ஒடுக்கப்பட்ட நொண்டி சாமி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 14,347 
 
 

வடக்கு தோப்பில் நேற்று தேங்காய் வெட்டு நடந்து தேங்காய்கள் சிதறி கிடந்தன. தேங்காய்களை ஒன்றுசேர்த்து கூடையில் அள்ளி கொட்டத்துக்கு முன் இருக்கும் களத்துமேட்டில் குவித்துக்கொண்டிருக்கின்றனர் ‘மலர்கொடி’ உட்பட ஐந்து பெண்கள். அதை நல்லதும் கெட்டதுமாக தரம் பிரித்துக்கொண்டிருக்கிறான் ‘கிறுக்கா என்ற கிட்ணா’. இவனுக்கு கிறுக்கா என்ற பட்டப்பெயர் வைத்தது கொட்டத்தில் அமர்ந்திருக்கும் இவர்களின் முதலாளி ‘மீனாள்’. கிட்ணா சிறுவயதில் இருந்தே இவர்களின் தோப்பில் ஊழியம் பார்பவன். மீனாளின் கணவன் ‘மட்டியூரான்’ வெளியூரில் படிக்கும் கிட்ணாவின் மகன் பெயரில் இரண்டு குழி பிஞ்சை எழுதி வைத்துள்ளார். மட்டியூரான் கம்யூனிஸ்டு கொள்கையில் நம்பிக்கை உள்ளவர். மட்டியூரான் இறந்த பின்னும் கிட்ணா இவர்களின் தோப்பிலேயே ஊழியம் செய்துக்கொண்டிருக்கிறான். கொட்டத்தில் கயிற்று கட்டிலில் அமர்ந்துகொண்டு கட்டை அருவாமனையில் மாறு கிழிக்கிறாள், மீனாள். அவள் அருகில் பாக்கு இடிப்பதற்கு சிறிய உரலும் உள்ளது. மதிய உணவு முடிந்தவுடன் சிறிய உரையாடலுக்கு பின்னர் இவர்கள் அவரவர் வேலையைத் தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கின்றனர். அந்த உரையாடலில் மலர்க்கொடி கலந்துக்கொள்ளவில்லை. சிறிய தூக்கம் போட்டாள். மதிய உணவு முடிந்து ஒரு மணி நேரத்திற்கும் சற்று அதிகம் ஆகியிருக்கும். இவர்களுக்கு மணி என்னவென்று? தெரியாது. அதை அறிவிக்கும் விதமாகவோ? என்னவோ? களத்தில் இருந்து ஏழெட்டு வயல்களுக்கும், மாந்தோப்புகளுக்கும் அப்பால் இருக்கும் மஞ்சநாயக்கன்பட்டியைத் தாண்டிய பேருந்தின் ஓட்டுனர் பேருந்தின் ஒலிப்பெருக்கிப் பொத்தானை அழுத்தினார். அதனால் எழும்பிய ஒலி அவ்விடத்தைச் சுற்றியுள்ள மஞ்சநாயக்கன்பட்டி, பாப்பாபட்டி, ஏரக்காப்பட்டி முதலிய ஊர்களுக்கும் அம்பட்டே வீட்டு களம், பெரிய சாமியாடி களம் ஆகிய தோப்புகளுக்கும் கேட்டிருக்கும். அந்த ஒலி ஆவிச்சிப்பட்டிக்கும், மஞ்சநாயக்கன்பட்டிக்கும் இடையில் கல்லுக்குழிக்குப் பின்புறம் அமைந்துள்ள இந்த மட்டியூரான் களத்திலும் கேட்டது. மணி மூன்றரை. இவர்கள் யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை மலர்கொடியை தவிர. பேருந்தின் ஒலி கேட்ட சில நொடிகளில் மீனாளின் முன் சென்றாள் மலர்கொடி.

“ஆத்தா நா பொறப்பட்றேன்” என்றாள் மலர்கொடி.

மீனாள் வயோதிகத்தால் சிறிய முனகலுடன் கட்டிலில் இருந்து எழுந்து கொட்டத்து சுவரை ஒட்டியிருக்கும் மிளகாய் செடிகளின் மீது வெற்றிலை எச்சியை துப்பி மிளாய்களுக்கு நிறம் சேர்த்துவிட்டு திரும்பினாள். அந்நேரத்தில் கிட்ணா தலப்பாக்கட்டை அவிழ்த்துவிட்டு அடுப்பு கல்லின் மீது அமர்ந்து பீடியை பற்றவைத்து ஊதினான். திரும்பிய வேகத்தில் இதை பார்த்த மீனாள் “கிறுக்கா… கிறுக்கா… அடுப்பு மேல உக்காந்து பீடி ஊதுறியான் பாரு. கிறுக்கா…கிறுக்கா” என்று கிட்ணாவை நோக்கி கையை நீட்டி திட்டிக்கொண்டே கட்டிலில் வந்து அமர்ந்தாள். கிட்ணா மெதுவாக எழுந்து பக்கத்து கல்லில் அமர்ந்து ஊதினான்.

மீனாள் “இந்த காரு காரனுக்கு காசு கீசு குடுத்துரிக்கியாடி? நெதமு பாம் பாம்னு அடிச்சிராய்ன்” என்று பேசிக்கொண்டே மடியில் இருந்து சுருக்கு பையை எடுக்கிறாள். சுருக்கு பையிலிருந்து காசை எடுக்கிறாள். இரண்டு கைகளிலும் கூடையைப் பிடித்திருந்த மலர்க்கொடியின் வலது கையை பற்றி கூலியைத் திணித்து அவளை தன் பக்கம் சிறிது இழுக்கிறாள், மீனாள்.

மீனாள் “ஒ புருசன பத்தி ஏதூம் தாக்க கெடச்சுசாடி”

பார்பவர்களுக்கு மிகவும் அமைதியாகத் தோற்றமளிக்கிற மலர்க்கொடி வருத்ததுடன் “இல்லத்தா…” என்றாள்.

மீனாளின் பிடியிலிருந்து தன் கையை மெதுவாக உருவிக்கொண்டு மூன்றடி உயரமே இருக்கும் கொட்டத்து சுவற்றின் கீழே கூடையைச் சாய்த்து வைக்கிறாள், மலர்க்கொடி. தோப்பில் தேங்காய்களை அள்ளிக்கொண்டு இருக்கும் ‘பாண்டியம்மாளை’ மலர்க்கொடி “பாண்டிக்கா…” என அடித்தொண்டையில் இருந்து அழைக்கிறாள். இப்பொழுதும் இவளின் குரல் சாந்தமாகவே இருக்கிறது. பாண்டியம்மாள் இவளின் பக்கத்து வீடு. இருவரும் நெருங்கியத் தோழிகள். தூரத்து உறவும் கூட. மலர்க்கொடி சரளமாகப் பேசும் மூவரில் பாண்டியம்மாள் ஒருத்தி. மற்றவர்கள் தன் ஐந்து வயது மகனும், மீனாளும் ஆவர். மலர்க்கொடியின் கணவன் காணாமல் போனதிலிருந்து பாண்டியம்மாள் இவளுக்கு பெருந்துனை. மலர்க்கொடியின் கணவன் ‘கொருக்கி’.
‘சின்னையாவின்’ மகன் ‘சுந்தரத்தின்’ அழைப்பின் பேரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்தமானுக்கு பிழைப்பு தேடி சென்றவனைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. மலர்க்கொடி வெகுளியின் உச்சம் என்றால், அவளின் கணவன் இவளுக்கும் மேலே. மனித உருவில் இருக்கும் கொடிய ராஜசங்களைக் கூட நம்பும் மனசு. இருவரும் இணைந்து மிகவும் அமைதியான மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்தனர். அந்த அமைதியைக் கலைப்பதற்காகவே அவளின் வயிற்றில் சிசு உண்டானது. பச்சிளங் குழந்தையின் இரைச்சல் அமைதியை விட அழகானது அல்லவா? அந்த அழகை கொருக்கியால் ரசிக்க முடியவில்லை. தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் எதிர்காலத்திற்கு இங்கு கிடைக்கும் விவசாய கூலி போதாது என அவனுக்கு தோன்றியது. வயிற்றில் இருக்கும் அவனையோ அல்லது அவளையோ ஆசையாக, செல்லமாக எல்லாவற்றிக்கும் மேலாக நல்ல வசதியாக வளர்க்க வேண்டுமென்ற விருப்பத்தில் பிரசவத்திற்கு முன்னாடியே சென்றான். அந்த அப்பிராணிகளுக்கு பிறந்தது ஆண் குழந்தை. கொருக்கி காணாமல் போன தகவல் பிறவியெடுப்புக்கு சுந்தரம் வந்த போதுதான் மலர்க்கொடிக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்தது. வெளித்தோற்றத்தில் மட்டுமே சோகமாகக் காணப்படும் மலர்க்கொடி உண்மையிலேயே வாடிவிட்டாள். சிறு வயதில் மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு செல்லும் போது தன் கண்ணெதிரிலேயே தாய் தந்தையை பறிகொடுத்தவள். அப்போது மலர்க்கொடிக்கு ஆறு வயது. பின்னர் உறவினர்களின் அன்பில்லா அரவணைப்பில் வளர்ந்தவளுக்கு கொருக்கி நல்ல துணையாகக் கிடைத்தான். அவனும் இல்லா இவ்வூரில் இப்போது மலர்க்கொடிக்கு இருக்கும் ஒரே ஆதரவு, உலகம், உறவு எல்லாமே அவளின் மகன் ‘மலரவன்’ மட்டுமே.
தேங்காய் அள்ளிக்கொண்டு இருந்த பாண்டியம்மாள் இவளின் குரல் கேட்டு நிமிர்ந்து சற்று கோவத்துடன் கூடிய அக்கறையுடன் “நீ இன்னூ போலயாடி?…வெரசா போடி” என்கிறாள்.

“ந்தா பொறப்ட்டே. ஏங் கூடயையு ஏனத்தையு எடுத்து வந்துருக்கா…” என குரல் கொடுத்துவிட்டு வேகமாகத் திரும்பி நடக்கிறாள்.
பாண்டியம்மாள் தனக்குள்ளே “புதுசா சொல்ற மாதிரி சொல்றா…நெதமு நாந்தானே எடுத்து போறேன்…” என இடுப்பைப் பிடித்து கொண்டே மெதுவாகக் குனிகிறாள்.

வாழைத் தோப்பைத் தாண்டி ஆற்றுக்குள் இறங்கி தார் சாலையில் ஏறுகிறாள், மலர்க்கொடி. “ஸ்கூல் வேனு வந்திருக்குமோ? இல்லயே இன்னூ டயோ இருக்கே… ஒரு வேல வேகமா வந்து இறக்கி விட்ருக்குமோ? மவே காத்துட்ருக்குமோ?” என தன்னையும் மீறி எண்ணங்கள் மனதினுள் ஓட ஓடாத குறையாக நடக்கிறாள். ஆவிச்சிப்பட்டியில் இருந்து டவுன் பள்ளிக்கு இருவர் மட்டுமே செல்கின்றனர். அதனால் அந்த தனியார் பள்ளி வாகனம் ஊருக்குள் வராது. ஆவிச்சிப்பட்டி விளக்கிலேயே இறக்கிவிட்டு, அப்படியே கோட்டையூர் சென்றுவிடும். சிறிது நேரம் கூட தன் மகன் காத்துக்கொண்டிருக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பாள். ஆனாலும் சில நாட்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு போக முடியாமல் ஆகிவிடும். தாமதமாகும் நாட்களில் மகனை அளவுக்கு அதிகமாகக் கொஞ்சுவாள். மழைக்காலங்களில் இன்னும் முன்கூட்டியே குடையுடன் சென்றுவிடுவாள். ஒருமுறை மழையில் நனைந்துக்கொண்டே தனக்காக காத்துக்கொண்டிருந்த மலரவனைக் கட்டிப்பிடித்து அழுதேவிட்டாள். இரண்டு மைல் தூரம் செல்ல வேண்டும். வழிநெடுகிலும் பொட்டல் காடுதான். சில மரங்கள் மட்டுமே இருக்கின்றன. அவைகளும் சீமக்கருவையும், கிளுவை மரங்களும்தான். எந்த குடியிருப்புகளும் இல்லை. ‘நொண்டி சாமி’ கோவில் மட்டுமே இந்த இரண்டு மைல் தொலைவுகளுக்கு இடையில் உள்ளது.

நொண்டி சாமி கோவிலுக்கு காவி வண்ணம் பூசிய சுற்றுசுவரோ, கான்கிரீட் தரைத்தளமோ, மேல் தளமோ கிடையாது. சுற்றிலும் ஆற்று மணல் பரப்பப்பட்டு அதன் நடுவில் மூன்றடி உயர சிமெண்ட் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மூன்று படிக்கட்டுகள் உள்ள அந்த மேடையில்தான் நொண்டி சாமி நிற்கிறது. சாமி இரவில் காவலுக்கு செல்ல மதில்கள் தடையாக இருக்கும் என்பது அவ்வூர் மக்களின் எண்ணம். அரசு நிர்வாகம் கோவில் கட்டி தருவதாகக் கூறியும் பொட்டல் தெரு மக்கள் ஒருசேர மறுத்துவிட்டனர். மேடைக்கு பின்புறம் பொங்கல் வைப்பதற்கு மட்டும் சிறிய நீளம் கொண்ட கீற்று கொட்டகைப் போடப்பட்டுள்ளது. மேடையின் இடதுபுறத்தில் சற்று தள்ளி பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. அம்மரத்தின் நிழல் சிறிது இந்த நொண்டியின் மேலும் விழுகிறது. வலதுகை அருவாளை மேலே பிடித்தப்படியும், இடதுகையில் சாட்டையும் உள்ளது. அதன் கண்கள் ஆக்ரோஷமாகவும் இருக்கிறது. மேல் சட்டை இல்லாமல் இடுப்பில் ஒரு துண்டும், கட்டை செருப்பும் என நொண்டி சாமி காட்சித்தருகிறான். ஆவிச்சிப்பட்டியில் நொண்டி சாமியின் இந்த காட்சியைத் தரிசிப்பவர்கள் பொட்டல் தெரு மக்கள் மட்டுமே. மேலத்தெரு காரர்களோ மற்ற குடியிருப்பு மக்களோ நொண்டி சாமி கோவிலின் வாசலில் கூட நடக்கமாட்டார்கள். சாலையின் மறுபுறம் இறங்கித்தான் நடந்து செல்வார்கள். இவர்கள் ஊரின் மற்றொரு பிரதான தெய்வமான ’செகுட்டைய்யனாரை’ வணங்குபர்கள். செகுட்டைய்யனாரை வணங்குபர்கள் நொண்டி சாமியை வழிபடமாட்டார்கள். நொண்டி சாமியை வணங்குபவர்கள் செகுட்டய்யனாரின் கோவிலுக்குள் செல்லமாட்டார்கள். இதற்கு காரணமாக இவ்வூர் மக்கள் “ரெண்டு சாமிக்கூ தீரா பக இருக்குப்பூ… இந்த சாமிய கும்பிடுறவுக அத கும்பிட்டாளோ…அந்த சாமிய கும்பிடுறவுக இத கும்பிட்டாளோ சாமி குத்தோ ஆயிரு…” என்கிறார்கள். இந்த தீரா பகைக்கு வேறொரு வாய்மொழி கதையும் கூறுகிறார்கள்.

முன்னொரு காலத்தில் செகுட்டய்யனாரின் தலைமையிலும் நொண்டியின் தலைமையிலும் இரு கூட்டமாக வேட்டைக்கு சென்றார்களாம். இருவரும் ஒன்றாகத்தான் சென்றார்கள். காட்டுக்குள் சென்று வெகு நேரமாகியும் எதுவும் அகப்படவில்லை. எல்லோரும் கடும் பசிக்கு ஆளாகிவிட்டார்கள். சிலர் பசியினால் சோர்ந்து படுத்துவிட்டனர். இரு தலைவர்களும் ஒரு முடிவெடுத்தார்கள், “ரெண்டு கூட்டமூ வேற வேற தெசையில போவோம். இப்படி ரொம்ப கூட்டமா இருந்தா அதுகளுக்கு எப்படியும் தெரிஞ்சுடும்” என்று பிரிந்து சென்றார்கள். பிரிந்து சென்ற சில நேரத்தில் நொண்டியின் கூட்டத்தில் இருந்த சிலர் மயக்கமடைந்துவிட்டனர். வெவ்வேறு திசைகளுக்கு சென்றும் முயலோ, மானோ எதுவும் சிக்கவில்லையாம். என்ன செய்வது என்று தெரியாத நேரத்தில் பொறியில் ஒரு மான் சிக்கிக்கொண்டது. அந்த பொறி நொண்டி வைத்த பொறி. வெகுத்தொலைவில் இருந்த செகுட்டயனாருக்கு எதுவும் சிக்கவில்லை. அவர்கள் புதருக்குள் மறைந்து வெகு நேரமாகக் காத்துக்கொண்டிருந்தனர். அக்கூட்டத்தில் சிலர் பசியை அணைக்க இலைத்தழைகளைத் தின்ன தொடங்கியிருந்தனர். எங்கிருந்தோ வந்த கருகிய வாடை செகுட்டய்யனாரின் கூட்டத்துக்கு எட்டியது. அவர்கள் அதை பின்தொடரும் போது அங்கு நொண்டியின் கூட்டத்தினர் மான் கறியை வாட்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இவர்கள் வந்த மகிழ்ச்சியில் அவர்களுக்காக எடுத்துவைத்திருந்த பங்கை எடுத்து செகுட்டய்யனார் முன் நீட்டினார்,நொண்டி. ஆனால் செகுட்டய்யனார் கோவத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார்.

“ஏங் கூட்டோ பசியால சாக போறாங்ஙே… நீ இங்க உக்காந்து ருசியா சாப்புடுறியா?” என நொண்டி கொடுத்ததைத் தட்டிவிட்டார் செகுட்டய்யனார்.

நொண்டி “கோவிக்காம கேளு செகுடு… எல்லாருமே பசியில இருந்தோ… ஒனக்கு தாக்க சொல்றதுக்கு கூட தெம்பில்ல. அதே கொஞ்சோ சாப்ட்டு ஆள் அனுப்பலாம்னு பாத்தே…”

செகுட்டய்யனார் அதை புரிந்துக்கொள்ளமால் “ஏ…சாக்கு போக்கு சொல்லாத…இனிமே ஏங் கூட்டோ ஒன்ன கையெடுத்து கும்பிடாது. நீ இருக்குற பக்கமே வராதுரா…” என வாக்கு சொல்லிட்டு திரும்பி வேகமாக வந்துருச்சாம். செகுட்டய்யனார் கோவமாக சென்று இப்போது அவரின் கோவில் இருக்கும் அந்த இடத்தில் கல்லாகிட்டாராம். நொண்டி கவலையாக அப்படியே இருந்தார். சிறிது நேரத்தில் அவரும் கல்லாகிட்டாராம். அந்த இடத்தில்தான் இப்போது நொண்டி சாமி கோவில் இருக்கிறது. நொண்டியின் கூட்டத்தில் சென்றவர்களின் வழித்தோன்றல்கள் பொட்டல் தெரு மக்களாகவும், மற்றவர்கள் செகுட்டய்யனார் கூட்டத்தின் வழித்தோன்றல்களாகவும் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

ஆவிச்சிப்பட்டி விளக்கிற்கு இன்னும் சிறிது தூரம்தான். ஆனாலும் மலர்க்கொடி நடையின் வேகம் குறையவில்லை. தூரத்தில் ‘வேலு’ தன் மகளுடன் டி.வி.எஸ். எக்ஸலில் வருகிறான். அவன் மகள் ‘முத்தும்’ மலரவனும் ஒரே வகுப்புதான். முத்து வண்டியின் கைபிடிகளுக்கு நடுவில் கி.மீ கணிப்பானுக்கு மேலே இருக்கும் கம்பியை ஒரு கையில் பிடித்தவாறு மற்றொரு கையில் எதையோ வைத்து கொறித்துக்கொண்டே வருகிறாள். இவர்களை பார்த்தவுடன் மலரின் முகத்தில் பதற்றம் அதிகரிக்கிறது. மலரைப் பார்த்தவுடன் முத்து முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள். வேலு அருகில் வந்தவுடன்
மலர்கொடி “அண்ணே ஏம்புள்ள நிக்கிதா”

வேலு பதில் சொல்லுவதற்கு முன்பு முத்து இடது கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு “அத்த…அவே என்னய அடுச்சுப்புட்டே…” என்று மலரிடம் மலரவனைப் பற்றி புகார் அளிக்கிறாள்.

வேலு அவளை சமாதானம் செய்யும் விதத்தில் அவள் கையில் ஆறுதலாக கைவைத்து “அவே அம்ம வீட்டுக்கு வரட்டும்டா…கட்டி வச்சுப்புடுவோ…” என்கிறார்.

முத்து “சரி…” என்கிறாள் அலுப்பாக.

வேலு மலர்கொடியைப் பார்த்து “ஆமாத்தா… நா ‘வாடா வண்டில போலாம்னு’ கூப்டே… அவே வலக்கம் போல ‘வல்லேன்டே’. நீ வெரசா போ” என்கிறார் வேலு.

இந்த பேச்சு நடக்கும் போது மலரின் கால்கள் நிலையாக நிற்கவில்லை. ஓட துடித்தது. அவள் “சரிண்ணே” என்று கூறிவிட்டு நடக்கிறாள். வேலுவின் வண்டி சிறிய உறுமலுடன் நகர்கிறது. முத்து மீண்டும் கொறிக்கிறாள்.

விளக்கிலிருந்து ஆவிச்சிப்பட்டிக்கு வளையும் இடத்தில் கரந்தமலையில் இருந்து வரும் ஓடையின் மேலே பெரிய பாலம் ஒன்றை அரசு கட்டியுள்ளது. அந்த பாலத்தில் அங்குமிங்குமாக சிறிது நேரம் அலைந்துவிட்டு ஓரமாக அமர்கிறான் மலரவன். மாநிறம், சிறிது நீளமான மூக்கு, அழகிய உதடுகள் என அவன் அம்மாவின் முகத்தின் சாயல் அப்படியே உள்ளது மலரவனுக்கு. உயரம் ஒன்றுதான் குறை. “அம்மா வர நேரமாகும் போல” என நினைத்துக்கொண்டு பையிலிருந்த சாப்பாட்டு டப்பாவை எடுத்து ஓடையில் கழுவ கீழே செல்கிறான். கழுவிவிட்டு அவன் மேலே ஏறுவதற்கும், அவனின் அம்மா வருவதற்கு சரியாக இருந்தது. இரு மலர்களும் சந்தித்து ஒருவரையொருவர் தழுவிக்கொண்டது. அந்த அன்பில் கொடியின் ஆதிக்கம் அதிகம். மலரை சுற்றிலும் கொடி படர்ந்து காணப்பட்டது. இருவரும் ஒருவழியாகப் பிரிந்து ஊரைப்பார்த்து செல்ல தொடங்குகின்றனர். மலர்கொடியின் இடது இடுப்பில் மலரவனும், வலது தோளில் புத்தகப்பையும் உள்ளது. எடையின் காரணமாக வலது பக்கம் சிறிது சாய்ந்தவாறு செல்கிறாள்.

கொடி “ஓடைக்குள்ள போகாத ராசா… டிபன் பாக்ஸ அம்மா கலுவிக்கிறே. பூச்சி பட்ட கெடக்கூ…”

மலர் “சரி…”

கொடி மட்டியான் தோட்டத்தில் மீனாவின் அனுமதியுடன் உருவிவந்த கடலயை மடியில் இருந்து எடுத்து மலரிடம் கொடுக்கிறாள். அதை வாங்கி கூட்டை உடைத்து இரண்டில் ஒன்றை தான் தின்றுவிட்டு மற்றொன்றை கொடி “வேண்டா…” என சொன்னாலும் வாய்க்குள் தினிக்கிறான். மலர்கொடியை வம்பிழுப்பதில் அவனுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. கடலையைத் தின்றுகொண்டும், பேசிபடியும் இருவரும் வெகுதூரம் சென்றுவிட்டனர். மாலை நேரம் தொடக்கத்தில் உள்ளது என்றாலும் வானம் சிறிது கருக்கத் தொடங்கியதுடன் குளிர்ந்த மெல்லிய காற்றும் வீசத்தொடங்கியது. மலர் ஆனந்தம் அடைந்தான். கொடிக்கும் இதமாக இருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் சிறிது பயம் “ஊருக்குள்ள போறதுக்குள்ள மல வந்துமோ”னு. வாடை காற்றை சுவாசித்தவுடன் மழை கண்டிப்பாக வரும் என்று அவளுக்கு புரிந்தது. அவளின் பயமெல்லாம் தன் மகனின் உடல் நிலையைப் பற்றிதான். சென்ற புரட்டாசி மாதம் பெய்த மழையில் மலரவன் நனைந்து இரண்டு வாரம் படுக்கையில் இருந்தான். அவனுக்கு சிறிது கூட மழை நீர் சேராது. அவள் நடையில் வேகம் தெரிந்தது. அவர்கள் முன்னேற மழையின் அறிகுறியும் முன்னேறியது. காற்று தீவிரமாக வீசியது. கிளுவை மரங்களுக்குள் காற்று புகுந்து ஓசை எழுப்பியது. செடிகள் காற்றுக்கு வளைந்து மண்ணைத் தொட்டது. எங்கிருந்தோ வந்த தூசி மலரவனின் கண்ணில் விழுந்து “ம்மா…” என்கிறான். அவள் நடையின் வேகத்தைக் குறைக்காமல் வலது கையால் மலரவனின் கண்ணை அகல விரித்து “உஃபு…உஃபு…” என ஊதுகிறாள்.

மலர்க்கொடி “கோட மலயா இருக்கூ…” என்று வாயில் முனுமுனுத்தாள்.

“தன்னிடம்தான் ஏதோ சொல்கிறாள்” என “என்னம்மா…?” என்கிறான் மலரவன்.

மலர்கொடி நின்று மகனையும், பையையும் இறக்கி “மல பேப்பரு எங்கப்பா…?” என பையைத் திறக்கிறாள்.

மலரவன் பையை வாங்கி அதை எடுத்து கொடுக்கிறான். பள்ளி மாணவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல இருக்கும் “மழை காகிதம்”. முன்புறம் முழுவதுமாக திறக்கப்பட்ட நிலையிலும், தலையும், பின்புறமும் நனையாதவாறு இருக்கும் அதன் வடிவமைப்பு. மழைக்காலத்தில் மழை காகிதம் இல்லாத பள்ளி பிள்ளைகளின் பையைப் பார்ப்பது கடினம். தற்காப்புக்காக கொடி மகனின் பையில் எப்போதும் வைத்துவிடுவாள். அது இப்போது பயன் தருகிறது. மகனுக்கு மழை காகிதத்தை போட்டுவிடும் போது மலரவன் “பையையு குடு.நனஞ்சுரூ…” என அதையும் மாட்டி கொள்கிறான். ஒரு சிறிய ஆறுதலுடன் மீண்டும் மகனை இடது இடுப்பில் வைத்துக்கொண்டு மீண்டும் நடக்கிறாள். காற்றின் வேகத்தில் மழை காகிதம் “சட…சட”வென பறக்கிறது. அதை இரண்டு பக்கமும் சுற்றி இழுத்து இடுப்புக்கும் மகனுக்குமான இடைவெளியில் திணித்துவிடுகிறாள்.

மலரவன் தலைப்பக்கம் இருந்து காகிதத்தை இழுக்க முயற்சித்து “இந்தாம்மா… உனக்கூ…” என்கிறான். காகிதம் சிறிதும் நகரவில்லை. அது ஒரு நபருக்கு மட்டுமே சரியாக இருக்கும்.

கொடி மகனின் பாசத்தில் மெச்சி அவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்து “வேண்டா ராசா…இந்தா போயிருவோ…”.

காற்று சிறிதும் ஓய்வதாக இல்லை. சாலையோர தூசிகள் பறக்கின்றன. மலரவன் கண்களை இறுக மூடிக்கொள்கிறான். காற்றின் சீற்றத்தையும், மரங்களும் செடிகளும் சத்ததுடன் வேகமாக அசைவதைப் பார்த்ததும் மலரவனுக்கும் பயம் வந்து கொடியின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான். இருவரும் நொண்டி சாமி கோவிலை நெருங்கிவிட்டார்கள். காற்று இருவரையும் தள்ளுகிறது. கோவிலின் எல்லைக்குள் நுழைய இன்னும் ஆறேழு அடிகள் இருக்கும் போது எங்கையோ பேரிடி. பெருஞ்சத்ததுடன் அக்னி வெயில் தருவதைவிட பலமடங்கு ஒளி ஒரு நொடிக்குள் வந்து போகிறது. மலரவன் அழுது கத்த தொடங்கிவிட்டான். அவர்களுக்கு கோவிலுக்குள் போவதைத்தவிர வேறு வழியில்லை. கோவிலுக்கு நேரே சாலையில் வேலுவின் வண்டி நிற்கிறது. கோவிலின் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பு கொடி நின்று தன் இரு கால்களிலும் உள்ள செருப்பை ஒவ்வொன்றாக கழற்றிவிட்டு, தன் மகனின் கால்களில் உள்ள செருப்பையும் கழற்றி கையில் பிடித்துக்கொண்டு சாலையின் மறுபுறம் இறங்கி கோவிலின் எல்லைக்குள் நுழைகிறாள், மேலத்தெரு மலர்கொடி. நொண்டி சாமியின் பின்புறமுள்ள பொங்கல் கொட்டகையில் வேலுவும், அவன் மகளும் அமர்ந்துள்ளார்கள். மலரவன் வலது கண்ணை மட்டும் மெல்லியதாக திறந்து கோவிலைப் பார்க்கிறான். முத்து தன் தந்தையின் மடியில் அமர்ந்துக்கொண்டு மலரவனைப் பார்த்து கழுத்தைச் சுருக்கி, கையை நீட்டி “வா…வா…” என்பது போல அழைக்கிறாள். மலரவன் “அம்மா…” என்று கோவிலை நோக்கி கை நீட்டுகிறான். மலர்கொடி “கண்ண மூடிக்க” என்று மலரவனின் பின்னந்தலையைப் பற்றி தன் தோளில் அறுதலாக அழுத்துகிறாள். அவன் முகத்தில் எப்போதும் இல்லாத பயம் தெரிகிறது. அந்நேரத்தில் அவனை பார்த்த மலர்கொடி தன் மகனின் மீதே மிகவும் பரிதாபம் கொண்டாள். அதனால் கோவிலுக்குள் போகமுடியுமா? மனித மனம் அறியாத மலரவனிடம் அவள் எப்படி சொல்லுவாள் அது நம்மால் “ஒடுக்கப்பட்ட நொண்டி சாமி” என்று. மலர்கொடி கோவிலின் எல்லையைத் தாண்டி ஒரு அடி சென்று இருப்பாள். காற்று சட்டென்று அடங்கிவிட்டது. அவர்களைப் பயமுறுத்திய அறிகுறி வந்ததற்கான சுவடே இல்லை. காற்று அடங்கியதைப் பார்த்து மலர்கொடியும் பயம் களைந்தாள். மழை இனி மேலும் வரப்போவதில்லை.

ஆனால், எங்கிருந்தோ வந்த ஒரு பெரிய மழைத்துளி நொண்டி சாமியின் கண்களில் விழுந்து வழிந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “ஒடுக்கப்பட்ட நொண்டி சாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *