இதயத்தில் நுழைந்த வைரஸ்!

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 18,760 
 

“”மிஸ்டர் செந்தில்?”
“”நான் தான் பேசறேன்.”
“” நான் சங்கரி பேசறேன்.”
“”சொல்லுங்க மேடம்.”
“”என் கம்ப்யூட்டர்ல திடீர் திடீர்ன்னு பைல் காணாமப் போகுது. பாதி வேல பாத்துக்கிட்டிருக்கும் போதே ஆப் ஆயிருது. திடீர் திடீர்ன்னு ஏதோ படம் முன்னால வருது. எனக்கு பயமா இருக்கு செந்தில்.”
“”உங்க கம்ப்யூட்டர்ல வைரஸ் வந்திருக்கு மேடம்.”
“”ஐயையோ வைரசா? கம்ப்யூட்டரத் தூக்கி போட்டுட்டு புதுசு வாங்கிரட்டுமா?”
“”என்ன மேடம்… வைரசுக்கு பயந்து, கம்ப்யூட்டரத் தூக்கிப் போடுவாங்களா? நம்ம உடம்புலயும் அப்பப்ப வைரஸ் வந்துருது… அதுக்காகத் தற்கொலையா பண்ணிக்கறோம்?”
“”அப்புறம்?”
இதயத்தில் நுழைந்த வைரஸ்!“”நான் இன்னும் அரைமணி நேரத்துல, உங்க வீட்டுக்கு வர்றேன். உங்க கம்ப்யூட்டர்ல இருக்கிற சேதாரம் இல்லாத பைல, வேற ஒரு கம்ப்யூட்டருக்கு மாத்திட்டு, மிச்சம் இருக்கறத எல்லாம் அழிச்சிட்டு, “பார்மட்’ பண்ணிக் கொடுத்துடறேன். புதுக் கம்ப்யூட்டர் மாதிரி ஆயிரும்.”
“”ரொம்ப தேங்க்ஸ் செந்தில். எவ்வளவு செலவாகும்?”
“”500 ரூபாய்க்குள்ள முடிச்சிரலாம் மேடம்.”
சங்கரிக்கு மகிழ்ச்சி. இப்போது இன்னொரு கம்ப்யூட்டர் என்றால், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகுமே! 500 ரூபாயில் எல்லாம் முடிந்து விடுகிறதே!
பிளஸ் 2 மாணவர்களுக்கு தனியாக வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள் சங்கரி. நல்ல வருமானம். அவளுக்குத் திருமணமாகி விவாகரத்துமாகியிருந்தது. இப்போது அவள் உலகமெல்லாம் அவளுடைய மாணவர்கள் தான்.
“”Œõர்… உங்களப் பாக்கணும்ன்னு ஒரு பையன் ஒரு மணிநேரமா காத்துக்கிட்டு இருக்கான். உள்ளே அனுப்பட்டுமா?”
செந்திலின் உதவியாளன் கேட்டான்.
“”அனுப்பு.”
வெளியே கிளம்புவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தான் செந்தில். தடால் என்ற பெரிய சப்தத்துடன் யாரோ அவன் முன்னால் விழுந்தார்.
திடுக்கிட்டு குனிந்து பார்த்தான் செந்தில்.
“”ஏய்… ஏய்… யாருப்பா நீ? இப்படி கால்ல விழற? உனக்கு என்ன வேணும்?”
அப்போது தான், அவனை நன்றாகப் பார்த்தான் செந்தில். அவனுக்கு இருபது வயது இருந்தால் அதிகம். கருப்பாக, ஒடிசலாக இருந்தான். கண்கள் “பளிச்’சென்று இருந்தன.
“”சார்… என் பேரு குமார். பிளஸ் 2வில் பெயில் ஆகிட்டேன். யாரோ சொன்னாங்கன்னு, 10 ஆயிரம் ரூபாய் கட்டி ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ்ல சேந்தேன். அதுவும் சரிப்பட்டு வரல. என்னைத் துரத்தி விட்டுட்டாங்க. ஒரு வேலையும் கெடைக்கல சார். நீங்க கம்ப்யூட்டர் ரிப்பேர் பாக்கறதுல பெரிய ஆளுன்னு சொன்னாங்க சார். உங்ககிட்ட அசிஸ்டன்டா சேந்து, தொழில் கத்துக்கறேன். எனக்கு சம்பளமே வேண்டாம் சார். நீங்க எங்க போறீங்ளோ அங்கெல்லாம், நாய் மாதிரி உங்க பின்னால வர்றேன் சார். ப்ளீஸ் சார் மாட்டேன்னு மட்டும் சொல்லிராதீங்க.”
குமாரின் கண்கள் கலங்கியிருந்தன. செந்திலால் மறுக்க முடியவில்லை.
“”குமார் இந்தப் பையத் தூக்கிக்கிட்டு என் கூட வா. திருப்பாலைல ஒரு கம்ப்யூட்டர்ல வைரஸ் வந்திருக்காம்.போய்ப் பார்த்துட்டு வரலாம்.”
“”வைரஸ்னா என்ன சார்?”
போகும் வழி முழுவதும் விளக்கிக் கொண்டு வந்தான் செந்தில்.
சங்கரியின் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போதும், செந்திலின் விளக்கம் தொடர்ந்தது. வேலை முடித்து, அவர்கள் அலுவலகம் திரும்பியதும், செந்திலின் மொபைல்போன் அழைத்தது.
“”செந்தில், சங்கரி பேசறேன்.”
“”என்ன மேடம் திருப்பி கம்ப்யூட்டர்ல பிரச்னையா?”
“”இல்ல… ஆனா, என் மொபைல் போனை காணோம். நேத்துதான் வாங்கினேன். 10 ஆயிரத்தி சொச்சம்.”
“”மேடம்…”
“”நான் உங்களை சந்தேகப்படல செந்தில். உங்க கூட ஒருத்தன், திருட்டு முழி முழிச்சிக்கிட்டு வந்தான்ல, அவன் தான் எடுத்துருக்கணும். அவன், அங்கதானே இருக்கான்?”
“”ஆமா மேடம்…” செந்தில் ஓரக்கண்ணால் குமாரை பார்த்தான்.
“”அவனை எங்கயும் போக விட்ராதீங்க. நான் அங்க வர்றேன்…”
“”குமார்… ஆபீஸ்ல ஒரு கம்ப்யூட்டர, பிரிச்சிப் போட்டு வச்சிருக்கேன். அதப் பாக்கலாம்.”
இருவரும் சர்வீஸ் அறைக்குள் நுழைந்தனர்.
பத்தாவது நிமிடம், புயல் போல் தன் வெள்ளை நிற ஆல்டோ காரில் வந்து இறங்கினாள் சங்கரி. அவள் வருவதைப் பார்த்துவிட்டு, சப்தம் போடாமல் வெளியே போனான் செந்தில்.
“”உள்ளே தான் இருக்கான் மேடம். நீங்களே கேட்டுப்பாருங்க. நான் இன்னும் அதப்பத்திப் பேசல.”
உள்ளே நுழைந்து, குமாரின் சட்டையை பிடித்தாள் சங்கரி.
“”மொபைல்போன எங்கடா வச்சிருக்க?”
“”ஐயையோ… எனக்கு ஒண்ணும் தெரியாது மேடம்.”
“”டேய்… எங்கண்ணன் தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர் தெரியும்ல? உன்ன உள்ள வச்சி நுங்கெடுத்துருவாரு. வர வழியில அவருகிட்ட சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்.”
குமாருக்கு வியர்த்தது. பேன்ட் பையில் இருந்த, மொபைல் போனை எடுத்து, அவளிடம் நீட்டினான்.
“”திருட்டு படவா… உன்ன நம்பி வேல கொடுத்தவருக்குக் கெட்ட பேரு வாங்கிக் கொடுத்துட்டியேடா!”
போகும் வழியில் செந்திலிடம், மொபைல் போனை காண்பித்து, நடந்ததைச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.
செந்தில், எந்த நேரமும் உள்ளே வந்து, தன்னைத் திட்டி, வெளியே அனுப்பி விடலாம் என்று, நடுங்கிக் கொண்டிருந்தான் குமார்.
செந்தில் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியரைப்போல் யோசித்தான்…
“ஒரு கம்ப்யூட்டர் சரியாக வேலை பார்க்கவில்லையென்றால், அதை உடனே தூக்கி எறிவதில்லையே. சங்கரி மேடம் கம்ப்யூட்டருக்குச் செய்தது போல், ஏதாவது செய்து, சீராக்கி விடுகிறோமே. அதை விற்றால், ஐயாயிரம் ரூபாய்க்குக் கூட போகாது. கேவலம், ஐயாயிரம் ரூபாய் கம்ப்யூட்டருக்குக் கொடுக்கும் மரியாதையை, ஒரு மனிதனுக்கு ஏன் கொடுக்கக் கூடாது?
“குமாரை துரத்தி விடுவது மிகவும் சுலபம். அதன் பின், அவன் என்ன செய்வான்? மேலும் திருடுவான் ஊர் சுற்றுவான்; இல்லை தற்கொலை செய்து கொள்வான். திருட்டுத்தனம் என்பது, குமாரின் மனதிற்குள் புகுந்துவிட்ட ஒரு வைரஸ்தானே! அதை நீக்க முயற்சி செய்தால் என்ன?’
அதற்குள் செந்திலுக்கு, வேறு ஒரு அழைப்பு வந்தது. ஆரப்பாளையத்தில் ஒரு அலுவலகத்தில் ப்ரின்ட்டரில் பிரச்னை என்றனர்.
“”குமார்… பையை எடுத்துக்கிட்டு கிளம்பு. ஆரப்பாளையம் போறேம்.”
போகும் வழியில், ப்ரின்டரின் செயல்பாடுகள் பற்றி விளக்கினான் செந்தில். குமாருக்கு ஆச்சரியம்.
“அந்த பெண்மணி, போன் திருட்டை செந்திலிடம் சொல்லாமலா இருந்திருப்பாள். பின், ஏன் இவர் இன்னும், என்னை திட்டாமல் இருக்கிறார். ஏன், இன்னும் என்னை வேலையை விட்டு தூக்காமல் இருக்கிறார்?’
அந்த அலுவலகத்தில், ஓரக்கண்ணால் குமாரை பார்த்தபடி வேலை செய்தான் செந்தில்.
நல்ல வேளை, குமார் அங்கே எதையும் திருடவில்லை.
ஒரு வாரம் அப்படியே போனது.
அன்று, சர்வீஸ் செய்யும் இடத்தில் இருந்த ஒரு பழைய கம்ப்யூட்டரை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் குமார்.
“”இந்த மாதிரி ஒரு பழைய சிஸ்டம் இருந்துச்சின்னா, வீட்டுல கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடலாம்ல!”
குமார் சொன்னது, செந்திலுக்கு கேட்டு விட்டது. அன்று அந்த கம்ப்யூட்டரின் பாகங்களை மாற்றி, அதை நன்றாக ஓட விட்டு, அதில் சில விளையாட்டுக் களையும், பதிவு செய்தான் செந்தில்.
“”இந்தா குமார்… இது உனக்குத் தான். வீட்டுக்கு எடுத்துட்டுப் போ. நிறைய கேம்ஸ் இருக்கு. நீ நல்லா விளையாடலாம்; என்னுடைய பரிசு.”
கண்ணீர் மல்க கை கூப்பினான் குமார்.
அடுத்த ஒரு மாதம், வேகமாகப் போனது. இப்போதெல்லாம், குமார் ஒரு நாளில், 12 மணி நேரம் வேலை பார்த்தான். அவனை கண் கொத்திப் பாம்பு போல் பார்த்துக் கொண்டிருந்தான் செந்தில். குமார் எதையும் திருடவில்லை.
ஒரு நாள், செந்தில் வேண்டுமென்றே சர்வீஸ் அறையில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை வைத்துவிட்டு, வெளியே போனான். சிறிது நேரத்திற்கெல்லாம், குமார் அவனை தேடி வந்தான்.
“”சார்… இந்த ரூபாயை வச்சிட்டுப் போய்ட்டீங்க, என்றவாறு, திருப்பிக் கொடுத்தான்.”
அன்று, அவர்கள் உசிலம்பட்டிக்கு அருகில், ஒரு கல்லூரியில் வேலை செய்யப் போயிருந்தனர். அன்று நாள் முழுவதும், செந்திலும், குமாரும் ஒன்றாகவே இருந்தனர். குமாரின் குடும்பத்தைப் பற்றி, செந்தில் கேட்க, அடக்கி வைத்திருந்ததையெல்லாம், அப்படியே கொட்டி விட்டான் குமார்.
பாவம் அவனுக்குப் பத்து வயது இருக்கும் போதே, அவனுடைய தாய் இறந்து விட்டாள். அவனுடைய தந்தை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண், குமாரை தன் சொந்தப் பிள்ளையைப் போல் தான் பார்த்துக் கொண்டாள்.
ஆனால், குமாரின் அப்பாவிற்குத் தான் அவனைக் கண்டாலே பிடிப்பதில்லை. குமார் சரியாகப் படிக்காத கவலையில் தான், தன் மனைவி இறந்து விட்டாள் என்று நினைத்த அந்த மனிதர், குமாரின் மேல் வெறுப்பை உமிழ்ந்தார்.
அவர் வீட்டில் இருக்கும் போது, குமார் வீட்டில் இருக்க மாட்டான். மதியம் அவர் சாப்பிட்டுச் சென்று விட்டார் என்று உறுதி செய்து கொண்டுதான், வீட்டுக்குப் போவான்.
குமாருக்கு, பத்து வயதில் ஒரு தங்கை இருந்தாள். ஒரு தாய் வயிற்று பிள்ளை இல்லை என்றாலும், தங்கையின் மேல் உயிராக இருந்தான் குமார்.
குமாரின் மனதில், குடி கொண்டிருந்த அந்த திருட்டு வைரசின் மூலத்தைத் தெரிந்து கொண்டான் செந்தில். அதை, எப்படி அகற்றுவது என்று யோசிக்கத் துவங்கினான்.
கம்ப்யூட்டரில் உள்ள வைரசை நீக்குவதை விட, மனித மனத்தில் இருக்கும் வைரசை நீக்கும் வேலை, சுவாரசியமாக இருந்தது. அந்த வைரசை, நிரந்தரமாக அழிக்க முடியுமா என்பதை அறிந்து கொள்ள விரும்பினான் அந்தப் பொறியாளன். அது கொஞ்சம் அபாயம் தான். என்றாலும், நம்பி, காலை விட்டால், நல்லது நடக்கும் என்று நினைத்தான் செந்தில்.
செந்திலின் நெருங்கிய நண்பன் ஒருவன், ஒரு சூப்பர் மார்க்கெட்டை ஆரம்பித்தான். நான்காயிரம் சதுர அடியில், நகருக்கு நடுவில், அழகாக அமைக்கப்பட்டிருந்த கடைக்கு, ஒரு மேலாளர் தேவைப்பட்டார். அதிகம் படிப்பு தேவையில்லை. தினமும், 12 மணி நேர வேலை. வாரம் ஒரு நாள் விடுமுறை. அப்பழுக்கற்ற, நேர்மை உடையவராக இருக்க வேண்டும். மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம். அது போக, தினமும் நூறு ரூபாய் படிக்காசு, போனஸ் எல்லாம் உண்டு.
“”உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா செந்தில்?”
“”ஒரு பையன் இருக்கான். குமார்ன்னு பேரு. என்கிட்டதான் வேலை பார்க்கறான். பிளஸ் 2 பெயில். ஆனா, மாடு மாதிரி உழைப்பான்.”
“”கை நீளம் இல்லையே?”
“”அதுக்கு நான் கேரன்டி. அவன நம்பி, நீ லட்ச ரூபாயைக் கூட கொடுக்கலாம்.”
“”அப்படின்னா சரி. அனுப்பி வை.”
போகவே மாட்டேன் என்று அடம் பிடித்தான் குமார்.
“”என்னால அந்தச் சம்பளம் கொடுக்க முடியாது. அதுல, நீ முன்னுக்கு வர நிறைய வாய்ப்புள்ளது. ரெண்டே வருஷத்துல உன் சம்பளம் இருபதாயிரம் ரூபாய் ஆயிரும்.”
“”இருந்தாலும்…”
“”திருப்பித் திருடிருவோமோன்னு பயமா இருக்கா?”
குமாரின் கண்கள் பொங்கி விட்டன. ஆதரவாக அவன் தோளில் கையைப் போட்டான் செந்தில்.
“”மாட்டடா… உனக்காக நான் கேரன்டி கையெழுத்துப் போட்டிருக்கேன்டா.”
அடுத்த மாதம் இரண்டாம் தேதி. காலை ஒன்பது மணி இருக்கும். செந்தில் ஒரு கம்ப்யூட்டரைப் பிரித்துப் போட்டு, வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
“”சார்… இந்தாங்க உங்க பணத்தை கொடுத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்.”
நிமிர்ந்து பார்த்தான் செந்தில். வந்திருந்தது குமார். அவன் ஆடையில் ஒரு திருத்தம். முகத்தில் ஒரு தெளிவு.
“”என்ன பணம்?”
“”சார்… அன்னிக்கு மொபைல் போன திருடினேன்னு தெரிஞ்சவுடன் என்னத் திட்டி, வேலைய விட்டு தூக்கிருந்தீங்கன்னா, நான் தற்கொலை செஞ்சிக்கிட்டு இருப்பேன். இல்ல, அதக் கேட்டு, எங்கப்பா என்ன வெட்டிப் போட்டிருப்பாரு. அதப்பத்தி ஒண்ணுமே சொல்லாம, நான் செஞ்சது தப்புன்னு புரிய வச்சிட்டிங்க சார். இந்த முத சம்பளம் மட்டுமில்ல சார்… நான் வாங்கற ஒவ்வொரு சம்பளமும், உங்களுக்குத் தான் சார் சொந்தம். அதிலிருந்து, நீங்களா பாத்து ஏதாவது கொடுத்தா வாங்கிக்கறேன்.”
கையில் இருந்த நூறு ரூபாய் கட்டை, செந்திலின் காலடியில் வைத்து, விழுந்து வணங்கினான் குமார்.
“”இது இப்ப என் பணம்… சரி தானே?”
“”ஆமாம் சார்.”
“”சரி, எனக்காக ஒரு காரியம் பண்ணு. இந்தப் பணத்த அப்படியே உங்கப்பாகிட்ட கொண்டு போய்க் கொடு.”
“”போங்க சார்… அந்தாளுகிட்ட போயா? நான் அவர அடிக்கணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கேன்.”
“”நீ இத அவருகிட்ட கொடுக்கறதுதாண்டா பெரிய சாட்டையடி. நீ <உருப்படவே மாட்டன்னு சொன்னார்ல. "இப்பப் பாருய்யா நான் எப்படி வளர்ந்துருக்கேன்'னு சொல்ற மாதிரி இருக்கும்டா. கொடுத்துத்தான் பாரேன்.'' ""இல்ல சார். அது வந்து...'' ""நான் இஷ்டப்பட்டத செய்யலேன்னா, இந்தப் பணம் எனக்கு எதுக்குடா? எடுத்துகிட்டு ஓடிரு. இனிமே இந்தப் பக்கமே வராத!'' ஒன்றும் பேசாமல், பணத்தை எடுத்துக் கொண்டு போனான் குமார். அடுத்த நாள் காலை. செந்திலைப் பார்க்க வந்திருந்தான் குமார். ""நான் தான் வராதேன்னு சொன்னேன்ல... ஏண்டா வந்த?'' ""நேத்து நடந்ததச் சொல்லிட்டு போயிரலாம்ன்னு வந்தேன் சார். நீங்க சொன்ன மாதிரியே, எங்கப்பா கைல பணத்தக் கொடுத்து, "இதுதாம்ப்பா என்னோட முதச் சம்பளம்'ன்னு சொன்னேன் சார். தங்கச்சி கல்யாணத்துக்குச் சேத்து வைங்கப்பான்னு சொன்னவுடன், என்னக் கட்டிப் பிடிச்சிட்டு, "ஓ'ன்னு அழ ஆரம்பிச்சிட்டாரு. ""சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க சார்... என் கையப் பிடிச்சி இழுத்துக்கிட்டு போய், பத்தாயிரம் ரூபாய்க்கு புது மொபைல் போன் வாங்கிக் கொடுத்துட்டாரு சார். பாத்தீங்களா, பளபளன்னு எப்படி இருக்குன்னு?'' சங்கரி வீட்டில் இவன் திருடியதும், இதே மாதிரியான மொபைல்போன் என்று அறிந்ததும், செந்திலுக்கு சிரிப்பு வந்தது. அன்று மாலை, தன் நாட்குறிப்பில் செந்தில் எழுதினான்... "மனித மனத்திற்குள்ளும் வைரஸ் வரலாம். அதற்கு சரியான மாற்று, அந்த மனிதன் மேல் காட்டும் அன்பும், அவன் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையும் தான். ஆயிரம் ஆயிரம் கம்ப்யூட்டர்களிலிருந்து வைரசை நீக்கியிருக்கிறேன். அப்போதெல்லாம் கிடைக்காத ஒரு மகிழ்ச்சி, ஒரு நெகிழ்வு, இப்போது மட்டும் கிடைத்திருக்கிறதே... அது ஏன்?' - செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

2 thoughts on “இதயத்தில் நுழைந்த வைரஸ்!

  1. வைரஸ் நீக்கப்பட்ட கம்ப்யூட்டரில் மீண்டும் வைரஸ் வரலாம் . ஆனால் வைரஸ் நீக்கப்பட்ட இந்த வாலிபனிடம் அது திரும்ப வர வாய்ப்பே இல்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *