எழுதப்படாத தீர்ப்புகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 7,193 
 

“உம்… ஆரம்பிச்சுற வேண்டியதுதானே?”

நடுவளவு பெரிய தனக்காரர் தங்கசாமி ஊர்க் கூட்டத்தை நோக்கிக் கேட்டார்.

பஞ்சாயத்துத் தலைவர்களும், கூடியிருந்தவர்களில் பலரும் தலையசைத்துச் சம்மதம் தெரிவிக்க, தங்கசாமி செருமிக் கொண்டு, புங்கனூராரைப் பார்த்துச் சொன்னார்:

“ஏனுங்கோ, பிராது கொடுக்க வந்தவிய நீங்க. உங்க பிராதைச் சபையில சொல்லுங்க!”

தலை குனிந்து நின்ற புங்கனூரார் மெல்ல நிமிர்ந்தார். அவருடைய கண்கள் ஜிவு ஜிவுவென்று சிவந்திருந்தன.

தொந்தி முன்னுக்கு வந்திருந்ததில் செல்வச் செழிப்பும், தலை முழுவதும் நரையோடியதில் வயதும், உடம்பின் சுருக்கங்களில் அவருடைய முதுமையும் தெரிந்தன. தோளில் இருந்த துண்டை எடுத்து பவ்யமாக இடுப்பில் சுற்றிக்கொள்ள முற்பட்டார்.

ஊரிலிருந்த நாலைந்து பெருந்தனக்காரரில் ஒருவரான அவர், அம்மாதிரிச் செய்ய முற்பட்டதில் பலர் அதிர்ச்சியடைந்து, “வேணாமுங்கோ! துண்டு தோள்லயே கிடக்கட்டும்!” என்று
மறுப்புச் சொன்னார்கள்.

“ஊருக்கு ஒரு நாயம். எனக்கு வேற ஒண்ணுங்களா? பஞ்சாயத்துக்கு ஒரு மதிப்பு வேணாமா?..” இடுப்பில் துண்டைச் சுற்றிக்கொண்டு கூட்டத்தைப் பார்த்தார்.

“வெளியே சொல்றதுக்கு நா கூசற் விஷயம். ஆனா வேற வழியில்லீங்கோ…” என்று தயங்கியவரின் பக்கத்தில் நின்ற அவரின் முதல் மனைவி புங்கனூர் ஆத்தா என்று அழைக்கப்படும்
செல்லத்தாயி, “ஊரு சிரிக்குமுன்னு பொத்திப் பொத்தி வெச்சா முடிஞ்சதா..? ஒரு முடிவு காண வேணாமுங்களா?” என்றாள்.

புங்கனூரார் விஷயத்தை உடைத்தார். “என் ரெண்டாவது சம்சாரம் நாகம்மை உண்டாகியிருக்காளுங்கோ..!”

“சந்தோஷமான சமாச்சாரம்தானே புங்கனூராரே!” கிழக்கு வளவு எசமான் கேட்டார்.

“என் முதல் சம்சாரத்துக்கு ரெண்டு தடவை வயித்தைக் கிளிச்சு ஆப்பரேசன் பண்ணிக் கொழந்தை பொறந்து அதுக அப்பப்போ செத்தும் போச்சுதேன்னு ஒரு வெறுப்புல நா திருப்பூர்
கெவர்மெண்டு ஆஸ்பத்திரிக்குப் போயி குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேசன் பண்ணிக்கிட்டேனுங்கோ..!”

“ஹா!..” கூட்டம் விதிர்த்து நின்றது.

“இன்னி வரைக்கும் நா யாரிட்டயும் விஷயத்தைச் சொல்லலை. ஆனா கொழந்தைக்காக பெரிய கவுண்டச்சி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கும்படி கட்டாயப்படுத்தினா. குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்ட எனக்கு இனிமே குழந்தை பிறக்காதுன்னு தெரிஞ்சிருந்தும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். வாரிசுக்குக் கொழந்தையில்லேன்னு நா கல்யாணம் பண்ணிக்கிறதா எல்லோரும் நினைச்சீங்க; இல்லை..சபலத்தாலயும், சொத்து ஏகமா இருக்கிற மெதப்புலயும்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப நாகம்மை உண்டாகி இருக்கா… எப்பிடி? சண்டாளி! என் குடும்ப மானத்தைக் கப்பலேத்தறதுக்குன்னு வந்த கோடரிக்காம்பு…!” பற்களைக் கடித்து உறுமினார் புங்கனூர் எசமான்.

கிழவி செல்லத்தாயி, “இவுங்க அவளைக் கழுத்தை நெறிச்சுக் கொன்னுடறேன்னு கோவப்பட்டாங்க. நாந்தான் அந்தப் பாவம் நமக்கெதுக்குங்க, அவளோட சுயரூபத்தை உலகத்துக்குக் காட்டி ஊரை விட்டுத் துரத்திப்புடலாமுங்கோன்னு சொன்னேன். நம்ம சீலக்காம்பட்டியில இத்தினி காலமா இப்பேர்க்கொத்த அக்கிரமம் நடந்திருக்கறதா எனக்கு நியாபகம் இல்லீங்கோ..! பஞ்சாயத்தார் நல்ல தீர்ப்பு கொடுக்கணுமுங்கோ..! ஐயனார் சாமி! இந்தப் பாவிக்கு நீதான் கூலி கொடுக்கணும். என் புருசனைப் பணத்துக்காகக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, சொகத்துக்கு எவனையோ தேடிக்கிட்டுப் போய் குடும்பத்தைச் சந்தி சிரிக்க வைச்சுட்டாளே, படுபாவிச் சிறுக்கி!” என்று ஆத்திரத்தோடு படபடத்தாள்.

புங்கனூராரின் இளையதாரம் நாகம்மை இந்த எதிர்பாராத, வெடிகுண்டுக் குற்றச்சாட்டைக் கேட்டு வெலவெலத்து நின்றாள். அந்த இளம் பூங்கொடி கடும் புயலில் சிக்கினாற்போன்று நடு நடுங்கியது; கண்ணில் வெள்ளமாய் நீர் குமுறிப் புரண்டது.

“ஐயனாரப்பா! எனக்கு வலுவையும் தைரியத்தையும் கொடப்பா!” என்று பிரார்த்தித்துக் கொண்டாள்.

`இந்த மனுசன் குடும்பக் கட்டுப்பாடு செய்துகிட்டு குழந்தை இல்லாக் குறைக்குத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்னு எம்மட அம்மாவை ஏமாத்தி, பணத்தைக் காட்டி, எம்மட சாதி
சனங்க கண்ணைக் கட்டி, என்னையும் ஏய்ச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட ஆளா? ஆனா.. நா எப்பிடி.. நா எப்பிடிக் உண்டானேன்?’

குழம்பினாள் நாகம்மை.

கூட்டத்தில்லிருந்த தெற்கு வளவு மாப்பிள்ளை சண்முகம் எழுந்து சொன்னார்:

“புங்கனூர் மாமன் மன்னிக்கணுங்கோ. குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்டவங்கள்ல நூத்துல ஒருத்தருக்கு பெயிலியர் ஆக வாய்ப்பு இருக்குன்னு அன்னிக்கு அவினாசி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஒரு மீட்டிங்கில் பேசினதை நான் கேட்டேனுங்கோ. கட்டுப்பாடு பண்ணின ஒரு மாசத்துக்குள்ள சம்சாரத்தோடு தொடர்பு கொண்டாலோ அல்லது ஆப்பரேசன்
பண்ணின நரம்பு கூடிட்டாலோ குழந்தை பிறக்க வாய்ப்புண்டு. ஆனா நூத்துல, ஆயிரத்துல ஒண்ணுக்குத்தான் இப்படி நடக்கும்னு அந்த டாக்டர் சொன்னாருங்கோ. அதனால மாமன்
ஆத்திரப்படாம – அவசரப்படாம யோசிச்சா நல்லது…”

செல்லத்தாயிக் கிழவி ஆத்திரத்தில் கத்தினாள்.

“என்னத்தை ரோசிக்கிறது? குடும்ப மானம் பறிபோகுது… இவ பவுடரும் மையும் பூசிக்கிட்டு மினு மினுக்கறதும், பண்ணையம் பார்க்குற ரங்கப்பன் பய இவளைப் பாத்துப் பல்லைக் காட்டறதும் எல்லாம் தெரிஞ்சுதான் இருக்கு. நாயை அடிச்சு வெரட்டறதுதான் நல்லதுங்கோ…”

“ரங்கப்பனா..? அவனா..? ” கூட்டத்தில் கசமுசா.

நரம்புகளை இழுத்துக் கட்டிச் சிலை செதுக்கியது போன்ற கரடு முரடான உடம்புடன் புங்கனூரார் வயற்காட்டில் விவசாயம் பார்ப்பது, மாடு கன்றுகளைக் கவனித்துக் கொள்வது என்று
ஊழியம் பார்க்கும் அவனா? ஊர் திருவிழாக்களில் சிலம்பம் ஆடித் திரிவானே அவனா? குழந்தை போலச் சிரித்து எல்லோரிடமும் குழையக் குழையப் பேசுவானே அவனா, அந்த
ரங்கப்பனா..? – நம்பவே முடியவில்லை ஊராரால்.

“அடப்பாவி, கடங்காரா!” என்றாள் பெண்கள் பக்கமிருந்து ஓர் கிழவி.

உடம்பு கிடுகிடுவென்று நடுங்கியபடி எழுந்து நின்றான் ரங்கப்பன். எசமான் ஏதோ பஞ்சாயத்துக் கூட்டத்தில் பிராது வைக்கிறாராமே என்று எல்லோரையும் போல வேடிக்கை பார்க்க
வந்தவன் அவன். பஞ்சாயத்தில் அவனே குற்றம் சாட்டப்படுவான் என எதிர்பார்த்திருக்கவில்லை…

கூனிக்குறுகிப் போனான். ஊராரின் அனல் பார்வையின் தகிப்பைத் தாளாமல், அந்த நெருப்புப் பழியின் வெக்கை பொறுக்காமல், மனசுக்குள் குமுறினான். “ஐயனாரப்பா, இந்த
ஏழை மேல் ஒனக்கு ஏதப்பா இம்புட்டுக் கோவம்? எசமாங் களோட சின்ன சம்சாரத்தை என் தாய் மாதிரி நான் நினைச் சிருக்கேன்கிறதை எப்பிடி இவியளுக்குப் புரிய வைக்கப்
போறேன்? தெய்வமே! மாசமாயிருக்கிற சின்ன ஆத்தாளை குத்தவாளி போல நிறுத்தி வெச்சுக் கூறு போடறாங்களே, இது ஒனக்கே நாயமா?”

“லேய் ரங்கப்பா! என்னலே, ஊமைக் கோட்டான் போல நிக்குறே? எசமாங்க சொல்றது காதுல உளுந்துச்சா? சின்னாத்தாளோட ஒனக்கு…?”

“சாமி!…”

கதறினான் அவன். “நா கும்புடற கன்னியாத்தாவுக்குப் பொதுவா, இதோ இருக்குற ஐயனாருக்குப் பொதுவா சொல்றேனுங்கோ, அவுங்களை என்னைப் பெத்த தாய்க்குச் சமானமா மதிக்கிறேனுங்க…” குழந்தையைப் போலக் கதறி, வாய்விட்டு அழுதான் ரங்கப்பன்.

“படவா ராஸ்கோலு என்னமா நடிக்கிறான் பாத்தீங்களா மச்சான்?” என்று ஒருவர் இன்னொருவரிடம் சொன்னது, சற்றுத் தெளிவாகவே எல்லோர் காதுகளுக்கும் கேட்டது.

புங்கனூராரின் இளைய மனைவி நாகம்மை வானத்துக்கும் பூமிக்கும் என உயர்ந்து ஒரு கால் மடித்து கம்பீரமாக அமர்ந்திருந்த ஐயனார் சிலையையும், அவரது உருட்டு விழிகளையும்
முறைத்தாள். கையில் வாள் ஏந்திக் காட்சியளித்த ஐயனார், பார்க்கவே பயம் கொடுத்தார். சுற்றிலும் நிறையக் குட்டி தேவதைகள், வண்ணம் பூசிய மண் குதிரைகள் மீது சேவகர்கள்
ஆரோகணித்து, சேணத்தைப் பற்றியிருந்தார்கள். முன்னால் நிறைய சூலங்கள் தரையில் நடப்பட்டு, காய்ந்த மாலைகளைக் கழுத்தில் சுற்றி நின்றன. வில்வ மரத்தின் அடர்த்தியான
கிளைகளும் இலைகளும் குடை பிடித்து அந்த இடத்தைப் பகலிலேயே இரவாகக் காட்டின. உடைந்து நின்ற சிலைகளின் மேல் ஆந்தைகள் உட்கார்ந்து கண்களை உருட்டி விழித்தன.

திடுமென நாகம்மை பேச ஆரம்பித்தாள்.

“என்னைப் பல பேரு பெண் பார்க்க வந்தாங்க. அவிய கேட்ட சீர் செனத்தியை எங்கம்மாவால தர ஏலலைன்னு எல்லாம் தட்டிப் போச்சுது. அதனால ரெண்டாங் கல்யாணத்துக்கு ஒப்பினோம். நாங்க ஏழையானாலும் மானமான குடும்பம். இந்த ஐயனார் சாமி சத்தியமா என் புருசன் ஒருத்தரைத் தவிர வேற யாருக்கும் நான் முந்தானை விரிச்சது கிடையாது. ஆனா, என் வயத்துல வளர்ற குழந்தை தன்னதில்லைன்னு இந்த மனுசரு சொல்றாரு! குடும்பக் கட்டுப்பாடு ஆப்பிரேசன் ஆயிரத்துல ஒண்ணு தப்பலாம்கிற வாய்ப்பு இருக்குன்னு தெற்கு வளவு மாப்பிள்ளை சொன்னாங்களே – அது மாதிரி இதுவும் ஆகியிருக்கும்னு இவிய ஏன் நம்பலைன்னு நாஞ் சொல்றேன். பெரியாத்தா தம்பி மகனுக பேருக்குச் சொத்தையெல்லாம் எழுதி வைக்கறதா இருந்துச்சு. இப்ப எனக்குக் கொழந்தை பிறந்தால் அது தடைப்படுமேன்னு ஆத்தாவுக்கு ஆத்திரம். அவிய ஏத்தின போதனையால இவருக்குக் கண்ணுமண்ணு தெரியலை. எம்மேல அபாண்டமாப் பழி போட ஊரைக் கூட்டியிருக்காரு.”

கண்ணீரைத் துடைத்தெறிந்து நிமிர்ந்து நின்ற நாகம்மை, விருட்டென்று நடந்து ரங்கப்பன் அருகில் போய் நின்றாள்.

சிறுபிள்ளை போல முகத்தில் கைகளை வைத்து மூடிக்கொண்டு அழுத அவனது கைகளைத் தொட்டு விலக்கி, அவனுடைய கையோடு தன் கையைச் சேர்த்துக் கொள்ள நாகம்மை முற்பட, அவன் தீயைத் தொட்டவன் போல் விலக…

“அடிப்பாவிச் சிறுக்கி!” கூட்டம் கூச்சலிட்டது; பரபரப்புக் காட்டியது.

“அநியாயமா என்னை ஏமாத்திக் கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து, இல்லாத ஒரு பழியை அபாண்டமா எம்மேல போட்டீங்க இல்லியா? அதை நெசமாவே ஆக்கிட்டா என்ன பண்ணுவீங்க?
இதுவரைக்கும் பத்தினியா இருந்தவ இப்ப இன்னொருத்தனைத் தொட்டுட்டேன். இனிமே இவனோடத்தான் நா வாழப்போறேன்!” புங்கனூரான் முகத்தைப் பார்த்துக் கோபத்தோடு மொழிந்தவள், தன் கழுத்தில் கை வைத்து படக்கென்று ஒரே இழுப்பில் தாலியைப் பறித்தாள்; கணவன் முகத்தில் ஓங்கி வீசினாள்.

என்ன ஏதென்று புரியுமுன்பே நிகழ்ந்துவிட்ட அச்சம்பவம் தந்த அதிர்ச்சியில் கூட்டம் ஒருகணம் செயலற்றுப் போயிற்று. அடுத்த நொடியில் –

ஊர்க் கவுண்டர் ஒருவர் வீராவேசத்தோடு எழுந்தார். “அவளைச் சும்மா விடாதீங்கடா… மரத்தில் கட்டி வெச்சுக் குதிரைச் சவுக்கால் விரியலாடினாத்தான் சரிப்படும்!” என்று அவர் ஒரு அடி எடுத்து முன்னால் வைக்க,

“சாமீ! ”என்று ஆவேசமான குரல் ஒன்று கேட்டது.

திரும்பிப் பார்த்தார் அவர். அனைவரும் குரல் வந்த திக்கில் பார்த்தார்கள்; திகைத்து, அதிர்ந்தார்கள். ஐயனார் சிலைக்கு முன்னால் நட்டு வைக்கப்பட்டிருந்த கனமான பெரிய இரும்புச் சூலம் ஒன்றைப் பிடுங்கிக் கையில் ஏந்திக்கொண்டு நின்றான் ரங்கப்பன். கண்களில் நெருப்பு ஜ்வலித்தது.

“எட்டு ஜில்லாவை சிலம்பம் ஆடி, ஏராள சண்டியர்களோட சண்டை போட்டு ஜெயிச்ச ரங்கப்பன் நான். யாராவது ஒரு அடி எடுத்து வெச்சீங்க – எங்க சின்னாத்தா மேல எவன் கையாவது
பட்டுது, அவன் கொடலை உருவிக் கழுத்துல மாலையாப் போட்டுக்குவேன்… ஜாக்கிரதை!”

அவன் நின்ற உறுதியான கோலமும், கையில் உயர்த்திப் பிடித்த ஐயனாரின் சூலமும், உக்கிரத்துடன் முழக்கிய வார்த்தைகளும் அவர்களை நடுநடுங்க வைத்தன; வெலவெலத்து நின்றனர்.

கூட்டத்தை விலக்கி நாகம்மையை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டு வெளிச் செல்லும் பாதையில் நடந்தான் அவன். அச்சமயம் நாத்தழுதழுக்க ரங்கப்பன் சொன்னான்:

“தாயி! எம்மாம் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிப் புட்டீங்க! எம்மட ஒடம்பை செருப்பாத் தச்சுப் போட்டு ஒங்களை நா காப்பாத்துவேனுங்கோ! ஆனா என்னைப் பெத்த தாய்க்குச்
சமானமா ஒங்களை நான் ஏத்துக்குவேனே தவிர வேற மாதிரி சத்தியமா இல்லீங்கோ…”

“மன்னிச்சுக்க ரங்கப்பா! அந்த மனுசனை மானபங்கப்படுத்தணும்-அவங்களுக்கெல்லாம் ஒறைக்கணும்னு அப்படி ஒரு ஆவேசத்துல பேசிட்டேன்; அது தப்புத்தான்! எனக்கும் என்
கொழந்தைக்கும் இவங்களோட சொத்து சுகம் எதுவும் வேணாம். இவங்க கீழ்த்தரமான சூதுவாதும் வேணாம். மனுசன், சொத்துக்காக கட்டின பொண்டாட்டியைக் கூட முச்சந்தியில
நிறுத்திப்புடறான் பார்த்தியா – இப்ப அவன் முகத்துல கரியைப் பூசுன நிம்மதி எனக்கு… இப்பத்தான் ரங்கப்பா மனசு அமைதியா இருக்கு…” என்று சொன்னவள் உடைந்து ஓ வென்று அழுதபடியே நடந்தாள்.

தூரத்தில் செல்லும் இருவயும் ஆத்திரத்தோடு பார்த்து, செயலற்று நின்றது ஊர்க்கூட்டம்.

(தாய் வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *