என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 13,727 
 
 

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்களே அது மீனாவின் வாழ்க்கையில் உண்மையாகி விட்டது. பெரும் பணக்காரர் மஹாலிங்கத்தின் ஒரே வாரிசு; மீனா; பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர இருந்த அந்த தருவாயில் விதி, அவளை வீதிக்கு கொண்டு வந்ததை சின்னஞ்சிறு பெண்ணான அவள் தாங்கித்தான் ஆக வேண்டும். விதி வலியது அல்லவா?

கனகதாரா இண்டஸ்ட்ரீஸ் பெருமளவில் பெயரும் புகழும் பெற்ற ஒரு ஸ்தாபனம். அதன் நிறுவனர் மஹாலிங்கம்; உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி இவற்றிற்கு உதாரணமாக திகழ்ந்தவர். இன்னும் இன்னும் என்ற போதையில் தன் ஸ்தாபனத்தை அவர் மேலும் மேலும் உருவாக்க நினைத்ததில் தவறே இல்லை. ஆனால் விதி அவர் எண்ணத்தில் மண்ணைப் போட்டு விளையாடியதில் தோற்றுப் போனார். தன் இருப்பில் இருந்த பணத்தோடு மேலும் வங்கியிலிருந்து கடன் வாங்கி தன் ஸ்தாபனத்திற்கு வேண்டிய மூலப்பொருட்களை அன்னிய தேசத்திலிருந்து தருவித்தார். நடுக்கடலில் அவருடைய பொருட்களோடு கப்பல் தீப்பற்றி எரிய மஹாலிங்கம் மனமுடைந்து போனார். அவர் தன் இருக்கையிலேயே சரிந்து கிடந்ததை அலுவலக மேளாளர் பார்த்துவிட்டு மருத்துவ மனையில் சேர்த்துவிட்டார்., சின்னப் பெண்ணான மீனாவிடம் தகவல் சொல்ல அஞ்சி;.ரமணிக்கு தகவல் சொன்னார். ரமணி; மீனாவின் பெரியப்பா மகன். ரமணி மீனாவை அழைத்துக்கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்து வந்தான். மஹாலிங்கம் கோமா நிலைக்குப் போய்விட்டதை மருத்துவர்கள் அறிவித்தனர். மீனாவை ,ரமணி , மிகவும் தேற்றி தன் வீட்டிற்கு அழைத்துப்போனான். மீனாவின் அம்மா போன வருடம்தான் காலமாகியிருந்தார்கள். அம்மாவை இழந்த துக்கதிலிருந்தே இன்னும் அவள் மீண்டபாடில்லை. அதற்குள் அப்பா, கோமாவில் விழுந்து விட்டார்.

ரமணிதான் பாசமழை பொழிவான். ஆனால் அவன் அம்மா அவளை ஏனோ வெறுத்தாள். தன் கணவனின் தம்பியின் ராட்ஷச வளர்ச்சி, பிடிக்காமல் அவர்கள் குடும்பத்தின் மேல் வெறுப்பும் கோபமும் அவள் மனதை சின்னாபின்னமாக்கி, அத்தனையையும் மீனா மேல் காட்ட; அவளோ தவித்துப்போனாள். சின்னன்சிறு பெண்ணான அவளுடைய அனுபவங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட சிரமங்களை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஆனாலும் ரமணியின் பாசம் அவளுக்கு ஆறுதலையே தந்தது. பெரியப்பாவுக்கு வயதாகிவிட்டது., அவருக்கு காதும், கண்ணும் திறன் குறைந்து போனதால் பேசும்படம் மாதிரி டீ.வியையே பார்த்துக் கொண்டிருப்பார். அவரது தம்பி, மஹாலிங்கதின் கவலைக்கிடமான நிலையை சிரமப்பட்டு அவரிடம் விளக்கிய ரமணி அவர் விம்மி அழுவதைக்கண்டு, அலுவலக சமாச்சாரங்களை அவரிடம் தெரிவிக்காமல் தன் அம்மா , தாயம்மளிடம் தெரிவித்தான். “தரித்திரம் நம்ம வீட்டிற்கே குடிவந்திருப்பதை என்னவென்று சொல்ல?” என அவள் அலுத்துக்கொண்டபோது தன் தவற்றை உணர்ந்தான்.

அலுவலகத்தில், ஏராளமான வேலைகள் தொக்கி நிற்கிறது, எனவும், பாங்க் கணக்கில் மாத தவணை செலுத்த வேண்டுமெனவும், மேளளர், ரமணியிடம் கூறவே, அவன் மீனாவையும் அழைத்துக் கொண்டு அலுவலகம் செல்லத் துவங்கினான். “உன் படிப்பை நீ தொடரவேண்டும் மீனா! இந்த ஒரு மாத கால விடுமுறை முடிந்ததும் உனக்கு இடம் கிடைதிருக்கும் கல்லூரியிலேயே சேர்ந்துவிடு. மேலும், சித்தப்பா, இழந்த பொருட்களுக்கு காப்பீடு கிடைத்துவிடும். உங்களின் பெரிய வீடு, கொஞ்ச நாட்கள் பூட்டி இருக்கட்டும். சித்தப்பா குணமாகும் வரை எங்கள் வீட்டிலேயே நீ இருந்து கொள்ளலாம். நான் அவ்வப்போது வந்து அலுவலகத்தையும் கவனித்துக்கொள்வேன்” என்றான். “நம்பிக்கையான மேளாளர், திறம்பட நம் அலுவலகத்தை கவனித்துக்கொள்கிறார். ஆதலால் கவலைப்பட வேண்டாம்” என்றெல்லாம் அவளுக்கு புரிகிற வகையில் எடுத்துச் சொன்னான். தினமும் காலையும் மாலையும் மருத்துவ மனைக்கு மீனாவை அழைத்துக்கொண்டு செல்ல அவன் தவறுவதே இல்லை. அவன் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். அவன் எடுத்திருந்த ஒரு வார விடுமுறை முடியும் தருவாயில், மஹாலிங்கம் தவறிவிட்டதை மருத்துவர்கள் அறிவித்தனர். ரமணி சுதாரித்துக் கொண்டு ,மீனாவைத் தேற்றினான்.

“கவலைப்படாதே. அண்ணன் நான் உன்னை பார்த்துக்கொள்வேன். தைரியமாக இரு.” என்றெல்லாம் கூறினான். மருத்துவமனையில் மஹாலிங்கத்தின் இறுதி காரியங்களில் அவன் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது தாயம்மாளின் சுடு சொற்கள் அவளை தவறான முடிவுக்கு கொண்டு சென்றது. அவள் தன் வீட்டிற்கு சென்று சில ஆடைகளையும் பீரோவிலிருந்த பணத்தையும், தன் பள்ளி சான்றிதழ்களையும், கல்லூரியில் சேர்வதற்காக அப்பாவிடம் கையொப்பம் வாங்கியிருந்த காகிதங்களையும், ஒரு சூட்கேசில் அடைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். எங்கே போகிறோம் என்ற நினைப்பில்லாமல் புறப்பட்டு விட்டாள்..அவளுடை அம்மாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்த அவளுக்கு; யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டு வந்தது அவமான வெட்கமாக இருந்தது. யாரிடம் சொல்லிக்கொள்வது? அப்பாவின் இறுதிக் காரியங்களைச் செய்ய பெண்ணாகிய அவளை யாரும் அனுமதிக்கப் போவதில்லை என்பது அவளின் சொந்த கணிப்பாக இருந்தது. தாயம்மாளிடம் இருந்துகொண்டு குப்பை கொட்டுவதைவிட தனியேதான் தன்னால் தன்னை நிரூபித்துக்கொள்ள முடியும் என்று முடிவெடுத்துவிட்டாள்.

வாடகை கார் பிடித்து கோயம்பேடு வந்தடைந்தாள். அப்பொழுதுதான் புறப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டாள். நடத்துனர் சீட்டுகள் வினியோகித்துகொண்டிருந்தார். பேருந்து எந்த ஊர் வரை போகிறது என்றுகூட பார்க்காமல் இருந்துவிட்டதை எண்ணி தன்னை நொந்துகொண்டாள் .அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த தம்பதிகள், தோரண வாயில் என்று சீட்டு வாங்கியதை கவனித்து அப்படியே கேட்டு தானும் சீட்டு வாங்கிக் கொண்டாள். அவர்கள் இவளைத் திரும்பிப் பார்த்து “அங்கே யார் வீட்டிற்கு அம்மா” என்று வினவ, அவள் பதில் சொல்லும்முன் வேர்க்கடலை விற்பவர் கூவி விற்றதில் அந்த அம்மாள் அதில் கவனம் செலுத்தி அவரை அழைத்து, இரண்டு கடலை பொட்டலங்கள் வாங்கினார்கள். அப்பொழுது அந்த அம்மாளின் கணவரின் கைபெசி அழைக்கவே அவரும் எடுத்து,”ம். ரவிதான் பேசுகிறேன் சொல்”. என்று பேச ஆரம்பித்தார்.

“இந்தாங்க !” என்று ஒரு பொட்டலத்தை அவர் கையில் கொடுப்பதற்கு அந்த அம்மாள் முயற்சிக்கையில், “என்ன ராஜம் பேசிக்கொண்டிருக்கிறேன் தெரியல?. கொஞ்சம் கையில் கொட்டு” என்றார். அந்த அம்மாள் தன் கையை மடக்கி அவர் கையில் கொட்டு ஒன்று வைத்தார்கள். இருவரும் சிறுபிள்ளைகள் போல சிரிக்க, அவர்கள் பெயர் முறையே ரவியும்,,ராஜமும் என்று அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டாள். பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மீனாவுக்கு தான் அப்பாவோடு இப்படி அரட்டை அடிப்பது நினைவுக்கு வர, அழுகையை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள். ஆனால் அவளையும் மீறி கேவல் ஒன்று வெளிப்பட்டது. அதனைக் கேட்டுவிட்ட தம்பதியினர், மீனாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு ஆறுதலாகப் பேசி என்ன ஏது என்று தெரிந்து கொள்ள முயன்றனர். ஒரு கணம் அவள் யோசித்தாள். இவர்களிடம் தன் கஷ்ட்டங்களை சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. ரமணி வேறு தேடிக் கொண்டிருப்பான். அதனால் அடையாளம் மறைத்து வாழ வேண்டும் என முடிவு செய்துகொண்டாள். தன் தோழி, மலரின் குடும்பத்தை நினைவு படுத்திக் கொண்டு அதனையே தன் குடும்ப நிகழ்வுகளாகக் கூறத் துவங்கினாள்.

“என் குடும்பச் சூழ்நிலை நான் வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்றாகிவிட்டது. என் அண்ணனுக்கு பைக் ஆக்சிடென்ட் ஆகி கால் உடைந்து போய்விட்டது. அவருக்கு மருத்துவ செலவுக்கும் வீட்டு செலவுக்கும் தனி ஆளாக அம்மா என்ன செய்வார்கள்”.? என்று சொல்லிக்கொண்டிருந்த போது மலரின் நினைவு வந்து; அவளுக்கு மேலும் சோகத்தைதான் கொடுத்தது. “தோரணவாயிலில் உனக்கு யார் வேலை கொடுக்கப் போகிறார்கள்?.என்ன வேலை?” என்று ரவி கேட்க, “எந்த முடிவும் எடுக்க முடியாமல் இந்த பேருந்தில் ஏறி உட்கார்ந்து விட்டேன். இது கடைசியாக மதுரையில் நிற்கும் என்று இப்போ தெரிந்துவிட்டது. அங்கு போக, மீண்டும் நடத்துனரிடம் சொல்லி சீட்டு வாங்குவேன். அங்கு பெண்கள் விடுதியில் தங்கி வேலை தேடுவேன்”. என்றாள். “நாங்க கூட படித்த பெண்ணாக வேலைக்கு தேடிக்கொண்டிருக்கிறோம். எங்களுடன் வர சம்மதம் எனில் வா” என்று ராஜம் சொல்லவே அவளும் சம்மதித்து அவர்களுடன் சென்றாள்.

இரவு ஒன்பது மணிக்கு தோரணவாயிலில் பேருந்து நின்றது. ரவி, அவ்வூரில் பெருந்தனக்காரர் போலும். அந்த இரவிலும் எதிர்ப்பட்ட ஒரிருவர் “ஐயா! வணக்கம். கார் என்ன ஆயிற்று ? பேருந்தில் வருகிறீர்கள்?” எனக் கேட்டார்கள். “சின்ன ரிப்பேர். சரிசெய்ய சென்னையிலேயே விட்டு விட்டு வந்தேன். நாளை வந்துவிடும்” என்றார்.

அவர்கள், வீட்டிற்கு வந்த மறு நாளே ஹாலில் மாட்டிவைக்கப்பட்டிருந்த புகைப் படத்தைப் பார்த்து மீனா அதிர்ந்து போனாள்.. அது ரமணியின் நண்பன் ராகவனின் புகைப்படம். அது பற்றி ராஜம்அம்மாளிடம் விசாரித்ததில், ராகவன், கப்பல் படையில் வேலை செய்வதாகவும், போனவாரம் வந்துவிட்டு போனதால், இனி அடுத்த வருடம்தான் வரலாம் என்பதையும் தெரிந்து கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அன்றைய நாளிதழில் தன் அப்பாவின் புகைப்படம் போட்டு செய்தி வந்திருந்தது. புகைப்படம் பார்க்கையிலேயே மீனாவுக்கு அழுகை வந்தது. அப்போது ராஜமும் அங்கு வரவே அவ்விடம் விட்டகன்று சமயல்கட்டில் போய் தண்ணீர் குடித்துவிட்டு வந்தாள்.

ரவிக்கு; சோப் தயாரிக்கும் தொழிலோடு செக்கு எண்ணைய்கள் தயாரித்து அவைகளை பாட்டிலில் அடைத்து, மொத்தமாகவும் சில்லறையாகவும் வினியோகிக்கும் தொழிலும்; கூடவே நிலபுலன்களும் இருந்தன. இவளுக்கு வேலை கொடுப்பதை விடவும்; தனியாக புறப்பட்டு வெளியில் வந்துவிட்ட ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு தர அவர்கள் தீர்மானித்தனர் என்றே சொல்ல வேண்டும்.

ரவிக்கு ஏராளமான வேலை ஆட்களும், ஒவ்வொரு வேலைக்கும் தனிப்பட்ட மேலதிகாரிகளும் இருந்தனர். அதுவரை எல்லா கணக்கு வழக்குகளையும் ரவியும், ராஜமும் சேர்ந்தே பார்த்து வந்தனர். இப்பொழுது ,மீனாவும் அவ் வேலையில் பங்கு பெற்றாள். சொல்லப்போனால், கணக்கு சரி பார்த்தலை அவள் திறம்பட கவனித்து, அத்தம்பதியினரிடம் பாரட்டுகளைப் பெற்றாள். அட்டையிலான சரக்கு பெட்டிகளை நாமே தயாரித்தால் இன்னும் லாபம் கிடைக்கும் என்ற தன் கருத்தை அவர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள், மிகவும் மகிழ்ந்து போனார்கள். அந்த அபிப்பிராயம் தங்களுக்கும் இருகிறது என்று சொல்லி, உடனேயே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டர்கள். இவளுடைய நடை, உடை பாவனைகளைப் பார்த்தால், இவள் ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவே செய்தது. அவளுடைய யோசனைகளில் தொழில் நிபுணத்துவம் வெளிப்படுவதை அவர்கள் கண்டுகொண்டார்கள்.

ஆறே மாதங்களில் அவர்களின் தொழில் ஆச்சரியப்படத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டது. இம்மாதிரி ஒரு குடும்பத்தில் அடைக்கலம் ஆனதும் ,இவர்களிடம் நல்ல பெயர் வாங்கி வருவதும் தன் அப்பாவின் ஆசீர்வாதங்களின் பயனாகவே என்று அவள் நம்பினாள். தினமும் காலையிலும், இரவில் படுக்கைக்குப் போகும் முன்பும். மஹாலிங்கத்தின் புகைப்படத்தை வணங்கி வந்தாள். அடிக்கடி ரமணியை நன்றியுடன் நினைவு படுத்திக் கொள்வாள். ஒருநாள், கொல்லைப்புறம் மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் உட்கார்ந்தபடி ரமணியை நினைத்து மெல்லமாக ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள். அப்பொழுது நிஜமாகவே ரமணியின் பேச்சுக் குரல் கேட்கவே. அதிர்ந்து போனாள். கொஞ்சமாக புறவாசல் ஜன்னலைத் திறந்து பார்த்தாள். அது ரமணியேதான். கொல்லைப்புற வாயிலின் வழியே சமையல்கட்டில் நுழைந்து தன் அறைக்குப் போனாள். தன் சூட்கேசை எடுத்துக்கொண்டு சமையல்கார அம்மாளிடம், “என் அம்மாவுக்கு உடல் நலம் மிக மோசமாகிப் போய்விட்டது. அதனால் நான் உடனே கிளம்புகிறேன்”. என்று சொல்லிவிட்டு, “முக்கியமான விருந்தாளி வந்திருப்பதாலும், அவர்கள் மிக மிக நல்லதொரு விஷயமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றும் “இந்த சோகமான விஷயத்தை பிறகு மெதுவாக அம்மாளிடம் கூறிவிடுங்கள்” எனவும் சொல்லி; விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

அடுத்தநாள், அவள் ஊட்டியிலிருந்தாள். அங்கு பெண்கள் விடுதி ஒன்றில் தங்கிக்கொண்டாள். மாதாமாதம், சம்பள பணமாக ரவி கொடுத்து வந்த பணமும், இவள் தன் சென்னை வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்த பணமும் ஒரளவு போதுமானதாக இருக்கவே, கல்லூரியில் சேர்ந்து கொண்டு மேற்கொண்டும் ஏதாவது ஒரு வேலை தேடிக்கொள்ளவும் முடிவு செய்தாள். தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பம் செய்தாள். முன்பு கல்லூரியில் சேர்வதற்காக மஹாலிங்கத்தின் கையொப்பமிட்ட காகிதங்கள் அவளிடம் இருக்கவே அது, அவளுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. காலையும், மாலையும் ஒரு தோட்டத்தில் வேலை செய்து வருமானம் ஈட்டிக்கொண்டாள். பூச்செடிகளை பராமரிக்கும் வேலையை ஆர்வமுடன் செய்தாள், இரவில் தூக்கம் வரும் வரை தபாலில் வரும் பாடங்களைக் கவனமுடன் படிப்பாள். மூன்று வருடங்கள் உருண்டோடிப்போனது. ஒவ்வொரு வருடமும் சென்னை சென்று பெண்களுக்கான விடுதியில் தங்கி, தேர்வுகள் எழுதிவிட்டு வருவாள். அப்போதெல்லாம், தெரிந்தவர்களின் கண்களில் பட்டுவிடப் போகிறோமோ என பயந்த வண்ணம் போய் வருவாள். இன்னும் அவளுக்கு தன் பெரியம்மா பற்றிய பயம் கொஞ்சம் குறைந்து விட்டிருந்தது. இரண்டு வாரங்களே கடைசி தேர்வுக்கு அவகாசம் இருந்தது. அதனால்; பூந்தோட்டதில் வேலைகளை முடித்துவிட்டு அங்கேயே மரத்தடியில் பென்ஞ்ச்சில் அமர்ந்து கொண்டு மும்முரமாக படித்துக் கொண்டிருந்தாள்.

இப்பொழுது அவள் இரண்டும் கெட்டான் சிறுமி அல்ல. வளர்ந்துவிட்ட அழகிய பெண்ணாக, நல்ல விவரம் அறிந்தவளாக ஆகியிருந்தாள். நூல்நிலயத்திலிருந்து எடுத்துக்கொண்டு வந்திருந்த “accounts and audits” என்ற புத்தகத்தினை மிகுந்த ஈடுபாட்டுடன் படித்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது; அவள் அருகே கம்பளி போர்த்துக்கொண்டு, மப்ளர் கட்டிக்கொண்டு ஒருவரும், மற்றும் ஒருவரும் அதே பென்ஞ்ச்சில் வந்து உட்கார இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். ஊட்டி வரும் மக்கள், அத்தோட்டத்தில் பூக்களைப் பார்த்து ரசித்துவிட்டு செடிகளை வாங்கிப் போவார்கள். அதனால் அவள் தன் படிப்பில் மட்டுமே கவனத்துடன் இருந்தாள். பக்கத்தில் அமர்ந்திருந்தவரின் குரல் தன் அப்பாவின் குரல் போலவே இருப்பதைக் கேட்டுவிட்ட அவள், நெகிழ்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள். பேச்சை முடித்துக்கொண்டு இருவரும் கிளம்பிவிட்டனர். அவர் தளர்ச்சியுடன் நடப்பதைப் பார்த்த அவள் மனம் ஏனோ வருத்தமுற்றது.

அதற்கு அப்புறம், படிப்பில் மனம் செல்லாததினால், தன் விடுதி அறைக்குச் செல்ல புறப்பட்டாள். தோட்டத்தின் அலுவலகத்தில் செடிகள் வாங்கிக் கொண்டிருந்த ஒருவர், ரமணியின் சாயலிலிருக்கவே, சிறிதே தாமதித்தாள். பிறகு, “இன்று ரொம்பவே வீட்டு ஞாபகம் வருகிறது. தேர்வுகளை முடித்தவுடன் சென்னையில் என் வீட்டிற்கே செல்ல முடிவு செய்திருக்கிறேன். அதற்குள் இப்படி ஞாபகங்கள் வந்தால் தேர்வுகள் என்ன ஆவது” என்று மனதினுள், தன்னையே கடிந்து கொண்டாள். “ரமணி அண்ணாவை சந்திக்கும்போது அவர் காலில் விழுந்து . மன்னிப்பு வேண்டி நிற்கவேண்டும். மன்னிப்பாரா? இபோது நான் வளர்ந்து விட்ட பெண்ணாகிவிட்டேன். பெரியம்மா ஒன்றும் என் மனதைக் காயப்படுத்தமாட்டார்கள். மேலும் நான் என் வீட்டிலேயே இருந்து கொள்வேன். ஊரெல்லம் தனியாக சுற்றித் திரிந்த என்னை; தனியாக இருக்கக் கூடாது என்று யாராவது சொல்வார்களா என்ன?” என்று தனக்குத்தானே மனதோடு பேசிக்கொண்டாள்.

பூந்தோட்ட வேலையை ராஜினாமா செய்தாள். ஊட்டியிலிருந்த தன் விடுதி அறையைக் காலி பண்ணிக்கொண்டு சென்னையில் இருந்த விடுதி ஒன்றில் போய்த் தங்கினாள். பத்தே பத்து தினங்களில் தேர்வுகளை முடித்துக்கொண்டு, ரமணியை சந்திக்கப் போகிறாள் என்ற எண்ணத்தினால், அவளுள் மகிழ்சியும் கூடவே தடுமாற்றமும் ஏற்படவே, தன் மனதிற்கு கடிவாளம் போட்டாள். “தேர்வுகள் முடியட்டும். எதையும் முன்னதாக யோசித்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம். அண்ணனை நேரில் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.”

பத்து நாட்கள் கழித்து, ஸூட்கேசுடன் தன் வீட்டின் முன் போய் நின்றாள். வீட்டின் காவல்காரர் ஹிந்தியில் “க்யா சாஹியே” என கேட்டார். புது ஆள் போலும். “என்ன வேண்டும் என்று கேட்கிறாரே. “எஜமானரைப் பார்க்க வேண்டும்.” என பதிலிறுத்தாள். காவலாளி அந்த பெரிய கேட்டைத் திறந்துவிட்டார். வீட்டின் முன் அழகாக கோலம் போடப்பட்டிருந்தது. வீட்டினுளிருந்து யாரோ லொக் லொக் என்ற இருமும் சப்தம்.கேட்டது..இந்த வீட்டை யாருக்கேனும் விற்றுவிட்டார்களோ என்று எண்ணியவள், மறுபடி திரும்பி வீதிக்கே வந்து நின்றாள்.

வீதியில் விதி தன்னை நிறுத்திவிட்டதை எண்ணி கலக்கமுற்றாள். அப்பொழுது வீட்டினுள்ளிருந்து ஒரு நாய் இவளை நோக்கி ஓடிவரவே பெட்டியைக் கீழே போட்டுவிட்டு பயந்து, ஓட எத்தனிக்கையில், இவள் அருகே வந்துவிட்ட அது வேகமாக வாலை ஆட்டியபடி இரண்டு கால்களையும் தூக்கி இவள் தோள்கள் மேல் வைத்து சப்தமாக முனங்கிக் கொண்டு தன் நாக்கால் நக்கத் துவங்கியது. “ஆ! இது என் டாமி அல்லவா? ரமணி அண்ணா என்னைத் தன் வீட்டிற்கு அழைத்துப் போன போது டாமியையும் தூக்கிக் கொண்டு சென்றேனே!” சப்தம் கேட்டு ரமணி, வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தான். அவனுக்குப் பின்னாலிலிருந்து எட்டிக்கொண்டு பார்ப்பவர் அப்பா அல்லவா! அப்பா! என்று ஓடோடிச்சென்று மஹாலிங்கத்தைக் கட்டி அணைத்துக்கொண்டாள். நீண்ட பிரிவுக்கு அப்புறம்; அதுவும் இறந்து போய்விட்டதாக நினைத்த தன் அப்பா, இன்று நகமும் சதையுமாக தன் அணைப்பிற்குள்… இருவருமே பாசப்பிணைப்பில்.. மோனதின் மொழியை விவரிக்கக் கூடுமோ! “உள்ளே வா மீனா உனக்கு இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன”. என்ற ரமணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க “என்னை மன்னித்து விடு அண்ணா” என்றாள் தொண்டை கரகரக்க.

“ம்ஹூம். உள்ளே நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லொருடைய காலிலும் நீ விழுந்தால்தான்; உன்னை நான் மன்னிப்பேன் என்றான் சிரித்துக்கோண்டே. உள்ளே போன அவள்; ரவி, ராஜம், ராகவன் அனைவரையும் பார்த்து வெட்கி தலை குனிந்தாள் “இப்படி ஓடிப்போனதற்காக வெட்கப்படக்கூடாது. மணப்பெண்ணாக வெட்கப்படவெண்டும்.” என்ற ரமணியின் பின்னால் ஒளிந்துகோண்டாள். லொக். லொக் என்று இருமியபடி பெரியப்பா ஒரு மூலையிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். அவர் அருகே தாயம்மாள். கண்ணீர் பெருக நின்றிருந்தார்கள். மீனா, அவர்கள் அருகே சென்று கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

“சித்தப்பா இறந்து விட்டார்கள்” என்று அவசரப்பட்டு அறிவித்த டாக்டர், பிறகு மறுபடியும் i.c.u வில் இருந்த அவருக்கு மீண்டும் அதிக அளவில் ஷாக் கொடுத்துப் பார்தார். அப்போது உயிர் பிழைத்த அவர், கோமாவிலிருந்தும் விடுபட்டுவிட்டார். பெண்ணான நீ காணாமல் போனதை ஒருவருக்கும் சொல்லாமலேயே தேடிக்கொண்டிருந்தோம். சித்தப்பாவின் புகைப்படம் போட்டு இறந்து போனதாக கருதப்பட்டவர் பிழைத்துக்கொண்டார். என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தோம். அதைப் பார்த்தால் நீ இங்கு வந்துவிடுவாய் என நினைத்தோம்.” இப்படி சொல்லிக்கொண்டிருந்த ரமணியை; அங்கு வந்த ராகவன், குறுக்கிட்டான்.

என் அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது. ஒரு கெட்டிகாரப் பெண் தங்களுக்கு உதவுவதாகவும், தங்களுக்குப் பெண் இல்லாத குறையை அவள் நீக்கிவிட்டதாகவும் எழுதி, நீ ஊஞ்சலில் ஆடுவதைப் படம் பிடித்து அனுப்பி இருந்தார்கள். அந்த கடிதத்தையும், படத்தையும் நண்பன் என்ற வகையில் ரமணிக்கு அனுப்பி இருந்தேன். அதான் ரமணி அங்கு உன்னைத் தேடி வந்ததும் நீ சொல்லாமல் கொள்ளாமல் ஊட்டிக்கு கிளம்பிப் போய்விட்டாய். நீ ஊட்டியில் இருப்பதையும் ஒரு இருபது தினங்களுக்கு முன்தான் கண்டுபிடித்தோம் இப்பொழுது மஹாலிங்கம் குறுக்கிட்டார்.

அங்கு மப்ளர், கம்பளி சகிதம் உன் அருகே உட்கார்ந்து நீ படிப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். நீ தேர்வுகள் எழுதி முடித்துவிட்டு இங்கு வருவதாக உத்தேசித்திருக்கிறாய். என உன் நெருங்கிய தோழி மூலம் தெரிந்து கொண்டோம்.

ராகவன், குறுக்கே பேசினான் அது தெரிந்து இப்போ நாங்கள் பெண் பார்க்க வந்திருக்கிறோம். என்றான். மீனா உள்ளே போக எத்தனிக்கையில், “என்னைவிட்டு ஓடிப் போக முடியுமா? இனி முடியுமா?” என்று பாட அனைவரும் மகிழ்ச்சியுடன் சிரித்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *