கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 23,314 
 

மழைதான் இப்படி எல்லாம் செய்யும். ஏற்கெனவே ஒரு பாட்டம் மழை பெய்து ஓய்ந்திருந்த சமயத்தில், அந்த ஆட்டோவைக் கையைக் காட்டி நிறுத்தினேன்.

”அன்பு நகர், ஹவுஸிங் போர்டு போகணும்” என்று சொன்னேன். வருமா, எவ்வளவு ஆகும் என்று எல்லாம் கேட்கவில்லை. ஆட்டோக்காரர் பதில் சொல்லாமல், அரை வட்டம் அடித்துத் திரும்பி வந்து ‘ஏறுங்க’ என்பதுபோலப் பின் கதவைத் திறந்துவிட்டார்.

”தாத்தாவைப் பாருங்க. மழையோடு மழையா, குடையைப் பிடிச்சுக்கிட்டு வந்து தபால்பெட்டி யில் லெட்டர் போடுறதை…” என்று எதிர்ப் பக்கத்தைக் காட்டினார். மரமல்லிக் கிளைக்குள் இருந்து குலை தள்ளித் தொங்குவதுபோலச் சிவப்பாக இருந்த பெட்டிக்கு முன்பு, ஒரு தாத்தா பலூன் விற்க வந்தவர் மாதிரி சிரித்துக்கொண்டுஇருந்தார். நான் ஏறி உட்கார்ந்ததும் ஆட்டோவின் கதவை மூடி, ”தாத்தாவுக்குச் சிரிப்பைப் பாருங்களேன்” என்று சொல்லிவிட்டு ஆட்டோவை அந்தப் பக்கமாக வெட்டித் திருப்பி, ”லெட்டர் யாருக்கு? ஆச்சிக்கா..?” என்று கேட்டுவிட்டு ரோட்டில் ஏறினார்.

”ஏ… சும்மா இருப்பா. அவரை வம்புக்கு இழுத்துக்கிட்டு…” என்று முன் பக்கம் சாய்ந்து அவர் முதுகில் அடித்தேன். நான் அப்படித் தட்டினது அவருக்கு ரொம்பப் பிடித்திருக்க வேண்டும். ”யப்பா” என்று வலிக்கிறது போன்று பாவனையாக ஒரு சத்தம் போட்டார். அவருடைய காக்கிச் சட்டையில் இருந்து மழை ஈரமும் வியர்வை நைப்புமாக அந்த வாடை எனக்கு தனுக்கோடி சித்தப்பாவை ஞாபகப்படுத்தியது.

OruSathurangam1

இது ஆச்சர்யம் இல்லையா? தாயம்மா அத்தை வீட்டைத் தேடிப் போய்க்கொண்டிருக்கிற நேரத்தில், தனுக்கோடிச் சித்தப்பா ஞாபகம் வருகிறது என்றால், அதை என்னவென்று சொல்ல? சில சமயம் இப்படி ஆகும்போல. எங்கேயோ இருக்கிற ஒரு கண்ணி, இன்னொரு கண்ணியுடன் இப்படிச் சரியாகக் கோத்துக்கொள்வது எல்லாம் எப்படி நடக்கிறது?

நான் ஊருக்கு வருகிற சமயம் எல்லாம் தாயம்மா அத்தையைப் பார்க்காமல் போவது இல்லை. அத்தை என்று சொன்னால், எங்களுடைய அப்பாகூடப் பிறந்த உறவு எல்லாம் கிடையாது. என் சின்ன வயதில், நாங்கள் தாயம்மா அத்தை எல்லாம் நெடுவளவில் அடுத்தடுத்த வீட்டில் குடியிருந்தோம். பக்கத்து வீட்டில் இருக்கிறவர் களைச் சித்தி அல்லது அத்தை என்றுதானே கூப்பிட முடியும்? அந்த வகையில் அத்தை. இப்போது சொந்த வீடு கட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.

அத்தை பெயர் தாயம்மா கிடையாது. அம்மச்சியார். அந்தப் பெயரைச் சொன்னால்தான், அத்தை வேலை பார்க்கிற பள்ளிக்கூடத்தில் தெரியும். அத்தையை ‘தாயம்மா’ என்று கூப்பிடுவது சூரி மாமாதான். ‘சூரிய நாராயணன், மின் வாரியம்’ என்று மரப் பலகையில் எழுதின போர்டு ஒன்று மாமா வீட்டில் தொங்கும். அது அவரே அவர் கையால் எழுதியது. ”இது யார் தெரியுதாடே?” என்று சூரி மாமா என்னிடம் ஒரு படத்தைக் காட்டிக் கேட்டார். எந்தத் தயக்கத்துக்கும் அவசியம் இல்லாதபடி அச்சு அசலாக ‘தாயம்மா அத்தை’ மாதிரியே அந்தப் படம் இருந்தது. அத்தைக்கு மாறுகண் கிடையாது. ஆனால், முகத்துக்கு நேர் நம்மைப் பார்த்து அத்தை சிரித்தால், ஒன்றரைக் கண் போடுகிற மாதிரி இருக்கும். சூரி மாமா, ”சரியான ஒன்றக் கண்ணி” என்று படத்தோடு கொஞ்சினார். எனக்கு முன்னாலேயே படத்தின் மேல் விரல்களைக் குவித்து முத்திக்கொண்டு என்னைப் பார்த்துக் கண்ணடித்தார். ”யார் வரைஞ்சது தெரியுமா?” என்று கேட்டபடியே அதைத் தொங்கவிட்டார். அண்ணாந்து பார்த்துக்கொண்டே, ”நீங்களா மாமா?” என்று கேட்டேன். என் தலைமுடியை மட்டும் கலைத்துவிட்டு சூரி மாமா போய்விட்டார். இப்படி ஒன்றுமே சொல்லாமல்போனால், ”ஆமாம். நாந்தான் போட்டேன்” என்றுதானே அர்த்தம்.

இதே சூரி மாமாதான் தாயம்மா அத்தையுடைய அந்தப் படத்தைத் தூக்கி வாசலில் எறிந்தார். இதுபோன்ற கோபதாபங்கள் உண்டாகும் நாட்களில் அடிக்கும் வெயில் பிரத்யேகமாகவே எப்போதும் இருக்கிறது. கண்ணாடிச் சட்டம் சில்லுச்சில்லாகி வெயிலில் மினுங்கியதும் சொல்லிவைத்ததுபோல ஒரே விதமான வடிவத்தில் கூர்மையாக உடைந்த அந்தக் கண்ணாடித் துண்டுகளின் குறுக்குவெட்டில் ஒரு பச்சைக் கலர் தெரிந்ததும் மறக்கவே மறக்காது. இப்படி நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடித் துண்டுகளுக்கு உள்ளேயிருந்து வெயிலின் வாசம் ஒரு மாதிரியாக அடிப்பது எனக்குப் பிடித்திருந்தது.

தாயம்மா அத்தை வேறு ஒன்றும் கேட்கவில்லை. வெயிலில்கிடக்கும் கண்ணாடி நொறுங் கல்களுக்கு மத்தியில் இருந்து தன்னுடைய ஓவியத்தைக் குனிந்து எடுத்தாள். ”உங்களுக்கு என்ன கிறுக்கா?” என்றாள்.

சூரி மாமா மரத் தூண் பக்கம் போட்டிருந்த ஈசிச் சேரை ஒரு எட்டு எட்டி உதைத்தார்.

”யாருக்குடி கிறுக்கு? உனக்கா… எனக்கா?” என்று அங்கிருந்தே தாயம்மா அத்தையை அறை யப்போவதுபோலக் கையை ஓங்கிக்கொண்டுவந்தார்.

”அதை ஊர்ல கேட்டா சொல்லுவாங்க” எனத் தாயம்மா அத்தை நெஞ்சோடு தன் படத்தைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு சொன்னார்.

”ஊர்ல எதுக்குக் கேட்கணும்? அவன் ஒருத் தன்கிட்ட கேட்டால் போதாதா?”

”ஏன், கேட்க வேண்டியதுதானே?” – தாயம்மா அத்தை முழு உடம்பும் குளிரில் விரைத்துப் போனதுபோல் அப்படியே நின்றுகொண்டு, பனிக் கத்தியைக் குறிபார்த்து எறிவதுபோலச் சிரித்தாள்.

”பெயரைப் பாருங்களேன் பெயரை. தனிக்கோடியாம்…”- சூரி மாமா வாசல் பக்கம் இருக்கிற பூந்தொட்டியை எத்துவார். ”தனிக்கோடி இல்ல, தனுக்கோடி” – தாயம்மா அத்தை திருத்துவார்.

இப்போது சூரி மாமா முன்னைவிடக் கோபமாகத் தொட்டியை மிதிப்பார். நல்ல கனத்த மண் தொட்டி. சிவப்புக்கு நடுவில், திட்டு மாதிரி, சூளையில் வெந்த கறுப்பு இருக்கும். விளிம்பு கொறுவாயாகி ஈர மண் சிந்தும். பாதாளம் வரை தோண்டியதுபோல வேர் வாசனை வரும். சூரி மாமாவே ‘க்ராஸ் பண்ணி’ வளர்த்த மஞ்சள் ரோஜாப் பூ மூட்டோடு அதிரும்.

தனுக்கோடி வேறு யாரும் இல்லை. எங்களுடைய அம்மாகூடப் பிறந்த சின்னம்மையின் கணவர். எனக்கு சித்தப்பா. தனுக்கோடி சித்தப்பா, தாயம்மா அத்தை வேலை பார்க்கிற அதே பள்ளிக்கூடத்தில் வாத்தியார். அத்தை எட்டாம் வகுப்பு சொல்லிக்கொடுக்கிறார் என்றால், தனுக் கோடி சித்தப்பா ஆறாம் வகுப்பு. சித்தப்பா ஹிந்தி படித்திருக்கிறார். பிராத்மிக், மத்யமா பரீட்சைக்கு டியூஷன் எல்லாம் எடுப்பார்.

தனுக்கோடி சித்தப்பா, தாயம்மா அத்தை எல்லாம் வேலை பார்க்கிற பள்ளிக்கூடத்தின் ஹைஸ்கூலில் ஆண்டு விழா நடத்துவார்கள். அதில் சித்தப்பா ‘பாபி’ ஹிந்தி சினிமா பாட்டு படித்தார். தாயம்மா அத்தைக்கு அந்தப் பாட்டு ரொம்பப் பிடித்துவிட்டதுபோல. அதுவரை ‘தனுக்கோடி சார்’ என்று கூப்பிட்டுக்கொண்டுஇருந்தவரை, ‘தனு சார்’ என்று அத்தை கூப்பிடத் துவங்கியது அதற்குப் பின்னால்தான். அந்தப் பாட்டை வரிக்கு வரி ஹிந்தி உச்சரிப்பில் தமிழில் எழுதி, அதற்கு நேர் எதிர்ப் பக்கம் அந்தந்த வரி களுக்கான அர்த்தத்தையும் தாயம்மா அத்தை எழுதி வாங்கிவைத்திருந்ததைப் பெரிய தப்பு என்று எல்லாம் சொல்ல முடியுமா?

ஆனால், சூரி மாமாவுக்கு அது பெரிய தப்பாகப்போயிற்று. தற்செயலாக சூரி மாமாவும் பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்குப் போயிருந்தது மட்டும் இல்லாமல், தனுக்கோடி மாமா பாடுவதையும் கேட்டிருக்கிறார். பொதுவாகவே, சூரி மாமாவை ஹெட்மாஸ்டரே ஞாபகமாக வரச் சொல்வார். ஆண்டு விழா நடக்கும்போது கரன்ட் போனால், சூரி மாமா இ.பி. ஆபீஸுக்கு ஹெட்மாஸ்டர் அறையில் இருந்து ஒரு போன் போடுவார். டக்கென்று லைட் வந்துவிடும். அப்புறம், ஆண்டு விழா சரித்திர நாடகங்களுக்கு சீன் செட்டிங்ஸ் போடுகிற பெரிய தெரு கோடீஸ்வர முதலியார் பையன்கள் எல்லாம் சூரி மாமாவுக்குப் பழக்கம். இரண்டு பேரும் சேர்ந்துதான் நெடுஞ்செழியன், அன்பழகன், என்.வி.நடராஜன் மீட்டிங் எல்லாம் கேட்கப் போவார்கள். அப்புறம் எப்படி சூரி மாமாவுக்கு ஹிந்திப் பாட்டுப் பிடிக்கும் அல்லது அதைப் பாடுகிற தனுக்கோடி சாரைப் பிடிக்கும்?

OruSathurangam2தனுக்கோடி சித்தப்பாவும் அந்த வீட்டுச் சித்தியும் லேடி டாக்டர் வீட்டுக்குப் போய்விட்டு வந்துகொண்டு இருந்திருக்கிறார்கள். சித்தி இரண்டாவது பிள்ளை உண்டாகி இருந்திருக்கிறாள். முதலாவது என்ன, இரண்டாவது என்ன? சூலி என்றால் எதுக்காவது ஆசைப்படத்தானே செய்வார்கள். வருகிற வழியில் நவ்வாப் பழம் விற்றுக்கொண்டு இருந்திருக்கிறான். தேரோட்டம் முடிந்து நாலைந்து நாட்கள்கூட இராது. தேரோட்டம் முடிந்த ரத வீதிக்குச் சொல்ல முடியாத ஓர் அழகு உண்டு. தேர் இழுக்க வந்த அத்தனை பேருடைய வெக்கையும் அங்கேயே சுற்றினபடி இருக்கும். பலாச் சுளை விற்கிற, ரிப்பன், அரணாக் கயிறு விற்கிற சத்தம்கூட அபூர்வமாக இருக்கும். அதுவும் இப்படி ஒரு சூலி நாவல் பழம் வாங்கிக்கொண்டு நின்றால் கேட்கவே வேண்டாம். இந்தச் சமயம் பொருட்காட்சி விளம்பர வண்டி ஒன்று வந்திருந்தால், எல்லாம் அப்படியே நிரம்பி வழிந்திருக்கும். அப்படித்தான் இருந்திருக்கிறது.

இந்தச் சமயத்தில்தான், சூரி மாமா சைக்கிளில் இருந்து படக்என்று தனுக்கோடி சித்தப்பா பக்கம் இறங்கியிருக்கிறார். சைக்கிளை ஸ்டாண்ட்கூடப் போடவில்லை. தன் இடுப்போடு சாய்த்துக்கொண்டு, சித்தப்பாவைப் பார்த்து, ”இந்த ஜோலி எல்லாம் இங்க வச்சுக்கிட வேண்டாம்” என்றார். தனுக்கோடி சித்தப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ரத வீதியில் சும்மா போய்க்கொண்டிருக்கிற ஒருவரை, சைக்கிளில் வருகிற இன்னொருவர் நிறுத்தி, இப்படி மொட்டையாக நான்கு வார்த்தைகள் சொன்னால், என்ன விளங்கும்? அவர் வெறுமனே நின்றிருக்கிறார்.

”வேண்டாம். அருமை கெட்டுப்போயிரும். சொல்லீட்டேன்…” என மேற்கொண்டும் சொல்லி விட்டு, சூரி மாமா சைக்கிளில் ஏறிப் போய் விட்டாராம்.

இதை தனுக்கோடி சித்தப்பா, மறுநாள் பள்ளிக்கூடத்தில் போய் தாயம்மா அத்தையிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பார்? தாயம்மா அத்தை வீட்டுக்கு வந்த கையோடு, ”உங்களுக்குப் புத்தி கித்தி கெட்டுப்போச்சா? இல்லை, தெரியா மத்தான் கேட்கிறேன்…” என்று சூரி மாமாவிடம் ஆரம்பித்திருக்கிறார்.

சூரி மாமா, ”எனக்கா புத்தி கெட்டுப்போச்சு… எனக்கா புத்தி கெட்டுப்போச்சு?” என்று மாறி மாறிக் கேட்டிருக்கிறார்.

”பின்னே?” என்று தாயம்மா அத்தை ஒரே ஒரு வார்த்தை கேட்டுவிட்டு, துணியை சர்ஃபில் முக்கிவைக்கப் போய்விட்டார்போல. சூரி மாமா விக்கிவிக்கி அழுதுகொண்டு இருந்ததாகவும் அப்படியே சாப்பிட, கொள்ளச் செய்யாமல் வெளியே போய்விட்டு செகண்ட் ஷோ விடுகிற நேரத்துக்கு மட்டுமே வந்து படுத்ததாகவும் தெரிகிறது.

இதைத் தவிர வேறு ஒன்றையும் அவர்தான் செய்திருக்க வேண்டும் எனத் தாயம்மா அத்தை சொல்கிறாள். அந்த ‘பாபி’ படப் பாட்டு வரிகளை எழுதிவைத்திருந்த நோட்டையே காணோமாம். எடுத்து எங்கேயோ ஒளித்துவைத்துவிட்டாராம். சூரி மாமாவிடம், ”நீங்க பார்த்தீங்களா அதை?” என்று கேட்டால், ”இதுவா எனக்கு ஜோலி?” என்று மட்டும் சொன்னாரே தவிர, கொஞ்சம்கூடக் கோபப்படவில்லையாம். அது மாத்திரம் இல்லை. ”நீ புறவாசலுக்குப் போயிருந்த சமயம் மல்லி அரும்பு வித்தான். அரைக்காப் படி வாங்கிவெச்சிருக்கேன்” என்று சொல்லி, பத்தே நிமிஷத்தில் அவ்வ ளவையும் கட்டி, அத்தையிடம் கொடுத்தாராம்.

அத்தை சொன்னாள்.

சூரி மாமாவுக்கு அப்படிப்பட்ட விரல்கள். அது பூ கட்டும். வரையும். போர்டு எழுதும். டூ இன் ஒன் ரிப்பேர் செய்யும். விதம்விதமாகப் பறவைகள் பெயர் எல்லாம் சொல்லும். பறவை கள் பெயர் மட்டும் இல்லை. அதன் முட்டைகளின் நிறம், சைஸ் பற்றி எல்லாம் சொல்லும்.

”இந்த வாத்து முட்டை, கோழி முட்டை எல்லாம் வேண்டாம். ஏதாவது கண் காணாத வனாந்திரப் பறவை முட்டையை, ஒண்ணோ ரெண்டோ நம்ம உள்ளங்கையில் ஆயுசுல ஒரு தடவையாவது வெச்சிருக்கணும். அப்படி இல்லாட்டா, இந்தப் பிறவி எடுத்ததுல அர்த்தமே இல்லை’ என்பார். பறவை முட்டையைஉள்ளங் கையில் வைப்பது எல்லாம் சரி. கேட்க நன்றா கத்தான் இருக்கிறது. அதே மாதிரி தனுக்கோடிச் சித்தப்பாவையும் உள்ளங்கையில் வைத்துக் கொண்டால் என்ன என்று நான் திருப்பிக் கேட்டிருக்க வேண்டும் என இப்போது இந்த ஆட்டோவில் வரும்போது தோன்றுகிறது.

நான் இப்படி எல்லாம் யோசித்துக்கொண்டு வரும்போது, ஆட்டோ ஏ 1 புரோட்டா ஸ்டால், ஜெபா ஸ்டோர் எல்லாம் தாண்டி அன்பு நகர் வாட்டர் டேங்க் பக்கம் போய்க்கொண்டிருந்தது. சைக்கிளில் பிளாஸ்டிக் குடங்களைத் தொங்கப்போட்டபடி ஒருத்தர் போனார். தண்ணீர் எங்கே, எப்படி அலம்பினாலும் நன்றாகத்தான் இருக்கிறது. மஞ்சள், பச்சை, ரோஸ் குடங்களுக்குள் அது மோதித் தெறிப்பதைப் பார்த்ததும் யாரிடமாவது பேச வேண்டும்போல இருந்தது. உலகத்தில் எது பேசச் சொல்கிறது, எது பேச வேண்டாம் என்று சொல்கிறது என்பதைஎல்லாம் யோசிக்க ஆரம்பித்தால், இப்படித்தான் ஒரு புல் மாதிரி ஒரு காரணம் இருக்கும்போல.

”இங்கே தண்ணிக் கஷ்டம் இருக்கோ?” என்று ஆட்டோ டிரைவரிடம் கேட்டேன். ”அப்படி ஒண்ணும் தெரியலையே அண்ணாச்சி” என்று மட்டும் சொன்னதோடு சரி. நான் தாயம்மா அத்தையையும் சூரி மாமாவையும் நினைத்துக் கொண்டு இருப்பதுபோல அவருக்கும் யாராவது இருந்திருப்பார்கள். ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்போல, அவரவர்க்கு உள்ளே நிறைய முகங்கள். சட்டென்று அப்படி உரித்துக்கொண்டு வெளியே வர முடியாது தான்.

”இங்கே மழை ஜாஸ்தி பெய்யலைபோல…” – முன்னால் உலர்ந்து கிடக்கும் ரோட்டைப் பார்த்துக்கொண்டு சொல்கிற குரல், ஹாரன் சத்தத்தோடு கேட்கையில், ஆட்டோ ஒரு வேகத் தடையில் ஏறி இறங்கியது. வலது பக்க வேப்ப மர வரிசையின் பின்னால் ஏதாவது பிள்ளையார் கோயில் இருக்க வேண்டும். ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…’ பாட்டு கேட்டது. ‘புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…’ என்று அடுத்த அடியை மனம் பாடியது. பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டு இருக்கிற குடும்பத்தைப் பார்த்ததும் தனுக்கோடி சித்தப்பா மாதிரி இருந்தது. எனக்குத் தெரியாமல் தனுக்கோடி சித்தப்பா வந்து, தாயம்மா அத்தை யைப் பார்த்துவிட்டுப் போகிறாரா என்று தோன்றியது. இப்படி ஏதாவது கிறுக்குத்தனமாக எல்லாம் தோன்றுவது எல்லாம் எனக்குப் புதிதா என்ன?

தனுக்கோடி சித்தப்பா வேறு ஓர் ஊருக்கு மாற்றல் ஆகிப் போகும்போது, கூடவே சித்தி, இரண்டு பிள்ளைகள் எல்லோரையும் கூட்டிக்கொண்டுதான் தாயம்மா அத்தை வீட்டுக்கு வந்தார். பழகிய ஆட்கள் இப்படி ஊர்விட்டு ஊர் மாறிப் போகும்போது வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிடுவது இயற்கைதான். அதுவும் தாயம்மா அத்தையும் சித்தப்பாவும் ஏழு எட்டு வருஷங்களாக ஒரே பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்தவர்கள். இதையெல்லாம் குத்தமாகப் பார்க்க முடியாது.

சூரி மாமாவுக்கு அப்படி அவர்களைச் சாப்பிடக் கூப்பிட்டது பிடிக்கவில்லை. ”இப்போ என்ன விருந்து வேண்டிக்கிடக்கு?” என்று சொல்லிவிட்டு வெளியே போனவர், ராத்திரி வெகு நேரம் கழித்துதான் வந்தாராம்.

”அதையெல்லாம் கணக்குல எடுத் தால் முடியுமா?” என்று தாயம்மா அத்தை லேசாகச் சொல்லிவிட்டாள்.

நானும் தாயம்மா அத்தையும்தான் தனுக்கோடி சித்தப்பா குடும்பத்தை பஸ் ஏற்றிவிட வந்தோம். அன்றைக்கு என்னவோ பஸ் சீக்கிரம் வந்துவிட்டது. தாயம்மா அத்தை கடைசி வரை தனுக்கோடி சித்தப்பா வீட்டு சித்தியின் கையைப் பிடித்துக்கொண்டே இருந்தாள். விடவே இல்லை. யார் கையை நினைத்துக்கொண்டோ, யாருடைய கையையாவது பிடித்துக்கொள்ள வேண்டியது இருக்கிறது.

நானும் அத்தையும் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வீடு கட்டக் குவித்திருந்த மணலில் படுத்திருந்த இரண்டு நாய்கள் மேல் நான் கல்லை எறிந்தேன். ”அது உன்னை என்ன செஞ்சுது, பாவம்” என்று அத்தை என் கையைப் பிடித்துக்கொண்டாள். டியூப்லைட் தெருவில் விட்டுவிட்டு எரிந்துகொண்டிருக்கிற வெளிச்சத்தில் கட்டடம், மரங்கள் எல்லாம் வேறு மாதிரிஆகி விட்டன. ”என்னமோ மாதிரி இருக்கு இல்லையா அத்தை?” என்று சொல்லும்போதுதான் தாயம்மா அத்தை முகத்தைப் பார்த்தேன். அத்தை இவ்வளவு நேரமும் அழுதுகொண்டே நடந்து வந்திருப்பாள்போல. வழக்கமாகப் போகிற பாதை இல்லாமல் வேறு பக்கமாக அத்தை என்னைக் கூட்டிக் கொண்டுபோனாள். ”அப்படி இல்லையா அத்தை போகணும்?” என்றேன். ”எப்படிப் போனாலும் வீடு வந்திரும்” என்று அத்தை சொன்னாள். இது ஒரு சாதாரணப் பேச்சுதான். ஆனால், எனக்கு நிறைய சமயங்களில், ”எப்படிப் போனாலும் வீடு வந்துவிடும்” என்கிற வாக்கியம் வெவ்வேறு குரலில், இரண்டு உப்புக் கடலையை, வாயில் போட்டுக் கரையவிட்டதுபோல், கேட்டுக்கொண்டே இருந்தது.

சூரி மாமா எல்லா அறைகளின் விளக்குகளையும் போட்டபடி, கைலியை மடித் துக் கட்டியவராக, வாசலிலேயே உட்கார்ந்து இருந்தார். பக்கத்தில் காரக் கடலைப் பொட்ட லம் ஒன்று இருந்தது. அதிலிருந்து கொஞ்சம் வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டு, ”என்ன… வழியனுப்பிச்சு விட்டு வந்தாச்சா?” என்று கேட்டார்.

அத்தை பதில் ஒன்றும் சொல்லவில்லை. அதிகப்படியாக எரிந்த விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்துக்கொண்டு, ஓர் அறையை இருட்டாக்கி இன்னோர் அறையின் வெளிச்சத்துக்குள் புகுந்துகொண்டு இருந்தாள். அதுவே ஒரு பதில் மாதிரி இருந்தது.

”ஹவுஸிங் போர்டில் எங்க போகணும் சார்? ரயில்வே கேட் வரப்போகுது…” – சற்று வேகத்தைக் குறைத்து ஆட்டோவை உறுமவிட்டபடி கேட்டார்.

”ரைட்லெ… ரைட்லெ” என்று கையை வலது புறம் நீட்டி, எந்த வரிசை, எத்தனாவது வீடு என்று சொல்லிக்கொண்டே வந்தேன். ஒரு நகரும் வாகனத்தில் இருந்தபடி, நகராது அப்படியே இருக்கும் எல்லாவற்றையும் பின்னால் ஓடவிடுவது நம்மை என்னவோ செய்கிறது.

அனேகமாக பாதிக்குப் பாதி வீடுகளில் இப்போது மாடி கட்டியிருந்தார்கள். தெருவிலும் வீட்டு வாசல்களிலும் நிறுத்திவைத்திருக்கிற பைக்குகளின் எண்ணிக்கை அதிகமாகி இருந் தது. பாய் வீடு என்று சொல்கிற வீட்டில்தான் அவசரத்துக்குப் பால் வாங்குவார்கள். தனியாக விலாசம் எல்லாம் தேவை இல்லாதபடி அந்த இடத்தைத் தாண்டும்போது அடிக்கிற வாடையே சொல்லிவிடும். நான் எட்டிப் பார்த்துக்கொண்டே, ‘தந்தி போஸ்ட்டுக்கு அடுத்த ரெண்டாவது வீடு. பச்சை பெயின்ட் அடிச்சிருக்குல்லா, அதான்…’ என்று சொன்னேன்.

சொல்லி முடிக்கக்கூட இல்லை. ”அமைச்சர் டீச்சர் வீடா? அப்படிச் சொல்லியிருந்தா, நானே ரெடியாய்க் கொண்டுவந்து விட்டிருப்பேனே” என்று சிரித்தார் அம்மச்சியார் என்பது அமைச்சர் ஆனதில் எனக்கும் சந்தோஷம்தான். ”நான் டீச்சரோட ஸ்டூடன்ட்லா” – மறுபடி குரல் வந்தது. தாயம்மா டீச்சரின் வகுப்பறையில் மூன்றாவது வரிசை பெஞ்ச் ஒன்றில் இருந்து வருகிறதுபோல அவ்வளவு ஒட்டுதலாக இருந்தது அவருடைய குரல்.

தாயம்மா அத்தையும் சூரி மாமாவும் வாசலில் தான் உட்கார்ந்து இருந்தார்கள். இரும்பு கேட் கொண்டியைத் திறந்தது சூரி மாமாவாகத்தான் இருக்கும். அந்தந்த வீட்டு மனிதர்களுடையதுபோல கதவுக் கொண்டிகளுக்கும் தனியாக ஒரு குரல் அமைந்துவிடுகிறது.

நான் ஆட்டோவில் இருந்து இறங்கியதைப் பார்த்ததும், ”ஏ… யப்பா, இது யாரு வந்திருக்கா!” என்று சூரி மாமா என் கையைப் பிடித்துக்கொண்டார்.

”நல்லா இருக்கீங்களா மாமா?” என்று கேட்கும்போதே தாயம்மா அத்தை சிரித்துக்கொண்டே வந்தாள். ”வா சுந்தரம்” என்றாள். அவ்வளவுதான்

சொன்னாள். அதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம் என்றுதான் எனக்கும் இருந்தது.

அத்தை வந்து என்னுடைய கைகளைப் பிடித்துக்கொண்டாள். லேசாக இறுக்கிவிட்டு மறுபடியும் அப்படியே வைத்துக்கொண்டாள். எனக்கு தனுக்கோடி சித்தப்பாவையும் அவர் குடும்பத்தையும் பஸ் ஏற்றிவிட்டுத் திரும்பின இரவும் அந்த டியூப் லைட் சிமிட்டலும் ஞாபகம் வந்தது. அத்தையின் அழுகையும் ‘எப்படிப் போனாலும் வீடு வந்துவிடும்’ என்கிற குரலும் வந்தது.

”டீச்சர் நல்லா இருக்கீங்களா? நான் செம்ப கம்லா. ஞாவகம் இருக்கா?” – என் தோள் பைகளோடு ஆட்டோக்காரர் சிரித்தார்.

தாயம்மா அத்தை அவரிடம் இருந்து ஒரு பையை வாங்கிக்கொண்டாள். ”நல்லா இரு அய்யா” என்றாள்.

”பெட்டியை என்கிட்டே கொடும்யா” – சூரி மாமா என் பக்கம் கையை நீட்டினார்.

இருக்கட்டும் என்று படி ஏறினேன். எங்கேயோ மருதாணிச் செடி இருக்க வேண்டும். வாசனை அடித்தது. முதல் படியின் நடுவில் பதித்திருந்த சங்கு கால் பாதத்தில் பட்டது. செருப்பைக் கழற்றிக்கொள்வதற்காக சுவரைப் பிடித்துக்கொண்டு காலை உயர்த்தின சமயம், பச்சை நிறச் சுவரில் அடிக்கப்பட்டிருந்த சிவப்புப் பட்டியில் இருந்த பெயின்ட் கொப்புளத்தை ஏற்கெனவே தொட்டிருப்பதை உணர முடிந்தது.

வாசல் தாண்டியதும் உள்ள முன் அறையில் வெளிச்சம் சாய்வாக விழுந்து நடை வரை வந்தது. தரையில் ஒரு சதுரங்கப் பலகையும் காய்களும் அதற்கு முந்தைய விளையாட்டு நகர்வுகளுடன் இருந்தன.

நான் அதைப் பார்த்துக்கொண்டே, ”ரெண்டு பேரும் செஸ் விளையாடிட்டு இருந்தீங்களா?” என்று கேட்டேன்.

”பொழுது போகணும் இல்லையா?” என்று இரண்டு பேருமே சொன்னார்கள். இரண்டு பேர் முகத்திலும் சிரிப்பே இல்லை.

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *