கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 10,518 
 

காய்கறி அங்காடியிலிருந்து வேணியும் செல்வாவும் இரண்டு சக்கர வாகனத்தில் வெளிப்பட்டனர். எதிரில் நடந்து வந்துகொண்டு இருந்த அறுபது வயதுப் பெரியவர் ஒருவரைக் கண்டதும், வண்டியை அவர் அருகில் கொண்டு நிறுத்தி, உற்சாகக் குரலில் அவருக்கு ‘வணக்கம்!’ சொன்னான் செல்வா. ”எப்படி சார் இருக்கீங்க?” என்றான். அந்த மனிதர் ஏனோ சற்றே நெளிந்து, அசடு வழிந்து பதில் வணக்கம் செய்தார்.

பின்பு அவரிடமிருந்து விடைபெற்று, வாகனம் பிரதான சாலையில் சீறியது. ”விழுந்து சேவிக்காத குறையா வணக்கம் சொன்னீங்களே, யாருங்க அது?” என்றாள் வேணி.

”அவர் சங்கரன். எனது பிரிவின் மேலதிகாரியாக இருந்து, போன வருடம் ஓய்வு பெற்றவர்!”

”அவர் பதவியில் இருக்கும்போது, உங்களிடம் மிகவும் கரிசனமாக நடந்துகொள்வாரோ? இத்தனைப் பணிவாக வணங்குகிறீர்களே?”

”அதுதான் இல்லை. அவர் ஒரு அதிகார வெறியர்! குழுமனப்பான்மை உடையவர். தன் கீழ் பணிபுரிபவர்களைப் பல வழிகளில் நசுக்கிக் குரூர திருப்தி காணும் சாடிஸ்ட்! யாரையும் அவருக்குப் பிடிக்காது. குறிப்பாக என்னை! பிடிக்கிறதோ பிடிக்கலையோ, என்னைத் தவிர, மற்ற எல்லோரும் தினமும் அவருக்குக் குறைந்தபட்சம் பத்து வணக்க மாவது போட்டுவிடுவார்கள்!”

”நீங்கள் வணக்கம் வைக்க மாட்டீர்களா, ஏன்?”

”அவரின் பிரிவில் நான் பணியில் சேர்ந்த முதல் நாள், மரியாதை நிமித்தம் அவருக்கு ‘வணக்கம்’ கூறினேன். அவர் அதை மதித்து பதில் வணக்கம் செய்யவில்லை. இறுமாப்புடன் தலையை அசைத்துவிட்டுப் போனார். மரியாதை செலுத்துதல் ஒருவழிப்பாதையல்லவே? அன்பைச் செலுத்தி அன்பைப் பெறுதலே மாண்பு. எனவே, அவர் ஓய்வு பெறும் வரை அவருக்கு நான் வணக்கம் செலுத்தியதே இல்லை!”

”பின் இப்போது மட்டும் எதற்காக வணக்கம் கூறினீர்களாம்?”

”ஆள் பலம், அதிகார பலம் போன பின் அவருக்கு அவர் நிழல்கூட வணக்கம் செலுத்துவதில்லை. ஆள் கூனிக் குறுகி, அவமானத்தால் சிறுத்துவிட்டார். என்னதான் இருந் தாலும், அவர் எங்கள் நிறுவனத்தில் 38 வருடம் பணி செய்திருக்கிறார். அந்த மரியாதைக்காக, ஒரு மூத்த குடிமகனைக் கண்ணியப்படுத்தும் விதமாக, இன்று மட்டுமல்ல, நான் அவரைப் பார்க்கும்போதெல்லாம் வணக்கம் செலுத்தி வருகிறேன். மற்றவர்கள் சலுகைகள் பெறவே அன்று அவருக்கு வணக்கம் சொன்னார்கள். நானோ அவருடைய தன் முனைப்பைத் திருப்திப்படுத்த இன்று வணக்கம் கூறுகிறேன். நான் மற்றவர்கள் போல் இல்லை. பெருந்தன்மை என் பிறவிக்குணம்!”

”யார் சொன்னது? நீங்கள் அவரை வித்தியாசமாகப் பழிவாங்கு கிறீர்கள்!” என்றாள் வேணி.

”என்ன சொல்கிறாய்?”

”’எனக்குப் பலவிதமா தொந்தரவு குடுத்த நீ, பதவி ஓய்வுக்குப் பிறகு தோலுரிக்கப்பட்ட இராலாக சுருண்டு நிற்கிறே. யாருமே மதிக்காத உன்னை இப்ப நான் மன்னிச்சு வணக்கம் சொல்றேன் பாரு’ன்னு சொல்லாம சொல்றீங்க! நீங்க ஒவ்வொரு தடவை வணக்கம் சொல்லும்போதும் அந்தக் குற்ற உணர்ச்சியால் சங்கரன் இதயம் தத்தளிக்கும். அதைக் கண்டு உங்கள் இதயம் குளிரும். பலே, மிகச் சிறந்த பழிவாங்கும் உபாயம்!”

மறுக்க வாயெடுத்த செல்வா ஒரு நொடி மௌனித்து, ”இருக் கலாம்! யார் கண்டது?” என்று புன்னகைத்தான்.

– 16th ஜூலை 2008

Print Friendly, PDF & Email

1 thought on “ஐஸ் கத்தி!

  1. நிறைய அலுவலகங்களில் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களை சமாளிப்பதற்கு தனித்திறமை வேண்டும். ஐஸ் கத்தியால் குத்தினாலும் காயம்தான். நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *