கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 10,820 
 

இராமேஸ்வரம் வந்திறங்கியப்போது, காலை ஏழ மணி, மஞ்சள் வெயிலும், கடலின் நிற்காத ஓசையும் எங்களை வரவேற்றது. முதல்முறை இங்கு வருகிறேன், அதுவும் அம்மாவின் வேண்டுதல் மற்றும் வற்புறுத்தல்களால். இராமநாதபுர ஜில்லாவின் கோடை வெயில் மகத்துவத்தை ஏற்கனவே அறிந்திருந்த காரணத்தால், அம்மாவின் ஆசையை மூன்று மாதங்களாக கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் ஆசையே ஏக்கமாகி அம்மாவின் முகத்தில் வடுக்களாக பதிய ஆரம்பித்தபோது, சரி இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று முடிவெடுத்து இன்று வந்தாகிவிட்டது. கோவில் புனஸ்காரங்களையெல்லாம் முடித்துவிட்டு இன்றிரவே சென்னைக்கு இரயில் ஏறுவதாக திட்டம்.

அறைக்கு சென்று குளித்து முடித்து கோவிலுக்கு வருகையில், காலையிலிருந்த வெயிலின் இதம், ரணமாய் மாற தொடங்கியிருந்தது. கோவிலில் வேறு நல்ல கூட்டம், எங்கு பார்த்தாலும் பலவிதமான மனிதர்கள். ஒவ்வொரு தீர்த்தங்களுக்கும் சென்று, எல்லா வேண்டுதல்களையும் முடிக்கும் வரையில் அம்மா உற்சாகமாகவே இருந்தாள். வெயிலும், கூட்டமும் சேர்ந்து என்னைதான் ஒரு வழியாக்கியிருந்தது. மதிய உணவிற்கு பின் ஒரு தூக்கம் போடலாம் என்று நினைத்தது, அறையில் இருந்த பேன் உமிழ்ந்த வெப்பக்காற்றில் சாத்தியப்படாமல் போனது. அம்மாவின் குறட்டைவேறு அவளின் உடல் அசதியை உறக்கச் சொல்லிக் கொண்டிருந்தது. புரண்டு புரண்டு படுத்து ஒரு மணிநேரம் கழிந்ததுதான் மிச்சம். காலை வந்திறங்கியத்திலிருந்து, கடலின் ஓசை காதோடு இணைந்து இருந்தாலும், இப்போது நிசப்பத்தத்தில் இன்னும் ஆழமாய், அழகாய் ரீங்காரமிட்டு ஓர் ஆர்வத்தை உண்டாக்கியது. அம்மாவை மெதுவாக எழுப்பி “நான் கடற்கரை வரைக்கும் போயிட்டு வந்திடறேன்’’ என்று கூறிவிட்டு அறையை தாழிட்டு வெளியே வந்தேன். வழியில் கடையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும், தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டு கடலை நோக்கி நடக்கலானேன் மாலை நான்கு மணி, சூரியன் இன்னும் உக்கிரம் தணியாத நிலையில் கடற்கரையில் பெரிய கூட்டம் இல்லை. மீனவர்கள் சிலர் வலையை உலர்த்திக்கொண்டும், படகிற்கு அடியில் தூங்கிக் கொண்டும் இருந்தனர். கடலின் அருகே, நல்ல இடமாய் பார்த்து அமர்ந்து, ஒரு பிஸ்கட்டை எடுத்து கடித்துக் கொண்டே, காற்றையும், அமைதியையும் ஒருசேர உள்வாங்க ஆரம்பித்தேன்.

சிறிதுநேரத்தில் என்னை நோக்கி யாரோ வருவதுபோல் இருந்தது. திரும்பினால், வாடிய முகம், மெலிந்த உருவம், மிகவும் தளர்ந்த நடை, மனதில் உள்ள ஏதோ ஒரு பாரம்தான் இந்த தளர்வை அவன் நடையில் திணித்திருக்க வேண்டும். அவனை ஒரு நோட்டமிட்டுவிட்டு, மீண்டும் கடற்கரை நோக்கி திரும்பி அவன் என்னை கடந்து செல்லும் நொடிக்காகக் காத்திருந்தேன். ஆனால் அவனோ, என்னருகில் வந்து, சிறிதுநேரம் நின்று உற்றுப்பார்த்துவிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்தும் விட்டான். இப்போது ஒருவித அச்ச உணர்வும், அசவுகரியமும் என்னைத் தொற்றிக் கொண்டது. தனிமையை விரும்பி வந்த எனக்கு இது பிடிக்கவில்லை. மவுனமாக சில நிமிடங்கள் கழிந்தன சரி கிளம்பிவிடலாம் என்று நினைத்து எத்தனித்தப் போது “ஒரு நிமிஷம்’’ என்றான், அவன். யோசிக்காமல் பயத்தில் உட்கார்ந்துவிட்டேன். சூழ்நிலையை சுமுகமாக்க, ஒரு பிஸ்கட்டை எடுத்து நீட்டினேன், அதை அவன் சட்டைசெய்யவேயில்லை.

“என் பேரு முத்து’’, “எனக்கு இங்கே பக்கத்து ஊரு’’ என்று அவனே ஆரம்பித்தான். நான் முகத்தைத் திருப்பாமல் கடலைப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தேன். அவன் தொடர்ந்தான் “என் தம்பி பேரு சைமன், நாங்க இரண்டு பேரு அநாதைங்க. எனக்கு என் தம்பின்னா உயிரு, அவனுக்குத்தான் சைமன் ரொம்ப துறுதுறுன்னு இருப்பான். எங்களுக்குள்ள இதுவரைக்கு ஒரு சின்ன சண்டைகூட வந்ததில்லை எனக்கு ஒன்னுன்னா துடிச்சுப்போயிடுவான். ஒரு தடவை, ஒரு பிரச்சினையில பக்கத்து தெரு ஆளுங்கெல்லாம் சுத்தி வளைச்சிட்டாங்க, அப்போ சைமன்தான் சண்டைபோட்டு காப்பாத்துனான். எனக்குன்னா என்னவேணாலும் செய்வான். தூங்கற நேரம் தவிர மத்த எல்லாநேரமும் நாங்க ஒன்னாத்தான் இருப்போம். நாங்க புறந்தப்பதான் அநாதைகளா இருந்தோம், ஆனா வளர்ந்தப்ப இல்ல. எங்களை எடுத்து வளர்த்தது, குமாரு, ஜோசப்புன்னு, இரண்டு பேரு, அவங்களும் எங்களைமாரித்தான், அப்பா அம்மா தெரியாதவங்க. ஒருத்தர்மேல் ஒருத்தர் அவ்வளவு பிரியம். சின்னவயசிலேயே இரண்டு பேரும் முதலாளிக்கிட்ட சேர்ந்திட்டாங்க அங்கதான் பழக்கம். முதலாளியோட போட்டுல எடுப்புடியா போக ஆரம்பிச்சு தொழில கத்துக்கட்டாங்க முதலாளி பத்தி சொல்லனும், அவர எல்லாரும் முதலாளின்னு தான் சொல்வாங்க, காசுக்காரர், அறுவது, எழுவது போட்டு வச்சிருக்காரு. காசு விஷயத்திலே ரொம்ப கறாரு, சிலசமயம் மீன் சரியா சிக்கலைன்னா அடிக்கக்கூட செய்வறாம், ஆனா காச மட்டும் மனசாரக் கொடுக்கமாட்டாருன்னு சொல்வாங்க. அப்படிப்பட்டவரு, இவங்க மேல நம்பிக்கைவச்சு, தனியா ஒரு போட்டை கொடுத்துருக்காரு. அதுக்கப்புறந்தான் கல்யாணம் கூட கட்டிக்கிட்டதா சொல்வாங்க. வீட்டுக்கு வந்த அம்மாக்களும் அப்படிதான் அவங்களுக்குள்ளேயும் அவ்வுளவு ஒத்துமை.’’

“குமாரப்பா புள்ள பேரு சதிஷ், ஜோசப்பபாக்கு கிரிக்கெட்னொ உசிரு, அதனால அவரு புள்ளைக்கு தோனின்னு பேரு வச்சிடாரு. எனக்கு சைமனுக்கு, சதிஷ், தோனியோட எப்போதும் விளையாட்டுதான். நாங்க ஏதாவது தப்பு பண்ணினாகூட அவங்க புள்ளைங்களத்தான் கண்டிப்பங்களே தவிர எங்களை ஒரு வார்த்தைக் சொல்லமாட்டாங்க. எங்கவீட்ல தினம் மீனு, கருவாடு தான், அது வசதியினால இல்லை, கடலுக்கு போயிட்டு வரப்போ, கொஞ்சம் வீட்டுக்கு கொண்டு வருவாங்க, அதவச்சு மிச்சநாள்ள ஒட்டுவோம் அதனாலதான். இந்த நாப்பத்தி அஞ்சு நாள் தடைக்காலம் அப்பவும், புயல் காலம் போதும் முக்கால்வாசி வீட்ல கஞ்சிதான் இருக்கும், ஆனா நாங்க எதுவுமே அப்போ கேக்கமாட்டோம். இரண்டு வீட்டுலேயும் வறுமைதான், ஆனா பாசம் அதவிட அதிகமா இருந்ததாலே அது தெரில. பணம், குணம் எதுமே எங்க இரண்டு குடும்பத்துக்குள்ள விரிசல் உண்டு பண்ணினதில்லை. வீடுதான் இரண்டு, அதுவும் தூங்கிறதுக்குதான், மத்தபடி எல்லா ஒன்னுதான்’’ என்றபோது, எனக்கு அந்த அன்பான உலகம் ஆச்சிரியமாக இருந்தது.

“வாரத்தில இரண்டு தடவை கடலுக்கு போவாங்க, அதிகப்பட்சம் இரண்டு நாள்ல திரும்பிருவாங்க எங்க போட்டுல சொரிமுத்துன்னு ஒருத்தன் எடுப்பு வேலை செய்வான், ரொம்ப நல்லவன், வெகுளி, ஊர்ல எப்ப எங்களைப் பாத்தாலும், ஏதாவது திங்கிறத்துக்கு வாங்கிக் கொடுக்காம போகமாட்டான். அவனும் எங்க குடும்பத்தில ஒருத்தன் மாதிரிதான் சிலசமயம் எங்களையும் சும்மா கடலுக்கு கூட்டிட்டு போவாங்க. எனக்கும் சைமனுக்கும் கடலுக்கு போறதுன்னா அவ்ளோ இஷ்டம். எங்களுக்கு அங்கேயும் சொரிமுத்துவோட ஒரே விளையாட்டுதான். புடிக்கிற மீனை அப்படியே சுட்டு சாப்பிடுவோம் அவ்ளோ ருசியா இருக்கும். ஜோசப்பப்பா இடத்தை குறிக்கிறதுல கில்லாடி, குமாரப்பா மீனை புடிக்கிறதுல கில்லாடி. ஆழமா போயி ஒரு இடத்துல வலையைப் போட்டுட்டு விடிய விடிய காத்து மீன் புடிப்பாங்க. அப்ப எங்களுக்கு போர் அடிக்கும். எனக்கும் சைமனுக்கும் போட்டு நின்னுட்டா புடிக்காது நீந்தினாத்தான் புடிக்கும். என்னதான் கில்லாடிகளா இருந்தாலும், அதிர்ஷ்டம்ன்னு ஒன்னு இந்த தொழில்ல வேணும். அது இல்லைன்னா, என்னாதான் கஷ்டப்பட்டாலும் பலன் இருக்காது. எங்களுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே கொஞ்சம் கம்மிதான். மீன் சரியா சிக்கலைன்னா, போறப்ப இருக்குற சந்தோஷம் வர்றப்ப நிச்சயமா இருக்காது. யாரும் அவ்வளவா பேசிக்கமாட்டாங்க, நாங்களும் முகத்தைப் பார்தே புரிஞ்சுக்கிட்டு அமைதியாயிருப்போம். திரும்பி வர்றப்ப வாசல்லேயே மொத்த குடும்பமும் காத்திருக்கும், நாங்கதான் முதல்ல ஒடுவோம், இரண்டுநாள் எங்களைப் பாக்காத ஏக்கம், அம்மாங்க கண்ணுல கண்ணீரா நிக்கும். ஒவ்வொரு முறை கடலுக்குப் போறப்பவும் அம்மாங்க ஏதாவது வேண்டிக்கிவாங்க, திரும்பின அன்னைக்கே மாதா கோயிலுக்கு போயி வேண்டுதல செஞ்சுடுவாங்க. கிடைச்ச மீனைப் பொறுத்து மிச்ச வாரம் போகும். கடவுள் எங்க வாழ்கையிலே பணத்தையும், அதிர்ஷ்டத்தையும் ரொம்ப அளவாதான் கொடுத்திருந்தாரு, ஆனா அன்பை மட்டும் அளவில்லாம கொடுத்திருந்தாரு’’ என்றபோது எனக்கு மீனவர்கள் வாழ்க்கையின் எதார்த்தம் புரிந்தது, ஆனால் இதையெல்லாம் ஏன் இவன் நம்மிடம் சொல்கிறான் என்பது பிடிபடவில்லை.

“இப்படி எல்லாமே நல்லாதான் போயிட்டு இருத்துச்சு போனவாரம் வரைக்கும்’’ என்று நிறுத்தியபோது நான் திரும்பி அவன் முகத்தைப் பார்தேன், அவனோ கடலை நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டான். அந்த முகத்தில் அப்படியொரு வெறுமை.

“எல்லா வாரம் போல, போன வாரமும் கடலுக்கு புறப்பட்டாங்க, கடைசி நேரத்திலே என்ன தோனுச்சுன்னுத் தெரில, என்னையும் சைமனையும் கூட்டிட்டு போயிடாங்க. போட்டுல சொரிமுத்து, இந்ததடவை ரொம்ப சந்தோஷமா இருந்தான், அவனுக்கு கல்யாணம் முடிவாயிருந்தது அதனால. நாங்களும் அவன் கூட சந்தோஷமா விளையாடிக்கிட்டே போனோம். எப்போதும் போல ஆழமா போயி வலையைப் போட்டாங்க, ஆனா எங்க நேரம் ஒரு நாள் முழுக்க கிடந்தும் மத்தியை தவிர பெரிசா ஒன்னும் கிடைக்கல. குமாரப்பா “இன்னும் ஒருநா கிடப்போம்வே’’ ன்னார். ஆனா ஜோசப்பப்பா வோ “இல்ல வே, இப்படியே போனா, டீசல் காசுகூட தேறாது, முதலாளிக்கிட்ட பதில் சொல்லவும் முடியாது. புள்ளைக்கள வர்ற மாசம் பள்ளிக்கூடத்துல சேக்கனும், சொரிமுத்து கல்யாணம் வேற கிட்டகிடக்கு. நிறைய வேலை இருக்குவே, கிழக்கால போட்டை இன்னும் ஆழம் விடலாம்’’ ன்னு சொன்னாரு சொரிமுத்துவும் கல்யாணத்துக்கு காசு தேத்துற ஜோர்ல “அதுதான் கரெட்டு’’ன்னான். குமாரப்பா எவ்வளவோ சொல்லியும் கேக்காம இன்னும் ஆழம் போயாச்சு. ரொம்பதூரம் வந்தமாரி இருந்துச்சு. நானும் சைமனும் விளையாடிக்கிட்டு இருந்தோம், எங்களுக்கு போட்டு நீந்தினா சரி.

“இரண்டாம் நாள் ஜோசப்பப்பா குறிச்ச இடத்திலே ஒரளவு நல்ல மீனு கிடைச்சுது. இன்னிக்கு ராப்பொழுது வரைக்கும் வலையைப் போட்டுட்டு, கருக்கல்ல கரைக்கு திரும்பிடலாம்னு பேசிக்கட்டாங்க. இராவு சாப்பிட உட்கார்ந்தோம், எங்களுக்கு சொரிமுத்து சாப்பாட்டை போட்டுட்டு அவனும் சாப்பிட உட்கார்ந்தான் அப்ப ஜோசப்பப்பா “பாத்தியா வே எவ்வளவு மீனு, கரெக்டா சொல்லுவோம்ல’’ன்னு பெருமையா சொன்னாரு. அதுக்கு குமாரப்பா “சரிவே நீ பெரிய மூளைக்காரத்தான்’’ ன்னு சிரிச்சாரு. “இந்த வாரம் நல்ல வாரம் வே, இப்படியே ஒரு மாசம் போச்சுன்னா, புள்ளைகளோட பள்ளிக்கூட பீஸைத் தேத்திடலாம்’’ ன்னு சந்தோஷமா சொன்னாரு, “வேணாம்வே, நீ ஆழம் தெரியாம காலை விடற, அந்த பள்ளிக்கூடத்துக்கெல்லாம் நம்மால கொட்டிக்கொடுக்க முடியதுவே, கவர்மென்ட் பள்ளிக்கூடத்திலே சேர்கலாம், சொல்றத கேளு’’ ன்னாரு. “இல்ல குமாரு, இந்த அடுத்தவன் முன்னாடி கைக்கூட்டி நின்னு, செத்து செத்து பொழைக்கிற பொழப்பு நம்மோடு போவட்டும் வே, நம்ம புள்ளைகளுக்கு வேணாம், அதுகளாவது இந்த கடற்கரையில பொழுதைக் கழிக்க வர்ற பணக்கார சாதியா வாழட்டும், நம்மள மாறி அங்கேயேக் கடந்து, அஞ்சுக்கும், பத்துக்கும் உயிரப் பணயம் வச்சு அல்லாடுற சாதியா வாழ வேணாம் வே’’ன்னு வருத்தத்தோடும், நம்பிக்கையோடும் சொல்லிட்டு எங்களைப் பாத்தாரு, நாங்க தலையை குனிஞ்சுகிட்டோம். அப்ப சைமன் தனியா என்கிட்ட “இவ்ளோ பாசமா நம்மளை வளர்க்கிற இவங்கள நம்ம உயிரைக்கொடுத்தாவது நல்லா பாத்துக்கனும்டா’’ ன்னு சொன்னான். ஏன் இவன் இப்ப இப்புடி சொல்றான்னு புரியாம, தலையாட்டி “ஆமான்னு’’ சொல்லிட்டு ஒரு மீனை வாயில போட்டுக்கிட்டேன்.

சாப்பிட்டு முடிச்சு எல்லாரும் அப்டியே கொஞ்சநேரம் படுத்தோம். விடிஞ்சா ஊருக்கு போயிடுவோம், மீனு வேற நல்லா கிடைச்சிருக்குன்னு எல்லார்க்கும் மனசு நிறைய சந்தோஷம். சொரிமுத்து எங்களோட வெளியே படுத்துக்கிடந்தான். நடுஜாமம் இருக்கும், ஒரு வெளிச்சம் எங்க போட்டுல விழுந்து விழுந்து போச்சு. என்னான்னு எந்திரிச்சு பாத்தா, நல்ல வெளிச்சத்தோட ஒரு பெரிய போட்டு எங்கள பாத்து வேகமா வந்துட்டு இருந்துச்சு. உடனே நான் சத்தம் போட, எல்லாரும் எந்திரிச்சட்டாங்க. ஜோசப்பப்பா நல்ல உத்து பாத்துட்டு “குமாரு இலங்கை நேவி போட்டு வே, கிளம்பு, கிளம்பு போட்டைக் கிளப்பு, போயிடலாம்வே’’ன்னு பதட்டமானார். குமாரப்பாவோ “இல்லவே வேணாம், ஒடினா துரத்தி சுடுவானுங்க கையத் தூக்கி நின்னுடுவோம்வே’’ ன்னு சொல்லறதுக்குள்ள போட்டு வேகமா கிட்ட வந்துடுச்சு. “நானும், சைமனும் கத்திக்கிட்டே அங்க இங்க ஒடறோம் சொரிமுத்து எங்கயே உள்ளே ஒளிஞ்சிட்டான் போல “ஏ சொரிமுத்து டார்ச்ச எடுவே, டார்ச்ச எடுவே “ன்னு குமாரப்பா கேட்டதுக்கு பதிலே இல்ல. அவரே சடார்ன்னு உள்ள போய் டார்ச்சை எடுத்திட்டாரு. “கைய தூக்கிடுவே கைய தூக்கிடு’’ன்னு குமாரப்பா சொல்லிக்கிட்டே கைல இருந்த டார்ச்சால சைகை காட்டுன நிமிஷம்தான். “டமால், டமால்’’ன்னு சத்தம் அந்த சத்தத்துல எதுவுமே கேக்கல எனக்கு. அப்ப உண்டான அதிர்வுல நான் இந்த பக்கம் கத்திக்கிட்டே ஒடியாந்துட்டேன்’’ நான் ஏதும் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

கொஞ்சநேரம் கழிச்சு, நாலைஞ்சு பேரு போட்டுக்குள்ள ஏற்னமாதிரி இருந்துச்சு, நான் கொஞ்சம் தைரியமா கத்திக்கிட்டே வெளியே வந்தேன். நடக்கறப்பவே கால்லெல்லம் பிசுப்பிசுன்னு ஈரமா படுது, ஒரே இரத்த கவுச்சி. குமாரப்பா கீழே கிடந்தது தெரிஞ்சது, இருட்டுல மத்தவங்கள காணல நான் குமாரப்பாவ கத்தி கத்தி எழுப்பறேன், புடிச்சி இழுக்கிறேன், ஆனா அசைவே இல்ல. அப்ப ஒருத்தன் சடார்ன்னு கம்பால என்னை ஒரு அடி அடிச்சு சத்தம் போடாதேங்கறான், வலிதாங்க முடியாம கத்தறேன். ஆனா கம்பையும் துப்பாக்கியையும் காட்டி மிரட்டி அமைதியா உட்காருன்னு சொல்றான். நான் திரும்ப எழறேன், அவனும் திரும்ப அதையே செஞ்சு பயமுறுத்துறான். அவனுங்க போறவரைக்கும் என்னை அப்படியே மிரட்டி உட்கார சொல்லி எல்லாத்தையும் வேடிக்கைப் பாக்க வச்சுடானுங்க.

இரண்டு பேரு உள்ள போயி, சொரிமுத்துவே இழுத்துக்கிட்டு வந்தானுங்க. வர்றப்பவே அழுதுக்கிட்டே கைய தூக்கி, ஒவ்வொருத்தன் காலையும் புடிச்சி, விட்ற சொல்லி கெஞ்சறான், அவனுங்க போட்ட சிரிப்பு சத்தத்துல, அது எவன் காதுலையும் விழுந்த மாதிரி தெரில. அவனோட துணியெல்லாத்தையும் கழட்டிடுட்டு, அவன் லுங்கியவே கிழிச்சு கையக்கட்டி குப்புற படுக்கவச்சிருந்தானுங்க. மிச்சம் கிடந்த சுட்ட மீனை எடுத்து தரையிலே போட்டு நாய் மாறி கவ்வி சாப்பிடச் சொன்னானுங்க. ஒருமனுஷன எவ்வளோ கேவலமா நடத்த முடியுமோ அந்தளவுக்கு கேவலமா என்னென்னமோ செய்ய சொல்லி கஷ்டப்படுத்துனானுங்க. அவனும் உசிருக்கு பயந்து அத்தனையும் செஞ்சான். புறவு வலையெல்லாத்தையும் அறுத்து புடிச்சு வச்சிருந்த மீன்ல நல்லதப்பாத்து எடுத்திட்டு, சொரிமுத்துவையும் கூட்டிட்டு அவனுங்க போட்டுக்கு போனானுங்க. போறப்ப சொரிமுத்து என்னைப் பாத்து “முத்து என் அம்மட்ட சொல்லிடுவே, அழுதுத்திட்டே இருக்கப் போறா நான் சீக்கிரம் வந்திடுவேன்னும் சொல்லிடுவே’’ன்னு அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கதறிக்கிட்டே போனான். அவனுங்க மனசுல இவன் போயி என்னத்த வெளில் சொல்லப் போறான்னு நினைச்சானுங்களா, இல்ல போயி சொல்றதுக்கு ஒருத்தன் இருக்கட்டும்ன்னு யோசிச்சானுங்களான்னு தெரில. என்னை ஒன்னும் செய்யலை.

எல்லாம் போனதுக்கப்புறத்தான், இருட்டுல சைமனையும், ஜோசப்பாவையும் இரத்த சகதில தேடுறேன். என்னைப்போல சைமனும் எங்காவது ஒளிஞ்சிருப்பான்னு நினைச்சேன். ஆனா இல்ல, அவன் சொன்னமாரியே செஞ்சட்டான். ஜோசப்பப்பா கைமேலேயே இரத்ததுல நனைஞ்சு கிடந்தான். யாரும் உசிரோட இல்லைங்கிறத அப்ப என்னால புரிஞ்சுக்க முடில ஒவ்வொருத்தரையும் எழுப்பி எழுப்பி பார்த்தே ஓய்ஞ்சுப் போயி படுத்திட்டேன். பொழுது விடிஞ்சுது, என் சத்தத்தை கேட்டு, பக்கமா போன போட்டுல உள்ளவங்க வந்துட்டாங்க. நாங்க கரைக்குப் போறத்துக்குள்ள ஊரு பூரா விஷயம் தெரிஞ்சு கரையிலே மொத்த சனமும் திரண்டு நிக்குது. நான் தான் முதல்ல போட்டுலேர்ந்து இறங்குனேன், மிச்சமிருந்த சொரிமுத்து சட்டையோட. அம்மாங்க முகத்தெல்லாம் பாக்க முடில, என் கண்ணுல தண்ணியா வருது. ஒரமா போயி கரைல உட்கார்ந்திட்டேன். ஒரே ஒலம். மூனு பேரையும் கரைல கிடத்திப் போட்டாங்க. “ஒன்னாவே வளர்ந்தானுங்க, வாழ்ந்தானுங்க, சாவுலேயும் ஒன்னாவே இருந்திட்டுனானுங்களே’’ன்னு ஊரு மொத்தமும், அப்பாக்களப் பத்திப் சொன்னப்ப, எனக்கும் சைமனுக்கும் இந்த பெருமை என்னால கிடைக்காம போச்சேன்னு வருத்தம்மா இருந்துச்சு. ஆனா என் தம்பியையும் பெருமையாச் சொன்னது எனக்கு சந்தோஷம்தான். போலீஸ் வந்து, எல்லா முடிஞ்சு, மூனுபேரையும் சுடுகாட்டுல பக்கம் பக்கமா புதைச்சிட்டதா பேசிக்கிட்டாங்க. நான் அதுக்கெல்லாம் போல, என் தம்பி எப்போதும் துறுதுறுன்னு இருப்பான்னு நான் சொன்னேன்ல, அவன வேறமாறி பாக்க முடியல்லை அதான். இப்பவும் அந்த துப்பாக்கி சத்தம், சொரிமுத்துவோடக் கதறல், கரைல கேட்ட ஓலம் எல்லாம் காதுலேயே நிக்குது.’’ என்று சொல்லி அவன் முடித்தப்போது ஒரு பெரிய அலை எங்கள் இருவரின் காலையும் நனைத்துச் சென்றது.

“இரண்டு நாள் கழிச்சு, நிறைய வண்டில மந்திரி, பெரிய அதிகாரிங்கன்னு நிறைய பேர் எங்க வீட்டுக்கு வந்தாங்க. ஆறுதல் சொல்றேன்னு சொல்லி ஒரு பேப்பர அம்மாங்க கைல கொடுத்து போட்டா எடுத்துக்க போனாங்க திடீர்னு எங்கம்மாவுக்கு எங்ககேர்ந்து அவ்ளோ ஆவேசம் வந்துச்சுன்னு தெரில. சடார்ன்னு அந்த பேப்பரே வாங்காம, சதிஷை புடிச்சு முன்னாடி நிப்பாட்டி “இந்த புள்ளைக்கும், எனக்கும் இனி யாரும் இருக்கங்கய்யா, சொல்லுங்க. நாங்க என்ன தப்பு செஞ்சோம், பொழைக்கதானைய்ய போனோம் அதுக்கு இம்புட்டு பெரியத் தண்டனையா, இதோ நீங்க ஒத்த ஆளு ஊருக்குள்ள வர்றத்துக்கு இம்புட்டு போலீஸ் பாதுக்காப்புக்கு வருதே, எங்க சனம் எம்புட்டு பேரு உங்க எல்லாரையும் நம்பி, கால் வயித்து கஞ்சிக்காக எங்கயோ நடுக்கடலுக்கு போறோமே, ஒரு பத்து பேரே எங்க பாதுக்காப்புக்கு இந்த அரசாங்கம் அனுப்பக்கூடாதா. எங்க உசிருக்கெல்லாம் மதிப்பே இல்லையா. எத்தனையோ சனத்தை இன்னமும் இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டு இருக்கிறவனுங்கள தட்டிக்கேட்க திராணி இல்லையா உங்களுக்கு’’ன்னு மூஞ்சில அடிச்சமாரி கேட்டாங்க. யாராலையும் பதில் சொல்ல முடில.

எனக்கும் ஆவேசம் வந்துச்சு “ஏய்யா, என் தம்பி சைமன் என்ன தப்பு பண்ணினான், நாங்கபாட்டுக்கு விளையாடிக்கிட்டு சந்தோஷம்மாத்தானே திரிஞ்சோம். அவனப் போயி கொன்னுட்டானுங்களே பாவிங்க’’ன்னு மந்திரிய பாத்து சத்தமா கேக்றேன். ஆனா அவரு என்னை சட்டை செய்யவேயில்லை. மந்திரிக்கு நிறைய வேலை இருந்திருக்கும் போல, அங்க இருந்த அவரு ஆளுக்கிட்ட பேப்பரக் கெடுத்து, அம்மக்கிட்ட கொடுக்கச்சொல்லிட்டு அவசரமா கிறம்புறாரு. நானும் விடல கத்தி, கத்தி கேட்டுக்கிட்டே பின்னாடியே போறேன், “என் தம்பி உசுருன்னா உங்களுக்கு அவ்ளோ இளக்காரமா போச்சான்னு’’, யாரும் திரும்பிகூட பாக்கலை. எல்லாரும் என்னை விரட்டுறதுலேயே குறியா இருக்கானுங்க.

“அது சரி இத்தனை மனுஷங்கள நாயை சுடற மாதிரி சுட்டு தள்ளுறானுங்க, அதையே பெருசா நினைக்காம வேடிக்கைப் பாக்கிறவங்க, சைமன்னு ஒரு நாயை சுட்டு கொன்னுப் போட்டதையா பெருசா நினைச்சுடப் போறாங்க’’ ஆறறிவு உள்ள மனுஷங்க, கண்ணீரும், புள்ளையும் குட்டியுமா, வாழ்க்கையா தொலைச்சிட்டு கதறி கண் முன்னாடி சொல்றதோட வலியைவே புரிஞ்சுக்காம ஒடறவங்க. இந்த நாய் குரைச்சு கதறதையா புரிஞ்சு நின்னுடப் போறாங்க’’ன்னு சொல்விட்டு ஏளனமாக என்னைப் பார்த்தான். நான் எனக்கு புரிந்தது என்பதை பார்வையால் அவனுக்கு புரியவைத்தேன்.

இப்போது நான் முத்துவின் தலையைத் தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தினேன். நான் முன்புக் கொடுத்த பிஸ்கட்டை இப்போது அவன் வாயில் கவ்விக்கொண்டு, வாலை ஆட்டியவாறு உட்கார்திருந்தான். அவன் பிஸ்கட்டை தின்று முடித்ததும் இருவரும் சட்டென்று எழுந்துவிட்டோம். எங்கள் இருவருக்கும் நேரமாகிக் கொண்டிருந்தது. அவன் மனதின் பாரத்தை இப்போது அவன் என் மனதிற்கு சொந்தமாக்கியிருந்தான். பிரிய மனமில்லாமல் அவனிடமிருந்து விடைப்பெற்றேன். அவனும் அவ்வாறே உணர்ந்திருக்க வேண்டும், காரணம் அவனுடைய வால் முன்பைவிட இப்போது இன்னும் வேகமாக ஆடி அன்பை வெளிப்படுத்திக்கொண்டுயிருந்தது.

சிறிது துரம் நடந்தபிறகு திரும்பி அவனைப் பார்தேன் முன்பிருந்த தளர்வு இப்போது அவன் நடையில் இல்லை. நான்தான் தளர்வாய் நடந்துக் கொண்டிருந்தேன். நானும், என் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் இந்த சுமையை உலகத்தோடு பகிர்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து இந்த கதையை எழுதி முடித்தபோது, இரயில் விடியற்காலை சென்னையை நெருங்கிக் கொண்டுயிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *