அதிகாலை வேளை.நடைப் பயிற்சிக்காக அந்த சாலை ஓரமாக நடந்து கொண்டு இருந்தேன். அது எங்கள் தொழிற்சாலை ஒட்டிய பாதை. ஏழு மணிக்கு மேல் தான் போக்கு வரவு மிகுந்திருக்கும்.ஐந்து மணியெல்லாம் நடப்பது என்பது என் போன்றவருக்கும் கூட சிறிது நல்லதல்ல !
நானும் என் நண்பரும் நடக்கும் போது அந்தப் பெண்ணும் நடந்து வந்து கொண்டிருந்தாள். ‘என்ன இவ்வளவு அதிகாலையில் நடந்து போகிறாளே!’ என் நண்பரின் அங்கலாய்ப்பு !
கூப்பிட்டுச் சொல்லலாம் என்றால் சிறிது தயக்கம்!
கடைசியில் தைரியமாக எங்களுக்கு அவள் மகள் போன்றவள் என்ற உணர்வோடு ‘ அம்மா! தப்பா நினைக்காதே ! இவ்வளவு காலையில் நடக்க வேண்டுமா ? கொஞ்சம் விடிந்த பிறகு வரக்கூடாதா?’ நான் கேட்டேன்.
முதலில் ஏறெடுத்துப் பார்த்தாள். பிறகு, ‘இல்லை அங்கிள்! நீங்க வர வழியில் தான் என் வீடு நீங்கள் இருவர் வருவதைப் பார்த்திருக்கிறேன். அதனால்தான் வந்தேன்’ என்றாள்.
‘ஓ! அப்படியா ! உனக்கு விருப்பமானால் எங்களுடனேயே வரலாம் .உன் பெயர் என்ன? உன் அப்பா ,அம்மா என்ன செய்கிறார்கள்? நீ என்ன செய்கிறாய்?’ என்று கேள்விகள் அடுக்க ஆரம்பித்தேன் .
‘ என் பெயர் விமலா ! என் அப்பா பெயர் ராஜ சேகர். அபுதாபியில் இருக்கிறார் அம்மா வீட்டில் இருக்கிறார். நான் பொறி இயல் முடித்து வேலை பார்க்கிறேன். மதியத்துக்கு மேல்தான் காரியாலயம். அதனால்தான் காலையில் நடக்கலாம் என்று வந்தேன் ‘
இருபத்துஐந்து வயது இருக்கும். அமைதியாக நன்றாகவே இருந்தாள்.
அங்கிள்! நீங்க எங்கே இருக்கீங்க !
‘நாங்கள் மெயின் ரோட்டின் அருகில் உள்ள காலனியில் இருக்கிறோம் .நாங்கள் மத்திய அரசு பணியில் ஓய்வு பெற்றவர்கள். என் பெயர் கண்ணன். இவர் பெயர் கிருஷ்ணன் ‘
அதற்குள் சுற்று முடிந்து அவள் வீட்டருகில் வந்து விட்டோம்.தொழிற்சாலை பணியாளர்கள் வரத் தொடங்கினர் .காரும் இருசக்கர ஊர்திகளும் ஓடத் தொடங்கின.!
நாங்கள் செல்லும் போது நண்பர் கிருஷ்ணன் ‘ இவ அப்பாவை நன்றாகவே தெரியும் என் நண்பருக்கு உறவினர் நல்ல மனுஷன் ‘ என்றார்
நானும் பார்த்திருக்கிறேன் என்று சொன்னேன்.!
மறு நாள்.
எங்கள் வருகைக்காகக் காத்திருந்து அவள் எங்களுடன் நடக்கலானாள் .
‘விமலா! உன் கூடப் பிறந்தவர்கள் எதனை பேர் ?’ நான் கேட்டேன்.
‘ஒரு அண்ணன் .எனக்கு முன் கோயம்புத்தூரில் படித்து விட்டு மேல் படிப்புக்காக லண்டன் போயிருக்கிறார் .தம்பி அண்ணா பல்கலைக் கழகம் .அம்மா நடுநடுவே துபாய் போய் விடுவார்கள் அப்பாவிற்காக ! நானும் தம்பியும் தான் அநேகமாக இங்கு இருப்போம்.ஆ ! இன்னொரு விஷயம் !அப்பாவிடம் நேற்று பேசினேன் ! உங்க ரெண்டு பேரையும் மிக நன்றாகத் தெரியும் என்று சொன்னார் அதுவும் உங்களை (என்னை அமெரிக்காவில் இருப்பதாகச் சொன்னார் . அப்படியா? என்றாள்.
ஆமாம்! இப்பொழுது இங்கு வந்திருக்கிறேன் ‘என்று சொன்னேன்.
அடுத்த ஒரு வாரம் அவளை நாங்கள் பார்க்கவில்லை .நண்பர் கிருஷ்ணனுக்கு ஆர்வம்! ‘எங்கே இந்தப் பெண்ணைக் காணோம் ‘ என்று ஆரம்பித்தார்.
‘சும்மா வாங்க ! ஏதாவது ஆபிஸ் வேலை இருக்கும் .வந்தால் பார்க்கலாம் ‘என்று நான் பேச்சை மாற்றினேன் .
பிறகு நான்கு நாட்கள் கழித்து நான் பெங்களூரில் உறவினர் திருமணம் காரணமாக காலை சதாப்தி ரயிலுக்கு நாச்சி ஆட்டோவில் கிளம்பினேன் .வாசல் பஸ் ஸ்டாண்டில் விமலாவைப் பார்த்தேன் .கையில் பிரயாணப் பையுடன் இருந்தாள் .
‘என்ன விமலா!எங்கே போகணும் ? நான் சென்ட்ரல் போகிறேன் ‘ என்றேன்.
‘இல்லை அங்கிள் ! நீங்கள் போங்கள்’ என்று அனுப்பி விட்டாள். எனக்கு அதற்க்கு மேல் உரிமை எடுக்க மனமில்லை. ஆனால் கொஞ்சம் ஏதோ வித்தியாசமாகப் பட்டது .
ஏசி சேர் காரில் போய் அமர்ந்தேன். ஆனால் ஆச்சர்யம்! விமலா என் வண்டியைத் தாண்டி போய்க்கொண்டிருந்தாள். ஜன்னல் திறக்க முடியாததால் கூப்பிடவில்லை. தவிர வரும் போதே என்னிடம் பேசாமல் அனுப்பியதால் நானும் பேச எழவில்லை.
வண்டி போய்க்கொண்டிருந்தது. நான் டாய்லட் போன போது அடுத்த கோச்சில் உட்கார்ந்து ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வை இயற்கை ரசிக்கும் பார்வை போல தெரியவில்லை. நான் என் இடத்திற்கே வந்து விட்டேன்.
பெங்களூர் வந்தது. ஒரு பையன் அவளைக் கூடிக்கொண்டு சென்றான். எனக்கு அப்போது கூட சந்தேகம் வரவில்லை, ஏதோ ஆபிஸ் விவகாரம் என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அவள் பேசாமல் போனது ஏமாற்றம்தான்.
கல்யாணம் முடிந்து உறவினர்களுடன் இரண்டு நாள் கழித்து மறுபடியும் சென்னை கிளம்பினேன். ஆச்சர்யம் ! வண்டி கிளம்ப ஐந்து நிமிடங்களுக்கு முன் விமலா ஓடி வந்து ஏறினாள். என் கோச்சுதான்.
ஆனால் சற்று தள்ளி அமர்ந்து இருந்தாள்.நான் கூப்பிடவில்லை. அதற்குள் என் பக்கத்துக்கு சீட் டாக்டர் பையனுடன் பேச ஆரம்பித்து விட்டேன். டிகிரி முடித்து பீஜி பயிற்சிக்காக சென்னை வந்து கொண்டிருந்தார். செந்தில் என்ற பெயர். பேச்சு அமெரிக்காவில் ஆரம்பித்து என் மனைவியின் உடல் நிலை வரை பேசி, சென்னையில் இருக்கும் வரை என்னை அடிக்கடி பார்ப்பதாகச் சொல்லி என் முழு விவரமும் எடுத்துக் கொண்டு நான் உங்க பேரன் போல, நீங்க என்றெல்லாம் சொல்லாமல் செந்தில்னு கூப்பிடுங்க என்ற வரை நெருங்கி விட்டார்.
திடீரென்று என் அருகில் யாரோ நிற்பதைப் பார்த்து நிமிர்ந்தால் விமலா நின்று கொண்டிருந்தாள்.
‘என்ன அம்மா! ஏதாகிலும் வேணுமா! என்றேன் பதட்டத்துடன்.
அங்கிள் ! உங்களிடம் பேச வேண்டும்’ என்றாள்
டாக்டர் தம்பியும் உடன், ‘நான் என் நண்பன் அங்கே இருக்கிறான்.போகிறேன். நீங்கள் உட்கார்ந்து பேசுங்கள் ‘ என்று சொல்லி போய் விட்டான்.
அவள் மிகவும் பதட்டத்தில் இருந்தாள். அந்த அமைதி இல்லை.
‘விமலா! என்ன ஆச்சு! நீ என் பெண் அல்லது பேத்தி போல. தயவு செய்து என்ன ப்ராப்ளம் ! சொல்லு’ என்றேன்.
‘அங்கிள் ! ‘ அழ ஆர்மபித்தாள்.
ஐயோ ! எல்லாரும் பார்கிறார்கள்.அழாதே! நான் இருக்கிறேன். ஏதாக இருந்தாலும் சொல்லு.’
‘அங்கிள் ! நான் இங்கு வந்தது ஆபீஸ் விஷயம் அல்ல. என் பிரண்ட் பார்க்கத்தான். அவன் பெயர் சந்தர். எங்கள் காரியாலயத்திற்கு போன வருஷம் பயிற்சிக்காக வந்திருந்தான். அப்போது பழக்கம். நல்லவனாக இருந்தான். விரும்பினோம். முக்கியமாக இங்கு என்னை வரச் சொன்னது முக்கியமாக திருமணம் பற்றி பிளான் என்று போன் செய்ததால் வந்தேன். நேராக ஹோட்டலில் தங்க வைத்தான். அதுவே எனக்குப் பிடிக்கலை. என் தோழி நம்பர் கேட்டு நல்ல வேளையாக அவள் வீட்டிக்குப் போய் விட்டேன். என் தோழி சொல்லுவதைக் கேட்டு பதறிப் போய்விட்டேன். ஏற்கெனவே என்னைப்போல் இன்னொருத்தியை பிரபோஸ் செய்து திருமணம் நின்று விட்டதாம் தவிர இன்னும் ஒரு பெண்ணுடன் பார்த்தேன் என்று சொல்லுகிறாள். இது உன் வாழ்க்கைப் பிரச்சனை ! பார்த்து நடந்துக்கோ என்று சொல்லுகிறாள்.
நீ அவனிடம் இது பற்றிப் பேசினாயா? இந்தப் பெண் யார் ? என்று நான் கேட்டேன்.
‘இவள் என்னுடைய காலேஜ் மேட். கோயம்புத்தூரில் படித்தபோது.
அவனிடம் கேட்டதற்கு ‘என் மேல் நம்பிக்கை இல்லாமல் யாராவது சொன்னால் கேட்பதா ‘என்று எரிந்து விழுகிறான் .
‘சொன்னவள் என் உயிர் தோழி .ஆனால் இவன் பேச்சில் எனக்கு நம்பிக்கை குறைகிறது, அவனை நான் ரொம்பவும் நம்பி விட்டேன் .இந்தக் கதைகளில் நம்பிக்கை வரவில்லை. நான் என்ன செய்ய!’
நான் பதறிப் போனேன். ஆனாலும் சமாளித்து ‘விமலா !உன்னை தற்செயலாக ஒரு மாதமாகத்தான் தெரியும். ஆனால் உன் அப்பாவை எங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம். தெய்வத்தின் செயல் உன்னை எங்களுடன் நடக்க வைத்தது. கவலைப்படாதே !
நீ தப்பா நினைக்காமல் இருந்தால் ஒன்று சொல்லுவேன். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை பெரியவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பின்னால் வரும் விளைவுகளுக்கு அவர்களும் பொறுப்பு ஏற்பார்கள். ஊருக்குப் போய் முழு விவரம் சேகரிக்கலாம். அதற்க்கு நெட்வொர்க் உள்ளது.
என்னம்மா!கடவுள் நல்ல அழகும் நிறைய படிப்பும் உன் போன்றவர்க்கு கொடுத்து நம்பி ஏமாந்து போகும் குணத்தையும் கொடுத்திருக்கிறானே !ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா !’
இல்லை அங்கிள் !இன்னும் என்னால் நம்ப முடியவில்லை !’
எல்லாப் பையன்களும் கெட்டவன் இல்லை .நல்லவர்கள் ரொம்பப் பேர் இருக்கிறார்கள். மிகச் சில பேர்களால் எல்லாமே குழப்பமா இருக்கு.
அந்த அழகான பெண் முகத்தில் அப்பொழுதுதான் சற்று தெளிவு வந்தது .
‘சாப்பிட்டாயா?
இல்லை !சின்னக் குழந்தையைப் போல தலை ஆட்டினாள்.’வந்ததை திருப்பி அனுப்பிட்டேன் ‘
அட பெண்ணே ! என்று நான் எழுந்திருக்கு முன் டாக்டர் தம்பி பேன்ட்ரி க்குப் ஓடிப்போய் உணவு வாங்கி வந்தான் .
பசியோடு இருந்த பெண் சாப்பிட்டாள்.!
ஒரு மாதம் முன்னால், அவள் யாரோ !நான் யாரோ !இன்று என் பெண்ணுக்கு மேல் பாசம் அவளிடம்!
நல்லது நடந்தால் தெய்வச்செயல் என்றும் சொல்லலாம். மன நிறைவு என்றும் சொல்லலாம்.
சென்னை வந்தது .
அதற்குள் டாக்டர் செந்திலை அவளுக்கு அறிமுகம் செய்தேன். அவன் பிறகு என்னை வீட்டில் பார்ப்பதாகச் சொல்லி விட்டுப் போய் விட்டான்.
திரும்ப நாச்சி ஆட்டோ ரெடியாக சென்ட்ரலில் இருந்தது.
விமலா !இப்போது என்னோடு வரலாமா?
அங்கிள் !சும்மா இருங்க ! என்று முதலில் ஏறிக்கொண்டாள்.
‘அதற்குள் அந்தப் பையன் திரும்பி வந்தால்’ என்று கேட்டேன் .
‘வர மாட்டான். ட்ரைனிங் முடிந்து விட்டது. அதனால்தான் நான் அங்கே போனேன் .’
விமலா !நான் உன் அப்பா நிலையிலிருந்து ஒரு கேள்வி கேட்கிறேன். தப்பா நினைக்க மாட்டாயே !
‘கேளுங்கள்’ என்றாள்
ஒரு கட்டுப்பாடுன் உங்கள் நட்பு இருந்துதா ?நான் உரிமை எடுத்துக் கேட்டதற்கு மன்னித்து விடு!
விமலா ஆச்சர்யத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள். ‘என் அப்பா கேட்கமாட்டார். என் தாய் மாமா கேட்பார் .இன்று என் தாய்மாமா ஆகி விட்டீர்கள் .ஒன்றும் நடக்க வில்லை ‘
எங்கள் போலீஸ் நண்பர் மூலமாக முழு விவரம் கிடைத்தது
விமலா தப்பித்தாள்.அந்தப் பையன் சந்தர் சரியில்லை !
ஒரு மாதம் கழிந்தது . ஒரு நாள் !
ராஜசேகரும் விமலாவும் என் வீட்டிற்க்கு வந்திருந்தார்கள். வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள் .அன்று எங்கள் நண்பர் குழுவும் இருந்தது.
அவர்கள் போகும்போது ‘மாமா! போய்விட்டு வருகிறோம் .வீட்டுக்கு வாங்க ‘ என்று விமலா சொன்னதும் கொஞ்ச நாட்கள் முன் அவள் யாரென்று எனக்குத் தெரியாது. அவளுக்கும் என்னைத் தெரியாது.ஆனால் இன்று நான் தாய்மாமா ஆகி விட்டேன்!
உறவு என்பது ஒருமித்த மனங்களுக்கு கடவுள் தரும் ஆசிகள்!
அதற்குப் பிறகு டாக்டர் செந்தில் ஒரு நாள் வந்திருந்தான் .எல்லா விவரமும் சொன்னேன். ரொம்ப வருத்தப்பட்டான்.
நான் யுஎஸ் கிளம்பும் நாட்கள் வந்தன. அதற்குள் “கிராண்ட் சுவீட்ஸ்” ஒரு பார்ட்டி கொடுக்கலாம் என்று என் நண்பர்களிடம் சொன்னேன்.
ராஜசேகரும் விமலாவும் அழைத்திருந்தேன் டாக்டர் செந்திலும் வந்திருந்தான்.
அப்பொழுது விமலாவிடம் பேசினேன். ‘உனக்கு விருப்பமானால் நான் டாக்டர் தம்பியோடு பேசுகிறேன் .பிறகு உன் அப்பா அம்மா அவர்கள் குடும்பத்துடன் பேசுவார்கள். என்ன! இப்பொழுது நான் உன் மாமா முறையில் பேசுகிறேன் .சரியா!
பிறகு விமலா செந்தில் பேசினார்கள்! ராஜசேகர் குடும்பம் கோயம்புத்தூர் சென்றது. அதற்குள் நான் அமெரிக்கா வந்து விட்டேன். அனேகமாக ஜனவரியில் கல்யாணம் இருக்கும். தாய்மாமன் என்ற முறையில் நான் சீர் செய்ய வேண்டும்!
ஒரு விமலா கடவுள் செயலால் தன் நிலை உணர்ந்து நலம் பெறுகிறாள். ஆனால் நாட்டில் எத்தனை விமலாக்கள் என்ன செய்கிறார்களோ!
எனக்கு இந்த கதையில் புரிந்த ஒரு நல்ல விஷயம் பெரியவர்கள் உடன் இருந்தால் எவ்விதமான பிரச்சனையாக இருந்தாலுமே அதனை எதிர்த்து விடலாம் என்பது தான் அருமை..
மிக்க நன்றி.சுற்றமுள்ள பெரியவர்கள் சொல்லும் ,எடுக்கும்
அக்கரையில் சுயநலம் இருப்பதில்லை.வாழ்க்கையின்
முன்னோட்டம் தெரிய வரும். நன்றி.
எதார்த்த கதை
மிகவும் அருமை
அனைத்து பெண்களும் படிக்க வேண்டிய ஒரு கதை
vaazthukkal
அன்புடன்
அரவிந்த்
அன்புமிக்க திரு.அரவிந்த் அவர்களுக்கு,
கதையின் உட்கருத்தை உணர்ந்து பாராட்டி உள்ளீர்கள்.
தங்கள் அன்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பி.சங்கரன்
அருமை.
நல்லவிதமாகவே ஆனால் அவசரமாக முடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்க்ள்.
அன்புமிக்க டாக்டர் அவர்களுக்கு ,
மிக்க நன்றி.இந்தக் கதையை இன்னும் விரிவு படுத்தி முடித்திருக்க வேண்டும்,விமலாவின் மன உணர்வுகளை கதை முடிவில் இன்னும் சற்று தெளிவாக சூழ்நிலையோடு எழுதி இருக்கலாம்.
இவ்வளவு அருமையாக உன்னிப்பாக தாங்கள் எழுதியதற்கு உளம்கலந்த நன்றி .என் மற்ற கதைகளையும் படியுங்கள் .
பி.சங்கரன் .