கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 3,372 
 

அம்மாவோடு போகிற பயணங்கள் எனக்கு இனிக்கும். யன்னல் ஓர இருக்கைகள் கிடைத்தால் அந்த சுகம் பயணத்தை மேலும் சுவைக்கப் பண்ணும். அதுவும் மலைப் பிரதேசங்களில் பச்சைப் பசேல்களுக்கு மத்தியில் பயணிப்பது என்றால் கேட்கவே வேண்டாம். வளைவுகளில் எக்கச்சக்கமாய் வளைந்து பின் சற்று நேராகி, நேராகி விட்டதே என மகிழும் முன், அடுத்த வளைவு வந்துவிட்டதில் முதலில் சரிந்ததற்கு எதிர்ப்புறமாக நெளிந்து மறுபடியும் நேராகி அதற்குள் திருப்பத்தில் எதிர்ப்பட்டுவிட்ட பஸ்ஸுக்காக வந்த வழியில் பின்வாங்கி…. ஏகத்திற்கும் இரசிக்கலாம்

ஆனால், இன்று அந்த சுகம் ஏதும் எனக்கு இல்லை . இத்தனைக்கும் அம்மா பக்கத்தில் தான் இருக்கிறாள். அவள் மீது முழுவதுமாய் சாய்ந்து கொண்டு தான் பயணிக்கிறேன். ஆனால், மனம் முழுவதும் சோகம். கனமாக ரணமாக….. ஏன் என்கிறீர்களா? காரணம் சூட்டிக்கா (சின்னவன்) என்னும் செல்லப் பெயரால் அழைக்கப்பட்ட என் பால்ய வயதுத் தோழன் . முழுப் பெயர் ஹேமச்சந்திர முதியன் சலாகே லொக்கு ஆராச்சிலாகே சஞ்சீவன குணவர்த்தன மஞ்சுல.

புதிதாக வாங்கிய முப்பத்தைந்து பேச்சர்ஸ் காணியில் எங்கள் வீட்டைக் கட்டிக்கொண்டு குடியேறியபோது எனக்கு நான்கு வயது தான். அம்மாவும் அப்பாவும் வங்கிகள் தோறும் ஏறி இறங்கினார்கள். அம்மாவுடைய கைகளைப் பற்றிக் கொண்டு படிகளில் துள்ளித் துள்ளிக் குதித்துக்கொண்டு ஏறி இடித்துக்கொண்ட ஞாபகம் அந்த வங்கியைப் பார்க்கும் போதெல்லாம் வரும். வாங்கக்கூடிய கடன் களை எல்லாம் வாங்கி அதன் மூலம் நிலத்தை வாங்கி, வீட்டைப் பூர்த்தியாக்கிக் கொண்டு வாடகை வீட்டைக் காலி செய்து விட்டு சந்தோஷமாகக் குடியேறினோம்.

இப்போது போலவே அப்போதும் ‘கும்’ என நான் இருப்பேன். ஒரே பெண் என்பதில் ஏகத்துக்கும் ஊட்டச்சத்துக்களின் உபகாரம். பனி குளிரில் இருந்து பாதுகாக்க குளிர் உடைகளை சர்வ அங்கங்களிலும் தரித்துக்கொண்டு புசு புசு’ என குண்டு முயலாக அடுத்திருந்த காணியில் என் வயதே ஆன மல்லிகாவின் வீட்டுக்குப் போவேன். அவளும் ஒரே பெண்தான். என் பருமனில் பாதிதான் இருப்பாள். அவளும் நானும் அவர்கள் வீட்டில் தோட்டத்தில் ஆடுவோம், பாடுவோம், சந்தோஷமாகக் கும்மாளமிடுவோம். மல்லிகாவின் பெற்றோருக்குச் சராசரி பொருளாதார நிலை. அந்த காணிகளெல்லாம் பரம்பரையாக வந்தவை. நல்ல உழைப்பாளிகள். அவர்களோடு ஒப்பிடுகையில் படித்த பொருளாதார வசதியான எங்களின் உறவு அவர்களால் கௌரவமாகக் கருதப்பட்டது. (இதெல்லாம் அப்போது ஏதும் எனக்குத் தெரியாது. பின் நாட்களில் புரிந்தவை.) அவர்கள் வீட்டில் பெரிய மரக்கட்டில் ஒன்று இருக்கும். சுத்தமாக விரித்து தலையணைகள் வைத்து ஒழுங்காக்கப் பட்டிருக்கும். நானும் மல்லிகாவும் கட்டிலில் ஏறி குதித்து விழுந்து விளையாடுவோம். ஜாலியாக இருக்கும். அங்கேதான் இந்த சூட்டிக்காவின் அறிமுகம் கிடைத்தது.

மல்லிகாவின் பெரியப்பா மகன். அவனுக்கும் அந்த வீட்டில் பூரண சுதந்திரம். எங்களைவிட மூன்று நான்கு வயது பெரியவன். அவனும் கட்டிலில் விளையாடும் எங்களோடு சேர்ந்து விளையாட எத்தனிப்பான். எங்கள் இருவருக்கும் அவனைச் சேர்த்துக் கொள்ளப் பிடிக்காது. அவனை தலையணைகளால் தாக்குவோம். நாங்கள் அடிப்பது அவனுக்கு துளிகூட வலிக்காது. அவனும் திருப்பி எங்களை தலையணைகளால் அடிப்பான். எங்களுக்கு நிரம்ப வலிக்கும். அதுவும் குண்டான எனக்கு நிரம்பவே வலிக்கும். திரும்பவும் திரும்பவும் என நாங்கள் எவ்வளவோ அடித்துப் பார்ப்போம். எங்களுக்குத்தான் வலிக்கும். அவனுக்குப் பொருட்டே இல்லை. “ஐயா! யண்ட யண்ட” என மல்லிகா கத்துவாள். (“அண்ணா ! போ, போ”) நானும் அதே மாதிரி கத்துவேன். என் கன்னங்களைக் கிள்ளி வைப்பான். சிவந்து எரியும்.

எங்களைவிட வயதில் பெரியவன் என்பதால், அங்கு இருந்த ஊர்ப் பாடசாலையில் முன்னமேயே சூட்டிக்கா படித்துக்கொண்டு இருந்தான். நான் ஓரிரு வருடங்கள் கழித்து பாடசாலை வேனில் நகரிலிருந்த தனியார் பாடசாலைக்குப் போக ஆரம்பித்தேன். நான் மாலையில் நகர்ப்புறத்திலிருந்து வரமுன், உள்ளூர்ப் பாடசாலையில் இருந்து அவன் வீடு திரும்பியிருப்பான். பிரதான பாதையில் மற்ற பசங்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பான். பிரதான பாதையை ஒட்டியே எங்கள் வீடுகளும் காணிகளும் இருந்ததால், நானும் மல்லிகாவும் சிலவேளைகளில் தோட்டத்தின் சரிவில் அமர்ந்து கொண்டு கிரிக்கெட் பார்வையாளர் களாக இயங்குவோம். பந்துகள் வந்து விட்டால் பொறுக்கி எறிவோம். சில நேரம் எடுத்துப்போட மறுப்போம். எங்கள் மனநிலை யைப் பொறுத்தது. அதேபோலத்தான் எங்கள் ஆதரவும். சில வேளைகளில் பிட்ச்சில் (தெருவில்) ஓட்டங்கள் எடுக்க அங்குமிங்கும் ஓடும் அவனுக்கு கத்தி உற்சாகப்படுத்துவோம். அவர்களையே இலங்கைக் கிரிக்கெட் அணியாகப் பாவனை செய்து கொண்டு வானொலியில் வர்ணனை கொடுக்கிற மாதிரி வர்ணனையும் வழங்கியபடி கிரிக்கெட் ஆடும் லாவகம் நல்ல சுவாரஷயமாக இருக்கும். ‘குண்டு’ என என்னைப் பழிப்பதும் என்னை அடிப்பதும் ஞாபகம் வந்துவிட்டால் “சூட்டிக்கா” என்ற அவன் பெயரை “சூட்டி யக்கா (‘சின்னப் பேய்’) தெவி கியா (ஆட்டமிழந்து விட்டான்)” என சத்தமிட்டு குழப்பி அவனுக்குக் கோபம் ஏற்படுத்துவோம்.

ஆண்டுகள் கழிய, கழிய நாங்களும் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தோம். நானும் மல்லிகாவோடு அவனை “அண்ணா, அண்ணா ” என்று கதைப்பதில் என்மீது சரியான பாசமுள்ளவ னானான். ஒரு சண்டைக்கார அண்ணன். சொந்த உடன்பிறப்பு யாருமே இல்லை. எனக்கு அன்பான அண்ணனாக மாறினான். அவனுக்கும் தமக்கை, தங்கை கிடையாது. தங்கள் அந்தஸ்தை விட கூடிய வசதிகள் கொண்ட வீட்டுப் பெண் , அதை எதையும் சிறு பராயம் முதல் கருதாது, தன்னை “அண்ணா, அண்ணா” என அழைத்து அன்பாகப் பழகுவது, எத்தனை உயத்தி என சகவயது நண்பர்கள், சில பெரியவர்களிடம் கூறியிருக்கிறான். என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட மாட்டான். “பபா…. பபா” (பாப்பா என்ற பொருள், சிறுமிகளை சிங்களவர்கள் இப்படித்தான் அழைப்பார்கள்) என்றே கூப்பிடுவான்.

ஒரு நாள் என் பிறந்த நாள். வழக்கம்போல அம்மாவும் அப்பாவும் புத்தாடை வாங்கி எனக்கு அணிவித்து எனக்குப் பிடித்த உணவுகள், இனிப்புகள் எனத் தயாரித்து எங்களுக்குள் மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தோம். அப்பா பகல் உணவுக்குப் பின் சாப்பிட ஐஸ்கிரீம் வாங்க கடைக்கு ஓடினார். கஜு, முந்திரி போட்ட ஐஸ்கிரீம் எனக்குக் கொள்ளைப் பிரியம். அப்பா தேடி ஆராய்ந்து வாங்கிக் கொண்டிருக்கும்போது சூட்டிக்கா அவதானித்துவிட்டு “ஏயி மொனவாட்ட? (ஏன்? எதற்கு) என வினாவியிருக்கிறான். அப்பா விசயத்தைச் சொல்லி விட்டு வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.

கொஞ்ச நேரத்தில் எங்கள் வீட்டுப் படிக்கட்டு அருகே எதிர்ப்புற வேலியில் நிழலாட்டம். பார்த்தால் சூட்டிக்கா. அப்பா எட்டிப் பார்த்து விட்டு நடந்த விசயத்தைச் சொன்னார். “கூப்பிட்டுச் சாப்பாடு குடுங்கள். பிறந்த நாள் என்றதும் சின்னப் பிள்ளைதானே ஆசையாய் வந்து நிற்கிறான் பாவம்!” என்றார். அம்மா போய்க் கூப்பிட வர மறுத்தான். ஏன் இவன் வந்து நிற்கிறான் என்றும் புரியவில்லை . இந்த ஆரவாரத்தில் வெளியில் வந்து பார்த்த என்னைக் கண்டதும் “நங்கி, நங்கி” (தங்கை , தங்கை) என்று கூப்பிட்டு கையால் வரும்படி சைகை செய்தான். நானும் போக சிறு திசுத் தாள் பொட்டலத் தைக் கையில் திணித்தான். சுப உப்பாங் தினயக்’ – பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என்றான். பிரித்துப் பார்த்தேன். சிறிய சொக்லேட்கள் சில. “வா, வா” எனக் கூப்பிட்டும் வராமல் போய் விட்டான். துக்கமாக இருந்தது. சின்னதும் பெரிதுமாக இதுபோல பல சம்பவங்கள், இப்படியே வளர்ந்து பெரியவர்களாகி விட்டோம். நான் நகரில் க.பொ.த சாதாரண தரம் செய்யும் காலம். சூட்டிக்கா படிப்பை நிறுத்தி விட்டான். நண்பர்களோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு நாள் (இப்போது வளர்ந்து விட்டதில் பாடசாலை வேனில் சிறு பசங்கள் மாதிரிப் போக வெட்கம்.)

பாடசாலை விட்டு மாலை வகுப்பு முடிந்து வந்து பஸ்தரிப்பில் நின்ற எனக்கு முன்பின் அறிமுகமற்ற ஒருவன் வம்பிழுக்கத் தொடங்கினான். அவன் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு அது நான் போக வேண்டிய பஸ் இல்லாததில் ஏறாது காத்து நின்ற என்னைப் பார்த்துக் கத்தி அது இது எனச் சொல்லி கலாட்டா பண்ணத் தொடங்கினான். முழு பஸ்ஸும் அவனையும் என்னையும் மாறிமாறிப் பார்த்து கிசுகிசுக்கலாயிற்று. மலையக நகர் என்பதில் எண்பது சதவீதமானவர் தமிழர். என் பெற்றோரும் சமூக அந்தஸ்தில் உள்ளவர்கள். கண்டிப்பாக இன்னாரின் பெண் தான் என்பது பஸ்ஸில் சிலருக்காவது தெரிந்தே இருக்கும். அந்தத் தமிழ் இளைஞனின் தொல்லை என் ஐந்தரை அடி உடம்பைக் கூசப் பண்ணிற்று. அப்படியே குறுகிப் போகப் பண்ணியது. யாருமே எனக்காகப் பரிந்து செயற்படவே இல்லை . ஏளனச் சிரிப்புத்தான்.

என் கையிலிருந்த காட்போட் உருளையால் (விஞ்ஞானப் பாடத்தின் விளக்கப் படம்) ஆத்திரம், அவமானம் தாங்க முடியாமல் அவன் யன்னல் அருகே போய் அவனைப் பட் பட்’ என அடித்தேன். “யாரடா நீ? ஏன்டா என்னை அது, இது எனச் சொல்லிக் கேலி பண்ணுகிறாய்?” அழுகையும், ஆத்திர அவமானமும். குரல் நடுங்கிற்று. முகம் உஷணத்தை உணர்ந்தது. எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். அப்போது அந்த நேரம் எங்கிருந்தோ சூட்டிக்கா வந்தான். “கௌத பாங் மகே நங்கிட்ட கரதற தென்னே?” (“யாரடா அது என் தங்கைக்கு தொல்லை தருவது?”). நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. அதுவரை பார்வையாளர்கள் கண்களில் இருந்த ஏளனம், கிண்டல் பாவம் மறைந்தது. பயம் தெரிந்தது. மரியாதை ஏற்பட்டது.

சூட்டிக்கா ஏசினான். எப்படிப்பட்ட குடும்பத்துப் பெண் அவள். எப்படி அவளை நீ இப்படி பஸ்நிலையத்தில் அவமானப் படுத்தலாம்? அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினான். வேடிக்கை பார்த்தவர்களைச் சாடினான். அவளுடைய பெற்றோர்கள் உங்களு டைய நன்மைக்காக உழைக்கிறார்கள். அவர்கள் பெண்ணுக்கு கஷடம் வருகையில் நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்கள்.” அந்த கலாட்டாக்காரன் இறங்கி ஓட்டம் பிடித்தான்.

கண்களில் கண்ணீர் நிரம்பி, வழிய ஆயத்தமாயிருந்த நிலையில் நின்றுகொண்டிருந்த எனக்கு ஆறுதல் சொன்னான். “நீ ஏன் பயப்படுகிறாய்? யாரோ ஒரு பைத்தியக்காரன். பயப்படாதே தங்கையே நாங்கள் இருக்கிறோம். எவனாவது வாலாட்டினால் எனக்குச் சொல். அண்ணன் நான் பார்த்துக் கொள்கிறேன்.” நின்று என் பஸ்ஸில் என்னையும் ஏற்றிவிட்டு பயணச் சீட்டையும் தன் காசில் வாங்கி கையில் தந்துவிட்டு கவனமாகப் போகும்படி சொல்லி விட்டு இறங்கினான். அதன்பின் என்றுமே அந்தக் கெட்டவனைக் காணவேயில்லை.

நான் பரீட்சை எழுதுகிற சமயம் ஊர்க் கிராமத்து சிங்கள இளம் பெண் அளவுக்கு அதிகமாக வளைந்து நெளிந்து நாங்கள் ஏறும் வழமையான வீட்டு பஸ்தரிப்பருகே நின்றாள். எதிர்க்கடையில் சூட்டிக்கா நின்றான். அந்தப் பெண்ணையும் எனக்குத் தெரியும். அருகில்தான் வீடு. பாண் செய்யும் பேக்கரிக்காரரின் மூத்த மகள். ஏன் இவள் வழக்கத்துக்கு மாறாக இப்படி நெளிந்தபடி ஏதோமாதிரி நிற்கிறாள். சூட்டிக்காவும் நான் நிற்பதால் சங்கடப்பட்டவாறு…. ஏதும் விசேஷமோ ?…

விசேஷம் தானாம். பிறகு சூட்டிக்கா சொன்னான். அவளை மணக்கப் போகிறானாம். ஆனால், கூடை கூடையாக புத்திமதிகளை எனக்குக் கொட்டினான். “என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. ஆனால் நீ இப்படி அகப்பட்டுக் கொள்ளாதே! நன்றாகப் படி. எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு படி. அதற்கு உதவி தேவைப்பட்டால் அண்ணன் என்னிடம் கேள். என்னால் முடிந்தளவு உனக்குக் கட்டாயம் செய்வேன். நீ நல்ல நிலைக்கு வர வேண்டும்.”

“மகே ஜீவித்தே வாகே ஒயா காலக்கன்னி வென்ட எப்பா” (என் வாழ்க்கை போல உன் வாழ்கை தரித்திரமாகி விடக்கூடாது.) சூட்டிக்காவுக்கு அந்தப் பெண் அத்தனை பொருத்தமானவள் அல்ல என்று எனக்குத் தோன்றியது. ஆனாலும் நான் எதுவும் சொல்ல வில்லை. மிக எளிமையாக அவர்கள் குடும்பத்துக்குள் திருமணப் பதிவு நடந்தது. அம்மாவோடு சாயந்தரமான வேளையில் போய் பரிசளித்து விட்டு வந்தேன்.

நான் பரீட்சையில் மாவட்டத்திலேயே சிறந்த பெறுபேறு பெற்றேன். என் உயர்கல்வியின் பொருட்டுத் தாயாரும் இடமாற்றம் பெற்றிட இருவருமாய் மத்திய மாகாணத்தின் தலைநகர்ப் பகுதிக்கு வந்தோம். என் கல்வி செவ்வனே தொடர்ந்தது.

இந்நிலையில் சூட்டிக்கா படிப்பும் பூர்த்தியாகாததில் அதற்குள் மனைவி, குடும்பம் என ஆகிவிட்டதில் சிங்கள இளைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்பு இராணுவம் என்பதில் அதில் இணைந்துவிட்டான். வடக்கே அனுப்பி விட்டார்கள் என்று கேள்விப் பட்டதாக அப்பா எங்களைப் பார்க்க வந்தபோது சொன்னார். விடுமுறை கிடைத்து வந்த நேரங்களில் அப்பாவைக் கண்டதும் ‘நான் நன்றாக இருக்கிறேனா? நன்றாகப் படிக்கிறேனா?’ என்றெல்லாம் விசாரிப்பானாம். அன்போடு விசாரித்ததாகச் சொல்லச் சொன்னான் என்று அப்பா சொன்னார். சூட்டிக்கா மிகவும் கறுத்து இளைத்து விட்டதாகவும் அப்பா கூறினார். அதற்குப் பின் ஒரே ஒரு தடவை கிராமத்துக்கு அவசரமாகப் போன நான், சூட்டிக்கா, வைக் கண்டேன். ஆனால் கதைக்கக் கிடைக்கவில்லை.

கிராமத்தில் கிராமசேவகரைக் கண்டு அடையாள அட்டை விசயமாக முயற்சிக்க வேண்டிய நிலை. புதுக் கிராம சேவகர், பழைய கிராம சேவகர் என் விண்ணப்பத்தைக் கொழும்புக்கு அனுப்பிய விடயம் பற்றிக் கூறி தாமதம் ஏதுமே தன் சம்பந்தப்பட்ட விடயங்களல்ல என ஒரேயடியாகச் சாதித்தார். ஓய்வூதியம் பெற்று போய்விட்ட பழைய கிராமசேவகரை அன்றே போய்ச் சந்தித்து கடிதம் பெற்றால், கச்சேரியில் கடிதம் பெறலாம். அதையும் எடுத்துக் கொண்டு கொழும்புக்குப் போனால் ஒரே நாளில் அடையாள அட்டை பெற்று விடலாம். அப்படிப் பெற்றால்தான் என் கான்வென்ட் அதிபரான அருட்சகோதரி அவர்கள் உயர்தரப் பரீட்சை விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட என்னை அனுமதிப்பார் என்ற இக்கட்டான நிலை. இதற்காகப் பல தினங்கள் அங்குமிங்கும் அலைந்ததில் பதட்டம் வேறு. படிப்பும் நிறைய வீணாகிவிட்ட குழப்பம் வேறு. பரீட்சை எழுத முடியாது போய் விடுமோ என்ற பயம் வேறு. பஸ்ஸில் ஏறி நேரத்தை, நேரத்தையே பலமுறைகள் பார்த்துக் கொண்டிருந்த நான், சூட்டிக்காவைக் கவனிக்கவில்லை.

கடைசி நேரம் எப்படியோ சூட்டிக்கா என்னைக் கண்டுவிட்டு கதைக்க ஓடோடி வந்தான். அதற்குள் பஸ் புறப்பட்டு விட்டதில் கதைக்க முடியவில்லை . அவகாசம் இல்லாததால், இறங்கிக் கதைத்து விட்டு மறு பஸ்ஸில் பயணிக்கக்கூடிய நிலைமையில் நானும் இருக்கவில்லை. கையை மட்டும் ஆட்டினேன். அப்படியே சூட்டிக்காவும் நின்று விட்டான். கவலையும் ஏமாற்றமுமான அந்த முகம்… பயணம் முழுவதும் வேதனையான நினைவாக மாறியது.

ஆனால், அதே ஏமாற்றமும் கவலையுமான சூட்டிக்காவின் முகம் ஆயுள் முழுவதும் நீடிக்கும் என நான் அன்று நினைக்க வில்லை . அப்படித் தெரிந்திருந்தால் இனிய என் தோழனே! பஸ்ஸை விட்டு இறங்கியிருப்பேனே! மணித்தியாலங்களாகக் கதைத்திருப்பேனே!! ஏன் என்று யோசிக்கிறீர்களா? அந்த சூட்டிக்கா அன்று கதைக்க ஓடோடி வந்தும் கதைக்கக் கிட்டாது நின்றுவிட்ட என் பால்ய சிநேகிதன் யுத்தத்தில் இறந்து விட்டான். வடக்கு, கிழக்கு என பல பகுதிகளில் தப்பி மீண்டவன் எங்கோ எப்படியோ செத்து விட்டான். அவன் மரணச் சடங்குகளுக்கு நானும் அம்மாவும் போகும் பயணம்தான் இது.

கிராமத்தில் போய் இறங்கியதும் “பபா! அப்பே ஐயா கியா” (நம் அண்ணன் போய் விட்டார்) என கதறியபடி மல்லிகா என்னைக் கட்டிக் கொண்டு கதறினாள். பஸ் தரிப்பிடம், பாதையின் இரு பகுதிகள், மல்லிகாவின் வீடு என எல்லா இடங்களிலும் வெள்ளைக் கொடிகள். சோகங்கள் எழுதின சுலோக அட்டைகள், துணிகள். அழுதவாறு உள்ளே பாய்ந்த என்னை இராணுவம் தடுத்தது. ஆம் பெட்டி திறக்கப்படவில்லை . சீலிடப் பட்டிருந்தது. விக்கித்து நின்றேன். ஐயோ! உனக்கா இந்தக் கதி. என்னையே பொத்திப் பொத்தி பாதுகாத்தாயே. உனக்கா இந்தக் கதி? உனக்கு எங்கள் மீது துளியும் கோபமில்லை . ஆத்திரம், ஆக்ரோசம் எதுவுமில்லை . எங்களைக் கொல்லக் குரோதமும் இல்லை. உன்னை எனக்குத் தெரியும். நீ நிரபராதி. பிழைக்க வழி தெரியாமல் பெண்டாட்டி பிள்ளைகளைக் காப்பாற்ற இதில் சேர்ந்தவன்.

பெண்டாட்டி என நினைவு வர அந்தப் பெண்ணைத் தேடினேன். பச்சிளம் குழந்தையைக் கையில் ஏந்தியபடி சோர்ந்து மயங்கியது போன்று நின்ற அவளைக் கண்டபோது….. அழுகை அடக்க முடியாமல் விக்கலாக வெளிப்பட்டது. கேவியபடி அவளைப் பற்றிய போது நிமிர்ந்து பார்த்துவிட்டு என்னைக் கண்டதும் பெரிய குரலெடுத்து அழுதாள்.

“ஐயோ உன் அண்ணன் போய் விட்டார். என்னையும் இரண்டு வாரமே ஆன இந்தப் பிள்ளையையும் இந்த உலகத்தில் தவிக்க விட்டுவிட்டுப் போய் விட்டார். உனக்குத் தெரியுமா? இந்தப் பிள்ளையை – குழந்தையை அவர் ஒரு தரம் கூடப் பார்க்க வில்லையே! குழந்தையைப் பார்க்க வருகிறேன் எனக் கடிதம் போட்டிருந்தார். வருவார் எனக் குழந்தையோடு ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பார்! நடந்து வராமல் பெட்டியில் வந்திருக்கிறார். புதே! உமகே தாத்தா!! ( மகனே! உன் அப்பா!)” கதறினாள். சரிந்தாள்.

“சூட்டிக்கா! நீ இந்தப் பெட்டிக்குள் இருக்கிறாயா? உன் மகனை உன் மனைவியை ஒரே தடவை, ஒரே ஒரு தடவை கூடப் பார்க்காமல் போய் விட்டாயே! உன் மனைவியும் இனி . ஒரு போதும் உன்னைப் பார்க்க முடியாதே…… என்னைப் படி படி என்பாயே…… இனி உன் மகனைக் காப்பது யார்? இந்தக் கொடுமை கள் முடியாதா? என் இனிய தோழனே! இந்த வேதனை, குரூரம் தீரவே தீராதா?”

– வீரகேசரி வாரமலர் – 03.06.2007 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *