கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 24, 2022
பார்வையிட்டோர்: 3,391 
 
 

மழையினால் நசநசத்துக் கிடக்கிறது வீடு. மொஸைக் தரையில் கால் வைக்க முடியாதபடி நெறுநெறுக்கிற மணல், பற்களைக் கூச வைப்பதாயிருக்கிறது. கூட்டத்தின் அடர்த்தியைச் சிரமத்துடன் விலக்கியபடி வெளியில் வந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன். இழப்பின் துயரத்தாலும் மனித நெரிசலின் இறுக்கத்தினாலும் புழுங்கிக்கிடந்த உடலும் மனமும் தெருக்காற்றின் குளிர்ச்சியில் சிலிர்த்துக்கொள்கின்றன என்றாலும் ஓர் அடிகூட எடுத்துவைக்க இயலாதபடிக்குக் கனத்து நடுக்கமுறுகிறது பாதம். ஒரு நிமிடமேனும் அங்கேயே நின்று ஆசுவாசம்கொள்ள விரும்பினாலும் அதற்குச் சாத்தியமில்லாதபடி அவ்விடத்தினூடாக நடமாடித் திரியும் கூட்டத்தினருடைய இருப்பு சங்கட முண்டாக்குவதாயிருக்க, வலுக்கட்டாயமாக வீட்டை நோக்கிக் கால்களை எடுத்துவைத்து நடக்கிறேன். பத்தடி தூரத்தில் இருக்கும் வீட்டை அடையக் கடும் பிரயத்தனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

வீடு தன்னை நெருங்கவிடாதபடிக்குத் தள்ளித் தள்ளிப் போவதான கற்பனை மனத்தில் ஓட இன்னும் தீவிரமாக எட்டி நடந்து நெருங்கிவிட முயற்சி செய்கிறேன். நீண்ட முயற்சிக்குப் பிறகே வீட்டை அடைவது சாத்தியமாகிறது. இந்த இரவின் முழுமையான இருளையும் தன்மீது போர்த்திச் சாந்தமாக அமர்ந்திருக்கிறது வீடு. தளர்ந்த நடையோடு கதவின் மீது சாய்ந்து ஒரு நொடி தாமதித்தவள், புடவையை விலக்கி இடுப்பின் பக்கவாட்டில் சொருகியிருந்த சாவியை உருவி எடுத்துப் பூட்டைத் திறக்க முயல்கிறேன். பூட்டின் துளை தட்டுப்படாது தடுமாறுகிறேன். “ப்ச்” என அலுத்துக் கொண்டபடி மறுபடியும் அதனைத் திறக்க முயற்சிக்கிறேன். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகே பூட்டைத் திறக்க முடிகிறது என்றாலும், கனமான பித்தளைத் தாழ்ப்பாளை இழுத்துத் திறப்பது பெரும்பாடாக இருக்கிறது. தினமும் திறக்கும் தாழ்ப்பாளைத் திறக்க இன்று முழுபலத்தையும் திரட்ட வேண்டியிருக்கிறது.

கதவு திறந்து உள்ளே நுழைகிற என்னை எதிர்கொள்கிறது இன்னும் அதிக அடர்த்தியான இருள். “அக்கா நாளைக் காலையில வந்திடுவேன்” – அவனது குரல் இன்னும் செவியிலிருந்து நீங்காமலிருக்க, சுவற்றின் மீது சரிந்து நழுவித் தரையில் அமர்ந்துகொள்கிறேன். சில்லிட்டுக் கிடக்கும் தரையின் குளிர்ச்சி தாங்கமுடியாமல் நடுக்கமுறுகிறது பலவீனமான உடல். சற்று நேர ஓய்விற்குப் பிறகே அவ்விடத்திலிருந்து எழுந்துகொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. சற்று நேர ஆசுவாசத்திற்குப் பிறகும்கூட அவ்விடத்திலிருந்து எழுந்துகொள்ளக் கடும் பிரயத்தனம் தேவை யாகவேயிருக்கிறது. கைகளிரண்டையும் தரையில் ஊன்றிச் சிரமத்துடன் எழுந்து, அடுத்து என்ன செய்வது என்கிற தடுமாற்றம் உண்டாக, இலக்கில்லாதபடி இருளில் ஊடுருவி ஹாலின் குறுக்காக நடந்து சென்று அங்கிருக்கும் ஜன்னலை அடைகிறேன். கண்களுக்குப் பழகிவிட்ட இருள் பெரிதாகத் துன்புறுத்தாதது நிம்மதியைத் தருகிறது. திறந்திருக்கிற ஜன்னல் கதவிலிருந்து உள் நுழைகிற காற்றில் படபடக்கும் திரையைத் தொட்டு நிறுத்தி ஜன்னலின் ஓர் ஓரமாக அதனை நகர்த்தி ஒதுக்குகிறேன். விரல்கள் பற்றும் ஜன்னல் கம்பியின் குளிர்ச்சியை உணர்ந்தபடி தெருவையும் அதனைத் தாண்டி எதிர்த் திசையில் இருக்கும் கபர்ஸ்தானையும் நோக்கிப் பார்வையைச் செலுத்துகிறேன்.

அவன் புதைக்கப்பட்ட இடம் எதுவாக இருக்கும் என்பதைப் பதற்றத்துடன் அவசரமாகத் தேடுகிற என் கண்களுக்கு மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புதைகுழி பளிச்செனப் பார்வையில் தட்டுப்படுகிறது. தெருவை ஒட்டிய சுற்றுச்சுவருக்கு அருகில் என் வீட்டு ஜன்னலுக்கு எதிராகவே அவன் புதைக்கப்பட்டிருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியாய் உருவெடுக்க, இனி எக்காலத்திலும் என்னால் இத்துக்கத்திலிருந்து விடுபடவே முடியாதோ என்கிற பீதி பெரும் துயரமாய் எழுகிறது.

“நீ எத்தனை அடி உயரம்?” அவனது கட்டைக் குட்டையான உருவத்தைப் பார்த்துக் கேட்ட இவளிடம், “அஞ்சு அடிக்கா” கூச்சத்துடன் சொல்லித் தலைகுனிந்து கொண்ட அவனது முகம் நினைவில் மேலெழுகிறது. மழையினால் சொதசொதத்துக் கிடக்கும் ஆறடிக் குழிக்குள் அவ்வுடல் இன்று புதையுண்டு கிடக்கிறது. நேற்றிரவு வீட்டில் தனது படுக்கையில் சகல செüகர்யங்களுடன் படுத்து உறங்கியவனை இன்று பாம்புகள் ஊர்ந்து திரிகிற பாதுகாப்பற்ற இருளில் மூழ்கியிருக்கிற குழிக்குள் கிடத்தியிருப்பதன் யதார்த்தத்தை ஏற்கத் தயங்கும் மனத்தைச் சரிசெய்ய மிகுந்த பிரயாசை வேண்டியிருக்கிறது.

மரணம் எங்கே ஒளிந்துகொண்டிருந்து எங்கிருந்து வருகிறது? ஒரே பாய்ச்சலில் கொத்தித் தூக்கிக்கொண்டு எங்கே போகிறது? பதிலில்லாத கேள்விகளால் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. அக்கேள்விகளிலிருந்து விடுபடத் தலையை இடவலமாக ஆட்டித் தன் நிலைக்கு வருகிறவளின் பார்வை, அவனது கபர்ஸ்தானிலிருந்து மீண்டு உள்புறமாகச் சென்று அலைந்து மெர்க்குரி விளக்கின் ஒளி வரிசையாய் அணி வகுத்து நிற்கும் தென்னை மரங்களின் மீது விழுகிறது. அதன் கிளைகள் தீட்டப்பட்ட ஓவியங்களைப் போலத் துளிக்கூட அசையாமல் மெüனித்திருக்கின்றன. ஏதோ ஒரு மரத்திலிருந்து ஒலிக்கும் பறவையொன்றின் ஒலி காதில் விழுகிறது. வழக்கமாக அவ்வொலி திகிலை உண்டுபண்ணுவதாயிருக்கும் என்றாலும் இன்று வெற்று ஒலியாய் மனத்தில் நிரம்புகிறது. வீடு இன்னும் இருளில் மூழ்கியிருக்கிறது. சுவிட்சைத் தட்டி விளக்கை எரியவிட வேண்டும் என்கிற எண்ணமே தோன்றாததால் தொடர்ந்து அங்கேயே நின்றுகொண்டு எதெதையோ யோசிக்க முற்படுகிறேன்.

“செத்துப்போறதுன்னா என்ன?” பகலில் குழந்தை என்னிடம் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. எனக்கு எத்தனை வயதிருக்கும்போது இதே கேள்வியை அம்மாவிடம் கேட்டேனெனக் கணிக்க முயல்கிறேன். ஐந்து அல்லது ஆறு? குழப்பமாக இருக்கிறது.

தாழ்வாரத்தில் கிடந்த கட்டிலில் அம்மாவின் மடிமீது தலைவைத்துப் படுத்துக்கொண்டு ஓட்டுச் சரிவிலிருந்து வழிந்து முற்றத்தில் கொட்டிக்கொண்டிருக்கிற மழை நீரிலிருந்து எழும் முட்டைகளைச் சத்தமாக எண்ணத் தொடங்குகிறேன். பதினாறோடு தடைப்படுகிற எண்ணிக்கை அம்மாவுக்குச் சிரிப்புண்டாக்குவதாயிருக்கிறது.

“என்னாச்சு அவ்வளவுதானா?” என்கிறாள். வெட்கம் பிடுங்கித் தின்ன அம்மாவின் மடியில் இறுக்கமாய்ப் புதைகிறது முகம்.

“பக்கத்து வீட்டுப் பானுவுக்கு அம்பது வரைக்கும் எண்ணத் தெரியும். நான் உனக்குச் சொல்லித் தரட்டுமா?”

வேகமாக முகம் உயர்த்தித் தலையாட்டி அதனை ஆமோதித்தபடி “அவளுக்கு அவங்க ராதி சொல்லித் தந்தாங்க. ஆனா எனக்கு ராதி ஏன் இல்லை?” ஆர்வமாக கேட்கிறேன்.

சற்று நேர அமைதிக்குப் பிறகு அம்மா சொல்கிறாள். “அவங்க நீ பொறக்கு முன்னே மெüத்தாப் போய்ட்டாங்க.” முதன் முதலாகக் கேள்விப்படுகிற வார்த்தையின் அர்த்தம் புரியாத குழப்பத்துடன், “அப்டின்னா?” என்று விழித்தவளிடம், “அப்டின்னா செத்துப் போறது . . . அதாவது இறந்து போறது . . . அல்லாட்டப் போறது . . .” இவளுக்குப் புரியும் விதமாகச் சொல்லவியலாத வருத்தம் தொனிக்கும் அம்மாவின் குரலில் இனி எதுவும் கேட்கக்கூடாது என்கிற கண்டிப்பும் கலந்தே இருப்பது புரிய, மெüனமாக அது குறித்த யோசனைக்குள் ஆழ்ந்துபோகிறேன்.

அன்றில்லாமல் எல்லாக் காலத்திற்குமாகத் தன்னுள்ளாகப் பொதிந்துள்ள புதிரினைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதிலேயே அதன் வசீகரம் தேங்கியிருப்பதாக நினைத்தபடி நெடிய பெருமூச் சொன்றினை விடுவிக்கிறேன்.

“அம்மா” எனக் கத்தியபடி ஓடி வந்து இறுக்கிக் கட்டிக்கொள்ளும் யாஸர் என்னைத் தன் உணர்வுக்குக்கொண்டு வருகிறான். வீடே இருளில் மூழ்கியிருப் பதைக் கண்டு பதறியவள் அவனை இறுக அணைத்துப் பிடித்தபடி சுவிட்ச் இருக்கும் இடம் நோக்கி நகர்கிறேன். பயத்தில் உறைந்திருந்த குழந்தையின் முகம் வெளிச்சத்தில் இறுக்கம் தளர்ந்து பிரகாசம்கொள்கிறது என்றாலும் தாயின் முகத்தில் வெளிப்படும் கலக்கம் புரியாத தடுமாற்றத்துடன் ஓடிப்போய் சோபாவில் அமர்ந்து என் முகத்தையே உற்றுக் கவனிக்கிறான்.

அவனது பயத்தைப் போக்கும் விதத்தில் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்து இதமாகச் சிரிக்கிறேன். அச்சிரிப்பு துளிக்கூட என்னோடு ஓட்டவில்லை என்பது அவனுக்குத் தெளிவாகவே புரிகிறது என்பதை அறிந்தவளாக அவனருகே சென்று அமர்ந்து அவனை இறுக அணைத்துக்கொள்கிறேன். என் மடியின் மீது தனது பாதுகாப்பை உறுதி செய்தவனாகத் தூங்க ஆரம்பிக்கிற அவனது தலைமுடியை வருடிக்கொடுத்தவாறே அண்ணாந்து சுவர்க் கடிகாரத்தில் மணி பார்க்கிறேன். நேரம் பத்தைத் தொட்டிருக்கிறது. “பாவம் குழந்தை” என முணுமுணுத்தபடியே அவனைக் கொண்டுபோய்ப் படுக்கையில் விடுகிறேன். ஜரினாவின் வீட்டில் சாப்பிட்டிருப்பான் என்கிற நிம்மதியோடு அவனுக்கு அருகிலேயே படுத்துக்கொள்கிறேன்.

தூங்க முடியும் என்கிற நம்பிக்கை சுத்தமாக இல்லை என்றாலும் சும்மாவேனும் படுத்துக்கொண்டிருக்க விருப்பமுண்டாகிறது. மரணத்தை நெருக்கமாகப் பார்த்த பிறகு வாழ்க்கை எப்படி இத்தனை அர்த்தமற்றதாகவும் அபத்தமானதாகவும் மாறிவிடுகிறது என்கிற கேள்வி பீறிட்டு எழ, மரண வீட்டிலிருந்து வந்த பிறகு, கை கால் முகம் கூடக் கழுவாதது நினைவுக்கு வருகிறது. இதைக் கூடச் செய்யாமல் அப்படி என்ன அலுப்பு எனத் தனக்குள்ளாக முனகிக் கொண்டவளுக்கு, அதற்குக் காரணம் அலுப்பு மட்டும்தானா என்கிற யோசனை எழுகிறது. உடுத்தியிருக்கும் புடவையெங்கும் யார் யாருடைய கண்ணீர்த் துளிகளோ தேங்கிக் கனப்பதாகத் தோன்றினாலும் கொஞ்சம்கூட அசூயை கொள்ளாமல் உடையைக்களையும் எண்ணத்தைப் புறக்கணிக்கிறேன். படுக்கையின் மீதான எனது இருப்பு துளியும் அசைவற்றிருக்கிறது.

இப்படியே தூங்கிவிட முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என நினைத்தவளுக்கு உடனேயே அதிலுள்ள சாத்தியமின்மையையும் யோசிக்க முடிகிறது. இந்தத் துக்கத்திலிருந்து விடுபட எத்தனிப்பதில் உள்ள சுயநலத்தை எண்ணிக் கூச்சம் உண்டாகிறது.

தூங்கிக் கடக்கும் அளவுக்கு அற்பமானதா இந்த இழப்பு எனக் கேட்டுக் கொள்கிறவளுக்கு, ரொம்பவும்தான் அலட்டிக்கொள்கிறோமோ என அவமானமாக இருக்கிறது. எதையுமே நினைக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். அது மட்டும் சாத்தியமாகக் கூடியதா என்ன என நினைத்தபடி படுக்கையில் புரண்டு படுத்தவாறு கடிகாரத்தில் மணி பார்க்க முயல்கிறேன். இருளில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும், பரவாயில்லை, தெரிந்து என்ன செய்யப் போகிறேன் எனச் சமாதானம் செய்துகொள்கிறேன்.

வயிறு பசிப்பதான உணர்வு மேலிடக் காலையிலிருந்தே ஒன்றுமே சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வருகிறது. சாப்பாடு மட்டுமா, தண்ணீர்கூடக் குடிக்கவில்லை என நினைத்தவளுக்கு வியப்பு உண்டாகிறது. என்றைக்காவது ஒரு நாள் இதுபோல முழுப் பட்டினி இருந்திருக்கிறோமா என யோசிக்கிறேன். அப்படி ஒரு நாள்கூட இருந்ததில்லை, ரம்ஜான் மாதத்தில்கூட என்பது நினைவுக்கு வர, பின்னர் அதுவே தீராத வியப்பாக மாறுகிறது. இது எப்படி சாத்தியமாயிற்று என்கிற கேள்வியோடு பெரிய சாதனையொன்றினைச் செய்தது போன்றதொரு பெருமித உணர்வுக்கு ஆட்பட்டவள் உடனே உடலைக் குலுக்கி அவ்வுணர்விலிருந்து விடுபடுகிறேன்.

பகலில் குழந்தையைச் சாப்பிட வைத்த பொழுது ஜரினா “இந்தா பார், நீயும் கொஞ்சம் சாப்பிட்டு வயித்தை நனைச்சு வை. நல்ல பையன்தான், பக்கத்து வீட்டுக்காரன்தான், பாசமாத் தான் இருப்பான் எல்லார்கிட்டேயும். வருத்தமாகத் தான் இருக்கு, என்ன செய்ய? அவன் அம்மா, பொண்டாட்டியே ஒரு முறைக்கு நாலுமுறை காப்பி குடிச்சுக்கிட்டாக. ஒனக்கென்ன?” சலிப்போடு கெஞ்சினாள். இவள்தான் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். ஓர் உயிர் அநியாயமாகப் போய்விட்ட நிலையில் பசியை உணர்வதும் சாப்பிடுவதும் பெரிய குற்றவுணர்ச்சியை உண்டு பண்ணுவதாயிருக்கிறது. கடுமையான பசியை உணர்கிற இந்த நேரத்தில் கூட அவ்வெண்ணம் வலுப் பெறவே செய்கிறது.

பசியும் தூக்கமும் மனித இயல்பு தானே? இதில் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது என்கிற கேள்வி எழ எனக்கே அந்த அசட்டுத்தனமான வாதத்தை நினைத்து சிரிக்கத் தோன்றுகிறது. என்றாலும் அவனது உடலை அடக்கம் செய்த கையோடு கறியும் சோறும் சாப்பிட உட்கார்ந்த கூட்டத்தைப் பார்த்துத்தான் பயந்து நடுங்கியதும் ஞாபகம் வருகிறது. ஜன்னலுக்கு வெளியே கொட்டும் மழையின் ஓசை கேட்கிறது. குளிர்ந்திருக்கிற இரவில் படுக்கையின் மெத்தென்ற இதமும் குழந்தையின் அருகாமையும் உறக்கம் தன்னை நெருங்குவதற்கான சாத்தியங்களை உறுதி செய்வதை நம்பியவளுக்கு இந்த மழையில் நனையும் குழிக்குள் அவனது உடல் கிடத்தப்ட்டிருப்பதும் நான் சொகு சாகப் படுக்கையில் படுத்திருப்பதும் தாங்கவியலாத துயரமாக உருவெடுக்கின்றன. இரவின் அனைத்துப் பக்கங்களின் மீதும் மரணத்தைப் பற்றிய அச்சுறுத்தல் நீக்கமற நிறைந்திருப்பதனை மறக்க முயன்றவளாக உறங்கிப் போகிறேன்.

****

பாதித் தூக்கத்தில் திடுக்கிட்டு விழித்தவளுக்குத் தொலைபேசியின் ஒலிதான் தன்னை எழுப்பியதோ என்கிற சந்தேகம் தோன்ற, பயத்துடன் உற்றுக் கவனிக்க, தொலைபேசி ஒலிக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்கிறேன். வழக்கமாக நடு இரவில் வரக்கூடிய தொலைபேசி அழைப்பு ஏன் இன்னும் வரவில்லை என்கிற கேள்வி விஸ்வரூபம் கொள்ள, இனிமேல் வரக்கூடும் என்கிற உறுதியோடு கவலையும் சூழ்கிறது.

“இதை நினைச்சு எதுக்காகக் கவலைப்படுற? நீ தனியா இருக்கிற இல்லெ, பொறுக்கி நாய் ஏதாவது வம்பு பண்ணும். பேசாம ரிஸீவரை எடுத்துக் கீழே போட்டுட்டுத் தூங்கு” என்று சொல்லும் ஜரினா, “ஆமாம் அதுவும் முடியாது இல்லெ. ஒம் புருஷன் சவுதியிலிருந்து ராத்திரி நேரந்தான ஒனக்குப் போன்ல பேசுவாரு” என்று அதன் சாத்தியமின்மைகளையும் சொல்லி அலுத்துக்கொள்வாள்.

பிறகு அவளே “ஆமாம், ஒரு வார்த்தையும் பேசித் தொலைக்க மாட்டேங்கிறான். அப்புறம் எதுக்குப் போன் பண்ணுறான் . . .” கெட்ட வார்த்தை சொல்லி நக்கலாகச் சிரித்துக்கொள்வாள்.

மறுபடியும் தூக்கம் வருமென்று தோன்றவில்லை. எனக்கென்னவோ இந்தத் தருணத்தில் எனது விழிப்பு இன்னும் வராத அந்தத் தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருப்பது போலிருந்தது சங்கட முண்டாக்குவதாயிருக்கிறது. படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள வேண்டுமென்கிற நிலை கொள்ளாத தவிப்பு மேலிடுகிறது. மெத்தையின் இதம் தரும் குற்றவுணர்வோடேயே என்னை அதனுள்ளாகப் புதைத்து அத்தவிப்பிலிருந்து விடுபட முயல்கிறேன்.

“ரொம்ப நாளா ஆசை இதே மாதிரி விலையுயர்ந்த கட்டில் மெத்தை வாங்கணும்னு, வாங்கிட்டேன்க்கா” -பெருமை யோடு ஒலித்த அவனது குரல் திடீரென நினைவில் தட்டுப்பட, உடனேயே பழையபடி குற்றவுணர்வுக்குள் தள்ளப்படுகிறேன்.

கடந்துகொண்டிருக்கிற ஒவ்வொரு நொடியிலும் என் விழிப்பு தொலை பேசி அழைப்பிற்கான காத்திருத்தலாக மாறுகிறதோ என்கிற ஐயம் பெருகிக்கொண்டிருக்கிறது. இதுநாள்வரை நான் அவ்வழைப்பினை விரும்பியே எதிர்கொண்டு வந்திருக்கிறேனோ என்கிற கேள்வி உருவாகிவிடாமல் துரத்த பதற்றமுறுகிறது மனம். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற கவலையூடே, நான் யாரென அறிந்துகொண்டுவிடக்கூடாதென்கிற பயமும் ஒன்றிணைய, குழப்பத்தில் ஆழ்கிறேன்.

ஒரு வார்த்தை பேசாவிட்டால் என்ன? அந்த அழைப்பில் மிகுந்திருப்பது எனக்கான வேட்கையும் விருப்பமும் தானே? தினமும் கலையும் தூக்கத்தினூடே மனத்தின் அமைதி அழிவதற்குப் பதிலாக ஓர் ஓரத்தில் தனக்குள்ளாகப் பெருமித உணர்வு துளிர்த்ததா இல்லையா? என்னை நோக்கியே என்னால் எழுப்பப்படுகிற கேள்வியினால் சிதைவுறும் என் பிம்பத்தை நேர் செய்யும் விதமாகத் தலையணையின் மீதாகத் தலையை இடவலமாகப் பலமாக ஆட்டிக் கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளுமே என்னை அழைப்பது யாராக இருக்கும் என்கிற கேள்வியும் அதனை அறிவதற்கான ஆர்வமும் என்னை எத்தனை துன்புறுத்தியிருக்கிறது? இன்றோ யார் என்கிற கேள்வியோடு இன்னும் வரவில்லை என்கிற வருத்தமும் தானே சேர்ந்திருக்கிறது. நினைக்க நினைக்கக் குழப்பம் மட்டும் மிச்சமாகப் படுக்கையிலிருந்து எழுந்து அமர்கிறேன். வெற்று வயிறோடு இருப்பதுதான் இப்படித் தூக்கம் வராமல் சித்ரவதை செய்கிறது என யோசித்தவள், கட்டிலைவிட்டு எழுந்து தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்று சொம்பிலிருந்த தண்ணீரை எடுத்து வேகவேகமாகக் குடிக்கிறேன்.

பசியினாலும் தாகத்தினாலும் ஒடுங்கிக் கிடந்த வயிற்றில் தண்ணீர் விழுந்த மறு நிமிடமே வலியுண்டாக, அடி வயிற்றைப் பிடித்தபடியே மறுபடியும் வந்து படுக்கையில் சரிகிறவளுக்கு, வழக்க மாக வரும் தொலை பேசி அழைப்பில் ஒரே ஒருமுறை தான் கேட்க நேர்ந்த பெண்ணின் குரல் நினைவிலாட, அன்று நிகழ்ந்த விஷயத்தை நினைவூட்டிக் கொள்வதன் வழியே, இந்த நாளின் இறுக்கத்தைச் சற்றேனும் தளர்த்திக்கொள்ள முடியும் என்கிற எண்ணம் உண்டாகிறது. அவள் தான் அன்று எத்தனை அற்புதமாகப் பாடினாள்! ரிஸீவரை எடுத்ததுமே என் காதில் விழுந்த பாடலின் வரிகள் அரை குறை விழிப்பில் புரியாத தடுமாற்றத்தை உண்டாக்குவதாயிருக்கிறது. ஒரு சில நொடியில் நிதானத்திற்கு வந்த பிறகே அது ஒரு மலையாளப் பாடல் என்பதும் கொஞ்சிக் குழையும் அக்குரலிலிருந்தே அது ஒரு காதல் பாடல் என்பதையும் என்னால் கணிக்க முடிகிறது. பாடலுக்கு இடையிடையே அவள் யாரையோ முத்தமிடுவதும் பிறகு பாடலைத் தொடர்வதுமாக சுவாரஸ்யம் கொள்கிறது அத்தருணம். அவளது குரலின் வசீகரம் மயக்க மூட்டுவதாய் இருக்க, அதனை ரசித்தபடியே தொடர்ந்து கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன், என் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அக்குரலைக் கேட்டிருக்கிறோமா என்கிற தீவிர யோசனையோடு.

முழுப்பாடலையும் பாடி முடித்தவள், “உஸ். கிள்ளாதீங்க வலிக்குது” எனச் சிணுங்குகிறாள். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது புரிய, குழப் பத்திலும், பயத்திலும் நா வறண்டு போகிறது என்றாலும் அக்குரலின் வழியே எனக் குள்ளாக உருக்கொள்ளும் கூடலின் சித்திரம் அந்நேரத்தை சுவாரஸ்யம் மிக்கதாய் மாற்றுகிறது. அவள் மறுபடி “ச்சீ போங்க” எனச் செல்லமாய்க் கொஞ்சுகிறாள். பிறகு மலையாளத்தில் ஒரு வார்த்தை சொல்கிறாள். முத்தமிடுகிறாள். மறுபடியும் பாடத் துவங்குகிறாள். இம்முறை தமிழ் சினிமாவின் காதல் பாடல். நான் எத்தனையோ முறை அப்பாடலை ரேடியோவில் கேட்டிருந்தாலும், இன்று அவளது குரலில் அப்பாடல் அற்புதம் கொள்கிறது. காதலில் இன்புற்றிருக்கும் அக்குரலில் நனைந்திருக்கும் காதல் உணர்வு கூச்சத்தை உண்டுபண்ணக் கூடியதாயிருந்தாலும் ரசிக்கக் கூடியதாய் இருக்கிறது.

ஒரு சில நிமிடங்களிலேயே என்ன நடக்கிறது, இங்கே நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்கிற கேள்வி திடுமென எழ, அவமானத்தினால் குலுங்குகிறது உடல். யாருடைய படுக்கை அறைக்குள்ளோ தான் ஒளிந்துகொண்டுவிட்டதான அருவெறுப்பும், என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதும் இப்படி நடப்பதற்கான காரணமும் சட்டென உறைக்க, ஆத்திரமாக ரிஸீவரை வைக்கிறேன். என் நம்பரைக் கூப்பிட்டு படுக்கையினருகாக வைத்திருப்பவனது எண்ணத்தை, இத்தனை நேரமாகக் கேட்டுக்கொண்டிருந்ததன் வழியாக நான் பூர்த்தி செய்திருக்கிறேன் என்பது புரிய, ஆத்திரத்தில் பொங்கிப் பொங்கி எழுகிறது உடல்.

அவன்தான் அப்பெண்ணுக்கு எத்தனை பெரிய நம்பிக்கை துரோகத்தினைச் செய்திருக்கிறான். அவளை நினைத்துப் பரிதாபம்கொண்டாலும் ஒரு குற்றவுணர்வுமின்றி இத்தனை நேரமாக அவளது அந்தரங்க உணர்வுகளைக் கேட்டுக்கொண்டிருந்தது மட்டும் எவ்வகையில் நியாயமாயிருக்க முடியும்? அவன் அவளுக்குச் செய்ததற்கு எந்த விதத்திலும் குறைவானதில்லையே நான் செய்தது.

அதன் பிறகு எஞ்சிய இரவு நெடுக அப்பெண்ணின் குரல் என்னைச் சுற்றியே ஓடிக்கொண்டிருக்க, தூக்கம் எங்கோ ஓடி மறைந்தேவிடுகிறது.

நினைவுகளின் சுமையிலிருந்து விடுபட்டவளாகப் படுக்கையில் அமர்ந்திருக்கிறேன். மனமும் உடலும் ஒருசேர அயர்ச்சிக்குள்ளாக, இருளையே வெறிக்கிறேன். உடனேயே தூங்க முடியாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடக்கூடுமென்கிற அச்சம் உண்டாக, ஒன்று இரண்டு மூன்று என மனதிற்குள்ளாக எண்ண ஆரம்பிக்கிறேன். இதுவரை எங்கோ ஒளிந்திருந்து போக்குக் காட்டியபடியிருந்த தூக்கம் ஒரு பறவையின் சிறகென என் மீதாகப் படர்ந்து என்னை அரவணைத்துக் கொள்கிற அற்புதம் நிகழாதா என்கிற ஆதங்கத்துடனே தொடர்கிறது எனது எண்ணிக்கை.

ஒரு பொழுது இத்தனை வெறுமையோடு விடியுமா என்பது போலத் தொடங்குகிறது இந்த அதிகாலை. அடி வயிற்றில் தசைகள் இறுக்கிப் பிடித்து வலிப்பதை உணர்கிறேன். வறட்டுப் பிடிவாதத்தினாலும் குற்ற உணர்வினாலும் பட்டினி கிடந்ததன் விளைவைப் பற்களை இறுகக் கடித்து எதிர்கொள்கிறேன். சக்கையைப் போலப் படுக்கையின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடக்கிற உடல், எத்தனையோ ஆண்டுகளாக நோயுற்றுக் கிடப்பது போன்ற பலவீனத்தை அடைந்திருக்கிறது. என்னால் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள முடியுமா என்கிற பயம் பிடித்தாட்ட நான் இத்தனை தூரம் தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதன் முட்டாள்தனம் புரிய வெகுவான சிரமத்துடனேயே எழுந்துகொள்ள முடிகிறது.

அவ்வீட்டின் முன்பாகப் போடப்பட்டிருக்கிற பிரமாண்டமான பந்தல் அவனது மரணத்தை உறுதி செய்வதாய் இருக்க, எனக்குள்ளாக உருக்கொள்கிற பீதியையும் நடுக்கத்தையும் மறைக்க முயன்றவளாக வீட்டினுள்ளே நுழைபவளைப் பல்வேறு விதமான குரல்களுடனேயே அரவணைக்கிறது வீடு. வீடு முழுக்க நிரம்பியிருக்கிற மனிதக் கூட்டத்தினால் அது தன் சவக்களையை முற்றிலுமாக இழந்துவிட்டிருக்கிறது. மண வீட்டிற்கும் மரண வீட்டிற்குமிடையிலான இடை வெளியைக் காற்றில் மிதந்து வருகிற சுவையான உணவின் மணம் இட்டு நிரப்ப, சிறிது நேரக் குழப்பத்திற்கு ஆட்படுகிறேன்.

ஹாலின் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் அவனுடைய தாய் தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும் மற்ற பெண்களிடம் தன் மகனைப் பற்றிய நினைவுகளைக் கதைகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இடையிடையே தனக்கு அருகாக இருக்கும் எச்சில் பணிக்கத்தை எடுத்து, தான் மென்று கொண்டிருக்கும் வெற்றிலை எச்சிலைச் சாவகாசமாகத் துப்பியபடி இருக்கிறாள். நான் யாராலும் கவனிக்கப்படாதது எனக்குப் பெரிய நிம்மதியைத் தருவதாக இருக்க, ஹாலின் வடக்குப்புறமாக எனக்கெதிராக இருக்கும் அறையை நோக்கி அவசரமாகவே நடக்கிறேன். அறையை மறைத்தபடி தொங்கும் பச்சை நிறத் திரைத்துணியை விலக்கி உள்நுழையும் தருணத்தில் அவனுடைய மனைவிக்கு ஆறுதல் சொல்லக்கூடிய நிலைக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டேனா என்கிற கேள்வி எழுந்து அடங்க, திரைத் துணியை விலக்கி அறைக் குள்ளாக நுழைகிறேன்.

பாதத்தில் சற்று முன் கழுவிவிடப்பட்ட தரையின் ஈரமும் குளிர்ச்சியும் தட்டுப்படுகின்றன. வெளி வெளிச்சம் வராமல் அடைக்கப்பட்ட அறை விடிவிளக்கின் ஒளியினால் ஒளியூட்டப்பட்டதாயிருக்கிறது. அறை ரொம்பவும் சிறியதாக இருப்பது மூச்சு முட்டுவது போலிருக்கிறது. சமீபத்தில் கட்டிய வீடு என்றாலும் இத்தனை பெரிய வீட்டில் இவ்வளவு சிறியதாகவா அறையிருக்கும் என யோசித்தபடி அப் பெண்ணை நோக்கிச் செல்கிறேன். தரையின்மீது விரிக்கப்பட்டிருக்கிற பிளாஸ்டிக் பாயின் மீது தலைகுனிந்தபடி அமர்ந்திருக்கிறாள் அவள். அவள் அமர்ந்திருக்கும் தோரணை யாரையோ எதிர்பார்த்திருப்பதைப் போலிருக்கிறது. அறை நடுவே இருக்கும் தொட்டிலில் கிடக்கிறது குழந்தை. அவளருகே அமரும் முன்பாக அக்குழந்தையை ஒருமுறை பார்க்கலாமா என ஓர் அடி தொட்டிலை நோக்கி எடுத்துவைத்தவள் மனம் சகிக்காமல், நின்றுகொள்கிறேன். குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் துக்கத்தின் அழுத்தம் தாளாமல் கதறி விடுவோமோ என்கிற பயம் பிடித்துக்கொள்ள, அவ்வெண்ணத்தைக் கைவிட்டு அவளை நோக்கி நடந்து அவளருகே அமர்கிறேன்.

வந்திருப்பது யார் என அறியும் பொருட்டுத் தலைநிமிர்ந்து ஒரு நொடி என்னைப் பார்த்தவள் மறுபடியும் தலையைக் குனிந்துகொள்கிறாள். அந்த ஒரு நொடியிலேயே நான் வந்திருப்பது குறித்த திருப்தியை அவள் முகம் காட்டிவிடுவதைக் கவனிக்க முடிகிறது. இருவருக்குமிடையே நீடிக்கிற மெüனத்தைக் கலைக்கும் வழியறியாது அவள் முகத்தை உற்றுக் கவனிக்கிறேன். இருபது வயதிருக்குமா? நிச்சயமாக அதற்கும் குறைவாகத்தானிருக்கும் என்கிற முடிவுக்கு வருகிறேன்.

ரத்தமேயில்லாததுபோல வெளுத்துக் கிடக்கிறது அவளது முகம். நகைகளில்லாமல் மொட்டையாகக் கிடக்கும் கைகளும் காதும் மூக்கும் கழுத்தும் எனது அதிகபட்ச மனத் தைரியத்தை உறுதி செய்வதாயிருக்கின்றன. தலை முடியை வெளித்தெரியாதபடிக்கு முக்காடிட்டு மறைத்துப் புடவையைக் காதுகளுக்குப் பின்புறமாக ஒதுக்கியிருக்கிறாள். அது மேலும் அவளை விகாரப்படுத்துவதாகயிருக்கிறது. கைக்கு அடக்கமான சின்னஞ்சிறிய வட்டமான முகத்தின்மீது படுகிற என் பார்வை நழுவி நழுவிச் சரிய, அதனை மறுபடியும் நகர்த்தி அம்முகத்தின் மீதே பதியவைக்கத் தீவிரமாகவே முயன்றுதோற்கிறேன். அவளது கழுத்துக்குக் கீழே நிலைக்கும் என் பார்வையில்படுகின்றன தாய்மையினால் ததும்பும் கனத்த மார்பகங்களும் அதனை மறைக்க முயன்று தோற்கும் புடவையும். நிறமில்லாத புடவையின் மீது மார்பிலிருந்து கசிந்த பாலின் கறை திட்டுத் திட்டாய்த் தேங்கியிருக்க அந்தப் பகுதியே விறைப்புத்தன்மையோடிருக்கிறது. இத்தனை நேரமில்லாமல் திடீரென எனது நாசியில் வந்து மோதுகிற பால் கவிச்சி காற்றில்லாத அறையின் உள்ளே அடைந்திருக்கும் மக்கிய வாடையோடு சேர்ந்து குடலைப் புரட்டுகிறது. அவள் இருக்கிற நிலையில் நான் அருவெறுப்புணர்வினை அடைவதன் நியாயமின்மையை மனத்தில் இருத்தி, குமட்டலின் வேகத்தை உள்ளுக்குள்ளேயே அடக்குகிறேன்.

என்னைப் போலவே அவளும் என்னையே கவனித்துக்கொண்டிருக்கிறாள். பேசவியலாதபடி மௌனித்திருக்கும் எனது நிலைக்கு இரங்குவது போலிருக்கிறது அவளது பார்வை. மேலும் சற்று நேர அமைதிக்குப் பிறகு மெலிதாக உதடு பிரியாமல் சிரித்து, “இப்பதான் வர்றீங்களா” என்கிறாள்.

அவளது இயல்பான சிரிப்பு எனது பதிலைத் தாமதப்படுத்துவதாயிருக்க, “உம் இப்பதான், நேர உள்ளேயே வந்திட்டேன்” என்கிறேன்.

“பாருங்க எங்க கதிய. எப்புடி நிர்க்கதியா நிக்கிறோம்னு” கலக்கமின்றிக் கணீரென ஒலிக்கிறது குரல். “போதாக் குறைக்கு இந்தக் கிழடுக கிட்ட வேற மாரடிக்கணும், நான் பாட்டுக்கு நிம் மதியா இருந்தேன், நஸீபு இங்கெ இழுத்துப் போட்டிருச்சு.”

சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் அவளே, “பாத்திங்களா அந்தப் பொம்பளை வெத்திலை போடுற அழகையும் பேச்சழகையும். வெனை காரி, துளியாச்சும் கலங்கியிருக்காளா பாருங்க. அவ சதையில மண்ணு விழுக.” கைவிரல்களை ஓன்று சேர்த்து நெட்டி முறித்தவள், “எம் புருஷனுக்கே இந்தப் பொம்பளைன்னா ஆகாது. நான் என் புருஷன்கூடப் போய்க் குடித்தனம் பண்றது சகிக்காம, எதுக்குடா அவளை டவுண்ல கொண்டுபோய்க் குடித்தனம் வைக்கிற தண்டமா வீட்டு வாடகை குடுத்து. இங்கெ இவ்ளோ பெரிய வீடு சும்மா கிடக்குது விட்டுட்டுப் போ, எனக்கும் துணையா இருக்கும். வாரத்துல ஒரு நாளக்கி வந்துட்டுப் போவேயில்ல. ஊரு ஓலகத்துலப் பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு சவுதியில போயி இருக்கறது இல்லன்னு எப்பொப் பாரு பொருமல். இப்ப ஒரேயடியா இங்கெயே வந்துட்டேன் இல்ல, இனிமேயாவது சந்தோஷமா இருக்கட்டும்” மிகமிக அழுத்தமாக ஒலிக்கிறது அவளது குரல்.

இத்தனை நேரமாக மிகுந்த பரிதாபத்துடன் கேட்டுக்கொண்டிருந்த என்னைத் திடுமென ஒருவிதமான பயம் பிடித்துக்கொள்ள வேறு எவரேனும் அறைக்குள் வந்துவிடுவார்களோ என்கிற பதற்றத்துடன் தலையைத் திருப்பி எனக்குப் பின் புறமாகப் பார்வையை அலையவிடுகிறேன். என் பார்வையில் தெரியும் ஜாக்கிரதை உணர்வையோ எனது தர்ம சங்கடமான நிலையையோ அவள் சிறிதேனும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற பாவனையை முகத்தில் இறுத்தியவளாக அவளை மறுபடியும் நிமிர்ந்து பார்க்கிறேன்.

அவளுக்கு எனது நிலை குறித்த கவனம் கொஞ்சமும் வாய்த்ததாகவே தெரியவில்லை என்பதைத் தொடர்கிற அவளது பேச்சு ஊர்ஜிதம் செய்வதாகவே இருக்கிறது.

“இப்ப நீங்களே இருக்கீங்க, யாரோ ஒரு மூணாவது ஆளு, உங்களுக்கு அவரு மேல எம்புட்டுப் பிரியம், அதுகூட இந்தப் பொம்பளக்கி அவரு மேல கிடையாது தெரியுமா? பணத்துக்காக எம்புள்ள எம்புள்ளன்னு ஒறவு கொண்டாடுனாச் சரியாப் போச்சா? ஒங்கள மாதிரித் தான் எம் புருஷனும். நீங்கன்னா ஒரு பிரியம். ஒங்களுக்கு ஞாபகமிருக்கா, எனக்குக் குழந்தை பிறந்ததும் எங்க வீட்டுக்கு வர்றதா சொல்லியிருந்தீங்களே.”

எனது ஆமோதிப்புக்கெனப் பேச்சை நிறுத்துபவளிடம் ஒன்றும் புரியாத குழப்பத்துடன், “ஆமாமாம் சொல்லியிருந்தேன்”, என்கிறேன்.

“அவருக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா, சொன்னா நீங்க நம்பக்கூட மாட்டீங்க. அக்கா வரப்போறாங்கன்னு ஒரே சந்தோஷம். அக்காவுக்குத் தங்குறதுக்கு இந்தச் சின்ன வீடு வசதிப்படாது. பெரிய வீடா பார்த்துக் குடி போகணும்னு உடனே வீடு மாத்தினார். ஒரு நாள் வந்து தங்கறதுக்கு, எதுக்குங்க இந்த ஆடம்பரம், ஏற்கனவே உங்க அம்மாகிட்ட பேச்சு வாங்கிக்கிட்டு இருக்கறப்போன்னு நானும் எவ்வளவோ தடுத்தேன். கேட்டாதான? அதோட மறுநாளே காரை வாங்கி நிறுத்திட்டாரே மனுஷன்! பக்கத்து ஊர்ல இருக்கற தர்காவுக்கெல்லாம் உங்களக் கூட்டிப்போயிக் காட்டறதுக்காம் என்னுடைய நம்பிக்கையைப் பெறுகிற உத்வேகத்துடன் ஆர்வமாகச் சொல்லி நிறுத்தியவள், கடைசியில, “சாகிறதுக்குன்னுன்னு அந்த காரை வாங்கினாப்புல ஆயிருச்சு” என வருத்தத்துடன் முடிக்கிறவளின் முகம் விரக்தியினால் சுண்டிப்போய்க் கிடக்கிறது.

எனக்குள் இன்னும்கூட என்ன செய்வதென்கிறக் குழப்பம் நீடிக்கிறது. ஏதோ ஒருவிதத்தில் எனது பேரில் தனக்கும் தன் கணவனுக்கும் உள்ள அதீதப் பிரியத்தைச் சொல்லிவிட முடிந்ததில் உண்டான நிம்மதியோடு சுவற்றில் சாய்ந்து அமர்ந்துகொள்கிற அவளிடம் தனக்கு ஆதரவான ஒரு நிலையை என்னிடத்தில் கோரும் தன்மையிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கென்னவோ, இது வரைக்குமில்லாதபடியான கருணை அவன் பேரில் ஊற்றெடுக்க, என்ன அற்பமான மனிதர்கள் என சýப்புண்டாகிறது. இங்கு வருவதற்கு முன்பிருந்த மனநிலைக்கும் இப்போதைய மன நிலைக்குமிடையேயான மாற்றத்தினை யோசிக்கிற எனக்கு அங்கிருந்து சென்றுவிட வேண்டுமென்கிற ஆவல் மிகுந்துகொண்டிருக்கிறது. எனது இருப்புக்கொள்ளவியலாத மனநிலையை அவள் அறிந்துகொண்டு விடக்கூடாதென்கிற கவனமுடனும் மூன்றாவது நபரான என்னிடம் அவள் வேண்டி நிற்கும் ஆதரவு எப்படிப்பட்டதாக இருக்க முடியும் என்கிற யோசனையுடனும் அமர்ந்திருக்கிறேன். எத்தனை நிராதரவான ஒரு நிலையிலிருந்து இந்த வேண்டுகோள் வரக்கூடும் என்கிற அதிர்ச்சி மட்டுமே எஞ்சியிருக்கிறது.

அவளைத் தைரியப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடும் அவளது தொடர்ச்சியான பேச்சின் மீது குறுக்கீடொன்றை நிகழ்த்திவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட வேண்டுமென்கிற நிர்ப்பந்தத்துடனும், “சரி நடந்தது நடந்து போச்சு. உன் குழந்தைக்காகவாவது நீ தைரியமா யிருக்கணும். நாங்கல்லாம் உனக்கு இல்லெ” அவளது மெலிந்த கையைப் பற்றியபடி ஆறுதல் சொல்கிற எனக்கே, அவ்வார்த்தைகள் ஒப்புக்குச் சொல்லப்படுவதாகவே இருக்கின்றன.

நான் சொல்கிற ஆறுதல் வார்த்தைகளில் உணரும் பாதுகாப்பை அனுப வித்தவளாகத் தனது கையை எனது கைக்குள்ளாக, மேலும் அழுத்தமாகவே பிணைத்துக் கொள்கிறாள்.

“எனக்குத் தாய் தகப்பன் இல்லாத குறையை நீங்கதான் போக்கணும்.” தனக்குள்ளாகச் சத்தமின்றி அழுகிறாள். “ப்ச், சும்மாயிருங்கறேன் இல்லெ” அவளது உள்ளங்கையை அழுத்திச் சமாதானம் செய்கிறேன்.

“அந்தக் காருதான் வெனையா இருந்துச்சு அந்த மனுஷனுக்கு. மலையாளி முண்டை தேவுடியா என்னா மருந்து போட்டாளோ அவ வீடே கெதியா கிடந்து, கடைசியில ஒரேயடியா போய்ச் சேர்ந்துட்டாரு. அவ வீட்டுக்குப் போறப்போதான ஆக்ஸிடெண்ட் ஆச்சு” அழுகையினூடே ஆத்திரம் கொப்பளித்து வெடிக்க, சுர்ரென மூக்கை உறிஞ்சி எச்சிலைக் கூட்டிப் புளிச்செனப் பக்க வாட்டுச் சுவற்றின் மீது துப்புகிறாள்.

“மலையாளி!” எனக்குப் பொட்டில் அடித்தாற் போலிருக்கிறது. அதற்கு மேல் எனக்குத் தெரிய வேண்டியது எதுவுமேயில்லாமல் போக, அதிர்ச்சியில் துடிக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்தும் வழியறியாது மார்பின் மீது கைவைத்து அழுத்திக்கொள்கிறேன். இந்த நிமிடத்தில் எனக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்கிற பயம் பிடித்துக்கொள்ள அப்படியே அசையாமல் அமர்ந்திருக்கிறேன்.

அதன் பிறகு எப்படி அவளது கையிலிருந்து என்னுடைய கையை விடுவித்துக்கொண்டேன் என்பதோ வீடெங்கும் நிறைகிற பாத்திஹாவின் சப்தங்களோ சாம்பிராணி மணமோ எதுவுமே நினைவில் பதியாமல் கடந்துகொண்டிருக்க முதல் நாளைப் போன்றே நடுக்கமுறும் பாதங்களை வீட்டை நோக்கி நகர்த்திச் செல்கிறேன்.

எனக்குத் தெரியவில்லை அவனைப் பற்றிய நினைவுகளை இனி வெறுப்புடன் என்னால் ஸ்பரிசிக்க முடியுமா என. அவன்மீதான எனது பிரியத்தின் அளவு இனி வற்றிப்போகுமா என அவனது மரணம் குறித்த துக்கம் எனக்குள் இனி உலர்ந்தேவிடுமா என . . .

வீட்டில் நேற்றுப் பாதி இரவில் ஒலிக்காத தொலைபேசி அமைதியாக என்னை எதிர்கொள்ள, இனி ஒரு நாளும் குரலில்லாத அந்த அழைப்பு வரப்போவதில்லை என்பது உறுதியாக ஏனோ எனக்குள்ளாகப் பெருகுகிறது அழுவதற்கான வேட்கை.

– ’கதா’வும் காலச்சுவடும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை இது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *