நான் அண்ணன் வீட்டு வாசல்படி தாண்டி உள்ளே நுழைந்த அடுத்த வினாடி எதிரே தரையில் அமர்ந்திருந்த அண்ணி செண்பகத்தின் கண்கள் குபுக்கென்று கொப்பளித்து….
கண்ணீர் அருவியாகக் கொட்டியது.
‘ ஏன்…ஏன்….? ‘ எனக்குள் பதற்றம் பெட்ரோல் மீது பட்ட தீயாய்ப் பற்றியது.
நான், அண்ணன் அர்ச்சுனன் வீட்டிற்கு அருகில் ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறை போகவில்லை என்றாலும் மாதம் ஒரு முறை கண்டிப்பாகப் போய்…. அண்ணன், அண்ணி, அவர்கள் மருமகள், பேரன் பேத்திகளை பார்த்து நலம் விசாரித்து, குழந்தைகளைக் கொஞ்சி வருவதுண்டு. அப்படித்தான் அண்ணனும் ஏதாவது வேலையாய் என் வீட்டுப் பக்கம் சென்றால்…வருவார்.
அப்படித்தான் இப்போதும் நான் அண்ணன் வீட்டிற்குள் வருகை. சென்னை – கொச்சின் என்று மகன்கள் வீட்டிற்குச் சென்று வந்ததால் ஒரு மாதம் இடைவெளி.
அண்ணன் குடும்பம் என்னைவிட வசதி. அவன் திருமணம் முடித்து ஒரு சில மாதங்களிலேயே தாய், தந்தையருடன் முரண்பட்டு தனிக்குடித்தனம் சென்று விட்டான். மாமியார் கை தூக்கி விட… கொஞ்சம் வசதி ஆனான். அடுத்து அவன் மகன் கிருஷ் தலை தூக்கி கட்டிடம் கட்டும் தொழிலில் ஒப்பந்தக்காரராக நுழைந்து அப்பனைத் தாண்டி சொத்துக்கள் வாங்கிக் குவித்து, இன்னும் சில தொழில்களில் இறங்கி குறு தொழிலதிபராகவே மாறியுள்ளான்.
இதனால் வீட்டில் மக்களுக்குப் பணம், காசுகளுக்குப் பஞ்சமில்லை.
அண்ணிக்கு சர்க்கரை, இரத்த அழுத்த நோய்கள் உண்டு. அதன் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் அவைகளின் வீரியம் கொஞ்சம் அதிகமானால் முகம் வாடி சுணங்கி இருப்பாள். தற்போது….அப்படியோ….!? வீரியம் வீரியத்தையும் தாண்டி விட்டதன் வெளிபாடு இந்த அழுகையோ ?! என எனக்குள் பதற்றம் ஐயமாக மாற… குரலைத் தாழ்த்தி….
” என்ன அண்ணி ? ” எதிரில் உள்ள நாற்காலியில் மெதுவாய் அமர்ந்து கேட்டேன்.
” ச…சண்டை…. ” அவள் துக்கம் தொண்டையை அடைக்கச் சொல்லி விசும்பினாள்.
” சண்டையா?! என்ன சண்டை. யாருக்கும் யாருக்கும் சண்டை…? ” -மெதுவாய்க் கேட்டு குழம்பமாகப் பார்த்தேன்.
” நான் சொல்றேன் மாமா.” என்று குரல் கொடுத்து அவள் மருமகள் இறுக்க முகத்துடன் ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு அடுப்படியிலிருந்து வெளி வந்தாள்.
மாலினி நல்ல பெண். குடும்பத்திற்கேற்ற குத்து விளக்கு.
அண்ணனுக்கு இரண்டு பெண் ஒரு ஆண். பெண்கள் மூத்தவர்கள். மகள்கள் இருவரையும் நல்ல அரசாங்க வேலையுள்ள மாப்பிள்ளைகளுக்கு மணம் முடித்துக் கொடுத்து…..அவர்கள் சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் குழந்தைக் குட்டிகளுடன் வசதி வாய்ப்பாக வாழ்கிறார்கள்.
தங்கள் மகள்களையும் மகன் அணுசரித்து வாழ வேண்டுமென்று பையனுக்கு அண்ணன் தம்பதிகள் இரண்டு வருடங்களாக நல்ல பெண்ணாகத் தேடினார்கள்.
அவர்கள் எண்ணத்திற்கு ஒரு படி மேலாகவே மாலினி கிடைத்தாள். மாமியாரைத் தாங்குத் தாங்கென்று தாங்குவாள். மாமனாரைப் பற்றி ஒரு குறை கிடையாது. அவள் முகத்தில் எப்போதும் மலர்ச்சி, புன்சிரிப்பு. முகத்தில் கோபம் தாபம், லாபம் நட்டம், சோகமெல்லாம் பார்க்க முடியாது. படிக்கவும் முடியாது. அப்படிப்பட்டப் பெண்.
எனக்கு அவளைப் பிடிக்கும். அவளுக்கும் என்னைப் பிடிக்கும்.
” சொல்லும்மா ? ” ஏறிட்டேன்.
” மாமா செய்யிறது கொஞ்சமும் பிடிக்கலை. மகன் கண்டிச்சார். அதனால அவர் வீட்டை விட்டு வெளியேறிட்டார்.” ரொம்ப சாதாரணமாக ரத்தினச் சுருக்கமாகச் சொன்னாள். அவளின் கடைசி வார்த்தைகள்தான் எனக்குள் அதிர்ச்சி, அதிர்வை ஏற்படுத்தியது.
” என்ன! என் அண்ணன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டானா ? ” கேட்டேன்.
” ஆமாம் மாமா. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் கை கலக்கும் அளவிற்குச் சண்டை, வாக்குவாதம.; கோபத்தில் மாமா வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.” என்றாள்.
எனக்கு ஜீரணிப்பதற்குக் கஷ்டமாக இருந்தது. காரணம்….அப்பனும் மகனும் அவ்வளவு நெருக்கம், அன்னியோன்யம். ஒரு பிள்ளை என்பதால் அப்பனுக்கு அவன் மேல் அதிக பாசம். அதையெல்லாம் தாண்டி தன் மகன் தொழில் முறையில் கொடி கட்டி பறந்து சுற்றத்தார்களையெல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்து பார்க்க வைக்கிறான் என்கிற வாஞ்சை.
‘ இப்போது எப்படி முரண் ? எங்கே தவறு ? ‘ குழம்பி….
” இப்போ உன் மாமனார் எங்கே இருக்கார். ” கேட்டேன்.
அண்ணி கண்களைத் துடைத்து…. சோகமாக, ” தெரியலை…” கையை விரித்தாள்.
” பொய் மாமா. உங்க சகோதரன் தன் பெரிய பெண் வீட்டில் இருக்கார். ” என்று மாலினி பதில் சொன்னாள்.
அண்ணன் பாதுகாப்பாக இருப்பது குறித்து எனக்குத் திருப்தி.
” இந்த அளவிற்கு இங்கே என்ன பிரச்சனை ? ஏன் இந்த ரசாபசம் ? ” ஏறிட்டேன்.
” சொல்றேன் மாமா. அத்தை, மாமாவுக்கு ஆரம்பத்திலிருந்தே என் அம்மா அப்பா, என் அக்கா தங்கைகள் இங்கே வர்றது பிடிக்கலை. நான் தாலி கட்டி இங்கே புகுந்ததிலிருந்து இந்த அநியாயம். இவுங்க நியாயம், பெண்ணைக் கட்டிக் கொடுத்தால் பொறந்த இடம் மறந்துடனும் போல. இதே இந்த அத்தை, மாமா….. இங்கே இருக்கும் தன் மகள்கள் வீட்டுக்கு மாசத்துக்கு ஆயிரத்தெட்டுத் தடவைகள் போய்…மகள், மருமகன்களைப் பார்த்து பேரப் புள்ளைகளைக் கொஞ்சிக் குலாவி வருவாங்க. அப்படியே அவர்களும் இங்கே வந்து சீராடிப் போவாங்க. இப்படித்தானே என் அப்பா அம்மா, அக்கா தங்கச்சிங்களுக்கும் என்னை, என் குடும்பத்தைப் பார்க்க ஆசை இருக்கும். வருவாங்க. வந்தால்….இவுங்க சரியாய் அவங்ககிட்ட முகம் கொடுத்துப் பேசுறது கிடையாது. அப்படியே பேசினாலும் ரெண்டொரு வார்த்தையோட சரி. ஆரம்பத்தில் இதை நான் ஒரு பொருட்டாவே எடுத்துக்கலை. இவுங்க சுபாவம் இப்படின்னு
நெனைச்சேன். பிற்பாடுதான்…இவுங்க அரைகுறை பேச்சிலிருந்து…..இவுங்க மனசும், அதிலிருக்கிற பயங்கர உண்மையும் புரிஞ்சுது.”
” என்ன உண்மை ? ” ஏறிட்டேன்.
” கொண்டான் கொடுத்தான் வீட்டில் என் உறவு சனம் வந்து உறவாடினால்…..நான் இவர்கள் மகன் வீட்டுச் சொத்தை அவர்களுக்கு அள்ளிக் கொடுத்துடுவேன் என்கிற எண்ணம்.! இதனால் இந்த வீட்டுக்கு வரும் என் விருந்தாளிகளை வான்னு ஒரு வார்த்தை வரவேற்பது கிடையாது. என் அம்மா அப்பா பேரப்புள்ளைகளைக் கொஞ்சினால்… ரொம்பத்தான் குளாவல்ன்னு முணுமுணுப்பு, முகத்தூக்கல். எதற்கு இப்படி என்றால்…. இப்படி அவமானப் படுத்தினால் அவுங்க ரோசப்பட்டு வெட்டிக்குவாங்க மகன் சொத்து கொள்ளைப் போகாதுன்னு இவுங்களுக்கு எண்ணம்.”
” இதைப் புரிந்த நான்…உண்மையை உடைச்சி சொல்லி பெத்தவங்களை நான் வராம இருக்க சொல்ல முடியுமா ? இல்லே…நான்தான் அவுங்களைப் பார்க்க பொறந்த வீட்டுக்குப் போகாம இருக்க முடியுமா ? இதை வாய்விட்டு வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. அதனால்….இவுங்க நடப்பு, செய்கைகளை ஒரு பொருட்டாய் எடுக்காமல் எங்க போக்குவரத்து இருந்துது. அதே சமயம்….இவுங்க குணம் தெரிஞ்ச நான்… என் அப்பா அம்மா, உறவு சனம் வந்தால் அள்ளிக் கொடுக்கிறதில்லே. ஏன் அள்ளிக் கொடுக்கனும், எதுக்குக் அள்ளிக் கொடுக்கனும். புகுந்த வீட்டைக் கொள்ளையடிச்சு…..புகுந்த வீட்டைக் கொள்ளையடிச்சு பொறந்த வீட்டை உசத்த எந்த பொண்ணாவது நினைப்பாளா ? அப்படி செய்யிறதுதான் குடும்பப் பொண்ணுக்கு அழகா.?! போனாலும் எடுத்துப் போறதில்லை. என் அம்மா அப்பா…அவுங்க விவசாயத்துல லாபம் நட்டம் பட்டாலும்…நிறை குறை எதுவும் சொல்லாமல் கண்ணியமாய் வந்து கண்ணியமாய் போவாங்க.”
”அகத்துக்கு முகம் கண்ணாடி. கொடுத்து உதவுறது மனுச இயல்பு. ஏதாவது கஷ்டம், நஷ்டம்…அதனால் என் அம்மா, அப்பா முகம் வாட்டம்ன்னா… என் வீட்டுக்காரர் கிருஷ்….தானாவே பணம் காசு, அடகு வைக்க நகை நட்டுகள் கொடுத்து உதவி பின்னால வாங்கிப்பார். அதையும் என் அம்மா அப்பா ஒருவித கூச்சத்தோடத்தான் வாங்கிப் போவாங்க. எனக்கும் இதுக்கும் துளி சம்பந்தம் கிடையாது. நான் இந்த விசயத்தில் தலையிடுவதும் இல்லே.”
” என் அக்கா தங்கசிங்க மூணு பேரும் வாக்கப்பட்ட இடத்துல என்னைவிட வசதியில் குறைவு. ஏதாவது கலியாணம் காட்சின்னா….தங்களிடம் இருக்கும் குறைந்த நகைகளோடு வந்து கலந்துப்பாங்க. அவுங்க அப்படி கலந்துக்கும்போது….நான் மட்டும் இருக்கிற நகையெல்லாம் போட்டு அங்கே அலங்காரமாய் நிற்பது எனக்கும் சங்கடம், அவுங்களுக்கும் கஷ்டம். இதனால…அப்படி ஏதாவது விசேசம், திருவிழான்னா….என் நகைகளை எடுத்துப் போய்….அவர்களுக்குக் கொடுத்து உதவி… ஒரு குண்டுமணி குளையாமல் திருப்பி எடுத்து வருவேன். ஒரு தப்பா ? குத்தம்ன்னு அத்தை மாமாவுக்கு நெனைப்பு. எடுத்துப் போனதுல எவ்வளவு திருப்பி வந்தாளோன்னு சந்தேகம், முணுமுணுப்பு. பெண் கொடுத்துத் திரும்பினால் எந்த புருசன் மன்னிப்பார். மறைச்சாலும் பின்னால இடிக்காதா. இதுக்கும் அத்தை மாமாவிடமிருந்து பதில்…நான் புருசனை மயக்கிக் கைக்குள்ளே போட்டிருக்கேன்னு பேச்சு. அதையும் பொறுத்தேன். அக்கா தங்கைகளுக்கு நகைகள் கொடுக்கும் பழக்கத்தை குறைச்சு நானும் அவர்களுக்கு ஈடாய் குறையாய்ப் போனேன்.”
” மாமா! வாக்கப்பட்டப் பொண், அப்பா அம்மா கஷ்டப்படுறதைப் பார்த்து பொறுத்துப் போவாள். அள்ளிக் கொடுக்க காசு, மனசு இருந்தாலும் கிள்ளிக் கொடுத்துதான் உதவுவாள். இது பெண்ணாய்ப் பிறந்தவர்களின் சாபம். ஆனா… பெத்தவங்க அப்படி இல்லே. பொண்ணு கஷ்டப்பட்டால் தாங்க மாட்டாங்க. தான் கஷ்டப்பட்டாலும்…எங்காவது முடிஞ்ச அளவு
கடனோ உடனோ வாங்கி உதவுவாங்க. இதுதான் நடைமுறை. இது விளங்காத உங்க அண்ணன், அண்ணிக்கு நான் தொடுறது, செய்றது எல்லாமே குத்தம், குறையாய் இருக்கு. என்
வீட்டு சனம் யார் வந்தாலும் கண்ணுல விளக்கெண்ணை ஊத்திக்கிட்டு கவனிப்பாங்க. யார் என்ன செய்யிறா? நான் எப்படி அவர்களிடம் நடந்துக்கிறேன்னு நோட்டம் விடுவாங்க. அக்கா தங்கச்சி, அம்மா பொண்ணுக்குள்ளே ரகசியங்கள் ஆயிரம் இருக்கும். அது அவுங்க அவுங்க குடும்ப விசயமாக்கூட இருக்கலாம். அதை நாங்க மறைவா குசுகுசுப்பாய்ப் பேசினால்…..இவுங்க வீட்டு சொத்தை நாங்க கொள்ளையடிக்க திட்டம் போடுறதாய்ப் பேச்சு. சாடைமாடையாய் ஏச்சு.”
” எத்தனை நாளைக்குத்தான் பெரியவங்க புரியாமல் தப்பாய்ப்பேசுறாங்கன்னு நான் புகுந்த வீட்டில் பொறுமையாய் இருக்கிறது ?. அப்படியும் பத்து வருசம் பல்லைக் கடிச்சிக்கிட்டு பொறுமையாய் இருந்துட்டேன். இனி இருக்க முடியாது. காரணம்…நேத்துவரை இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லே. ஆனால் இப்போ இருக்கு, ” நிறுத்தினாள்.
” என்ன ? ” ஏறிட்டேன்.
” நேத்துவரை என் குழந்தைகள் சின்ன விளையாட்டுப் பிள்ளைகள். அம்மா அப்பா, தாத்தா பாட்டி பேச்செல்லாம் ஒரு பொருட்டே இல்லே. இன்னைக்கு… வளர்ந்து…ஒருத்தன் நாலாம் வகுப்பு. அடுத்தது மூனாம் வகுப்பு. பத்து, ஒன்பது வயசு. இன்னைக்கு எல்லார் பேச்சையும் கூர்ந்து கவனிக்கிறாங்க. வளர வளர இந்த கவனிப்பு அதிகமாகும். அவர்கள் காதில் உன் தாய்…அவளைப் பெத்த, பொறந்த அத்தனை சனமும் கெட்டவர்கள், கொள்ளையடிப்பவர்கள்ன்னு விழுந்தால்….அவர்களுக்குத் தாய், அவளைச் சார்ந்த வர்கள் பத்தின கணிப்பு எப்படி இருக்கும். தப்பாவே இருக்கும். இப்படி தப்பா நாம தப்பா புள்ளைங்களை வளர்க்கலாமா ? அதனால்தான் இப்போ இந்த அதிரடி. தற்போது…..என் அப்பா அம்மா வந்து போனதும்…. இவுங்க வழக்கம் போல் கொள்ளைக்காரர்கள் வந்து போயாச்சுன்னு திட்ட….என்ன கொள்ளை அடிச்சுட்டுப் போறாங்கன்னு நான் எகிற….”
” மாமனார்!….உன் அம்மா அப்பா இங்கே வரும்போதெல்லாம்… இது இதெல்லாம் வாங்கிப் போறாங்க. உன் அக்கா தங்கங்சிங்க இரவல் என்கிற பேரில் நகைகளைச் சரியாத் திருப்பலை, தூக்கிப் போறாங்க. நீயும் எங்க கண்ணு, காது பார்த்து கொடுக்கிறே. போதாதுக்கு ஊருக்குப் போகும்போதும் கொண்டு போய் கொட்றேன்னு பட்டியல் போட்டு.. ஆச்சா போச்சான்னு குதிச்சார். நானும் திருப்பிக் கேட்க….என் வீட்டுக்காரர், என்னப்பா இப்படி பேசுறேன்னு தட்டிக் கேட்க.. கொண்ட இடத்துல கொட்டிக் கொடுத்துட்டு நீ ஓட்டாண்டியாகத்தான்டா திரியப்போறேன்னு அவர் இவரைத் திட்ட… இவரும் பதிலுக்குப் பதில் வார்த்தையாட…. எப்படியாவது அள்ளிக் கொடுத்துட்டு வீணாப் போ. நான் இங்கே இருக்கிறதுனாலதான் மனசு துடிக்குது. பேச நாக்கு நீளுது. நான் போறேன் வெளியேன்னு அடுத்த நிமிசம் நாலு வேட்டி நாலு சட்டையை எடுத்து பையில வைச்சிக்கிட்டு வெளியே கிளம்பி;ட்டார். பத்து நாளாச்சு திரும்பலை. இந்த சண்டை மொத்தத்துக்கும்…. இதோ உட்கார்ந்திருக்கிற அத்தை – என் மாமியார், உங்க அண்ணிதான் காரணம்.!! ” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி….நேரடியாகவே குற்றம்சாட்டி கைகாட்டி நிறுத்தினாள்.
” உங்க சண்டையில என்னை ஏன்டிம்மா இழுக்குறே…? ” என்றாள் அண்ணி வீம்பாய்.
” நான் ஒன்னும் பொய் சொல்லலை. நேரடியாகவே சொல்றேன். மொத்த களேபரத்துக்கும் நீதான் குற்றவாளி! ” என்றாள் மாலினி மீண்டும் அழுத்தம் திருத்தமாக.
” பாவி..! அக்குறும்பு அநியாயமாய் என் மேல் பழி சுமத்தாதே.” என்றாள் ஈனக்குரலில்.
” சொல்றேன் புரிஞ்சுக்கோ. நீங்களும் கேளுங்க மாமா கதையை.” என்ற மாலினி…..
” என் மாமனார்….உங்க அண்ணன் ஒரு நிமிசம் இந்த வீட்ல இருக்கிறதில்லே. வேளாவேளைக்குச் சோறு தின்னக்கூட நேரமில்லாம தன் சொத்தையும், மகன் வாங்கிப் போட்ட சொத்து நிலபுலன்களையும் போய் பார்த்து பராமரிச்சு திரும்புவாரு. அவருக்கு இங்கே ராத்திரி படுக்கை என்கிறது மட்டும்தான் நிரந்தரம், நிதர்சனம். ”
” அப்படி வீட்ல இருக்காத ஆளுக்கு….. வீட்ல நடக்கிற சின்னச்சின்ன சங்கதி, விசயமெல்லாம் எப்படித் தெரியும் ?. குறிப்பாய் இங்கே நடக்கிற என் சனம் நடப்பு, நடவடிக்கை.! அத்தை இங்கே நடக்கிறதையும் நடக்காததையும் தன் ஊகத்துக்குத் தகுந்தாற்போல் ராத்திரி படுத்திருக்கும் மனுசனிடம் தப்புத் தப்பாய்ச் சொல்றாங்க. நானும் ஒருநாள் ராத்திரி இதைக் காதால கேட்டேன். மாமாவும் மனைவி சொல்றதுதான் உண்மைன்னு எல்லாத்தையும் மனசுல விஷமாய் ஏத்திக்கிட்டார். விளைவு….எங்க வீட்டு சனத்தையே எதிரியாய் பார்த்து என்னையும் எதிரியாய் நினைச்சுட்டார். அப்பப்போ அவரும் சின்னச் சின்னதாய் ஊசி முனையாய் முணுமுணுத்துக் குத்த…..எனக்குத் தாங்கலை. வெடிச்சுட்டேன். களேபரம். இப்போ சொல்லுங்க…. எல்லாத்துக்கும் காரணம்…உங்க அண்ணனா அண்ணியா ? ” என்றாள்.
அண்ணி அப்படியே அதிர்ந்து விதிர்விதிர்த்து வாயடைத்தாள். பேச்சு மூச்சு இல்லை.
அவளைப் பற்றித் தெரிந்த நான் எப்படி உண்மையைச் சொல்ல முடியும்.
அப்படிச் சொல்வதுதான் சரி, முறையா ?! சொன்னால்….எதிரிக்கு எதிரி இளக்காரம். சண்டை இன்னும் சூடு பிடித்து ஆவி பறக்கும் ! என்பதை உணர்ந்த நான்….
” சரி. நடந்தது நடந்து விட்டது. இப்போ என் சகோதரன் எங்கே ? ” சமாதானம் படுத்தும் விதமாய் மாலினியைக் கேட்டேன்.
” பெரிய பெண் வீட்ல இருக்கறதாய்க் கேள்வி.” என்றாள்.
” கேள்வியா நிசமா ? ”
” கோவிச்சுக்கிட்டு நேரா அந்த வீட்டுக்குத்தான் போயிருக்கார். விசாரிச்சாச்சு.”
” சரி. நான் போய் அழைச்சு வர்றேன். சமாதானப் போங்க.”
” கூட்டிவாங்க மாமா. நீர் அடிச்சு நீர் விலகாது. சண்டைன்னாலே பேச்சு ஏறத்தாழத்தான் இருக்கும். போர்ல கத்திக்குத்து, ரத்தக்களறி, வெற்றி தோல்வி எல்லாம் சகஜம். நானும் உங்க மகன் கிருஷ்கிட்ட சொல்லி சமாதானம் படுத்தி இருக்கேன். சாதுவாய் இருக்கார். மாமா வந்தால் ஏத்துப்பார். நீங்க போய் அழைச்சு வாங்க.” சென்னாள்.
புறப்பட்டேன்.
அரைமணி நேர இரு சக்கரவாகனப் பயணத்தில்….ஆர்த்தி வீடு.
” வா சித்தப்பா….” அழைப்பு மணி அழுத்தி வாசல் கதவு திறந்ததுமே வரவேற்றாள்.
உள்ளே நுழைய….. அவளைத் தவிர யாருமில்லை.
சுற்றும் முற்றும் பார்த்து, ”அப்பா இல்லே ? ” கேட்டேன்.
” அவர் இங்கே வந்த நாலாம் நாளே….சின்னப் பெண் வீட்டுக்குக் கிளம்பிட்டார். அவருக்கு அவளைத்தான் பிடிக்கும். ஏன் சித்தப்பா ? ”
” அவர் வீட்டைவிட்டு வெளி வந்தது நல்லா இல்லே. சமாதானப்படுத்திக் கூட்டிப்போகத்தான் வந்தேன்.”
” எங்களுக்கும் மனசு கஷ்டமா இருக்கு. தாராளமா கூட்டிப் போங்க சித்தப்பா. தம்பி கோபம் எப்படி இருக்கு ? ” கேட்டாள்.
” தணிஞ்சிருக்கு. சரிம்மா. புறப்படுறேன்.” சொல்லி கிளம்பினேன்.
மறுபடியும் இருசக்கர வாகனம் பயணம். ரித்திகா வீடு.
வீடு திறந்திருந்தது. வாசல் வரண்டாவில் உள்ள பெஞ்சில் அண்ணன் அர்ச்சுனன் மட்டும் தனித்து அமர்ந்திருந்தான்.
” வாடா…. ” முகம் வாட்டம். சோபை இல்லாமல் வரவேற்றான்.
என் குரல் கேட்டாலே ரித்திகா, ‘ சித்தப்பா..! ‘ என்று ஆவலாய் ஓடி வருவாள். வரவில்லை.
” ரித்தி இல்லே ? ” விசாரித்து அருகில் அமர்ந்தேன்.
” இல்லே. மகள்களை அழைக்க…. பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு.” என்றான்.
” எப்போ திரும்பும்.? ”
” ஒரு மணி ஆகும்.! ”
அண்ணனுக்கு அருகாமையில்…. தரையில் ஒரு கட்டைப் பை அமர்ந்திருந்தது.
” அது என்ன பை ? ” கேட்டேன்.
” என் துணிமணி. பிள்ளையைப் பெத்து பிச்சைக்காரனாய் அலையுறேன். ” என்றான் துக்கம் தொண்டையை அடைத்தது.
” அப்படியெல்லாமில்லே..? ” இழுத்தேன்.
” பெத்தப் பொண்ணாய் இருந்தாலும்….இது பிறத்தி வீடு. சொந்த வீடு போல சுதந்திரமாய் இருக்க முடியலை, முடியாது. அதனாலதான் எனக்குத் தேவையானவைகளை என் கைக்குப் பக்கத்தில் பையில் வைச்சிருக்கேன்.”
” இப்படி வைச்சிருக்கிறதை உன் சின்னப் பெண் அனுமதிச்சாளா ? ”
” அனுமதிக்கலை. உள்ளே வை. சுதந்திரமா இரு. சொல்றாள். முடியலையே…! ”
மறுபடியும் தொண்டை கரகரப்பு, விம்மல்.
” சரி எல்லாத்தையும் விடு. வா வீட்டுக்குப் போகலாம்.”
” எந்த வீட்டுக்கு ? ”
” உன் வீட்டுக்குத்தான்.”
” நான் இனி அந்த வீட்டு வாசல்படி மிதிக்கிறதாய் இல்லே.”
” கோபத்தைக் குறை. நடந்ததெல்லாம் மற. மன்னிச்சுடு, கிளம்பு.”
” முடியாது சிவா. பெத்தப் புள்ளையே ஏறத்தாழப் பேசி… பொண்டாட்டி எதிரே கை நீட்டி அடிக்கிற அளவுக்கு ஆகிப் போச்சு. இனி திரும்ப நான் அங்கே வந்தால்…. ரொம்ப மட்டம், அடிமாடாய் ஆகி சல்லிக்காசுக்கு மதிப்பில்லாதவனாய் ஆகிடுவேன். மருமகள் ரொம்ப கேவலமாய், எகத்தாளமாய்ப் பார்ப்பாள். அது தாங்காது. எனக்குத் தன்மானம் இருக்கு. வரலை.”
” சரி வா. என் வீட்டுக்குப் போகலாம். ”
” மாட்டேன்.! ”
” ஏன்..? ”
”அஞ்சு வயசு வரைதான் அண்ணன் தம்பி. பத்து வயசுக்கு மேல பங்காளி. அப்படி உன் வீடும் பிறத்தி வீடுதான். மிஞ்சி மிஞ்சி போனால்… பத்து நாள்வரைதான் உன் பொண்டாட்டி, புள்ளைங்க எனக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கும். அதைத்தாண்டினால் அவமானம். அந்தப் பேச்சை விடு.”
” சரி. உன் முடிவுதான் என்ன.? கடைசிவரை நீ இந்த மகள் வீட்டில் இப்படியே இருக்கப்போறீயா ? ”
” இல்லே. கிராமத்துல நான் கட்டின சொந்த வீட்டுக்குப் போறேன். மகனோடு இங்கே குடித்தனம் வந்தபிறகு அந்த வீடு தினம் போக்குவரத்து புழக்கவழக்கத்திலேயே பூட்டி இருக்கு. அங்கே திரும்பப் போய் நிரந்தரமாய்த் தங்கப் போறேன். சமைச்சுப் போடவும் சம்பளத்துக்கு ஒரு ஆள் தயார்.”
” அண்ணி…? ”
” அவளை நெனைச்சாலே வெறுப்பாய் இருக்கு.”
” ஏன்ன்…?! ”
” என்… மொத்த அவமான, நாசத்துக்கும் அவள்தான் காரணம். கலியாணம் ஆன புதுசுல….என்கிட்ட இல்லாது பொல்லாதெல்லாம் சொல்லி…ஏவி பெத்தவங்க பொறந்தவங்களான
தாய் வீட்டிலிருந்து பிரிச்சாள். அடுத்தும்… அதே வேலையைச் செய்து பேரப்பிள்ளைகள், பிள்ளையிடமிருந்து பிரிச்சி….மருமகளிடமும் அவமானப்பட வைச்சுட்டாள். அவளுக்கு
நெஞ்சலெ;லாம் விஷம். தன்னைத் தவிர மத்த சாதி சனம், எல்லாரையும் அவள் தப்புத் தப்பாவே பார்க்கிறாள். அப்படி மருமகள், அவள் அப்பா அம்மா, சொந்தங்களைப் பார்த்த
விளைவு….இன்னைக்கு நான் இப்படி.! இப்போ தெரிஞ்ச புத்தி அப்போ தெரியலை. தெரிஞ்சிருந்தா….நான் அவளைப்போலவே மௌனி ஆகி வளையும் வில்லாகி இருப்பேனேத்
தவிர…பாயும் கணையாய் ஆகி இருக்க மாட்டேன்.” என்று கலங்கியவன் சடக்கென்று கண்களைத் துடைத்து….” எனக்கொரு உதவி செய். போய் உன் அண்ணியிடம் விசயத்தையெல்லாம் சொல்லி…. அழைச்சி வந்து என்னோட சேர்த்துவை, ” என்றான்.
” என்ன இப்படி ஒரு திடீர் முடிவு ? ” திகைப்பாய்ப் பார்த்தேன்.
” இப்போ….செண்பகம் முகமூடி கிழிஞ்சுப் போச்சு சிவா. எது வில், எது அம்புன்னு மருமகள் மகனுக்குத் தெளிவாய்த் தெரிஞ்சுப் போச்சு. அதனால இன்னைக்கு வீட்டில் இருக்கும் உன் அண்ணியின் நிலைமை நாளைக்கு ரொம்ப கேவலமாகி… என்னைவிட மோசமாய் தன் மகன், மருமகளால் சீக்கிரம் வெளியே தள்ளப்படுவாள். அப்போ அது அவளுக்குத் தாங்காது.
அந்த அசம்பாவிதம் நடக்கிறதுக்குள் அவளைக் கொண்டு வந்து என்னிடம் சேர்த்துடு. ஆயிரம்தான் செண்பகம் கெட்டவளாய் இருந்து என்னைச் சீரழிச்சாலும்…அவள் பாதிப்பு எனக்குத்
தாங்காது. காரணம்….கடைசிவரை காப்பாத்துவேன்னு அக்னி சாட்சியாய்த் தொட்டுத் தாலி கட்டின புருசன் நான். எனக்கும் அவளுக்கும் ஆயுள் பந்தம். எனக்கு அவளும் அவளுக்கும் நானும்தான் கடைசிவரை துணை. இதுக்காகவாவது அவளை நான் மன்னிக்கனும், சீரழியாமல் காக்கனும். அவள் என்னோட இருக்கனும். உன்னால முடிஞ்ச அளவு முழு விபரத்தைச் சொல்லி எப்படியாவது அழைச்சு வந்து என்னோடு சேர்த்துடு. இதுதான் சகோரனாய்ப் பிறந்த நீ எனக்கு செய்ய வேண்டிய நல்ல காரியம். ” என்று ரொம்ப உருக்கமாய்ச் சொல்லி… டக்கென்று என் கையைப் பிடித்து இறுக்கினான் அண்ணன்.
‘ என்னே மனுச மனம்.!! கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருசன்.! என்று முன்னோர்கள் இவனைப் போன்றவர்களைப் பார்த்துதான் பழமொழி சொன்னார்களோ..!!?? ‘ எனக்குள் சிலிர்த்தது.
”ஆகட்டும்! ”என்று அழுத்திச் சொல்லி…நான் அவனை அரவணைத்தேன்.
மிகவும் அருமை