கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 13, 2013
பார்வையிட்டோர்: 12,315 
 
 

யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை..நான் எப்படியோ இந்த ஊருக்கு வந்து,அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் வசிக்கத் துவங்கி,யாரும் எவ்விதக் கேள்வியும் எழுப்பாததால் இங்கேயே நிலை கொண்டு விட்டேன். நான் இங்கே வந்த புதிதில்,சாலையின் இருபுறங்களிலும் உள்ள தோப்புகளும், தோட்டங்களும், விலைநிலங்களாக மாறி,வீட்டுமனைகளாக வேகமாக மாறிக் கொண்டு இருந்தது.பலர் நிலம் வாங்கிய கையோடு வீடுகளையும் கட்டத்துவங்கியிருந்தனர்.முப்பது ஆண்டுக் காலமும் ஓடிவிட்டது.வாய்பேச முடியாத நான் இங்கே வந்தபோது அனாதையாகத்தான் உணர்ந்தேன்.., ஆனால்,நாளடைவில் எனது ஆதரவைத் தேடி மற்றவர்கள் வந்தபோது எனக்குப் பெருமையாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இதோ எனக்கு மிக அருகாமையில் வலதுபுறமாக நின்று ஏதோ செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கும் ஆட்டோ ஓட்டுனர் பரமசிவம், எனக்கு பரிச்சயமாகி இருபது ஆண்டுகள் இருக்கும். முதன்முதலாகப் பரமசிவத்தைப் பார்த்தபோது நான் பயந்துதான் போனேன். பின்னர் ஏற்பட்ட பழக்கத்தால் அவரது நல்ல குணத்தை உணர்ந்து கொண்டதிலிருந்து..,இன்றுவரை எனக்கு ஆச்சரியமளிக்கும் மனிதர்களில் ஒருவராகவே அவர் இருந்து வருகிறார்.

அப்படித்தான் ஒருநாள்..,நல்ல வெயில் நேரம், உச்சந்தலையில் சூடு உரைத்துக் கொண்டிருந்தது. அந்த நெடுஞ்சாலையில் ஆங்காங்கே கானல்நீர் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அதனால், சாலையில் பயணித்த வாகனங்கள்,மனிதர்கள் ஏதோவொரு ஆறுதலாய்,நிழல் தேடி ஓடுவதாகவே எனக்குத் தெரிந்தது.

அந்த நேரத்தில்தான் ஆழ்ந்த சிந்தனையுடன் எங்கேயோ மெதுவாகப் போய்க் கொண்டிருந்த பரமசிவம் எதேச்சையாகத்தான் என்னைப் பார்த்தார்.

பார்த்தவுடன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.திடீரென்று தனது ஆட்டோவை திருப்பிக் கொண்டு சாலையைக் கடந்து வந்தவர், என் அருகே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினார். மேலிருந்து கீழாக ஒருமுறை என்னை நோட்டம்விட்டார்.
‘கரடுமுரடான எனது உடல்வாகும், பரட்டைத் தலையும்,அழுக்குமாக நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்து அவருக்கு என்ன தோன்றியதோ என்னவோ..?’

‘திடீரென்று ஒரு மனிதன் மிக அருகில் வந்து நின்று இப்படி மேலும் கீழாகப் பார்த்தால்..என்ன செய்வது..?’குழப்பத்தில் நானும் மௌனமாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.பத்து வினாடிகள் கழிந்திருந்தது,அடுத்து அவர் என்ன செய்ய நினைத்திருந்தாரோ தெரியவில்லை. “ஆட்டோ..”என்று யாரோ கூவிய சப்தம் கேட்டது.

பரமசிவம் திரும்பிப் பார்த்த திசையில் நானும் பார்த்தேன்.மனைவி மற்றும் இரு குழந்தை களுடன்,ஊருக்குள் இருந்துவரும் கிளைச்சாலை, நெடுஞ்சாலையில் இணையும் இடத்திலிருந்து, வந்து கொண்டிருந்த ஒருவர்,”பொள்ளாச்சி பஸ் ஸ்டேண்டு போகணும்.எவ்வளவு ஆகும்..?” என்று கேட்பதும் தெரிந்தது. வெளியூரைச் சேர்ந்தவர்கள் போல் இருக்கிறது.

“பதினஞ்சு ரூபா குடுங்க..சார்”

“அவ்வளவு ஆகுமா..?”

“ஆமா சார், அஞ்சு கிலோமீட்டர் தூரம் போகணும் சார்..”பணிவான குரலில் பரமசிவம் பேசியது வந்தவருக்கு மிக ஏற்புடையதாக இருந்திருக்க வேண்டும்.”சரி போகலாம்..என்றவர் தனது மனைவி குழந்தைகளைப் பார்த்து கையசைக்க அவர்களும் ஏறிக்கொண்டனர்.

உடனடியாக,தனது ஆட்டோவில் ஏறிக் கொண்ட பரமசிவம்,அதனைக் கிளப்பிய வேகத்தில் உற்சாகம் இருப்பதாகவே எனக்குத் தெரிந்தது.

‘ஊஞ்சவேலாம்பட்டியிலிருந்து பொள்ளாச்சிக்கு அரசுப் பேருந்தில் இரண்டு ரூபாய்தான்,ஆனால் டீசல் விற்கும் விலையில்,பரமசிவத்திற்கு இந்த ரேட்டுதான் கட்டுப்படியாகும் போலிருக்கிறது. இரவென்றால் இன்னும் வாடகை கூடுமோ..’

அவர் சென்று இரண்டு மணி நேரம் கழித்துத்தான் மீண்டும் திரும்பிவந்தார். நிறைய வாடகை கிடைத்தது போலும்..!

ஆனால்,மீண்டும் அவர் இங்கேயே வந்ததற்கும், என்னிடமிருந்து சில அடிகள் இடைவெளிவிட்டு நின்றுகொண்டதற்கும் எனக்கு காரணம் புரியவில்லை. வெறுமனே அவ்வப்போது என்னை ஏறிட்டுப் பார்ப்பது..பின்னர் வேறு எங்காவது பார்ப்பது.. என்றே அவர் இருந்தார்.ஏதாவது பேசினாலும் பரவாயில்லை.மனிதர் எப்படிப் பட்டவர் என்று தெரியவரும்..எதுவும் பேசாமல் அவர் வெறுமனே நோட்டம் விட்டுக் கொண்டிருப்பது எனக்கும் சற்று வினோதமாகத் தான் பட்டது.இதுவரை என்னை யாரும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை.

இந்நிலையில்,புதிதாக வந்த இந்த மனிதன்.., பார்த்தால் பக்திப் பழமாகத் தெரியும் பரமசிவத்தின் மனசுக்குள் எந்தமாதிரி எண்ணம் ஓடுகிறதோ.. யாருக்குத் தெரியும்..? இப்போதுதான் சாலையோரத்தில் இருப்பவள் பிச்சைக்காரியாய் இருந்தாலும்..வக்கிர மனத்துடன் சிலர் அவர்களிடத்தில் நடந்து கொள்ளும் முறை குறித்து,சிலர் பேசிக் கொண்டதை நானும் ஏற்கனவே கேட்டிருக்கிறேனே..!’

மீண்டும் “ஆட்டோ..”என்று யாரோ அழைக்கும் சப்தம்..என்னைப் பார்த்த ஒருமாதிரி சிரித்துக் கொண்டே,வண்டியைக் கிளப்பிப் போனவர்,பிறகு அடுத்த நாள் காலையில் ஏழு மணிக்குத்தான் வந்தார்.வந்தவர்,வழக்கம் போல இடைவெளி விட்டு ஆட்டோவை நிறுத்திக் கொண்டார். இறங்கி ஆட்டோவின் பின்பக்கம் சென்றவர் பயணிகள் இருக்கைக்கு பின்னிருந்து ஒரு பிளாஸ்டிக் கேனை எடுத்தார்.அது நிறைய தண்ணீர் இருப்பதும் தெரிந்தது.

தண்ணீர் கேனுடன் என்அருகே வந்தவர்,என்னை ஏறிட்டுப்பார்த்தார்.ஏதோ பேசுவதற்கு தயங்குவது போலத் தெரிந்தது.சுற்றுமுற்றும் பார்த்தார். சந்தடிகள் எதுவும் இல்லை.நல்லவேளை..,என்று அவருக்குத் தோன்றியிருக்கக் கூடும்.“இதா பாருமா..! டவுனுக்குள்ளே எங்கே கொண்டுபோய் வண்டிய நிறுத்தினாலும், எங்கிருந்துதான் வருவாங்களோ தெரியாது.வண்டியை எடு..,வண்டியை எடுன்னு.., போலீஸோட தொல்லை ஜாஸ்தியாயிடுச்சு.இதனாலே வண்டி வாங்குன இந்த நாலுமாசமா நமக்கு ரெகுலர் கஸ்டமருன்னு எதுவும் அமையலை. வருமானமும் ரொம்பக் கம்மியாப்போச்சு.., ஜெயில்லேருந்து திரும்பி வந்தபின்ன எனக்கு பழைய முதலாளியே வேலை தரமாட்டேன் னுட்டான்.அப்புறம் எங்க புது இடத்துக்கு போறது..? அதனாலத்தான் யார்யார் காலையோ புடிச்சு இந்த ஆட்டோ வாங்கினேன்.இதுக்கும் இனி கடன் கட்டணும்.பொண்டாட்டி புள்ளைகளையும் காப்பாத்தணும்.

ஆனா பாரு..உன்னைப் பாத்த ராசியோ என்னமோ தெரியலை..நேத்து இங்க வந்து நின்னவுடன் ஒரு வாடகை கிடைச்சது.அப்புறம் ஓய்வே இல்லாம ராத்திரி பதினோரு மணிவரைக்கும் சவாரி இருந்துட்டே இருந்துச்சு. இப்படியே இருந்துச்சுன்னா நானும் பொழச்சுக்குவேன். அதனாலத்தான் நான் இங்க வந்து நின்னுக்க லாம்ணு பாக்குறேன்.மத்தபடி உன்னை எந்த தொந்தரவும் பண்ணமாட்டேன்.யாரும் தொந்தரவு பண்ணவும் உடமாட்டேன்.நீ என்ன சொல்றே..?

‘நான் என்னத்தை சொல்றது..? என்னை தொந்தரவு பண்ணாம இருக்கிறேன்னு சொல்றதே பெரிய விஷயம்.அதுக்கு மேலே எனக்கு பாதுகாப்பாவும் இருக்கறேன்னு சொன்னா..எனக்கு கசக்கவா செய்யும்..?” என்று அவரிடம் சொல்லிவிடத்தான் துடித்தேன்.ஆனால் என்னால் பேச முடியாது என்பதை அவரும் உணர்ந்துதான் இருப்பார். முன்பின் அறிமுகமில்லாத ஒரு மனிதன், கரடுமுரடாக,அழுக்கும் புழுதியுமாக இங்கே ஆடிக்கொண்டிருக்கும் என்னை ஆதரிக்கிறேன், பாதுகாக்கிறேன் என்று வலியவந்து சொல்கிறானே..?’ எனக்கு பெருமிதத்தால் நெஞ்சம் விம்மியது.எனது நன்றியை எப்படிக் காட்டுவது..? மலர்ச்சியான கண்களுடன்,கையிலிருந்த சில மலர்களை பரமசிவத்தை நோக்கி விட்டெறிந்தேன். ‘களுக்’கென்று பரமசிவம் சிரித்துக் கொண்டார். ‘பைத்தியம்’என்று நினைத்திருப்பாரோ..?

தனது கையிலிருந்த பிளாஸ்டிக் கேனிலிருந்து கொஞ்சம் தண்ணீரைக் குடித்தவர்,உனக்கும் வேணுமா..? என்று கேட்காமலே..,“இந்தா..”;என்று கேனை நீட்ட, எனக்கும் அப்போது தண்ணீர் தேவையாக இருந்ததால்,மறுக்காமல் குடித்துக் கொண்டேன்.

அதற்குப்பிறகு, ஏதோவொரு வேண்டுதல்போல தினசரியும் எனக்கு ஒரு கேனில் தண்ணீரைக் கொண்டுவந்து விடுவது மட்டும் நிற்காமல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருந்தது.

பரமசிவத்துடன் இப்படியாகத் தொடங்கிய அறிமுகம்..இதுவரை நல்லமுறையில் நீடித்துக் கொண்டிருக்கிறது.அவர் வந்து சில மாதங்களிலேயே,பத்துப் பனிரெண்டுபேர் தங்கள் ஆட்டோக்களுடன் தொடர்ந்து இங்குவந்து நிற்பதும்,சவாரி போவதுமாக அந்த இடம் சற்று பரபரப்பாகத்தான் மாறிவிட்டது.பரமசிவம்தான் இவர்களில் மூத்தவர் என்பதால்,அவர்கள் துவங்கிய ஆட்டோ ஸ்டேண்டுக்கும் அவரையே தலைவராக இருக்கப் பணித்துவிட்டார்கள். “வரிசையாக சவாரி செல்வதிலும்,வாடகைக் கட்டணத்தில் ஒரு ஒழுங்குமுறையும் இருக்கவேண்டும்” என்பதில் பரமசிவம் மிகக் கண்டிப்பாக இருந்ததால்,பொதுமக்களுக்கும் அது வசதியாக இருந்திருக்க வேண்டும்.ஆட்டோக்கள் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருந்ததில் அனைத்து ஓட்டுனர்களின் குடும்பமும் சிரமமில்லாமல் பிழைத்துக் கொண்டிருந்ததாகவே பட்டது.

ஆட்களின் நடமாட்டம் அதிகரிக்க அதிகரிக்க, ஆட்டோ ஸ்டேண்டு பக்கத்தில் புதிதாக வந்த பெட்டிக்கடையொன்று,இந்த இருபது வருடங்களில் சற்றே பெரிதான,ஓலைகள் வேயப்பட்ட டீக்கடையாக மாறியிருந்தது.கடை உரிமையாளரான சந்திரன்நாயர்,இப்போது நாலுபேரை வைத்து வேலை வாங்கும் அளவிற்கு,லேசான தொப்பை போட்ட முதலாளியாக மாறிப்போயிருந்தார்.என்னதான் சாலையோரத்துக் கடையாக இருந்தாலும், சுத்தபத்தமாக அதனை அவர் வைத்துக் கொண்டிருந்தார்.

அந்தக்கடையில் போடப்பட்டு,இரண்டு சட்னிகளுடன்,வாழையிலையில் வைத்து வழங்கப்படும் பலகாரங்களை சுவைப்பதற்கென்றே மாலையில் ஒரு பெரும் கூட்டம் வாடிக்கையாக வருவதுண்டு.இக்கூட்டத்தில் பெண்களும் அதிக அளவில் இருந்ததால்,காய்கறிகள், கீரைகள், பிளாஸ்டிக் சாமான்கள் விற்கும் தள்ளு வண்டிகளும் அங்கு தொடர்ந்து நிற்கத்துவங்கி விட்டன.

சற்றுத் தள்ளி ஏதோவொரு காலைநேரத்தில் அங்குவந்து இளநீர்,நுங்கு,பதநீர் ஆகியவற்றை சைக்கிளில் வைத்து விற்பனை செய்யத் தொடங்கிய பழனியப்பன்,அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு அவ்வழியே வந்தவர்கள் கொடுத்த ஆதரவால்,இப்போது நிலையாக அங்கு கடை போட்டுவிட்டதும்,அதனை அவர் மனைவியின் ஒத்தாசையுடன் இருந்து பார்த்துக் கொள்ளவுமாக வளர்ந்திருந்தது. ஆனாலும்,சந்திரன் நாயரோ,பழனியப்பனோ தங்கள் வியாபாரத்திற்கு போட்டியாய் ஒருவரையொருவர் நினைத்ததில்லை என்பதும் எனக்குத் தெரியும். இத்தனைக்கும்,சந்திரன் நாயர் காலையில் இளநீர் குடிப்பதும், பழனியப்பன் மாலையில் பலகாரம் தின்று கொண்டிருப்பதும் தொடர்ச்சியாக நடைபெறும் சங்கதிகளில் ஒன்றாக மாறிப் போயிருந்தது.

அதேபோலத்தான் மருதானும்,செருப்பு தைக்க, பாலீஷ் போட என்று தனக்கு வாகான நிழலில் வந்து ஒதுங்கி அமர்ந்தவர்,இப்போது தோல்,டயர்கள், ஃபோம், ஆகியவற்றைக் கொண்டு செய்த விதவித மான செருப்புகளையும் விற்கும் அளவிற்கு முன்னேறியிருந்தார்.

வெறும் புழுதியும்,குப்பையுமாகப் பறந்து கொண்டிருந்த வெற்றுஇடம்,இப்போது அவரவர் புழங்கும் பகுதியினை சுத்தமாக வைத்துக் கொண்டிருந்ததன் மூலம்,அந்தப் பகுதியே ‘பளிச்’சென்றாகியிருந்தது.இன்னும் சிறிதும் பெரிதுமான வியாபாரங்கள்,சிலர் அவ்வப்போது வருவதும்,போவதுமாக அந்த இடமே கலகலவென்று மாறிப்போயிருந்தது. கிராமப்புறம்,நகர்ப்புறமாக இப்படித்தான் வளர்ச்சியடையும் போலிருக்கிறது.

எப்போதும் வகைவகையான மனிதர்கள் என்னைச் சுற்றி இருந்து கொண்டே இருந்ததால், எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.சற்று மூப்பு கூடிப்போன தால் “பெருசு”என்ற நிலையில்,யாரும் என்னை எதற்காகவும் தொந்தரவு செய்வதில்லை. கிடைத்ததைத் தின்று பசியாறிக் கொண்டு, வாளாவிருப்பதும்,வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுமாக,எனது பொழுதுகள் கழிந்துபோய்க் கொண்டிருந்தன.

அதுமட்டுமின்றி,ஊர்முகப்பில் இருந்த கருப்பராயன் கோவிலில் வருடத்திற்கொருமுறை பொங்கல் திருவிழா நடக்கும்போதெல்லாம், திருவிழாவிற்கேயுரிய தின்பண்டக்கடைகள், விளையாட்டு சாமான்கள்,பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள்,குழந்தைகளுக்கான ராட்டினங்கள்,தூரிகள் ஆகியவற்றை இங்கு கொண்டுவந்து வரிசையாக கடைபோடுவதும்,அந்த சமயங்களில் குழந்தைகள்,பெண்கள்,அவர்களை நோட்டம் விடும் ஆண்கள் என அந்த இடம் களை கட்டுவதுமாக..,அப்போதெல்லாம் பார்த்தால்.. அடேயப்பா..இந்த இடமே அடையாளம் தெரியாத அளவில் ஜே..ஜே..என இருக்கும். எனக்கும் பார்க்க,பார்க்க சலிக்கவே சலிக்காது.

அன்றைக்கென்னவோ காலை விடிந்ததிலிருந்து எனக்கு ஏனோ மனசே சரியில்லை.ஏதோவொரு துர்ச்சம்பவம் நடக்கப்போவதாகவே மனசுக்குள் இனம்புரியாத துக்கம்..!

இதற்கு முன்பும் சிலமுறை இப்படி நான் அனுபவித்ததுண்டு.அது சரிதான் என்பதுபோல, அன்றைக்கொரு நாள் ராமகிருஷ்ணன்,எங்கேயோ சவாரிக்குப் போய்விட்டு திரும்பி ஸ்டேண்டுக்கு வந்து கொண்டிருந்தபோது ஆட்டோமீது,மணல் லாரி எசகுபிசகாக மோதியதில்,ஆட்டோவின் முன்புறம் அப்படியே நசுங்கிப் போனதில், சம்பவ இடத்திலேயே ராமகிருஷ்ணனின் உயிர் போய்விட்டது.

மற்றொரு நாளில்,சந்திரன் நாயரின் டீக்கடையில், தீவிபத்து ஏற்பட்டது.உயிர்சேதம் என எதுவுமில்லா விட்டாலும்,மேற்கூரையும்,மரப் பெஞ்சுகளும், டேபிள்களும் கரிந்துபோனதில் சந்திரன் நாயருக்கு ஏக நஷ்டம்.இன்னுமொரு நாளில் வழக்கம்போல காலையில் தனது கடைக்கு வந்து ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது,திடீரென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அலறி விழுந்தார் மருதான்..,நல்ல வேளை,பரமசிவமும் அப்போது ஸ்டேண்டில் இருந்ததால்,நண்பர்களின் உதவியோடு அவரை தனது ஆட்டோவிலேயே தூக்கிப்போட்டு,சரியான சமயத்தில் மருத்துவ மனையில் சேர்த்ததால் அவர் பிழைத்தார். கடுமையான மாரடைப்பில் சிக்கிய அவர் ‘பிழைத்தார்’ என்ற செய்தி காதில் விழும்வரை நான் மிகவும் தவித்துத்தான் போனேன்.

இப்போது அதையெல்லாம் நினைத்தால் சற்று திகிலாகத்தான் இருக்கிறது.இன்றைக்கு என்னாகுமோ..?

காலை பத்துமணி சுமாருக்கு, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இரண்டு ஜீப்புகள், இளநீர்க்கடையில் வந்து நின்றன.திபுதிபுவென ஏழெட்டுப்பேர் அதிலிருந்து இறங்கினர். அதிகாரிகளாகத் தெரிந்த சிலரின் கைகளில் ஏதோ கோப்புகளும் இருந்தது.

“இளநீர் வெட்டவா சார்..? ” பழனியப்பனின் கேள்வியை அசட்டை செய்த அந்த நபர்,மற்றொரு அதிகாரியை மிகப் பவ்வியமாக நெருங்கி, கையிலிருந்த கோப்பைப் பிரித்துக் காட்டியபடியே, சாலையின் இருபக்கங்களையும் காட்டி ஏதோ சொல்ல,அந்த அதிகாரி மெல்லத் தலையாட்டிய படியே,அங்கிருந்த கடைகள் அனைத்தையும் சேர்த்து தனது பார்வையை சுழலவிட்டார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆட்டோ ஸ்டாண்டு ஓட்டுனர்கள்,சந்திரன்நாயர், மருதான், பழனியப்பன் ஆகியோருக்கு ஏதோ விபரீதம் புரிந்ததுபோல இருந்தது.கண்களாலேயே பேசிக் கொண்டனர்.அவர்களுக்குள் ஏதோ முடிவு செய்து கொண்டதைப் போலவும் தெரிந்தது.

சொல்லிவைத்தாற்போல,பரமசிவமும், சந்திரன் நாயரும் ஒரே சமயத்தில் அதிகாரிகள் கூட்டத்தை நெருங்கினர். “சார்..இங்க என்ன பண்ணப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..?” பரமசிவம்தான் கேட்டார்.

இவருக்கு பதில் சொல்லவேண்டுமா..? என்பது போல அவர்களை அலட்சியமாகப் பார்த்த அந்த உயர் அதிகாரி,அப்படியே தனக்கு பக்கவாட்டில் நின்றிருந்த மற்றொரு அதிகாரியைப் பார்க்க,அதில் “இவர்களுக்கு பதில் சொல்லுய்யா..!” என்ற கட்டளை இருந்தது போலும்.உடனே அவர் சுதாரிப்பது தெரிந்தது. இப்போது அதிகாரிகளைச் சுற்றி அங்கிருந்தவர்களின் கூட்டமும் சற்று அதிகரித்திருந்தது.

பரமசிவத்தையும்,சந்திரன் நாயரையும் மையமாகப் பார்த்த அந்த அதிகாரி, “உடுமலை பொள்ளாச்சி ரோட்டை,அரசு உத்தரவுப்படி,அகலப்படுத்தப் போறோம். அதனாலே இப்ப இருக்கற ரோடு கண்டீசனை ஆய்வு பண்ணத்தான் சி.ஈ. வந்திருக்கார்..”. அவர் சொன்ன பதிலைக் கேட்ட அனைவரின் வயிற்றிலும் ‘சிலீர்’ என்று ஏதோ உடைந்தது போன்ற உணர்ச்சி..,

“சார்..ரோடு அகலப்படுத்துனா,எங்க கடை யெல்லாம் நிக்குமா சார்.?” சந்திரன் நாயர் அழுதே விடுவார் போலிருக்கிறது.

அந்த அதிகாரி உதட்டைப் பிதுக்கினார். “ஃபோர் ட்ராக் ரோடா இதை மாத்தப்போறோம். இப்ப இருக்கற ரோட்டோட அளவுக்கு இரண்டு பக்கமும் அளவெடுக்கும்போது,உங்க கடையெல்லாம் நிக்காதுங்க..”

பரமசிவத்துக்கு நிலைமை மிகத் தெளிவாகப் புரிந்தது.‘சந்திரன் நாயர் கடையே போகுது’ எனில்,ஆட்டோ ஸ்டேண்டு,மருதானின் கடை,பழனியப்பனின் இளநீர்க்கடை.. தள்ளு வண்டிகள் நிற்கும்இடம்,இவையெல்லாவற்றிற்கும் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிற அந்த மாபெரும் புளியமரம்..,என எல்லாம் போய்விடும். மேலும், இப்போது இருக்கும் இடத்திலிருந்து சற்று பின்னால் தள்ளி இதேபோல் அனைவரும் நிற்கவும், புழங்கவும் முடியாத வகையில், அந்தத் தனியார் கல்லூரியின் உயர்ந்த மதில்சுவர்கள் தடுத்துக் கொண்டிருந்தன.விரிந்த சாலை போடப்படும்போது,அந்த மதில் சுவரையொட்டித் தான் போகும்.அந்த இடைவெளியில் எங்கே எப்படி நிற்பது..? சொந்த இடத்தில் கட்டப்பட்ட வீடுகளே சில இடங்களில் சாலைகள் அகலப்படுத்தும் பணிகளுக்காக எடுக்கப்படும்போது, எவ்வகை யிலும் சொந்தமில்லாத இடத்தில் நிற்கும் நாமெல்லாம் அரசுக்கு எம்மாத்திரம்..!’ பரம சிவத்தின் மண்டைக்குள் வரிசையாக வந்த கேள்விகள்,இடித்துப்பிடித்து முட்டிமோதியதில் தலைவலியால் தவிப்பது போல இருந்தது.

அதனை அதிகப்படுத்துவது போல,அந்த அதிகாரி, “முடிஞ்சவரைக்கும் சீக்கிரமா நீங்கெல்லாம் இந்த இடத்தைக் காலி பண்ணிடறது உங்களுக்கு நல்லது”என்று தன் பங்குக்கு நேரடியாக மற்றொரு இடியை இறக்கிவிட்டு, ஜீப்பில் போய் ஏறிக் கொண்டார்.இரண்டுவாகனங்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டன.

சோர்வுடன்,அங்கிருந்து நகர்ந்த பரமசிவம்,சந்திரன் நாயரின் டீக்கடை பெஞ்சில் சென்று அமர்ந்து கொள்ள,கூட்டமும் அப்படியே அவரைச் சுற்றிக் கொண்டது.
“ஏண்ணே இப்ப என்ன செய்யிறது.?” கூட்டத்திலிருந்து யாரோ கேள்வியெழுப்ப, “ஆமாண்ணே..எல்லாரும் இருக்கோம்,கூடிப்பேசி ஏதாவதொரு முடிவு எடுப்போம்ணே..!” ஆமோதிப்பாய் குரல்கள் பின்தொடர்ந்தன.

“ஏண்ணே,இந்த மரத்தை வெட்டக்கூடாதுண்ணு நாம கவர்ன்மெண்டுக்கு பெட்டீசன் கொடுக்கலாமா..? பூமி வெப்பமாகிப் போச்சுன்னா,உலகம் அழிஞ்சு போயிடும்,மரங்களை நிறைய வளக்கணும்னு கலெக்டரும், அதிகாரி களும் அன்னைக்கு ஏதோ விழாவிலே பேசுனாங்களே.இப்ப நம்ம பெட்டீசனை,அவரு பேசுன செய்தி வந்த பேப்பரோட,அவர்கிட்டேயே கொடுப்போம்.ஒரு வேளை அவரு தடுத்துட்டா ருன்னா, நம்ம பொழப்பும் இப்படியே நடந்துடுமில்லே ”

“பேசாம..இந்த மரத்துக்கு கீழே ஏதாவதொரு சாமியை வெச்சுடுவோம்..அப்ப அதை எடுக்கணும்னா,அதிகாரிக யோசிப்பாங்கள்ளே..!”

“ஏம்ப்பா..இப்ப மரத்தைக் காப்பாத்த முடிவெடுக் கணுமா..? இல்ல..உங்க பொழப்பக் காப்பாத்த முடிவெடுக்கணுமா..?” எந்த சிக்கலையும்,கருத்தில் கொள்ளாத ஏதோவொரு இளவட்டத்தின் கிண்டலான குரல்.

“யேய்..எவண்டா அது..?” தங்கள் பிழைப்புக்கான வழியைத்தேடும் அவஸ்தையில் இருக்கும்போது, அதனைக் கிண்டலுக்குரிய விஷயமாக எடுத்துக் கொள்ளும் இளவட்டங்களைக் கண்டித்து, அக்கறையும்,ஆதங்கமும் நிறைந்த பெருசுகளின் எதிர்க்குரலும் உடனே ஒலித்தது.

எந்த யோசனையும் சொல்லமுடியாத அவஸ்தையில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்,அவர்களின் விதவிதமான யோசனைகளை, ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.

தொடர்ந்து சில நிமிடங்கள் நிலவிய அமைதியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தொண்டை யை செருமிக் கொண்ட பரமசிவம்,”இங்க பாருங்கப்பா.. மரம் முக்கியமா..மனுச வாழ்க்கை முக்கியமா..ன்னு நாம தனித்தனியா பிரிச்சுப் பாக்கவேண்டியதில்லை.இந்த மரம் இங்க வளர்ந்து நிக்கப் போயித்தான் நாம இத்தனைபேரும்,அத ஒரு ஆதாரமா வெச்சு,எல்லாரோட பொழப்பையும், நடத்திகிட்டிருக்கோம். இந்த மரம் இல்லேன்னா.. நாம யாராவது இங்க ஒதுங்கியிருப்போமா..? மரம் வளக்கறது,அத வெட்டாம இருக்கறது.., பூமிக்கும்,அதுலே வாழுற மனுசங்களோட நிகழ்காலத்துக்கும்,எதிர்காலத்துக்கும் நல்லதுன்னு விஞ்ஞானம் ஆயிரம் காரணங்களோட சொல்றது ஒருபக்கம் இருந்தாலும்,அதுலே ஒரு காரணமா.. இப்ப நேரடியா நம்ம பொழப்பு அதோட சம்பந்தப் பட்டிருக்குன்னு நினைச்சா போதும்.எப்படியாவது மரத்தை வெட்டாம தடுக்க முடிஞ்சா,அது நம்ம எல்லாருக்கும்தான் நல்லது. இதைக் கோர்ட்டுக்குப் போய் தடுக்கலாமா..? கலெக்டருக்குப் பெட்டீசன் குடுத்துட்டு,ஏதாவது போராட்டமும் பண்ண லாமான்னு..நீங்கதான் சொல்லணும்..”

“கவர்ன்மெண்டை எதிர்த்து நாம எதுவும் செய்யமுடியாதுப்பா..அதுவும்,ரோட்டை அகலப்படுத்துறோம்னு சொல்லி அவங்க வேலையைத் தொடங்கும்போது, இடைஞ்சலா இருக்குற எத்தனையோ வீடுகள்,கட்டிடங்கள், கோவில்களுன்னு இடிச்சு தள்ளியிருக்காங்க.., கோடீஸ்வரனுகெல்லாம் கோர்ட்டுக்குப் போயும் அத தடுக்கமுடியலே.நாமெல்லாம் எம்மாத்திரம்.?” ஆட்டோ ஓட்டுனர் மாரியப்பனின் குரலில் அனுபவமும்,அவநம்பிக்கையும் தொனித்தது.

“நாம எந்த முயற்சியுமே செய்யறதுக்கு முந்தியே, நம்பிக்கையில்லாம பேசாதீங்கண்ணே..”

முடிவில், “இன்னிக்கு வெள்ளிக்கிழமை..வரும் திங்கக்கிழமை மனுநீதி நாளன்னைக்கு, கலெக்ட ருக்கிட்டே பெட்டீசன் கொடுத்துட்டு,அவரு சொல்ற முடிவைப் பொறுத்து,போராட்டம் வெச்சுக்கலாமா..?” பரமசிவம் கேட்டபோது..அப்படியே செய்யலாம்..குரல்கள் ஆமோதிக்க..,கூட்டம் கலைந்தது.

ஆனாலும்,இதற்கு முன்பெல்லாம்..அன்றைய நாளோடு தீர்ந்துவிட்ட எனது சங்கடம்,அந்த இனம்புரியாத துக்கம் இதுவரையும் எனக்கு தீரவில்லை.இன்னும் ஏதொவொன்று நடக்கப் போவதுபோல தோன்றிக் கொண்டேயிருந்தது.

மறுநாள் சனிக்கிழமை..கிழக்கிலிருந்து வரும் வெயில் தெரியாதவாறு கீழ்வானில் மேகமூட்ட மாயிருந்தது.சந்திரன் நாயர் கடையிலும் வாரத்தின் வேலை நாட்களைப்போல அவ்வளவாகக் கூட்ட மில்லை.சாலையில் கனரக வாகனங்களும், அவ்வப்போது சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களைத் தவிர,மனித நடமாட்டமும் குறைவாகவே இருந்தது.ஆட்டோ டிரைவர் பெரியசாமியின் மகன் சுரேஷின் திருமணத்திற்காக, பரமசிவம் உட்பட ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லாம், ஒட்டஞ்சத்திரத்திற்கு சென்றிருந்தனர்.

சாலையின் எதிர்புறம்,கட்சிக் கொடி படபடக்க, அந்தக் கறுப்புநிற பொலீரோ கார் வந்து நிற்பது தெரிந்தது.அதிலிருந்து அமர்த்தலாக இறங்கிய கவுன்சிலரைத் தொடர்ந்து ‘அடிப்பொடிகள்’ சிலவும் இறங்கின.

“அண்ணே கஞ்சம்பட்டி பிரிவுலே மரம் வெட்டுன கையோட,நம்மாளுக தார் ரோடும் போட ஆரம்பிச்சாச்சாம்.ஒரு மணிநேரத்திலே வேலையை முடிச்சுட்டு இங்க வந்துர்றேன்னு சொல்றாங்கண்ணே..,தனது கையிலிருந்த செல்போனை சட்டைப்பையில் வைத்தபடியே அடிப்பொடியொன்று கூவியது.

சற்றுநேரத்தில்,அங்கே வந்து நின்ற லாரியிலிருந்து மரங்களை அறுக்கும் கைஇயந்திரங்கள், அரிவாள், கோடாரி,கயிறுகள் சகிதமாக இறங்கி,சில தொழிலாளர்கள் சாலையைக் கடந்து வருவது தெரிந்தது.

பரமசிவமோ,நண்பர்களோ யாரும் இல்லாத நேரத்தில்..அடக்கஷ்டமே..இதென்ன சோதனை..? எனக்கு பதட்டம் அதிகரித்தது.அடிவயிற்றில் வேதனை அதிகரிப்பது போலவும் இருந்தது. அதேசமயத்தில்,கடைக்குள் இருந்த சந்திரன் நாயரும் பதட்டத்துடன் அவர்களை நோக்கி ஓடிவருவதும்,அவர்களைத் தடுத்து நிறுத்தி ஏதோ கேட்பதும்,அவர்கள் கவுன்சிலரை நோக்கி கையைக் காண்பிப்பதும் தெரிந்தது.இந்த இடைவெளியில் சாலையைக் கடந்து இந்தப்பக்கமாக வந்த கவுன்சிலர்,சந்திரன் நாயரை நோக்கி,”என்னய்யா..? என்று கேட்ட தொனியிலேயே ‘ஜாக்கிரதை’ என்ற எச்சரிக்கையும்,மிரட்டலும் தொனித்தது.

அதற்குள் அடிப்பொடியொன்று,”அண்ணே,அரிவாள் கோடாலியெல்லாம் பதமா இருக்கான்னு பாக்காமயே வந்துட்டோம்ணே..”, கிண்டலுக்காகவே சொன்னது போலத்தான் இருந்தது.
“இப்ப என்ன அதையெல்லாம் யாரையாவது வெட்டி டெஸ்ட் பண்ணலாம்னா சொல்றே..?” என்றபடியே சந்திரன் நாயரை மேலும் கீழும் பார்க்க,சந்திரன் நாயரின் முகம் வேர்த்து,கால்கள் வெடவெடவென்று நடுங்கியது.

“சட்டுப்புட்டுன்னு,சாமாஞ் செட்டெல்லாம் எடுத்துட்டு இடத்தைக் காலிபண்ணு,அப்புறம் அது ஒடைஞ்சிருச்சு,இது எரிஞ்சுடுச்சு..ன்னு கம்பெளெயின்ட் சொல்லக் கூடாது..” ஆளும், படையும் சுற்றும்முற்றும் நிற்க,கவுன்சிலர் தனது கர்ணகடூரமான குரலில் அடித்த கிண்டல்,கிலியாக மாறி சந்திரன் நாயரை அடித்ததோ.? அவர் ஒன்றும் பேசாமல்,கடைக்குத் திரும்பி,எரிந்து கொண்டிருந்த ஸ்டவ்வை அணைத்துவிட்டு,அடுப்பு மேடைக்கு கீழே சுருட்டி வைக்கப்பட்டிருந்த பழைய சாக்குகளைத் திரட்டத் துவங்கினார்.

ஸ்டேண்டில் இருந்த மூன்று ஆட்டோக்கள் நகர்த்தப்படுவதும்.மனைவியுடன் சேர்ந்து இளநீர்,பனைக்குலைகளை பழனியப்பன் அப்புறப்படுத்திக் கொண்டிருப்பதும் தெரிந்தது. மருதான் ஏறக்குறைய தனது கடையை காலி செய்திருந்தார்.தள்ளுவண்டிகள் கிழக்கில் சிலவும்,மேற்கில் சிலவும் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. போகிற வேகத்தைப் பார்த்தால்,இனி அவை இங்கு திரும்பி வருவதற்கே சந்தர்ப்பம் இருக்காதோ..?.

“ஏண்ணே..இதுக்குமேலேயும் இங்க எவனாவது அண்ணணை எதுத்து கேள்வி கேப்பானுங்கன்னா நினைக்கிறீங்க..?”
“அடப்போடா..பேரே தெரியாத பேப்பரிலே,ஒரு மாசம் முன்னாடியே விளம்பரம் குடுக்கவெச்சு,டெண்டர் நடத்தி,அந்த டெண்டரையும் நம்ம அண்ணணே எடுத்து.., இதெல்லாம் எதுக்குன்னு நெனைக்கிறே..? சட்டப்படியும் எவனும் எதுத்துக் கேள்வி கேக்கக் கூடாதுன்னுதான்..” ஒரு ஜுனியர் கரைவேட்டிக்கு, சீனியர் கரைவேட்டி பதில் சொல்லிக் கொண்டிருந்தது.

இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது, பயங்கரமான அச்சத்துடன்,எனது உள்ளுறுப்புகள் எல்லாம் நடுங்கியது. “உங்கள் அராஜகத்தை நிறுத்துங்கள்..”என்று கூவவேண்டும்போலவும் இருந்தது.வாய்பேச முடியாத என்னால் அதைச் சொல்லமுடியாது என்று தெரிந்தாலும், ஆத்திரத்தில் பொங்கிய மனதைக் கட்டுப்படுத்தவும் வழி தெரியவில்லை.பேசத்தெரிந்தவர்களே எதையும் தடுக்கமுடியாத நிலையில் தடுமாறும்போது.., அவர்கள் தங்களது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு,நான் நின்றிருந்த திசைநோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.எனது கையெட்டும் தூரத்தில் அவர்கள் வரும்போது,பலமாக அவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அவர்களின் பொறி கலங்கிப் போகுமளவிற்கு, ஓங்கியொரு அறை கொடுக்க சந்தர்ப்பம் அமைந்தால் எப்படியிருக் கும்..?’ அந்த இக்கட்டான நேரத்திலும்,இப்படி விநோதமான யோசனை வந்தது.நமக்கு அந்த பலமிருக்கிறதா..?’

அவர்கள் இன்னும் நெருங்கி வந்து கொண்டிருந் தனர்.அதில் ஒருவன் தன் வலதுதோளில் தொங்கவிட்டிருந்த கோடாரியின்,விளிம்பை இடதுகைவிரல்களால் பரீட்சித்துக் கொண்டே வருவதும் தெரிந்தது.அறைவது என்றால்,முதலில் இவனைத்தான் அறையவேண்டும்..எனக்கு மனதுக்குள் வன்மம் கிளர்ந்தது. அதனை அவனும் உணர்ந்தானோ என்னவோ..,கோடாரியை தோளிலிருந்து வாகாய் கைகளில் பற்றிக் கொண்டான்.அருகே..அருகே..இன்னும் நெருங்கி அருகே.., எனது கையெட்டும் தூரத்தில் வந்துவிட்டான்.. ..,

கண்ணிமைக்கும் நேரத்தில்.., “அம்மா..” அவன் முந்திக் கொண்டு எனது கால்பகுதியில் வெட்டியதில்..நான்தான் அலறினேன்.வலியால்
உயிரைப் பிடுங்கும் எனது மரணஓலம் மட்டும் காற்றின் வழியே பரவி மற்றவர் காதில் விழுமென் றால்,ஊரே அங்கு திரண்டிருக்கும். ஆனால் அதுதான் எப்போதும் நடக்காதே..!

அதற்குப்பின்,அவர்கள் மளமளவென்று என்மீது ஏறி,ஆங்காங்கே கயிறுகளால் பிணைத்து என்னை துண்டுதுண்டாக அறுக்கத் துவங்கினார்கள். முப்பதாண்டுக் காலத்தின் எனது நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத்துவங்கியது.!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *