உயிர் வெளிக் காகிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 15, 2013
பார்வையிட்டோர்: 9,125 
 

நான் கோடியில் ஒரு ஜீவன். என்னை நான் ஒருத்தி என்றோ ஒருவன் என்றோ சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்பதில்லை சொல்லிக் கொள்ள முடியாது. இல்லை! நீங்கள் நினைப்பது போல இல்லை!. நான் திருநங்கை அல்ல. அவர்களைத்தான் ஒருத்தி என்று குறிப்பிட முடியுமே. எப்படி ஆண்களில் திரு நங்கைகள் உண்டோ அதே போல் பெண்களிலும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த வகையைச் சேர்ந்தது தான் என் பிறப்பு. பெண்களுக்குரிய எந்த வளர்ச்சியும் இருக்காது. அதே சமயம் ஆண்களுக்குரிய வளர்ச்சியும் முழுமையாக இருக்காது. அதனால் தான் நான் என்னை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் போல் இருப்பவர்கள் கோடியில் ஒருவர் தானாம். டாக்டர் சொன்னார். அதனால் தான் நான் என்னைக் கோடியில் ஒரு ஜீவன் என்றேன்.

என் அம்மா தான் பாவம். என்னை வைத்துக் கொண்டுப் போராடிக் கொண்டிருக்கிறாள். என் பிறப்பு இப்படித்தான் என்று நான் பிறந்த உடனேயே ஆஸ்பத்திரியில் சொல்லி விட்டார்களாம். அன்று பயந்து கொண்டு போன அப்பா தான் அவரை இன்று வரை நான் பார்த்ததில்லை. எனக்கும் வயது இருபத்தெட்டாகிறது. என்னைச் சிறு வயதிலிருந்தே வழக்கமாக பரிசோதிக்கும் டாக்டர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அம்மா என்னை பள்ளியில் சேர்த்தாள். எழுத்துக்களைப் பார்த்தால் ஏதோ படங்களைப் பார்ப்பது போல இருந்ததே தவிர என்னால் அவற்றை வேறு படுத்தி அறிய முடியவில்லை. மிகவும் கஷ்டப் பட்டு முயற்சி செய்த போது , தலை வலித்து , கை கால்கள் வெட்டி இழுக்க ஆரம்பித்து விட்டது. என்னைப் போன்ற பிறவிகளால் படிக்கவோ எழுதவோ முடியாதாம். எங்கள் மூளை அதற்கேற்றபடி வடிவமைக்கப் படவில்லையாம். இதுவும் டாக்டர் சொன்னது தான்.

என் போன்ற பிறவிகளை படிப்பு மட்டுமே காப்பாற்றும் என்ற உறுதியோடிருந்த அம்மா தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். என்னுடைய ஐந்தாம் வயதில் என்னால் அவளுக்கு ஏற்பட்ட தோல்வி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அவள் மனம் தளரவேயில்லை. என் அப்பா எங்களை விட்டு ஓடிப் போனார் என்று சொன்னேன் அல்லவா , அப்படி அவர் விட்டு விட்டு ஓடிப் போன போது அம்மாவுக்கு இரண்டு குழந்தைககள். எனக்கு அண்ணன் ஒருவனும் இருந்தான். அவன் மேல் அம்மா மிகவும் நம்பிக்கை வைத்திருந்தாள். அவன் நன்கு படித்து பெரிய உத்தியோகம் பார்த்து என்னைக் காப்பாற்றுவான் என்று.

அம்மாவின் அதிர்ஷடம் தான் நான் பிறந்தபோதே தெரிந்து விட்டதே. அண்ணன் மிகவும் சுமாராகப் படித்தான். அம்மாவும் பெரிய வீடுகளுக்கு சமைத்துக் கொடுத்தும் , சாயங்கால வேளைகளில் இட்லி விற்றும் , ஹோட்டல்களுக்கு சில பண்டங்கள் சப்ளை செய்தும் எங்களைக் காப்பாற்றினாள். அவள் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. வீட்டு வாடகை கொடுக்க முடியாத சமயங்களில் , வீட்டின் சொந்தக்காரர் அம்மாவைப் பார்க்கும் பார்வை! அம்மா கூசிப் போவாள். அவர் போன பிறகு , என்னைக் கட்டிக் கொண்டு “நீ ஒழுங்கான பிறவியா இருந்திருக்கக் கூடாதா? நீயாவது நல்லாப் ப்டிச்சு என்னைக் காப்பாத்துவியே? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பாடு?” என்று அழுவாள். அதன் அர்த்தம் அப்போதெல்லாம் எனக்குப் புரியாது.

அண்ணன் இது ஒன்றிலும் பட்டுக் கொள்ள மாட்டான். அவ்வப்போது அம்மாவிடம் அடித்துப் பிடுங்கி செலவுக்குக் காசு வாங்கிக் கொண்டு போவான். எல்லா கிளாசிலும் ஃபெயிலாகி ஃபெயிலாகிப் படிக்கிறான் என்று அம்மா மிகவும் வருத்தப் பட்டுக் கொள்வாள். ஒரு நிலையில் பள்ளிப் படிப்புக்கு மொத்தமாக முழுக்குப் போட்டு விட்டான். அம்மா கேட்டதற்கு என்னால் படிக்க முடியாது என்று அடித்துக் கூறி விட்டான். வேலை தேடுகிறேன் பேர்வழி என்று வெளியில் சுற்றிக் கொண்டிருந்தான். அம்மா தான் அவனுக்காகவும் சேர்த்து சம்பாதித்தாள்.

அம்மாவுக்கு ஓய்வு என்பதே கிடையாது. காலையில் சமையல் வேலைக்குப் போவாள். முன்னெல்லாம் என்னையும் அழைத்துக் கொண்டு போவாள். ஒரு சிலர் என் வரவை விரும்பாமல் , அதைச் சொல்லவும் முடியாமல் அம்மாவை சமைக்க வேண்டாம் என்று சொல்ல ஆரம்பித்ததிலிருந்து அம்மா என்னை விட்டு விட்டுத்தான் போகிறாள். மதியம் வந்து சாப்பிட்டு விட்டு , மறு நாள் இட்லிக்கு மாவு அரைப்பாள். சாம்பார்ப் பொடி , ரசப் பொடி ஊறுகாய் என்று தயார் செய்து தெரிந்த வீடுகளுக்கு விற்பாள். சாயங்காலம் ஆனதும் இட்லிக் கடை.

காலையில் அம்மா வேலைக்குப் போகும் அந்த நேரம் மட்டுமே எனக்கான நேரம். நான் முழுத்தனிமையில் என்னை மறந்து ரசிக்கும் நேரம். அழகழகான பெண்களும் , ஆண்களும் விரைந்து செல்வதை வேடிக்கைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுடைய முக பாவங்களிலிருந்து அவர்கள் எப்படிப் பட்டவர்கள் ? என்று யோசிப்பேன். சில குழந்தைகளும் போகும். அதில் ஒரு குழந்தை மூன்று அல்லது நாலு வயது தான் இருக்கும் , தலை நிறைய முடியுடன் , குண்டு கன்னங்களோடு .யூனிஃபார்ம் அணிந்து அப்பாவுடன் போகும். என்னைக் கடக்கும் போதெல்லாம் என்னைப் பார்த்து அழகாகச் சிரிக்கும். நானும் சிரிப்பேன். அந்தச் சிரிப்பில் நான் கரைந்து போவேன். இது வரை என்னைப் பார்த்து யாரும் சிரித்தது கிடையாது குழந்தைகளைத் தவிர என்ற தகவல் உங்களுக்காக.

எனக்குள் ஆயிரம் கேள்விகள். இந்த மனிதர்கள் எங்கே? எதற்காக அரக்கப் பரக்க ஓடுகிறார்கள்? அவர்களுக்குள் ஏன் இத்தனை வெறுப்பு? ஆங்காரம்? நல்ல பிறவி கிடைத்தும் ஏன் இத்தனை ஏமாற்றம்? சிலர் அழகாப் பூத்திருக்கும் பூவை வன்முறையோடு பிடுங்குவது போல ஸ்கூலுக்குக் கூட்டிப் போகும் போது குழந்தைகளைக அடிக்கிறார்களே ஏன்? குழந்தையின் புன்னகையை விட உயர்ந்ததா பள்ளிக்கூடம்? ஏன் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்? என்றெல்லாம் கேட்க எனக்கு ஆசைதான். ஆனால் நான் பேசுவதைக் கேட்கும் பொறுமை தான் அம்மாவுக்கு இல்லை. ஆம்! எனக்குப் பேச்சு திக்கித்திக்கி குழறித்தான் வரும். அதுவும் வார்த்தைகளுக்காக நான் நிறைய யோசிக்க வேண்டும். நீங்களே சொல்லுங்கள் , அம்மாவைப் போல ஒரு பரபரப்பான மனுஷிக்கு , என் மெதுவான திக்கித் திக்கி வரும் பேச்சைக் கேட்க பொறுமை இருக்குமா?

அப்படியும் அம்மா சில நாள் கேட்பாள். நான் பெரும்பாலும் குழந்தைகள் பற்றித்தான் கேட்பேன். எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று எப்படியோ புரிந்து கொண்டு விட்டாள். ” நீயும் சாதாரணமாப் பொறந்திருந்தீன்னா , இந்நேரம் உனக்கும் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்திருக்குமே, இப்படிப் பொறந்துட்டியேடி! ” என்று அழுதாள். இது தான் அம்மாவிடம் எனக்குப் பிடிக்காத ஒன்று நான் ஏதாவது சொன்னால் உடனே அழுவாள். தன் தலையெழுத்தைப் பற்றியும் , என் தலையெழுத்தைப் பற்றியும் பேசி கண்ணீர் விடுவாள். “இது மனசுல என்னென்ன ஆசைகளோ? ஏக்கங்களோ? பாவம் வாயத் தொறந்து சொல்லக் கூட முடியாமே ஆக்கிட்டியே கடவுளே” என்று கடவுளிடம் முறையிடுவாள். நான் ஏதாவது கேட்டால் பதிலுக்கு அழும் அம்மாவைப் பார்த்து எனக்குச் சிரிப்பாக இருக்கும். என் சிரிப்பைப் பார்த்து அம்மா மேலும் அழுவாள்.

அண்ணன் ஒரு வழியாக ஒரு வேலையில் சேர்ந்து விட்டான். அம்மா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இனி சாயங்கால இட்லிக் கடை வேண்டாம் என்று முடிவு செய்தாள். ஆனால் எனக்கு வைத்திய செலவு அதிகரித்ததால் மீண்டும் வேறு வழியில்லாமல் தொடங்கி விட்டாள். சொல்ல மறந்து விட்டேனே ! . அடிக்கடி எனக்கு நெஞ்சு வலி வரும்.. அப்போதெல்லாம் , என் போன்ற பிறவிகளுக்கு நெஞ்சு பலகீனமாகத்தான் இருக்கும் ஆனால் ஒன்றும் ஆகாது என்று பிறந்த போதே டாக்டர் சொன்னதாகச் சொல்லி என்னைத் தேற்றுவாள். சில சமயம் பொறுத்துக் கொள்ளும்படியாக இருக்கும். சில சமயம் தாங்க முடியாமல் போகும் போது , அம்மா மடியில் படுத்துக் கதறி அழ வேண்டும் போல இருக்கும். நான் சுவாசத்திற்குத் தடுமாறுவதைப் பார்த்து அம்மா பதறுவாளே தவிர மடியில் போட்டுக் கொள்ள மாட்டாள். அப்படிச் செய்தால் நான் இறந்து விடுவேனோ? என்ற பயம் பாவம்!. என் போன்றவர்கள் மேல் பாசம் காட்டுபவர்கள் பெற்ற தாயாக மட்டும் தானே இருக்க முடியும்?

எனக்கு நெஞ்சு வலி வரும்போதெல்லாம் டாக்டர் ஒரு ஊசி போட்டு மூக்கில் ஸ்ப்ரே செய்ய ஒரு மருந்தும் கொடுப்பார். எங்கள் மேல் இரக்கப் பட்டு ஃபீஸ் வாங்க மாட்டார் என்றாலும் மருந்துக்குக் காசு கொடுக்க வேண்டுமே. அந்த ஸ்ப்ரே மருந்து ஐநூறு ரூபாய் விலை. எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஒரு காகிததைக் கொடுத்தால் என் உயிரையே காப்பாறும் மருந்து கொடுக்கிறார்களே? எப்படி? அப்படியானால் என் உயிர் அந்தக் காகிதத்தில் தான் இருக்கிறதா? அம்மா சொன்னாள். அவள் கொடுக்கும் காகிதத்துக்கு மதிப்பு அதிகமாம். எனக்கு ஒரு நாள் இனிப்புச் சாப்பிட வேண்டும் போல இருந்தது. வீட்டிலிருந்த காகிதத்திலிருந்து ஒன்று எடுத்துப் போனேன். அம்மா கொடுத்த காகிதத்தை விட பெரியது. ஆனால் கடைக்காரர் ஏனோ எனக்கு இனிப்புத் தர மறுத்ததுமல்லாமல் என்னைப் பைத்தியம் என்றும் சொன்னார். எனக்குப் புரியவேயில்லை. அம்மாவிடம் இதைச் சொல்லவில்லை. சொன்னால் அதற்கு வேறு அழுவாள். எனக்கு அழுவதும் பிடிக்காது , அழுபவர்களையும் பிடிக்காது.

அண்ணன் இப்போது நிறைய சம்பாதிக்கிறானாம். ஆனால் வீட்டுக்குக் கொடுப்பதேயில்லையாம். மாதம் சம்பளம் மூவாயிரத்திலிருந்து , ஐயாயிரமாக உயர்ந்து விட்டதாம். அவனே சொன்னான். ஆனால் வீட்டுக்கு அதே ரெண்டாயிர ரூபாய் தான் கொடுக்கிறான் என்று அம்மா குறைப்பட்டுக் கொண்டாள். அம்மாவும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தாள் முடியவே முடியாது என்று சொல்லி விட்டான். எனக்கு இந்த விஷயங்கள் எல்லாம் புரிவதே இல்லை. அவனே ஒரு பெண் பார்த்துக் கல்யாணமும் செய்து கொண்டான். அம்மா தான் பாவம் திண்டாடிப் போனாள். “ஏற்கனவே காசே குடுக்க மாட்டான். இப்போ கல்யாணம் வேற பண்ணிக்கிட்டானா? வெளங்குனாப்புலதான். நான் இனிமே இவளை வெச்சுக்கிட்டு என்ன செய்யப் போறேனோ? வரவர எனக்கும் உடம்பு தள்ள மாட்டேங்குது. வயசாகுது இல்லையா?” என்று வருவோர் போவோரிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.

இப்போதெல்லாம் எனக்கு நெஞ்சு வலி அடிக்கடி வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவு வலியோடும் வருகிறது. சாதாரணமாக நடப்பதே கஷ்டமாக இருக்கிறது. எனக்கு ஏனோ அம்மாவைப் பார்க்க பாவமாக இருந்தது. அம்மாவாலும் முடியவில்லை. அடிக்கடி தலை சுற்றி உட்கார்ந்து விடுகிறாள். அண்ணனிடம் ஒரு நாள் இது பற்றி சொல்ல ஆரம்பித்தேன் “ஆ , ஆங்! நீ பேச ஆரம்பிக்காதே! அம்மாவுக்கு ஒண்ணுமில்ல! நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும் , நீ இருக்கற வரை அது நடக்காது” என்று சொல்லி விட்டு பச்சையாக ஒரு காகிதத்தை என் கையில் கொடுத்து விட்டு அவன் வீட்டுக்குப் போய் விட்டான்.

எனக்கு நெஞ்சு வலி வரும்போதெல்லாம் தன்னிடம் இல்லையென்றாலும் கூட யார் யாரிடமோ கடன் வாங்கி என்னைக் காப்பாற்றுவாள் அம்மா. ஏன் என்னைக் காப்பாற்ற இத்தனை பாடு படுகிறாள் என்றிருக்கும் எனக்கு. இந்த முறை நெஞ்சு வலியோடு வலிப்பும் சேர்ந்து கொண்டது. வலியோடு தள்ளாடித் துடித்துப் போனேன். கண்களிலிருந்து என்னையறியாமல் கண்ணீர் வந்திருக்க வேண்டும். அம்மா கண்களை துடைத்து விட்டபடி இருந்தாள். எல்லா டப்பாக்களிலும் தேடி விட்டாள். எதிலும் அவள் தேடியது கிடைக்கவில்லை போலும். தலையை அள்ளி முடிந்து கொண்டு , அண்ணனின் வீட்டு போர்ஷன் கதவைத் தட்டினாள்.

“எதுக்கு அந்த தரித்தரத்தைக் காப்பாத்தணும். ஒரேடியா போய்த்தான் தொலையட்டுமே! உன்னைப் பிடிச்ச சனி ஒழிஞ்சதுன்னு நெனச்சிக்கோயேன்! இது ஒழிஞ்சதுன்னா பெத்த கடனுக்கு நான் உன்னை வெச்சுக் காப்பாத்தறேன். தொலையட்டும் விடு. ஒவ்வொரு தடவையும் ஐநூறு ஐநூறா கொட்டிக் குடுக்க இங்கே யாரும் கோடீஸ்வரங்க இல்லே! எந்த நேரத்துல பொறந்ததோ என்னையும் சேத்து தரித்திரம் புடிச்சு ஆட்டுது. சீ!” என்று கோபத்தைக் கக்கினான். அன்று அவனுக்கென்ன நெருக்கடியோ? பாவம்!அம்மா விக்கித்துப் போய் விட்டாள். இதை அவள் எதிர்பார்க்கவில்லை போலும்.

பதில் ஏதும் பேசாமல் அவன் முகத்தில் காறித் துப்பியவள் நேரே எங்கோ ஓடினாள். யாரிடம் சென்றிருப்பாள் என்று எனக்குத் தெரியும். அவசரத்துக்கு உதவ அம்மாவுக்கு ஒரு மாமி இருக்கிறாள். அவளிடம் தான் போயிருப்பாள். எனக்கு வலி அதிகமாகியது. அந்த ஸ்ப்ரே மருந்தை மனம் தேடியது. ஏன் அம்மா இன்னும் வரவில்லை? “அம்மா அம்மா சீக்கிரம் வாயேன். எனக்கு என்னவோ செய்யுதே! உன்னைப் பார்க்கணும் போல இருக்கே!. மூச்சை அடைத்தது.

திடீரென்று ஏதோ ஒரு அமைதி சூழ்ந்தது என்னை. வலி கொஞ்சம் குறைவதாகப் பட்டது. என்னைச் சுற்றி இருந்தவர்கள் பதட்டப் பட்டனர் “ஐயையோ! வாயில நுரை தள்ளுதே! சீக்கிரம் டாக்டரிடம் கூட்டிப் போனால் தேவலையே” என்று சொல்லிக் கொண்டிருந்தார்களே அன்றி யாரும் என் அருகில் கூட வரவில்லை.

திடீரென்று என் வலிகள் யாவும் நின்று விட்டன. ஏதோ மேகங்களின் ஊடே நான் மிதப்பது போல இருந்தது. உலகத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும் என்னைப் பார்த்துச் சிரித்து அழாமல் பள்ளிக் கூடம் போயின. பூக்கள் என்னைப் பார்த்து நலம் விசாரித்தன. “அம்மா! மருந்து வேண்டாம்மா! எனக்கு எல்லாம் சரியாப் போச்சும்மா! நீ ஒண்ணும் சிரமப் படாதே! “என்று கத்த வேண்டும் போல இருந்தது. என்ன ஆச்சரியம் என்னால் வேகமாகப் பேச முடிந்தது. ஆனால் யாருமே கவனிக்கவில்லை. தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள். சிலர் “எல்லாம் முடிஞ்சிடிச்சு ” என்று சொல்லி நைசாக நழுவினர். இன்னும் ஒருவர் அண்ணனைக் கூப்பிடப் போனார். அண்ணன் , அண்ணியோடு வந்து எட்ட நின்று பார்த்தான். ஏனோ அவன் கண்களில் கண்ணீர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மிதக்கும் உணர்வு மிகவும் சுகமாக இருந்தது. வாழ் நாள் முழுக்க இப்படியே இருந்தால் போதும் வேறு ஒன்றும் வேண்டாம் என்று தோன்றியது. ஆனால் மனம் “அம்மா ! அம்மா!” என்று கதறியது ஆனால் எதுவோ ஒன்று என்னை அந்த இடத்தை விட்டு இழுக்க ஆரம்பித்தது. “அம்மாவைக் காணுமே? எனக்கு உடம்பு சரியான விஷயத்தைச் சொன்னா எவ்ளோ சந்தோஷப்படுவா? ஆனா நான் ஏன் எங்கியோ போறேனே?” . அம்மாவை விட்டு விட்டுப் போக வேண்டி வருமோ என்ற பயம் முதல் முறையாக வந்தது.

அம்மா ஓடி வந்தாள். யாரோ என்னவோ சொன்னார்கள் . பதில் பேசாமல் தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டாள். அண்ணன் அம்மா அருகில் வந்தான். யாரையுமே அம்மா லட்சியமே செய்யவில்லை. என்னையும் சேர்த்துத்தான். “போயிட்டியா! ஒரேடியாப் போயிட்டியா? இன்னியோட உனக்கு விடிவு காலம் தான். அடுத்த பொறப்பாவது நல்ல பொறப்பா இருக்கட்டும் , ஏன் தான் இந்த ஏழை வயத்துல வந்து பொறந்து தொலச்சியோ? என்ன சுகத்தைக் கண்டே?நீ பாட்டுக்கு பூ , மரம் குழந்தைகள்னு வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பியே? நீ வாழ இந்த உலகத்துல ஒரு எடம் இல்லாமப் போச்சே! போடியம்மா போ? நானும் பின்னாலேயே வரேன் போ!” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். கண்களிருந்து கண்ணீர் பெருகி அவள் மார்புச் சேலை எல்லாம் ஈரமானது.

அம்மாவின் பேச்சைக் கேட்கக் கேட்க எனக்குள் ஒரு பிரகாசம். தெளிவு. எனக்கு எல்லாமே புரிந்து விட்டது. அம்மாவை நினைத்துக் கொந்தளித்த மனம் நிம்மதியானது. கொஞ்ச நேரம் அம்மாவின் விம்மல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது அதன் பின்னர் எங்கும் எதிலும் நான் விரும்பிய அமைதி , நிம்மதி. அந்த உலகத்தில் இருந்த எல்லார் முகத்திலும் புன்னகை.

– ஆகஸ்ட் 2012 கணையாழி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *