கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 16,676 
 
 

பகல்பூரா மனிதர்களைத் தணலாய்த் தகித்து சுட்டபின், ஏதோ பிராயச்சித்தம் செய்வது போல மாலையில் சென்னை கடல், காற்றைக் குளுகுளுவென்று அள்ளி வீசியது. மூதுரை வழியாய் வந்த மாலை மயக்கம், உஷ்ண தேசமான இந்தியாவில்தான் சூரியன் முழுகினவுடன் வரும் இந்த நேரம். எப்படி விசேஷமான ஒரு நேரமாக மனதுக்கு ரகசியமாக, திருடிக் கொண்டு வரது. பிறகு எவ்வளவுதான் அதைப் பிடித்து வைத்துக் கொள்ள முற்பட்டாலும் இந்த நேரம் விரைவாக கையிலிருந்து வழுக்கிக் கொண்டு இரவின் இருட்டுடன் சேர்ந்து மறைந்து விடுகிறது. கண்களை மெத்தென்று ஆக்கி, சருமத்தைக் குளுமைப்படுத்தி, கோபத்தை அகற்றி…

கபாலீச்வரர் கோயில் மூன்றாம் ஜாமப் பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தது. கோயிலை நெருங்கும்போதே தூரத்தில் ஒலிக்கும் மணியோசை காதில் விழுந்தது. அதனுடன் கலந்துகொண்ட வேறு சில ஓசைகள். வெளியே ரிக்‌ஷா வண்டிகளின் மணியோசைகள். ஏன், நடந்து வரும் வழியெல்லாம் இப்படித்தான் மாலைக்கே பிரத்தியேகமான சில ஓசைகள். சென்னைக்கும் வெளியே பொதுவாக இட்டுச் செல்லும் மாலையின் முழக்கம் மனதினுள் நினைவுகளைத் தட்டியெழுப்பும் நேரம். இன்னும் சில இடங்களில் மாலை என்ற இந்த பிரார்த்தனை நேரம்.

சங்கு ஊதி அதனால் கிளம்பிய நீண்ட, ஆழமான ஒலி, ஊதுவோரின் அடிவயிற்றிலிருந்து வரும் பிரயாசமும் ஆயாசமும் மூன்று மடங்கு பெரிதாக்கப்பட்டு வெளிவரும். ‘நமாஸ்’ செய்து, குனிந்த தலையை நிமிர்ந்து சொல்லும் முஸ்லீமின் ரீங்காரமிடும் த்வனி அலை அலையாய் பரவும். அதற்குள் நுழையும் பாட்டு, தம்பூரா மீட்டலுடன் இழைந்து வரும். காலை, பகல் முழுக்க வெவ்வேறு போராட்டங்களுடன் வேலை செய்து உரம் ஏறிய உடம்பையும் இறுகிய மனதையும் நெகிழ வைக்கும் ஓசைகள் அடங்கிய மாலையின் ஒருமிப்பு… மற்ற எல்லாப் புலன்களையும் அடக்கி, காதை மட்டும் தீட்டிக்கொண்டு சப்தங்களைக் கேட்கத் தூண்டியது.

கபாலீசுவரர் கோயிலுக்கு அண்மையில் இருந்த ஒரு அரசமரத்தின் இலைகளைக் காற்று அளைந்து, கோதிவிட்டு எழும்பியது, ஒரு ஐம்பது பேர் சேர்ந்தாற்போல கை தட்டினாற் போல், வந்த ‘படபட’வென்ற ஓசைகள். கோயிலுக்கு வெளியே செருப்பைக் கழட்டி தேங்காய் புஷ்பங்களை வாங்கும்போது இந்தப் பொதுவான ஓசைகளுடன் சேர்ந்து வந்தது. திருப்பி, திருப்பி பாடப்பட்ட வரிகள். சுற்றிலும் குழந்தைகளின் ஆரவாரிக்கும் குரல்கள். பெண்களின் கீச்சுமூச்சு சப்தங்கள். பூக்காரர்களின் கூக்குரல்கள்.

கோயிலுக்குள் நுழைந்து முதல் புஷ்ப பொட்டலத்தைப் பிள்ளையாருக்கு அர்ப்பணித்து, வணங்கி நிமிர்ந்தபோது, மண்டபத்தின் மேலேயிருந்த இரண்டு குரங்குகளின் சர்ச்சை பலமாக முற்றியது. ஒரு குரங்கு வலது கன்னம் உப்பி, கொய்யாவையோ, மாங்காயையோ அடைத்து வைத்துக் கொண்டு அந்த நிலையிலும் இன்னொரு குரங்கைப் பார்த்து உறுமியது. குருக்களின் தீபாராதனை மணி கணீரென்று ஒலிக்க, கோபமாக இருந்த குரங்கும் ஒரு கணம் சட்டென்று கீழே பார்வையை வீசியது. சண்டை, உறுமல், அதன் சீறல் பாதியில் நிற்க, அந்த வெண்பாவின் ஒலிகள் மறுபடியும் அயராமல் தூரத்திலிருந்து தேய்வுடன் வந்தன. ஒரே மாதிரி பிசிரில்லாத தாள கட்டுடன் மேலே, மேலே எழும்பி ஓய்ந்தன. அந்த ஒலிகளை ஸ்வரமாக வடிகட்டினால், பத நீஸ…. பத நீ…. பத நீஸ…. என்று வெண்பாவின் ஒவ்வொரு வரியையும் முடிக்கலாம்.

குங்குமம், விபூதியை வாங்கிக் கொண்டு முருகன் சன்னதி அடைந்தேன். திரும்பத் திரும்ப வரும் அர்ச்சனை ஆர்டர்களை ஏற்றுக் கொண்ட சலிப்பை அடக்கி மறைத்துக் கொண்ட அர்ச்சகரின் முகம், கை, கால்களில் ஓர் இயந்திரத்தின் இயக்கம் தெரிந்தது. அர்ச்சகரின் வேகமான உச்சாடனத்தின் நடுவே பளீரிட்ட, மெல்லிய ‘உஸ்’, ‘உஸ்’ ஒலி கிளப்பும் ஸ்லோங்களைச் சின்ன பாம்பு சீறல்கள், ஒலி மாறிய இரும்புகள் மோதும் சப்தங்களில் லேசான கொடூரம் இழைந்தோடியது. அந்த அவசர அர்ச்சனை முடிந்து, தீபாராதனையின் தட்டு முருகனின் முகத்தை சுற்றிச் சுற்றி வந்து, பக்கவாட்டில் ஏந்தியிருந்த வேலின்மீது விளக்கு பட்டு பிரகாசப்படுத்தியது. கணகணவென்று மணியோசை, அதற்கும் பின்னால் தொலைவிலிருந்து மிதந்து வரும் அந்த அயராத பத நீஸ… பத நீ… அப்பா, என்ன பொறுமையான உச்சரிப்பு!

மீதி இரண்டு புஷ்பப் பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு சிவலிங்க சன்னதியில் நின்றேன். இங்கே நல்ல கும்பல். விதவைக் கோலம் பூண்ட பிச்சைக்காரிகள் – ஏண்டியம்மா, கொழந்தே, அறுபத்து மூவரைப் பற்றித் தெரியுமோ? இந்த நவகிரகங்களைப் பற்றித் தெரியுமோ? அதனால் என்ன? இப்படி வா. நா சொல்லித் தரேன்… ஏதோ கொஞ்சம் கையிருப்பாக இரண்டு ரூபாயா தரயா? பஸ் பிடிச்சு மாம்பலம் வரை போகணும்…

நெரிசலை நீக்கி, ஓரமாக நின்று, எட்டிப் பார்த்ததும் சிவலிங்க தரிசனம் கிடைத்தது. பளபளவென்று இந்த கறுப்புக்குத்தான் என்ன வழவழப்பு! மனிதர்களின் நெருக்கம் அழுத்தியது. வியர்வையின் நாற்றம் முகத்தில் சுளிப்பை வரவழைத்தது. சே! கோயிலுக்குக் கும்பலாக வரும் மனிதர்களைப் பார்த்து வெறுக்கக்கூடாது. அது பாவம். இது என்ன பிரமாத கும்பல், திருப்பதியை விடவா? திருப்பதி! மலையடியிலிருந்து திருமலை வரை வெறும் காலை பதித்து, பதித்து, ஊர்ந்து வரும் கோடிக்கணக்கான பெருமக்கள். ஏதோ ஒரு சக்தி அவர்கள் கீழிருந்து இழுக்க, மேலே இந்த பிரம்மாண்டமான மனித நம்பிக்கையின் சுமையைப் பயப்படாமல் தாங்கி நின்ற ஏழுமலை ஆண்டவன். அவர் ரொம்பப் பெரியவரா? அல்லது இந்த ஜனத்திரள் அவருக்குச் சக்தியளித்து, பெரியவராக்கியதா? கோழிக்குஞ்சா, முட்டையா எது முதலில் வந்தது? இங்கேயும் இந்தக் கும்பல், வியர்வை நாற்றம். பக்கத்தில் யாரோ கொண்டு வந்திருந்த பச்சை துளசி மாலையின் மணம். வியர்வை நாற்றத்தைத் துல்லியமாக விரட்டியது. பூவுடன் நாரும் சேர்ந்தால்..? அண்மையில் கிசுகிசுத்த பேச்சுக் குரல்கள். நசுங்கிய ஒரு குழந்தையின் அழுகை. பிறகு திருப்பி, திருப்பி ஒரு லயத்துடன் வரும் ஒலி, பிதற்றல் மாதிரி, என்ன? பிதற்றலா?

சூடம் காட்டி, தீர்த்தம் உள்ளங்கையில் வாங்கி, வாயில் விட்டுக் கொண்டதும், அதன் கற்பூர – துளசி வாசனை அம்பாக உள்ளுக்குள் பாய்ந்தது. அடைந்த காதுகள் தெளிவாகின. தாளக்கட்டுடன் ஒலிக்கும் இந்த ஓ. ஆ. ஔ. ஓ. அண்மையிலேயே இப்பொழுது கேட்டது. வெண்பா இல்லை. ஏதோ விகாரமான ஒலிகள், அப்போ, அந்த பத நீ ஸ… பத நீ ஸ? அது என்னவாயிற்று? இரண்டிற்கும் ஒரே தாளம். ஆனால், இது மட்டும் அபஸ்வரமாக ஒலிக்கிறதே?

கடைசியான புஷ்பப் பொட்டலத்துடன் தேவி சன்னதிக்கு வருவதற்குள் அந்த அபஸ்வர ஒலிகள் பயங்கரமாக நெருங்கின. சன்னதியின் இடது புறத்தில், கண்களை மூடியபடி, உடம்பைத் தலையை ஆட்டியபடி, ஔ… ஓ… அ… என்று எழுத்துகளை வக்கிரமாக, ஒழுங்கற்ற வரிசையில் போட்டபடி அவன் நின்றான். முப்பத்தைந்து – நாற்பது வயதிருக்கலாம். நிகுநிகுவென்ற தாம்பர கலர்மேனி. மேல் சட்டையில்லாமல் இடுப்பைச் சுற்றி ஈர ஜரிகை வேஷ்டி அணிந்திருந்தான். அதையும் சுற்றி கட்டிய சிவப்பு பட்டு. பாரிச வாயுவால் ஒரு பக்கம் முகமும் வாயும் கோணிப் போயிருந்தன.

ஒரு பக்கத்தில் கண், புருவம், மூக்கு நுனி எல்லாமே இழுத்துக் கொண்டிருந்தது. அதே பக்கம் கை உசிரேயில்லாமல் ஊசலாடியபடி தொங்கியது. அந்தப் பக்கத்து கால் சூம்பி தொளதொளவென்று பாதம் பதியாமல் தொங்க, ஒரு தூணில் ஒருக்களித்து, நல்ல கால் மேல் ஊன்றியபடி அவன் ஆடிக்கொண்டே இருந்தான். கண்கள் இரண்டும் இறுக மூடியிருக்க, நல்ல கையால் ஒவ்வொர முறையும் ஆள் காட்டி விரலால் உள்ளே இருக்கும் அம்பாளின் திசையைக் காட்டி ஒ… ஔ… ஆ…. என்றான். உருமாறிப்போன பத நீ ஸ… பத நீ, இந்த அரைமணியாய், ஏன் இதற்கும் முன்னதாகவே இவன் பாடிய வெண்பா! நாக்கு குழறி, வார்த்தைகள் இசைகேடாக சிதறி விழுந்தன.

”பொட்டலத்தைக் குடுங்கோ. கோத்திரம் என்னவென்று சொன்னேள்?”

”ஊ…. ஔ…. ஆ….”

”உங்களைத்தான் கேட்டேன். கோத்திரம்?”

”ஆ… பாரத்வாஜம்.”

பொட்டலத்தை வாங்கிண்டு என் கண் பார்வையைக் கவனித்த அர்ச்சகர் சொன்னார்… ”நல்ல பெரிய வீட்டு பையன்தான். வீடே பாட்டு ஞானத்தில் தோய்ந்திருக்கும். பாவம். பாரிச வாயு இவர் வாயை அடித்து, முடமாக்கி வைத்திருக்கு. தினமும் வீட்டில் இவரை இப்படி அனுப்பி வைக்கிறாங்க. ஒரு நம்பிக்கையில்…. எல்லாமே நம்பிக்கைதானே?”

அர்ச்சகரின் ஸ்தோத்திரங்கள் அந்த ஓலமிடும் ஒலிகளுடன் சேர இரண்டும் மோதிக் கொண்டன. வயிற்றினுள் சின்னதொரு குளிர் நடுங்கி, என் உடம்பை ஒருமுறை ஆட்டியது. கண்களை அவன் ஒரு கணமாவது திறப்பானே என்று திரும்பிப் பார்த்தேன். இறுகப் போர்வை போலப் போர்த்திய கண் இமைகளுக்குள் வியாபித்திருக்கும் இருட்டில் நம்பிக்கை விதைக்குமா? அவன் உடம்பு பிடிப்பில்லாமல் ஆட்டம் கண்டிருந்தது.

பிரதட்சணமாய் வலம் வந்து, வணங்கி, எழுந்தபின் கடைசியாக அவனை ஒரு முறை பார்த்தேன். வெளியே வரும் வழியெல்லாம் இந்த ஒ… ஔ… ஆ… துருத்திக் கொண்டு வந்து ஆக்கிரமித்தது. அம்பாளிடம் முறையிடும் அவன் பிரார்த்தனை ஒரு நிந்தா ஸ்தோத்திரமாய், கோபமும், ஏமாற்றமும் ஆவேசமுமாய்த் தாளம் போட்டு ஒலித்தன. குழறும் நாக்கிற்குத்தான் இப்படி கூசாமல் வசவுகளை வாரி இறைக்க இறைக்க உரிமை உண்டோ?

ஏன் இப்படி பண்ணே நீ

உனக்கு கண் இல்லே?

நான் இப்படி கத்தறேனே

உனக்குக் காது இல்லே?

மாலையின் மென்மையான அமைதியைக் கந்தல் துணியாகக் கிழித்தெறிந்த ஓசைகள். தூங்கும் கடவுளின் பள்ளியெழுச்சி!

(‘ஓசைகள்’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து… காவ்யா வெளியீடு, பெங்களூரு, 1984)

லஷ்மி கண்ணன் (காவேரி)

கவிஞர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். தன் படைப்புகளை தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக எழுதும் வல்லமை படைத்தவர். தமிழில் ‘காவேரி’ என்ற புனைப்பெயரில் படைப்புகளை எழுதி வருகிறார். இதுவரை 21 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றில் ஆங்கிலத்தில் வெளியான நான்கு கவிதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும், தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளும் அடக்கம். காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்த இவருடைய நாவல், ‘ஆத்துக்குப் போகணும்’ மூன்றாவது பதிப்பைக் கண்டிருக்கிறது. இவருடைய மொத்த சிறுகதைகளையும் ‘காவேரி கதைகள்’ என்ற பெயரில் தொகுத்து, இரண்டு பாகங்களாக ‘மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் பப்ளிகேஷன்ஸ்’ வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில் தன்னுடைய சிறுகதைகளை இவரே ஆங்கிலத்தில் ‘Nandanvan & Other Stories’ மற்றும் ‘Genesis: Select Stories’ என்ற தலைப்புகளில் மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டு நூல்களும் டெல்லி, ஒரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

சர்வதேச அளவில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் சாகித்ய அகாடமியிலும் ஆய்வு நல்கை (Resident Fellowship) பெற்றவர். இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், அமெரிக்கா-கலிபோர்னியாவில் இருக்கும் ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் சேன் ஜோஸ் மாகாண பல்கலைக்கழகம், லண்டனின் ‘தி இன்ஸ்டிடியூட் ஆஃப் காமன்வெல்த் ஸ்டடீஸ்’ ஆகியவற்றில் நடைபெற்ற கருத்தரங்குகளிலும் மாண்ட்ரியல், டொரண்டோ, ஹாலந்து, ஆகிய இடங்களில் நடந்த சர்வதேசப் புத்தகக் கண்காட்சிகளிலும் ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்; பல ஆய்வுக் கட்டுரைகளை வாசித்திருக்கிறார். ஆங்கிலத்தில் பல விமர்சனக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *