கண்ணாடி நினைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 4, 2022
பார்வையிட்டோர்: 3,366 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிட்டி ஹால் பெருவிரைவு ரயில் நிலையத்தில் இருந்து நகர்ந்த ரயிலில், டிங்..டிங்..டிங்..’ என்ற ஒலியைத் தொடர்ந்து, “நெக்ஸ்ட் ஸ்டேஷன் ஈஸ் இராஃபிள்ஸ் பிளேஸ், பேசஞ்சர்ஸ் ஹூ ஆர் கோயிங் டு தஞ்சோங் பகார், பூன்லே அண்ட் சுவா சூ காங், பிளீஸ் கிராஸ் த பிளாட்ஃபார்ம் அண்ட் போர்ட் த வெஸ்ட் பவுண்ட் டிரெய்ன்” என ஆங்கிலத்தில் அறிவிப்பு.

அடுத்து, சீன மலாய், மொழி அறிவிப்புகளைத் தொடர்ந்து, “அடுத்த “அடுத்த நிலையம் இராஃபிள்ஸ் பிளேஸ் சந்திப்பு, தஞ்சோங் பகார், பூன் லே, சுவா சூ காங் நோக்கிச் செல்லும் பயணிகள் நடைபாதையைக் கடந்து மேற்கே செல்லும் வண்டியில் ஏறுங்கள்” என மதுரத்தமிழில் அறிவிப்பு.

நல்ல குளிர் நிலவும் உட்புறத்தைக் கொண்ட ரயில், இராஃபிள்ஸ் பிளேஸ் சந்திப்பில் நின்றது. நடைபாதையோரம் உள்ள கதவுக்கு மேல் உள்ள சிவப்பு விளக்குகள், அழகிய புன்னகை சிந்திட, நடைபாதையோரக் கதவுகளும் ரயில் கதவுகளும் போட்டி போட்டுக் கொண்டு திறந்தன.

ஜூரோங் செல்ல வேண்டிய திரு குமரேசன், அந்தக் குறுகிய நேரத்தில் மணி ஆறாகி விட்டதா எனப் பார்த்தபடி செய்தித்தாளுடன் ரயிலிலிருந்து வெளியே வருகையில் திடீரென உள்ளே புயல் போல் நுழைந்த இளையர் தெரியாமல் கை தவறுதலாகச் செய்தித்தாளைத் தட்டிவிட, தரையில் விழுந்த செய்தித்தாளை எடுக்கக் குனிந்த குமரேசனின் சட்டைப் பையிலிருந்து பழுப்பு நிறக் கண்ணாடி நடைபாதைக்குக் கீழே உள்ள தண்டவாளப்பகுதியில் விழுந்துவிட்டது.

“அய்யோ” என்ற ஓலத்துடன் கையில் செய்தித்தாளைப் பிடித்தபடி ரயிலில் நிற்பதா, கதவு மூடுமுன் வெளியேறுவதா எனப்புரியாது திகைத்தவர் கணநேரத்தில் வெளியே வந்துவிட்டார்.

அலைபாய்ந்திடும் மனத்துடன் நிற்கும் குமரேசனின் காதில், ஏதோ செய்தி தொடர்பான உரையாடலின் இடையே, “தீஸ் ஆர் த ஃபேக்ட்ஸ் ஆஃல் லைஃப்; வீ ஹேவ் டு அக்செப்ட் தெம்” என்று மூவரில் ஓர் இளையர் பேசிய தத்துவமும் அழையா விருந்தாளியாய் வந்து விழுந்தது. தன்னையறியாது திரும்பிப் பார்த்தவர்க்குக் கண்ணாடியின் நினைவு வந்தது.

ஆம்… அது அவரது அன்புக் கண்ணாடி! பதினைந்து வயதில் தூரப்பார்வைக் குறைவால் ஆசிரியர் கரும்பலகையில் எழுதியதைப் படிக்க இயலாததால் கண்ணாடி போட ஆரம்பித்தார்.

அப்போது கண்ணாடியின் விலை, சில வெள்ளிப் பணம். ஆனாலும், சாலையைத் துப்புரவு செய்யும் அவரது தந்தைக்கு அது ஒரு பெருஞ்செலவு.

ஓரளவு தமிழ்ப் பள்ளிப்படிப்பு முடித்தவர், பதினேழு வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவானார். தன் நான்கு தம்பிகளையும் ஒரு தங்கையையும் விரலுக்குத் தகுந்த வீக்கத்தில் செலவழித்துக் கரையேற்றிவிட்டுத் தானும் கரையேற நினைத்தபோது, வயது முப்பத்திரண்டு!

அதற்கிடையில் அவரது கண்ணாடிக்கு வயது பதினேழு. பெற்றோர் பார்த்த அவரது தூரத்துமுறைப் பெண் கண்ணகியை மணந்தார். கண்ணகி சிலேத்தார் பகுதியில் வெள்ளைக்காரத் துரைமார் வீட்டில் பகலில் வீட்டுவேலை செய்பவள். தமிழ்ப்பற்றின் காரணமாக அவளுக்கு கண்ணகி என்று பெயர் வைத்த அவள் தந்தையைப் பாராட்டத்தான் வேண்டும். கற்பிலும் அவள் பெயருக்கேற்ப விளங்கினாள்.

அவள் கறுப்பு நிறம் தான். அந்த உடலின் சிறப்பாக விளங்கும் முகத்தில் பழுத்த மஞ்சள் எப்போதும் பளபளக்கும். வட்டவட்டமாக முடிச்சுருள்கள் நெளியும் நெற்றியில் சிவந்த குங்குமப்பொட்டு, திராட்சை போன்ற கண்கள், அடுத்து அணி செய்யும் கூரிய மூக்கு, கோவைப்பழ உதடுகள், வெற்றிலை போட்டுச் சிவந்ததால்தான் கோவைப்பழ நிறம். மெல்லிய உடல்வாகு. விரும்பி அணிவது, ‘பாஜு குரோங்’ உடை. அத்துடன் பார்க்க நாகரிகமாகவும் இருப்பாள்.

எளிமையில் இனிமையக் குமரேசனுக்குத் தந்த அவள், தன் முதல் இரவில் தன் கணவனிடம் தன் ‘சின்ன’ ஆசையைத் தெரிவித்தாள்.

“நீங்க எப்பவும் வேலைக்குப் போகும்போது கண்ணாடி போடுவீங்கதானே! நான் உங்களுக்கு ஓர் அழகான பழுப்பு நிறக் கண்ணாடி வாங்கித் தரேங்க” என்றாள்.

“அட…நமக்குப் புதுக் கண்ணாடியா?..” என்ற குமரேசனின் மனத்தில் ஒரு குழி தோண்டி அதில் ஒரு பானை ஐஸ்கட்டிகளைக் கொட்டிவைத்தது போன்ற மகிழ்ச்சி; இனம் புரியாத உணர்வு.

ஆம்! அந்த வாக்கை நிறைவேற்றிவிட்டாள் கண்ணகி, அன்று முதல் அதைத் தன் உயிராய்ப் பாதுகாத்து வந்தார், அவர்.

“எனக்கு மட்டும் கிட்டப்பார்வைக் குறை இருந்திருந்தால் கண்ணாடியைக் கண்ணிலேயே போட்டிருப்பேனே! சட்டைப் பையில் வச்சிருக்க மாட்டேனே! ச்சூ…” என்று அவர் புதுக் கண்ணாடியைப் போடுமுன் அது முழுதும் அன்பு முத்தம் பதித்துத் தந்த மனைவியை நினைத்தார். முகம் முழுதும் வியர்த்தது.

“இது என்ன வெள்ளைக்கார முதலாளி வீட்டுல இருந்து உங்ககிட்ட ஒட்டிக்கிட்ட நாகரிகமோ?!” என்று அவர் கேட்டதும் நாணத்தில், ‘குப்’பென்று சிவந்தவளை நினைத்தார். இப்போது ஒருவிதப் புன்னகையை உதிர்த்தார்.

இத்தனை பாசமான மனைவிதான், அவரை ஒரு முழு ஆணாக மாற்றியவள். அவரைக் குடும்பத்தலைவர் என்ற முறையில் தெய்வமாக மதித்தவள், பெற்ற மகனுக்கும் மகளுக்கும் நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுத்தவள்.

ஆசைக்கு வந்த பெண்ணை அமெரிக்காவிலும் ஆஸ்திக்கு வந்த மகனை ஆஸ்திரேலியாவிலும் வாழவைக்க இரத்தத்தை வியர்வையாய் உதிர்த்தவள்.

புத்தியும் சாதுர்யமும் உள்ள அவள், தன் பேரக் குழந்தைகளைப் பார்க்கக் கொடுத்து வைக்காதவளாகிவிட்டாள். கஷ்டப்பட்டு வேலை செய்யும் கணவனின் கால்வலிக்கு, ‘சூப்’ வைத்துத் தர ஆட்டுக்கால் வாங்கப்போனவள் போனவள்தான்! பேருந்து மோதி நடுச்சாலையில் கிழித்துப்போட்ட பருத்திப்பூவாய் மருத்துவமனையில் கிடந்தாள்.

செய்தி கேட்டுப் பதறிப்போய் மருத்துவமனைக்கு ஓடியவர் வந்ததும் பார்த்தது கடைசியாக ஒளிர்ந்த அவளது கண்களை மட்டும்தான். அவ்வளவுதான்! சடலத்தைத் தூக்கிவரும் பாக்கியம்தான் கிடைத்தது!

அந்தப்பூவின் நினைவான கண்ணாடி இன்று தவறி விழுந்து தண்டவாளத்தில் படுத்திருக்கிறது. என்னென்னவோ நினைவுகள்! இதற்கிடையில் மணி ஆறரையாகிவிட்டது.

எதிரே பூன்லே செல்லும் வண்டி வந்தது. நடைபாதையில் உள்ள கதவுகளுக்கு மேல் உள்ள விளக்குகள் ஒளிர, உள் கதவுகள் திறக்க மக்கள் வெளியேயும் உள்ளேயும் வந்து போய்க் கொண்டிருந்தனர்.

எல்லாரும் அவரது அகக்கண்ணுக்குத் தெரியவில்லை. மாறாகப் புறக்கண் முன் பிம்பங்களாகத் தோன்றினர்; மறைந்தனர். அவர்களும் அப்படித்தான். இவரை ஒரு பயணியாகத்தான் எண்ணி நடக்கின்றனர். இவருள் உள்ள சோகம் புரியுமா என்ன?

என்ன நினைத்தாரோ, அறுபதை எட்டும் இந்த வயதிலும் வேலைக்குச் செல்ல வேண்டுமே! நாளைக்கு வேலைக்கு விடுமுறை போட்டாலும் கூட நாளை மறுநாள் வேலைக்குப் போகக் கண்ணாடி வேண்டுமே! அதனால் அங்கிருந்து வெளியே வந்து கடைக்குப் போக எண்ணினார், குமரேசன்.

கையிலுள்ள ‘ஃபேர் கார்ட்’ எனப்படும் பயண அட்டையை அதற்குரிய இயந்திரத்தில் நுழைத்தார். அது நுழைய மறுத்தது.

‘கோ டு கண்ட்ரோல் ஒன்’ என்ற ஆங்கில வாசகம் இயந்திரத்தில் தெரிய, காலாவதியான அட்டையுடன், ‘கண்ட்ரோல் ரூம்’ என எழுதப்பட்ட கண்ணாடிக் கூண்டு போல் தெரிந்த கட்டுப்பாட்டு அறை முகப்புக்குச் சென்றார். அட்டையை அதிகாரியிடம் தந்த குமரேசன், தன் சோகக்கதையை, அதுதான்….கண்ணாடி பற்றிய செய்தியை அவர் காதில் இரத்தினச்சுருக்கமாகப் போட்டார்.

அதிகாரியின், “நோ ப்ராப்ளம்! டோண்ட் ஒர்ரி!” என்ற நான்கு வார்த்தைகள்! குமரேசனின் முகத்தில் நூறு வாட் வெளிச்சத்தைக் கொணர்ந்தது.

“உங்கள் கண்ணாடி ஒருவித பிளாஸ்டிக்கால் ஆனது என்றால் கவலை வேண்டாம். ஆனால் உங்கள் கண்ணாடி, ரயிலில் சக்கரம் பதியும் தண்டவாள இரும்புக் கம்பி மீது படாதிருக்க வேண்டும்! எதற்கும் கவலை வேண்டாம். நல்லதாகவே நடக்கும்” என்று அவர் மேலும் ஆங்கிலத்தில் ஆறுதல் கூறியதும்,

தன்னைப் பற்றிய தகவல்களைத் தர, பேனாவை எடுத்தார் குமரேசன். தன் கண்ணின் பாவையாம் கண்ணகியைக் கண்ணாடிவழித் தினமும் பார்க்க நம்பிக்கை தந்த, மறு உயிர்ப்புத்தந்த சீன அதிகாரியைக் கடவுளாய் நினைத்துக் கை கூப்பினார்.

(சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆதரவில் தேசியக் கலைகள் மன்ற ஏற்பாட்டில் 1995-இல் நடைபெற்ற SPH-NAC சிறுகதை எழுதும் போட்டியில் தமிழ்ப் பிரிவில் முதல் பரிசும் தங்கமுனை விருதும் பெற்ற கதை; தமிழ் முரசு. 17.9.1995 )

– கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *