ஆஹா!! என்ன பொருத்தம்!!!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 16, 2020
பார்வையிட்டோர்: 8,308 
 
 

“பத்து பொருத்தமும் பொருந்தியிருக்கு !!!

இது மாதிரி தினப் பொருத்தம், கணப்பொருத்தம் எல்லாம் அமையறது லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் !!!”

சிவஞானம் ஜோசியர் அடிச்சு சொல்லிவிட்டார் ….

தேவானையின் அப்பா எவ்வளவு கொடுத்தாரோ தெரியல….

லட்சத்தல ஒருத்தனா என்ன மாட்டிவிட்டு அவர் போய் விட்டார்…..!!!

தேவானைக்கும் எனக்கும் இருக்கும் ஒரே பொருத்தம் இரண்டு பேரும் ஒரு விஷயத்திலேயும் ஒத்துப் போகாது தான்….

ஆனா பேர் பொருத்தம் அமஞ்சு போச்சு ….. தெய்வானை …. சுப்ரமணியன்….. கல்யாணமும் திருப்பரங்குன்றத்தில்தான்….

கல்யாணம் ஆனதுமே தனிக்குடித்தனம்….

முதல் நாள் ராத்திரி எனக்கு ஒரு மாதிரி புரிஞ்சு போச்சு…

“எதுக்கு லைட்டை அணச்சீங்க…..??? எனக்கு இருட்டுன்னாலே பயம்….லைட்டு எரிஞ்சிட்டே இருக்கணும்…..!!!!”

எனக்கோ லேசா வெளிச்சம் இருந்தா கூட தூக்கம் வராது….

‘கதவெல்லாம் இப்படி தெறந்திருக்குதே… பூச்சி பொட்டு வராதா ….???’

எல்லா சன்னலையும் சாத்தி, சதா A.C. எனக்கோ மூச்சு முட்டும்….!!!!

சினிமாவுக்கு கிளம்புவோம்…..!

“ரஜினி படம் ஓடுதான்னு பாருங்க….”

“ரஜினியா !! நானு ரஜினி படம் பாக்கவே மாட்டேன்..நடிப்பா அது? கமலோட ‘அன்பே சிவம்’ ரிசர்வ் பண்ணிட்டேனே…”

”ஐயே…. கமல் பேசறதே எனக்கு புரியாது…முதல்ல டிக்கெட்ட கேன்சல் பண்ணிட்டு ‘முத்து’ படத்துக்கு டிக்கட் எடுங்க…ஜப்பான்லேந்து பிளேன்ல வந்து பாக்கறாங்கன்னா பாத்துக்குங்க….”

கல்யாணம் ஆன புதிதில் எல்லா கணவர்களையும்போல் ‘சரி… விட்டுப் பிடிக்கலாம்’ன்னு நினைச்சது தப்பா போச்சு….

விட்டேனே தவிர பிடிக்க முடியல……

எனக்கு எப்பவுமே ஒரு சந்தேகம்… ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ஒரு வேளை தவறுதலாக எங்க அம்மா ஜாதகத்தை குடுத்துட்டாங்களோ…??

அம்மாவும் தேவானையும் மாதிரி மாமியார் மருமகள் இருக்கவே முடியாது… என்ன மாட்டி விட்டு வேடிக்க பாக்கறதிலே என்ன ஒத்துமை….

இரண்டு பேருமே ஒரு கோவில் விடாமல் ஆலய தரிசனம் தான்….

கல்யாணமாகி மூணு வருஷம் குழந்தையில்லைன்னு அம்மாவுக்கு வருத்தம்….

ஒருவேளை அம்மாவை நான் எங்கேயும் கூட்டிட்டு போகலைன்னு பழி தீர்த்துக்க இதுதான் சமயம்னு நினைச்சாங்களோ ……??

இதுவரை கேள்விப்படாத கோவில் பேரெல்லாம் எங்கேந்து பிடிச்சாங்க …??

ரவுண்ட் ட்ரிப் ஒரு வேன் புக் பண்ணியாச்சு…..

முதல்ல ராமேஸ்வரத்தில ஒரு முழுக்கு… அப்புறம் அனுமார் வால் மாதிரி ஒரு நீள லிஸ்ட்…

திருநள்ளாறு…. மாசாணியம்மன்… கயிலாயநாதர்…வெக்காளியம்மன்திருநெல்வேலி… கரூர்…. நாமக்கல்.. திருவண்ணாமலை… திருவாரூர்..

இதற்கு நடுவில் ஆஃபீஸ்னு ஒண்ணு இருப்பதே மறந்து போச்சு…..

காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதைதான் …எண்ணி பத்து மாசத்தில அமுதா…… அடுத்து இரண்டு வருஷத்தில ஆதவன்…

பழனி மொட்டையா திருப்பதி மொட்டையா… ???? .

ஸ்டேட்போர்டா … சென்ட்ரல் போர்டா???…

ஸ்கூல் பஸ்ஸா…. காரா..??

எதாவது ஒரு விஷயத்தில ஒத்துப் போனாத்தானே….!!!!!

எப்படியோ அறுபதாம் கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு..

இப்போ நானும் தேவானையும் மட்டும்தான்… பசங்க சிங்கப்பூரிலும் …..துபாயிலும்..

நீலாங்கரையில் நாலு கிரவுண்டில் தனி வீடு…தெய்வானையுடன் மறுபடியும் தனிக்குடித்தனம்…!!!!

இப்போதெல்லாம் தெய்வானைக்கு என்னோடே சண்டை போட தெம்பில்லை.

ஒரு மாதிரி ‘அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்’ மாதிரி போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை….

யாரோட கண் பட்டுதோ….??

ஒரு தடவை பசங்க வெகேஷனுக்கு வந்தபோது இரண்டு வீடு தள்ளி வயதான ஒரு அம்மாவைக் கட்டிப்போட்டு நகையெல்லாம் எடுத்துட்டு போய்ட்டாங்கன்னு பேப்பர்ல நியூஸ் பாத்ததும் வந்தது ஆபத்து..

“அம்மா … அப்பா… நீங்க இங்க தனியா இருந்தா எங்களுக்கு நிம்மதியே இருக்காது….இந்த வீட்டை வித்துட்டு சோழிங்கநல்லூர்ல மாடர்னா இரண்டு பெட்ரூம் ஃபிளாட் வாங்கணும்னு நானும் அமுதாவும் தீர்மானம் பண்ணிட்டோம்..கேட்டட் கம்யூனிட்டி…இதுல மாத்தமே இல்லை….”

இதுவரை அபார்ட்மென்ட் வாழ்க்கை என்னன்னே தெரியாது தெய்வானைக்கு சுத்தமா பிடிக்கலை…

“அடச்ச மாதிரி இருக்குங்க…பக்கத்தில யாரு வராங்க போறாங்க ஒண்ணுமே தெரியலயே..

வாச தெளிச்சு ஒரு கோலம் போட்டால் தானே வீடு லஷ்மி கடாஷமாயிருக்கும் ????

எல்லா வீட்டு வாசல்லையும் ஒரு கோல ஸ்டிக்கர்…..”

வந்த மறுநாளே பக்கத்து வீட்டிலேர்ந்து ஒரு அலறல்..!!!!

‘ஓடி வாங்க….பாப்பா கீழ விழுந்து மயக்கமாயிட்டா…. தலையில் அடி பட்டு ரத்தம்…. ஆம்புலன்ஸ கூப்பிடுங்க…. சீக்கிரம்….’

இரண்டு பேரும் விழுந்தடித்துக்கொண்டு ஓடினோம்..!!

கதவைத் தட்டினால் பத்து வயது சிறுமி சிரித்துக் கொண்டே கதவைத் திறந்தாள்…

“பாப்பா ….யாருக்கும்மா அடிபட்டுது…????”

“அடியா…..?? அம்மா… இங்க வாங்க…”

ஹவுஸ் கோட்டில் ஒரு பெண் வந்தாள்..

“சாரிங்க…..டி.வி.சீரியல் ஓடிட்டிருக்கு… மாமியாருக்கு காது கேக்காது…. அதான் சத்தமா…!!!!

ஸாரி…. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க…”

டக்கென்று கதவை சாத்தி விட்டு போய்விட்டாள்…

தினமும் கண்டிப்பாக வாக்கிங் போகணும்னு பசங்களோட உத்தரவு….!!

நான் காலைல அஞ்சு மணிக்கு எழுந்து விடுவேன்…

ஆறு மணிக்கு வாக்கிங் கிளம்பிடுவேன்…

தெய்வானை எல்லா சீரியலும் முடிஞ்சு படுக்கும்போது பதினொண்ணு ஆகிவிடும்….

காலைல சூரியன பாக்குறதே அபூர்வம்….. அவளுக்கு சாயங்காலம் தான் சரிப்படும்…..

நானும்தான் ஒருமணி நேரம் நடக்கிறேன்…தெய்வானை மட்டும் வண்டி கதைகளோடு திரும்பி வருகிறாளே….. எப்படி அவளால் மட்டும் முடிகிறது..

‘வாக் தி டாக்’…போலயிருக்கு….!!!!

இப்போவெல்லாம் தெய்வானை ரொம்பவே சந்தோஷமா இருக்கா….

காலைல எழுந்து இரண்டு மணி நேரம் லலிதா ஸகஸ்ரநாமம் …..சௌந்தர்யலஹரி ..

(கிளாசுக்கு போக ஆரம்பிச்சிருக்கா) அப்படியே சாட்சாத் மேல் மருவத்தூர் அம்மனே நேரில் வந்த மாதிரி…

சாயங்காலம் அவளா இவள்…..??

டிராக் சூட். ..நைக்கே ஷுஸ் .. கேப்…..ஷைனி ஆப்ரஹாம் தோத்தா ….!!!!

“ஏங்க …. நீங்க நம்பவே மாட்டீங்க…நாங்கூட இந்த அபார்ட்மென்ட்ல இருக்கிறவங்கள தப்பா புரிஞ்சு கிட்டேன்…. எல்லாரும் எவ்வளவு நல்லவங்க தெரியுமா …??”

“என்னாச்சு இவளுக்கு…காலைல கூட நல்லாத்தானே இருந்தா …???”

“எங்க லேடீஸ் கிளப் எலக்க்ஷன்ல என்னத்தாங்க கல்சுரல் செக்ரட்டரியா தேர்ந்தெடுத்திருக்காங்க…ஒரு ஓட்டு பாக்கியில்லாம எல்லாமே எனக்குத்தான்…”

எனக்கென்னமோ இதில கொஞ்சம் வில்லங்கம் இருக்கா மாதிரி… எல்லாரும் சேந்து இவள மாட்டிவிட்டாங்களோ…??

நேத்து பாபுவோட பேசிட்டிருக்கும்போது போன வருஷம் நடந்த கூத்தைப் பத்தியும் , அப்பார்ட்மென்ட்ல இருக்கும் பாலிடிக்ஸ் பத்தியும் , எட்டாம் நம்பர் மகாதேவன் கல்சுரல் செக்ரட்டரிய வருத்தெடுத்ததுபத்தியும் சொல்லிக்கொண்டிருந்தார்….!!!!

“எதுக்கும் உங்க மனைவி கிட்ட சொல்லிவையுங்க சுப்பு….”

இனி என்ன சொல்லி என்ன பண்ண…டூ லேட்….! !!!

இப்போதெல்லாம் தெய்வானையைப் பாக்க நானே அப்பாயின்ட்மென்ட் வாங்கணும்னா பாத்துக்கங்க….

ஃபோன் பில்லும் .. பெட்ரோல் பில்லும் பாத்து ஷாக் அடிச்சு விழுந்தவன் தான்….

“அடுத்த வாரம் நவராத்திரி ஆரம்பம்…. இந்த தடவை ‘பாவை மலர்’ சுழற்கோப்பை நாங்கதான் வாங்கணும்னு எல்லோரும் உறுதியாக இருக்கோம்…..”

“சுழற்கோப்பையா ….?????”

“ஆமா…. சிறந்த கொலுவ தேர்ந்தேடுக்க நாலு நடுவர்கள் வருவாங்க….. பத்தாயிரம் கேஷ் பரிசு …டிவியில கூட காட்டுவாங்க…”

“குட்மார்னிங் கண்ணகி……..!!! !!! கொலு தீமுக்கு நல்ல ஐடியா கிடைச்சிருக்கு….யார்கிட்டயும் சொல்லல…… முதல்ல உன் கிட்டதான்….”

“ஹலோ உமா…. முதல்ல உங்கிட்ட தான் இந்த விஷயம் ஷேர் பண்றேன்… இந்த வருஷம் கொலு தீம் என்ன தெரியுமா …..??”

இப்படியே அநேகமாக எல்லா கமிட்டி உறுப்பினரையும் கூப்பிட்டு

“முதல்ல உங்கிட்டதான்…… முதல்ல உங்கிட்ட தான்னு சொல்லியே எல்லாரையும் கவுத்துட்டாளே…..

பரவாயில்லை….தேவானை இவ்வளவு பிரபலம் ஆனதுக்கு காரணம் இப்போ புரிஞ்சு போச்சு…..

இன்னும் நாலு நாள்ல அமாவாசை…கொலு ஆரம்பிச்சிடும்..

தேவானை இதுவரைக்கும் கொலு வச்சதேயில்லையே… எத்தனை படின்னு கூடத்தெரியாதவ எப்படி …..?

சரி… அத விடுங்க…..எனக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாருங்க…!!!!

“இதப் பாருங்க….. இன்னும் பத்து நாள் என்ன தொந்தரவு பண்ணாதிங்க….தலையே வெடிக்கும்போல இருக்கு….

என்ன வேணும்னாலும் swiggy ல ஆர்டர் பண்ணிக்குங்க… வேணுன்னா மீனா மெஸ் நம்பரும் எழுதி வச்சிருக்கேன்..முதல்நாளே சொல்லிடணும்….”

இன்னும் பத்து நாளைக்கு சாப்பாட்டு பிரச்சினை இல்லை…

“நாளைக்கு புடவை எடுக்கப் போலாம்னு இருக்கேன்… நீங்க வரீங்களா …இல்லை நா மட்டும் போய்ட்டு வந்திடவா…

ஒன்பது நாளும் ஒம்பது கலர் தீம்….. எல்லாமே கைத்தறி சேலைங்கதான்…

மூணு பிளாக்கிலேந்தும் லேடீஸ் கொலு பாக்க வருவாங்க..

அவங்களுக்கெல்லாம் கிஃப்ட் வேற வாங்கணும்…”

“ஒம்பது நாளும் ஒம்பது ஸ்வீட் … ஒம்பது சுண்டல்….நானு பரங்கிக்காய் அல்வா பண்ணலாம்னு இருக்கேன்…..! !!

துர்கா…. லஷ்மி… சரஸ்வதி… மூன்று பேரும் என்ன ஆனார்கள்??

எதற்காக கொலு வைக்கிறோம் என்பதே மறந்துவிட்டதா .????

“ஆமா… கொலு தீம் என்னன்னு எனக்கு சொல்லவேயில்லையே….”

“அது சஸ்பென்ஸ்…சொன்னா உடனே எல்லார் கிட்டையும் சொல்லிட மாட்டீங்களா…????

என்னைத் தவிர எல்லோருக்குமே இத்தனை நேரம் தெரிந்திருக்கும்…..

என்ன சஸ்பென்ஸ் ??? பாலுவைக்கேட்டால் தெரிந்துவிட்டு போகிறது…..

கொலு ஆரம்பித்து விட்டது !!!!

மெயின் ஹால் அப்படியே நந்தவனம் போல் காட்சியளித்தது…

எங்க பார்த்தாலும் ‘ பசுமையே வளமை…’ ”

“புதுமை கொலு…”

“பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் “

“இயற்கையைப் போற்றுவோம் …’ என்ற வாசகங்கள்…

“இந்த வருஷ தீம் ….

“நீங்களும் செய்யலாமே ” என்ற தலைப்பில்…

கொலு பொம்மைகள்..

இயற்கை பொருட்களால் செய்யப்பட்டவை……..!!!!

மாடியில் தோட்டம்..!!!!?

இயற்கை முறையில் உரம்..!!!!!

மூலிகை மருத்துவம்..!!!!

வீட்டு மருத்துவம்..!!!!??

சொந்தமாய் தொழில் தொடங்குவது எப்படி…!!!!!

கம்யூட்டர் கற்கலாம் வாங்க…!!!!!

Stock market… ஒரு அறிமுகம்…!!!!

பிரச்சனையில்லா வாழ்க்கை வாழ..!!!!?

ஒன்பது நாளும் ஒன்பது தலைப்பில் நிபுணர்களின் ஆலோசனை…..

ஒன்பது படிகளில் பொம்மைகள்… எல்லாமே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை…

ஆர்கானிக் இயற்கை சாயங்கள்.

பிளாஸ்டிக் என்பது மருந்துக்கு கூட காணோம்…

வந்தவர்கள் எல்லாம் தெய்வானையை பாராட்டி தள்ளி விட்டார்கள்…

கடைசி நாள் நாலு நடுவர்கள்..

“உங்களுக்கு இந்த யோசனை எப்படி வந்தது..??”

“இது ஒரு கூட்டு முயற்சி…நாம ஏன் லஷ்மி , துர்கா , சரஸ்வதி ன்னு மூணு தெய்வங்களைக் கொண்டாடணும் , காரணம் ,

ஒவ்வொரு பெண்ணும் ஒரு சக்தி வடிவம்… எல்லா சக்தியும் ஒண்ணா சேர்ந்தா எந்த காரியமுமே வெற்றிதான்..

கல்வி…. செல்வம்…. வீரம்….!!

இது மூன்றும் பெண்களுக்கு அவசியம் என்பதைத் தான் மூன்று தெய்வங்களாக உருவகப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள்….”

நந்தவனம் அபார்ட்மென்ட் நாயகியாகிவிட்டாள் தெய்வானை….

ஷோகேசில் பளபளவென்று மின்னியது சுழற்கோப்பை….!!!

“அப்பா.. அம்மாவ கூப்பிடுங்க…நம்பவே முடியல…T.V.ல நியூஸ் பாத்தோம்….அசத்திட்டாங்க…”

“இதேல்லாம் ஒண்ணுமேயில்ல… அம்மாவோட எதிர்காலத் திட்டத்த கேட்டா மயக்கமே போட்டுடுவீங்க..

இப்போ தெய்வானை ஒரு பெரிய தொழிலதிபர்..

தேவி என்டர்ப்ரைசின் ஏக போக உரிமையாளர்…!!!!

Devi Enterprise…
Instant Golu…..Dial 999999999…

உங்கள் வீடு தேடி வரும் கொலு…..
ஒன்பது படிகளில் நீங்கள் விரும்பும் பொம்மைகள்..
தீம் பார்க் ..
ஒன்பது நாளும் இனிப்பு+ சுண்டல்
வெற்றிலை பாக்கு தட்டுகள்
கிஃப்ட் கூடைகள் .
பாட்டு பாட பஜனை கோஷ்டி..
நவவர்ண கோலங்கள்..

போக்குவரத்து வசதி…

மொத்த பேக்கேஜ்.

ஒரு லட்சம் மட்டுமே…!!!!!

தெய்வானைக்கு மூச்சு விட நேரமில்லை..

ஆதவன் வேலையை ராஜினாமா பண்ணிட்டு தேவி நிறுவனத்தின் CEO ஆகி விட்டான்…

அதிசயமா ஒரு நாள் தேவி எனக்கும் கொஞ்ச நேரம் ஒதுக்கினாள்.

“ஸாரிங்க… உங்க கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு…”

“தேவான.. உண்மையில உன்ன நெனச்சு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா …..???

ஆனா எதுக்கு இந்த வயசில இவ்வளவு கஷ்டப்படற….????

பேசாம வீட்ல இருந்துகிட்டு குழந்தைகளோட விளையாடிட்டு…..”

“இருங்க இருங்க…. உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்….

போனவாரம் என் ஜாதகத்தை எடுத்திட்டு நம்ப ஜோசியர் கிட்ட போயிருந்தேன்.. எவ்வளவு நல்லதா போச்சு தெரியுமா …????”

“யாரு …..??? நமச்சிவாய ஜோசியரா….??

“ஆமாங்க…வேற யாரு …???

என் ஜாதகத்தை அப்படியே பிட்டு பிட்டு வச்சிட்டாரு…..

அவர் சொன்னத கேளுங்க !!!

***

“இனிமே உங்களுக்கு சுக்கிர தசை தான்…. குரு உச்சத்தில் கடக ராசில இருக்கு… தொட்டதெல்லாம் பொன்னாகும்…எல்லாருமே உங்களுக்கு உதவியா இருப்பாங்க…

ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகத்தில வச்சிக்குங்க…..

உங்க வீட்டுக்காரர் துணையில்லாம எது செஞ்சாலும் அது நெறக்கவே நெறக்காது… அவர அனுசரிச்சு போனா எல்லாமே வெற்றிதான்…”

***

“இனிமே உங்கள கேட்டுத்தான் எல்லாம் முடிவும் எடுக்கப்போறேன் உங்க அபிப்ராயத்தை யோசிக்காம சொல்லுங்க…”

ஆஹா…. பழிக்கு பழி….

பத்து பொருத்தம் இருக்குன்னு சொல்லி உங்கப்பா என்ன ஏமாத்தினாரே …

அந்த சிவஞானம் ஜோசியர் பையன் நமச்சிவாய ஜோசியர் என்ன காப்பாத்திட்டாரு…. !!!

எவ்வளவு குடுத்தேன்னு மட்டும் கேக்காதீங்க.. …!!!

எனக்கு பேரக்குழந்தைகளுடனே நேரம் சரியாக போய் விடுகிறது…

தெய்வானை ரொம்பவே மாறிட்டா….!!! எப்பவும் பிசினஸ் மீட்டிங்…. கான்ஃப்ரன்ஸ்…திறப்பு விழாக்கள்…..கோலப்போட்டி, சாதனைப் பெண்கள் போட்டிகளுக்கு நடுவர்….

நரி இடம் போனா என்ன …. வலம் போனா என்ன…மேல விழுந்து பிடுங்காம இருந்தா சரிதானே .!!

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஆஹா!! என்ன பொருத்தம்!!!

  1. மிகவும் நன்றி.. செந்தில் குமார். உங்கள் ஆதரவு என்னை மேலும் எழுத ஊக்குவிக்கிறது…

  2. நல்ல எழுத்து நடை!! உங்கள் அனைத்து கதைகளும் படித்து விட்டேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *