கண்ணீர் வெறுத்தவன் காலடியில் அழுகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 10,752 
 
 

புருஷன் வீட்டிற்கு வந்ததும், நிஜமாகவோ அல்லது சம்பிரதாயமாகவோ ஒரு பாட்டு அழுது தீர்க்கிறார்கள் படித்த, படிக்காத கூர்மதியுள்ள, மந்தபுத்தியுள்ள எல்லாப் பெண்களுமே. எதிர் வீட்டிற்கு வந்த மூன்றாம் பையனின் புது மனைவியும் அழுதாள். அது சம்பிரதாயமான அழுகையாகத்தான் தெரிந்தது.

‘அழாதடா…. அழாத கண்ணு எங்க இங்கதானே இருக்கேன். ஒரு வார்த்தை சொல்லு ஓடி வந்திடறேன்…’ சொன்னது அவள் அம்மாவாக இருக்கும். அம்மா, அழுத பெண்ணை தேற்றிக்கொண்டிருக்க பக்கத்தில் வாயில் துண்டு வைத்து அழுது அதே துண்டால் கண்ணையும் மூக்கையும் துடைத்துக்கொண்ட, மீசைவைத்து வேட்டிக் கட்டியிருக்கும் அந்த நல்ல உயரமான மனிதன் அவளுடைய அப்பனாக இருக்க வேண்டும்.

கத்தியை தெருத் திண்னையில் தீட்டியபடி இதை பெரியவர் பார்த்துக் கொண்டிருந்தார். ‘காலையில் கல்யாணமாயிற்று, புருசனை அவ பாக்கற பார்வை சீக்கிரம் சீக்கிரம்னு இருக்கு. அம்மாவப் பாத்து அழறா… அழாட்டா ஊர்ல போயி அம்மா சொல்லுவாளே ‘பாசமில்லாத பொண்ணு. கல்யாணமான மறுநிமிசமே புருசனோட ஒட்டிகிட்டா… எங்கள கண்டுக்கவேயில்லே’னு அதுக்காக அழறா… பி. எஸ். சியோ பிசுகோத்தோ படிச்சிருக்காளாம். என்ன பிரயோசனம். உருண்டையா கண்னை வச்சிட்டு அழறாளே…’ பெரியவர் முகத்தில் சுருக்கம் சுழிக்கிறது.

மறுநாள் புதுப் பெண் தண்ணீர் எடுக்கப் போனாள். பெரியவர் பேர் கேட்டார். அவள் பெயர் தெரியும் என்றாலும் கேட்டார். அவள் சொன்னாள். வெட்கப்பட்டாள். குளித்த மஞ்சளைத் தாண்டி செம்மை இழையோடிற்று. நேற்று அம்மாவிற்கு அழுதாள். இரவு புருசனின் சில்மிச அனுபவங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்குமோ என்று நாணுகிறாள். கொஞ்சம் சந்தோசமும் கர்வமும் அந்த செம்மையில் இருந்தது. அம்மா மறந்து போயிருக்குமோ அவளுக்கு.

கல்யாணத்திற்கு பெரியவரைக் கூப்பிடவில்லை. வராமல் இருக்க வேண்டும் என்று பிடிக்காதவர்களுக்கு வைக்க பத்திரிக்கை வைக்கும் வழக்கம் ஏதாவது இவர்களுக்கு இருந்திருந்தால் பெரியவருக்குத்தான் முதலில் அவர்கள் வைத்திருப்பார்கள். எதிர் வீட்டுக்காரர்தான் என்றாலும் அழைக்கவில்லை. ஒருகாலத்தில் அவர்களோடு நெருக்கமாகத்தான் இருந்திருக்கிறார். இப்பொழுது ஒத்துவருவதில்லை. சண்டையெல்லாம் ஒன்றுமில்லை. மனுசனாக இவரை யாரும் மதிப்பதில்லை. எதிர்ப்பட்டால் சும்மா ஒரு கேள்வி…. போனால் போகிறதென்று, அதற்கொரு பதில் அவ்வளவே.

புதுப் பெண்ணை பெரியவர் விசாரித்தார். ‘சாப்பாடு ஆச்சா…? புருசன் வேலைக்கு போயிட்டானா? என்ன ஒதட்டுலே காயம்….?’ எல்லா கேள்விக்கும் விடை தெரிந்தும் பேசவேண்டுமே அதனால் கேள்விகள்.

சிலப்பல நாட்கள் ஆன பின்னும் அவளுக்கு அம்மா நினைவு பெரும் குடைச்சலாக இருப்பதை அவளின் முக வாட்டத்தை வைத்து பெரியவர் கண்டு கொண்டார்.

‘அம்மா ஞாபகமா…? சிரிப்பே காணோமே…’

பெரியவர் கேள்விக்கு சிறு பிள்ளை போல் முகம் சூம்பி நின்றாள். திங்கள் அழுதாள். தேற்றினார். செவ்வாய், புதன், சந்தை நாள், கோயிலுக்கு போகும்போது, துணி உலர்த்தும் போது அழுதாள். படித்தவள், இவளுக்குத் தெரியாதா? புருசன் வீட்டிற்கு வந்தால் அம்மாவும் கூடவே வந்து ஜடைபின்னி தோசை ஊட்டிவிடமாட்டாள் என்று. அழுகிறாள். பெரியவருக்கு பரிதாபமெல்லாம் வரவில்லை சுருக்கென்று கோபம் தான் வந்தது.

‘இந்த வீடு, உன் புருசன், இந்த ஜனம் எல்லாம் உனக்கு பிடிச்சிருக்கில்ல…?’

‘ம்… பிடிச்சிருக்கு் சொல்லிவிட்டு ‘ஏன் கேக்கறிங்க?’ என்றாள்.

அவள் பிடிறியின் பக்கதில் சிவந்திருந்தது. என்ன அது என்று பெரியவர் கேட்கவில்லை. பல்லினால் கடித்த பதிவு நன்றாகவே தெரிந்தது. கொஞ்சம் முரடன் போலத்தான் இருக்கிறான். பார்த்தால் அப்படித் தெரியவில்லை. கொஞ்சம் வேகம் அதிகம் போல இருக்கிறது. பெண் தாங்குவாளா?

‘இல்லே தினத்துக்கும் அழுது வடியரையே… அதான் இந்த வீடு பிடிக்கலையோ, உன் புருசன்காரன் கொடுமை படுத்தறானோன்னு கேட்டேன்.’

அவள் திகைத்து பின் சுதாரித்து பெரியவரை முறைத்து பார்த்தாள். ‘இல்லையே நான் அப்படி இல்லையே. நல்லாத்தானே இருக்கேன். எங்கே அழுது வடியறனாம். உங்க மொகத்த பாத்தாத்தான் பத்து நாளா விடாம அழுது வீங்கினாப்பல இருக்கு. மொகத்த கழுவி சுண்ணாம்பு அடிச்சிக்கங்க நல்லா இருக்கும்.’

பெரியவர் கர்… புர்ரென்று சிரிக்கவும் அவள் கொஞ்சம் பின்தள்ளி நின்று கொண்டாள். ‘அப்படி சிரிக்காதிங்க. காட்டுல சிங்கம் பாத்தாப்ல இருக்கு.’

‘எதுக்கு தாயி என் முகத்திலே சுண்ணாம்பு அடிச்சிக்கிடனும். இனிமே சுண்ணாம்பு அடிச்சி கிரகபிரவேசமா பண்ணப்போறேன். நீ அடிச்சிகிட்டா உன் புருசன்காரன் சந்தோசப்பட்டு பல்லை தீட்டிகிட்டு வருவான்.’

‘எதுக்கு பல்லை தீட்டிகிட்டு வருவான்… ஐயோ தப்பு வருவார்.’

‘எதுக்கோவருவான். நல்லா பேசு அப்புறம் யம்மா யப்பான்னு அழு… நல்ல பொண்ணு நீ்

‘அதில்லே என் புருசன் நல்லா வச்சிருந்தாலும் என் அத்தை என்னை மகமாதிரி பாத்துகிட்டாலும் எனக்கு அம்மா அப்பா ஞாபகம் வருதே நான் என்ன செய்யட்டும். அந்த வீட்டிலையே பூ கட்டி டிவி பாத்துகிட்டே இருந்திருக்கலான்னு சமயத்துக்கு தோணுது. அப்பாவ பெயிண்ட் வாங்கித் தரச் சொல்லி அந்த வீட்டு தரையில் கோலம் போட்டுட்டே இருந்திருக்கலாம். கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கக் கூடாதுன்னு தோணுதே என்ன பண்ணட்டும். என் இத்தனை வயசுல ஒரு நாள் கூட அந்த வீட்ட விட்டு வெளியில போயி தங்கி இருந்தது இல்லே… வேற ஊர் போயி இருந்ததில்ல… என் சினேகிதங்க முகம் ஒவ்வொன்னா தெரியுது.. இங்கே எல்லாம் புதுசா இருக்கு பழகாத எடமா இருக்கிறதாலே மனசு கொஞ்சம் படபடப்பா இருக்கு….’

தன் வீட்டை திரும்பிப் பார்த்தபடியே சொல்லிவிட்டு கண்களை துடைத்துக் கொள்கிறாள். ‘எல்லாம் விட்டுட்டு வந்துட்டேன் அப்பா அம்மா தம்பி பாட்டி… பாட்டி தான் ரொம்ப கஷ்டப்பட்டா… நான்னா பாட்டிக்கு உசிர். யாரு அவளுக்கு பொறுமையா வெத்தலை இடிச்சி தருவாங்க?’

பெரியவர் ஆட்டுத்தோலுக்கு உப்பு போட்டு தேய்த்தபடி இருந்தார். ‘நான் பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க உங்க வேலையில கண்ணாயிருந்தா எப்படி. கேக்கறிங்க தானே…?’

‘ம்… ம். கேக்கறேன். அதான் நானும் கேக்கறேன். பாட்டிக்கு வெத்தலை பாக்க நங்கு நங்குனு இடிச்சி குடுத்துகிட்டு அங்கயே இருக்கிறதுக்கென்ன? எதுக்கு உனக்கு கல்யாணமும் இடுப்புல தண்ணி எடுக்க கொடமும்.’

திரும்பவும் உருண்டைக் கண் கொண்டு பெரியவரை ஒரு முறை முறைத்தாள். ‘ஒரு பொண்ணு கல்யாணம் கட்டிக்காம பாட்டிக்கு பாக்கு இடிச்சி குடுத்திட்டே இருக்கமுடியுமா?’

‘அதான் கட்டிக்கிட்டு வந்துட்டியே கட்டிக்கிட்டா பொறந்த வீட்ட விட்டு வந்து தனியா புருசன் வீட்டுல இருக்கனும்னு தெரியுமில்லே. ஒழுங்க குடித்தனம் நடத்தேன். இங்கயும் வந்து எதுக்கு பாட்டி புராணம் பேசனும்.’

‘அதுக்காக கட்டிக்கிட்டுவந்த உடனே பழசை எல்லாம் மறந்திடனுமா? பத்தொன்பது வருசமா இருந்தது எல்லாம் ஒரு தாலி கட்டிட்டா காணாம போயிடுமா? நான் முருகர்சாமி கும்பிட்டு வளந்தவ… எத்தனை அமைதியான சாமி. அதான் என் குலதெய்வம். இப்ப ஒரு கயித்தை கழுத்தில கட்டிட்டதும் என் குலமும் மாறிப்போச்சி குலதெய்வமும் மாறிப்போச்சி.. இங்க திரௌபதி சாமி கும்பிடறாங்க… இனிமேல் அதுதான் என் குலதெய்வம். கோயிலுக்கு போனா பம்பை அடிக்கறாங்க, உடுக்கை அடிக்கறாங்க கோயிலுக்கு வெளியே பேய் ஆடுது அதை ஓட்டறாங்க, கோயிலுக்கு உள்ளே சாமியே ஆடுது, பயமா இருக்கு, இப்படி பயந்துக்கிட்டு என்னத்தை வேண்டிக்கிடறது அந்த சாமிகிட்டே.’

பெரியவர் தோலுக்கு உப்பு தேய்ப்பதை நிறுத்திவிட்டார். என்னமா பேசுது இந்த பொண்ணு? ‘ஆளூ நல்லா பேசறியே. அப்படித்தான் இருக்கணும். ஆனா அசிங்கமா அழுகை வருதே உனக்கு. அதான் பிடிக்கலை எனக்கு்

‘ஆமா, நீங்க ஒரு வீட்டுக்குப் புதுசா வாழ்க்கைப்பட்டு போயி ஜனம் தெரியாத வீட்டுல யாருக்கு எழுந்து நிக்கணும், யாரு வந்தா ஒக்காந்துட்டே இருக்கணும், யாருக்கு சாப்பாடு போடணும், யாருக்கு காப்பி மட்டும் தரணும், யாருக்கு தண்ணி மட்டும் தரணும், யாருக்கு தண்ணி கூட தரக்கூடாது, யார்கிட்ட சிரிச்சிப் பேசணும் யார் வந்தா முகம் கொடுத்து பேசாம இருக்கணுன்னு அவஸ்தை பட்டா தெரியும். எத்தனை கஷ்டம் புது பொண்ணுக்குன்னு. உங்களுக்கென்ன ஆம்பளைங்க கல்யாணமாகி வேற வீட்டுக்கு போகமாட்டிங்க. அதுவும் இப்ப உங்களுக்கு வயசாகி கிழடு தட்டிப் போச்சி அதனால இந்த வேதனை என்ன தெரியப் போகுது.’

‘உங்க படிப்பு ஆம்பளைக்கு பொம்பளைக்கு நரம்பு எழும்பு சதை ரத்தமெல்லாம் வேற வேறன்னு சொல்லித் தந்திருக்கு. அதனால ஆம்பளை கண்ணுல அழமுடியாதமாதிரி சிமெண்ட் வச்சி அடைச்சி பொம்பளை கண்ணுல தண்ணியா கொட்ட குழாய் போட்டு தந்திருக்குன்னு படிச்சிட்டு வந்தத என்கிட்டே சொல்லறிங்க…’

‘அப்படியா நான் சொன்னேன். மீசைவச்ச ஆம்பிளை அழக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால சொன்னேன்.’

‘அப்ப உன் புருசன் மாதிரி மீசை எடுத்துட்ட ஆம்பளை அழலாமா கூடாதா சொல்லு…’

அவள் முறைத்தாள். அந்த பார்வையில் ‘டேய் கிழவா திமிர்டா’ இருந்தது. கிழவர் புரிந்து கொண்டு கேட்டார் ‘தப்புதான். உன் புருசன் மீசை இல்லாம அழகா சினிமா நடிகர் மாதிரி இருக்கார். அதைவிடு மீசை வச்ச பொம்பளைங்க இருக்காங்களே அவங்க அழலாமா கூடாதா’

அவள் உதடு கோபத்தில் படபடத்தது. அனேகமாக ‘டேய் கிழவா திமிர்டா உனக்கு’ என்று அவள் சொல்லும் நேரம் வெகு தூரத்தில் இல்லை.

‘நெஜமாவே மீசைவச்ச பொம்மனாட்டி இருக்கிறா கண்ணு சொன்னா நம்ப மாட்டே. மாசமொருமுறை அவ சவரம் செஞ்சிப்பா தெரியுமா சோப்பெல்லாம் போட்டு. சவரம் பண்ணும் போது காமிக்கிறேன். பக்கத்து தெருவில தான் இருக்கா.’

அவள் மினுக்கென்று நகைப்பூடே ‘இந்த விளையாட்டெல்லாம் வேணா… சிறுவயசில உங்க அம்மாவ பிரிஞ்சி இருந்திருந்தா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் சங்கதி…’

‘நானா…?’ உப்பு தேய்ப்பதை நிறுத்திவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்தார்… ‘எட்டு வயசிலே அப்பன அம்மாவ விட்டு ஓடி வந்தவன் நான்’

‘எட்டு வயசில ஓடி வந்திங்களா…? அதானே பாத்தேன். வீட்டுக்கு அடங்காம எட்டு வயசில ஓடி வந்த தத்தேறிக்கு பாசம் எப்படி இருக்கும்’ அவள் சொல்ல பெரியவர் ஆட்டுத் தோல் அடுக்குவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தார். நாக்கைக் கடித்துக் கொண்டு ‘இல்ல… தெரியாம வாய் தவறி சொல்லிட்டேன்’ என்ற தலையில் தட்டிக் கொண்டாள்.

‘சொல்லு. நான் தத்தேறிதான். எங்க அம்மாவும் அப்படித்தான் சொல்லுவா. எங்கப்பன் சொரனை கெட்டவனேன்னு கூப்பிடுவார். ஊர்ல இரக்கமில்லாதவன் ராட்சசன்னு சொல்வாங்க. வார்த்தையில என்ன இருக்கு. தாத்தான்னு கூப்பிட்டாலும் தத்தேறின்னு கூப்பிட்டாலும் எனக்கு ஒன்னுதான்.’ ஆட்டுத் தோல்களை முழுதுமாக அடுக்கும் வரை அவள் மவுனமாகவே இருந்தாள்.

கையைக் கழுவிக் கொண்டு திண்ணைமேல் நின்றிருந்த கயிற்றுக் கட்டிலை இழுத்துப் போட்டு வாயில் புகையிலையை வைத்து அடக்கிக் கொண்டு பெரியவரே பேச ஆரம்பித்தார். ‘மனுசனுக்கு சோகம், துக்கம், வேதனைனு என்னென்னவோ பேர்ல தெனத்துக்கும் விசயம் இருக்கு அழறதுக்கு. அழுதா சரியாயிடுமா அதெல்லாம்?’

‘உன் நல்லதுக்கு சொல்லறேன். பாசம் வேசம் எல்லாம் மனசுல வை இருக்கிற வாழ்க்கையை கெட்டியா புடிச்சிக்கோ. சும்மா அழுதிட்டு இருக்கிற பொம்மனாட்டி வீடு குட்டி சுவர்தான். கெட்டியா இருக்கணும் மனசு.’

‘என்னை எங்க அம்மா இதோ இந்த கை பெரிய வெறகுக் கட்டையால் போட்டு அடி அடின்னு அடிப்பா. நான் அடிக்கிறதுக்கு தோதா குனிஞ்சி நிப்பேன். என் அக்கா அப்படி இல்ல. வெறக எடுத்தாலே உயிர் போற மாதிரி கத்த ஆரம்பிச்சிடுவா… அவ கத்தறதப் பாத்து பயந்துட்டு அம்மா அடிக்கறதை நிறுத்திடுவா. அவளுக்கு கோபமே இத்தனை அடிச்சிம் நான் அழவேயில்லைங்கறதுதான். அடிச்சா வலிக்கும் அதுக்கு எதுக்கு அழனும்.’

பெரியவர் பேசிக் கொண்டிருக்கும்போது அவள் சன்னமான குரலில் குறுக்கிட்டாள் ‘உங்க அப்பாவும் அம்மாவும் சின்ன வயசிலே உங்களை அடிச்சி கொடுமைபடுத்தினதால உங்களுக்கு அவங்க மேல பாசம் இல்லாம போச்சி. என்ன பெத்தவங்க அப்படி இல்லை..’

பெரியவர் மறுத்து, ‘இல்லே… பாசம் இல்லாம இல்லே. என் அம்மாவுக்கு நான் எதிரிங்க முன்னாடி நல்லா பொழைக்கணும். நல்ல படியா வாழ்ந்து காண்பிக்கணும்னு ஆசை. நான் ஒதவாக்கரையா இருக்கேன்னு அவளுக்கு வருத்தம். அதனால அடிச்சா. எதையும் மணிக்கணக்கா செய்வேன். வேகமா ஒரு வேலை செய்யத் தெரியாது.

ஒரு நாள் பொறுக்க முடியாம கட்டை வண்டி கம்பு ஒண்ணப் புடிங்கிட்டு வந்து அப்பனை வெளாசித் தள்ளிட்டேன். போதையிலே இருந்த ஆளு வலிதாங்காம வயித்தைப் புடிச்சிட்டு ஐயோன்னு விழுந்துட்டான். அம்மா சத்தம் கேட்டு வாயில வயித்திலே அடிச்சிட்டு ஓடியாந்தா… அடுத்து ரெண்டு பேரும் என்ன செய்வாங்கன்னு தெரியும் ஓடி வந்துட்டேன்.

எங்க போறது தெரியல. உச்சி வெயில்ல வீட்ட விட்டு வந்தவன் இருட்டு வரை நடந்துகிட்டு இருந்தேன். வயல் வயலா நடந்தேன். இருட்டிப்போச்சி இனி எங்க போறது. தண்ணி தாகம், பசி. மத்யானமும் எதும் சாப்பிடல. சாப்பாடு கேட்டு சண்டை போட்டதுக்குதான் அப்பன் அடிக்க வந்தான்.

நான் வந்தது ஒரு சின்ன கிராமம். கரண்ட் இல்லாத ஊரு. ஊரே தூங்குது. பசி மயக்கத்தில ஒரு திண்ணையில படுத்தேன். கொஞ்சம் கழிச்சி ஒரு அம்மா கதவு தெறந்து வெளியவந்தா. ஒன்னுக்கிருக்க வந்திருக்குமோ என்னமோ… திண்ணையில பாத்துட்டு படக்னு உள்ள போயிடுச்சி.

எனக்கு பயமாச்சி. பேர் தெரியாது ஊரா இருக்கு. அப்பன் அடிக்கு பயந்து ஓடிவந்து இங்க அடி படப்போறேன். தெரிஞ்சி போச்சி. உள்ளே இருந்து சிம்னி வெளக்கைப் புடிச்சி ஒரு ஆள் யார்டா நீன்னு கேட்டு என் முகத்துக்கு நேரா வெளிச்சம் பாக்கறாரு

ஏய்… இவன் சின்ன பையனா இருக்காண்டி அதுக்குள்ள திருடன் அது இதுன்னு கலாட்டா பண்றியே என்று உள்ளே அவரோட பொண்டாட்டியக் கூப்பிட்டாரு.

பிறகு அந்த அம்மாவும் வந்து உத்து உத்து வெளக்குள முகத்தைப் பாக்குது. யாரு எவருன்னு கேள்வி மேல கேள்வி. நான் ஒன்னுமே சொல்லல. அப்பா அம்மா பேர் கேட்டாங்க. அதுக்கும் சொல்லல. சாப்பிட்டியான்னாங்க அதுக்கு தலைய ஆட்டினேன். ஐயோ பாவம் உள்ள வா சாப்பிடுவேன்னு தண்ணியில இருந்து சோத்தை பிழிஞ்சி போட்டு கருவாட்டு கொழும்பை ஊத்தினாங்க. நான் சாப்பிடறதப் பாத்துகிட்டு இருந்தாங்க.

பேர் தெரியாத ஊர்ல பேர் தெரியாத அம்மா போட்ட சாப்பாடு அத்தனை ருசியா, சந்தோசமா இருந்தது. பேர் தெரியாத அப்பா மட்டும் நான் யார் என்னன்னு கேட்டுகிட்டே இருந்தார். நான் எதற்கும் பதில் சொல்லவில்லை. சைகை காட்டி தண்ணீர் வாங்கி ஒரு செம்பு குடித்தேன் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத நான் பேர் தெரியாத அம்மா ஊமையா என்று கேட்டதற்கு மட்டும் இல்லை என்று வாய் திறந்து பதில் சொன்னேன். பேர் தெரியாத அம்மாவும் பேர் தெரியாத அப்பாவும் வாயடைத்துப் போனார்கள்.

இரவு முழுதும் திண்ணை தூங்கினேன். காலையில் பேர் தெரியாத அம்மா நீராகாரம் கொடுத்தா. குடிச்சேன். ஊருக்குப் போன்னு சொன்னா. மாட்டேன்னிட்டேன். எந்த ஊருன்னு தெரியாது போகவும் மாட்டேன்னிட்டேன். என்ன பண்ணுவாங்க. நான் அங்கயே இருந்துட்டேன். பேர் தெரியாத அப்பாவுக்கு கொஞ்சம் நெலம் இருக்கு. அங்க போய் புல் வெட்டிவந்து மாட்டுக்குப் போடுவேன். மாட்டை மேய்க்க விட்டாங்க. சாணி அள்ளினேன். சந்தைக்கு கூட்டிட்டு போனாங்க. திடம் வந்ததும் ஏர் பிடிக்க விட்டாங்க.

ஆறு மாசம் கழிச்சி சந்தையில என் அப்பன் என்னப் பாத்துட்டான். பேர் தெரியாத அப்பா பின்னாடி ஒண்டிகிட்டேன். அவர் கிட்ட விவரம் சொல்லி என்னை ஊருக்கு வலுக்கட்டாயமா கூட்டிட்டுப் போயிட்டான். போற வழியில கண் கலங்கிடுச்சி.’

கண் கலங்கியதாக பெரியவர் சொன்னதும் இவள் பிடித்துக் கொண்டாள். ‘மாட்டிகிட்டிங்களா? அழுதிருக்கிங்க’ ஒளிந்திருப்பவரை கண்டுபிடித்த சிறுமி போல அவள் துள்ளினாள்.

‘கலங்கனது என் கண் இல்ல… என் அப்பனோடது. ஊர்ல என் அம்மா அக்கா எல்லாம் அழுதாங்க. நான் செத்துட்டதா நினைச்சிட்டாங்க. கெணறு குட்டையேல்லாம் தேடி பொணம் கெடைக்கலன்னு கருமாதி பண்ணிட்டாங்க. இப்ப செத்தவன் வந்துட்டான்னு சந்தோசம்.

‘அங்க இருக்க எனக்குப் புடிக்கல. அடிக்கிறதும் முட்டாப்பயங்கறதும், உதவாதவன்னு சொல்லறதும்தான் இங்க நான் கண்டது. என்னை மதிச்சி மாட்டைக் கொடுத்து மேச்சிட்டு வான்னு அனுப்பி ஒரு பட்டி ஆட்டை நம்பி மேய்சிட்டு வான்னு தந்து, என்ன வௌரமான ஆளா மதிச்சி சந்தைக்கு அனுப்பி வேண்டியதை வாங்கியாற வக்கிறதுமா இருக்கிற என் பேர் தெரியாத அம்மா வீடே எனக்கு பிடிச்சிப் போச்சி. தடுத்து பாத்தும் நான் இங்க வந்துட்டேன். ஏர் புடிச்சேன், மாடு மேச்சேன், சந்தைக்குப் போனேன்.

‘உலகத்தில எனக்கு சந்தை தான் ரொம்ப புடிச்ச எடம். செத்தாலும் சந்தையில சாகணும். பதினெட்டு வயசில எனக்கு சந்தை அத்துபடி. கோழி வித்து, காய் வித்து, ஆடு வித்து, மாடு வித்து, வித்த மாட்டுக்கு தரகு கேட்டு, வந்த காசுல மாடு வாங்கி, வாங்கின மாட்ட லாபத்துக்கு வித்து… நல்ல வசதியான வேவாரி ஆயிட்டேன்.

‘என் அம்மா நேரம் கெடைக்கும் போது என்னப் பாக்க வந்து விடாம ஒப்பரி வச்சிட்டுப் போவா. வீட்டுக்கு வான்னு சொல்லுவா. நான் போகல. என்ன பாக்கறே…. பாசமே இல்லாம இப்படி மிருகம் மாதிரி இருக்கேன்னா பாசத்துக்கென்ன கொறைச்சல். பெத்தவங்க நெனைப்பு வரத்தான் செய்யும். பாசத்தைப் பாத்தா என் சம்பாதனைய விடனுமே. சந்தையில இருக்கிறத விட எனக்குப் பாசம் பெரிசாத் தெரியல.

‘சந்தையில நிறைய அடிபட்டேன். வாய்த் தகராறு கைத்தகராறு இல்லாம இருக்காது. தெனம் கெட்ட வார்த்தை வாங்கணும். எட்டு பேர் அடிச்சிருக்காங்க ஒரு நாள். அவமானப்பட்டிருக்கேன். ஒரு நாளும் உன்னை மாதிரி அழல.

‘என் அம்மாவுக்கு அதான் வருத்தமும் பயமும். என்ன சாமக் கோடாங்கிகிட்ட காண்பிச்சி என் புள்ளை அழுவே மாட்டேங்குது என்னன்னு பாத்துச் சொல்லுன்னு கேட்டிருக்கா. இப்படி ஒரு அம்மா. நான் புள்ளையா இந்த பூமியிலே அவதரிச்சி ஒரு மணி நேரம் சும்மாதான் இருந்திருக்கேன். சொட்டு கூட அழாம. பிரசவம் பாத்தவ தொடையில கிள்ளி கொஞ்சமா அழுதிருக்கிறேன். அப்புறம் பசியெடுத்தா எறும்பு கடிச்சான்னு கொஞ்சமாத்தான் அழுதிருக்கேன். சரியா அழவேயில்லைன்னு தான் அம்மா சொன்னா.

‘உன் அம்மாவுக்கு முடியலடான்னு ஒரு நாள் சேதி வந்தது. பத்து நாள் கழிச்சிப் போனேன். உன் அப்பா குடிச்சிட்டு கெணத்திலே விழுந்து கைய ஒடைச்சிக்கிட்டான்னு சேதி வந்துச்சி. ஒரு மாசம் கழிச்சிப் போனேன். ஊர்ல இருக்கிறவங்களுக்கு என் மேல ஏக கடுப்பு. பெத்தவங்களுக்கு ஒன்னுன்னா ஓடி வரலைனு. பெத்தவங்களுக்கு முடியாம போயிட்டா உடனே ஓடிப் போயி பாக்க நான் மருத்துவனா? ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிருந்தா என்ன ஆகறதுன்னு ஒரு கெழவன் கேட்டான். என்ன ஆகும் எல்லாம் ஒரு நாள் சாகறவங்கதானே… செத்தா பொதைக்க வேண்டியதுதான்னு சொன்னேன். சொன்னதும் அம்மா அழறத பாதியில நிறுத்திட்டா. ரொம்ப துக்கமாயிட்டா அம்மா அழுகை டக்குனு நிறுத்திக்குவா.

‘ஊர்காரனுங்க கருவிகிட்டு இருந்தாங்க. ஒரு நாள் இல்ல ஒரு நாள் நான் கதறி அழறத வேடிக்கை பாக்க காத்திருந்தாங்க. என்னைக்காவது நான் முக்காடு போட்டு அழனும் அதப் பாத்து இவங்க சந்தோசப்படணும். இது நல்ல எண்ணம். எனக்கு வந்த கஷ்டம் எல்லாம் முக்காடு போடற மாதிரிதான் வந்தது. சந்தையில நாய் அடிக்கிற மாதிரி அடிச்சிருக்காங்க. திருட்டுப் பட்டம் வாங்கியிருக்கேன். ஒரே நேரத்திலே ஒரு பட்டி ஆடு செத்துப் போயிருக்கு. பத்தாயிரத்தை சந்தையிலே தொலைச்சிட்டு செலை மாதிரி நின்னிருக்கேன். ஆனாலும் நான் அழிஞ்சி போயிடலயே. கல்யாணம் கட்டிக்கிட்டேன். புள்ளை பெத்துகிட்டேன். என் பொண்டாட்டி போட்டோவப் பாக்கறியா..?.’

கிழவர் உள்ளே போய் சின்ன பழுப்பேறிய மார்பளவு புகைப்படம் எடுத்து வந்தார். ‘கல்யாணமான புதுசில எடுத்தது. என்னையும் நிக்கச் சொன்னா மாட்டேன்னிட்டேன்.’

போட்டோவைப் பார்த்தவள், ‘இவங்களா? இவங்களைப் போயா நீங்க? ரொம்ப அவலச்சனமா இருக்காங்க. இவங்களைப் போயி…’ என்று பாதியில் நிறுத்திக் கொண்டாள். அசிங்கமாயிருந்தாலும் பெரியவரின் மனைவி. அவர் முன்னால் அசிங்கத்தைப் பற்றி சொல்லியிருக்கக்கூடாது.

‘அவலட்சணம்தான். பல்லு வெளிய நீட்டி, சாரைக் கண்ணோட அடுப்புக் கரியாட்டம் இருக்கா. அசிங்கம் தான். ஆனா இவ அந்த காலத்துல ஒரு சவால் எனக்கு. என்ன மாதிரியே நெஞ்சுரம் அதிகம். நான் பாத்த திடமான ஒரே பொண்ணு. பெரிசா பிரியப்பட்டெல்லாம் கட்டிக்கிடல. கட்டிக்கலாம்னு நெனைச்சேன். சண்டை போட்டு கட்டிக்கிட்டேன்.’

‘இத்தனை அவலட்சணத்தை சண்டை போட்டு கட்டிக்கிட்டிங்களா?’

‘ஆமா… அதை அப்புறமா சொல்லறேன். பாக்க தேவாங்கு மாதிரி இருப்பா. நடு ராத்திரியிலே வயல்ல ஆடு நொழஞ்சா பேய் மாதிரி வெரட்டப் போவா. எந்த ஆம்பளையா இருந்தாலும் சண்டைனு வந்தா ஒரே வார்த்தையிலே அதட்டி அடக்கிப்புடுவா. கண்கலங்காத இன்னொருத்தி. எனக்குனு வந்து வாச்சா. அவ என்னவிட தெடம்.’

‘பல்லி செவுத்துல தப்பான எடத்தில இருந்து கத்தினா என்ன பண்ணுவீங்க நீங்க? சொல்லு. எதோ அபசகுணமா நடக்கப்போதுன்னு வெசனம் புடிச்சி நிப்பிங்க. அவ தொடப்பத்தை திருப்பி புடிச்சி ஒரே அடியில கொன்னுப்புடுவா அந்த பல்லிய.’

கேட்டவள் காதை பொத்திக்கொண்டு ‘ஐயோ பல்லியக் கொல்லறதா?’ என்றாள்.

‘அதை அவகிட்ட கேட்டா சோத்துல விழுந்தா என்ன ஆகறது. அப்படின்னு கத்துவா. பல்லி சாமி மாதிரின்றதெல்லாம் அவளுக்குக் கெடையாது. ஒருமுறை இதை கேக்கப்போன ஐயர் ஒருத்தர் மாட்டிக்கிட்டார். பல்லி நம்ப மேல விழுந்தா பஞ்சாங்கம் பாக்கணும்னு சொல்லறிங்களே பல்லி மேல நாம விழுந்துட்டா என்னத்தைப் பாக்கறதுன்னு கேட்டு அந்த ஐயர் இந்த வீட்டுப் பக்கமே வரதில்ல.

தேவையில்லாத இம்சைய அவ சேத்துக்கிடறதே இல்ல. தெனத்துக்கும் பூனைக்கு சுட்ட கருவாடு போடுவா… அது எலி புடிக்குமில்ல. கரப்பான் பூச்சியப் பாத்துட்டா குதிகால்ல வச்சி வெள்ளையா பிசின் வர்ற மாதிரி தரையில தேச்சிக் கொன்னுடுவா. எதுக்கு தேவையில்லாத சனியன். அதுக்காக கொலைகார பாதகின்னு நெனைக்காத. வீட்டுக்குள்ள வந்த மண்புலுவ என்னமா காயம்படாம எடுத்து மண்ணுல விடுவா. அவளக் கண்டா பாம்பு பல்லி மனுசன் எல்லாம் ஒரே ஓட்டம் தான் தெரியுமா? ராட்சசி..’

‘அசிங்கத்த எதுக்கு சண்டை போட்டு கட்டிக்கிட்டிங்கன்னு கேட்ட இல்ல. இந்த திடத்துக்காகத்தான் இவளை விட்டுடக் கூடாதுன்னு சண்டை போட்டு கட்டிக்கிட்டேன். அந்த ஒன்னரைக் கண்ணிக்கு என் மேல ஒரு இது இருந்தது எனக்குத் தெரியும். அவ யாருன்னு நினைக்கிற? அந்தப் பேர் தெரியாத அம்மாவோட பொண்ணுதான். அவ மூஞ்சிதான் அப்படி தேவாங்குக்கு பல்லு வச்சாப்பல இருக்கும். அவள் நேர்ல பாத்தியனா அசந்து போவ. திம்முனு நாட்டுக் கட்டையா கும்முனு இருந்தா. நடந்தா வீரப்பரம்பரை மாதிரி கைவீசி நடப்பா.’

‘இந்த வெக்கம் கூச்சமமெல்லாம் அவகிட்டே கடுகுக்கும் கிடையாது. நாணிக் கோணி உன்ன மாதிரி ஒருத்தரைப் பாக்கமாட்டா. ஒரே நேர் பார்வைதான். என்ன… புதுசா வர்றவங்களுக்கு அவ யாரைப் பாக்கறான்னு தெரியாம கொழப்பமா இருக்கும். ஆனா எனக்கு மட்டும் அவ யாரைப் பாக்கறா எதுக்குப் பாக்கறா எல்லாம் தெரியும். அதனாலதான் அவளுக்கு என்மேல இருக்கிற இது தெரிஞ்சது.

அப்பனாத்தா இல்லாத நேரமாப் பாத்து ஊட்டு உள்ள வச்சி… இத உன் கிட்ட சொல்லக் கூடாது. அப்ப என் வயசு அப்படி. ஒரு மாதிரியா நாங்க இருக்கும் போது சந்தையில இருந்து அவங்க அப்பன் வந்துட்டான். அவ ஒன்னுமே பண்ணல எழுந்து நின்னு என் கன்னத்தில வீங்கிப் போற அளவுக்கு ஒரு அறைவிட்டா. ‘என்ன யாருன்னுடா நெனைச்சே… என்கிட்ட தப்பா நடக்கிற என்கிட்ட காட்டாத உன் வேலைய…’ அப்படின்னு அவ அப்பன் முன்னாடி ஊரே கேக்கற மாதிரி கத்தினா. எதோ நான் அவ கையப் புடிச்சி இழுத்தமாதிரி. ரெண்டு பேருக்கும் இதாயிதானே அதாச்சி. இப்ப என்ன மட்டும் மாட்டவிட்டுட்டா…

‘நான் ஆடித்தான் போனேன். அவளோட அப்பன் சந்தையில இருந்து வரும்போதே வெவரம் தெரிஞ்சிதான் புது சாட்டை வாங்கியாந்தானா தெரியல. மாட்டு சாட்டையில மனுசனை அடிச்சா ரத்தம் வந்துடுமே. ரத்தமா வந்துடுச்சி. உண்ட வீட்டு உப்பு, நன்றிகெட்ட நாய், ஏழு ஜென்மத்து பாவம், அது இதுன்னு சொல்லி என்னை வீட்டை விட்டு ஓடு நாயேனு கழுத்தைப் பிடிச்சி வெளிய தள்ளினான்.

அந்த ஒண்ணரைக் கண் தேவாங்கு அதுக்கு ஒத்துக்கல. என்ன கெடுக்கத்தானே பாத்தான். கெடுத்திடலையே. அப்புறம் எதுக்கு வீட்ட விட்டுப் போகணும் என்று கேட்டு அவ அப்பன் ஆத்தாவை ஆடிப்போக வச்சிட்டா. இவ மொறைச்ச மொறையிலே அப்பன் ஆத்தா ஒன்னும் சொல்ல முடியாம அடங்கிப் போயிட்டாங்க.

பிறகு எனக்கு ஊருக்குள்ள மரியாதை கூடிப்போச்சி பாத்துக்கோ. வழியில பாத்தா கேடு கெட்டவன்னு சொல்லுவாங்க. காரித் துப்புவாங்க சில பொம்பளைப் புள்ளைங்க தேவையில்லாம மாராப்பெல்லாம் சரி செஞ்சிகிட்டு கற்புக்கு பங்கம் வராம திரும்பியே போயிருக்காங்க.

என்ன மாட்டிவிட்டாளே யாரும் இல்லாத நேரத்தில மன்னிப்பு கேப்பான்னு பாத்தேன். அப்படி மன்னிப்பெல்லாம் அவ ஒன்னும் கேக்கவேயில்லை. அவ செஞ்சது சரிதாங்கற மாதிரி மார் நிமித்திகிட்டு நடக்கறதும் தேவையில்லாம என்ன அதட்டறதுமா இருந்தா. ஆனா அந்த ஒன்னரைக் கண்ணுல அந்த இது மட்டும் மாறவேயில்ல.

அந்த இது அவ அப்பனுக்குத் தெரிஞ்சி திரும்பவும் குதிச்சான் சாதியென்ன, தகுதி என்ன, அடுக்காது இதுன்னு எகிறினான். அவ அப்பன் முன்னாடி வந்து நேரா நின்னு ‘நான் இந்த ஆளைத்தான் கட்டிப்பேன்’னு ஒரேவரி சொல்லிட்டு வாய் தெறக்கக்கூடாதுன்னு அவ அப்பனையும் மெரட்டிட்டு என்னையும் அந்த இந்த பார்வை பாத்துட்டுப் போயிட்டா.

அப்பனும் ஆத்தாளும் பூச்சி மருந்த எடுத்து வச்சி குடிச்சி செத்துடுவோம்னு சொன்னாங்க. இவ மருந்தப் புடிங்கி ரெண்டு பேருக்கும் டம்ளர்ல ஊத்திக் குடுத்து குடிங்கன்னு குடுத்துட்டா. சாவடிக்கப் பாக்கறியாடின்னு ஒப்பாரி வச்சாங்க. அவ மசியல. என்னதான் கட்டிக்கிட்டா. அம்பது வருசத்துக்கு முன்னாடி வேறு சாதி ஆள கட்டிக்கிட்டு ஊர்ல கேவலமா பேசினப்பவும் அவமானமே இல்லாம ராணி மாதிரி நடந்து மார்தட்டி இருந்தவ இவதான்.

என் மேல அவ உசிரா இருந்தா. நான்தான் அவளுக்கு எல்லாம். ஒரு நிமிசம் பிரியாம ஒன்னா இருந்தோம். ஒன்னா விவசாயம் பாத்தோம். ஒன்னா சந்தைக்குப் போய் வந்தோம். ரெண்டு வருசத்திலே ஒரு பையனைப் பெத்தா. அந்த பையணும் எட்டு வயசிலே பாம்பு கடிச்சி செத்துப் போச்சி. நடு ராத்திரியில ஒன்னுக்கு விட வந்த பையனை பாம்பு கடிச்சிடுச்சி. ஒத்தை பொம்பள தோல்மேல பையனப் போட்டு பக்கத்து கிராமத்து டாக்டர்கிட்ட ராவோட ராவா கொண்டு போயிருக்கா. நடு வழியில உயிர் போயிடுச்சி. நடு வழின்னா எது? சுடுகாட்டுல நிக்கிறா அவ…

சுடுகாட்டுல பையனை பொறட்டிப் பாத்து செத்து போயிட்டான்னு தெரிஞ்சி வீட்டுக்கு கொண்டு வந்து போட்டுட்டு மறுநாள் தான் எல்லாத்துக்கும் சொல்லியிருக்கா. ஒரு பொட்டு அழுகையில்லையாம். அவளை ஊரே துப்பியிருக்காங்க. நெஞ்சில ஈரம் இருக்காதா பத்து மாசம் சொமந்து தானே பெத்தா சாவுக்கு அழமாட்டாளா பாசமில்லாத பேய்னு திட்டியிருக்காங்க. எனக்குத் தானே தெரியும் எத்தனை பாசம் அந்த பையன் மேல வச்சிருந்தான்னு. அவன் செத்து எத்தனை பெரிய துக்கத்தை சொமந்தான்னு எனக்குத்தானே தெரியும். பையன் செத்தப்ப நான் ஜெயில்ல இருந்தேன்.

கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போன மாதிரி பாக்காதே… இந்த பக்கத்து வீட்டுக்காரன்தான் தெனத்துக்கும் வம்புக்கு வந்தான். உன் எறவானத்து தண்ணி ஏண்டா இங்க என் வீட்ட முன்னாடி வருதுன்னு தண்ணி போட்டுட்டு குடும்பத்தோட சண்டைக்கு வந்தான். அடிக்க வந்தான். ஒருத்தன் அடிக்க வந்தா ஒன்னு திருப்பி அடிக்கனும் இல்லே தடுக்கணும். நான் தடுத்தேன். செஞ்சது சரிதானே. வந்த வேகத்திலே அவன் போய் அதோ அந்த பெரிய கல்லுமேல விழுந்து மண்டைய ஒடைச்சிட்டு செக்க செவேர்னு எழுந்து நிக்கறான். பிறகு மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டான்.

அவங்க பசங்க வெளியில போயி பெரிய படிப்பு படிச்சவங்களா… அதனால என்ன ஆட்டம் போட்ட மர்டரோ என்னாவோ சொல்லி உள்ள வச்சாங்க மூணு வருசம். வெளியே வந்தா எல்லாரும் என்னை கொலைகாரன்னு கூப்பிடறாங்க. எங்க நான் அவனை கொன்னேன். நான் ஜெயில் விட்டு வந்து பத்து வருசம் கழிச்சி அவன் கழிசல்ல செத்துப் போனான்.

எட்டு வயசிலே நான் இந்த ஊருக்கு வந்தேன். கஷ்டன்னு வந்த இந்த ஊர்க்காரங்களுக்கு காசா தந்திருக்கேன். கோயிலுக்கு எத்தனை செலவு செஞ்சிருப்பேன். இந்த ஊருக்கு என் கைக்காசில கெணறு வெட்டித் தந்திருக்கேன். செவத்தான், மொட்டையன் பொண்ணுங்களுக்கு தாலி எடுத்துத் தந்து கல்யாணம் பண்ணித் தந்திருக்கேன். சாப்பாட்டுக்கு இல்லேன்னு கடன் கேட்டவன் திருப்பித் தராம இருந்திருக்கானே, நான் என்னைக்காவது அசிகங்கமா பேசி திருப்பிக் கேட்டிருப்பேனா. வந்தவங்களுக்கெல்லாம் வாரித்தானே தந்தேன். என்னய கொலைகாரன்னு அபாண்டமா பேசலாம இந்த ஊர்க்கார பயலுவ.

என்னையும் என் புள்ளையையும் நடுத்தெருவில நிறுத்திட போற நீன்னு ஒரு நாள் கூட என் பொண்டாட்டி என்னைத் தடுக்கல. கஷ்டப்படறவனுக்கு குடு தப்பில்லேன்னு சொல்லுவா. என்ன கொலைகாரன்னு சொல்றாங்க. ஏன்னா ஜெயில்ல இருந்து வந்தப்ப நான் பரம ஏழையா வந்தேன்.

என் மாமனாரு என்னத்தை செஞ்சி அம்முட்டு கடன்பட்டானோ அவன் நெலத்தையும் நான் வாங்கி வச்சிருந்த மொத்த நெலத்தையும் விக்க வேண்டியதாப் போச்சி அவன் செத்த பின்னாடி. வித்து தரேன்னு சொன்ன பின்னாடிதானே என் மாமனாரு பொணத்தை கடன்காரன் எடுக்க விட்டான். மாமனாரை பொதைச்சிட்டு வந்து நானும் பொண்டாட்டி புள்ளையும் நடுத்தெருவில நின்னோம்.

வசதி வாய்ப்பெல்லாம் காணாம போச்சி. நான் வேதனைப்படல. வேதனை படறவனா இருந்தா என் அப்பன் ஆத்தா அடிச்ச அடியில செத்துப் போயிருப்பேன். அவளும் கலங்கல. சந்தையிலே கசாப்பு போட்டு பொழைச்சிக்கிடலாம் வாய்யான்னு கூப்பிட்டா. சந்தைக்கு போயி கசாப்பு போட்டோம். கறிதின்னே அழியிற ஜனம் மானாவாரியா சந்தையிலே வாங்கித் தின்னுச்சி.

நான் ஜெயிலுக்கு போயிட்டேன். என் பொண்டாட்டி ஒரு நாளைக்கு எட்டு ஆடு கூட ஒடம்புல கால் வச்சி அழுத்தி ஆட்டுக் கழுத்தை சரியா குரல்வளையில அறுத்து சிந்தாம ரத்தம் புடிச்சி தோல் உரிச்சி வெட்டி கறியாக்கி அளந்து காசாக்கிடுவா. கறிவித்து, தோல்வித்து, நடுத்தெருவில இருந்து இதா இந்த வீடு வாங்கி இருக்கோம்னா அதுக்கு என் பொண்டாட்டி துணிச்சல்தான் காரணம்.

அன்னக்கி அவ மூக்கை சிந்தியிருந்தா குடும்பம் அழிஞ்சிருக்கும். இந்த ஒன்னரைக்கண்ணி லேசுபட்டவ இல்ல. புருசன்காரன் ஜெயிலுக்குப் போயிட்டான், அப்ப பாத்து புள்ளை செத்து போச்சி இந்த நெலமையிலே நீ இருந்திருந்தா துணியக் கிழிச்சிட்டு பயித்தியமாயிருப்ப. அவ தூண் மாதிரி இருந்தா. மழைக்கு காத்துக்கு அசராத தூண்மாதிரி. அவ மனசுவிட்டிருந்தா இந்த வீட்டை எப்படி வாங்கியிருப்பா. இந்த வீடு அவ வாங்கின வீடு. இத குடுக்கலேன்னு தான் உன் மாமனாருக்கும் எனக்கும் மனஸ்தாபம். எப்படித் தருவேன் இதை. அதனால தான் இந்த கதையை உனக்குச் சொல்லறேன். அவ தெடம் ஒவ்வொரு பொம்பளைக்கும் வேணும்.

ஆனா விதியப் பாரு ஒரு நாள் சந்தையில இருந்து மழையில வீடு திரும்பறப்ப என் கண் முன்னாடியே இடி இறங்கி கருகி செத்துப் போயிட்டா. நானும் என் பொண்டாட்டியும் எத்தனை நெருக்கமா இருந்தோம். சந்தோசமாய் இருந்தோம். அவள இப்படியா இந்த பாவி இடி கொண்டு போகணும். நான் ஜெயில்ல இருக்கிற அந்த மூணு வருசமும் ஓடிஓடி சம்பாதிச்சாளே. நல்லா ஒன்னா வாழ வீட்ட வாங்கி வச்சாளே… ஜெயில்ல இருந்து நான் வந்து கொஞ்சம் நாள் கூட சேந்து இருக்கலையே… அதுக்குள்ள இடி கொண்டு போனுமா அவளை.. சுடுகாட்டுலே பாதி வெந்து போன அவளை எரிக்கிறப்ப மனசு பாரமாயிடுச்சி. ஏதோ ஒன்னு உள்ள நொறுங்கி போனமாதிரி பாரமாயிடுச்சி. இனி என்ன இருக்கு. வேதனையான சாவு அவ சாவு. நான் அழவேயில்லை. அவளுக்கும் அழுகிறவங்களை பிடிக்காது. எவனும் எனக்கு ஆறுதல் சொல்லலை. மறுநாளே சந்தையிலே நான் மட்டும் கசாப்பு போட்டேன். என்ன ஒரசிக்கிட்டே நின்னுக்கிட்டு வம்புக்கிழுக்க அவதான் இல்ல.

ஆடு அறுத்து வித்து பொழைச்சே ஆகனுமான்னு கேப்பே. பின்னே அவளோடையே சுடுகாட்டுல சாக முடியுமா? முடியாதில்லே. அப்ப மனச தெடப்படுத்திக்க வேண்டியதுதான். வயித்துப் பாட்டுக்கு ஓடியாடி வேலை செய்ய வேண்டியதுதான். ராத்திரியில அவ போட்டோ பாத்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான். சாகிற வரையில எனக்கு வேற என்ன வேலை.

ஒருத்தன் உணர்ச்சிய அடக்கித் திடமா இருக்கிறது அவ்வளவு தப்பா நீயே சொல்லு தாயி. மனுசனுக்கு அன்பு பாசம்னு மெலிசான உணர்ச்சிங்க இருக்கு. சிரிப்பு அழுகை வேதனைன்னு என்னென்னமோ இருக்கு மனுசனுக்கு. அதை கொன்னுட்டு மரக்கட்டைமாதிரி உலாத்தரவனை எப்படி மனுசனா மதிக்கறதுன்னு கேக்கறாங்க

அதைக் கொன்னுட்டா இருக்கேன். என்கிட்டே அன்பு இல்லாம இல்ல. எனக்கு துக்கம் இல்லாம இல்ல. எனக்குப் பாசம் இல்லாம இல்ல. எனக்கு வேதனை இல்லாம இல்ல. அது போற போக்கில நான் போகல. அந்த கோபம், துக்கம், எல்லாம் நம்மை அழிச்சிடக் கூடாது இல்ல.

என்னோட அம்மா இந்த நூத்திரெண்டாவது வயிசலேயும் என்கிட்ட ஒட்டறதில்லே. கேட்டா நான் கசாப்பு போட்டேனாம். நம்ம ஜாதியில எவனுமே கசாப்பு போட்டு காசு சம்பாதிச்சது இல்லே. நம்ப வயித்தை கழுவிக்க எத்தனை உசிர அறுக்கிறது. அப்படி சம்பாதிச்ச காசுல நான் ஒரு வாய் சாப்பிடமாட்டேங்கிறா…. இது ஒரு வீம்பு. இது தேவையா இது அவசியமா? எதுலே திடமா இருக்கனுமோ அதல இருக்க மாட்டா. அவ இந்த வயசிலேயும் விட்டா கறி தின்னுவா. . ஆடு அறுக்கக்கூடாது ஆனா கறி தின்னனும். இது என்ன நியாயம். அறுக்காம எப்படி ஆடு கொழம்பு ஆகும்.

நான் அறுக்கலன்னா இன்னொருத்தன் அந்த ஆட்டை அறுக்கப் போறான். இதுல ஜாதி என்ன இருக்கு, பாவம் என்ன இருக்கு. எந்த ஆடாவது தானே வயசாயி செத்திருக்கா.

என் அக்கா புருசன் தேவடியான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டான்னு அவ வாழா வெட்டியாவே இருந்து செத்தா. இந்த ஒரு வார்த்தைக்கு இவ்வளவு கோபம் தேவையா ஒரு பொம்மனாட்டிக்கு. எத்தனை சண்டையும் தாங்கற தெடம் வேணுமா இல்லையா? ஏகத்துக்கும் பாசமா இருக்காங்க அநியாயத்துக்கும் சண்டை போட்டுக்கிடறாங்க சும்மா சும்மா அழறாங்க இதா வாழ்க்கை. மனுசனால முன்னேற முடியுமா? எல்லாத்தையும் பொறுமையா ஏத்துக்கிட்டு எல்லாத்தையும் லேசா எடுத்துகிட்டு திடமா வாழணும். நான் அப்படித்தான் வாழ்ந்தேன். என் பொண்டாட்டியும் அப்படித்தான் இருந்தா. நீயும் அப்படித்தான் இருக்கணும். அதுக்காகத்தான் ஒக்கார வச்சி இந்த கதையை சொல்லறேன். சரிதானே…

கதையை கேட்டுக் கொண்டிருந்தவளின் கண்கள் கலங்கியிருந்தன. பெரியவர். ‘என்ன திரும்பவும் உங்க அப்பா அம்மா மொகம் ஞாபகத்துக்கு வந்திடுச்சா பாட்டிக்கு பாக்கு இடிச்சி தரணும் போல இருக்கா?’ என்று கேட்டார்

‘இல்லே உங்க கஷ்டத்தை நெனைச்சித்தான். பொண்டாட்டி இடி இறங்கி, பையனை பாம்பு கடிச்சி எத்தனை பெரிய வேதனை உங்களுக்கு. அந்த கடவுளுக்கு கண்னே கிடையாதா’ என்று விசும்ப ஆரம்பித்தாள்.

பெரியவர் தலையை சொரிந்து கொண்டார். கடுகடுவென வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘தாயி உன் ஊட்டுல போயி மகராசியா எல்லாத்துக்குமா சேத்து அழு தாயி இங்க வேணாம்…’ என்று சொல்லி வாயில் கத்தைப் புகையிலையை அடக்கி எச்சில் ஊரவிட்டு புகையிலை விறுவிறுப்பை ரசித்தபடி கண்மூடிக் கொண்டு ‘கடவுளே…’ என்றார்.

வீட்டில் அவள் புருசன் மீசையை சிரைக்கும்போது வாகாய் அறுத்துக் கொண்டு ரத்தம் வர நின்றபோது பதறாமல் பஞ்சை எடுத்து கொடுத்தவளைப் பார்த்து மாமியார் திகைத்தாள். இரவில், இப்படியா வெட்டிகிட்டு ரத்தம் வருது கொஞ்சம் கூட பதட்டமே இல்லாம இருக்கியே என்று புருசன் கேட்டதும் ரத்தம் வரும்போது பஞ்சைத் தர்றது புத்திசாலித்தனமா பதர்றது புத்திசாலித்தனமா நீங்களே சொல்லுங்க என்றதும் அவள் புருசன் திகைத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *