கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 10,967 
 
 

பெரியவனுக்கு சேதி சொல்லியாச்சா…வெடி வாங்க யாரு போயிருக்கா…

எலேய்…கொண்டையா அழுவுறத வுட்டுபுட்டு ஆற சோலிய பாரு…

மனச கல்லாக்கிக்கிட்டு பர பரப்பா அலஞ்சாரு மணிவாசகம் மாமா…

அலோ….யாரு சேராமனா(ஜெயராமன்)….அப்பா……

அடுத்த பஸ்சில் ஏறியாச்சு…

முதலாமாண்டு கல்லூரி படிப்பிலிருந்து பெறகு பட்டணத்து வேல பெறகு வெளிநாடு மறுவடியும் பட்ணமுன்னு அப்பா கூட இருந்தது கொறச்ச காலந்தான்…

நரசிங்கபாளையம் எங்கூரு… டீ தண்ணி குடிக்கனும்னாலும் சீக்கு நோவு வந்தாலும் டவுனுக்குதான் வரனும்…இப்போதேன் காரு,வண்டி அப்போலான் மாட்டுவண்டி இல்லாட்டி. சைக்கிளு

எறாங்குடி கருப்பந்தோட்டம் தாண்டனும்னா ஆத்தா குடுத்த சீம பாலு வெளிய வந்துடும்.இப்போ அங்க அங்க வூடு மொளச்சிடுச்சி….

கள்ளாங்கொளம்,வெட்டியாங்கொல்ல,ஆகாசவீரங்கோயிலுனு அப்பாவும் நானும் பெரிய மாட்ட தேடி அலஞ்சது நெனவுல வந்து நிக்கிது.

அப்படிதான் ஒரு தடவ….

பெரியவன நீ அம்மாசி வூட்டு கொல்ல வழியா வா…நான் மரக்காயன் தோப்பு வழியா பூந்து வர்றேன்…எவன்னு பாத்து பஞ்சாயத்துல நிறுத்திடுனும்…ஒக்காள ஓழி மொவனுவோளுக்கு ஏமூட்டு கொல்லதான் கெடச்சிதா…கரும்பு போட்ட கொல்லயாச்சேனு அறிவு கிறிவு வாணாம்.

ரெண்டு பேரும் எதுத்த எதுத்த நடுவுல வந்துட்டோம்…கீழத்தெரு அய்யாகண்ணு,கரும்பன்,மதுப்பன் படாச்சிதெரு செவுடரு,சட்டாம்புள்ள எல்லாரும் சாராயத்த புல்லா குடிச்சிட்டு நெலயில்லாம கெடந்தாங்க.

வேக்கு…வேக்குன்னு ஓடி பெரண்ட கொடிய பிச்சிட்டு வந்து பூரா பய கையும்,காலையும் கட்டி அங்கயே போட்டுட்டு நாட்டாமூட்டுக்கு ஓடுனோம் நானும் எங்கப்பனும்…கோனாமூட்டு முந்திரி வர்றதுக்குள்ள மனசு மாறி திரும்பவும் எங்கூட்டு கொல்ல பக்கமே ஓடுறாரு…

யப்பாடி ஓத்தா மொவன கால வலிக்கிது புள்ள எங்க திரும்பி ஓடுற…பாவம்டா அந்த பயலுவோ பாம்பு கீம்பு கெடந்து புடுங்கிட போகுது…கட்ட அவுத்து வுட்டுபுட்டு வரப்புல கொண்டாந்து போடுவோம்.தெளிஞ்சா வூடு போயி சேரட்டும்.நாளைக்கி கடத்தெருவுல பாத்து கண்டிச்சி வுட்டுடுவோம்.

என்ன எழவு மனசோ ஒனக்கு எந்தாத்தன மாறியே இரு. ஒருநா எல்லாத்தயும் உருவி வுட்டுட்டு ஆண்டியா வுட போறானுவோ…

கெடக்கட்டும் போடா பெரியவன…நீங்கலாம் இருந்தா என்ன வுட்டுடுவீங்க…

பேருந்து நின்றது
எனக்கு கண்ணீர் வழிந்ததது

வண்டி பத்து நிமிசம் நிக்கும்………….

யப்பா ஒங்க பக்கத்துல ஒக்காந்திருந்தவங்க வந்துட்டாங்களா….போலான் ரே….

தேசிய நெடுஞ்சாலையின் அரளிச்செடி வாசமடிக்க லேசான தூரல் ஊசி ஊசியாய் கன்னமடித்தது.

பெரியவன வானம் ரொம்ப இருட்டுது மழ கிழ வந்தா அந்த நேரத்துல ஆட முடியாது.நீ ஆட்டு மாட்ட புடிச்சி கொட்டாயில கட்டு. நான் பெரிப்பா வூட்டு கொட்டாயில வக்கெ அள்ளிட்டு வறேன்.

என்னா பெரியாயி மழ வர்ற மாறி இருக்கு சார அடிக்கும் உள்ள போயி படுத்தா என்ன திண்ணைல கெடக்குற…

பெத்த புள்ளயே ஏன்னு ஒரு வாத்த கேக்குல ஏஞ் சின்ன மருமொவனுக்கு அடிச்சிக்குதுனு சமுக்காளத்த நெருக்கி போத்துகிட்டு படுத்துக்குச்சி பெரியாயி…

அண்ண வூட்ல இருக்கா?

கொல்லைல ஆளு கரும்பு வெட்டுது அங்க இருக்காங்க… என்ன சோலி?

மழ வர மாறி இருக்கு…இருந்த வக்கெ தீந்துடிச்சி ஒரு சேர வக்கெ அள்ளிக்கிறேன்.அடுத்த மாசங் குடுத்துட்றேன்.

ஒங்கண்ணன் காதுல வுழுந்துட போவுது திருப்பி தர்றாங்களாம் திருப்பி…ஆரு எவருன்னு மனசுல நெனச்சியே பேசுறதில்ல வாய்க்கு வந்தத பேசிட வேண்டியது.

பாதி வக்கெ இழுக்கும்போதே ஒரு சார பட்ற(சாரை பாம்பு) எட்டி பாத்துது அய்யாரு பாக்குல…பொளேர்னு வாலால ஒரு போடு…..ஏ…பெரியாயி….பெரியாயி….

பதறியடிச்சி ஓடியாந்தாங்க அண்ணம் பொண்டாட்டி… பெரியாயி பர பரனு ஓடும்னா கூப்டுறீங்க…ஏங் கத்துறீங்க…

பாம்பு பாம்புன்னு பதறவும் பதறியடிச்சி ஓடி ஆளுவோல கூப்ட போய்ட்டாங்க…

ராமசாமி வண்டிய பூட்டிட்டாரு…

ஊர்லருந்து எட்டு பர்லாங்கு ஆசுபத்திரி காளியாயி மேல பாரத்த போட்டு கெளம்புங்க அந்த ஆத்தா கை வுட்ற மாட்டா…..

பண்ருட்டி எறங்குதா?

மாலை வெயில் பலாப்பழ வாடையாய்…….

மெல்ல நகர்ந்தது பேருந்து.

தருமாசுபத்திரி போவுனுமா இல்ல கருப்பியா டாக்டர்ட்ட போவுனுமானு மாட்டை அடிச்சு விரட்டிக்கொண்டிருந்தார் ராமசாமி….

விசும்பிக்கொண்டே நான் திண்ணையில் அமர்ந்திருந்தேன்.

தெக்க பறையங்கொளம் நோக்கி ஆடுகளும்,மாடுகளும் திரள் திரளாய் தண்ணீர் அருந்த சென்றுகொண்டிருந்தன.மேலாண்ட சூரியன் இளித்துக்கொண்டிருந்த நேரம்….

சின்னவன ஒப்பாரு நல்லா இருக்காப்டி அழுவாத போய் சாப்டு நாம பாக்க போவோம்…நான் நாலு பருக்கய அள்ளி போட்டுட்டு வரேன்னு….வண்டிக்கார ராமசாமி சொன்னதும்தான் திண்ணையிலிருந்து எழுந்தேன்.

சுத்துபட்டு 32 ஊருக்கும் ஆண்டிமடம் தருமாசுபத்திரிதான்.கடைசியா மாணிக்கம் பேரன் மருந்து குடிச்சி கெடந்தப்ப வந்தது… இன்னமும் இந்த அரச மரத்தடி காக்கா பீய யாருங் கழுவல….ச்சீ….

அப்பாடி….அப்பா…நல்லாருக்கியா…

நீ யாம் மசுரு வக்கெ புடுங்க போன நாம் போயிருப்பேன்ல…

போடா சிறுக்கி மொவன ஒன்ன மட்டும் பாம்பு கொத்தாதா…நல்லாதான இருக்கேன் செத்தாபுட்டன்.

அந்த மாறி பேசாத அப்பாடி….

வேர்க்க விறு விறுக்க ஒடியாந்தார் ராமசாமி…சின்னவன பெரியாயிக்கி முடிஞ்சிடிச்சான்.அஞ்சர பஸூல வந்து சொன்னான் புத்தூரான்.

அய்யாருதான் வருத்தப்பட்டாப்ல…சின்னவனுக்கு அப்படி ஒன்னுஞ் சோகமில்ல….பெரிப்பரு மாமியாதான அதான் பெருசா ஒன்னுந் தெரில….

சின்னவன பெரியாயி பத்தி ஒனக்கு தெரியாது… ஞாயமா நீதான் கொள்ளி வக்கினும்.

என்னா அப்பாடி சொல்ற பெரியாயிக்கி நான் யான் கொள்ளி வக்கினும்.

ஒம் பெரியாயி ஆத்தாதான் அது. ஆனா அது ஓத்தாளதான் பெத்த புள்ளயா நெனச்சி நம்ம வூடே கெதியா கெடக்கும்.அதுக்குனே ஒம் பெரிம்மாளுக்கு ஆயிய புடிக்காது.

கேவுறு அட,கம்மந்தோசனு சுட்டு எடுத்துக்கிட்டு கெளம்பி வந்துடும் நம்பூட்டுக்கு….

முடிவா எனக்கு ஒன்னு தெரினும் நீ என்ன பெத்தியா இல்ல இந்த சீக்கு நோவுகாரிய பெத்தியானு கத்துது ஒம் பெரிம்மா…

அடி திருட்டு பய மொவள மசுற அறத்துபுடுவேன்.மட்டு மரியாத இல்லாத பேசாத…இப்பதான் ஒனக்கு இவ சீக்கு நோவுகாரியா தெரிரால இவ ஆத்தா வச்சி வச்சி அழுத்தும்போது ஒப்பனும் நீனும் தின்னுது நெனவுல இல்லியே…

ஏ…கெழட்டு சிறுக்கி என்னா புதுசா கத சொல்ற…

ஆத்தா நீ எதுக்கு அதெல்லாம் சொல்லிக்கிட்டு கெடக்க அதாங் கழுத கத்துதுன்னா நீயுமா…

நாம் பட்ட கஷ்டத்த பாத்த சனம் பாவம்னுது கண்ட சனம் காவம்னுது.இவ அப்பன் தெம்புலதான் ஒப்பன் உசுறும் ஓங் உசுறும் கெடக்குது.

சாராயங் காச்ச போவான்…வூடு திரும்பும்போது பானைய ஒடச்சிட்டு வம்பு இழுத்துட்டு வருவான்.ஒழச்சியும் பிக்கியில்ல ஒன்னுத்திக்கும் சேர்த்தியில்ல…இந்த குடிகாரங்கிட்டயே குடும்பம் நடத்தி ஒன்னையும் பெத்துதே பெரும்பாடு.அப்பிடியும் சாராயங் குடிச்சா எவனுக்கு பெத்தன்னுதான் இழுத்து போட்டு அடிப்பான்.

நெற போதைல வண்ணாங்கொளத்து மோட்டுல கெடந்த ஒப்பன மோட்ரு சைக்கிள்ள கொண்டாந்து வுட வந்த மவராசந்தான் இவ அப்பன்…

அதுக்கப்புறம் ஒப்பன் எங்க போதைல கெடந்தாலும் கொண்டாந்து வுட்ருவாறு…

க்ர்ர்ர்…த்தூ

ஒன்ன என் ஆத்தான்னு சொல்றதுக்கே கூசுதுடி தேவுடியா…

ஓத்தா எழுந்துருச்சி வுட்டா ஒரு அற…

ஒம் பெரிப்பனுக்கு மூஞ்சில ஈயாடுல

அதுக்கப்புறம் ஓத்தா சொன்ன கதையிருக்கே!!!!

ஒம் பெரிம்மாவோட ரெண்டு வயிசு கொறச்சதான் ஆனா சமத்துக்காரி…ஒம் பெரிம்மா திங்கதான் லாயக்கி…

அக்கோவ் ஒன்னோட வயசுல சின்னவதான் நான் எங்கப்பாரும்,எம்மாளும் ஒங்க வூட்டு செரமத்ததான் பாத்தாங்க…ஆயி மேல ஆச வச்சி எப்பன் சேவ செய்யில…வவுத்துல பட்ட பூச்சின்னு துடிச்சிட்டு கெடந்த ஒங்கப்பாரு எடுத்துட்டு வந்த காடி வெல்லத்த பூரா தின்னுட்டு சூத்த நோண்டிக்கிட்டு கெடந்த கேவுறு வித்த காச குடுத்துதான் கருப்பியா டாக்டருக்கிட்ட காட்ட சொன்னாரு எப்பன்.

எறாங்குடில சாராயங் காச்சிட்டு முக்கா போதைல தடுமாறி நின்ன ஒப்பன மீஞ்சுருட்டி போலிசு புடிச்சிட்டு போனப்ப….கட்சிக்கார்ரு வெண்ணங்குழி நாட்டார வச்சி அழச்சிட்டு வந்துது எப்பன்.

சொல்லிக்காட்ட வச்சிட்டியே பெரியக்கா..ன்னு அழுவுறா ஒம்மா…படார்னு கால்ல வுழுந்துடிச்சி ஒம் பெரியாத்தா…அட எந்திரிக்கா இது என்ன பழக்கம்…ஓத்தாள நீயே வச்சிக்க…அம்மோவ் நீ எப்பயாச்சும் என்ன வந்து பாரு அக்கா வூட்லயே இரு உசுறு கெடந்தா நான் வந்து பாக்குறேன்.

கொஞ்ச நாள்ல ஒம்மாளும் போயிட்டா அன்னக்கி படுக்கைல வுழுந்த பெரியாயிதான்….

ஒம்மா கரும காரியத்துக்கு வந்து அழுதுபுட்டு ஒம் மொவன் கொள்ளி வச்சா எம் மனசு அடங்கும்னு அழுதுச்சி…

ஜெயங்கொண்டம்லாம் எறங்குங்க….

சேராமா எங்க இருக்க எல்லாம் ரெடியாருக்கு மொட்ட அடிக்க பரேரிய வரச் சொன்னன் இன்னும் வரல…நீ வர்றதுக்கும் அவன் வர்றதுக்கும் சரியா இருக்கும்..இப்போ நீ கரெட்டா எங்க இருக்க?

சேங்கணத்துல மாமா…

சரி 13 வரும் அதுல வந்துடு

மாமா….

சொல்லுப்பா…

நான் வந்து மொட்ட அடிச்சதும் எடுத்துருவீங்களானு பஸ் ஸ்டாண்டுன்னு கூட பாக்காம கதறி அழுவுறான்.

13 ம் வந்துடுச்சி

டிக்கெட்…டிக்கெட்…

நரசிங்கபாளையம் ஒன்னு….

கருவேல மரங்கள் உரசி உரசி கீறல் விழுந்திருந்தது பேருந்தின் இரு பக்கமும்…

ஒவ்வொரு ஊரையும் கடக்கையில் உள்ளங்கையை துடைத்தபடி அமர்ந்திருந்தான்.

அங்கங்கே கண்ணீர் அஞ்சலி நோட்டிசுகள் மேலும் மன பாரத்தை கூட்டுகின்றன.

குருங்குடி வாண வெடிச் சத்தம் மண்டைய பொளக்குது….தஞ்சாவூரு கரகாட்ட செட்டு காத கிழிக்கிது…

மாப்புள….மாப்புள…

மாமா….ஆஆஆஆஆஆஆ

கதறியடிச்சி ஓடுகிறான் ஜெயராமன்..

தம்பி வந்துட்டான் ஒம் மொவன் வந்துட்டான் எந்திரிச்சி பாருய்யானு அழுவுறா கொடவுகண்ணி….

ஏவூட்டு ராசா
ஒப்பன பாரு
ஏவூட்டு ராசா
ஒப்பன பாருன்னு மாருல அடிச்சி அழுவுற மனங்கொடுப்பு கெழவிய பாத்ததும் அழுவ தாங்கல…

கொல்லாரம் போன கொண்டையன் ராட்டியும்,பானையுமா பரேரிய கையோட அழச்சிட்டு வந்தான்.

சட்டு புட்டுனு மொட்டைய அடி….தண்ணி கொடம் எடுக்குறவங்க வாங்க

காலு கட்டு வா கட்ட அவுத்து பங்காளிலாம் கொண்டாந்த தண்ணிய ஊத்தி குளிப்பாட்டியாச்சி….

அப்பா…அப்பாடி….

ரெண்டாவதா புள்ள பொறக்காமயா போயிடுன்னு பெரியவன பெரியவனன்னு சொல்லி வளத்தியேப்பா எனக்கொரு தம்பி இல்லாம போயிட்டீங்க பொண்டாட்டியும் தானுமா….

ஒண்டியா கெடக்குறேம்ப்பா….அப்பாடி ஒண்டியா கெடக்குறேம்ப்பா….

பந்தல சுத்தி நின்ன சனமே கோன்னு அழுவுது…பாடைய தூக்கியாச்சி…

வந்தராங்குடி ஆளுங்களுக்கு கெழக்கால குழி உள்ளூரு ஆளுங்களுக்கு மேக்கால குழி…எரிக்கனும்னா ஒரு மேடதான்…

மூனு தரம் குழி சுத்தி மூஞ்ச பாத்து மண்ணள்ளி போட்டு ஒடஞ்சி ஒக்காந்துட்டான் சேராமன்.

பங்காளிவோ வாங்கய்யா ஆளுக்கு பத்து கொட்டு இழுத்து மூடுங்க….

சாங்கியம்லாம் முடிச்சி ஆளுவோ வூட்டுக்கு திரும்புது….

சோமூ வூட்டு கொல்லயில மேஞ்ச பெரிய கெடேரி சுடுகாட்ட பாத்து கத்திக்கிட்டே ஓடுது….

-முற்றும்

# என் கதை மாந்தர்கள் இனி உங்களோடு வாழ்வார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *