கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 11,374 
 
 

“கங்கிராட்ஸ்! நீங்க மறுபடி தந்தையாகப் போறீங்க!”

டாக்டர் சொன்னதைக் கேட்டு வசீகரன் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சி அவன் முகத்தில் பிரதிபலித்தது. பதில் பேசாமல் டாக்டர் கொடுத்த மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு மைதிலியுடன் வெளியே வந்தபோது அவள் சந்தோஷமாக இருக்கிறாளா இல்லையா என்று அவள் முகபாவத்திலிருந்து அவனால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவருக்கொருவர் ஏதும் பேசிக்கொள்ளாமல் ஆட்டோவைப் பிடித்து வீட்டை வந்தடைந்தபோது சுபத்ரா வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள். மைதிலி மாமியாருடன் ஒன்றும் பேசாமல் விருட்டென்று உள்ளே போய் விட்டாள். வசீகரன் தான் மாட்டிக் கொண்டான்.

“என்னடா சொன்னாங்க டாக்டர்?”

“என்னடா ஆச்சு? ரெண்டு பேரும் பதில் பேசாம நின்னா எப்படி?” சுபத்ராவின் குரலில் ஸ்ருதி ஏறியது.

“அவரை ஏன் போட்டு புடுங்குறீங்க? எல்லாம் நல்ல செய்தி தான். உங்களுக்கு இன்னொரு பேரப்புள்ளை பொறக்கப் போறான்!” என்றாள் மைதிலி.

“யார் கேட்டாங்க அதை?” சுபத்ரா சீறி விழுந்தாள். “எத்தனை நாளா சொல்லிட்டிருக்கேன். என்னால இன்னொரு கொழந்தையைப் பார்த்துக்க முடியாது முடியாதுன்னிட்டு. எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி வந்து சொல்லுவே? ஒனக்கு வெக்கமாயில்லே?”

“வெக்கம் இந்த வீட்டில யாருக்கு இல்லேன்னு இங்க யாராவது இந்த நிமிஷம் வந்து நின்னு இங்கே நடக்கிற பேச்சு வார்த்தையைக் கேட்டா சரியா சொல்லுவாங்க!” மைதிலி வெறுப்போடு கேலியாக வார்த்தைகளை வீசினாள்.
“என்னைச் சொல்லணும்னா நேரா சொல்லு. ஏன் சுத்தி வளைச்சுச் சொல்றே?” சுபத்ரா மைதிலி மீது பாய்ந்தாள்.

“எனக்கு என்ன பத்து கொழந்தைகளா இருக்கு? ஏற்கெனவே இருக்கிற நாலு வயசு பெண் கொழந்தைக்குத் துணையா இன்னொரு கொழந்தையைப் பெத்துக்க நா யார் கிட்ட பெர்மிஷன் கேக்கணும்? நீங்களே சொல்லுங்க?” இப்போது கேள்விப்பந்து வசீகரனை நோக்கி எறியப்பட்டது.

“பெரியவங்கன்னு மட்டு மரியாதையில்லாம எப்படி பேசறாப் பாருடா!”

ரெண்டு பேரும் அவனைப் பார்த்துப் பேச ஆரம்பிக்கவே இனியும் சும்மாயிருந்தால் சரியாக இருக்காது என்று வசீகரன் முதலில் அம்மாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினான்.

“இப்போ தானேம்மா கர்ப்பமாயிருக்கான்னே சொல்லியிருக்காங்க. மொதல்ல பிரசவம் நல்லபடியா ஆகணும். பிரசவத்துக்கு அம்மா வீடு போயிடுவா. அப்புறம் அவ கொழந்தையோட நம்ம வீட்டுக்கு வர்ற நேரத்துக்கு ஒரு நல்ல ஆளா போட்டு ஒனக்கு சிரமமில்லாம பார்த்துக்கலாம். அதுக்கெல்லாம் இன்னும் எவ்வளவோ ‘டைம்’ இருக்கேம்மா? நீ ஏன் இப்பவே டென்ஷன் ஆகுற?”

“அதெல்லாம் முடியாதுன்னா முடியாது தாண்டா!” சுபத்ரா கோபமாக சொல்லிவிட்டு செருப்பை மாட்டிக் கொண்டு விறுவிறுவென்று படியிறங்கி போய் விட்டாள். ரொம்ப கோபம் வந்தால் வீட்டுக்கருகே உள்ள பூங்காவில் போய் உட்கார்ந்து விடுவாள். இருட்டி வெகு நேரம் கழித்து தான் திரும்பி வருவாள்.

“ஏங்க! நாம நமக்குன்னு ரெண்டாவதா ஒரு கொழந்தையை பெத்துக்க உங்கம்மா கிட்டே இவ்வளவு கெஞ்சணுமா? எந்த வீட்டிலேங்க இப்படி நடக்குது?” ஆக்ரோஷமாக பேசிய மைதிலிக்குக் கோபத்தில் மூச்சிறைத்தது.

“மைதூ! நீ டென்ஷனாகாதே! அம்மா மனசில என்னவோ இந்த ரெண்டாவது கொழந்தைய வளர்க்கிறது பத்தி ஒரு அபிப்ராயம் விழுந்திடிச்சி. அதனால் தான் அப்படி பேசறாங்க. நாளாவட்டத்தில சரியாகிடும். ஒரு பேத்திக்குப் பிறகு ஒரு பேரன் பொறந்தா தன்னால தூக்கிக் கொஞ்ச ஆரம்பிச்சுற மாட்டாங்களா? நீ கொஞ்சம் பொறுமையா இரு!”

ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு வசீகரன் படும் பாடு மைதிலிக்கும் புரியாமலில்லை. இருந்தாலும் வாழ்க்கையில் நியாயம் என்று ஒன்று இருக்கிறதே?

எல்லாம் மைதிலி வேலைக்குப் போவதால் வரும் பிரச்சினைதான். முதல் கொழந்தை அபர்ணாவை இடுப்பை விட்டு இறக்காமல் செல்லமாக வளர்த்த அதே மாமியார் தான் இப்போது, ‘இன்னொரு கொழந்தை வேண்டாம்!’ என்று கண்டிஷன் போடுகிறாள். இத்தனைக்கும் சுபத்ராவும் முப்பது வருடங்கள் வேலைக்குப் போனவள் தான். சுபத்ரா சென்னையில், அவள் கணவன் கொல்கத்தாவில் என்றே காலம் ஓடி விட்டது. கொல்கத்தாவிலேயே ஒரு சாலை விபத்தில் அவள் கணவன் இறந்தபோது வசீகரனுக்கு பதிமூன்று வயதுதான். பிறகு அவனுக்கென்றே அவள் வாழ்வு அர்ப்பணமாகி விட்டதென்றே சொல்லலாம். அவள் ரிடையரான பின்பு தான் வசீகரனுக்கு திருமணமாயிற்று.

கலகலப்பான மருமகளாகத் தான் மைதிலி அந்த வீட்டில் அடியெடுத்து வைத்தாள். “நான் ரிடையராகி வீட்டில் தானே இருக்கேன்? நீ வேலைக்குப் போ! உனக்கு நல்ல பொழுது போக்காக இருக்கும்!” என்று மருமகளை உற்சாகப்படுத்தி வேலைக்குப் போகச் சொன்னவளும் சுபத்ரா தான். அபர்ணா பிறந்ததும் மூன்று வருடங்கள் சீராட்டி முழுதாக வளர்த்து போன வருடம் தான் அவள் எல்.கே.ஜி. போக ஆரம்பித்தாள். இதற்கிடையே சுபத்ராவின் அலுவலகத் தோழிகள் அடிக்கடி அவளைப் பார்க்க வருவதுண்டு. அவர்கள் ரிடையரான பின்பு வாழும் முறையையெல்லாம் கேள்விப்பட்டதும் அவள் மனதிலும் சலனம் ஏற்பட ஆரம்பித்தது.

ஹேமா சொன்னாள். “பிள்ளைக்குக் கல்யாணமானதும் மொதல்ல தனிக்குடித்தனம் வச்சுட்டேம்ப்பா. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில வருமே அது மாதிரி அப்பப்போ ஒருத்தர் வீட்டுக்கு இன்னொருத்தர் போய் “சௌக்கியமா?” ன்னு கேட்டுக்கறோம். எந்த சண்டை சச்சரவும் இல்லாம லைஃப் ஹாப்பியா போய்க்கிட்டிருக்கு. வேலைக்குப் போன போது தான் எங்கேயும் போக முடியல. நாங்க நெனைச்சா கேதார், பத்ரி இல்லேன்னா இந்த பக்கம் திருச்செந்தூர், கன்னியாகுமரின்னு ஆசைப்பட்ட எடத்துக்குப் போய்க்கிட்டிருக்கோம்1″

சுபத்ரா அசந்து போனாள். “அப்போ பேரக்குழந்தையை யார் பார்த்துக்கிறாங்க?”

“அவங்க கொழந்தையை வளர்க்கிறது அவங்க பொறுப்பு. இதில நாங்க செய்யுறதுக்கு என்ன இருக்கு?” ஹேமா அசராது பதில் சொன்னாள்.
சொர்ணலட்சுமியும் கணவனை இழந்தவள் தான். அவள் இன்னும் ஒரு படி மேலே போய் தன் பெண் பிள்ளைகளால் எந்தப் பிக்குப் பிடுங்கலும் வேண்டாமென்று தானே போய் முதியோர் இல்லத்தில் சேர்ந்து நிம்மதியாக சௌக்கியமாக இருக்கிறாளாம்.
சுபத்ரா மனம் சலனமுற்றது. ‘அப்போ நான் தான் ஏமாந்தவளா?’ என்று. பிள்ளையை நச்சரிக்கத் தொடங்கினாள். “எனக்கு வெளியூருக்கெல்லாம் போகணும். எல்லா இடமும் பார்க்கணும்னு ஆசையாயிருக்கு வசீ! பத்து நாள் லீவு போட்டுட்டு என்னை அழைச்சிக்கிட்டுப் போ!”

வசீகரனும், மைதிலியும் தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். அவர்களுக்கு லீவு கிடைப்பது குதிரை கொம்பு கிடைப்பது போல. அப்படியும் முடிந்தவரை அம்மாவை குருவாயூர், பெங்களுரு, மைசூர் என்று அழைத்துப் போகத்தான் செய்தான் வசீகரன். ஆனால் அதிலெல்லாம் அவள் த்ருப்தியடைந்தவளாகத் தெரியவில்லை. சொல்லத் தெரியாமல் மைதிலியை படுத்தத் தொடங்கினாள். அவளுக்கு ‘அலுவலகத்தில் ‘ஆடிட்டிங்’ வீட்டுக்கு வருவதற்கு லேட்டாகும்’ என்று சொன்னால் அன்று அபர்ணாவைத் தன்னால் பார்த்துக் கொள்ள முடியாது என்று முரண்டு பிடித்தாள். நினைத்தால் தன் ஒரே தம்பியைப் பார்க்க பெங்களூரு போக வேண்டும் என்று கிளம்ப ஆரம்பித்தாள். நிலைமை இவ்வாறிருக்க, முதல் குழந்தைக்கு நாலு வயதாகி விட்டதே என்று அடுத்த குழந்தையைப் பற்றி மைதிலி பேச ஆரம்பிக்க, ‘ஏற்கெனவே இவர்களிடம் மாட்டிகொண்டு என்னால் என் தோழிகளைப்போல வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இதில் அடுத்த குழந்தை வேறயா?’ என்று சுபத்ரா கொதித்துப் போனாள். அதில் ஆரம்பித்தது இருவருக்கும் மனக்கசப்பு.

அடுத்த நாள் மைதிலி அலுவலகம் விட்டு வந்தபோது அவளுக்காக ஒரு முழு பப்பாளிப்பழம் காத்திருந்தது.

“இப்பத்தான் சொர்ணலட்சுமி ஃபோன் பண்ணினா. நாப்பத்தஞ்சு நாள் தானே ஆகுது? இதைச் சாப்பிட்டா ஈஸியா கரைஞ்சு போயிடும்னு சொன்னா. ” என்று சுபத்ரா சர்வசாதாரணமாக சொன்னபோது மைதிலி காளி அவதாரம் எடுத்தாள்.

“எனக்கு இன்னொரு கொழந்தை கூடாதுன்னு முடிவு செய்ய இவங்கள்ளாம் யாரு?” என்று ஆத்திரத்தோடு கத்தினாள். அழுதாள். மொத்தத்தில் அலுவலகம் இருபத்திநாலுமணி நேரமும் இருந்தால் நன்றாகயிருக்கும் என்ற நிலைமைக்கு வந்து விட்டான் வசீகரன். வீட்டுக்கு வரவே பயமாக இருந்தது. யார் பக்கமும் பேச முடியவில்லை. ‘தன்னால் ஒரு நிமிடம் கூட இந்த வீட்டில் இருக்க முடியாது. உடனே ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடு’ என்று சுபத்ரா ஆரம்பித்தாள்.

“இன்னொரு குழந்தை இப்போதே வீட்டுக்கு வந்து விட்டதா என்ன? இவள் பிரசவத்திற்குப் போகிற வரை பொறுமையாக இரு. பிறகு ஏதாவது யோசிக்கலாம்.” என்று இடைக்கால நிவாரணமாக ஒரு யோசனையைக் கூறி தற்காலிகமாக அம்மாவை சமாதானப்படுத்தி வைத்தான். ஆனால் மாமியாருக்கும் மருமகளுக்கும் பேச்சு வார்த்தை முறிந்தது, முறிந்தது தான்.

மைதிலி சீக்கிரமே பிரசவத்திற்காக ஹைதாராபாதிற்கு பிறந்த வீட்டுக்குச் சென்று விட்டாள். இரண்டாவது குழந்தையை கண்ணால் கூட பார்க்க மாட்டேனென்று பிடிவாதம் பிடித்து குழந்தையைத் தொட்டிலில் போடும் வைபவத்திற்குக் கூட சுபத்ரா செல்லவில்லை.

மூன்று மாத ஆண் குழந்தையோடு மைதிலி திரும்ப தன் வீட்டுக்கு வந்த போது சுபத்ரா மூட்டை முடிச்சுகளை கட்டி வைத்து முதியோர் இல்லம் செல்லத் தயராகிக் கொண்டிருந்தாள். பேரனை ஏறெடுத்தும் பார்க்க வில்லை.

சுபத்ராவின் ஒரே தம்பி சுகுமார் ஆறு மாதமாக ஒரு ‘ப்ராஜெக்ட்’ டுக்காக அமெரிக்கா சென்றிருந்தவன் மருமானுக்கு ரெண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறதென்று தொலைபேசி மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஆவலுடன் அக்காவையும் குழந்தையையும் பார்க்க சென்னைக்கு ஓடி வந்தான்.

விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு வரும்போதே வசீகரன் மாமாவிடம் வீட்டு நிலைமையை அழாக் குறையாக சொல்லிக்கொண்டே வந்தான்.

“நீ பேசாம இரு. அக்கா கிட்டே நான் பேசறேன்!” என்றான் சுகுமார்.

சுகுமாரைப் பார்த்ததும் தனக்குப் பக்க பலமாக தன் சகோதரன் வந்து விட்டான் என்று சுபத்ரா அகமகிழ்ந்து போனாள்.

“வாடா! இந்த வீட்டில என் நெலைமையைப் பாருடா தம்பி! கொழந்தைகளைப் பார்த்துக்கிற வேலைக்காரி மாதிரி எப்படி என்னை வச்சிட்டிருக்காங்க பாருடா!” என்று சுகுமாரின் கைகளை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்.
பேரக் குழந்தையைத் தூக்கி மடியில் போட்டுக் கொஞ்சிய சுகுமார் அக்காவையே உற்றுப் பார்த்தான்.

“அக்கா! ஒனக்கு நெனைவிருக்கா? மாமா வெளியூரிலிருந்ததால நீ நம்ம வீட்டிலேயே தானே தங்கியிருந்தே? வசீ சின்ன வயசில ‘ப்ரைமரி’ காம்ப்ளெக்ஸ்’ ஸால அவதிப்பட்டு ராத்திரியெல்லாம் தூங்கவே மாட்டானே? கண் முழிச்சா உனக்கு உடம்புக்கு ஆகாது மறுநாள் நீ ஆஃபீஸ§க்குப் போகணும்னு அம்மா தானே ராவெல்லாம் தூளியாட்டி அவனைப் பார்த்துப்பாங்க?”

“மறக்க முடியுமாடா? அம்மா இல்லேன்னா வசீயை நா எப்படி வளர்த்திருக்க முடியும்?”

“அப்போ அம்மாவுக்கு உன் நன்றியை எப்படி காட்டுவே?” என்றான் சுகுமார் நிதானமாக.

“அம்மாவுக்கு என் தோலை செருப்பா தெச்சுப் போடுவேண்டா! ஆனா அம்மா தான் போயிட்டாளே?” என்றாள் சுபத்ரா என்

“அம்மா உனக்கு செஞ்ச மாதிரி நீ ஒன் பேரப்புள்ளைகளைப் பார்த்துக்கிறது தான் அம்மாவுக்கு நீ செய்யக் கூடிய நன்றி அக்கா. அம்மா உயிரோட இருந்தாலும் உன் கிட்ட இதை தான் எதிர்பார்த்திருப்பாங்க. வழிவழியா வர்ற நியாயம் இதுதான் அக்கா புரிஞ்சுக்கோ.”

“அதெல்லாம் என்னால முடியாதுடா!” என்றாள் சுபத்ரா ஆக்ரோஷமாக. “அம்மா என்ன? என்னை மாதிரி ஆஃபீஸ§க்குப் போய் கஷ்டப்பட்டாங்களா? வீட்டோட சுகமாகத்தானே இருந்தாங்க?”

“சரி! இப்போ ஒனக்கு ஒரு கஷ்டம்னா நீ யார் கிட்ட சொல்றே?”

“கூடப்பொறந்த பொறப்பு உன் கிட்டத்தானேடா சொல்லுவேன்? எனக்கு வேற யாரு இருக்காங்க ஒன்னை விட்டா?” சுபத்ரா தம்பியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“வசீக்கு தான் அப்படி ஒரு கொடுப்பினை இல்லாம போச்சு. இப்ப அபர்ணாவுக்காவது ஒரு கூடப் பொறந்த தம்பி இருக்கான்னு நெனைக்கிறப்பவே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா அக்கா?”

“கொழந்தையப் பார்த்துக்கிறதுக்கு வசீ ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கான். அது வரை மைதிலி லீவில தான் இருப்பா. ஒனக்குத் தொந்தரவேயிருக்காது. கடவுள் ஒனக்கு நல்ல குடும்பத்தை கொடுத்திருக்கான் அக்கா. இதில சந்தோஷமாயிருக்க வேண்டியது மட்டுந்தான் ஒன்னோட வேலை, பொறுப்பு அக்கா!”

“பாட்டி! தம்பிப் பாப்பா எப்படி சிரிக்கிறான் பாரேன்!” என்று அபர்ணா பாட்டியின் புடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்தாள்.

“நா கொழந்தையா இருந்தப்ப நீ என்னை இப்படித்தானே கொஞ்சியிருப்பே அக்கா?” என்று அபர்ணா தன் அருமைத் தம்பியைக் கொஞ்சுவதை ஆசையோடு பார்த்தவாறு தன்னிடம் பேசும் சுகுமாரை பார்த்தபடியே சுபத்ரா யோசிக்க ஆரம்பித்தாள். அவள் மடியில் சுகுமார் படுக்க வைத்த பேரக்குழந்தையை தன்னையுமறியாமல் அவள் கரங்கள் வளைத்து அணைத்துக் கொண்டன.

– லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *