கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 9,733 
 
 

“இன்னைக்கு எங்க ஆபிஸ்ல” உற்சாகமாய் ஆரம்பித்த மைதிலி தன் கணவன் முகத்தை பார்த்தாள். அவன் செல்போனில் ஏதோ கவனமாக படித்து கொண்டிருந்தான்.

தன் வாயை இறுக்கி கொண்டாள். அந்த நிகழ்வு கொஞ்சம் வேடிக்கையானது, ஆனால் அதை இவனிடம் சொல்ல நினைத்தாலும் அவன் அதை கவனிக்காமல் இருந்ததால் இந்த முடிவுடன் தன்னை சமையலில் ஈடுபடுத்தி கொள்ள சமையல் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

அங்கே போனாலும் இராத்திரி என்ன செய்யறது? இந்த கேள்வி..! மீண்டும் அவனிடமே சென்று கேட்பதற்கும் தயக்கமாக இருந்தது.

என்ன சொல்லி விடப்போகிறான்? நான் ஏதோ சொல்ல அவன் கடைசியில் எதையாவது செய் என்று செல்போனை எடுத்து ஆராய ஆரம்பித்து விடுவான், இல்லையென்றால் யாரிடமாவது செல்போனில் பேச ஆரம்பித்து விடுவான்.

ஏங்க இராத்திரி என்ன செய்யறது? மனம் கேட்காவிட்டாலும் கடமைக்காக கேட்டு தொலைத்தாள்.

ம்..ம்.. எதையாவது செய்..மீண்டும் தீவிரமாகி எதையோ செல்போனின் திரையில் விரல்களால் கலைத்து கொண்டிருந்தான்.

இரவு என்ன செய்வது? அலுவலக்த்து பக்கத்து மேசை, சுவப்னா சொன்னது ஞாபகம் வந்தது. பகல்ல எங்க வீட்டுல எது சமைச்சாலும் கண்டுக்க மாட்டாங்க, இராத்திரி பொறுமையா சாதமானாலும் சமைச்சே ஆகணும். கூடமாட இவரும் பசங்களும் ஹெல்ப் பண்ணுவாங்க.

ஒரே கதையாத்தான் இருக்கும் எங்களுக்குள்ள, இராத்திரி ஒன்பதுக்குள்ள எல்லாம் தயாராகி சாப்பிட்டு பத்து மணிக்குள்ள படுத்துடுவோம்.

இராத்திரி டி.வி பார்க்கறது கூட அதிகமா இருக்காது, செல்போன் மூச்.. மாமனாருக்கு சுத்தமா பிடிக்காது. பசங்களுக்கு மட்டும் எட்டு மணி வரைக்கும் அவர் முன்னாடி எதையாவது செய்ய விடுவாரு, இல்லையின்னாலும் அவங்களை அவரோட ‘டிராயிங்’ போடற வேலைக்கு இழுத்துட்டு போயிடுவாரு.

சலிப்பாய் இருந்தது மைதிலிக்கு. இவர்கள் இருவருக்கும் என்னதான் செய்வது? செய்தாலும் கொண்டு வந்து டேபிளில் வைத்து விட்டு அவனை சாப்பிட வரவழைக்க அரை மணி நேரம் அழைக்க வேண்டும்.

அப்படி சாப்பிட உட்கார்ந்தாலும் “செல்போனை” கையில் வைத்து பார்த்துக் கொண்டேதான் சாப்பிடுவான். இல்லை யாரிடமாவது பேசிக்கொண்டே சாப்பிடுவான்.

இவள் அவன் வாயை பார்த்துக்கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்திருப்பாள். இவளுக்கே சலிப்பாகி தட்டை வைத்து வேண்டியதை போட்டு சாப்பிட்டு விடுவாள்.

இரவு படுக்கை கூட பெரிய எதிர்பார்ப்பு இருக்காது. கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஓடியிருந்ததால் சலிப்பாகி விட்டதோ என்னவோ?

படுக்கையில் படுத்து விட்டாலும், செல்போனை அணைக்க அவனுக்கு மனம் இருக்காது. இவள் நல்ல தூக்கத்துக்கு போகும்போது அவன் செல்போனை அணைத்து விட்டு இவளிடம் நெருங்குவான்.

அவள் காலை ஒன்பது மணியில் இருந்து ஐந்து மணி வரை கணக்கு வழக்குகளில் மூளையை கசக்கி ‘வேலை செய்த களைப்பில்’ உறக்கத்தின் எல்லைக்குள் நுழைய முயற்சிக்கும்போது…

இவள் தூக்க கலக்கத்திலும், அவன் நாளை என்ன செய்யலாம் இந்த எண்ணத்திலும், எல்லாம் நடந்து முடிந்து மீண்டும் உறக்கத்தை தொட முயற்சிக்க, அவன் அரை மணி நேரத்துக்குள் உறக்கத்துக்குள் போயிருப்பான்.

இவளுக்கு தூக்கம் காணாமல் போயிருக்கும். என்ன வாழ்க்கை இது? இந்த நிமிடம் வரை என்ன நடந்தது என்று தெரிவதற்குள் முடிந்து இதோ நாளை காலை எழுந்து பரபரவென..கிளம்பி தொலைக்க வேண்டும்.

டாக்டர் பாத்திமாவை இவளின் தோழி அழைத்து சென்று பார்க்க வைத்தாள். அப்பொழுது டாக்டர் சொன்ன அறிவுரையே “இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமே” மனம் சம்பந்தபட்டதுதான். மற்றபடி எல்லா நினைவுகளையும் உதறி விட்டு தற்சமயம் உங்கள் உலகத்தில் நீங்கள் இருவரும்தான் இருப்பதாக நினைத்து மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் உங்களை போன்றவர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பிருக்காது.

ஆனால் எப்படி முடியும்? வேலை செய்யும் இடத்திலாவது நிறைய பெண்கள் இருப்பதால் ஒருவருக்கொருவர் பேசி சந்தோஷப்பட்டுக்கொள்ள முடிகிறது. வீட்டுக்கு போனால்..! வசதியான வீடுதான். ஆனால் இருவரும் அவரவர் உலகிற்குள் நுழைந்து கொண்டு சமைப்பது, சாப்பிடுவது,..வது..வது..எல்லாமே நாடகத்தனமாய்.

எப்பொழுது தூங்கினாள் என்று தெரியாது.

ஆறு மணிக்கு அவள் வீட்டிற்குள் நுழையும் போது அதிசயமாய் அவன் சோபாவில் படுந்திருந்தான், விளக்கு எதுவும் போடாமல் இருளாய் கிடந்தது.

இவள் முதலில் இவனை கவனிக்கவில்லை. பிளாட் கதவை திறந்து லைட்டை போட்டவள் கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள். சோபாவில் சாய்ந்து தூங்கி கொண்டிருந்தான்.

இது என்ன வழக்கமில்லா வழக்கமாய்? மனம் இந்த கேள்வியை கேட்டாலும் அவனை கண்டு கொள்ளாமல் பாத்ரூமை நோக்கி சென்றாள்.

தன்னை கொஞ்சம் தயார்படுத்திக்கொண்டு முன்னறைக்கு வந்தவள் இவன் அதே நிலையில் படுத்து கிடப்பதை பார்த்தாள்.

மனசுக்குள் கொஞ்சம் சந்தோசம் கூட வந்தது, எதற்கென்று தெரியவில்லை.

காப்பி இரண்டு குவளைகளில் ஊற்றிக்கொண்டு வந்தவள் ஒன்றை அவன் முன்னால் வைத்து விட்டு காப்பி வச்சிருக்கேன், சொல்லி விட்டு தான் கையில் வைத்த குவளையை எடுத்து முன்புற வெளியில் வந்து நின்றாள்.

இங்கிருந்து கீழே பார்க்க நகரம் மாலை மயங்கிய இருளில் வெளிச்ச புள்ளிகளுடன் வாகனங்கள் சென்று கொண்டும், வந்து கொண்டும், இருந்தன.

இவள் இருப்பது இந்த “பிளாட்டில் ஏழாவது தளம்” சொந்தமாய் வாங்கியதுதான். இருவரின் சம்பளம், இந்த பிளாட்டுக்காக பாதி அளவு கடனுக்கு பிடித்தம் செய்து கொள்ளப்படுகிறது.

கடன் இல்லாமலேயே இதனை வாங்கியிருக்க முடியும். இருவரிடமும் தேவையான வசதி இருந்தாலும் அரசாங்கத்தின் வரிக்கு பயந்தே கடனை வாங்கி கட்டி கொண்டிருந்தனர்.

அரை மணி நேரம் இவள் அந்த இருளையும் வெளி உலகத்தையும் நிதானமாக இரசித்து மீண்டும் உள்ளே வந்தாள்.

அவன் அதே நிலையிலேயே படுத்திருந்தான். காப்பி குடிக்கப்படிருந்தது. இவள் என்னவாயிற்று என்று இவனை கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறானா? ஆனால் இவள் கண்டு கொள்ளவில்லை. ஒரு விதத்தில் மனசு இலேசாக கூட இருந்தது.

இராத்திரி என்ன செய்ய? ஒரு கேள்வியை வீசிவிட்டு உள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவனிடம் எந்த பதிலும் வரவில்லை. சமையலறைக்குள் நுழைந்தவள் என்ன சமைக்கலாம்? இன்று ஏனோ மனசு யாரையோ பழி வாங்கிய சந்தோசத்தில் இருந்தது. சுடச்சுட சாதம் வைத்து, மிளகுடன் ஒரு ரசம் வைத்தாள். அம்மா சொல்லியிருக்கிறாள் இரவு எப்பொழுதும் கொஞ்சம் சாதமும் இரசமும் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். அது இப்பொழுது எதற்கு ஞாபகம் வந்து தொலைக்க வேண்டும்?

அவள் டைனிங் டேபிளில் கொண்டு வைக்கவும் அவன் அதிசயமாய் வந்து உட்கார்ந்து கொண்டான். அவள் தட்டை எடுத்து வைக்கும் முன்னே அவனே இரண்டு தட்டுக்களாய் வைத்து சாதம் போட்டான். இவளுக்கு ஆச்சர்யம் வந்தாலும் வெளிக்காட்டவில்லை.

நிதானமாய் சாப்பிட்டான், இரசித்து சாப்பிட்டது போலிருந்தது. “இரசம் நல்லாயிருக்கு” வாய் திறந்து சொன்னான்.

எதுவும் பேசாமல் புன் முறுவல் மட்டும் செய்தாள்.

படுக்க போகுமுன் அவளிடம் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், இழுத்தவனை விழித்து பார்த்து கண்ணை மட்டும் தாழ்த்தினாள்.

என்ன விஷயம் என்று கேட்பாள் என எதிர்பார்த்திருப்பான் போலிருக்கிறது. அவள் ஒன்றும் பேசாமல் இருப்பதை கண்டவுடன் என்னன்னு கூட கேட்கமாட்டியா? குரலில் கொஞ்சம் கோபமும் ஆதங்கமும்.

அதான் சொல்ல வந்துட்டீங்க இல்லை, இவளின் அசட்டையான பதிலுக்கு என்ன சொல்வது என்று திகைத்தான்.

நான் “ரிசைன்”பண்ணிட்டேன், மெதுவாய் சொல்லி விட்டு அவள் முகத்தை பார்த்தான். அவள் முகத்தில் எந்த வித பிரதிபலிப்பையும் காட்டவில்லை.

மறுபடி அவனுள் ஒரு ஏமாற்றம், போய் படுக்கையில் படுத்து கொண்டான்.

இவளுக்கு பாவமாய் இருந்தது, இருந்தாலும் மனம் இறுக்கமாய் இருந்தது. கிடக்கட்டும், என்று சொன்னாலும் அவளாலும் இரவு தூங்க முடியவில்லை.

அவனது ஆதங்கத்தை கேட்டிருக்கலாமோ? மனம் இப்படி எண்ணி எண்ணி படுக்கையில் புரண்டாள்.

சட்டென விழிப்பு வர அவசரமாய் எழுந்து மணி பார்க்க ஏழு மணியை காட்டியது. அட இவ்வளவு நேரம் தூங்கியிருக்கோமா? கட்டிலை விட்டு இறங்கப்போனவள் சமையல் அறையில் விசில் சத்தம்..

ஆச்சர்யத்துடன் சமையலறைக்குள் நுழைந்தாள். அவள் கணவன் தோளில் துண்டுடன், சாரி விசில் சத்தம் உன்னை எழுப்பிடுச்சா? போய் முகம் கை கால் எல்லாம் கழுவிட்டு வா, காப்பி நானே போட்டது, குடிச்சு பாரு.

பால்..! வெளியே கதவை திறந்து பையில போட்டுட்டு போயிருந்ததை எடுத்து வந்துட்டேன்.

அவளது காரை அவனே ஓட்டி வந்து அலுவலகத்தில் இறக்கி விட்டவன், சாயங்காலம் ஆறு மணிக்கு உன்னை வந்து “பிக் அப்” பண்ணிக்கறேன்.

மனம் இறுக்கத்தில் இருந்து கொஞ்சம் விலகிய நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்தாள்.

மதியம் அவளுக்கு போன். லீவு போடறியா?

எதுக்கு?

என்னமோ மனசு சரியில்லை, அப்படியே எங்காவது வெளியே போயிட்டு வரலாம்.

அதிசயமாய் பார்த்தார்கள் அலுவலகத்தில், இவள் இப்படி விடுமுறை எடுப்பதை.

மெரீனா… அப்பா எத்தனை நாட்களாயிற்று, இங்கு வந்து.. அருகில் இவன் உட்கார்ந்திருக்க.. முகம் சற்று வாட்டமாய்., இருந்தாலும் தெளிவாய் காணப்பட்டான்.

எத்தனை நாளாச்சில்ல, நாம இரண்டு பேரும் இங்க வந்து..அவள் எண்ணியதை இவன் வெளியில் சொன்னான்.

ம்..ம்..முணங்கினாள்.

நான் நம்ம சந்தோசத்தை ரொம்ப இழந்துட்டனோன்னு தோணுது. பாரு எனக்கு கடல்ல விளையாடணும் போல தோணுது, உனக்கு?

அவளும் தலையாட்ட, இருவரும் கடல் அலையில் காலை வைத்து விளையாண்டார்கள். சுண்டல் வாங்கி கொறித்து, பக்கத்தில் விளையாண்டு கொண்டிருந்த குழந்தைகள் கையிலும் திணித்தார்கள்.

இரவு நல்ல ஓட்டலில் உணவை முடித்தவர்கள் ஒன்பது மணிக்கு மேல் பிளாட்டுக்கு வந்தனர்.

மறு நாள் இவளுடனே அவனும் எழுந்து கூடமாட உதவிகள் செய்தான். இவளும் தன் இறுக்க மன நிலையை உதறி அவனிடம் வேடிக்கையாக பேசியபடி இருந்தாள்.

அவளை அலுவலக வாசலிலேயே இறக்கி விட்டான். அலுவலகத்துக்குள் நுழையும் போது அதிசயமாய் இவளே எதிரில் வந்தவருக்கு ‘குட்மார்னிங்’ சொன்னாள். அவர் ஆச்சர்யமாய் பார்த்து பதில் வணக்கம் சொன்னார்.

கிட்டத்தட்ட ஒரு வாரம் அவளது நடவடிக்கைகளில் ஒரு துள்ளலும், மகிழ்ச்சியும் தென்பட்டதை அலுவலகத்தில் இருப்போர் கண்டனர்.

அன்று மாலை அவன் வரவில்லை, இவள் அவனுக்கு போன் செய்து செய்து அலுத்து விட்டாள் “பிசி”பிசி” என்றே வந்தது. கடைசியாக அவனே போன் செய்யும்போது அலுவலகத்தில் முக்கால்வாசி பேர் வீட்டுக்கு போய் விட்டார்கள்.

ஐ ஆம்..சாரி.. நீ ஏதாவது டாக்சி பிடிச்சி வந்திடு, நான் கொஞ்சம் பிசியா இருக்கேன், அவன் குரலில் தென்பட்ட அசட்டை..

களைத்து அவள் பிளாட்டுக்குள் நுழையும்போது அவன் செல்போனில் உரத்து பேசிக்கொண்டிருந்தான். “பார்த்தீங்களா” கடைசியில நான் தேவையின்னு கம்பெனியே என்னை வந்து கூப்பிட்டிடுச்சு.. சும்மாவா ஒரு மாசத்துல கம்பெனிக்கு ஒரு கோடிக்கும் மேல பிசினஸ் பண்ணி கொடுத்திருக்கேன்..

சள..சளவென்ற அவனது சுய புராணங்கள்.. செல்போனில் வள..வளவென்று.

சமையலறை இருளடைந்து இவளது சேவைக்காக காத்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *