வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே அவன் ஜன்னல் வழியே வீதியில் செல்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஜேஜே என மக்கள் இங்கும்அங்கும் ஓடி கொண்டிருந்தார்கள். அதை காண்பவர்களுக்கு ஆடி மாத திருவிழாவோ என ஐயப்பாடு எழலாம். ஆனால் அந்த சேரியை பொறுத்த வரையில் தினமும் காலையில் அரங்கேறும் சாதாரண காட்சியே அது.
அங்கு அதிகம் வசிப்பது தினக் கூலிகள். அருகில் அமைந்திருந்த பஞ்சு தொழிற்சாலையில் பெரும்பாலானோர் வேலை செய்துக்கொண்டிருந்தனர். சிலர் உணவு பண்டங்களை விற்றும், சிலர் குறைந்த விலையில் உடையையும் உடலையும் விற்றும் வயிற்றை கழுவிக் கொண்டிருந்தனர்.
மேம்பாலத்துக்குக் கீழ் அமைந்திருந்ததால் அந்த சேரியில் எப்போதும் வாகன இரைச்சலுக்கு பஞ்சமில்லை. கூடவே வேலைக்கு செல்லும் மனிதர்களின் காலடி சப்தம், பஞ்சு தொழிற்சாலையில் இயங்கும் பழைய எந்திரங்களிலிருந்து வரும் பேரொலி, நடு வீதியில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் எழுப்பும் ஒலி, சேரியில் சுற்றி திரியம் நாய்களின் ஊளை, பன்றிகள் நரவையை நக்கி தின்னும் சப்தம் என அனைத்தையும் ஜன்னலுக்கு பின்னின்று அவன் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தான். வேறு வழியின்றி வெகு நாட்கள் அங்கே வசிப்பதனால் முதலில் நாராசமாய் காதில் விழுந்த ஒலிகள் இப்போது அவனுக்கு பிடித்துப்போனதில் வியப்பொன்றுமில்லை.
தினமும் காலையில் போருக்கு செல்வது போல் செல்லும் கூட்டம் வரிசையாக வடக்கு மூலையில் நிற்கும். இந்தியாவில் எங்குதான் வரிசை இல்லை!
சற்று உள்ளே சென்று பார்போமேயானால் பெரிய கல்வெட்டு ஒன்றை காணலாம். அதில் பின்வரும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
“சுகாதார கழிப்பிடம்.
திறப்பு: 09 .09 .1999 ,
கோடை வள்ளல் திரு. கோதண்டன் அவர்கள்”
கொடை என்பது கோடை என பொறிக்கப்பட்டதனாலோ என்னவோ கோடைக்கு ஒருமுறை அந்த கல்வெட்டை மட்டும் சில ஜாலரா கூட்டம் வந்து சுத்தம் செய்து விட்டு போகும். கழிவறை சுத்தத்தைப் பற்றியோ சுகாதாரத்தைப் பற்றியோ யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. சுகாதாரம் கழிக்கப்பட்டதாலோ என்னவோ அது சுகாதார கழிப்பிடம்.
இவை அனைத்தும் அவனுக்கு பழகிப்போன காட்சிகள். அவன் வாழ்வில் ஏமாற்றம் மட்டுமே மாறி மாறி வந்ததேயொழிய மாற்றம் வரவில்லை.
அவன் நிரஞ்சன். விளரிய முகம். மெலிந்த தோற்றம் 5 அடி 8 அங்குலம். 74 கிலோ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை. தற்போது 5 அடி 9 அங்குலம். 60 கிலோ.
ஒருகாலத்தில் ஐந்து வேலை உணவு உண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அவன், தற்போது கிட்டியபோது மட்டும் உணவு உண்டு தன்னை கொல்ல முயற்சிக்கும் தனிமையை தான் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தான்
உயர் நடுத்தர வர்க்கத்தை சார்தவன் அவன். பிறந்ததிலிருந்து பசி அறிந்ததில்லை, இப்போது பசியை தவிர வேறு ஏதும் அறிவதில்லை.
அண்ணனாக தன் இரு தங்கைகளுக்கும் அவன் எதையும் செய்துவிடவில்லை. தனியார் பணியில் இருக்கும் அவன் தந்தைக்கு அவனை அரசு பணியில் அமர்த்திவிட வேண்டும் என்று ஆசை. லட்சங்களை இறைத்து அவனை பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார். ஆனால் அவன் பொறியாளன் ஆவதை தவிர்த்து கலை கூத்தாடி ஆகி போனான். கல்லூரி செல்வதே மேடை நாடகம் போட, நண்பர்களிடம் கதை சொல்ல என்றாகிப்போனது.
அவன் சொல்லும் கதைகளை கேட்டு கைத்தட்டுவதற்காகவே ஒர் வேலையற்ற நண்பர் கூட்டமிருந்தது. அதனாலோ என்னவோ அவன் சினிமா பித்து தலைக்கேறி, உலக சினிமாவில் பின்நவீனத்துவம் பேசிடவே தான் பிறந்துள்ளதாக எண்ணிக்கொண்டான்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே பல இயக்குனர்களின் சென்று உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்கத் தொடங்கினான். அவர்களும் சொல்லிவைத்தார்போல் “படிச்சு முடிச்சதும் வா !” என்ற ஒரே பதிலையே சொல்லி அவனை திருப்பி அனுப்பினர். அவன் சோர்ந்து போகாது மீண்டும் மீண்டும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தான்.
கல்லூரியில் எந்த பரிச்சையிலும் தேறவில்லை. தேர்வுகளைப்பற்றி அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளாவிடினும் வாங்கிய காசிற்காக கல்லூரி நிர்வாகம் அலட்டிக்கொண்டது.
“உங்க பையன்கூட சேர்ந்துதான் மத்த நல்ல பசங்களும் கெட்டு போறாங்க. எந்நேரமும் கதை அடிக்கிறது, கேங் பார்ம் பண்ணிக்கிட்டு பிரச்சனை பண்ணுறது, அவனுக்கு மனசுல ஹீரோனு நினைப்பு. இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்க படிகிறதா இருந்தா படிக்கட்டும். இல்லைனா அவன் கல்லூரியவிட்டு நீக்க வேண்டியதிருக்கும்” பொறிந்து தள்ளினார் கல்லூரி முதல்வர்.
“உங்கள நம்பிதான படிக்க அனுப்புறோம், காச வாங்கிகிட்டு நீங்களே இப்படி பேசுனா எப்படி மேடம் “
“படிக்க அனுப்பினேன்னு நீங்க சொல்றீங்க. அவன் படிக்க முயற்சிகூட பன்னலயே. படிக்க வேண்டிய வயசுல என்ன சார் ஆட்டம். எதோ கல்சுரல்ஸ் பண்ணுறனு கிளாசுக்கே வரமாட்டேன்கிறான். கேட்டா நம்ம கல்லூரிக்காகதான் செய்றேன்னு என்னையே எதிர்த்து பேசுறான். இவன் போகும்போது கூடவே பத்துபேர கூட்டிட்டு போயிடுறான். கண்டிச்சு வைங்க..இவனால எங்க கல்லூரி பேர் கெட்டுட கூடாது”
“இப்ப கூட உங்க பேர் கெட்டுட கூடாதுனுதான் பார்க்குறீங்களேயொழிய என் பையனோட எதிர்காலத்தை பத்தி பேச மாட்றீங்களே…கடன் வாங்கி அவன இங்க படிக்கவச்சேன் “
“இது ரொம்ப பிரபலமான கல்லூரி, இங்க படிச்சா உடனே வேலை கிடைக்கும், அதனாலதானே கடன்பட்டாலும் பரவாயில்லைன்னு உங்க பையன சேர்த்திருக்கீங்க. இதுவே இது ஒரு அநாகரிமான கல்லூரி, இங்க எந்த மாணவனும் ஒழுங்க படிக்க மாட்டான், ஆட்டம் போடுறத தவிர அவனுக்கு வேற வேலையில்லை, அப்படினா உங்க புள்ளைய சேர்ப்பீங்களா !”
முதல்வரின் பேச்சில் நியாயம் இருப்பதாக தோன்றியதால் என்னவோ நிரஞ்சனின் தந்தை எதையும் மேற்கொண்டு பேச முயற்சிக்கவில்லை.
முதல்வர் தொடர்ந்து பேசினார், “இங்க பாருங்க சார். உங்க பையனோட எதிர்காலத்தில எங்களுக்கும் அக்கறை இருக்கு. அவன கொஞ்சம் கண்டிச்சு வைங்க. பிளேஸ்மென்ட் நெருங்கிடுச்சு. அவன் படிக்க ஆர்வம் காட்டினா போதும், நிச்சயம் அவன மேல கொண்டு வந்திடுறோம்”
“அவங்க சொல்றதெல்லாம் என்னால கேக்க முடியாதுபா. எனக்கு படம் எடுக்கிறதுலதான் ஆர்வம் அதிகம். அவங்க உங்களுக்கு கால் பண்ணினதும் நீங்க ஏன் தனிய போய் பார்த்தீங்க. என்னையும் கூட்டிட்டு போயிருக்கனும். ரொம்ப நல்லவ மாதிரி பேசுறாளோ..வருஷம் வருஷம் ஏதோ ஒரு சிம்போஷியம் நடத்தி காசடிக்கிறா. கல்சுரல்ஸ் எங்க கட்டுப்பாட்டுல இருக்கிறதுனால காசடிக்க முடியல . அதனால் என் மேல வெறுப்பு “
பளார்….
கன்னத்தை தடவியவாறே நிரஞ்சன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் கண்கள் கலங்கி இருந்தது. சிறு வயதுமுதல் அவனை அதிகம் கண்டித்தது அவன் தாய் மட்டுமே. அதிகம் செல்லம் கொடுத்த தந்தை முதன் முதலில் கை நீட்டியது, அதுவும் தங்கைகளின் முன் தான் அடி வாங்கியது அவனுக்கு பெருத்த அவமானமாயிருந்தது.
“அம்மா ! உன் புள்ள செத்துட்டானு நினைச்சிக்கோ “
வீட்டைவிட்டு வெளியேறியவனை யாரும் தடுக்க முற்படவில்லை. அவன் தாய் மட்டுமே கதறிக்கொண்டிருந்தாள்.
சென்னை வந்த பின் பல இயக்குனர்களை சந்தித்தான். ஒவ்வொருவரும் பல காரணங்களை சொல்லி அவனை தவிர்த்தனர், சில நேரங்களில் காவலாளிகள் தடுத்தனர்.
“புயலிலே ஓர் தோணி படிச்சிருக்கியா ?” ஒரு பிரபல இயக்குனர் வினவினார்..
“இல்ல சார்”
“இலக்கியத்துல எவ்வளவு ஆர்வமுண்டு ?”
“தெரியல சார்”
“பிடித்த எழுத்தாளர் ?”
“அபப்டியெல்லாம் இல்ல சார்..குமுதம் ஆனந்த விகடன் படிப்பேன்..நல்ல கதை சொல்லுவேன் “
“இங்க பாரு தம்பி. சினிமா என்பது ஒரு புரிதல். அதுக்கு நீ இன்னும் பக்குவ படல…நிறைய படி..அப்பறம் ஒருநாள் வா..பாக்கலாம் “
நிச்சயம் வீட்டுக்கு திரும்பி போகிற எண்ணம் அவனுக்கில்லை. தன்மானம் என்று தனக்கு தானே கற்பித்துக் கொண்ட எதோவொன்று அவனை தடுத்தது.
பல இயக்குனர்களின் வீட்டுப் படி ஏறிஇறங்கி, பல இடங்களில் பட்ட அவமானங்களை துடைத்துக் கொண்டு, கையில் இருந்த சில ஆயிரங்களை செலவு செய்து , கழுத்தில் இருந்த அந்த தங்க சங்கிலி அடகு கடைக்கு சென்றபின் உதவி இயக்குனர் வாய்ப்பு கிட்டியது. குறைந்த வாடகையில் அந்த சேரி வீடும் கிட்டியது..
சினிமா அவனுக்கு நிறைய கற்று தந்தது. கனவு தொழிற்சாலை தான் கனவு கண்டதை போல் இல்லை என்பதை முதல் நாளே உணர தொடங்கினான். படப்பிடிப்பு குழுவே ஹீரோவுக்காக காத்திருந்த நேரத்தில் வந்து சேர்ந்தது ஓர் செய்தி.
‘தயாரிப்பாளர் மாரடைப்பால் காலமானார்’…
‘ஷூட்டிங் பேக்கப்’ என்று குரல் ஒலித்தது. கலைந்த கனவுகளுடன் கூட்டம் கலைந்தது.
“என்ன தம்பி புதுசா ! ” வினவினார் ஓர் அசோசியேட்.
“ஆமா சார், இன்னைக்குதான் சேர்ந்தேன் “
“இஞ்சினியராமே !..இப்பெல்லாம் நல்லா படிச்சா பசங்கதான் சினிமா பக்கம் வரீங்க.. நமக்கு படிப்பெல்லாம் கிடையாது.. எல்லாம் அனுபவம்..இருபது வருடம்..எப்படியும் அடுத்த வருடம் படம் பண்ணிருவேன். அப்படியே என் கூட வந்து சேர்ந்துக்கோ…”
தன் நிலையை நினைத்து சிரிப்பதா அழுவதா என தெரியாமல் நின்றுக்கொண்டிருந்தவன்,எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைத்தான். அந்த அசோசியேட் இயக்குனர் அங்கிருந்து நகர்ந்து சென்று இன்னொருவனிடம் பேசிக்கொண்டிருந்தார்,
“… எப்படியும் அடுத்த வருடம் படம் பண்ணிருவேன். அப்படியே என் கூட வந்து ……”
” என்னையா ! காலையிலே பலத்த யோசனை…”அருகில் நின்றுகொண்டிருந்தார் அந்த வீட்டு ஓனர் மாடசாமி ..பல ஒன்டிக்குடுத்தனங்கள் இருக்கும் அந்த ‘திருமகள் நிலையத்தின்’ சொந்தக்காரர். கடுமையான முகம், ஆனால் குழந்தை மனசு. அதனால்தான் என்னவோ அங்கு பலர் வாடகை கொடுக்காவிடினும் அவர்களை விரட்டியடிக்கவில்லை.
வீதியை பார்த்தவாறே பழைய ஞாபங்களில் லயித்திருந்த நிரஞ்சன், மாடசாமியின் குரல் கேட்டு திரும்பினான்…
“என்னையா! ஷூட்டிங் இல்லையா !”
“ஸ்ட்ரைக்கு..”
“திரும்பவுமா.. போனமாசம்தானே பண்ணுனிங்க…”
“அது காவேரி பிரச்சனைக்கு …இது ஈழப் பிரச்சனை..”
“சினிமாகாரன நினைச்சா சிரிப்புதான்யா வருது..கண்டகருமாந்தரத்த சினிமால காட்டுறான்..ஒரு படம் ஓடிட்ட ஈழப் போராளி ஆயிடறான்…என்ன எழவோ..நமக்கு சினிமானாலே ஆகாது..உன்ன ஏதும் சொல்லல..நீ கோவிச்சிக்காத..”
“அதெல்லாம் ஒன்னும் இல்லங்க..மனசுல இருக்குறத சொல்லுறீங்க..நான் மத்தவங்க மாதிரி இருக்கமாட்டேன்..நிச்சயம் நல்ல படம் பண்ணுவேன்..”
இரண்டு வருடத்தில் அவன் நிறைய பக்குவப் பட்டிருந்தான். சினிமா அவமானங்களுடன் சேர்த்து நிறைய பாடங்களையும் கற்று தந்தது. ஆனால் படம்தான் இரண்டு வருடங்களாக இழுத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் அவன் உதவி இயக்குனர்தான்..இன்னும் நிறையப்படிகளை கடக்கவேண்டும், நிறைய அவமானங்களை தாங்கவேண்டும் என்பது அவனுக்கு தெரியும். நம்பிக்கை ஒன்றைமட்டுமே மூலதனமாக கொண்டு பயனித்துக்கொண்டிருந்தான் .
அவன் முதல்தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டதாக கேள்விப்பட்டான். இவனுக்கு யாரும் சொல்லி அனுப்பவில்லை.அழையா விருந்தாளியாக வீட்டுக்கு செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. உலக ஆசைகளை துறந்து, குடும்பத்திலிருந்து விடுபட்டு ஓர் சித்தனாகவே மாறிப்போனான்.
“என் பொண்டாட்டி உடம்பு முடியலனு படுத்துட்டா..எனக்கும் சுதார்ப்பா ரோட்ல நடக்க முடியல..அதன் இந்த முனைக்கடை வரைக்கும் போய் மூணு இட்லி வாங்கிட்டுவாயேன்..நான் டீய குடிச்சு பொழுத கழிச்சுருவேன்..அது பசி தாங்காது..” என்று மஞ்சள் பையையும் காசையும் நீட்டினார் மாடசாமி..
அவனுக்கு இது பழகிப் போயிருந்தது. சிறு சிறு வேலைகளை செய்து, வாடைக தர முடியாத தன் இயலாமையை சரிசெய்ய முயர்ச்சிதுக்கொண்டிருந்தான் .
பையை எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கும்போது, மாடசாமியின் குரல் ஒலித்தது, “அப்படியே மிச்சம் காசுல நீ ஒரு டீ குடிச்சிட்டு வந்திடு ..”
வீதியில் சிறுவர்கள் சாக்கடையில் விழுந்த பந்தை எடுத்து, அருகிலிருந்த வேறோரு சாக்கடை தண்ணீரில் கழுவிக்கொண்டிருந்தனர்.
இவனைக் கண்டதும், “ஐயா! டைரக்டர் மாமா..” என அனைவரும் கத்தினார். வாழ்கையில் அவனுக்கிருந்த சிறு சந்தோசங்களில் அதுவுமொன்று.
அந்த சிறுவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லுவான். நீட்ச்சே, ஹெகெல் என இவன் சொல்லும் தத்துவார்த்த விடயங்கள் புரியாவிடினும் அவர்களும் புரிந்ததுபோல் தலையாட்டுவார். இவனும் அந்த சிறுவர்கள்முன் தத்துவம் பேசுவதை பெருமையாக கருதினான். தன்னை சிறந்த மேதைகளாக காட்டிக்கொள்ள பாமரர்கள்முன் நவீனத்துவம் பேசும் அறைவேக்கடுகளின் பட்டியலில் இவனும் சேர்ந்துகொண்டது ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஏனெனில் வீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டு, வாழ்வில் பல அவமானங்களை சந்திக்கும் அவனுக்கு தன் ஆண்மையை நிலைநிறுத்திக்கொள்ள தத்துவார்த்த பேச்சுக்கள் தேவைப்பட்டது. சொல்வதற்கெல்லாம் தலையாட்ட அந்த சிறுவர்களும் தேவைப்பட்டார்கள்..
இட்லியை வாங்கிகொண்டு, மீதமிருந்த காசில் டீ குடிக்க நினைக்கையில் தன் பிய்ந்த செருப்பைபற்றிய எண்ணம் தோன்றியது. டீ குடிப்பதைவிட அந்த காசில் செருப்பை தைத்துவிடலாமென எண்ணி செருப்புதைக்கும் கடையோரம் நடந்தான். ஒரு சிறிய ஓலை குடிசையின் வாசலில் சில சாமான்களுடனும் கையில் கோணி ஊசியுடனும் ஒருவன் அமர்ந்திருதான். குடிசையின் உள்ளே சில சமையல் பாத்திரங்கள் அடுக்கிவைக்கபட்டிருந்தது.
“வா தம்பி ” என நிரஞ்சனை வரவேற்றான் அவன். தடித்த மீசை. அவன் கருத்த உடலில் மீசை மட்டுமே வெளுத்திருந்தது. தலையில் ஒரு மயிர் கூட இல்லை. வயது அறுபதிற்க்கு மேல் இருக்கும்.
“இந்த செருப்ப கொஞ்சம் தெச்சிகொடுங்களேன்”
“பத்து ரூபா ஆகும்..”
“என் கிட்ட ஏழு தான் இருக்கு… ” இருவரும் சற்று நேரம் அமைதியாக இருந்தனர்.
சரி கொடு. தெச்சிகொடுக்கிறேன்.இதுக்காக உன்ன வெறும் காலோடையா அனுப்பமுடியும்..வெயில் வேற கொளுத்துது..”
“ரொம்ப நன்றி”
“இருக்கட்டும் இருக்கட்டும்…தம்பி என்ன பண்றீங்க ?”
“சினிமாவுல இருக்கேன்..அசிஸ்ஸ்டன்ட் டைரக்டர்..”
அந்த செருப்பு தைப்பவனின் முகத்தில் வேகமாக ஓர் புன்முறுவல் தோன்றி மறைந்தது. அதனுள் எத்தனையோ அர்த்தங்கள் பொதிந்து கிடந்தன.
அதன்பின் அவர்கள் இருவரும் ஏனோ பேசிக்கொள்ளவில்லை. அந்த நிசப்தத்தை திடிரெனவந்த ஓர் குரல் கலைத்தது,
“தலைவரே,, இங்க வீ.கே நகர் மூணாவது தெரு..எங்க இருக்கு” மடிப்புக்கலையா சட்டைக்குள் ஒளிந்துக்கொண்டிருந்தான் அந்த குரலுக்கு சொந்தக்காரன்..
“இங்கிருந்து நேரா போய் இடதுபக்கம் திரும்புங்க..” என்றார் அந்த கடைக்காரர். அங்கிருந்து நகர முற்பட்ட அந்த புதியவன் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டிருந்த நிரஞ்சனை பார்த்ததும் நின்றான்.
“டேய் நீ நிரஞ்சன் தானே !”அவன் கண்ணில் பட்டுவிடக்கூடாதென்றே ஒதுங்கி நின்ற நிரஞ்சனை அவன் அடையாளம் கண்டுகொண்டான்.
“என்ன தெரியலையா.. கதிர்டா…கம்ப்யூட்டர்சயின்ஸ் டிபார்ட்மன்ட்..ஞாபகமில்ல !”
நிரஞ்சன் எதுவும் பேச வில்லை. மிகவும் கடினப்பட்டு ஓர் புன்னகை புரிந்தான். அங்கு நின்றுகொண்டிருந்த காரிலிருந்து ஒரு பெண்குரல் ஒலித்தது.
“கதிர்..சீக்கிரம் வா “
“யா டியர் !” தொடர்ந்து அந்த புதியவன் பேச தொடங்கினான்,,
“என்னடா ஏதோ படம் எடுக்கிறேன்னு சுத்திக்கிட்டு இருந்த..இப்ப ஆளு இவ்வளவு பரிதாபமா மாறிட்ட..ஏதும் படம் எடுத்த மாதிரி தெரியலே…”
“சீக்கிரம் எடுத்திடுவேன்” அவமானங்கள் நிரஞ்சனுக்கு புதிதல்ல..
“எங்க ! அவன்அவன் நெட்லயே படம் ரிலீஸ் பண்ணுறான்..நீ என்னடானா ஆளே மாறிபோய் இப்படி சுத்திக்கிட்டிருக்க..நல்ல இருக்கேன்னு பொய் சொல்லாத..பாத்தாலே தெரியுது..எப்படி இருக்கணு..அப்பவே தெரியும் எனக்கு..
கதை யாரு வேணும்னாலும் சொல்லலாம்…படம் எடுக்கிறதெல்லாம்…..ம்ஹூம்..
ஒழுங்கா படிசிருந்தினா ஈசியா ஐ.டி வேலையாவது கிடைச்சிருக்கும்..என்ன பார்த்தியா…”
காரின் ஹாரன் மீண்டும் ஒலித்ததும் பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு அந்த புதியவன் காரை நோக்கி ஓடினான்.
கலங்கிய கண்களுடன் நின்றுக் கொண்டிருந்த நிரஞ்சனை ஆசுவாச படுத்த முயற்சித்தார் அந்தகடைக்காரர்
“நீ ஏன் தம்பி கலங்குற..நிச்சயம் நீ படம் பன்னிருவ. நீ யாரையும் ஏமாத்துல..சொந்த திறமைய வச்சு முன்னுக்கு வர நினைக்குற..கொஞ்ச நாள் கஷ்டப்பட்டு உழைச்சா எல்லாம் சரியாகிடும் “
தான் பொய் சொல்கிறோம் என்பது அவருக்கு தெரியும். அங்கு நடந்த சம்பாஷனைகளைக் கொண்டு நிரஞ்சனின் நிலையை ஒருவாறு யூகித்துக்கொண்ட அவர் அவனை சமாதானம் செய்வதற்காகவே அவ்வாறு கூறினார். அவரும் பல வருடமாக யாரையும் ஏமாற்றாமல் தான் உழைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஏனோ முன்னேற முடியவில்லை..
“என் கிட்ட நல்ல நல்ல திரைக்கதைகளெல்லாம் இருக்கு..நிச்சயம் படம் பண்ணிருவேன்” என்றவாறே தைத்த செருப்பை வாங்கிகொண்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான்.
நிரஞ்சன் தொலைவில் ஒரு புள்ளியாக மறையும்வரை அவனை பார்த்துக்கொண்டிருந்தார். அவரை அறியாமலேயே அவர் கண்களில் நீர் பெருகியது.
வேகமாக அந்த ஓலை குடிசையினுள் ஓடிய அவர் அங்கிருந்த அந்த பழைய பெட்டியை திறந்தார். அதில் கட்டு கட்டாக காகிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் சில செருப்பு தைக்கும் ஊசிகளும், சில கிழிந்த துணிகளும் கிடந்தன. அந்த காகிதங்களை கையில் ஏந்தி, தன் கண்ணீர் துளிகள் காகிதத்தை நனைக்க, படிக்க தொடங்கினார். இதுவரை பல முறை படித்திருப்பார். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மனதில் ஏதோ ஓர் பாரம் அவரை அழுத்திடும். பல வருடத்திற்குமுன் அவர் எழுதிய திரைக்கதைகள்தான் அவை….
அவர் கண்களில் கண்ணீர் வடிந்துக்கொண்டிருந்தது. நிரஞ்சனின் வார்த்தைகள் காற்றில் ஒலித்துக்கொண்டிருந்தது…
“என் கிட்ட நல்ல நல்ல திரைக்கதைகளெல்லாம் இருக்கு..நிச்சயம் படம் பண்ணிருவேன்”
– இது கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2014-யில் பிரசுரத்திற்கு தேர்வான கதை.