கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 10,592 
 
 

படுத்தபடியே வயிற்றில் ஒருமுறை பந்தை வைத்து பார்த்தபோது சில்லென இருந்தது. அதிகாலை குளிர் உடலைச் சிலிர்க்க வைத்தது. அணிந்திருந்த சட்டையைக் கொண்டு வயிறோடு ஒட்டியபடி இருந்த பந்தை மூடி கண்ணாடியில் பார்த்தேன். அம்மாவின் வயிறும் இரண்டு மாதங்களுக்கு முன்புவரை இப்படித்தான் இருந்தது. ஆனால் அவள் அப்போதெல்லாம் என்னைப்போல சுறுசுறுப்பாக இல்லை. அவசரத்துக்கு எழ மாட்டாள். தரையில் ஒருக்கழித்து உட்கார்ந்தபடி என்னிடம்தான் வேலைகளை ஏவி விடுவாள். எல்லாவற்றுக்கும் வைவாள்.

வயிற்றில் சுமையை வைத்திருப்பது அவ்வளவு ஒன்றும் சிரமமாக இல்லை எனத்தெரிந்தபோது அம்மாவின் மேல் எரிச்சலாக வந்தது. தம்பி பிறந்து தொலைப்பதற்குள் என்ன ஆர்ப்பாட்டம் காட்டிவிட்டாள். சட்டையிலிருந்து நழுவி பந்து தொப்பென விழுந்து இரண்டு முறை கீழே குதித்து தன்னால் அடங்கியது. அதற்குமேல் குதித்தால் அம்மா உறக்கத்திலிருந்து எழுந்து குதிக்க ஆரம்பித்துவிடுவாள் என பந்துக்குக்கூட தெரியும். பேசாமல் அம்மாவின் வயிற்றிலிருந்துகூட ஒரு பந்து பிறந்திருக்கலாம்.

இந்தப் பந்து வந்த இரண்டு நாள்களில் அம்மா தீவிரமான உளவாளியாகியிருந்தாள். அவள் காது எந்த நேரமும் பந்தின் சேஷ்டைகள் குறித்தே கவனித்திருக்கும். ஏதாவது சத்தம் கித்தம் வந்தால் அம்மா அப்பத்திருப்பியோடு ஆஜராகிவிடுவார். பல்லைக் கடித்தபடி ‘பாப்பா தூங்குதுல்ல…’ என்பாள். பல்லை விடுவிக்காமல் அம்மா அவ்வளவு தெளிவாகச் சொல்வது வேடிக்கையாக இருக்கும். நான் உடனே பந்தை எடுத்துக்கொண்டு மூன்றாவது மாடியிலிருந்து கீழே வந்துவிடுவேன். அதற்குப்பிறகு அம்மா கோபத்தில் எதையாவது போட்டு உடைப்பது கீழே வரை கேட்கும். பாப்பா விழித்துக்கொள்ளாதா எனக் குழப்பமாக இருக்கும்.

டெங்கில் பெர்மாத்தா மலிவு விலை அடுக்குமாடிக்கு வந்த ஏழு மாதங்களில் அம்மா ரொம்பவும் மாறிவிட்டிருந்தாள். முன்பெல்லாம் அம்மா இவ்வளவு கோபப்படமாட்டாள். அப்படியே வந்தாலும் ஆடு, மாடுகளோடு அவள் கோபம் போய்விடும். பெராங் பெசார் தோட்டத்தைவிட்டு துரத்தியடிக்கப்பட, வேறு வழியில்லாமல் வந்தவிலைக்கு ஆடு மாடுகளை விற்றபோதுதான் அம்மாவின் முகம் இப்படி இறுகி போய் அப்படியே நிலைத்தது. அவளுக்கு மற்றவர்களின் சந்தோசங்கள் எல்லாம் கோபமூட்டின. தம்பி பிறந்ததிலிருந்து அது இரட்டிப்பானது. அப்படித்தான் அப்பா எனக்கு பந்து வாங்கி கொடுத்தபோதும் நடந்துகொண்டாள்.

“பிள்ளைக்குப் பால்மாவு வாங்கியாறச் சொன்னா… பந்தா வாங்கிட்டு வற…” என அப்பாவிடம் கத்தியபோது தம்பி பாப்பா ஒரு முறை பயத்தால் உடலை உதறி அழுதான்.

“இது பயப்படாம கெடக்க அறுபதாம் பச்சை கேட்டு ஒருமாசம் ஆகுது. அத கொண்டுவர வக்கில்ல… பந்து வாங்குதாம் பந்து…” தம்பியின் அழுகை கொஞ்ச நேரத்தில் விக்கலாக மாற அம்மா ஒரு நூலை சிறிதாகச் சுருட்டி அவன் உச்சந்தலையில் வைத்தாள். அவ்வாறு செய்வதால் விக்கல் நின்றுவிடுமென முன்பு தோட்டத்தில் ஓலம்மா சொல்லியுள்ளாராம். தோட்டத்தில் இதுபோல நிறைய அம்மாக்கள் என் அம்மாவுக்கு ஆலோசனைகள் கூறுவதுண்டு. இப்போது அவர்களெல்லாம் எங்கு இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

அப்பா முன்பு போல கத்தாததுதான் ஆச்சரியம். தோட்டத்தில் இருந்தபோது அப்பாவின் குரல் ஏக பிரபலியம். அடிவயிற்றிலிருந்து உருண்டு வரும் ஓசை தொண்டைக்கு வந்ததும் காற்றழுத்தத்தால் வேகத்தைக் கூட்டி வெளிவந்து கொட்டும். அப்பாவுக்குக் குரல்போலவே நடையிலும் ஒரு கம்பீரம் இருக்கும். பெராங் பெசார் பெருமாள் இல்லாமல் தோட்டத்தில் எந்த நல்லதோ கெட்டதோ நடக்காது என்பார். பெராங் பெசார் அழிக்கப்பட்டு புத்ரா ஜெயா நகரமானப்பின் அப்பாவின் பழைய தெம்பெல்லாம் குறைந்திருந்தது.

“காட்டையெல்லாம் அழிச்சிட்டானுங்க… அறுபதாம் பச்சைக்கு எங்க போவறது…” அப்பா என்னை பரிதாபமாகப் பார்த்தபோது நான் அவர் கையில் இருந்த பந்தை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். புதிய பந்தின் மணம் கிரக்கத்தை ஏற்படுத்தியது.

“தண்ணிக்கும் கரண்டுக்கும் காசு கட்ட என்னைய கூட்டியா கொடுக்கப்போற…எடுக்குற சம்பளமே இத்துனூண்டு…அதுல பந்து ஒரு கேடு” அம்மா இடது கையை மடித்து வலது கையால் இடது கை துவாரத்தில் அடித்து ‘டப்’ என சத்தம் வரச்செய்தாள். பாப்பா மீண்டும் மிரண்டது.

அன்றுதான் அப்பா முதன்முறையாக பந்தை என் கையில் கொடுத்து வெளியே போகச்சொன்னார். இரவு நேரங்களில் அப்பா என்னைப் பொதுவாக வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. எனக்கும் அப்போது உடனடியாக எங்கே போவதெனத் தெரியவில்லை. எனவே வழக்கம் போல அப்பாவின் பெரிய கத்தரிக்கோளைத் தீட்டத் தொடங்கினேன். ரப்பர் மரம் சீவிய காலத்தில் அப்பாவின் உளியை அம்மாதான் தீட்டுவார். அப்பா ஆடுகளுக்குக் காண்டா இலைகளை வெட்டிப்போடுவார். காண்டா இலைகளில் புழுக்கள் இருக்கும். அதை ஆடுகள் தவறி கடித்துவிட்டால் அவை உதட்டுகள் புண்ணாகும். புழுக்கள் சுருண்டுள்ள இலைகளை அடையாளம் கண்டு பறித்து அகற்றுவதுதான் என் வேலை. புழு கோழிகளுக்கு உணவாகிவிடும். கோழி எங்களுக்கு உணவாகிவிடும்.

இப்போது நான் பெரியவனாகிவிட்டபடியால் கத்தரியைத் தீட்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கத்தரி சுனை பிடித்தால்தான் அப்பாவால் புதிதாக உருவாகியுள்ள புத்ரா ஜெயா நகரத்தில் உள்ள சாலை ஓரச்செடிகளை அளந்து வைத்தார்போல ஒரே அளவில் சமம்படுத்தி பராமரிக்க முடியும். முதலில் அப்பாவுக்கு அந்தத் தொழில் சிரமமாகத்தான் இருந்தது.

“காட்டுக்குள்ள கட்டுப்பாடில்லாம வளந்துகெடந்த செடிகள கழிச்சி போட்டு பழகிட்டேன்… இதென்னவோ செடி போலவே இல்ல… மண்ணுக்குச் செடி பழகல… இந்த பிளாட்டுல நம்மல கொண்டு வந்து நட்டு வச்ச மாதிரி அதுங்களயும் ஊணியிருக்கானுங்க…தெம்மேன்னு கெட்டக்குதுங்க…ஏதோ பிளாஸ்டிக் செடியாட்டம்” அம்மா எப்போதும் போல அன்றும் பதில் கூறவில்லை. அவள் முகம் இறுகியே கிடந்தது.

மூன்று மாதமாகக் கேட்டு கடைசியாக அப்பா வாங்கி கொடுத்த பந்தினால் நன்றி உணர்ச்சி வேறு கண்ணா பின்னாவென்று கூடியிருந்தது. கத்தியில் தீவிரமாக சுனை ஏற்றிக்கொண்டிருந்தேன். பந்து என் அருகிலேயே இருந்தது. இருள் சூழ்ந்த பகுதியில்கூட அது தன் இருப்பை எளிதாகக் காட்டிக்கொண்டது. கத்தியின் துரு கைகளில் படிந்து செந்நிறமாக இருந்ததால் பந்தைத் தொடவில்லை. பந்து புதியது. வெண்மை நிறமானது. அழுக்குப் படியக்கூடாது எனதான் முதலில் நினைத்தேன். ஆனால் பந்து வந்த இரண்டாவது நாள் இரவு வரை அதில் அழுக்கெதுவும் பதியவில்லை என்பதே பின்னர் வருத்தமானது. அழுக்கேறாத பந்துதான் எவ்வளவு அருவருப்பானது.

பந்தை வீட்டில் விளையாட கடுமையாக மறுக்கப்பட்டிருந்த நிலையில் அடுக்குமாடி கீழ் தளத்தில் அதை உதைத்துவிளையாடத் தொடங்கினேன். ‘ப’ வடிவில் அமைந்துள்ள அடுக்குமாடிக்கட்டடத்தின் நடுப்பகுதியில் ஆறு அடிகள் மட்டும் எடுத்துவைக்க இடம் உண்டு. ஒருவேளை பெண்களுக்குள் சண்டை வந்தால் காரித்துப்பும் எச்சில் எதிர்வீட்டு சமையல் அறை வரை விஜயம் செய்ய வசதி செய்துகொடுத்திருந்தது அரசாங்கம். ஆனால் இளைஞர்கள் பலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை அங்கே நிறுத்தி வைத்திருப்பதால் ஆறடி நான்கு அடியாகச் சுருங்கியிருந்தது.

பந்துக்குக் கற்பகம் பாட்டியில் வற்றிய முலைமீது என்ன ஆசையோ! ஒரு தரம் முத்தமிட்டுவிட்டு கீழே விழுந்து விழித்தது. பாட்டி சம்பந்தமே இல்லாமல் பந்தின் பிறப்பு குறித்து ஓலமிட்டாள். எனது பந்து விருந்தாளிக்குப் பிறந்ததென்றாள். அது மலடாகப் போக வேண்டுமென அவள் இறுதியாய் சபித்தபோதுதான் என்னிடம் இருப்பது பெண் பந்து என்பதை உணர்ந்தேன்.

அடுக்குமாடி பகுதிகள் முழுவதுமே இந்தச் சிக்கல்தான் இருந்தது. நான்கு புறத்திலும் சூழ்ந்திருந்த சுவர்கள் பந்தின் பயணத்தைத் தடை செய்தன. வேறு வழியில்லாமல் பின்புறமாகச் சென்று அடுக்குமாடி சுவரில் உதைத்து விளையாடத்தொடங்கினேன். எத்திய வேகத்திற்கு பந்து எதிர்க்கொண்டு வந்தது. கொஞ்ச நேரத்திலெல்லாம் இரண்டு முதியவர்கள் கீழே வந்து குடியிருப்பை வெறித்துப்பார்க்கத் தொடங்கிவிட்டனர். அவர்களில் ஒருவர் என்னைப் பார்த்ததும் “நெலம் நடுங்குதோன்னு நெனச்சேன். அவனே வீட்ட நெருப்பட்டி கோத்தா மாதிரி ஒட்டி வச்சிருக்கான்… நீ என்ன அதையும் ஒடைக்க பாக்குறியோ” என்றார். இன்னொரு தாத்தா ஏதோ கெட்ட வார்த்தை பேசினார். அவர் முன்பு தோட்டத்தில் மதுரைவீரனிடம்கூட அப்படித்தான் சகஜமாக உரையாடிக்கொண்டிருப்பார் என்பதால் பெரிதாகக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்தான் அம்மாவிடம் வத்தி வைத்திருந்தார்.

பந்து இனிமேல் அடுக்குமாடி எல்லைக்குள் உருண்டால் என் காலை முறித்துவிடுவதாக அவரது அப்பாவின் மேல் சத்தியம் செய்தாள் . அதை அம்மா சொன்னபோது தாத்தா தேனீரில் ஊறவைத்த ‘டைகர்’ ரொட்டியை வாயில் வைக்காமல் பதற்றதுடன் என்னைப் பார்த்தார். ரொட்டி ஊறி டொபக்கென முறிந்து விழுந்தது. தாத்தா சாவது பற்றியெல்லாம் பெரிய கவலை இல்லாமல் இருந்ததால் மறுநாள் கொஞ்ச நேரம் சுவரில் அடித்துவிளையாடி வெளியேறினேன். எனக்குத் தேவையெல்லாம் ஒன்றுதான். மெஸ்ஸி போல ஒருமுறையாவது பந்தை உயர பறக்க உதைக்க வேண்டும். வீட்டில் அது சாத்தியம் இல்லை. வசிப்பிடமும் ஏற்றதாக இல்லை.

தோட்டத்தில் இருந்தபோது இந்தச் சிக்கல் இல்லை. எளிதாக காய்ந்த தேங்காய் கிடைக்கும். கொஞ்சம் முயற்சி செய்தால் காய்ந்த ரப்பர் பால் கிடைக்கும். அதை நண்பர்களோடு கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து உருட்டினால் கனமான பந்து தயாராகிவிடும். உதைத்தால் கால் எரியும். ஆனால் அன்று முழுவதும் விளையாட அது ஒன்று போதும். ரப்பர் பால் பந்து அதிக தூரம் பறக்காது என தெரிந்தபோதுதான் அப்பாவிடம் முதன் முறையாக காற்பந்தைக் கேட்டேன். அப்பா அப்போது தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தார். சம்பளம் குறைவென்றாலும் நீர், மின்சாரம், வீட்டு வாடகை இல்லாததால் கேட்டதை வாங்கி கொடுப்பார். மேலும் அம்மாவுக்கு மாட்டுப்பாலிலிருந்து போதிய வருமானம் வந்தது. அடுத்த சம்பளத்தில் வாங்கி தருகிறேன் என அப்பா சொன்ன நேரம் அந்த அறிவிப்பு வந்தது.

புத்ரா ஜெயா உருவாக்கத்திற்காக நான்கு பெரும் தோட்டங்கள் அழிக்கப்பட அதற்கு மாற்றாக மலிவு விலையிலான அடுக்குமாடி வீடுகள் அத்தோட்டத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. அடுக்குமாடி வீட்டுக்குச் செல்வதில் எனக்கு ஏகப்பட்ட கொண்டாட்டம். அடுக்குமாடி வீட்டில் லிப்ட் இருக்கும். படி இருக்கும். மேலேயிருந்து கீழே பார்த்தால் ஊரே தெரியும். பறவைகள் அருகில் பறந்து செல்லும். மரங்களின் உச்சந்தலையைப் பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக மேலேயிருந்து எதையாவது கீழே போடலாம். பொருள் எதுவும் கைவசம் இல்லை என்றால் எச்சில் துப்பலாம். மேலேயிருந்து ஏதாவதொன்றை கீழே போடுவது சுவாரசியமானது. கீழே விழுவதை நாம் மட்டும் பார்க்கமுடியும். நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக அது இருக்கும். மாடிகளின் மேல் நின்று சாலையைப் பார்ப்பதால் நாம் எதிர்க்காலத்தை அறிந்தவர்களாகிவிடுவோம். சாலையில் நடக்கப்போகும் விபத்துகளையும், யார் யாரை எதிர்க்கொள்ளப்போகிறார்கள் என்பதையும் அவர்களுக்கு முன்பே மாடியில் உள்ளவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. மாடிகளில் வசிப்பவர்கள் சாமிகள்தான்.

எனக்கு அந்தக் குடியிருப்பை பிடித்தது போல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடிக்கவில்லை. சதா உஷ்ணம் என அப்பா புலம்பிக்கொண்டே இருந்தார். தோட்டத்தின் அமைதி இல்லாமல் எந்நேரமும் எழும் கய்யாமுய்யாவென்ற சத்தம் அப்பாவின் தூக்கத்தைக் கெடுத்தது. அம்மா வீட்டிலிருந்து வெளியேறுவதையே தவிர்த்தாள். வீட்டுக்கு வந்த புதிதில் மட்டும் “மார்கெட்டுல இருக்குற மாதிரி தோணுது” என்றாள். தாத்தா “நம்ம ஆட்டுக்கொட்டா இன்னும் கொஞ்சம் பெருசா இருக்கும்போல…” என அளந்துபார்த்தார். எல்லோரிடமும் அதிருப்திகள் இருந்தன. மூன்று மாடிக்கொண்ட அதில் லிப்டெல்லாம் இல்லாதது எனக்கு பெரிய ஏமாற்றமாக இல்லாவிட்டாலும் பந்தை உதைக்க முடியாமல் தடுக்கும் சுற்றுச்சூழலால் எனக்கும் முதன் முதலாக அக்குடியிருப்பின் மேல் வெறுப்பு ஏற்பட்டிருந்தது.

பந்து கிடைத்த இரண்டாவது நாள் நாங்கள் முன்பு வசித்த தோட்டத்தின் நிலபரப்பைத் தேடிச்சென்றேன். என்னுடன் தோட்டத்தில் பந்துவிளையாடிய நண்பர்கள் வேறு சில புதிய விளையாட்டுகளை அடுக்குமாடி சூழலுக்கு ஏற்ப உருவாக்கியிருந்தார்கள். அவர்களுக்குப் பல புதிய நண்பர்களும் கிடைத்திருந்தனர். வீட்டுக்குள்ளேயே வீடியோ கேமில் பந்தை உதைப்பது அவர்கள் அனைவரின் பொதுவிளையாட்டாக மாறியிருந்தது. மாலை நேரங்களில் மூங்கில் பந்தை வட்டம் பிடித்து தட்டி விளையாடுவார்கள். எனக்கு அதெல்லாம் ஒவ்வாது. நான் மெஸ்ஸியாக வேண்டும்.

பிரிசிண்ட் 18 என போர்ட் தொங்கவிடப்பட்டு எங்கள் தோட்ட மண் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. நான் ஏறிவிளையாடிய மாமரம் மட்டும் அகற்றப்படாமல் அனாதையாய் நின்றுக்கொண்டிருந்தது. அதுதான் எங்கள் தோட்டத்தின் எஞ்சியிருக்கும் ஒரே அடையாளம். அதன் அருகே முன்பு ஒரு மதுரைவீரன் கோயில் இருந்தது. துரத்தியடிக்கப்பட்டபோது தோட்ட மக்கள் அச்சிலையையும் எங்கள் புதிய குடியிருப்புக்கு மாற்றிருந்தனர். முதலில் அந்தக் கோயிலின் பூசாரி நாள்தோரும் மதுரை வீரனுக்கு விளக்கேற்றி வந்தார். அவருக்குப் புத்ராஜெயாவில் பாதுகாவலராக வேலைக் கிடைத்தப்பின் மதுரைவீரன் அங்கிருந்தே மக்களுக்கு அருள்பாலிக்க முயன்று தோற்றார். சாமியின் அடையாளத்தை இழந்து அவர் ஒரு பொருளாக மாறியிருந்தார். மதுரைவீரனின் கத்தியில் கயிறின் ஒரு முனை இணைக்கப்பட்டு மற்றுமொரு முனை வீட்டு சன்னலில் இணைக்கப்பட்டு அதில் உடைகளைக் காயப்போடுவதை வழக்கமாக்கியிருந்தனர் . மதுரைவீரன் குதிரையில் யாரோ ‘ஐ லவ் யூ புவனா’ என எழுதப்போக நிறைய காதல் விண்ணப்பங்களை அக்குதிரை சுமந்து நின்றது. தலை மழையில் நனையாமல் இருக்க யாரோ ஒரு சிறுவன் கௌபாய் தொப்பியை மதுரைவீரன் தலையில் அணிவித்திருந்தான்.

அசலான உருவம் கொண்ட மதுரைவீரன் படம் மட்டும் பிரிசிண்ட் 18 மா மரத்தின் அருகே இருந்தது. மரத்தின் கீழ் சூடம் பாதி எரிந்து அனைந்து கிடந்தது இன்னமும் மக்கள் அங்கே வந்து செல்கின்றனர் என புரியவைத்தது. தோட்ட மக்களுக்கு மதுரைவீரன் இன்னமும் மரத்தில் அருகில்தான் வாழ்கிறார்.

முன்பு நாங்கள் வாழ்ந்த லயம் மலாய்க்காரர்களின் இடுகாடாகியிருந்தது. நாங்கள் விரட்டப்பட்டதுபோல மலாய்க்காரர்கள் விரட்டப்படாமல் அதே பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்தனர். நாங்கள் வாழ்ந்த வீட்டுக்கு மேல் இப்போது மலாய்க்காரர் ஒருவர் கல்லறை இருந்தது. அவரை புதைக்கதான் எங்களை விரட்டினார்கள் போல . வேறு விஸ்தாரமான இடத்தைத் தேடிச்சென்றேன். எல்லா இடங்களிலும் வாகனங்களும் கட்டடங்களும் அடைந்துகிடந்தன. எப்படியும் பந்து ஏதாவது ஒன்றின் மேல் பட்டு தடைபடும். ஓடும் வாகனத்தில் பட்டுவிட்டால் ஆபத்து. அமைச்சர்களின் வாகனம் சாதரணமாக உலாவும் இப்பகுதியில் நான் அவர்கள் உயிரை கொல்ல முயன்றேன் எனக்கூட குற்றம் சாட்டப்படலாம். அன்று மாலை வரை பந்தை உதைக்காமலேயே திரும்பினேன். கால்களில் மெல்ல எத்தியபடி வீடு வரை பந்தை உருட்டி வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஒரே ஒரு முறை பந்து எவ்வளவு தூரம் பறக்கும் என உதைத்துப் பார்த்து தெரிந்துகொண்டால் நிம்மதியாக இருக்கும்.

அன்று இரவில்தான் அந்தக் கனவு வந்தது. நான் பந்தை உதைக்கிறேன். பந்து பறக்கிறது. மிக வேகமாக. அதிகம் மேலே. எல்லோரும் அது விழும் வரை காத்திருக்கின்றனர். கண்விழித்தபோது பந்து என் பக்கத்தில் படுக்கையில் இருந்தது. கனவில் அனைவரும் காத்தே கிடப்பார்கள்…பாவம். கனவிலிருந்து மீண்டதும் மீண்டும் உறங்க முடியவில்லை. கனவில் காத்திருந்தவர்களின் முகங்களை ஒருதரம் யோசித்துப் பார்த்தேன். மெஸ்ஸி கனவில் இருந்தது உற்சாகப்படுத்தியது. அம்மாவும் உடன் இருந்தார் என்றே ஞாபகம் சொன்னது. அம்மாவுக்கும் மெஸ்ஸிக்கும் என்ன தொடர்பு என தெரியவில்லை. தரையிலிருந்து எழுந்து கட்டிலைப் பார்த்தேன். அம்மா பாப்பாவின் மேல் கையை வைத்து உறங்கிகொண்டிருந்தார். அவர் இப்போது தனது கனவில் பந்துக்காகக் காத்திருப்பார் எனத்தோன்றியது. காலையில் எழுந்தவுடன் பந்து குறித்து அம்மா என்னிடம் கேட்கலாம். வெளியே இன்னும் முழுமையாக விடியவில்லை. மனம் அதி உற்சாகத்துடன் விழித்துக்கொண்டபடியால் பந்தை வைத்து வேறென்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் கற்பினியாக முயற்சி செய்தேன்.

வயிற்றிலிருந்து விழுந்த பந்தை மீண்டும் சட்டைக்குள் செறுகி வெளியே ஓடினேன். அப்பா ஹாலில் படுத்திருந்தார். தாத்தா மட்டும் எனக்கு முன்பாகவே வாசலில் பீடி குடித்துக்கொண்டு வானத்தை வெறித்தபடி இருந்தார். படிக்கட்டில் பார்த்து இறங்க வேண்டும். மனிதர்களின் சிறுநீரும் பூனைகளின் மலமும் இருக்கும். சில சமயங்கள் இது மாறி மனிதனின் மலமும் பூனையில் சிறுநீரும் கூட இருக்கும். படிக்கட்டுளுக்கு விளக்கு இல்லை. நேற்று மழை என்பதால் நீர் ஆங்காங்கு தேங்கி கிடந்தது. எப்படியாவது இன்று பந்தை உதைத்துவிட வேண்டும் என முடிவெடுத்து மீண்டும் புத்ராஜெயா நோக்கி ஓடினேன். கனவில் பந்து பறந்ததை நினைக்கும் போதெல்லாம் உற்சாகத்தை மூட்டியது. இவ்வளவு பெரிய புத்ராஜெயாவில் ஒரு பரந்த பிரதேசம் கிடைக்காமல் போகாது என மனம் நம்பியது.நான் மெஸ்ஸியாக வேண்டும். தம்பிடித்து இழுத்துவிடும் ஒரு உதையில் பந்து எவ்வளவு தூரம் பறக்கிறதென பார்க்க வேண்டும்.

எனக்கு முன்பாகவே புத்ராஜெயா விழித்துக்கிடந்தது. பெராங் பெசார் தோட்டமாக இருக்கும் போது விடிவதில் ஒரு உறக்கத்தின் நெழிவு இருக்கும். பறவைகளின் கூச்சல் எல்லா திசைகளிலிருந்தும் கேட்கும். இப்போது நகரத்தின் முகத்தில் குளிர்நீரை ஊற்றியதுபோல திடுமென விழித்து பரபரத்துக்கொண்டிருந்தது. அம்மா இந்நேரம் எழுந்திருப்பாள். ஆனால் தேட மாட்டாள். தம்பியை கவனிப்பதில் அவள் காலை பொழுதுகள் பரபரப்பாகும். அவள் தேடும் முன்பு நான் வீட்டில் இருந்தால் பிரச்னை இல்லை. உடனே பந்தை உதைத்தாக வேண்டும். அப்போதுதான் என் கண்ணில் அகன்ற ஏரி ஒன்று தென்பட்டது. முன்பு அங்கு ஏரி இல்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட அது திடலை விட பரப்பளவில் கூடியிருந்தது. ஏரிக்கு அக்கறையில் பெரிய மசூதி தெரிந்தது. ஓங்கி எத்தினால் பந்து அதுவரை செல்ல வாய்ப்பில்லைதான். யாருக்கும் சேதமில்லை.

நான் பந்தை தரையில் வைத்தேன். அழுக்குப்படாத பந்து அருவருப்பானது. அதை வைத்திருப்பதில் பலனில்லை. கனவு மீண்டும் நினைவுக்கு வந்தது. மூன்று வருடங்கள் போராடி பெற்ற பந்து. ஒரே முறைதான் வாய்ப்பு. பந்து ஒரு காலை பறவைபோல பறந்து செல்லும். தண்ணீரில் அது விழும்போது ஏராளமான வளையங்களை உண்டு பண்ணும். பின்னர் அது அங்கேயே பல ஆண்டுகள் ஒரு சாட்சியாக மிதக்கும். திடலை பறிகொடுத்தவர்களின் முயற்சியால் சில வருடங்களில் அதுபோல நிறைய பந்துகள் மிதக்கும். இறுதியில் குளம் பந்துகளால் ஆன திடலாகிவிடும். அப்போது நான் பந்துகள்மேல் நடந்து சென்று என் முதல் பந்தை எடுத்துக்கொள்வேன்.

“ஒரே முறைதான்”

சொல்லிக்கொண்டே பந்தை நோக்கி வலது காலைப் பாய்ச்சினேன்.

– செப்டம்பர் 2013 (நன்றி: http://vallinam.com.my)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *