ஒரு பேனா பிரபஞ்சமாகியபோது…

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 31,797 
 
 

“பாருப்பா, மனுசன் அம்பது வயசாகியும்,என்னமாதிரி பறந்து பறந்து நியூஸ் கவர்பண்ராரு….ரிப்போட்டர்ன்னா இப்பிடித்தான் இருக்கணும்….”

சீப் எடிட்டர் சீனிவாசன், தன் நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டதாக சப்-எடிட்டர் சாரங்கபாணி எனக்குச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்ட சம்பவம் நடந்து மூன்று மாதமாகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நானும்,சாரங்கபாணியும் ஒன்றாகத்தான் இந்த தினசரிப் பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்தோம். எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கெல்லாம், ஒன்றாகவே சென்று செய்திகள் தொகுத்திருக்கின்றோம்.

அவரது எம்.ஏ., பட்டப்படிப்பும், எனது எஸ்.எஸ்.எல்.சி.யும் நாளடைவில் எங்கள் இருவரின் தொழில்ரீதியான அந்தஸ்தில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, அன்றய நட்பு இன்றும் நீடிக்கத்தான் செய்கிறது.

இருந்தும், கடந்த இரண்டு மாதமாக நிருபர் பணியில் நான் இல்லை.

நான் என்னதான் தவறு செய்துவிட்டேன்? எனது தவறாக அவர்களின் கண்ணிலே பட்டது என்ன?

மாற்றுப் பத்திரிகையொன்றில், பணிபுரியும் மனோகரனோடு பேசுவதும், பழகுவதும்தான்.

அந்த மனோகரன் எங்கள் பத்திரிகையில் சிலகாலம் பணி செய்தவர்.என்னைவிட பதினைந்து வயது இளையவர்.முன்னேறத் துடிக்கும் இளைஞர். அதைவிட, பத்திரிகைத்துறையில் எனது சீடரும் கூட.

இந்தச் சந்திப்பும், வார்த்தைப் பரிமாறல்களும் அடிக்கடி நடப்பதுதான்.

சமீபத்தில் ஒருதடவை மனோகரன் என்னைச் சந்தித்தபோது என்னிடம் கேட்டார்;

“சார்…. ஒரு வித்தியாசமான பேட்டி எடுத்திருக்கிறேன்….பிரிண்டிங்குக்கு குடுக்கிறத்துக்கு முன்னால ஒருதடவை உங்ககிட்ட காட்டி, உங்க ஒப்பீனியனைக் கேட்டு, கரெக்ஷன் பண்ணிட்டு குடுக்கலாம்னு நினைக்கிறேன் சார்…. லைட்டா கொஞ்சம் பாக்கிறீங்களா….”

வஞ்சகமில்லாத பேச்சுவார்த்தையில் குழந்தைத்தனம். நான் பக்குவமாகச் சொன்னேன்.

“மனோ…. நாம எவ்வளவுதான் பழகினாலும், ஒண்ணை மட்டும் மனசுக்குள்ளை வெச்சுக்கணும்…. நமக்குள்ளை என்ன இருக்கிண்ணு நெனைக்க, இது நம்ம ரெண்டு பேரோட குடும்பப் பிரச்சினை இல்லை….ரெண்டு பத்திரிகைத்துறை சம்பந்தப்பட்டது. நான் அடுத்த பத்திரிகையில உள்ளவனாயிருந்தாலும், என்மேல வெச்சிருக்கிற மதிப்பாலும்,நம்பிக்கையாலும் நீங்க இப்பிடிக் கேட்டீங்கன்னு புரிஞ்சுகிட்டேன். ஆனா, நம்ம பத்திரிகை தர்மப்படி இதை நீங்க எங்கிட்ட காண்பிக்கிறதும் தப்பு. அதை படிச்சுப்பாத்து, என்னோட ஒப்பீனியனை நான் சொல்றதும் தப்பு. சொல்லப்போனா, நாம சார்ந்திருக்கிற பத்திரிகைகளுக்கு நாம துரோகம் பண்ற மாதிரி.

நாம எப்பவும் சந்திப்போம், பேசுவோம், அது வேற. அதில யாரும் தலையிடவோ, கேள்வி கேக்கவோ முடியாது. ஆனா,தொழில் ரீதியா கருத்துப் பரிமாறல் நல்லாயிருக்காதுன்னு நெனைக்கிறேன். அர்ஜுனனும்,துரோணரும் எந்தளவுக்குத்தான் குருவாகவும்,சிஷ்யனாகவும் இருந்தாலும் குருஷேத்திரத்துக்கு வந்தப்போ அவுங்க ரெண்டுபேருமே…..” கூறி முடிக்காமல் மெதுவாகச் சிரித்தேன்.

“சாரி சார்….. தப்புத்தான்….”

இதெல்லாம் சகஜந்தான். ஆனால், இத்தனையையும் யாரோ தவறாகச் சித்திரித்து, ஒன்றுக்குப் பத்தாக ஆபீசில் பற்றவைத்துவிட, அது சீப் எடிட்டர் காதில் விழ, அதனுடைய விளைவு, வேலை போயிற்று.

எனக்குக் கவலை வேறொன்றுமல்ல. ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, தெளிவாக விசாரித்துவிட்டு, எதையும் செய்திருக்கலாம். ஆனால், அதொன்றுமே இல்லாமல்…..

சம்பவத்தைக் கேள்விப்பட்ட்தும்,மனோகரன் எனது வீட்டுக்கு ஓடோடி வந்தார்.

“சார்….கேள்விப்பட்ட்து உண்மையா? உங்க வேலைபோறத்துக்கு நான் காரணமாகிட்டேனே சார்….”

சிறு பிள்ளைபோல அழத் தொடங்கிவிட்டார்.

நான் மனோகரனைத் தேற்றினேன்.

“சே….என்ன இது….பச்சப்புள்ள மாதிரி….ஒரு பத்திரிகையாளனாயிருக்க வேண்டாமா? இப்ப என்ன தலையா போயிரிச்சு….? என்மேல சந்தேகப்பட்டு, சந்தேகப்பட்டு வேலை வாங்கிறதை விட, சங்கடமில்லாம வீட்டுக்கு அனுப்பினது எவ்வளவோ பெட்டர்….” சிரித்தபடி பேசினேன்.

சில நிமிட மவுனத்தின் பின்பு மனோகரன் கேட்டார்.

“சார்…. நீங்கமட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க சார்….எங்க பத்திரிகை ஆபீசில உங்களுக்கு நல்ல பொறுப்பான போஸ்ட் வாங்கித் தர்றேன்…. எங்க சீப் எடிட்டர்கூட இதைப்பத்திக் கேள்விப்பட்டு, ரொம்ப வருத்தப்பட்டாரு….”

“மனோ…. என்மேல மதிப்பு வெச்சிருக்கிற உங்க பத்திரிகைக்கு என்னோட நன்றியை தெரிவிச்சுக்கிறேன்…. அதே நேரத்தில, நீங்க சொன்னமாதிரி நான் உங்க பத்திரிகையில வந்து சேந்தேன்னா, எங்க பத்திரிகை ஆபீசில, என்மேல பட்ட சந்தேகம் ஊர்ஜிதமாகிடும்…. என்னமோ, நான் உங்க பத்திரிகையில சேரணும்ங்கிறத்துக்காகத்தான், உங்ககூட பேசிறேன், பழகிறேன்னு சொல்லி, நம்ம பாசத்தையும்,பழக்கத்தையும் கொச்சைப்படுத்தி, அடுத்தவுங்க பேசிறதுக்கு வாய்ப்பு தந்ததுபோல ஆகிடுமில்லியா….?

நாம பத்திரிகைகாரங்கப்பா…. ஈட்டி முனையைவிட வலிமை உள்ளது நம்ம பேனாமுனை….”

“வாஸ்தவந்தான் சார்….என்ன இருந்தாலும், நான் உங்களைவிட, 15வருஷ ஜூனியர்….நமக்குள்ள உள்ள பவரை நான் தெரிஞ்சுக்காம இருந்தேங்கிறத நினைக்க எனக்கே வெக்கமா இருக்கு சார்….”

“பரவாயில்லை மனோ….இது சாதாரணமா ஏற்படக்கூடிய பீலிங்க்தான்…. இதை நாமதான் கன்ரோல் பண்ணிக்கணும்….”

கடந்த நாட்களை மனதிலே அசைபோட்டபடி,வீட்டு வராந்தாவில், சாய்வு நாற்காலியில் படுத்திருந்த என்னை, டெலிபோன் ஒலி அழைத்தது.

மறுமுனையில் சப் – எடிட்டர் சாரங்கபாணி.

“வணக்கம் சப் – எடிட்டர் சார்….பரவாயில்லியே…., இன்னும் என்னய ஞாபகம் வெச்சிருக்கீங்க….”

“ நீங்க எங்களை தவறா நெனைச்சிட்டீங்கபோல தெரியுது….இருந்தாலும் பரவாயில்லை…. உங்களைப்பத்தி தவறான செய்தி கெடைச்சதால அவசரப்பட்டு ஆக்ஷன் எடுத்திட்டேன்னு சீப் எடிட்டர் வருத்தப்படறார்…. சரிசரி…. நடந்ததெல்லாம் போகட்டும் சார்…. இன்னிக்கு ஈவினிங் ஏழுமணிபோல, சீப்-எடிட்டர் உங்களை வந்து சந்திக்கச் சொன்னாரு….வர்ரிங்களா பிளீஸ்…. இதை நான் ஒரு சப்-எடிட்டரா பேசல்லை…. உங்ககூட வேலை பாத்ததை நெனைச்சு பேசுறேன்…. பிளீஸ் கம் சார்….”

என் பேச்சிலிருந்த வேகமும், சற்று தணியத் தொடங்கியது. தொடர்ந்து அவரே பேசினார்.

“உங்க வருத்தம் எனக்குப் புரியிது சார்…. இனிமேல் இப்பிடியான அசம்பாவிதம் எதுவும் நடக்காது. அதுக்கு நான் கியாரண்டி…. மத்தப் பத்திரிகைக்காரங்க சிலபேரு, முயற்சி பண்ணினதாகவும், அதுக்கு நீங்க ஒத்துப் போகல்லைங்கிற நியூசும் கெடைச்சிருக்கு…. அதனால, சீப்-எடிட்டர் தன்னோட தவறுக்காக ரொம்பவும் “பீல்” பண்றாரு…. கண்டிப்பா நீங்க ஈவினிங் ஆபீசுக்கு வர்ரீங்க…. எல்லாரும் உங்களை, உங்க ஒத்துழைப்பை எதிர்பாத்துக்கிட்டிருப் போம் சார்….” கூறிவிட்டுப் போனை வைத்துவிட்டார்.

பலமாய் பெய்துகொட்டிய மழை ஓய்ந்து, நிலமெல்லாம் சகதிமயமாக இருந்தது. “பனந்தோப்பு” கிராமத்துக்குப் போகும் பாதையில்,வண்டி வாகனங்கள் போனதா, அல்லது உழவு எந்திரம் போனதா என்ற சந்தேகத்தை உண்டாக்கும் விதத்தில், கொத்திப் புரட்டியதுபோல நிலம் காட்சியளித்தது. கையில் வைத்திருந்த கேமராவில், அந்தப் பாதையை இரண்டு வியூகத்தில் கவ்விக்கொண்டேன்.

இரண்டுமாத இடைவெளிக்குப் பின்பு, என்னைக் கண்ட பனந்தோப்பு மக்கள் குதூகலித்து ஓடிவந்து என்னைச் சூழ்ந்துகொண்டனர். கடைசியாக நான், செய்திகள் திரட்டுவதற்கு வருவதாகச் சொல்லியிருந்த இடம், இந்த பனந்தோப்பு கிராமந்தான். அதற்கு ஆதரவாக தமது குறைபாடுகளைச் சொல்வதற்கு, அவ்வூர் மக்கள் தயாராக இருந்தவேளையிதான் சில வேண்டாத விவகாரங்கள் நடந்து முடிந்துவிட்டன.

மக்கள் எனக்கு ஆதரவு தருகிறார்கள். என் எழுத்தை நம்புகிறார்கள். அரசியல்வாதிகளைக் கண்டு ஒதுங்கி நிற்பதுபோல அல்லாமல், என்னச் சுற்றிக் குழுமி, குறைகளை எழுதும்படி சொல்லும்போது, தங்களில் ஒருவனாக நினைத்து, உரிமையுள்ளவர்களாக என்னை தொட்டும்கூட பேசுகிறார்கள்.

எனக்குத் திடீரென ஒரு யோசனை. அந்த மக்கள் கூட்டத்துள்ளே பழுத்த பழமாகத் தெரிந்த முதியவர் ஒருவரிடம் கேட்டேன்.

“ஐயா…. நீங்க ஓட்டுப் போடுறீங்க…. எம்.எல்.ஏ ன்னும், எம்.பி.ன்னும் தெரிவு செய்யிறீங்க…. ஆனா, அவுங்க வர்ர நேரத்தில பேசவே யோசனை பண்றீங்க…. ஆனா, நான் ஒரு பத்திரிகைக்காரன்…. நான் வந்த உடனே மட்டும் சுத்திவந்து மொச்சிடுறீங்க…. அடுக்கடுக்கா குறை சொல்லுறீங்க…. ஏன் இதுமாதிரி அந்த அதிகாரிககிட்ட கேட்டா என்ன…?’’

ஒருகணம், என்னை வைத்தகண் வாங்காமல் நோக்கிய அந்தப் பெரியவர், கண்களை மூடி, ஒரு பெருமூச்சை விட்டுவிட்டுப் பேசினார்.

“நமக்கிண்ணு கெடைச்ச ஓட்டு உரிமையை போடாம விட்டு, அடுத்தவன் அதை கள்ள ஓட்டு போடச்செய்தோ, இல்லை போடாம வேஸ்ட் பண்ணியோ,நமக்கிண்ணு தந்த உரிமையை எதுக்குத்தம்பி விட்டுக் கொடுக்கணும்…. வேஸ்ட் ஆகக்கூடாதுன்னா அதை யாருக்காச்சும் பயன்படுத்தணும்…. அந்த நேரத்தில யாருக்குப் போடணும்னு மனசுக்குத் தோணுதோ….அந்த ஆளுக்குப் போட்டுப்புட்டு, நம்ம வேலையப் பாக்கவேண்டியது…. அம்புட்டுத்தான்….”

“அப்பிடீன்னா…. மனு எதுக்குக் குடுக்கிறீங்க….” கேட்டேன் நான்.

“குடுக்காம வுட்டா, இந்தக் கிராமத்தில எந்த ஒரு கொறையும் கிடையாதிண்ணு சொல்லிப்புடுவாங்க…. குடுத்திட்டா நம்மமேல எந்த ஒரு குறையும் வராது…. அதுக்கு அப்புறமா உங்ககிட்ட சொல்லி, பத்திரிகையில போடவும் வசதியாய் இருக்குமில்லியா….”

வேதனையும், விரக்தியும் அவரது முகத்திலும்,பேச்சிலும் நர்த்தனம் புரிந்தன.

படிப்பறிவு இல்லாதவர்கள் எனினும், படிப்பவர்கள், பேசுபவர்களின் வாய்மொழியைக் கேட்டுக் கிரகித்து வைத்துக்கொள்ளும் உலக ஞானம் மிக்கவர்களாக இருப்பதைக்கண்டு மெய்சிலிர்த்தேன்.

சுற்றியிருந்த கூட்டத்துள்ளே முண்டியடித்துக்கொண்டு ஒரு இளம்பெண் கையிலே சுமாரான எவர்சில்வர் டம்ளருடன் வந்து அதை என்னிடம் நீட்டினாள்.உள்ளே பதநீர்.

தொண்டையிலோ தாகம். நெஞ்சிலோ தயக்கம். நிலைமையைப் பெரியவர் புரிந்துகொண்டார்.

“இது ஒண்ணும் காசுகுடுத்துக் கடையில வாங்கி, உங்களுக்கு லஞ்சமா தரல்லை தம்பி…. எப்பவுமே நாங்க சாதாரணமா சாப்பிடுற பதநீர்தான். உங்களை எங்க குடும்பத்தில ஒருத்தரா நெனைச்சுத்தான் தர்ரோம்…. வாங்கிச் சாப்பிடுங்க….”

மனதிலே மதிப்பும், பாசமும் பொங்க, அந்தப் பெண்ணின் முகத்தை நோக்கினேன்.மலையைச் சாய்த்துவிட்டவள்போல, நிமிர்ந்த சிரிப்புடன், தன் இடுப்பிலே சொருகி வைத்திருந்த கடுதாசி ஒன்றை நீட்டினாள். நீட்டும்போது அவளின் முகத்திலே திடமான நம்பிக்கை, எதிர்பார்ப்பு எல்லாம்.

கடிதக் கோரிக்கைகளைப் பார்த்திருக்கின்றேன். இதுவோ கவிதைக் கோரிக்கை..,

“ விளக்கில் எண்ணெய் நிறைய இருக்கு….

வெளிச்சம் தங்க திரியும் இருக்கு….

வேண்டும் இப்போது தீப்பெட்டியே…!

படிக்க எமக்கு மனதும் இருக்கு….

பகிர்ந்து கொள்ள அறிவும் இருக்கு….

பாடம் தரஒரு பள்ளி வேண்டுமே…! ”

என்னையும் மீறி, என் கண்ணிலிருந்து சில துளிகள் விழுந்தன. பாசமும்,கனிவும் பொங்க அவளின் தலையை எனது கரத்தால் வருடி விட்டேன்.

அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, எனது வீட்டுக்கு வந்து சேர்ந்தபின்னரும், அந்தப் பெண்ணின் உருவமே எனது மனத்திரையில் நிறைந்து நின்றது.

இரவு உணவை முடித்துக்கொண்டு, காலையில் சென்றுவந்த செய்திகளையும்,பனந்தோப்பு கிராமத்து பள்ளிக்கூடக் கோரிக்கை பற்றிய செய்திகளையும், அதற்கான கட்டுரையையும் எழுதுவதற்குத் தயாராக உட்கார்ந்தேன்.

டெலிபோன் மணி அடித்தது. ஒரு கடூரமான குரல்.

இன்னிக்கு பனந்தோப்பு கிராமத்துக்கு வந்த பத்திரிகை நிருபர் நீதானேயா….”

அதிகார தோரணை தொனித்தது.

“ஆமா…..”

“ஏன்யா….ஊர் முழுக்க எத்தனையோ பிரச்சினைங்க இருக்கு…. அதெல்லாத்தையும் வுட்டுப்பிட்டு, அந்த பனந்தோப்பு பசங்களுக்கு பள்ளிக்கூடம் வேணும்னு, உங்க பத்திரிகையில எழுதி, அதுமூலமா பள்ளிக்கூடம் வர்ரத்துக்கு ஏற்பாடு பண்ணித் தர்றதா சொன்னியாமே….”

“பத்திரிகை மூலமா அதை செய்ய முடியாதுன்னு நீங்க நெனைக்கிறீங்களா….? ”

“பத்திரிகை மூலமா செய்ய முடியாதிண்ணு நான் நெனைச்சிருந்தா, இப்ப மெனைக்கெட்டு உனக்கு போன் பண்ணுவேனாய்யா…. பத்திரிகை மூலமா செய்ய முடியாதது இல்லை…. ஆனா, செய்யக்கூடாது…. புரிஞ்சுதா…! வேணும்னா உன்னோட பேங்க் அக்கவுண்ட் நம்பரைச் சொல்லு…. உன் பேரில் வேண்டிய பணத்தை போட்டு வச்சிடுறேன்….”

எனக்கு ஒரு உண்மை புரிந்தது. பன்ந்தோப்பு மக்களைக் கொத்தடிமைபோல் நடத்துகின்ற ஒருசில அரசியல் கைகளுள் ஏதோ ஒரு கையின் குரல்தான் அது. பள்ளிக்கூடம் ஆரம்பித்து, அந்த மக்கள் படிக்கத் தொடங்கிவிட்டால், தங்களது அடக்குமுறைகள் நாளடைவில் அடங்கிப் போய்விடுமே என்கின்ற பயம். அதேவேளை என்னை நேரில் சந்திக்கவும் தயக்கம்.

“என்னையா…. மவுனம் ஆகிட்டே…. பேசாம உன்னோட பேங்க் அக்கவுண்ட் நம்பரைச் சொல்லு….”

“கண்டிப்பா சொல்றேன் சார்…. அதுக்கு இப்ப அவசரப்படாதீங்க…. கூடிய சீக்கிரத்தில பனந்தோப்பு கிராமத்தில பள்ளிக்கூடம் கட்டி முடிச்சு, அதை நிர்வாகம் பண்றத்துக்கிண்ணு தனிப்பட்ட முறையில ஒரு ட்ரஸ்ட், அதாவது அறக்கட்டளை ஆரம்பிப்பாங்க…. அந்த நேரத்தில போன் பண்ணுங்க…. அதோட நம்பரை உங்களுக்குத் தர்றேன்…. அந்த நம்பருக்கு பணத்தை டெபாசிட் பண்ணினீங்கன்னா ரொம்பவும் உதவியா இருக்கும்….”

மறுமுனையில் பற்களை “நற நற” என்று கடிக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

“ராஸ்கல் எங்கிட்டயே உன் வேலையைக் காட்டுறியா…. உன்னய தட்டிவைக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆவப்போவுது….. ஏற்கனவே உன்னய நிருபர் பதவியிலயிருந்து சிலகாலம் தூக்கிவெச்சிருந்தாங்கங்கிற கதை எல்லாம் எனக்குத் தெரியும்….. உன்னய நெரந்தரமா இந்தப் பதவியிலயிருந்து தூக்க வெக்கலை, நான் என் அப்பனுக்குப் பொறக்கலை….”

“நிச்சயமா உங்கப்பாதான் உங்களைப் பெத்தாங்க…. ஆனா, பேரை மட்டும் வைக்க மறந்திட்டாங்க…. பேர் வைச்சிருந்தா, நீங்க உங்க பேரைச் சொல்லிட்டு இவ்வளவும் பேசியிருப்பீங்க…. ஒண்ணைமட்டும் தெரிஞ்சுக்குங்க சார்…. நாம துட்டுக்காகத்தான் பொழைப்பு நடத்துறோம்…. ஆனா, இந்தக் கடமையை நாம கடமைக்காகச் செய்யல்லை…. சேவை மனப்பான்மையோட செய்யிறோம்…… துட்டால குடும்பத்தையும், கடமையால சமுதாயத்தையும், சேவை மனப்பான்மை யால ஆத்மார்த்த திருப்தியையும், வளத்துக்கிறோம்…. எங்க பத்திரிகைத் தர்மத்தில மெயின் சப்ஜெக்டே இதுதான் சார்….”

போனை வைத்துவிட்டேன்.

மீண்டும் எழுத உட்கார்ந்தபோது, என் உள்ளத்துக்குள்ளே ஒரு ஒலிப்பதிவு நாடா இயங்கத் தொடங்கியது. அதிலே என் குரலின் மறுவடிவம் தெரிந்தது.

“பத்திரிகையாளன் என்பவன், வெறும் செய்திசேகரிப்பவன் அல்ல…. சமுதாயத்தில் பொறுப்புமிக்க அங்கம்…. அவனால் எழுதப்படுகின்ற செய்திகள்,வெறுமனே சம்பவங்களின் தொகுப்பாக மட்டும் இருக்கக் கூடாது…. சந்ததியினருக்கு ஒரு படிப்பாகவும் அமையவேண்டும். மனித உயிரைக் காக்கும் மகத்தான கடமை , ஒரு வைத்தியனுக்கு எந்த அளவுக்கு உள்ளதோ, அதுபோல மனித உயிர்,உரிமை,உணர்வு போன்றவற்றை மனிதநேயத்துடன் காப்பாற்ற

வேண்டிய பொறுப்புணர்வு,ஒரு பத்திரிகையாளனுக்கு நிச்சயம் இருக்கவேண்டும்.

அவனது பேனா, பிரச்சினைகளில் முடக்கப்படக் கூடாது. பிரபஞ்சத்தையே அடக்கியிருக்க வேண்டும்….!

இந்தப் பள்ளிக்கூட தேவைபற்றி, பத்திரிகையில் எழுதுவது மட்டுமல்ல, அது உருவாகுவதற்கான எந்தெந்தக் கடமைகளிலெல்லாம் ஈடுபட வேண்டுமோ, அதிலெல்லாம் பிரவேசித்து, என்னால் முடிந்தளவு உதவியைச் செய்யவேண்டும்.

என் பேனா, தொடர்ந்து எழுதத் தொடங்கியபோது, அது கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து, பிரபஞ்சமாக மாறிக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

– தமிழகத்தில் வெளிவரும் பிரபல “தினமலர்” பத்திரிகையின் நிறுவனர் – அமரர். டி.வி.ராமசுப்பையர் அவர்களது, நினைவு தினத்தை முன்னிட்டு, வருடாந்தம் நடத்தப்படும், அமரர்.டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டி வரிசையில், 1999ம் ஆண்டு, முதல்பரிசாக ரூ.7500ஐ பெற்றுத்தந்த சிறுகதை இது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஒரு பேனா பிரபஞ்சமாகியபோது…

  1. பத்திரிகை துறை சார்ந்த சிறுகதையை துணிச்சலாக எழுதிய நண்பருக்கும் அதற்கு முதற்பரிசு தந்து கெளரவித்த பத்திகைத்கும் பாராட்டு.-முத்துக்குமரன்

  2. அருமையான பதிவு ! ஒரு ரிப்போர்ட்டர் ஆக இருக்கும் எனக்கு மிக முக்கிய பதிவாகத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள் ஸ்ரீராம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *