைத்துப்போனோம்.

நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஸ்டேக்கைப் பார்த்தவள்

“அது எதிலே சமைச்சது ” என்றாள். நானும்

“அது சோயா ரோஃபூவில ” என்று மெழுகினேன்.

“இல்லை………. அது பார்க்க இறைச்சிமாதிரி இருக்கே ” என்றாள்.

உடனே குறுக்கிட்ட ஜெகதா இவ்வளவு சொல்றியே, நீ சாப்பிடிற சான்ட்விச்சுக்குள்ள இருக்கிற Ham மாட்டிறைச்சியில அரிஞ்சுதான் என்டது (பண்ணினது) தெரியுமோ…” என்று அகாலமாகப் போட்டுடைத்தாள்.

“Nein, Niemal ” ( இல்லை, ஒருபோதுமிருக்காது)

”Doch, Doch ” (அப்பிடித்தான், அப்பிடித்தான்)

“Nein ”

“Doch ”

“Nein ”

“Doch ”

இப்படியே விவாதம் முடிவற்று நீள கடுப்பான பூமிகா சான்ட்விச்சை கோப்பையில் வைத்துவிட்டு அதனுள்ளேயிருந்த Ham Slice ஐ வெளியில் இழுத்து ஜெகதாவின் முகத்துக்கு நேரே நீட்டிக்கொண்டு “ அப்பிடி என்டால் இதில அந்த மாட்டோட கண்ணைக்காட்டு பார்ப்பம் ” என்றாள்.

***

எனக்கு முதுகில் பிடிக்கும் வேர்ப்பருக்களை ஒரு சேஃப்டிபின்னினால் குத்துவது பூமிகாவுக்குப்பிடிக்கும். அப்படிக் குத்திக்கொண்டிருந்த ஒருவேளையில் அவளுக்குச் சந்தேகங்கள் Random ஆக பல் துறைகளிலும் ஜனிக்கவும் கேட்டாள்:

“எனக்கு வளர்ந்தாப்போலயும் பூமிகாதான் பெயரோ…… இல்லை வேற பெயர் வைப்பியளோ…….. ”

அதாவது சிவகாமசுந்தரி, சிவபாக்கியம், பூரணவல்லி என்கிறமாதிரி மாற்றிவிடுவியளோ என்பதே அவளது பயம்.

“இல்லேடா எப்பவும் நீ எங்களுக்குப் பூமிகாதான்….. ”

அடுத்த கேள்வியும் அவளிடத்தில் ஜனித்தது.

“டடா ஏன் உங்களுக்கு நடுத்தலையில மயிர் இல்லை…”

“எல்லாம் ஒவ்வொண்ணாய் கொட்டியிடுச்சம்மா…..”

“அப்ப எங்கே கொட்டினதென்று காட்டுங்கோவன்…. நான்போய் எல்லாத்தையும் பொறுக்கியாறன்….”

சில நாட்களின் பின் என் சகோதரி டோட்முன்டிலிருந்து வந்திருந்தார். அவரிடமும் மறக்காமல்க் கேட்டாள்:

“அத்தை…… நாங்கள் வளர்ந்தாப்போலயும் எங்களுக்கு நீங்கள் Tante (அத்தை) தானோ….”

***

முன்பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடுத்திருந்த நாளொன்றின் பகலில் மிக நீண்டநேரம் தூங்கியிருந்தாள் பூமிகா. அன்றிரவு கணினியில் நான் முக்கியமான வேலை ஏதோ செய்துகொண்டிருக்கையில் என் மடியில்வந்து அமர்ந்துகொண்டு என்னை வாகாகக் குடைமானம் செய்ய ஆரம்பித்தாள். நான் என் வேலையின் அவசரத்தைச் சொன்னதும் “ சரி…. அப்ப எனக்கு படம் ஒன்று போட்டுவிடுங்கோ……. நித்திரை வரும்வரைக்கும் பார்க்கிறன் ” என்றாள்.

“பிள்ளைக்கு எப்பிடிப்படம் வேணும் ”

“மியூஸிக் உள்ள படம் ”

“பிளாக் அன்ட் வைட் ஓகேயா…..”

“Egal……..(பரவாயில்லை)”

நாகேஷ்வரராவ் அஞ்சலிதேவி நடித்த ‘அனார்க்கலி’தான் மியூஸிக் உள்ளதாய்க் கிடைத்தது. ஒவ்வொன்றும் ஒரு மனிநேரம் ஓடவல்ல 3 இறுவட்டுக்கள். படத்தின் முதல்ப்பகுதி பாட்டுக்களும் ஆட்டமுமாகப்போக நன்கு ரசித்து அதைப்பார்த்து முடித்துவிட்டு இரண்டாவதையும் போடச்சொன்னாள்.

இரண்டாவதையும் போட்டுவிட்டேன். அதையும் முழுவதுமாகப் பார்த்து முடித்தபின்னும் தூக்கம் ஏதும் வருகிறமாதிரி இல்லை.

அவள் மூன்றாவதையும் போடச்சொல்லவும் “ நீ குழந்தைப்பிள்ள, நீண்டநேரம் படம் பார்க்கக்கூடாது…… போய்ப்படம்மா ப்ளீஸ்…” என்றேன்.

“உங்களைவிட அந்த பாதுஷாவே பெட்டர் ” என்று அவள் மூஞ்சியைத் திருப்பவும் மூன்றாவதையும் போடவேண்டியதாயிற்று. அனார்க்கலியை உயிருடன்வைத்து சமாதிகட்டும் காட்சிவரவும் அவளுக்குத் துக்கம் தாளாமல் கண்களால் ஓடுகிறது. படத்தை நிறுத்தினேன். அதன்பிறகும் அவளுக்குத் தூக்கம் வருகிறமாதிரி இல்லை. திரும்பவும் தன் ‘மொண்ணை பிளேட்டுகளை’ எடுத்துக்கொண்டு என்னிடமே வந்தாள்.

“ஏன் டடா பாதுஷா(அக்பர்) அனார்க்கலியை சிப்பாய் (இளவரசன்) Heiraten (கல்யாணம்) செய்ய விடுகிறாரில்லை…?”

அவளது வார்த்தை வங்கியில் இதைக்கேட்பதற்கான வார்த்தைகள் இல்லை, அதனால் ஜெர்மனிலேயே கேட்டாள்.

“அந்தக்காலத்தில் ஒரு இளவரசன் இன்னொரு இளவரசியைத்தான் கல்யாணம் செய்யலாம்” என்றேன்.

“Scheise dumme Leute und Ihre Regeln…..” ம்ம்ம்ம்……. முட்டாள் ஜனங்களும் அவங்களோட முட்டாள்ச்சட்டங்களும் என்றாள் கோபத்துடன்.

***

சமாதான காலத்தில் ஊருக்குக் குடும்பத்துடன் போயிருந்தோம். கட்டுநாயகா விமான நிலையத்தில் உள்ளே எங்கும் கறுப்புத்தலைகளைப் பார்த்ததும் “ ஹையா…….. இஞ்ச முழுப்பேரும் தமிழாக்கள் ” என்று குதித்தனர் பூமியும் ஜெகதாவும். அடுத்து குடிவரவு/குடியகல்வு அளியிலிருந்த அலுவலர் என்னிடம் சிங்களத்தில் பேசவும் “ டடா உங்களுக்கு எப்பிடி அராபிக் தெரியும்” என்று ஆச்சரியப்பட்டனர் இருவரும்.

ஊருக்குப்போனதும் பூமிகாவைப் பார்த்த உறவினர்கள் எல்லோருமே தவறாமல் அவளிடம் முதலில்க்கேட்டது

“பேபிக்கு என்ன பெயர் ”

“குஞ்சுக்கு என்ன பெயர் ”

“செல்லத்துக்கு என்ன பெயர் ” என்றுதான்.

இதனால்ச் சலித்துப்போன பூமிகா பிறகு பெயர் கேட்டவர்களிடம் சொன்னது:

“நீங்கள் பெயர் கேட்கிறதென்றால் அம்மாவிட்டக்கேளுங்கோ….. வேறேதாலும் கேட்கிறதென்றால் என்னிட்ட கேளுங்கோ…..ஓகேயா…..”

“அட….. இஞ்ச பார்றா…. அன்னப்பிள்ளைப்பெத்தா தப்பாமல் சுத்திக்கொண்டு உன்னட்டதான் வந்திருக்கிறா” என்றனர் பெரியவர்கள்.

உள்ளூர் தேநீர்க்கடையில் நாம் நுழைந்து பருத்தித்துறைவடையென்கிற பிரசித்தமான தட்டைவடையை ’பெற்றோமாக்ஸ்’ வெளிச்சத்தில் சுவைத்துக் கொண்டிருக்கையில் பூமிகா திடீரென்று மரவாங்கில் ஏறிநின்றுகொண்டு “ எல்லாரும் ஓடியாங்கோ… ஓடியாங்கோ Dinosaur குஞ்சொன்று வந்து நிக்குது ” என்று சொல்லி அங்கே பூச்சிபிடிக்க வந்தவொரு பல்லியைக் காட்டினாள்,

ஊரில் அங்கே தாறுக்கும் மாறுக்குமாகத் திரிந்த நாய்கள் குழந்தைகளைப் பெரிதும் ஆகர்ஷித்தன. இரண்டைப் பிடித்துக்கொண்டுபோனால் என்னவென்றும் ஆதங்கப்பட்டனர்.

தன்னுடைய பெயரைச்சொல்ல பஞ்சிப்பட்ட பூமிகா தினமும் ஒவ்வொரு நாயைக்கண்டபோதும் எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தது அதுகளின் பெயர்களைத்தான்.

“பெரியத்தை வீட்டுக்குப்போகையில் ஆட்டோவுக்கு குறுக்க ஓடின நாய்க்கு என்ன பெயர் ”

“செல்வச்சன்னிதி வாசலில் காதுமடிஞ்சு நின்றுதே பிளாக் அன்ட் வைட் அதுக்கு என்ன பெயர் ”

“ஆசையம்மா வீட்டுக்கோடித் தாழ்வாரத்தில் படுத்திருந்த பிறௌண் மறையனுக்கு என்ன பெயர் ”

நானும் ஜிம்மி- றோஜர்- நிம்மி- றெக்ஷி- பென்னி- வால்டர்- காஸ்பர்- புறுஸ்லி- என்று தெரிந்தவற்றையெல்லாம் சொல்லித்தீர்ந்துபோக பொலிவூட் பெயர்களாக அள்ளிவிட்டுக்கொண்டிருந்தேன். பூஜா- தபு- கஜோல்- நதியா- ஸ்மீதா- ஹெலென்- ரேகா- ராக்கி- வரைபோய் பின் றிவேர்ஸில் வந்து அங்கமுத்து- பாலையா- சுருளி- செந்தில்- சார்லி- என்று கலந்துகட்டிச் சமாளித்தேன்.

இடையில் கே.ஆர். விஜயா வந்தபோது ஒரு விபத்து வரப்பார்த்தது. “ அதென்ன அதுக்கு மட்டும் இனிஷியல் ” பிடித்துக்கொண்டாள்.

“ஓ அதுவா அதின்ட அப்பா கடலூர் ராம் நாய் அக்கர் லொறியில் அடிபட்ட நேரம் அதன் பெயர் பேப்பரில வந்திச்சா……. அப்படித்தெரிஞ்சதுதான் ” சமாளித்தேன்.

அவளுக்கும் பின்னர் மெல்லப் “ புரியத் ” தொடங்கியது.

பெரியஅத்தை பூமிகாவுக்கு ‘ஒம்லெட்’ போட்டுக்கொடுத்தார்.

சற்று நேரத்தில் மீண்டும் தட்டைக்கொண்டுவந்து நீட்டினாள்.

மீண்டும் ‘ஒம்லெட்’டைக்கொடுக்கவும் மீண்டும் கொண்டுவந்து நீட்டினாள். இப்படி 3 ஒம்லெட்டுகள் கொடுத்தானபின் ஒரு சந்தேகத்தில் அவளின் பின்னால் போனால், அவள் கோடியில் படுத்திருந்த மறையன் ஒன்றுக்கு ஒம்லெட் விருந்தளித்துக்கொடிருந்தாள்.

நாங்கள் ஊரிலிருந்தபோது அச்சுவேலிச்சந்தைத்திடலில் ஊர் நாய்களின் உச்சிமாநாடொன்றையும் அவளுக்குப்பார்க்க நேர்ந்தது. முதலில் எல்லா நாய்களும் அமைதியாகக் கூடி நின்றன. பின் அவர்களுக்குள் தத்துவவிரிசலோ……. கோபாட்டு நெரிசலோ…. வந்துவிட ஒன்றுடனொன்று மூக்கைவிடைத்தும், மேலுதட்டை விரித்து வெட்டும்பற்களைக்காட்டியும் உறுமிக்கொண்டு நின்றன. திடுப்பெனப் ஒன்றின்மேலொன்று பாய்ந்து கடித்துக்குதறுப்படவும் பெருஞ்சமர் மூண்டது. அவைகளின் கூச்சலால் எரிச்சலடைந்த வியாபாரி ஒருவர் வாழைக்குலைத்தார் ஒன்றைக்கொண்டுவந்து பி.எஸ். வீரப்பாபாணியில் சுழற்றவும் நாய்கள் அனைத்தும் ஆக்ரோஷத்தை அதிலேயே போட்டுவிட்டு மறைந்தேகின. நேரடிச்சமரைப்பார்த்து அதிர்ந்ததில் அவளுக்கு அவைகளின் ‘பெயர்’ விஷயம் மறந்துபோய்விட நான் தப்பித்தேன். இவையெல்லாம் அவளுக்குக் காணரிய தரிசனங்கள்.

***

சமாதானத்துக்கு முன்பதாக எங்கள் வீட்டில் ஒரு இராணுவமேயர் குடியிருந்தான். அந்தத் தயாநிதியோ வீட்டைவிட்டுக்கிளம்பும்போது ‘எதுக்கு தமிழர்களுக்கு இம்மாம் பெரியவீடென்று’ அதைத் தரைமட்டமாக்கிவிட்டுப் போனான். வீடு மாத்திரமல்ல அதன் சுற்றுமதில்களோ, அங்குநின்ற மா, பலா, மாதுளை, கமுகு, தென்னை, பனை எதுவுமில்லை. வீட்டின் மேற்குப்புறக்கோடியில் சிறு செடியாக நின்ற மருதாணிமட்டும் விருட்சமாக வியாபித்து வீடு இடத்தையே காணமுடியாதபடி மறைத்திருக்கிறது. ஒருவாறு அவற்றை வெட்டியும், நீக்கியும்கொண்டு அதற்குள் புகுந்து அத்திவாரத்தைக் கண்டுபிடித்து “ இதுதான் சமையலறை இங்கேதான் பாட்டியும் அத்தைகளும் சமைப்பினமாம், இதுதான் வதியுமறை, இதிலதான் நாங்கள் அமர்ந்திருந்து பேசுவோமாம், இந்த அறையிலதான் நாங்கள் தூங்குவோமாம், இதிலதான் டடா இருந்து படிப்பேனாம் என்று சொல்லவும் உணர்ச்சிவசப்பட்ட பூமிகா “ பிறகு எதுக்கு வீட்டை உடைச்சவை, ஏன் உடைச்சவை……” என்பதான அவளின் கேள்விகளுக்குத்தான் எம்மால் அவளுக்குத் திருப்தியான பதில்களைத் தரமுடியவில்லை.

ஜெர்மனிக்குத் திரும்பும் நாள் கட்டுநாயகா விமானநிலையத்தில் நட்பான தோரணையோடு அசப்பில் நடிகர் அர்விந்தசாமி போலிருந்த ஒரு இளம் விமானப்படை அதிகாரி ஆசையுடன் இவளின் கையைப்பிடித்துக்கொண்டு கேட்டான்:

“Hey…….. Sweety, What’s your name? ”

“No….. I won’t tell you…! ”

இரண்டு கைகளையும் நெஞ்சுக்குக்குறுக்கே கட்டிக்கொண்டு முகத்தை வேறுபக்கம் திருப்பினாள்.

“Why dear……?”

விரலை அவனுக்கு நீட்டி

“You are the Gang broke Grandma’s house…!”

அவனுக்கு மூச்சு முட்டுவதைப்போலிருந்தது. பச்சாபத்தோடு அவளையே நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான்,

– காலம் – கனடா 26வது வெளியீடு, 2006.

1 thought on “கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்

  1. பூமிகாவை பற்றிய சுவாரசியமான கதை. பெண் குழந்தைகளை எப்படி வளர வேண்டும் என்றும் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *