கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 9,836 
 
 

எழுதியவர்: தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய்

பூரவசக் தாலூகாவில் பரத்பூர் கிராமம் பெரிய சொத்த. அங்கே மரங்களின் இலைகள் முறம் மாதிரி இருக்கும், கிளைகள் உலக்கை மாதிரி இருக்கும். மண், அரைத்த சந்தனம் மாதிரி. அதை உடலில் தடவிக்கொண்டால் உடல் குளிர்ந்து விடும். விதைகளைத் தெளித்துவிட்டால் போதும், வெகு விரைவில் பயிர் செழித்து வளர்ந்துவிடும். பரத்பூரில் என்னதான் கிடையாது? மண்ணில் தங்கம் என்பார்களே, அது வெறும் பேச்சு அல்ல. உண்மையில் முன்பெல்லாம் அங்கே ஆற்றங்கரை மணலிலிருந்து தங்கம் எடுப்பதுண்டு. மண்ணுக்குக் கீழே தங்கம் இருந்தது. கிராமத்து மக்களோ முட்டாள் கூட்டம். விவசாயம் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்; அடித்தால் கோபம் வராது; “நீ அடிச்சாப் பரவாயில்லை, நீ என்ன வேத்து மனுசனா” என்பார்கள். கரையில்லாத அகலக் கட்டைத் துணி கட்டுவார்கள்; நெற்றியில் சந்தனத்தால் நாமம், கழுத்தில் துளசிமணி மாலை, கறுப்பு நிறம். இதிலிருந்தே அவர்கள் முட்டாள்கள் என்று தெரிகிறது. எல்லாரும் விவசாயிகள்; ஜமீந்தாரின் ஆட்கள் அவர்களைக் “குடியானவப் பசங்க” என்பார்கள். முன்காலத்தில் வயலை உழுவார்கள், பயிரிடுவார்கள், தூங்குவார்கள். இப்போது காலம் மாறிவிட்டது; கலி முற்றிவிட்டது. ஆகையால் இப்போது அரை வயிறு சாப்பிடுகிறார்கள், நோயால் அவஸ்தைப்படுகிறார்கள், எப்படியோ சிரமப்பட்டு விவசாயம் செய்கிறார்கள்; சிலர் கடவுளிடம் முறையிடுகிறார்கள், சிலர் முறையிடுவதில்லை — அதாவது சிலர் அழுகிறார்கள், வேறு சிலர் பல்லைக் கடித்துக் கொள்கிறார்கள்.

பத்மா நதிக்கு மறுகரையில் வசிக்கும் சாஹுக்களின் குடும்பந்தான் இப்போது பரத்பூரின் ஜமீந்தார். இதற்குமுன் கிராமம் மியான் குடும்பத்தின் வசத்திலிருந்தது. அப்போது சாஹுக்கள் இந்த பக்கம் வந்து தொழில் தொடங்கினார்கள். மியான் குடும்பத்தினரிடையே பூசல் ஏற்பட்டபோது அவர்கள் சாஹுக்களிடம் கடன் வாங்கினார்கள். கடன் ஆயிரம் மடங்காக வளர்ந்தால் கடன்காரர்கள் என்ன செய்வார்கள? அத்துடன், நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது கிராம மக்களின் தலைவன் சாஹுக்களுக்கு ஆதரவாக சாட்சியம் சொன்னான்.

அந்தப் பழைய கதை கிடக்கட்டும். இப்போது மக்கள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு .. அந்தக் கதையும் கிடக்கட்டும். பழைய குப்பையைக் கிளறிப் பிரயோசனமில்லை. எல்லா விவரங்களையும் சொல்வதானால் பெரிய புராணமாகி விடும். இந்தக் காலத்து நடப்பைச் சொல்வதுதான் சரி. இப்போது சாஹுக்கள்தான் ஜமீந்தார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆபீஸ், ஒவ்வொரு ஆபீசிலும் ஒரு நாயப் (மானேஜர்), தலைமை ஆபீசில் பெரிய நாயப். இதைத்தவிர, சாஹுக்கள் பத்மாவின் மறுகரையிலிருந்த தங்கள் ஊரிலிருந்து அடியாட்களைக் கொண்டு வந்து ஒவ்வொரு கிராமத்திலும் வைத்துப் பக்கா ஏற்பாடு செய்திருந்தார்கள். மேலும் சாஹுக்களின் உறவினர் பலர் ஜமீந்தாரியில் பல இடங்களில் கடைகள் வைத்து நன்றாகத் தொழில் செய்து வந்தார்கள். பலர் தொழிற்சாலைகளும் அமைத்திருந்தார்கள். கிராமத்த மக்கள் அவற்றிலும் உழைத்தார்கள். இந்தத் தொழிலாளிகளிலும் சிலர் பல்லைக் கடித்துக் கொண்டார்கள். சிலர் அழுதார்கள். பல்லைக் கடித்துக் கொண்டோ அழுதோ எப்படியோ காலம் கழிந்து கொண்டிருந்தது நல்லதும் கெட்டதுமாக, கிராம மக்கள் மரங்கள் மேல் உரிமை கொண்டாடி ஜமீந்தாரின் ஊழியர்களுடன் சச்சரவு செய்தார்கள். நில உரிமை விஷயமாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஜமீந்தாரின் அடியாட்களுடைய பராமரிப்புச் செலவைக் கொடுக்க மறுத்தார்கள். உப்பு, துணி, எண்ணெய் இவற்றின் விலையில் பேரம் பேசிக் கடைக்காரர்களுடன் வாக்குவாதம் செய்தார்கள். தொழிலாளர்கள் கூலிக்காக முதலாளிகளுடன் தகராறு செய்தார்கள் – இவ்வாறு சண்டை சச்சரவுகளோடு காலம் கழிந்து கொண்டிருந்தது. கண்கள் முற்றிலும் மூடப்பட்ட செக்குமாடுகள் கொம்புகளை ஆட்டிக் கொண்டு செக்கு இழுப்துபோல் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. செக்கு ஆடி எண்ணெய் வந்து கொண்டிருந்தது, அதை எடுத்துக் கொண்டான் வணிகன்; பிண்ணாக்குக் கிடைத்தது மாடுகளின் பங்குக்கு.

திடீரென்று பூகம்பம் நேர்ந்தாற்போல் எல்லாம் தலை கீழாகிவிட்து. பயங்கரமான மாற்றம்! சாஹுக்களுக்கும் ஹல்திபாரி ஜமீந்தார்களான சாயி குடும்பத்தினருக்குமிடையே நிலவிஷயமாகத் தகராறு ஏற்பட்டுவிட்டது. அவ்வளவுதான்; முன்னறிவிப்போ எச்சரிக்கையோ இல்லாமல் திடீரென்று ஒரு நாள் சாயிக்களின் அடியாட்கள் காடு, வயல்களைத் தாண்டிக் கொண்டு தடிகள் ஈட்டிகளுடன் பரத்பூருக்குப் பக்கத்துக் கிராமமான தர்மபூரின்மேல் படையெடுத்தார்கள். அவர்கள் அந்த ஊர் ஜமீன் ஆபீசுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அடித்துப் போட்டு ஆபீசைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுடைய நடவடிக்கைகளைப் பார்த்துப் பரத்பூருக்கும் கவலை ஏற்பட்டது. சாயிக்களின் ஆட்கள் தங்கள் தடிகளுக்கு எண்ணெய் தடவி மேலும் அடிதடிக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். ஆகையால் அவர்கள் பரத்பூரிலும் நுழைந்து தாக்குவார்கள் என்பது குறித்து ஒருவருக்கும் சந்தேகமில்லை. எங்கும் களேபரமாகிவிட்டது. பரத்பூர் ஜமீன் ஆபீஸ்களிலும் போராட்ட ஆயத்தங்கள் தொடங்கின.

கிராமத்து மக்கள் திடுக்கிட்டார்கள். இரண்டு எருதுகள் சண்டை போட்டால் அவற்றின் காலடியிலுள்ள நாணலுக்குத் தான் சேதம் அதிகம். மக்களின் நிலை அந்த நாணலின் நிலையை ஒத்திருந்தது. அவர்களுக்குக் கவலை ஏற்பட்டது.

கிழவன் லால்மோகன் பாண்டேதான் விவசாயிகளின் தலைவன். குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி; பற்கள் விழுந்துவிட்டன; மிகவும் மெதுவாகப் பேசுவான், இதமாகச் சிரிப்பான். கிழவன் குழம்பிப்போய்த் தலையைத் தடவிக் கொண்டான். பரத்பூர் குடிமக்கள் அங்கு வந்து அவனைச் சூழ்ந்து கொண்டு உட்கார்ந்தார்கள். கிழவன் மரியாதையோடு அவர்களைக் கும்பிட்டான்; தாயின் மடியில் தவழும் குழந்தை தன் அப்பா, சித்தப்பா, அக்கா, அண்ணனைப் பார்த்துச் சிரிக்குமே, அந்த மாதிரி சிரித்துக் கொண்டு அவர்களிடம் “வாங்க, பஞ்சாயத்தாரே” என்றான்.

எல்லாரும் உட்கார்ந்தனர். பிறகு “தலைவரே!” என்ற ஒரேயொரு வார்த்தையைச் சொன்னார்கள். அவர்கள் சொல்ல விரும்பியதையெல்லாம் அந்த ஒரு வார்த்தையிலேயே சொல்லிவிட்டார்கள். தலைவனுக்கும் எல்லாம் புரிந்துவிட்டது. கிழவன் இன்பத்திலும் சிரிப்பான், துன்பத்திலும் சிரிப்பான், சிந்திக்கும்போதும் சிரிப்பான். அவன் சிந்தித்துக்கொண்டே சிரிக்கத் தொடங்கினான்.

கௌர்பூரைச் சேர்ந்த ஒருவன், “சாஹுங்கதான் நம்ம நில உரிமையை ஒப்புத்துக்கலியே! நாம ஏன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கக் கூடாது? சாஹுங்களும் ஜமீந்தார், சாயிங்களும் ஜமீந்தார். சாயிங்க நிலத்திலே நம்ம உரிமையை ஒத்துக் கிட்டாங்கன்னா, அவங்களுக்கு ஆதரவா சாட்சி சொல்லுங்க தலைவரே” என்று சொன்னான்.

கிழவன் தலையை ஆட்டிக் கொண்டு சொன்னான், “ஊஹூம், அது பாவம்!”

அப்படீன்னா நாமும் அடிதடிலே இறங்குவோம்”

“ஊஹூம்…”

“ஏன் பயமாயிருகஜ்கா?” ஓர் இளைஞன் ஏளனமாகக் கேட்டான். கிழவன் சிரித்தான், அந்தச் சிரிப்பில் இளைஞன் குறுகிப்போனான். “பயமில்லேப்பா, அது பாவம்” என்று சொன்னான் கிழவன்.

“அப்ப என்ன செய்யப் போறே? என்ன செஞ்சாப் பாவம் வராது? சொல்லு!”

கொஞ்சம் பொறுத்துக்க. என் மனசைக் கேட்டுக்கறேன், மனசு பகவானைக் கேக்கட்டும், அப்பத்தான் .. “

ரத்தன்லால் சொன்னான், “என்ன செய்யணுங்கறதை சீக்கிரம் நிச்சயம் பண்ணு, தலைவரே! நீ சொல்றபடி நான் செய்யறேன்”

கிழவன் சிரித்தான். ரத்தனிடம் அவனுக்கு ரொம்ப நம்பிக்கை. மிகவும் நல்ல பையன் அவன்; அீத மாதிரி துணிவும் அதிகம் அவனுக்கு.
***

“நாயப் பாபு, வணக்கங்க” என்று சொல்லிக்கொண்டே கிழவன் ஜமீன் ஆபீசுக்குள் நுழைந்தான்.

“யாரு? லால்மோகனா? வா வா” என்றான் நாயப்.
“ஆமா வந்தேன்..”

“சும்மா வந்தேன் – போனேன்னு சொல்லாதே! எல்லாரும் கச்ச கட்டிக்கிட்டு எறங்கிடுங்க கோதாவிலே! அந்த ராஸ்கல் சாயிக்களை அடிச்சு நொறுக்கிடணம்! ஒரேயடியா வெட்டிப் போடணும்!”

கிழவன் சிரித்தான், “என்ன சொல்றீங்க, நாயப் பாபு”

“ஏன்?”

“வெட்டிப்போட்டா ரத்தம் சிந்தாதா? ஜனங்க செத்துப் போக மாட்டாங்களா? அதெல்லாம் பாவமில்லையா?” கிழவனின் கண்களிலிருந்து நீர் பெருகத் தொடங்கியது.

கிழவனின் இந்த ஆ ஷாடபூதித்தனத்தைப் பார்த்து உடம்பெல்லாம் எரிந்தது நாயபுக்கு. ஆனால் கிழவன் கௌரவப் பட்டவன். ஆகையால் நாயப் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு நிதானமாகச் சொன்னான், “உம், புரியுது. அவங்க இரத்தம் சிந்துமேன்னு உன் கண்ணிலே தண்ணி வருது. எல்லாம் புரியுது எனக்கு!” என்று சொல்லிவிட்டுக் காகிதத்தில் சில வரிகள் எழுதினான். பிறகு தொடர்ந்து சொன்னான், “அவங்க நம்ம ஆளுங்களை அடிச்சு ரத்த விளாறா ஆக்கிட்டாங்களே, அது…”

கிழவனின் உதடுகள் துடித்தன. கண்ணீர் இருமடங்கு பெருகியது. “அடக் கடவுளே! அதைக் கேட்டதிலேருந்து அழுதுக் கிட்டே இருக்கேன் நாயப் பாபு… ஐயோ, ஐயோ! அவங்களுக்கு அடிபட்டதை நெனச்சுப் பார்த்தா அந்த அடியெல்லாம் என் மாரிலே விழுந்தமாதிரி இருக்குங்க…!”

நாயப் கிழவனை உற்றுப் பார்த்தான். கிழவன் வெறும் பாசாங்குக்காரனா அல்லது உண்மையிலேயே நல்ல மனிதன்தானா? செம்மறியாட்டின் கொம்போடு மோதிக்கொண்டால் வைரத்தின் கூர்மையும் மழுங்கிப் போகும். அதுபோல் நாயபின் கூரிய அறிவால் கிழவனின் மழுங்கிய அறிவைத் துளைக்க முடியவில்லை. நாயப் வெகுநேரம் கிழவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, “அப்படீன்னா என்ன செய்யணும்?” என்று கேட்டான்.

“அதுதான் உங்ககிட்டே சொல்றேன்…” கண்ணீருக்கிடையே சிரித்துக்கொண்டு சொன்னான் கிழவன்.

“என்ன சொல்றே?”

“நெலத்துலே எங்க உரிமையை நீங்க ஒப்புத்துக்கங்க, உங்க அடியாளுங்களைக் கூட்டிக்கிட்டுப் போயிடுங்க… நாங்க சாயிங்களை எதுத்து நிக்கறோம்…”

“எதுத்து நிப்பீங்களா…? அடிதடி, கிரிமினல் கேஸ்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? வயலை உழுது சாப்பிடறவங்க நீங்க. தடிபிடிக்கத் தெரியுமா உங்களுக்கு? ஈட்டி எறியத் தெரியுமா?”

கிழவன் சிரித்தான்.

“என்ன சிரிக்கிறே?”

“ஒங்க பேச்சைக் கேட்டுச் சிரிப்பு வருதுங்க… நாங்க தடியும் எடுக்க மாட்டோம், ஈட்டியும் எறிய மாட்டோம்.”

“பின்ன எப்படி எதுப்பீங்க?”

“அவங்க தாக்க வந்தாங்கன்னா நாங்க அவங்களுக்கு முதுகைக் காட்டி “தடியிலே அடிங்க”ன்னு சொல்லுவோம், எங்க நெஞ்சைக் காட்டி “ஈட்டியாலே குத்துங்க”ன்னு சொல்லுவோம். எங்க ரத்தம் மண்ணிலே கொட்டும், மண்ணு செவக்கும், நாங்க செத்துப் போவோம். அப்போது அவங்களுக்குப் புத்தி வரும், அவங்க நெஞ்சு வலிக்கும், அவங்க கண்ணுலே தண்ணி வரும். அப்போ கடவுள் அவங்களுக்கு அறிவைக் குடுப்பார். அவங்க வெக்கப்பட்டுக்கிட்டுத் திரும்பிப் போயிடுவாங்க…”

ஹோஹோவென்று சிரித்தான் நாயப். “இதுதான் உன் அறிவா?”

கிழவன் ஓர் அதிசயப் பிறவி, அவன் சற்றும் நிலை குலையவில்லை. அவனுடைய பொக்கை வாயில் சிரிப்பு மலர்ந்தது. குழந்தையின் கள்ளங் கபடமற்ற சிரிப்பு. “இந்த வழி பலிக்கும், நிச்சயம் பலிக்கும்! என் மனசு கடவுளைக் கேட்டது. கடவுள்தான் இப்படிச் சொன்னார். ஒங்க மனசு கடவுளை ஒண்ணும் கேக்கறதில்லே. அது கேட்டா நீங்க நான் சொல்றதைப் புரிஞ்சுக்கிட்டிருப்பீங்க…”


தேவனுக்கேற்ற தேவி-பைத்தியக்காரக் கிழவனுக்கேற்ற பைத்தியக்காரப் பெண்டாட்டி!

எல்லாவற்றையும் கேட்டுக் கிழவிக்கும் கவலை ஏற்பட்டது. கிழவனைப்போலவே, நாயபுக்காகக் கவலை!

“இது ரொம்ப சாதாரண விசயமாச்சே? இது ஏன் நாயப் பாபுவுக்குப் புரியலே? ஏன் கிழவா?”

“அதுதானே, கிழவி!”

“இப்போ என்ன செய்யப் போறே?”

“நானா?” கிழவன் வெகுநேரம் யோசித்துவிட்டுச் சிரித்தான். “நான் தீர்மானம் செஞ்சுட்டேன்.”

“என்ன?”

“நான் சாகப்போறேன்”

“சாகப்போறியா?”

“ஆமா, சாகப் போறேன். நான் செத்துப்போனா அவங்க வருத்தப்படுவாங்க. கடவுள் அவங்களுக்கு அறிவு கொடுப்பார். அப்போ நம்ம பேச்சு அவங்களுக்குப் புரியும்.”

கிழவி சற்றுநேரம் யோசித்தாள். யோசித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது அவளுக்கு. அவள் சிரித்துவிட்டுப் பல தடவைகள் தலையை அசைத்துக்கொண்டே சொன்னாள், “ஆமா, நீ சொல்றது சரிதான்.”

“சரிதானே?” என்று கேட்டு அவள் பக்கம் திரும்பிச் சிரித்தான் கிழவன்.

“ஆமா. நீ செத்துப்போ. செத்துப் போய் அவங்களுக்குப் புத்தி சொல்லு.”

வெளியிலிருந்த ரத்தன்லால் கூப்பிட்டான், “தலைவரே!”

“வாப்பா, வா!” கிழவன் மலர்ந்த முகத்துடன் சொன்னான். ரத்தன்லால் சிரித்த முகத்துடன் உள்ளே வந்து, “தலைவரே, எல்லாரும் வந்து நின்னுக்கிட்டிருக்காங்க. நாங்க என்ன செய்யணும் சொல்லு” என்று சொன்னான், தீச்சுடர் போல் பிரகாசித்தான் அவன்.

கிழவன் வெளியே வந்து கைகூப்பி, “பஞ்சாயத்தாருக்கு வணக்கம்!” என்றான்.

இதற்குள் ஒரு விபத்து நேர்ந்துவிட்டது. சாஹுக்களின் ஆட்கள் வந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். சாஹுக்களின் தலைமை நாயப் சாரு சீல், துணிந்த கட்டை. அவன் யாருக்கும் பயப்பட மாட்டான். பைத்தியக்காரக் கிழவனைப் பிடித்து அடைத்து வைக்கும்படி அவன் உள்ளூர் நாயபுக்கு உத்தரவிட்டான்-கிழவனை மட்டுமல்ல, அவனுடைய சீடர்கள் ரத்தன்லால் உள்பட எல்லாரையும்.

கிழவன் புன்சிரிப்புடன் ஜமீன் ஆட்களிடம் “சரி, வாங்க என்றான்; ரத்தன்லாலிடமும் மற்ற சீடர்களிடமும் சொன்னான், “வாங்க குழந்தைகளா!”

கிழவி சிரித்தவாறே முன்வந்து “நான்?” என்று கேட்டாள்.

“ஆமா நீயுந்தான்!” என்று சாஹு ஆட்கள் சொன்னார்கள்.

“கொஞ்சம் இருப்பா! கிழவனோட கோவணம், என்துணி, தண்ணி குடிக்கற லோட்டா எல்லாம் எடுத்துக்கிட்டு வந்துடறேன். அந்த லோட்டாவிலே தண்ணி குடிக்காட்டி என் தாகம் தீராது” என்று கிழவி சொன்னாள்.

கிழவன் புன்சிரிப்புடன் தலையசைத்தான்.

என்னதான் இருந்தாலும் பெண்பிள்ளைதானே! லோட்டாவிடம் உள்ள பாசத்தை விடமுடியவில்லை அவளால்.


சாஹுக்கள் கிழவனை அடைத்துவைத்தாலும் அவனை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார்கள். அந்த விஷயத்தில் அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை. அடைத்து வைக்கப்பட்ட நிலையிலும் கிழவனின் மலர்ச்சி குறையவில்லை. அவன் கடவுளை அழைத்தான், நிறையச் சிந்தித்தான். தனக்குள்ளேயே கடவுளிடம் பேசினான், “கடவுளே என்ன செய்யணும்? நான் சாகவா? நான் செத்தா அவங்க வருத்தப்படுவாங்களா? நீ அவங்களுக்கு அறிவைக் கொடுப்பியா?”

கிழவி அடைபட்டிருந்த வீட்டிலேயே வளைய வந்தாள். அவள் கிழவனுக்காக சமையல் செய்தாள், அவனுடைய படுக்கையை- அதாவது கம்பளியை- உதறிவிட்டு விரித்தாள், லோட்டாவை பளபளவென்று தேய்த்து வைத்தாள். அவளுக்கு இந்த வாழ்க்கை பிடித்துப் போய்விட்டது. ஏனென்றால், இப்போதுதான் அவளுக்குக் கிழவனுடன் நெருங்கி வாழ வாய்ப்புக் கிடைத்திருந்தது. கிழவன் வெளியிலிருந்தபோது அவனுக்கு ஆயிரம் வேலை; அவளிடம் நாலு வார்த்தை குடும்பத்தைப் பற்றிப் பேச அவனுக்கு நேரமில்லை. அவன் பேசிக்கொண்டிருந்ததெல்லாம் பரத்பூரைப் பற்றிய பேச்சுத்தான், மக்களைப் பற்றிய பேச்சுத்தான். இன்றைக்கு இங்கே, நாளைக்கு இன்னோரிடம்; இவன் வருவான், அவன் வருவான், ஜனங்கள் எப்போதும் அவனைச் சூழ்ந்திருப்பார்கள். இங்கே வந்தபிறகு கிழவிக்கு அவனுடன் இருக்க முடிகிறது. பேச முடிகிறது.

ஆனால் சில நாட்களில் கிழவியின் பிரமை தெளிந்துவிட்டது. கிழவன் மாறவில்லை. இப்போது அவனைச் சுற்றிக் கூட்டம் இல்லை, இருந்தாலும் அவனுடைய மூளையில் சிந்தனைகளின் கூட்டம் குறையவில்லை. “கிழவன் மனசு கல்” என்று ஜனங்கள் சொல்வார்கள். அவர்களுடைய கருத்து சரிதான் என்று தோன்றியது கிழவிக்கு.

அவள் “கிழவா!” என்று கூப்பிட்டாள்.

கிழவன் அவள் பக்கம் திரும்பி “உம்” என்றான். ஆனால் அவனுடைய பார்வை அவள் மேல் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. எங்கோ தொலைவில், அதோ அந்த மலையுச்சியில் இருந்த கோவிலின் கும்பத்தில் அவனுடைய பார்வை நிலைத்திருப்பது போல் தோன்றியது.

“என்ன யோசிச்சுக்கிட்டிருக்கே?”

“யோசனையா?” கிழவன் சிரித்தான்.

“சிரிக்காதே கிழவா! உன் சிரிப்பு எனக்குப் பிடிக்கலே.”

“உம்…” அந்த ‘உம்’முடன் வாயை மூடிக்கொண்டான் கிழவன்.

கிழவி பயத்தாலும் வியப்பாலும் மௌனியாகிவிட்டாள். அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள், “கடவுளே, கிழவனைக் காப்பாத்து! இல்லேன்னா யாரு ஜனங்களுக்காக கவலைப்படுவாங்க?”


திடீரென்று ஒருநாள் கிழவன், “நான் சாகப் போகிறேன்” என்று சொன்னான்.

கிழவிக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் அவளுடைய பயத்தை வெளிப்படுத்த வழியில்லை. அவள் பயத்தை வெளிப்படுத்தினால் கிழவன் சிரிப்பான், “சீ!” என்பான். அந்த அவமானத்திலே கிழவி செத்துப் போய்விடுவாள்.

“நீ ஏன் சாகணும்?” என்று மட்டும் கேட்டாள் அவள்.

“நான் சாகப்போகிறேன் .. நான் அடிதடி செய்யச் சொல்லி வெளியில் இருக்கிற ஜனங்களைத் தூண்டிவிட்டதா சாஹு பாபுமார் சொல்றாங்க. நம்ம ஆளுங்க பாபுக்களோட ஆளுங்களை அடிச்சுட்டாங்க, பாபுக்களுக்கு ரொம்ப நஷ்டம் பண்ணிட்டாங்க. இதெல்லாம் நான் சொல்லித்தான் நடந்ததுன்னு பாபுமார் சொல்றாங்க..”

“அதுக்குப் பதிலா அவங்களுந்தான் நம்ம ஆளுங்களை நல்லா அடிச்சிட்டாங்களே!” ரத்தன் சொன்னான்.

புன்சிரிப்புடன் தலையை அசைத்தான் கிழவன். “அது மட்டும் இல்லே ரத்தன், நம்ம ஆளுங்க அடிச்சது பாவம். நான் செத்துக் கடவுள்கிட்டே போய் “கடவுளே, மன்னிச்சுக்கோ! எங்க ஆளுங்களோட பாவத்தை மட்டுமில்லை, பாபுமாரோட ஆளுங்களோட பாவத்தையும் மன்னிச்சுக்கோ-! அப்படீன்னு சொல்லப் போறேன் .. அப்பறம்..”

“அப்புறம் என்ன?”

கிழவன் சிரித்தான்.

“அப்பறம் பாபுமாருக்குப் புரியும் நான் பாவியில்லேன்னு..”


கிழவன் சாகும் விரதம் தொடங்கிவிட்டான். அவன் சாப்பிடாமல் கொள்ளாமல் மௌனமாகப் படுத்துக் கிடந்தான்.

கிழவியின் பேச்செல்லாம் தீர்ந்து போய்விட்டாற் போலிருந்தது. அவள் பேசாமல் உட்கார்ந்து பார்த்துக் கொண் டிருந்தாள். ஐயோ, அவளோட கிழவன் காணாமல் போயிட்டான். அவள் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட அவனுக்கு நேரமில்லை. அழுவது வெட்கக்கேடு; ஆகையால் அழக்கூட முடியவில்லை அவளால்.

அவர்கள் அடைபட்டிருந்த வீட்டுக்கு வெளியிலிருந்த மக்களின் கூப்பாடு கேட்டது, “கடவுளே, எங்க தலைவனைக் காப்பாத்து!

ரத்தன்லாலும் அவனுடைய தோழர்களும் சோர்ந்து போய் விட்டனர். கிழவியால் சும்மா இருக்க முடியவில்லை. கிழவனிடம் ஏதாவது சொல்லவும் துணிவில்லை அவளுக்கு. அவள் மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டாள், “இவ்வளவு ஜனங்களுக்காக, எனக்காக, கிழவனைக் காப்பாத்து, கடவுளே!”

கிழவனின் மனதைவிடக் கடவுளின் மனது மிருதுவானது என்று கிழவிக்குத் தோன்றியது.

கடவுள் சிரிக்கிறார் என்று நினைத்தாள் கிழவி.


கிழவன் சாகவில்லை. சாவுக்கான அறிகுறிகள் எல்லாம் தோன்றின. சாஹுக்கள் மருத்துவர்களை அனுப்பினார்கள். அவர்கள் “எங்களால் முடியாது! மனுசன் சாப்பிடலேன்னா பொழைக்க மாட்டான், பொழைக்க முடியாது” என்று சொன்னார்கள். ஆனால் ஆச்சரியம், கிழவன் பிழைத்து விட்டான்! அதைவிட ஆச்சரியம், கிழவனின் கள்ளங்கபடமற்ற, குழந்தைத் தனமான புன்சிரிப்பு அவனுடைய முகத்திலிருந்து ஒருகணங்கூட மறையவில்லை. கொஞ்சங் கொஞ்சமாகக் கிழவனின் மரண அறிகுறிகள் மறைந்துவிட்டன. குழம்பியிருந்த கண்கள் தெளி வடைந்த அவற்றில் வெண்தாமரையிதழ்களின் ஒளி மலர்ந்தது; தாயின் மடியில் இருக்கும் குழந்தைநயின் முகம்போல் கிழவனின் முகம் பிரகாசமாயிற்று. கிழவன் சொன்னான், “நான் பொழைச் சிட்டேன். நான் பாவம் செய்யலேன்னு கடவுள் என் மனசுகிட்டே சொல்லிட்டார்”

கிழவியின் முகத்தில் புன்சிரிப்பு,

“நான் இப்போ சாகப் போறேன்!” என்றாள் அவள்.

“ஏன்?”

“எனக்கு ஒடம்பு ஒரு மாதிரியா இருக்கு, தவிர..”

“தவிர என்ன?”

கிழவி பதில் சொல்லவில்லை. சும்மா சிரித்து மழுப்பினாள்.

அவள் உண்மையிலேயே இறந்து போனாள். சாதாரணக் காய்ச்சல்தான். அந்தக் காய்ச்சலில் இறந்து போனாள் அவள். சாகும் தருணத்தில் அவள் கண்ணிமைக்காமல் கிழவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மக்கள் சொல்வது சரிதான், கிழவனின் மனம் கல்.

இல்லை, ஜனங்கள் சொல்வது சரியில்லை, சரியில்லை — காரணம், கிழவனின் கண்களில் கண்ணீர்!

ஆம், கிழவனின் கண்களில் கண்ணீர்!.

கிழவி “கிழவா!” என்று கூப்பிட்டாள்.

கண்களில் நீர் பளபளத்த நிலையிலும் கிழவனின் முகத்தில் புன்சிரிப்பு. “கிழவி, என்ன சொல்றே?” என்று அவன் கேட்டான்.

“சாவு ரொம்ப அழகாயிருக்கு, கிழவா! சாவு ரொம்ப அழகு!”

கிழவன் சிரிக்கத் தொடங்கினான். அவனது கண்ணீர் டப் டப்பென்று கிழவியின் நெற்றியின் மேல் விழுந்தது. அவன் அதைத் துடைக்கப் போனான்.

“ஊஹூம், அது இருக்கட்டும்” என்றாள் கிழவி.

தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய் (1889 – 1971)

சரத்சந்திரருக்குப் பிறகு வங்காளிக் கதையிலக்கியத்தின் தலைவர். சிறுகதை, நாவல், நாடகம், பாடல்கள் எழுதுவதில் தேர்ந்தவர். அவரைப்பற்றி ரவீந்திரரின் கூற்று நினைவு கூரத்தக்கது- “மண்ணையும் மனிதனையும் அறிந்தவர், அவற்றுடன் இணைந்தவர்.” இந்த இணைப்பு வெளிப்புறத்தைச் சார்ந்ததல்ல, உள்ளார்ந்ததாகும். சரத் நினைவுப் பரிசு(1947), ரவீந்திரர் நினைவுப் பரிசு(1955), சாகித்திய அகாதமிப் பரிசு(1956), ஞானபீடப் பரிசு(1966) பெற்றவர். கல்கத்தா, வடக்கு வங்காளம், ஜாதவ்பூர், ரவீந்திர பாரதி பல்கலைக் கழங்களின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர். மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகவும் சாகித்திய அகாதமியின் ஃபெலோவாகவும் இருந்திருக்கிறார். இவருடைய கதைகளும் நாவல்களும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, திரைப்படங்களாகவும் ஆக்கப் பட்டுள்ளன. பீர்பூம் மாவட்டத்தில் லாப்பூர் கிராமத்தில் பிறந்து கல்கத்தாவில் மரணமடைந்தார். பீர்பூமின் சிதைந்த ஜமீன்தார் குடும்பம் ஒன்றைச் சார்ந்தவர். தொழில்-எழுத்து. இந்திய அரசின் ‘பத்ம பூஷண்’ விருது பெற்றவர்.

– சனி பாரேர் சிட்டி, 1944.

– அனைத்திந்திய நூல் வரிசை, வங்கச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1997, தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய், வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *