ஆனால், அது காதல் இல்லை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 14,929 
 
 

‘அருள் அமுதைப் பருக அம்மா அம்மா என்று…’ மேடையின் நடுவே நின்று அபிநயம் செய்துகொண்டு இருக்கும் என் மேல் மஞ்சள் ஒளி வட்டம். என் வலது புறம் அமர்ந்து பாபநாசம் சிவனின் பாடல் வரியை எடுத்து நிரவி, மிக உருக்கமாகப் பாடுபவள் மானவதி.

‘மதர்ஸ் டே’யை ஒட்டி பாஸ்டன் நகரின் பல்கலைக்கழகம் ஒன்றின் இசைப் பிரிவு, என்னுடைய பரத நாட்டியக் கச்சேரியை ஏற்பாடுசெய் திருக்கிறது. சென்னைக்குத் திரும்பு வதற்கு முன், என்னுடையஅமெரிக்க நிகழ்ச்சி நிரலில் இதுதான் கடைசி கச்சேரி.

அபிநயம் பிடிக்கும்போதே, மேடை ஏறுவதற்குச் சில விநாடிகள் முன் என் ஐஃபோனில் (Iphone) படித்த மின் அஞ்சல் மனதில் வந்து தொந்தரவு செய்தது. சென்னையில் இருக்கும் என் அக்கா சுகந்தி அனுப்பியிருந்தாள்.

‘தற்செயலாக நெட்டில் இரண்டு நாட்களுக்கு முன், நீ அமெரிக்கன் செய்தித்தாள் ஒன்றில் கொடுத்திருந்த பேட்டி யைப் படித்தேன். அம்மா இறந்து போய் நேற்றோடு சரியாக மூன்று வருஷங்கள் ஆகிற நாள், யதேச்சை யாக இந்த வருஷம் ‘மதர்ஸ்டே’ யாக அமைந்திருக்கிறது. அந்ததினத் தில் நீ அவளைப் பற்றி குறையாக பேசி இருக்கிறாய். ‘அவள் உலகம் தெரியாதவள். வாயில்லாப் பூச்சி. எங்கள் வாழ்க்கையில் அவளு டைய பங்கு மிகக் குறைவு. அந்தத் தலைமுறை அப்படித்தான். ஆண் தான் குடும்பத் தலைவன். அவன்தான் எந்த முடிவும் எடுப்பான். மனைவிக் குச் சம உரிமை இல்லை. நல்ல வேளை… நான் அவளைப் போல் இல்லை’ என்றெல்லாம் சொல்லியி ருக்கிறாய். ரொம்ப வருத்தமாக இருக்கிறது. உண்மையில் உனக்கு அவளைப் பற்றி என்னதெரியும்?’

மெனக்கெட்டு மடிப்பாக்கத்திலிருந்து மின் அஞ்சல் அனுப்பி என் மூடை கெடுத்த சுகந்தி மீது எனக்குக் கோபம் வந்தது. அப்படி நான் என்ன சொல்லிவிட் டேன்?

அம்மா உலகம் தெரியாத வள் என்பதில் சந்தேகமே இல்லை. அப்பாதான் எங்கள் குடும்பத்துக்குத் தலைவர். இன்றைய சமையல் என்ன என்பதிலிருந்து, தன் பெண் ணுக்கு யார் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்பது வரை அவர் சொன்னதுதான் நடந்தது.

இன்றைய இளம் தலைமுறை யோசிக்கத் தெரிந்தவர்கள். ஆண், பெண் பேதமில்லாமல், சுயமாக எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்கிற தைரியசாலிகள். முப்பது வயதுக்கு நான் தனியாகவே வெளி நாடுகளுக்குப் பயணம் செய்கிறேன். அம்மாவை என் இடத்தில் வைத்து பார்க்க முடியுமா? இது சுகந்திக்குப் புரியாது.

நாட்டிய நிகழ்ச்சி முடிந்து திரை விழுந்துவிட்டது. க்ரீன் ரூமுக்கு வந்தேன். ஒப்பனையைக் கலைக்க நினைத்தபோது கதவு தட்டப்பட் டது. திறந்தேன். அவன் நின்றிருந் தான். நல்ல உயரம். சிவந்த நிறம். கன்னங்கரேலென்று முடி நெற்றி யில் வந்து விழ, அழகனாக, கம்பீர மாகத் தெரிந்தான்.

”ஹாய்… நான் யார்னு தெரியுதா?” தமிழில்தான் கேட்டான்.

”நீ… நீங்க ஷங்கரில்லே? திருவல் லிக்கேணியில் எங்க தெரு முனை யிலே உங்க வீடு. என் பிரதர்மௌலியைப் பார்க்க வருவீங்க இல் லையா?” நான் சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது.

”வாவ்..! என்னால நம்பவே முடியலே. இத்தனை வருஷம் கழிச் சும் என்னை நினைவிலே வெச்சிருக்க. ரொம்பவே பெருமையா இருக்கு” என்றவன், ”என் வீடுபக்கத் துலதான் இருக்கு. நாளைக்கு டின்னருக்கு வர முடியுமா?” என்றான்.எனக்கும் நாளைய தினம் புரொகிராம் எதுவும் இல்லை என்பதால் சரி என்றேன்.

மறு நாள் மாலை, ஷங்கர் வந்தான். லேசாக மழைத்தூறல்.அவனுடைய லெக்ஸஸ் கார் ரொம்பவே சொகுசு. அவன் அதை ஓட்டிக்கொண்டே எங்கள் சின்ன வயசு நினைவுகளைப் பற்றிப் பேசினான். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அவன் என்னுடன் உரையாடியது எனக்குப் பிடித்தது. அவ்வளவாக அறிமுகம் ஆகாத ஆணுடன் அம்மா இப்படித் தைரியமாக தனியாக வருவாளா என்றும் நானே கேட்டுக்கொண்டேன்.

ஊரை விட்டுத் தள்ளி வீடு. அவன் மனைவி சந்தியா ரொம்பவே அழகாக இருந்தாள். ப்ளூ ஜீன்ஸ், டைட் டர்டில்நெக் ஸ்வெட்டர், ஆண் மாதிரி க்ரூ கட் வைத்துக் கொண்டு, எதையும் எளிதாக நிர்வகிக்கக் தெரிந்தவள் போல் இருந்தாள்.

எங்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டே பேசினாள். ”உங்களோட டீன் ஏஜ் நாட்களிலே இரண்டு பேரும் ரொம்ப வருஷமா பக்கத்திலே இருந்தாலும், நேத்துதான் முதல் தடவையா உங்ககூடப் பேசினதா ஷங்கர் சொன்னான்” என்றாள்.

”உண்மைதான். என் பிரதர் மௌலி, ஷங்கரோட ஃப்ரெண்ட் தான்! இருந்தாலும், நேருக்கு நேர் நாங்க பேசிக்கிட்டதே இல்லைங்கிறது ஆச்சர்யம்தான்!” என்றேன்.

சாப்பிட்ட பின் ஷங்கர் வீட்டைக் காட்டுகிறேன் என்று என்னைக் கூப்பிட்டான். சந்தியா சமையலறையில் வேலையாக இருக்க, நான் அவனுடன் போனேன். வீடு மாளிகை மாதிரி இருந்தது. மாடிக்குப் போனோம்.

”இதுதான் என் பெட் ரூம். உள்ளே வாயேன். வாட்டர் பெட். ரொம்பவே சுகமா இருக்கும்” என்றவன், சட்டென்று அதன் மேல் விழுந்தான். கால் நீட்டிப் படுத்துவிட்டான். அதுமட்டும் இல்லை. ”மோகினி, நீயும் படுத்துப் பாரேன். அப்புறம் எழுந்திருக்கவே மனசு இருக்காது!” என்று பக்கத்தில் தட்டிக் காண்பித்தான்.

எனக்கு திக்கென்றது. அவன் முகத்தை ஒரு கணம் பார்த்தேன்.இத்தனை நேரம் நான் பார்க்காத புதிய முகம். பதில் பேசாமல் சட்டென்று கீழே இறங்கி வந்து விட்டேன். டிஷ் வாஷரில் பாத்திரங் களை அடுக்கிக்கொண்டு இருந்த சந்தியாவிடம், ”என்னை உடனே என் வீட்டில் கொண்டுபோய் விட முடியுமா? எனக்கு நேரமாகி விட்டது” என்றேன்.

அதற்குள் ஷங்கரும் அங்கே வந்து விட்டான். மனைவியை எதுவும் சொல்லவிடாமல், ”சந்தியாவுக்கு நாளைக் காலையிலே ரொம்ப சீக்கிரம் வேலைக்குப் போகணும். அதனால நானே உன்னைக்கொண்டு விடறேன்” என்றான். சங்கடமான சூழ்நிலை.

அவனுடன் மறுபடி காரில் பயணித்தபோது, உள் மனதில் பயம் வந்தது. ஆனாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சகஜமாக ஏதாவது பேசலாம் என்று நினைத்தபோது, அவனே ஆரம்பித்தான்…

”அப்ப உனக்குப் பதிமூணு வயசு. எனக்குப் பதினாலு. நான் சம்மர் வெகேஷனுக்கு ஊட்டி போயிட்டு வந்தப்போ, நீ திடீர்னு ரொம்பவே அழகாயிட்ட மாதிரி இருந்தது. கோயில் சிலை மாதிரி இருப்பே! உன் பிரதரும் நானும் வெவ்வேற ஸ்கூல். ஆனாலும், அவனோடு ஃப்ரெண்ட் பிடிச்சுக்கிட்டேன். காரணம், தினம் உன்னைப் பார்க் கணும். உன்னோட பேசணும்னு ஆசை. ஐ வாஸ் மேட்லி இன் லவ் வித் யூ…”

”அந்த வயசிலே வரதுக்கெல்லாம் காதல்னு பேர் இல்லை ஷங்கர்.”

அவன் நான் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ”மௌலியைப் பார்க்க வர சாக்குல உன் தரிசனம் கிடைக்குமான்னு காத்திருப்பேன். நீ என்னைக் கவனிச்சதே இல்லை. ஒரு வார்த்தை கூடப் பேசினதும் இல்லை.”

”ஸாரி ஷங்கர்! உன் ஸ்டேடஸ் வேற, எங்க குடும்ப நிலமை வேற! உன் தாத்தா ஜமீன்தார். எட்டு தலை முறைக்குக் காணற சொத்து. ஏணி வெச்சாலும் எட்டாத இடம். அதை அந்த வயசிலேயே புரிஞ்சுக்கிட்டேன். அதனால உன்னைப் பற்றி பெரிசா நினைக்கலை…”

”அதுவே எனக்கு இன்னும் சேலஞ்சிங்கா இருந்தது மோகினி. உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்…”

அவன் கைகள் ஸ்டீயரிங்கைப் பிடித்திருக்க, என் பக்கமாக முகம் திரும்பிப் பேசினான். ”மேல் படிப்புக்கு லண்டன் போனேன். திரும்பி வந்ததும் முதல் வேலையா உங்க வீட்டுக்கு தான் வந்தேன். நீங்க மதுரைக்குப் போயிட்டீங்கன்னு கேள்விப்பட்டு அங்கேயும் போனேன். அப்ப நீ டான்ஸ் புரொக்ராம்ஸ் கொடுக்க டெல்லி போயிருந்தே. உன் அப்பாவை சந்திச்சுப் பேசினேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம்னு சொன்னேன்…”

அப்படியா! அப்பா இது பற்றி என் னிடம் சொல்லவே இல்லையே, ஏன்?

”உங்கப்பா மறுத்துவிட்டார். அவரிடம் காலில் விழாத குறையாகக் கெஞ்சினேன்..!” சிறிது நேரம் மௌன மானவன், திடீரென்று கோபமாகி, ”எனக்கு என்னடி குறைச்சல்? படிப்பு இல்லையா? பணம் இல்லையா? ஏன்டி என்னை வேண்டாம்னு சொன்னான் அந்த ஓல்டு மேன்?” என்று கத்தினான்.

”ப்ச்… அப்புறம் நான் தாடி வளர்த்துக்கிட்டு ஆல்கஹால், கஞ்சானு கொஞ்ச நாள். ஜே.கே. ஃபவுண்டேஷன், ஸ்வாமிகள் ஆசிரமம்னு கொஞ்ச நாள். நாலு வருஷம் கழிச்சு சந்தியா வைப் பார்த்தேன்…” என்றபடி அவன் சட்டென்று காரை நிறுத்திய போதுதான், ‘ஃப்ரீ வே’யி லிருந்து வெளியே வந்துவிட் டான் என்பது உறைத்தது. மழைத் தூறலுடன் இருட்டு. சுற்றிலும் ஆப்பிள் மரங்கள் நிறைந்திருக்க, நான் அவனிடம் தனியாக மாட்டிக்கொண்டு விட்டேன் என்பது புரிந்தது.

காரின் உள் விளக்கைப் போட் டான். சட்டென்று தன் ஷர்ட் டைக் கழற்றி, ”பார்த்தியா, ஐ ஆம் வெரி ஹேண்ட்சம்! நான் தினமும் ஜிம்முக்குப் போறவன். கர்லா சுத்தறவன்” என்று கைகளை மடக்கி தோள் பராக்கிரமத்தைக் காட்டினான். நான் பயந்து கதவோரம் நகர்ந்தேன். அவன் முகம் இப்போது கர்ண கடூரமாக எனக்குத் தெரிந்தது.

”டென்னிஸ் பிளேயர்ஸ், கிரிக்கெட்டர்ஸ் எல்லாம் ஊருக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் வெச்சுப் பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். நீ ஊர் உலகமெல்லாம் தனியாகச் சுற்றுகிற டான்ஸர். உனக்கும் ஊருக்கு ஒரு காதலன் இருப்பானே! என்னையும் அப்படி ஒருத்தனா நினச்சுக்க” என்றவன், என்னைச் சட்டென்று கட்டிப் பிடித்தான். அவன் கைகள் என் தோள்களைத் தழுவ, நெருப்பு உதடுகள் என் இதழ்களைத் தேட, நான் என் கைப்பையைத் திறந்து துழாவினேன். நல்லவேளையாக நான் தேடியது கிடைத்ததோ… அவனிடமிருந்து தப்பினேனோ!

சென்னைக்கு வந்து சேர்ந்த அன்றே, சுகந்தியைப் பார்க்க மடிப்பாக்கம் போனேன். முதலில் அவளிடம், அம்மா பற்றி நான் சொன்னதில் என்ன தப்பு என்று கேட்க வேண்டும் என்று எண்ணி யிருந்தேன். ஆனால், அவளைப் பார்த்த உடன் நான் பேசியதே வேறு.

”திருவல்லிக்கேணியில் நம்ம வீட்டருகே சிதம்பரம்னு இங்கிலீஷ் புரொபசர் ஒருத்தர் இருந் தாரே, ஞாபகம் இருக்கா சுகந்தி?”

”ஓ… அவரோட பிள்ளை ஷங்கரையும் நினைவில் இருக்கு. அவன் உன்னைக் கல்யாணம் பண்ணிக் கணும்னு அலையா அலைஞ்சானே!” என்றாள்.

ஷங்கர் பற்றிய சம்பவத்தைச் சொல்லி, ”நல்லவேளையாக என் கைப்பையில் தற்காப்புக்காக எப்போதும் ‘பெப்பர் ஸ்ப்ரே’ வைத்திருப் பேன். அதை எடுத்து அவன் கண் களில் அடித்துத் தப்பினேன். அவன் நடத்தையை இப்போ நினைச் சாலும் உடம்பு நடுங்குது, சுகந்தி! அவன் சரியான ‘நட் கேஸ்’! ஆனா, அவனுக்கு அப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்திருந்தா..? ஐயோ!”

சுகந்தி ஒரு கணம் என்னையே பார்த்தாள். ”மோகினி… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா… அப்பா சரின்னுதான் சொல்ல இருந்தார். அம்மாதான் ஒத்தைக் கால்லே நின்னு, அவனுக்கு உன்னைக் கொடுக்கவே கூடாதுன்னு சொல்லிட்டா! அம்மா பேச்சை மீறி அப்பா எதுவுமே பண்ணினதில் லையே!” என்றாள்.

இது எனக்குப் புது விஷயம். ”என்னது… அம்மாவை மீறி அப்பா எதுவும் செய்யமாட்டாரா? அப்பா தானே எல்லா முடிவும் எடுப்பார்னு நினைச்சுட்டிருந்தேன்…!”

”அதான் இல்லை. அந்தத் தலை முறையிலே பெண்களுடைய நிர் வாகத் திறமை வெளியிலே தெரியலை. தெரியவேண்டிய அவசியமும் இல்லைன்னு நினைச்சாங்க. ஆனா, சந்தர்ப்பம் கிடைச்சிருந்தா ஒரு நாட்டையே ஆளக்கூடிய திறமை அவங்களுக்கு இருந்தது. நம்ம அம்மாவையும் சேர்த்துதான் சொல்றேன். சம்பாதிப்பது மட்டும் தான் அப்பா. குடும்பத்திலே மத்த எல்லா விஷயத்திலும் முடிவு எடுத்தது அம்மாதான்!

ஷங்கரின் அப்பா சிதம்பரம் சாரிடம் நான் டியூஷன் போனேன், ஞாபகம் இருக்கா? ஒரு தடவை அம்மாவும் என்கூட வந்தா. சார் என்னைப் பக்கத்திலே இருந்த கடைக்குப் போய் என்னவோ வாங்கிட்டு வரச் சொன்னார். நான் திரும்பி வந்தபோது அம்மா வாசல்லேயே நின்னுட்டு இருந்தா. அவ முகமே சரியாயில்லை. உடனே என்னை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டா. டியூஷனையும் நிறுத்திட்டா. பின்னாளில் ஷங்கர் வந்து உன்னைப் பெண் கேட்டப்ப, அம்மா உறுதியா மறுத்துட்டா. ‘இவனோடது காதல் இல்லை; காமம். அப்பனைப் போலவே பிள்ளை’னு அப்பாவிடம் சொன் னது நினைவிலே இருக்கு. அப்ப எனக்குப் புரியலை. இப்ப புரியுது. நீ தப்பிச்சே!”

சுகந்தி சொல்லி முடிக்க, இது நாள் வரை நான் அறியாதிருந்த புதிய அம்மா என்னுள் விசுவரூபம் எடுத்தாள். இனி, என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளுமே ‘மதர்ஸ் டே’தான்!

– 13th பெப்ரவரி 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *