கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 13,377 
 
 

ஹார்பரில் தொடங்கி, பாரி கட்டடம் தாண்டியும், தீப்பெட்டியை அடுக்கி வைத்தாற்போல பெட்டி பெட்டியாய் கடைகள். ஒரு ஆள் உட்கார்ந்துக் கொள்ளலாம்.அப்படி இப்படி கையை காலை அசைக்க முடியாது. பர்மாவிலிருந்து புகலிடம் தேடி, தாய் மண்ணுக்கு ஓடி வந்த அகதிகளுக்கென்று உருவான பஜார், இன்று பிஸியான பர்மாபஜார். இங்கே ஊசி முதற்கொண்டு எல்லாமே கிடைக்கும். கப்பல், ப்ளேனைத் தவிர. அதைக் கூட நிறுத்த இடமிருந்தால் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள்.. வெளிநாட்டு தயாரிப்பு விலாசத்துடன் இருக்கும் பொருட்கள் செலாவணியாகுமிடம்.. தமிழை ஒவ்வொரு எழுத்தாய் கூட்டி கூட்டிப் படிக்கும் கரீம்பாய் கூட நுனி நாக்கில் ஆங்கிலத்தை பிளந்துக் கட்டுவார்.

“பொட்டியாட்டந்தான கீது?. ஒவ்வொரு கடையிலும் அஞ்சி லட்சம், பத்து லட்சம் ரூபா சரக்கு கீதுபா..”——– தோளில் சின்ன டவல் போட்ட சிவத்த லுங்கிக்காரன், கூட இருந்தவனிடம் சொல்லிக் கொண்டு போனான். பிளாட்பாரத்தை அடைத்துக் கொண்டு கன்றுக்குட்டி கன்றுக்குட்டிகளாய் கீழே சக்கரம் வைத்த சூட்கேஸ்கள்.

மாலை மூன்று மணி. வியாபாரம் களைகட்ட ஆரம்பிக்கும் நேரம்.. எல்லோருக்கும் வெளிநாட்டு பொருட்களை வாங்கிக் குவிக்கும் ஆத்திரம்

“ஏம்பா ஜனா! ஸ்டேஷ்னுக்கு மாமூல் போயிடுச்சாமா?.”

“நேத்திக்கே தேத்தி அனுப்பிச்சிட்டோமில்ல?.”

“பின்ன இங்கியே சுத்திகிட்டு இருக்கானுவ.?.’

ஆண்களும், பெண்களுமாய் அட்டகாசமாய் ஒரு கல்லூரிப் பட்டாளம் அங்கே பிரவேசித்தது.. ஒரு சல்வார் கம்மீஸுக்கு நாலு பேர் என்று ஜொள்ளு விட்டுக் கொண்டு வர, ஒருத்தி எதையோச் சொல்லி லேசாய் சிரிக்க, அவள் சொன்னதை காதில் வாங்காமலேயே, ஆண்கள் கோஷ்டி குபீரென்று சிரித்து கைத்தட்டியது.. அந்த பஜாரே திரும்பிப் பார்த்தது.

“ மனோஜ்! ஐ வாண்ட் ஒன் எஃப் எக்ஸ்-100-கேல்குலேட்டர். ப்ளீஸ்! ஹெல்ப் மீ.”—–மனோஜைக் கூப்பிட்ட அந்தப் பெண் வசீகரமாய் சிரித்தாள். மேல் துப்பட்டா தன் பணியிலிருந்து ஒதுங்கி வழிவிட்டிருக்கிறது. உடன் வந்த கும்பல் அவ மனோஜைத்தானே கூப்பிட்டாள்? என்று டென்ஷனாகி, தூரமாய் ஒதுங்கி நின்று எதையோ சின்ஸியராய் பேசுவதாக பேர் பண்ணிக் கொண்டிருந்தது.

“வ்..வா..ட்! என்னா சொல்ற மேன்?.ஒன் தவுஸ்ண்ட் ருப்பீஸ்?.”

“எஸ் சார்!.”—-கடைக்காரன் தன் வேலையில் சிரத்தையாய் இருந்தான்..

“என்னா மேன்! வெளையாட்றியா? இட்ஸ் வொர்த் ஒன்லி த்ரீ ஹண்ட்ரட் ருப்பீஸ்.”—–கடைக்காரன் அலட்சியமாய் பார்த்தான்.

“சாதா டைப்பே எழுநூறு ரூவா ஆவுதுபா.இது அட்வான்ஸ் மாடல்.தோ பாரு சார்!. எஃப் எக்ஸ் எழுத்துக்கு மேலே நீட்டா ஒரு கோடு தெர்தா?.. அதான் லேட்டஸ்ட்டுன்னு அர்த்தம்.எக்ஸ்ட்ரவா பத்து ஃபங்ஷன் செய்யும் இது.”

“ஐஸீ. ஓகே…ஓகே!…….ஹாய் சூரி! (சூர்யா) இட்ஸ் ஒர்த்மா. சரி..சரி…ஒரு வெல சொல்லு தலைவா!..”—-மனோஜ் என்ற அந்தப் பையன் அவளை பார்வையில் மேய்ந்தபடியே பேரம் பேசினான். மற்ற மாணவர்களும் துணைக்கு வர, பேரம் படிந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு கும்பல் கிளம்பியது. பக்கத்து கடை பாய் சிரித்தார்.

“இன்னாபா! எக்ஸ்ட்ராவா பத்து ஃபங்ஷன்னு சொன்னியே இன்னாது அது?.”

“ஹ..ஹ..ஹா…இன்னான்னு அவனுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. அந்தப் பொண்ணுக்கோசரம் சீன் காட்டினான்.. அட போடான்னு மேல இருநூறை வெச்சிக் கறந்துட்டேன்..”—-சட்டென்று பேசுவதை நிறுத்தி விட்டு தலை தலையென்று அடித்துக் கொண்டான்.

“..

“ஐயோ! பூட்ச்சி பாய்! சீக்கோ வாட்ச் பூட்ச்சி பாய். சுட்டுட்டானுங்க பாய். பசங்க கும்பலா வரும்போதே சந்தேகப் பட்டேன்.. தேவ்……பசங்க..டேய் தஸ்த்கீரு! ஓட்றா, அவனுங்கள மடக்கு. ஒரு கை பார்த்திட்றதே சரி.”—–பாய் கையமர்த்தினர்.

“வாணம்பா! காலேஜ் பசங்க., கும்பல் கூடி பெருசாக்கிடுவாங்க. இன்னா வேணாலும் பழி போட்றுவானுங்க. அப்புறம் நமக்குத்தான் செலவு.”

அவன் தலையில் கை வைத்துக் கொண்டான். காலையிலேயிருந்து சம்பாதித்த லாபம் இதில திரும்பிப் போச்சி.. ஆத்திரமாக இருந்தான். அப்போதுதான் கடையருகில் அவன் வந்து நின்றான். பொருத்தமில்லாமல் அடிக்கிற கலரில் பேண்ட்,ஷர்ட். முகத்தில் கிராமியம் என்று எழுதியிருந்தது.முகத்தில் மினுமினுவென்று வழியும் எண்ணை ஒன்று போதும். தலை எண்ணை செக்கில் தோய்த்து எடுத்திருந்தது.

“ஏனுங்க! அந்த டார்ச் லைட்டு என்ன வெலையாகுமுங்கோ?.”—கேட்டவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு.

“எழுநூறு.”

“”ஐயோ! என்னங்க நூறு ரூவா பேட்டரிய எழுநூறுன்னு சொல்றீங்க?.”

“ சே! இன்னிக்கு யாரு மொகத்தில முழிச்சேனோ?. இப்ப காட்டான்கிட்ட மாட்டியாச்சி.தோ பார்யா! இது சார்ஜபிள் லைட்டு. முன்ன பின்ன பர்த்துக்கீறியா.”

“செரீங்க.நூறு ரூவாய்க்கு தாங்க. இந்தாங்க .”—நூறு ரூபாய் தாளை நீட்டினான். ஒரு நிமிஷம் அவனை எரிச்சலுடன் பார்த்து விட்டு ஒரு நீல நிற 12 வோல்ட் சார்ஜபிள் டார்ச் லைட்டை தூக்கி அவனிடம் கொடுத்தான்.

“தெ பாரு! நல்லா பாரு, கரெக்ட் வெலையா கேளு.”

அவன் டார்ச்சை வாங்கி ,அப்படியும், இப்படியும் உருட்டிப் பார்த்தான்.

“ஏனுங்க! இன்னும் வெல சொல்லாம இருக்கீங்களே?.”—–கடைக்காரன் சீறினான்.

“இன்னாடா ரோதனை உங்கிட்ட? எழுநூறுக்கு சம்மதிச்சி லைட்டை கையில வாங்கிட்டு, இப்ப டபாய்க்கிறியா?.”

“ஐயய்யோ! நான் நூறுக்குத்தானுங்களே கேட்டேன்?.”

“ஆங்! அப்ப லைட்டை ஏண்டா கையில எடுத்த பேமானி!.”

“ஐயோ…ஐயோ…நானா எடுத்தேன்?. நீங்கதானே பாருன்னு சொல்லி கையில கொடுத்துபோட்டு இப்ப பொய்யி பேசறீங்களே.. எனக்கு வேணாமுங்க..”—டார்ச்சை கீழே வைத்துவிட குனிந்தான்.

“டாய்! பொருளை கீழே வெச்சே மவனே ஒதை படுவே.எழு நூறுக்கு கை நீட்டி வாங்கிட்டு, இப்ப கேப்மாறித்தனம் பண்றியா?.——கிரமத்தானுக்கு வியர்த்துக் கொட்டியது.

“இல்லீங்க.என்னங்க நீங்க?. அண்ணாச்சி! அதுக்குத்தான் நான் ஒத்துக்கலியே. எனக்கு எதுவும் வேணாம்யா. வில்லங்கம் புடிச்ச ஆளு.”

”டாய்! கீழ வெக்காதே.இன்னா கேட்ட?. நூறு ரூவாய்க்கா வோணும்? இரு நான் அந்தப் பக்கமா திரும்பிக்கிறேன். அப்பிடியே சுட்டுக்கிணு பூடு..இப்ப படிச்ச கம்மனாட்டிங்க வாட்ச்சை சுடலே. அதுமாரி.”

“ஏனுங்கோ! நான் அப்படிப்பட்ட ஆ;ளு இல்லீங்கோ.”

“ஏய்! தோலுவாயா! சும்மா வளவளன்னு. இன்னா வெல தான் தருவ?.கடைசி வெல ஐந்நூறு இன்னா?.

”எனுக்கு வாணாம்னு சொல்றேனில்ல?”———கடைகாரனுக்கு உஷ்ணம் எகிறியது..

“மரியாதையா துட்டை வெச்சிட்டுப் போடா பாடூஸ்.”

“ஏனுங்கோ! நானு வெலையத்தானே கேட்டேனுங்கோ.. இது ஆகாது நானு போலீஸ் கிட்ட போவப் போறேன்.ஆமா.”

“திருப்பியும் பார்றா.. லைட்டை திருவி திருவி ஒடைச்சிட்டு டபாய்க்கலாம்னு பாக்கிறான்.டேய்! இன்னா?…இன்னாடா? போலீஸ்கிட்டத்தானே ? போ.ஆனா அதுல உனக்குத்தான்டா ஆப்பு..”
கடைக்காரன் போட்ட சத்தத்தில் கடை முன்பாக கூட்டம் சேர ஆரம்பித்தது.. இரண்டு மூன்று லுங்கி ஆட்கள் ஓடி வந்தார்கள்.

“இன்னான்றான் காட்டான்?.ஏய்! இன்னாடா கயித!. அடீங்.. போட்றா அவனை.”——-இப்போது அவன் மேல் ஒன்றிரண்டு தர்ம அடி விழ ஆரம்பித்தது. அதற்குள் போலீஸ் வந்து விட்டது..

“ஏய்! என்னாப்பா இங்க கலாட்டா?.”——-கிராமத்தான் அழுதுக் கொண்டே நடந்ததைச் சொன்னான். கடைக்காரன் குறுக்கே புகுந்தான்.

“சார்! இவன் சொல்றதெல்லாமே பொய் சார். கடைசியா அறுநூறுக்கு பேசி முடிச்சிட்டு,லைட்டை கையில வாங்கிக்கினான்.

அத்த அப்பிடியும் இப்பிடியும் திருவி திருவி ஒடைச்சிட்டு இப்ப நூறுதான் தருவேன்னு டபாய்க்கிறான் சார். உங்களை பார்த்துப்புட்டு அழுது சீன் காட்றான் சார்.”——எஸ்.ஐ. கடுகடுவென்று கிராமத்தான் பக்கம் திரும்பினார்

”.டேய்! அறுநூறுக்கு பேரம் படிஞ்சிதா இல்லையா?.”

“நானு ஒத்துக்கலீங்களே.”

“சட்! பொத்துடா, பேத்துடுவேன். நாயே! அறுநூறுக்குப் பேசி முடிச்சிட்டு, இப்ப கேப்மாறித்தனம் பண்றியா?. வெல படியாம லைட்டு உன் கைக்கு எப்பிட்றா வந்துச்சி.?.. கிராமத்தான்னு பாவம் பார்த்தா, எப்.ப்..பா! இங்க இருக்கிற திருட்டுப் பசங்களே மேலுடா சாமீ.”—– கும்பலில் கேலியாய் சிரிப்பலை கிள்ம்பியது.

“சார்…சார்!…அந்தாளு சொல்றதெல்லாம் பொய் சார். இவங்கெல்லாம் பொய் பேசறாங்க சார்..’

“ஆங்! இவரு பெரிய சத்தியவந்தன்.. ஏய்! இன்னா?.—-சப்-இன்ஸ்பெக்டர் கோபமாய் கையை வீச, நகர்ந்துக் கொண்டான்.

“டேய்1 எனக்கு வேற வேலை இல்லே?ஒழுங்கா அறுநூறைக் கொடுத்துட்டு கிளம்பு.”

“ இல்லை சார்!.”

“ டாய்!.”—- அவர் போட்ட கூச்சலில் பயந்து போய் அவசரமாக பணத்தை எண்ணிக் கொடுத்தான். எஸ்.ஐ.யும் கிளம்பினார்.. கும்பலும் இதுக்கு மேலே சுவாரஸ்யமானது எதுவும் இல்லையென்று கலைய ஆரம்பித்தது.. கிராமத்தான் அழும் கட்டத்திற்கு வந்துவிட்டான். நின்றுக் கொண்டேயிருந்தான். இருந்த பணமெல்லாம் போச்சுது.பாவிங்க. தங்கச்சிகிட்ட குடூன்னு அய்யன் குடுத்த ஐம்பது ரூபாய்தான் கீழ் ஜேபியிலே மிச்சம். செம்புலிச்சான் பாளையத்திலிருந்து இம்புட்டு தூரம் வந்துப் போட்டு,ஒரு முழம் பூ, ஒரு ஸ்வீட்டு,பழம்னு இல்லாம அங்கன எப்பிடி போறது?.. மாமோவ்! னு செல்வி ஓடியாருமே. நெய் ஜாங்கிரி வாங்கியாரலியா மாமோவ்! னு கேட்பாளே.கொழந்தை ஏமாந்திடுமே.. அப்படியே விளக்குக் கம்பத்தின் அடியில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டான்.. வாய் விட்டு புலம்ப ஆரம்பித்தான்.

“வள்ளியம்மை அப்பவே சொல்லுச்சுது உமக்கு வெதரணை பத்தாதுன்னுட்டு.. அங்கெல்லாம் ஏமாத்துக்காரப் பயலுவ, போவ வேணாம்னுட்டு.. கூறு கெட்டவன் கேக்கலியே.. இன்ஸ்பெக்டர்கிட்ட என்னமா நடிக்கிறாய்ங்க.”

டார்ச்லைட்டை கையிலெடுத்து உருட்டினான். முன் பகுதி கையோடு வந்தது.

“ஹும்! இந்த உடைச்சலு அறுநூறு ரூபாய்னா ஊர்ல சிரிப்பா சிரிச்சிப் போவும்..”——-பணம் பறிகொடுத்ததில் அழுகைதான் வந்தது. இந்த அம்பது ரூபாயை வெச்சிக்கிட்டு என்ன பண்றது?. செம்புலிச்சான் பாளையத்துக்குப் போவ பஸ் சார்ஜ் கூட காணாது. ஐயோ! என்ன பண்ணுவேன்?.அவன் எழுந்து நடக்க ஆரம்பித்தான்.. பக்கத்துல கரீம்பாய் கடையிலிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அவர் பையன் பயாஸுக்கு பாவமாயிருந்தது.

“வாப்பா! இது பாவமில்லே?.உடைஞ்சிட்ட டார்ச் லைட்டை மணி அண்ணன் அந்தாளு தலையில கட்டிடுச்சே. பாவம் வாப்பா.இதுவும் திருட்டு மாதிரிதான்.”

”அரே நமக்ராம்! வாயைப் பொத்துடா.” கடையில் உட்கர்ந்திருந்த அவர் நண்பர் மரியதாஸ் சிரித்தார்.

“புள்ளைய திட்டாதே பாய்! புஸ்தகத்தில காந்தி,நேரு,காமராஜ்னு அவங்க நேர்மையை, நாணயத்தைப் படிக்கிறான் இல்லே. அதான் இங்கே நடந்தது அவனுக்குப் பொறுக்கல..”

“ அரே தாஸு! இன்னாபா நேர்மை, .நாணயம்?, இது இன்னா இடம்?. திருட்டுப் பொருளு விக்கிற இடம். அரே! இன்னாத்துக்கு அப்பிடி பாக்கறே?.கஸ்டம்ஸை ஏமாத்தி கொண்டார்றதுக்கு இன்னா பேரு?. திருடுதாம்பா. அத்த வாங்க வர்றவனுக்கு உஷார் வேணும்.நேர்மை, நியாயம்னு பேசற இடமில்ல இது. தெர்தா?.”

“அட! இந்த நியாயம்கூட நல்லாயிருக்கே உங்களுக்கு ஏத்தமாதிரி.”.

“போலீஸ் வாணான்டான்னு மணி சொன்னானில்லே?.கேட்டானா?. இன்ஸ்பெக்டரு வந்து காப்பாத்துவாருன்னுதானே அப்பிடி கூச்சல் போட்டான்?. என்னாச்சி? வெல ஐந்நூறிலிருந்து அறுநூறுக்கு எகிறிப் போச்சில்லே..அதோ புல்லட் வண்டியாண்டயிருந்து எஸ்.ஐ. இங்கியே பார்த்துக்கிணு கீறாம் பாரு. இந்த டீலுக்கு அவனுக்கு நூத்திஅம்பதை வெட்டியாவணும். ஹ..ஹ..ஹ..ஹா…ஆடு கசாப்புக் கடைக்காரனைத்தானே நம்புது.?.”

மரியதாஸுக்கு பாயிடம் வார்த்தையாடுவது பிடிக்கும்.

“கரீம்பாய்! ஆடுன்றது அந்த கிராமத்தான் சரி. கசாப்புக் கடைக்காரன் யாரு?.இன்ஸ்பெக்டரா?.”

“பின்னே?.”

“அப்ப நீங்கள்லாம்?”

“அரே தாஸு! தெரில உனக்கு?. அன்னாடம் வாயடி, கையடி அடிச்சி சம்பாரிச்சி இன்னாத்த கண்டோம்?. எத்தினி அதிகாரிங்க?, எத்தினி ஏரியா வஸ்தாதுங்க.. படாபடா ஆத்மீ.அல்லாருக்கும் மாமூல் போவுது. இருவது வருஷமா தொழில் பண்றேன். நீயுந்தானே பாக்கறே..நஹீ…நஹீ…குச் நஹீ…அல்லா! மூணு வேளை கறி சோறு, பளிச்னு துணிமணி, அவ்வளவுதான் கண்டது.. மத்தபடி எவனும் இங்க இருப்புக்காரனில்லே.. அல்லாம் நூத்துக்கு பத்து வட்டி . கந்து வட்டி துக்காராம்சேட் தான் பினாமி பேர்ல அஞ்சி பங்களா சம்பாரிச்சான்.. புள்ளைங்களுக்கு. நம்பள்கு உடம்புக்கு முடியலன்னா கவர்மெண்ட் ஆஸ்ப்பத்திரிதான், த/ அ மாத்திரைதான்.. த்சு..த்சு…லட்சம் லட்சமா பெரளுது, தாக லேதுப்பா.. ரெய்டு வந்தா லட்சக்கணக்கா சரக்குகளை வாரிம் பூட்றாங்கோ. அந்த நஷ்டத்திலயிருந்து சுதாரிச்சி, அப்பாடான்னு நிமிரும் போது மறுபடியும் ரெய்டு. தாஸு! எங்க பொழப்பு கேம்ளிங் மாதிரிப்பா.!. பணம் கட்டுகட்டா பெரளும், கடைசியில பார்த்தா பைசா நஹீ. தின்ன கறி சோறும், போட்ட துணியும் தான் மிச்சம். நாங்களும் ஆடுங்கதாம்பா. தெர்தா?.”—-சொல்லிவிட்டு பாய் மவுனமாகிவிட்டார்.

– 01-04-2003.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *