கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 19, 2022
பார்வையிட்டோர்: 10,662 
 
 

“ஓ!பாண்டி மச்சான் கூப்பிட்டீயராம…ஒம்ம தங்கச்சி சொன்னா.என்ன விசியம்?” என்றான் முத்துராஜ்.

“டூவீலர் ஒன்னு வாங்கனும் மாப்ள.”

“வாங்கிட்டாப்போச்சி. தென்காசி-ஆலங்குளம் இல்ல அஞ்சுகிராமத்துக்கு போலாம்.”

“மாப்ள ஒரு பைக்கு வாங்க பாடுரு விட்டு பாடுரு போனுமா?”

“இல்ல மச்சான் அங்கப்போனா செகனண்டுல நல்ல வண்டியாப்பாத்து தூக்கிட்டு வரலாம். அதான் சொன்னேன்.”

“நம்ம மூலைக்கரைப்பட்டியிலத்தான் இப்பும் சோரூமு இருக்காம,அப்பறம் எதுக்கு?அவ்வளவு தூரம் போனும்.செகனண்டு வேண்டாமோய். புதுசாவே எடுத்துருலாம்.”

“சரி மச்சான்.நாளைக்குப்போறோம். பல்சரோடு வாறோம்.”

“பல்சரா…?ஏ…மாப்ள வண்டி எனக்கில்ல அப்பாக்கு!வெளியூர்ல இருக்குற நமக்கு ஊர்ல வண்டி எதுக்கு?”

“ஓ…! தாத்தாக்கா! அப்பும்னா,’எக்செலு செல்ப்சாட்டு’ புதுசு வாங்கிரலாம் மச்சான்.”

“ஏ! தம்பி, என்னப்பா செலுப்பு பலுப்பு ன்னு பேசிட்டுருக்கிய”என்றார் சகுந்தரன்.

“இன்னா! வந்துட்டாருல நம்ம சகுனி மச்சான்”என்று மெதுவா அவருக்கு கேக்காதபடி சொன்னான் பாண்டி.

“மாப்பு…ஏதோ சொன்னமாதரி இருந்துச்சி!”

“சகு.ந்த..ர.. மச்சான்.வாங்க ம..ச்சான்னு,சொன்னே மச்சான்”என்றான்.

“புளுவுனி மாப்பு!என்னப்பத்தி ஏதோ சொல்லிப்புட்டு,இப்பும் வாங்க மச்சான் நோங்க மச்சான்னா சொல்லுற மயிராண்டி.சரி!அத விடு.ரெண்டுபேரும் சேந்து என்ன ‘பிளான்’னு போடுறீய எதும் ‘பார்ட்டி’யா?”

“யண்ணே!பாட்டீயும் கெடயாது;கீட்டீயும் கெடயாது.தாத்தாக்கு வண்டி வாங்குறதப்பத்தி பேசிட்டுருந்தோ”மென்றான் முத்துராஜ்.

“இந்த மேட்ரூ பெருமாள் மாமாக்கு தெரியுமா!”

“இன்னும் சொல்லல மச்சி.”

“மாப்பு, மாமாக்கு சைக்கிளு மேல ஒரு இதுப்பா!அண்ணாமல ரஜ்னிமாதிரி அந்தக்காலத்துல றெக்கக்கட்டி தோரணையா பறந்த ஆளு. என்ன ஒண்ணு குஷ்பூமாதிரி பொண்ணு கெடைக்கிறது பதுலா இந்த குந்தாணி அத்ததான் கெடைச்சாவ.”

“யோவ்!மருமவன நானா குந்தாணி?ஒங்க தொங்கச்சிய ரெண்டுந்தான் குந்தாணியளு. நாங்க தெருவுல நடந்தா நடக்குற எங்களுக்குத்தான் மூச்சு வாங்கும்.ஒங்கவீட்டு பொம்பளய நடந்தா பாரம் தாங்காம தெருவுலா மூச்சு வாங்குது!”

ஆடிக்காத்து அள்ளிவீசும் மண்ணப்போல, சடசடன்னு பேசி திணறடித்தாள் சகுந்தரனை பாண்டியின் அம்மா.

ஏதும் பேசமுடியாம சகுந்தரன் பம்முவதை பார்த்து,பாண்டிக்கும் முத்துராஜூக்கும் சிரிப்பாணிய அடக்க முடியவில்லை.

“யம்மா!தாயி,போதும் முடியல.அணுகுண்டயே அசால்ட்டா அரச்சி துப்புற ஒங்க வாயில,என்னமாதரி அப்பளப்பொரி மாட்னா சும்மா வுடுவியளா?நல்லாருப்பிய மனுச்சருங்க.யத்தயோ! ஒண்ணுக்கேட்டா கோவிச்சிக்க மாட்டியள?”

“அது நீங்க கேக்குற கேள்விய பொறுத்திருக்கு”

“இவ்வளவு நேரமா நீங்க வீட்டுள்ளத்தான இருந்திய?”

“ஆமா!”

“இவனுவ ரெண்டுபேரும் பேசுனது ஒங்க காதுல விழுந்துச்சா,இல்லையா?”

“ஒண்ணும் விழலயே,யென்ன பேசுனானுவ?”

“அப்பும் உள்ள என்ன பண்ணிட்டுயிருந்தியத்த?

“நா டிவீயில எம்சியாரு பாட்டு பாத்துட்டு இருந்தேன். நீங்க வீட்டுள்ள ஒங்க கரிக்கால எடுத்து வைக்கவும் கரண்டுக்கு பேதியெடுத்துடுச்சி. காலா..அது!”

“எம்ஜியாருக்கு வில்லன் நம்பியாருன்னா, நமக்கு வில்லன் இந்த கரண்டுக்காரப்பயத்தான். நாசமாப்போவ. யத்தயோ!கதய கேளுங்க. ஒங்க மவன் மாமாக்கு மோட்ரூபைக்கு வாங்கப்போறான்னா!”

“ஆத்தாடி!அவருக்கா? ஒங்க தாத்தாவ அடிச்ச அடிய ஒங்காச்சிக்காரி சொன்னதுலயிருந்து யாரும் அவருட்ட சைக்கிளப்பத்தி பேசுனதே கெடயாது.எதுக்கும் ஒங்க அப்பாட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு வாங்கு தம்பி” என்றாள் பாண்டியின் அம்மா.

“என்ன மச்சான் அம்ம இப்படி சொல்றா.எங்கள இன்னயவரைக்கும் திட்னதுக்கூட இல்ல,அவரப்போயி அடிச்சங்கா!”

“மாப்பு,அடி ஒண்ணொன்ணும் இடிமாதிரி இருந்துச்சி.அன்னைக்கி ஒங்க ஆச்சி புடிக்கலன்னா,ஒங்க தாத்தாக்கு சங்குதான்.”

“அப்புடி தாத்தா என்னத்தான் பண்ணாரு…?”

“நம்ம உள்வாய் சாத்தான்குளத்து பகவதி ஆச்சோட மாமியா செத்துப்போனா.அந்த துஷ்டிக்கித்தான் மாமா சைக்கிள ஒங்க தாத்தா எடுத்துட்டுபோனாரு.மாமா மொதல குடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாரு.ஒங்காச்சி மாமாட்ட கெஞ்சிக்கூத்தாடி வாங்கி குடுத்துச்சு.துஷ்டி(இழவுவீடு)வீட்டுல நல்லா மூக்குமுட்ட குடிச்சிட்டு,திரும்பி நம்ம ஊருக்கு வரும்போது அந்த ஊரத்தாண்டி இருக்குற குளத்தாங்கரை ஆலமரத்தடியில சைக்கிள பொத்துன்னு போதையில போட்டுட்டு,அவரும் அங்கனையே வுழுந்து மட்டையாயிட்டாரு.”

“அப்புறம்?”

“சிங்கம்!போத தெளிஞ்சி எந்திச்சீப்பாத்துருக்கு,பொழுது இருட்டிடுச்சி.பக்கத்துல கெடந்த சைக்கிளயும் பாக்கெட்டுல இருந்த காசயும் காணும்.மனுசனுக்கு ஒண்ணும் ஓடல. விறுவிறுன்னு நடயக்கட்டி வீட்டுக்கு வராம பயத்துல ஊரு மந்தயிலபோயி உக்காந்துருந்தாரு.”

“அய்யய்யோ…!”

“என்ன அய்யய்யோ. அடுத்து கேளு.கடைக்குப்போன ஒங்காச்சி தாத்தாவ பாத்துக்கிட்டாவ. ‘யோவ்!என்னாச்சு? இங்குன வந்து குத்தவச்சிருக்கனு, குனிஞ்சியிருந்தவரு மோரய (முகத்தை)தூக்கி பாக்குறாவ மோரயல்லாம் ஒரே மண்ணு.வெள்ளச்ச்சட்ட புழுதி ஒட்டி மஞ்சச்சட்டயா மாறியிருந்துச்சு.மனுசனா நீரு?எந்திரியுமய்யா வீட்டுக்கு போலாம்’னு ஒங்காச்சி கூப்டதுக்கு,”

“ஏட்டீ… நா..”

“என்ன…? யேட்டி நோட்டினுட்டு எந்தியும் வீட்டுக்குப்போலாம். ஆமா, சைக்கிள எங்கய்யா?”

“அதான்ட்டி சொல்ல வந்தேன். சைக்கிளு தொலஞ்சிப்போச்சி…”

“யம்மாடியோ…! தொலஞ்சிப்போச்சா! அவன்கிட்ட இத எப்படி சொல்ல?என்னன்னு நா சொல்ல?நெலையா நிப்பானே!கொலையா என்ன கொன்னுபுடுவானே! குடிக்காரப்பாவி நீ தொலஞ்சி போயிருக்கக்கூடாதா!”ன்னு

ஒங்காச்சி தலயில,தலயில அடிச்சிக்கிட்டாவ. இருந்தாலும் என்ன செய்ய. ஒங்க தாத்தாவ கூட்டிட்டு வீட்டுக்கு வந்தாவ.அவரு வீட்டுள்ள வராம வெளித்திண்ணையில உக்காந்துக்கிட்டாரு. அப்பும் வீட்டுக்கு பின்னால தொழுவுல நானும் மாமாவும் ஆட்டுக்குட்டியள அடைக்க நொச்சிக்கம்பால கூடு பின்னிட்டுருந்தோம்.

“சகுந்தர மச்சி,வேற வேல ஏதும் நீங்க பாத்துருக்கக்கூடாதா. பிரச்சனைக்கு ஏத்தமாதரி நொச்சிக்கம்ப வச்சா வேல செய்யணும். வசமா சிக்கிக்கிட்டாரு எங்க தாத்தா”என்றான் பாண்டி.

“மாப்பு!ஒங்க தாத்தா நேரம் அப்படியிருந்துருக்கு. ஒங்காச்சி பைய தொழுவுக்கு வந்தாவ. ஏலே!யய்யா அப்பா வந்துட்டாருல”ன்னு சொல்ல…

“வெளியிலயே சைக்கிள விடச்சொல்லு நா குட்டிக்கு கொழ வெட்டப்போனும்.”

“யய்யா…அப்பாத்தான் வந்தாரு.சைக்கிளு…வரல.ய்.யா”

“என்னது…!?”

“சைக்கிள…அப்பா தொலைச்சிட்டாருப்பான்னு சொல்லி முடிக்கவும் நொச்சிய எடுத்துட்டு ஓடுனவரு,வெளித்திண்ணையில இருந்த ஒங்கதாத்தாவ நார்நாரா பிச்சியெடுத்துட்டாரு.பிடிக்கப்போன எனக்கு குண்டியில ரெண்டு இழுப்பு,ஒங்காச்சிக்கு முதுவுல ஒரு இழுப்பு. நா எண்ணெய போட்டுட்டு ரெண்டுமூணு நாளா குப்புறத்தான் படுத்துக்கிடந்தேன்.”

“கக்க புக்க கக்க புக்க”ன்னு பாண்டியும் முத்துராஜும் சகுந்தரனை பார்த்து சிரித்தார்கள்.

“என்ன ரெண்டுபேரும் இளிக்கிறீங்க.ஒங்களுக்கு குண்டி பழுத்தா வலி தெரிஞ்சிருக்கும். என்னா அடி…! ஆனா, ஒண்ணு மாப்பு அன்னையிலயிருந்து ஒங்க தாத்தா சாவுற வரைக்கும் சைக்கிளையும் தொட்டதில்ல,சாராயத்தையும் தொட்டதில்ல.”

“ஒரு ஓட்டலாட்டு(நன்றாக ஓடும் நிலையில் இல்லாத) சைக்கிளுக்காப்பா இவ்வளவு அக்கப்போரு!”

“மாப்பு, ஓட்டலாட்டா!வட்டிப்பணம் வாங்க வரவனுங்கூட அந்தமாதரி வண்டி வச்சிருக்க மாட்டானுவ. செமத்தனமா இருக்கும்! மாமா சைக்கிள்.ரெண்டு வீலிலும் சென்டருல கலர் கலரா பூ மாட்டிருக்கும்.சீட்டு சும்மா மெத்து மெத்துன்னு’ஷோஃபா’மாதிரியிருக்கும். அப்புறம் ரெண்டு கைப்பிடியிலயும் பொம்பள புள்ளைய குதிரவாலுமாதிரி ‘பிளாஸ்டிக்’ல தொங்கும். ஹேண்டுபாருல ரெண்டுபக்கமும் கண்ணாடி மாட்டியிருக்கும். மத்தவனுவ சைக்கிளுல சளிப்பிடிச்சவன் தொண்டைமாதிரி பெல்லு கீரு கீருங்கும். மாமா சைக்கிளுல நம்ம சொடலக்கோயிலு பெரிய பித்தள மணியப்போல சும்மா கணீர் கணீருங்கும் சவுண்டு. பங்குனி வெயிலு தாங்காம பருவப்பொண்ணுவ தாவணியில முக்காடுப்போடுறமாதிரி டைனமோக்கு அதுக்குன்னு ஆரஞ்சுக்கலருல ஒரு துண்டுத்துணி கெட்டியிருக்கும்.பின்னாடி மக்காடுல திருச்சந்தூரு முருகன் படம்,முன்னாடி மக்காட ஒட்டி வேலு ‘பிட்’ பண்ணியிருக்கும்.பெரிய கேரியலு வச்ச ‘ஹெர்குலீஸ்’சைக்கிளு எங்க நின்னாலும் தனியா,துண்டா தெரியும்.’லுக்’குல ‘ராஜ்தூத்’து தோத்துப்போவும்.அவரு தலைக்கு எண்ண தேய்க்கிறாரோ இல்லையோ நம்ம கணக்காப்புள்ள கடயில நயம் தெங்கண்ண வாங்கி நல்ல தொடச்சி பளபளன்னு வச்சிருப்பாரு.எவ்வளவு லோடு வச்சாலும் மிதிக்க பூவா…இருக்கும்!”

“மச்சி, நீரு சொல்லப்போயித்தான் தெரியுது! அப்பாக்கு சைக்கிளுன்னா ரொம்ப புடிக்கும்னு. அதான் அப்படி கோவப்பட்டுருக்கு.”

“மாப்பு,தொலஞ்சிப்போன அந்த சைக்கிளுல நாங்க நெறைய சந்தோசத்த கண்டிருக்கோம்! அதுல தான் ஆத்துக்கு குளிக்கபோவோம்; அவசரமா வந்தாலும் அத தூக்கிட்டுத்தான் காட்டுக்குப்போவோம்;தாடி ஆசாரிக்கூட அதுல ‘மைக்செட்’டடிக்கப்போவோம். அவ்வளவு ஏன்? ராஜா வேட்டைக்கு ‘ஜீப்’புல போறமாதரி,நாங்க ரெண்டுபேரும் ஆடுமேய்க்கவே சைக்கிளுலத்தான் போவோம். ஆடுப்போற எடத்துக்கெல்லாம் சைக்கிளுப்போவாது. சைக்கிளு எதுவரைக்கும் போதோ, அதுவரைக்கும் தான் ஆடுபோவனும்,மேயனும்.”

முத்துராஜைப்பார்த்து “யோ! மாப்ள இவுங்க சைக்கிளு ஸ்டோரி பெரிய ‘லவ்’வு ஸ்டோரியா இருக்கும்போல”

“லவ்வு ஸ்டோரியவிட பெருசு மச்சான்” என்றான் பாண்டியிடம் முத்துராஜ்.

“தம்பி,இதுல ‘லவ்’வும் இருக்கு.இவுங்க நயினார் சித்தப்பனுக்கும் முறுக்கு சித்திக்கும் அப்பும் லவ்வோ லவ்வு.மோனஞ்சிப்பட்டி என்ன பக்கத்திலயா இருக்கு?திடீருனு அவள பாத்தே ஆவுணும்னு ஒத்தக்காலுல நிப்பான்.அப்பும் நம்ம ஊருக்கு’பஸ்’லாம் கெடயாது.”

“யாத்தா!அவரு சரியான ‘வெயிட்’லா”ன்னு பாண்டியும் முத்துராஜூம் மூச்சு வாங்கினார்கள்.

“முன்னாடி அந்த செக்குப்பிள்ளையாரு,பின்னாடி நா.அவளப்பாத்துட்டு வீட்டுக்கு வர்றதுக்குள்ள அந்த பன்னிப்பய மூசு மூசுன்னு யலச்சி முப்பது இடத்துல சைக்கிள நிப்பாட்ட வச்சிருவான்.மாமா அப்டியே தெம்பா இருப்பாரு.”

“எங்க சித்தப்பன அந்தளவுக்கு காதல் பாடாப்படுத்தியிருக்கு மச்சி.”

“அப்பறம் ‘ஒரு தலை ராகம்’பாக்க களக்காடு சித்ரா தேட்டருக்கு இங்கிருந்து போயிருக்கோம்.இது யெல்லாத்தையும்விட ‘ஹைலேட்’டு என்னன்னா!நம்ம ஊருலருந்து திசையன்விளைக்கு சைக்கிளிலே போயிட்டு வந்திருக்கோம்.”

“என்னய்யா…சொல்லுறேரு! தெசவெளைக்கா?ன்னு வாயப்பொளந்தான் பாண்டி.”

“வாயப்பொளக்காத மாப்பு…வண்டுக்கிண்டு போயிரப்போவுது!”

“பொளக்காம எப்படியா இருக்க முடியும்! திருனவேலியவிட தெசவெள (திசையன்விளை)நமக்கு தூரமல்லய்யா…?அவ்வளவு தூரமா! அப்படியென்ன சோலியாப்போனீய?”

“ஒரு கோயில்கொடைக்கி கணேசப்பாவுக்கு சோமுல்லாம (சுகமில்லாமல்)போனதால, இந்திராணி சித்தி நம்மூருக்கு வரமுடியாமப்போச்சி. அதனால பேச்சிப்பாட்டி இங்க கெடந்து பொலம்பிட்டுயிருந்தா.’ஐய்யோ! ஊருப்பூராம் ஆட்டுக்கறிச்சோறு திங்குதே…எம்புள்ள அங்க கஞ்சித்தண்ணிய குடிச்சிட்டு கெடக்குதே…இதுக்குத்தான் இந்த நாரப்பயக்கிட்ட தூரத்துல பொண்ண குடுக்க வேண்டான்னு சொன்னனே, கேட்டானா’ன்னு தாத்தாவ அறுக்க தொடங்கிட்டா.”

“பெரிம்மயோ!எதுக்கு இப்பும் அவர திட்டிட்டு கெடக்க?தூக்குச்சட்டியில கறிய வையின்னு மாமா சொன்னாரு.”

“பேச்சிப்பாட்டி சட்டி நெறய கறிய கோரிவச்சிட்டு,காத்துக்கருப்பு எதும் அண்டிறக்கூடாதுன்னு ஒரு துணியக்கிழிச்சி அதுல ரெண்டு கரித்துண்டு,நாலு மொளவத்த,ஒரு ஆணியையும் தூக்குச்சட்டி காதுவளயத்துல கட்டி குடுத்துவிட்டா.”

“இங்கிருந்து எத்தன மணிக்கு கெளம்புனய,அங்க எத்தன மணிக்குப்போயி சேந்தீய?” என்றான் பாண்டி.

“இங்கிருந்து ஒரு…பதினோரு மணிவாக்குல கெளம்பியிருப்போம்; தெசவளக்கி நாலுமணிக்கெல்லாம் போயி சேர்ந்திட்டோம். எங்களப்பாத்துட்டு இந்திராணி சித்திக்கு கையும் ஓடல;காலும் ஓடல.ஏ…!எந்தம்பி வந்துட்டான்,எம்மவன் வந்துட்டானு ரெண்டுபேரு கன்னத்திலும் மாறிமாறி முத்துமுத்துன்னு முத்துனாவ!ராத்திரி அங்க தங்கிட்டு,மறுநாளு காலை யிலத்தான் கெளம்பினோம். வரும்போது ‘தங்கய்யா சுவீட்ஸ்’ல முறுக்கு வாங்கி தந்தாவ.தின்னுக்கிட்டே வீடுவந்து சேந்தோம்”என்றார் சகுந்தரன்.

“எப்பாடி…! இப்பலாம் நாங்க திருனவேலிக்கி பஸ்சுல போயிட்டு வந்தாலே கெறங்கிப்போயிருதோம். அதுவும் சைக்கிள்ல எங்கலாம் சுத்திருக்கீய…ரெண்டுபேரும் பெரிய வீரசூரந்தான்யா!இருந்தாலும் அப்பாக்கு இப்பும் வயசாயிடுச்சுலா. அதனால,ஒரு பைக்க வாங்கிப்போடுவோம்.ஆத்திரஅவசரத்துக்கு தேவப்படும்போது ஓட்டிக்கிட்டும்;அதுவரைக்கும் அவருக்கு பிடிச்ச சைக்கிளையே ஓட்டட்டும்” என்றான் பாண்டி.

“கரைட்டு மாப்பு, நானும் அதத்தான் சொல்லவந்தேன். நீ சொல்ற இந்த ஓட்டலாட்டு சைக்கிளாலத்தான் ஒங்க அப்பா வண்டி இன்னையவரைக்கும் ஒழுங்கா ஓடுது. அத நாகரீகமயிரு, பணப்பவுசுன்னு கொடக்கி (பழுதாக்கி) முக்குலப்போட்டுறக்கூடாது! இன்னைக்கி காரு வச்சிருக்கிறவங்கூட காலையிலும் சாய்ந்தரமும் வயித்த தள்ளிக்கிட்டு ‘வாக்கிங்’ போயிட்டுருக்கான். ஏன்னா உள்ளுக்குள்ள அவ்வளவு சீக்க வச்சிருக்கான். ஆனா,மாமா அன்னைக்கி எப்படி இருந்தாரோ இன்னைக்கும் ஒடம்ப அதேமாதிரி கட்டுக்கோப்பா வச்சிருக்காருன்னா, அதுக்கு காரணமெல்லாம் சைக்கிளுத்தான்னு நான் சொல்லல. அந்த ஒட்டலாட்டு சைக்கிளும் ஒரு காரணம். எந்த பயலாவது மாமாக்கு எழுவது வயசுன்னு சொல்ல முடியுமா! இப்பும் பிகரு பின்னால சுத்தவேண்டிய வயசுல சுகருங்கிறான்; பிரசருங்கிறான்; ஒடம்பு மக்கரு பண்ணுதுங்கிறா”னென்று சகுந்தரன் பாண்டியிடம் சொல்லி கொண்டிருக்கையில்…

பாண்டியின் மகனையும் மகளையும் கடையில் மிட்டாய் வாங்கி கொடுப்பதற்காக சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, “கணீர் கணீரென்று” பெல்லடித்தவாறே தெருவில் சென்றுகொண்டிருந்தார் பெருமாள்.அதே!பழைய தோரணையோடு…

– வாசகசாலை இணைய இதழில் இந்க்கதை பிரசுரமாகியுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *