இங்கேயும் அங்கேயும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 10,133 
 

வீடு களை கட்டியிருந்தது… வாசலில் போட்டிருந்த ரங்கோலியின் வண்ணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தன, ஒவ்வொரு பெண்களும் உடுத்தியிருந்த பட்டுப் புடவைகள். துளிர்க்காத வியர்வையை ஒற்றியெடுக்கும் சாக்கில் ஒவ்வொருத்தியும் தன் கழுத்திலிருந்த நகையை சரி செய்து கொண்டே மற்றவர்கள் தன்னுடைய நகை, புடவையை கவனிக்கிறார்களாவென்று ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். வீடு முழுக்க பஜ்ஜியின் மணமும், கேசரியின் நெய்மணமும் பரவி நின்று, காபியின் நறுமணத்துடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தது. கேட்பாரற்று வழிந்து கொண்டிருந்த மெல்லிய புல்லாங்குழல் இசையையும் மீறி ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது ஒவ்வொருவரின் பேச்சுக் குரலும், குழந்தைகளின் விளையாட்டுக் கூச்சலும்..

உள்ளுக்கும், புறமுமாக எதற்கென்றே தெரியாமல் பதட்டத்துடன் அலைந்து கொண்டிருந்தாள் பார்வதி. ’இந்த இடமாவது நல்ல படியா அமையணுமே..’ என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டிருந்தாள். ‘சாயந்திரம் நாலு மணிக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் வந்துடுவாங்கன்னு தரகர் சொன்னாரே, இன்னும் காணோமே!.. அவர் கிட்ட சொல்லி போன் செஞ்சு பார்க்கச் சொல்லலாமா..’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, “வாங்க.. வாங்க..” என்று அவள் கணவன் பரசு வந்தவர்களை வரவேற்கும் குரல் கேட்டது. ‘அப்பாடா..’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் வாசலுக்குப் போய் தானும் வந்தவர்களை வரவேற்றாள்.

“ஏங்க.. சோபாவுல ஏதோ ஒரு குழந்தை பூவைப் பிச்சுப் போட்டு வெச்சிருக்கு. அதை சுத்தம் செஞ்சுட்டு, மாப்பிள்ளையை அதுல உக்கார வையுங்க..” என்று கணவனின் காதோரம் கிசுகிசுத்து விட்டு, பெண் தயாராகி விட்டாளா? என்று பார்க்க உள்ளே சென்றாள்.

ஹாலில் பேச்சுக் கச்சேரி ஆரம்பித்திருந்தது. இரு வீட்டாரும் தயக்கம் மறைந்து இயல்பாகப் பேச ஆரம்பித்திருந்தார்கள். திடீரென சம்பந்தியம்மாள், “அடடே!!.. அப்ப நாம ரொம்ப நெருங்கிட்டோம்ன்னு சொல்லுங்க.” என்று சற்றுப் பெரிய குரலில், ஆச்சரியத்துடன் சொன்னாள். வழக்கம் போல் புரியாது விழித்த கணவருக்கு, ”ஏங்க.. உங்களுக்கு தெரியுமா?.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க. உங்க பெரியப்பா பிள்ளையின் மனைவிக்கு இவங்க தூரத்து சொந்தமாம்.. ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோமில்ல..” என்று விளக்கமும் கொடுத்தாள்.

கேட்டுக்கொண்டிருந்த தரகருக்கு, வயிற்றில் ஏதோ உருண்டது. “ஆஹா.. நம்ம கமிஷன் போச்சா..” என்று எண்ணிக் கொண்டவராய் கிலி பிடித்தாற்போல் அமர்ந்திருந்தார்.

“ம்க்கும்..” என்று தொண்டையைக் கனைத்துக் கொண்ட பெரியவர் ஒருவர், “சரி.. நேரம் போயிக்கிட்டிருக்கு, பொண்ணைப் பார்த்துடலாமே.. கூப்பிடுங்க” எனவும், “பவித்ரா.. பவி, அந்த கூல்ட்ரிங்க்ஸை கொண்டாந்து எல்லாருக்கும் கொடும்மா” என்று அழைத்தாள் பார்வதி. பெண்ணைக் கூப்பிடுவதற்காக வாயைத் திறந்த அவள் கணவர், தன்னுடைய வேலையை மனைவியே செய்து விட்டதால் மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பி, ரெண்டு ஸ்பூன் மிக்சரை அள்ளிப் போட்டுக் கொண்டார்.

கூல்ட்ரிங்க்ஸ் தட்டை ஏந்தி வந்த பவித்ராவைப் பார்த்ததும் பார்வதி லேசாக துணுக்குற்றாள். தான் கொடுத்த பட்டுப் புடவையை கட்டிக் கொள்ளாமல், மெல்லிய சரிகையிட்ட காட்டன் புடவையில் மகள் இருப்பது கண்டு அவளுக்கு லேசாகக் கோபம் கூட வந்தது. “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இந்தப் பெண்??.. மாப்பிள்ளை வீட்டார் என்ன நினைப்பார்கள்?” என்று குமைந்தாள். அதற்கேற்றாற்போல் சம்பந்தியம்மாளின் முகமும் லேசாக மாறியது அவளுக்குக் கிலேசத்தைக் கொடுத்தது. வெளிக் காட்டிக் கொள்ளாமல் பாடுபட்டுச் சமாளித்தாள்.

“இப்படி உக்காரும்மா..” என்று பவித்ராவை தன்னருகே அமர வைத்துக் கொண்ட சம்பந்தியம்மாள், “என்ன படிச்சிருக்கே?..” பேச்சை ஆரம்பிக்க வேண்டுமேயென்று எதையோ கேட்டு வைத்தாள்.

“ஒரு பக்கம் வேலை பார்த்துக்கிட்டே, இன்னொரு பக்கம் எம்.சி.ஏ. முடிச்சிருக்கா. ரிசல்ட்டும் வந்துடுச்சு. இன்னும் ரெண்டொரு மாசத்துல ப்ரமோஷனும் கிடைக்குமாம்..” உபரித் தகவலைச் சேர்த்து வழங்கிய கையோடு “இருங்க வந்துடுறேன்” என்று விட்டு உள்ளே போனாள் பார்வதி.

பவித்ராவின் கண்கள் அங்குமிங்கும் தத்தித் தாவி, காலண்டர், பூப்பழத்தட்டு, சோபா நுனி, என்று அலைபாய்ந்து கொண்டிருந்தது. போட்டோவில் கண்ட அந்த முகத்தை நேரில் காணும் சந்தர்ப்பத்தில் எங்கிருந்தோ ஒரு வண்டி வெட்கம் வந்து உட்கார்ந்து கொண்டது. இயல்பிலான தைரியம் தொலைத்து, ஆசையும் வெட்கமும் போட்டி போடத் தடுமாறிக் கொண்டிருந்தாள். அவளுக்கே தெரியாமல் யுகங்கள் கழிந்து கொண்டிருந்தன.

“சரி.. நாமளே பேசிக்கிட்டிருந்தா எப்படி?. சிறுசுக மனசுல இருக்கறதையும் தெரிஞ்சுக்கணுமில்லையா?..”

“என்னடா?.. பொண்ணு கிட்ட வேண்ணா பேசிப் பார்த்துட்டு உன் முடிவைச் சொல்றியா?..” சொன்னது பிள்ளையின் தந்தையாகத்தான் இருக்க வேண்டும்.

பையன் அம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். ஒப்புதலான பார்வையொன்று கிடைத்ததும் தலையசைத்தான்.

“பவி.. மொட்டை மாடிக்குக் கூட்டிட்டுப் போம்மா..”

தலையசைத்து விட்டு எழுந்து நடந்த பவித்ராவைப் பின் தொடர்ந்தான் பிரகாஷ்.

“அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். அதுக்குள்ள நாம மத்த லௌகீகங்களைப் பேசிடலாமே. என்னங்க?.. சரிதானா!..” சம்பந்தியம்மாள் கணவனை நோக்கிக் கொக்கியைப் போட்டாள்.

“ஆமாமா… ரொம்பச் சரி..”

உள்ளுக்கும் வெளியிலுமாக பரபரப்புடன் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்த பார்வதி இடை மறித்தாள். “இதுல பேசறதுக்கு ஒண்ணுமில்லைங்க. தரகர் எல்லாம் சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன். பவித்ரா எங்களுக்கு ஒரே பொண்ணு. எல்லாமே அவளுக்குத்தான். ஓஹோன்னு இல்லாட்டாலும் ஓரளவுக்கு வாழ்ந்துட்டிருக்கோம். பொன் வைக்கிற இடத்துல பூவையாவது வெச்சுடுவோம்….”

“உங்க பொண்ணு.. உங்க இஷ்டம்.. ஆமா, உங்க பொண்ணு போட்டிருந்த நெக்லஸ் அவளுக்குன்னே செஞ்சதா?”

“ஆமாங்க..”

“அந்த டிசைன் நல்லால்லை.. அழிச்சுட்டு வேற டிசைன்ல செஞ்சுடுங்க. அப்றம் பொண்ணுக்கு ஜிமிக்கி செஞ்சுருப்பீங்க இல்லே.. அதோட காதுக்கான மாட்டலும் சேர்த்து செஞ்சுடுங்க. அப்பத்தான் ஒரு அம்சமா இருக்கும். அவ கை வாகுக்கு நிறைய வளையல் போட்டா நல்லாருக்கும். அதனால கழுத்துக்கு போடறதைக் குறைச்சுக்கிட்டு கைக்கு நவ்வாலு வளையல் கூடுதலாப் போட்டுடுங்க… வைர மூக்குத்தி கண்டிப்பா இருக்கணும்” சம்பந்தியம்மாள் அடுக்கிக் கொண்டே போக பெண்ணின் தாய் தந்தையர் பேச்சு மூச்சற்று உட்கார்ந்திருந்தனர். பையனின் தந்தையோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் வெற்றிலையின் நரம்பைக் கிள்ளிக் கொண்டிருந்தார்.

“’பொண்ணு படிச்சிருக்குது.. அது போதும்’ன்னு நீங்க சொன்னதா சொன்னாங்களே..” பார்வதிக்கு குரல் எழும்பவில்லை.

“கல்யாணப் பேச்சுன்னா அப்படியிப்படி இருக்கத்தான் செய்யும். உங்களுக்குத் தெரியாததா..” அமர்த்தலாகச் சொன்னாள் சம்பந்தியம்மாள்.

கூடத்தில் அத்தனை பேர் உட்கார்ந்திருந்த போதிலும், ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொண்டிருந்த போதிலும், திடீரென எல்லாமே அமைதி மயமாகி விட்டாற் போன்றதொரு சூழல். நொடிகள் ஜென்மங்களாகக் கழிந்தன. மாடியிலிருந்து இறங்கி வந்த பவித்ராவும் பிரகாஷும் இதைக் கவனிக்கத் தவறவில்லை. என்னவென்று கண்களாலேயே வினவிய பிரகாஷின் காதில் அவன் தந்தை கிசுகிசுத்தார். இரு பக்கத்து அம்மாக்களின் முகங்கள் இறுகிக் கிடந்ததைக் கண்ட பவித்ராவுக்குத் துணுக்குற்றது. அறையினுள்ளே சென்றதும் விவரமறிந்தவள் கதவருகில் நின்றபடி பிரகாஷை ஏறிட்டாள்.. அவன் அங்கிருந்த பத்திரிகையைப் புரட்டியபடி அமர்ந்திருந்தான். ‘வரதட்சணை வாங்கறதெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்று அவன் மொட்டை மாடியில் சொன்னது நினைவு வந்தது அவளுக்கு.

சிறிது நேரம் சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு “சரிங்க… வீட்டுக்குப் போய் கலந்தாலோசிச்சுட்டுப் பதில் சொல்றோம்” என்றபடி மாப்பிள்ளை வீட்டார் போய் விட்டார்கள்.

சுரத்தே இல்லாமல் வாசல் வரை போய் வழியனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்த பார்வதியம்மாள் வெடித்து விட்டாள்.

“நமக்கு இந்தச் சம்பந்தம் வேணாங்க.. அந்தம்மா ரொம்பக் கறார் போலிருக்கு. பையன் வீட்டுக்காரங்க இவ்வளவு நகை போடுங்கன்னு கேப்பாங்க.. கேள்விப் பட்டிருக்கேன். அதென்ன.. இன்னின்ன நகை போடுன்னு கட்டளை போடறது?. நம்ம பொண்ணுக்கு எதையெல்லாம் போட்டுப்பார்க்கணும்ன்னு நமக்கு ஆசையிருக்காதா?.. இல்லை நம்ம பவிக்குத்தான் தனிப்பட்ட விருப்பம்ன்னு ஒண்ணு இருக்காதா?. எதையுமே யோசிக்காம பேசறாங்களே. எனக்குச் சரியாப் படலை. அவங்க புருஷனும் பையனும் கூட அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டறதைப் பார்த்தா எனக்கென்னவோ நம்ம பொண்ணு அங்க போய் சுகப்படுவான்னு தெரியலை. அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு நம்ம பொண்ணை கஷ்டப் படுத்திடக் கூடாதே..”

அதே சமயம் அங்கே காரில்,

“நமக்கு இந்த சம்பந்தம் வேணாங்க..”

ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷின் தந்தை திடுக்கிட்டுத் திரும்பினார். பெண் பார்க்கும் படலம் முடிந்ததும் ஒரு சினேகிதனைச் சந்தித்து விட்டு வீட்டுக்கு வருவதாகக் கூறி பிரகாஷ் கிளம்பி விட்டிருந்தான்.

“என்னம்மா.. திடீர்ன்னு இப்படியொரு குண்டைத் தூக்கிப் போடறே?..” ஆச்சரியத்துடன் கேட்டார் அவர். “உனக்குப் பொண்ணைப் பிடிக்கலியா?”

“அப்படியில்லை.. ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க ஒரு விஷயம் கவனிச்சீங்களா?. அந்த வீட்டுல அந்தம்மா வெச்சதுதான் சட்டம் போலிருக்கு. ஒவ்வொருத்தரையும் எப்படி டாமினேட் செஞ்சுட்டிருந்தாங்கன்னு நீங்க கவனிக்கலை… ஆனா, நான் கவனிச்சேன். பொண்ணோட வாழ்க்கையிலயும் அது மாதிரியே தலையிட்டு அதிகாரம் செஞ்சாங்கன்னா என்னாகும்?.. தாயைப் போல பிள்ளைன்னு சொல்லுவாங்க. இந்தப் பொண்ணும் அதே மாதிரி இருந்துட்டா என்னங்க செய்யறது!!. அதிகாரம் செய்யற மனைவி கிட்ட நம்ம பையன் அடங்கிப்போகணுமா?. அம்மா சொல் கேட்டு, நம்ம பையனைப் பிரிச்சுத் தனிக்குடித்தனம் கூட்டிட்டுப் போயிட்டான்னா என்ன செய்யறது??… எனக்கு ரொம்பப் பயமாருக்குங்க”

“சேச்சே.. அப்படி இருக்காதும்மா.. நீயா ஏன் எதையோ நினைச்சுக் குழப்பிக்கறே?.. நம்ப புள்ளை மேல நம்பிக்கையில்லையா உனக்கு?. தாயைப் போல பிள்ளைன்னு சொன்னியே.. அந்தக் கோணத்துல யோசிச்சிப் பாரு. அவங்கம்மாவை மாதிரியே ஆளுமையோடயும் அரவணைச்சும் வேலை வாங்கற திறமை இருந்தா அது நிச்சயம் உயர்பதவியில இருக்கற அந்தப் பொண்ணுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்டுதான். பலாப்பழம் முரடுதான்.. ஆனா, உள்ளே இருக்கற சுளை இனிக்கிறதில்லியா?.

மனைவி யோசிக்கத் தொடங்கி விட்டாள் என்பதை அவள் முகபாவத்திலிருந்தே கண்டு கொண்டவர், வாய்க்குள் சிரித்துக் கொண்டார். “நாளைக்கே ‘சம்மதம்’ என்று சொல்லி விட வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார். நாளைய தினம் அவர்களுக்கு என்ன தரக் காத்திருக்கிறதென்று அறியாமலேயே…

அதே நேரம் அங்கே பவித்ராவுக்குள் ஒரு சூறாவளி சுழலிட்டுக்கொண்டிருந்தது. மொட்டை மாடியில் பிரகாஷுடன் தனியாகப் பேச அனுப்பப்பட்ட அந்தக்கணங்கள் மறுபடி நினைவில் வந்தன.

ஆரம்பத்தில் மேம்போக்காகப் பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சு அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குத்தாவியது.

“இந்தப் பெயிண்டிங்கை நீங்களே வரைஞ்சீங்களா?…” கேட்ட அவனது பார்வை சுவரில் மாட்டியிருந்த தஞ்சாவூர் ஓவியத்திலிருந்த கோகுலகிருஷ்ணனை ஆராய்ந்து கொண்டிருந்தது.

“ஆமாம்.. இதுக்குன்னு ஸ்பெஷல் வகுப்புக்குப்போய்க் கத்துக்கலை. எனக்கிருந்த ஆர்வத்தால் கண்டதையும் கேட்டதையும் வெச்சு நானாவே கத்துக்கிட்டேன்”

“உங்களுக்குப் பொறுமையுணர்ச்சி அதிகம்ன்னு நினைக்கிறேன்.” லேசான சிரிப்புடன் சொன்னான்.

“பொறுமைங்கறதை விட கலையை ரசிக்கும் குணம் உண்டுன்னு சொல்லலாம். சரி, உங்களுக்கு புக்ஸ் வாசிக்கிற வழக்கம் உண்டா?” பதில் பந்துடன் எதிர்க்கணையையும் சேர்த்து எறிந்தாள்.

“சும்மா ஒரு தடவை வாசிச்சுட்டா அப்றம் தூக்கிப்போடப்போறோம். இதைப்போயி யாராச்சும் காசு கொடுத்து வாங்குவாங்களா?. எங்க ஆபீஸ்ல ஒரு இலக்கியப்பைத்தியம் இருக்கு. மாசந்தோறும் சம்பளக்கவரோட ரெண்டு புத்தகங்களையும் வீட்டுக்குக் கொண்டு போகும். ஏங்க?.. நீங்க கேக்கறதைப்பார்த்தா நீங்க நிறைய புக்ஸ் வாசிப்பீங்க போலிருக்கே”

“ம்.. வாசிக்கிறது மட்டுமில்லே, சில சமயம் எழுதவும் செய்வேன். ஆமா, உங்களுக்குக் கவிதைகளும்கூட பிடிக்காதா?” என்றபடி அவன் கைகளில் ஒரு நோட்டுப்புத்தகத்தைத் திணித்தாள்.

“பிடிக்குதோ இல்லையோ.. உங்களுக்குப் பிடிச்சதை எழுத கண்டிப்பா தடை சொல்லமாட்டேன். எழுதற சுதந்திரம் உங்களுக்கு எங்கிட்ட தாராளமா கிடைக்கும்”

“ஹலோ.. எழுத்துரிமை என்னோட பிறப்புரிமை. இதை நான் யார்கிட்டேயும் கேட்டுப்பெறணும்ன்னு அவசியமில்லே” சற்றுச்சூடாகவே சொன்னாள்.

“ஓ.கே…. ஓ.கே.. கூல் டவுன். இப்பவே ஏன் சண்டை போட்டுக்கணும். இதையெல்லாம் அப்புறம் கூட பேசிக்கலாமே” என்றபடியே நோட்டைப் புரட்டிக்கொண்டிருந்தவன், “வாவ்.. வெரிகுட். சூப்பரா எழுதியிருக்கீங்க. கவிதைகள்ன்னா இப்படித்தான் புரையோடிப்போன சமுதாயத்தைச் சாடுற மாதிரி இருக்கணும். கேள்வி கேக்கணும். நம்ம மக்களை இன்னும் சிந்திக்கத் தூண்டணும். அதிலேயும் வரதட்சணையைப்பத்தி ஒரு கவிதை எழுதியிருக்கீங்க பாருங்க. சான்ஸே இல்ல. எனக்குக்கூட வரதட்சணை வாங்கறது பிடிக்காது தெரியுமோ?. வரதட்சணை வாங்க மாட்டோம்ன்னு எங்க கல்லூரியில பத்து இளைஞர்கள் எல்லோர் முன்னாடியும் உறுதிமொழி எடுத்துக்கிட்ட சம்பவம் நியூஸ்ல கூட வந்தது. அந்த பத்து இளைஞர்கள்ல ஐயாவும் ஒருத்தர் தெரியுமோ?” என்றபடி காலரைத்தூக்கி விட்டுக்கொண்டான்.

அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. இந்தக்கால இளைஞனல்லவா என்று சற்றுப் பெருமிதமாகவும் இருந்தது.

அந்தப்பிரமிப்பையும் பெருமிதத்தையும்தான் இப்போது அவன் தூள்தூளாக்கிச் சென்றிருந்தான். கடைசியில் எல்லா ஆண்களையும்போல்தானா இவனும்? என்று ஆயாசமாக இருந்தது. மாடியில் தன்னிடம் தனிமையில் வாய் கிழியப்பேசியதையெல்லாம் அப்பா, அம்மாவிடமும் பேசியிருக்க வேண்டியதுதானே. சரி,.. நாலு பேர் முன்னிலையில் பேச வேண்டாம். தனியாகக் கூட்டிக்கொண்டு பேசியிருக்கலாமே. கடைசியில் அவன் மௌனமாக உட்கார்ந்து அவனது அம்மாவின் எதிர்பார்ப்பில் தனக்கு ஆட்சேபணையில்லை என்பதோடு ஒப்புதலையும் அல்லவா காட்டி விட்டான்.

“இப்படிப்பட்ட ரெட்டை நாக்கு மனிதர் எனக்கு வேணாம்ப்பா”.. மனதிலிருந்ததையெல்லாம் பெற்றவர்களிடம் கொட்டியவள் இறுதியாகச் சொல்லி முடித்தாள்.

“அப்படி நினைக்காதேம்மா. என்ன இருந்தாலும் நாம இப்ப வேத்தாள்தானே. நம்ம முன்னாடி பெத்தவங்களை விட்டுக்கொடுப்பாரா?. கொஞ்சம் யோசிச்சுப்பாரு” தகப்பன் பரிதவித்தார்.

“இல்லைப்பா.. இப்ப பேசலைன்னா இனி எப்பவுமே பேச முடியாதுப்பா. அந்த சந்தர்ப்பத்தை அவர் உபயோகப்படுத்திக்கவும் மாட்டார்ன்னு தோணுது. நான் நல்லா நிறைய தடவை யோசிச்சுட்டேன். வாய்ச்சொல் வீரர்களை நம்பறதுங்கறது மண்குதிரையை நம்பி ஆத்துல இறங்கின கதைதான். அப்படியே வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போக வேண்டியதுதான். இதுவே கல்யாணத்துக்கப்புறம் பெத்தவங்களைக் குளிர வைக்கிறதா நினைச்சுக்கிட்டு எங்கிட்ட ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு மாதிரி நடந்துக்கிட்டா எனக்குப் பைத்தியமே பிடிச்சுரும். இப்பவே அது வேணும் இது வேணும்ன்னு லிஸ்ட் போடற அந்தம்மா வீட்டுல நான் கடைசி வரைக்கும் நல்லபடியாக் குடும்பம் நடத்துவேன்ங்கறது என்ன நிச்சயம்?. விட்டுக்கொடுத்தவங்க கெடாம இருந்தது அந்தக்காலம். விட்டுக்கொடுத்தே வீணாப்போறது இந்தக் கலிகாலம். வேணாம்ப்பா.. ப்ளீஸ் விட்ருங்க.” கண்ணீர் முத்தாய்த் திரண்டு நிற்க கையெடுத்துக் கும்பிட்டாள்.

“வேணாம்மா ராசாத்தி,. நீ நல்லா இருக்கறதைப் பார்க்கறதுக்குத்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறோமே தவிர கஷ்டப்படறதைப் பார்க்கறதுக்கில்லே. உனக்கேத்த நல்ல ராஜகுமாரன் வராமலா போயிருவான். கவலையை விடு. இப்பவே அவங்களுக்குப் போன் போட்டு நமக்கு இஷ்டமில்லேன்னு சொல்லிடறேன்..” என்றவர் டீபாயை நெருங்கி போனில் நம்பர்களை ஒற்றினார்.

“வணக்கம்,.. பத்திரமா வீடு போய்ச் சேர்ந்தீங்களா?” தன்மையாகத்தானே பேச்சை ஆரம்பிக்க வேண்டும்.

“அட!.. இந்தக்கல்யாணத்துல எங்களுக்கு முழுச்சம்மதம்ன்னு நாங்களே நாளைக்கு உங்களுக்குப் போன் செய்யலாம்ன்னு இருந்தோம். நல்ல வேளையா இன்னிக்கு நீங்களே லைன்ல வந்துட்டீங்க.” ஆர்ப்பரித்தனர் எதிர்முனையில்

“இல்லைங்க, அதுக்கு அவசியமில்லை. எங்களுக்கு இந்தச் சம்பந்தத்தில் விருப்பமில்லை. நீங்க கேட்டதையெல்லாம் கொடுக்கற மாதிரியான வேற சம்பந்தத்தைப் பார்த்துக்கோங்க”

போனைப் பிடித்தபடியே பேயறைந்தாற்போல் நின்றனர் எதிர்முனையினர்.

போனை வைத்துவிட்டுத் திரும்பிய தகப்பனின் விரித்த கைகளில் அடைக்கலம் புகுந்தது அந்தக் குஞ்சுக்கோழி.

(நம் தோழி மாத இதழில் வெளியான சிறுகதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *