காலையிலேயே மழை துவங்கி இருந்தது. கான்ஸ்டபிள் நிர்மலாதேவி, கைதியைக் கூட்டிக்கொண்டு கோர்ட்டுக்குப் போவதற்காக ஆட்டோவில் போய்க்கொண்டு இருந்தாள். கைதியைக் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் நாட்களில் நிர்மலா பதற்றமாகிவிடுவாள். பெரும்பாலும் சாப்பிடுவதுகூடக் கிடையாது. கைதி தப்பி ஓடிவிட்டால், தனக்கு தண்டனை கிடைப்பதோடு, பெருத்த அவமானமாகவும் போய்விடும். பெரும்பாலும் பெண் கைதிகளைத்தான் அவளிடம் ஒப்படைப்பார்கள். அதில் ஒரு சிலர் மூர்க்கமாக நடந்துகொள்வது உண்டு. அரிதாக ஒன்று இரண்டு பேர் அழுவார்கள். ஆனால், இந்தப் பெண்ணைப்போல வீதியில் பெய்யும் மழையை உற்சாகமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு வருபவர்களை இதற்கு முன்னால் பார்த்ததே இல்லை.
அந்தப் பெண் கைதிக்கு 20 வயதுக்குள்தான் இருக்கக்கூடும். ஆள் மெலிந்துபோய் ஆரஞ்சு நிற சுடிதார் அணிந்து இருந்தாள். உதடுகள் கறுத்து இருந்தன. கை விரல்களில் நகங்கள் அழுக்கடைந்து இருந்தன. நகம் கடிக்கும் பழக்கம் உள்ள வளாக இருக்கக்கூடும். வலது கையின் கட்டை விரல் நகம் மட்டும் பாதிதேய்ந்து போய் இருந்தது. கைது செய்யப்படும்போது அவள் செருப்புகூட அணிந்து இருக்க வில்லை. பாத வெடிப்புகள் புரையோடி இருந்தன.
அவள் ஒரு பல் மருத்துவரின் வீட்டில் பணிப் பெண்ணாக இருந்தாள். புதன் கிழமை மதியம் அந்த வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாயும் 11 பவுன் நகையும் திருடியபோது, கையோடு பிடிபட்டாள். டாக்டரின் தம்பியும் டிரைவருமாகச் சேர்ந்து, அவளைச் சமையல் அறையில்வைத்து, ஆத்திரம் தீர அடித்து இருக்கிறார்கள். டாக்டரின் மனைவி மாவுக் கரண்டியால் அவள் தலையில், முதுகில், புட்டத்தில் அடித்ததில் ஒரு அடி பல்லில் பட்டு மேல் உதடு கிழிந்துபோய் இருந்தது. அவள் கைகளை இறுக்கக் கட்டி, வளர்ப்பு நாயைக் கட்டும் சங்கிலியோடு பிணைத்துவைத்துவிட்டு, போலீஸில் புகார் செய்தனர்.
சபீனா என்ற அந்தப் பெண் கைதி, திருடியதை ஒப்புக்கொண்டதோடு இதற்கு முன்பு மூன்று முறை திருட்டுக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறாள் என்றும் தெரிவித்தாள். அவளது வயது விவரங்களை கான்ஸ்டபிள் சிவந்தியும் நிர்மலாவும் சேர்ந்து விசாரித்து முதல் தகவல் அறிக்கையில் பூர்த்திசெய்தார்கள். எல்லாக் குற்றவாளிகளையும்போல அவளும் திருடியதற்காக ஒரு பொய்க் காரணத்தைச் சொன்னாள்.
எப்படியும் ஒரு வருஷத்துக்குக் குறையாமல் சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.
சபீனா காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டதில் இருந்து, வாய் ஓயாமல் எதையாவதுபேசிக்கொண்டேதான் இருந்தாள். சினிமா நடிகர்கள், பாடகர்கள், அங்கு இருந்த காவலர்கள் என அத்தனை பேரையும் அவள் கேலி பேசினாள். அது எந்தக் காவலருக்கும் பிடிக்கவே இல்லை. அடி வாங்கி வீங்கிய கன்னத்தைப்பற்றிய கவலை இன்றி லாக்கப்பினுள் உடைந்த தீக்குச்சியைப்போட்டு, எதையோ விளையாடிக்கொண்டு இருந்தாள். சிவந்தி அவளுக்காக வலி நிவாரணி மாத்திரையும் தேநீரும் வாங்கித் தந்தபோது, தனக்கு அடிவயிறு வலிப்பதாகச் சொல்லி இருக்கிறாள்.
காலையில் மருத்துவரிடம் காட்டிவிட்டு, பிறகு கோர்ட்டுக்குக் கொண்டுபோகலாம் என்றுசப்-இன்ஸ்பெக்டர்கூடச் சொன்னார். இன்று அதைப்பற்றி சபீனா அதுவும் சொல்லவில்லை. சபீனாவிடம் சிறை செல்லப் போவதைப்பற்றிய கலக்கமே இல்லை. அவள் இயல்பாக ஆறு மணி வரை சுருண்டு படுத்து நன்றாக உறங்கியிருந்தாள். பிறகு, ஒரு டம்ளர் தண்ணீரில் முகம் கழுவிக்கொண்டு, தலையை விரலால் கோதிவிட்டபடியே கோர்ட்டுக்குக் கிளம்பத் தயாராகிவிட்டாள்.
காவல் துறை ரிக்கார்டு நோட்டில் கையெழுத்து போடச் சொன்னபோது, சபீனா ஆழகாக ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டாள். அவள் எங்கே படித்தாள் என்று சிவந்தி கேட்டதற்கு, ஹோலி ஏஞ்சல் என்று பதில் சொன்னாள் சபீனா. அந்த ஊரில் உள்ள பழமையான பள்ளிக்கூடம் அது. அதே பள்ளியில்தான் நிர்மலாவும் படித்தாள். சபீனா எந்த டீச்சரிடம் படித்தாள் என்று கேட்கலாமா என்று உடனே தோன்றியது. ஆனால், அவளைப் போன்ற ஒரு திருடி எந்த வகுப்பில் படித்தால் நமக்கு என்ன என்று அவளாகவே அந்த எண்ணத்தை முறித்துக்கொண்டுவிட்டாள்.
பள்ளியில் படிக்கும் நாளில் இப்படி ஒரு கைதியாக தான் என்றாவது அழைத்துச் செல்லப்படுவோம் என்று சபீனா நினைத்து இருப்பாளா என்ன?
ஆட்டோ மழையினுள் சென்றுகொண்டு இருந்தது. சாலை எங்கும் காற்றோடு மழை பெய்துகொண்டு இருந்தது. அதனால், நிர்மலா தேவியின் பேன்ட் கால் பக்கம் மழை அடித்து ஈரமாக்கியது. அவள் நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
”உள்ளே தள்ளி உட்கார்ந்துக்கோங்க… அக்கா” என்றாள் சபீனா.
அவள் அக்கா என்று கூப்பிடுவது நிர்மலா தேவிக்குப் பிடிக்கவில்லை. அதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்றவளைப்போல, ”மேடம்னு கூப்பிடு” என்றாள். அதற்கு சபீனா, ”மேடம்னு சொன்னா, ஸ்கூல் டீச்சரைக் கூப்பிடுற மாதிரி இருக்கும். ஏட்டம்மானு கூப்பிடுறேன்” என்றாள்.
அப்படி அவள் சொன்னது நிர்மலா தேவியைக் கேலி செய்வதுபோலவே இருந்தது. ஆட்டோ, நாராயண முதலித் தெரு வழியாகப் போய்க்கொண்டு இருந்தது. சபீனா மழைக்குப் பயந்து ஒதுங்கி நிற்பவர்களைப் பார்த்தபடியே வந்தாள். ஒரு பேருந்து நிறுத்தத்தினுள் கறுப்பு அங்கி அணிந்த கன்னியாஸ்த்ரீ நின்றுகொண்டு இருந்தாள். அவளது தலையில் போட்டு இருந்த முக்காடினைக் காற்று படபடத்து இழுத்தது. குடை பிடித்தபடியே நடந்து செல்லும் பள்ளிச் சிறுமியிடம் இருந்து குடை யைப் பிடுங்க, காற்று முயற்சித்துக்கொண்டு இருந்தது. கொய்யாப் பழ வண்டிக்காரன் ஒருவன் மழைக்குப் பயந்து, வண்டியை அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கி இருந்தான். கொய்யாப் பழங்கள் மழையில் நனைந்து கொண்டு இருந்தன. ஒரு கிழட்டுப் பிச்சைக் காரன் மட்டும் மழையில் நனைந்தபடியே குப்பைத்தொட்டி அருகில் உட்கார்ந்து இருந்தான்.
ஆட்டோ ஆனையடி பேருந்து நிறுத்தத்தைத் தாண்டியது. அங்கே மழை இல்லை. கடந்து போன ஒரு பேருந்தில் இருந்து, ஒரு பையன் சபீனாவைப் பார்த்து ரசித்தபடியே போனான். சபீனா, தன்னை அவன் கவனிப்பதை அறிந்த வளைப்போல உற்சாகத்துடன் கை காட்டி னாள்.
”யாரு உனக்குத் தெரிஞ்ச பையனா?’ என்று கேட்டாள் நிர்மலாதேவி.
”இல்ல ஏட்டம்மா. யாரோ ஒரு பையன் என்னை சைட் அடிக்கிறாப்ல. நாளைக்கு ஜெயிலுக்குள்ள போயிட்டா, அப்புறம் காலேஜ் பசங்களைப் பாக்க முடியாதுல்ல… அதான்” என்றாள்.
நிர்மலாதேவியை அப்படி எந்த இளைஞ னும் ரசித்துக் கை காட்டியது இல்லை. சில வேளைகளில் ஒன்றிரண்டு பையன்கள் ரகசிய மாக அவளை ரசிப்பது உண்டு. மற்றபடி கையைக் காட்டிச் சிரிப்பவர்கள் எவரையும் கண்டதே இல்லை.
சபீனா ஆட்டோவின் முன் பக்கக் கண்ணாடியில் தன் உருவம் தெரிவதை எட்டிப் பார்த்துவிட்டு, ”அண்ணே… ஆட்டோ வுல சி.டி இல்லையா?” என்று கேட்டாள்.
”சி.டி எல்லாம் ஜெயிலுக்குள்ளே போடு வாங்க. நல்லா படுத்து… கால் நீட்டிக்கிட்டு கேளு” என்றார் ஆட்டோ டிரைவர்.
”உங்க அனுபவமாண்ணே..?” என்று பதிலுக்குக் கேட்டாள் சபீனா.
அவர் கோபத்துடன் முறைப்பது தெரிந்தது. சாலையில் ஓர் ஆள் ஸ்கூட்டரில் போய்க் கொண்டு இருந்தான்.
”ஏட்டம்மா… இந்த ஆளு தொப்பையைப் பாருங்க. கஞ்சிப் பானை மாதிரி எப்படி இருக்கு. பாவம், இவன் பொண்டாட்டி” என்று சொல்லிச் சிரித்தாள். வாயை மூடிக்கொண்டு வர மாட்டாளா என்று ஆத்திரமாக வந்தது நிர்மலாவுக்கு. இன்னும் யாராவது ஓர் ஆளை அவள் கேலி செய்தால் மூஞ்சியோடு சேர்த்து அடித்துவிடலாம் என்றுகூடத் தோன்றியது.
”ஏட்டம்மா… உங்களுக்குக் கல்யாணம் ஆகிருச்சா?” என்று கேட்டாள் சபீனா.
”மாப்பிள்ளை பாத்துக்கிட்டு இருக்காங்க” என்றாள் நிர்மலாதேவி. சபீனா அதைக் கேட்டதும், நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டாள். எதற்காக இப்போது சிரிக்கிறாள் என்று நிர்மலாவுக்கு ஆத்திரமாக வந்தது.
சபீனா அதை அறிந்துகொண்டவளைப் போல, ”பொம்பளை போலீஸைக் கட்டிக்கிட நிறையப் பேரு பயப்படுவாங்க. மாப்பிள்ளை லேசுல கிடைக்காது” என்றாள்.
அது உண்மைதான். ஆனால், அதை திருடி சபீனா சொல்வது நிர்மலாவுக்குப் பிடிக்க வில்லை. அவளைப்போல கிரிமினல் பின்னால் அலைந்து திரிவதால்தான், தனக்குத் திருமணம் நடக்காமல்போகிறது என்று அவளுக்கு சபீனா மீது கோபமாக வந்தது.
நிர்மலாவை இதுவரைக்கும் மூன்று பேர் பெண் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள். அவர்களுக்கு இருந்த ஒரே தயக்கம் பெண் போலீஸாக இருப்பதுதான். அதில் ஒரு வங்கி ஊழியர் அவளிடம் நேராகவே சொன்னார்
”எனக்கு தோசை சுடுற பொண்டாட்டிதான் வேணும். துப்பாக்கி சுடுற பொம்பளை வேண்டாம். நீங்க தப்பா நினைச்சிக்கிடாதீங்க. இந்த வேலையை விட்டுட்டா… நான் கல்யா ணம் பண்ணிக்கிடத் தயாரா இருக்கேன்.”
எந்தப் பெண்ணும் ஒரு போலீஸ்காரரைக் கட்டிக்கொள்ள இப்படி யோசித்ததே இல்லையே. ஏன் இப்போது மட்டும் இத்தனை ஆயிரம் கேள்விகள், கேலிகள் என்று நிர்மலா வுக்கு ஆத்திரமாக வந்தது.
அவள் விரும்பித்தான் இந்த வேலைக்கு வந்தாள். பத்தாம் வகுப்பில் என்.சி.சி-யில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டபோதே அவளுக்கு… இந்த காக்கி உடை, மிடுக்கு, எதற்கும் பயப்படாமல் முன்னே நிற்பது… போன்றவற்றில் ஈர்ப்பு உருவாக ஆரம்பித்தது. அவளது வீட்டில் யாருக்குமே அவள் போலீஸ் வேலைக்குப் போவது பிடிக்கவே இல்லை. அப்பா ஒருவர் மட்டுமே அவள் விருப்பத்துக் குத் துணையாக இருந்தார்.
”ஆம்பளை மாதிரி பேன்ட்-சட்டை போடுறதே எனக்குப் பிடிக்கலை. இதுல போலீஸ்ல வேலைக்குச் சேர்த்துவிட்டுட்டா, ஒரு நகை நட்டு போட முடியாது. தலையில பூ வைக்க முடியாது. சாமி கும்பிடுற பழக்கம் போயிரும். அதைவிட, எல்லாத்துக்கும் எதிர் வாதம் பேசுறதும், அடிக்கக் கை ஓங்குறதுமா கெட்ட பழக்கம் வந்துரும். வேணாம்டி இந்த வேலை. நீ மேல படிச்சி வேற ஏதாவது வேலைக்குப் போ!” என்று அம்மா அவள் காவலர் பயிற்சிக்குச் செல்லும் நாள் வரை திட்டிக்கொண்டே இருந்தாள். அண்ணன், அண்ணி இரண்டு பேரும் அவள் போலீஸில் சேர்வதால் தங்களுக்குத்தான் அவமானம் என்று கத்தினார்கள். ஆனால், நிர்மலா தனக்குப் பிடித்த வேலை என்று பிடிவாதமாக இருந்தாள்.
அவள் போலீஸ் உடுப்பை மாட்டிக்கொண்டு முதன்முதலில் வேலைக்குப் போய் வந்தபோது, தெருவே வேடிக்கை பார்த்தது. இன்றைக்கு வரை அவளது அம்மாவோ, அண்ணனோ அவளைத் தேடி, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்ததே இல்லை. எப்போதாவது அப்பா அவளைக் காண போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவார். அப்போதுகூட அவர் தலையைக் கவிழ்ந்தபடியே ஓரமாகத்தான் நிற்பார். எல்லா வேலைகளையும்போல இதுவும் ஒரு வேலை தானே. எதற்காக அப்பாகூட இப்படி நடந்து கொள்கிறார் என்று தோன்றும். போலீஸைப் பற்றிய பயம் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. அதை அவள் ஒருத்தியால் மட்டும் போக்கிவிட முடியாது என்று சுய சமாதானம் சொல்லிக்கொள்வாள்.
சில நேரங்களில் அலுவல் நெருக்கடியும் உயர் அதிகாரிகளின் ஏச்சும் பேச்சும் கேட்கை யில், இதற்காகவா வீடு, உறவு, ஏன் இத்தனை பேரை எதிர்த்துக்கொண்டோம் என்று வருத்த மாக இருக்கும். அரிதாகச் சில வேளைகளில் அழகான உடை அணிந்த பெண்களைப் பார்த் தாலோ, மதிய சினிமா பார்த்துவிட்டுத் தோழி களுடன் அரட்டை அடித்து வரும் பெண் களைக் கடக்கும்போதோ, நாம் இப்படி இல்லாமல் போய்விட்டோமே என்று மின்னல் போல ஓர் எண்ணம் தோன்றி மறையும். ஒரு முறை ஜவுளிக் கடையில் தன்னோடு படித்த தோழி ஒருத்தியைச் சந்தித்தபோதுகூட, அவள், ”என்னடி…நீ புடவைகளைப் பாத்துக்கிட்டு இருக்கே. நீ எல்லாம் காக்கி பேன்ட் போடுற ஆளாச்சே…’ என்று கேலி செய்தது நினைவில் இருக்கிறது. ஏன் தன்னை மற்றவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் கேலி செய்கிறார்கள். என்ன மனோபாவம் இது?
பணிக்குச் சேர்ந்த புதுசில் ஒருநாள்அவளை யும் மணிமொழியையும் பேருந்து நிலையப் பாதுகாப்புக்கு அனுப்பிவைத்தார்கள். பேருந்தில் ஒருவன் குடித்துவிட்டு பயணிகளுக் குத் தொல்லை தருகிறான் என்று ஒரே சத்தமாக இருந்தது. பேருந்துக்குள் மணிமொழி ஏறி அந்த குடிகாரனை மிரட்டிக்கொண்டு இருந்த போது, அவன் தன் காலடியில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மணிமொழியின் மணிக்கட் டோடு சேர்த்து அடித்துவிட்டான். மணிமொழி வலி தாங்க முடியாமல் அலறிவிட்டாள்.
அன்றைக்குத்தான் முதன்முதலாக ஓர் ஆளை நிர்மலாதேவி அடித்தாள். தலை மயிரைப் பிடித்து இழுத்துச் செவுளோடு மாறி மாறி அடித்து, அந்த குடிகாரனைப் பேருந்தை விட்டு இறக்கினாள். அவன் வேட்டியைச் சொருகியபடியே ஆபாசமாக அவர்களைத் திட்டியபடி இருந்தான். மணிமொழியும் அவளும் அந்தக் குடிகாரனை லத்தியால் மாறி மாறி அடித்தார் கள். அந்தக் குடிகாரனுக்கு 50 வயது இருக்கக் கூடும். பருத்த தொப்பையுடன் இருந்தான். அடி தாங்க முடியாமல் அவன் ஒரு சிறுவனைப்போல அழுதான்.
பேருந்து நிலையமே அவர்கள் அடிப்பதை வேடிக்கை பார்த்தது. அடித்து முடித்து அவனை வேனில் ஏற்றி அழைத்துக்கொண்டு போகும்போதுதான், நிர்மலாதேவிக்கு, தான் வாழ்க்கையில் முதன்முதலாக ஓர் ஆளை அடித்து இருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது. அவள் தனது 24 வயது வரை ஓர் ஆளைக்கூட அடித்ததும் இல்லை. அடி வாங்கி யதும் இல்லை. காவல் பயிற்சியின்போது விளை யாட்டாக மோதிக்கொண்டது உண்டு. ஆனால், இப்படி ஓர் ஆளைப் பலர் அறிய பொது இடத்தில் அடித்தது அதுவே முதல்முறை.
தன் கைகளைத் தானே தடவிப் பார்த்துக் கொண்டாள். அம்மா சொன்னதுபோலத் தன்னிடம் இருந்த மென்மை போய்விட்டதோ? வீட்டில் அந்த விஷயத்தை அவள் சொல்லவே இல்லை. ஆனால், பேருந்து நிலையத்தில் உள்ள பேப்பர் கடைக்காரன் அப்பாவிடம் சொல்லி அதன் வழியே, அம்மாவுக்குத் தெரிந்துபோனது. ஒருநாள் முழுவதும் அம்மா அதற்காக வருத்தப்பட்டாள். தான் அவளைச் சரியாக வளர்க்கவில்லை என்று புலம்பினாள். நிர்மலா, அம்மாவைச் சமாதானம் செய்யவே இல்லை.
ஆனால், இந்த ஆறு வருஷத்தில் அவளுக்கு அடிப்பது, குற்றவாளிகளைத் துரத்தி ஓடுவது, நள்ளிரவில் தனியே காவல் இருப்பது, சாலை ஓரம் மணிக்கணக்கில் நின்று கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, பொதுக் கூட்டங்களுக்குப் பாதுகாப்பு போவது. ஏன், வெட்டிக் கொல்லப் பட்ட உடலுக்குக் காவலாக இருப்பது வரை அத்தனையும் பார்த்துவிட்டாள்.
இரண்டு முறை அவளது புகைப்படம் தினசரி பேப்பரில் வெளியாகி இருக்கிறது. ஒரு முறை கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களை மடக்கிப் பிடித்ததாக இன்ஸ்பெக்டருடன் அவளது போட்டோவும் மிகச் சிறிதாக வெளியாகி இருந்தது. அதைப் பார்த்துவிட்டு திண்டுக்கல்லில் இருந்து சாரதி சித்தப்பா, அப்பாவிடம் போனில், ”அண்ணே… கள்ளச் சாராயம் காய்ச்சுறவங்களோட உன் மக போட்டோவைப் பாத்தேன். இனிமே, அவளை யாரு கட்டிக்கிடுவா?” என்று கேலி பேசி இருக்கிறார். அம்மா ஆத்திரத்தில் அந்த பேப்பரைக் கிழித்து அடுப்பில் போட்டு எரித்துவிட்டாள்.
அதற்கு அப்புறம் நிர்மலாவின் காக்கி உடைகளைத் துவைப்பதைக்கூட அம்மா நிறுத்திவிட்டாள். இப்போது எல்லாம் பணி முடிந்து திரும்பி, நிர்மலாவேதான் தனது உடைகளைத் துவைத்துக்கொள்கிறாள்.அவள் ஒரு முறை தனது தாய்மாமா ராஜா மணியைத் தாலுகா அலுவலகத்தின் முன்பாக, தற்செயலாகப் பார்த்தாள். அவர் அருகே ஒரு சிற்றூரில் மளிகைக் கடை வைத்திருக் கிறார். அவள் காக்கி உடையில் இருக்கிறாள் என்பதற்காகவே, அவர் கண்டுகொள்ளாமல் விலகிப்போனார். அவளாகவே தேடிப் போய் ‘மாமா’ என்று கூப்பிட்டாள்.
அப்போதுதான் கவனித்தவரைப்போல, ”நிர்மலா… எப்படி இருக்கே?” என்று கேட்டார். மாமாவை அழைத்துப் போய் இளநீர் வாங்கித் தந்தாள். மாமா குடித்துவிட்டு, ”உங்களுக்கு எல்லாமே ஓசிதானே?” என்று கேட்டார். ”அதெல்லாம் இல்லை. காசு குடுத்துத்தான் இளநீர் வாங்கிக் குடிக்கிறோம்” என்றாள்.
மாமா அதை நம்பாதவரைப்போல, ”ஒரு நாளைக்கு ஆயிரம், ரெண்டாயிரம் மாமூல் கிடைக்குமா?” என்று குத்தலான குரலில் கேட்டார். நிர்மலாவுக்கு ஆத்திரமாக வந்தது. ”நான் அதெல்லாம் வாங்க மாட்டேன்” என்றாள்.
”நாய் வேஷம் போட்டாச்சுல்ல. பிறகு குரைக்க மாட்டேன்னா… எப்படி?” என்று சிரித்தார். ஏன் இப்படித் தன்னை அவமானப் படுத்துகிறார் என்று எரிச்சலாக வந்தது. அவளை மேலும் குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்வதுபோலவே மாமா சொன்னார்.
”உன்னைவிட பரிமளா ரெண்டு வயசு சின்னவ. அவளுக்கே கல்யாணம் ஆகி, பிள்ளை எல்.கே.ஜி போயிருச்சு. பாவம், உங்கப்பன். உனக்கு இன்னும் மாப்பிள்ளை பாத்துட்டு இருக்கான். பேசாம யாராவது ஒரு போலீஸ்காரனைப் பார்த்து லவ் பண்ணிரு. வேற மாப்பிள்ளை கிடைக்காது” என்றார்.
”நான் கல்யாணமே பண்ணிக்கிடப்போறது இல்லே மாமா” என்றாள்.
”நினைச்சேன். போலீஸ் புத்தி அப்படித் தானே போகும். அடக்க ஒடுக்கமான பொண்ணுகளுக்கே மாப்பிள்ளை கிடைக்க மாட்டேங்குது. உனக்கு எங்க போயி தேடுறது? எனக்கு மார்க்கெட்ல ஒரு வேலை இருக்கு. நான் வர்றேன்மா…” என்று கிளம்பிப் போனார்.
அதைக் கேட்டபோது நிர்மலாவுக்கு ஆத்தி ரமாகவும் கோபமாகவும் வந்தது. ஆனால், அவள் அதைக் காட்டிக்கொள்ளவே இல்லை. அன்று இரவு படுக்கையில் கிடந்தபடியே மாமா சொன்னதை நினைத்துக்கொண்டு இருந்தாள். ஏன் என்னை ஒரு குற்றவாளி போலவே பார்க்கிறார்கள். வீடும் உறவும் இப்படி தானாக எதை எதையோ கற்பனை பண்ணிக்கொண்டு, ஏன் நம்மை வதைக்கிறார் கள் என்று உள்ளூற வேதனையாக இருந்தது.
”ஏட்டம்மா… தூங்கிட்டீங்களா?” என்ற சத்தம் கேட்டது. நினைவில் விழுந்து போய் இருந்த நிர்மலா அது கலைந்தவளைப்போல, ”அதெல்லாம் இல்லை” என்றாள்.
”நான் இப்படியே குதிச்சி ஓடிப் போயிட்டா என்ன செய்வீங்க?” என்று கேட்டாள் சபீனா.
”அப்படி எல்லாம் ஓட முடியாது.”
”ஏன் ஓடுனா சுட்ருவீங்களா..? உங்க கிட்டேதான் துப்பாக்கிகூடக் கிடையாதே” என்றாள்.
ஏன் இந்தப் பெண் நம்மை இளக்காரமாகப் பேசுகிறாள் என்பதுபோல, ”வாயை மூடிட்டு வாடி…” என்றாள். கேலியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தெரிந்துகொண்டவளைப் போல சபீனா, ”நான் ஓடிப் போயிட்டா, உங்க போட்டோ பேப்பர்ல வரும்லே” என்றாள். அதைக் கேட்டதும் நிர்மலாவுக்கு எரிச்சலாக வந்தது.
”சும்மா வர மாட்டியா… என்னடி நக்கலு?” என்று கோபப்பட்டாள்.
”ஜெயிலுக்குப் போகப்போறது நானு. ஆனா, உங்க முகம்தான் இருட்டடைஞ்சி போயிருக்கு” என்றாள் சபீனா.
நிர்மலா முகத்தைக் கையால் துடைத்தபடியே வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள். சபீனா வால் நிலைகொள்ள முடியவில்லை என்பது போல சாலையில் கடந்து செல்லும் வாகனங் களை எண்ணிக்கொண்டு வரத் துவங்கினாள்.
காந்தி சிலை அருகே வந்தபோது, வாகன நெரிசலாக இருந்தது. பயிற்சிக் காலத்தில் இதே இடத்தில் நிர்மலா நின்று, வாகனங்களை ஒழுங்குபடுத்தி இருக்கிறாள். சாலையின் நடுவில் நிற்பது முற்றிலும் வேறு விதமான அனுபவம். பள்ளி வயதில் சாலையைக் கடந்து செல்வதற்கே பயமாக இருக்கும். ஆனால், அதே சாலை தனது கையசைவுக்காகக் காத்திருப்பது வேடிக்கையாக இருந்தது. ஆனாலும், நாள் முழுவதும் சாலையின் நடுவில் நிற்கையில் கடந்து செல்லும் பேருந்துகள், கார்கள், பைக்குகளுக்குள்ளாகச் சிக்கிக்கொண்டதுபோலத் தோன்றும். உறக்கத்தில்கூட வாகன ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும்.
சபீனா ஆட்டோவில் இருந்து தலையை வெளியே எட்டி, முன்னாடி நின்ற பைக் காரனைப் பார்த்து, ”சார், உங்க பொண்டாட்டிகூட அப்படி ஓரமா நின்னு போன்ல பேசுங்க. நாங்க போகணும்ல” என்றாள். அவன் திகைப்போடு தலையாட்டிக்கொண்டான். ஆட்டோ குறுக்கே புகுந்து போகத் துவங்கியது.
மரியன்னை தேவாலயத்தை ஆட்டோ கடந்தபோது, ”இயேசப்பா… எல்லாரையும் காப்பாத்து” என்று சபீனா சிலுவையிட்டுக் கொண்டாள். ஆட்டோ ரவுண்டானாவைச் சுற்றி, திரும்பி பாலத்தில் ஏறியது. பாலத்தில் செல்லும்போது சட்டென அவள் முகம் மாறி யது. கால்களை இடுக்கிக்கொண்டு உட்கார்ந்த படியே சில நிமிடங்கள் அமைதியாக வந்தாள். பிறகு, சபீனா பேசவே இல்லை. ஏன் அமைதி யாகிவிட்டாள் என்று புரியாதவளைப்போல நிர்மலா அவளைப் பார்த்தபடியே வந்தாள். அவள் தலை கவிழ்ந்தபடியே எதையோ யோசித்துக்கொண்டு வந்தாள். ஆட்டோ அமைதியாகப் போய்க்கொண்டே இருந்தது. தொலைவில் கோர்ட் வளாகம் தெரிந்தது.
நீண்ட தயக்கத்துக்குப் பிறகு, சபீனா சொன்னாள்…
”திடீர்னு பீரியட் வந்துருச்சி… ஒரு நாப்கின் வாங்கணும்”
ஆட்டோவை மெடிக்கல் ஸ்டோர் அருகில் போய் நிற்கச் சொன்னாள் நிர்மலா. அந்தப் பெண் கீழே இறங்கிக்கொண்டு தயக்கத்துடன், ”என்கிட்ட காசு இல்லை” என்றாள். நிர்மலா தனது பர்ஸில் இருந்து 50 ரூபாயை எடுத்துத் தந்தாள். சபீனா மெடிக்கல் ஸ்டோரை நோக்கிச் சென்று, நாப்கின் வாங்கி வரும் வரை அவள் ஆட்டோவில் சாய்ந்தபடியே மழை வெறித்த சாலையைப் பார்த்தபடியே நின்று இருந்தாள். அந்தப் பெண் மிச்ச சில்லறையைக் கொடுத்து விட்டு, தாழ்வான குரலில், ”கோர்ட்ல இருக்கிற பாத்ரூம்ல போயி மாத்திக்கிடுறேன்” என்றாள்.
அதே வேதனையைப் பல முறை நிர்மலா அனுபவித்து இருக்கிறாள். பொதுக் கூட்டத்துக்குப் பாதுகாப்புக்குப் போன நாளில், தேர்தல் பணிக்காக வரிசையில் நின்றபொழுதில், ஏன்… ஒரு முறை முதல்வர் வருகைக்காக ஜீப்பில் பயணம் செய்த அதிகாலையில் எனப் பல முறை வெளியே பகிர்ந்துகொள்ள முடியாத இதே வலியும் குருதிப்போக்கும் அவளை ரணப்படுத்தி இருக்கிறது.
அது வரை இல்லாமல், அந்த நிமிஷம் நிர்மலா தேவிக்கு அந்தப் பெண் மீது ஏனோ ஒரு ஒட்டுதல் வந்தது. ”காலைல ஏதாவது சாப்பிட்டியா?” என்று கேட்டாள். ”இட்லி வாங்கிக் குடுத்தாங்க” என்று சொன்னாள். அந்தக் குரல் இப்போது ஒடுங்கி இருந்தது. இருவரும் ஆட் டோவில் ஏறிக்கொண்டார்கள். அந்தப் பெண் நாப்கினை மடியில் வைத்துக்கொண்டாள். அதன் பிறகு, கோர்ட் வாசலில் போய் இறங்கும் வரை சபீனா ஒரு வார்த்தை கூடப் பேசவே இல்லை.
கோர்ட் வளாகத்தில் நிறைய மரங்கள் அடர்ந்து இருந்தன. மழைக்குப் பிந்திய வெளிச்சத்தில் அந்த சிவப்புக் கட்டடங்கள் ஏதோ ஓவியம் ஒன்றில் இருந்து விடுபட்டு வந்தவைபோலத் தோன்றின. சபீனா அவசரமாகக் கழிப்பறையை நோக்கிச் செல்வது தெரிந்தது. அவள் வரும் வரை ஒரு பன்னீர் மரத்தடியில் நின்று இருந்தாள் நிர்மலா. மழைக் காற்றால் நிறையப் பூக்கள் உதிர்ந்து சிதறி இருந்தன. அந்த வாசம் நாசியில் ஏறியது.
சபீனா படியில் இருந்து இறங்கி வருவது தெரிந்தது. அவள் முகத்தில் சிரிப்பின் சுவடே இல்லை. உலகையே பரிகசிக்கத் தெரிந்த பெண், ஏன் இப்படித் தன் உடல் குருதியைக் கண்டதும் ஒடுங்கிக்கொண்டுவிட்டாள் என்று அவள் மீது பரிவாக வந்தது. ”எப்படி இருக்கு?” என்று கேட்டாள் நிர்மலா.
”பாத்ரூம்ல தண்ணி வரலை. ஒரே அழுக்கு வேற… டிரெஸ்ஸைக் கழட்டும்போது கீழே விழுந்துட்டேன்” என்று கையைக் காட்டினாள். சிராய்ப்பாக இருந்தது. நிர்மலா அவள் கையைத் துடைத்துவிட்டபடியே, ”டீ குடிக் கிறியா?” என்று கேட்டாள்.
”வேண்டாம் ஏட்டம்மா… இப்பவே நேரமா கிருச்சி. என்னால நிக்க முடியலை. கால்
எல்லாம் நடுங்குது. எப்படா படுக்கலாம்னு இருக்கு” என்றாள் சபீனா. அந்த முகத்தில் அது வரை இருந்த வேடிக்கைத்தனம் முற்றிலும் ஒடுங்கி இருந்தது.
”இரு வர்றேன்” என்று சொல்லி, அவளை பன்னீர் மரத்தடியில் உட்காரவைத்துவிட்டு, தேநீர் வாங்கி வரப் போனாள் நிர்மலா. திரும்பி வரும் வரை தலை கவிழ்ந்து உட் கார்ந்தே இருந்தாள் சபீனா. தேநீரை அவள் கையில் தந்தபோது வேகமாகக் குடித்தாள். அவள் தேநீர் குடிப்பதைப் பார்த்தபடியே வழி எல்லாம் அவள் பேசிய கேலியை நினைத்து லேசாகச் சிரித்துக்கொண்டாள் நிர்மலா.
”எதுக்குச் சிரிக்குறீங்க?” என்று கேட்டாள் சபீனா. ”நீ அடிச்ச கேலியைப்பத்தி நினைச்சுத் தான்” என்றாள் நிர்மலா.
”அதெல்லாம் பொய்… என்னைப்பத்தி நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு. அதை மறைக்கத்தான் லூஸு மாதிரி சிரிச்சுக்கிட்டே இருக்கேன். ஒழுக்கமா வேலை செய்யணும்னு நினைச்சி வேலைக்குப் போனா… எல்லா வீட்டு ஆம்பளையும் ஒண்ணுபோலத்தான் இருக்காங்க. இவனுக எல்லாம் சேர்ந்துதான் என்னைத் திருடியா ஆக்கிட்டாங்க. படிக்கிற பசங்க யாரும் இப்படி நடந்துக்கிடுறது கிடையாது. கல்யாணம் பண்ணி குடித்தனம் நடத்திக்கிட்டு இருக்கிற ஆம்பளைகதான்… எவடா கிடைப்பானு அலையுறாங்க. அது கிழவனா இருந்தாலும்… அப்படித்தான் இருக்கான். இருபது வயசுக்குள்ளே நிறைய அனுபவிச்சிட்டேன். எனக்கு யாரையுமே பிடிக்கலை. வாங்க போவோம்” என்று எழுந்துகொண்டாள்.
படி ஏறும்போது நிர்மலா தற்செயலாகக் கவனித்தாள். சபீனா தலையில் ஒரு பன்னீர் பூ உதிர்ந்துகிடந்தது. அது அவளுக்குத் தனித்த அழகு தருவதுபோல் இருந்தது. சொன்னால் அதைத் தட்டிவிடுவாளோ என்று சொல்லாமல், அதைப் பார்த்து ரசித்தபடியே நடந்து சென்றாள்.
கோர்ட் வராந்தாவில் சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்படும் குற்றவாளியைக் காண்பதற்காக ஒரு குடும்பமே காத்துக் கிடந்தது. அதில் இருந்த மூன்று வயதுச் சிறுவனின் தலையைத் தடவிவிட்டபடியே சபீனா, ”இந்த வயசுல இங்க வந்து நின்னுக் கிட்டு இருக்கு, பாவம்ல” என்று அதைக் கொஞ்சி முத்தமிட்டாள். என்ன பெண் இவள் என்பதுபோல நிர்மலா அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
குற்ற விசாரணைக்காக கோர்ட் துவங்கி இருந்தது. வழக்கறிஞர்கள் அவசரத்தோடு போவதும் வருவதுமாக இருந்தார்கள். அவர்களை விலக்கிக்கொண்டு… ஏதோ கல்யாண வீட்டுக்குள் போவதுபோல விடுவிடுவென முன்னால் போய்க்கொண்டு இருந்தாள் சபீனா!