ரகுராமன் ஜன்னலருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து திசையற்ற பார்வையில் லயித்திருந்தான். கைய்யில் அவனே தயாரித்திருந்த காப்பியை சிறிது சிறிதாக தொண்டையில் இறக்கிக் கொண்டு சலிப்பு என்றில்லாமல் தீவிர சஞ்சாரம் என்றுமில்லாமலும் எப்பொழுதாகிலும் இப்படி சில மணித்துளிகளைக் கட்டிப் போடுவதில் ஒரு சிறிய சுகம். அதுவும் அது சற்று தனிமையில் கரைந்தால் இன்னமும் சவ்கர்யம்தான். ஒரு அந்நிய மண்ணில் காலமும் வெளியும் வீட்டையும் உறவையும் பிரித்துப் போட்டிருக்கிற மெளனத்தில் இது போன்ற மோனங்கள் வாய்ப்பதுண்டு. நினைத்தால் இமைப் பொழுதில் அலையில் தரிசன உரையாடல்களே சித்தியாகிவிட்ட இந்த நாட்களிலும் பிரிவின் பாரம் சில சமயங்களில் கனக்கவே செய்கிறது. ஓடிக்கொண்டேயிருக்கின்ற நெடுந்தூர இரயில் பயணத்தில் எப்பொழுதாவது நிற்கும் அந்த நிலயத்தின் நடை மேடையும், காத்திருந்து பரபரப்புடன் உள்ளேறும் பயணிகளும், கடைகளும், இரைச்சலும் சட்டென்று கரைந்து மறைவது போலத்தான் சொந்த ஊரின் , வீட்டின் நினைவுகளும் அந்த உறுத்தல்களும். உயர் கல்விக்காய், காசுக்காய் புலம் பெயர்வதில் உள்ளுரைந்திருக்கும் முக்கியமன உரசல்களில் இது ஒன்று.
அமெரிக்காவின் அலபாமவுக்குள் ப்ரவேசமாகி இரண்டாவது ஆண்டை இன்னும் இரண்டு மாதங்களில் முடிக்கப் போகிறான். நகரின் காற்று அவன் மூச்சில் ஓரளவு கலந்திருக்கிறது. அதன் தட்ப வெப்ப சூழ்நிலைகள் கொஞ்சம் பிடிபட்டிருந்தது. தானே தயாரிப்பதும் அவசரத்திற்கு வெளியிலுமாக தேவையான உணவு அட்டவணை கைக்கு வந்திருந்தது. நகரின் ஒரு புற நகர் பகுதியில் அவனோடு சேர்ந்து அவர்கள் நால்வராய் பங்கு போட்டுக் கொண்டிருந்த இரட்டை படுக்கையறை ஃப்ளாட் அவர்களை சுவீகரித்துக் கொண்டிருந்தது. கல்லூரிக்கு போக்குவரவு, நகரின் கட்டமைப்பு ஓரளவுக்கு பரிச்சயமாகியிருந்தது. திட்டமிட்டு தீர்மானித்திருந்த திசை வழியில் ஒன்றிரண்டு நடைமுறை சிக்கல்கள் தவிர, அமெரிக்க புறதேசி ரகுராமன் சராசரி இந்திய இளைஞனின் கனவுகளில், அந்தக் களங்களில் தீர்க்கமாய் காலூன்றியிருந்தான். கிடைத்திருந்த பகுதி நேர வேலை கால விரைய தவிப்பிற்கும் கைச் செலவுக்கு சிறிது வரவாகவும் உறுதியாகியிருந்தது. இன்னும் ஆறு மாதங்களில் முடியவிருக்கும் படிப்பிற்கு பின் அவன் எதிர் பார்க்கும் வேலை, தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் இவைகளைப் பற்றிய உத்தரவாதமான நம்பிக்கைகளுக்குள் அவன் இயங்கிக் கொண்டிருந்தான். அல்லது பொருத்தமன சாத்யமான கால சூழ்நிலைகள் அவனை இயக்கிக் கொண்டிருந்தன என்றும் சொல்லலாம்.
ஊரில், வீட்டில் அவன் முன்னின்று முடித்து வைக்க வேண்டிய நிலவரங்கள், நிர்ப்பந்தங்கள் என்று ரகுராமனுக்கு எதுவும் இல்லை. கேரளத்தின் திருச்சூர் அவனை ஈன்று வளர்த்த மண். அப்பாவின் தாத்தா காலத்துக்கும் முன்னதாக என்று அவனுடைய அத்தை சொல்லிய ஞாபகம். அப்பா கேரளத்தின் வருவாய்த் துறையில் முக்கியப் பொறுப்புகளில் பதவியேற்று ஓய்வு பெற்றவர். அம்மா ஒய்வு பெற்ற உதவித் தலமை ஆசிரியை. அக்கா மணமாகி கணவருடன் ஒரு பெண் குழந்தையுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐக்கியமாகி விட்டார். வாட்ஸப்பில் மட்டுமெ தரிசிக்க முடிகிற தங்கள் தலைமுறைகளைக் குறித்த ஏக்கத்தை உள்ளடக்கிக் கொண்டு அப்பாவும் அம்மாவும் அந்த பெரிய வீட்டில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். வந்து போகிற உறவுகள், நட்புகளால் அவ்வப்பொழுது உண்டாகும் கலகலப்புகள் தவிர அந்த வீட்டை அதிகமாய் மெளனமே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. மாத்ருபூமியிலும், ஹிந்துவிலும் ரகுராமனுடைய இணை ஜாதகங்களை பரிசீலிப்பதிலும், காலை மாலை நடை பயிற்சிகள், அவருடைய புத்தகங்கள் என்று தன்னை நிலை படுத்திக் கொள்வது அப்பாவின் அன்றாடமாகி விட்டிருந்தது. அன்றாட கட்டாயங்கள் தவிர , தொலைக் காட்சி, வந்து போகும் உறவுகள், நட்பு வட்டாரங்கள், பூஜை அறையில் அடைக்கலமாவது, வாரப் பத்திரிக்கைகளை சிறிது மேய்வது, மகள், மகன், பேத்தியுடன் பேசுவது என்று அம்மாவும் ஒரு காலச் சக்கரத்தில் சுழன்று கொண்டுதானிருக்கிறாள். இப்படி தளைகள், தடைகள், பாரங்கள் என்று ஏதுமற்ற ஏகாந்தம்தான் ரகுராமன் சுவீகரித்திருப்பது.
அந்த மாலை மயங்கும் நேரத்தில் இப்படி நினைவுகளில் மூழ்கியிருந்தவன் சட்டென்று சத்தம் கேட்ட போது விழித்தான். நினைவுகளின் தாலாட்டில் சற்றே கண்ணயர்ந்து விட்டவன் கைகளிலிருந்து காப்பித் தம்ப்ளர் நழுவி கீழே விழுந்து இங்கும் அங்குமாக லேசாக தரையில் ஆடிக் கொண்டிருந்தது. தம்ப்ளரை எடுத்து அருகிலிருந்த மேஜையின் மேல் வைத்தவன் மறுபடியும் நாற்காலியில் சாய்ந்து, அதன் பக்கவாட்டில் இருக்கும் விசையை இழுத்து அதை அரை படுக்கை நிலைக்கு கொண்டு வந்தான். இரண்டு கால்களையும் முன் நீட்டி, கைகளைப் பின்னால் இழுத்து சோம்பல் முறித்து மறுபடியும் உடல் தேடும் சுகத்துடன் அந்த இருக்கைக்குள் முடங்கினான். ஜன்னல் வெளியே மரங்களின் ஊடாக சற்று கதகதத்து ஆரஞ்சு வண்ணத்தில் அழகிய ஓவியமாய் ஒளிக் கற்றைகளைச் சிதற விட்டபடி அஸ்தமனத்தின் மேல் திசை அரங்கேற்றம். ஒய்ந்த களத்திற்கு கிறங்க வைக்கும் ஒரு மெல்லிய இசை நிறவலும் இணை சேர்ந்தால் எவ்வளவு அழகாயிருக்கும் என்று ஏங்கியவனின் செவிகளில் என்ரியோ மெரிக்கோனின் மெளனம் சிதறுவது பொன்ற பிரேமை அமிழ்த்தி இருக்க வேண்டும். ஒளிக் கற்றைகள் காற்றிலாடும் இலைகளூடாய் நடனமாடிக் கொண்டிருந்தன. பச்சை பசேலென முழங்காலுக்கும் சற்று கீழாக வளர்ந்திருந்த புல் வெளியில் மத்தாப்பாய் வண்ண வண்ணமாய் காட்டு மலர்களின் சிதறல். அந்த மலர்களையே உடுத்தியது போன்றோ, அல்லது அதைக் காட்டிலும் விசித்திர கலவைகளில் அசைந்த மலர்களின் மேல் நடனமிடும் வண்ணத்துப் பூச்சிகளை, அந்த சின்னஞ் சிறிய பிஞ்சு பிடிக்க முயலும் ஆசையில் விரட்டிக் கொண்டிருந்தது. காற்றில் ஆடும் மலர்களா, அவைகளைச் சுற்றிப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளா, இல்லை அவைகளை பிடிக்க முயலும் அந்த மழலையின் வேகமா – எது நடனம் ? அவனுக்குப் புரியவில்லை. அல்லது இவர்கள் எல்லொருமே ஒரு பெரிய நாட்டிய மேடையை பரவசமாக்கும் கை தேர்ந்த நாட்டியக் கலைஞர்களைப் போலவா?
இருத்தல் அழகென்பது ஒரு புரிதல் என்கிற பகீரத ப்ரயத்தனெங்களெல்லாம் தேவையில்லாமல் விரிந்த இயல்பிலேயே தன் வசீகரத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அழகின் முறுவல் அது. தன் பிடியை விலக்கி வண்ணத்துப் பூச்சிகளை துரத்திக் கொண்டே அவ்வப்பொழுது அதன் மீறலுக்கு அங்கீகாரம் கோறும் சிரிப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கும் குழந்தையை எச்சரித்த வாறே அந்தத் தாய் தொடர்கிறாள். பாசம் கலந்த கனிவான கண்டிப்பிலும் மகளின் அசைவுகளை ரசித்துக் கொண்டும் அந்த இளம் தாயின் உடல் மொழியும் வாய் மொழியும் தாய்மையின் உச்சத்தில். “வேண்டாம்; போதும்; வந்துருடா, வா” என்று கெஞ்சியவாறே மகளை நோக்கி அவள் விரைந்து முன்னேறுகிற போது அது நிகழ்ந்தது; ஒரு மிகப் பிரகாசமான வெளிச்சத்திற்குள் அந்த குழந்தை மறைவது போல; குழந்தையின் உயர்த்திய கரமும், மினுமினுங்கி காற்றில் பறக்கும் கேசமும், அதற்கு மேல் பட படக்கும் வண்ணத்துப் பூச்சிகளுமாக நொடிப் பொழுது சிதறிய காட்சிக்குப் பின் ஒளிப் பிரவாகம் மாத்திரம் பிரகாசிக்க அந்த மழலை இல்லை. ஓட்டத்தில் தடுமாறிய தாய் திகிலில் கலந்த அரற்றலுடன் “பாப்பா” என்று வீறிட்டு கூக்குரலிட – ரகுராமன் பதறிப் போய் பாதி படுக்கையாகியிருந்த அந்த நாற்காலியிலிருந்து எழுந்தான். இறங்கும் சூரியப் பிரகாசம் இவன் கண்களை குருடாக்க முயல, முகத்தை கைகளால் துடைத்த வண்ணம் சுதாகரித்தான். அடைகிற நேரம் இது என்ன? ஒரு அழகாய் ஆரம்பித்து வியாபித்து விபத்தாய் முடிவதாய் போலான பகற் கனவா? ப்ரேமையா? இசை மோக வேட்கையின் பிறழ்வா? அவனுக்குப் புரிய வில்லை. தாய் யார்? குழந்தை யார்? ப்ரகாசமான வெளிச்சம் என்ன? வெளிச்சத்தின் பின் உள்ளுரைந்த இருள் என்ன?
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் இது என்ன ஒரு நனவோடயாய் என்று குழம்பியவனாய் மணியைப் பார்த்தான்; ஆறேகாலுக்கும் மேலாக. எழுந்து முகம் கழுவினான். மாலைச் செய்திகளுக்கு தொலை காட்சியை ஒளிர விட்டான். அந்தப் பெரிய வல்லரசின் அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் ஆட்டம் காண வைக்கும் கொரோனவின் அசுர ஆட்டத்தின் தரவுகளளைத்தான் செய்திகள் வீறிட்டுக் கொண்டிருந்தன. கொரோனா எதிர்மறையின் சின்னமாய் உலகெங்கும் மனிதத்தின் ஆழ் மனதில் நங்கூரமிட்டுவிட்டது. நிச்சயமற்ற எதிர் காலத்தின் நிதர்சனம் என்பதும் பிறழ்வு போல. தடைபட்டிருக்கும் வகுப்புகள், பாடத் திட்டங்களால் கல்வியாண்டு நிறைவாவது தள்ளிப் போகலாம். திட்டங்களின் கணிப்புகள் கால எல்லைகளைத் தாண்டும் கட்டாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மனிதனுடைய எல்லாக் கணிப்புகளையும் களங்களையும் வெகு நிதானமாய் கலைத்துவிட்ட ஒரு கள்ளச் சிரிப்புடன் வெகு மெளனமாய் இயங்கும் இறைவனோ, இயற்கையோ? திகிலும் திகைப்பும் சற்றே குறைந்து கரைய மறுக்கும் மன அழுத்தமாய். மனித ஸ்பரிசத்தை முடக்கிய விழியறியா வியாபகம் விஞ்ஞானத்திற்கான மிகப் பெரிய சவாலாய். கொரோனா குறித்த ஆழ் மனதின் அரற்றல்கள்தான் நனவோடைச் சித்திரமாய் பகலிலும் படம் காட்டுகின்றனவா? திரும்பவும் நினைவில் கொண்டு வந்தால் இறுதியாக ஒளி வெள்ளத்தில் ஒளிர்ந்து மறைந்த அந்த மழலையும், தாயின் பதற்றமும் பரிதவிப்பும் கொரொணா கொடுத்த குறியீடுகள்தான் என்றால் அதன் சூட்சுமம் ?
நாடோடியின் கானக வழிப் பாடலாய் மேஜையிலிருந்த அலைபேசி சினுங்கியது. எடுத்தான்; அம்மா. “எப்படி இருக்கப்பா?” நொடிப் பொழுதில் எல்லா பாரமும் கரைவது போல. “அம்மே” என்று உற்சாகமாய் கூவினான். அழைப்பது எந்த நேரமாயிருந்தாலும் அடுத்த கேள்வி “சாப்டியா மவனே?” இறுதி வரை துடிக்கும் தாய்மையின் பாச பாரம் அது. ஒரு வாரம் அச்சனும் மறு வாரம் அம்மையும் மாறி மாறி விழிக்கிற ஒரு அறிவிக்கப் படாத அட்டவணையில் ரகுராமனின் பாச வலைகள் அலபாமாவிற்கும் திருச்சூருக்குமாய் நீண்டு நிறைந்திருக்கின்றன. சில வேளைகளில் இருவருமே இடைபடுவதுண்டு. அக்காவின் குடும்ப ராஜ்ய உறவுகளின் மீதான அம்மாவின் விமர்சன பாரங்களுக்கு ரகுராமன்தான் சுமைதாங்கி. கடல் கடந்தும் அவன் அந்தக் கடமையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். உரசல்களின் சத்தங்களால்தான் குடும்பம் என்கிற நிறுவனம் அழகு பெறுகின்றது. அது தவிர்க்க முடியாதது. “இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டு உன் படிப்பில் கவனம் செலுத்து.” என்கிற அப்பாவின் அறிவுரையையும் கேட்டுக் கொள்ள வேண்டும்.
வழக்கமான விசாரிப்புகள், அம்மா தரப்பு சொந்த பந்த, பக்கத்து தரவாடு செய்திகளுக்குப் பின் அம்மா தன்னுடைய முந்தய நாள் விஷேசித்த செய்திக்குத் தாவினாள். “மவனே நேத்து நான் பக்கத்துல “சேர்ப்பு” (5 கி.மீ தொலைவில் உள்ள சிறிய ஊர்.) வரயிலும் போய்ட்டு உச்சக்குப் பிறகுதான் வீட்டுக்கு வந்தேன்” என்றவளிடம் “சேர்ப்பில் எந்த விஷேசம்?” என்று வினாவினான். “கொரொனா பெரிசா படுத்துதேடா. சர்க்காரும் என்னென்னவோ செஞ்சு பாக்றாங்க. ஒன்னும் மட்டுப் படலியப்பா. நமக்கு கேரளத்ல கொஞ்சம் தேவலாம். ஆனா நாடு பூரா தீயா பிடிச்சுக்ட்றுக்குப்பா. ஜனங்கள் ஜோலி ஏதும் இல்லாம கஞ்சிக்கும் தண்ணிக்கும் படுற பாடு சகிக்கலப்பா. என்ன தெய்வ குத்தம்னு ஒருத்தருக்கும் புலப் பட்லைய. எந்த கடவுளக் கும்பிட்ரவங்களுக்கும் எந்த மதக் காரங்களுக்கும் ஒன்னும் தெரியலியே? சேர்ப்புல இருக்ற ஒரு அம்பலத்து பூசாரிக்கு ஏதோ பகவான் உணர்த்தியிருப்பார் போல. அவர் அம்பலத்துக்கு பக்கத்லயே சின்னதா ஒரு கொரொனா அம்மன படச்சு பூஜை பண்ண ஆரம்பிச்சிருக்கார். கேள்விப்பட்டதும் இப்ப ஜனங்க கொஞ்ச கொஞ்சமா போய் கும்பிட்டு வாராங்களாம். பக்கத்து தரவாட்ல என்ட்ட சொன்னாங்க. சரி சும்மா இருக்றதுக்கு போய்ட்டு வருவொமே, கும்பிட்டுட்டு வருவோமேன்னு போய்ட்டு வந்தேன்” என்று நிறுத்தினாள் அம்மா. “நான்ஸென்ஸ்”என்று வெடித்தான் ரகுராமன். “அம்மா என்ன சொல்றதுன்னே தெரியல. எல்லாரும் போனா நீயும் போயிருவியா? எந்தக் காலத்லம்மா இன்னும் முடங்கிக் கெடக்றீங்க?. தமாஷான இந்தியாதாம்மா. என்ன வேணா நடக்கும். சந்திரனுக்கு ராக்கெட்டும் விடுவீங்க; ஆர்மிக்கு மிஸைலும் செய்வீங்க; பத்ம நாப சாமி பொக்கிஷத்ல பாம்பையும் படுக்க வைப்பீங்க. பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்ங்ற மாதிரி. ஒங்களுக்கு டெல்லி கோமாளி ராஜாக்களும், நாட்ல வேற வழியில்லாமல் இந்த அனர்த்தங்களை கண்டு கொள்ளாமலிருக்கிற சகாவுகளுட சர்க்காரும். அம்மா நீ ஒரு பிஸிக்ஸ் டீச்சர்ன்னு சொல்லிக்கிடாதம்மா” என்று வெடித்தான்.
“ஏண்டா நான் என்னமோ வீட்டுக் கவ்ரவத்தயே யார்ட்டயோ போய் அடகு வச்சுட்ட மாதிரி கத்றய என்ன? அதக் கும்பிடறதுனால என்னோட முழு மூளையும் மழுங்கிப் போயிருச்சா என்ன? இல்ல கொரோனா நாளக்கே இந்த நாட்ட விட்டே ஓடிப் போயிடும்னு போய் கும்பிட்டுட்டு வந்தனா? வெள்ளதோட அடிச்க்கிட்டு போறவனுக்கு துரும்பு கூட பெரிய துடுப்பாட்டம் தெரியும். அந்த நாள்ல்ல பெரியம்மை வந்து கொள்ள கொள்ளயா சிறுசுகளயும் பெருசுகளயும் முழுங்கிட்டுப் போறப்ப அத அம்மன் வெளயாடுறான்னுதான் சொல்வாங்க. அத ஒரு கொள்ள நோய்ன்னு நம்ம நாட்ல சொன்னதேய்ல்ல. வீட்ல வேப்பிலயக் கட்டி வச்சு, நோயாளிய வீட்டுக்குள்ளயே தனிமையாக்கி ஜாக்ரதயா பாத்க்குவாங்க. அதேதான் இப்ப இந்த பூசாரி செஞ்சு பாக்றாரு. என்ன பெரிய தப்புங்க்ற ?” என்ற அம்மாவை இடை மறித்தான். “பெரியம்மயோட காலம் என்ன? ஐந்து வருடங்கள் போராடி கண்டு பிடித்த தடுப்பு மருந்தினால் அதன் சுவடே தெரியாமல் பெரிய்யம்மையை அழித்து விட்டோம். இன்றைக்கு மருத்துவ விஞ்ஞானம் இருக்ற வளர்ச்சில இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள கொரோனாவுக்கும் கண்டு பிடிப்பாங்க. பெரியம்மை வந்த அந்த நாட்களில் இருந்த பாதுகாப்பற்ற நிலவரங்களில் , அந்த பயத்தில் நோயை அம்மனாக கும்பிட்டதை தவிர்க்க முடியாததாய் ஏற்கலாம். க்ளோனிங், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்று சாத்யமாகியிருக்கிற இன்று, தான் கண்களை மூடி உலகம் இருட்டு என்கிற பூனைக்கும் ஒங்களுக்கும் வித்தியாசமே இல்ல. சரி ஒரு தடவ போனது சரி; சும்மா சும்மா போய்ட்டு வந்துட்டு அலஞ்சிக்கிட்டு ரிஸ்க் எடுக்காதீங்க. நீங்க அதக் கும்பிடுறீங்கன்றதெல்லாம் அதுக்கு தெரியாது. அது பாட்டு இடம் கிடச்ச இடத்ல ஒட்டிக்கிடும். வெளயாட்டா இருக்காதீங்க” என்று முடித்தான். “சரிப்பா, சரிப்பா. நீ அங்க ஜாக்ரதயா இருப்பா. கூடுமான மட்டும் நீயே சமச்சு சாப்டு. ஒடம்பு பத்ரம். வைக்கட்டா? வைக்கிறேன்” என்று சொல்லி அம்மா முடித்தாள். அமைதியான அந்த அலை பேசியையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். இந்தியா ஒரு ஒண்டர்ஃபுல் நாடுதான், என்ன வேண்டுமானலும் நடக்கும் என்று நினைத்தவனாய் தன் மடிக் கணனியை எடுத்துக் கொண்டு அவனுடய ப்ராஜெக்ட் வேலைகளில் தீவிரமானான்.
மறுநாள் முழுவதும் ரகுராமன் பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் தன் மடிக் கணனியுடன் தஞ்சமடைந்து ப்ராஜெக்ட்டுக்குத் தேவையான தரவுகள் மற்றும் விவரங்கள் சேகரிப்பதில் தீவிரமாக வேண்டும் என்று தீர்மானித்திருந்தான். சக மாணவர்கள் இருவரும் இரண்டு மணி நேரத்திற்கு துறையின் விரிவுரையாளர் ஒருவரும் வந்து இணைந்து கொள்வதாக உறுதியளித்திருந்தனர். காலையில் உற்சாகமாய் புறப்பட்டான் ரகுராமன். பேருந்திலிருந்து இறங்கி ஒரு மந்தகாசமான தட்ப வெப்பத்தில் பல்கலைகழகத்தின் பிரதான வாயில் நோக்கி தீவிரித்த ரகுராமன் காதுகளில் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயிருந்து வந்த விதவிதமான இசைக் கருவிகளின் கலவையான ஒலியும், மெல்லிய கூச்சலும், பாட்டுமான ஆர்ப்பாட்ட அமர்க்களத்தின் ஒலிச் சிதறல்கள் விழுந்தன. வழக்கமான ஏதும் ஒரு மாணவர்கள் கூடுகையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். பிராதான வாசலை விட்டு சற்று தள்ளி நிதானமாய் கண்களை மேய விட்டுக் கொண்டிருந்த ஜேம்ஸ்ப்ரெவ்ன் இவனைக் கண்டவுடன் “ஹேய் மிஸ்டர் ராம் நம்முடைய அட்டவணையை இன்று நடத்த முடியும் என்ற நபிக்கை எனக்கில்லை” என்று பாதிப் புன்னகையோடும் மீதி ஏமாற்றத்தோடும் இவனிடம் சொன்னான். அருகில் நெருங்கிய ரகுராமன் “ஏன்? என்னவாயிற்று?” என்று கேட்க ப்ராதன பாதையின் பெரிய சிறிய மரங்களின் ஊடாக இடது புறம் விரிந்திருந்த அந்த பரந்த புல்வெளியைக் காண்பித்தான். அந்த வெளியெங்கும் வண்ண வண்ண ஆடைகளில் மாணவர்கள் மத்தாப்பாய் சிதறிப் பரவியிருந்தார்கள். மைதானத்தின் மத்தியில் ஒரு பெரிய வட்டத்தில் பெருங் கூட்டம் திரண்டிருந்தது. கைகளைத் தட்டியும் உயர்த்தியும் உற்சாகமாய் வேகமாய் பாடிக் கொண்டிருந்தார்கள். “எப்பொழுதும் விட்டு விட்டு நடப்பதுதானே?” என்றரன் ரகுராமன். அவன் சகா பதிலுக்கு சிரித்துக் கொண்டெ “ நிச்சயமாய் ஆட்டமும் பாட்டும் வளாகத்திற்கு பழக்கப்பட்ட விஷயம் என்றாலும் நூலகம் இன்னும் திறக்கப்படவில்லை. விசாரித்ததில் இன்று நூலகமும் மற்ற எந்த அலுவலகங்களும் திறக்கும் வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். அவர்கள் என்ன கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? என்றவன் “கொரோனா கொண்டாட்டம்” என்று முடித்தான். “என்ன?”அதிர்ந்தான் ரகுராமன். “யெஸ் ஸ்டுடென்ட்ஸ் பாடி கொரொனாவை ஆடிப் பாடி விழா எடுத்து கொண்டாடுவது என்று தீர்மானித்திருக்கிறர்களாம். கொரோனா குறித்த பயத்தையும், அஸுயையும், மன அழுத்தத்தையும் ஒழிப்பதற்கு, குறைப்பதற்கு அதை பார்த்து பயப்படுவதை விட அதனனோடு சேர்ந்து கொண்டாடுவதுதான் சரி என்று தீர்மாணித்து இன்று ஒரு நாள் எல்லாக் கட்டுப் பாடுகளையும் தளர்த்தி, ஒருவரையொருவர் உற்சாகமாய் ஸ்பரிசித்து பாடி நடனமாடிக் கொண்டாடுவது என்று முடிவெடுத்து விட்டார்கள்” என்று முடித்தான். “ மை காட் – என்ன நடக்கிறது? எங்கே போகிறோம்? எல்லாம் தலை கீழாய்” – ரகுராமன் தனக்குள்ளேயே முனங்கிக் கொண்டான்,.
இருவரும் மைதானத்தின் கொண்டாட்டத்தின் மைய்யத்தை நெருங்கி – ஆனால் ஆரோக்யமான விலகலில் – போய் பார்த்தார்கள். மைய்யத்தில் ஆண்களும் பெண்களுமாய் நூற்றுக்கும் மேற்பட்ட இளளைஞர்கள் ஆடிக் கொண்டிருந்தனர். பாட்டும் ஆட்டமும் உச்சத்திலிருந்தது. அவர்களைச் சுற்றி கைகளைத் தட்டி உற்சாகப் படுத்தும் கூட்டம் ஆயிரத்திற்கும் மேலிருக்கும். இது போக அங்கங்கே சிதறி குழுக்கள் குழுக்களாய். பாட்டும் ஆட்டமும் அச்சம் விலக்கும் பிரேமையாய் தெரிந்ததேயொழிய உள்ளார்ந்த உணர்வு பூர்வமான மகிழ்வோ உற்சாகமோ இருப்பதாகத் தெரியவில்லை. பயம் தவிர்க்கும் வேகம் ஒர் போதையாய் அவர்களை இயக்குவது போலிருந்தது. மன அளவில் இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்வினைக் கிருமியாய் பார்க்க முயல்கிறார்களா? ஆர்ப்பாட்டமும் அமர்க்களமும் அந்த நேரத்திற்குத்தான் என்கிற உண்மை இது போன்ற கூடுகைகளில் தன்னை உள்ளே ஒளித்துக் கொள்கிறது. உள்ளார்ந்து நெஞ்சுறையும் ஒரு நம்பிக்கையையும் தைரியத்தையும் இந்தக் கொண்டாட்டம் தருமா? அல்லது ஆடிக் களைத்த பின் மனமெங்கும் கள யதார்த்தம் மறுபடியும் சுடுமா? சுற்றி நின்று ஆட்டத்தை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்த இளசுகளில் இவர்களுடன் நூலக வேலையில் இணையவிருந்த செரீனா வுட்ஸும் பளீர் சிவப்பு நிற கவுனுடனும் கழுத்தில் சுற்றிய நீல ஸ்கார்புடன் இவர்களைப் பார்த்து “ஹாய்” என்று உரக்க கையசைத்து “கமான்” என்று கத்தினாள். பதிலுக்கு சிரித்த வண்ணம் கைய்யசைத்து விட்டு விலகினார்கள். ப்ரவுனுடன் ஒரு காப்பியை தொண்டைக்குள் கரைய விட்ட பின் ரகுராமன் விடை பெற்றான்.
பேருந்து நிறுத்தம் நோக்கி நிதானமாய் நடக்கையில், இரக்கமற்று நாசமாக்கப் பட்ட ஒரு நாளின் மிச்ச மணித்துளிகள் பாரமாக ஆரம்பித்தன. சற்று யோசித்தவன் அவனையுமறியாமல் சிரித்தான். விழியறியா எதிரியின் வியூகம் புரியாத பயம் மனிதர்களை என்னவாய் ஆட்டுவிக்கிறது? எந்தக் கலாச்சாரத்தையும், எந்த ஆளுமைகளையும் விட்டு வைக்காமல் ஆட்டுவிக்கும் கொரோனா. மனிதம் தடம் பதிக்கும் வழி படரும் பயம் அவனை என்னமாய் படுத்துகிறது? பாமரனுக்கும், படித்தவனுக்கும், பஞ்சை பராரிக்கும், வசதி படைத்தவனுக்கும் உயிர் பயம் என்பது ஒன்றுதான்; பொதுவானதுதான்; உள்ளூர உறைந்திருப்பதுதான். அம்மாவை கொரொனா அம்மன் வழிபாட்டுக்காக நேற்று கடிந்து கொண்டது நினைவில் வந்தது. கொரொனாவை பாமரன் பயத்தில் கும்பிட்டால் அறிவு பெருத்தவன் அதே பயத்தில் கொண்டாடுகிறன். இரண்டும் ஒன்றுதான். கும்பிடுவதும் கொண்டாடுவதும் ஒன்றுதான். விபரீதங்களை நம்பிக்கையற்று எதிர் கொள்ளும் மனிதத்தில் அனர்த்தங்களே மிஞ்சுகின்றன.
ரகுராமன் பயணிக்க பேருந்து வந்து கொண்டிருந்தது…